குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/சித்தாந்தச் செந்நெறி
தோற்றுவாய்
மனித வாழ்க்கை அரியது. ஆற்றல் மிக்கது. நுட்பமானது; ஆக்கத்தின் பாற்பட்டது; அறிவுடையது; சுதந்திரமுடையது. அதேபொழுது அறிவு, ஆற்றல், இன்பம் இவற்றின் எல்லை விரிவாகும் இயல்பினது. வாழ்தல், எளிதன்று. இன்று பலர் வாழவில்லை! பிழைப்பு நடத்துகின்றனர். வாழ்வாங்கு வாழ்தல் மனிதகுலத்தின் குறிக்கோளாகும். மனிதகுலம் வாழ்வாங்கு வாழும் பொழுதே வையகம் சிறக்கும். மனித வாழ்க்கை, அழுது புலம்புவதற்காக அமைந்ததன்று. வாழ்க்கை மகிழ்ச்சியுடையது; மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இன்று எங்குநோக்கினும் அவலம்! அமைதியின்மை! கரவாடும் வன்னெஞ்சங்கள்! பொக்கம்பேசிப் பொழுது போக்கும் புல்லறிவாண்மை! ஞானத்தில் நாட்டமில்லை! அன்பில் ஆர்வமில்லை! தொண்டுநெறி தொடர்வாரில்லை! ஆதலால் இன்ப உலகம்-இன்பப் பிறப்பு, துன்பமாகத் தோற்றமளிக்கிறது. திருவருள் வழங்கிய பரிசு தண்டனையாக உருமாற்றம் பெற்றுவிட்டது! சிறை நீக்கத்திற்குக் கிடைத்த வாழ்க்கை, சிறைச்சாலைகளைப் படைத்து முடக்கிக் கொண்டிருக்கிறது. விடுதலைக்காக வழங்கப்பெற்ற வாழ்க்கை, கொத்தடிமைத் தனத்திற்கு ஆளாகி விட்டது: இந்தக் கொடுமையை எண்ணுமின்! இந்தப் பொய்ம்மையை நிந்திக்கக் கற்றுக் கொண்மின் ! ஒன்றாக உயர்ந்துள்ள நன்மையை நாடுமின் வழிபாடு என்பதற்கு வழிநிற்றல் என்று பொருள் கொண்மின் வழிப்படுதலே வழிபாடு ஆயிற்று. வழிப்படுதலின்றி வழிபாடு பயன்தராது. நன்றுடையான்றன் நன்னெறியின் வழி நின்று செயற்படுதலே வழிபாடு! உழைத்து உய்யும் தொண்டுநெறி தொடர்தலே வாழ்க்கை! அந்நெறி நிற்க முயற்சிசெய்வோமாக!
மனித குலத்தின் தேவை சமயம்
மனித வாழ்க்கையில் சமயம், தேவையில் மலர்ந்த ஒன்று. உடலியல் வாழ்க்கை ஐம்பூதங்களைத் தேவையாக வுடையது. உடல், எப்பொழுதும் தனக்கு இன்பத்தையே எதிர்பார்க்கும் இயல்புடையது. ஆன்மா, இதற்கு எதிரியல்புடையது. ஆன்மா உயிர்ப்புள்ளதாக இருப்பின் பிறர் நலத்தையே நாடும். வளரும் ஆன்மாவில் மலர்ந்த தேவையின் விளைவே சமயம். சிற்றறிவின் தேக்கத்தைத் தெரிந்து பேரறிவாகிய ஞானத்தின் பாற்கொண்ட நாட்டமே சமய உணர்வு முகிழ்த்த இடம். சமயம் என்பது வளர்ந்த ஆன்மா தன்னுடைய வளர்ச்சியைப் பாதுகாத்துக்கொள்ளவும், மேலும் வளரவும், முழுமைப் படுத்திக்கொள்ளவும் துணையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறை; தன்னுணர்வினாலேயே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு; மனித உயிர்கள் மதிப்புக்களைக் கடந்தவை. அவைகளை ஆதரித்து ஆக்கம் தருவது முதற்கடமை. அங்கனம் ஆக்கம் தரத் தவறிவிட்டால் அன்பு ஊற்றுத் தோன்றாது; வறட்சி தலைகாட்டும்; வம்புகள் தோன்றி வையகம் துயருறும், சமயம் ஒரு முழுத்தத்துவம்; அது வளர்ச்சிக்குத் துணை செய்கிறது; பாதுகாப்புத் தருகிறது; துய்ப்ப்பும் வழங்குகிறது; வாழ்விக்கிறது. சென்ற காலத் தலைமுறை, சமயத்தை விடச் சிறந்த ஒரு கொடையை மனித உலகத்திற்கு வழங்கவில்லை! இனிமேலும் வழங்க முடியாது!
சமய நம்பிக்கை உண்மையைக் காட்டுகிறது. சமய நம்பிக்கையுடையோரின் அறிவு நேரடியாக இருக்கும். அவர்கள் சுற்றி வளைக்கமாட்டார்கள்! அவர்கள் அறிவில் எளிமையும், தழுவும் மனப்பாங்கும் பொதுளும் சமய நெறியில் நிற்காதவர்களின் அறிவு கூர்மையாக இருக்கலாம். அவர்கள் “கெட்டிக்காரர்களாகக்கூட இருக்கலாம். பெரியவர்கள் என்று பலர் சொல்லவும் சொல்லலாம். ஆனாலும் அங்கு உண்மை இல்லை; வெளிப்படையான எளிமையான கலந்துரையாடல் இல்லை; பரிவர்த்தனை இல்லை! அஃதோர் ஏகாதிபத்தியம்! ஏகாதிபத்தியம் ஆட்சியின் பேரால் இருந்தாலென்ன? சமய ஏகாதிபத்தியமாக இருந்தா லென்ன? அது தவறே! மனிதன் தன்னுடைய பழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்படுத்திக் கொள்ளச் சமயம் பயன்படுகிறது. மனித வாழ்க்கையின் தேவையாகத் தோன்றிய சமயநெறியில் இன்றைய உலகம் நிற்கவில்லை. ஆனால் சமயம் பற்றிய பேச்சு, ஆரவாரமான வழிபாடுகள் இவைகளுக்கு யாதொன்றும் குறைவில்லை. உண்மையான சமய நெறியை யாரும் குறை சொல்வதில்லை! சொன்னாலும் சொல்பவர்கள் பைத்தியக்காரர்களாக்கப்படு கின்றனர்: பைத்தியக்காரர்களாக ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை! சமுதாய எதிரிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்!
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “சமுதாயம் வளர்ந்தால் சமயம் வளரும்”, “திருக்கோயிலில் எழுந்தருளி யுள்ள பெருமானைப் பூவும் புனலும் சொரிந்து எல்லாரும் வழிபடலாம்” என்ற சிந்தனைகளையே தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், நெருக்கடிக் காலத்தைப் பயன்படுத்தி ஒரு சமய இயக்கத்தையே முடக்கி விட்டனர். மறைமுகமான இந்து ஏகாதிபத்தியத்திற்குக் கால்கோள்செய்தனர். இலட்சக்கணக்கான மக்களிடத்தில் இயக்கத்தின் செய்தி சென்றிருந்தாலும், இயக்க இயங்கும் உயிர்ப்பில்லாத மக்களிடத்தில் தேக்கநிலை தெரிந்ததேயன்றி எதிர்த்தாக்குதலுணர்வு வரவில்லை. தமிழக வரலாற்றின் தொய்வுக்குக் காரணம் இதுவேதான். தூய்மையான உணவு, உடல் நலத்தைத் தரும். ஒன்றை நம்பும் தூய்மையான சிந்தனை, உயிர் எழுச்சியைச் தரும்.
எதிலும் கலப்படம் தீது. காற்றுப் கலப்படத்தைப் பற்றிப் பத்திபத்தியாக எழுதுகின்றனர். உணவுக் கலப்படத்திற்குத் தண்டனை வழங்கச் சட்டமே வந்து விட்டது. கருத்துக் கலப்படத்திற்கு ஏன் இன்னும் எதிர்ப்புத் தோன்றவில்லை? சிந்தனையில் நாட்டமின்மை, அறிவில் தெளிவின்மை, பிழைப்பு மனப்பான்மை ஆகியவற்றால் நமது சமுதாய உள்ளீடழிந்து விட்டது. மனித வாழ்க்கையை உயிர்ப் புள்ளதாக்கி முழுமையாக்கும் உணர்வின் தேவையிலேயே தோன்றியது சமயம். சமயம் கடவுளுக்காகத் தோன்றியதன்று; மனிதனுக்காகவே தோன்றியது. மனிதனின் தேவையில் மலர்ந்தது; கடவுளுக்கும் மனிதனுக்குமிடையேயுள்ள இடைவெளியை இட்டு நிரப்பத் தோன்றியது. கடவுளின் புகழ்பாடுவதற்காகத் தோன்றிய தல்ல சமயம். மனிதனின் புகழை வளர்க்கத் தோன்றியது. அதற்குக் கருவி, இறைவனின் புகழ் பாடுதல். சமயம் இருந்தும் அதனுடைய தேவை உணரப்படாமையின் காரணமாக, அந்தச் சமயநெறி மனித வாழ்க்கையை நிறைவாக்கும் பாங்கினை அறிய முடியாமையின் காரணமாக இன்றியமையாத் தேவையான ஒன்றைத் தேவையில்லை என்று சொல்கிற கருத்து உருவாகிவிட்டது. சமயம், இட்டு நிரப்ப முடியாத இடைவெளியாகி விட்டது. அந்த வெட்ட வெளியைச் சமயத் தொடர்பில்லாமலேயே பொதுவுடைமைத் தத்துவம் நிரப்பும் என்ற நம்பிக்கை தோன்றி வளர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் காரல்மார்க்சும் இங்கர்சாலுமல்லர்; தலைவர் பெரியாரும் அல்லர். மனித வாழ்க்கையின் இடைவெளிகளை இட்டு நிரப்பாமல் பொதுவில் ஆடுபவன் நீழலில் பொதுமையைக் காணாமல், தீமையை அகற்றாமல், நன்மையைச் சாதிக்காமல், துன்பத்தைத் துடைக்காமல், இன்பத்தைப் படைக்காமல் கிழடு தட்டிச் செயலிழந்து போன நமது சமய அமைப்புக்களின் குறையுடைய நடைமுறைகளே காரணம். மீண்டும் மனித குலத்தின் உயிர்ப்புள்ள தேவை சமயம் என்பதை உணரச் செய்தற்குரிய சிந்தனையில் ஈடுபடுங்கள்! சிந்தனைக்குச் செயலுருவம் வழங்குங்கள்!
