குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/கொடியா? கொம்பா?




4


கொடியா? கொம்பா?


சமுதாய முன்னேற்றத்துக்கு மிகமிக உரியது சமயமா? அரசியலா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். முன்னேற்றம் அடையவேண்டும் - வாட்டுகிற வறுமையையும் - அல்லற் பாதையில் அழைத்துச் செல்லும் அறியாமையையும் அகற்றிப் புதுமைச் சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு அரசியலுக்கு இருக்கிறதா? அல்லது சமய நெறிக்கு இருக்கிறதா? என்பதே கேள்வி!

மனிதர்கள் மோட்சத்திற்குப் போகவேண்டும் என்ற பிரசாரத்திற்காக மட்டும் இது தரப்பெறவில்லை. வீடுபேறு மனிதனாக முயன்று பெறுவதல்ல. மனிதன் மனிதத் தன்மையோடு-அறவுணர்வோடு-அருளியல் சகிப்போடு கூடி வாழும்போது அவனுடைய வாழ்வு முழு நிலை எய்துகிறது. அதுபோது இறைவன் தகுதி நோக்கி அளிப்பது வீடு. மனிதனை மனிதனாக மதித்த அவனுடைய முன்னேற்றத்துக்கும் இம்மைக்கும் உதவுவது எது?

தலைப்பில் உள்ள மிகமிக என்ற சொற்களை ஆராய்ந்தால் கொடி தேவையா? கொம்பு தேவையா? என்பதல்ல கேள்வி? எது மிக மிக அவசியமானது? என்பதே விவாதத்துக்குரிய குறிப்பு என்பது பெறப்படும்.

“அரசியலா? சமயமா?” என்ற கேள்வி இன்றைய மக்கள் மன்றத்தின் கேள்வி.

அரசியல்வாதிகள் ‘சமயம் சமுதாயத்திற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது-தடையாக இருக்கிறது’ என்று கூறுகின்றனர்.

அதே நிலையில் இன்றையச் சமயவாதிகள் பலர் சமுதாய உணர்வின்றி வாழ்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் அருள்நெறி இயக்கத்தினருக்கு உண்மை காணவேண்டும் என்ற உணர்வு எழுந்தது இயற்கையே.

சமயம் மனித இன வாழ்வுக்கு முட்டுக்கட்டை அல்ல; அது வாழ்வுக்குப்பயன்படுவது-வாழ்க்கையை வளப்படுத்துவது என்று உறுதியாக நாம் நம்புகிறோம்.

சமயம் என்ற பொதுத் தன்மையிலேயே இங்கு விவாதிக்கப் பெறுகிறது. சமய வேற்றுமைகளைக் கடந்த அருளியற் பண்பிலேயே சமயம் இங்கு பேசப்படுகிறது - தண்ணீர், வான் ஆகியவற்றின் பெயர் நாட்டுக்கு நாடு மொழியால் வேறுபட்டிருந்தாலும் அதன் இயல் ஒன்றாவது போல, சமயங்கள் பலவாறாகத் தோற்றமளித்தாலும் அவற்றின் அடிப்படைக் கொள்கை-தத்துவம் ஒன்றுதான்.

மதம் என்றாலே கொள்கை என்றுதான் பொருள். நன்னூலார் கருத்தும் இதுவே. “எழுவகை மதமே” என்று தொடங்கும் அவரது நூற்பாவே இதற்குச் சான்று. மனித சமுதாயம் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் முதன் முதலில் உருவான கொள்கையே சமயம்தான். அதனாலேயே சிறப்பாக மதம் என்ற பெயர் சமயத்திற்கே உரியதாயிற்று.

அறிவிலே தெளிவைக் காட்டி-அன்பியலிலே ஆழ்த்தி -அகவாழ்வைத் தொட்டு-அகவாழ்வை வளர்க்கும் நெறியே சமய நெறி. அங்ஙனம் செயற்படாதன சமய நெறியே அல்ல. அகவாழ்வொடு இணையாத-பிணையாத சமயநெறி சோளக்கொல்லைப் பொம்மையைப் போன்றதேயாகும்.

யார் யாரணம்?

சமயத்தால் நாட்டில் பல சண்டைகள் ஏற்பட்டன என்று குற்றம் சாட்டினார்கள். சமயத்துறையில் மட்டுமா சண்டைகள் அரசியலிலும் சண்டைகள்தானே! வரலாற்றை உண்மையாக ஆராய்ந்தால் அவ்வப்பொழுது நிகழ்ந்த அரசியற் சண்டைகளே சமயச் சண்டைகள்போலப் பேசப் பெற்றுள்ளன. காரணம் மக்களிடையே சமய நம்பிக்கை சிறந்து விளங்கியதன் காரணமாகச் சண்டையிட்டவர்கள் மக்களிடம் ஆதரவைத் திரட்டுவதற்காகச் சமயச் சண்டை என்று சொல்லிக்கொண்டார்கள்.

சம்பந்தருக்கும் சமணர்கள் கழுவேற்றத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக அறிவிக்கிறோம்.

அங்கும் அரசியல் மோதலே! அடிப்படை அரசியலேயாம்! திருவருளே என்னத் திகழ்ந்த திருஞானசம்பந்தர் பொறுப்பல்லர் வழிவழியாகச் சிவநெறியில் நின்றொழுகிய மன்னனைச் சமணனாக ஆக்கிப் பாண்டிய நாட்டாட்சியைக் கைப்பற்றி ஆட்சிச் சமயமாகச் சமணநெறியை ஆக்கலாம் என்ற கருத்துடன் சமணர்கள் மன்னனைச் சமணனாக்கினார்கள். தன்னாட்டுக்கு உரிமை உடைய தனக்கு உரிமை உடைய சிவநெறியை விட்டுச் சமணநெறியைச் சார்ந்ததைத் திருஞானசம்பந்தரால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

திருஞானசம்பந்தர் தமிழகத்தின் நாகரிகத்திற்காக- பண்பாட்டிற்காக உரிமைப் போராட்டம் நடத்தினார். அறியாதார் திருஞானசம்பந்தரை ஒரு சமயவாதியாக மட்டுமே பார்ப்பார்கள். அப்படியல்ல!

திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திற்குக் கிடைத்த ஒப்பற்ற அருளாளர்; உள்ளுணர்வுகளையும் இயற்கை எழில்களையும் கவிதைகளாக்கித் தந்த கவிஞர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய தமிழர்.

