குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/நமது நிலையில் சமயம் சமுதாயம்
1
முன்னுரை
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டில் திசையனைத்தும் புகழும் திருநெல்வேலியில் தோன்றி, தாளாண்மையும் வேளாண்மையும் பெற்றுப் பெருந்தகையாளராய் விளங்கிய சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களை ஈன்று புறந்தந்த அன்னை சொர்ணாம்பாள் அறக்கட்டளைச் சொற்பொழிவினை நிகழ்த்தும் வாய்ப்பு நமக்கு ஊழின்வழி அமைந்தது. சொல்லின் செல்வர் பிள்ளை அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக் கடப்பாடும் உண்டு. பிள்ளை அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய் அமர்ந்து பணி செய்தபோது நாம் ஓடி விளையாடும் சிறு வயதினேம். அதுபோழ்து பழையசோறும் தயிரும் கூட்டி நம்மை உண்பித்த கரங்கள் பிள்ளை அவர்களின் கரங்கள். பிள்ளை அவர்கள் நம்மைத் திருக்குறள் - தேவாரம் ஒப்பிக்கச் சொல்லிக் காசுகள் வழங்குவார்கள். பிள்ளையவர்களின் கொடையால் விளக்கேற்றி வைக்கப் பெற்ற குடும்பங்கள் பல. அத்தகைய வள்ளன்மை மிக்குடைய பிள்ளை அவர்கள் நிறுவிய அறக்கட்டளையின் சார்பில் நாம் பேசுவது ஒரு சொற்பொழிவு மட்டுமன்று நன்றிக் கடப்பாடும் ஆகும்.
பிள்ளை அவர்கள் சிவநெறியிலும் செந்தமிழிலும் தோய்ந்த நெஞ்சினர். பிள்ளை அவர்களின் எழுத்தும் பேச்சும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் ஆக்கம் தந்தன. அத்தகு பிள்ளையவர்கள் ஏற்படுத்திய அறக்கட்டளைச் சொற்பொழிவை, நமது மொழி, சமயம், சமூகம் ஆகியனவற்றிற்குப் பயன்தரத்தக்க வகையில் நிகழ்த்துதல் நல்லது என்று கருதுகிறோம்.
மனித வாழ்க்கை
மனிதன் விலங்கு மல்லன்; கடவுளு மல்லன்: விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையை யடைந்து கடவுள் தன்மையை அடைய முயலும் ஒரு தோற்றம் ஆவான் அவன், மனித வடிவத்தில் பிறக்கின்றான். ஆனால், அவன் முயன்றே மனிதத் தன்மையை அடைந்து அவ்வழி இறைமைநிலை எய்துகின்றான். இயல்பாக மனித வாழ்க்கை குறையுடையது. குறையினின்றும் நீங்கி நிறை பெறலே வாழ்க்கை. குறை நீக்கத்திற்கும் நிறைநலம் பெறுதற்கும் சமயம் இன்றியமையாதது. சமயம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதாவது, மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனம்.
சமயத்தின் தேவையும் பயனும்
குறையுடைய மனிதனை நிறையுடையவனாக்க ஓரளவு கல்வி துணைசெய்யும். ஆனால், முழுமையாகத் துணை செய்யக் கல்வியால் இயலாது. “எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை”[1] என்பார் தாயுமானார். “கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்[2] என்பார் மாணிக்கவாசகர். இதனால் கல்வி தீது என்றும் கற்றலில் பயனில்லை என்றும் பொருள் கொள்ளற்க, “கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன்”[3] என்றார் திருஞானசம்பந்தர். கல்வியின் பயன் அறிவு: அறிவின் ஆக்கம் அருள். கல்வியின் பயனாகிய அறிவை நாடாமல், அருளைப் பெறாமல் “கற்றுள்ளோம்” என்று தருக்குதல் கூடாது. கற்ற நூற்கருத்தினை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் பொழுது அறிவு தோன்றுகிறது. அந்த அறிவு குறை நீக்கத்திற்குத் துணை செய்யும். ஆனால் அதுவும் முழுமையாகத் துணை செய்ய இயலாது. என்? அறிவு, வளரும் தன்மையது. “அறிதோறு அறியாமை”[4] என்பார் திருவள்ளுவர். ஒரு குறை நிறையைத் தர இயலாது. நிறைநலம் சான்ற ஒன்றுதான் குறை நீக்கத்திற்குத் துணை செய்ய முடியும்; நிறை நலத்தைத் தரமுடியும். குறைவிலா நிறைவாகக் கோதிலா அமுதாக இருந்தருளும் இறைவன்தான் உயிர்களின் குறை நீக்கத்திற்கும் நிறைநலப் பேற்றுக்கும் துணை செய்ய முடியும். குறை நீங்காத வரையில் துன்பம் நீங்காது; இன்பம் சேராது. இன்ப விழைவுடைய உயிரின் குறை நீக்கத்திற்கு நிறைநலப் பேற்றுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது சமயம்.
சமயம் மனிதரை நெறிப்படுத்துவது முறைப்படுத்துவது. சமயம் ஒரு தூய்மையான வாழ்க்கை முறை சமய வாழ்க்கையில் புலன்கள் தூய்மையடையும்; பொறிகள் இன்ப வைப்புக்களாக மாறும்; இதயம் விரியும்; ஈர அன்பு பெருகி வளரும்; வேறுபாடுகள் மறையும் ஒருமை தோன்றும்; ஓருலகம் மலரும்; இதுவே சமயத்தின் பயன்.
வேறுபடு சமயங்கள்
இங்ஙனம் உயர்ந்த வாழ்க்கை முறையைக் காட்டும் சமயங்கள் தம்முள் மாறுபடுவது ஏன்? மாறுபாடு மட்டுமன்றி முரண்பாடுகளும் ஏன்? எல்லை கடந்த நிலையில் சமயப் பூசல்கள் வளர்ந்து, மனித உலகத்திற்குத் தீமை செய்வானேன்? நியாயமான கேள்விகள்! சமயப் பூசல்கள் சமயத்திற்காக நிகழ்ந்தன அல்ல; நிகழ்வன அல்ல. உலகியல் நலன்களைக் காத்துக் கொள்ள விரும்பும் ஆடையில்லாச் சுயநலப் பிறவிகள், மனித உருவில் நடமாடிய காட்டு விலங்குகள், சமயத்தின் பெயரால் பூசல்களை வளர்த்தன; வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இச்சமயப் பூசல்கள் நிகழ்த்துவோருக்கும் உண்மையான சமய நெறிக்கும் உண்மையில் தொடர்பே இல்லை; இருத்தலும் இயலாது. சமய வேறுபாடுகள் இயல்பானவை. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில், வாழ்ந்த மானிட சாதியின் அனுபவத்தில், ஞானிகளின் உணர்வில் சமய நெறிகள் முகிழ்ந்தன. நிலத்தின் காரணமாகவும், காலத்தின் காரணமாகவும் உற்ற அனுபவங்களின் வாயிலாகவும் அவை தம்முள் மாறுபடுகின்றன. ஏன்? பல சமய நெறிகள் அடிப்படைக் கொள்கையில் முரண்படுவதில்லை. நடைமுறைகளில்தான் மாறுபாடு. இஃது இன்றைய உலகத்தின் பெரும்பான்மையான சமயங்களுக்குப் பொருந்தும். உண்மையான உள்ளுணர்வுடன் நோக்கினால் வேறுபாடு தெரியாது; இல்லை! வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதுதான் விழுமிய பண்பு.
வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குயரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியின் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா[5]
என்றார் தாயுமானார்.
வணங்கும்துறைகள் பலபல வாக்கி”[6]
என்றார் நம்மாழ்வார்.
தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி![7]
தமிழர் சமயம்
தமிழினம் காலத்தால் முந்தித்தோன்றிய மூத்த இனம்; இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பேசும் மொழிக்கு இலக்கணம் கண்ட இனம்; உலகில் எல்லா மொழிகளுக்கும் இலக்கணம் உண்டு. ஆனால் தமிழினம் மக்களின் வாழ்க்கை நெறிக்கும் இலக்கணம் கண்டது. தமிழினத்தின் சிந்தனை உயர்வுக்கு, பண்பாட்டு ஆர்வத்திற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள். தமிழினத்தின் வாழ்வியற் செப்பம் காலங்கடந்தது. வரலாற்றாசிரியர்களின் வரையறைகளைக் கடந்தது. இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வாழ்க்கை நியதியைத் தமிழினம் ஆட்சிகளின் மூலம் பெறவில்லை; அச்சுறுத்தல் மூலம் பெறவில்லை. அந்தப் பண்பாடு இயல்பான படிமுறை வளர்ச்சியாகும். பழந்தமிழ் இலக்கணங்களும் சங்க இலக்கியங்களும் வாழ்க்கையில் தோன்றியவை வாழ்க்கை அனுபவத்தில் முகிழ்த்தவை. அவை சுற்றிச்சுற்றி வந்து வாழ்க்கையையே நெறிமுறைப்படுத்துகின்றன. நெறி நின்றோர் புகழப்படுகின்றனர். வாழ்வியலின் வாய்மைகள் இலக்கியச் சுவையுடன் எடுத்துக்காட்டப் பெறுகின்றன. ஆயினும், வாழ்வியலை விஞ்சிய சுவையில்லை. தமிழர் அறம் தழிஇய சமயநெறி நிற்றலை இயல்பாகவே மேற்கொண்டனர். அது யாரிடமிருந்தும் கற்றுக்கொண்டதில்லை. ஏன் ? ஐம்பூதங்களை வணங்கியவர்களை அவைகளுக்கு அப்பாலும் இறைவனுண்டு என்று நெறிப்படுத்தியவர்களே தமிழர்கள்தாம்.
சங்க காலத்தில் தமிழினத்தின் வாழ்வில் சமயம் ஒரு பகுதியாக இருந்ததில்லை, சமயம் வாழ்க்கை முழுவதும் படர்ந்து கால் கொண்டிருந்தது. அதனால், பக்தி இயக்கங்கள் இல்லை; பக்தியில் தோன்றிய இலக்கியங்கள் மிகுதியாக இல்லை. சிலர் சங்ககாலத்தில் சமயம் முதன்மைப் படுத்தப்பட்டதாக இல்லை என்பர்; அது தவறு. பக்தி இலக்கியக் காலத்தைவிடச் சங்க இலக்கியக் காலத்தில்தான் உண்மையான சமயமிருந்தது என்று சொல்லவேண்டும்.
என்ற சொற்றொடர்கள் சங்க காலத்துச் சமய உணர்வை வெளிப்படுத்துவன. தமிழர் சமயம் வாழ்க்கையில் முகிழ்த்தது. ஆதலால் அதில் கற்பனை இல்லை; அதிசயங்கள் இல்லை; அற்புதங்கள் இல்லை. நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியதாக அமைந்திருக்கும் பெருமை நமது சமயத்திற்கு உண்டு.
தமிழர் சமயத்தைச் சிறப்பித்தோர்
தமிழகத்தில் நிலவும் அறுவகைச் சமயங்களின் வளர்ச்சியிலும் தமிழர்க்குப் பங்குண்டு. தமிழர்கள் முறையே சிவபெருமானை, திருமாலை, முருகனை வழிபடும் பேற்றினைப் பெற்றவர்கள். ஆயினும், தத்துவ அடிப்படையில் அவர்கள் சமயம் “சித்தாந்தம்” என்று அழைக்கப்பெறும். டாக்டர் ஜி.யூ போப், “தமிழரின் அறிவில் முகிழ்த்த ஒப்பற்ற சமயநெறி சித்தாந்தம்” என்று பாராட்டுவார். அதுபோலவே கெளடி என்னும் பாதிரித் துரைமகனாரும் “தமிழரின் பேரறிவில் தோன்றிய நெறியே சித்தாந்தச் செந்நெறி” என்பார்.
- வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்
என்று வடநூல் மரபு பாராட்டும்.
தமிழர் சமயத்தின் கொள்கைச் சிறப்புகள்
தமிழர் சமய நெறியாகிய சித்தாந்தச் சமயம் அறிவாராய்ச்சிகளுக்கு இடம் கொடுக்கத்தக்கது. முற்றாக அது நம்பிக்கையின் வழிபட்டதன்று. ‘சித்தாந்தம்’ என்ற சொல்லுக்கே பொருள் ‘முடிந்த முடிபு’ என்பது. அறிவாராய்ச்சியில் வினாக்களைக் கேட்டுக்கேட்டு மெய்யுணர்வில் வளர்ந்துவளர்ந்து செம்பொருள் கண்டார் உணர்த்திய செந்நெறி-அது. அப்பாடிகள்,
............. ஆறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன.....[11]
என்பார். தமிழர் சமயம் அறிவார்ந்த உண்மைகளுக்கு மாறுபட்டதன்று. ஆனாலும் அறிவு எல்லையில் மட்டும் நின்று ஆராயத்தக்கதுமன்று. ஆழ்ந்த உண்மைகள் அனுபவத்திற்கே யுரியன. சித்தாந்தச் சமயம் ஞான நெறியாகும்.
சித்தாந்தச் சமயத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் விரும்பி ஏற்றுக் கொள்ளத்தக்கன. சித்தாந்தச் சமயம் உணர்த்தும் உண்மையில் அல்லது நெறிகளில் யாதொன்றும் அறியத்தக்கது அன்று; அல்லது உணரத்தக்கது அன்று என்று கூறி ஒதுக்க இயலாது. சித்தாந்தச் சமயம் தோன்றிய காலத்தில் உண்மையை உணர்த்தும் நூல்கள் பொதுவாக அமைந்திருந்தன. பின், சித்தாந்தச் சமய அனுபவத்தின் விளைவுகளாகவே திருமுறைகள் தோன்றின. அதன்பின், தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் உலாவத் தொடங்கிய பொழுது சித்தாந்தச் செந்நெறியின் உண்மைகளை அரண்செய்து பாதுகாக்கும் வகையில் மெய்கண்ட நூல்கள் தோன்றின. இச் சமயத்திற்கு இருக்கும் சிறப்பான கொள்கை முப்பொருள் உண்மை. அதாவது இறை, உயிர், தளை என்ற மூன்று பொருள்கள். அவை என்றும் உள்ளவை எனபது ஒரு சிறந்த கொள்கை, உலகத்தில் கடவுளை ஒத்துக்கொள்ளும் எல்லாச் சமயங்களும் கடவுள் படைக்கப்படாத பொருள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றன; ஆனால், கடவுளைப் “படைப்பாளி"யாக்குகின்றன.
நமது சமயம், கடவுளைப் போலவே உயிர்களும் தோன்றுவனவுமல்ல அழிவனவுமல்ல என்று கூறும். உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டன என்றால் உயிர்களின் குறைகளுக்குப் பொறுப்பு யார்? என்பது சிக்கலான கேள்வி. மேலும் குறையிலிருந்துதான் நிறைதோன்றலாம். இது படிமுறை வளர்ச்சி. ஆனால், நிறையிலிருந்து குறை தோன்றும் என்பதும் அல்லது நிறையின் படைப்பு குறையுடையதா யிருக்கும் என்பதும் அறிவாராய்ச்சிக்கு இசைந்து வராத ஒன்று. “உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை; அவை என்றும் உள்ளவை” என்பது அறிவாராய்ச்சிக்கு இசைந்த கருத்து. பிறப்புக்குப் பொருள் தரும் கருத்து. அதுபோலவே “இறைவனுடைய பிரதிபிம்பமே உயிர்கள்” என்ற கொள்கையும் நம்பிகைக்குரியதன்று. அந்தக் கொள்கையிலும் விடையளிக்க முடியாத வினாக்கள் அடுக்கடுக்காகத் தோன்றுகின்றன. ஆற்றுத் தண்ணீருக்கும் குளத்துத் தண்ணீருக்கும் சுவையில் வேறுபாடு ஏது? அண்ட வெளிக் காற்றுக்கும் குடத்துள் காற்றுக்கும் குணத்தில் வேறுபாடு ஏது? இக்கொள்கையும் அறிவாராய்ச்சிக்கு இசைந்து வராததே, உயிர்கள் என்றும் உள்ளவை; அவை அறியும் இயல்பின; அறிவு மயமாக மாறும் தகுதியுடையன. ஆயினும் இயற்கையாக உயிர்களின் அறியும் முயற்சியைத் தடுத்து அறியாமைப் படுத்தும் ஆணவத்தோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. “உயிர்கள் அறியாமையினின்றும் விலகி அறிவைப்பெற, ஞானத்தைப்பெறத் துணை செய்யும் ஆசிரியன் கடவுள்” என்பது சித்தாந்தச் செந்நெறியின் முழுநிறைக் கொள்கை. இக்கொள்கை அனேகமாக மாமுனிவர் மார்க்ஸ் போன்றவர் விவாதங்களோடு ஒத்து நிற்கும் தகுதியுடையது. பழமைக்கும் புதுமைக்கும் ஏற்ற நெறி.
தமிழர் தம்முடைய மெய்யுணர்வை இயற்கையோடிசைந்த வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டனர். நம்முடைய வாழ்வியல் முறை, இயற்கைக்கு முரண்படுவதுமன்று; இயற்கைக்கு அடிமையாதலும் அன்று. இஃது ஒரு தெளிவான வாழ்வியல் முறை. மேலும், நமது சமய சமுதாய வாழ்வியல் ஊற்றுப் பெருக்கைப்போல் உள்ளுணர்வில் தேக்கமடையாமல் அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பெற்று வந்திருக்கிறது. காலத்திற்கிசைந்த வளர்ச்சியில்லாத சமுதாய அமைப்பிலேயே தேக்கம் ஏற்படும். அப்பொழுதுதான் பழைமை என்ற ஒன்று உருவாகும். பின் தேக்கத்தின் புழுக்கத்தால் சமுதாயம் துன்புறும்பொழுது புதுமைவேட்கை தோன்றும், ஆனால் தமிழ்ச் சமுதாய அமைப்பில் தேக்கம் ஏற்படச் சிந்தனையாளர்கள் அனுமதித்ததில்லை. நம்முடைய சமய நெறியிலும் சமுதாய அமைப்பிலும் பழங்காலத்திலிருந்து உயிர்ப்புள்ள சிந்தனை செயற்பட்டு வந்திருக்கிறது. அதனாலன்றோ மாணிக்கவாசகர்,
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே[12]
வாழ்வாங்கு வாழ்க
என்று திருக்குறள் வழி நடத்தும்.
வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்[13]
என்று அப்பரடிகளின் அருள்நூல் ஆற்றுப்படுத்தும்.
இயற்கையோடிசைந்த வாழ்வியல் நெறி
தமிழர் சமயம் வாழ்க்கையைப் புறக்கணிப்பதன்று. ஆனாலும் வாழ்க்கையில் ஆழ்ந்து கிடப்பதுமன்று. தமிழர் சமய வாழ்க்கை இன்பியல் வாழ்க்கையே. ‘வாழ்க்கை துன்பமானது’ என்ற கருத்து, பழங்காலத்தில் இருந்ததில்லை. ஒரோவழி உலகில் துன்பமாக இருந்தாலும் அதை இன்பமாக மாற்றவேண்டுமென்பதே பழந்தமிழர் கோட்பாடு.
ஓரில் நெய்தல் கறங்க வோரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே,[14]
என்ற பக்குடுக்கை நன்கணியார் பாடல் ஓர்ந்துணரத்தக்கது.
வாழ்க்கையை இன்பமயப்படுத்தும் பொருள்களைத் திருவருளாகவே நினைத்து பாராட்டுதல் நமது நூன்மரபு. “வாசமலரெலாம் ஆனாய் நீயே”[15] என்று இயற்கையையும், “பண்ணிடைத் தமிழொப்பாய்”[16] என்று கலையையும், “பழத்தினிற் சுவையொப்பாய்”[17] என்று சுவையையும், “ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ”[18] என்று மனை வாழ்க்கையையும் பாராட்டுவது அறிந்து ஓர்க.
சைவ-சமணப் போராட்டம்
பழங்காலத்தில், தமிழகச் சமய நெறியாளர்கள் பிறநெறியாளர்களோடு காழ்ப்புக்கொண்டு மோதியதில்லை. ஆயினும், பண்ணோடு தமிழும், இயற்கையோடிசைந்த வாழ்க்கையும், அகனைந்திணை ஒழுக்கமும் மாறுபடுமோ என்ற அச்சம் வந்தபொழுது இவற்றுக்கு எதிராகத் தமிழ் வழக்கிற்கு மாறாகப் புகுந்த அயல்வழக்கை எதிர்த்துத் தமிழ் வழக்கை நிலைநிறுத்த வேண்டியதாயிற்று. இந்தப் பணி சமயக்களத்திற் செய்யப்பெற்றாலும் அது முற்றாகச் சமயப் பணிமட்டுமன்று. அஃதொரு சிறந்த சமுதாயப் பணி, வழிவழி வந்த தமிழ் நாகரிகத்தை அாண்செய்து காப்பாற்றிய அருந்திறற் பணி,
இடையிற்புகுந்த தீண்டாமை
சமய வழிப்பட்ட தமிழர் சமுதாயத்தில் பிறப்பினால் அமைந்த சாதி வேறுபாடுகள் இருந்ததில்லை. தொழிலினால் அமைந்த வேறுபாடுகள் இருந்தன. ஆயினும் தமிழகத்தில் அயல் வழக்கு நுழைவதற்கு முன் தீண்டாமை இருந்ததில்லை. தீண்டாமை தமிழ்க்குடியில் இருந்த தீமையன்று இடையில் வந்தது. தீண்டாமை தமிழ்ச் சமுதாயத்தில் ஊடுருவிய காலந்தொட்டு அதனை அகற்ற அவ்வப்போது போராட்டம் நிகழ்ந்து வந்திருக்கிறது. ஆயினும் நலன்களின் அடிப்படையில் தீண்டாமை முற்றாக அகலவில்லை; முன்பு, உயர் சாதி மனப்பான்மையுடையவர்கள் மட்டுமே தீண்டாமை விலக்குக்கு எதிராக இருந்தார்கள். அண்மைக் காலத்தில் நல்லூழின்மையின் காராணமாக அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அரசியற் கட்சியினரும் தீண்டாமை நிலையாக இருக்கத்தக்க வகையில் செயற்பட்டு வருகின்றனர். தீண்டாமை நமது சமயத்திற்கு ஒரு கறை, நமது சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடு. தீண்டாமையை ஆசாரம் காட்டி நிலைநிறுத்த விரும்புவாரை அப்பரடிகள்,
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே[19]
என்ற பாடலால் இடித்துக் கூறுவார்.
சேக்கிழார், நந்தனார் வரலாற்றில் நந்தனாரைச் சிந்தை குளிரச் செவி குளிர ‘ஐயர்’ என்று பல தடவை போற்றுவது எண்ணத்தக்கது. அதுபோலவே வைணவத்தில் ‘உடையவர்’ என்றும் ‘எம்பிரானார்’ என்றும் போற்றப் பெறுபவராகிய இராமானுசர், இறைவனுடைய திருநாமத்தைக் குலம் கோத்திரம் நோக்காது எல்லோருக்கும் எடுத்துச் சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய புராணத்தில் திருஞான சம்பந்தர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர் உறவும், திருநீலநக்கர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர் உறவும் தீண்டாமை விலக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். நிகழ்ந்தது என்ன? இன்னமும் தீண்டாமை முற்றாக விலகவில்லை. தீண்டாமை விலக்குப் பணியைப் பாராளுமன்றத்தின் ஆணைகள் செய்த அளவுக்குக்கூட நமது வழிபடு கடவுளின் ஆணைகள் சமய உலகத்தில் செயற்படுத்தவில்லை. தீண்டாமை விலக்குப்பணியில் புகைவண்டி கண்ட அளவுக்குக்கூட வெற்றியை நமது சமய நிறுவனங்கள் அடையவில்லை; அடைய முயலவுமில்லை இது வேதனைக்குரிய செய்தி. தீண்டாமையை நமது சமயத்திலிருந்து அறவே அகற்றிக் கோடானுகோடி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றத் தவறி விடுவோமானால் நமது கடமையை நாம் செய்யத் தவறியவர்களாவோம். அவ்வழி நாம் அன்பையும் அருளையும் இழப்பதோடன்றி உலகியலையும் இழக்கின்றோம். இந்த இழப்புகளுக்கு ஆளாக்கப்படும் அடுத்த தலைமுறை நம்மைப் பழிதூற்றும். ஆதலால், நமது சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பில் அகத்திலும் புறத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் தீண்டாமையை அறவே அகற்றுவதையே தலையாய பணியாக மேற்கொள்ள வேண்டும். தீண்டாமை விலக்குப் பணிகளை இன்றைய மேட்டுக் குடியினரே எடுத்துக்கொள்ள வேண்டும். தீண்டாமை அரிசனங்களிடத்தில் இல்லை. அந்த மனப்பான்மை உயர்சாதியினரிடத்தில்தான் உள்ளது. அவர்கள் மனம்மாறி அரிசனச்சேரிகளுக்குச் சென்று தொண்டு புரிவதோடு நில்லாது அவர்களைத் தமது இல்லங்களுக்கு அழைத்து உடனிருந்து உண்டு கலந்து பேசிப் பழகுவதின் மூலம்தான் தீண்டாமை அகலும். இங்ஙனம் அரிசனச் சகோதரர்களும் உயர்சாதியினரொடு ஒன்றாகக் கலத்தற்குத் தங்களை வளர்த்துப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஒன்றே குலம்
நமது சமய வழிப்பட்ட சமுதாயத்தில் முன்னர்க் குறிப்பிட்டபடி பழங்காலத்தில் தொழில்வகைப்பட்ட பிரிவுகள் இருந்தன. ஆனால் அவைகளுக்கிடையில் வேற்றுமை யிருந்ததில்லை. தெளிவாகச் சொன்னால் பழங்காலத்தில் சாதிகள் இருந்ததில்லை. குல அமைப்பு முறைகளே இருந்துள்ளன. அவை வழிவழி அமைந்த குணச்சிறப்பு வழி அமைந்தவை. திருவள்ளுவர் ‘சாதி’ என்ற சொல்லை வழங்கினாரில்லை. ஆனால், குலத்தின் பெருமையைப் பலபடப் பேசுகின்றார். இன்று நம்முடைய சமய வழிப்பட்ட சமுதாயத்தை ஆட்சி செய்வது சாதிமுறையேயாம். மேலும், சமய வழிப்பட்ட சமுதாயத்தை ஊடுருவி அழித்து வருவது சாதி வேற்றுமையும் அவ்வழிப்பட்ட பகைமை உணர்ச்சியுமேயாம். ஒருவர் தம்மை இந்துவாகவோ சைவாாகவோ வைணவராகவோ இன்று எண்ணிப் பழகவில்லை. சாதி வழியில்தான் அவர் சிந்தனை வளர்கிறது; பற்று வளர்கிறது; பாசம் வளர்கிறது. இங்ஙனம் சாதி வேற்றுமை பாராட்டுகிறவர்களைக் கடிந்து கூறாத அறநூல் எதுவுமில்லை.
“சாதி குலம்பிறப்பெனும் சுழி”[20] என்று திருவாசகம் கூறும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”[21] என்று திருமந்திரம் கூறும். இங்குக் குலம் என்பது வழிபடும் தெய்வத்தை மையமாகக் கொண்டமைவது. எல்லோரும் அந்த உயர்ந்த குலத்தில் பிறவாமற் போனாலும் எல்லோரும் அந்தக் குலத்திற்குரிய வராக்கப்படவேண்டும் என்பதே உண்மை. அத்தகைய உயர்ந்த பணிகளைச் செய்யத்தானே சமய நிறுவனங்கள் தோன்றின? சாதி வேற்றுமையை அகற்றி நமது சமுதாயத்தை ஒன்றுபடுத்த வேண்டுமென்பது இறைவனின் திருவுள்ளம். ஆதலால்தான் இறைவன் தானே முன்னின்று சுந்தரர் வரலாற்றில் கலப்புத் திருமணங்களைச் செய்து வைக்கிறான். சுந்தரர் வரலாறு திட்டமிட்ட வரலாறு. அந்த வரலாறு கயிலையில் தோன்றி மண்ணில் நிகழ்கிறது. ஆதலால் சுந்தரர் வரலாற்றில் நிகழ்வன அனைத்தும் தற்செயலாக அமைந்தனவல்ல; சுந்தரர் மட்டும் விரும்பி மேற்கொண்டதும் அல்ல. நமையாளும் சிவபெருமான் விரும்பித் திட்டமிட்டு நிகழ்த்திய அருள் விளையாட்டே. ஆலால சுந்தரரை ஆதிசைவர் குலத்தில் பிறக்கவைத்து, ஆதிசைவரல்லாத குலத்தில் வளரவைத்து, கமலினி, அநிந்திதை எனும் மங்கையரை முறையே கணிகையர், வேளாளர் குலங்களில் பிறக்கவைத்துத் திருமணங்களை நிகழ்த்தி வைத்த திருவுள்ளக் குறிப்புத்தான் என்னே! அது மட்டுமன்று, பிறப்பின் வழிச் செய்யப் பெற்ற திருமணத்தை ஏற்பாடு செய்யும்வரை தடுத்து நிறுத்தாதிருந்து தக்க நேரத்தில் அத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதேன்? சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்ற உண்மையினை உலகுக்கு உணர்த்தத்தானே! அப்பூதியடிகள்-அப்பரடிகள் உறவு சாதி வேற்றுமையை அகற்றும் திருப்பணிக்கோர் எடுத்துக்காட்டு. ஆனால், யார் எதைச் செய்தாலென்ன? நம்மிடையேயுள்ள சாதி வேற்றுமை அகலாது போலத் தெரிகிறது. நம்முடைய சமய வழிப்பட்ட சமுதாயத்தில் சாதி வேற்றுமை அகன்றால்தான் அதற்கு எதிர்காலம் உண்டு. அப்பொழுதுதான் இந்து சமுதாயம் கடலெனச் சூழ்ந்து வாழும்; வளரும்.
செல்வத்துப்பயன்
நம் சமயம், செல்வமுடைமையை, அதன் பயனைக் கணித்து நோக்கிய பாங்கு மிக உயர்ந்த பாங்கு. அந்த வகையில் உலகத்தின் எந்தக் கருத்துக்கும் நம் சமயக்கருத்து தாழ்ந்ததன்று. மார்க்சின் சிந்தனைக்கும் நம் சமயச் சிந்தனைக்கும் கூட அடிப்படையில் முரண் இல்லை. ஆனால் கோட்பாடுகளில் மாறுபாடு உண்டு.
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே[22]
என்று புறநானூறு காட்டிய அறநெறி நினைந்து நினைந்து மகிழத்தக்கது. செல்வத்தைப் பெற்றவரே அச்செல்வத்தின் பயனைத் துய்த்தல் என்பது தமிழ் வழக்கன்று செல்வம், மற்றவர் துய்ப்பதற்கு வழங்கப்படவேண்டும் என்பது மரபு. அதுவே சைவத்தின் சீலம்; வைணவத்தின் வாழ்வியல் முறை. அதனாலன்றோ இறைவனுக்குரிய திருப்பெயர்களில் 'நீலகண்டம்’ என்ற திருப்பெயர் புகழுடையதாயிற்று. அமிழ்தத்தை மற்றவர் உண்ணத் தந்து, யாரும் உண்ண முடியாத நஞ்சினை உண்ட கருணையின் சீலமல்லவா நீலகண்டம்! ஒப்புரவு நெறியும் அதுவே. அதனலன்றோ இளங்கோவடிகள்,
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்[23]
என்று குறிப்பிடுகின்றார். உண்பித்து உண்பவனே வாழ்பவன், இங்ஙனம் உழைப்பினாலாய பொருளை மற்றவர்கள் ஆரத்துய்க்குமாறு வழங்குவது தவமேயனையது என்பதைப் பெரியபுராணம் உணர்த்துகிறது. இத்தகு தவத்தினைச் செய்வோர் நெஞ்சத்தில் இறைவன் எழுந்தருள்வான். இறைவன் ஓங்கி உயர்த்திப் பிடித்துள்ள கொடி ஆனேற்றுக் கொடி அவன் உவந்து எழுந்தருளி வருவதும் எருதேயாம். ஏன்? இந்த உலகில் கடுமையாக உழைக்கும் உயிர்க்குலத்தில் எருதே சிறப்புடையது. எருதுகளின் அயராத உழைப்பில் செந்நெல் விளைகிறது; செங்கரும்பு விளைகிறது. ஆனால் விளையும் சுவைமிக்க உணவுப் பொருள்களை எருதுகள் மனித குலத்திற்குக் கொடுத்துவிடுகின்றன. மாறாக அவை பெற்றுத் தின்பது சுவையற்ற வைக்கோலேயாம். இங்ஙனம், முறையாக உழைத்து, அந்த உழைப்பில் விளைந்த பயனை மற்றவர்க்குத் துய்க்க வழங்கும் பொருளே தவம். அத்தகு தவமுடையார் நெஞ்சிலே இறைவன் என்றும் எழுந்தருளியிருப்பான் என்பது இடபவாகனத்தின் தத்துவம். இந்த உயர்ந்த தத்துவம் கொள்கை, சமய வாழ்க்கையில் இன்று அமையவில்லை. மாறாக, வெள்ளியில், தங்கத்தில் இடப வாகனங்கள் வந்துவிட்டன. செல்வத்தை வழங்கி வாழும் வாழ்வியலைச் சார்ந்த பொருளாதாரக் கொள்கையில் ‘தர்மகர்த்தா’ கொள்கை என்பது ஒன்று. அண்ணல் காந்தியடிகளுக்கு இது பிடித்தமான கொள்கை, இந்தத் தர்மகர்த்தா கொள்கை பிறநாடுகளில் கருக்கொண்டது பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளிலேயாம். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரடிகள் இந்தத் தர்மகர்த்தா கொள்கையை ஏற்று நடைமுறைப்படுத்த அன்பு வழியிலும் அச்சுறுத்தியும் நம்மை வழி நடத்துகின்றார். அப்பரடிகள் கொள்கைப்படி செல்வத்தை உடைமையாகப் பெற்றவனுக்குத் தான் மட்டுமே துய்க்கும் உரிமை இல்லை; ஏரிகளுக்குத் தண்ணீரைத் துய்க்கும் உரிமை இல்லை; தன்னிடத்தில் உள்ள தண்ணீரைக் காத்து கழனிகளுக்கு வழங்கும் உரிமையே உண்டு. அதனால் இறைவன் “ஏரி நிறைந்தனைய செல்வ”னாகக் காட்சியளிக்கின்றான். செல்வத்தை ஒருவனிடத்தில் இறைவன் இட்டு வைத்திருப்பது இல்லாதவர்களுக்குக் கொடுக்கத்தான். தமிழ் வழக்கில் செல்வத்திற்கு “மருந்து” என்று ஒரு பெயருண்டு. செல்வம் வறுமைப் பிணிக்கு மருந்து. மருந்தை வைத்திருப்பவரே மருந்தை உண்பதில்லை; உண்ணவும் கூடாது; நோயுடையாரே மருந்தை உண்ண வேண்டும்.
