குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/சைவசித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்


2


சைவ சித்தாந்தமும்
சமுதாய மேம்பாடும்


1. சைவ சித்தாந்த வரலாறு


மனித உலக வரலாற்றுப் படிமங்கள் வரிவடிவத்திலும், சிலை வடிவத்திலும் பெறத் தொடங்கிய காலம் தொட்டு, சமய இணைப்புகள் இருந்து வந்துள்ளன. வரலாற்றுப் போக்கில் சமய அடிப்படையில் நிகழ்ந்த நிகழ்வுகள் நிறைய உண்டு. அவற்றில் மனித உலக வளர்ச்சிக்கு ஆக்கம் தருவனவாக அமைந்த நிகழ்வுகள் பல.

ஒரோவழி, தடம் புரண்டு மனித உலகத்திற்கு விளைவித்த தீங்குகளும் உண்டு. ஆனால் தீங்குகள் கொள்கைகளால், கோட்பாடுகளால் விளைந்தவையல்ல. நடைமுறைப்படுத்திய வழிமுறைத் தவறுகளால் விளைந் தவையேயாம்.

இங்ஙனம், வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கின்ற இந்தச் சமய நெறி, எந்தக் காலத்தில் தோன்றியது? ஏன் தோன்றியது? என்ற வினாக்களுக்கு விடை காண்பதில்கூட இன்று உலக அரங்கில் ஒருமித்த கருத்து இல்லை.

மேற்றிசை நாட்டு அறிஞர்கள், “அச்சத்திலிருந்துதான் சமயம் பிறந்தது; கடவுட் கருத்துத் தோன்றியது” என்று கூறியுள்ளனர். அதாவது ஆதிமனிதன் கல்லில் இடித்துக் கொண்டான்; அவனுக்குத் துன்பம் ஏற்பட்டது. துன்பத்திற்கு அஞ்சியவன், துன்பத்திற்குக் காரணமாயிருந்த கல்லையே தொழத் தொடங்கிவிட்டான் என்று கூறியுள்ளனர். மேற்றிசை நாட்டைப் பொறுத்த வரையில் இக்கருத்து பொருத்தமானதாக இருக்கலாம். அதாவது ஐரோப்பிய சமய நாகரிகத்திற்கு அடித்தளம் அச்சம் பயம் என்று சொல்லலாம்.

ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய இனத்தைவிடச் சற்று வளர்ந்தவர்கள். இவர்கள் நிலம், நீர், தீ, வளி, விண் ஆகிய இயற்கைப் பூதங்களால் அவ்வப்பொழுது விளைந்த தீமைகன்ளைக்கண்டு அஞ்சி அவற்றையே ஆற்றல் வாய்ந்தவை எனவும் எண்ணித் தொழுதனர்.

இன்று மனித உலக வரலாறு ஐம்பூதங்களை வென்று விளங்கும் விஞ்ஞானத்தில் வளர்ந்து கொண்டிருப்பதால் இவ்வழிபாடு சிறுபிள்ளை விளையாட்டாகிவிடுகிறது.

அடுத்தது, திராவிடர் நாகரிகம் என்றும் தமிழர் நாகரிகம் என்றும் வரலாற்றறிஞர்களால் பேசப் பெறும் நாகரிகம். தமிழர், அச்சத்தின் காரணமாகவும் வழிபடவில்லை. பயத்தின் காரணமாகவும் வழிபடவில்லை. அவர்கள் தொன்மைக் காலத்திலேயே எந்த ஒன்றையும் அறிவியல் முறையில் அணுகும் உணர்வை இயல்பாகவே பெற்றிருந்தனனர். அவர்களுடைய சமய நெறி தோன்றியதற்குரிய களம், அறிவு, இன்பம், அமைதி அவாவும் நிலைகளேயாகும்.

தமிழினத்தின் சிந்தனையின் பயனாக, சிந்தனைத் தெளிவின் பயனாக, அறிவின் ஆக்கமாகத் தோன்றியதே சிவநெறி. மனிதர்குல வாழ்க்கையில் படைப்பின் நிறைவின்மையையும் அறிவு எல்லையைக் காண முடியாமையையும் கண்டுணர்ந்தபோது, எல்லை கடந்து நிலைக்கு ஏறி வளரும் நிலையில்தான் சிவநெறி தோன்றியது. அந்தப் படிகளைக் காணும் முயற்சியில் தோன்றியதுதான் விஞ்ஞானம். ஆதலால், சிவநெறியின் அடித்தளம் வாழ்க்கையின் படிப்பினைகளும் அறிவுமேயாம். அப்படியெனில் உலகின் அறிவியல் புதுமைகளை, அதுகண்ட புதிய உண்மைகளைச் சமய நெறிகள் ஏற்றுக் கொள்ளாது புறத்தே தள்ளியிருக்கின்றனவே! அங்ஙனம் புதிய உண்மைகளைக் கண்ட விஞ்ஞானிகளைச் சமய நெறியாளர்கள் துன்புறுத்தி யிருக்கிறார்களே! என்ற வினாக்கள் எழலாம்.

ஆம்! அந்த வரலாற்று உண்மைகளை நாம் மறுக்கவில்லை! இத்தகைய செய்திகள் மேற்றிசை நாட்டு வரலாறுகளில் உண்டு. அந்நாட்டு வரலாற்றிலும்கூட, சமயம், வாழ்க்கை நெறியாகத் தூய்மையுடன் விளங்கிய காலத்தில் நிகழ்ந்தவையல்ல. ஆனால், அங்ஙனம் சமய நெறியாளர்கள் விஞ்ஞானிகளைத் துன்புறுத்திய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் என்றும் நிகழ்ந்ததில்லை; புதிய உண்மைகளை மறுத்து அந்த விஞ்ஞானிகளைத் துன்புறுத்திய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் என்றும் நிகழ்ந்ததில்லை; புதிய உண்மைகளை மறுத்து அந்த விஞ்ஞானிகளைத் துன்புறுத்தியவர்கள் உண்மையான சமய நெறியாளர்கள் அல்லர்.

இத்தகைய துன்பம் தரும் நிகழ்ச்சிகள், சமயம் வாழ்க்கையிலிருந்து விலகி, இயக்கத் தன்மையிலிருந்து தேக்கத் தன்மைக்குத் தடம் புரண்டு ஆதிக்கத்தை மையமாகக் கொண்டிருந்த காலத்தில் நடந்தவையாகும். இங்ஙனம் சமய நெறிப் போர்வையில் நடமாடும் ஆதிக்க சக்திகள் மூலம், சமய நெறிக்கு விளைந்த ஊறுகள் பலப்பல. உண்மையான சமய நெறியாளர்கள் புதுமையை வரவேற்கவே செய்வர்.

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!

(திருவாசகம், திருவெம்பாவை. 9)
என்ற மாணிக்கவாசகர் வாக்கும்,

தொன்மைய வாம்எனும் எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா!

(சிவப்பிரகாசம்-12)

என்ற உமாபதிசிவம் வாக்கும் இதற்குச் சான்று.

உலகில் பல்வேறு சமயங்கள் தோன்றியுள்ளன. அவைகளுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் முரண்பாடுகள் இருக்க வழியில்லை. வேறுபாடுகளும்கூட அந்தந்தச் சமயநெறிகள் தோன்றிய காலம், சூழ்நிலை, அனுபவம் இவைகளினால் ஏற்பட்ட தரவேறுபாடுகள்தாம்! சமயங்கள், நிறுவனங்களாக மாறியவுடன் வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி முரண்பாடுகளை உருவாக்கித் தம்முள் முரணி மோதிக் கொண்டு வந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்தத் தீமையும்கூட சமயம், நெறியாக இல்லாமல் நிறுவனமாக மாறியதால் ஏற்பட்டதன் விளைவேயாகும்.

ஆனால், உண்மையான சமய ஆர்வலர்கள் ஒருமைப் பாட்டையே காண முயன்று வந்துள்ளனர். தாயுமானார்,

வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா!

(தாயுமானவர், கல்லாலின்:25)

என்று கூறுவதால் அறியலாம்.

மனித குல வரலாற்றின் தொன்மையில் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடியேயாம். இது வரலாற்றறிஞர்கள் கண்டு கூறும் முடிபு. தமிழினத்தின் வரலாற்றுத் தொடக்கம் கி.மு. முப்பதாயிரத்திற்கும் அப்பால் செல்கிறது.

பல ஊழிகள் கண்ட வரலாறு தமிழர் வரலாறு. தென் கோடியில் தொன்மை நலம் சான்ற “தென்குமரிக் கண்ட நாகரிகமும்” வடகோடியில் “சிந்து வெளி நாகரிகமும்” தமிழ்ச் சாதி நாகரிகத்தின் தொன்மை நாகரிகங்களாகும். தமிழர் நாகரிகம் அனைத்துத் துறைகளிலும் செழித்து வளர்ந்து புகழ் பூத்ததாகும். அவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே சமய நெறியில் கால்கொண்டனர். அவர்களது சமயம் சிவநெறி யாகும். இச்சிவநெறி காலத்திற்குக்காலம் முறையாக வளர்ந்து மெய்கண்ட தேவர் காலத்தில் வடிவம் பெற்றது.

தென்குமரிக்கண்ட மக்கள், சிவன், சேயோன் என்ற திருப்பெயர்களில் சிவபெருமானை வழிபட்டு வந்திருக்கின்றனர். சிவன் ஒளிவடிவானவன். ஒளிவடிவிலும் உயிர்களின் அனுபவத்திற்கு ஏற்றவாறு பல்வேறு தரநிலைகளில் (ஒளிக்கற்றை, வெப்பநிலை) நின்று அருள்பவன். உலகியலை வெப்பஇயல் இயக்குவதைப் போல சிவமே நெருப்பை இயக்கும் பெரும் பொருளாக இருந்து இயக்கி வருகிறது.

சோதியே! சுடரே! சூழ்ஒளி விளக்கே!
(திருவாசகம், அருட்பத்து-1)

என்ற திருவாசகம், சிவம் என்ற பேரொளியின் படிநிலைகளை விளக்குவது. சிவத்தின்தொழில்-இயல்புகள் குறித்துப் பல திருமேனிகளில் சில வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன.

அவற்றுள் சிறப்புடையன ஐந்து. முதல்நிலை, “சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” ஆக அடல்விடையூர்ந்து ஆட்கொண்டருளும் நிலை கொன்றை மாலையும் திரிசூலமும் கொண்டு விளங்கும் திருக்கோலம், இரண்டாவது படிவம். அம்மையப்பன், இந்த அம்மையப்பன் திருவுரு எல்லா உறுப்புகளும் முறையாக அமைந்து, அம்மையை இடப்பாகத்திற் கொண்டு விளங்கும் மங்கை பங்கன் திருமேனியாகப் போற்றப் பெற்றது. அறிவியலில் பொருளையும், பொருளின் ஆற்றலையும் தனியே பகுத்து ஆராயும் மரபு பிற்காலத்தே தோன்றியது. அம்மையப்பன் வழிபாடு அந்த அடிப்படையில் சங்க காலத்திலேயே தோன்றி வளர்ந்ததாகும். பாவாணர், “கடல் கொண்ட தென்குமரிக் கண்ட நாகரிக காலத்திலேயே அம்மையப்பன் வழிபாடு இருந்தது” என்று கூறுவர். (தமிழர் மதம்) சிவம், பொருள்; அம்மை அப்பொருளின் இயங்கும் ஆற்றல். இந்த அடிப்படையிலேயே அம்மையப்பன் வழிபாடு தோன்றியது. குணம் குணமல்ல அப்பனும்-அம்மையும் உண்டு என்று கூறுவோரும் உண்டு. திருமறை-திருக்கோவில்களில் அப்பன் அம்மை என்று போற்றப் பெறுகின்றனர்.

சங்ககால இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்ந்த, பாரதம் பாடிய பெருந்தேவனார், புறநானூறு, ஐங்குறுநூறு ஆகிய இலக்கியங்களுக்கு அம்மையப்பன் வழிபாட்டை உணர்த்தும் பாடல்களாகப் பாடிச் சேர்ந்துள்ளார். வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் தொடக்க காலத்திலும் பெண்மை பெருமதிப்புப் பெற்றிருந்தது. காலப் போக்கில் பெண்மை, தகுதி நிலைகளை இழந்த பொழுது அம்மையப்பன் வழிபாடு வற்புறுத்தப் பெற்றிருக்கலாம் என்று கருத முடிகிறது.

தமிழ் இலக்கியங்களானாலும் நூல்களானாலும் தனித்தமிழ் மரபில் தோன்றியவைகள், பெண்மையை இழித்துப் பேசியதில்லை. ‘வீடுபேற்றுக்கு மனையறம் தடையானது’ என்று ஒருபோதும் தமிழ்நெறி சாற்றியதில்லை. ஆதலால் அருவ நிலையில் வளங்கி வந்த சிவவழிபாடு உருவ வழிபாட்டுக்கு வந்தவுடன் முதல் நிலையில் இலிங்க வழிபாடாகவும் இரண்டாம் நிலையில் அம்மையப்பன் வழிபாடாகவும் மலர்ந்தது. இது,

பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்

(புறம்; கடவுள் வாழ்த்து; 7-8)
என்ற புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் கூறப்படுகிறது.

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

(ஐங்குறுநூறு, கடவுள் வாழ்த்து)

என்ற ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தில் அம்மையப்பன் வழிபாடு எடுத்துக் கூறப்படுகிறது. சிவனைச் செம்மை நிறத்தின் அடிப்படையிலும், அம்மையை நீலநிறத்தின் அடிப்படையிலும் விளக்குதல் ஆன்றோர் மரபு, “வில்லியம் ஜேம்ஸ்” என்ற ஓவியன் வெம்மையின் ஆற்றலை விளக்கச் சிவப்பு நிறத்தையும், தண்ணளியை - தண்ணருளை விளக்க நீல நிறத்தையும் பயன்படுத்தும்படி அறிவுரை கூறியுள்ளது நினைவு கூரத்தக்கது.

“சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்ற திருப்பெயர் எண்ணுதற்குரியது. இந்த அம்மையப்பன் வழிபாடு தொன்மைக்காலத்திலேயே தோன்றிச் சிறந்தது என்பதை மாணிக்கவாசகர் தாம் அருளிய திருவாசகத்தில் விளக்கியுள்ளார்.

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும்உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிந்துரதாய் கோத்தும்பீ

(திருவாசகம், திருக்கோத்தும்பி, 18)

என்பது திருவாசகம்.

இலிங்க வடிவ நிலையில் இறைவனின் ஆற்றலைக் குறிக்கும் அடித்தளத்திற்கு ஆவுடையாள், என்றும், மேல் நிற்கும் இலிங்கத்திற்கு ஆவுடையப்பன் என்றும் பெயர்கள் வழங்கப் பெற்றுள்ளன. இத்தத்துவம் “ஓம்” என்ற ஒலி வடிவிலும் பிள்ளையார் சுழியின் வரிவடிவத்திலும் அமைந்திருக்கிறது.

மூன்றாவது, ஆசிரியனாக இருந்து நன்னெறி உணர்ந்தும் திருக்கோலம். இதனை “ஆலமர் செல்வன்” (சிறு, பா 97, கலி, 819) என்றும், “ஆலமர் கடவுள்” (புறம் 198-9) என்றும் சங்க கால இலக்கியங்கள் பாராட்டும். வாழ்க்கையில் இயல்பாகச் சமய நெறி-முறைகள் அமையாது மனித உலகம் புறத்தே விலகிச் செல்லும் பொழுது நன்னெறி உணர்த்த அறிவர்கள்-ஞானிகள் தேவைப்படுவர்.

