குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/அருளியலும் அறிவியலும்
அறிவியற் கலை வட்டத்தில் வளர்கின்ற சமுதாயத்தில் சமயம் வளருமா என்பது போன்ற எண்ணங்கள்-ஐயங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று என்று கருதுகிறேன். அப்படி எழுகின்ற ஐயங்களைப் பார்த்து எனக்கு வருத்தமோ வேறு விதமான எண்ணங்களோ உருவாவதில்லை. காலத்தின் தேவை, காலத்தின் விளைவு இவைதாம். இந்த மாதிரியான் எண்ணக்குவியல்கள்! ஆனாலும், வளர்கின்ற விஞ்ஞான உலகம் என்றால் என்ன? சமயம் என்றால் என்ன? இவற்றைத் தனித்தனியே அதனதன் முழு அமைப்பு, அதனுடைய முழு இலட்சிய வடிவு இவைகளை யெல்லாம் தெளிவாகப் புரிந்து கொண்டேமானால், இந்தக் குழப்பமே ஏற்படாது என்று கருதுகிறவர்களிலே நானும் ஒருவன்.
எதிலுமே மேலெழுந்தவாரியாக ஏற்படுகிற அரை குறை எண்ணங்களும், அரைகுறை அறிவும் அரைகுறை அனுபவமும்தான், “இது தேவையா? அது தேவையா? என்ற போராட்ட எண்ணங்களை எழுப்பி விடுகின்றனவே தவிர, எங்கெங்கு பூரணம் இருக்கிறதோ அங்கெல்லாம் தேவை. தேவையில்லை என்ற பேச்சு எழுவதே கிடையாது. அறிவியல் ஆனாலும் சரி, அருளியல் ஆனாலும் சரி, எங்கெல்லாம் பூரணத்துவம் இல்லையோ, எங்கெல்லாம் நிறைவு இல்லையோ எங்கெல்லாம் தெளிவு இல்லையோ, எங்கெல்லாம் உறுதியில்லையோ, அங்கேயெல்லாம் இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பப் பெறுவது இயற்கையினும் இயற்கை.
என்னைப் பொறுத்தவரையில் விஞ்ஞானம், அல்லது சமயம். (அதை மெஞ்ஞானம் என்று சொல்லி விடலாம்) விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டையும் ‘அறிவியல்’ ‘அருளியல்’ என்று சொல்லலாம்.
அருளியலும் அறிவியலும் ஒரே பாதையை நோக்கிச் செல்லுகின்ற பயணந்தான் என்று கருதுகிறவர்களிலே நானும் ஒருவன். நான் மட்டுமல்ல- உலகத்திலே சிறந்த மேதைகள் என்று கருதப்பெறுகின்ற விஞ்ஞானப் பேராசிரியர்களில் பலர் இந்தக் கருத்தைத் தெளிவாகச் சொல்லுகிறார்கள். சிறப்பாக இந்நூற்றாண்டிலே வாழ்ந்த-நாம் மறக்க முடியாத ஒரு மாபெரும் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன். அந்த மேதை ஓரிடத்தில் சொல்லுகின்றான்: “உயர்ந்த அழகை, உயர்ந்த தன்மையை உயர்ந்த அனுபவத்திற் பார்க்கின்ற ஒன்றைப் பார்க்கின்றபோது ரசிக்காமல் அல்லது பாராட்டாமல், அதிலே நின்று நிலைபெற்று அனுபவிக்காமல் இருப்பது மனிதனால் முடியாத காரியம், அப்படி மனிதன் அதில் ஈடுபட்டு நின்று அனுபவிக்காமற் போனானேயானால் அவனது காது செவிடுபட்டது என்று பொருள்; அவனுடைய கண்கள் குருடாகி விட்டன என்று பொருள்; அவன் நடமாடித் திரிந்தாலும் பிணமாகி விட்டான் என்று பொருள்” என்று சொல்லுகின்றான்.
வானத்தினுடைய அற்புதமான கோலத்தைப் பார்க்கிறோம். நல்ல மலைச் சூழலிலே, உயர்ந்து கிடக்கின்ற மலையின் உச்சியிலே வெண்பஞ்சு எனக் கிடக்கின்ற மேகச்சுழலைப் பார்க்கின்றோம். பார்க்கின்றபோது கவிஞன் காட்டாத கற்பனை, ஓவியன் தீட்டாத கற்பனை, சிற்பி செதுக்காத கற்பனை ஒரு வண்ணமிகு காட்சியாகத் தோற்றமளிக்கிறது. இந்த வண்ணமிகு காட்சியைப் பார்க்கிற போது எங்கோ நெஞ்சு தொடுகிறது. எங்கோ நெஞ்சு ஓர் அனுபவத்தில் ஈடுபடுகிறது. அந்த ஈடுபாட்டனுபவம் இருக்கிறதே அதை அனுபவிப்பது மனிதனுடைய பிறப்புரிமைகளில் ஒன்று. அதை அனுபவிக்கின்ற மனிதன் விஞ்ஞானி ஆனாலும் சரி, மெய்ஞ்ஞானியானாலும் சரி ஒன்றையே அனுபவிக்கிறான். ஒரே அனுபவத்தில் பேசுகின்றான். அந்த அனுபவத்திற்கு நானும் பாத்தியப்பட்டவன் என்று ஐன்ஸ்டீன் தெளிவாகச் சொல்லுகின்றான். அந்த எண்ணங் களையெல்லாம் நினைவாக வைத்துப் பார்க்கின்றபோது விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இரண்டும் ஒரே பாதையில் போகின்றன என்பதற்கு இன்னும் தெளிவு சொல்ல வேண்டும். அல்லது இறுதி வடிவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், வாழ்க்கைப் பிரயாணம் ஒரு நூறு மைல் என்று வைத்துக் கொண்டால் 99வது மைல் வரை போகின்றவனுக்கு விஞ்ஞானி என்று பெயர்-அறிவியல் மேதை என்று பெயர். 100-வது மைலையும் கடந்திருக்கின்ற மனிதனுக்கு அருளியல் மேதை என்று பெயர்.