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்
பரப்நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே[24]
என்ற பாடலால் அப்பரடிகள் உணர்த்தும் அழகான தத்துவமே, பொருளியல் நெறியே, நமது ஆன்றோர் நெறி செல்வத்தைத் திரட்ட எண்ணும் நோக்கத்திற்கு அடிப்படை தாம் வாழ்வதற்காக மட்டுமல்ல; வழங்கி வாழ்விப்பதற்காகவே!
இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சும் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்....[25]
என்று இந்த அருட்டன்மையை அகநானூறு சிறப்பிக்கும். ஆதலால் நம்முடைய சமுதாயத்தில் ஏழை எளியரென்ற செல்வக் குறியீட்டுமுறை பண்டு இருந்ததில்லை. நமது சமய வழிப்பட்ட சமுதாயப் பணிகள் அறநெறியாகவே கருதப்பெற்றன. சிலர் இந்த உயர்ந்த கொள்கைக்கு மாறாக ஏழ்மையென்பது தீவினையின்பாற் பட்டது; அதை அவர் துய்த்துத்தான் ஆகவேண்டுமென்பர். அது தத்துவ இயலுக்கு ஒவ்வாத நெறிமுறைக்கு மாறுபட்ட சிந்தனை. ஒருவர் தீவினையால் அல்லலுறுவதைக் கண்டும் அதை அப்போதே மாற்ற முனையும் நல்லெண்ணம் பெறாததும் ஒருவகையில் தீயூழே. உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டும் அதனை மாற்றாது செல்வத்தைத் தானே துய்த்து இன்பமுடன் வாழ்தல் தீவினைக்கும் ஆளாக்கும் என்பதை மறந்துவிடுதல் கூடாது. ஆதலால், நமது சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பு ஒப்புரவை உயிர்நாடியாகக் கொண்டது: ஒப்புரவை ஒழுக்க நெறியாகக் கொண்டது. ஒப்புரவே உயர் தவமுமாகும். அந்த ஒப்புரவு நெறி-உயர் வேளாண்மை நெறி நமது வாழ்க்கையில் படரவேண்டும்; அவ்வழி நமது சமுதாயம் வளரவேண்டும்.
வாழ்க்கையே சமயம்
மீனுக்குத் தண்ணீர் இன்றியமையாதது. மீனுக்கும் தண்ணீருக்கும் உள்ள உறவு ஒரோவழி அமைந்ததன்று: பிரிக்க முடியாதது; நிலையானது. அதுபோலத்தான் மனிதனுக்குச் சமயமும் அமையவேண்டும். இன்று நமது வாழ்க்கையில் சமயம் ஒரு பகுதியாக அமைந்துவிட்டது. சமய வாழ்க்கையைப் பெறுதற்குரியதாகிய வழிபாடு, பிரார்த்தனை முறை போன்றவைகள் கடவுளுக்கு மனிதன் வழங்கும் பயன் நோக்கிய கைமாறு (பிரதிப் பிரயோசனம்) போல வளர்ந்து விட்டது. முன்னர்க் குறிப்பிட்டதுபோலச் சமயம் ஒரு தத்துவம் மட்டுமன்று கொள்கை மட்டுமன்று: அதுவே ஒரு வாழ்க்கைமுறை. வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் சமயம் தழுவிக் கலக்கவேண்டும். அன்றே அறியாமை அகலும்; வேற்றுமை விலகும்; அன்பியல் தோன்றும்; அருள் மணம் கமழும். வாழ்க்கை முழுவதும் சமய உணர்வு மயமாக்கிக் கொள்ளாமல் தன்னல உணர்வுடன் வழி பாட்டினை மட்டும் செய்யும் மனிதரைப் “பொக்க மிக்கவர்” என்று அப்பரடிகள் வெறுத்துப் பேசுகிறார். “பொக்க மிக்கவர்” என்பதற்கு உள்ளீடு இல்லாத மனிதர் என்பது பொருள்.
நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவும் நீருங் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே[26]
என்பது அப்பரடிகள் வாக்கு.
துய்ப்பில் துறவே தூய்மை நெறி
தமிழர் சமய வழிப்பட்ட சமுதாய வாழ்க்கையில், ‘இல்லறம்’, ‘துறவறம்’ என்ற பெரிய வேறுபாடு இருந்ததில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர். இவற்றில் எது உயர்ந்தது; எது தாழ்ந்தது என்ற விவாதத்திற்கிடமில்லை. அதுமட்டுமன்று. வலிந்து மேற்கொள்ளும் துறவைத் தமிழர் நெறி ஏற்றுக் கொண்டதில்லை. நமது சமயம் துறவின் மூலம்தான் திருவருளைப் பெறமுடியும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் துய்ப்பு நெறியில் தூய்மையை வற்புறுத்துகிறது. பச்சைத் தன்னலத்தோடு எதனை எவ்வழித் துய்த்தாலும் பாவமே அது தூய்மையில்லாத் துய்ப்பு. அங்ஙனம் துய்ப்பார் அமரரே யானாலும் “தக்கன் வேள்வித் தகர்தின்று” என்பது போல ஏசப்படுவர். நால்வரில் சுந்தரர் துய்ப்பு நெறியில் நின்றவர். ஆனால், அவர் வாழ்ந்து காட்டிய நெறி மிகச் சிறந்த அருள்நெறி. சுந்தரர் தாம் சங்கிலியாரோடு கூடி வாழ்ந்தபோதும் இறைவன் திருவடியை மறக்காமலிருந்ததாகப் பாடுகின்றார்:
கட்ட னேன்பிறந் தேனுனக் காளாய்க்
காதற் சங்கிலி காரண மாக
எட்டி வால்திக முந்திரு மூர்த்தி
என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே[27]
என்பது சுந்தரர் திருவாக்கு சேக்கிழார் சுந்தரர் வாழ்க்கையினைப் போற்றிப் பாராட்டும்வகை சிந்திக்கத்தக்கது மட்டுமன்று; வையகத்தோர் வாழ்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முறையும் ஆகும்.
தென்னாவ லுரர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்[28]
என்பது சேக்கிழார் வாக்கு.
பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற
முளையாது மாயையென் முந்தீபற[29]
என்று திருவுந்தியார் கூறும்.
ஆதலால் வாழ்க்கை மாயம் என்பதும் வாழ்க்கை துன்பம் என்பதும் நம் சமயக் கொள்கையன்று. வாழ்க்கையே தவமாக்கி இன்ப அன்பில் கலத்தலே நமது சமயநெறி காட்டும் வாழ்க்கைமுறை.
கடவுள் உண்டா? இல்லையா?
நம் சமயநெறி “கடவுள் உண்டு” என்ற கொள்கையில் திண்மையுடையது. நம் சமயக் கொள்கைக்கு நல்ல சாத்திர வடிவம் கொடுத்த மெய்கண்டார் கடவுளுண்மையைத் தெளிவாக விளக்குகின்றார். பொதுவாகக் கடவுள் உண்டா? இல்லையா? என்ற விவாதம் விரும்பத்தக்கதன்று. “கடவுள் உண்டு” என்ற நம்பிக்கையில் கால் கொண்ட கொள்கையினர் வழிபாட்டு அனுபவத்தில் ஈடுபடுதல் வேண்டும். “கடவுள் இல்லை” யென்னும் கொள்கையினர் அவர்கள் நம்புகின்ற அறிவில் வளர்ந்து, புதிய அனுபவங்களைப் படைக்க வேண்டும். அதை விட்டு விட்டுக் ‘கடவுள் இல்லை’ என்று சொல்வதினால் மட்டும் ஆகக்கூடிய தொன்றுமில்லை. கடவுள் உண்மையை அறிந்து அனுபவிப்பதற்கு வளர்ந்த அறிவும் அனுபவமும் தேவை. மனித குலத்தின் அறிவோ இன்னமும் பிள்ளைமைப் பருவத்திலேயே யிருக்கிறது. அது முழுமை அடைந்து விடவில்லை. வளர்ந்துள்ள இந்த அறிவு இன்னும் பொருள்களை ஆராய்ந்தே முடிந்தபாடில்லை. இறைவன் பொருளுக்குப் பொருளாக இருப்பவன். அணுக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலேயே ஆயிரம் முரண்பட்ட கருத்துக்கள்! இறைவன் அணுவில் அணுவாக இருக்கிறான் என்பது நமது ஆன்றோர் கண்ட உண்மை.
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்ததேய்த் தொன்றாந்
திருப்பெருந் துறையுறை சிவனே[30]
என்றும்,
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க.[31]
என்றும்,
நூலுனர் வுணரா துண்ணியோன் காண்க[32]
என்றும் திருவாசகம் பேசும். எனவே அறிவு வளர்ந்து கொண்டிருக்கிறது; அது வளரட்டும். அப்படி வளர்ந்து வரும் அறிவை நமது சமயநெறி என்றும் மறப்பதில்லை. இனிமேலும் மறுக்காது. மிகஉயர்ந்த சார்பற்ற அறிவு, நோக்கமற்ற அன்பில் ஒன்றாகிக் கலக்கும்பொழுதே கடவுளுண்மை காட்சிக்கு வரும் அனுபவத்திற்கு வரும். அது நம்மிலிருந்து வெகு தொலைவிலிருக்கிற இலட்சியம்; சில தகவல்களைத் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுகிற கல்வியறிவும், இயற்கையின் நுட்பங்களை அறிந்து கொள்ளப் பயன்படுகிற விஞ்ஞான அறிவும் அறிவின் தொடக்க நிலை வாயில்கள். இந்த எல்லையிலேயே நின்று கொண்டு இதேதான் அறிவு என்று கடவுளை மறுத்தலிற் பயனில்லை. ஆதலால் கடவுள் உண்டு என்று நம்பி வழிபாடு செய்வது முறையான அறிவு வளர்ச்சிக்கு, நிறைவான அறிவு என்று பாராட்டப்படுகின்ற ஞானத்தைப் பெறுவதற்குத் துணை செய்யும். உயிர், குறைவற்ற-நிறைவான-நன்மை வழிப்பட்ட அன்பின் மயமாதல் முழுமையான அறிவுநிலை; அதற்கே “ஞானநிலை” என்று பெயர். இந்த ஞானம் வந்தாலன்றி உயிர்கள் குறை நீங்கப் பெறா; இன்ப அன்பு எய்த இயலா. 'ஞானத்தினாலன்றி வீடில்லை' என்பது அனுபவ வாக்கு.
எண்ணி எண்ணி அழுவதே வழிபாடு
கடவுள் வழிபாடு என்பது ஒரு பயிற்சி முறை. உண்மையான வழிபாடு என்பது சடங்குகள் மட்டுமன்று. கடவுள் நெறியில் தம்மை வழிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது குற்றங்களினின்றும் விலகி நிறைபெற முயற்சி செய்தல்; தீமை செய்யாது விலகி நன்மை செய்தல்; துன்பத்திற்குரிய காரணத்திலிருந்து விலகி இன்பத்தின் களங்களை அடைதல், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து அன்பு செய்தல் ஆகியன கடவுள் வழிபாட்டின் உயிர்க் கொள்கைகள். இந்தச் சிலங்களை எளிதில் பெற இயலாது. இவற்றைப் பெறுதற்கு நாம் செய்யும் முயற்சிகளே வழிபாட்டுச் சடங்குகள். பிரார்த்தனை அல்லது வழிபாடு என்பது இறைவனை மகிழ்விப்பதன்று; அவனுக்குக் கொடுக்கக்கூடிய கைம்மாறுமன்று. நமது நாடு மழையின்மையால் வறட்சியடைந்து வாடுவதைக் கண்டு மழைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி நாம் கேட்டுக் கொண்டோம். தமிழகத்தின் திருக்கோயில்களில் பிரார்த்தனைகள் நிகழ்ந்தன. தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பேரவை உறுப்பினர்கள் ஊனுருக, உளமுருகப் பிரார்த்தனை செய்தனர். மழையும் பெய்தது. ஆனால், பகுத்தறிவாளர் ஒருவர், “பிரார்த்தனை செய்தால்தான் இறைவன் மழை பெய்விப்பான் என்றால், அவன் அவ்வளவு தன்னல வாதியா?” என்ற வினாவை எழுப்பியிருந்தார். வினா எழுப்புவதற்கும், வினா எழுப்பப்படும் துறையில் ஆழ்ந்த அனுபவம் வேண்டும். கடல்கள், நீர் நிலைகள் முதலியவற்றில் உள்ள தண்ணீர் கதிரவன் வெப்பத்தால் நீராவியாக மாறி மேகமாக உருவாகி வானவீதியில் உலாவந்து குளிர்ந்த காற்று மோதுவதால் நீர்த்துளிகளாக மாறி மழை பொழிகிறது. இதுவே மழைப் பொழிவைப்பற்றி அறிவியல் தரும் பாடம். மழைப் பொழிவிற்குரிய காரணங்களுள் கடைசித் தேவையாகிய குளிர்ந்த காற்றைத் தவிர மற்றவையெல்லாம் இருக்கின்றன; நிகழ்கின்றன. ஆனால் குளிர்ந்த காற்றில்லை. காற்று குளிர்ந்த காற்றாக மாறுவதற்கு மக்கள் மன வளம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அன்பிலும் அறத்திலும் தோய்ந்த நெஞ்சுடையவர்களாக இருக்கவேண்டும். அறவுணர்வு இல்லாதார் வையகத்தில் மிகும்பொழுது வளம்மிக்க மலையும்கூட வறுமையடையும் என்று கற்றோர் போற்றும் கலித்தொகை பேசுகிறது.[33]
உயிர்கள் தம் குறைகளை - குற்றங்களை யறிந்து அவற்றினின்றும் விடுதலை பெற நிறைநலம் பெற எண்ணி எண்ணி அழுவதே பிரார்த்தனை. “எண்ணத்தின் வழியே மனிதன் வாழ்வு” என்று உளநூல் தத்துவமும் உடன்படுகிறது. மாணிக்கவாசகர் உயிரின் குறை நிலையினையும் கடவுளின் நிறை நிலையினையும் ஒப்புநோக்கிப் பாடுகின்றார். அவ்வழி நம்மை ஒப்புநோக்கிச் சிந்தனை செய்யத் தாண்டுகின்றார். குற்றங்களினின்று நீங்கி நிறை நலம் பெற வழி நடத்துகின்றார்:
என்ற பாடலில் பொய்ம்மையை நினைந்து அழத்தூண்டுகின்றார். மகாகவி டென்னிசனும், “பரம்பொருளை நோக்கி உயிர்கள் அழும் அழுகையே பிரார்த்தனை” என்கிறார். ஆக பிரார்த்தனையால் உயிர்கள் குற்றங்களினின்று விடுதலை பெறுகின்றன; பகைமை அகல்கிறது; அன்பு சூழ்கிறது: அவ்வழி மனம் குளிர்கிறது. அதனால் காற்று மண்டலம் குளிர்ச்சியடைகிறது. வான் புயலை நீர்த்திவலைகளாக மாற்றும் குளிர்ந்த காற்றுக்கிடைக்கிறது; மழை பொய்கிறது: இதுவே தத்துவம். ஆகவே பிரார்த்தனை என்பது உயிரை வளர்க்கும் நெறி; உயிரைத் தூய்மைப்படுத்தும் நெறி.
பக்தி-திருத்தொண்டு-தொண்டு
பிரார்த்தனை கங்குகரையற்ற - எல்லைக்கோடுகளற்ற அன்பில் கலக்கும் பொழுது பக்தியாக உருப்பெறுகிறது. பக்தியென்பது உறுப்புக்களில் தொடங்குவதன்று. உணர்வில் முகிழ்த்து, உறுப்புக்களில் பரவி அன்பு மயமாக்குவது. கண்ணப்பர் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அன்புக்குக் கண்ணப்பர் உவமையன்று, கண்ணப்பருக்கு அன்பு உவமை. கண்ணப்பரின் அன்பினை அறிந்து அனுபவித்தற்குரிய கண் யாரிடமும் இல்லாது போயிற்று. ஏன்? காளத்தியப்பனுக்கும்கூட இல்லைபோலும்! கண்ணப்பரின் கண்ணையே ஏற்று அணிந்து கொள்வதன் மூலம், அன்பினைக்கான, அனுபவிக்க, காளத்தியப்பன் ஆர்வம் கொண்டான். ஆக, பக்தி என்பது சடங்கு மட்டுமன்று. அஃது ஓர் உயிர்ப்புள்ள ஊற்று உணர்வின் வெள்ளம், அருளின் ஆற்றுப் பெருக்கு. அந்தப் பக்திப் புனல் மனித நெஞ்சங்களில் ஊற்றெடுத்துப் பெருகுமானால் வஞ்சனையென்ற காட்டாறு வற்றும். பக்திப் புனலை வற்றாது காப்பது திருத்தொண்டு. அந்தப் பக்தி, புனலின் விளைவு தொண்டு. பக்தி, திருத்தொண்டினால் காப்பாற்றப்படுகிறது; வளர்க்கப்படுகிறது. பக்தியின் பயன் தொண்டு. திருத்தொண்டும், தொண்டும் இல்லையானால் பக்தியில்லை என்பதே பொருள். முடிவில்லாத தொடக்கம் இருந்து என்ன பயன்? இலக்கு இல்லாத பயணத்தால் யாது பயன்? பொருள் குறிக்காத சொல்லால் யாது பயன்? உயிர்ப்பில்லாத உடம்பினால் யாது பயன்: திருத்தொண்டும் தொண்டும் இல்லாத பக்தி இருத்தற்கில்லை; இருத்தல் இயலாது. அங்ஙனம் திருத்தொண்டும் தொண்டுமில்லாத பக்தி இருப்பதாகக் கூறுவது ஒரு பொய். நமது சமயம், அறிவிற் பழுத்துப் பக்தியில் கனிந்து திருத்தொண்டாகதொண்டாகப் பரிணமித்துப் பயன் தருவது. வாழும் உயிரின் இலட்சியம் திருத்தொண்டராதலே; பக்தி அதற்கொரு வாயில்.
திருத்தொண்டு என்பது எது? இறை பணி திருத் தொண்டு. இறை பணி என்பது இறைவனுக்காகச் செய்வதன்று. கற்பது அறிவுக்குச் செய்யும் பணியன்று நாம் அறிவைப் பெறுவதற்குரிய பணி. உண்பது உணவுக்குச் செய்யும் பணியன்று; நாம் உயிர் வாழச் செய்யும் பணி. ஆறுகளையும் குளங்களையும் பாதுகாப்பது அவற்றுக்குச் செய்யும் பணியன்று; நாம் வாழச் செய்து கொள்ளும் பணி. அவற்றைப் போலத்தான் இறைபணி என்பதும். திருத்தொண்டு என்பது இறைநலத்தை உயிர்கள் பெறச்செய்யும் பணி; சிறப்பாகத் திருக்கோயிலைத் தூய்மை செய்தல், மலர் தொடுத்தல், உழவாரப் பணி செய்தல், பாடுதல் ஆகிய பணிகளாகும். பழங்காலத்தில் நம்முடைய திருக்கோயிற் பணிகள் திருத்தொண்டுகளாக இருந்தன. அன்று அவை உயிர்நலம் கருதிச் செய்யப்பெற்றன. ஆதலால் அன்று, திருக்கோயில்களில் திருவருள் திருவோலக்கம் இருந்தது. காலப்போக்கில் அவை தொழில் மயமாகிவிட்டன. இன்று அர்ச்சிப்பதிலிருந்து ஆலயத்தைத் தூய்மை செய்யும் பணிவரை அறங்காவல் வரை தொழில் முத்திரைகள் பெற்றுவிட்டன. அதனால் உலகியல் கட்டுக்கோப்பு ஆதிக்கத்திற்குரிய பதிவுகள் அனைத்தும் அங்கு வந்து விட்டன. உயர்ந்தோர் - தாழ்ந்தோர். பெரியோர் - சிறியோர், களவு-காவல், ஏவல் செய்வோர்-ஏவல்கேட்போர் ஆகிய உலகியல் முத்திரைகள் அனைத்தும் அங்குப் பதிந்துவிட்டன. ஆதலால் திருக்கோயில் வட்டாரத்தில் இன்றைக்குத் திருத்தொண்டர்கள் இல்லை. திருமடங்களின் வட்டாரங்களும் அப்படியேதான். அப்பரடிகள்,
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நீத்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆருரா என்றென்றே அலறா நில்லே[36]
என்ற பாடலில் திருத்தொண்டின் முறைமைகளைக் குறிப்பிடுகின்றார். இந்த உணர்வில் திருத்தொண்டு செய்வார் இன்று யார்? இந்த அவல நிலை வந்ததற்குக் காரணம் திருக்கோயில்கள் அப்பட்டமான நிறுவனங்களாக உருமாறி வளர்ந்ததுதான்; அவை, உலகியல் பொருட்செல்வத்தின் குவியலாக மாறியதுதான். ஆற்று நீர் ஓடிக்கொண்டே இருக்குமானால் தூய்மைப் பாதுகாப்புச் செய்யவேண்டியதில்லை. ஆற்றிற்கும் இன்னாருடைய ஆறு என்று எல்லை குறித்த பெயர் கிடையாது; ஊற்று வளமும் ஓட்டமும் இல்லாத குளமாக, குட்டையாகத் தண்ணீர் தேங்கிவிடின் தூய்மைப் பாதுகாப்புத் தேவை. திருக்கோயில்களில் சமய நிறுவனங்களில் பொருள் வரும்; வரவேண்டும். அவை எல்லை குறியாமல் மக்கள் மன்றத்திற்குச் சென்று கொண்டே இருக்கவேண்டும். அங்குச் செல்வம் தேங்கி அஃது உடைமையாக மாறி விடின், துய்ப்புக்கும் எல்லை வந்துவிடும்; துய்ப்புக்கு எல்லைவரும் பொழுது மனித குலத்தில் தீமைகளும் வந்தே தீரும்; அடிப்படை ஆட்டம் கொடுக்கும். இந்த இடத்தில்தான் தொண்டு கால் கொள்கிறது. பக்தியில் பெற்ற உணர்வினால், திருத்தொண்டின்வழிப் பெற்ற பயனால் மனித குலம் வளர, வாழச் செய்வது தொண்டு. ஆக பக்தி, திருத்தொண்டு, தொண்டு ஆகியன ஒன்றையொன்று தழுவி நிற்பன. இதுவே நமது ஆன்றோர் காட்டிய சமய வாழ்க்கை அவ்வழியில் நாம் பயணம் தொடங்கும் பொழுதே நமக்கும் சமய அனுபவம் கிடைக்கும்.
உருவ வழிபாடு ஏன்?
எல்லா உயிரும் உயர்ந்த பக்திமையைப் பெறவேண்டு மென்றால் அவை வழிபாட்டில் ஈடுபடவேண்டும். வழிபாடு என்பது காட்சியினால் மட்டும் நிகழ்த்துவதன்று. வழிபாடு உண்மையான - நிறைவான பயனைத் தரவேண்டுமென்றால் பொறிகளும்-புலன்களும், ஊனும்-உயிரும், உணர்வும், ஒன்றாகக் கலந்து செய்தல் வேண்டும். அந்த அடிப்படையிலேயே நம்முடைய சமயம் திருவுருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறது; வற்புறுத்துகிறது. இன்றும் சிலர், கடவுளுண்மையை ஒத்துக் கொள்கிறார்கள். திருவுருவ வழிபாட்டைக் குறிப்பாகச் சிலைகளை வழிபடுவதை உடன்பட மறுக்கிறார்கள். ஆனால், நமது சமயம் திருவுருவ வழிபாட்டை வற்புறுத்துகிறது. மெய்கண்ட தேவர் சீவன் முத்தர்களுக்குக் கூட ஆலய வழிபாட்டை வற்புறுத்துகிறார்:
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத் தொழுமே.[37]
என்பது அவர் வாக்கு காற்றோட்டம் இல்லாமல் வெப்பத்தால் புழுக்கம் ஏற்படுகிறபொழுது விசிறியைக் கொண்டு விசிறிக் கொள்கின்றோம். காற்றோட்டம் வந்த பொழுது விசிறியை எறிந்துவிடுகின்றோம். அதுபோல ஞானம் வராதபொழுது திருவுருவ வழிபாட்டைச் செய்ய வேண்டும். ஞானம் வந்துழி விட்டுவிடலாம் என்றும் சிலர் கூறுவர். காற்றோட்டம் இல்லாமல் புழுக்கம் வந்தது என்றால் காற்று ஒருபொழுது வீசுதலும் வீசாமையும் பெறப்படுகிறது. காற்றோட்டம் வந்துழி விசிறியை எறிந்துவிட்டால் மீண்டும் காற்றோட்டம் இல்லாதபொழுது என்ன செய்வது? ஆதலால் உயிர் முற்றாக முழுமைநலம் எய்தும்வரை எந்தச் சாதனங்களையும் இழத்தல் நன்றன்று. இறைவன் உருவ மற்றவன்; அருவ நிலையினன் என்பதும் நமது கோட்பாடே. ஆனால் எல்லாம் வல்ல இறைவன் உருவங்களை ஏற்க முடியும் என்பதில் என்ன தவறு? ஆட்கொள்ளும் வழி ஆட்கொள்ளப்படும் உயிர்களின் தரத்தைப் பொறுத்ததேயன்றி, ஆண்டவன் தகுதியைப் பொறுத்ததாக அமையாது.
உயிர்கள் ஓர் உருவத்தைப் பற்றி நின்றுதான் சிந்திக்க முடிகிறது. அதனால் உருவமற்ற இறைவனும் உருவம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உருவத்தைப் பெறாத ஒன்று அனுபவத்திற்கு வராது. மணம் உருவமற்றது. ஆனால் மலரின் வடிவத்தில் மணம் பொருந்தும் பொழுதும், மணம் நுகரும் மூக்கின் வடிவத்தில் உறவு கொள்ளும் பொழுதும்தான் மணம் அனுபவத்திற்கு வருகிறது. ஒலிக்கு வடிவம் இல்லை. ஆனால் ஒலி, சொல் வடிவம் பெற்று, உருவடிவம் பெற்று செவியொன்றில் உறவு கொள்ளும் பொழுதுதான் அனுபவத்திற்கு வருகிறது. மின்னாற்றலும், உருவங்களின் வாயிலாகத்தான் அனுபவத்திற்கு வருகின்றது. நாம் உருவத்தை வணங்கவில்லை. உருவத்தின் வாயிலாக, இல்லை, உருவத்தில் இறை நிலையைக் கருதியே வழிபடுகின்றோம். நாம் தொழுவது சிலையையன்று. சிலையை மையமாகக் கொண்ட சிந்தனையைத்தான். நம்மீது உள்ள கருணையினாலே இறைவன் உருவங்களில் எழுந்தருளி ஆட்கொள்கிறான் என்பதுதான் நமது கொள்கை, உருவங்களாக எண்ணித் தொழுதல் நமது வழிபாட்டு முறையன்று. உலகியலில்கூட சில பொருள்கள் உருமாறின பிறகு, உருமாறிவிட்டிருக்கும் நிலையிலுள்ள பெயரைத்தான் குறிப்பிடுவோமே தவிர பழைய நிலைப்பெயரைக் குறிப்பிடுவதில்லை. இரும்பு அறிவியல் முறையில் ஒலிபெருக்கியாக்கப் படுகிறது. அதற்கு ஒலிபெருக்கி என்றுதான் பெயர். அது செய்யப்பெற்ற இரும்பை எண்ணி ஒலிபெருக்கியை இரும்பு என்றுகூற இயலாது; கூறக்கூடாது. அரிசி வெந்து சோறான பிறகு, அது சோறே தவிர அரிசி அன்று. எழுத்துகள் உணர்ச்சி வெள்ளம் படைத்த கவிஞனால் முறையாகக் கோக்கப்பெற்றுக் காவியம் ஆக்கப் பெற்றால் அது காவியமே. எழுத்துகள் உண்மையினால், அது அகர நெடுங்கணக்கு ஆகாது. அதுபோலத் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற திருமேனிகள் கற்களாலோ, உலோகத்தாலோ ஆக்கப் பட்டிருக்கலாம். ஆனால் வழிபடுவோர் கல்லையோ உலோகத்தையோ உள்ளத்தில் நினைந்து வழிபடவில்லை. இறைவனையே எண்ணி வழிபடுகின்றனர். அதுதான் திருவுருவ வழிபாட்டின் தத்துவம். இதனை மாணிக்கவாசகர்,
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறுஅது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே[38]
என்று கூறி விளக்குகிறார். எனவே, திருக்கோயில் வழிபாடு பிள்ளைமை வழிபாடன்று. அது, வழிபாட்டின் முதிர்ந்த நிலை.
வழிபாட்டின் பயன்
வழிபாடு என்பது ஒரு நுண்ணிய கலை நிரம்பிய அருளார்ந்த உயிர்க்கு உதவும் உணர்வுப் பயிற்சி, சிந்தனை யாலன்றி அறிவில்லை. மனம் வளர்வதற்குரிய இந்த உயர் வழிபாட்டு நெறி உலகில் உண்மையில் வளர்ந்தால் மனித குலத்தினிடையில் அன்பு பெருகி வளரும், அமைதி தழுவிய வாழ்க்கை மலரும்; போர் ஒடுங்கும்; புண்ணியம் பெருகும்; சிறைச்சாலைகள் குறையும், அறச்சாலைகள் வளரும். இத்தகு உயர்ந்த வழிபாட்டினை ஒருமை உணர்வுடன் நிகழ்த்துதல் வேண்டும். மனம் இயல்பில் அலையும் தன்மையது. “சென்றவிடத்தாற் செலவிடாஅது”[39] என்பார் திருவள்ளுவர் அலைகின்ற மனத்தை ஒருமைப்படுத்துதல் வழிபாட்டின் முதற்படி “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை”[40] என்பார் திருநாவுக்கரசர், “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்”[41] என்பார் வள்ளலார், அண்ணல் நாமத்தை ஐந்தெழுத்தை வைத்த மாநிதி என்று எண்ணுதல் இன்ப உணர்வை நல்கும். அண்ணல் திருநாமத்தை எண்ணி மலரிட்டுப் போற்றுதல், உலகம் முழுவதையும் பால் பொழிந்து வளர்த்துக் காப்பாற்றும் பசுவிற்கு வாயுறை அளித்தல், உண்ண வேண்டியவர்களுக்கு உணவளித்தல், இனிய வார்த்தைகளைக் கூறுதல் இவையனைத்துமே சமய வாழ்க்கையின் படிகள் என்று திருமந்திரம் நமக்கு வழி காட்டுகிறது.
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்.உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே?[42]
என்பது திருமந்திரம்.
திருமூலர் காட்டும் சமய வாழ்க்கையில் கடவுட் பணியும் கடவுட் பணியின்றி உயிர் நலங்காக்கும் பணியும் இருப்பதறிந்து வாழ்க்கையில் மேற்கொள்ளத்தக்கது.
சமய வாழ்க்கை-வழிபாட்டுணர்வில் வளர்ந்த வாழ்க்கை அது பணிமயமானது. பணி என்பது ஓர் உயர்ந்த சொல். ஆனால், இன்று அந்தச் சொல் மிகச் சாதாரணமாக உலகியலில் சொல்லப்படுகிறது பணியாள், பணிமனை என்று. பணி, தன்முனைப்பு இன்றிச் செய்யப் பெறுவது: உயர்வு தாழ்வு நோக்கின்றிச் செய்யப் பெறுவது; யாரிடமும் பணிந்து செய்வது. பயன் கருதாது செய்வது. பணி செய்கின்றோம் என்ற செருக்கு உணர்வின்றிச் செய்வது பணி. அங்ஙனம் செய்யப்பெறுபவையே பணிகள். சமய வாழ்க்கையின் நிறைவு, பணியில் தெரியும்; அத்தகு பணிகள் செய்யும் பண்பில் நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்; நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தொகுப்புரை
இளமையில் திருமுறை உணர்வை ஊட்டி வளர்த்த சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை அவர்களின் கொடையில் மலர்ந்த சொர்ணாம்பாள் அறக்கட்டளையின் சார்பில் இன்று பேசிய பேச்சின் உட்கிடை வருமாறு: மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையைப் பெற்று இறைநிலையை எய்த வேண்டும்; உயிர்கள் இயல்பாய குறையினின்றும் நீங்கி நிறைநலம் பெறச் சமயம் துணை செய்கிறது; கல்வியிலும் அறிவு சிறந்தது: அறிவிலும் ஞானம் சிறந்தது; ஞானத்தை நல்கும் சமயம் ஒரு வாழ்க்கை முறை; சமயங்கள் அனைத்தும் மனித குலத்தின் ஈடேற்றத்திற்காகவே தோன்றின. சமயப் பூசல்கள் உலகியல் நலன்களுக்காகச் சமயத்தின் பேரால் நிகழ்ந்தன - நிகழ்வன. சமய நெறி உணர்த்துவது வேறுபாடுகளுக்குள்ளும் விழுமிய ஒருமைப் பாட்டைக் காண்பதுதான். ‘வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டே’ என்று தாயுமானார் அருளியமை நினைவு கூர்ந்து சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறி நிற்கவேண்டும். அதுவே மனித உலகத்தை ஈடேற்றுவதற்குரிய உயர்ந்த நெறி. அந்நெறியே தமிழர் சமய நெறி.
தமிழினம் மிகத் தொன்மையான காலத்திலேயே சமய வாழ்க்கையை மேற்கொண்டது. சங்க கால வாழ்க்கை ஒரு முழுமையான சமய வாழ்க்கை. ஆதலால் பக்திக்குத் தணி இயக்கங்களும், இலக்கியங்களும் இருந்ததில்லை. சங்க காலத்துக்குப் பின் நமது சமய நெறியில் பண்பாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியை எடுத்துக்காட்டி நிறைவு செய்யப் பக்தி இயக்கமும், பக்தி இலக்கியங்களும் தோன்றி வளர்ந்தன.
தமிழர் சமயம் நம்பிக்கைக்குரியது. நல்லெண்ணத் திற்குரியது, அறிவாராய்ச்சியில் அமைந்தது. சிந்தனையின் எல்லைவரை வினா எழுப்பி வளர்ந்த நெறி. அதனால் அதற்குச் ‘சித்தாந்தம்’ என்று பெயர். நமது சமயத்தில் முப்பொருள் கொள்கை விழுமிய கொள்கை இறை, உயிர், தளை என்பன என்றும் உள.