அதுபோலத் தமிழினம் நெறியல்லா நெறிதன்னை நாடிச் சென்ற பொழுது சிவபரம்பொருளே ஆசிரியனாக எழுந்தருளி நெறியுணர்த்தி வழி நடத்துகிறான் என்பது தமிழர் சமய மரபு. சிவநெறிக்கு இறைவனே முதல் ஆசிரியன். அவன் வழிபடும் பொருள் நிலையிலிருந்து இறங்கி, வழிகாட்டும் நிலைக்கு வந்த பிறகு, ஆசிரியன் நிலையில் வழிபடும் நிலையை எய்தினன். சங்க இலக்கியங்களில் சிவன் ஆலமர் செல்வனாக இருந்து அறமுணர்த்திய செய்தி கூறப்பெறுகிறது.

நான்காவது, உலகியல் இயக்கத்திற்கு உரியதாயிருக்கின்ற நிலம், நீர், தீ, வளி வெளி, கதிரவன், திங்கள் ஆதன் என்னும் எண் பொருள் வடிவினனாகவும் அவன் வழிபடப் பெற்றிருக்கிறான்.

ஐந்தாவது ஆடல்வல்லான் (நடராசன்) வழிபாடு. இவ்வுலகியக்கத்தை ஓயாது தனது ஆடல் மூலம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் கருதப்பெறும் திருமேனி இது. குமரி நாடிருந்த காலத்திலேயே குமரிக்கும் பனிமலைக்கும் நடுவணதாக நெஞ்சத்தமைப்பு மையமாகக் கருதி, தில்லையம்பலம் அமைத்து ஆடல்வல்லானைப் பாண்டியன் அமைத்தான் என்று ஒரு வரலாறு உண்டு.

சிந்துவெளி நாகரிக மக்கள் மூன்று கண்களையுடைய சிவபெருமானை வணங்கினர் என்பதும், சிவலிங்க வழிபாடு இருந்ததென்பதும் ஆங்கு அகழ்ந்தெடுக்கப் பெற்ற பொருள்கள் மூலம் புலனாகின்றன. “சிவவழிபாட்டின் மிகச் சிறந்த வழிபாடாகிய இலிங்கவழிபாடு வரலாற்றறிவுக்கும் அப்பாற்பட்ட பழைமையுடையது; கற்காலத்திற்கும் முந்தியது. இப்பொழுது உலகிற் காணப்படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்டது” என்று சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சி அறிஞர் சர்ஜான், மார்ஷல் கூறுகிறார். இந்தச் “சிவவழிபாடு உலகம் முழுதும் பரவியிருந்தது; சிவவழிபாடு இங்கிலாந்து முதல் ஜப்பான் வரையில் பரவியிருந்தது” என்பார் எச். ஜி. வெல்ஸ்.

தமிழ் தொன்மையான மொழி, இலக்கிய நலம் சிறந்த மொழி, இலக்கண வளம் மிக்க மொழி, தமிழ் மொழியைப் பேசி வாழ்ந்த மக்கள் நாகரிகத்திற் சிறந்து வளர்ந்தவர்கள். உலகின் மற்ற நாகரிகங்களுக்கெல்லாம் தொட்டிலாக அமைந்தது தமிழர் நாகரிகமேயாம். இதற்குச் சான்றுகள் எங்கேயும் தேடி அலைய வேண்டியதில்லை.

தமிழர்த்ம் சிந்தனையிற் சிறந்து, வாழ்க்கையில் விளக்கமுற்று விளங்கிய கருத்துக்களை விளக்கும் இலக்கிய இலக்கணங்களே சான்று. இன்று நிலவும் தமிழ் நூல்களில் பழைமையானது தொல்காப்பியம். இது தோன்றிய காலம் கி.மு.3000க்கு முந்தியது என்று சிலரும் கி.மு.5000க்கு முந்தியதென்று சிலரும் கூறுவர். எப்படியாயினும் கிறித்து பிறப்பதற்கு முன்தோன்றிய மூத்த நூல் என்பது உறுதி.

தொல்காப்பியம் இலக்கண நூல். செழிப்பான இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும் என்பது மொழிநூற் கருத்து தொல்காப்பியம் போன்றதொரு செப்பமான இலக்கண நூல் தோன்றுவதற்கு முன்பு இலக்கியம் சிறந்து விளங்கியிருக்க வேண்டும் என்பது ஒருதலை. தொல்காப்பியம் மொழிக்கு மட்டும் இலக்கணம் பேசவில்லை, மொழியைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் செய்தது. இதுபோல் உலகில் வேறு எந்த மொழியிலும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்க்கைக்கு இலக்கண நூல் இலக்கணம் கூறப்பெறவில்லை. ஏனோ, தானோ என்று வாழ்வது வாழ்க்கையன்று. வையத்து வாழ்வாங்கு வாழ்வதே வாழ்க்கை. இந்த உணர்வில் ஓர் இனம் வளர்ந்திருக்குமானால் அந்த இனத்தின் தொன்மை மிகமிகப் பழமையானது என்பதை ஆராய அகழ்வாராய்ச்சிகள் தேவைப்படா.

தொல்காப்பியம் தோன்றிய பிறகும் வாழ்க்கை முழுமையுறாத நிலையில் மேலும் வளர்த்துச் செழுமைப்படுத்தத் திருக்குறள் தோன்றியது. தொல்காப்பியத்தில் சித்தாந்த சமயக் கருத்துக்கள் பயின்றுள்ளன.

நிலத்தைப் புரிந்து நிலத்திற்குரிய வழிபாட்டுப்பொருளை உணர்த்துகிறது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்விய முறையாற் சொல்லவும் படுமே

(தொல். அகத்திணை, நூற்பா.5)
இந்நூற்பாவில் சேயோன் என்று குறிப்பிடப் பெறும் கடவுள் முருகனே என்பது பெரு வழக்கு. ஆனால் காலத்தின் பின்னணி, கருத்து வளர்ச்சிகளின் படிநிலைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நோக்கும்பொழுது சிவ வழிபாட்டின் தொடர்ச்சியாக முருகன் வழிபாடு சங்க காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது பெறப்படும். சிவன் தந்தை பார்வதி தாய், முருகன்பிள்ளை என்ற கருத்துக்கள் பிற்காலத்திய பெளராணிகக் கருத்துக்கள். சேயோன் என்பதைச் சேய், சேயன், சேயான், என்று பகுத்துப் பொருள் கொண்டால் செந்நிறத்தான் என்று பொருள்படும்.

சேயோன் என்ற சொல்லுக்குச் சிவன் என்றும் பொருள் உண்டு. ஆதலால் “சேயோன் மேய மைவரை உலகமும்” என்பதற்குச் சிவபெருமான் உறையும் மலை நிலம் என்றே பொருள். ஆதலால், தொல்காப்பியத்தில் சிவநெறிக் குறிப்புக்கள் உண்டு. அதோடு, தொல்காப்பியத்தின் தமிழ் நெடுங்கணக்கு முறை வைப்பு சிவநெறிக் கருத்துக்களுக்கு அரண் செய்வனவாக உள்ளனன.

உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்ற இலக்கண வைப்புக்கள் சிவநெறியின் சீர்மைகளை விளக்கும் இயல்பின. இதுபற்றித் தத்துவத் தலைப்பில் பேசும் பொழுது ஆராயலாம். தொல்காப்பியத்தில் தெளிவாகச் சிவம் சைவம் என்ற சொற்கள் பயிலப்படவில்லையானாலும் சிவநெறியின் கருத்துக்கள் வந்துள்ளன. கந்தழி என்பது சிவ பெருமானைக் குறிக்கும் தன்மையுடைய சொல்லாகக் கருதப் பெறும். தொல்காப்பியத்தை ஒட்டித் தோன்றிய சங்க காலத்தில் மேலும் சிவநெறி வளர்ந்தது; ஆக்கம் பெற்றது. ஆயினும் சங்க காலத்திற்கூட அது வாழ்க்கையின் நியதியாக விளங்கியதேயன்றி வரையறுக்கப்பட்ட முழு நிலையை எய்தி விடவில்லை.

கடைச்சங்க காலத்திற்கு முந்தியவன் என்று கருதப்படும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொற்றக்குடை முக்கட் செல்வர் நகர்வலம் வருவதற்குத் தாழ வேண்டும் என்று அறிவுறுத்தியதாகப் புறநானூற்றுப் பழம்பாடல் கூறுகிறது.

பணியியர் அத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே!

(புறம். 6: 17-18)

என்பதறிக முக்கட் செல்வர் என்பது சங்க காலத்தில் சிவன் பெற்ற பெயர். கதிரவன், திங்கள், தீ இம்முன்றும் மூன்று கண்களெனக் கூறுவர். ஆனால் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் சிவன் என்ற சொல் பயிலவில்லை. ஆனாலும் சிந்துவெளி நாகரிக காலம் தொட்டு, மெய் கண்டார் காலம் வரை தோன்றிய அனைத்து நூல்களிலும் சிவன் மூன்று கண்களையுடையவன் என்பது இடையறாது பயிலப்பட்டு வந்துள்ளது.

தமிழக வரலாற்றின் பொற்காலம் சங்ககாலமாகும். சங்க கால இலக்கியங்களில் சிவநெறிக் கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. சிவபெருமானின் செயல்முறைப் பண்பாட்டால் அமைந்த பிறிதொரு பெயர், “திருநீல கண்டம்”. அதாவது “நீலமணி மிடறு” என்பது. அமரர்களுக்கு வாழ்வளிப்பதற்காக நஞ்சு உண்டமையால் தோன்றியது “நீலமணி மிடறு” என்பது. இதனை நினைவு கூர்ந்து ஒளவையார் அதியமான் நெடுமானஞ்சியைப் பாராட்டும் பொழுது,

பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே...

(புறம், 91: 5-7)

என்று பாடுகின்றார். மற்றும் சங்க கால இலக்கியங்கள் எல்லாவற்றிலுமே சிவநெறி ஏற்றிப் போற்றப் பெற்றுள்ளது.

காப்பியக் காலத்தில் இளங்கோவடிகள் சிவநெறியை ஏற்றிப் போற்றியுள்ளார். கவுந்தியடிகள் வாயிலாக, இளங்கோவடிகள் கூறும் கொள்கைகளை வைத்து, இளங்கோவடிகளைச் சமணர் என்று பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் சமயமாயினும் அவர் அந்தச் சமய நெறியின் உயர் கொள்கைகளைத் தழுவுதல் வேண்டியும், சமயப் பொறை நோக்கியுமே கருத்துக்களைக் கூறியுள்ளார்.

அதனால் அவரது சமயமே சமணம் என்று துணிதல் ஏற்புடையதன்று. இளங்கோவடிகள், நிறைந்த சமயப் பொறையுடையவர். தெளிவாகச் சொன்னால் சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறி மேற்கொண்டவர் என்றே பாராட்டத் தோன்றுகிறது. அவர் தம் நூலில் எந்தெந்தச் சமயங்களைப் பற்றிப் பேசுகிறாரோ அப்பொழுதெல்லாம் அந்தந்தச் சமய நெறியின் சிறப்பை, கொள்கைகளை உள்ள ஈடுபாட்டுடன் கூறுகிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அடிகள் பாடிய ஆய்ச்சியர் குரவை, ஆய்ச்சியர் குரவையைப் படிக்கும் பொழுது திருமால் நெறியில் தோய்ந்து ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களைப் படிக்கும் பொழுது என்ன உணர்ச்சியும் அனுபவமும் ஏற்படுகிறதோ அதே உணர்ச்சியும் அனுபவமும் ஏற்படுகிறது என்றால் மிகையாகாது.

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணம்முழங்கப் பஞ்சவிர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாஎன்னா-நாவென்ன நாவே

(சிலப். ஆய்ச்சியர் குரவை-37)

என்ற பாடலையும்,

சென்றநாள் செல்லாத செங்கண்மால் எங்கள்மால்
என்றநாள் எந்நாளும் நாளாகும்-என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துகளன் வாய்

(நாலா: 2298)

என்ற பாடலையும் இணைத்துப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அதுபோலவே அவர் சொல்லும் முறையில் காணப்படும் குறிப்பின் அடிப்படையில் அடிகள் சிவநெறியைச் சார்ந்தவரென்று துணிய முடியும். ஆயினும் அது நமது நோக்கமன்று.

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்

(சிலப். வேட்டுவ வரி-21)

என்று போற்றுகின்றார். சிலப்பதிகாரத்தில் நகரங்களை அணி செய்யும் திருக்கோயில்களைக் குறிப்பிடும் பொழுது சிவபிரான் திருக்கோயிலையே முதல் நிலையில் வைத்துக் கூறுகின்றார்.

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செய்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்...

(சிலப். இந்திரவிழவூரெடுத்த காதை 169-172)

என்றும்,

நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்

(சிலப் ஊர்காண் காதை : 7-10)

என்றும் கூறுதல் அறியத்தக்கது. சைவத்துக்கேயுரிய சிறப்பு “பிறவாயாக்கைப் பெரியோன்” என்பது. சைவ நெறியின் கடவுள் செத்துப் பிறக்கும் தொழிலுக்கு ஆட்படாதவன்; பிறவாதவன்; இறவாதவன்.

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்மற் றத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்குமேல் வினையும் செய்யும்
ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வ னன்றே

(சிவஞான சித்தியார், 115)

எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேநம் சோணேசர்-இல்லில்
பிறந்தகதை யும்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்டு
இறந்தகதை யும்கேட்டி லேம்.

(அருணகிரியந்தாதி)

என்ற திருப்பாடல்களின் பொருள் அறிக. இந்தச் சிறப்பை இளங்கோவடிகள் எடுத்துப் பாராட்டுவதன் மூலம் அவருடைய சிவநெறிச் சார்பு அறியத்தக்கது.

மணிமேகலை ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்,

நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக

(மணவிழாவறை காதை : 54-55)

என்று சிவபிரான் திருக்கோயிலை முதன்மைப்படுத்திக் கூறுகிறார். -

அடுத்து, செங்குட்டுவன் வடபுலப் படையெடுப்புக்குப் புறப்படும்பொழுது, நெடுமாலின் திருச்சேடத்தைக் கொண்டு வந்து, நின்று சிலர் தொழ, சிவபெருமானது திரு வடிகளைத் தன் மணிமுடியின் மீது வைத்திருந்தமையால், அத் திருச்சேடத்தை வாங்கித் தனது புயத்தில், ஏற்றுக் கொண்டதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்குஅது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன்..............

(சிலப். கால்கோள் காதை 62-67)

இந்த முறை வைப்பு சிறப்புடைய மரபினை மையமாகக் கொண்டதன்றோ?

அடுத்து, தமிழகத்துச் சைவ நெறியின் பொற்காலம் எனப் போற்றக்கூடிய காலம், திருமுறைக் காலம். திருமுறைக் காலம் என்பது மிக நீண்ட காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்க முதல் கி.பி.1150 வரையாகும். இந்த நூற்றாண்டு இடைவெளி, தமிழகத்தின் வரலாற்றைக் கிளர்ச்சித் தன்மையுடையதாக்கிய சமய எழுச்சிக் காலம். சமயப் பொறை கருதி, பல்வேறு சமய நெறியாளர்கள் தமிழ்நாட்டில் உலாவவும் வாழவும் அவர்களுடைய சமயக் கொள்கைகளை, பாராட்டியும் ஏற்புடையவற்றை ஏற்றுக் கொண்டுமே தமிழர்கள் வாழ்ந்தனர்.