பொருளியலை ஆராய்கின்றவன் பொருளியலிலே இருக்கின்ற கூறுகளை ஆராய்கின்றவன்; பொருளியலின் ஒரு பகுதியை ஆராய்கின்றவன்; பொருளின் முழுத்தன்மையைக் கண்டதுமில்லை. காண்பதுமில்லை, காட்டியதுமில்லை. பொருளியலில் முழுத் தகுதியையும் பொருளியலின் கூறுபாடுகளையும் கலந்து உள் உணர்வுகளையும் உள் தொடர்புகளையும் ஆராய்ந்து பார்க்கின்ற ஒரு மாமேதையாக மெய்ஞ்ஞானி திகழ்கின்றான். இன்னும் சாதாரண உதாரணம் காட்டிச் சொல்ல வேண்டும் என்றால் பொருளியல் அல்லது தாவர இயல் வல்லுநர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு தாவர இயல் வல்லுநன் மலரைப் பார்க்கின்றான். மலரைப் பார்க்கின்றபொழுது ஆராய்கின்றான். அதை அக இதழ் என்று பிரிக்கின்றான். புற இதழ் என்று பிரிக்கின்றான். கேசரம் என்று பிரிக்கின்றான். பலவேறாக அதைப் பிரித்து ஆராய்ந்துகொண்டே போகின்றான். அதிலே இருக்கின்ற அமைப்புகளை எல்லாம் பார்த்து, மனத்திற்கு இருக்கின்ற கூட்டு அமைப்புகளை யெல்லாம் ஆராய்கின்றான். ஆனால், மெய்ஞ்ஞானி எண்ண பண்ணுகின்றான்? அந்த மணத்திற்குக் காரணமாக அடிப்படையாக-ஆதாரமாக இருக்கின்ற ஒன்றைப்பற்றி நெஞ்சத்தாலே ஆராய்கின்றான்-உணர்கின்றான்-அதற்கு மெய்ஞ்ஞானம் என்று பெயர். பொருளை ஆராய்கின்றவன் பொருளின் அடிப்படைக்குக் காரணமாக ஏன்? எதனால்” என்று கேள்வி கேட்டுக்கொண்டு, அதற்குக் காரணமாக இருக்கின்ற ஒன்றைப்பற்றி-ஒரு பேரறிவை நினைக்கின்றவன் சிறந்த மெஞ்ஞானியாக வளர்கின்றான் என்பதுதான் பொருள். இதை பிளேட்டோ இவ்வளவு தெளிவாகச் சொல்லாது போனாலும் கூட அவனுடைய இலக்கியங்களிலே இருக்கின்ற சில சான்றுகள் நமக்குச் சில விளக்கங்கள் தருகின்றன. அவன் தெளிவாக ஓரிடத்தில் குறிப்பிடுகின்றான். உலகியல் கலை உலகத்திலே அசல்கலை, நகல் கலை என்று இரண்டு உண்டு என்று கூறி அந்த அசல் கலைக்கும் நகல் கலைக்கும் இடையே இருக்கின்ற வேற்றுமையைப் பகுத்துக் காட்டுகின்றான். அப்படிப் பகுத்துக் காட்டுகின்ற பொழுது அசல் கலைக்கு மணம் இருக்கிறது-உயிர்த்தன்மை இருக்கிறது - இயற்கையிலேயே கவர்ச்சி செய்கின்ற சக்தி இருக்கின்றது - எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் உயிர்த்தன்மை இருக்கிறது என்கிறான். செடிகளிலே பூத்துக் குலுங்குகின்ற மணமிக்க மலர்களை மனிதன் பார்க்கின்றான். மனிதனுக்கு எப்பொழுதுமே ஒரு விருப்பம் உண்டு. எதைப் பார்த்தும் நகல் எடுப்பதிலே அவனுக்கு அலாதியான விருப்பம். நாம் இந்த அறிவியல் துறையில் வளர்ந்திருப்பதற்குக் காரணம் ஒன்றைப் பார்த்து அல்லது ஒன்றைக் கேட்டு அதன் வழியிலே நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமிகுதிதான். ஒவ்வொன்றாகப் புதிய சாதனங்களைக் கண்டு பிடித்துக் கொண்டே போகின்றோம்.
நகல் எடுப்பது என்று சொன்னால் தவறில்லை. அந்த நகல் எடுக்கின்ற விருப்பத்திலே செடிகளில் பூத்துக் குலுங்கி மணம் தருகின்றனவாயிக்கின்ற மலர்களைப் பார்த்து நகல் எடுக்கின்றான் மனிதன். வண்ணத்தால், வடிவத்தால், தோற்றப் பொலிவால் நகல் எடுத்துவிட்டான். ஆனால் மணம் கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்து விட்டான். தேங்காய் போல, பலாப்பழம்போல, வாழைத்தாறுபோலக் களி மண்ணாலே வண்ணமாகச் செய்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம். வண்ணத்திலே, தோற்றத்திலே, வடிவத்திலே எங்ஙனம் அது தேங்காய்போல, பலாப்பழம்போல, வாழைத் தாறுபோலத் தோற்றமளித்தாலும் அதற்குச் சுவை கொடுக்க முடியாமல் தோல்வியடைந்ததைப் பார்க்கின்றோம். அதை விட மிகச் சுவையாக-உங்களுக்கு நேரடியாகத் தெரிந்து ஒரு சான்று. நகரத்திலே துணிக்கடைகளின் முகப்பிலே தீபாவளி நெருங்க நெருங்க, நம்மைவிட அழகான சிலைகள் வியாபார விளம்பரத்திற்காக நிறுத்தப்பெறும். கொஞ்சங்கூடக் குறைவில்லாத் திருமேனிகள். நாம் விரும்பியபடி நம்முடைய அமைப்பு இல்லை. நாம் கருப்பாக இருக்கிறோமே என்று பலர் வருத்தப்பட்டும் கொள்ளுகின்றார்கள். உயரம் போதவில்லையே என்று சிலர் வருத்தப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் அந்த உருவங்கள் இருக்கின்றனவே, அவை அழகாக, ஒழுங்காக கச்சிதமாகத் தீட்டப் பெற்றிருக்கின்றன. ஆனாலும் உயிர் கொடுக்கப்பெறவில்லை. அதைத்தான் பிளேட்டோ சொல்லுகிறான். முடிக்கின்ற பொழுது, எங்கெல்லாம் மனிதன் மணம் கொடுக்க முடியாமல் தோல்வியுறுகின்றானோ, எங்கேயெல்லாம் மனிதன் சுவை கொடுக்க முடியாமல் தோல்வியடை கின்றானோ, எங்கேயெல்லாம் மனிதன் உயிர்த்தன்மை கொடுக்க முடியாமல் தோல்வியுறுகின்றானோ அங்கேயெல்லாம் இவற்றைக் கொடுக்கின்ற ஒரு பேருண்மையைப் பார்க்கிறோம்- பேராற்றலைப் பார்க்கின்றோம்-அழிவில்லாத சக்தியைப் பார்க்கின்றோம் என்கின்றான். ஆக, விஞ்ஞானி கூட மெய்ஞ்ஞானத் துறைக்குப் போகப் பயின்று கொண்டிருக்கின்றான், இயற்கைப் பூஞ்சோலையிலே வாழ்க்கை என்ற உலகத்திலே.
அறிவியலிலே அவன் புகுந்து, ஆழ்ந்த அனுபவங்களைக்கண்டு, ஆழ்கடலிலே குளித்து முத்தெடுத்தால் அந்த முத்தை அணியாக உபயோகப் படுத்துவதுதான் முறை. வாழ்க்கை என்ற அனுபவத்திலே-அறிவியல் கடலிலே ஆழக் குளித்து முத்தெடுப்பதுபோல, அறிவியல் உண்மைகளைக் காண்கின்றார்கள். அந்த அறிவியலை அணியாகவாழ்க்கைக்கு ஆபரணமாகக் கொண்டு, மேலும் உள்ள இலட்சியத்திற்குப் போகின்றார்களே தவிர, வாழ்வதுநிரந்தரமாக வாழ்வது- நிலைபேறாக வாழ்வது என்ற இலட்சியத்திற்குப் போவதில்லை.
எனவே, விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என்ற இரண்டையும் பார்க்கின்றபொழுது நமக்கு அவை வேறுவேறாகத் தோன்றவில்லை. அதையே சிறந்த பேரறிஞர்களுள் ஓர் அறிஞன் சொல்லுகின்றான் “இரட்டைச் சகோதரிகள்” (Twin sisters) என்று. இரட்டைச் சகோதரிகளாகப் பிறக்கின்றன அருளியலும் அறிவியலும் இரண்டு சகோதரிகளுள் ஒருவரைக்கொருவர் வேற்றுமை கிடையாது என்று சொல்லுகின்றான். இரண்டு பேரும் மண்ணுக்கும் விண்ணுக்கும், விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்பூட்டுகின்றார்கள்-வலு ஊட்டுகிறார்கள்-உறவுண் டாக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லுகின்றான்.
மண்ணகத்திற்கும் விண்ணத்திற்கும் நிறைய வேற்றுமை இருக்கின்றது. விண்ணகம் இன்பப் பொலியுடையதாக வளமுடையதாக இருக்கின்றது. மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் இணைப்புண்டாக்குகிறான். பாரதியும் அந்தக் கனவைக் கண்டான். “மண்ணகத்தை விண்ணகமாக்க வேண்டும்” என்று சொல்லுகின்றான். எனவே விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமுமாகச் சேர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்புண்டாக்குகின்றன - உறவுண்டாக்குகின்றன. அப்படி உறவுண்டாக்குவதன் மூலமாக நமது நாட்டை நம்முடைய மக்களைச் செழுமைப் படுத்துகின்றன. உள்ளத்தால் செழுமைப் படுத்துகின்றன - பொருளால் செழுமைப் படுத்துகின்றன; உள்ளத்துச் செழுமை பொருட் செழுமையாக வரமுடியும். பொருட்செழுமையால் உள்ளத்துச் செழுமை மலரமுடியும். பொருளியல் செழுமைக்கும் உலகியல் செழுமைக்கும் விஞ்ஞானமும் துணையாக நின்று வளர்கிறது. எனவே இதனை “இரட்டைச் சகோதரிகள்” என்று தெளிவாகச் சொல்லுகின்றான்.
