கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/போட்டிக்கு முன்னே!


9. போட்டிக்கு முன்னே!

ஒலிம்பிக் பந்தயம் தொடங்குவதற்குள், கிரேக்க நாடே சுறுசுறுப்படைந்துவிடும். பந்தய மைதானத்தில் பொதுமக்கள் புகுந்து, தங்கள் இடத்தை அடைந்து, பரபரக்கும் விழிகளோடு, துறுதுறுவென்று அமர்ந்திருப்பார்கள். அவர்கள் குறுகுறுத்த விழிகளிலே சிக்கிய வீரர்களுக்கு, ஒலிம்பிக் பந்தய அதிகாரிகளும், வீரர்களின் பெற்றோரும், உடன் பிறந்த சகோதரர்கள் அனைவரும், சீயஸ் பீடத்தின் முன்னே அணிவகுத்து நின்று கொண்டிருப்பார்கள். ஆமாம், பந்தயம் தொடங்குவதற்கு முன் அழகான அணிவகுப்பு கடவுள் பீடத்தின்முன் கவின்பெற நடக்கும், அத்தனை பேரும் வீர சபதம் எடுத்துக் கொள்வார்கள்.

சீயஸ் பீடத்திலே, பன்றி ஒன்று பலியிடப்படும். பன்றியின் ரத்தத்தைத் தொட்டு, பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள், முதலில் உறுதி கூறுவார்கள். அதாவது, நாங்கள் எல்லோரும் கலப்பற்ற தூய கிரேக்கர்களே! பந்தயத்திலே போட்டியிடுவதற்காக பத்து மாதம் உரிய பயிற்சிகளை உண்மையோடு செய்திருக்கிறோம். போட்டியிட வந்திருக்கும் நாங்கள். போட்டியிலே வெற்றி பெறுவதற்காக விரும்பி எந்தவிதக் கீழ்த்தரமான செய்கைகளையும், முறைகளையும் பின்பற்றமாட்டோம்.

உடலாளர்களான வீரர்கள் மட்டும்தான் உறுதி எடுப்பார்களா, கடவுள்முன் சத்தியம் செய்வார்களா என்றால் இல்லை. போட்டியை நடத்துகின்ற பந்தய அதிகாரிகள் அத்தனை பேரும் பன்றியின் ரத்தத்தின்மீது சீழ்க்கண்டவாறு உறுதி கூறுவார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தையும் நியாயமான வழியிலே, பாரபட்சமற்ற முறையிலே நடத்துவோம். சொல்லோடு மட்டும் அல்லாது செயலளவிலும் அவர்கள் சிறப்பாகச் செய்து காட்டினார்கள்.

அவ்வாறு உறுதி எடுக்கும் அதிகாரிகள் அனைவரும், எல்லிஸ் நகரத்தில் வாழ்கின்ற மதிப்பும் சிறப்பும் மிக்கப் பெருந்தகையாளர்கள் ஆவார்கள். அவர்கள் உரியவர்களால் பத்து மாதங்களுக்கு முன்னரே தேர்ந்தெடுக்ப்பட்டு, அவர்களுக்கென்று ஒதுக்கியுள்ள தனிச்சிறப்புமிக்க வீடுகளில் தங்கி, நடுவராகப் பணியாற்றும் பொறுப்பினைக் கற்றுக் கொள்வார்கள். அதற்குப் பிறகு அவர்கள் எடுக்கின்ற முடிவே இறுதியானதாக இருக்கும். அதை யாரும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய முடியாது. நடுவர்கள் தவறிழைத்தால், அவர்களைத் தண்டிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்குத்தான் உண்டு. முதன் முதலில் ஒருவரே நடுவராகப் பணியாற்றினார். பிறகு 10 பேர்கள் வரை நடுவராகப் பணியாற்றும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில், வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ஒருவரே, நடுவர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கூறியவாறு, உறுதியும் சபதமும் எடுத்த பிறகு, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்ப காலத்தில் ஒரே நாள் மட்டும்தான் நடைபெற்றன. பிறகு, விளையாட்டுக்களிலே மக்கள் காட்டிய ஈடுபாடும், விளையாட்டுத்துறையிலே பெற்ற அனுபவங்களும், அபூர்வ கண்டுபிடிப்புகளும் ஒலிம்பிக் பந்தயங்களில் நிறையப் போட்டி நிகழ்ச்சிகளைப் புகுத்திய தன் காரணமாக, பந்தயங்கள் 5 நாட்கள் நடைபெறக்கூடிய அளவுக்கு விரிந்தன; வளர்ந்தன.

ஒலிம்பிக் பந்தயம் தோன்றிய காலம் 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். முதன் முதலாகத் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம், கி.மு. 1253ம் ஆண்டிற்கும் கி.மு. 884ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.. ஆனால் கி.மு. 776-ம் ஆண்டு நடந்த பந்தயத்தில் இருந்துதான், வரலாற்று ஆதாரங்கள் காட்டப் பெற்று, அதுவே முறையான முதல் பந்தயம் என்றும் கருதப்படுகிறது.