ஆயினும் பெளத்த, சமண நெறியாளர்கள் சமயப் பொறையை இழந்து தர்க்கித்தல், சழக்கிடுதல், மதம் மாற்றுதல், தம் நெறி சாராதவரைத் துன்புறுத்தல் ஆகிய செயல்களை மேற்கொண்டு சைவ நெறியாளர்களுக்கும் ஊறுவிளைவித்தனர். தமிழர்கள் இயல்பில் சமயப்பொறை யுடையவர்களாக இருந்தனர். இதற்குச் சான்று, அப்பரடிகள் சைவத்திலிருந்து சமணத்திற்குச் சென்றபொழுது யாரும் தடுக்கவில்லை; கிளர்ச்சி செய்யவில்லை. ஆனால், சமணத்திலிருந்து சைவத்திற்கு அப்பரடிகள் திரும்பி வந்த பொழுது, சமணர்கள் மதம் மாறிய பல்லவ அரசனின் துணையுடன் அப்பருக்குத் தந்த தொல்லைகளே சான்று.

அதுபோலத்தான் மதம் மாறிய பாண்டிய அரசன் நெடுமாறன் துணையுடன் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குத் தீ வைத்ததுமாகும். திருஞானசம்பந்தரோடு பலமுனைகளில் வாதாடியது, பேராடியது ஆகியவற்றின் மூலம் இதனை அறிய முடிகிறது. இந்தச் சூழலில்தான் ஒரு சைவப்படை யெழுச்சியே நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சமயத் தொண்டர்கள் அப்பரடிகள், திருஞானசம்பந்தர் ஆகியோருடைய அடிச்சுவட்டில் தொண்டு செய்தனர் திருத்தொண்டுகள் இயற்றினர்.

இன்று நம்மிடையே வழக்கத்திலிருக்கும் சைவ நெறியின் பழக்கங்கள் எல்லாம் அவர்களால் காக்கப்பெற்று நமக்கு அளிக்கப் பெற்றவையேயாம். இதனை,

“சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும் சுந்தரனும்
சிற்கோல வாவூர்த் தேசிகனும்-முற்கோலி

வந்திலரேல் நீறெங்கே? மாமறைநூல் தானெங்கே?
எந்தைபிரான் அஞ்செழுத் தெங்கே!”

என்ற பழம்பாடல், வினாவால் விளக்குவது காண்க.

தமிழக அரசர்களில் பலர் சிவநெறியைச் சார்ந்தே ஒழுகி வந்துள்ளனர். ஒரு சிலர் திருமாலியத்தைச் சார்ந்திருந்தனர். ஆயினும், பெரும்பாலான அரசர்கள் தாம் எந்தச் சமயத்தை மேற்கொண்டொழுகினும் மற்றச் சமயங்களை மதித்து வந்துள்ளனர்.

பல்லவர்களில் ஓரிரு அரசர்கள் மட்டும் சமண சமயத்தைச் சார்ந்திருந்தனர். பல்லவர்களில் மகேந்திர பல்லவனும் பாண்டியர்களில் நெடுமாறனும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களும் கூட முறையே அப்பரடிகளாலும், திருஞானசம்பந்தராலும் முறையாகச் சைவத்துக்குத் திரும்பி அழைக்கப் பெற்றவர்கள். பழங்காலத் தமிழகப் பேரரசுகள் உள்நாட்டு அமைதிக்கு மக்களின் சமய நம்பிக்கைகளையே களமாகக் கொண்டு செயற்பட்டன.

பல்லவ அரசர்களால் சிவநெறி மிகச் சிறப்பாக வளர்ந்தது. ஆனாலும், தூய சிவநெறியாக வளராமல் செழுந்தமிழ் வழக்கில் ஊடுருவிக் கலக்க ஆவலுடன் துடித்த ஆரிய வேதத்திற்கு வாயிலமைத்துக் கொடுத்ததே பல்லவப் பேரரசுதான். களப்பிரர் ஆதிக்கம் (கி.பி.300-600) தமிழகத்தில் கால் கொண்டது. அவர்கள் மூலம் சமண, பெளத்த சமயங்கள் பரவின. ஆரிய வேதங்களும் பொய்ம்மை நிறைந்த புராணக் கதைகளும் தமிழ்நாட்டில் பரவின. ஆயினும் இந்த இடைக் காலத்தில்தான் கோச்செங்கணான், புகழ்ச்சோழர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய அரசர்கள் திருக்கோயில்களை எடுப்பித்தும் பூசனைகள் செய்வித்தும் சிவநெறியை வளர்த்தனர்.

கி.பி. 600 முதல் 900 வரை ஆண்ட பல்லவர்கள் காலத்தில் பெரும்பாலும் சிவநெறியே வளர்ச்சி பெற்றது. இந்தக் காலத்தில் ஆண்ட பல்லவர்கள் தங்கள் அரசின் முத்திரையாகச் சிவநெறியின் இலச்சினையாகிய “நந்தி"யை அரசு முத்திரையாகக் கொண்டும், நாணயங்களில் முத்திரையாகப் பதித்தும் ஆட்சி செய்து வந்துள்ளனர். அக்காலப் பல்லவ அரசின், நாட்டுச்சமயமாகவே சிவநெறி இருந்திருக்கும் என்று கருத முடிகிறது. மகேந்திரவர்மன் காலத்தில் பல்லவ நாட்டில் அப்பரடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தூய சிவநெறி எழுச்சி பல நூற்றாண்டுகளுக்குப் பயன் தந்திருக்கிறது. அந்த எழுச்சியின் ஒளி வீச்சு, தமிழகம் முழுவதிலும் மூன்று பேரரசுகளிடையிலும், ஆட்சியிலும் பரவிப் பயன்தந்தது. மகேந்திரன் பல திருக்கோயில்களை எடுத்துத் திருப்பணி செய்துள்ளான். பல்லவ அரசருள் ஒருவனாகிய பரமேசுவரவர்மன் மாமல்லபுரத்துக் கணேசர் கோயிலில் ஒரு கல்வெட்டு வைத்துள்ளான். அக்கல்வெட்டில் “சிவனுக்கு மேல் தெய்வமில்லை; அவனே முழு முதற் கடவுள்; பிறப்பிலி, ஸ்ரீநிதி. சிவனை உள்ளன்புடன் வழிபடுபவன். சிவனை நினையாதவர் ஆறுமுறை சபிக்கப் பட்டவராவர்” என்று கூறுகிறது.

இராசசிம்மன் கட்டிய காஞ்சி கயிலாசநாதர் கோயில் பெரும் புகழ்பெற்றது. சுந்தரரால் பாராட்டப் பெற்ற காடவர் கோன் கழற்சிங்கனும் பல்லவனேயாவான். இவனை வரலாறு, மூன்றாம் நந்திவர்மன் என்று கூறும். இவன் காலத்தில் செந்தமிழும் சிவநெறியும் சிவத்தொண்டும் பெருகி வளர்ந்தன. பல்லவர்கள் காலத்தில் நாயன்மார்கள் பலர் இருந்திருக்கின்றனர். பொதுவாகச் சொன்னால் இந்தக் காலம் சைவ மறுமலர்ச்சிக் காலம்.

பல்லவ அரசர்களைப் போலவே சோழர்கள் காலத்திலும் சிவநெறி வளர்ந்தது. சோழர் காலத்தில்தான் வடபுல்த்தில் காஷ்மீரம், நேபாளம் முதலிய இடங்களில் திருத்த முற்ற சிவநெறி கால் கொண்டது. சோழ நாட்டில் பாய்ந்து வளப்படுத்தும் காவிரியாற்றங்கரையில் கறைக் கண்டனுக்குத் திருக்கோயில்களை எடுத்தும் சாதாரண நிலையிலிருந்த கோயில்களைக் கற்றளிக் கோயில்களாகப் புதுப்பித்தும் அழகுபடுத்திய பெருமை ஆதித்த சோழனைச் சாரும். சோழப் பேரரசை நிறுவிய முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலை எடுத்தான். இராசராசன் இத்திருக்கோயில் எடுத்ததோடு மட்டுமின்றிச் சிவநெறி வரலாற்றில் நிலையான இடம்பெறத் தக்கதாக திருமுறைகளைத் தொகுத்துத் தமிழ் உலகிற்குக் கொணர்ந்தான்.

பல்லவர் காலத்தில் சிவநெறியாளர் போல வேடங்கொண்டு ஊடுருவிய ஆரியவேத மரபினர், நமது திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் அருளிச் செய்த தமிழ்மறைப் பாடல்களைக் கண்டு அஞ்சினர்.

தேவார ஆசிரியர் மூவரும் ஆரியவேத மரபினர் பரப்பிய-நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களை மறுத்து, உய்ர்ந்த சமய வாழ்க்கை நெறியினை நாடு முழுதும் நடந்து சென்று பரப்பினர். அவை நாட்டிலே நடமாடினால் ஆரிய வேதத்தின் கொள்கை இடம் பெறாது என்று அஞ்சிய ஆரியமரபினர் அவைகளை அரும்பாடுபட்டுத் திரட்டித் தொகுத்துத் தில்லைத் திருக்கோயில் அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டனர்.

கறைப்பட்ட வாழ்க்கையும், சிறைப்பட்ட மன நிலையும் கொண்ட தமிழினத்தைச் சிறை மீட்கவந்த திருமுறைகள் சிறைப்படுத்தப்பட்டு விட்டன. தேவாரம் பாடிய மூவரும் வந்ததால்தான் திருமுறைகளை எடுத்துச் செல்ல முடியும் என்றார்கள். இதனை அறிந்த இராசராசன் தனது நுண்ணறிவினால் தேவாரம் பாடிய மூவரையும் சிலைவடிவில் கொண்டுவந்து திருமுறைகளை மீட்டான். தமிழர் நெறி இன்றும், என்றும் உயிர்ப்போடிருக்கத் திருமுறைகளைக் கண்டு தந்த இராசராசசோழன் புகழ், என்றும் நின்று நிலவும்.

தேவாரத்தில், இராசராசசோழனுக்கு நிறைந்த ஈடுபாடு. அதனால், தான் வழிபடும் இறைவனுக்குத் “தேவார தேவர்” என்று பெயர் சூட்டினான். தான் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் திருப்பதிகம் விண்ணப்பிப்பார் நாற்பத்தெண்மரையும், துணைக்கருவியாளர் இருவரையும் பரம்பரைப் பணியாளராக நியமித்தான். நாள்தோறும் “ஆடல்வல்லான்” மரக்காலால் அரண்மனைப் பண்டாரத்தில் முக்குறுணிநெல் தரவும் ஏற்பாடு செய்தான். அவ்வழி, அப்பெருமன்னன் திருமுறைகளைப் போற்றி வளர்த்த பெருமைக்குரியவனாகிறான்.

இராசராசசோழன் மகன் இராசேந்திர சோழன் தந்தையை விஞ்சிய சிறப்பில் கங்கைகொண்ட சோழிச்சரம் என்ற திருப்பெயரில் பெரிய சிவன்கோயில் எடுப்பித்தான்.

அடுத்து, சோழ அரசர்களில் நீள நினைந்து போற்றக் கூடிய பேரரசன், அநபாயன் என்று சிறப்புப் பெயர் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன்.

ஆரியம், பெளத்தம், சமணம் ஆகியவற்றின் ஊடுருவல்களால் சமயச் சடங்குகள் பெருகின; பெண்மையை இழிவுபடுத்தும் வறட்சித் தன்மையுடைய துறவு நெறி மலிந்தது; தமிழ்ச் சமுதாய வாழ்க்கையை நலிவடையச் செய்தது.

அந்தக் காலத்தில், “வாழ்க்கையே சமயம், பெண்மை பெருமைக்குரியது; மாந்தரில் சாதிப் பிரிவுகள் இல்லை; காதல் திருமணமே சிறந்தது; மனையற வாழ்க்கை மூலமே வீடுபேறு பெறலாம்; தொண்டு நெறியே உயர்ந்தது” என்ற கொள்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து காட்டிய அடியார்களின் வாழ்க்கையினைக் கூறுவதன் மூலம் தமிழின வரலாற்றுக்கு ஏற்பட இருந்த சரிவைத் தடுத்து நிறுத்தி, சேக்கிழார், பெரிய புராணம் இயற்றிடத் துணை நின்ற பெருமைக்குரிய மன்னன் அநபாயச் சோழனே.

சோழர் காலத்துத் திருக்கோயில்கள் திருக்கோயில்களாக மட்டுமல்லாமல் சமுதாயப் பணிமனைகளாகவும் விளங்கின என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது.

பாண்டிய மன்னர்களிலும் பலர், சிவநெறியைச் சார்ந்து பணி செய்துள்ளனர். அவருள் மிகச் சிறந்தவன் வரகுண பாண்டியன் என்ற பேரரசன். பட்டினத்தடிகள் வரகுணபாண்டியனைப் ‘பெரிய அன்பின் வரகுண தேவரும்’ என்று பாராட்டுவார். திருவாசகம் தந்த மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டியப் பேரரசனின் அமைச்சராக விளங்கினார் என்பதும் அறிந்து மகிழத்தக்கது.

தென்காசித் திருக்கோயிலை எடுப்பித்த அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிவநெறியின் சீலத்திற்கும் பணிவிற்கும் புகழ் பெற்றவன். மாபெரும் கற்றளித் திருக்கோயிலாகிய தென்காசித் திருக்கோயிலை எடுப்பித்த பெரும் புகழுக்குரிய அரசன் அவன்.

சிவநெறியை, திருக்கோயிலை என்றென்றும் அழியாமல் காப்பாற்ற வேண்டுமென்ற ஆராக் காதலில் உந்தப் பெற்றுத் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறைக்கு எழுதி வைத்த கல்வெட்டு, காலத்தால் அழியாதது: கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்வது. கல்வெட்டைப் படித்து அனுபவியுங்கள் தமிழக வரலாற்றை, சிவநெறியின் சீர்மையை, திருக்கோயில்களை நன்றியுணர்வோடு காக்கும் பணியைத் தொடருங்கள்! இதோ கல்வெட்டு; படித்து உணர்ந்து செயலாற்றி மகிழுங்கள்.

அரிகே சரிமன் பராக்கிரம மாறன் அரன்அருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம்

புரிசேர் கடற்புவி போற்றவைத் தேன்அன்பு பூண்டிதனைத்
திரிசேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதம்என் சென்னியதே.

(தென்காசிக் கோயில் கல்வெட்டு)

பாண்டியப் பேரரசில் சோழர் குலத்தில் தோன்றிய மங்கையர்க்கரசியாரின் கணவனாக இருந்து சமணத்துக்குச் சென்று, பின் சிவநெறிக்கு மீண்டு, சிவநெறி வரலாற்றுக்குப் பெருநலம் சேர்த்தவன் நின்றசீர் நெடுமாறன். அவன் புகழ், ஞாலம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

நெடுமாறனின் வாழ்க்கைத்துணையாக நின்ற மங்கயைர்க்கரசியாரின் புகழ், பண்ணும் இசையும் பயிலும் காலம் வரையில், தமிழினம் இயற்கையோடிசைந்த வாழ்க்கை வாழும் காலம் வரையில், ஆணும் பெண்ணும் காதலிற் கலந்து வாழும் மனையறம், மண்ணில் நிலவும் வரையில் நிலைத்து நிற்கும்; அந்த மங்கையர்க்குத் தனியாசி, தமிழர்தம் இல்லங்களில் தெய்வமாக வழிபடப் பெறுவார்.

சேரமன்னர்களில் சிறந்து விளங்கிய பேராசர் சேரமான் பெருமாள் நாயனார். இவர் நாள்தோறும் வழுவாது சிவ பூசை செய்த மன்னர். அதுமட்டுமா? பூசையின் பயனை நாள்தோறும் பெருமான் ஏற்றுக் கொண்டு, அருள் செய்த பெரும் பேறுபெற்ற மன்னர், திருநீற்றுச் சாதனத்தை மேற்கொண்டவர்கள் யாராயினும் அவரை மதித்தவர் சிவபெருமானால் சுந்தரருக்குத் தோழராக்கப் பெற்ற அண்ணல், இங்ஙனம் சேர அரசர்களிலும் போாசர்கள் பலர் சிவநெறியில் நின்றொழுகிச் சைவத்தை வளர்த்து வந்துள்ளனர்.