எப்படி வானவில்லிலே பல வண்ணங்கள் இருந்தாலும் கூட, அந்த வண்ணங்களிலே ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவு இருக்கிறதோ-நெருங்கிய பிணைப்பு இருக்கின்றதோ அதுபோல விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் ஆழமான அனுபவத்திலே நிறையப் பிணைப்பு இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதுமட்டுமல்ல, இன்னொரு உண்மையும் நமக்குத் தெரிய வேண்டும். இதுவரை விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், நாட்டு வழக்காயினும் சரி, உலக வழக்காயினும் சரி விஞ்ஞானி படைப்புக் கர்த்தாவாக வழக்குக் கிடையாது. கண்டுபிடித்தான், கண்டுபிடித்தான் என்றுதான் சொல்லுவார்கள். கண்டுபிடித்தல் என்று சொல்லுகின்றபொழுதே எங்கோ இருக்கின்ற ஒன்றை இயற்கையிலேயே உருவாக்கப்பட்டுப் படைப்பிலே அதிசயமாகப் பரந்து கிடக்கின்ற ஒன்றைக் கண்டுபிடிப்பது என்றுதான் சொல்லுவார்கள், கண்டு பிடித்தல் என்று சொல்லுகின்றபொழுதே எங்கோ இருக்கின்ற ஒன்றை இயற்கையிலேயே உருவாக்கப்பட்டுப் படைப்பிலே அதிசயமாகப் பரந்து கிடக்கின்ற ஒன்றைக் கண்டுபிடிப்பது என்றுதான் பொருளே தவிர, அவன் படைப்புக் கர்த்தாவாக வந்ததில்லை. விஞ்ஞானி நேற்றும் படைப்புக் கர்த்தாவாக இருந்ததில்லை. இன்றும் இல்லை. நாளையும் வருவான் என்பது ஐயப்பாடுதான். எனவே விஞ்ஞானம் என்பது கண்டுபிடிப்பது என்று சொன்னால் கண்டுபிடித்தவனுக்கும் ஏற்கெனவே வைத்தவனுக்கும் எவ்வளவு உறவு இருக்கிறதோ அவ்வளவு உறவு இருக்கிறது அறிவியலுக்கும் அருளியலுக்கும் என்று சொல்கிறார்கள். அதுமாத்திரமல்ல. விஞ்ஞானத் திறனுடைய முழுமுறை வைப்பு இருக்கிறதே அந்த முறை அமைப்புப்படி பார்த்ததால், அது நாடு முழுவதும் வையகம் முழுவதும் முழுமையாகக் காட்டுவதில்லை. உங்களுக்குத் தெரியும். ஐம்பது ஆண்டு அறிவியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் நாளுக்குநாள் நாழிகைக்கு நாழிகை மாறுபட்டுக் கொண்டே வந்திருக்கிற உண்மை. வளர்ந்த அறிவியலாக-பரிபூரணத்துவம் பெற்ற அறிவியலாக நாம் ஒன்றைக் கருத முடியவில்லை. அணுயுகத்திலே வாழ்கிறோம். அணுவைப்பற்றி நிறையப் பேசுகின்றோம்.
17-ஆம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன். அந்த நூற்றாண்டுக் கடைசியில் அதாவது 18ஆம் நூற்றாண்டிலே அணு என்றால் உடைக்க முடியாதது, பிளக்க முடியாதது என்றெல்லாம் விஞ்ஞானிகள் சொன்னார்கள். அதையும் நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் அடுத்த நூற்றாண்டின் கடைசியில் அணுவை உடைக்க முடியும். கோடிக்கணக்கான துகள்களாக உடைக்க முடியும். ஒரு குண்டூசியின் முனையிலே கோடிக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொன்னார்கள். ஆக அறிவியல் துறை முடிவுகள் இருக்கின்றனவே அவை பூரணமாக வளர்ந்து விடவில்லை. எங்கோ வளர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியலின் இலட்சிய எல்லை-அதனுடைய இலட்சியக் கோடு இன்னும் நம்முடைய கைகளுக்கும் அறிவிற்கும் மூளைக்கும் அனுபவத்துக்கும் எட்டாமல் தூரத்திலே இருக்கிறது என்று தெரிவதனாலேயே அந்தப் பேரறிவை “உயர்ந்த அறிவு” (Wisdom) என்று சொல்கிறார்கள். அந்த உயர்ந்த அறிவு இருக்கிறதே அதைத்தான் இறைவன் அல்லது அருளியல் சார்ந்த தலைவன் என்று வாழ்த்துகின்றோம். அதையேதான் திருவள்ளுவரும் கூடத் தெளிவாக உறுதியாக இடம் நோக்கிச் சொன்னாரோ, அல்லது வருங்காலத் தலைமுறைக்குச் சொல்லி வைத்தாரோ, தெரியவில்லை. இறைவனைப் பற்றிச் சொல்லுகிறபொழுது ‘வாளறிவன்’ என்று சொல்லுகின்றார். அறிவாலே தேடக்கூடிய தலைவன், அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட அறிஞனாக இருக்கின்ற தலைவன். அங்கே அறிவு தூய்மையாக இருக்கிறது. ஆக்கமாக இருக்கிறது. எழுச்சியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக. எனவே அறிவியலை எல்லைக்கோடாக வைத்துக் கொண்டு இதுசரி இதுதவறு என்று முடிவு செய்ய முடியாது. எனவே அறிவு வளர்ந்து கொண்டே போகிறது. நேற்றைய அறிவைவிட இன்றைய அறிவு வளர்ந்திருக்கிறது. இன்றைய அறிவைவிட நாளைய அறிவு நிச்சயமாக வளரப் போகின்றது. நேற்றைய அறிவும் இன்றைய அறிவும் முரண்படுகிறது. இன்றைய அறிவும் நாளைய அறிவும் முரண்படப் போகிறது. அப்படி முரண்படுவதற்குக் காரணம் தம்முடைய வளர்ச்சி, அப்படி வளர்ந்து கொண்டே இருக்கிற அறிவைப் பார்க்கின்றபொழுது ஒரு பெரிய ஏணியிலே இரண்டு படியைத் தாண்டி விட்டால் இன்னும் இருபத்திரண்டு படிகள் உள்ளன என்பது எப்படி உண்மையோ அப்படியே இந்த அறிவியலுலகத்திற்கு அப்பாற்பட்ட-இன்னும் வளர்ந்த முழுமையுடைய-முழுத் தன்மையுடைய அறிவியல் ஒன்று இருக்கிறது என்பது உண்மை.இறைவனுக்கு ஞானம் என்று ஒரு பொருள் உண்டு. ஞானத்தின் வடிவாக இருக்கிறான் என்று சொல்வார்கள். ஞானம் என்பது அறிவு என்பதனுடைய மறு பொருள்தான். அறிவியல் உலகியலில் ஒட்டியிருக்கும் பொழுது அறிவு என்று சொல்லலாம். அது அருளியலைச் சேர்ந்து, பழுத்து முறையாக வளர்கின்ற பொழுது ஞானம் என்று சொல்கிறோம். அறிவினாலே, ஓரோர் சமயம் அல்லல் வர முடியும்; அறிவு சில சமயங்களிலே மறக்கத் தூண்டும். அறிவு சில சமயங்களிலே அகங்காரத்தைத் தூண்டும். ஆனால், அருளியல் சார்ந்த ஞானம் இருக்கிறதே அது அடக்கத்தைத் தரும், பண்பைத் தரும்; அன்பைத் தரும், ஆக்கத்தைத் தரும். இதனாலேயே இந்த அறிவுக்கும், அந்த அறிவுக்கும் வேற்றுமைப்படுத்த வேண்டுமென்பதற்காக இங்கே அறிவு என்று சொன்னார்கள்; அங்கே ஞானம் என்று சொன்னார்கள். அந்த உயர்ந்த ஞானத்தின் வடிவமாக இருக்கின்ற இறைவன்னப் பார்க்கின்ற பொழுது, அனுபவத்துக்குக் கொண்டு