கடவுள் உண்டா? இல்லையா? என்று விவாதம் நிகழ்த்த இது உரிய காலமன்று. அறியாமையே தோன்றாத அறிவு உலகத்தில் தோன்றிவிடுமானால், இனி ஆராய வேண்டிய பொருள்கள் இல்லையென்ற நிலை தோன்றி விடுமானால் அதைப் பற்றி ஆராயலாம். கடவுள் இல்லை என்பவர்கள் மீது நமக்கு வருத்தம் இல்லை. அவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவும் நாம் தயாராக இல்லை. நம்முடைய கொள்கையே கடவுள் எல்லாமாக இருக்கிறார் என்பதுதான். கடவுள் உண்டு என்போர் கடவுளை வழிபட வேண்டும். கடவுள் தன்மையெனப் பாராட்டப் பெறும் அன்பு, அருள், ஒப்புரவுக் கொள்கை நாட்டில் தழைக்கும்படி கடவுள் நம்பிக்கை யுடையோர் வாழ்ந்து காட்டவேண்டும். சின்னங்களும் சடங்குகளும்தான் கடவுள் நெறி என்று மக்களை நம்ப வைக்கக்கூடாது. மழை பொழிந்ததன் விளைவை மண் காட்டுவதைபோல், சமய நெறி நின்று வாழ்வோரின் சால்பினை வையகம் காட்டவேண்டும்; விளைவுகள் காட்டவேண்டும். அதாவது துன்ப நீக்கமும் இன்ப நிறைவுமாகும்.
பழமை, புதுமை இவை உண்மையில் வாழ்க்கையில் ஈடுபடாதவர்களுடைய கற்பனை; பட்டி மன்றங்களுக்குப் பயன்படும் பொய்ம்மை; பழமை புதுமைக்குத் தாய். புதுமை பழமையின் சேய், வாழ்க்கை வாழ்வதற்கென்பது நம்முடைய நெறி. உலகம் துன்பமன்று வாழ்க்கையும் துன்பமன்று. ஒரோவழி துன்பமாக இருந்தாலும் இன்பமாக மாற்ற வேண்டும். இன்னாதம்ம உலகம் இனிய காண்க என்பது பக்குடுக்கை நன்கணியார் காட்டிய நன்னெறி.
சைவ நாயன்மார்கள் சமணத்தை எதிர்த்துப் போராடியது, வழிவழி வளர்ந்து வந்த தமிழினத்தின் நாகரிகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கேயாம். அதுவும் கூடத் தனித்துச் சமணர்கள் வளர்ந்த பொழுது நாயன்மார்கள் எதிர்க்கவில்லை. மருணீக்கியார் சைவ சமயத்திலிருந்து சமணத்திற்குச் சென்றபொழுது சைவர்கள் பதற்றமடையவில்லை. அதுதான் நமது சமய நெறியாளர்கள் கண்ட உயர்ந்த பண்பாடு. ஆனால், மருணீக்கியார் திரும்பவும் சைவத்திற்கு வந்தபொழுது சமணர்கள் ஆத்திரப்பட்டனர். அரசினைக் கையகப்படுத்திக்கொண்டு கொடிய தண்டனைகளைச் செய்வித்தனர். ஐரோப்பிய வரலாறுகளில் கிறித்தவ சமயத் தலைவர்கள் அரசைக் கைப்பற்றிக் கொண்டு மற்றச் சமயத்தினர்க்குத் துன்பம் செய்ததை வரலாற்றில் படித்திருக்கிறோம். அதே தவற்றை, நெறியல்லா முறையை இங்கே சமண முனிவர்கள் மேற்கொண்டனர். இஃது ஒரு தற்காப்புப் பணி.
நமது சமயத்தில் தீண்டாமை இல்லை, தீண்டாமையை அறவே அகற்றவேண்டும். ஒன்றே குலம் என்ற திருமூலர் ஆணையின் வழி ஒரு குலம் அமைக்கவேண்டும். அருளின் விளக்கமாகிய ஒப்புரவுக் கொள்கையால் வறுமையை மாற்றவேண்டும். வளம் படைத்திடுதல் வேண்டும். வாழ்க்கை முழுவதும் சமயச் சீலம் இடம் பெறுமாறு வாழ்ந்துகாட்ட வேண்டும். துய்த்தல் தவறன்று; ஆனால் துய்த்தலில் அன்பு தேவை; துறவின் தொடக்கம் தேவை. துறவின்வழித் துய்த்தலே இன்ப அன்பினை விளைவிக்கும் துய்ப்பு.
வழிபாடு ஒரு சடங்குமட்டுமன்று. புலன்களைத் துய்மை செய்வது; பொறிகளை இன்பமயமாக்குவது. பக்தி ஓர் உணர்வு; பக்தி திருத்தொண்டுக்கு ஊற்று; தொண்டு அதன் விளைவு. இப்பண்புகள் பல்கிவளர நாள்தோறும் இறைவனை வழிபடவேண்டும்.
இறைவன் அருஉருவினன். ஆயினும் உயிர்கள் எளிதில் நினைத்திட அவன் உருவமேற்றுக் கொள்கின்றான். நாம் வணங்குவது உருவங்களையன்று; உருவங்களை மையமாகக் கொண்ட கடவுள் தன்மையையே. எல்லாமாக இருக்கும் கடவுள் ஏன் உருவங்களாக இருக்கமுடியாது? சின்னங்கள் சடங்குகள் இல்லாத சமயம் உலகில் எதுவுமில்லை; உலகில் எந்த இயக்கமும் இல்லை. திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைச் சிவனெனவே தேறி வழிபாடு செய்வோம். ஒன்றியிருந்து வழிபாடு செய்வோம். அவன் திருவடிப் போதுகளில் மலர்களை இடுவோம். உயிர்க் குலத்தை வாழ்விப்போம்; பணிகளைச் செய்வோம்; இத்தகு சிந்தனைகளை இன்று நினைவிற்குக் கொண்டு வந்தோம்.
ஊர்களைச் சாலைகள் இணைத்து வெற்றி பெற்று விட்டன. அண்டங்களை வானவெளிச்சாலைகள் இணைத்து வெற்றி பெற்று விட்டன. ஆனால், மனித உள்ளங்களை இணைக்கக் கண்ட நன்மை பெருகு அருள்நெறி, நாட்டில் வளரவில்லை; நாட்டு மக்களின் நெஞ்சங்கள் அருள்நெறி வழி இணைக்கப் பெறவில்லை. மனித உள்ளங்கள் அருள் நெறி வழி இணைக்கப்பெறும்பொழுது மண்ணகம் விண்ணக மாகும்; அப்போது வான்முகில் வழாது பெய்யும்; மலிவளம் சுரக்கும்; குறைவிலாது உயிர்கள் வாழும். நாட்டில் நல்லாசு நிலவும், அறநெறிகள் வளரும்; தவநெறி தழைக்கும்; நீதி நிலைபெறும்; சைவம் நின்று நிலவும். அந்த நன்னாளை எண்ணிப் பிரார்த்தனை செய்வோம்.
மேற்கோள் விளக்கம்
1. | தாயுமானவடிகள் திருப்பாடல்கள், ஆனந்தமானபரம், 9, |
2. | திருவாசகம், திருப்புலம்பல், 3. |
3. | திருஞானசம்பந்தர், 340 தனித்திருவிருக்குக்குறள், 3. |
4. | திருக்குறள், 1110. |
5. | தாயுமானவடிகள் திருப்பாடல்கள், கல்லாலின், 25. |
6. | திவ்வியப் பிரபந்தம். 2573. |
7. | திருவாசகம், போற்றித்திருவகவல் அடி, 164-165. |
8. | புறம். 192. |
9. | புறம். 192. |
10. | புறம். 134. |
11. | திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 972. |
12. | திருவாசகம், திருவெம்பாவை, 9 |
13. | திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 784. |
14. | புறம், 194. |
15. | திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 380, |
16. | சுந்தரர், 294. |
17. | ” ” |
18. | திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 929. |
19. | திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 938. |
20. | திருவாசகம், கண்டபத்து, 5 |
21. | திருமந்திரம், 2066. |
22. | புறம். 189 |
23. | சிலப்பதிகாரம் வேட்டுவ வரி, 21, |
24. | திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 383. |
25. | அகம், 53. |
26. | திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 892 |
27. | சுந்தரர், 551. |
28. | திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 181. |
29. | திருவுந்தியார்; 33. |
30. | திருவாசகம், கோயில் திருப்பதிகம், 7. |
31. | திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 45-46. |
32. | திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 49 |
33. | "வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா |
கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர் | |
அல்ல புரிந்தொழுக லான். | |
கலி, குறிஞ்சி, 3 | |
34. | திருவாசகம், திருச்சதகம், 23 |
35. | திருவாசகம், திருச்சதகம், 90. |
36. | திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 312. |
37. | சிவஞானபோதம் சூத்திரம், 12. |
38. | திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, 7. |
39. | குறள், 422. |
40. | திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 781. |
41. | திருவருட்பா, தெய்வமணி மாலை, 8. |
42. | திருமந்திரம், 109 |
இன்றைய நமது சமயநிலை
நமது சமயம் சிவநெறி, திருமால் நெறி, திருமுருகன் நெறி என்றிவ்வாறு அறுவகைச் சமயநெறிகளாயிற்று. ஆயினும் இந்த அறுவகைச் சமயங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் மிகக் குறைவு. சிவநெறி, திருமால்நெறி இவற்றினிடையே தத்துவங்களின் வழியிலும் இறைநிலையிலும் வேறுபாடுகள் உண்டு. ஆயினும் இன்று வைணவ சமயத் தலைவர்கள் காட்டும் அளவு, சைவ-வைணவத்துக்கிடையே வேறுபாடுகளில்லை. வைணவர்கள், அவர்களின் நெறியில் தோன்றிய வடகலை, தென்கலை வேறுபாட்டைக் கூடப் பெரிதுபடுத்தி வருகின்றனர். உண்மையிற் சொன்னால் அவர்கள் வைணவத்துக்குச் செய்யும் பணியை விட வேற்றுமைகளுக்கே அதிகப்பணி செய்து வருகின்றனர். இல்லையானால், இந்த இருபதாம் நூற்றாண்டில் “யானைக்கு எந்த நாமம் போடுவது” என்று வழக்கு மன்றம் ஏறுவார்களா? நினைத்தாலே நெஞ்சைச் சுடும் செய்தி.
சிவநெறிக்கும் மற்ற சமயங்களுக்குமிடையே உள்ள வேறுபாடு, வழிபடு கடவுளின்வழி அமைவதேயாம். இடையில் புறச் சமய நெருக்கடிகளிலிருந்து நமது சமுதாயத்தைக் காப்பாற்ற நினைத்தபோது, இந்த அறுவகைச் சமயங்களையும் இணைத்து ஒரு சமயமாக்கினர். அதனால்தான் நம் சமயத்தில் பல மூர்த்திகளை வழிபடும் நிலை உருவாயிற்று. அதனால் சிலர், பல கடவுள்கள் நம் சமயத்தில் இருப்பதைக் குறைவாக நினைக்கின்றனர். அது தவறு. கடவுள் ஒருவர்தான்; அவரைக் கண்டவர்கள் பல வகையினர். அதனால் அவரவர்தம் அனுபவத்தின் வழி பெயர்கள் மாறுபட்டன; அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டவழி அனைத்து மூர்த்திகளும் ஏற்றுக்கொள்ளப்பெற்றன. ஆனாலும் வழிபடுவோர் ஒரு கடவுளை வழிபட வேண்டு மென்பதுதான் நெறி. நமது தொன்மைக் காலச் சமயநெறி, சிவநெறியே! இந்தியத் துணைக் கண்டம் முழுவதும், மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவி வளர்ந்த நெறி சிவநெறி.
இந்து என்னும் பெயர்
நமது சமயம் சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்து சமயம் என்று பெயர் பெற்றது. இந்து சமயம் என்ற பெயரமைப்பு இன்று விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்து சமயம் என்றால் அஃதொரு பச்சைப் பார்ப்பனீயம் என்ற கருத்து வளர்ந்திருக்கிறது. அதிலும் உண்மையில்லாமற் போகவில்லை. ஆனால், களர் என்பதற்காகக் கழனியை விடுவார் யார்? களர் நீக்கப்படுதல் வேண்டும் என்பதே உண்மை. அதுபோல மனித குலத்துக்கு வேண்டாதனவற்றை விலக்கி, நாம் இந்து சமயம் என்ற பெயரை அதன் பொதுத் தன்மையை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஏன்? இமயத்தின் முடியிலிருந்து குமரிமுனை வரை நமது மக்கள் வழிபடும் கடவுளின் பெயர்கள் மாறுபடவில்லை; வடிவங்கள் மாறுபடவில்லை, சமயச் சின்னங்கள் மாறுபடவில்லை. இந்த அளவு பரந்து வளர்ந்துள்ள ஒருமைப்பாட்டை இழத்தல் கூடாது.
இந்து சமயம் என்ற பெயரில் பல கடவுள்களை வழிபடும் வழக்கம் வராமல் பாதுகாப்பது அவசியம். சிறு தெய்வ வழிபாட்டை அறவே விலக்கல் வேண்டும். திருக்கோயில் வழிபாட்டில் தொழில் முறை கால்கொண்டவுடன் அருச்சகர்கள் தமது போட்டா போட்டிகளைக் கடவுள்களின் போட்டிகளாக்கி விட்டனர். அதன் காரணமாக “இந்தக் கடவுளை வழிபட்டால், அது கிடைக்கும்; இது கிடைக்கும்” என்ற பிரசாரங்கள்-விளம்பரங்கள் பெருகின, ஏன் ? புராணங்களே கூடத்தோன்றின. கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகின்றவர்கள் பல நலன்களை அடைகின்றனர் என்பது உண்மை. ஆயினும், அதனைக் காரணமாகக் கொண்டு வழிபாட்டை வணிக முறையாக்கக் கூடாது. இந்த மனப்போக்கு, சமயநெறியின் விழுமிய குறிக்கோளாகிய நிறைநலத்தைப்பெறத் துணை செய்யாது. கடவுளின் கருணை, காரணங்களாக அமையுமே தவிரக் காரியங்களாக அமையாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஆதலால் மக்களின் இச்சைகளை-ஆசைகளைத் தூண்டி அவ்வழி நிகழ்த்தும் வழிபாடுகள் நெறியுடையனவல்ல; முற்றாகத் தவிர்க்கப்படவேண்டியவை; வெறுக்கத்தக்கவை. எந்த ஒரு தத்துவத்தில் - மூர்த்தியிடத்தில் நமக்கு ஈடுபாடு தோன்றுகிறதோ அந்த மூர்த்தியையே உயிர்க்கு நாயகனாகக் கொண்டு, நினைந்து நினைந்து, உள்ளக்கிழியில் உருவெழுதி, உணர்ந்து உணர்ந்து வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் வழிபாட்டின் பயனாகிய இன்ப அன்பு நிலையை எய்த முடியும்.
உயிர் - பெயர் விளக்கம்
மனிதன் ஒரு விந்தையான பிறவி, மானுடப் பிறப்பு உரிமைகளின் களம்: அனுபவங்களின் மையம், நெடிய வரலாற்றுக்கு மின்விசை. இந்த விந்தையான மானுடச் சாதி இல்லாது போனால், இயற்கைக்குப் பொருளேது? கடவுளுக்குத்தான் வழிபாடு ஏது?
உயிர், நுண் பொருள்; உருவமில்லாதது; அறிவு உருவானது; (அறிவில்) வளரும் தன்மையது; சார்ந்ததன் வண்ணமாவது. அனுபவம் அதன் பிறப்புரிமை! இத்தனை மாட்சிமையுடைய உயிரின் அறிவு எல்லைக்குட்பட்டதே! அதன் ஆற்றலும் எல்லைக்குட்பட்டதே! எல்லை, சிறுமையின் சின்னம் தானே! எல்லை கடந்தது தானே பெருமைக்குரியது! அதனால், அறிவிலும் ஆற்றலிலும் எல்லைக்குட்பட்டு, அனுபவம் முழுமையுறாமல் அல்லற்படும் ஆருயிர்க்குத் துணையாய் அமையத்தக்கது பேரறிவே! பேராற்றலே! எல்லைகளைக் கடந்த ஒன்றே! சுருங்கக் கூறின் உயிர், அறிவு விளக்கத்தைப் பெறுவதற்குரியதே யானாலும், அறியாமையைச் சார்ந்திருக்கிறது. அஃது ஆற்றல் மிக்குடையதானாலும், அந்த ஆற்றல் முடக்கப்பட்டு, ஆற்றல் உண்டோ இல்லையோ என்ற நிலையில் அவலத்தில் ஆழ்ந்துள்ளது. இன்பத் துய்ப்பிற்குரிய உயிர், நெறிமுறைப் பிறழ்வின் காரணமாகத் துன்பத்தில் துயருறுகிறது. உயிர், உய்தலுக்குரியது; உய்தி பெறும் தன்மையது. அது உய்தி பெறவேண்டும். உய்தலே உயிரின் உயரிய குறிக்கோள்.
சமய நெறி
உயிர்கள் உய்தி பெறவே ஒரு பெருங்கடவுள். உயிர்கள் உய்திபெறப் பயிலும் சாலையே வாழ்க்கை உயிர்கள் உய்யும் நெறியே சமய நெறி. உயிர்கள் உய்யும் நெறியில் தலைப்படின் சிந்தையில் தெளிவு, அறிவில் ஆக்கம், ஆற்றலின் கொள்கலம், அயரா அன்பு, எங்கும் இன்பம் என்ற சூழல் உருவாகும். இதுவே சமய வழிப்பட்ட சமுதாயம், களவு-காவல், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், உடையார்-இல்லாதார் என்ற அமைப்பு சமயநெறி சாராதார் அமைப்பு. ஆனால், இன்றைய சமுதாயத்தில் நிலை தடுமாற்றம். சமயம் இயக்க நியதிகளினின்றும் விலகி நிறுவனங்களாகி அதுவே களவுக்கும்-காவலுக்கும் ஆளாகி, உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்ற போராட்டத்தின் களமாகி, உடையாரை உவந்தாக்கியும், இல்லாரை எள்ளி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம், பிரானாட்டம் ஆக முடியுமா? ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமய நெறி.
இறை வழிபாடு
உயிர், உய்தற்குக் கடவுளை நாடுகிறது. இங்கு உயிரும் உருவமற்றது; உயிர் அடையத் துடிக்கும் ஒரு பெருங் கடவுளும் உருவமற்றதே! இங்குக் கலத்தல் உருவங்கள் அல்ல; உணர்வுகளேயாம். உயிர், உணர்வினால் அவாவி, அவாவி, பேரறிவாகவும் பேராற்றலாகவும் விளங்கும் இறையினை நினைத்தல் மூலம், அந்த அறிவையும் ஆற்றலையும் தன்பால் ஈர்த்துத் தன்னை நிறைவுபடுத்திக் கொள்ளும் சாதனையே வழிபாடு. இஃதோர் அறிவுப் பயிற்தி!! உணர்வுப் பழக்கம்! இஃது எளிதில் கைவருவதன்று; அரிதில் முயன்று அடையக்கூடிய சாதனை. பன்னாள் அரன்தனை அர்ச்சிக்கில் சற்றே மெய்ஞ்ஞானம் மிகும். உணர்வுப் பயிற்சி எளிதில் அமையாத தொன்று. அதனால், உணர்வுப் பயிற்சியினை நோக்கமாகக் கொண்டு தொடக்க நிலையில் உருவப் பயிற்சி வழங்கப் பெறுகிறது.
உருவமற்ற ஒன்று, அனுபவத்தைப் பெறவேண்டு மானாலும், அனுபவத்தைத் தரவேண்டுமானாலும் உருவம் பெறுதலைத் தவிர வேறுவழியில்லை. காதல், உருவமற்றது. ஆனால் உருவமைதியில் காதல் நிகழும் பொழுதுதான் இன்பம் கிடைக்கிறது. இதனால் காதலுக்கு உருவமில்லை என்பதும், காதலிப்பவர்க்கு உருவம் வேண்டும் என்பதும் பெறப்படுகின்றன. அதனாலன்றோ வள்ளுவம், காதலர் இருவர் பிணைப்பிற்கு உடம்பு-உயிர்ப் பிணைப்பை உவமை ஆக்கிற்று!... உடல் இன்றேல் உயிர்க்கும் துய்ப்பில்லை; உயிர் இன்றேல் உடலுக்கும் துய்ப்பில்லை என்பது தானே பொருள். உருவ வழிபாட்டுக்கு இஃதொரு தத்துவம். உயிர், உருவ அமைதியுடைய உடலினைப் பெற்றே துய்ப்பினைப் பெறுகிறது. அஃது உருவத்தை இழக்குமானால் துய்ப்பில்லை. அதுபோலவே கடவுளும். அருவப் பொருள் உயிர்களின் துய்ப்பிற்குத் துணையாயிருக்கும் பொழுது உருவம் பெறுகிறது. விஞ்ஞான அடிப்படையில்கூட ஒலியலை உருவமில்லாதது. அந்த ஒலியலை வானொலி உருவ வடிவத்தின் வழி இயங்கும்பொழுது செவிப்புலன் அனுபவத்திற்கு வருகிறது. மின்னாற்றலும் அப்படியே! ஆக, உய்தி பெற வேண்டிய உயிர், மானுட வடிவத்திலும் உய்திக்குத் துணை நிற்கும் வழிபாட்டுக்குரிய திருமேனி வடிவத்திலும் கொண்ட உறவே திருக்கோயில் வழிபாடாக மலர்ந்தது. திருக்கோயில் வழிபாடு, மனிதன் கடவுளைத் தோழமை கொள்ளும் களமாகவே அமைந்தது.
வழிபாடு - விளக்கம்
வழிபாடு என்பது, ஓர் உயிர், தன் உயர்வுக்காகத் தானே செய்யும் ஒருவகை அறிவுப் பயிற்சி உணர்வுப் பயிற்சி. ஒருவர் அறிவுபெறப் பிறிதொருவர் படிக்க முடியாது. ஒருவர் பசிக்காகப் பிறிதொருவர் உண்ண முடியாது. ஆனால் விந்தை! இன்று மக்களுக்காகச் சிலர் வழிபாடு செய்கிறார்களாம். இஃது எங்கனம் சாத்தியம்: தண்ணீரைக் குடித்துச் செரித்த விதையால்தான் முளைக்க முடியுமே தவிர, அண்டாவில் தண்ணி இருப்பதினால் பக்கத்தில் உள்ள விதை முளைத்துவிடாது. தண்ணீரைக் குடிக்கும் இயல்பில்லாத விதை தண்ணில் கிடந்தாலும் முளைக்காது. “ஆண்டாண்டு அழுதாலும் அவளே பெறவேண்டும்” என்ற பழமொழி போல, ஒவ்வோருயிரும் தத்தம் உய்திக்குத் தாமே அழுது வழிபாடாற்ற வேண்டும். இதுவே, சமயத் தத்துவத்தின் அடிப்படை, கடவுள் வழிபாட்டின் நோக்கம்.
வழிபாட்டு வரலாறு
பழங்காலத்தில் உய்யுமாறறிந்த அனைவரும், அவரவர்களே வழிபாடு ஆற்றியிருக்கின்றனர். ஒருவருக்காக இன்னொருவர் வழிபாடு செய்யும் வழக்கம் பழங்காலத்தில் இருந்ததில்லை. அதனால்தான் எளிதில் எல்லோரும் வழிபடத் தக்கவாறு மணலில், சாணத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து வழிபாடு நிகழ்த்தும் வழக்கம் இருந்திருக்கிறது. சண்டீசர் மணலில்தானே திருமேனி செய்து வழிபட்டார்! காலம் செல்லச் செல்ல, காலத்தில் கரையாதவாறு நிலையான திருமேனிகள் அமைத்து வழிபாடு செய்யும் உணர்வு மேலிடக் கற்களால் ஆன திருமேனிகள் தோன்றின. வழிபாட்டில் ஆர்வம் பெருகப் பெருகத் தாம் வழிபடும் திருமேனிக்குத் திருக்கோயில் அமைக்கும் ஆர்வம் மக்கள் மன்றத்தில் வளர்ந்தது. மக்கள் மன்றத்தின் ஆர்வத்தை அறிந்த தமிழக மன்னர்கள் திருக்கோயில்கள் பலவற்றை எழுப்பினார்கள். திருக்கோயில்கள் தோன்றிய பிறகும் கூட மக்கள் தாமே சென்று இறைவனுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து வந்தனர்.
இங்ஙனம், பக்தி நெறியில் வளர்ந்த சமயம், பாதுகாப்பு என்ற பெயரில் தத்துவ, சாத்திரச் சூழலுக்குள் அடி வைத்தது. ஆகமங்கள் தோன்றுகின்றன. அன்பிற்குத் தடை விதித்து அறிவுக்கும் ஆட்சிக்கும் வழி வகுக்கப்படுகிறது; பொதுமை மறைகிறது! திருக்கோயில் வழிபாட்டை என்றென்றும் செய்வோரென்று தம் குடியில் மூத்தோர் சிலரை நியமிக்கின்றனர். அவர்கள் வல்லுடும்பாகப் பற்றிக்கொண்டு மேட்டுக் குடியினராயினர்; கடவுளுக்கு உரிமைச் சுற்றம் பூண்டனர்; மற்றவர்களை ஒதுக்கினர்; எளியோரை எட்ட நிறுத்தினர்; உடையோரை உவந்து வாழ்த்தி மடி நிறையப் பெற்றனர். இது கோயில் முறை தெரிக்கும் வரலாறு!
திருக்கோயில்கள் தோன்றிய காலக்கட்டத்தில் கூட - ஏன்? அவை தோன்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூடத் தாமே பூவும் புனலும் சொரிந்து வழிபடும் உரிமை மக்களுக்கு இருந்தது. அதனாலன்றோ, தமிழகத் திருத்தல வரலாறுகள் அனைத்தும் வாலி பூசித்தது, தருமன் பூசித்தது, இராமன் பூசித்தது, இராவணன் பூசித்தது, நளன் பூசித்தது, என்றும் - இவை மட்டுந்தானா? யானை பூசித்தது, குரங்கு பூசித்தது, எறும்பு பூசித்தது. நண்டு பூசித்தது என்றெல்லாம் கூட் திருக்கோயிற் புராணங்கள் உள்ளன. இதுவே, பண்டைய திருக்கோயில்களின் நிலை.
இடைக் காலத்தில் திருக்கோயிலைத் தொழிற் கூடமாக்க நினைத்தவர்கள், மற்றவர்கள் வழிபடும் உரிமையை மறுத்தனர். அதற்குப் “பரார்த்த பூசை” என்று ஒரு பெயரைச் சூட்டினர். பெயர், நல்ல பெயர்தான்! ஆனால் வைதிகர்கள் அதற்குச் சொல்லும் பொருள்தான் பொருத்தமாக இல்லை. பரார்த்தம் என்னும் சொல்லுக்குப் பொருள், மற்றவர்களுக்காகச் செய்வது என்பதுதான். அதாவது, நாள்தோறும் ஒரு சின்னத்தில் இறைவனை எழுந்தருளச் செய்யும் பயிற்சி அல்லது செயல்முறை. இது எளிதன்று. அதன் காரணமாகப் பலர் வந்து வழிபட்டுப் பயன்பெறத்தக்க வகையில் ஒருவர் ஒரு திருமேனியில் இறைவனை எழுந்தருள்வித்து, மற்றவர்கள் வழிபாடு செய்து கொள்ளத் தருதல் என்பதே பரார்த்த பூசை என்பதன் பொருள். ஆனால் நம்மில், மூத்த குடியினராய் அமர்த்தப் பட்டவர்கள் நம்மில் உயர்ந்தோராகி என்றென்றும் திருக்கோயிலில் நிலையான உரிமை பெறவும், பெரும்பான்மையான சமூகத்தாரை விலக்கி வைக்கவும் ஆசாரம், ஆகமம் என்ற பெயரால் தடை விதித்தனர். அதனாலேயே நமது நாட்டில் சமயம் அனுபவத்திற்கு வராது போயிற்று.
வழிபாட்டின் பழைய முறை
நமது முன்னோர்கள் திருக்கோவிலுக்குச் சென்று பூவும் புனலுமிட்டு வழிபட்டனர் என்பதற்கு முன்னர் எடுத்துக் காட்டிய தல புராணங்கள் சான்று கூறும். நமது திருமுறைகள் தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம், மக்கள் தாமே வழிபாடு செய்து கொண்டனர் என்றே பேசுகின்றன.
திருஞான சம்பந்தர் வேத நெறி தழைத்தோங்கத் தோன்றியவர்: சைவ நெறி விளங்கத் தோன்றிய ஞாயிறு. அவர் பாடிய திரு இராமேச்சுரத் திருப்பதிகத்தில்,
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை விடுமே[43]
என்ற திருப்பாடலில் வில்லினைத் தாங்கிய அரச (க்ஷத்திரிய) மரபைச் சார்ந்த இராமன் பூசித்த வரலாறு கூறப்படுகிறது.
அப்பரடிகள் திருவையாற்றுத் திருப்பதிகத்தில் பக்தர்கள் வழிபாட்டுக்காகப் பூவும், நீரும் சுமந்துகொண்டு ஒழுங்கு வரிசையில் நிற்பதையும், தாம் அவர்கள் பின்னே நிற்பதையும் குறிப்பிடுகின்றார்.
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்[44]
என்பது அவர் திருப்பாடல்.
திருப்பனந்தாளில் தாடகை என்னும் பெண் நாள் தோறும் மலர் சாத்தி வழிபட்டதாக வரலாறு இருக்கிறது.
சேக்கிழாரின் பெரிய புராணத்தில், கண்ணப்ப நாயனார் வரலாறு குறிப்பிடத்தக்கது. அநேகமாகக் கண்ணப்பநாயனாரின் வரலாற்றுக் காலம், திருக்கோயில்கள் தோன்றி நாட்பூசனைக்காக ஆசாரியர்கள் நியமிக்கப் பெற்றிருந்தும் பொதுமக்கள் வந்து வழிபாடு செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்த காலமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், திருக்கோயிலில் நாட்பூசனைக்காக நியமிக்கப்பெற்ற சிவகோசரியாரும் முறையே ஆகம வழியில் பூசிப்பவர் என்பதைச் சேக்கிழார்,
எய்தியசீர் ஆகமத்தில் இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும் முதலான கொண்டணைந்தார்[45]
என்றும்,
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திருமுன்பு[46]
என்றும் கூறுவதால் அறியக்கிடக்கிறது. இதே திருக்கோயிலில் கண்ணப்ப நாயனார் பத்திமை நெறியில் அன்பு மேலிடத் தாமே வழிபாடு செய்கிறார். ஆகத் தாமே வழிபாடு செய்து கொள்ளும் உரிமை இருந்தமை பெறப்படுகிறது. சிவகோசரி யாருக்கு எழுந்த ஐயம் கூட யார் பூசித்தார்? என்பது அல்ல; கண்ணப்பர் பூசனையில் புலால் சிந்திக் கிடந்தமையால் “நெறியல்லா நெறியில் (சிவகோசரியார் பார்வையில்) பூசனை செய்தது யார்? என்பதே சிவகோசரியாருக்கு இறைவனே பதில் சொல்லித் தேற்றிக் கண்ணப்பர் பூசனையே தனக்கு உவப்பாக இருந்தது என்பதனை,
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும்
அவனுடைய நிலை இவ்வா றறிநீ[47]
என்று அருள் செய்து விளக்கியுள்ளார். ஆதலால், திருக்கோயிலில் உள்ள இறைவனை எல்லோரும் சென்று வழிபடுவது தான் சிறந்த சமயநெறி. அதன் மூலம்தான் உயிர்கள் இன்ப அன்பினையும் ஞான அனுபவத்தினையும் பெறமுடியும். அருச்சகர்கள் நாள்தோறும் இறைவன் திருமேனியைப் பூசனைக்குரியவாறு அமைத்து வைப்பார்கள். இஃது, இந்த நூற்றாண்டின் புரட்சியுமல்ல; புதுமையுமல்ல.
திருக்கோயில் நாட்பூசை வரலாறு
திருக்கோயில் நாட்பூசனைக்கு நியமிக்கப் பெற்றவர்கள் ஆதியிற்பெற்ற பெயர் சிவாசாரியார் என்பதே உலகியற் கல்விக்குரியவர் ஆசிரியர். ஆசாரியர் என்ற சொல்லுக்குப் பொருள் ஆசிரியர் என்பது. ஆசாரியர் வழிபாட்டு முறையைக் கற்றுத் தருபவரே தவிர, வழிபாட்டைத் தாமே செய்பவரல்லர். இந்த நிலையிலிருந்து உயர்மனப்பான்மையிலும், தொழிலடிப்படையிலும், இலாப நோக்கிலும் சிவாசாரியார்கள் நிலை திரிந்த பிறகு அருச்சகர்கள் ஆயினர். அருச்சனை என்பதே அப்பொழுதுதான் தோன்றுகிறது. அதாவது ஒருவருக்காகப் பிறரொருவர் கூலி பெற்றுக் கொண்டு வழிபாடு செய்யும் முறை உலகியற் பொருளாதாரத்திலேயே இலாப நோக்கம் தவறு என்று விமர்சிக்கப்படும் காலம் இது. இந்த இலாப நோக்கம் முறுகி வளரவளரத் திருக்கோயிலில் உள்ள இறைவனைக் காண்பதற்கும் வழிபடுவதற்கும்கூடக் கட்டணங்கள் வசூலிக்கும் நிறுவனங்களாகத் திருக்கோயில்கள் உருமாறி விட்டன. உலகம் துய்த்து மகிழ ஆண்டியாக நிற்கும் பழனி ஆண்டவனைக்கூட ரூ. 50/ கொடுக்கும் வசதியுடையோர் மட்டுமே அவன் அருகில் நின்று உபசரணையோடு வழிபடலாம். அதனைத் தர இயலாத ஏழை, எட்ட நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. இங்ஙனம், சிவாசாரியார்கள் பெருவாரியான மக்களை ஒதுக்கித் தொழில் மயப்படுத்த முனைந்ததில் அவர்கள் அடைந்தது உயர்சாதி என்ற இலாபமே. பிறிதொரு முனையில் குருக்களுக்கு நிறைய இலாபம் வருகிறது என்று தெரிந்தவுடன் இலாப நோக்குடைய பலர், அதில் ஈடுபடத் தொடங்கித் திருக்கோயில் ஆட்சிப் பொறுப்பையடைந்து, இன்று அவர்கள் சிவாசாரியர்களைப் பணியாளர்களாக்கி மேலாதிக்கம் செய்கின்றனர். “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பதற்கு இஃதொரு சிறந்த எடுத்துக்காட்டு. சிவாசாரியார்கள் தம் மரபிற்கேற்பப் பழுத்த மனத்து அடியாராகப் பற்றற்றுத் தம்மை நாடி வரும் சீடர்களுக்கு - பக்தர்களுக்கு இறைவனைக் கண்டு காட்டி வழிபாடு செய்து கொள்ளக் கற்றுத்தந்து, அவர்களுடைய அரவணைப்பில் வாழ்ந்திருப்பார்களானால், திருக்கோயில்கள் தூய்மையாக விளங்கியிருக்கும். திருக்கோயில்கள் அன்பின் களனாகவும், அருளின் பெட்டகமாகவும் விளங்கியிருக்கும். இன்றைய நிலையில் திருக்கோயில் காவலையே நம்பிக் கிடக்கிறது. பொதுமக்கள் வழக்கத்தின் காரணமாகவும், மன அமைதிக்காகவும் வழிபாட்டுக்கு வருகிறார்கள்; ஏதோ செய்து கொண்டு போகிறார்கள். ஆனால், ஞானானுபவம் அவர்களுக்குச் சித்திக்கவில்லை. பழுத்த அனுபவத்தில் தோன்றிய வழிபாடு, இன்று முதிராப் பிள்ளைகளின் சிறு விளையாட்டுப் போல் அமைந்துவிட்ட கொடுமையை நினைந்து உட்கி வெட்கமுறாதார் நெஞ்சம் என்ன நெஞ்சம்?