சமயத்தின் இலக்கணம்
சமயம் என்பது ஒரு தத்துவம்; வாழ்க்கை முறை. சிந்தனைக்கு வரைமுறைகள் உண்டு. ஆனாலும் சிந்தனைக்கு வரம்பில்லை. உயர்ந்த சமயம் என்பது மனித வாழ்க்கையை மேம்பாடடையச் செய்வதை மையமாகக் கொண்டே விளங்கும். உணர்ந்த சயமம் மனிதனுக்கு அவனை அறிந்து கொள்ளச் செய்யவும், அவனிடமுள்ள குறைகளையும் அவ்வழி நிகழும் குற்றங்களையும் உணரச் செய்யவும் வேண்டும். குறைகள் வேறு; குற்றங்கள் வேறு. குறைகள் உயிர் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை முழுமையாகப் பெறாமை! அந்த வறுமையின் காரணமாக ஏற்படுவன குற்றங்கள்! குறைகளுடையாரிடத்தில் குற்றங்கள் இருக்கும். குற்றங்களிருப்பாரிடத்துக் குறைகளிருக்குமென்று உறுதியாகக் கூறமுடியாது. உயிரியல்பில் குறையில்லாதாரிடத்தும் ஒரோ வழி குற்றங்கள் நிகழும். அக்குற்றம் அவரிடமிருந்த குறையினால் விளைந்ததன்று. சமுதாயக் குறையினால், ஆட்சிக் குறையினால் தோன்றும் குற்றங்களும் உண்டு. உயிர்கள்தம் நிலையினை உணரச் செய்தலும் குறைகளினின்றும் நீங்கி நிறைகளைப் பெறத் தூண்டுதலும் சமயத்தின் முதல் இலக்கணம். இதுவே, சமயத்தின் தொடக்கம்.
உயிர்-ஓர் விளக்கம்
இந்த முதல் அடிப்படை இலக்கணம்கூட இன்றுள்ள நிலையில் பல சமயங்களுக்கு இல்லை. உயிர்களைக் கடவுள் படைத்தார் என்று சில சமயங்கள் கூறுகின்றன. உயிர்கள் கடவுளின் படைப்புப் பொருள்களானால், உயிர்களிடம் காணப்படும் குறைகளுக்கும் கடவுளே பொறுப்பேற்க வேண்டும். உயிர்கள் கடவுளின் படைப்பாகிவிட்டால் வளர்ச்சி ஏது? நிறை நோக்கிய பயணம் ஏது? குறிக்கோள் ஏது? நாட்டம் ஏது? வழிபாடுதான் எதற்கு? இஃதொரு விநோதமான நிலை. வேறு சிலர் ‘உயிர்களே கடவுளின் பிரதிபிம்பம்’ என்கின்றனர். அந்த வழியில் பார்த்தாலும் உயிர்களுக்குக் குறையிருக்க முடியாது. ஒரு வெல்லக் கட்டியில் உடைத்த இருபகுதியிலும் ஒரே சுவைதான் இருக்கும். ஒளியின் பிரதிபலிப்பு ஒளியுடையதாகத் தானிருக்கும். அப்படியானால் உயிர்களுக்குக் குறையிருக்க வழியில்லை. ஆதலால் உபதேசமும் தேவையில்லை! வழிபாடும் தேவையில்லை! இஃதொரு புதுரகமான பைத்திய உலகம்! இத்துறையில் செழுந்தமிழ் வழக்குச் செந்நெறியாகிய சித்தாந்தச் சிவநெறி ஐயத்திற்கிடமின்றி விளக்குகிறது: “உயிர், உள்பொருள், என்றும் உள்பொருள். உயிர்களுக்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை. உயிர் ஒன்றன்று; பலப்பல! உயிர் இயல்பாகக் குறையுடையது; அறியாமையில் பிடிப்புண்டது; ஆயினும் அறிவு பெறுதற்குரியது; சுதந்திரத் தன்மையுடையது. ஆனாலும் இருள்சேர் பிணைப்பில் சுதந்திரத்தை இழந்திருக்கிறது. உயிர் இன்பத் துய்ப்பிற்குரியது. ஆனாலும் துன்பத் தொடக்கில் அல்லலுறுகிறது” என்று உயிரின் இலக்கணத்தைக் கூறுவது குழப்பமில்லாதிருக்கிறது; நடைமுறை உண்மைகளுக்கு இசைந்திருக்கிறது.
உயிர், கடவுளின் பிரதிபிம்பம் அல்லது உயிர் கடவுளால் படைக்கப்பட்டது என்றால் ஆங்கு அறியாமைக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ தேவையுமில்லை; அவசியமுமில்லை. ஆனால் இத்தகைய சமயக் கொள்கையுடையார் அனைவரும் கற்கின்றனர்; அறிவு வேண்டுமென் கின்றனர். விகுதியில் அறிவில்லையென்றால் பகுதியும் ஐயப்பாட்டிற்குரியது என்ற சராசரி அறிவுகூட அவர்களுக்கு இல்லை! சித்தாந்தச் செந்நெறி, ‘உயிர் இயற்கையானது என்பதுபோலவே உயிரில் அறியாமையும், அறியாமைக்குக் காரணமாகிய ஆணவப்பிணைப்பும் இயற்கை’ என்று அறிவுக்குப் புலனாகும் வகையில் விளக்குகிறது மெய்கண்ட நூலாசிரியர்கள் உயிரின் அறியாமையைச் “செம்பிற் களிம்பு” என்று உவமித்து விளக்குவர். செம்பு, படைப்புப் பொருளன்று; இயற்கைப் பொருள், அதில் களிம்பும் யாரும் சேர்த்ததன்று; இயற்கையின் விளைவு! அதுபோலத்தான் உயிர்க்கு உற்ற ஆணவப்பிணைப்பு: செம்பின் பயன் தெரிவார் களிம்பினைத் தேய்த்துத் துய்மைப்படுத்துவர். அதுபோல் உயிர்களின் பயன் தெரிவானாகிய இறைவன், ஆணவப் பிணைப்பிலிருந்து உயிர்களை மீட்க அறிகருவிகளையும் உணர் கருவிகளையும் வழங்கிப் பிறப்பில் உய்த்து விளக்கமுறச் செய்கின்றான்.
செம்பு, விளக்கிய பொழுது களிம்பு போனது போலத் தோன்றும். தூய்மையின் முன்னே களிம்பு அடங்கிக் கிடந்ததே தவிர, அஃது அகன்றுவிடவில்லை. மீண்டும் தூய்மையின் ஆற்றல் குறையும் பொழுது களிம்பு வெளிப்பட்டுத் தோன்றும். அதுபோலவே ஆணவம் அறிவு மேம்படும்பொழுது அடங்கிக் கிடக்கும். அறிவு சோர்வடையும்பொழுது அற்றம் பார்த்துத் தலையெடுக்கும். ஆதலால் என்றும் ஆணவப் பிணைப்பின் அளவை உள்ளடக்கி வைத்திருக்கவேண்டுமானால் ஓயாத சிந்தனையும் குறைவில்லாத ஞானத்தில் நாட்டமும், ஆற்றல் மிக்க அன்பும் தொய்வேயில்லாத தொண்டின் நெறியும், இமைப்போதும் கூடச் சோர்வுற்று அயல்வழிச் செல்லாது தடுக்கப் பயிருக்கு வேலியென அடியார்களின் கூட்டுறவும் தேவையென விளக்கும் சித்தாந்தத் திறன் எங்கே?
கடவுள் இலக்கணம்
உலகம் இயங்குகிறது. இயங்கிக் கொண்டேயிருக்கிறது. ஓய்வின்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திற்கு இயைவாக நிற்கும் ஆற்றலே இறை. அவ்வாற்றல் குறை விலாதது; நிறைவுடையது; தற்சார்பில்லாதது; பொதுமைத் தன்மையது; பழமையானது; ஆனாலும் புதுமைப் பொலிவுடையது. அதுவே கடவுள்! கடவுள், விருப்புகளுக்கு அப்பாற்பட்டது; வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது; எல்லை கடந்தது; தோற்றமில்லாதது; அழிவில்லாதது இயல்பியல் பேரறிவினது; பேராற்றலுடையது; அறத்தின் திருவுரு அன்பின் ஆக்கம்; அருளின் பொழிவு; தாயிற் சிறந்த தயாவுடையது; உயிர்களைத் தொடர்ந்து சுழன்று வருவது; உயிர்களை எடுத்தாள்வது; தூசு துடைப்பது; துன்பத்தைத் தொலைப்பது; வாழ்க்கையை வழங்குவது; இடையறாத இன்ப அன்பில் உயிர்கள் திளைக்கத் துணை செய்வது! இது சித்தாந்தச் செந்நெறி காட்டும் கடவுள் இலக்கணம். சித்தாந்தச் செந்நெறியில் கடவுள் இன்பத்திற்கே உரியவன்; இன்பத்தையே வழங்குபவன். அவன் பார்வையில் நரகமில்லை! ஏழை இல்லை-செல்வந்தன் இல்லை! ஓருலகம்! எங்கும் ஒருமை! எதிலும் இன்பம்! இதுவே அவன் ஆனந்தக் கூத்து.