வருகிற சாதகமாகப் பார்க்கிறோம். இன்னும் தெளிவாகத் தமிழ்நாட்டினோடு சமய நெறியை வைத்துப் பார்த்தால் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தினுடைய இன்றியமையாத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. சிலர் விஞ்ஞானத்தைப் பழித்து, அது வளர்வதனாலேயே ஏதோ ஒரு பெரிய கேடு நாட்டுக்கு வந்து விட்டதாகச் சொல்வார்கள். அந்த முறை தப்பு. மெய்ஞ்ஞானத்தினுடைய வளர்ச்சிக்கு அறிவியல் அல்லது விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அப்படிப் பார்க்கிற பொழுது, இறைவன் இந்த உயிர்களுடைய அனுபவத்துக்காக, நிறைந்த அனுபவப் பொருள்களை, நிறைந்த உணர்வு உடைமைகளை எல்லாம் உலகத்திலே நிறையக் கொடுத்து வைத்திருக்கிறான். அப்படிக் கொடுத்து வைத்ததையெல்லாம், அறிவுக் கூடமாக இருந்தமையால் நாம் பூரணமாக அனுபவிக்க முடியவில்லை. இப்பொழுது இறைவனுடைய படைப்பிலே இருக்கின்ற அதிசயங்களை அற்புதங்களை, ரகசியங்களையெல்லாம் நாமே அறிந்து, உணர்ந்து அனுபவிக்கிற சக்திகளெல்லாம் வருவது இருக்கிறதே அது நம்முடைய தலைவனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. ஆம், இறைவன் நமக்காகவே செய்ததால் இந்த அதிசயங்களை-அற்புதங்களையெல்லாம் நீண்ட நாட்கள் கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடாாக அனுபவிக்காத நிலைமையிலிருந்து மாறி நாம் அதற்கு நம்மை முழுவதையும் உரிமையாக்கிக் கொண்டு, நாம் அவற்றை அனுபவிப்பதனாலே மெய்ஞ்ஞானம் வளாகிறதே தவிர அங்கே ஒரு கேடு வருவது போலில்லை. எனவே விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என்று பார்க்கிறபொழுது எனக்கு விஞ்ஞானத்தினுடைய படிகளிலே விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியிலே, விஞ்ஞானத்தினுடைய நிழலிலே உண்மையான அருளியல் வளர்கிறது-அப்பொழுது அருளியல்கூட முழுத்தன்மை பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தெளிவாகச் சொல்லப்போனால் விஞ்ஞானத்தினுடைய தளர்ச்சியிலே கொஞ்சம் அருளியல் தடுமாற்றம் அடைவது போலத் தோன்றும். ஆனால் அது எப்பொழுது என்று சொல்ல வேண்டும். நம்பிக்கையின் மீது மாத்திரம் கட்டப்பட்ட சமயம் அல்லது சில சடங்குகள், சில முறைகள் இவற்றாலே மாத்திரம் உயிர்விட்டுக் கொண்டிருக்கிற சமயமாய் இருக்குமானால்-அறிவோடும் அனுபவத்தோடும் ஒத்துவராத சமயமாய் இருக்குமானால் அது வாழாது; செத்துக் கூடப்போய்விடும் என்று தெளிவாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் சமயம் என்பதை எது என்று கருதுகிறீர்கள் என்பதை நோக்க வேண்டும். சமயம் என்றால் ஒரு பரிபூரண வாழ்வு என்று பெயர். மனிதனுடைய உள்ளத்தைத் தொட்டு அவனைப் பக்குவப்படுத்தி அவனைச் செழுமையுடைய மனிதனாக்கி அவனை அன்பு மனிதனாக-அறமனிதனாக-மனிதரில் தேவனாக ஆக்குகின்ற உயர்ந்த பண்பாட்டிற்குத்தான் சமய வாழ்வு என்று பெயர். அந்தச் சமய வாழ்வு எந்தக் காலத்திலும் மனிதனுக்குத் தேவைப்படும். அவன் மிக உயர்ந்த வானவெளியிலே பறக்கின்ற காலத்திலே கூட, செவ்வாய் மண்டலத்திற்குத் தேடிப்பார்க்கின்ற பொழுது அமைதி தேவைப்படுகின்றது. உடம்பு மாளிகையிலே தூங்கினாலும், உடம்பு வான ஊர்தியிலே தூங்கினாலும் அவனடைய மனம் மட்டும் எங்கோ அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. அழுது கொண்டிருக்கிறது. அவலப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி அழுகின்ற-அவலப்படுகின்ற-அலைந்து திரிகின்ற ஆன்மாவிற்கு அந்த ஒரு அமைதி-ஒரு சூழல் வேண்டும் என்று சொன்னால் வளர்ந்து வருகின்ற அறிவியல் உச்சத்தினுடைய ஆபத்திலே அவனுக்கு அமைதியான சமயம் தேவைப்படுகிறது. மலை ஏற, ஏற, மலை உச்சி ஏற ஏற அவனை நோக்கி ஒரு அச்சம் உருவாவதை நீங்கள் பார்க்கிறீர்கள். வானவெளியிலே ஊர்ந்து போகப் போகப் பழக்கப்பட்டவனாயிருந்தாலும் சரி, ஏதோ ஒரு அச்சம் அவனைச் சூழ்கிறது. அவன் அதைத் தன்னைத்தானே சமாளித்துக் கொள்கிறான். அப்படி வருகின்ற காலத்திலே எல்லாம் அவனுக்குச் சேமமான அமைதியான குடியிருப் பதற்குரிய சூழ்நிலை வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். எனவே நல்ல விஞ்ஞானக் கட்டத்தினுடைய உச்சத்திலே வளர்கின்ற பொழுதுகூட அவனுக்கு அருளியலின் துணை அவசியம் தேவைப்படுகிறது. அப்படிச் சமயம் என்று பார்க்கின்றபொழுது வெறும் சடங்குகளை அல்லது நம்பிக்கைகளை நீ நம்பு என்று சொல்லுகிற சமயம் இருக்கிறதே அது ஒரு காலத்தில் வாழாமற்போனால் போகலாம். அல்லது கதைகளை, புராணங்களை நம்பிக் கொண்டு வாழ்கின்ற சமயம் இருக்கிறதே வேண்டுமானால் நசித்துப் போகலாம். அதிலிருந்து நம்பிக்கை வீணாகப் போகலாம். அதைச் சொல்லப் போனால் ஆங்கிலத்திலே சொல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த வைதிகச் சமயத்துக்கு அல்லது அந்தச் சடங்குச் சமயத்துக்கு (Orthodox Religion) என்று சொல்வார்கள். அது செத்துத்தான் போகும். அது நீண்ட நாட்கள் உயிர் வாழ்வது என்பது முடியாத காரியம். ஆனால், அதே காலத்தில் அறிவோடும் அனுபவத்தோடும் உலகியலோடும், மனோதத்துவத்தோடும் தொடர்பு கொண்ட மனப்பக்குவ ரீதியாக இருக்கின்ற ஆன்மநெறி இருக்கிறதே- உயிரியல் நெறி இருக்கிறதே அது வாழத்தான் செய்யும். அது வாழ வேண்டிய அவசியம் அவைகளுக்குத் தானாக வந்துவிடும். திரும்ப விஞ்ஞானிகள் அந்தத் திசை நோக்கிப் போவார்கள். எனவே, உங்களுக்குத் தெரியும் தொட்டதெல்லாம் பொன்னான கதை, கேள்விப் பட்டிருப்பீர்கள். இளம் பிளையாகப் படிக்கின்றபொழுது ஒரு மனிதனுக்குப் பொன்னிலே பொருளிலே ஆசை நிறைய இருந்தது. இறைவனைப் பார்த்து வரங்கேட்டான் தனக்குத் தொட்ட