ஏன்? நால்வர்களும், ஆழ்வார்களும் அவதரிக்காத வடபுலத்தில் இன்றும் பொது மக்களுக்கு வழிபாட்டுரிமை இருக்கிறது. காசித்திருக்கோயிலுக்குள் பக்தர்கள் சென்று, அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைக் கங்கை நீர் கொண்டு திருமுழுக்குச் செய்து வழிபாடு செய்து கொள்ளலாம். இங்ஙனம் நிகழ்வதால் எந்தப் பண்டாவும் அங்குத் தம் வழிவழி உரிமையை இழக்கவில்லை. சாதி வேற்றுமைகளை எதிர்த்துப் போராடி ஒரு குலம் அமைக்க முயன்ற ஞானிகள் தோன்றிய மண்ணில் பக்தர்களுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமையை மறுப்பது நியாயமும் அன்று; நெறியுமன்று முறையுமன்று.
எல்லோரும் வழிபடுவோம்
எல்லோருக்கும் திருக்கோயில் கருவறைக்குள் சென்று புனலும் பூவுமிட்டு வழிபாடு செய்யும் உரிமை வேண்டுமென்பதால் ஏதோ தான்தோன்றித்தனமாகத் திருக்கோயிலைத் திறந்து விடுதல் என்பது பொருளன்று. எத்தகைய உரிமையையும் சில கடமைகள் வழியே தான் பெற முடியும். பிறப்பின் காரணமாகத் தடையிருக்கக் கூடாது என்பதுதான் நோக்கமே தவிர, சீலத்தின்வழி தடையிருக்கக் கூடாது என்பதன்று. கொள்கைகளைக் கோட்பாடுகளின் வழிதான் அடையலாம். கோட்பாடுகள் கட்டுப்பாடுகளுக்கு இசைந்து இயங்கும் பொழுதுதான் நன்மை தரும். ஆதலால் திருக்கோயில் கருவறைக்குள் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருமேனிக்கு மலரிட்டு வழிபாடு செய்யும் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்கள் அடியிற்கண்ட ஒழுக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
- 1. தகுதியுடையாரிடத்துத் திருவாளன் திருநீறு பெற்றுத் திருமுறைவழிச் சமயச் சார்பினராய் இருத்தல் வேண்டும்.
- 2. திருக்கோயில் வழிபாட்டுரிமையுடையவர் என்ற உரிமையைப்பெற அவர்கள் வாழும் ஊரிலுள்ள திருக்கோயிலில் ரூ. 5/- செலுத்தித் தம்மைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
- 3. ஆசாரியர்களின் வழிநடத்தலின் பேரில் பக்தர்கள் மலரிட்டு வழிபாடு செய்து கொள்ளவேண்டும்.
- 4. கருவறைக்குள் செல்வோர் உடலாலும் உயிராலும் உணர்வாலும் சமயக்கோலம் கொள்ளுதல் வேண்டும்.
ஆக, நமது சமூகத்தில் மிக அகலமாக விரிந்திருக்கும் சாதி வேற்றுமைகளை அகற்றவும், எல்லோரும் பத்திமை உணர்வில் பழுத்து ஞானானுபவத்தைப் பெறவும், திருக்கோயில் கருவறைக்குட் சென்று, எம்பெருமானுக்குப் பூவும் புனலுமிட்டு வழிபாடு செய்யவும் உரிமை பக்தர்களுக்கு வேண்டும். இந்த உரிமை நமது பிறப்புரிமை. திருமுறைகள் உணர்வூட்டிப் பாதுகாத்துத்தந்த உரிமையாகும். இந்த முறை செயற்படும் பொழுது நமது சமயமும் ஒழுங்குபடுத்தப் பெறும்.
எது அருச்சனை?
சமயச் சீர்திருத்தங்களுள் ஒன்று தாய்மொழியில் அருச்சனை என்பது. பொதுவாக அருச்சனை முறையே, ஒருவருக்காக மற்றொருவர் செய்யும் முறை தோன்றிய பொழுது செல்வாக்குப் பெற்ற ஒன்று. அஃது அவ்வளவு சிறப்புடையதன்று. இறைவனை மலரிட்டுப் போற்றித் துதித்து வழிபடுதல்தான் நம்முடைய வழிபாட்டு முறை. தேவாரத் திருமுறைகளில் தற்கால அருச்சனை முறை இருந்ததில்லை. சங்ககால இலக்கியங்களிலும் இல்லை. அருச்சனை என்ற சொல்லும் வடமொழிச் சொல்லே. சேக்கிழார் அர்ச்சனை என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். ஆனால் அவர் குறிப்பிடுவது இன்றுள்ள அருச்சனை முறையையன்று. “அருச்சனை பாட்டேயாகும்” என்பது சேக்கிழார் வாக்கு. “பாட்டேயாகும்” என்ற சொல்லில் உள்ள தேற்றேகாரம் எண்ணத்தக்கது. சுந்தரர் காலத்தில் இன்றுள்ள அருச்சனை முறை பெருவழக்காக வந்திருக்க வேண்டும். இது அருச்சனை முறையன்று. நீ பாடிப் பரவுதலே அருச்சனையென்று பெருமான் சுந்தரருக்கு ஆணையிடுகின்றார்.
அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக............. [48]
என்பதுதான் தூமறை பாடும் வாயனாகிய பெருமானின் கட்டளை. ஆதலால் தேவாரத் திருமுறைகளைப் பாடித் துதித்தல் சிறந்த வழிபாட்டுமுறை. ஆயினும் இன்று கால் கொண்டுள்ள அருச்சனைமுறை அவ்வளவு எளிதில் போகாது; அது மட்டுமன்றி, விரும்புபவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் இந்த முறை இருப்பதனால் ஓரளவு பயனுண்டு. இந்த அருச்சனை முறை தாய் மொழியில் அமைய வேண்டும்.
மொழி எல்லை ஏன்?
சமய நெறிகளுக்கு - பிரார்த்தனைக்கு மொழி எல்லை ஏன்? இசுலாமியர் எந்த மொழியினத்தைச் சேர்ந்திருந்தாலும் அராபிய மொழியில்தானே பிரார்த்தனை செய்கிறார்கள். ஆம்! அஃது உண்மையே. இசுலாமிய சமயம் அராபிய மொழி வழிப்பட்ட சமுதாயத்தில் தோன்றிற்று. பிற மொழி வழிப்பட்ட இனங்களிலும் அது பரவியது. ஆதலால் இசுலாமியர் தமது சமயம் தோன்றிய மொழியையே விரும்பி மேற்கொண்டிருக்கின்றனர். அப்படி விரும்பி மேற்கொள்வது மரபுவழி வழக்கமுமாகிவிட்டது; அதற்குத் தடையுமில்லை. நம்முடைய சமயம் நம்முடைய தாய்மொழியில் தோன்றி வளர்ந்ததே தவிரப் பிறமொழியில் தோன்றி வளர்ந்ததில்லை. சேக்கிழார் “தமிழ் வழக்கு“[49] என்றே நமது சமயத்தைக் குறிப்பிடுகின்றார். ஆதலால் நம்முடைய சமயம் தோன்றி வளர்ந்த முறையிலேயே நமது பிரார்த்தனைமொழி இருப்பது தான் நியாயம். மேலும், இன்று அர்ச்சனை மொழியாக இருக்கும் சமஸ்கிருதம், உண்மையில் நமது சமய மொழியாக இருந்திருக்குமானால் அதை எல்லோரும் கற்றுத்தெளிவதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அங்ஙனம் வழங்கப்படாததோடு மட்டுமன்றித் தடையும் விதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இடையில் வந்த மொழி ஆதிக்கமும், சாதி ஆதிக்கமுமே நம்முடைய சமயம் உலகச் சமயமாவதைத் தடுத்து விட்டன. அதுபோல, கிறித்தவ சமயம் லத்தீன் மொழியில் தோன்றி வளர்ந்தது. கிறித்தவர்கள் லத்தின் மொழியில் பிரார்த்திக்கின்றனர். அங்கே லத்தீன் மொழியைப் பயில எல்லோருக்கும் வாய்ப்புண்டு; தடையில்லை. ஆனாலும் மார்ட்டின் லூதர் தோற்றத்திற்குப் பிறகு கிறித்தவ சமயம் பரவியிருக்கும நாடுகளில் அவரவர் மொழியில் வழிபாடு செய்யும் பழக்கம் வந்துவிட்டது.
மொழி வழிப்பட்ட இயக்கமன்று
தாய்மொழியில் அருச்சனை என்ற இயக்கம் மொழி வழிப்பட்ட இயக்கமன்று. பிரார்த்தனை, பக்தி என்பன உயிரின் வளர்ச்சிக்குத் துணை செய்வன. உயிரின் வளர்ச்சி நெஞ்சத்துடன் தொடர்புடையது. ஆதலால் நெஞ்சினைத் தொட்டு உணர்வினைத் துண்டும் மொழிதான் வழிபாட்டு மொழியாக அமைதல் வேண்டும். அந்த வாய்ப்புத். தாய்மொழிக்கே மிகுதியும் உண்டு. இது பொதுவான கொள்கை.
தமிழ் மந்திரங்கள்
நமது நாட்டில் தமிழில் வழிபாடு என்று கேட்கும் கோரிக்கை பொது வகையால் மட்டுமன்று; உரிமை வகையினாலும் எழுந்தது. உலக மொழிகளிலே பக்திக்குரிய மொழி. தமிழ்தான் என்பது அறிஞர் முடிபு. பக்திக்குரிய அருமையும் எளிமையும் தமிழுக்கு இயல்பாகவே உண்டு. தமிழ், வழிபாட்டு மொழியாகவே வளர்ந்து வந்துள்ளமொழி. அது மட்டுமன்று. மந்திரங்களுக்கு மொழி வரையறையில்லை. நிறைமொழி மாந்தர் அருளிச் செய்பவை மந்திரங்கள்.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப[50]
என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் “தானே என்று பிரித்தார். இவை தமிழ் மந்திரமென்றற்கு”[51] என்று எழுதுகின்றார். மாதவச் சிவஞான முனிவர் சமஸ்கிருதத்தின்பாலும் மிகப் பற்றுடையவர்: சமஸ்கிருதம் தேவ மொழி என்ற கருத்துடையவரே. ஆயினும் தாம் இயற்றிய காஞ்சிப் புராணத்தில் இறைவனை அகத்தியர் பூசித்த பொழுது தமிழ் மந்திரங்கள் கூறிப் பூசித்ததாகக் கூறுகிறார்.
மன்னியஇத் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின்
உன்னணுக்க னாகிஇனி துறைந்திடவும் பெறவேண்டும்
இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்[52]
என்பது காஞ்சிப்புராணப் பாடல்.
... எனதுரை தனதுரையாக
நீறணிந்தேறுகந் தேறிய நிமலன் ...
என்பது திருஞானசம்பந்தர் வாக்கு திருமுறைப் பாடல்கள் ஆற்றல் மிக்க மந்திரங்களாக ஐந்தொழில்களையும் நிகழ்த்தியுள்ளன.
உரிமைபெற உழைப்போம்!
ஆதலால், தமிழில் வழிபாடு என்பது வரலாற்றடிப் படையிலும் நியாயமானது; உளவியலடிப்படையிலும் நியாயமானது. மரபு வழியிலும் அது நமது பிறப்புரிமை. நமது திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு நிகழ்த்தும் முயற்சிக்கு நமது தமிழக அரசு அளித்துவரும் ஆதரவு பாராட்டுதலுக்குரியது. ஆனால், அரசு முறையில் இயக்கப்படும்பொழுது தமிழ் வழிபாட்டுமுறையை விரும்பாதார் வழக்கு மன்றங்களுக்குச் செல்லலாம். அதனால் தடைகள் ஏற்படலாம். ஆனால், தமிழ் மக்கள் தங்களுடைய உயிரினுமினிய திருமுறைகளால் வழிபாடு நிகழ்த்த வேண்டும் அருச்சனை செய்யவேண்டுமென்று கிளர்ந்தெழுவதே தமிழ் வழிபாட்டினைப் பெற ஒரே வழி. நமது மக்கள் உயிரனைய பிரச்சினைகளில் அலட்சியம் காட்டுகிறார்கள். “ஏனோ தானோ” என்று வாழ்கிறார்கள். இந்த அவலநிலையை மாற்றியமைக்கத் தமிழறிஞர்கள் ஓயாது உழைத்திடுதல் வேண்டும்.
சமய - சமுதாயப்பணி மன்றங்களே
பழங்காலத் திருக்கோயில்கள் இறைவன் திருவோலக்கம் கொண்டருளும் திருவருள் நிலையங்களாக விளங்கின; அது மட்டுமன்றி நமது சமுதாயத்தின் பொது இடங்களாகவும் விளங்கின; மக்கட் பணி மன்றங்கள் ஆகவும் விளங்கின. பழங்காலத் திருக்கோயில்களில் தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்களிருந்து தமிழாராய்ந்தனர்; கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் இருந்தன; கலைபயில் கழகங்களிருந்தன; நாடக அரங்குகளிருந்தன; மருத்துவ மனைகள் இருந்தன என்பதைத் தமிழகத்திருக்கோயில்களின் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். ஏன்? பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் “முறை மன்றங்களும்” இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழி நடத்தும் கிராம சபைகள் - ஊர்ச் சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன. இன்றைய நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. அவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகி விட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. நமது சமய நிறுவனங்களாகிய திருக்கோயில்கள் - திருமடங்கள் இந்த வகையான பணி செய்வதில் இடைக்காலத்தில் நெடுந்தொலைவு விலகிவிட்டன. அண்மைக் காலமாக ஓரளவு மாறுதல் ஏற்பட்டு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்த வகையில் தருமபுர ஆதீனமும், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனமும், பேரூர் சாந்தலிங்கர் திருமடமும், சிரவணபுரம் - கெளமார மடாலயமும், மயிலம் பொம்மபுரம் ஆதீனமும், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடமும் செய்துவரும் பணிகள் பாராட்டுதலுக்குரியன. இந்தப் பணியை ஏற்றுக் கொண்ட நிறுவனங்கள் மேற்சொன்ன சிலவேயாம். இன்னும் பல நிறுவனங்கள் இந்த நினைவிற்குக்கூட வராதது வருந்தத்தக்கது. தமிழகத் திருக்கோயில்களில் பல இன்றைக்கு இந்தத் திசையில் திரும்பிப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
அருள்நெறித் திருக்கூட்டம்
1952-ல் தமிழகத்தில் தோன்றிய சமய மறுமலர்ச்சி இயக்கமாகிய அருள்நெறித் திருக்கூட்டத்தின் தத்துவங்கள் - கொள்கைகள் இன்று எங்கும் எதிரொலித்து வருகின்றன. இன்று தமிழகத்தின் திருக்கோயில்கள், பள்ளிகளை நடத்துகின்றன; கல்லூரிகளை நடத்துகின்றன. சிறப்பாக மாண்புமிகு டாக்டர் கலைஞர் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசு இந்த வகையில் முனைப்புக் காட்டி வருகிறது. இத்துறை அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு. கண்ணப்பன் இந்தப் பணிகளில் காட்டும் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது. ஆயினும் நம்முடைய சமுதாயத் தேவைக்குரிய அளவுக்குப் பணிகள் வளரவில்லை. இந்து சமய நிறுவனங்களின் வளத்திற்கேற்றவாறு வளரவில்லை. ஒரு புறம் நிறுவனங்கள் தங்கத்தில் தவழ்கின்றன. பிறிதொருபுறம் அச்சமய நிறுவனங்களைச் சார்ந்த மக்கள் புழுதியிற் கிடந்து புரளுகின்றனர். இந்த இடைவெளி நீக்கப் பட்டாலொழிய சமயத்தின் கொள்கை நிறைவேறாது. இந்துவாகப் பிறந்த ஒருவன் அனாதையாக விடப்படும் அவல நிலையிலிருக்கும் வரை நமது சமயம் ஏற்றம் பெற இயலாது. மனிதன் பெற்ற உணர்வினைப் பாதுகாப்பதே அவனுடைய செயல். தொண்டு இல்லாத வழி, பக்திக்கு ஏது பாதுகாப்பு? மக்கள் இல்லாதபோது ஏது சமயம்? மக்களைத் தழுவியவையாகச் சமய நிறுவனங்கள் இல்லாது போனால் அந்த நிறுவனங்களுக்கு ஏது உயிர்ப்பு? நடமாடும் கோயில்களைப் பேண வேண்டும்; அங்கும் கடவுளை எழுந்தருளச் செய்யவேண்டும். இது திருமூலர் இட்ட பணி.
படமாடுங் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடுங் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடுங் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடுங் கோயில் பகவற்கஃ தாமே[53]
என்னும் திருமந்திரம் அறிந்து உணரத்தக்கது.
திருமடங்களின் தோற்றமும் நோக்கமும்
நமது சமய அமைப்பில் திருமடங்களுக்குத் தனியிடம் உண்டு. பழங்காலச் சமுதாய அமைப்பில் திருமடங்கள் இருந்ததில்லை. திருமடங்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டனவேயாம். நமது சமயநெறி வாழ்க்கையோடிசைந்திருந்த காலத்தில் திருமடங்களின் தோற்றம் அவசியமில்லாம லிருக்கிறது. பின்னர், கால வளர்ச்சியின் காரணமாகவும் அயல் சமய நெறிகளின் ஊடுருவல் காரணமாகவும் சமயப் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய வேண்டியது அவசியம் என்று உணர்ந்த ஞானிகள்-சமுதாய வளர்ச்சியில் சிந்தனை செலுத்திய ஞானிகள்-திருமடங்களைக் கண்டனர். தமிழகத்தின் தலைசிறந்த தாளாளர்களும் மன்னர்களும் சமயப் பாதுகாப்புப் பணி கருதி நிறையப் பொருள்களைத் திருமடங்களுக்கு அளித்தனர். திருமடங்களின் தலையாய பணி, சமயப் பாதுகாப்பேயாம். சமயப் பாதுகாப்பு என்பது சமயத்தை, தத்துவங்களை மட்டும் பாதுகாப்பதன்று. கோவிலையே பாதுகாப்பது என்பதுமன்று. நமது சமய நெறியில் நின்றொழுக வேண்டிய மக்களை அறியாமையினின்று விலக்கி, அறிவு நெறியில் ஆற்றுப்படுத்தி அருளார்ந்த சமய அனுபவத்தில் கொண்டு வந்து நிலை நிற்கும்படி செய்தலேயாம். மக்கள் மன்றத்தில் சமய உணர்வைப் பாதுகாப்பதே.
திருமடங்களின் இன்றைய நிலை
சாதாரண சராசரி மக்களிடம் சமய வாழ்க்கையின் தேவையை உணர்த்துவதும், சமய உணர்வைப் பெற்றவர்களுக்குத் 'தீக்கை' முதலியன செய்வித்து, அவர்களை அனுபவ நிலைக்கு அழைத்துச் செல்வதும் திருமடங்கள் செய்யவேண்டிய பணிகள். இன்று அந்தப் பணிகளைத் திருமடங்கள் செய்யவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. திருமடங்கள் 'தீக்கை' செய்விப்பதையே நிறுத்தி விட்டன. அண்மையில் கரூரைச் சார்ந்த அன்பர் ஒருவர் ‘தீக்கை' பெற்றுச் சிவபூசை செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன் ஒரு திருமடத்திற்குச் சென்றாராம். அத் திருமடத்தின் படைபரிவாரங்கள் திருமடத்தின் தலைவரைக் கண்டு கொள்ள அனுமதிக்காமலேயே, “இங்கே உங்களுக்கெல்லாம் தீக்கை செய்ய மாட்டார்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். இஃது என்ன கொடுமை? மக்களைச் சந்திக்க - மக்களுக்கு அறிவூட்ட, பக்தியுணர்வை வழங்கத் தோன்றிய திருமடங்கள் இன்று திசைமாறி இருக்கின்றன. ஒரு சில மடங்களில் ஓரளவு மாறுதல் ஏற்பட்டு இருக்கிறதென்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த மாறுதலும் கூட வளர்ந்த சமுதாயத்தினருக்குப் பயன்படும் அளவே தவிர, வளர வேண்டிய சமுதாயத்திற்குப் பயன்படத்தக்க வகையில் அமையவில்லை. இந்து சமூகத்தில் எண்பது விழுக்காடு மக்கள் பள்ளத்தில், படுகுழியில் கிடக்கின்றனர். அவர்களுடைய பொறிகளுக்குப் பொருளில்லாமல் போய்விட்டது; புலன்கள் செயலற்றுக் கிடக்கின்றன. வெற்று மனிதர்களாக அரசை நம்பி, ஒரு சில செல்வர்களுடைய தாராள மனப்பான்மையை நம்பி, ஏழைகளாக அவர்கள் செத்துக் கொண்டிருப்பதை நினைத்தாலே நெஞ்சம் வேதனையடைகிறது! ஒருபுறம் வாழ்வாரோடு கூடிக்குலாவிப் பொன்னாடைகளை வழங்கிக்கொள்ளும் இவர்கள் ஏன், புழுதியில் கிடக்கும் மனிதர்களைப் பார்க்க மறுக்கிறார்கள்? ஒரு சமயத்தைச் சார்ந்த மக்கள் அறியாமைப்படுகுழியில் கிடக்கும்பொழுது, அந்த மக்கள் ஞானசூனியர்களாக இருக்கும்பொழுது திருமடங்கள் ஏன் என்ற வினா எழுவது இயற்கைதானே.
தமிழ்நாட்டுத் தெய்வீகப் பேரவை
இந்த வேதனை தரத்தக்க சூழ்நிலைக்கு நடுவே 1965-ல் ஒரு சிறு ஒளிக்கீற்று பிறந்தது; இந்து சமுதாயத்திற்கு நம்பிக்கையைத் தந்தது. அதுதான் முன்னாள் முதலமைச்சர் பாராட்டுதலுக்குரிய மாண்புமிகு பக்தவத்சலம் அவர்களின் அரிய முயற்சியில், திருமுறைக்காவலர் பாராட்டுதலுக்குரிய முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் திருமிகு சாரங்க பாணி முதலியார் அவர்கள் இனிய முயற்சியில் தொடங்கிய தமிழ்நாட்டுத் தெய்வீகப் பேரவை, அது இன்று தமிழகத்தின் ஒளிமிக்க-ஆற்றல் படைத்த இயக்கமாக வளர்ந்து வருகிறது. ஆனாலும் “உழுத சாலில் உழும்” இயல்பு நம்மை விட்டு நீங்கவில்லை. ஆதலால், பேரவையின் பணிகளில் நமது சமயத் தலைவர்கள் தேவைக்குரிய ஆர்வம் காட்டவில்லை. ஏன்? தமிழக அரசு காட்டும் ஆர்வத்தைக்கூட காட்டவில்லை. பாராட்டுதலுக்குரிய அறநிலைய ஆணையர் திருமிகு கே.எஸ். நரசிம்மன் அவர்கள் காட்டுகிற அளவுக்கூட ஆர்வத்தைக் காட்டவில்லை. தொடக்கக் காலத்திலிருந்தே வேறுபாடுகளே விழுமிய கொள்கையாகக் கொண்டிருக்கும் சமயத்தினர் இசைந்து வரவில்லை. சைவ சமயத் தலைவர்கள் ஓரிருவர் தமிழக அரசு கொணர்ந்த அருச்சகர் வைணவ மசோதாவின் வாயிலாக விலகியும் விலகாமலும் நிற்கின்றனர். அருச்சகர் மசோதாவை நாம் எதிர்க்க வேண்டு மென்பது அவர்கள் விருப்பம். ஆனால் அவர்கள் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. ஏன்? பேரவையிலேயே கூட இது போன்ற சமய சமுதாயத் தொடர்பான செய்திகளை விவாதித்து முடிவு எடுக்கும் அளவுக்குக்கூட அவர்கள் முன் வருவதில்லை. கடந்த கால் நூற்றாண்டாகச் சாதிவேறுபாடற்ற சமுதாயத்தை நமது சமயத்தின் பெயரால் அமைத்திட வேண்டும் என்று ஓயாது பேசிவந்த நாம் அந்த மசோதாவை எதிர்ப்பது எங்ஙனம்? வேறு சிலருக்கு அக்கறையில்லை. இந்த நிலையில் பேரவை வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமயத்தலைவர்களின் நிறுவன நிறுவனமாகத் தோன்றிய பேரவை இன்று இலட்சோபலட்சம் மக்களின் இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேரவையைக் கட்டிக் காப்பாற்றுவார்கள்; அவர்களுடைய மாநாடுகள் சமயச் சீர்திருத்தங்களைப் பற்றி எண்ணும்; முடிவெடுக்கும்; செய்து முடிக்குமென்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
சமயத் தலைவர்களின் அவலநிலை
திருமடங்கள் இன்னும் சிறப்பாகப் பேரவைப் பணிகளுக்கு ஒத்திசைந்து அதன் பணிகளைச் செய்ய வேண்டும். சமயத் தலைவர்கள் தங்களுக்குள் ஒருவரை யொருவர் வழி நடத்திக் கொள்ளவும், சமயப்பணிகளை மேற்கொள்ளவும் மேலாண்மை செய்து கொள்ளவும் தக்காங்கு பேரவை உருப்பெறுதல் வேண்டும். அங்ஙனம் தனித்தன்மை யிழவாத ஒரு பொதுத் தன்மைக்கு இசைவித்துக் கொள்ள முன்வராது போனால், அவர்கள் புறநெறியாளர்களின் மேலாண்மைக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் வந்து சேரும். அது வருந்தத்தக்க விளைவுகளைத் தரும். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே பொதுத் தன்மையிலிருந்து விலகியதன் விளைவுகளை அவர்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். அரசோடொத்த அருளாளர்களாக இருக்க வேண்டியவர்கள் - அரசினையும் ஆற்றுப்படுத்த வேண்டிய அருளார்ந்த நிலையிலிருக்க வேண்டியவர்கள் இன்று அரசின் கட்டுப்பாட்டுக்காளாகியிருக்கின்றனர். இன்று அரசின் தணிக்கைகளுக்கு ஆட்படுகின்றனர். ஏன்? அரசின் ஒழுங்கு முறைகளுக்கு ஆட்படுகின்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். அதன் காரணமாக அவர்கள், தங்கள் தங்கள் நிலையில் சுதந்திரத்தை இழந்திருக்கின்றனர்; அதனால் சமயத்தைச் சீர்திருத்தும் முயற்சிகளைக்கூட அவர்கள் சிந்தித்துச் செயற்படுத்துவதில்லை. அரசு செயற்படுகிறது- அவர்கள் கட்டுப் படுகின்றனர். நம்முடைய நாட்டுத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலய நுழைவுரிமையைச் சிவபெருமான் வாயிலாகப் பெறவில்லை. தமிழ்நாட்டுச் சட்டசபையின் வாயிலாகப் பெற்றார்கள் என்றால் என்ன பொருள்? அறவுணர்வில் செய்யப்படாத ஒன்றினைச் செய்யும்படி கட்டுப்படுத்துவது சட்டம். சமயத் தலைவர்கள் அறநெறிப்படி செய்யத்தவறிய ஒன்றினைச் சட்டம் செய்யும்படி வற்புறுத்தியது. சட்டம் தோன்றிய பிறகு தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து அமைச்சர்களாக வந்தவர்களுக்குப் பொன்னாடை போர்த்தத் தவறினார்களல்லர். இந்த முரண்பாடுகள் ஏன்?
உடனடித் தேவை
சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமய நெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளாததால் சமுதாயத்தின் அடிமட்டத்தில் கிடக்கும் நம்முடைய சமயத்தைச் சார்ந்த மக்கள் இன்னமும் மத மாற்றங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக மக்கள்தொகை வளர்ச்சிக் குறியீட்டு எண்களைக் காணின், நமது சமய வழிப்பட்ட சமுதாயத்தின் வீழ்ச்சியை உய்த்துணரமுடியும். ஏன் இந்த வீழ்ச்சி? மக்களைத் தழுவி நின்று பேணிப் பாதுகாக்கும் பணியைச் சமய நிறுவனங்கள் மேற்கொள்ளாததால்தானே; ஆதலால், சமய நெறியை உயிர்ப்புடன் பாதுகாக்கவும் சமய வழிப்பட்ட சமுதாயத்தைப் பாதுகாக்கவும் சமய நிறுவனங்களின் இன்றைய நடைமுறையும் ஆட்சி முறையும் துணை செய்யா. துணை செய்யவும் இயலா அவை சாதி வழிப்பட்ட அமைப்புகளாகவும் இயங்கிவிட்டன. அரசும் அவற்றை நேரிய வழியில் நெறி முறைப்படுத்த இயலாத நிலையில் இருக்கிறது. காரணம் அரசு, சமயச் சார்பற்ற அரசு. ஆதலால், அரசு ஏதாவது சமயச் சீர்திருத்தங்கள் - நடைமுறை மாறுதல்கள் உண்டாக்க முயன்றால் முறையீட்டு மன்றங்கள் தலையிடும். ஆதலால் நமது சமயத் தலைவர்களும், சமய நெறியில் நிற்கும் பெரியோர்களும் அறிஞர்களும் உளமார நினைந்து பார்த்து ஒரு மாற்றத்தைக் காண முன் வரவேண்டும். இந்த வகையில் நமது எண்ணத்தில் தோன்றும் சிந்தனைகளைக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
நமது சமயமும் சமுதாயமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பேரவை பல்கலைக் கழக வடிவத்தில், திருமடங்களின் தனித்தன்மைக்கு ஊறு இல்லாத வகையில் அதே பொழுது பொதுத் தன்மைக்கு இசைந்த வகையில் அமைக்கப்படுதல் வேண்டும். திருமடங்களிடையே பொதுத் தன்மைக்கு மாறாக வளர்ந்துள்ள தனித்தன்மை முற்றாக அகற்றப்பட வேண்டும். தன்னுரிமை உணர்வு சாய்க்கப்பட்டுப் பொதுமையுணர்வு மலர வேண்டும். திருமடங்களின் நிதியங்கள் முறையாக மையப்படுத்தப் பெறவேண்டும். அந்த நிதியங்களைக் கொண்டு சமயத்தைச் சார்ந்த மக்களிடையில் வாழ்வுப் பணியும் சமயப் பாதுகாப்புப் பணியும் முறைப்படுத்தப் பெற்றுச் செய்யப்பெறவேண்டும். இன்று, திருமடங்களைச் சார்ந்து மக்கள் மன்றத்தில் உலாவரும் தொண்டர்கள் இல்லை. அங்கேயே தொண்டர்களுக்குப் பஞ்சம்; தக்க இளைஞர்களைத் தவமும் சீலமுமுடையவர்களாக வளர்க்கும் பணிமனைகள் பல தேவை. திருஞானசம்பந்தருடன் பதினாயிரம் தொண்டர்கள் மதுரைக்கு வந்ததாகக் கூறுவர். இன்று நாட்டில் சமய உணர்வுடன் மக்கட் பணியை ஏற்றிருக்கும் துறவிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அதுவும் வழி வழி நிறுவனங்கள் சார்பில் இல்லையென்று கூறலாம். பலரிருக்க வேண்டிய இடத்தில் ஓரிருவர் இருப்பது, உளது போலக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த நல்ல அமைப்பைத் தோற்றுவிக்க நம்முடைய திருமடங்களின் தலைவர்களே முன்வந்து ஏற்றருள வேண்டுமென்பது நம்முடைய பிரார்த்தனை. அவர்கள் அதை ஏற்றுச் செய்யத் தவறினால் நம்முடைய இளைஞர்கள், நம்முடைய அறிஞர்கள் விவிலியத்தின் மார்ட்டின் லூதர் போலப் புரட்சியைச் செய்தாவது அந்த நிலையை உருவாக்க வேண்டும். இது நமது விருப்பம், வேண்டுகோள்.
நம் திருக்கோயில்களும் உதிரித் தன்மையுடையனவாக விளங்குகின்றன. அவற்றையும் ஒருமைப்பாடுடையனவாக ஆக்கவேண்டும். காலத்தின் எல்லைகளில் செய்த தவறுகளின் காரணமாக இன்று நமது சமய நிறுவனங்கள் சமயச் சார்பற்ற அரசின் ஒரு பகுதியாகப் போய்விட்டன. இதனால், நமது சமயப் பாதுகாப்புப் பணிகளுக்கு உரிய வாய்ப்பு அருகியிருக்கிறது. அறநிலைய அமைச்சர் சமய நிறுவனங்களின் உடைமைகளைப் பாதுகாப்பார்; ஆனால் உணர்வுகளைப் பாதுகாக்க முடியாது. அறநிலைய ஆட்சித்துறை சமய நிறுவனங்களைக் கண்காணிக்கும்; ஆனால் சமயத்தை வளர்க்காது. இது இன்றுள்ள உண்மையான நிலை. நிறுவனங்கள்-உடைமைகள் சமய வழிப்பட்ட சமுதாயத்தைச் சமய வழியில் பாதுகாக்கவும், சமய உணர்வில் பாதுகாக்கவும் உரிய கருவிகளேயாம். உடல் பாதுகாக்கப்படும், உயிர் பாதுகாக்கப்படாது என்று சொன்னால் என்ன பயன்? ஆதலால், திருமடங்கள் திருக்கோயில்களின் இணைப்பு மையமாகப் பல்கலைக் கழக வடிவமைப்பில் ஒரு தன்னாதிக்கமுள்ள பொதுவான அரசின் மேலாண்மைக்கு இசைந்தவாறமையும் வகையில் பேரவைக்கு உருவம் கொடுக்க வேண்டும். அந்த அமைப்பு சமய நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த அமைப்பே அவ்வப்போது நமது சமயநெறியில் காணவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் சமுதாய மற்றங்கள் குறித்தும் சிந்தனைசெய்து தக்கவாறு வழிநடத்த வேண்டும். நம்முடைய மூவேந்தர் காலத்திற்குப் பிறகு நம்முடைய சமய நெறியையும் சமுதாய அமைப்பினையும் பற்றி எண்ணிச் சிந்தித்துத் தக்க மாற்றங்களைச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பெறவில்லை. இங்கொருவர் அங்கொருவராகச் சிந்திப்பவர்கள் சிலர் தோன்றினர். அவர்களில் வடபுலத்தில் இராமகிருட்டினரைத் தொடர்ந்து விவேகானந்தரும், தென் புலத்தில் வள்ளலாரும் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்கள். இவர்களுடைய சிந்தனையை வழி வழி வந்த சமய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏன்? அவர்கள் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளக்கூட அவைகள் மறுத்தன; மறுத்துக் கொண்டிருக்கின்றன. ஆதலால் சமயத் தலைவர்கள் தம்முள் கலந்து முடிவெடுத்துச் சமுதாயத்தை வழி நடத்த முன் வரவேண்டும். அதுபோலவே தமிழகத்தில் நமது சமுதாய அமைப்பில் தோன்றும் திருக்கோயில்களையும் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும். நம்முடைய வழிபடும் திருமேனிகளை, திருக்கோயில்களைச் சந்து பொந்துகளிலும் சாலை ஓரங்களிலும் சிலர் தம் பிழைப்புக்கருதி, மற்றவர் அலட்சியப்படுத்துமளவுக்கு அமைத்து விடுகிறார்கள். இதற்கு ஒரு நியதி இல்லை. அவற்றை முறைப்படுத்துவதற்குரிய நியதிகளையும் உருவாக்க வேண்டும். புதிய கோயில்களை எழுப்பச் சமய நிறுவனங்களின் தலைமையிடமாகிய பேரவையின் ஒப்புதல் பெறவேண்டும் என்ற வரன்முறை தேவை. சமுதாயப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். சமயப் பணிகளைச் செய்து சமயத்தைக் காக்கவேண்டும். அவ்வப்பொழுது சமுதாயத்தை உரியவாறு வழிநடத்த வேண்டும். இது இன்றைய உடனடியான தேவை. குடிகளைத் தழுவிய கோயில்; கோயிலைத் தழுவிய குடிகள்.