இங்ஙனம் வளர்ந்து வந்த சிவநெறி, பெளத்த, சமண, மாயாவாத சமயங்களைச் சந்திக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. அப்பொழுது இலக்கியங்களில் பரவிக்கிடந்த சைவக் கருத்துக்களை மையமாகக் கொண்ட சைவ இலக்கண-சாத்திர நூல்கள் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது, காலத்தின் தேவையாக இருந்தது. இத் தேவையினைத் திருவருள் துணைகொண்டு மெய்கண்டதேவர் நிறைவு செய்தார்; “சிவஞான போதம்” என்ற அருமையான தத்துவ அளவை நூலை முதல் நூலாக ஆக்கித் தந்தார்.

சிவஞானபோத நூலுக்கு வழி நூலாகத் தோன்றிய, அருணந்தி சிவாசாரியார் இயற்றிய சிவஞான சித்தியார், மிக விரிவாகவும் தெளிவாகவும் சைவ சித்தாந்தச் செந்நெறியை எடுத்து விளக்குகிறது. இதனையொட்டிப் பன்னிரண்டு நூல்கள் தோன்றிச் சாத்திர வரிசையில், பதினான்கு சாத்திர நூல்களாக அமைந்துள்ளன. அவற்றுள் திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், மெய்கண்டதேவருக்கு முன்பே செய்யப் பெற்றன என்று ஒரு கொள்கையும் உண்டு.

அந்தப் பதினான்கு சாத்திரங்களாவன:

1. சிவஞானபோதம் 8. திருஅருட்பயன்
2. சிவஞான சித்தியார் 9. வினாவெண்பா
3. இருபா இருபது 10. போற்றிப் பஃறொடை
4. உண்மை விளக்கம் 11. கொடிக்கவி
5. திருவுந்தியார் 12. நெஞ்சு விடு தூது
6. திருக்களிற்றுப்படியார் 13. உண்மைநெறி விளக்கம்
7. சிவப்பிரகாசம் 14. சங்கற்ப நிராகரணம்

சைவ சித்தாந்த சாத்திரக் காலம், வழி வழியாக வந்த சமய மரபுகளையும், தத்துவ மரபுகளையும் காப்பாற்றித் தந்தது; பிற சமய நெறிகளின் தத்துவங்கள் ஊடுருவிக் கலக்காமல் தடை செய்தது. அங்ஙனம் மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞான போதத்தில் இல்லாத செய்திகள்தமிழ் மரபுக்குப் புதியனவாய் அமைந்த செய்திகள் சில வழி நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை உய்த்துணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

சாத்திரக் காலத்தைத் தொடர்ந்து புராண காலம் தோன்றுகிறது. இந்தக் காலம் சைவத்திற்கு அவ்வளவு நல்ல காலமாக அமையவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரண்டு நல்ல புராணங்கள் தோன்றின. இங்கே மிகச் சிறந்த வரலாற்றுப் புராணமாகிய பெரிய புராணம் சாத்திர காலத்துக்கு முந்தியது என்பது குறிக்கத்தக்கது.

ஆயினும் பல புராணங்கள் இந்த நூற்றாண்டிலேயே செய்யப்பெற்றன. அவைகளில் ஏற்புடையன மிக மிகச் சிலவே. பல புராணங்கள் சிவநெறியை ஊடுருவிச் சிதைக்கும் நோக்கத்துடன் கூட செய்யப்பட்டனவோ என்று கருதத்தக்க அளவில் அமைந்துள்ளன. அவை பிற்காலத்தில் தோன்றிய பகுத்தறிவுவாதிகளுக்குப் பெருந்தீனியாகப் போய்விட்டன. அவைகளை உள்ளவாறறிந்து ஒதுக்குதல் இன்றுள்ள தலையாய கடமை.

சைவ சித்தாந்த சாத்திரக் காலத்தைத் தொடர்ந்து திருமடங்களின் காலம் தொடங்குகிறது. சமயாசாரியர்களாலும் சந்தானாசாரியர்களாலும் போற்றி வளர்க்கப் பெற்ற சமய நெறிகளை, நிலையான நிறுவனங்கள் அமைத்துத் தொடர்ந்து பேணி வளர்க்க வேண்டும்; சிவ ஞானத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி அந்நெறியில் அவர்களை வழிநடத்த வேண்டும்; சிவஞான நெறியில் நிற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சைவத் திருமடங்கள் காணப் பெற்றன. சைவத் திருமடங்கள் பதினெட்டு என்ற வழக்கு உண்டு.

1 திருவாவடுதுறை ஆதீனம், 2. தருமபுர ஆதீனம், 3. காஞ்சிபுரம் ஆதீனம், 4. சூரியனார் கோவில் ஆதீனம், 5. செங்கோல் ஆதீனம், 6. ஆகமசிவப்பிரகாச ஆதீனம், 7. திருஞானசம்பந்தர் ஆதீனம், 8. திருவண்ணாமலை ஆதீனம், 9. நீலப்பாடி ஆதீனம், 10. தாயுமானசுவாமிகள் ஆதீனம் (அன்னப் பேட்டை, 11. சாரமா முனிவர் ஆதீனம், 12. திருச்சி சொர்க்கபுர ஆதீனம், 13. வேளா குறிச்சி ஆதீனம் (திருவாரூர்), 14. வள்ளலார் ஆதீனம், 15 இருளஞ்சேரி ஆதீனம், 16. வரணி ஆதீனம், 17 நாச்சியார் கோயில் ஆதீனம் (வேதாரண்யம்), 18 நிரம்பவழகிய தேசிகர் ஆதீனம் (குடந்தை).

- தொகையகராதி பக்.117.

இத்திருமடங்கள் எல்லாம் அவை தோன்றிய காலத்தில் அருள் ஞானப் பண்ணைகளாகத் தொண்டின் நிறுவனங்களாக விளங்கின. இன்றும் சில திருமடங்கள் விளங்குகின்றன. மேலும் இங்கும் அங்குமாக நாட்டில் பரவலாக நூற்றுக்கணக்கான திருமடங்கள் தோன்றிப் பணிகள் செய்தன என்று ஆங்காங்கு உள்ள திருக்கோயில்களின் கல்வெட்டுக்கள் எடுத்துக் கூறுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த பொழுது உடனிருந்த அடியார்கள் வழித் தோன்றி, இன்றும் நின்று நிலவும்-காலத்தால் மிகவும் மூத்த ஆதீனம் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம். இத்திரு மடத்தில் வழிவழியாகச் சைவத்தின் நுண்பொருள்களை விளக்கும் சமய நூல்கள் செய்த முனிவர்கள் இருந்துள்ளனர்.

மதுரை ஆதீனத்தில் 291ஆவது மகாசந்நிதானமாக எழுந்தருளிய திருவருள் திரு. சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள் சிறந்த சைவ சித்தாந்த ஞானம் கைவரப் பெற்றவர்கள். செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் வல்லவர்கள். ஆவியுலகத்தொடு தொடர்பு கொள்ளுதல், பேசுதல் முதலிய துறைகளில் துறைபோய அனுபவமும் உடையவர்கள். இத்துறையில் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள புத்தகங்கள் கற்றுத் தெளிதற்குரியன.

தமிழகத்தின் சமய அரங்குகளில் இவர்கள் “செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்” என்ற சேக்கிழார் பாடலுக்கு ஆவியுலகக் கருத்தைக் கருவியாகக் கொண்டு விளக்கியருளும் பாங்கு பாராட்டு தலுக்குரியது.

இத்திருமடத்து ஞானபிடத்தின் வழித்தோன்றலாக, இளவரசாக எழுந்தருளியிருப்பவர்கள் திருவருள் திரு. அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள். செந்தமிழ் ஆர்வமும் திருத்தொண்டு நெறியில் நிற்கும் பண்பும் உடைய இவ்விளவரசு அவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.

சைவத் திருமடங்களில் திருக்கயிலாய பரம்பரை என்று வழங்கப் பெறும் ஆதீனங்களின் உபதேச பரம்பரை, கயிலையிலிருந்து தோன்றியதாகும். திருக்கயிலாய பரம்பரை, திருக்கயிலாயத்தின் அருள்வடிவாய் கல்லாலமர நிழலில் அமர்ந்து அதோ முகப்பரமனிடமிருந்து திருநந்தி தேவர் சிவஞான உபதேசம் பெற்றார். அக்குருபரம்பரையில் வந்த அகச்சந்தான தேவர்கள், 1. திருநந்திதேவர், 2. சனத்குமாரர், 3. சத்தியஞானதரிசனி, 4. பரஞ்சோதியார். புறச்சந்தான குரவர்கள் 1. மெய்கண்ட தேவர், 2. அருணந்திசிவம், 3. மறைஞான சம்பந்தர், 4. உமாபதி சிவம். இந்தச் சந்தான குரவர்களில் அருணந்தி சிவாச்சாரியாரின் 49. சீடர்களில் ஒருவராக விளங்கிய தெய்வசிகாமணி குருமூர்த்திகளின் ஞானப் பெருக்கில் தோன்றியது, திருவண்ணாமலை ஆதீனம். இன்று அது குன்றக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு பணி செய்வதால் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் என்று அழைக்கப் பெறுகிறது. இத்திருமடம் சிவஞான சித்தியாருக்கு உரைகண்ட ஞானப்பிரகாச முனிவரைப் பெற்றது.

இவ்வுரையைச் சிவசமவாத உரை என்று கூறி மறுப்பாரும் உண்டு. பெரிய புராணத்திற்கு விரிவுரை கண்ட ஆறுமுகத் தம்பிரானைப் பெற்றது என்ற பெருமைக்குரியது. இத்திருமடத்தில் வழி வழி பல முனிவர்கள் பல அருள்ஞான நூல்களைச் செய்துள்ளனர்.

இன்றும் இந்தக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஒன்றும் வகையிலெல்லாம் பணி செய்து வருகிறது.

அடுத்து, நமசிவாய மூர்த்தியை ஞானாசிரியராகக் கொண்ட திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். நுண்ணிதின் அமைந்த சிவஞான போதத்தை எல்லாரும் கற்கும் வகையில் பேருரையாக்கித் தந்த மாதவச் சிவஞான முனிவர் இந்த ஆதீனத்தைச் சேர்ந்தவர் என்பது இந்த ஆதீனத்தின் பெருமைக்குச் சான்று.

திருவாவடுதுறை மடம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் எழுச்சிக்குத் துணையாக இருந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதயர் முதலியவர்களுக்குக் களமாக அமைந்தது என்பதைத் தமிழுலகம் அறிந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இத் திருமடத்தில் செந்தமிழ்ப் புலமையும் சிவஞானமும் கைவரப் பெற்றவர்கள் வழிவழியாக அருளாட்சி செய்து வருகின்றனர்.

இன்று இத்திருமடத்தின் ஞானத்தலைவராக எழுந் தருளியுள்ள மகாசந்நிதானம் திருவருள் திரு. அம்பலவான தேசிய பாரமாசார்ய சுவாமிகள். அவர்கள் நல்ல ஞான நூல்களை அச்சிட்டு வழங்கியும், சமய, இலக்கிய மாநாடுகளை நடத்தியும் செய்து வரும் பணிகள் பாராட்டுதலுக்குரியன.

சைவத் திருமடங்களில் சிறப்புடையதாக விளங்கி நின்று தொண்டு செய்து வருவது திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீனமாகும்.

இத்திருமடம், முத்தி நிச்சயம் முதலான சாத்திர விளக்க நூல்களைச் செய்து பெருமை பெற்றது. இன்றும் சிறந்த சாத்திர, தோத்திர நூல்களை வெளியிட்டும், சைவ சாத்திரங்களைப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களைக் கண்டும் சிறந்த முறையில் தொண்டு செய்து வருவது தருமபுரம் ஆதீனம் ஆகும்.

தருமபுர ஆதீனத்தில் இன்று 26ஆவது மகாசந்நிதானமாக எழுந்தருளியுள்ள திருவருள் திரு. சண்முகதேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகள் அவர்கள், சாத்திரங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்த ஞானமும் அந்நெறி முறைகளின் வழி அயர்விலாது அரன் தன்னை அருச்சிக்கும் ஆர்வமும், சிவஞானத்தின் இயல்பெனச் சிவஞான போதம் 12ஆவது சூத்திரம் சொல்லும் சிவப் பணிகள் அனைத்திலும் தோய்வும் ஈடுபாடும் கொண்டு சைவம் செழிக்க அருளாட்சி செய்து வருகிறார்கள்.

அடுத்து, சிறந்ததொரு திருமடமாக விளங்குவது திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம். இது தருமையின் ஞானப் பரம்பரை வழி வந்த, கொழிதமிழ்க் குமரகுருபர அடிகளால் தோற்றுவிக்கப் பெற்றது. இத்திருமடம், காசி முதல் இராமேச்சுரம் வரை இயற்றியுள்ள அறக்கட்டளைகள் பலப்பல. வடபுலத்து மக்கள் செந்தமிழையும் சிவநெறியையும் அறிந்து கொள்ளச்செய்த பெருமை இத்திருமடத்திற்கு உண்டு.

இன்று இத்திருமடத்தின் தலைவராக எழுந்தருளியுள்ள அருள் திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் செந்தமிழ் நூற்புலவராக, சிவஞானச் செல்வராக விளங்கிப் பணி செய்துவருவது பாராட்டுதலுக்குரியது. மேலும்,

1. காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்
2. மயிலம் பொம்மபுர ஆதீனம்
3. பேரூர் அருள்திரு. சாந்தலிங்கர் திருமடம்.
4. கோவை சிரவணபுரம் கெளமார மடாலயம்.
5. கோவிலூர் ஆதீனம்.
6. திருவண்ணாமலை ஈசான்ய மடம்.
7. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம்.

ஆகிய திருமடங்களும், மற்றும் பல திருமடங்களும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் சிறந்த முறையில் பணி செய்து வருகின்றன.

சைவ சித்தாந்தச் சமயத்திற்குத் தொன்மையான வரலாறு உண்டு; காலத்திற்குக் காலம் அது வளர்ந்து வந்திருக்கிறது. பல்வேறு புறத்தாக்குதல்களைக் கண்டு வெற்றி பெற்று விளக்கமுற்று வந்திருக்கிறது.

இன்று தமிழகத்தில் அணி செய்து நிற்கும் ஆயிரமாயிரம் ஆலயங்கள், சித்தாந்தச் செந்நெறியின் ஆன்ம அனுபவச் செயல் முறைக் கழகங்களாகத் தோன்றியவை. சித்தாந்தச் சைவம் தனித்தன்மையில் நின்று விளங்கிய வகையில் அது ஒளித்தன்மையுடையதாக விளக்கம் பெற்றிருந்தது.

பிற்காலத்தில் தோன்றிய புறச் சமயங்களைச் சந்திப்பதற்காக அகச் சமயங்களிடையே ஏற்படுத்தப் பெற்ற இணைப்புகளாக மட்டுமல்லாமல் கலப்பாகப் போய் விட்டதால் இந்தச் சமயமும் இன்று பகுத்தறிவு சர்ச்சைகளுக்குள்ளாகி நிற்கிறது.