சமயங்களிடையே சைவம்
சமயங்கள் அமைந்து கிடக்கின்ற நிலையினை நோக்கின் சித்தாந்தச் செந்நெறியே செந்நெறி; அதற்கு ஈடானதொரு சமயம் இதுவரையில் தோன்றவில்லை. இந்தச் சித்தாந்தச் செந்நெறியின் தெள்ளிய ஓடை சுமார்த்தக் கலப்பால் கலங்கியிருக்கிறது! கலக்கத்திலிருந்து தெளிவு காண்மின்! வேதாந்தத்தின் பயனாகவுள்ள சைவ சித்தாந்தப் பயன் கொண்மின் !
நாம் இங்ஙனம் கூறும்பொழுது மனிதகுல ஒருமைப் பாட்டுக்கு எதிராகச் சமய வேற்றுமைகளை வற்புறுத்திச் சிற்றெல்லைகளைப் படைப்பதாகச் சிலர் கூறக்கூடும்; அது முற்றாக ஒரு பொய்; நாம் என்றுமே மனிதகுல ஒருமைப்பாட்டை விரும்பி வந்திருக்கிறோம். அதுவே நமது இலக்கு. நமது ஆசிரியன்மார்களும்கூட இந்த மனிதகுல ஒருமைப் பாட்டை வற்புறுத்தியுள்ளனர். வேறுபாடுகளுக்கிடையில் ஒருமைப்பாட்டைக் காண வேண்டுமே தவிர ஒருமைப்பாடு என்ற பெயரில் தனித்தன்மைகளை இழந்து உறுதியற்ற கலப்படத்திற்கு ஆளாகக் கூடாது. அறிவியலானாலும் தத்துவங்களானாலும் அவை தகுதிப்பாடு மிகுந்த அனுபவங்களின் வழித்தோன்றியவை. அனுபவங்களின் காரணமாக வேறுபாடுகள் இருக்கலாம். இவ்வேறுபாடுகள் இயற்கையில் அமைந்தவை. ஆதிபத்திய நோக்கத்தோடு செயற்கையில் உருவாக்கப்பட்ட வேற்றுமைகளல்ல. உலக இயக்கத்திற்குக் காரணமாயிருக்கிற ஐம்பூதங்களிடையே வேறுபாடுகள் உள்ளன. அதனால் உலக இயக்கம் தடைப்பட வில்லையே! ஆதலால் சமயங்களிடையேயுள்ள வேறுபாடுகள் தவிர்க்க முடியாதன; வரவேற்கத் தக்கன. அந்தந்த அளவில் அனுபவிக்கத்தக்கன. அனுபவத்தின் வழி, மாறுதலுக்குரியது. இதனை அப்பரடிகள் “அறு வகைச் சமயத்து அவரவரைத் தேற்றுந்தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே! ஏற்றுந் தகையன” என்று கூறி விளக்குகின்றார்.
மனிதகுல வரலாற்றுப்போக்கில் தோன்றிய சமயங்கள், பொதுவாக மனித குலத்தைக் கொடிய காட்டுமிராண்டித் தனத்திலிருந்து விலக்கிப் பையப்பைய இன்றுள்ள நாகரிகத் திற்கு அழைத்து வந்திருக்கின்றன. இன்று மனிதகுலத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிற அன்புணர்வும், உதவி செய்யும் பண்பும் சமயங்கள் அளித்த கொடைகளேயாம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமயமும் சமயத்தைச் சார்ந்த சமய நிறுவனங்களும் தமிழகத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் எண்ணற்ற பணிகளைச் செய்து வந்துள்ளன. அவை மொழியை வளர்த்துள்ளன; கலைகளை வளர்த்துள்ளன; மனிதர்களைக் கூடிவாழும் பண்புடையவர் களாக உருமாற்றம் செய்துள்ளன; இன்றைய நாகரிகம் மிக்க வளர்ச்சி வரலாற்றுப்போக்கில் சமயம் வழங்கிய கொடையேயாம்.
சைவத்தின் தொன்மையும் மேம்பாடும்
தமிழினம் காலத்தால் மூத்தஇனம்; கருத்தாலும் மூத்த இனம். உலகத்தின் மற்ற மனித இனங்கள் நாகரிகத்தில் அடியெடுத்து வைப்பதற்குமுன்பே நாகரிகத்தின் முதிர்ச்சியாகிய, சமயநெறியினில் தமிழினம் சிறந்து விளங்கியது. இற்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்தில் சமயத் தத்துவங்களும் கொள்கைகளும் பேசப்படுகின்றன. அதுவும் சித்தாந்தச் செந்நெறியின் அடிப்படையில் பேசப்பட்டுள்ளன. இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடத்தில் சிவபெருமான் வழிபாடு இருந்தது. சிவத்தைத் திருவுருவில் எழுந்தருளச் செய்து, திருக்கோயில் அமைத்து வழிபட்ட பெருமை தமிழருக்கே உரியது.
பணியியர் அத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
(புறம்-6)
என்ற புறநானூற்றுப்பாடல் இதற்குச் சான்று. தொன்மைமிக்க சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம். ஆங்கு முக்கட் செல்வர் வழிபாடு இருந்தமையை அகழ்வுப் பொருள்கள் அறிவுறுத்துகின்றன. எனவே தமிழர் சமயம் தொன்மையானது; அஃது அவர்கள் இன வழி வந்தது. அவர்களுடைய சமயநெறி எந்தவோர் இனத்தினிடமிருந்தும் பெற்றதன்று. அவர்களுடைய மறைகள் தமிழ்மறைகளேயாம். அவை தமிழ் முனிவர்களால் செய்யப் பெற்ற மறைகளேயாம். தமிழ் மறைகள் என்பன இறைவன் கல்லாலின் நீழலிலிருந்து நான்கு முனிவர்களுக்கும் அறம், பொருள், இன்பம் வீடு என்பன குறித்து அருளிச் செய்தவையாம். தமிழ்மறைகள் என்பன இன்று வழக்கிலுள்ள ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கமாட்டா. இதனைப் “பண்பொலி நான் மறை” “முத்தமிழ் நான் மறை” என்ற திருஞானசம்பந்தரின் திருவாக்கால் உணர்க!
சமய அனுபவம்
சமயநெறி என்பது ஒருவகை வாழ்க்கைமுறை என்பதை மீண்டும் நினைவிற்கொள்க! சமயம், உயிரின் அனுபவத்திற்குரியது. சமயம் என்பது எழுத்திலும் சொல்லிலும் நின்றுவிடுவதன்று; இவைகளைக் கடந்த அனுபவ நிலை. சமய அனுபவத்தின் வாயில்கள் அறிவு, அன்பு ஆகியனவாம்! அறிவு, ஞானத்தை நல்கும். அன்பு, தவத்தினைத் தரும், தொண்டிற் செலுத்தும். உயிர், ஒன்றாக இருக்கும் சிவத்தில் ஒன்றித் திளைத்துப் பெறும் அனுபவமே சிவானுபவம்! இவ்வனுபவத்தின் பயனாகப் பொருள்களின் போக்கு மடை மாறும்; தன்மை மாறும். முரண்பாடுகளும் விகாரங்களு முடையனவாயிருந்த பொறிகள், புலன்கள் “அன்பே ! அன்பே!” என்று நினைந்து அரற்றியதால் செழுமையுற்று இறைவனும் ஏனை அனைத்துயிர்களும் சுவைத்து மகிழுதற்குரியனவாக நயம்பட அமைந்த நிலையே சிவானுபவ நிலை. வழிபாடு என்பது, உயிர் சிவத்தோடு ஒன்றுதற்குச் செய்யும் முயற்சி. சிவத்தின் தன்மைகளை ஈர்த்துத் தன்னுரிமையாக்கிக்கொண்டு ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியச் செய்யும் செயற்பாடே வழிபாடு!
வழிபாடு கடவுளுக்காகச் செய்யப்படுவதன்று; கடவுளை முன்னிட்டுச் செய்யப்படுவது. அதன் பயன் கடவுளுக்கன்று; உயிர்களுக்கேயாம். சிவத்தை உள்ளத்தில் எழுந்தருளச் செய்து, உற்று நோக்கி அகத்தில் துளும்பியெழும் நிறையன்பால் முழுக்குச் செய்து, நிறையறிவால் அருச்சிப்பது ஞான வழிபாடு! இதனையே அகப்பூசையென்பர். திருக் கோயிற் பூசனையைவிட அகப்பூசையே உயர்ந்தது; சிவம் விரும்புவது எது என்பதைப் பூசலார் நாயனார் வரலாற்றின் மூலம் உணரமுடிகிறது. ஆனால் இன்று அகப்பூசை செய்வார் யார்? அந்த நுண்ணிய கலைஞானத்தைக் கற்றுத் தருவாரைக் கூடக் காணோம். நமது சமய அனுபவ உலகத்தில் ஒரு சூன்யம் தோன்றுகிறது. பக்தியியக்கம் ஞானத்தின் முயற்சியைத் தடுத்து விட்டதோ என்ற ஐயம் தோன்றுகிறது. சமய வாழ்க்கைக்குப் பக்தி தொடக்கத்தில் துணை செய்யலாம். ஆனால் ஆன்மாவின் ஈடேற்றத்திற்கு அது முழுமையாகத் துணை நிற்கமுடியாது. “ஞானத்தாலன்றி வீடுபேறில்லை” என்ற ஆன்றோர் வாக்கை எண்ணுக!