தெல்லாம் பொன்னாக வேண்டுமென்று. மனிதனுடைய ஆசைக்கு எல்லை கிடையாது; கங்கு கிடையாது; கரை கிடையாது. அந்த ஆசையினாலே தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று கேட்ட பிறகு இறைவனும் அந்த வரத்தைக் கொடுத்தான். அவன் எல்லாவற்றையும் தொட்டான். கதவு ஜன்னல் எல்லாவற்றையும் தொட்டு முடித்த பிறகு எல்லாம் தங்கமயமாகி விட்டது. பன்னிரண்டு மணி ஆயிற்று. வயிற்றுப்பசி வந்தது. இலையிலே சோற்றைப் போட்டுத் தொட்டான். அதுவும் தங்கமாயிற்று. அவனுக்கு ஆத்திரமாக வந்தது. இல்லை வருத்தப்பட்டான்; இரக்கப் பட்டான்; கழிவிரக்கம் கொண்டான். ‘அப்பா ! இறைவா! எனக்குப் பொன் வேண்டாம்; என்னுடைய அனுபவத்தைக் கொடு; எனக்கு அனுபவித்தல் போதும். கஞ்சியானாலும் கூழானாலும் நான் அனுபவித்து வாழ்ந்தால் போதும்’ என்று திரும்பக் கேட்டான் என்ற வரலாற்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல, அறிவியலின் உச்சகட்டத்திற்குப் போன பிறகு அவனுடைய ஆன்மார்ந்த அனுபவத்திற்கு உயிரியலில் தோய்ந்த அனுபவத்திற்கு அப்பொழுது இடையூறுகள் வரும்; அவர்கள் சமயத்தை நோக்கி வெகு வேகமாக வருவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி வெகுவேகமாக வருகின்ற பொழுது பண்பட்ட பரிபூரணத்துவமுடைய, மனிதனுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்ற சமயம் என்றால் அதற்குத் தெளிவான பொருள்வேண்டும்-தெளிவான விளக்கம் வேண்டும். இது தான் சமயம் என்று சொல்லிக் கொண்டு சில சடங்குகளை, சில நடைமுறைகளை மாத்திரம் சமயம் என்று காப்பாற்றிக் கொண்டு போவோமானால் அந்தச் சமயங்கள் அறிவியல் வளர்கின்றபொழுது ஆட்டங் கொடுக்கத்தான் செய்யும்; வாழமுடியாமற் போனலும் போகலாம். ஆனால் அறிவியலோடும் அனுபவத்தோடும் ஒத்து வருகின்ற சமயம், வாழ்க்கையினுடைய எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் இணைப்புக் கொண்டிருக்கிற சமயம் நிச்சயமாக வாழும் என்கிற நம்பிக்கை நமக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதுமாத்திரமல்ல அந்தச் சமயவாழ்வினுடைய மறு முயற்சிகளைப் பார்க்கிறோம். உயர்ந்த உலக அனுபவம் இருக்கிறதே அதற்கு நம்முடைய சமய அனுபவம் துணையாக நிற்கிறது. எங்கே பார்த்தாலும் மனிதனுடைய உயிர்களுக்கு அனுபவம் இன்றியமையாத ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். எதை நோக்கிப் போனாலும் அவன், அதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அந்த அனுபவத்துக்குத் துணையாக-தூண்டுகோலாக இருக்கின்ற அருளியல் உணர்ச்சி இருக்கின்றதே அதனுடைய தன்னறிவை - தன்னறிவு என்று சொல்கிறபொழுது நான் குறிப்பிடுகிறேன் உயிரியல் அறிவைத் தருவது, உயிரியல் அறிவும் ஒரு விஞ்ஞானம் போல. எப்படி தாவரத்தைப் பயிலுவது ஒரு தாவர அறிவியலாகத் தெரிகிறதோ, எப்படி நிலநூல் வரலாற்றை நிலநூல் தன்மையைப் படிப்பது ஒரு அறிவியலாக இருக்கிறதோ அதுபோல உயிரியலைப் பற்றி அறிந்து கொள்வதும் உயிரைப் பற்றி ஆராய்வதும் உயிரைப் முடிவுகளைக் காண்பதும் உயிரியல். அறிவியலை நாம் முழுதும் உணர்ந்து கொண்டோமானால் அந்த உயிரினுடைய தத்துவங்களை-எண்ணச் சேர்க்கைளைத் தெரிந்து கொள்வோமானால் எப்பொழுது நமக்குத் தேவைப்படுகின்ற அறிவியல் உணர்வு இருக்கிறதே அதைவிட அருளியல் உணர்வு மிக இன்றியமையாத ஒன்று என்ற கருத்து நம்மில் ஆழமாகப் பதியமுடியும். அந்த உயிரியல் அறிவின்மை காரணமாகத்தான்-உயிரைப்பற்றிய தெளிவான கருத்தும் கொள்கையும் தன்மையின் காரணமாகத்தான் பலருக்குச் சமய வாழ்விலே நம்பிக்கை குறைவதும் ஐயமிருப்பதும் காரணமாக இருக்கிறது. அதைவிட உயிரியல் சம்பந்தமாக நமக்குச் சில அறிவுகள்-சில எண்ணங்கள்-சில கோப்புகள் இருக்குமானால் சில கொள்கை வரம்பு இருக்குமானால் இந்த அறிவு நம்மை உயர்ந்த அருளியல் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. அப்படி அழைத்துச் செல்கின்ற பொழுது ஏற்படுகின்ற சமய அனுபவம் இருக்கிறதே அந்த சமய அனுபவத்துக்கு எடுத்துக் காட்டாக ஒன்றே ஒன்று சொல்ல முடியும். உயர்ந்த அனுபவ விஞ்ஞானி இருக்கின்றான். இரண்டு பேருக்கும் தாயுமானவருடைய பாட்டு ஒன்றைச் சொன்னால் என்னுடைய கருத்து முற்றுப் பெற்றதாகும் என்று கருதுகிறேன். தாயுமானவர், நாம் முன்னே சொன்னதுபோல செடியிலே பூத்து நின்ற ஒரு மணமிக்க மலரைப் பார்த்தார். பார்த்தவுடனேயே ‘பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்க நண்ணேன்’ என்று பாடிப்பரவி, வாழ்த்திவிட்டார். அது மெய்ஞ்ஞானியினுடைய நிலை. அந்த பூவைப் பறித்து அதை வாழ்க்கைக்குப் பயன்படுத்தி அனுபவத்துக்குக் கொண்டு வருகின்ற முயற்சியிலேயே மனித அறிவியல் மேதைகள் தலைப்படுகிறார்கள். இரண்டு பேருக்கும் அனுபவம் இருந்தது. அதைப் பறித்துத் தனக்குரிமையாக்கிக் கொள்வதன் மூலம் அறிவியல் மேதைகளுக்கு அனுபவம் இருக்கிறது. பார்க்காமலேயே அந்தப் பூவினுடைய தன்மையை பூவினுடைய மாட்சியை, பூவினுடைய அடக்கத்தை பூவினுடைய ஆட்சியை, பூவினுடைய எல்லாவிதமான எடுப்புக்களையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்கின்ற மாட்சிமை தாயுமானவர்க்கிருந்தது. தனக்குப் பறித்து உரிமையாக்கிக் கொள்கின்றவர்கள் அறிவியலாராக இருக்கிறார்கள். தனக்குரிமையாக்கிக் கொண்டு அறிவியலை அனுபவிக்கின்றவர்கள் அறிவின் மேதைகளாக இருக்கிறார்கள். தாயுமானவர் போன்றவர்கள் தமக்கு அதை உரிமையாக்கிக் கொள்ளாமலேயே அதைத் தாம் உணர்வதின் மூலமாக அந்தப் பொருளைப் பார்த்துச் சிந்தித்து உணர்வதின் மூலமாக தமக்கு உரிமையாக ஆக்கிக் கொள்வதற்கு மெய்ஞ்ஞானம் அல்லது அருளியல் என்று பெயர்.