அகச் சமயங்களுக்கிடையே கலப்பு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, அதனுடன் மாயாவாதக் கலப்பும் ஏற்பட்டது. இவ்வாறான கலப்பு நிலையில் “இந்து மதம்” என்ற பெயர் தோன்றியது. இந்தக் கலப்பினால் ஏற்பட்ட மயக்கங்கள் இன்று மலிந்துள்ளன. அதன் காரணமாகச் சித்தாந்தச் செந்நெறி இனம் கண்டு கொள்ள முடியாமல் கனித்தன்மையை இழந்திருக்கிறது. இன்றையச் சித்தாந்த செந்நெறியின் திருமடங்கள் இதுபற்றி எண்ணத் திருவுள்ளம், கொள்ள வேண்டும்.

சித்தாந்தச் செந்நெறியை அதன் தனித்தன்மையோடு பாதுகாக்க முன்வர வேண்டும். சித்தாந்தச் செந்நெறி, உலகப் பொது நெறியாவதற்குரிய தத்துவச் சிறப்புடையது; சமுதாய நோக்குடையது. அது, முன்னைப் பழைய நெறி; பின்னைப் புதுமைக்கும் ஈடுகொடுக்கும் பெரு நெறி. இத்தகு சிறப்பு வாய்ந்த சித்தாந்தச் செந்நெறி என்றும் நின்று நிலவுவதாகுக!


2. சைவ சித்தாந்தத் தத்துவம்


உயிர்த் தொகுதி பலப்பல. உயிர்களின் தோற்றத்திற்குப் பல நூறாயிரம் வாயில்கள். உயிர்களைத் தமிழர் ஐவகைப் படுத்தினர்; மரம் செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பது தமிழர் கொள்கை; தொல்காப்பியர் காலத்துக் கொள்கை என்பதை மறவற்க இக்கொள்கையை உலகம் ஒப்புக் கொண்டது அண்மைக் காலத்தில்தான்! ஆனால் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “மரம் செடிகளும் உயிருடையனவே; ஆயினும் இயக்கக் குறைவு உடையன” என்று கண்டுணர்த்தினார் தொல்காப்பியர்.

புல்லும் மரமும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. (தொல். மர.28-33)

இந்தப் படிமுறை, அறிவு வளர்ச்சிகளின்பாற்பட்டன.

ஆறறிவுடைய மானுடப் பிறவி அறிவியக்கத்தின் இன்றைய கடைசி எல்லை.

ஆனாலும், ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள நிலைகளில் உணர்ச்சிகள் இல்லை; செயல் இல்லை; காதல் இல்லை; பிறவியின் பயனாகிய வீடுபேறு இல்லை என்று கூறுதல் உண்மைக்கு மாறானது. இவையெல்லாம் மக்கட் பிறப்பல்லாத பிற உயிர்களுக்கு உண்டு. ஆனால், சில வரையறைகள் இல்லாமற் போகலாம்; செழுமையாக - விளக்கமாகத் தோன்றாமலிருக்கலாம். ஏன்? ஞானத்தின் பயனாகக் கிடைக்கக்கூடிய வீடுபேறுகளும் கூட, செடிகளும், பறவைகளும், விலங்குகளும் பெற்றுள்ளன. “முள்ளிச் செடிக்கு வீடுபேறு கொடுத்த வரலாறும்”, “கரிக்குருவிக்கு உபதேசித்த வரலாறும்”, “சிலந்தியும், யானையும் பூசித்து வீடுபேறுற்ற வரலாறும்” எண்ணத்தக்கன. அவைகளுக்குள்ள ஒரே குறை, செல்லுழிச் செல்வதோடு சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமையும், காரண காரியங்களை ஆராய்ந்து அனுபவத்திற்குக் கொண்டு வரும் தகுதியில்லாமையும் ஆகும். ஆனால் இவையெல்லாம் மானிடனுக்கு உண்டு.

மானிடர் சாதி, துன்பங்களைச் சந்தித்துச் சந்தித்துப் படிப்படியாக வளர்ந்து வருகின்றது. குறையிலிருந்து நிறையும், தீமையிலிருந்து நன்மையும், துன்பத்திலிருந்து இன்பமும் தோன்றுதல்தான் வளர்ச்சியின் படி முறை, இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளவை அறிவு அறியாமை என்பன. இந்த அறியாமை, அறிவிலிருந்தும் தோன்றுவதாகும். ஒன்றை, நன்றாயினும் தீயதாயினும் உள்ளவாறு அறிதல் அறிவு. அறிந்ததற்கேற்பத் தீமையிலிருந்து விலகி, நன்னெறியில் நிற்றல் ஒழுக்கம். அறிவு என்பது பயன்படும் ஆற்றலால் உடைமை போலக் கருதப் பெற்றாலும் அதுவும் ஒரு தொழிற் கருவியேயாம். இந்தப் படி முறை வளர்ச்சிகளில் மானிடச் சாதி தம் சீரான வாழ்க்கைக்கும், சிறப்புடைய வாழ்க்கைக்கும் கண்டதே சமயம்.

“சமயம்”, “மதம்” என்ற சொல் வழக்குகள் பழங்காலத்தில் இருந்ததில்லை. மணிமேகலை “சமயம்” என்ற சொல்லைக் கொண்டு வருகிறது. மதம் என்ற சொல்லை “மாணிக்கவாசகர்” எடுத்தாண்டுள்ளார். நன்னூலில் மதம் என்ற சொல் கொள்கை அடிப்படையில் எடுத்தாளப் பட்டுள்ளது. பின்னால் தோன்றிய கொள்கைகளில் பெரும் பாலானவை கடவுள், ஒழுக்கம் போன்றவைகளோடு மிகுதியும் சார்ந்திருந்ததால் இவைகளை மதம் என்ற சொல்லால் அழைப்பது பெருவழக்காயிற்று. பின், மதம் என்ற சொல்லில் உணர்த்தப் பெறும் பொருள் இறுக்கமான பிடிப்பு, வெறி ஆகியன மேவியதால் தூய இனிய சொல்லாகிய சமயத்திற்கு வந்தன. மதம், சமயம் என்ற இரண்டு சொற்களையுமே கூட நமது திருமுறை ஆசிரியர்களும் சாத்திர ஆசிரியர்களும் சிவநெறியைக் குறிக்கப் பெருவழக்காக எடுத்தாளாமையே சான்று. திருமுறை ஆசிரியர்கள், “திருநெறி”, “நன்னெறி”, “அருள்நெறி”, தவநெறி என்றே மிகுதியும் குறிக்கின்றனர். சமயத்திற்கு ஒரு குறிப்பிட்ட சொல் வழக்காகத் தமது சாத்திர நூலில் மெய்கண்டார் “நெறி” என்ற சொல்லையே கையாளுகிறார். அருணந்தி சிவம், சமயம் என்ற சொல்லைக் கையாளுகிறார். இனி, “சமயம்” என்ற சொல்லை நாம், சிவநெறி, சைவ சமயம் என்ற கருத்தில் கையாளலாம்.

உலகம் முழுதும் வாழ்ந்த மானிடர் சாதி தத்தம் வாழ்க்கைப் படிப்பினைகள் மூலம் சில வாழ்க்கை நியதிகளைக் கண்டுள்ளது; அறநெறிகளைக் கண்டு ஆற்றுப் படுத்தியுள்ளது; நிலவுலகத்தில் நீதி நின்று நிலவ முயன்று பணி செய்துள்ளது. இவை அனைத்தும் வாழ்க்கைப் படிப்பினைகளின் வழியே உருப்பெற்றன. மனித குலத்தை இன்ப நெறியில் ஆற்றுப்படுத்த வாழச்செய்ய அறமும், அறத்தினைச் சார்ந்த நீதியும் தேவை. இவையே இன்ப வாழ்க்கையின் மூலங்கள்; அடித்தளங்கள்; மனிதகுலத்தை அறநெறியில்-நீதி தழுவிய நிலையில் வாழும்படி வலியுறுத்தி நெறிப்படுத்த சமய நெறிகள் தோன்றின; அறந்தழுவிய வாழ்க்கையின் பயன்களை எடுத்துக் கூறின; அறநெறி பிறழ்ந்த வாழ்க்கையால் அடையும் அவலங்களையும் எடுத்துக்கூறி அச்சுறுத்தின; மனித குலத்தில் இயல்பாக அறநெறி பிறழ்ந்த வாழ்க்கைமுறை மேவிய பொழுது-கடவுள் பெயரால்-சொர்க்கம்-நரகம் என்ற முறையில்-முறை பிறழ்வைத் தடுத்து நிறுத்தி-அறநெறியில் நிலை நிறுத்த முயன்றபோது-சமயம் கால்கொண்டது. சமய நெறி தோன்றிய உடன் நல்ல பயன் கிடைத்தது. ஆனால் காலப் போக்கில், சமயநெறி சமுதாயத்தை அறநெறியில் - நீதிநெறியில் நிறுத்தும் ஆற்றலை இழந்தது. அதற்கு மிகுதியும் காரணம் மக்கள் தொகுதிகள் அல்ல. சமயநெறியை மையமாகக் கொண்டு வழிநடத்தத் தோன்றிய சமயம், சமய நிறுவனங்களின் வடிவம் பெற்றதுதான் காரணம். ஒரு இயக்கத்திற்கு, இருக்கும் ஆற்றல் நிறுவனங்களுக்கு இருத்தல் இயலாது; இருக்காது. சமயம் நிறுவனங்களான உடன் சமயத் தலைவர்கள்-அறநெறி புரோகிதர்கள் தோன்றி விடுவர். அவர்கள் மனித குலத்தை மையமாகக் கொண்டு சிந்திப்பதில்லை. தம் சமய நிறுவனம் தற்சார்பு ஆகிய சுழிகளில் சிக்கி அல்லற்படுவர்.

இங்கனம் சமய நெறி இயக்க நிலையில் இருந்து நிறுவனம் ஆகி முடம்பட்டுப்போன நிலையில் மனித குலத்தை நீதிநெறியில் நிறுத்த, சமய நெறி அறநெறியின் சாராத-தொடர்பில்லாத அறநெறியை, நீதியை வலியுறுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர அரசியல் தோன்றியது. அரசியலின் தொடக்க காலத்திலேயே, சென்ற கால நடைமுறைகளில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக அறநெறி, நீதி ஆகியவற்றின் அவசியத்தை மிகுதியும் வற்புறுத்த எண்ணி, அறநெறியில் நிறுத்தும் முயற்சிகளை உறுதியாக எடுப்பதற்கு மாறாக நெறி பிறழின் தண்டனை வழங்குதல் என்ற முறையை வழியாகக் கொண்டது. இது கழுதைக்குப் பயந்து புலியிடத்தில் சிக்கியது போலாயிற்று. மாந்தர் நெறி பிறழ்ந்ததோடல்லாமல் அச்சத்திற்கும் ஆட்பட்டனர். அதன் விளைவாகக் காண்பதற்கும், அறிதற்கும் எல்லைகளுடைய அரசனிடத்திலிருந்து தப்ப மறைவாகத் தடம் பிறழ்ந்தனர். ஒட்டு மொத்தமாக வரலாற்றின் பயனை நோக்கில், அறநெறி, நீதிநெறி இவைகளிலிருந்து விலகிச் செல்லும் போக்கே வெற்றி பெற்றுள்ளது. சமய இயலும் அரசியற் சார்புடைய ஆட்சியிலும் போதிய பயனைத் தரவில்லை. இதற்குக் காரணம் சமய நடைமுறைகளில், அரசியல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளேயாம்.

சமயநெறிகளின் படிமுறை வளர்ச்சிகளில் தோன்றிய குறைகளுக்குத் துணை போகாத நிறை நலம் சான்ற சமயத்தை, உலகு துணிவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.

நாடு, இனங்களின் காரணமாகவும் பழக்கங்களை விடாப்பண்பின் காரணமாகவும் அறிவு ஆய்வில் ஆர்வமின்மையின் காரணமாகவும் சமய நெறியாளர்கள் கணக்கர்களாக மாறித் தத்தம் எல்லைக்குள் முரண்பட்டு மோதிக்கொண்டு உயர் சமய நெறியின் இயல்பையே கெடுத்து விட்டனர். உலகில் தோன்றிய சமயங்கள் எல்லாமே நன்னோக்கம் உடையனவே நோக்கத்தில் யாதொரு குறையுமில்லை. ஆனால், அனுபவங்கள் வேறுபடத்தானே செய்யும்! படிப்பினைகள் காரணமாகப் பெற்ற பாடத்தில் செறிவும், செறிவின்மையும் இல்லாமலா போகும். இவற்றை ஒப்பு நோக்கிக் காலத்திற்குக் காலம் உள்ள நெறியை, தேவையான புதுமையை எடுத்துக் கொள்வதற்குச் சமய நெறியாளர்கள் தயங்குகின்றனர். இத் தயக்கங்களின் காரணமாகவே உலகப் பொதுச் சமயம் தோன்றாது போய் விட்டது; உலகளாவிய மனித குலத்தை ஒருங்கிணைக்க முடியாமற் போய்விட்டது. இந்த இனிய பணியைச் சமய நெறியாளர்கள் ஏற்றுச் செய்யாமையின் காரணமாக வாழ்க்கையாகவே இருந்த சமயம், வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒதுக்கப் பெற்றுவிட்டது. அதுவும் ஒரு சிறு விழுக்காட்டினருக்குத்தான். இன்றைய நடைமுறை உலகில் வளர்ந்துள்ள ஒழுக்கக் கேடுகள், காவல் தன்மைகள், பண்பாட்டுச் சிதைவுகள், போருணர்ச்சிகள் இவைகளை யெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டதால் நடைமுறை உலகத்திற்கும், சமயத்திற்கும் சம்பந்தமில்லை. உலகம் முழுதும், பெரும்பான்மையான மக்கள் வேறுவேறு பெயரில் கடவுளை நம்பி வழிபடத்தான் செய்கின்றனர். சர்ச்சுகளும் மசூதிகளும், திருக்கோயில்களும் உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன. அவைகளில் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. ஆனால் மானிடச்சாதி பகைமை அரிப்பில் உள்ளீடு அழிந்துகொண்டே போகிறது. எங்கு பார்த்தாலும் உலகியலை மையமாகக் கொண்ட சாமர்த்திய விளையாட்டு! இந்தச் சாமர்த்திய உலகில், வேறு உலகைக் காட்டுவதாகச் சொல்லும் மதத் தலைவர்கள் கூட திறமையாகத்தான் ஈடுபடுகின்றனர். அவர்களிடத்திலும் கூட, விளையாட்டுக்கள் நிர்வாணமான விளம்பரப் போக்குகளாகக் காணப்படுகின்றன.

உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு சாரமற்றுப் போனால் வேறு எதனால் சாரம் ஏற்றப் பெறும்!

(புதிய ஏற்பாடு: லூக்காஸ் 14:34)

என்று விவிலியம் கூறும். இந்த இரங்கத்தக்க நிலைமைக்கு இன்றையச் சமய உலகு வந்திருக்கிறது. அன்பு கூர்ந்து சிந்தனை செய்மின் ! அண்டங்களை, கண்டங்களை இன்று சாலைகள் இணைத்து வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், மானிடச் சாதியின் நெஞ்சங்களை, நெறிகள் இணைத்து வெற்றி பெறவில்லை. நாடுகளைக் கடந்தும்கூட மானிட உலகத்தை இணைக்க வேண்டும். அதற்குச் சமயம் பயன்படுமானால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மானிட உலகத்தின் தேவைக்குச் சமயத் தத்துவங்களைச் செழிப்பூட்ட வேண்டியிருந்தால் பழையன கழித்துப் புதியன சேர்த்துச் செழிப்பூட்டப் பற்றும் பாசமும் தடையாக இருத்தல் கூடாது.