மீண்டும் நமது திருக்கோயில்களில் ஊர்ச் சபைகள் அமைய வேண்டும். அச்சபை சாதி, குல, இன, அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அமையவேண்டும். தன்னியல்பாகத் “தெரிதல் முறை”யில் அமையவேண்டும். அச்சபை திருக்கோயில் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டு செய்யவேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் வழிபடுவோர் பட்டியல் இருக்கவேண்டும். அந்தப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் அந்தந்தத் திருக்கோயில்களில் இறைவனை வழிபாடு செய்யவும், வழிவழித் திருத்தொண்டு செய்யவும்வேண்டும். நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏதாவதொரு திருக்கோயிலில் தொண்டுரிமை கொண்டவர்களாக நலன்களை நாடிப்பெறும் உரிமையுடையவர்களாக இணைக்கப்பெற வேண்டும். வேறொரு பெயரில் சொன்னால் நம்முடைய சமுதாய மக்கட் கணக்குப் பட்டியலாக அந்த வழிபடுவோர் பட்டியல் அமையவேண்டும். திருக்கோயிலின் ஊர்ச்சபை ஒவ்வொருவரிடத்தும் தொண்டு கொள்ளவேண்டும்; நிதியும் பெறவேண்டும். ஊர்ச்சபையின் தொண்டின் மூலம் கோயிலுக்கும் குடிகளுக்குமிடையேயுள்ள இடைவெளி குறையவேண்டும்; பிரிக்கமுடியாதவாறு நல்றுறவால், பிணைக்கப்படவேண்டும். இந்தத் தொண்டு முறை சிவபெருமானே செய்துகாட்டிய தொண்டுமுறை. இறைவன் உயிர்களைத் தொடர்ந்து சென்று அவற்றைப்பின் தொடர்ந்து நின்று பாதுகாக்கிறான் என்பதைத் திருவாசகம்,
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே[54]
என்ற பாடலில் சிறப்பித்துக் கூறுகின்றது.
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை, அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்[55]
என்பதும் திருவாசகம். எனவே நமது சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரையும் திருக்கோவில் வழிபாட்டில் கலந்து கொள்ளும்படி செய்யவேண்டும். அங்கு நிகழ வேண்டிய தொண்டுகளில் அவரவர் தகுதிக்கேற்பப் பங்கேற்கும்படி செய்யவேண்டும். அங்ஙனம் பங்கு கொள்ளத் தவறுபவர்கள் திருத்தி வழி நடத்தப்பெற வேண்டும். திருக்கோயில் திருப்பணிக்கு ‘யார் யார்’ வந்தார் என்று கணக்கெடுக்கும் முறை இருந்தது. ‘யார் யார் வந்தார்’ என்ற திருவிசைப் பாவினால் அறியலாம். முன்னர்க் கூறப்பட்ட முறையின் வழி சமய வழிப்பட்ட சமுதாயப் பணியைச் செய்யப் பயிற்சி பெற்ற துறவிகள் ஊர்ச்சபையின் இயக்குநர்களாக அமைவார்கள். ஊர்ச்சபை, அந்தக் கிராமத்திலுள்ள அனைத்து மக்களின் கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, பிணி நீக்கம், நல்வாழ்க்கை அமைத்துத் தருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும், கூட்டுறவு முறையில் தொழிலமைப்புகளைத் தோற்றுவித்து வாழ்க்கையில் வளம் காணச் செய்யும். கிராம சமுதாயத்தின் வளத்தைப் பெருக்கும்; சில வழக்குகளைத் தவிர்க்கும். ஒரோவழி மன மாறுபாடு தோன்றி விட்டால் தாமே தீர்வுகண்டு சமாதானம் செய்து வைக்கும் பணியையும் ஊர்ச்சபைகள் செய்யும், இந்த ஊர்ச்சபைகள் மாவட்டச் சபைகளோடு உறவு கொள்ளும். மாவட்டச் சபைகள் மாநில சபைகளோடு உறவு கொள்ளும். இந்தப் படிமுறையில் வளர்ந்தவுடன் எந்த ஓர் இந்துவும் அனாதையாக இருக்க மாட்டான் ஏழையாக இருக்கமாட்டான். அவனுடைய வாழ்க்கைக்குப் பாதுகாப்பு இருக்கும். எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் திருக்கோயிலை மையமாகக் கொண்டு கலந்து மகிழ்ந்து வாழ்வார்கள். மத மாற்றங்களுக்கு ஆளாக மாட்டார்கள். நமது மரபுகள் காப்பாற்றப்படும். நமது சமயத் தலைவர்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருப்பார்கள். ஞானாசிரியர்களாக இருப்பார்கள். திருத்தொண்டர்களாக இருப்பார்கள். உடைமைகளுக்கு உரியவர்களாக இல்லாமல் உயிரினத்துக்கு உரிமையுடையவர்களாக இருப்பார்கள். அந்தப் பொற்காலம் மலர்க.
நாயன்மார் அடிச்சுவட்டில்
நமது சமய வழிப்பட்ட தனி மனித வாழ்க்கைமுறை, சமுதாய வாழ்க்கை முறை ஆகியன எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கும் ஒரு சிறந்த காப்பியம் பெரியபுராணம். சங்க காலத்தில் நிலவிய விழுமிய வாழ்க்கையை, நீண்ட இடைவெளிக்குப் பிறகும் தலைதடுமாறிப் போகாமல் பாதுகாத்தவர்கள் பெரியபுராணத்தில் இடம் பெற்றிருக்கும் சான்றோர்களே!
திருமருகலில் திருஞானசம்பந்தர் இள வணிகனுக்கும் வணிகப் பெண்ணுக்கும் நிகழ்த்திவைத்த திருமணத்திற்கும், அகனைந்திணை ஒழுக்கத்தின் வழி சங்க காலத்தில் நிகழ்ந்த திருமணத்திற்கும் என்ன வேறுபாடு?
சங்ககாலத்துக் கொடைமடம்பட்ட புரவலர்களுக்கும் விதைக்கப்பட்ட வித்தை அமுதாக்கி விருந்தளித்துக் கொடை மடம்பட்ட இளையான்குடி மாறனார்க்கும் யாதொரு வேறுபாட்டையும் காண முடியவில்லை.
அவிநாசியில் ஆரூரர் கண்டு வேதனைப்பட்ட காட்சிக்கும் பக்குடுக்கை நன்கணியார் கண்ட காட்சிக்குமிடையே வேறுபாடே இல்லை.
பெரியபுராணத்திற்குப் புராணம் என்பது பெரிய புராணத்தில் வரும் பாத்திரங்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவை: வரலாற்றுப் புகழ்ச் சிறப்புடையவை. திருத்தொண்டர் வரலாறு படித்தற்குரியது மட்டுமன்று ஓதுதலுக்கும் உரியது: ஓதுதலுக்குரியது மட்டுமன்று வாழ்ந்து காட்டுதற்குரியது. ஆனால் வழக்கம்போல நமது நாட்டில் பெரிய புராணம் படிக்கத்தான் பயன்படுகிறது. வயிற்றுப் பசியுடையவர்களில் கெளரவமானவர்கள் பெரியபுராண நாயன்மார்களைக் குருபூசை விழாக் கொண்டாடும் பாத்திரங்களாக்கி உண்டி நாலு விதத்தால், அறுசுவையால் ஆர்ந்து மகிழ்கின்றனர். திருத்தொண்டர் புராணத்தின் பயனாகிய அன்பு வளர வில்லை; பக்தி வளரவில்லை; திருத்தொண்டு வளரவே இல்லை. நமது இனம் உயிர்ப்புள்ள இனமாக வளர்ந்திருக்கு மேயானால் அறுபான்மும்மை நாயன்மார்கள் செய்த திருத்தொண்டுகளையொட்டிய திருப்பணி இயக்கங்கள் தோன்றியிருக்க வேண்டும். கண்ணப்பர் காலத்திலேயே கண்ணொளி வழங்கும் இயக்கம் தோன்றியிருக்க வேண்டும்.
கண்ணப்பர் காலத்திலேயே நாயன்மார்கள் வரலாற்றில் பலமுனைச் செயற்பாடுகள் அமைந்திருந்தன; அறிவியல் நுணுக்கங்கள் அமைந்திருந்தன. ஆனால் அவற்றை எல்லாம் நாம் மறந்துவிட்டோம்; ஆதலால் நாடு பயனொன்றும் பெறவில்லை. கண்ணப்பர் வரலாற்றில் சிவபெருமானே வலியுறுத்திக் காட்டிய “எல்லாரும் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை”யைப் பெற்றோமில்லை. திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன்தன்னைச் சிவனெனவே தேறி உயிர்ப்புடன் வழிபடும் உணர்வும் வளரவில்லை. அங்ஙனம் வளர்ந்திருப்பின் இன்று திருவுருவச் சிலைகள் திருடு போகா. வருவாய் தரும் திருக் கோயில்களின் திருவுருச் சிலைகளைப்போன்று வருவாய் இல்லாத திருக்கோயில்களின் திருவுருவச் சிலைகளைக் கவனிப்பதில்லை. அங்கு அர்ச்சகர்களும் பணியாற்ற வேண்டிப் போட்டிபோட மறுக்கின்றனர். ஆதலால் உண்மையில் அவரவர் ஆவல்கள் தொழப்படுகின்றனவே தவிர ஆண்டவன் தொழப்படவில்லை; அகநிலை அன்பிலும் வளரவில்லை. “பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றும்” பண்பிலும் வளரவில்லை, சரி, பக்திதான் வளரவில்லை; அறிவியலாவது வளரக்கூடாதா? கண்ணப்பர் காலம் சற்றேறக்குறைய கி.மு. 42-க்கு முற்பட்டது என்று கூறு கின்றனர். அக்காலத்தில் ஒருவர் கண்ணைப் பிறர் ஒருவர்க்கு எடுத்து வைத்துக் கண்ணோய் தீர்க்கும் முறை உலகில் வேறு எந்த நாட்டிலும் இருந்ததில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பிற நாட்டறிஞர்கள், விலங்குகளிடையே இந்த மருத்துவச் சோதனையைச் செய்யத் தொடங்கினர். பின்னர்ப் படிமுறையில் வளர்ந்து இன்று ஒருவர் கண்ணை மற்றொருவருக்குப் பொருத்திக்கண்ணொளி பெறச் செய்யும் மருத்துவமுறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இன்று இந்த வெற்றி தமிழின் பெயரால் இல்லை; தமிழர் பெயரால் இல்லை; தமிழர் சமயத்தின் பெயரால் இல்லை; கண்ணப்பர் திருப்பெயராலும் இல்லை. ஏன், இந்த மருத்துவ முறையை முதன் முதலில் காளத்தியப்பனிடம் சோதனைப்படுத்தி வெற்றிகண்ட கண்ணப்பர் பெயர், கண் மருத்துவத் துறையில் ஒப்புநோக்கிற்குக் கூட வரவில்லை. வராததற்குக் காரணம் நம்மவர் உறக்கமே நாயன்மார்களைப் போற்றுவது என்பது அவர்களுக்குச் சிலை எடுப்பது மட்டுமன்று; விழா எடுப்பதுமட்டுமன்று; அவர்கள் வரலாறுகளைப் பட்டிமன்றங்களாக்கிவிடுவது மட்டுமன்று; இவையெல்லாம் முயற்சியில் முனைந்து ஈடுபடவும், உள்ளக் கிளர்ச்சி பெறவும் துணை செய்யலாம். ஆனால் உண்மையாக நாயன்மார்களைப் போற்றும் வழி, அவர்கள் வழி நிற்றலேயாம். கண்ணப்பர் அடிச்சுவட்டில் கண் மருத்துவத் துறையை நாம் மேற்கொண்டிருக்க வேண்டும். கண்ணப்பர் பெயரால் நூற்றுக்கணக்கான கண் மருத்துவ மனைகள் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் அவை நிகழவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கண்ணொளித் திட்டத்தைக் கொண்டுவந்த டாக்டர் கலைஞர் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசை நன்றியுணர்வுப் பெருக்கோடு பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம். இன்று கண் மருத்துவத்துறை நிபுணராக விளங்கும் மதுரை டாக்டர் திருமிகு வேங்கடசாமி அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏன்? மதுரை அரசினர் எர்ஸ்கின் மருத்துவ மனையில் கண் மருத்துவத் துறையின் விரிவாக்கம் பெற்ற புதுப்பகுதிக்குக் கண்ணப்ப நாயனாரைப் போற்றும் வகையில் “கண்ணப்ப நாயனார் கண் மருத்துவமனை” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
தண்டியடிகள் அடிச்சுவட்டில் அவரை அடியொற்றியே திருக்குளங்களைத் துய்மை செய்யும் பணியை மேற்கொண்டிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள திருக்குளங்கள் தூர்ந்து போயிருக்குமா? வழுக்கும் பாசிதான் வருமா?
திருவிழிமிழலையில் நிகழ்ந்த பஞ்சம் நீக்கும் பணியை அடியொற்றி மேற்கொண்டிருந்தால் நமது நாட்டில் பஞ்சம் வருமா? ஒரு சிலர் “இன்றும் இறைவன் படிக்காசு கொடுத்தால் அந்தப் பணியைச் செய்யலாம்” என்பர். ஆனால் நாம் உறுதியாகக் கூறுகிறோம், “இன்று இறைவன் படிக்காசு தரமாட்டான்” என்று! ஏன்? தரக்கூடாது என்பதன்று. அன்று அப்பரடிகள் மேற்கொண்டிருந்த வாழ்க்கை, ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கிய வாழ்க்கை, பழுதிலாத்துறவு வாழ்க்கை! அவர் மடாதிபதியில்லை. அவரிடத்தில் காசுகள் இல்லை. அதனால் இறைவன் படிக்காசு தந்தான். இன்றைய மடாதிபதிகளிடமோ நிறையச் செல்வம் இருக்கிறது. அதற்கு என்ன செலவு என்றே புரியாதபொழுது இறைவன் எப்படி மேலும் தருவான்? இன்றைய சமய நிறுவனங்களின் வரவு-செலவு, தணிக்கைக்குரியனவாக இருக்கின்றனவே யன்றித் தகுதிக்குரியனவாக இல்லை. ஆட்சிக்குரியனவாக இருக்கின்றனவேயன்றி அறநெறிக்கு இசைந்தனவாக இல்லை. ஆதலால், இறைவன் வழங்கிய பேறுகள் முழுமையாகப் பயன்படுத்தப்பெற்று மேலும் நியாயமான தேவை ஏற்படுமானால் இன்றும் தருவான். ஆதலால் உண்மையில் நம்முடைய சமயநெறி வளரவும், சமுதாயம் மேம்பாடடையவும் நாம் மேற்கொள்ள வேண்டியன திருத்தொண்டர் வரலாற்றின் வழி வாழ்தலும், அவர்களின் நெறி வழிப்பட்ட பணிகளை மேற்கொள்ளுதலுமேயாம்.
தொகுப்புரை
நமது சமயம் இந்தியத் துணைக்கண்டத்தின் தனிச் சமயம். கோட்பாடுகளில் வேறுபாடுகளிருந்தாலும் உயர்ந்த ஒருமை நலம் கருதி இந்து சமயம் என்ற அமைப்பை ஏற்றுக் கொள்ளலாம். அவ்வழி நமது வாழ்வியலுக்கு ஒவ்வாத முரண்பாடுகளை அறவே அகற்றவும் வேண்டும்.
நமது சமயத்தில் சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் திருக்கோயிலில் வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது. அன்று சிறுமையின் சின்னங்களாகிய எல்லைக் கோடுகள் இருந்ததில்லை. பழங்காலத் திருக்கோயில்களில் எல்லோரும் சென்று வழிபாடு செய்துகொள்ளும் உரிமையிருந்தது. ஒரு சிலர் இலாபம் கருதி இடையில் அந்த உரிமைகளைப் பறித்திருக்கிறார்கள். சிவாசாரியர்களின் கடமை திருக்கோயில் உள்ள இறைவடிவை வழிபாட்டுக் குரியதாகச் செய்துவைப்பதே! வடபுலத்திலுள்ளது போல அனைவரும் திருக்கோயில் கருவறைக்குள் சென்று புனலும் பூவுமிட்டு வழிபடும் உரிமையைக் கண்ணப்பர் பெயரால் அடைந்தே தீரவேண்டும். அவரவர் வழிபாடு செய்யும் பொழுதுதான் மெய்யுணர்வு அரும்ப முடியும்.
வழிபாட்டிற்குத் தமிழ் உரிய மொழி. இறைவனைத் தமிழால் பாடித் துதி செய்தல் நூறுகோடி அருச்சனைக்கு ஒப்பானது. அதனாலன்றோ இறைவன் சுந்தரரிடம் “அருச்சனை பாட்டே யாகும்” என்று அருளிச்செய்து பாடச் சொன்னான். தமிழோடு இசை கேட்கும் இச்சையால் நாளும் காசுகள் கொடுத்து அப்பர், சம்பந்தர் ஆகியோரின் தமிழைக் கேட்டிருக்கிறான். அங்ஙனம் இறைவன் விரும்பிக் கேட்ட தமிழைக் கேளாது தடை செய்ததனால்தான் போலும் திருக்கோயில்களில் திருவருள் விளக்கம் சிறப்பாக அமையவில்லை. இறைவனைத் தமிழில் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை நமது பிறப்புரிமை. அதை நாம் அடைந்தே தீரவேண்டும். தமிழ் வழிபாட்டு இயக்கம் மொழியியக்க மன்று. அதன் நோக்கம் பக்தியை வளர்ப்பதேயாகும். தமிழ் வழிபாட்டு இயக்கத்தை மாதவச் சிவஞான முனிவர் முதலிய சான்றோர்களும் ஆதரித்துள்ளனர்.
பழங்காலத் திருக்கோயில்கள் சமுதாயத்தின் கேந்திரங்கள். சமுதாயத்தைக் கண்ணின் இமைபோல் பாது காக்கும் நிறுவனங்களாக அவை விளங்கின. அதனால்தான் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி பிறந்தது. இடைக்காலத்தில் நமது சமய நிறுவனங்களாகிய திருக்கோயில்களும் திருமடங்களும் இந்தப் பணிகளைச் செய்வதிலிருந்து விலகிவிட்டன. அண்மைக் காலத்தில் ஓரளவு மாறுதல் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் தருமபுரம் ஆதீனம் செய்துவரும் பணி பாராட்டுதலுக்குரியது. மேலும் திருப்பனந்தாள் காசிமடமும், பேரூர் சாந்தலிங்கர் திருமடமும், சிரவணபுரம் கெளமார மடமும், மயிலம் பொம்மபுரம் ஆதீனமும் செய்துவரும் பணிகள் நினைவுகூரத்தக்கன. ஆயினும், பணி செய்ய வேண்டிய வளம்பெற்ற திருமடங்கள் பல இன்னும் வாளா உறங்குகின்றன. இங்ஙனம் வளர்ந்துள்ள மாறுதல்கூட பணிகளின் தேவை அளவுக்குரிய மாறுதலன்று; வளத்தின் அளவுக்குரிய மாறுதலுமன்று.
நமது சமுதாயத்தில் சமய நிறுவனங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை-படாடோபமான திருவிழாக்கள் நடத்துகின்றன. அதேபோழ்து நமது சமுதாயத்தைச் சேர்ந்த பலகோடி மக்கள் ஊமையராய்ச்-செவிடராய்ப் பாழ்பட்டுப் புழுதியில் கிடப்பதைச் சமயத் தலைவர்கள் உணரத் தவறுகின்றனர். மக்களைத் தழுவி வளர்க்காத சமய நிறுவனங்கள் எதற்காக? நடமாடும் கோயில்களை நாடிப் போற்றாத நிறுவனங்கள் எதற்காக? என்ற வினாக்களை வரலாறு எழுப்பத்தான் செய்யும். இனி வரலாறு எழுப்ப இருக்கும் வினாக்கள் சொற்களாகத் தோன்றா; அருளியல் வழிப்பட்ட புரட்சியாகத்தான் தோன்றும். அது சீரமைப்பைச் செய்தே தீரும்.
வல்லாண்மையுடையவர்களுக்கும் அஃதில்லாதவர் களுக்குமிடையே நடுவாக நின்று நீதியைக் காப்பாற்ற வேண்டிய சமயத் தலைவர்கள் வல்லாண்மையுடையவர் களோடு கூட்டுச் சேர்ந்துவிட்டனர். நடுவாக இருக்க வேண்டிய சமயத் தலைவர்கள் நடுவிகந்து வாழ்வோரிடையே கூடிக் குலவுகின்றனர். தொழுத கை துன்பம் துடைக்கும் தூயநெறியில்லை.
இந்த இடுக்கண் நிறைந்த சூழ்நிலையில் பேரவை தோன்றிற்று. பேரவை முறையாக வளர்ந்து வருகிறது. மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. ஆயினும், சமயத் தலைவர்கள் காட்டும் ஆர்வம் போதாது. மேலும் நிறைந்த ஆர்வம் காட்ட வேண்டும்.
சமயச் சார்பற்ற அரசு உடைமைகளைத்தான் காப்பாற்றும், உணர்வுகளைக் காப்பாற்ற முடியாது. ஆதலால், இந்து அறநிலையச் சட்டத்தின் ஆட்சிமுறை உடைமைகளைக் காப்பாற்றுகிறது. உணர்வுகளைக் காப்பாற்றவில்லை. ஆதலால் சமய உணர்வுகளையும் சமுதாயத்தையும் ஒருசேரக் காப்பாற்றும் அளவுக்குப் பேரவை பல்கலைக்கழக வடிவத்தில் தன்னாதிக்கமுள்ள நிறுவனமாக அமைய வேண்டும். அந்த அமைப்பு சமயச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருமடங்களின் தலைவர்கள் காலத்திற்குத் தேவையான பொதுமைக்கு இசைந்து வரவேண்டும். இது தவிர்க்க முடியாத பணி.
ஒவ்வொரு திருக்கோயிலும் குடிகளைத் தழுவியதாக விளங்கவேண்டும். குடிகள் கோயிலைத் தழுவி வாழ வேண்டும். இந்தப் பொற்காலத்தை நாம் படைத்திட வேண்டுமாயின் நாயன்மார்கள் அடிச்சுவட்டில் பணிகளைத் தொடங்கவேண்டும்; திருத்தொண்டுகளைத் தொடங்க வேண்டும். அதுவே இன்று செய்யவேண்டிய பணி; முதற்பணி.
மேற்கோள் விளக்கம்
1. | திருஞானசம்பந்தர், திருவிராமேச்சுரப்பதிகம், 2. |
2. | திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 31. |
3. | திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 135. |
4. | திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 136. |
5. | திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 157. |
6. | திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 70. |
7. | திருத்தொண்டர் புராணம், திருஞான சம்பந்தர் புராணம், 24, |
8. | தொல். செய்யுள். 178. |
9. | தொல். செய்யுள். 178. நச்சினார்க்கினியர் உரை. |
10. | காஞ்சிப்புராணம், தழுவக், 245, |
11. | திருமந்திரம், 1821. |
12. | திருவாசகம், பிடித்தயத்து-9 |
13. | திருவாசகம், திருவெம்பாவை, 17 |
முன்னுரை
திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் ஒரு சிறந்த அறநூல்; முழுதுறழ் அறநூல் மறைநூல்; பொதுமறை நூல்: மனிதராகப் பிறந்தோர் பேசும் எம் மொழியிலும் இது போன்றதொரு இலக்கியம்-அறநூல் தோன்றியதில்லை. புறநானூறு ‘அறம்பாடிற்றே’[56] என்று திருக்குறளைச் சிறப்பித்துக் கூறுகிறது. உமாபதி சிவம் ‘மெய் வைத்த சொல்’[57] என்று பாராட்டுவார். இருபதாம் நூற்றாண்டில் மனித இதயம் படைத்த மாமனிதர் ஆல்பர்ட் சுவைட்சர், “திருக்குறளுக்கு ஒப்பான நீதி நூல் எதுவுமில்லை” என்று புகழ்ந்துள்ளார். திருக்குறள் கற்பனையில் தோன்றியதன்று. திருக்குறளில் அதிசயம் கிடையாது; அற்புதம் கிடையாது; புனைந்துரையில்லை. மனித உலகத்தை வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நூல். “இது” என்றும் “அது” என்றும் இரண்டாட்டுகின்ற சமயக் கணக்கர் வழியினின்றும் விலகிய பொது நூல். ஓருலகம் படைக்க வேண்டுமானால் அதற்குரிய நூல் திருக்குறளேயாம். திருக்குறள் நெறி, வையகத்தில் வாழ்க்கையாக மலருமானால், வீட்டுக்கு வீடு இடையில் இருக்கும் சுவர்கள் இடிபடும். நாட்டுக்கு நாடு இடையில் உள்ள எல்லைக் கோடுகள் மறையும். உலகம் ஒன்றாகும். மானிடச் சாதி ஒரு சாதியாக உருவெடுக்கும். எங்கும் பொதுமை நிலவும்! எல்லோரும் வாழ்வர்; இத்தகு பெரு நூலை- அரிய நூலைத் தந்த திருவள்ளுவர் திருவடிகளைப் போற்றுவோமாக அவர் காட்டிய வழி வாழ்வோமாக.
மறை நூல்
ஒரு சமுதாயத்தை வழிநடத்தி வாழ்விக்கும் சமய நெறிக்கு மறைநூல் வேண்டும். மறை என்பது தமிழ்ச் சொல். அதனையே வேதம் என்றும் கூறுவர். நமது சமயத்திற்கு எது மறை? இந்து சமயத்திற்கு எது மறை? மற்ற சமய நெறிகளுக்கு இருப்பதுபோல நமக்கென்று ஒரு மறை இல்லை; பலர் பலவிதமாகக் கூறுகின்றனர் என்ற குறை தொடர்ந்து இருக்கிறது. இந்த நிலைநோக்கி அறிஞர்களும் கவல்கின்றனர். மறை நூல் இல்லாது போனால் எங்ஙனம் சமுதாயத்தை ஒருமைப்பாடுடைய தாக்க முடியும்? என்பது அவர்கள் கவலை. ஆனால் உண்மையில் நமக்கொரு மறை இல்லாமலா போய்விட்டது? நமக்கென்று ஒரு மறை உண்டு. ஆனால், அதைத் துணிந்து மறை நூலாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றோம். தொல்காப்பியத்திலேயே மறை நூல் என்ற வழக்கு பேசப் பெறுகிறது. “அறங்கரை நாவின் நான்மறை முற்றிய”[58] என்பது தொல்காப்பியப் பாயிரம். இந்நூற்பாவுக்கு உரை கண்ட உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாருமுளர், இது - பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்”[59] என்று எழுதும் உரை எண்ணுதலுக்குரியது. புறநானூற்றில் மிகத் தொன்மைக் காலத்துப் பாடல்களும் உள்ளன. வேத வியாதர் காலத்துக்கு முற்பட்ட பாடல்களும் உள்ளன. “நான்மறை முனிவர்”, “நால்வேத நெறி” எனவும் வரும் சொற்றொடர்கள், பழங்காலத்திய தமிழில் தமிழ் மறைகளிருந்தன என்பதை அறிவிப்பன. நமது திருமுறைகளில் மறையென்று கூறப்படுவன தமிழ் மறைகளேயாம். இது “பண்பொலி நான்மறை” என்றும் “முத்தமிழ் நான்மறை” என்றும் வரும் தமிழ் வழக்கினை ஒட்டிக் குறிப்பிடும் வகையால் அறியக் கிடக்கிறது. மாதவச் சிவஞான முனிவரும் “கொழிதமிழ் மறைப்பாடல்” என்று தமிழ் மறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றார். இந்தத் தமிழ் மறைகள் ஆலமர் செல்வனால் அருளிச்செய்யப் பெற்றவை என்றுதான் திருமுறைகள் பேசுகின்றன. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய வேதங்கள் இறைவனால் அருளிச்செய்யப் பெற்றன அல்ல. பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களில் அருளிச் செய்யப் பெற்றவை. நமது சமய வரலாற்று அடிப்படையில் நமது சிவபெருமானும் உமையம்மையும் பேசுவது தமிழே தான்; அதனால்தான் வேதநெறி தழைத்தோங்கப் பிறந்த திருஞானசம்பந்தர், நமையாளும் உமையம்மையின் ஞானப் பாலுண்டவுடன் ‘தோடுடைய செவியன்’ என்று தூய தமிழிற் கவிதை பொழிந்தார். ஆதலால் நமது சமயத்திற்குப் பண்டு, தமிழ் மறைகளிருந்தன என்பது தெளிவு மறுக்க முடியாத உண்மை. ஆயினும், அந்த மறைகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. அவை கடற்கோள் பட்டிருக்கவேண்டும். அம்மறைகளை நாம் இழந்துவிட்டோம் என்று துயருறா வண்ணம் நமக்கொரு புதுமறை கிடைத்திருக்கிறது.
திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த திருக்குறள், மறைகளை ஒத்தது இல்லை, மறைகளை விஞ்சிய சிறப்புடையது; மறை நூலின் விழுமிய நோக்கமாகிய அறநெறி உணர்த்துகிறது; பொருள் நெறி காட்டுகிறது; இன்ப நிலை எய்த வழி நடத்துகிறது; திருவடிப்பேற்றினை வழங்குவிக்கிறது; கடவுளை வாழ்த்துகிறது; உயிரின் நிலையை உய்த்துணரச் செய்கிறது; அறியாமையை அடையாளம் காட்டுகிறது; ஆன்ற அறிவை வழங்குகிறது; ஆதலால், திருக்குறள் ஒரு மறை நூலே, மறந்தும் வேறுபாடுகளைக் குறிக்காத மறை நூல் அது! அதனாலன்றோ ஒளவையார்,
தேவர் குறளும் திருநான் மறைமுடியும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என் றுணர்[60]
என்று பாடினார்.
திருக்குறள் நமது சமுதாயத்தின் தனிமறை, பொது மறை. இம்மறை வழி நின்று விதித்தன செய்து, விலக்கியன ஒழித்து வாழ்தல் நமது சமய வாழ்க்கை.
உயிர்களின் வளர்ச்சி
மனிதன் ஓர் அற்புதமான தோற்றம். உலகத்தில் கோடானுகோடி உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் சிலவற்றுக்கே பெயர்கள் காணப்பெற்றுள்ளன. இன்னும் சில, பெயர்கள் பெறவில்லை. உயிர்க்குலத்தின் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் அது நடைபெறும் என்றே தெரிகிறது. உயிர்க்குலத் தொகுதியினை,
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்[61]
என்று முறைப்படுத்திக் கூறுவார் மாணிக்கவாசகர். இத்தகைய ஒரு கொள்கையினையேதான் உயிரியல் விஞ்ஞானி டார்வினும் கண்டு உலகத்திற்குத் தந்தார். ஆனால், நமது சமயநெறி படிப்படியாகப் பல பிறப்புகளில் உயிர் வளர்ந்து வளர்ந்து மனிதப் பிறப்பையடைகிறது என்று வகுத்துரைக்கும். இதனைத் தொல்காப்பியர் வாயிலாக நாம் எளிதில் உணரமுடிகிறது. அவர் உயிரினத்தை அறுவகையாகப் பிரிக்கிறார்.
புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
என்பது தொல்காப்பியம்[62] ஓரறிவுடைய உயிர்கள் அந்த ஓரறிவில் முழுமையாக வளர்ந்து, உருமாறி (இறப்பு, பிறப்பின் மூலம்) ஈரறிவுயிர் உருவத்தை அடைந்து, அதில் முழுமையாகி மரணமடைந்து, வேற்றுருப் பெற்று, மூவறிவுயிராகி, அதில் முழுமையாகி மரணம் அடைந்து வேறுருப்பெற்று நாலறிவுயிராகி, அதில் முழுமையுற்று இறந்து-பிறிதோருருப் பெற்று ஐயறிவுயிராகி அதில் முழுமையடைந்து இறந்து ஆறறிவுயிராகிய மானிடப் பிறப்பை வந்தடைகின்றன.
மானிடப் பிறப்பின் உயர்வு
உயிர் பிறப்பு முறையில் வளர்ச்சியடைந்த-சிறப்புடைய பிறப்பு, மானிடப் பிறப்பே. அதனை அடுத்தது தேவர்நிலை. “அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது”[63] என நூல்கள் பாராட்டும். “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்”[64] என்று அப்பரடிகளின் அருள் நூல் கூறும்.