அகப்பூசை முதலியன இன்று எல்லாரும் நிகழ்த்துதற்குரியது. அதற்குரிய காலமும் இல்லை; கருத்தும் உருவாகவில்லை. ஆயினும் திருவாசகம் போன்ற ஞானநூல்களை ஓதுகின்ற ஞானவேள்வியையாவது நிகழ்த்துங்கள்! அட்டோத்திரத்தில் சிக்கி அல்லற்படுவதை விட, சகஸ்ர நாமத்தில் சிக்கிச் சங்கடப்படுவதைவிடத் திருவாசகத்தை ஓதி, ஊனும் உயிரும் கரைந்து திளைப்பது சிறந்த ஞான சாதனம். சமயம் அனுபவத்திற்கு வந்தாலொழிய ஆன்மா பயனுறாது.
ஞானம்
“அறிவே தெய்வம்!”, “அறிவே கடவுள்!” என்று புதுமைவாதிகள் சிலர் இன்று ஆரவாரம் செய்கின்றனர். ஆம்! அறிவே தெய்வம்! இது புதிய கொள்கையன்று. இது தமிழகத்தின் பழைய கொள்கை எது அறிவு: கற்பது அறிவா? அறிவுதான்! ஆனாலும் கற்பது அறிவின் வாயிலே தவிர அறிவே ஆகிவிடாது. அதுமட்டுமன்று. இன்று அறியாமையே அறிவு என்ற பெயரில் “ஆட்டம்” போடுகிறது. இந்த “அறி” வெல்லாம் கடவுளாகிவிடமுடியுமா? அறிவு வளர்தலுக்குரியது. “அறிதோ றறியாமை” என்பார் திருவள்ளுவர். அறிவின் முகட்டுக்கு மனிதகுலம் சென்றடைந்துவிட முடியாது. இவர்கள் ஏற ஏற அது உயர்ந்துகொண்டே போகும். விலகும் நோக்கமன்று; அல்லது விலக்கும் நோக்கமுமன்று. முயற்சி, எல்லை கடந்ததாக இருக்க வேண்டு மென்பதே திருவுள்ளம்! சராசரிக் குறைகளைக் கடந்த அறிவின் முதிர்ச்சியையே ஞானம் என்கிறோம். ஞானத்தின் அடையாளம் முதலில் தன்னிலையினை அறிதல்; குறைகளை ஓர்தல்; குற்றங்களை உணர்தல்; இவற்றினின்றும் விடுதலை பெற்று நிறைவைப் பெறவேண்டுமென்ற உயிர்த்துடிப்பு சிவத்தினிடத்தில் தணியாத ஈடுபாடு! தொழும்பாய் நின்று தொண்டு செய்யும் மனப்பாங்கு! ஓயாது மெய்வருந்தி உழைத்தல்; அவ்வழியில் வரும் துன்பங்களைத் துணுக்கின்றி ஏற்றுக்கொள்ளல்; தற்சார்பு நீங்குதல்; தற்சலுகையைத் துறத்தல். சிவம்-சிவத்தின் பருவுடலாக இருக்கின்ற உயிருலகம் இவற்றின் நலன்நாடிப் பணிகள் செய்தல்; துலாக்கோல் போல இன்பத்திலும் துன்பத்திலும் ஒத்த சிந்தனை பெறுதல்; திருவருளாற்றலையே பற்றி நின்று காண்டல்-செயற்படுதல்; ‘நான்’, ‘எனது’ என்ற இரண்டையும் கடந்த திருவடி ஞானத்தில் நிலைத்து நிற்றல். இவையே ஞானத்தின் அடையாளங்கள்! ஆங்கு அறிவில் தூய்மை! அன்பில் துய்மை! ஆற்றலில் தூய்மை! செய்வினையில் துய்மை! எல்லாம் தூய்மையாம்! ஆங்குப் பல அல்ல! ஒன்றே ஒன்று! அதுவே சிவம்! அவ்வழியே பருவுலகம்! துய்ப்பனவும் உய்ப்பனவும் கூட அவனேயாம்! அஃது ஒரே ஒருலகம்! ஆங்குப் பிரிவில்லை! பேதமில்லை! இதையே திருவள்ளுவர் “வாலறிவன்” என்றார். வாலறிவன் என்பது ஞானத்தின் மறுபெயர்: ஞானம் பெறுமின்! ஞானத்தால் தொழுமின் !
தொண்டு
சமயநெறியின் இரட்டை நாடிகளில் ஒன்று அன்பு; பிறிதொன்று தொண்டு. சமய ஞானத்தில் உண்மையிலேயே முதிர்ச்சியடைந்தவர்கள் தொண்டில் நாட்டம் காட்டுவர். அவர்கள் எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டுவர். எக்காரணம் கொண்டும் மனிதர்களை வேற்றுமைப்படுத்தி ஒதுக்கமாட்டார்கள். குலத்தில் பொல்லாரேனும் குணத்தில் பொல்லாரேனும் அவர்கள் மாட்டும் இரக்கம் காட்டுவர். அவர்கள் படும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதி உடன் மாற்ற முயலுவர். முன்னை வினையைக் காரணமாகக் காட்டியோ “ரேஷன் கார்டு கதை” சொல்லியோ மற்றவர்களை ஏமாற்றிவிட்டுத் தங்களுக்கு மட்டும் கட்டணங்கள் வசூலிக்கமாட்டார்கள்!
நமது திருமுறை வரிசை, ஞானத்தில் தொடங்கித் தொண்டில் நிறைவுறுகிறது. திருஞான சம்பந்தரின் தமிழ் ஞானத் தமிழ், சேக்கிழாரின் செந்தமிழ் தொண்டுத் தமிழ். ஞானம் தொண்டில் நிறைவுறும். ஞானத்தின் பயன் திருத்தொண்டு. திருத்தொண்டின் பயன் இன்ப அன்பு. “தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை” என்பார் அப்பரடிகள். ஆக, தொண்டு நிலையே வீடுபேறு என்றாற்போல ஆகிறது. பர சிவமும் தொண்டிற்குரிய தகுதிகளை வரிசையறிந்து வழங்கும் பேற்றினைப் பெரிய புராணத்திற் காண்கிறோம். அப்பரடிகளின் கைத்திருத் தொண்டுக்கு வாசியில்லாக் காசு வழங்கியமையை நினைவுகூர்க! தொண்டர்க்குத் தொண்ட ராதல் போல-ஆரூரர்க்குத் தோழராகிப் பல்வகைப் பணிகளைப் பாங்குடன் செய்தமையை மறப்பார் யார்? மறுப்பார்யார்? திருத்தொண்டு பல திறத்தது. வகையில் வேறுபாடின்றி வாயில்கள் ஒன்றேயாம்! விளையும் பயனும் ஒன்றே யாம்! ஒன்று இறைவனை முன்னிட்டுச் செய்யும் திருத் தொண்டு! பிறிதொன்று இறைவனின் கருணைக்குப் பாத்திரமாகும் உயிர்களின் நலம் நோக்கிச் செய்யும் திருத்தொண்டு! திருக்கோயிற் சார்பான திருத்தொண்டு இரண்டுக்கும் சார்புடையது.
கடவுளுக்குச் செய்யும் தொண்டுகளும்கூடப் பெயராலும் தோற்றத்தாலும் கடவுளுக்குச் செய்யும் தொண்டுகள் போலத் தோற்றமளிக்கின்றன. ஆனால் உண்மையில் அதுவன்று. தொண்டர்கள் உயிர்களின் நலம் நோக்கி இறைவனை வாழ்த்துகின்றனர். பரசிவத்திடம் பத்திமைகொள்வதால் நெஞ்சு நெகிழ்கிறது. நெக்கு உருகுகிறது. அதனால் மனமாசு அகலுகிறது; குற்றம் நீங்குகிறது; துன்பம் தொலைகிறது; தூய்மை வந்து சேர்கிறது; குணம் கூடுகிறது; இன்பம் வந்தமைகிறது. பத்திமைப் பாங்குடைய தொண்டிற்குள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வாழ்த்துதல் அடங்குகிறது. அடுத்து, உயிர்களை நோக்கிச் செய்யும் தொண்டு. முற்றிய வைதீகத்தினர் சிலர் கடவுளுக்குச் செய்யும் தொண்டையே வற்புறுத்துவர். “உயிர்களுக்குச் செய்வதைப் பசு புண்ணியம் தானே, நல்வினைதானே, அது பந்தமும் போகமும் தரும்; வீடுபேற்றினைத் தராது” என்பர். இது முற்றிலும் பொருந்தாது.