...செடியிலே மலர் இருந்தபடியே, அதைப் பார்த்தபடியே பார்த்து இருந்தபடியே இருந்து, சொன்னபடி சொல்லி என்று சொல்லுவார்கள். அதுபோலச் செடிகளில் மலர் இருந்தபொழுதே இருந்தபடியே பார்த்து அந்த மலரை-மலரின் மாட்சிமையைத் தனக்குரிமையாக்கிக் கொண்ட பெருமை தாயுமானவர்க்கிருந்தது. அறிவியல் மேதைகளுக்கு அப்படி இருக்க முடியாது. அதைப் பறித்துத் தன்னுடைய வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்து உரிமையாக்கிக் கொள்வார்கள். இவர்கள் அனுபவிப்பார்கள்: அவர்கள் உணர்வார்கள். இவர்கள் அனுபவத்திற்குக் கொண்டு வருவார்கள். இந்த இணைப்புகளை வைத்துப் பார்க்கின்றபொழுதும் நமக்குச் சமயஅறிவு, விஞ்ஞான அறிவு இரண்டும் முரண்பாடாக இல்லை என்று தோன்றுகிறது. இன்னும் தெளிவாக, சில பேரறிஞர்கள் சொல்லுகிறார்கள். நகைச்சுவையாகச் சொல்லுகிறார்கள். விஞ்ஞானமும் சமயமும் முரண்படுகிறது என்று சொல்கிறவர்கள் விஞ்ஞானத்திலே மிக மிக இளைஞர்களாக இருப்பார்கள். அல்லது சமயத்திலே ஒன்றும் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். விஞ்ஞானமும், சமயமும், அறிவியலும், அருளியலும் ஒன்றோ டொன்று முரண்படுகிறது என்று சொன்னால் அப்படிச் சொல்கிறவர்கள், அறிவியல் துறையிலே வளராத இளைஞர்களாக, இன்னும்-இப்பொழுதுதான் அறிவியலைப் படிக்கின்றவர்களாக, அறிவியலில் உச்சகட்டத்தை அடையாதவர்களாக இருப்பார்கள். அல்லது, சமயத் துறையிலே இருப்பவர்கள் அவற்றில் பூரணத் தெளிவில்லாதவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட இரண்டு பேரும்தான் அறிவியலும் சமயமும் முரண்படுகிறது என்று சொல்லுவார்கள். அப்படி இல்லாதவர்கள், தேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், தெளிவான அறிவுடைய இரண்டும் ஒரே திசையை நோக்கிப் போகின்றன என்றே சொல்லுவர்.
ஒரு பொருளைப் பார்க்கின்றபொழுது, பொருளின் வேறாக நின்று அனுபவிப்பது ஒரு முறை; பொருளோடு சேர்ந்து பொருளோடு ஒன்றியிருந்து அனுபவிப்பது ஒரு முறை. விஞ்ஞானி-அறிவியல் மேதை பொருளோடு வேறாக நின்று, பொருளுக்கு வெளியே நின்று பொருளைப் பார்த்துப் பார்த்து, ஆராய்ந்து ஆராய்ந்து பொருளோடு தன்னுடைய வாழ்க்கையை இணைத்துக் கொள்கிறான். ஆனால், மெஞ்ஞானிகள்-அருளியல் மேதைகள் பொருளோடு ஒன்றி, பொருளே தாமாக ஆகி அப்பொருளின் அனுபவங்களையெல்லாம் - மாட்சிமைகளையெல்லாம் தமக்கு உரிமையாக்கிக் கொள்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம். இந்த நுணுக்கமான வேற்றுமைகளை எல்லாம் பார்க்கும்பொழுது இந்த இருவரும் கிட்டத்தட்ட ஒரே பாதையிலே போகிறவர்கள்தான். இவர்களும் கூட அனுபவிக்கிறார்கள்; அறிகிறார்கள்; ஆராய்கிறார்கள். அவர்களும் பொருளை ஆராய்கிறார்கள்; அறிகிறார்கள். ஆனால், இரண்டு பேருக்கும் ஒரே ஒரு வேற்றுமை. அங்கே தன்னமைப்பு ஆக வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த எண்ணங்களையெல்லாம் மையமாக வைத்துப் பார்க்கின்ற பொழுது கடவுள் நம்பிக்கையினாலே விஞ்ஞான வளர்ச்சி கெடுவதில்லை என்றும் விஞ்ஞான வளர்ச்சி கடவுள் நம்பிக்கைக்கு அரண் செய்கிறது என்றும் சொல்கிறார்கள். நல்ல உயர்ந்த விஞ்ஞானம், உயர்ந்த அறிவியல் சமய உணர்ச்சிக்கு அரண் செய்து கொண்டே போகிறது. சமய உணர்ச்சிக்கு அரண் செய்வதன் மூலம்தான் விஞ்ஞானத்துக்குப் பெருமையும், மாட்சிமையும், இருக்கிறது - விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியைக்கூடப் பாராட்ட முடிகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னைக் கேட்டால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இன்னும் அதிகமான சமய நம்பிக்கையும், சமய வழிபாடும், சமய உணர்வும், பெருகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சமய, விஞ்ஞான வளர்ச்சி வளர வளர அதனுடைய உலகியல் தேவைகள் நிறைவு செய்யப்படும். இப்பொழுது உலகியல் தேவைகளுக்கே போராடிக் கொண்டிருந்த காலத்திலே, வாழ்கிறோம்.
நம்முடைய வாழ்க்கைத் தேவைகளான சோற்றுக்கும் துணிக்கும் போராடிக் கொண்டிருக்கிற கேவலமான காலத்திலே-அவைகளை இன்னும் நிறைவு செய்ய முடியாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல விஞ்ஞானக் கலை வளருமானால், அதன் மூலமாக உலகியல் தேவைகள் நிறைவு செய்யப் பெற்று விடும்.
உலகில் தேவைகளை நிறைவு செய்த பிறகு அதனுடைய முயற்சிக்கு, அதனுடைய போராட்டத்துக்கு, அதனுடைய ஆக்க ரீதியான எண்ணங்களுக்கு, சிந்தனைகளுக்கு, வேறு பற்றுக்கோடே இருக்க முடியாது. அந்த உயர்வு கடவுளிடத்திலே அவர்கள் எண்ணுகின்ற எண்ணம் போக்கெல்லாம் வரும்.
இன்றைக்கு இந்தக் தொடக்கக்காலத்திலே அறிவியலும் வளர்கிறது. அருளியலும் வளர்கின்றது. இரண்டுக்கு மிடையே கொஞ்சம் மோதுதல் இருப்பதற்குக் காரணம், நம்முடைய தேவைகள் போதவில்லை. நம்முடைய தேவைகள் எல்லாம் நிறைவு செய்யப்பட்வில்லை. அங்கே செல்ல வேண்டும்-இங்கே செல்ல வேண்டும் என்ற ஆசையிலே உந்து வண்டியாகப் பறந்து கொண்டிருப்பதனாலேதான் நமக்கு இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலக் கட்டத்திலே இந்த அறிவியல் முறையாக-ஒழுங்காக வளர்க்கப்படுமானால்-ஆதிபத்திய உணர்ச்சிகளுக்கு உரிமையாக்கப்படாமல் வளர்க்கப் பெறுமானால் நிச்சயமாக ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாக இந்த உலகத்தின் தேவைகள் நிறைவு செய்யப்பெறும்.