உலகச் சமயங்கள் அனைத்தும் போற்றுதலுக்குரியன. அச்சமயங்களைக் கண்ட தலைவர்களை நாம் உளமாரப் போற்றுகின்றோம். பிறப்பு-அவ்வழிப்பட்ட பழக்கம் காரணமாகச் சமயநெறிகளை ஏற்றுக்கொள்ளுதல் நன்றன்று ஏற்றுக் கொள்ளும் கொள்கை, நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும்; நல்லெண்ணத்திற்குரியதாக இருக்க வேண்டும்; மானிடச் சாதிக்கு நிலையான இன்ப வாழ்வை வழங்குவதாக இருக்க வேண்டும். இது நம் கொள்கை ஏற்புக்குரிய அடிப்படை அளவுகோல். இந் நிலையில் நின்று ஆராய்ந்தால் தமிழகத்தில் தோன்றிய சித்தாந்தச் சிவநெறி வளர்ந்த தத்துவச் செழுமையுடையது; வேறுபாடுகளைக் கடந்தது; சித்தாந்தச் செந்நெறி இன்னும் சமயநெறியாளர்களால் முழுமையாக ஆய்வு செய்யப் பெறவில்லை; அதனுடைய தெளிவான கொள்கை, கோட்பாடுகள் மக்களிடத்தில் விளக்கம் செய்யப் பெறவில்லை; ஏன்? அதுவே கலப்புகளின் காரணமாக மறைக்கப்பட்டுள்ளது. நடுநிலை நெஞ்சத்தோடு சித்தாந்தச் செந்நெறியை ஆராயுங்கள்! விவாதம் செய்யுங்கள்! தேர்ந்து தெளியுங்கள்! தெளிவான முடிவுகளைச் செயற்படுத்துங்கள்.

சித்தாந்தச் செந்நெறியை ஆராய்தறிந்துணர்ந்த மேனாட்டறிஞர்கள் அதைச் சிறப்பாகப் பாராட்டியுள்ளனர். டாக்டர் ஜி. யூ. போப் அவர்கள்,

“as the Choicest product of the Dravidian intellect.”
“This System possesses the merits of great antiquity; in the religious world it is heir to all that is most ancient in Southern India. It is a religion of the Tamil people by the side of which other every form is of Comperatively foreign origin. As a System of religious thought as an expression of faith and life, the Saiva Siddhants is by far the best that South India possesses; indeed it would not be rash to include the whole of India and to maintain that judged by its intrinsic merits, the Siddhants represents the high water mark of Indian thought and Indian life.” என்று பாராட்டியுள்ளார்.

இந்தச் சைவ சித்தாந்தச் செந்நெறியைத் தந்த முதல் நூலாகிய சிவஞானபோதத்திலிருந்து சில வழி நூல்கள் விலகிச் சென்றிருக்கின்றன; இது உண்மை. வழிநூலாசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் சமுதாய அமைப்பும், நடைமுறைகளும், அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கின்றன. நெருக்கடியைத் தந்து-காலச் சூழ்நிலைக்கும் கட்டுப்பட்டுத் தள்ளியிருக்கின்றன. சமுதாய நெருக்கடிகள் அல்லது பழக்கக் கொடுமைகள், சிறந்த அறிஞர்களைக் கூட பாதிப்புக் குள்ளாக்கித் தம் வழி நிறுத்த முயன்று வெற்றி பெற்றதுண்டு. வரலாற்றில் இங்ஙனம் தோற்ற அறிஞர்களின் எண்ணிக்கை மிகுதி, வெற்றிபெற்றவர்கள் மிகமிகச் சிலரே. உண்மையின் பக்கத்திலேயே நின்று வழக்காடி-முரட்டுத் தனமாக உலகியலிற்குப் பலியானவர்கள் ஒரு சிலரேயாம்.

திருக்குறள், திருமுறைகள், மெய்கண்ட தேவர் அருளிச் செய்த சிவஞான போதம் ஆகியவை உண்மையின் பக்கமே நின்ற நூல்கள். காலத்தைவென்று விளங்கும் நூல்கள். சித்தாந்தச் செந்நெறி ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குப் பிறகு வளரவில்லை; தத்துவச் செழிப்பிலும் வளரவில்லை; தேக்கம்தான். ஏன்? உயிர்ப்புள்ள வாழ்வுக்கெல்லாம் உயிராக அந்நெறி நின்றோர், பிறழாது பிழைப்பு நடத்தியதால்தான் சைவ சமய நெறியாளர்கள் சிந்தனைப் போக்குக்கு எல்லை கட்டிக் கொண்டு-கோட்டை கட்டிக்கொண்டு பின் தோன்றிய சிந்தனைகளைப் புறக்கணித்து விட்டனர்; புறக் கணித்து வருகின்றனர். சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணத்தோடு திருமுறையுகம் முற்றுப் பெறுகிறது. உமாபதி சிவம் இயற்றிய சாத்திர நூல்களுடன் சித்தாந்த சாத்திர யுகம் முடிகிறது. இவைகளை விளக்குவனவாகப் பின்னே சில தோன்றியிருக்கின்றன. ஆனால் அவைகள் முன்னர்க் கூறியவற்றை, விளக்கும் பணியில் ஈடுபட்டனவே தவிர ஆய்வில் ஈடுபடவில்லை. இச்சமயநெறி தோன்றிய பின் உலக அரங்கில் தோன்றியுள்ள கிறித்துவம், இசுலாமியம் போன்ற சமயநெறிகளைச் சீர்தூக்கி ஆராய்ந்து அவற்றில் ஏற்பனவற்றை ஏற்கவோ, அவைகளுக்கு வழங்க வேண்டியவற்றை வழங்கவோ சித்தாந்தச் செந்நெறி இயக்கங்கள் முயற்சியெடுத்துக் கொள்ளவில்லை. ஏன்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாமுனிவன் கார்ல்மார்க்ஸ் மனித உலகத்திற்குச் சீரான வாழ்க்கையை வழங்க வேண்டுமென்ற விழுமிய நோக்கத்துடன் பொதுவுடைமைத் தத்துவத்தை, ஒரு புதிய வாழ்க்கை முறையை உலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளான். நம் சைவ சித்தாந்தச் சொற்பொழிவில், கடவுள் நம்பிக்கையில்லாத-"மதம் மக்கட்கு அபின்” என்று கூறிய கார்ல்மார்க்சை “மாமுனிவன்” என்று குறிப்பிடுகிறோமே என்ற வினா எழலாம். கார்ல்மாக்சை மாமுனிவர் என்று திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார். இன்று உலகியலில் மெய்ப் பொருளியலை ஆராய்ந்தறிந்து முடிவுக்கு வரவேண்டுமென்றால் மார்க்சீயத்தை ஆராயாமல் எடுக்கப்பெறும் மெய்ப்பொருள் பற்றிய முடிவுகள் குறையுடையனவேயாம். இந்த ஆய்வைச் சமயநெறியாளர்கள் நிகழ்த்த விரும்பாமல் மார்க்சீயத்தை நாத்திகம் என்று ஓதுக்குகின்றனர்; பயமுறுத்துகின்றனர்! அது பெரும்பிழை. மார்க்சீயத்தைச் சந்தித்துத் திறனாய்வு செய்து மார்க்சீயம் விரும்புகின்ற வேறுபாடற்ற சமுதாயத்தைச் சமயம் படைக்கும் என்ற தெளிவைத் தரவேண்டும். அருள்நந்தி சிவம், மார்க்சீயத்தில் முற்கால வடிவமாகிய உலகாயதத்தைத் திறனாய்வு செய்து மறுத்துள்ளார். ஆயினும், அது உலகாயத்தின் மறுப்புரையாக மட்டும் விளங்குகிறதே தவிர நடைமுறைக் குறைகள் நீக்கத்திற்குரிய விளக்கம்தரப் பெரிதும் முயலவில்லை.

இந்நிலையில் தமிழகத்தின் பழைய நாகரிகத்தின் தலைநகரமாகிய மதுரையில் நிலைபெற்றுள்ள ‘மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் நெறியில்-சிவ நெறியில் நாட்டுப்பணியில் ஈடுபட்டு, தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வ.உ.சி. புகழ் பரப்பும் ‘தமிழவேள்’ ஏ.பி.சி, வீரபாகு அமைத்த அறக்கட்டளையின் சார்பில் சித்தாந்தச் செந்நெறியைப் பற்றிப் பேசுகின்றோம். நம்முடைய பேச்சு சமய நெறியளார்களுக் கிடையில் சிந்தனையைத் தோற்றுவிக்குமானால், அறிவாராய்ச்சியைத் தொடங்கி வைக்குமானால் அதுவே நாம் விரும்பும் பயன். நம்முடைய பேச்சைகருத்தை மறுப்பின்றி ஏற்க வேண்டும் என்பது நமது நோக்கமன்று! விருப்பமுமன்று; ஆராய்ச்சி செய்யுங்கள். அதுவே போதும்-சார்பின்றி-பற்று-பாசமின்றி-அறிந்து உண்மையை நாடிக்காணவேண்டும் என்று விரும்பி ஆராயும் உலகம் - உண்மையைக் காணுதல் இயற்கை என்ற நம்பிக்கை நமக்கு மிகுதியும் உண்டு.

சித்தாந்தச் செந்நெறிக் கருத்துக்கள் முழுமையான நூல் வடிவம் பெற்றது மெய்கண்டார் காலத்தில் ஆனாலும், சித்தாந்தச் செந்நெறியின் கருத்துக்கள் தொன்மையானவை; பழைமையானவை. சித்தாந்தச் செந்நெறி, அறிவாராய்ச்சி அடிப்படையில் தோன்றி உள்ளார்ந்த அருளனுபவம் வழி செழித்து வளர்ந்த-நெறி. சித்தாந்தச் செந்நெறியின் முதலாசிரியன், “ஆலமலர் செல்வனே” யாம். “சித்தாந்தம்” என்ற சொல்லுக்கே “முடிந்த முடிபு” என்று பொருள். இனிமேல் கேள்விகள் கேட்க முடியாவண்ணம் சிந்தனையின் உச்சவரம்பை எட்டியது சித்தாந்தம் என்பர். அறிவியலாராய்ச்சிக்கு இங்ஙனம் கூறுதல் இயைபன்று. ஆயினும் சித்தாந்தச் செந்நெறி, கண்டு உணர்த்தியுள்ள முடிவினை மறுத்துப் புதிய முடிவுகளைக் காண்பார் யாரும் இதுவரையில் தோன்றவில்லை. சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்தவர்களும்கூட பெயரளவில் வாழ்ந்தனரேயன்றி உள்ளார்ந்த அனுபவத்தில் ஈடுபடவில்லை. அதனால் புதுமைகள் தோன்ற வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

சமய நெறிக்கு எதிராகச் சிந்தித்தவர்களும்கூட பொதுவுடைமைக் கொள்கையாளர் உள்பட - சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை அணுகி ஆராய்ந்து மறுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் அளவுக்குச் சித்தாந்தத் செந்நெறியின் செயற்பாடும் இல்லை.

சித்தாந்தச் செந்நெறிக் கொள்கையின் அடிப்படை “உள்ளது போகாது, இல்லது வாராது” என்பது. இஃது அடிப்படையான வாய்பாடு. சித்தாந்த நெறியினர், “என்றும் உள் பொருள்களாக மூன்று உள” என்ற அடிப்படையில் ஆய்வைத் தொடங்குகின்றனர். அப்பொருள்கள் முறையே இறை, உயிர், தளை என்பன. இம்மூன்றும் படைக்கப் பட்டனவும் அல்ல; அழிவனவுமல்ல. இவை மூன்றும் என்றும் நிலையாக உள்ள பொருள்கள் என்பது சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை, இந்த அடிப்படைக் கொள்கையின் மூலமாகவே சமய நெறி எதிர்ப்புக் கொள்கைகள் பல சரிந்து போகும். அவை எங்ஙனம் சரிகின்றன என்பதைப் பின்னால் விளக்குவோம்.

இம்மூன்றில் முதற் பொருள் இறை-கடவுள். சித்தாந்தச் செந்நெறி, கடவுளைச் “சிவம்” என்று பாராட்டும், சிவம் என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றிய “சைவம்” என்ற சொல் மணிமேகலை காலத்தில் தொடங்கி வழங்கி வருகிறது. அதன் பின்னெழுந்த இலக்கியங்களில் ‘சிவம்’ என்ற சொல் பெருவழக்காகப் பயிலப் பெற்றுள்ளது. சைவ சித்தாந்தத்தின் தத்துவத்தை உள்ளடக்கிய சொல் கடவுள் என்பது. கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள் “உலகத்தைக் கடந்தும், உள்ளி ருந்தும் இயக்குதல்-நடத்துதல்” என்பதாகும். கடத்தல் என்பது இடத்தைக் கடப்பது; காலத்தைக் கடப்பது; பொருளின் தன்மைகளைக் கடப்பது என்று பொருள் தரும்; கடவுள் எந்தப் பொருளின் எல்லையிலும், எந்த நாட்டின் எல்லையிலும் அடங்கியதல்ல. நாடுகளைக் கடந்து நாட்டின் எல்லைகளைக் கடந்தது கடவுள் என்பதனை:

தென்னா டுடைய சிவனே, போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி

(திருவாசகம் திருவெம்பாவை 164-165)

என்ற அருள் மொழியாலறிக.

அடுத்து, காலத்தைக் கடப்பதென்பதற்கு, காலம் தாழ்த்தல் என்பது பொருளன்று. அவர் தோன்றிய காலமும், மறையும் காலமும் இல்லை. அது மட்டுமன்று கால எல்லைகளுக்குபட்பட்டு நிற்றலுக்குரியவையாகிய பிறப்பு, மூப்பு, பிணி, மரணம் ஆகியவைகளும் அவர்க்கு இல்லை. இந்தக் குறிப்பினைக் காலனைக் காலால் கடிந்தான் அடியவர்க்காக!! என்ற வரலாற்றுக் குறிப்பால் உணர்க.

காலனைக் காலால் காய்ந்த கடவுள்

(அடங்கன்முறை 6580)

என்று அப்பரடிகள் போற்றுவார்.

மாணிக்கவாசகப் பெருமான், காலம் கடந்தவன் இறைவன் என்பதை இறைவனின் பழைமையை உணர்த்தும் பொழுதுகூட, கால எல்லையைச் சுட்டாமல்,

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே...

(திருவாசகம், திருவெம்பாவை. 163)
என்றும்,

மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யான்.....
(திருக்கோவை. 312)

என்றும் அருளிச் செய்தமை அறிக, மூன்றாவது, பொருள்களின் தன்மையைக் கடத்தல், அதாவது பொருள்களின் இயல்புகளில் அடங்காமல் அவற்றின் இயல்புகளையும் கடந்து நிற்றல். அதாவது வண்ணம், வடிவு அளவு, சுவை ஆகிய எல்லையினையும் கடந்து நிற்றல் என்பதாகும். இங்ஙனம் கடந்து நின்றாலும் அவ்வப்பொருளில் தன் நிலை கெடாமல் நின்றருளி இயக்குகின்றமையால் புறத்தேயும் உளன்; அகத்தேயும் உளன் என்ற வழக்குத் தோன்றியுள்ளது. இறைவன் பொருள்களைக் கடந்தே நின்றால் உலகுக்கும் உயிர்களுக்கும் பயனே இல்லாமற் போகும். பொருள்களின் எல்லைக்குள்ளும், தன்மைக்குள்ளும் உள்ளடங்கியே இருக்குமானாலும் புதுமையாகாது; சிறுமை தோன்றும், ஆக்கத்திற்கும் பயன்படாது. ஆதலால் எல்லாமாய் அல்லதுமாய் இறைவன் விளங்குகின்றான் என்று சித்தாந்தம் கூறுகின்றது. அதனாலன்றோ சித்தாந்தச் செந்நெறி இறைவனை எட்டுருவினன் என்று உணர்த்துகிறது. நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் இவற்றொடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றான். இதனை மாணிக்கவாசகர்,

நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகேழ் எனத்திசை பத்துஎனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

(திருவாசகம் திருத்தோணோக்கம். 5)
என்பார். சித்தாந்தச் செந்நெறி உணர்த்தும் கடவுள், சிவம். சிவம் என்பது வள்ளுவம் கூறிய கடவுள் வாழ்த்தில் உள்ளபடி,

“தனக்குவமை” இல்லாதவன் “எண்குணத்தான்”.