பகுத்தறிவின் பயன்
மனிதன் ஆறாவது அறிவையுடையவன். அதாவது பகுத்தறிவுடையவன். பகுத்தறிவு என்பது ஒரு சிறந்த கருவி. பகுத்தறிவாவது “நல்லதன் நலனும் தீயதன் தீமையும்”[65] அறிந்து, ஏற்றும் விலக்கியும் ஒழுகுதல். உலகியல், குப்பை கூளங்கள் நிறைந்ததே. ஆயினும், முத்துக்கள் இல்லையென்று கூற முடியாது. குப்பை கூளங்களை விலக்கி முத்துக்களை ஏற்பதே பகுத்தறிவின் பயன். பகுத்தறிவு முறையாகத் தொழிற்பட வேண்டுமாயின் சிந்தனைக்குத் தளைகள் பூட்டக்கூடாது. அதாவது, “இது முன்னோர் வழக்கம்; இது அந்த ஞானி கூறியது; இது இந்த ஞானி கூறியது; இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பாவம், நரகம் கிடைக்கும்; இதை ஏற்றுக் கொண்டால் மோட்சம் கிடைக்கும்; இதனை ஏற்றுக் கொள்ளத் தவறினால் பலர் ஏசுவர்” என்பன போன்ற இன்னோரன்ன ஆசைகளுக்கும் அவலங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு[66]
என்ற குறளுக்கேற்ப யார்க்கும் அடிமைப்படாது மெய்ப்பொருள் காணத் தலைப்படல் வேண்டும். அங்ஙனம் அடிமைப்பட்டால், சிந்தனை செக்குமாடு போலத்தான் சுற்றும். அதற்குப் பகுத்தறிவு முறையாகத் தொழிற்படின் பழமையினின்றும் விலகாது. ஆனால், அங்கேயே கழித்துக் கொண்டு வட்டமிட்டுத் தேங்காது; விரிவடையும், வளரும்; பழமை மறையும்; புதுமை தோன்றும் விதை மறைந்து செடி தோன்றுவதில்லையா? அதுபோல! ஆதலால் பகுத்தறிவினால் பழமை அழியும் என்று அச்சம் கொள்ளுதல் தவறு. பகுத்தறிவினால் மனித உலகம் முதுமையடையாமல் உயிர்ப்புள்ள இளமையோடு வளரும்; வாழும், பகுத்தறிவு வளர வளர நியாயங்கள் தோன்றும்; அவ்வழி நெறிகள் தோன்றும்; மனம் தொழிற்படும். மனமுடையவன்தானே மனிதன். மனமுடைய மனிதன் மானிட உலகத்திற்கு வான்மழையை ஒத்தவன். அந்த மானிடச் சாதியை வளர்க்கும் உத்தம மனிதன் வளர்க! வாழ்க!
சிந்தனையாளர்கள் இயக்கம்
இந்த மனித குலம் தோன்றிக் கோடானுகோடி ஆண்டுகளாகிவிட்டன. வரலாற்றில் சென்று போன கோடிக் கணக்கான ஆண்டுகளில் மனித உலகத்தின் வரலாறு சிந்தனைக்குரியது. பல நூறு ஆயிரம் பக்கங்களில் விரிந்துள்ள இந்த வரலாற்றில் பல பக்கங்கள் கொடியோர்களின் செய்திகளைக் கூறும்; ஓரிரண்டு பக்கங்கள் உலகத்தை வாழ்விக்கத் தோன்றிய உத்தமர்களின் வரலாற்றினைக் கூறும். ஆனாலும் அந்த உத்தமர்கள் தொடங்கிவைத்த இயக்கமே பின்னால் மனிதரை வாழ்விக்கத் தவறுவதையும் காண்கின்றோம். மனித குலத்தின் வரலாறு நெடிய நேர்க்கோடாக வளரவில்லை. ஏராளமான வளைவுகள் அதில் உள்ளன. வளைவுகளின் காரணமாக நிகழ்ந்த விபத்துக்களும் அதிகம். ஒட்டுமொத்தமாக வரலாற்றுப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு நாம் பெறும் ஒரே உணர்வு, இன்னமும் மனிதன் மனித வடிவத்தில் உலாவருகிறானே தவிர, அவன் இன்னமும் மனிதனாகவில்லை என்பதே! இந்தச் சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்கிறது. அதனால்,
- மனத்தது மாசாக மாண்டார் நீராடி
- மறைந்தொழுகும் மாந்தர் பலர்”[67]
என்றும்
- மக்களே போல்வர் கயவர்”[68]
என்றும்
வேதனையுடன் கூறிய குறள்கள் சிந்தனைக்குரியன.
இங்ஙனம், பகுத்தறிவைப் பெற்றிருந்தும் அவற்றை உபயோகப்படுத்தாமல் நெறிமுறை தவறிச் சென்று இன்னல் பட்ட மனிதகுலத்திற்கு வழிகாட்ட அவ்வப்பொழுது தக்க ஞானிகள்-பேரறிஞர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்களின் பட்டியலை இங்குத் தருவது இயலாத ஒன்று. ஆனாலும், குறிப்பிடத்தக்கவர்கள் சிலரையாவது நினைவிற் கொண்டுவருவது நம் கடன். திருவள்ளுவரை ஒட்டி வருகின்ற சிந்தனையாளர்கள் சிலரை நினைந்து பார்ப்போம்.
கன்பூசியஸ்
திருவள்ளுவர் காலத்துக்கு முந்தியவர்களில் சீன நாட்டில் தோன்றிய கன்பூசியஸும், கிரேக்க நாட்டில் தோன்றிய சாக்ரட்டிஸும், குறிப்பிடத் தகுந்தவர்கள். கன்பூசியஸ் ஒரு சிறந்த மாமேதை. மனித சமுதாயத்தை அறவே பழமையிலிருந்து விலக்கிச் செல்ல முடியாதென்ற எண்ணத்தின் காரணமாகச் சீன நாட்டில் வழங்கிய பழைய கருத்துகளுக்குப் புதுப்பொருள் கண்டவர். அவர் கண்ட புதுப்பொருள் அவருடைய சிந்தனையில் தோன்றியது. அவர், ஒழுக்கத்தையே முதல்நிலைப்படுத்தினார். அது மட்டுமன்று ஒழுக்கத்தை ஒழுக்கத்திற்காகவே கடைப்பிடிக்க வேண்டுமென்று வழி நடத்தினார். கன்பூசியஸ் கடவுளைப் போற்றுதல் மூலமே உயர்ந்துவிட முடியும் என்பதுபோல மறைநூல் செய்தாரில்லை. அவர், மனித இயற்கையைப் பெரிதாகப் பாராட்டினார். அந்த மனித இயற்கையை முழுமையுறச் செய்து கொள்ள வேண்டும்; அங்ஙனம் முழுமையுறத் துணை செய்வதே அறநெறிச் சட்டமென்றார். அறநெறிச் சட்டத்தின் வழியில் நின்று வாழ்ந்து பண்புடையோராக வாழ்வோரை உலகு பாராட்டுமென்றார். இதனையே திருவள்ளுவர்
நயனொடு நன்றி பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு[69]
என்றார். “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”[70] என்றார் திருவள்ளுவர். சிந்தனை ஒப்பு நோக்கத்தக்கது. “மனித உள்ளம் என்பது பிறரை நேசித்தல்” என்பது கன்பூசியஸின் தத்துவம். இதனைத் திருவள்ளுவர் “அன்பின் வழியது உயிர்நிலை”[71] என்றார். கன்பூசியஸின் சிந்தனைகள் சீனநாட்டு மக்களுக்கு இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக மழைகளைப் போல விளங்கி வந்துள்ளன.
சாக்ரட்டிஸ்
திருவள்ளுவருக்குச் சற்றேறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன் கிரேக்க நாட்டுச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ், அவன் மனித குலத்திற்கு அறிவை முதனிலைப்படுத்தி அறிவுறுத்தினான். அறிவாராய்ச்சி செய்யும்படி ஆற்றுப்படுத்தினான்.
- “அறிவுடையார் எல்லாம் உடையார்”
என்பது ஒப்புநோக்கத்தக்கது. சாக்ரட்டீஸ் எழுதுகோல் ஆனாலும், அவனது சிந்தனையில் தோன்றிய சிந்தனை முத்துக்களை அவனுடன் இருந்த பிளேட்டோ அழகுறத் தொகுத்துத் தந்திருக்கிறான். சாக்ரட்டிஸ் உரையாடல்கள் மூலமே உயர்நெறியை யுணர்த்தியவன். வினாக்கள் மூலமே விடைகளைத் தந்தவன். சாக்ரட்டிஸும் கன்பூசியஸைப் போல உயிரினும் உயர்வாக ஒழுக்கத்தை மதிக்கக் கற்றுக்கொடுத்தான். சாக்ரட்டிஸ் மனித உலகத்தின் மனச்சாட்சிக்காகப் போராடினான். மனிதனின் சிந்தனை ஒருமைக்காகப் போராடினான். ஆயினும், அவனை அந்தக் காலச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. கன்பூசியஸ் தன் தலைமுறையிலேயே வெற்றி பெற்றார். சாக்ரட்டீஸ் அவன் தலைமுறையில் வெற்றி பெறவில்லை. உயிரைப் பணயமாகக் கொடுத்தான். ஆனால், மனித குலத்தின் அறிவு இயக்கம் உள்ளவரை சாக்ரட்டீஸின் பெயர் நினைவிலிருக்கும்.
திருவள்ளுவர்
திருவள்ளுவர், தமிழகம் முற்றாக நிலை தளர்ந்திருந்த பொழுது மறைநூல் செய்தாரென்று கூறமுடியாது. ஆயினும், திருவள்ளுவர் தோன்றிய காலம் தமிழகத்திற்கு ஒரு சோதனைக் காலமே. காதல் காமமாக உருமாறிப் பரத்தையர் ஒழுக்கம் பரவியிருந்தது. வீரம், சிறுகலகங்களாக உருமாறி ஒரு குலத்துள்ளோரே தமக்குள் ஒருவரையொருவர் அடுதலும் தொலைதலுமாக இருந்தனர். தமிழ் வழக்குக் கொவ்வாத அயல் வழக்குகள் ஊடுருவி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இந்த நெருக்கடியான காலக் கட்டத்தில் திருவள்ளுவர் தோன்றினார். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றி, முறையே தனி மனிதன், குடும்பம், நாடு, அரசு ஆகியவைகளுக்கு அறநெறி காட்டி வழி நடத்தினார். திருவள்ளுவர் தந்த அறநெறி அவர் காலத்தில் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனாலும் முழுமையான வெற்றியை அது அடையவில்லை. திருவள்ளுவருக்குப் பிறகும் திருவள்ளுவர் நெறி இன்றுவரை முழுமையாக வெற்றி பெறவில்லை.
மார்க்ஸ் - லெனின்
சோவியத்து நாட்டில் லெனின், மாமுனிவர் மார்க்ஸ் தந்த மூலதனத் தத்துவக் கொள்கைகளுக்குச் செயல்முறைக் கோட்பாடுகளை வகுத்தான்; புரட்சிக்காகச் சிந்தித்தான்; சமுதாய மாற்றத்தைக் குறித்துப் பலரைச் சிந்திக்க வைத்தான். லெனின் அணியில் “கூட்டத்தில் கோவிந்தா” போட்டவர்கள் இல்லை. தன் அணியைச் சார்ந்தவர்களுக்குப் புரட்சித் தத்துவங்களைக் கற்றுக் கொடுத்தே அணிவகுத்து நடத்தினான். ஆதலால் புரட்சி எளிதாயிற்று; புதுயுகம் பிறந்தது.
பிரெஞ்சுப் புரட்சி - வால்டேர், ரூசோ
பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேரும் ரூசோவும் சிறந்த சிந்தனையாளர்கள். அவர்களுடைய சிந்தனை புரட்சி நெருப்பைப் பற்ற வைத்தது. ஆனால் அந்த நெருப்பு தொடர்ந்து எரிவதற்குக் கோட்பாடுகள் இல்லாமல் போயின. மக்கள் புரட்சியில் ஈடுபட்டார்கள்; உணர்ச்சி வசப்பட்டே ஈடுபட்டார்கள். புரட்சி தோன்றியது. அது அன்றிருந்த ஆட்சியை மாற்றியது. ஆனால் புரட்சிக்குப் பின் தோன்றிய ஆட்சியின் முறை மாறவில்லை. அதாவது சர்வாதிகாரிகள் மாறினார்கள் சர்வாதிகாரம் மாறவில்லை என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை. மார்க்ஸின் சிந்தனைக்குப் புரட்சிகரமான செயலுருவம் கொடுக்க லெனின் இருந்தான். அதனால் நிலையான மாற்றம் கிடைத்தது. வால்டேர், ரூசோ சிந்தனைகள் புரட்சி உருவம் பெற்றன. ஆனால் செயலுருவம் கொடுக்கப்பெறவில்லை. அதனால் புரட்சி வெடித்தது; ஆனால் புதுமைச் சமுதாயம் பிறக்கவில்லை.
புரட்சி விளக்கை அணைத்தனர்
கன்பூசியஸுக்குக் கிடைத்த வெற்றி திருவள்ளுவருக்குச் சமுதாயத்தில் கிடைக்கவில்லை; அரசியலில் கிடைக்கவில்லை. ஆனால், இலக்கிய உலகத்தில் திருவள்ளுவர் மிகவுயர்ந்த புகழைப் பெற்றார். சாக்ரட்டீஸுக்குக் கிடைத்த தோல்வி திருவள்ளுவருக்குக் கிடைக்கவில்லை. வால்டேர் ரூசோ போன்றவர்களின் சிந்தனைக் கொத்த புரட்சத் தன்மையுள்ள சிந்தனைகளைத் திருவள்ளுவர் தந்திருந்தாலும் இங்கும் புரட்சி வெடிக்கவில்லை, காரணம் திருவள்ளுவரின் புரட்சிச் சிந்தனையின் குறையன்று. பிரஞ்சு தேசத்திலிருந்தவர்கள் போன்ற கொடுங்கோலர்கள் தமிழ் நாட்டில் இருந்ததில்லை. குறைகளுடைய அரசர்கள் இருந்தனர். ஆனாலும் கொடுங்கோலர்கள் இருந்ததில்லை. மார்க்ஸின் மூலதனம், 'திருக்குறளுக்கு நெடுங் காலத்திற்குப் பின் தோன்றியது. மார்க்ஸ் ஒரு சிந்தனையாளன். கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளில் திருக்குறளின் கருத்து மூலங்கள் பதிந்துள்ளான. மார்க்ஸின் மூலதனம் எப்படிப் புதுமையும் போதுமையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க உதவியதோ அதுபோல் திருக்குறளும் பயன்பட்டிருக்கவேண்டும் அங்கனம் இயலாமற் போனதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முதற்காரணம் முன்னர்க் குறிப்பிட்டது போல் தமிழக மன்னர்கள் ஜார் மன்னர் அளவுக்குக் கொடுங்கோலர்களாக இல்லாமல் இருந்தமையே. எல்லாவற்றையும் பெறும் முழுமையான சமுதாயத்தை உருவாக்கத் தவறினாலும் அவர்கள் கொடுங்கோலர்களாக இருந்ததில்லை. அது மட்டுமன்று நீதிமான்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை எதிர்த்துப்புரட்சி தோன்றக்கூடிய சூழல் இல்லாமற் போய்விட்டது. நலஞ்செய்யாத அரசுகளை நோக்கிப் புரட்சிகள் தோன்றாது. நலஞ்செயாதோடின்றித் தீங்கிழைக்கும் கொடுங்கோல் அரசுகளை நோக்கியே உலகில் புரட்சிகள் வெடித்துள்ளன. ஆதலால் திருக்குறள், புரட்சியைத் தோற்றுவிக்க இயலாமற் போயிற்று. மேலும், கார்ல்மார்க்ஸுக்குக் கிடைத்த மாணாக்கன் லெனின் ”மூலதனம்” என்ற தத்துவ நூலில் அடங்கிய கொள்கைகளுக்குக் கோட்பாடுகளைக் கண்டான்; செயலுருவம் தர முயன்றான்.காலமும் துணையாயிருந்தது; இடமும் அமைந்தது;புரட்சியும் தோன்றிற்று. முன்னர்க் குறிப்பிட்டதைப்போலத் திருவள்ளுவரின் சிந்தனைக்குக் காலமும் இடமும் துணையாக இல்லை: அது மட்டுமன்றித் திருவுள்ளுவர்க்குக் கிடைத்த மாணாக்கர்கள் அரசியல் சிந்தனையாளர்கள் அல்லர்; சமுதாயச் சிந்தனையாளர்களுமல்லர்; அவர்கள் இலக்கியச் சிந்தனையாளர்கள் சமயச் சிந்தனையாளர்கள் என்றே அமைந்துவிட்டார்கள். ஆதலால், அவர்கள் பதவுரையும் பொழிப்புரையும் எழுதினார்கள்; இலக்கணக் குறிப்புக்கள் எழுதினார்கள்; தெளிவாகச் சொன்னால் இலக்கியச் சிந்தனை என்ற பெயரால் திருவள்ளுவர் ஏற்றிவைத்த புரட்சி விளக்கை அணைத்தே விட்டார்கள். இன்னும் திருக்குறள் தந்த திருவள்ளுவர் வழிபாட்டுக்குத்தான், பயன்படுகின்றார். கவியரங்கம், பட்டிமன்றங்களுக்குத்தான் பயன்படுகிறார். இன்றுவரை திருவள்ளுவர் கண்ட அரசியல் சமுதாயக் கொள்கைகளுக்குச் செயலுருவம் தரத்தத்த கோட்பாடுகளை நினைந்து எழுத யாரும் முன்வாவில்லை. அது தமிழகத்தின் நல்லூழின்மையேயாம். இனிமேலாது வாழ்வியல் நூலாக விளங்கும் திருக்குறளுக்குச் செயலுருவம் தரமுயற்சிசெய்ய வேண்டும். அது காலந்தாழ்த்தாது உனடியாகக் கெய்ய வேண்டிய முதற்பணி. இந்த முயற்சி தொடங்கப்பெற்று முழுமையான வெற்றி பெற்றால் நமது சமயம் விளங்கும்; நமது சமுதாயம் உலகின் மற்றச் சமுதாயங்களோடு ஒத்து நிற்கும்-இல்லை, மற்றச் சமுதாயங்களை வென்று விளங்கும்.
பிறப்பும் - இறப்பும்
இனி, திருவுள்ளுவர் எப்படி முறையாக மனிதனை வளர்க்கிறார் என்பதைக் காணவேண்டும். நமது சமயத்தில் உயிர் உண்மை நிலையானது. உயிர் உடல்தாங்கி புலர்வரு தலையே பிறப்பு என்று குறிப்பிடுகின்றோம். மீண்டும் அந்த உலாவில் எய்த்துக் களைத்துழி உடலினைக் களைந்து புத்துடலைப் பெறுவதை இறப்பு-பிறப்பு என்று குறிப்பிடுகிறது நமது சமயம். உயிர்க்குப் பிறப்பு இறப்பு இல்லை; அது நிலையானது என்பதனைத் திருவள்ளுவர் ‘மன்னுயிர்’ என்பதன் மூலம் விளக்குகிறார். களைத்த உடலை விட்டுப் புது உடலைப் பெறுவதுதான் இறப்பு-பிறப்பு! புறநானூறு,
- “சாதலும் புதுவன்றோ”[72] அதனையே திருவள்ளுவர்,
என்று கூறிவிளக்கும்
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு[73]
என்று கூறி விளக்குகிறார். அன்றாட உடற்களைப்பு நீங்க உறங்குதல் வழி. ஆனாலும் அவ்வப்பொழுது உறங்கும் உறக்கத்தில் முழுமையாகக் களைப்பு நீங்கிவிடுவதில்லை. காலத்திற்குக் காலம் களைப்பு முதிர்ந்து உடலுக்கு முதுமையைத் தந்து, களைப்பு மிக்குழி அறவே உடலை உயிர் உதிர்த்து விடுதலே இறப்பு: அது புதிய உடலைப் பெறுதல் பிறப்பு. இதுவே நமது சமயக் கொள்கை. இங்ஙனம் சாதலும் பிறத்தலும் எல்லையின்றிச் சுற்றி வருமா? வராது. உயிர் நிறைநலம் பெற்றுழி அதற்குப் பிறப்பில்லை; இன்ப அன்பில் அமைதியாகத் தங்குகிறது. அதுவே இறைநிலை; உயிரின் இலட்சியம்.
அறியாமை
மனிதன், இயல்பில் குறையுடைய வனாயிருக்கின்றான். மனிதனுடைய குறைகளில் தலையாயது அறியாமை. அறியாமைதான் எல்லாக் குற்றங்களுக்கும் முதலாக இருப்பது. அறியாமை, மயக்கும்; பொருளல்லவற்றைப் பொருளென்று போற்றச் செய்யும்; துன்பத்தை இன்பமாகக் கருதச் செய்யும்; பெரியோரைப் பகைவராகக் கொள்ளச் செய்யும்; சிற்றினத்தாரை நட்பாகக் கொள்ளத்துரண்டும். அம்மம்ம! அறியாமை செய்யும் தீமையைப் பகைவனாற் கூடச் செய்ய இயலாது ஆதலால், திருவள்ளுவர் முதலில் மனிதனை அறியாமையிலிருந்து விலகுக என்று அறிவுறுத்துகிறார்.
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு[74]
இது வள்ளுவர் வாய்மொழி.
புல்லறிவாண்மை
அறியாமையைக் கூட ஒரோவழி மன்னிக்கலாம். ஆனால் அறியாமையை அறிவு என்று நம்பி இறுமாத்தலாகிய புல்லறிவாண்மை மிகமிகக் கொடியது. அறியாமையுடையோர் திருந்த வாய்ப்புண்டு. காரணம் தாம் அறியாமை யுடையோம் என்று அவர்கள் அறிவதால். புல்லறிவாண்மை யுடையோன் திருந்துதல் அரிது. ஏன், திருந்தவே முடியாது. அவன் ‘அறிவுடையோம்’ என்ற இறுமாப்பால் ஏவவும் செய்யான்; அவனும் தேறான். அப்பரடிகள் கூறியதைப் போல் உலைப்பானையிலுள்ள இளஞ்சூட்டு நீரில் மகிழ்ந்து ஆடும் ஆமையைப் போல, அவன் மகிழ்ந்து ஆடுகின்றான்.[75] புல்லறிவாண்மை, அறியாமை நீக்கத்திற்கே தடையாகப் போய்விடும். புல்லறிவாண்மை அறிவின் வாயிலை அடைத்துவிடும். உலகமே திரண்டு கூறினாலும் அவன் ஒத்துக்கொள்ளமாட்டான். அவனை உலகத்துப் பேய் என்பார் திருவள்ளுவர். அறியாமை அதனை உடையவனுக்கு மட்டுமே தீமை செய்யும். புல்லறிவாண்மை பேயைப் போலச் சமுதாயத்திற்கே தீங்கு செய்யும். ஆதலால் புல்லறிவாண்மை முற்றாகக் கடியப்பெறுதல் வேண்டுமென்பது திருவள்ளுவர் கருதது.
கல்வி
அறியாமை அகன்று - புல்லறிவாண்மை போய் மனிதன் விளக்கமுற உதவி செய்யும் வாயில் கல்வியே. மனிதன், மனிதனாக விளங்கத் துணைசெய்யும் முதல் வாயில் கல்வி. அதனாலன்றோ அப்பரடிகள்,
- கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னை[76]
-என்றும் திருமூலர்.
- கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே[77]
என்றும் கூறிப்போந்தனர். ஞான நூல்களைக் கற்றலே “வேள்வி” என்று அறநூல்கள் கூறுகின்றன. திருவள்ளுவர் கல்வியை ஓர் இயக்கமாகவே வற்புறுத்துகிறார். “கற்க!” என்பது அவராணை. ஆம்;. உடல்நலத்துக்குரிய உணவு உண்பது மனித குலத்திற்கு வழக்கமாகிவிட்டது. ஆனால், உயிர் நலத்திற்குரிய நூல்களைக் கற்பது இன்னும் பலருக்கு வழக்கமாகவில்லை. உலக மானிடச் சமுதாயத்தில் கற்றவர் விழுக்காடு சற்றேறக்குறைய ஐம்பதேயாம். இந்த ஐம்பது விழுக்காடும்கூட, கற்கும் முறையைக் கற்றவர்களேயாம். கல்வியைக் கற்றவர்கள்-கற்றுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடு இருந்தாலே அரிது. மனிதன் ஓயாது கற்கவேண்டும்; ஒவ்வொருநாளும் கற்க வேண்டுமென்பதை,
- என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு[78]
என்று வினவுகின்றார் திருவள்ளுவர்.
கசடறக் கற்க
கற்கும் ஆர்வம் தலைப்பட்டு முயற்சி தோன்றியவுடன், கற்பதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு நுட்பமான கலை, ஒரு மனிதனின் முன்னேற்றம் அவன் கற்பதற்குத் தேர்ந்தெடுக்கும் புத்தகத்திலேயே அடங்கியிருக்கிறது. இன்று வாழும் மானிடர் பலருக்கு இந்தக் கலை கைவந்ததில்லை. தாம் கற்பதற்குரிய நூலைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒருவர் தம்முடைய வாழ்க்கையில் அமைந்துள்ள மனக் குற்றங்களை அறிந்து கொள்ள வேண்டும். உடல் நோய்க்கு மூலிகைகள் மருந்து; மனக்குற்றத்திற்குக் கருத்துக்களே மருந்து. மனிதன் தன் மனக்குற்றங்களை அறிந்துகொண்டு அக்குற்றங்களை நீக்குதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனக்குற்றம் நீங்குகிறவரை கற்கவேண்டும். அக் குற்றங்கள் நீங்கிய நிறை நிலையில் ஒரோவழியன்றி என்றும் நின்று ஒழுக வேண்டும். இது வள்ளுவர் காட்டும் வழி.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக[79]
என்பது எண்ணத்தக்கது.
செவிச் செல்வம்
கற்பதற்குரிய நூல்கள் பல்கிப் பெருகி வளர்ந்து கிடக்கின்றன. அவை முழுவதையும் தேர்ந்தெடுத்துக் கற்றுத் தெளிவதற்கு ஒரு மனிதனுக்குரிய வாழ்நாள் போதாது. ஆதலால், நல்ல நூல்களைக் கற்றலோடு கற்றோர் வாயிலாகக் கேட்பது, மேலும் துணை செய்யும் என்பது திருவள்ளுவர் கருத்து. அதுமட்டுமன்று, தம்மில் மூத்த சான்றோர், நல்ல நூல்களைக் கற்று, கற்ற கல்வியை வாழ்க்கையில் சோதனைப் படுத்தி ஒழுக்கமாக்கிக் கூறுவர். அங்கனம் கூறும் சான்றோரின் சொற்களைக் கேட்பதன் மூலம் எளிதில் வாழ்க்கையில் முன்னேறலாம். கற்கும் இடர்ப்பாடுகளைத் தவிர்க்கலாம்.
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்[80]
என்பது வள்ளுவர் வாய்மொழி. ஆதலால் ஒரு மனிதன் முழுமையுறக் கற்கும் முயற்சி மட்டும் போதாது; நல்லவை கேட்கும் முயற்சியும் தேவை. நல்லவை கேட்க முனையாத செவிகளைத் திருவள்ளுவர், ‘தோட்கப் படாத செவி’[81] என்பார். “செவிகாள் கேண்மின்களோ”[82] என்று அப்பரடிகள் செவிகளை இரந்து வேண்டுவார். திருஞானசம்பந்தர் “கற்றல் கேட்டலுடையார் பெரியார்”[83] என்பார்.
எண்ணம்
கற்றலும் கேட்டலும் மனிதனின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் சிறப்புடைய பழக்கங்கள். ஆயினும் கற்ற - கேட்ட செய்திகளை எண்ணத்தில் தேக்கி உணர்வுகளாக மாற்ற வேண்டும். “எண்ணம் போல் வாழ்வு” என்பது பழமொழி. எண்ணம் ஆழமானதாக இருக்கவேண்டும். ஒப்புக்காக எண்ணுவது பயன்தராது. செயல்களின் வெற்றிக்கு எண்ணமே அடிப்படை எண்ணாமல் செய்யும் செயல் வெற்றியையும் தராது; பயனையும் தராது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்[84]
என்பது திருக்குறள்.
அறிவு
கற்றாலும், கேட்டாலும், எண்ணினாலும் கூட ஒரு மனிதன் முழுமையான அறிவைப் பெற்று விடுவதில்லை. ஏன்? மேற்கூறிய அகநிலை முயற்சிகளால் அவன் அறிவின் தாழ்வாரத்திற்கே வந்து சேர்கிறான்; அவன் அறிவுடையவனாகி விடுவதில்லை. கற்ற கருத்து, செவி வழிக் கொண்ட சிந்தனை, எண்ணிய எண்ணம் இவையனைத்தும் அறிவாக உருப்பெற வாழ்க்கையிற் செயற்பாடு தேவை. உணவு செரிக்கப்பெற்றுச் செங்குருதியாக மாறி, வலுமையாகித் துணை செய்வதைப் போலக் கல்வி வாழ்க்கைப் பட்டறையில் செரிக்கப்பெற்று அறிவாகமாறி உணர்வாக உருப்பெற்று ஒழுக்கமாக வளர்ந்து துணை செய்ய வேண்டும். நீச்சல் பற்றிப் படிப்பது நீந்துகிற அறிவாகாது. மருத்துவ நூல்களைக் கற்பதால் பிணிகள் நீங்கா. கடவுளைப் பற்றிய நூல்களைக் கற்பது கடவுட்டன்மையைத் தந்து விடாது. அன்பினைப் பற்றிய படித்தல், ஒப்பித்தல் அன்பினைத் தந்து விடா. அவையனைத்தும் வாழ்க்கையில் சோதனைப்படுத்தப்பட வேண்டும்; நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதே அறிவு தோன்றும். உலகில் தோன்றிய உயர்ந்த சிந்தனை நூல்கள், அறநெறி நூல்கள் இலட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றைப் படிப்பவர்களும் ஆயிரம் ஆயிரம் பேர். அவற்றிற்கு உரை கூறுவோர்-விளக்கம் கூறுவோர் பல நூறு பேர். ஆயினும் உலகத்தில் முழுமையான அறிவுடையோரைக் காண்டது அரிதாகிவிட்டது. நூல்களைக் கற்பவர்கள் அறிவுடையராக மாட்டார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால் கற்காதவர்களைவிட - நூல்களைப் படிக்காதவர்களைவிடக் கற்றவர்களில் பலர் முட்டாள்களாக இருப்பார்கள். “பலகற்றும் கல்லார் அறிவிலாதார்?[85] என்பது வள்ளுவர் வாக்கு. ‘கற்ற நிர்மூடர்’ என்பார் தாயுமானார். நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அறிவு, அனுபவத்தின் வழியிலேயாம்.
நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்[86]
என்று கூறி வள்ளுவர் விளக்குகின்றார். நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அவர்தம் அனுபவத்திற்கு வந்து உண்மையில் அவருக்கு உரிமையுடையதாக மாறிய அறிவே வாழ்க்கையில் மிகுந்து நிற்கும்.
அறிவுடைமைக்கும் அறிவின்மைக்கும் என்ன அடையாளம்? அறிவுடைமைக்கும் அறியாமைக்குமுள்ள வேறுபாடு மிகப்பெரியது. ஆனால் உலகம் அதனை முற்றாக உணரவில்லை. சில செய்திகளைத் தெரிந்து கொள்வது அறிவுடைமையாகாது; பேசுதலும் எழுதுதலும் கூட அறிவுடைமை யாகாது. இவையெல்லாம் அறிவின் வாயில்கள். உண்மையான அறிவுடைமை துன்பத்தை மாற்றுங்கருவி. நேற்று அழுத மனிதன் இன்று அழாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நேற்றைய தோல்வி இன்று வெற்றியாக வேண்டும். நேற்றைய துன்பத்தை இன்று இன்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அங்ஙனம் செய்யப் பயன்படும் கருவியே ‘அறிவு’.
- அறிவு அற்றம் காக்கும் கருவி[87]
- அறிவுடையார் ஆவது அறிவார்[88]
என்பன திருவள்ளுவர் வாக்கு.
மனிதன், தன் அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களைப் படிப்பினையாக்கிக் கொள்ளவேண்டும். அவ்வழி அறிவினைப் பெறவேண்டும். மனிதனின் வாழ்நாள் ஓடிக் கொண்டேயிருப்பது. அதில் சென்ற காலம் நிகழ் காலத்திற்கு வித்திடுகிறது. நிகழ்காலம் நாளைய எதிர்காலத்திற்குத் தளம் அமைக்கிறது. இதுதான் உண்மையான வாழ்வியலுணர்வு. ஆனாலும் நேற்றைய வாழ்க்கையை இன்று நினைந்து மகிழ்தல் அல்லது கவலைப்படுதல் ஓரளவு மருந்தென வரவேற்கப்படலாம். அங்ஙனம் மகிழ்தலும் அழுதலுமே இன்றைய வாழ்க்கையாக மாறிவிடக் கூடாது. நாளைய வாழ்க்கையை எண்ணி எதிர்பார்த்து இன்றையச் செயல்களை வகுக்க வேண்டும். ஆனால், இப்படிச் செய்ய சில மத போதகர்கள் இடம் தருவதில்லை. ‘நாளை பற்றிக் கவலைப்படாதே! அது கடவுள் கையிலிருக்கிறது’ என்று சொல்லுகிறார்கள். ஆனால் நம்முடைய சமயம், அங்கனம் கூறுவதில்லை. திருவள்ளுவர்,
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்[89]
என்று கூறி விளக்குகிறார்.
சேக்கிழார்,
சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனியெதிர்
காலத்தின் சிறப்பும்[90]
என்று அருளியுள்ளார். ஆதலால், அறிவுடைய மனிதன் நாளைய வாழ்க்கைக்கு ஏற்றவாறு அறிந்து ஒழுகுதல் வேண்டும்.
அறிதோறறியாமை
அறிவு வளர்ந்து கொண்டேயிருப்பது. அதற்கோர் எல்லைக் கோடில்லை. அறிவு நிறைவாக வளர்ந்துழி பேரறிவாக மலரும். அதனை மாணிக்கவாசகர் “நின்னை அறியும் அறிவு” என்று பாராட்டுவார். அந்த உயர்ந்த அனுபவத்திற்குச் செல்லும் வரை அறிவு வளர்தற்குரியது. அதுவரையில் மனிதனிடத்தில் அறிவும் அறியாமையும் போட்டிபோடும். அறியாமை என்பது ஒன்றுமே அறியாததன்று. அறிவினிடத்தில் இருப்பதே அறியாமை. பலவற்றை அறிந்த மனிதன் இன்னும் அறியவேண்டியவை உள்ளனவே என்று உணர்வதே அறியாமை. அங்ஙனம் உணர்ந்தாலே அன்றாட வாழ்விற்குரிய அறிவைப் பெற முடியும்.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோ
டவ்வது உறைவது அறிவு[91]
என்பார், ஆதலின், “அறிதோறு அறியாமை”[92] உணர்ந்து, அறிவைப் பெறுதல் உயிர்ப்புள்ள மனிதனின் வாழ்க்கை முறை.