தமிழர் நாகரிகம் அகனைந்திணை ஒழுக்கத்தின்பாற்பட்டது. ஒருவனோடு-ஒருத்தி கூடி வாழ்கின்ற அறவாழ்வே தமிழர் வாழ்வு. இத்தகு வாழ்க்கைக்கு மாறுபட்ட பாலைவன வாழ்க்கையைத் தமிழகத்தில் நிலைநிறுத்தச் சமணர்கள் முயன்றனர். மேலும், தமிழ் இசைத் தமிழ் இறைவனை ஏழிசையாக- ஏழிசையின் பயனாகப் பார்ப்பவர்கள் தமிழர்கள். திருஞானசம்பந்தர் ஏழிசைத் தந்தையாக விளங்குகின்றார். “கானத்தின் எழுபிறப்பை” என்றார் சேக்கிழார் அடிகளும். சமணர்களோ பண்ணோடு இசைகேளாத நெறியைத் தமிழகத்தில் பரப்ப முயன்றனர்.

இயற்கை, இறைவனை அனுபவிக்கும் பள்ளிக்கூடம். “வண்ணமலரும் நீ”, “பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி” எனவரும் அருளாளர்களின் சிந்தனை நினைவில் கொள்ளத் தக்கது. திருஞானசம்பந்தர் தமது தேவாரப்பாடல்களில் இயற்கையின் எழிலோவியத்தைச் சித்திரமாக்கியுள்ளார். இங்ஙனம் தமிழர் தமிழ் நாகரிகத்திற்கு-அந்த நாகரிகத்தின் நிலைக்களனாக விளங்கும் சமயத்திற்குத் திருஞானசம்பந்தர் போராடினார். ஆனால் திருஞானசம்பந்தர் விவாதத்துறையில் வெற்றி பெறவே திருவுளம் கொண்டார். சமணர்களோ விவாதத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இன்மையின் காரணமாக - கொல்லாமை நோன்பு கொண்டொழுக வேண்டிய சமணர்கள் பலாத்கார வழியில் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்குத் தீயிட்டார்கள். தீயிட்டதின் பரிசைப் பெற்றார்கள்! இல்லை, பரிசைத் தாமே ஏற்றார்கள் என்பதே வழக்கு. இங்கனம் இருக்க அதை எப்படிச் சமயச்சண்டை என்று கருதுவது?

இங்கிலாந்தில் நடைபெற்ற ரோஜாப்பூச் சண்டைகளும் ஆதிபத்திய நோக்கத்தோடு சமயத்தின் பேரால் போட்டுக்கொண்டவைகளேயாம்.

ஒரு சாக்கடைக்குழி!

“மதம் எனும் பேய் பிடியாதிக்க வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் கூறியிருப்பது உண்மை. மதம் அனுபவத்துக்கு உரியது. ஆனால் சிலரைப் பேய்போல் பற்றிக்கொண்டு அவரையும் வாழவிடாமல்-மற்றவர்களையும் வாழவிடாமல் சண்டைகளை விளைவிப்பதைப் பார்த்துச் சொன்னாரே தவிர வேறு அல்ல. சமயநெறியின் பெயரால் மக்களிடையே வாழ்க்கைக்கு ஒத்துவராத பல கொள்கைகள் புகுந்து அவர்களை முன்னேற ஒட்டாது தடுத்து நிறுத்தின. அப்போலிக் கொள்கைகளை வெறுத்துப் பேசி அவர்களைத் திருத்தும் பொறுப்பை மேற்கொண்டார் இராமலிங்க அடிகளார்.

பணம் தேங்கிக்கிடக்கும் முதலாளித்துவம் ஒரு சாக்கடைக்குழி போன்றது. சாக்கடைக் குழியில் ஈயும் கொசுவும் தோன்றித் தொத்து நோய்களை வளர்க்கின்றன. அதுபோல முதலாளித்துவத்தைச் சுற்றிப் போலிகளும்- ஏமாற்றுக்காரர்களும்- காக்காய் பிடிப்பவர்களும்- உறிஞ்சி வாழும் சோம்பேறிகளும்- நன்றியறிதல் இல்லாதவர்களும்- மனித இனத்தின் பகைவர்களும் மொய்த்து வம்புவழக்கு என்ற தொத்து நோய்களை வளர்க்கிறார்கள். இத்தகைய முதலாளித்துவத்தால்தான் இடைக்காலச் சமயத்தில் கறை படிந்தது.

உண்மை இதே

முதலாளித்துவம் கடவுளையே விலைக்கு வாங்கும் அளவுக்குச் சக்தி படைத்தது. அது தன்னுடைய சுரண்டல் கொள்கைக்கு மதத்தை ஒரு கருவியாக ஆக்கிக்கொண்டது. அப்பொழுதுதான்.

புண்ணியத்தின் பயன் பணம்!
பாவத்தின் பயன் ஏழைமை.

என்ற தத்துவம் தோன்றியது. இதன் மூலம் பணக்காரன் மதத்தின் அங்கீகாரத்தோடு சுரண்ட முடிந்தது. ஏழைகளின் உரிமைக்குரல்-வாழ்வுரிமைக்குரல் அடைக்கப்பெற்றது. இக் கருத்தினை ஒட்டி எழுந்ததே, “மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்” என்பது புண்ணியம் மிகமிக உயர்ந்தது- நிலையானது-திருவருள் இன்பத்தைப் பெறுவதற்குச் சாதகமாய் அமைவது. செல்வம் தாழ்ந்தது-நிலையில்லாதது. சிறந்த புண்ணியத்தின் பயனாக இழிந்த - தாழ்ந்த செல்வம் கிடைக்கிறது என்றால் அது பகுத்தறிவுக்கு விளங்கவில்லை! தொன்மைசான்ற சமய தத்துவத்திற்கும் இக்கொள்கைக்கும் இயைபில்லை.

புண்ணியத்தின் பயன் பணமுமல்ல!
பாவத்தின் பயன் ஏழைமையும் அல்ல!
புண்ணியத்தின் பயனாகச் சிறந்த சிந்தனை-குணம்-
பண்பியல்புகள் அமையும்!
பாவத்தின் பயன் இழிந்த குணம் அமையும்!

இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்த தவறான சமயத்தைச் சார்ந்த நடைமுறைகளை மையமாக வைத்தே காரல்மார்க்ஸ் மதத்தைப்பற்றி ஒரு முடிவு செய்துவிட்டார். காரல்மார்க்ஸ் பார்த்தது ரஸ்புடினுடைய சர்ச்சு மதத்தையே யாம்.