நாம் உயிர்க்குத் தொண்டு செய்யும் பொழுது உயிர்களாக மட்டும் நினைத்துச் செய்வதில்லை; செய்யவும் கூடாது. “பாத்திரம் சிவமதென்று பணிய வேண்டும்” என்பார் அப்பரடிகள். உயிர்களுக்குத் தொண்டு செய்யும் பொழுது, உயிர்கள், இறைவனின் திருவருளுக்கு ஆளாக்கும் பாத்திரம் என்று செய்தால் அது பதிபுண்ணியமேயாம்” என்பது மாதவச் சிவஞான முனிவரின் வாக்கு ! நம்முடைய நால்வர் பெருமக்களும் நாள்தோறும் நாட்டில் திருத்தல யாத்திரை செய்து இறைவனைப் புகழ்ந்து பாடினர். அதேபொழுது இறைவனின் என்றும் அருமைக்குரிய உயிர்க்குலத்தின் துன்பங்களை துடைத்தும் தொண்டு செய்தனர். தமிழ்ச் சிந்தனை, துன்பத்திற்கு எதிரானது; பொதுமையைத் தழுவியது.
அப்பரடிகள் இறைவனைப் பற்றிப் பாடிய பதிகத்தில் “இரப்பவர்க்கு ஈய வைத்தார்” என்று பாடுகிறார். இங்கே இன்பப் பேறருளலும் நரகத் துன்பத்தைத் தருதலும் ஈதலை மையமாகக் கொண்டு நிகழ்கின்றன. ஒப்புரவு நெறியை வழங்குகின்றன. இன்று இந்நெறி நிற்பார் யார்? பிச்சை போடுதல் ஈதலாகாது. இதற்குத் திருவள்ளுவம் விளக்கம் கூறுகிறது, “இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்” என்று! அதனினும் உயர்ந்தது ஒப்புரவு ஈதற்பண்பு. உடையார்-இல்லார் என்ற வேற்றுமையில்லாது உரிமை யுடையார் ஒருவருக்குப் பொறுப்புடையார் வழங்குவதை யொத்தது. இப்பொழுது நம்மிடத்தில் பொருள் இல்லை. உடன் வந்துள்ள உதவியாளரிடம் பணம் இருக்கிறது. நாம் கேட்கும்பொழுது அவர் தருகிறார். அல்லது குறிப்பறிந்து தருகிறார். இங்கே ‘தருதல்’ எந்த மனநிலையில் நிகழ்கிறதோ அதே மனநிலையில் நிகழும் ஈதலேதான் அப்பரடிகள் கூறும் ஈதல்! ஆதலால், ஒப்புரவு என்பது இதனினும் உயர்ந்தது. அங்கே தருதல் இல்லை. அன்பிலும் அறவுணர்விலும் விளைந்த உரிமையால் - வழங்கப்பெற்ற உரிமையால் எடுத்துக்கொள்வது!
ஒப்புரவு அதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துக் காட்டும் உவமைகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளும் வினைத் தொடர்பாகவே அமைந்துள்ளன. ‘ஊருணி”, “பயன்மரம்”, “மருந்து மரம்” இனையனைத்திலும் நாம் மேவிச்சென்று எடுத்தே பயன்படுத்து கிறோம். அவை வழங்கிய கொடைக்கு மாறாக நாம் அவற்றைப் புகழ்ந்து நன்றி கூறுதலாகிய சடங்குகள் இல்லை. இத்தகைய சமுதாய ஒழுக்கம், சைவ ஒழுக்கம், தமிழுலகம் தந்த நன்னெறி, தமிழ்ச் சான்றோர் தந்த பொதுநெறி. இப்பொதுநெறி, வாழ்க்கையில் வெற்றி பெறுமானால் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகள் சுருங்கும்; பிணக்கும் குறையும்; பகை நீங்கும்; பண்பாடு தோன்றும்; வாழ்க்கை சிறக்கும். இத்துறையில் ஒவ்வொரு தனிமனிதனும் குடும்பத்தினரும், அறநிறுவனத்தினரும், சமுதாயத்தினரும் இயன்றவரை செயற்படுதல் வேண்டும். அப்பரடிகள் திருநாளன்று தம்முடைய உடைமையில்-உரிமையில் பிறிதொருவருக்கு உரிமையும் வளமும் வாழ்வும் வழங்க வேண்டும். இந்நெறிமுறை தூண்டுதலின்றியும் கட்டாயமின்றியும் இயல்பாக நடைபெறுதற்குரிய பக்குவத்தை நாம் பெறவேண்டும்.சமய நிறுவனங்கள்
தமிழகத்தைப் பொறுத்தவரை சமய நிறுவனங்கள் மூவகையின. ஒன்று திருக்கோயில்கள், பிறிதொன்று திரு மடங்கள். மற்றொன்று சமுதாயத்தினர் சமய வளர்ச்சியில் ஆர்வங்காட்டித் தோற்றுவித்த அமைப்புகள். இந்த மூன்றும் சமய வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் இன்றியமையாதவை. இந்த நிறுவனங்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால், இம்மூன்றினிடையேயும் ஒருமைப்பாடும் ஒருங்கிணைப்பும் தேவை. நம்முடைய நல்லூழின்மையினால் இன்று இந்த ஒருங்கிணைப்பு இல்லை. ஒருசில அமைப்புகளுக்கு இருக்கின்றன. ஆனாலும் அந்த ஒருங்கிணைப்பு நிறைநலம் பெற்றனவாக அமையவில்லை. அருள்நெறித் திருக்கூட்டத் திற்குக் குன்றக்குடித் திருமடத்தோடு இணைப்பு இருக்கிறது. இந்து சமய மன்றங்களுக்குக் காஞ்சிபுரம் சங்கரர் மடத்தோடு இணைப்பு இருக்கிறது. சிறப்பாகச் செயல்பட்டு முடக்கப்பட்ட பேரவைக்குத் தமிழகத்தின் எல்லாத் திருமடங்களோடும் உறவிருந்தது. ஏன்? சமய அமைப்புகள் அனைத்துடனும் கூட உறவு இருந்தது. ஆனாலும் செழுந்தமிழ் வழக்கு வெற்றி பெற்றுவிடக் கூடாது, சமயத்துறையில் காஞ்சிபுரம் சங்கரர் மடத்துக்கு இருக்கும் ஆதிக்கம் நெகிழ்ந்து போதல்கூடாது என்ற குறிக்கோளுக்கு இரையான நெருக்கடி கால அரசு, நெறிமுறைகளுக்கு இசையாத வகையில் ஆட்சியைப் பயன்படுத்திப் பேரவையை முடக்கிவிட்டது. இன்றைய அரசு பேரவையின் பணிகளுக்குச் சாதகமாகவும் இல்லை; பாதகமாகவும் இல்லை. ஆனாலும் திருமடங்களின் அமைப்புத்தானே! அவர்களிடத்திலேயே பொறுப்பை ஒப்படைத்து அவர்களைச் செயற்படவிட வேண்டும் என்ற விருப்பம் நாம் வற்புறுத்தியும் கூட அரசுக்கு வராதது ஏன் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்குப் பேரவையைச் செயற்படுத்த அரசு முன்வர வேண்டும். அஃது ஒரு நல்ல அமைப்பு. தொடர்ந்து போராடி அந்த அமைப்பைப் பாதுகாத்து இயக்கினால் காலப் போக்கில் திருமடங்களும் மக்களும் ஒத்திசைந்த சமயப் பேரியக்கம் தோன்றும்.
திருக்கோயில்கள் நமது பண்பாட்டை வளர்க்கும் பண்ணைகள். நமது உணர்வுகளைத் தொட்டுத்திருத்திச் செழுமைப் படுத்தும் திருவருளின் ஊற்றுக்கண். நமது சமுதாயத்தின் வாழ்வியல் மையமாகத் திருக்கோயில்களே விளங்கின. ஆனால் இன்று, அவை சமுதாயத்தை விட்டு விலகிச் சமுதாயத் தொடர்பில்லாமல் தன்னிச்சையாகத் தனித்தியங்கும் நிறுவனங்களாகிவிட்டன. இதன் காரணமாகத் திருக்கோயில் ஆட்சி முறையில் வணிக மனப்பாங்கும், இலாப நோக்கும், தொழில் மனப்பான்மையும், அரசியல் கட்சிகளின் தலையீடும் தோன்றிவிட்டன. இன்றையச் சூழ்நிலையில் திருக்கோயில் உருவ அமைப்புகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் உணர்வுக்குத்தான் வழியில்லை. எந்தவொரு திருக்கோயிலும் எந்த நோக்கத்திற்காகத் தோற்று விக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற் கிசைந்தவாறு செயற்படவில்லை. தத்துவங்களின் செயல்முறைக் களங்களாக விளங்கிய திருக்கோயில்கள் இன்று தத்துவத்தையும் மறந்து விட்டன. செயல்களையும் மறந்துவிட்டன. சமுதாய ஈடேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தொடங்கிய திருக்கோயில்கள், இன்று சமுதாயத்தை மறந்துவிட்ட தோடன்றிச் சமுதாயத்தைப் பிறிதின் கிழமையாக்கி அதனிடம் எந்தெந்தக் கட்டணம் வசூலிக்கலாம் என்று திட்டமிடத் தொடங்கிவிட்டன. சமநிலை காண வேண்டிய திருக்கோயில்கள் தரம் பிரித்து விட்டன. ஒருவருக்குத் திருக்கோயிலில் ஏகபோக மரியாதை மற்றொருவருக்குத் திருநீறுகூடக் கிடைப்பதில்லை. இந்த வேறுபாடு திருக்கோயில் தத்துவத்திற்கே முரணானது. எனவே சமய நம்பிக்கையும் தத்துவப் பிடிப்புமுடையவர்கள், நமது சமய நிறுவனங்களின் ஆட்சிமுறையை ஏற்கத் தக்கவாறு நாம் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்து சமய ஆட்சிக் கழகம் வேண்டும்
சமயச் சார்பற்ற அரசின் மேலாதிக்கத்திலிருந்து நமது சமய நிறுவனங்களை மீட்டுத் தன்னாதிக்கமுள்ள ஆட்சி முறை அமைப்புக்குக் கொண்டுவர வேண்டும். இந்த ஆட்சி முறையைப் பல்கலைக் கழக வடிவமைப்பில் அமைப்பது நல்லது. இந்து சமயம் என்ற பொதுப் பெயர் தோன்றி விட்டது. இங்கனம் தோன்றிய பொது அமைப்பில் நன்மைகளும் உண்டு; இழப்புக்களும் உண்டு. அவற்றை விரிவாக ஆராய்வது நிறைவான பயன்தராது. ஆனாலும் பொது அமைப்பு இந்து சமயம் என்ற பெயரில் அமையும். அதனுடைய ஆட்சிமுறைச் செயலமைப்பில் இந்து சமயத்தின் உறுப்புகளாக நிலவும் சைவம், வைணவம், கெளமாரம், சாக்தம், காணாபத்தியம், செளரம் ஆகியவற்றின் தனித்தன்மையைப் பேணிப்பாதுகாக்கும் வகையில் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்பெற்று, அக்குழுக்களே அந்தத் துறையில் பொறுப்புக்களை ஏற்கும்படி செய்ய வேண்டும். இங்ஙனம் செய்வதால் பொதுத் தன்மைக்கும் ஊறில்லை; தனித் தன்மைக்கும் சிதைவில்லை; கலப்படமும் தவிர்க்கப்படும்; ஓர் ஊரும் ஒரு கடவுளைத் தொழும் மனப் பாங்கும் இல்லாத நாடோடிகளால் ஏற்படக்கூடும் நன்னெறிச் சிதைவிலிருந்து நம்முடைய சமயத்தைப் பாதுகாக்கலாம்.