காலத்தின் அருமை
மனிதன், அவன் வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத அறிவுடைமையைப் பெற்று விட்டான். அவன் அறிவினைப் பெறவும் இவ்வையகத்தில் வாழவும் கால எல்லை உண்டு. இக்கால எல்லையை யாரும் வெற்றிகண்டதில்லை. கடவுள் நம்பிக்கையில்லாதவர்களும் கூட இந்தக் கால எல்லையை “The Determination of Law” என்று ஒத்துக் கொள்ளுகிறார்கள். ‘சாநாளும் வாழ்நாளும் யாரறிவார்’[93] என்பார் திருஞானசம்பந்தர். “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு”[94] என்பார் திருவள்ளுவர். ஆதலால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வரையறுக்கப்பட்ட வாழ்நாள் எல்லைக்குள்ளாகவே முழுமையுறல் வேண்டும்; நிறைநலம் பெறுதல் வேண்டும். ஆதலால் அவன் காலத்தின் அருமை அறிந்து போற்றுதல் வேண்டும். இயற்கையளித்த கொடைகளில் தலையாயது காலம். மனிதன் விரும்பினாலும் விரும்பாது போனாலும் காலத்தின் முத்திரை அவனிடம் பதிந்தே தீருகிறது. மனிதனின் வாழ்நாள், வினாடி வினாடியாகக் கரைந்து ஒடுகிறது. வினாடிகளைக் காப்பாற்றிப் பயன் கொண்டால் தான், வாழ்நாளை முழுமையாகப் பயன்படுத்த முடியும். நமது சமயம் இறைவனைக் காலம் கடந்தவன் என்று கூறும். அதற்குப் பொருள், அவன் காலங்களைக் கடத்துகிறவன் என்பதன்று. “ஞாலமே விசும்பே இவை வந்துபோம் காலமே” என்று திருவாசகம் பேசும். அவனே காலமாக நிற்கின்றான். சேரமான் பெருமாள் நாயனார் பூசனையில், குறித்த காலத்தில் சிலம்பொலி காட்டியதும், காஞ்சியில் பல்லவ மன்னன் கட்டிய பெருங்கோயிலில் எழுந்தருள்வதற்குரிய நாளை மாற்றியதும், இறைவன் காலத்தைப் போற்றுகிறான்; குறித்த காலத்தில் நிகழ்வுகளைச் செய்கிறான் என்பதை உணர்த்துகின்றன. அதனால்தானே இறைவனின் நிகழ்வுகளாக இருக்கின்ற இயற்கை, ஓர் ஒழுங்கு, முறை பிறழாத நிகழ்ச்சி “Order and Constancy உளவாக அமைந்துள்ளது. அவன் காலங்கடந்தவன் என்பதன் பொருள், காலத்தினாலாய முதுமைத் தழும்புகள் - மூப்பின் அடையாளங்கள் அவனுக்கு இல்லை என்பதேயாம். ஆதலால், மனிதன் காலத்தைப் போற்றிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதனாலேயே “நாளைப் பார்” என்று பழமொழி வழி ஆணை பிறந்தது; அதற்குப் பொருள் “நாளின் அருமைப் பாட்டினை அறிந்து பாதுகாத்துப் பயன் கொள்க” என்பதேயாம். அதற்கு மாறாகப் பலர் பஞ்சாங்கத்தைப் புரட்டுகின்றனர். நல்லநாள் பார்க்கின்றனர். எது நல்லநாள்? வாழ்க்கையின் நாள்கள் அனைத்தும் முத்து முத்தான நல்ல நாள்கள். முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய நாள்கள். இதனை மனிதன் மறந்துவிட்டுச் சில நாள்களைக் கழிக்கின்றான். இது வாழும் முறையன்று.
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே[95]
என்றார். நாளென் செயும் வினைதான் என் செய்யும்’[96] என்பது கந்தரலங்காரம். ஆதலால் மனிதனின் வெற்றிக்கு முதற்படி காலத்தின் அருமையறிந்து பயன்படுத்துதலே!
உயிரறுக்கும் வாள்!
திருவள்ளுவர் காலமறிதல் என்றே ஓர் அதிகாரம் வகுத்து ஓதுகிறார். நகைச்சுவையாகக் காலம் கழிந்தோடும் செய்தியை நிலையாமை அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்,
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்[97]
என்றார். வாள் மரத்தினை ஒட்டு மொத்தமாக ஒரு நொடியில் அறுத்துவிடுவதில்லை. ஓர் இழுவைக்கு ஒரு நூல் அளவுதான் அறுபடும். அதுபோல ‘இன்று’ என்றும் ‘நாளை’ என்றும் ‘நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’என்றும் நாள்களைக் கடத்துகின்றவர்கள் வாழ்வு, பயனற்றுப் பாழ்படும் என்பது வள்ளுவர் செய்யும் எச்சரிக்கையாகும். இங்ஙனம் எதிர்மறையாக எச்சரித்த திருவள்ளுவர் ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’[98] என்றும் ‘கருவியால் காலம் அறிந்து செயல்[99] என்றும் கூறி வழி நடத்துகிறார். இறுதியாக, ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்’,[100] என்று வழி நடத்துகின்றார்.
இடமறிக
மனிதன் அறிவினைப் பெற்றாலும் காலமறிந்து கடமைகளை மேற்கொண்டாலும் தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பயன்தருதற்குரிய இடமறிந்து முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். முயற்சியும் இடமும் வாய்ப்பாக அமையின் வலிமை இன்மையும் வலிமையாக மாறும், வெற்றிகளைத் தரும். ஆதலால் காலம் அறிதலோடு களங்கள் அறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏவலர்
மனிதன் மேற்கொண்டுள்ள வாழ்க்கைப் பயணம் ஒரு நெடிய பயணம். இந்நெடிய பயணத்தைத் தனியே நடத்துதல் அரிது. எண்ணிய பணிகளை இனிதே முடித்தற்குரிய துணைவர்களை-ஏவலர்களைக் கருவியாகப் பெற்றிடுதல் வேண்டும். ஏவலர்கள் எளிதில் அமைவதில்லை.
- யான்கண் டனையர்என் இளையரும்[101]
என்று புறநானூறு பேசும். அதாவது, கண்கள்வழிக் கருத்தறிந்து, கருதியதை முடிக்க வல்லவர்கள் ஏவலர்கள். இன்று அத்தகு ஏவலர்கள் எங்குக் கிடைக்கின்றனர். அப்பூதியடிகளுக்கு வாய்த்த ஏவலர் மிகச்சிறந்த ஏவலர். அப்பரடிகள் எழுப்பிய ஒரு வினாவுக்குத் திரும்ப அவர் வினாக் கேட்கவேண்டிய அவசியம். இல்லாத வகையில் முழுமையான விடை சொன்ன அந்த ஏவலரின் அருமை நினைந்து நினைந்து மகிழத்தக்கது. அத்தகு ஏவலர்கள் இன்று கிடைப்பதில்லை. ஏவலர்களைத் தேர்ந்தெடுத்தல் வாழ்க்கையில் மிகச்சிறந்த சாதனைகளுள் ஒன்று. அறத்தின் காரணமாகவோ பொருளின் காரணமாகவோ இன்பத்தின் காரணமாகவோ உயிர்க்கு வரும் துன்பத்தின் காரணமாகவோ தமையுடைய தலைவனுக்கு மாறாக- எதிராகச் செயற்பட விழையாதோரையே ஏவலராகத் தேர்ந்து கொள்ளவேண்டும். ஏவலர்க்கு அறம் தம் தலைவன் வழி நிற்றலேயாம். தம் தலைவன்மாட்டு அறமல்லாதன இருக்குமாயின் அவனிடத்திலேயே போராடி அறம் காணவேண்டும். நல்லுழின்மையால் அவனிடமே திருத்தம் காண இயலாவிடின் அவனோடு மடிதலே ஏவலர் மேற்கொள்ள வேண்டிய அறம். ஏவலரைத் தேர்ந்தெடுப்பது ஒரு நுண்ணிய கலை, இக்கலையில் தேர்ச்சி பெறாதவரிடம் ஏவலர் கூட்டம் கூட்டமாக இருப்பர். ஆனால், பணிகள் நிகழா. ஏவல் கொள்வோர் எப்போதும் இது நடைபெறவில்லையே; அது நடைபெறவில்லையே; என்று அங்கலாய்த்துக் கொள்வார். அடிக்கடி ஏவலரோடு முரண்படுவார். ஏவலர் முணுமுணுப்பர்; ஏவலர்களும் மனிதர்கள் தாமே! அவரிடம் குணங்களும் உண்டு; குற்றங்களும் உண்டு. ஏவல் கொள்வோர் ஏவலரிடம் உள்ள குற்றங்களை மறக்கவேண்டும். அவரிடமுள்ள குணங்களைக் கண்டு கொள்ளவேண்டும். அவ்வழி ஏவல் கொள்ள வேண்டும். இஃதொரு செப்பமான வாழ்க்கை முறை,
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்[102]
என்பார் திருவள்ளுவர். ஏவலரைத் தேர்ந்து தெளிந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். தெளிந்தபின் ஐயப்படுதல் அன்பினைக் கெடுக்கும்; உறவினை உருக்குலைக்கும். பணிகளைக் கெடுக்கும்; பகையை மூட்டும். ஆதலால் ஏவலரைத் தெளிந்தபின் ஐயம் கொள்ளுதல் கூடவே கூடாது.
தேரான் தெளிவும் தெளிந்தன்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்[103]
என்பார் திருவள்ளுவர்.
வலிமை பெருக்குக! அறிக!
மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தை இனிதே நிறைவேற்றி முடிக்க வேண்டுமானால் பிறர் வலிமையை ஆய்ந்தறிவதுடன் தன் வலிமையையும் பெருக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும். வலிமையில்லா வழி, வளம் குன்றும்; புகழ் பெறுதலரிது: இறை நிலையையும் எய்துதலரிது; ஆதலால் நாள்தோறும் தம் வலிமையறிந்து மேலும் மேலும் காலத்தின் தேவைக்குரிய அளவுக்கு வலிமையைப் பெருக்கி வளர்த்துக் கொள்ளவேண்டும். வலிமையில்லா வாழ்க்கை ‘நடலை வாழ்க்கை’. வலிமையில்லாதவருக்கு ஏமம் இல்லை; இன்பம் இல்லை. ஆதலின் பெறவேண்டிய வலியறிக. அவ்வலிமையைப் பெற்று உயர்க என்று மனிதனை வழி நடத்துகின்றார் வலியறிதல் என்ற அதிகாரத்தின் மூலம் திருவள்ளுவர்.
உள்ளம் உடைமை உடைமை
மனிதன் அறிவைப் பெற்றான்; காலத்தினை அறிந்து ஆராயும் இயல்பினைப் பெற்றான்; வலிமையையும் பெற்றிருக்கின்றான். ஆயினும் அவனை உந்திச் செலுத்தி வளர்க்கும் ஊக்கமில்லா வழி, உரிய பயன்வராது. ஊக்கமென்பது உள்ளத்தின் எழுச்சி; பள்ளம் நோக்கிப் பாய்ந்துவரும் புனல்போலப் பணிகளையே நோக்கி விரையும் உள்ளத்து எழுச்சி, இயல்பான வாய்ப்புக்களின்மை குறையல்ல. வாய்ப்புக்கள் வந்தமைவனல்ல. மனிதன் படைத்துக் கொள்பவை. வாய்ப்புக்களைப் படைத்து வழங்கும் அறிவறிந்த ஆள்வினை வேண்டுமென்றார் திருவள்ளுவர்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்(து)
ஆள்வினை யின்மை பழி[104]
உலகத்தில் எதையிழந்தாலும் திரும்பப் பெறலாம்; ஆனால் ஊக்கத்தை இழந்த மனிதன் எதையும் பெற இயலாது. கடவுளாலே கூட அவனைக் காப்பாற்றமுடியாது. “உள்ளம் உடைமை உடைமை” என்பது வள்ளுவர் வாக்கு. அடுக்கிய உடைமைகளை உடைமையெனக் கொள்ளற்க! உடைமைகளைப் படைத்திடும் ஆற்றலுடைய உள்ளமே உடைமை. உள்ளத்தை இழந்த மனிதன் உயிரை இழந்த உடம்பு போல்வான். ஊக்கமிருப்பின் தெய்வத்தால் ஆகாதவைகளையும் கூடச் சாதிக்க முடியும். ஆதலால் வையகத்தின் வாழ்க்கையை வெற்றிகரமாக முடிக்கக் கருதும் மனிதன் ஊக்கத்தை உடைமையாகக் கொள்ள வேண்டும். அவனே ஊழை வெற்றி கொள்வான். ஊழிற்கு அடிமையாகும் கொள்கை நமது சமயத்தில் இல்லை. ஊழை மாற்றத்தானே இந்த வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் ஊழைக் கண்டு அஞ்சற்க! ஊழின் வலிமை, முயற்சியின் முன் தூள் தூள் ஆகும், ஊழை, ஆள்வினையுடைமை வெற்றி பெறும். ஆதலால் நம்பிக்கையுடன், ஊக்கக் கிளர்ச்சியுடன் வாழ்க்கையை நடத்துக. இதுவே வள்ளுவர் ஆணை !
ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்[105]
என்று தேற்றி வழி நடத்துகிறார்; ஊக்கம் தந்திடும் உரைகளைத் தந்துள்ளார். தொடர்ந்து செயற்படுக; துவளாதே; என்கிறார்.
மனிதன் பணிகளைத் தொடங்க வேண்டும். அங்ஙனம் பணிகளைத் தொடங்கிச் செய்வதன் மூலம் அவன் வாழும் உலகத்தை-சூழ்நிலையை இனியதாக அமைத்துக் கொள்கிறான்; அறிவை வளர்த்துக் கொள்கிறான். பணிகளின் வழி அவன் வாழ்தலே அவன் முழுமையெய்துதற்குரிய வழி. அதனாலன்றோ,
என் கடன் பணிசெய்து கிடப்பதே[106]
என்றார் அப்பரடிகள்.
இருவினையொப்பு
“பணி செய்து கிடப்பதே” என்ற அருள்வாக்கு எண்ணத்தக்கது. வாழ்வியல் ஒரு விந்தையான அமைப்பு. செயல் செய்வது, அதாவது வினைகளை இயற்றுவது தவிர்க்க முடியாத கடமை. ஆயினும், வினைவழி, இன்பமும், துன்பமும் நஞ்சு வட்டமாகச் சுழன்று வாராமல் தற்காப்பது அவசியம். அதற்கென்ன வழி? செயல்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதனுடைய விளைவுகளை - பலாபலன்களைத் தன் வயப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னயந்த சார்புணர்வுடன் நல்லதே செய்தாலும் வினை நீக்கத்திற்கு வழியில்லை. இன்பம் வந்துழி மகிழ்தலும் துன்பம் கண்டுழித் துயருறுதலும் நடுநிலை வழுவிய வாழ்வியல், அதனால் திருவள்ளுவர் “நன்றாங்காலும் மகிழற்க; அல்லாக் காலும் அமைந்து அழாதிருக்க; வேண்டுதல் வேண்டாமை என்ற கறங்கு வட்டாரத்தினின்று விலகி வாழ்க்கை விளையாட்டை நிகழ்த்துக. அவ்வழி, வினை நீங்கும்; துன்பம் நீங்கும்” என்றறிவுறுத்தியுள்ளார்,
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்?[107]
என்பார்.
எடுத்த பணிகளில் இடையறவு படாமை
பணிகளைத் தொடர்ந்து செய்தல் வேண்டும். தொடங்கிய பணிகளை இடையில் நிறுத்துதல் நன்றன்று. அப்பழக்கம், பணிகளின் பயனைக் குறைக்கும்; அது மட்டுமன்று, துன்பத்தையும் தரும் பற்றி எரியும் வீட்டை ஒரு புறம் அனைத்துவிட்டு இன்னொரு புறம் அணைக்காமல் இருப்பதால் யாது பயன்? தீயினால் வீடு அழிந்துவிடும். ஒரு புறம் அணைத்ததன் முயற்சியும் பயனற்றுப் போகிறது. ஆதலால் பணிகளை இடையில் நிறுத்துதல் நம் வாழ்க்கைக்குரிய வழியன்று. பணிகள் துன்பத்தோடு தொடர்புடையனதாம். இனிய மக்கட் பேற்றுக்குக் கூட, தாய் செங்குருதி சிந்தத்தானே வேண்டியிருக்கிறது. ஆதலால், பணிகளை மேற் கொண்டு வாழ்தல் என்பது மலர்கள் பரப்பப்பட்ட பாதையன்று. ஆயினும் துன்பம் கண்டு துவளாது, சோர்வடையாது - இடுக்கண்களின் காரணமாக இடையில் நில்லாது பணிகளைத் தொடர்ந்து செய்தலே வாழ்வாங்கு வாழும்நெறி. திருஞானசம்பந்தர், “இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும்”[108] என்பார். அப்பரடிகளின் வாழ்க்கைப் பயணத்தில் விளைந்த இடுக்கண்கள் ஒன்றா? இரண்டா? இடுக்கண்கள் நிறைந்த அவருடைய பயணத்தை நாடு உள்ளவாறு அறியவில்லை. ஏன், இடுக்கண்களுக்கும் துன்பங்களுக்கும் அஞ்சுகின்ற மதத் தலைவர்கள் அவரைக் கடவுளாக்கி விட்டனர்; அது மட்டுமா? கற்சிலையாகவும் செய்து விட்டனர். அப்பரடிகளின் புரட்சியினால் சமுதாயம் மாற்ற மடையவில்லை. ஆனால் சமயப் புரோகிதர்களுக்கு அப்பரடிகள் பெயரால் - குருபூசையின் பெயரால் விலாப்புடைக்க உண்ணச் சோறு கிடைக்கிறது. உண்ட களைப்பு நீங்கப் பேச, பேச்சுமேடை கிடைக்கிறது; கதாகாலட்சேபம் நடக்கிறது. வயிறு குலுங்கச் சிரிப்பதால் உடலசையாது போனாலும் உணவு செரித்து விடுகிறது. இன்றையச் சமய உலகம் அப்பரடிகளின் கொள்கைகளைக் கல்லறையில் புதைத்து விட்டு அவருக்குச் சிலை எடுத்து, விழா எடுத்துச் செகத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கொடிகட்டி ஆண்ட பல்லவப் பேரரசை எதிர்த்து,
நாமர்க்கும் குடியல்லோம்[109]
என்று விடுதலை முழக்கம் செய்தவர் அப்பரடிகள். அந்த விடுதலை முழக்கத்திற்கு அவர் கொடுத்த விலை அம்மம்ம! நீற்றறையைக் கடந்து வென்றார். பண்ணொடு பாட்டுக் கலந்த வாழ்க்கையை, இயற்கையோடிசைந்த வாழ்க்கையை - காதலின்பம் நிறைந்த வாழ்க்கையைத் துன்பமாக்க முனைந்த சமணர்களை அவர் எதிர்த்துப் பெற்ற வெற்றி அம்மம்ம...! இன்றைய திருக்கோயில்கள் அந்த வெற்றியை வழங்காமலிருக்கலாம்; மடாலயங்கள் மறந்திடலாம்; ஆனால் மெள்ளத் தென்றலிலே மிதந்துவரும் இசை, அப்பரடிகளின் புகழை இசைக்கிறது. வசந்தத்திலே மலர்ந்து மணம் வீசும் மலர்களிலே மகிழ்ச்சி வெள்ளம், அந்த இயற்கை வெள்ளம் “சொல்லுக்கு வேந்தனாக” நிற்கும் அவர் புகழை வாழ்த்துகிறது. உலகெலாம் உடல் வேறாக - உயிர் ஒன்றிக் காதலித்து உயரின்ப நிலையில் வாழ்ந்திடும் காதலர்களின் இன்ப வெள்ளம் திருநாவுக்கரசரின் புகழைப் பாடிப் பரவுகிறது. இந்தச் சாதனைகளுக்கு அப்பரடிகள் பெற்ற இடுக்கண்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப்பல. ஆனாலும் அவர் இடுக்கண்களைக் கண்டுழி நிற்காமல் பணிகளைத் தொடர்ந்தார்; வெற்றியும் பெற்றார். வையகத்தார்க்கு இன்பம் தந்தார். அதுவே வாழும் வழியென்பது வள்ளுவர் தந்த பாடம்.
செய்க பொருளை
உயிர், நமது சமய நெறிப்படி துய்த்தலுக்குரியது. அதற்குத் துய்க்கும் வலிமை இயல்பானது. இறைநிலையிலும் கூட அது திருவருளைத் துய்க்கும் உரிமையுடையது. உலகில் வாழப் பிறந்த மனிதன், துய்த்தல் வேண்டும்; துய்ப்பதற்குரிய பொருள்களைப் பெறவேண்டும். துய்ப்பில்லாதவர் வாழ்க்கை, தூரில்லாத மரம் போலக் கெடும். அதனா லன்றோ “துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ”[110] என்றார் அப்பரடிகள். இம்மையே தரும் சோறும் கூறையும்"[111] என்பது சுந்தரர் வாக்கு “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”[112] என்பது வள்ளுவர் வாய்மொழி. இங்குப் பொருள் என்பது அணிந்து அல்லது எண்ணிச் சேமித்து மகிழும் - முழுமையாகத் துய்த்தற்குப் பயன் தராத - தங்கம், வைரம், முத்து முதலியனவல்ல; இக்கால நாணயங்களுமல்ல. பொருள் என்பது உயிர்கள் முழுமையாகத் துய்த்து மகிழ்தற்குரிய பொருள்களேயாம்; உண்டு, தின்று மகிழ்தற்குரிய பொருள்கள் இல்லையானால் உயிர் உடலோடு கூடி வாழ்தலரிது. அதனாற்றானே “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”[113] என்ற வழக்கு தோன்றிற்று. ஆதலால் உடற் பிணியும், அவ்வழி உயிர்க்குச் சோர்வும் வராது வாழ்ந்திட விரும்பும் மனிதன், பொருள்களைச் செய்து குவிக்க வேண்டும். உண்டு, தின்று துய்த்திடும் பொருள்கள் உடலுயிர்க் கூட்டு வாழ்க்கைக்கு இன்றியமையாதன. ஆனால், உணவுகளால் மட்டும் மனிதன் உயிர் வாழ்ந்து விடுவதில்லை. ஒரோ வழி வாழ்வது போலத் தோன்றினாலும் உடலில் சதைகள் வாழுமே தவிர உயிரியல்புகள் வாழ்வதில்லை.
அன்பு
உயிர் துய்த்துத் தளிர்த்து மகிழ்ந்து வாழ அன்பு தேவை. அன்பின் வழியல்லது உயிரில்லை; இருந்தாலும் இல்லை என்பதே திருவள்ளுவர் கருத்து.
அன்பின் வழியது உயிர்நிலை! அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு[114]
என்பார் திருவள்ளுவர்.
அன்பு, உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். புலன்களில்-பொறிகளில் பொதுள வேண்டும். ஊற்றெழும் அன்பு, தடையின்றி மற்றவர்கள்பாற் பாயவேண்டும்; புயல் சுமந்த வான், மழையைப் பொழிந்தாலே அதற்கு விடுதலை; இன்பம்; வாழ்த்து கருவுற்ற தாய் ஈன்று புறந்தரலே அவளுக்கு விடுதலை, இன்பம்; தாய் என்ற பெயர்; பாராட்டு, பாதுகாப்பு: வாழ்த்துக்கள். அதுபோல் மனிதன் அன்புள்ளத்தைப் பெற்று மற்றவர்க்கும் காட்டுதல் மூலமே வாழ்வான். தன்னைப் பற்றிய கவலையினின்றும் விடுதலை பெறுவான். வாழ்வித்து வாழ்தலே மனிதனின் வெற்றிக்குரிய சுருக்கவழி. வையகம் உண்ணுதலே அவன் உயர்வதற்குரிய ஒரே வழி. வையகம் உண்ணாமல் உண்டால் அவன் சதை வளரலாம்; ஆனால் அவன் வளரமாட்டான். அவனைச் சுற்றிக் காக்கை கழுகுதான் வட்டமிடும். மனிதர்கள் வட்டமிடமாட்டார்கள். அவனுக்காக அவனழுதால் எவ்வளவு நாளைக்கு அழுவது? அவன் துன்பத்துக்கு அழுது முடிக்க அவன் கண்களுக்கு ஆற்றல் உண்டா? ஒரு போதும் இல்லை. அவனுடைய துன்பத்தைக் கண்டு அழ ஆயிரமாயிரம் கண்களை அவன் பெறவேண்டும். அவனுடைய துன்பத்தைத் துணித்து மாற்ற எண்ணில் கரங்கள் முன் வரவேண்டும். அது எப்பொழுது நிகழும்? இவன் மற்றவர் துன்பத்தை-மற்றவற்றின் துன்பத்தைத் தன் நோய் போல் எண்ணி அழும் பொழுது தான்; மாற்றத் துடிக்கும் பொழுதுதான். மனிதனே போதும், உனக்கு நீயே அழுது கொண்டது. அது வெறும் புலம்பல்; அதில் தன்னல வாடை வீசுகிறது; அன்பின் ஈரம் இல்லை; ஒரே வறட்சி மயம்! அழு; ஆனால் உனக்காக அழாதே; மற்றவர்களுக்காக அழக்கற்றுக்கொள். அதுவே அன்பின் தவம், வாடிய பயிரின் வாட்டமெலாம் கண்டு வாடி அழுதாரே, அந்த வள்ளலாரை நினைத்துக்கொள். அந்த உயர்ந்த அன்பை நீ எண்ணு; நெஞ்சத்தில் தேக்கு. அந்த அன்பே தவம். அந்த அன்பே சிவம்; அன்பும் சிவமும் இரண்டல்ல! ஒன்றேயாம். மனிதனைச் சிவமாக்குவது அன்பு என்ற ஒன்றேயாம்.
அன்பலால் பொருளும் இல்லை
ஐயன் ஐயாற னார்க்கே[115]
என்றார் அப்பரடிகள். இந்த அன்பு வையகத்தை ஆட்சி செலுத்த வேண்டும், வழி நடத்த வேண்டும் என்ற தணியாக் காதலினால் இன்று திருக்கோயில்கள் தோறும் எழுந்தருளியுள்ள இறைவன் - எல்லாமாக இருந்தருளும் இறைவன் திருவுருவங்களுக்குள் - கருவறைக்குள் அடைப்பித்துக் கொண்டான். ஏன்? உயிர்களிடத்து அன்பினை ஆரத்துய்க்க! உயிர்களுக்குத் தம் அருளை வழங்கித் துய்த்து வாழ்வித்திட! நம்பியாண்டார் நம்பியின் நிவேதனத்தைச் சுவைத்தவன் - கண்ணப்பர் மெள்ள வாயில் அதுக்கிச் சுவையுண்டாக்கிப் படைத்த புலால் உணவையும் விரும்பி வேட்டவன் - அரி வாட்டாயர் தந்த மாவடுவைக் கழனிகளின் வெடிப்பில் தங்கிச் சுவைத்த தயாபரன் இன்று ஏன் திருக்கோயிலில் உண்ணவில்லை? அன்று அவர்கள் படைத்தவைகளைவிட விலை மிகுதியுடைய பண்டங்களாய் இருந்தாலும் ஏன் உண்ணவில்லை? மறைவாகச் சுவைத்து உண்ணத் திரை இருந்தும் ஏன் சுவைக்கவில்லை? இறைவன் சுவைக்காதது ஏன்? என்று நினைந்து அழுவார் இல்லாது போயினர். அது ஒரு தவக்குறை. இறைவன் “தாயினும் நல்லான்'; தாயிற் சிறந்த தயாவுடையான். உலகத்தில் நடமாடும் குறைகளும் நிறைகளும் உடைய தாய் கூட, தான் ஈன்ற குழந்தை பசித்திருக்க உண்ணமாட்டாள். அங்ஙனம் இருக்க அண்ட மெலாம் பூத்தவளாக - பூத்தவண்ணம் காப்பவளாக விளங்கும் கடவுளாகிய தாய் “உலகத்தில் கோடானுகோடி உயிர்கள் உண்ணாமலிருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் உண்ணும்வரை உண்ணமாட்டேன்” என்று தவம் கிடக்கிறாள். அவள் தனக்குவமையில்லாத் தாய். ஆனாலும் கடவுளைப் பற்றிக் கவலை படாதவர்கள், கடவுளைப் பிழைப்புப் பொருளாக்கிக் கொண்டவர்கள் வழக்கம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் மனித வாழ்க்கைக்கு உயிர் நிலை அன்பேயாம். அன்பே துன்பத்திற்கு மாற்று. அன்பே இன்பத்திற்கு வித்து. அன்பே ஆக்கத்துக்கு வழி. அன்பில் இழப்பதும் ஆக்கமேயாம் இத்தகைய உயர்ந்த அன்பு நெறியில் மனிதனை வழி நடத்தி வளர்க்கிறார் வள்ளுவர். அன்பு நெறியே நமது சமயத்தின் உயரிய தவம்.
நட்பு
அன்பு பெற்றுத்தருவது நட்பு. காதலியின்றி வாழ்தல் இயலும், நட்பின்றி வாழ்தல் இயலாது. நமது கடவுளாகிய அம்மை அப்பனுக்கும் ஒரு தோழன் தேவைப்பட்டான். இருவரை மணந்து வாழ்ந்த ஆரூரருக்கும் நட்பு தேவைப்பட்டது. வள்ளுவர் காலத்து நட்பு என்ற சொல், ஆரூரர் காலத்தில் தோழன் என்ற புது உருப்பெற்றது. தன் தோள், தனக்கு உதவி செய்தலைப் போல உதவியாக இருப்பவன் தோழன். நட்பு, வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. நல்ல நட்பைப் பெற்றுவிட்டால் செயற்கரியது என்று ஒன்று இல்லை என்பதனை,
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு[116]
என்பார் வள்ளுவர். நட்பு, நாம் செய்யும் பணிகளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. நல்லோர் நட்பில் பிரிவே இல்லை. “காதலிற் பிரிவு” பாடிய கவிஞர்கள் உண்டு; ஆனால் நட்பிற் பிரிவு பாடிய கவிஞர்கள் இல்லை. ஒரோவழி பிரிந்தது போலத் தோன்றினாலும் அது, பழக்கங்களின் இடையிடே தவிர, நட்புணர்வின் இடையீடு இல்லை. ஆரூரர்சிவபெருமான் நட்பில் இந்த உண்மை புலப்படுகிறது. நட்பு என்பது குற்றங்களைக் காணாதது; குணங்களையே நாடுவது. அது பிறைநிலாப் போல வளரும். பயிலுழிப் பயிலுழி இன்பம் தரும். இதுவே நட்பு. இன்று, நட்பு என்ற சொல், தரம் தாழ்ந்து கிடக்கிறது. ஏன், கெளரவமான இரவலர்கள் நட்பு என்ற பெயரைப் பூண்டொழுகுகிறார்கள். மனிதன் வாழ்க்கையில் முழுமையான வெற்றியைப் பெற நல்ல நட்பினைப் பெறவேண்டும். நல்ல நண்பன் குற்றங்களைக் காணாதவன்; அவனுக்குக் குற்றங்கள் தெரியும் ஆனால் குற்றங்களின் வழியே அவன் மனம் திரிபடையாது. அதே போழ்து குற்றங் களுக்கு இசைந்து முகமன் கூறி உடனின்று அழிக்கவுமாட்டான். ஏற்புழி வடுப்படா வண்ணம் குற்றங்களைத் திருத்துவான். மாணிக்கவாசகரின் “பையத் தாழுருவி” என்ற சொற்றொடர் நினைந்து நினைந்து இன்புறற்பாலது. இறை வழி பாட்டுநெறியில் தோழமை நெறியும் ஒன்று. நமது சமயம் அச்சத்தில் பிறந்ததன்று அன்பில் பிறந்தது; அறிவில் தோன்றியது; நன்றிப் பெருக்கில் பிறந்தது. ஆதலால் கடவுளிடத்து அச்சத்தை வளர்ப்பதில்லை-கடவுளிடத்துத் தோழமையைக் கொள்ளத் துாண்டி வழிநடத்துவது. கடவுளும் விரும்பும் நல்ல நட்பைத் தேடிப்பெறுக என்று வழி நடத்துகிறார் வள்ளுவர்.
இல்லறம்
மனிதன் என்னதான் அறிவைப் பெற்றாலும், அரிய நட்பினைப் பெற்றாலும் சில காலம் கடந்தபிறகு அவன், வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணர்கிறான். அவன் அன்புடையவனாகிப் பலர்க்கு அன்பினை வழங்குகிறான். அதேபொழுது தன்னிடம் அன்பு காட்டுகிறவர்களை எதிர் நோக்கியே இருக்கிறான். அங்கேதான் மனிதன் இல்லறத்தை நாடுகிறான் இல்லறம் உயர்ந்ததா? தாழ்ந்ததா? என்ற விவாதம் நம்முடைய சமயத்தில் இல்லை. நம்முடைய சமயம் இல்லற நெறியை ஏற்றுப் போற்றுகிறது. ஏன் இறைவனையே சிறந்த இல்லறத் தலைவனாகக் காட்டுகிறது நம்முடைய சமயம். நம்முடைய தொன்மைக்கால வழிபாட்டுத் திருமேனி, அம்மையப்பன் திருமேனியேயாம், அம்மையப்பன் திரு மேனியைத் “தொன்மைக் கோலம்” என்று திருவாசகம் போற்றுகிறது.
தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்கவளை யும்உடைய தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி[117]
என்பது காண்க. திருமுறை ஆசிரியர்கள் அம்மையப்பனாகவே கடவுளைக் கண்டு வாழ்த்துகிறார்கள். திருவள்ளு வரும் “ஆதிபகவன்”[118] என்கிறார். ஆதலால் இல்லறம் தவமன்று என்று கருதுவது பிழை. இல்லறத்தில் துறவின் உட்கூறுகள் இல்லை என்று கூறுவதும் பிழை சிறுத்தொண்ட நாயனார் குடும்பத்தினரின் வாழ்க்கையில், இளையான் குடிமாற நாயனார் குடும்பத்தினரின் வாழ்க்கையில் துறவின் தோற்றங்கள் இல்லையா? விளைவுகள் இல்லையா? இளையான்குடிமாற நாயனார் குடும்பத்தில் விளைந்த அளவுக்குத் துறவு உணர்ச்சி, துறவிகளால் ஆட்சி செய்யப்பெறும் சமய நிறுவனங்களில் கூட இன்று இல்லையே. ஆதலால் இல்லறம் நல்லறமே. நன்றுடையானாக விளங்கும் நமது வழிபடும் தெய்வமாகிய சிவபெருமான் பெண்ணின் நல்லாளோடு பெருந்தகையாக இருந்தே உயிர்களைக் காப்பாற்றுகின்றான். இல்லறம் ஏற்க என்று மனிதனை வழி நடத்துகிறான்.
வாழ்க்கைத் துணை நலம்
“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை”[119] - என்பது வள்ளுவர் வாக்கு அறனெனப்பட்டதே என்ற தேற்றே காரத்தினால் இல்லறம் அறமே என்று ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாக்குகிறார். ஆயினும் இல்லறம் இருவர் சேர்ந்து செய்யும் அறம். அதில் ஒருமித்த அன்பில் பழி தோன்ற அனுமதிக்கக்கூடாது. ஒரோவழி அவர்தம் அன்பின் குற்றங்கள் தோன்றினாலும் அக்குற்றங்கள் அயலறியாவகையில் வாழ்தல்வேண்டும். மாறாத அன்பில் குற்றங்கள் குணமாக்கப்படுதல் வேண்டும். இதற்குத் திருநீலகண்ட நாயனார் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, கண்ணகியின் வரலாறு உயிரோட்டமான ஓர் ஒப்புமை. இல்லறத்தில் மனிதன் பெறும் துணை “சம்சாரம்” அன்று. அத்துணையை “வாழ்க்கைத் துணை நலம்” என்பார் வள்ளுவர். ஆம் அவள் அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு துணை. அதுமட்டுமல்லள்; அவள் மூலம் அவன் பெறும் நலனே அவளாக இருக்கிறான். வாழ்க்கைத் துணை நலம் என்ற பெயர் ஆழ்ந்த பொருள் உடையது.