“சர்ச்சு மதம் வேறு - பைபிள் மதம் வேறு” என்று ஒரு ஆங்கிலச் சான்று உண்டு.

அதுபோலவே நம்முடைய நாட்டிலும் நடைமுறைச் சமயமும் தத்துவமும் வேறுபட்டிருக்கலாம். நாம் இங்கு காப்பாற்ற நினைப்பது மனிதனை மனிதனாக வாழவைக்கும் உண்மைச் சமயத்தையேயாகும்.

அரசியலில் சட்டம் இருப்பினும் தவறுகள் எப்படிக் குறையவில்லையோ, அதுபோலவே தூய சமய வாழ்வு மேற் கொண்டவர்களிடத்தும்கூடச் சூழ்நிலையின் காரணமாகத் தவறுகள் நிகழலாம்-நிகழக்கூடும். அவ்வப்போது சூழ்நிலையை மாற்றியமைத்துத் தவறுகளைத் திருத்தி மனித வாழ்வை ஆக்குவதே சமய நெறியின் கடமையாக இருக்கிறது.

வள்ளுவரைக் கேட்டால்...

வள்ளுவர், “மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி” என்றே சொல்லுகிறார். “சமயம் நோக்கி வாழும் குடி” என்று சொல்லவில்லை; ஆதலால் அரசியலே மிக மிக உரியது என்று கூறினார்.

திருவள்ளுவர் நூலின் முகப்பிலேயே முதல் அதிகாரத்திலேயே முதற் குறளிலேயே,

ஆதிபகவன் முதற்றே உலகு

என்றே தொடங்குகிறார். திருவள்ளுவர் சமுதாயத்தின் பல்வேறு கொள்கைகளைப் பல்வேறு அறங்களாகத் தனித்தனி அதிகாரங்களாகப் பிரித்துக் குறள் செய்துள்ளார். அந்த அந்த அதிகாரத்தில் அந்த அந்தக் கருத்தை வலியுறுத்துகிறார். கடவுள் வாழ்த்தில் இறைவனைச் சிறப்பித்துப் பேசுகிறார்; அரசியலில் அரசனைச் சிறப்பித்துப் பேசுகிறார். இதிலும்கூட ஆழமாகச் சிந்தித்தால், “மன்னவன் கோல்நோக்கி வாழும்” என்பதைவிட, “உலகிற்கு முதல் ஆதி பகவன்” என்பதே வலிமையுடையதாகத் தோற்றமளிக்கிறது. அரசனை அறவழி ஆற்றுப்படுத்தும் நோக்கத்தோடு,

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யானுயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் எழுந்தன. இப்பாட்டினால் அரசே முக்கியம்-சமயம் முக்கியம் அல்ல என்று முடிவுசெய்ய முடியாது.

தட்டிக் கேட்க முடியுமா?

அரசு வளையும்போதும் அரசியல்வாதி ஒருவன் தட்டிக் கேட்கமாட்டான். கேட்டால் பட்டம்-பதவி-சிறப்புஉயர்வு கிடைக்காது.

அரசியல் சற்று வளையும்போது தட்டிக் கேட்கும் தன்மை-நெஞ்சுரம் அருளியல் ஒன்றினுக்கே உண்டு. இதற்குச் சான்று அப்பரடிகள் வரலாறு.

கொடிகட்டி ஆண்ட பல்லவ மன்னனையே எதிர்த்து நின்றார்; மன்னனை அண்டிவாழ்ந்தால் தானம் நிலம் மானியம் கிடைக்கும் எனக் கருதி வாழும் பிற்பட்ட சமயவாதியாக அவர் இல்லை.

பழுதிலாத் துறவுடன் வீடும் வேண்டா விறலின் விளங்கினார் அவர். தாமார்க்கும் குடியல்லாச் சங்கரனுக்கே ஆட்பட்ட அப்பரடிகளிடம் அரசியலைத் தட்டிக் கேட்கும் மாசிலாத் துறவு இருந்தது. தொண்டுள்ளம் இருந்தது. வளமிக்க அருளியல் அனுபவம் இருந்தது. எனவே ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்று வாழ முடிந்தது.

கணக்கு மூளை

சமயக்கணக்கர் மதிவழிச் செல்லாச் சான்றோன் என்று திருவள்ளுவரைச் சிலர் குறிப்பிடுவார்கள். உண்மைதான்! வள்ளுவர் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாதவர்தான். எனினும் உண்மைச் சமயநெறியில் வாழ்ந்தவர்.

சமயக்கணக்கர் என்றுதானே கூறப்பட்டிருக்கிறது. கணக்குமூளை-கணக்கரிடம் ஈவு இரக்கம் இருக்காது - அனுபவம் இருக்காது-இருந்தால்- பணம் சேர்க்க முடியாது. அத்தகையோரைத்தான் “இவறிக்கூட்டுவான்” என்று பரிமேலழகர் குறிப்பிடுகின்றார்.

சமயக்கணக்கர்கள், தத்துவத்துக்கு - வாழ்வுக்கு உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்காது, உடலுக்கு-எலும்புக் கூட்டுக்கு முக்கியத்துவம் தருவார்கள்; தத்துவத்துக்கு முதலிடம் தராது சடங்குகளுக்கே முதலிடம் தருவார்கள். ஒத்த நோக்கில்லாத அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாது; அனுபவம் கிடையாது; எனவே சமயக் கணக்கர் வேறு சமய நெறியாளர் வேறு. வள்ளுவர் சமய நெறியாளர் மதிவழிச் செல்பவரே தவிர சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாதவர் என்று கூறியது உண்மைதான்.

வேறு வேறா?

சமுதாயம் வேறு, தனி மனிதன் வேறு என்று கூறப் பெற்றது. இப்படியும் சிலர் கூறுகிறார்கள். தனிமனிதனும் சமுதாயமும் ஒன்றே என்ற கருத்தும் பலரிடத்தில் நிலவி வருகிறது. இத்துறையில் மக்கள் மன்றம் திட்டவட்டமான முடிவுக்கு இன்னும் வரவில்லை. நம்மைப் பொறுத்த வரையில் இரண்டும் ஒன்று என்றே கருதுகிறோம்.