எண்குணத்தான் என்பது,

தன்வயத்தனாதல், தூயஉடம்பினனாதல், இயற்கை
உணர்வினனாதல், முற்றும் உணர்தல்,
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை,
முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை

எனும் எண் குணங்களுடையவன் என்பதாகும்.

கடவுள் உண்மையை விளக்கப் புகும் மெய்கண்டார், “அவன், அவள், அது” என்ற நூற்பாவில், முத்தொழிற்படுதலால் இறைவன் உண்டு என்பதும், எந்த ஒன்று தொழிற் பட்டாலும், தொழிற்படுத்தும் ஒருவரை அவாவி நிற்கும் என்பதும் நியதி என்பதைச் சுட்டுகிறார். இந்நூல் வழி, சித்தாந்த சைவம், கடவுளை நம்புகின்ற சமய வரிசையில் நிற்கிறது.

அடுத்து சித்தாந்த சமயம் கடவுளுக்குச் சொல்லும் சிறப்பு அவன் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை என்பது. சித்தாந்திகள் கடவுளின் அவதாரங்களுக்குக் கூட உடன் படுவதில்லை. இதனைத் திருவாசகம்,

தாயுமிலி தந்தையிலி தான் தனியன்

(திருச்சாழல்-3:2)
என்று பாராட்டும். சித்தாந்திகள் கொள்கைப்படி உலகிற்குத் தலைவன் கடவுள். ஆனால் செயற்கையாலன்று. இயற்கையின் வழி, நிறை நலம் நோக்க அவாவுதலின் காரணமாகச் சித்தாந்தச் செந்நெறியில் உயிர்களுக்குத் தலைவன் கடவுள். அவன் ஆண்டானும் கூட அங்ஙனம் அவன் தலைவனும் ஆண்டவனும் ஆதல் கூட உயிர்கள் விரும்பி ஆட்படுவதற்காகவே தவிர, நிர்ப்பந்தமாக அடிமை கொள்வதற்காக அல்ல. இதனை மாணிக்கவாசகர்,

ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே

(திருச்சதகம். 82)

என்பார். சித்தாந்தச் செந்நெறிகளின்படி கடவுள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுவோன் அல்லன். ஆதலால் விருப்பு வெறுப்புகள் மிகுதியும் உடைய உலகியல் நிகழ்வுகள், உயிர்களின் நிகழ்வே தவிர கடவுளின் நிகழ்வுகள் அல்ல. அந்நிகழ்வுகள் அவனுக்குத் தெரியாதனவுமல்ல. சித்தாந்தச் செந்நெறியின் கடவுளாகிய சிவம் அறிவுருத்தன்மையது. சிவமாகிய அறிவுருவுக்குத் தொழிற்பாடு இல்லை. சிவம் தம்மையொத்த தமது எல்லைக்குள் அடங்கிய சக்தியின் மூலம் உலகைத் தொழிற்படுத்துகிறது. சிவம் அறிவுருச் சக்தி இயக்கம். இத்தத்துவத்தின் படிமுறை வளர்ச்சியில் தோன்றி யதே அம்மையப்பன் வழிபாடு. இதனைத் திருக்களிற்றுப் படியார்,

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பார்-அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்
(திருக்களிற்றுப்படியார் 1)

என்று கூறுவது அறிக. சிவம் சக்தியை, பண்பு-பண்பியாகச் சிலர் விளக்கம் கூறிக் குழப்புவர். அஃது உண்மையன்று. சிவமும் சக்தியும் இரு வேறு பொருள். ஆனால், சக்தி சிவத்தின் குறிப்பின் வழி இயங்கும் தன்மையது. அம்மையப்பர் இரு வேறு நிலையினர் என்பதை உணர்த்தத்தான் போலும், திருவாசகம்,

குவளைக் கண்ணிக் கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க

(திருவண்டப்பகுதி 64,65)
என்றும், திருஞானசம்பந்தர்,

பெண்ணின் நல்லா ளொடும் பெருந்தகை இருந்ததே!
(அடங்கன்முறை 3052)

என்றும் உணர்த்துவது அறிக. ஆனால், அம்மையும் அப்பனும் ஒருங்கிணைந்து உலகியல் தன்மை நோக்கி நிற்றலால் இருவராகக் கூறாமல், ஒருவராகவே போற்றும் தமிழ் மரபு தோன்றியது. இதனைக் குமரகுருபரர்,

ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருஒன் றால்அவ்
உருவையிஃது ஒருத்தன் என்கோ? ஒருத்தி என்கோ?
இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றுஓர்
இயற்சொல்இல தெனின்யான்மற் றென்சொல் கேனே
(சிதம்பரச் செய்யுட்கோவை-54)

என்கிறார்.

சித்தாந்தச் செந்நெறியில் இரண்டாவதாக வைத்தெண்ணப்படும் பொருள் உயிர் உயிரைப் பற்றிச் சித்தாந்தச் செந்நெறி கொண்டிருக்கும் கொள்கை, உலகியல் அமைப்பில் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குத் துணையாக அமைகிறது. சித்தாந்தத்தின் அடிப்படையில் உயிர், என்றும் உள்பொருள். உயிர் யாராலும் படைக்கப்பட்டதன்று. உயிர்க்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை என்பன சைவ சித்தாந்தம் கொண்டுள்ள முடிவுகள். சித்தாந்தம் உயிரைப் பற்றிக் கொண்டுள்ள இம்முடிவினால் உயிர்களிடை நிலவும் குறை நிறைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும், உயர்வு தாழ்வுகளுக்கும் கடவுள் பொறுப்பல்ல என்ற தெளிவு பிறக்கிறது. இத்தெளிவு மார்க்சியத்திற்கும் சித்தாந்தத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கிறது. மார்க்சியம் அல்லது மார்க்சியத்திற்கு முதல் நிலையிலிருந்த உலகாயதம், உயிரை உள்பொருளாக ஒத்துக்கொள்வதில்லை. “வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றையும் கலந்தால் ஒரு சிவப்பு தோன்றுவதைப் போல ஐம்பூதங்களின் கூட்டால் உடல் உற்பத்தியாகும் போது ஒரு சக்தி தோன்றுகிறது; உடலை இயக்கி உடல் அழியும் போது அச்சக்தியும் அழிந்து விடுகிறது” என்பது கருத்து.

இந்த உண்மையைக் கொஞ்சம் சிந்தித்தாலேகூடத் தவறு என உணர முடியும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சடப்பொருள்கள். இவை எப்படிச் சேரும்? சேர்ப்பார் வேண்டாமா? அடுத்து வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு சேர்ந்தால் ஒரே மாதிரியான சிவப்பு தோன்றுவதில்லை. தரத்தில், அளவில் கூடுதல் குறைவான சிவப்பு தோன்றுதல் உண்டு. இந்தச் சேர்க்கை அளவாக இருக்கும் பொழுது இன்பமும், அளவு மிகும் பொழுது வாய் வெந்து புண்ணாவதும் உண்டு. ஆதலால், இந்த உவமை உயிரின்மையை மறுப்பதற்குப் பொருந்தாது! அடுத்து உயிரை மறுப்பவர்கள் புத்தர்கள். அவர்களுக்கு எல்லாமே சூன்ய மயம். சூன்யத்திலிருந்து எப்படி ஒன்று தோன்ற முடியும்; இயங்க முடியும். அடுத்து உயிரைப் பற்றிய கொள்கையில் இரண்டாம் கட்டத்தில் நிற்பார்கள் வேதாந்திகள். வேதாந்திகளிலும் ஏகான்மவாதிகள் குறிப்பிடத்தக்கவர்கள். உலகியல் வழக்கில் இவர்கள் “சுமார்த்தர்” என்று அழைக்கப்படுவர். இன்றைய ஜகத் இவ்வகையைச் சேர்ந்ததே! இவர்கள் ஆன்மாவை மறுப்பதில்லை. ஆன்மா ஒன்றே என்பர். சித்தாந்திகளின் கொள்கை ஆன்மா ஒன்றல்ல; பலப்பல; எண்ணில என்பது.

வேதாந்திகள், “ஒரோயொரு ஆன்மா உண்டு. அது பரமான்மா. அந்தப் பரமான்மாவே பல சீவான்மாக்களாக விரிவடைகிறது” என்பர். இவையெல்லாவற்றையும் மறுத்துச் சித்தாந்தச் செந்நெறி உயிரைப் பற்றிக் கொண்டுள்ள முடிவு அறிவுக் கிசைந்ததாக உள்ளது. சித்தாந்தச் செந்நெறிப்படி ஆன்மா என்றும் உள்ள பொருள். ஆன்மா ஒன்றல்ல. பலப் பல; ஆன்மாக்களின் தோற்றம் ஒன்றிலிருந்து ஒன்றல்ல. ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவில் தோற்றமளிக்காது. எல்லோருடலிலுமுள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உண்மையானது. இதனை,

எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவைஅவரா யதனால்
அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும்நற் பசுவருக்கம் எனஉரைப்பர் உணர்ந்தோர்.

(சிவப்பிரகாசம். 19)

என்ற சிவப்பிரகாசத் திருப்பாடலில் அறிக.

உயிர் அறிவுப்பொருள்; ஆயினும் உயிர்க்கு இயல்பாய் அமைந்த ஆணவ அழுக்கின் காரணமாக அறிவு விளக்க முறாது அறியாமையில் கட்டுண்டு கிடக்கிறது. உயிர் உண்டு என்று உடன்படுபவர்கூட, உயிரின் இலக்கணத்தை நிர்ணயிப்பதில் மாறுபடுகின்றார். சிலர், “உடலே உயிர்” என்கின்றனர். சிலர் “மனமே உயிர்” என்கின்றனர். “உயிர் ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்றும் சிலர் கூறுவர். சிவஞான போதம் இதனை, இரண்டு வார்த்தைகளில் மறுத்து விடை சொல்கிறது. ஒன்றை இல்லையென்று மறுக்க வேண்டியே அவசியமே உண்மையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது என்பது மெய்கண்டார் கருத்து.

“இலதென்றலின் உளது” (நூற்பா 3) என்பது சிவஞான போத மறுப்புரை. ஆன்மா இல்லையென முடிவு பண்ணும் அறிவு எதுவோ, அதுவே ஆன்மா என்று, சூன்யவாதிகள் கூற்றை நகைப்புக்கிடமாக்கி மறுக்கிறார் மெய்கண்டார். இது ஃபிரெஞ்சு தேசத்துத் தத்துவ ஞானி “டெகார்டே” ஆராய்ந்த முறையோடு ஒத்திருக்கிறது. டெகார்டேக்கு ஒரு நாள் ஒரு சந்தேகம் பிறந்தது. தானும், தான் காணும் பொருள்களும் பொய்யாய் இருக்கலாமோ என்பதுதான் அந்தச் சந்தேகம். அவன் அறிஞன் ஆனதால் சந்தேகத்தையே முடிவுகளாக்கிக் கொள்ளவில்லை. சந்தேகம் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. அவனுடைய நீண்ட ஆராய்ச்சியின் பயனாக,

“யாவுமே பொய்யான போதும் அவையாவும்
பொய்யெனச் சந்தேகிப்பவன் உண்மையாய்
இருத்தல் வேண்டும்”

என்றான். உடலே உயிர் என்ற கொள்கையையும் எளிதில் சொல்வழக்கில் கொண்டே சித்தாந்த சாத்திரம் மறுக்கும்.

“எனதுடல் என்றவின்”.

(நூற்பா 3)

என்பது சிவஞானபோதம், ‘எனது உடல்' என்பது வழக்கு. ஆன்மாக்கள், ஆண்டவனால் படைக்கப்பட்டன என்ற கொள்கை மிகவும் ஆபத்தானது. படைக்கப்பட்டன என்றால் அவற்றுக்கு நிலையான தன்மையில்லை; அவை அழியும் என்றாகும். அதுபோலவே படைக்கப்பட்டன என்றால் படைக்கப்பட்டன வற்றிற்கென்று தனியே அறிவும் குணமும் செயலும் இருத்தற்கில்லை.

படைப்பாளியின் அறிவும் குணங்களுமே படைக்கப் பட்டனவற்றின் அறிவும், குணமுமாக இருக்கும். ஆன்மா இறைவனால் படைக்கப்ப்டடது என்றால் ஏன் படைத்தான்? என்ற வினாவும் எழும். அடுத்து, ஆன்மாக்கள் பெறும் உடல்களில் உள்ள குறை நிறைகள். அறிவில் பெறும் தராதரங்கள் இவைகளை நோக்க ஏன் இப்படி வேறுபாடுகளோடு படைக்கிறான்? என்ற வினாவும், பின்னணியாக இறைவன், வெறுப்பு-விருப்புகளுடையான் என்ற முடிவுகளும் தோன்றும். இத்தகைய முடிவு சமய நெறியின் அடித்தளத்தையே அசைத்து விடும். இந்த இடர்ப்பாட்டைக் கருதித்தான் சித்தாந்தச் சமயம், ஆன்மாக்கள் படைக்கப்பட்டன அல்ல என்ற தெளிவான முடிவை எடுத்து உள்ளது. ஆன்மாக்களிடையில் ஏற்பட்டுள்ள குறை நிறைகளுக்கு அவ்வான்மாக்களை இயல்பாகவே பற்றி நிற்கும் ஆணவமும், அவ்வழி செயற்பட்ட ஆன்மாவின் செயல்களுமே காரணம். ஆன்மா என்பது முன்னர்க் கூறியது போல என்றும் உள்ளது; எங்கும் பரவியது. அறிவுடையது. இந்த ஆன்மாவை இயல்பாகவே ஆணவம் என்னும் அழுக்குப் பற்றி நிற்கிறது. இதற்கு மெய்கண்ட சாத்திரம் காட்டும் உவமை “செம்பிற் களிம்பு போல, நெல்லிற்கு உமி போல” என்பனவாகும். இதனை,

அல்லல்மிக உயிர்க்கிவைதான் அணைத்த தீசன்
அருவினைகள் அருந்துதற்கோ வினையோ அன்றிச்
சொல்லிவரு மாயையோ அணுவை முந்தச்
சூழ்ந்ததெனும் உரைமுதலோர் தொடக்கி லார்பால்
ஒல்லைவரு மெனின் உளதாம் உயிருண்டாவே
உளதுமலம் மலமுளதாய் ஒழிந்த வெல்லாம்
நெல்லின்முளை தவிடுமிபோல் அநாதியாக
நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்து மாறே

(சிவப்பிரகாசம் 25)

என்று சிவப்பிரகாசம் கூறுகின்றது. ஆணவம், மாயை, கன்மம் ஆகியவற்றில் முளையைப் போன்றது எது? தவிட்டைப் போன்றது எது? உமியைப் போன்றது எது? என அறிந்தால் மேலும் விளக்கமுறும் முளையைப் போன்றது கன்மம்; தவிட்டைப் போன்றது மாயை, உமியைப் போன்றது ஆணவம், அரிசிதான் ஆன்மாவுக்கு உவமையாகிறது. நெல்லில் உள்ள முளைத்தல் சக்தி முளையைத் தோற்றுவித்தல்போல கன்ம மலம் உயிரினிடத்துச் சுக, துக்கங்களை முதற்காரணமாய் நின்று தோற்றுவிக்கும். தவிடு, முளைத்தற்கு அனுகூலம் செய்து துணை நிற்றல் போல மாயாமலம் சுகதுக்கம் தோன்றுதற்குத் துணைக் காரணமாய் அமைந்து, தன் காரியமாகிய கருவிகளையும் துய்ப்பனவுமாகிய பொருள்களையும் தோற்றுவித்து உயிரையும் அசைத்து நிற்கும். உமி, அம்முளை தோன்றுதற்கு நிமித்த காரணமாக இருத்தல் போல ஆணவ மலம் அச் சுக, துக்கத் தோற்றத்திற்கு நிமித்த காரணமாய் நின்று அவற்றை முறுகுவித்து உயிர் நுகருமாறு நிலை பெறுத்தும். ஆன்மாவின் சுக துக்கங்களுக்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் முதல், துணை, நிமித்தங்களாக அமைந்தன.