இந்து சமய ஆட்சிக் கழகத்தின் செயலமைப்பில் ஆட்சிக்குழுவும் பேரவையும் அமையும். ஆட்சிக் குழுவில் திருமடங்களின் தலைவர்கள் அலுவல் அடிப்படையில் இடம்பெறுவர். துறைதோறும் சிறந்து விளங்கும் சமய அறிஞர்களை ஆட்சிக்குழு தம் உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ளும். சட்டமன்றம் பாராளுமன்றம் ஆகியன, நமது சமயத்தில் நம்பிக்கையுடையவர்கள் சிலரைப் பேராளர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பும். பேரவை, தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கின்ற சமய அமைப்புக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பேராளர்களையும், இந்து சமய நம்பிக்கையுடைய பட்டதாரிப் பேராளர்களையும், இந்து சமய நம்பிக்கையுடைய வழக்கறிஞர் குழுவின் பேராளர்களையும் இந்து சமய நிறுவனங்களில் தொண்டு செய்வோர், அலுவல் செய்வோரின் பேராளர்களையும் கொண்டதாக அமைய வேண்டும். இஃது ஒரு சுருக்கமான உத்தேச வரையறை. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக இந்திய நிர்வாகப் பணித் தேர்வில் (I.A.S) தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஒருவரை அரசிடமிருந்து பெற்று ஆட்சிக்குழு நியமித்துக் கொள்ளும். ஆட்சிக் கழகத்தின் செயல்முறையைக் குறைந்தது ஐந்து பகுதிகளாக வகுத்து இயக்கலாம்.
1. பொது நிர்வாகம்.
- அ) உடைமைகள் வளர்ச்சி
- ஆ வருவாய்ப் பெருக்கம்
2. திருக்கோயில் நிர்வாகம்
- அ) திருக்கோயில் நாட்பூசை
- ஆ) திருவிழா
3. இந்து சமுதாய மேம்பாட்டுக்குரிய கல்வி, மருத்துவப்பணிகள்.
4. பிசாரம்-வெளியீடு
5. தணிக்கைப் பிரிவு
இவ்வைந்தும் தனித்தனி இயக்குநர்களால் செயற்படுத்தப்பெற வேண்டும். இந்த நிலை உருவாகும் பொழுது பெயரளவில் தனித்தனிக் கோயில், திருமடம் என்று கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நிதியைப் பொறுத்த வரையில் ஆட்சிக் குழு வகுக்கும் நிதியியல் முறைகள் கடைப்பிடிக்கப் பெற வேண்டும். அதாவது, ஒரு திருக்கோயிலில் நிறைய வருமானம் வருவதால் அங்கு ஆடம்பரச் செலவுகளும் இன்னொரு திருக்கோயிலில் வருவாயின்மையால் அங்குப் பூசனையில்லாதிருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். திருமடங்களைப் பொறுத்தவரையில் அவைகளுடைய சமயப் பிரசார சமூகப் பணித்துறைக்குரிய நிதிகள் ஆட்சிக் கழகத்தில் மையப்படுத்தப்பட்டுத் திட்டமிட்டுச் செய்யப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் செய்வதன் மூலம் எந்த மடம் பெரிய மடம்? என்ற வினாவைச் சுற்றி வட்டமிட்டு வீணாகச் செலவாகும் செல்வமும் பாதுகாக்கப் பெறும், விளம்பரப் போட்டிகள் குறைந்து செயற் போட்டிகள் தோன்றிச் செயல் திறமும் கூடும். இந்தச் செய்திகள் கசப்பாக இருக்கலாம். ஆனால், நிகழவேண்டியவை என்பதை அன்பு கூர்ந்து மறந்து விடாதீர்கள். இந்த முறை, செயல்படும்போதுதான் திருக்கோயில், திருமடங்கள், மக்கள் என்ற ஒருங்கிணைப்புத் தோன்ற முடியும். இவ்வாறு சிந்தனை செய்ய ஒவ்வொருவரும் முயலுங்கள் ! கலந்து பேசுங்கள்! இதைப்பற்றிச் சிந்திக்க அறிஞர் குழுவை அமையுங்கள்! கருத்தரங்குகள் நடத்துங்கள்! ஆய்வறிக்கைகளைப் பெறுங்கள்! மாநாட்டை நடத்துங்கள்! இந்தச் சிந்தனையை-செய்தியை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம்! திருவருள் துணை செய்யும்.
வேண்டிய சீர்த்திருத்தம்
நம் சமயம் காலத்தால் தொன்மையானது. பழமைப் பண்பு மிக்கு விளங்குவது. ஆயினும் புதுமைப் பொலிவுடையது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய் - என்ற திருவாசகக் கருத்து நமது சமயத்திற்கும் பொருந்தும், நமது சமயநெறிக்குச் சீர்திருத்தங்கள் இப்போதைக்குத் தேவையில்லை. எதிர்காலத் தேவை பற்றிக் காலம் முடிவு செய்யட்டும். நமது சமயத்தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் அனைத்தும் நம்பிக்கைக்குரியன. நல்லெண்ணத்திற் குரியன; நடைமுறைக்கிசைந்தன. அவற்றில் காலத்திற்கு ஒவ்வாத பழமை எதுவும் இல்லை. இன்றையச் சூழ்நிலையில் அவாவி நிற்கும் புதுமை எதுவுமில்லை. அந்த அளவு நமது சமயம் இன்றையக் கால எல்லை வரையில் தேவைகளை நிறைவு செய்யத் தக்கதாக முழுமையுற வளர்ந்திருக்கிறது. அதனாலன்றோ “சித்தாந்தம்” என்று பெயர் சூட்டினர்; “முடிந்த முடிவு” என்று பாராட்டினர்.
ஆனாலும் நம்முடைய சமய வாழ்க்கை நம் தத்துவங்களுக்கு இசைந்தவாறு அமையவில்லை. நம் மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் காட்டுகிற வழியில் இன்றையச் சமய வாழ்க்கை இல்லை. சமுதாய வாழ்க்கை அமைப்பு முறை இல்லை. இந்தக் குறையை நாம் உள்ளவாறு உணர்தல் வேண்டும். நாம் ஒன்றும் புதுப்புரட்சி செய்யவேண்டாம். அதற்கு நாம் தகுதியாகவுமில்லை. ஆனால் நம்முடைய திருமுறைகள் இதுதான் நெறி-சமயவாழ்க்கை முறை என்று உபதேசித்தும் நாயன்மார்கள் வாழ்ந்து காட்டியுமுள்ள நெறி முறைகளை நாம் பின்பற்ற வேண்டாமா? நாம் அந்நெறியிலிருந்து நெடுந்துாரம் விலகிச் சென்றிருந்தாலும் நம் தவறுகளைத் திருத்திக்கொண்டு, சீர்த்திருத்தம் செய்துகொண்டு திருமுறை நெறியில் நின்றொழுக வேண்டாமா? ஆதலால் சீர்திருத்தம் நமது சமயத்திற்கும் தேவையில்லை. நமது தத்துவங்களுக்கும் தேவையில்லை. நமது கொள்கைகளுக்குப் புதிய கொள்முதல் வேண்டாம். ஆனால் நமக்குச் சீர்திருத்தம் தேவை. நமது சமுதாய அமைப்பிற்குச் சீர்திருத்தம் தேவை. நமது சமுதாய நிறுவனங்களின் நடைமுறையில் சீர்திருத்தம் தேவை. இவற்றைப் பற்றி எண்ண வேண்டாமா? உண்மையைச் சாதிக்கும் முனைப்பு வேண்டாமா? அன்புகூர்ந்து இந்த நேரத்தில் சிந்தனை செய்யுங்கள்! எத்தனையோ சீர்திருத்தக் கருத்துக்கள் குறித்து எண்ண அலைகள் மோதுகின்றன. அவற்றில் ஒன்றுகூட நாம் புதிதாகக் கண்டவையல்ல. அவற்றுக்கு உண்மையில் உரியவர்கள் நாயன்மார்கள். சிறப்பாக அப்பரடிகள், சிவபெருமான், எம்.எல். பிள்ளை என்ற கா. சுப்பிரமணிய பிள்ளை, தமிழ்த்தந்தை திரு வி. க. தனித்தமிழ் மலை மறைமலையடிகள் முதலியோராவர். அவர்கள் அருளியவற்றை நாம் வழிமொழிகிறோம். அவ்வளவுதான்! பல சீர்திருத்தங்களை நினைவுக்குக் கொண்டுவர விருப்ப மிருந்தாலும் நாம் அவற்றை விடுத்துச் சில செய்திகளை மட்டுமே நால்வரின் அடிச்சுவட்டில் மாநாட்டின் நினைவிற்கும், மாநாடு வாயிலாக மக்கள் மன்றத்தின் நினைவிற்கும் கொண்டு வருகிறோம்.