வயிற்றுக்குள் உணவு போட்டாலும் அது செங்குருதியாக மாறி கை-கால்-தலை முதலியவற்றுக்கெல்லாம் ஓடிப் பாய்ந்து பயன் தருவதைக் காண்கிறோம். தனி மனிதன் தன் வாழ்வில் நல்லவனாக - ஒழுங்குடையவனாக - பண்பாடு உடையவனாக வாழ்ந்தால் அப்பண்பியல்புகள் அவனைச் சூழ்ந்திருக்கும் சமுதாயத்திலும் அமையும். இதனைத் திருவள்ளுவரும்,

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்(கு)
இனத்துள தாகும் அறிவு

என்று கூறி விளக்குகிறார்.

‘உன் நண்பன் பெயரைச்சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்ற பழமொழியும் இக்கருத்தினை வலியுறுத்துவதன்றோ! செழுந்தீயின் நடுவில் பச்சைப் பசுஞ்செடி ஒன்று பசுமையோடு வாழ இயலுமா? யோக்கியன் ஒருவன் கோடிக்கணக்கான தீயவர்களிடத்தில் அகப்பட்டால் அவன் யோக்கியனாகவே வாழமுடியுமா? கோடிக் கொருவராக வந்த வள்ளுவரை-இளங்கோவை-நாவரசரை எடுத்துக்காட்டுதல் பயனில்லை. சாதாரண மனிதரைப் பற்றியே சிந்திக்க வேண்டும்-பெரும்பான்மையான மக்களைப் பற்றியதாகவே நம் சிந்தனை அமையவேண்டும். அதுபோலவே அறநெறியும்-ஒழுக்க நெறியும் உருவாக வேண்டும். தனிமனித வாழ்வும் சமுதாய வாழ்வும் உடம்பும் உயிரும் போன்றது. தனிமனிதன் சமுதாயத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி எண்ணும்போதுதான் தன்னலம் இடம் பெறுகிறது. பொருளைப் பூட்டிக் காப்பவனாகிறான். தான் மட்டும் வாழ்வதையே பெரிதென எண்ணுகிறான். எனவே தனிமனிதனைச் சமுதாயத்தினின்றும் பிரிப்பதன் மூலம் தனிமனிதனுடைய தன்னலத்தை-ஆக்க உணர்ச்சியை வளர்க்கிறோம். தனிமனிதன்வேறு, சமுதாயம்வேறு அல்ல. உடலுக்கும் உயிருக்கும் உள்ளது போன்ற அமைப்பு தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் உள்ளது என்பே உண்மை.

தனிமனிதனைச் சமுதாய வாழ்வுக்கு அழைத்துச் செல்வது சமயம். ஆசைகள் இருக்கலாம். அது மனித இயற்கை! தன்னலம் பிறர் நலத்தின் மீது கை வைக்காதபடி தடுத்து நிறுத்தி ஒழுக்க நெறியைக் காட்டுவது சமயம்.

சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்றார் வள்ளுவர்.

திருக்குறள் கூறும் அறிவு வெறும் அறிவல்ல. படிப்பு வேறு, அறிவு வேறு. குறிப்பிட்ட வரலாற்றுண்மைகளை கணித எண்களை-இலக்கணக்குறிப்புகளைத் திரும்பத் திரும்பப் படித்து மூளையில் ஏற்றிக்கொள்ளும் படிப்பல்ல கல்வி. கல்வி ஆழமானது, அகலமானது. கல்வி வாழ்க்கைக்குரியது. வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையைக் கற்றுத் தருவது-அனுபவத்தைத் தருவது. சமுதாயத்தில் இருந்து பெறும் அனுபவ அறிவுதான் நிலைத்தது, உண்மையானது.

குறை எங்கே?

“மனிதன் அறிவைப் புத்தகங்களிலிருந்து பெறுவதை விட சமுதாயத்திலிருந்தே மிகுதியாகப் பெறுகிறான்” என்ற சிந்தனைத் தொடர் நினைவில் கொள்ளத்தக்கது.

இன்று ஏட்டில் உள்ளனவெல்லாம் அனுபவத்துக்கு வந்துவிட்டனவா? பொய் சொல்லக்கூடாது-திருடக்கூடாது என்பன போன்ற தத்துவங்கள் அரசியல் சமயம் இரண்டுக்கும் பொதுவானவை. இரண்டும் சேர்ந்தும் பொய்யாமையையும் திருடாமையையும் காப்பாற்ற முடியாமைக்குக் காரணம் என்ன? மனிதனிடத்தில்- அவனுடைய வாழ்வில் எங்கோ ஒருகுறை இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

காயமே இதுபொய்யடா; காற்றடைத்த பையடா

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வப்
போக்கும் அதுவிளிந் தற்று”

என்பன போன்ற பொன்மொழிகளை ஏடுகளில் படிக்கிறோம். பலர் சொல்லக் கேட்கிறோம். ஆனால் அந்த மொழிகள் நடைமுறையில்-வாழ்க்கையின் அனுபவத்தில் இல்லை.

இன்றையச் சமுதாயம் அன்றாட வாழ்வில், நடை முறை ஒழுங்கை வைத்துக் கொள்ளாமைக்குக் காரணம் மனித இன வாழ்வில் ஏற்பட்டுள்ள சமுதாயக் கண்ணோட்ட மின்மையேயாகும்.

வீடு மட்டுமா!

சமயம் வீடு பேற்றுக்காக மட்டுமே எழுந்தது என்று கூறப் பெற்றது. அது சரியல்ல. மனிதனுடைய வாழ்வில் கலந்துள்ளது-மனிதனை வாழ்வாங்கு வாழத் தூண்டுவது சமயம். ‘யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை’ என்று இறைவனைப் பூசிக்கச் சொன்ன திருமூலர் சமுதாயத்தை மறந்து விடவில்லை-தொடர்ந்து சமுதாய நலம் காணும் அறக் கொள்கைகளையும் கூறுகிறார்.

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே

“இம்மையே தரும் சோறும்கூறையும்” என்கிறார் சுந்தரர்! “தொழுகைத் துன்பம் துடைப்பாய் போற்றி” - என்கிறார் மாணிக்கவாசகர். ஆகவே வீடு பேறு பெறுவது மட்டும் சமய வாழ்க்கையின் குறிக்கோளல்ல. இறைவனாக நமக்கு அளிக்கும் பரிசு வீடு. பள்ளியில் ஏற்படுத்தும் பரிசைப் பெறுவதற்கு அறிவைப் பக்குவப்படுத்திக் கொள்வது போல, இறைவனளிக்கும் வீட்டினைப் பெறுவதற்கு நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் வாழ்க்கை முறையே சமயம்.