தமிழகத்துக் கற்புக் கொள்கை உடலைக் கடந்தது. உயிரில் காண்டது. மறந்தும் பிறர் நெஞ்சு புகாத கற்பே கற்பு. பெண்ணின் கற்பு கணவனால் காப்பாற்ற இயலாத ஒன்று. ஆதலால் வாழ்க்கைத் துணை, தன் கற்பைத் தானே காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார். ஆனால் அவள் அவன் கற்பைக் காப்பாற்ற முடியும். அவள், தன்னுடைய தலைவ னுக்குப் பெட்புற ஒழுகின் அவன் நிச்சயமாகக் கற்புடையவனாக இருப்பான். அவளுக்கே தற்கொண்டானைப் பேணும் பொறுப்பைக் கொடுத்தார். தன் தலைவனுக்குக் கொடுத்த சொல்லையும் காத்துத், தன் தலைவன் கொடைப் பண்பின் காரணமாக மற்றவர்கட்கு வழங்கிய சொற்களையும் காத்து, முடிவாகக் குடும்பத்தின் நற்புகழையும் காப்பவள் வாழ்க்கைத் துணை நலம் ஆவாள். வினைமேற் செல்லும் தலைவன், வினையின்கண் பட்ட இடுக்கண்களால் ஒரோ வழிச் சோர்வடையலாம். ஆனால் வாழ்க்கைத் துணைநலம் சோர்வடையக் கூடாது. அவனுடைய தோல்விகளை வெற்றிகளின் படிகளாக்கவேண்டும். அவன் உள்ளத்துச் சோர்வுகளை அகற்றிச் சுறுசுறுப்பாக்கி விட வேண்டும். தலைமகனின் வருவாய்க்குத் தகுந்த வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டும். அவன் தரும் செல்வத்தைக் கொண்டு பல பேரறங்கள் செய்ய வேண்டும். அன்னை காமாட்சி நாழி அரிசி கொண்டு அறங்கள் பலவற்றைக் காஞ்சியில் செய்த தாகக் கூறும் வரலாற்றின் நுண்பொருள், வாழ்க்கைத்துணை நலமாக அமைந்திருப்பவர்கள் உணரத்தக்கது. இத்தகு வாழ்க்கைத் துணை நலத்தைப் பெற்றவன் சொர்க்கத்தின் வாயிலை அடைந்து விட்டான். இல்லை, அவனுடைய வாழ்க்கையில் சொர்க்கம் வந்து அமைந்துவிட்டது என்பது தான் சேக்கிழார் - வள்ளுவர் ஆகியோர் காட்டும் உண்மை.
காதல்
மனையறத்தில் வாழ்வோர் இயற்கையின் காரணமாக ஈருடலில் வாழ்கிறார்கள். ஆனால் திருவள்ளுவர் அவர்களுடைய வாழ்க்கை அமையவேண்டிய முறையை,
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு[120]
என்று அழகுறக் கூறுகின்றார்.
குடும்பத் தலைவனாகிய தலைமகன், அவளைக் கண்ணின் பாவையாகக் கருதுகின்றான். அவள் அவனைத் தன் நெஞ்சத்தவராகக் கருதுகின்றாள். இந்தக் காதற் சிறப்பு குடும்பத் தலைவிக்கு அமையாவிடில், வழிபடும் அம்மையாகிய உமையே தக்கன் வேள்வியில் பெற்ற இழிநிலைமை எய்துவாள். அது வரலாறன்று! ஆயினும், வாழ்வோருக்கு உண்மையை உணர்த்த எழுந்த அறவுரை; ‘இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்க’ என்று மனிதனை வாழ்க்கைத் துணை நலத்துடன் சேர்ந்து இல்வாழ்க்கையில் அமர்த்துகிறார் வள்ளுவர்.
அறிவறிந்த மக்கட் பேறு
மனிதனை இல்வாழ்க்கையில் அமர்த்திய திருவள்ளுவர் விரைந்தோடிச் சென்று, தொட்டிலை வாங்கி வருகிறார்; ஆம்; வள்ளுவர் எதிர்பார்ப்பது மனித சமுதாயத்தைத் தொடர்ந்து வாழ்வித்தருளும் மக்கட்பேற்றை, அஃது இயற்கைதானே! அதற்கென்ன வள்ளுவரின் எதிர்பார்ப்பு? வள்ளுவர் மக்கட்பேற்றை மட்டுமா எதிர் பார்க்கிறார். தொட்டிலை வாங்கி நடு வீட்டில் வைத்த திருவள்ளுவர், மனையறம் மேற்கொண்டோரின் காதில் ஏதோ ஓதுகின்றார்; அங்ஙனம் காதில் ‘கிசுகிசு’வென ஓதியதும் எப்படியோ திருக்குறளில் இடம்பெற்றுவிட்டது. அவர்கள் செவிகளில் அவர் ஓதியது என்ன? கூடி வாழ்க, அதுவே நன்மக்கட் பேற்றுக்குரிய வழி என்றுதான் ஓதியிருக்கவேண்டும்.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற[121]
அடேயப்பா! வள்ளுவர் பல இடங்களில் இப்படிச் சொல்லியிருக்கிறார். அதுதான் அவரியல்பு போலும் என்று கருதுதல் கூடாது. உண்மையிலேயே இதுவரையில் மனிதன் கடந்து வந்துள்ள வாழ்க்கையின் சாதனைகளையும் அவன் அடைந்துள்ள குணங்களையும் அவனுள்ளத்து இயல்பினையும் ஒளிக்காமல் மறைக்காமல் உருக்காட்டுவது அவனுடைய மக்கட்பேறேயாம். தகுதி வாய்ந்த மக்களாக இல்லாது போனால் அவனுடைய அறிவில் குற்றம் காண்பிக்கப்பெறும். அவனுடைய குணங்கள் பழிக்கப்பெறும். அதுமட்டுமன்று. அவன் குற்றமுடையவனாக இருந்து தந்தையாகாமல் இருந்திருப்பானால், ஒரு தலைமுறையோடு அக்குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பெறுகிறது. தகுதியில்லாத மக்களை ஈன்று புறந்தருதல் மூலம் அடுத்த தலைமுறைக்குத் துன்பச் சுமையினைத் தருபவனை வையகம் எப்படிப் போற்றும்? உலகத்தில் நல்லவன் என்ற பெயரைக்கூட எளிதில் பெற்று விடலாம். ஆனால் நல்ல தாய், நல்ல தந்தை என்ற பெயரை அவ்வளவு எளிதிற் பெற இயலாது. அவனுடைய இயல்புகளாலேயே அவன் நல்ல தந்தை என்று பாராட்டப் பெறுவதில்லை. அவனுடை மக்கட் பேற்றின் குணங்களைப் பொறுத்தே அவன் நல்ல தந்தையென்று பாராட்ட பெறுகிறான்.
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்[122]
என்று திருக்குறள் பேசும். சேக்கிழார், அப்பூதியடிகள் வரலாற்றில் மூத்த திருநாவுக்கரசு வாயிலாக, “நல்ல தாய் தந்தை ஏவ நானிது செய்யப் பெற்றேன்”[123] என்று பாராட்டுவார். பெற்றோர், மகனை அறிவார்ந்த உணர்வில் பெற்றால் மட்டும் போதாது. மீண்டும் காலத்தின் சூழலால் கெட்டுவிடாமல், வள்ளுவர் அவனை வளர்த்தது போலத் தன் மகனை இவன் வளர்க்க வேண்டும். மகனும் தந்தையின் தகுதியறிந்து ஒழுகித் தந்தைக்குப் புகழைச் சேர்க்க வேண்டும்.
மனிதன் ஆற்ற வேண்டிய அறங்களும் பயனும்
இங்ஙனம் மனிதன் தனியே பிறந்து, வள்ளுவப் பேராசான் துணைகொண்டு குடும்பத் தலைவனாகி விட்டான். தனி மனிதனின் வாழ்க்கைப் பயணம் இந்த அளவோடு நிற்கவில்லை. அவன் சமுதாயத் தலைமையும் ஏற்கவேண்டும். அவனோடு வாழும் சமுதாயத்திற்கு அவன் தொண்டு செய்ய வேண்டும். ஒரு தலை சிறந்த மனிதன் வாழும் சமுதாயத்தில் கொலை நிகழக்கூடாது. கொல்லாமை ஒரு சிறந்த பேரறம். திருவள்ளுவரின் நெஞ்சம் கொல்லாமை அறத்தில் தோய்ந்திருந்தது.
- ஒன்றாக நல்லது கொல்லாமை[124]
என்பார். பிறநெறியினர் வேள்வியின் பொருட்டுக் கொல் வதைக்கூட திருவள்ளுவர் மறுக்கின்றார்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டவின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று[125]
என்பார். கொல்லாமை என்பதற்குத் திருவள்ளுவர் கண்ட கருத்தே புதிது. உலகில் யாதொரு மறையும் கூறாதது. அஃதென்ன? திருவள்ளுவர் கொல்லாமை அதிகாரத்தில்,
பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை[126]
என்பார். பொருளமைதியை நோக்கினால் இத்திருக்குறள் கொல்லாமை அதிகாரத்திற்கு இயைபுடையதன்று. ஈதல் ஒப்புரவறிதல் ஆகிய அதிகாரங்களில் கூறப்படும் பொருட் குறிப்பே இக்குறளிலும் கூறப்படுகிறது. அந்த அதிகாரங்களில் இந்தக் குறளை ஓதாமல் கொல்லாமை அதிகாரத்தில் வைத்தது ஏன்? வாழப் பிறந்த ஓருயிரை உணவளித்து வாழ்விக்காமல் சாகவிடுதலும் ஒருவகையில் கொலையே என்ற கருத்தில் இந்தத் திருக்குறள் கொல்லாமை அதிகாரத்தில் வைக்கப் பெற்றுள்ளது. பகுத்துண்ணும் பண்பு தழீய பழக்கம் பாரினில்-வையத்து மாந்தரிடத்தில் வராததினாலேயே திருக்கோயிலுள் எழுந்தருளியிருக்கும் இறைவன் உண்ண மறுத்திருக்கிறான். அவன் சந்நிதியில் இடப் பெற்றிருக்கும் திரை வஞ்சிக்கப்பட்ட மக்களைப் பாராதிருப்பதற்காக என்பதை அவன் திருவுள்ளம் அறியாதா என்ன? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நெறியே பரமன் நெறி. அந்நெறி நின்று ஒழுகுவோரே ஒழுக்கத்தின் நெறி நின்றவராவர்.
மனிதன் தான் பிறந்த குடியை வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவனும் நிலையாக வாழ முடியும். அவனுடைய குடும்பமும் வாழும். எனவே மனிதனைச் சமூக மனிதனாக வள்ளுவர் மாற்றி வளர்க்கிறார். தனி மனிதனைச் சமூக மனிதனாக மாற்றும் பொழுது ஈதற் பண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றார்; ஒப்புரவறிதலை ஓதிக் காட்டுகின்றார். இவ்விரண்டு அறங்களும் சமுதாயத்திற்குத் தனி மனிதனால் செய்யப்பெறுபவை. மாறாக அவன் சமூகத்திலிருந்து புகழைப் பெறுகிறான். மனைவி, கணவனைப் பாராட்டுவது புகழாகாது. கணவன் மனைவியைப் பாராட்டுவது புகழாகாது. நண்பர்கள் பாராட்டுவது புகழாகாது. உண்மையான புகழ், பகைவர்களாலும் பாராட்டப் பெறுவதுதான். சூரபதுமன் செருக்களத்தில் அண்ணல் அறுமுகச் செவ்வேளைப் பாராட்டுகிறான்; போற்றித் துதிக்கிறான். இதுவே புகழ் தலையாய புகழ், பொதுவான அயலவரும் புகழலாம். சமுதாயம் தலைமகனைப் பாராட்டுவதுதான் புகழ். எனவே தனிமனிதனைச் சமுதாயத்தில் ஈடுபடுத்திச் சான்றாண்மை யுடையவனாக்கிப் பண்புடையவனாக்கிப் புகழுக்குரியவனாக்குகின்றார்.
அரசு
இவ்வளவும் தனி மனிதன் உடன்பாட்டு முறையில், தானே வளர்ந்த பயணம். கழனியில் வேளாண்மை செய்யத் தொடங்கும் பொழுது காவல் தேவையில்லை, பயிர் வளர்ந்த பிறகு காவல் தேவை. எனவே தனி மனிதனும் சமுதாயமும் இணைந்து வளரும் வழி, புலித்தோல் போர்த்த பெற்றங்களும் இடையில் தோன்றி விடுவதுண்டு. அத்தகைய வல்லுருவங்களிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்ற வலிமையான காவல் தேவைப்படுகிறது. கண்ணோட்டமில்லாத காவல் தேவைப்படுகிறது. அந்தக் காலத்தில்தான் வள்ளுவர் மனிதனுக்கு அரசைப் படைத்துக் காவலாக்குகிறார். அக்காவல் காவலுக்காக ஏற்பட்டதன்று. காவற்காரர்களுக்காகவும் ஏற்பட்ட தன்று. இன்றைய நிலையில், ஏன் இடைக்காலத்திலும் கூட வரலாற்றிலும் கூட மக்களுக்காக ஏற்படுத்தப்பெற்ற காவல் தன்மையுடைய அரசுகள் காவல் தன்மையை இழந்து, மக்களுக்கே துன்பம் செய்பவைகளாக உருமாறி விட்டன. அதனால்தான் போலும் ஆள்வோர் ஆளப்படுவோருக்குக் காவல் செய்யத் தவறியதால் ஆள்வோர் தமக்குக் காவல் அமைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது, வள்ளுவர் வகுத்தத் தந்த அரசு குடிதழுவிய அரசு முறை செய்து காப்பாற்றும் நல்லரசு, ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்[127] என்ற பொது நெறியில் மக்களைக் காப்பாற்றுவதே அரசு.
துறவு
இங்ஙனம் நல்ல அரசு அமைந்துவிட்ட போதிலும் மனிதன் அவனிடம், ஏதோ ஒரு இல்லாமையை உணர்கிறான். தவம் செய்தவன்தான். ஆனால் மேலும் மெய்யுணர்வு ஆர்வம் அலை மோதுகிறது. ஆதலால் அவனுடைய தகைமை சான்ற மகனிடத்தில் உடைமைகளை ஒப்படைக்கின்றான். அப்பரடிகள் கூறியது போலத் துணையாய் நின்று துறப்பிக்கும் திருவருளை நினைந்து அவனும் அவளும் தனித்து வாழ்கின்றனர். உடல்களால் மட்டும் தனித்து அல்ல. உயிர்களால் தனித்து அல்ல. காதலின்பத்தை அருளின்பமாக மாற்றிப் பரபரப்பான உலகத்திலிருந்து விலகித் தனித்து வாழ்கின்றனர். இப்போது விழைவு இல்லை; விருப்பமில்லை. தாம் கடந்து வந்த காலத்தின் வாழ்க்கைப் பயணங்களைத் திறனாய்வு செய்கின்றனர். புலன்களைத் துய்மையாக்குகின்றனர்; அவ்வழிப் பொறிகளில் தூய்மை காக்கின்றனர்; தவம் செய்கின்றனர். இறைநெறி நிற்கின்றனர். தமிழின் நாகரிகத்தில் இங்கேயே துறவு மலர்கிறது.
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே[128]
என்பது தமிழர் வாழ்வியல் நெறி.
வீடு
திருவள்ளுவர் கடவுளை வாழ்த்தி வாழும்படி வழி நடத்துகின்றார். திருவள்ளுவர் முதிர்ந்த ஞானி; சீவன் முத்தர்; திருவடி ஞானம் பெற்றவர். அதனால், திருவடிகளையே தொழத் தூண்டுகிறார். வழிபாட்டால் பொறிகள் தூய்மை பெற்று, மற்றவர் சுவைத்தற்குரிய சுவையினைப் பெற்று விளங்க வேண்டுமென்பது வள்ளுவர் நெறி.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.[129]
பொறிகளை “அவித்தல்” திருவள்ளுவர் கண்டுணர்த்திய செந்நெறி. திருவள்ளுவர் பொறிகளை அடக்கவோ அழிக்கவோ சொல்லாமல் அவித்தல் என்று கூறுவது நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. சுவைத்தற்குரியனவாகவும் ஆனால் இயல்பில் சுவையில்லாதனவாகவும் இருப்பனவற்றைச் சுவைத்தற்குரியவாறு பக்குவப்படுத்தும் செயல்முறை “அவித்தல்” நெல் அவித்தல்; கிழங்கு அவித்தல் ஆகிய சொல் வழக்குகள் ஒப்புநோக்கி எண்ணத்தக்கன. இயல்பாகத் தற்சார்புடைய வேண்டுதல் வேண்டாமை, அலைவழிப்பட்டுக் காமம், வெகுளி மயக்கங்களில் சிக்கி, ‘யான்’, ‘எனது’ என்ற செருக்கால் சுவை இழந்து, அசுரநிலையை அடையாமல் இறைவனுடைய திருவடிகளை நினைந்து நினைந்து பணிவுடைமையைப் பண்பாகக் கொண்டு, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கநோக்கிப், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்வோர் இறைவன் திருவடியை எளிதில் எய்துவர். இல்லை, அங்ஙனம் வாழ்வோர் மனத்தில் இறைவன் எளிதில் வந்து தங்குவான். அந்த நிலையே வீடு பேறு உடற் களைப்பு நீங்க, உறங்கி மகிழ, உலகியல் வீடு துணை செய்கிறது. அதுபோல் எல்லாப் பிறப்பும் பிறந்து எய்த்து இளைத்த உயிர்க்குத் தங்கி இன்புறும் வீடு இறைவன் திருவடியே. உலகியல் வாழ்க்கையில் சொந்த வீடில்லாதார் படும் அல்லல் எவ்வளவு? அதுபோலப் பல்வேறு பிறப்புக்களை அடைந்து துயருறும் இந்த உயிர், இன்ப அன்பினில் நிலையாகத் தங்கியிருக்கும் வீடு திருவடியே. இந்த வீடு பெறாதாரை இரக்கமுடன் நோக்குகிறார். “சின்னஞ்சிறு வீட்டில் ஐவரோடு கூட்டுக் குடித்தனம் செய்யும் உயிரை நோக்கி உயிருக்கு இன்னமும் புகுந்து நிலையாகத் தங்கியிருக்கும் வீடு கிடைக்கவில்லையோ” என்று கேட்கிறார்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு[130]
என்பது குறள். இங்ஙனம் உயிர்கள் நிலையான இன்ப அன்பினில் திளைத்து மகிழும் திருவடிப் பேற்றினை உணர்த்திய திருக்குறள் மறை வாழ்க! வையம் வாழ்க!
கடவுள் வாழ்த்து
பிறவி, இன்பமே ஆனாலும் கடலேயாம். கடலில் குளித்தல் சிலபொழுது மகிழ்ச்சி. ஆனால் தொடர்ந்து கடலில் கிடத்தல் மகிழ்வைத் தராது. கடலிடைக் கிடப்பவர் கரையேறவே நினைப்பர். பிறவிக் கடலில் கிடந்திடும் நம்மை எடுத்து ஆளும் திருவடிகள், இறைவன் திருவடிகள். நம்மைக் கடலிலிருந்து எடுத்திடும் திருவடி, அறத்தின் திருவுருவம். அறத்தின் வடிவமாய் அமைந்துள்ள கடல் அவன். உவர்ப்புக் கடலில் உருக்குலைந்து கிடக்கும் நம்மை, உவப்புக் கடலுக்கு எடுத்தாளும் திருவடிகள். உவர்ப்புக் கடல் அலைமோதுகிறது, அவலத்தைத் தருகிறது; கவலையைத் தருகிறது. மனக் கவலையை மாற்றத் ‘தனக்குவமை யில்லாதான் தாளினை’ வாழ்த்திடுவோம்; அத்திருவடிகளை அணைந்து இன்புறுவோம். அத்திருவடிகளை நாம் சார்ந்திட இருவினையும் கடந்திட வேண்டும். நல்வினையும் துன்பமே, தீவினையும் துன்பமே. இவ்விரண்டுக்கும் வித்து புகழ் விரும்பல். இறைவனின் பொருள் சேர் புகழை விரும்பிப் போற்றினால் இருவினையும் அகலும். புகழையே துறந்தமையால் வேண்டுதலும் இல்லை வேண்டாமையும் இல்லை. இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அவனைச் சார்ந்த நமக்கு யாண்டும் இடும்பை யில வேண்டுதலும் இன்மையால் புகழ் நாட்டமில்லை. அதனால் பொறிகள் தூய்மையாயின. அதனால் அத் தூயோன் திருவடிகள் மனத்தகத்தே வந்து மன்னி நின்றன. அவன் கருணையினால் உலகம் ஒரு முதலாகி நிற்கிறது. உலகம் வாழ்க! எல்லா உலகமுமாய் நிற்கும் இறைவன் வாழ்க! இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!
தொகுப்புரை
நமது சமயத்திற்கு-இந்து சமயத்திற்கு உரிய உண்மையான மறைநூல், திருக்குறளேயாம். திருக்குறள் நமது சமயத்தின் தனித் தன்மையையும் விளக்குகிறது, அதே போழ்து எல்லைகளற்ற பொதுமைக்கும் துணையாக நிற்கிறது. இதுபோன்ற ஒருமறை நூல் உலகத்தில் வேறு எந்தச் சமயத்திற்கும் கிடைத்ததில்லை. இனிமேலும் கிடைத்தற்கியலாது. இந்திய தத்துவ-நீதி நூல்களுள் மிகவும் விழுமியது திருக்குறள் என்று ஆல்பர்ட் சுவைட்சர் கூறியுள்ளார். உமாபதி சிவமும் ‘மெய்வைத்த சொல்’ என்று பாராட்டுகிறார். ஆதலால் நமது மறை திருக்குறளே!
மறை நூலுக்குரிய இயல்புகள் அனைத்தும் திருக்குறளுக்குப் பொருந்தியிருக்கின்றன. கடவுள், உயிர், உயிரைப் பற்றிய அறியாமை, உயிர்பெற வேண்டிய அறிவு வாழ்க்கைப் பயணம், இன்ப துன்பம், வீடுபேறு ஆகிய அனைத்தும் திருக்குறளில் பேசப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சமய வாழ்வுக்குரிய உண்மைகளோடு மட்டுமன்றி உலகியல் நெறியும்-அரசியல் நெறி, பொருளியல் நெறி, படை நெறி ஆகியனவும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. மனித குலத்திற்குத் தேவையான உணவு, மருந்து ஆகியனவும் எடுத்தோதப் பெற்றுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தனி மனிதன் எவ்வண்ணம் வளர வேண்டுமென்பதை ஒரு சிறந்த நல்லாசிரியன் எடுத்துக் கூறுவதைப் போலப் படிமுறையில் நூல் அமைந்திருக்கிறது.
தனிமனிதன், கல்வி கேள்வி வழி அறிவு பெற்று, அவ்வழி அன்பு பெற்று, ஆள்வினை - ஆற்றல்பெற்று, செயற்கரும் செயல்கள் செய்து, நட்பினை நாடிப் பெற்று, வாழ்க்கைத் துணையடைந்து நன்மக்கட் பேற்றினைப் பெற்று அவனை முறையாக நன் மகனாக வளர்த்து நாட்டிற்கு அளிக்கச் செய்து தவம் - நோன்பு ஏற்கும் வரையில் திருக்குறள் அவனை அழைத்து வருகிறது. தனி மனிதனை அவன் நிலையில் வளர்த்துக் குடும்பத் தலைமகனாக வளர்த்து ஒப்புரவு நெறி கொண்ட சமுதாயத் தலைமகனாக வளர்த்து, அவன்மூலம் நல்லாட்சியமைத்து நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்கிறார் திருவள்ளுவர். திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். வாழ்க்கையில் மலர்ந்த மறை. அது வாழ்க்கையை வழி நடத்திச் செல்வது. திருக்குறள் மறைவழி வாழ்வோம்! வள்ளுவத்தின் வழி வையகத்தை வாழ்விப்போம்!
மீண்டும் அறக்கட்டளை கண்ட சொல்லின் செல்வர் பிள்ளை அவர்களை நன்றியுணர்வுடன் நினைவு கூர்கின்றோம். சொற்பொழிவுகளுக்குத் தலைமையேற்று நல்லுரை வழங்கி ஆர்வநெறியில் ஆற்றுப்படுத்திய பல்கலைக் கழகப் பேராசிரியர் “நமது நூலறி புலவர்” பாராட்டு தலுக்குரிய அன்பர் ந. சஞ்சீவி அவர்களுக்கு நன்றி; பாராட்டு; வாழ்த்துக்கள்.
வாய்ப்பினை வழங்கிய பல்கலைக் கழகத்தினருக்கு நன்றி.
மேற்கோள் விளக்கம்
1. | புறம்-34. |
2. | நெஞ்சு விடு தூது, அடி-26, |
3. | தொல்காப்பியம்-பாயிரம் |
4. | தொல்காப்பியம்-பாயிரம் உரை |
5. | நல்வழி. |
6. | திருவாசகம்-சிவபுராணம் 26-31. |
7. | தொல்காப்பியம், மரபியல், 28, 29, 30, 31, 32, 33, |
8. | ஒளவையார் தனிப்பாடல். |
9. | திருநாவுக்கரசர், நாலாந்திருமுறை, 784, |
10. | புறம், 29. |
11. | திருக்குறள், 423. |
12. | திருக்குறள், 278. |
13. | திருக்குறள், 1071. |
14. | திருக்குறள், 994. |
15. | திருக்குறள், 131, 80. |
16. | திருக்குறள், 430. |
17. | புறம்-192. |
18. | திருக்குறள்-339. |
19. | திருக்குறள், 358. |
20. | திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 769. |
21. | திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 839. |
22. | திருமந்திரம், 299 |
23. | திருக்குறள், 397. |
24. | திருக்குறள், 391. |
25. | திருக்குறள், 415, |
26. | திருக்குறள், 418. |
27. | திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 84. |
28. | திருஞானசம்பந்தர், முதல் திருமுறை 2. |
29. | திருக்குறள், 666, |
30. | திருக்குறள்-140. |
31. | திருக்குறள், 373. |
32. | திருக்குறள், 421. |
33. | திருக்குறள், 427. |
34. | திருக்குறள், 429, |
35. | திருத்தொண்டர்புராணம், 2562. |
36. | திருக்குறள், 426. |
37. | திருக்குறள், 1110, |
38. | திருஞானசம்பந்தர், மூன்றாந்திருமுறை, திருச்சாய்க்காட்டுப் பதிகம், சீகாமரப்பண் 3-ஆவது பாடல். |
39. | திருக்குறள், 336. |
40. | திருஞானசம்பந்தர், கோளறு திருப்பதிகம், 1. |
41. | கந்தரலங்காரம், 38. |
42. | திருக்குறள், 334. |
43. | திருக்குறள், 482. |
44. | திருக்குறள், 483. |
45. | திருக்குறள், 484. |
46. | புறம் 191. |
47. | திருக்குறள் 504 |
48. | திருக்குறள் 510 |
49. | திருக்குறள், 618 |
50. | திருக்குறள், 620. |
51. | திருநாவுக்கரசர், ஐந்தாந்திருமுறை, 192. |
52. | திருக்குறள், 379. |
53. | திருஞான சம்பந்தர், மூன்றாந்திருமுறை, 4-ஆவது பதிகம், திருவாவடுதுறை, 1. |
54. | திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 961. |
55. | திருநாவுக்கரசர் - ஆறாந்திருமுறை-929, |
56. | கந்தரர் - ஏழாந்திருமுறை-340. |
57. | திருக்குறள் - 247. |
58. | புறம்-18, |
59. | திருக்குறள்-80 |
60. | திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 399 |
61. | திருக்குறள், 781. |
62. | திருவாசகம், திருக்கோத்தும்பி, 18, |
63. | திருக்குறள், 1. |
64. | திருக்குறள், 49. |
65. | திருக்குறள், 1122. |
66. | திருக்குறள், 81. |
67. | திருக்குறள், 70. |
68. | திருத்தொண்டர்புராணம், அப்பூதியடிகள், 24 |
69. | திருக்குறள், 323. |
70. | திருக்குறள், 259. |
71. | திருக்குறள், 322. |
72. | திருக்குறள், 972. |
73. | தொல்காப்பியம், கற்பியல், 51. |
74. | திருக்குறள், 8. |
75. | திருக்குறள் 340, |
- ↑ தாயுமானவடிகள் திருப்பாடல்கள், ஆனந்தமானபரம், 9,
- ↑ திருவாசகம், திருப்புலம்பல், 3.
- ↑ திருஞானசம்பந்தர், 340 தனித்திருவிருக்குக்குறள், 3.
- ↑ திருக்குறள், 1110.
- ↑ தாயுமானவடிகள் திருப்பாடல்கள், கல்லாலின், 25
- ↑ திவ்வியப் பிரபந்தம். 2573.
- ↑ திருவாசகம், போற்றித்திருவகவல் அடி, 164-165.
- ↑ புறம். 192.
- ↑ புறம். 192.
- ↑ புறம். 134.
- ↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 972.
- ↑ திருவாசகம், திருவெம்பாவை, 9
- ↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 784
- ↑ புறம், 194.
- ↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 380,
- ↑ சுந்தரர், 294.
- ↑ சுந்தரர், 294.
- ↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 929.
- ↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 938.
- ↑ திருவாசகம், கண்டபத்து, 5
- ↑ திருமந்திரம், 2066.
- ↑ புறம். 189
- ↑ சிலப்பதிகாரம் வேட்டுவ வரி, 21,
- ↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 383.
- ↑ அகம், 53.
- ↑ திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 892
- ↑ சுந்தரர், 551.
- ↑ திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 181.
- ↑ திருவுந்தியார்; 33.
- ↑ திருவாசகம், கோயில் திருப்பதிகம், 7.
- ↑ திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 45-46.
- ↑ திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 49
- ↑ "வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா
கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்.கலி, குறிஞ்சி, 3 - ↑ திருவாசகம், திருச்சதகம், 23
- ↑ திருவாசகம், திருச்சதகம், 90.
- ↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 312.
- ↑ சிவஞானபோதம் சூத்திரம், 12.
- ↑ திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, 7.
- ↑ குறள், 422.
- ↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 781.
- ↑ திருவருட்பா, தெய்வமணி மாலை, 8.
- ↑ திருமந்திரம், 109
- ↑ திருஞானசம்பந்தர், திருவிராமேச்சுரப்பதிகம், 2.
- ↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 31.
- ↑ திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 135
- ↑ திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 136.
- ↑ திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 157.
- ↑ திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 70.
- ↑ திருத்தொண்டர் புராணம், திருஞான சம்பந்தர் புராணம், 24,
- ↑ தொல். செய்யுள். 178.
- ↑ தொல். செய்யுள். 178. நச்சினார்க்கினியர் உரை.
- ↑ காஞ்சிப்புராணம், தழுவக், 245,
- ↑ திருமந்திரம், 1821.
- ↑ திருவாசகம், பிடித்தயத்து-9
- ↑ திருவாசகம், திருவெம்பாவை, 17
- ↑ புறம்-34.
- ↑ நெஞ்சு விடு தூது, அடி-26,
- ↑ தொல்காப்பியம்-பாயிரம்
- ↑ தொல்காப்பியம்-பாயிரம் உரை
- ↑ நல்வழி.
- ↑ திருவாசகம்-சிவபுராணம் 26-31.
- ↑ தொல்காப்பியம், மரபியல், 28, 29, 30, 31, 32, 33,
- ↑ ஒளவையார் தனிப்பாடல்.
- ↑ திருநாவுக்கரசர், நாலாந்திருமுறை, 784,
- ↑ புறம், 29.
- ↑ திருக்குறள், 423.
- ↑ திருக்குறள், 278.
- ↑ திருக்குறள், 1071.
- ↑ திருக்குறள், 994.
- ↑ திருக்குறள், 131, 80.
- ↑ திருக்குறள், 430.
- ↑ புறம்-192.
- ↑ திருக்குறள்-339.
- ↑ திருக்குறள், 358.
- ↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 769.
- ↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 839.
- ↑ திருமந்திரம், 299
- ↑ திருக்குறள், 397.
- ↑ திருக்குறள், 391.
- ↑ திருக்குறள், 415,
- ↑ திருக்குறள், 418.
- ↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 84.
- ↑ திருஞானசம்பந்தர், முதல் திருமுறை 2
- ↑ திருக்குறள், 666,
- ↑ திருக்குறள்-140.
- ↑ திருக்குறள், 373.
- ↑ திருக்குறள், 421.
- ↑ திருக்குறள், 427.
- ↑ திருக்குறள், 429,
- ↑ திருத்தொண்டர்புராணம், 2562.
- ↑ திருக்குறள், 426.
- ↑ திருக்குறள், 1110,
- ↑ திருஞானசம்பந்தர், மூன்றாந்திருமுறை, திருச்சாய்க்காட்டுப் பதிகம், சீகாமரப்பண் 3-ஆவது பாடல்.
- ↑ திருக்குறள், 336.
- ↑ திருஞானசம்பந்தர், கோளறு திருப்பதிகம், 1.
- ↑ கந்தரலங்காரம், 38.
- ↑ திருக்குறள், 334.
- ↑ திருக்குறள், 482.
- ↑ திருக்குறள், 483.
- ↑ திருக்குறள், 484.
- ↑ புறம் 191.
- ↑ திருக்குறள் 504
- ↑ திருக்குறள் 510
- ↑ திருக்குறள், 618
- ↑ திருக்குறள், 620.
- ↑ திருநாவுக்கரசர், ஐந்தாந்திருமுறை, 192.
- ↑ திருக்குறள், 379.
- ↑ திருஞான சம்பந்தர், மூன்றாந்திருமுறை, 4-ஆவது பதிகம், திருவாவடுதுறை, 1.
- ↑ திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 961.
- ↑ திருநாவுக்கரசர் - ஆறாந்திருமுறை-929,
- ↑ கந்தரர் - ஏழாந்திருமுறை-340.
- ↑ திருக்குறள் - 247.
- ↑ புறம்-18,
- ↑ திருக்குறள்-80
- ↑ திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 399
- ↑ திருக்குறள், 781.
- ↑ திருவாசகம், திருக்கோத்தும்பி, 18,
- ↑ திருக்குறள், 1.
- ↑ திருக்குறள், 49.
- ↑ திருக்குறள், 1122.
- ↑ திருக்குறள், 81.
- ↑ திருக்குறள், 70.
- ↑ திருத்தொண்டர்புராணம், அப்பூதியடிகள், 24
- ↑ திருக்குறள், 323.
- ↑ திருக்குறள், 259.
- ↑ திருக்குறள், 322.
- ↑ திருக்குறள், 972.
- ↑ தொல்காப்பியம், கற்பியல், 51.
- ↑ திருக்குறள், 8.
- ↑ திருக்குறள் 340,