ஒரு கடவுள் வழிபாடு
நமது நெறி, ஒரு கடவுளைத் தொழும் உயர்மாண் புடையது. “ஒன்றென்றிரு; தெய்வம் உண்டென்றிரு” என்பார் பட்டினத்து அடிகள். வைதீகர்களின் சாபம், அறுவகைச் சமய இணைப்பு ஆகியவை நம்முடைய சமுதாயத்தில் பலரை, ஒரு கடவுள் வழிபாட்டிலிருந்து நெடுந்தொலைவுக்கு இழுத்துச் சென்றுவிட்டன. இன்று பலர் எந்தவொரு மூர்த்தியையும் ஆன்மநாயகனாக ஏற்றுக் கொள்ளாமல் கிழமைக்கொரு சாமி, சந்தர்ப்பத்திற்கொரு சாமி என்று தொழுது ஏய்க்கும் அவலத்தை யார்தான் மறக்க முடியும்? நால்வர் காலத்தில் அம்மை வழிபாடும் இருக்கத்தான் செய்தது; திருமுருகன் வழிபாடும் இருக்கத்தான் செய்தது; விநாயகர் வழிபாடும் இருக்கத்தான் செய்தது; அருக்கன் வழிபாடும் இருக்கத்தான் செய்தது; நால்வர் பெருமக்கள், இவர்களைத் தனித்தனியே வழிபட வில்லை; பதிகம் அருளிச் செய்யவும் இல்லை. சைவர்கள் சிவத்தையே வழிபட்டனர்; ஆழ்வார்கள் திருமாலையே தொழுதனர். இதுதான் சமயசிலம். கடவுளை வழிபடும் துறையில் சிலர் சமரசம் கூறியிருக்கின்றனர். அந்தத் தவறான வழியில் “அரியும் சிவனும் ஒன்று. ஆதலால் யாரையும் வழிபடலாம்; இருவரையும் வழிபடலாம்” என்றெல்லாம் எடுத்துக் கூறி, சமுதாயம் பக்தி வழியில் வளர இயலாதபடி செய்துவருகின்றனர்.
சமரசம் என்பது தன்னுடையது மீது பற்றும் இன்னொருவருடையது மீது வெறுப்பும் இல்லாதிருப்பதுதான்! ஒரு நங்கை கொழுநன், கொழுந்தன் ஆகிய உறவுகளைப் பேணலாம். ஆனால் இருவரையும் கொழுநன் நிலையிலேயே சமரசமாக எண்ணிப் பார்க்க முடியுமா? அதாவது கொழுநனும் ஆடவன்தான்; கொழுந்தனும் ஆடவன்தான்; ஆதலால் இவனும் கணவனாக இருக்கலாம். அவனும் கணவனாக இருக்கலாம். இரண்டு பேருங்கூடக் கணவன்மார்களாக இருக்கலாம் என்று நினைப்பதே எத்துணைப் பைத்தியக்காரத்தனமானது. இப்படிப் பைத்தியக்காரரை வெளியில் நடமாட விடுவோமா? “இவரையும் தொழலாம்” என்று சொல்லும் பைத்தியக்காரரைக் கீழ்ப்பாக்கத்திற்கு உடனே அனுப்ப வேண்டாமா? .
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால்,நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின் இறைவா!
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாது எங்கள் உத்தமனே!
என்ற மணிவாசகர் மணிமொழியையும்,
நயவேன் பிறர்பொருளை நள்ளேன்கீ ழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்-வியவேன்
திருமாலை அல்லது தெய்வம்என்று ஏத்தேன்
வருமாறு நம்மேல் வினை
புனலும் பூவும் சொரிந்து வழிபடும் உரிமை
வழிபாடு என்பது உயிர்கள் தம் உய்தி நோக்கிச் செய்தல். வழிபாட்டில் அகக்கருவிகளும் புறக்கருவிகளும் ஈடுபட வேண்டும். வழிபாட்டில் நாம் ஒவ்வொருவரும் சிறக்கவேண்டுமானால் நாள்தோறும் தனித்திருந்து திருமுறைகள் காட்டிய நெறிமுறையில் அகப்பூசையும் புறப் பூசையும் செய்யவேண்டும். இங்ஙனம் செய்வோர் எண்ணிக்கை வரவரக் குறைந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றங்கரைகளிலும் திருமடங்களிலும் இங்ஙனம் பூசை செய்வதற்கென்று அமைக்கப்பெற்ற மேடைகள் இன்று பயனற்றுக் கிடக்கின்றன. இங்ஙனம் ஒவ்வொருவரும் நாள்தோறும் முறையான சிவபூசை செய்ய இயலாது என்று கருதித்தான் போலும் திருக்கோயில் வழிபாட்டு முறையைக் கண்டனர். நாள்தோறும் எல்லாரும் முறையாக அகப்பூசை செய்தல் என்பது எளிதன்று. அத்துறையில் வல்லார் இன்று இருக்கிறார்களா என்பது ஐயத்திற்குரியது. அந்த அருமையான விஞ்ஞானக் கலையைக் கற்றுத் தருகின்ற சித்தர்கள் இன்று அருகிப்போயினர். ஆதலால் அகப்பூசை செய்வதிலுள்ள இடர்ப்பாட்டையும், காலத்தின் அருமையையும் கருதி, அகப்பூசை நெறியினின்று பெருமானைத் திருவுருவத்தில் எழுந்தருளச் செய்து நாம் எளிதாக வழிபடுவதற்கு ஏற்ற வகையில் தோன்றியதே திருக்கோயில் வழிபாடு என்று நாம் நம்புகின்றோம். அயல் வழிக் கருத்தைக் கேட்டு அலமருதல் நியாயமன்று. அவர்கள் அருச்சகர்களாக இல்லாமல் சிவாச்சாரியர்களாக இருந்து, கண்டு காட்டி வழிநடத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். இது நமது சமயத்தை வளர்ப்பதற்கும் சமுதாயத்தை ஒருங்கிணைப்பதற்கும் உரிய சாதனம்.
வழிபாட்டு மொழி
அடுத்து, வழிபாட்டுக்குரிய மொழி குறித்தது! இறைவன் மொழி, இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்த பரம்பொருள். அவனுக்கு எல்லா மொழிகளும் உரிமையுடையன. மொழி வடிவம் பெறாத உயிரினத்தின் ஒலிக் குறிப்புகள் கூட இறைவனுக்கு மொழிகளேயாம். சேரமான் பெருமான் நாயனாருக்கு இதையறியும் திறனிருந்தது. அப்படியானால் எந்த மொழியில் வழிபட்டால் என்ன? என்று சிலர் வினா எழுப்பலாம். ஆம் உண்மைதான்! கடவுளைப் பொறுத்த வரையில் எந்த மொழியிலும் வழிபடலாம். தாய் எந்த உணவையும் உண்ணலாம். குழந்தையின் நலம் நோக்கும் தாய் குழந்தை நலத்திற்கேற்ற உணவை உண்ணவேண்டும். வழிபாடு செய்வது உயிர்கள் துய்மையுணர்வையும் இறைவன் அருளையும் நாடிப்பெறுவதற்குத்தான். உயிர்களுக்குரிய மொழி, தாய் மொழியேதான்! அதனால் தாய் மொழியில் நிகழ்த்தும் வழிபாடுதான் கனிவைத் தரும்; இறையருளைக் கூட்டுவிக்கும். அதிலும் நமது சமயம் தமிழிலேயே தோன்றித் தமிழை வளர்த்ததாகும். நமது சமய நெறி, பிறமொழியிலிருந்து வந்ததன்று. ஆதலால் தமிழ் மொழியில் வழிபாடு என்பது ஒரு “வழி பாட்டியக்கம்” என்பதை மறந்துவிடக் கூடாது.