அப்பொழுது சோற்றுக்காக முயற்சிப்பது என்கிற வார்த்தையே இல்லாமற் போய்விடும். துணிகளுக்காக முயற்சிப்பது என்கிற வார்த்தையே இல்லாமற் போய்விடும். சோறு துணிக்காக மக்கள் முயல்கிறார்கள் என்கிற காலக்கட்டம் போய், அது எல்லாம் நிறைவேறிய பிறகு அவன் சோம்பேறியாக இருக்க முடியாது. ‘பொறிகளுக்குத் தேவையானவை கிடைத்த பிறகு புலன்களை நோக்கி மனிதன் பாய்கிறான்’ என்பது ஞானிகளின் அனுபவ சித்தாந்தம். அவனுடைய கைகள், கால்கள் அவனுடைய தேவைகள் நிறைவு செய்யப் பெற்ற பிறகு வேறு திசையிலே பொறிகளும், புலன்களும் திரும்பப் பெறுகின்றன. எப்படி எப்படி ஆற்றுவெள்ளம் தேவைப்பட்ட அளவிற்குத் தேக்கிய பிறகு வேறு திசையிலே திருப்பப் பெறுகிறதோ அதுபோல, மனிதனுடைய உயிரியல் அநுபவம் இருக்கிறதே அது ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கு-குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்கு வந்த பிறகு-அவனுடைய அனுபவங்கள், உலகியல் அனுபவங்கள் நிறைவு செய்யப்பெற்ற பிறகு வேறு திசையிலே திருப்பிவிடப் பெறுகிறது. அப்படித் திருப்பி விடுகிற காலம் வருகிறபொழுது 17-ஆம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிலே இருந்த அறிவு வெள்ளப் புரட்சியை விட, ஒரு சிறந்த புரட்சி உண்டானால் கூட நாம் ஆச்சரியப்படத் தக்கதில்லை. காரணம் மனிதனுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் இந்த உலகியலைச் செழுமைப் படுத்துவதிலேயே இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகள் முடிந்த பிறகு அவன் அருளியல் வெள்ளத்திலே-அருள் ஞானத்திலே-பொருளுக்குப் பொருளாக-பொருளின் உள்ளீடாக-பொருள் ஆற்றலாக இருக்கின்ற உயர்ந்த தன்மைகளை ஆராய்கின்ற ஆராய்ச்சிக்கும் போய்விடுவான். அப்பொழுது அருளியல் வழிப்பட்ட உயர்ந்த சமுதாயம்-உயர்ந்த அறிவியல் உலகம் மலரும்.
அறிவியல் இருக்கிறதே அது ஒழுங்காய், முறையாய் வளர வேண்டுமானால் அதற்கு அருளியல் என்ற வேலி தேவைப்படுகிறது. அறிவியல் வளர்கிறது. மனிதனுடைய அனுபவத்துக்காகத்தான் அறிவியல் வளர்கிறது. இறைவன் மனித உலகத்துக்குக் கொடுத்த அற்புதமான சொத்து, இந்த அறிவுலகம். அற்புதமான சொத்து இந்த மனித ஆற்றல். இந்த அறிவாற்றல்-இந்த மனித ஆற்றல் ஒருவரையொருவர் பழி வாங்குவதற்குப் பயன்படாமல் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சொன்னால் அங்கே அருளியல் என்ற வேலி தேவைப்படுவது ஒன்றாகிறது. எனவே விஞ்ஞான உலகத்தில் விஞ்ஞானம் முந்தி மோதிக் கொண்டு போகின்ற பொழுதுகூட இடறி விழும். விடாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருவியல் வேலியை அவனே அமைத்துக் கொள்கின்ற ஒரு சூழல் வரத்தான் போகிறது. அதேபோல அருளியலுலகம் இருக்கிறதே, அது தன்னடைய தேவைகளை - தன்னைச் சார்ந்து வருகின்ற மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத காலத்திலே அந்த நிறைவு செய்வதற்குத் துணையாக அறிவியலைப் பயன்படுத்துகின்ற சூழ்நிலை வரவே போகிறது. எனவே மீண்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் ஒரே ஒரு வார்த்தைதான் வருகின்றது. அகங்கை, புறங்கை போல மனித வாழ்வுக்கு அறிவியலும் அருளியலும், ஒரு காசின் இருபுறமும் போல. அகங்கை வேண்டுமா? புறங்கை வேண்டுமா? அகங்கை வாழ்ந்தால் புறங்கை வாழுமா? புறங்கை வாழ்ந்தால் அகங்கை வாழுமா? அல்லது காசில் பூ வாழ்ந்தால் தலை வாழுமா? தலை வாழ்ந்தால் பூ வாழுமா? என்று கேட்கப் பெறுகிற கேள்விகள் எப்படிச் சிறுபிள்ளைத் தனமான கேள்விகளாக இருக்கின்றனவோ அதுபோலவே வளர்கின்ற விஞ்ஞானத்தில் சமயம் வாழுமா? என்று கேட்கின்ற வேள்வி என்று நான் கருதுகிறேன். எனவே உயர்ந்த விஞ்ஞானிகள், உயர்ந்த கவிஞர்கள், உயர்ந்த இலட்சியவாதிகள் எனக்குப் பிறகு பேசுகின்ற பொழுது நன்றாக நெஞ்சிலே ஈரம் பிறக்கிறது - கசிவு பிறக்கிறது. மனிதன் அதிசயிக்கின்ற காட்சிகளைப் பார்த்து-அனுபவிக்கின்ற உயர்ந்த எண்ணங்களைப் பார்த்து -அவன் பாடுகின்ற பாடல்களும், கவிதைகளும், காண்கின்ற காட்சிகளும் அறிவியல் வடிப்புக்களும் ஆயிரம் ஆயிரமாகப் பரவிக் கிடக்கின்றன. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியில் சிசரோ என்ற பேரறிஞன் வாழ்ந்தான். அவனை ‘அரசியல் ஞானி’ என்று உலகம் பாராட்டுகிறது. அந்தப் பேரறிஞன் சொல்கிறான்; இந்த உலகத்தில் வியத்தகு அமைப்புக்களிலே-வியத்தகு நிகழ்ச்சிகளிலே எத்தனையோ அதிசயங்கள் விரிந்து கிடக்கின்றன. மாற்றுதற்கரிய எத்தனையோ பெரிய நிகழ்ச்சிகள்-அற்புதங்கள் நிகழ்கின்றன. இவைகளுக்கெல்லாம் யார் காரணமாக இருக்கக்கூடும்? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு, ‘நிச்சயமாக மனிதனில்லை’ என்று சொல்கின்றான். மனிதனுக்கு நினைப்பும் வருகிறது. மறதியும் வருகிறது. எனவே மனிதனுக்குச் சோர்வும் வருகிறது, தளர்ச்சியும் வருகிறது. மனிதன் ஒரு நாள் உறங்குகிறான். ஒருநாள் ஓடுகிறான். அவனிடத்திலே ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை இடையாது. ஆனால், உலகத்தின் அமைப்பிலே- உலகத்தின் நிகழ்ச்சிகளிலே-வியத்தகு தோற்றங்களிலே ஓர் ஒழுங்கு இருக்கிறது. முறைபிறழாத நிகழ்ச்சி இருக்கிறது. எனவே யார் இவற்றையெல்லாம் கண்காணித்துப் பார்ப்பது என்று கேட்கிறான். அவன் அந்த ஒழுங்கு முறை பிறழாத நிகழ்ச்சிக்கு நல்ல ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி (Order and consistency) என்று சொல்கிறான். ஓர் ஒழுங்கு இருக்கிறது; ஒருமுறை