ஏகாதிபத்தியமா?

வாழ்த்தியவனுக்கு வீடு பேறு கொடுப்பதும், வாழ்த்தாதவனுக்கு வீடு பேறு தராததும் ஏகாதிபத்தியம் என்கிறார்கள்.

என் மீது அன்பு கொண்டு என்னை மேம்பட்டவனாக -மதிப்பிற்குரியவனாக எண்ணி, என்னிடம் பக்தி செலுத்தும் ஒருவரிடம் நான் எப்படி அன்பு செலுத்தாமல் இருக்க முடியும்?

அவர்மீது மிகுந்த அன்பு செலுத்துவது இயற்கை தானே! ஆனால், அதே சமயத்தில் என்னோடு மாறுபட்ட - என்னோடு ஒத்துவராத-வேறொருவரிடம் அன்பு செலுத்தாது இருந்தால் அது தவறு! நான் மனித இனக் கண்ணோட்டத்துடன்-நாகரிகக் கண்ணோட்டத்துடன் என்பால் அன்பு செலுத்தாதவர்மீது அன்பு செலுத்தக் கற்றுக்கொடுத்தது நான் மேற்கொண்டொழுகும் சமய வாழ்வுதானே! மனித இன நாகரிகத்தை-கண்ணோட்டத்தை வகுத்துத்தருவது சமயம் தான.

வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் வீடுபேறு கொடுத்ததாக வரலாறு இல்லை. இராவணன் சிறந்த சிவபக்தன்; நாள்தோறும் ஏழுகடலிலும் குளித்தெழுந்து இறைவனை ஏத்திய பக்தன்தான்! ஆனால் அறத்தின் பெயரால்-அறத்தின் முன்னிலையில் ஆண்டவனால் ஒதுக்கப்பட்டான்.

இதயமும் நாமும்!

அறம்வேறு! சமயம்வேறு அல்ல. கை, கால் எல்லாம் சேர்ந்ததுதான் உடம்பு. இவை இல்லாமல் உடம்பில்லை. இவை எல்லாம் உடலின் உறுப்புக்கள். இவை இல்லா விட்டாலும் ஒருவன் வாழ்ந்து விடலாம். இதயம் இல்லாமல் ஒருவன் வாழமுடியுமா? இதயம் வேறு நாம் வேறு அல்ல. நம் வாழ்வுக்கு இதயம்போல, சமயத்திற்கு அறம். ஆகவே சமயம் வேறு அறம் வேறல்ல. அறமே சமயம், சமயமே அறம்.

சண்டைகள் குறைய

சமயம் இல்லாத-மதம் இல்லாத உருசியா இன்று உலகில் சிறப்புடன் இருப்பதாகவும்-சமயம் வளர்க்கப்பெற்ற -மதக் கொள்கை மலிந்த காங்கோவில் கலகமே நடப்பதாகவும் கூறப்பெற்றது.

உருசியாவில் மதம் இல்லை என்பது பொய்! மதத்திற்கு அங்கு செல்வாக்கு இல்லாமலிருக்கலாம். காங்கோவிலும் அரசியல் இல்லாமல் இல்லை. காங்கோவில் சமயத்தின் வழிப்பட்ட அரசியல் இல்லை. சமயத்தின் வழிப்பட்ட அரசியல் என்றால் இளங்கோ தன் அண்ணனுக்கு நாட்டைக் கொடுத்துவிட்டு நாட்டு நன்மைக்காகத் துறந்தது போலநாட்டின் நலங்கருதி-மக்கள். நலங்கருதி விட்டுக்கொடுக்கும் ஒரு யோக்கியமான சமயத்தின் வழிபட்ட அரசியல் இல்லை. சமயம் ஆதிபத்தியக்காரர்கள் கையில் சிக்கி இருக்கிறது. என்னைக் கேட்டால் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு “சமயவகுப்பு” நடத்தி, “நீ மனிதனாக வாழப் பிறந்திருக் கிறாய்” என்ற உண்மைச் சமயத்தின் அடிப்படைத் தத்துவத்தை அவர்கள் உணரும்படி செய்தால் அப்பொழுது நல்லன உண்டாகலாம். சண்டைகள் குறையும்! சமாதானம் பெருகும்!

உலகில் உள்ள அரசியல் எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்த முடியுமா?-சிந்திக்க வேண்டியதொன்று. உலகம் உள்ள வரையில்-சமுதாயத்தினிடம் சிந்திக்கும் ஆற்றல் உள்ள வரையில் சிந்தனையால் உலகை ஒன்றுபடுத்த முடியாது. உலகமனைத்துக்கும் ஒரே அரசியல்-சமயம்மொழி உருவாவது கடினம்-அருமையிலும் அருமை! ஆயினும் வேறுற்மைக்குள்ளும் ஒற்றுமை காணும் விழுமிய பண்பை வளர்க்க முடியுமா என்பதை ஆராயவேண்டும்.

“வேறுபடு சமயங்கள் புகுந்து பார்க்கில் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டல்லால் வேறில்லை” என்ற தாயுமானாரின் விழுமிய கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவர முயலவேண்டும். வேறுப்டக் கருதுவது வெறுப்பினால் அல்ல. சிந்தனை வளர்ச்சியின் கூறுகளும், சூழலுமே மாறுபாட்டுக்குக் காரணம் என்று உணரவேண்டும். அது மட்டுமின்றி வேறுபடக் கருதுவது வளர்ச்சிக்கும் தூண்டு கோலாக அமைகிறது. ஏன்? எதனால் என்ற கேள்விகளின் மூலமே தத்துவஞானம் வளர்ந்திருக்கிறது-அறிவியலும் வளர்ந்திருக்கிறது. மனிதகுலம் கருத்தைப் பரிமாறிக்கொண்டு வளர வேண்டுமென்பதே நமது கொள்கை.