சாதிகளற்ற சமுதாய அமைப்பு
நமது சமயம் தீண்டாமையினாலும் சாதி வேற்றுமைகளாலும் உள்ளீடழிந்து வருகிறது. இவ்விரண்டும் தீமைகளிலுமிருந்து முற்றாக நமது சமுதாயம் விடுதலை பெற்றால் தான் நமக்கு எதிர்காலமுண்டு. பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை, சாதி வேற்றுமைகள் பாராட்டுவது நியாயமுமன்று; நீதியுமன்று. அப்பரடிகள் முதலாக வள்ளலார் ஈறாகச் சாதிவேற்றுமைகளை எதிர்த்துப் போராடியும் நாம் இன்னும் சாதிகளைவிடத் தயாராக இல்லை. ‘சாதி வேற்றுமைகள் பாராட்டுதல் தீது’ என்பதை எடுத்துக்காட்டச் சிவபெருமான் திட்டமிட்டுச் சுந்தரர் திருமணங்களை நிகழ்த்தி வைத்திருந்தும் நாம் அதைப் பின்பற்ற மறுக்கிறோம். நம்மிடமுள்ள சாதி வேற்றுமைகள்தான் மத மாற்றங்களுக்குக் காரணம். அதுமட்டுமன்று கோடானுகோடி மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து வாழ முடியாமல் தடை செய்கிறது; வலிமையை இழக்கச் செய்கிறது. ஆதலால் சாதி வேற்றுமைகளை அறவே அகற்றுங்கள்! அதுவே இனி வரும் சிறப்பான எதிர்காலத்திற்குரிய பணி.
வறுமையுற்றோர்க்கு வாழ்வளித்தல்
உலகில் பல்வேறு சமயவழிப்பட்ட சமுதாயங்களுக்குள் நமது சமுதாயத்தில்தான் வறுமை அதிகம். “பொன் வேண்டேன்; பொருள் வேண்டேன்” என்று பாடிய மாணிக்கவாசகர்கூட நல்குரவைத் “தொல்விடம்” என்று சித்திரிக்கிறார். இந்தத் தொல்விடத்தின் தொடக்கில் இன்று அல்லலுறுவோர் எத்தனை பேர்? திசைநோக்கித் தொழும் திருவேடங் கொண்டு வயிற்றுக்கு இரந்து நிற்போர் எத்தனைபேர்? ‘திருக் கோயில் திருவிழா என்றால் பிச்சைக்காரர்களைத் தானே பார்க்கிறோம்! ஏன் இந்த அவலநிலை? நமது சமயம் மனிதாபிமானம் இல்லாததா? அல்லது நமது சமய நிறுவனங்களுக்குத்தான் உடைமையில்லையா? நாம் தான் ஏழையா? நாம் கடவுள் நம்பிக்கை, சடங்கு என்ற பேரில் இதை வற்றச் செய்து விட்டோம்.
படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்கஃ தாமே.
என்று திருமூலர் காட்டிய திருநெறி, நம்முடைய சமயத்தில் நடைமுறையில் இல்லை.
நாம் கடவுளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்! ஆனால் மனிதனுக்கு எதையும் செய்யத் தயாராக இல்லை. இந்த அவலநிலை மாறவேண்டும். கடவுளுக்கு எளிமையான முறையில் வழிபாடு செய்யவேண்டும். “யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை” என்ற பெரு நெறியும், உள்ளக் கோயில் வழிபாடும் பெருகி வளர வேண்டும். கடவுள் வழிபாட்டின்பேரால் காசுகளை வீணாக்குவது தேவையில்லாதது. சமய நிறுவனங்களின் பொருள்களும், சமுதாயத்தின் சேமிப்புப் பொருள்களும் நமது சமுதாயத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படும் வகையில் திட்டமிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இனி ஒழுங்குபடுத்தப்பட்ட சமய இயக்கமும் முறைப் படுத்தப்பெற்ற சமய அறமும்தான் பாதுகாப்பளிக்கும் என்பதை நினைவிற் கொள்க!
சமயநெறியாளர் சிந்தனைக்கு
இன்றையச் சமுதாய அமைப்பு, வேற்றுமைகள் நிறைந்ததாக இருக்கிறது; பிணக்கும் பகையுமுடையதாக இருக்கிறது; உடையாரும் இல்லாருமாக மாறுபட்டு இயங்குகிறது. இவற்றின் காரணமாகச் சிக்கல்களும் ஏராளம்! இன்றையச் சமுதாயம் ஒட்டுமொத்தமாகச் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கிறது. இந்தச் சிக்கல்கள் எதனால் தோன்றின? யாரால் தோன்றின? இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு எத்துறைக்கு இருக்கிறது? என்று வினவின் இன்றைக்கு உள்ளவாறு உணர்ந்து விடை சொல்வார் அரிது. ஒவ்வொரு துறையினரும் மற்ற துறையினர்மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளவே முயற்சி செய்வர். ஆனால் இந்த வினாவுக்குரிய விடையை ஐயத்துக்கிடமின்றி “Every political Question is becoming a social question, and every social question is becoming a religious question” என்று R.T. Ely என்பவர் கூறுகிறார். அதாவது இன்றைக்கு எந்தப் பிரச்சனையை எடுத்துக்கொண்டாலும் சமய நெறியாளர்கள் அது அரசியல் பிரச்சனை என்று கூறிவிடுகிறார்கள். அங்ஙனம் அவர்கள் கூறிவிடுகிறார்களே யன்றி, அந்தப் பிரச்சனையிலிருந்து, அவர்கள் முற்றும் ஒதுங்கி விடவுமில்லை. மறைமுகமாக மீண்டும் சமுதாயச் சிக்கல்களுக்குரிய செய்திகளைப் பேசத்தான் செய்கின்றனர்; வற்புறுத்தத் தான் செய்கின்றனர். அதற்கேற்றவாறு உவமைகளையும் அவர்கள் தேடிக் கண்டு பிடிக்கத்தான் செய்கின்றனர். உண்மையாகச் சொல்லப்போனால் அரசியல் என்பது ஒரு வேலி, ஒரு பாதுகாப்பு. அதுவும் சமயநெறிகள் வகுத்துக் காட்டிய வாழ்க்கை நியதிகள். நீதிநெறிகள் மக்கள் மன்றத்தில் நடைமுறைகள் மீறப்பட்டபொழுது-சமயம் மக்களுடைய உணர்வுகளின்மீது இருந்த பிடிப்பை இழந்த பொழுது எதிர்மறையால் ஒதுக்கும் வகையில் அதே நியதியை, நீதியைக் காப்பாற்றத்தான் அரசியல் தோன்றியது. இன்றையச் சமுதாயத்தின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை முறைபிறழ்ந்த நெறியல்லா நெறியினை நெறியெனக் காட்டும் நெறிப் பிறழ்வுகள்தாம் என்பதை நாம் உணர்ந்தேயாக வேண்டும்.
இத்துறையில் 'ஊழ்' முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. நாம் அதை மறுக்கவில்லை. ஆயினும் ஊழ் என்பது எது? அதன் எல்லை எது? எந்த வகைக் குற்றத்திற்கு ஊழைக் காரணம் காட்டுவது? என்றெல்லாம் ஆராய வேண்டாமா? அவர்கள் கூறுகிறபடி “எல்லாம் ஊழினாலேயே நடக்கிறது” என்று கொள்ளுங்கள்! தீயூழினால் அல்லற்படுவாருக்கு உதவி செய்யாது போனால் மற்றவர்தம் தீயூழ் எப்படி நல்லூழாக மாறும்? நல்லூழ் முதிர்ந்து எப்போது இருவினையொப்பாக உருப்பெறும்? தீயூழும் நல்லூழும் நோயும் மருந்தும்போல் - உடன்நிகழ்வன அல்லவா? இந்த விளக்கத்தை இப்போது சொல்லிக்கொண்டி ருக்கிறோமா? நடைமுறைப்படுத்துகிறோமோ? ஆதலால் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் சமய நெறியாளர்கள் சிந்தனை செய்யவேண்டும். இத்துறையில் கச்சியப்ப சிவாசாரியார் அருளிய பாடல் ஒன்றை இங்கே நினைவுகூர்தல் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்:வான்மழை வழாது பெய்க;
மலிவளம் சுரக்க; மன்னன்
கோன்முறை அரசு செய்க;
குறைவிலாது உயிர்கள் வாழ்க;
நான்மறை அறங்கள் ஓங்க;
நற்றவம் வேள்வி மல்க!
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.
இத் திருப்பாடல் சமுதாயத்தின் அனைத்துத் துறைகளையும் தழுவியதாக அமையவில்லையா? ஒன்றிலிருந்து ஒன்றாக விளைந்து சமயம்-நீதி என்ற பெருவாழ்வில் சென்று முடியவில்லையா? நாள்தோறும் இந்த வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பெறுகிறது. ஆனால், “குறைவிலாது உயிர்கள் வாழ்க” என்பதன் பொருள் நமது இதயத்தில் பதியவில்லை. வாழ்த்தினால் போதுமா? வாழ வைக்க வேண்டாமா? அன்பு - கூர்ந்து எண்ணுங்கள்! ஏன்? நமது திருஞானசம்பந்தர்,
வாழ்க அந்தணர்; வானவர் ஆனினம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்; அரன் நாமமே
சூழ்க; வையக மும்துயர் தீர்கவே!
என்று அருளிச் செய்த பாடலும் இதே குறிப்பினைத்தானே உணர்த்துகிறது! தீமைகள் அழிய வேண்டுமல்லவா? தீமைக்குக் காரணமாக இருக்கின்ற வேற்றுமை, பகை, வறுமை முதலியன அழியாமல் எங்ஙனம் தீமை ஆழும்: அன்பு கூர்ந்து இந்தப்பாடல்களுக்குச் செயலுருவம் கொடுக்கவும் வாழ்க்கையில் விளக்கம் காணவும் முயற்சிப்போமாக!