பிறழாத நிகழ்ச்சி இருக்கிறது. நம்முடைய காலிலே-கைகளிலே-கொடுக்கப்படுகின்ற காரியங்களிலே பல ஒழுங்கு தவறிப்போகும். நம் கைகளால் நாம் செய்கின்ற நம்முடைய அறிவு பொறி புலன்களாலே செய்கின்ற காரியங்களிலே-உயர்ந்த கடவுள் நம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் உடையவர்களாக நடித்துக் கொண்டிருந்தவர்களிடத்திலே செய்யப்படுகின்ற காரியங்களிலே கூட பல சமயங்களில் ஒழுங்கு தவறுகின்ற-முறை பிறழ்கின்ற காட்சியைப் பார்க்கிறோம். ஆனால், உலகத்தின் அமைப்பிலே நடைமுறைகளிலே ஒரு அற்புதமான சக்தி இருக்கிறது. அது ஒரு ஒழுங்கும் ஒரு முறை பிறழாத நிகழ்ச்சியுமாக இருந்து கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் முறைப்படி இயக்கும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்திக்கு என்ன பெயர் என்று சொல்ல எனக்குத் தெரியவில்லை. என்னுடைய அறிவு அந்த அளவுக்கு வளரவில்லை என்று கையை விரிக்கிறான். அந்த மாதிரி நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். அவனுடைய படைப்பிலே உயிருள்ள பொருள்களுமிருக்கின்றன. ஆனால் மனிதனுடைய படைப்பிலே உயிரற்ற பொருள்கள் இருக்கின்றன வென்று “நூலன்” என்ற பேராசிரியன் சொல்கிறான். இப்படி நூற்றுக்கணக்கான சான்றுகளை-மேற்கோள்களைக் குவிக்க முடியும். இந்த உலகத்தில் விஞ்ஞானிகள் கூட குறிப்பிட்ட காலக்கட்டம் போகிறபொழுது கையை விரிக்கிறார்கள். நுணுக்கத்திலே நுணுக்கமாகப் பார்க்கிறபொழுது இந்த அழகு கைபுனைந்தியற்ற முடியாதது-இந்த வண்ணம் சிற்பியால் தீட்ட முடியாதது-இந்த அமைப்பை மனிதனால் செய்ய முடியாது. அப்படியானால் யார் செய்தது என்று பார்க்கின்றபொழுது என்னுடைய அறிவால் சொல்ல முடியாத-என்னுடைய அனுபவத்தால் எட்டிப் பிடிக்க முடியாத ஏதோ ஒரு சக்தி-ஏதோ ஒரு அறிவாற்றல் இருப்பதை உணர்கிறேன். அதை உணர்ந்து அந்த வழியிலே தொடர்ந்து முயன்று கொண்டிருப்பவனுக்குத்தான் விஞ்ஞான அறிவியல் மேதை என்று பெயர். இலட்சியக் கோடு ஒன்று இருக்கிறது. இலட்சியப் பேரறிவு ஒன்றிருக்கிறது. ஒரு பேராற்றல் இருக்கிறது.
அருளியல் என்ற நீரோடை - ஆற்றோடை உடனாகவே சென்று கொண்டிருந்தால்தான் இந்த அறிவியல் உலகம் அமைதியாக-சமாதானமாக வாழமுடியும். அப்படிப் பார்க் கின்றபொழுது அறிவியலும், அருளியலும் ஒன்றாக இணைந்து வாழவேண்டியவைகள், மதியும் அதனுடைய ஒளியும்போல, கதிரவனும் கதிரொளியும்போல ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவைகள். ஒன்று வளர்ந்தால் ஒன்று வீழும் என்றோ, அல்லது ஒன்று வீழ்ந்தால் ஒன்று வளருமென்றோ கருதுவது தவறு. அறிவியல் வளர்ந்தால் அருளியல் தளரும் என்று சொல்கிறவர்கள் விஞ்ஞானத்தில் இளைஞர்கள். அறிவியல் வளர்ந்தால் அருளியல் பொய்யாகி விடுமென்று அஞ்சுகிறவர்கள் சமயத் துறையில் மூடநம்பிக்கை உடையவர்கள். இரண்டு பேருமே நாட்டுக்கு நல்லன செய்கிறவர்களல்லர். சமயத்துறையில் தெளிவும், உறுதியும், அனுபவமும் இருக்குமானால் உலகத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. சந்திர மண்டலத்துக்குப் போய் வந்திருக்கிறான் என்று சொன்னால், சந்திரனைத் தேவதையாக்கி அதற்கு இருபத்தேழு மனைவியரைக் கட்டிவைத்துப் படித்துக் கொண்டிருக்கிறோமே அந்தக் கதை வேண்டுமானால் நம்பிக்கையில்லாமற் போகலாம்-அந்தக் கட்டுக்கதை வேண்டுமானால் நமக்கு நம்பிக்கை தராமற் போகலாம். ஆனாலும், சந்திர மண்டலத்தைப் பற்றிய அறிவு அல்லது சந்திரனுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு பேரறிவு, ஒரு பேராற்றலிருக்கிறதே அதைப் பற்றிய நம்பிக்கை விட்டுப் போக முடியாது. அவைகள் நாம் பாமரராக இருந்த காலத்திலே அறிவு வளர்ச்சி பக்குவப்படாத காலத்திலே- கதைகளாக, கற்பனையாகச் சொல்லிக்கொண்டு வந்தவைகள். அந்தப் பெரிய கற்பனைக் காட்டைக் கனவு கண்டான். அவற்றைப் பலவாறாக, பல சொற்களாகச் சொல்லி வைத்தான், கதைகளாக, வடிவங்களாக. அவற்றிலே உண்மை பிறந்துவிட்டால் காடு அழிந்து போகிறது. ஒரு சந்தன மரம் என்று சொன்னால் பெரிய காட்டைத் தெரிவித்துப் பேசுகிறோம். பேசுவதைப் பார்க்கிறோம். பல மொழி வார்த்தைகளை இடையிடையே போட்டுப் பேசுவார்கள்-ஆனாலும், அந்த வழிப்பட்ட பொருள் உணர்ச்சி அவர்களுக்கு இருக்காது-பொருளின் வழிப்பட்ட பயன் உணர்ச்சி இருக்காது-நமக்குப் புரியாத மொழியை நாம் எப்படியோ பயின்றுகொண்டு அல்லது மனப்பாடம் செய்துகொண்டு சொல்வதுபோல உணர்வுக்குப் படாமல், அறிவுக்குப் படாமல், (அறிவுக்குப் படாமல் என்று சொல்லக்கூடாது. அறிவுக்குப் பலமொழிகள் படுவதுண்டு. உணர்வுக்குத்தான் வருவதில்லை. எனவே) உணர்வுக்குப் படாமல் சொல்லுகின்ற சொற்களைப் போல அறிவியல் இருக்கிறதே அது உணர்வுக்கு வராத அறிவியல் இருக்கிறதே போல என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட எண்ணங் களையெல்லாம் நினைவிலே வைத்துக்கொண்டு பார்க்கின்ற பொழுது அகங்கையும் புறங்கையும் போல, நீரும் தண்மையும் போல, மலரும் மணமும் போல அறிவியலும் அருளியலும் இணைந்து வாழும் பிணைந்து வாழும்; அவைகளுக்குள் ஒன்றுக்கொன்று முரண்பாடே வராது.
வளர்ந்த அறிவியல் மேதைகள், அருளியலைக்கண்டு வாழ்த்துகிறார்கள். அருளியலிலே வளர்ந்த மேதைகள், அனுபவத்திற்கு உரியனவாயிருக்கின்ற விஞ்ஞானத்தைக் கண்டு வாழ்த்துகிறார்கள். இணைத்தும் பிணைத்தும் வாழ்வதிலேதான் அமைதியும், சமாதானமும் ஆக்கமும் இருக்கிறது. அங்கேயே ஆன்மாவிற்குச் சாந்தியும் ஏற்படுகிறது. ஆறுதலும் ஏற்படுகிறது.