கடிகாரமும் அரசியலும்

கடிகாரம் அரசியலைச் சார்ந்தது. எனவேதான் காலத்தைக் காட்டி, தான் காலங்கடத்துவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறது. மதம் காலம் கடந்தது என்று இராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்கள். மறுக்கவில்லை! உண்மைதான்! மதம் காலங்கடந்த தத்துவம்; காலத்துக்கு அப்பாற்பட்டது அகப்படாதது. ஆனால் ஒரு கடிகாரம் செய்வதற்குப் பயன்பட்ட அறிவில்-சிந்தனையில் மாறுபாடற்ற அருளியலின் தொடர்பு-மாறிலாத அன்பின் சாயல்-அருளியலின் சாயல் உண்டு. அன்பியலில்-அருளியலில் இறைவன் சாயல் இரண்டறக் கலந்திருக்கிறது. எனவே சிந்தனையால் அறிவால் கடிகாரத்தை ஒருவன் செய்தபோதிலும் அதற்கும் தூண்டுகோல் தெள்ளிய அறிவு. தெளிந்த அறிவு வேறு, அருளியல் வேறல்ல. தூய அறிவே உருவானவன் ‘இறைவன்’, ‘வாலறிவன்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

நந்தியும் அறமும்

சிவன் கோயிலுக்குச் செல்கிறோம். உள்ளே நுழைவதற்குமுன் வழியில் நந்தியைக் காண்கிறோம்- வணங்குகிறோம்-நாம் மாட்டை வணங்குவதாகக் கூறுவர் ஒருசிலர்! உண்மையிலேயே அது மாடா என்ன? எந்த உருவத்துக்குப் பின்னும் ஒரு கருத்து உண்டு. அந்த நந்தி- காளை அறத்தின் வடிவம் அறத்தின் சின்னம்.

உழுத நோன்பகடு அழிதின் றாங்கு

என்று புறநானூற்றுப் புலவன் பேசுகிறான்.

போர்க்களம் சென்று மாற்றாரைப் பொருது வெற்றியுடன் விழுப்புண் தாங்கி வருகிறான் மன்னவன். போரில் அயராது போரிட்ட அனைவருக்கும் வாரி வழங்கி மகிழ்ந்தான். தான்மட்டும் உண்ணவில்லை-உண்பதற்கு ஒன்றும் இல்லை. ஒரு கோப்பை மது குடித்து மகிழ்கிறான். அத்தகைய மன்னனுக்குத்தான் எருதை உவமையாகக் கூறுகிறார் புலவர்.

கழனியை உழுவது காளை-எரு ஏற்றிவந்து கொட்டுவது காளை-கதிரடித்துத் தருவது காளை-வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதும் காளை! செந்நெல்லரிசியும் செங்கருப்பச்சாறும் கொண்டு பொங்கல் பொங்குகிறான் உழவன். வயிறார உண்டு மகிழ்கிறான். உண்ட களிப்பில் உழைத்த எருதையும் மறந்துவிட்டான். எருதுக்குத் தீனிபோட மறந்துவிட்டான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எருது ஒன்று மெல்ல அம்மா என்று கத்தியது.

மற்றொரு எருது அதைப் பார்த்துச் சிரித்தது. ஆவிற்கு நீர் என்று இரப்பினும்..என்று சிந்திக்கிறது-சிந்தனை வழியே சிரிப்புப் பிறக்கிறது. கத்திய காளை விளக்கம் தருகிறது. “தீனிக்காகக் கத்தவில்லை, நான் என் பசிக்காகக் கத்த வில்லை! இன்று வைக்கோலையாவது சிறிது தின்று வாழ்ந்தால்தானே அடுத்த ஆண்டும் நம் தலைவனுக்கு உழுது கொடுக்க முடியும்” என்றது. அத்தகு பண்பியல்வழி வாழும் காளைதான் கோயில் முகப்பில் படுத்துக் கிடக்கிறது. நீ கோயிலுக்குள் நுழையும்போது, “ஐயா! தேங்காய் இருக்கிறதா? பழம் இருக்கிறதா? சூடம் வெற்றிலைப் பாக்கு இருக்கிறதா? தமிழில் அருச்சனை செய்யப் போகிறாயா? இல்லை, வழக்கம்போல் வடமொழியில் அருச்சனை செய்யப் போகிறாயா? என்று அந்த எருது கேட்கவில்லை! ‘நீ என்னுடைய பண்பாட்டைப் பெற்றாயா? என்னுடைய பண்பாட்டிற்கு உரியவன் ஆனாயா? என்று கேட்கிறது. அந்தக் காளைதான்-அறத்தின் வடிவம்தான் திருக் கோயிலின் முகப்பில் படுத்துக்கிடக்கிறது.

அறமும் ஒழுக்கமும் காலத்துக்குக் காலம் மாறுபடும். சமுதாயம் வளரவளர வேறுபடும். ஆனால் ஒற்றுமை மட்டும் மாறுபடுவதில்லை. அதுதான் பிறருக்குத் தீமை செய்யாமல் வாழ்வது என்பது. இந்த அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்துகொண்டால் அறமே சமயம்-சமயமே அறம் என்ற கருத்து விளங்கும். இரண்டும் வெவ்வேறல்ல என்று கொள்ளலாம். திருக்குறளும் ‘அறவாழி அந்தணன்’ என்று வாழ்த்துகிறது.

மிக்க கொளல்

ஆத்திகர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல என்று கூறினார்கள். அப்படியானால் அரசியலில் இருப்பவர்கள் எல்லோரும் யோக்கியர்களா? ‘அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. ஆகவே குறைபாடு எங்கும் உண்டு-எத்துறையிலும் உண்டுயார் மாட்டும் உண்டு. அதனாலன்றோ தமிழ்மறை,

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்-

என்று வரையறுத்துக் கூறுகிறது.

“அரசியலில் உள்ளவர்களைக் காட்டிலும் சமயத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் யோக்கியராக இல்லாது போனா லும்கூட, யோக்கியர்களாக இருக்க ஆசைப்படுகிறார்கள்” என்ற உரை சிந்திக்கத்தக்கது.

Hendry the Clink என்ற அறிஞன் ‘சமயத்துக்குத் திரும்புதல்’ The Return To Religion என்று ஒரு நூல் எழுதியுள்ளான். அதில் “கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடையே கலந்திருந்து அவர்களுடைய வாழ்வில் காணும் குறைகளையும் நிறைகளையும் தனித்தனியே குறித்து வைத்துக் கொண்டேன்; கடவுள் நம்பிக்கையுடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவோரின் வாழ்வில் கலந்து அவர்களுடைய வாழ்வில் காணும் குறைகளையும் நிறைகளையும் தனித் தனியே குறித்து வைத்துக்கொண்டேன். ஒத்துப் பார்த்ததில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தவறு செய்யப் பயப்படுகிறார்கள்” என்று கூறுகின்றான். சமயத்துடன் தொடர்பு கொண்டவன் தவறு செய்யப்பயப்படுகிறான். மறுமையின் அச்சம்-மறுபிறப்பின் துன்பம் காரணமாகத் தவறு செய்ய அஞ்சுகிறான். ஒரு நீண்ட சாலையில் செல்பவனுக்கு இங்கே பாலம் இருக்கிறது-இங்கே திருப்பம் இருக்கிறது-இங்கே பாதை வளைந்து செல்கிறது என்று அறிவித்து வழி நடத்தும் அறிவிப்புப் பலகைபோல-மனித வாழ்வில் அழுக்காறுஅவா வெகுளி முதலிய குற்றங்களைக் காட்டி - அவற்றிலிருந்து விலகி நல்வழியில் செல்ல ஆற்றுப்படுத்துவதே சமய நெறி.

வாழ்வா? தாழ்வா?

கோயிலில் வேலை செய்பவருக்குச் சோறு கிடைக்கிறது. எனவே அங்கு பொதுநலம் பேணப்படுகிறது என்று சமயச்சார்பினர் கூறுகின்றனர். இன்றைய உலகம் விழித்துக் கொண்டது. இனிமேலும் போலிச் சமயக் கொள்கைகளைக் காட்டி உலகை ஏமாற்ற முடியாது. மனிதனை மனிதனாக பெருமையோடு-பேராண்மையோடு வாழ்வதற்குக் கற்றுத் தரும் உண்மைச் சமயமே எதிர்காலத்தில் நிலைத்து நிற்க முடியும்! கோயிலில் சோறு வழங்குவது பொதுப் பணியாகும் என்று கூறி ஏமாற்ற முடியாது. பெருமையோடு வாழப்பிறந்த மனிதனைப் பிச்சைக்காரனாக்கிவிட்ட கொடுமையை மறைக்க முடியாது. 1952-ல் பிச்சைக்காரனாக இருந்தவன் 1962-லும் பிச்சைக்காரனாகவே இருக்கிறான். அவனுடைய வாழ்வு வளரவில்லை; வளம் பெறவில்லை. வாழப் பிறந்தவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி மகிழ்வது மகேசுவரனுக்குப் பிடிக்காத ஒன்று என்பதை உணர்த்த விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் அறிவுக்குப் பஞ்சமில்லை. ஆண்மைக்குப் பஞ்சமில்லை. திறமைக்குப் பஞ்சமில்லை எனினும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் கிடையாது-அக்கறை இல்லை. நாள்தோறும்-நாழிகை தோறும்-மேனாட்டு நாகரிகம் புதுப் புதுக் கோலத்தில் நம் வாழ்வில் கலக்கிறது. ஆனால், மனிதனை மனிதனாக வாழ வைக்கும் பண்பு வளரவில்லை-மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்யும் நாகரிகம் இடம் பெறவில்லை.

பைபிளின் சமயத்தைக் குடிசைகள்தோறும் தூக்கிச் சென்று பரப்புகிறார்களே! அதுபோல திருவாசகத்தைக் குடிசைகள்தோறும் தூக்கிச் சென்று “சிவநெறியை” வளர்க்க வேண்டும் என்ற விழுமிய விருப்பம் தோன்றவில்லை.

ஆணவம் குறைய வேண்டும். அதற்குத் தொண்டுள்ளம் வேண்டும். திருத்தொண்டின் வழிநிற்றலே அருளியலுக்கு ஆக்கம்; அழியும் உடலுக்கு ஊதியம் பொருள்; உயிருக்கு ஊதியம் தொண்டு. “தொண்டல்லாது உயிர்க்கு ஊதியம் இல்லை” என்றார் நாவுக்கரசர்.

துறவு என்றால் உலகத்தைத் துறப்பதல்ல-தன்னலத் துறவே துறவு. தன்னலம் வேண்டாம் என்று கூறவில்லை - கூறவும் முடியாது. தன்னலம் இருக்கட்டும்; ஆனால், வேலி அமைத்துக்கொள். அது பிறர் நலத்தில் கைவைக்காத அளவுக்கு இருக்கட்டும். இல்லையென்று கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாது கொடு. இறைவன் திருவருள் பாலிப்பார்.


இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும்வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்

என்று கூறுகிறார் நாவரசர். இரப்பவர்க்குக் கொடுக்கவே திருவருள் பொருள் தந்தது. அப்படி ஈத்து உவந்து வாழ்பவர்க்கே திருவருளும் உண்டு. கொடுத்து வாழாதவனுக்கு நரகத் துன்பமே உரியது. இது திருமுறைக் கருத்து. இத்தகு சமுதாய நலம் பேணும் சமய நெறிக்குப் பொதுவுடமை யாளரும் மாறாக இருக்க முடியாது. சமுதாய முன்னேற்றத் துக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

நம்முடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக சமய நெறி இல்லை. சமயத்தின் பேரால் உலவும் பிற்போக்குக் கொள்கைகளே, முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. இன்ப துன்பங்களை உணர்வைத் தொடும் வண்ணம் காட்டும் சமுதாயத்தில் ஈடுபடாதவர்கள் கோயிலில் இருக்கும் ஆண்டவன் சிலையில் ஈடுபாடு கொள்ள முடியுமா? அதனால்தான் தொண்டின் வழிப்பட்ட சமய வாழ்வே சிறக்க முடியும் என்று காட்டினார் சேக்கிழார் பெருமான்.

திருஞானசம்பந்தர் மூன்றாண்டிலேயே திருவருள் கைவரப் பெற்றவர். ஞானத்தின் திருவுருவாய்த் திகழ்ந்த அவர் திருவீழிமிழலையில் நிகழ்ந்த பஞ்சநிலை தீர்க்கத் தொண்டு செய்யவில்லையா? குழந்தையை இழந்து வாடியவர்களின் துன்பம் கண்டு உருகிக் குழந்தையை மீட்டுத் தரவில்லையா சுந்தரர்?

ஞானசம்பந்தர்-நாவுக்கரசர்-சுந்தரர் ஆகிய நம் சமயப் பெரியோரின் ஞான அனுபவம் உலகியலை மீறியதாக இல்லை என்பதை வரலாறு அறிந்தோர் உணர்வர். உலகைப் பகைமையிலிருந்து-சுரண்டலிலிருந்து வறுமையிலிருந்து காக்க-உலக ரீதியில் வலிமையுள்ள பொதுத் தத்துவம் தேவை; அத்தகு வலிமை பெற்ற தத்துவம் சமயத் தத்துவமேயாம். “உயிர்களிடத்தன்பிலார் ஈசனுக்கன்பிலார்” என்ற கருத்து உலகின் எல்லாச் சமயங்களுக்கும் பொது.

உலகத்தை ஒருமைப்பாட்டு நெறியில் அமைக்க ஒரே தலைமை உணர்வு தேவை. உலகியல் தலைவர்களை, குறுகிய நாட்டுப்பற்று-இனப்பற்று-மொழிப்பற்று-சமயப் பற்று ஆட்கொண்டிருக்கும். உலகத் தலைவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக-வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாக சாதிச் சழக்கற்றவனாக-பொதுவானவனாக இருக்க வேண்டும். அவன் இறைவன் ஒருவனே!

அரசியலால் மனிதனைப் பக்குவப்படுத்த முடியாதா என்ற வினா எழலாம். சிறந்த அறிவுடன் செய்யப்பெற்ற அரசியல் சட்டத்தில்கூட கொலை செய்வது குற்றம் கொலை செய்யத் தூண்டுவது குற்றம்-கொலைக்கு உடந்தையாக இருப்பது குற்றம் என்றுதான் உள்ளதே தவிரக் கொலை செய்ய நினைப்பது குற்றம் என்று இருக்கிறதா?-இல்லை, இருக்கவும் முடியாது. நிகழ்ச்சிக்குரிய நினைப்பைக் குற்றமாக்க சட்டத்தால் முடியவில்லை! சட்டத்தின் நிலை அது!

ஆனால், சமயநீதி ஆழமானது - சிந்தனையோடு கூடியது - சிந்தனையைத் திருத்துவது - அகவாழ்வைத் திருத்துவது நினைப்போடு தொடர்புடையது - நினைப்பைத் திருத்தி வாழ்வது நிறைவாழ்வு என முழங்குவது சமய நெறி! செயலைத் திருத்துவது அரசியல்; சிந்தனையைத் திருத்துவது சமயம். சிந்தனையைத் திருத்தும் உண்மைச் சமயம்-சமுதாய வாழ்வில் உரிய இடம் பெறுமானால் - செயலைத் திருத்தும் அரசியலின் பொறுப்புக் குறையும்.

>நேராக மானிடர் பிறரைக் கொல்ல நினையாமல்
வாழ்ந்திட்டால் மாந்தர் ஏர் கட்டி உழுதல் வேண்டா
காரானநிலத்தைப் போய்த் திருத்தல் வேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா!
சீரான மழையுண்டு சிவன் செத்தாலன்றி மண்மேல் செழுமையுண்டு

என்பது கவிஞன் பாரதியின் வாக்கு.

கவிஞன் தெளிவான-உறுதியான பாதையைக் காட்டுகிறான். நாமனைவரும் இன்பமாக வாழ உணவு தேவைஅந்த உணவைத் தடையின்றிப் பெறுவதற்குரிய வழி என்ன?

காடுவெட்டி நிலம் திருத்திக் கழனிகள் காண்பதா? கழனிகளுக்கு நீர்பாய்ச்சச் சண்டை போட்டுக்கொள்வதா? இவை தேவையான முயற்சிகளேயாம்! ஆனாலும் இம் முயற்சிகளே போதுமானவை யல்ல-வசையிலா வண்பயன் குன்றும்! எப்பொழுது? - ஏன்?-இசையிலா மக்களை நிலமகள் தாங்கும்பொழுது-என்று தமிழ்மறை பேசுகிறது.

மற்றொருவரைக்கொல்ல நினையாமல் மக்கள் வாழுங்காலத்தில் இயற்கை உணவளிக்கும் என்கிறான் பாரதி. “கொல்லாமல்” என்று கூறாமல்-"கொல்ல நினையாமல்” என்று நினைப்பொடு தொடர்புபடுத்திக் கவிஞன் கூறுவது சிந்தனைக்குரிய ஒன்று.

விவாதத்துக்குரிய தலைப்பு சமுதாய முன்னேற்றத்துக்கு மிகமிக உரியது சமயமா? அரசியலா? என்பது. தலைப்பு இரண்டும் தேவை என்பதை வற்புறுத்துகிறது. ஆனால், எது முதலிடம் பெறுவது என்பதே கேள்வி: இன்றையச் சமுதாயத்தில் அரசியலே முழுக்க முழுக்க முதலிடம் பெற்றுவருகிறது. எங்கும் அரசியல் எண்ணங்கள்! எங்கும் அரசியல் அரங்கங்கள். அருளியல் வழிபட்ட எண்ணங்கள் அருகிக்கொண்டே வருகின்றன. இப்போக்கு சமுதாயத்துக்கு நலம் பயப்பதல்ல.

சமுதாயத்தில் முன்னிடம் - முதலிடம் பெற வேண்டியது சமயமே ஆகும். சமய வழிப்பட்ட சமுதாயத்தை நிலை நின்று காக்க அரசியல் வேண்டும். தோட்டத்தில் அவரை பயிர் செய்ய வேண்டும் என்று சொன்னால் நில முழுதும்-வித்திட்டு செடி முளைத்துக் கொடிவிட்ட பின் கொழுகொம்பு நட்டு வளர்ப்பதே முறை. மனநலம் திருத்தி அருள் என்னும் வித்திட்டு அறம் என்ற செடி கண்டு சமுதாய ஒப்புரவு வழிப்பட்ட சமயம் என்ற கொடி கண்டபிறகே அரசியல் என்ற கொம்பு தேவை.

கொம்பில்லாமலும் கொடி காய்க்கலாம். ஆனால் நிறைய இருக்காது. ஆனால் கொடி இன்றிக் கொம்பு மட்டும் இருந்தால் காய்ப்பு இல்லை. அதுபோல அரசியல் இன்றிச் சமயம் இருக்க முடியும். ஆனால், முழுநிறைவான சமுதாயம் இருக்காது. சமயம் இன்றி அரசியல் இருக்காது-இருந்தால் சமுதாயம் காலப்போக்கில் கரைந்து போகும்.

ஆதலால் கொடி நிலையில் சமுதாயத்தை வளர்த்துக் கொம்பு நிலையில் அரசியலை வளர்க்க வேண்டும்.

கொடியும் தேவை கொம்பும் தேவை
கொடி முன்வருவது-கொம்பு பின்வருவது
கொடி சமயம், கொம்பு அரசியல்.


சமுதாய முன்னேற்றத்துக்கு மிகமிக உரியது சமயம்.
சமுதாய முன்னேற்றத்துக்கு மிக உரியது அரசியல்!