ஆணவம், மாயை இவற்றுக்கு விளக்கம் கிடைத்தது. கன்மம் என்றால் என்ன? கன்மம் என்ற சொல்லும் கர்மம் என்ற சொல்லும் ஒரு பொருட்சொற்கள். அதாவது வினை அல்லது செயல் என்பது பொருள். தத்துவ ஞான உலகம் செயலைப் பற்றிய துண்பொருள்களை விளக்குகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் உண்டு; பலனும் உண்டு. அப்பலனை அனுபவித்தலும் ஒரு செயலாகும். செயல் மட்டுமின்றி செயல் செய்தற்கு முதல் நிலையாக இருக்கிற எண்ணம், செயலோடு தொடர்புடையதாக இருக்கிற சொல் ஆகியவையும் கன்மத்துள் அடங்கும். செய்யப் பெறும் செயல்களுக்குப் பலன் உண்டு. அச் செயல்களைச் செய்தவர்களையே அப்பலன்கள் சாரும். அச்செயல்களைச் செய்தாருக்கு அவ்வனுபவங்கள் உரிமையுடையன. அவை இன்பமாயினும், துன்பமாயினும், அவர்கள் அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இதனைத் தருமைக் குரு ஞானசம்பந்தர்,

ஊட்டும் வினையிருந்தால் உன்னாணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும்-கேட்டுத்
திரியாதே வந்துதில்லைத் தெய்வமே என்றென்(று)
எரியாதே; நெஞ்சே இரு

என்றருளினார். இப்பயன்களில் சில, உடனே துய்ப்புக்கு வரும்; சில காலங்கடந்து வரும். ஏன்? காலங் கடந்து வருவானேன்? என்று சிலர் கேட்பர். உயிர்களின் துய்ப்பின் தகுதியைப் பொறுத்துக் கால நியதியின்கண் முறைப்படுத்தப் பெறுவதால் முன் பின்னாக வருகிறது! இப்பிறப்பில் தீமையே செய்வார் இன்புறுதலும், நன்மையே செய்வார் துன்புறுதலும் உடன் நிகழ்வுகளின் விளைவுகளன்று; இதனைப் பட்டினத்தார்,

என்செய லாவதி யாதொன்று மில்லை இனித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே.

(திருப்பாடற்றிரட்டு - 22)

என்று குறிப்பிடுவார்.

வினை வழிப்பட்ட இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்காகவே உயிர்களுக்குக் கறங்கு போலப் பிறப்பும் இறப்பும் சுழன்று வருகின்றன. இங்ஙனம் கன்மம் காரணமாகப் பிறப்பும், பிறப்பின் காரணமாகக் கன்மமும் மாறி மாறி சங்கிலித் தொடர் போல வரும். அப்படியானால் உயிர்களின் முதற் பிறப்பும் கன்மத்தின்பாற் பட்டதுதானா? இல்லை, முதற் பிறப்பு அருட்கொடை. ஆனால், அப்பிறப்பில் உயிர் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகியதால் அவ்விருப்பு வெறுப்பு, கன்மமாகி மறுபடியும் பிறப்பு ஏற்படுகிறது. உயிரின் இயற்கை துய்த்தல், செயற்படுதலும், துய்த்தலும் கன்மமாகி விடுவதில்லை. செயலைச் செய்யும்பொழுது, எண்ணத்தில் ஏற்படும் விகாரமும், துய்க்கும் பொழுது ஏற்படும் விகார உணர்ச்சிகளும்தான் கன்மமாகின்றன.

எச்செயலைச் செய்யும் பொழுதும் திருவருள் சிந்தனையோடு செய்தல் மூலம், துய்க்கும் பொழுது ஆசையும் விகாரமுமின்றிக் கடப்பாடு என்று கருதித் துய்த்தால் கன்மம் சேராது; என்றும் வாழ்க்கைக் கணக்கு நேராக இருக்கும். சுந்தரர் வாழ்க்கை இத்தகையது. செய்யப் பெறும் கன்மங்களை-வினைகளைச் சித்தாந்தம் மூவகைப்படுத்தும்.

பழவினை (சஞ்சிதம்), நிகழ்வினை அல்லது துய்ப்பு வினை (பிராப்தம்), எதிர்வினை அல்லது வருவினை (ஆகாமியம்) என்பன அவை. பழவினை என்பது உயிர்களால் துய்க்கப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை. துய்ப்புவினை அல்லது ஊழ்வினை என்பது இப்பிறப்பில் துய்ப்பதற்குரியது. இப்பிறப்பில் வினைகளைத் துய்க்கும் பொழுது விருப்பு வெறுப்புகளால் அலைக்கப்பட்டுத் தோன்றுவது எதிர்வினை (ஆகாமியம்).

வினையின் பயனை அனுபவித்தலும் முயற்சியும் முரண்பாடுடையனவல்ல. திருவருள் சிந்தனையோடு கூடிய முயற்சியின் முன்னால் வினைவலி நிற்காது. வினை வலிது என்று நினைந்து வாளாத் துன்புறுதல் நியதியன்று. அங்ஙனம் துன்புறும் பொழுது, மீண்டும் உயிர் வினைகளுக்கு ஆளாகும். ஆதலால், வினைவலியறிந்து, திருவருள் துணைகொண்டு அயர்விலா முயற்சிகளில் ஈடபட்டுப் பணிகளைப் பாங்குடன் செய்து, பயன்களைப் பற்றின்றி இறைவனையே அடைக்கலமாகக் கருதி வாழ்தல் வினை நீக்கத்திற்கு உரிய எளிய வழி.

தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே

(அடங்கன்முறை - 5420)

என்பதை அறிக.

இந்த ஆணவ மலத்தால் ஆன்மா கட்டுண்டு கிடப்பதனாலேயே பசு என்று பெயர் பெற்றது என்பர். ஆணவம், ஆன்மாவின் விரிவை, அறிவைக் கெடுத்து அறியாமையில் ஆழ்த்தும். இங்கு அறியாமை என்பது யாதொன்றையும் அறியாமலிருப்பதன்று. யாதொன்றையும் அறியாதிருத்தல் உயிரின் இயல்பன்று. ஒன்றைப் பிறிதொன்றாகப் பிறழ உணர்தலையே “அறியாமை” என்று சித்தாந்த சாத்திரம் உணர்த்துகிறது. ஒன்றைப் பிறிதொன்றாகப் பிறழ உணர்வதற்குக் காரணம், ஆணவத்தின் தொழிற்பாடே! ஆன்மா, என்றும் உளதாயினும், நிலையானதாயினும் அதனியல்பு ஏதாவதொன்றைச் சார்ந்து நிற்பது. ஆன்மா சார்ந்திருக்கக் கூடிய சார்புகள் இரண்டு. முதல் சார்பு இயல்பாயமைந்த ஆணவச் சார்பு. இரண்டாவது சார்பு, ஆன்மா மாயை வழி கிடைத்த கருவிகளைத் துணையாகக் கொண்டு ஆணவத்தின் இயல்பறிந்து அதன்வழிச் செல்லாமல் சிவசக்தியின் வழிச் சென்று இன்ப துன்ப உணர்வுகளைக் கடந்து சிவமாம் தன்மையைச் சார்தல். இதுவே உயிரின் இலட்சியம்-அதன் வாழ்க்கைப் பயணம். இந்தப் பயணம் இனிதே நிறை வேறினால் ஆன்மா இன்ப அன்பில் நிலைத்து நிற்கும்.

................. மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்து
ஏயும்அதே நிட்டையென் றான்எழிற் கச்சி ஏகம்பனே

(பட்டினத்தார். திருஏகம்பமாலை - 10)

என்பதை ஓர்க.

திருவள்ளுவர். இந்தச் சிறந்த சித்தாந்தக் கருத்தை இரண்டு குறள்கள் மூலம் விளக்குகிறார்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

(குறள்.359)


நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

(குறள். 452)

என்ற திருக்குறள்கள் ஒப்பு நோக்கத்தக்கன. ஆன்மா, இந்த இலட்சியப் பயணத்தில் அடையும் அவத்தை நிலைகள் மூன்று. மூன்று அவத்தைகளில் முதலாவது அவத்தை ஆணவ மலத்தோடு ஆன்மா கலந்திருத்தல், ஆணவத்தை இருள் என்றும், சிலர் உருவகம் செய்வர். வள்ளுவம் இருள் சேர் இருவினை என்று கூறும் ஆணவம் இருளோடு ஒத்திருப்பினும், இருளைவிட ஆணவம் கொடியது.

இருள் தன்னிடத்திலுள்ள பொருளை மறைக்கும்; தன்னை மறைக்காது. ஆனால் ஆணவம் தன் செயலையும் மறைக்கும்; தன்னையும் மறைத்துக் கொள்ளும். இருளில் கிடக்கும் ஒரு பொருள் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். ஆனால் அப்பொருளை மறைத்திருக்கும் இருள் நமக்குத் தெரியவே செய்கிறது. ஆதலால் இருள் தன்னை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டும் ஆணவம் தன்னைக் காட்டாமலே மறைத்து நின்றும் தொழிற்படுகின்றன. அதனாலேயே நம்மில் பலர் ஆணவம் இன்னதெனத் தெரிந்து கொள்ளாமலே ஆணவ மயமாகி நிற்கின்றோம். ஆணவமே நமது குறைக்கு, அறியாமைக்குக் காரணம் என்று நாம் உணர்வதில்லை. ஆணவ மயக்கில் கிடக்கும் உயிர், விருப்பார்வங்களைக் கொள்வதில்லை, செயற்படுவதும் இல்லை. ஆன்மா தன் நிலையை இழந்து ஒடுங்கிக் கிடக்கும். இந்நிலை வரையில் ஆன்மா படும் அவத்தை கேவல அவத்தையாகும்.

ஆணவக் கூட்டின் பயனாக முடங்கிக் கிடந்த ஆன்மாவைக் கண்டு இரக்கப்பட்ட சிவம், ஆன்மாவை மூலையிலிருந்து முற்ற வெளிக்குக் கொண்டுவரத் திருவுள்ளம் பற்றியதாலேயே ஐந்தொழில் நிகழ்கிறது. சிவம், சக்தியின் மூலம் மாயையை இயக்கித் தொழிற்படுத்தி உயிர்கள் உடம்பையும், உலகையும் பெற உதவி செய்கின்றது. இஃது ஆன்மாவின் இரண்டாவது அவத்தை இந்த நிலையில் ஆன்மா மேலும் இரண்டு மலங்களோடு கூட்டுச் சேர்கிறது. அவ் இரண்டு மலங்களாவன: கன்மம், மாயை என்பன.

ஆன்மா உறையும் உடல், உலகம் ஆகியவற்றின் தோற்றத்திற்கும் ஒழுக்கத்திற்கும் மூலகாரணம் மாயை. ஆன்மா உடலோடு சேர்ந்த பின்தான் ஆன்மாவின் அறிவு, இயக்கம் பெறுகிறது. அறிவு இயக்கத்திற்குத் துணை செய்யும் மாயையை ஏன் மலம் என்று கூற வேண்டும்? மாயையிலிருந்துதான் உடலையும், உடற் கருவிகளாகிய அறி கருவிகளையும், செயற் கருவிகளையும் புலன்களையும் உயிர் பெறுகிறது; அவைகளின் மூலம் அறிவைப் பெறுகிறது. ஆனாலும் அந்த அறிவு, நிறை நலம் சான்றதன்று. ஆனாலும் அறிவு, இயக்கத்திற்குத் துணையாக இருப்பதால் அதை, (மாயையை) விளக்கு என்று உபசரித்தலும் சைவ சித்தாந்தத்தில் உண்டு. மாயை யென்பது ஒரு நுண்பொருள்; சடப் பொருள். மாயையைச் சிவசக்தி இயக்குவதால் உலகம் தோன்றுகிறது. கண் முதலியன ஞானேந்திரியங்கள்-அறிவுக் கருவிகளும் மனம், புத்தி முதலிய அகக் கருவிகளும், மாயையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆயினும் மாயை ஒன்றே. அது நிலையானது; வடிவமற்றது. உலகம் தோன்றும் வித்தும் மாயையே. அந்த மாயை அறிவற்றது; இயங்காப் பொருள்; எங்கும் பரந்திருப்பது, இறைவனுடைய தொழிலுக்குத் துணை நிற்பது. ஆயினும் உயிர்களை மயக்கவும் செய்யும்; இது மாயையின் இலக்கணம். சிலர் கூறுவது போல் மாயை இல் பொருளோ, பொய்த் தோற்றமோ அல்ல. மாயையின் இலக்கணத்தை,

நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யுமன்றே

(சித்தியார் - 143)

என்று சிவஞான சித்தியார் விளக்கும்.

மாயை பொய்மையாக இருக்குமானால் உலகம் தோன்றாது; ஆதலால் மாயையின் இருப்பு உணரப்படுகிறது இவ்வுலகத் தோற்றத்திற்கு மாயை முதற்காரணம்; இறைவன் நிமித்த காரணம்; அதனுடைய சக்தி துணைக்காரணம். சடப்பொருளாகிய மாயையை இறைவன் தனது அருட் சக்தியால் இயக்கக் கருவிகள், துய்ப்புப் பொருள்கள், தூய்மை வாயில்கள், தத்துவங்கள், அறிவு வாயில்கள் அனைத்தும் தோன்றி, அனைத்தையும் ஆன்மா அடைந்து வாழ்ந்து, வளர்ந்து எல்லையிலா இன்பநிலையை எய்துகிறது.

இம் மலங்களின் கூட்டு, ஆன்மாவின் துய்மைக்குத் துணை செய்வனவாகும். “அழுக்கு உடையை வெளுக்க உவர் மண்ணைச் சேர்க்கும் கூட்டைப் போன்றது இது” என்று சித்தாந்தம் கூறும். இந்நிலையைச் சகலாவத்தை என்று சாத்திரம் கூறும். இச் சகலாவத்தை நிலையே மானிட நிலை. உயிர்கள் சகலாவத்தையிலிருந்து கேவலாவத்தைக்கும் கூட மாறிச் செல்வதுமுண்டு. இங்ஙனம் மாறுவதெல்லாம் உயிர் இளைப்பாறுதல் பொருட்டேயாம். கேவலாவத்தையில் ஆன்மாவுக்கு அறிவு கிடையாது. சகலாவத்தையில் தனு, கரணங்களின் துணையினால் ஆன்மா, சிறிது அறிவு விளக்கம் பெறும். ஆனாலும் ஆன்மாவின் அறிவு நிறைதல் அறிவன்று. சகலாவத்தையில் ஆன்மாவின் அறிவு, நிலையற்ற பொருள்களை மட்டுமே அறிய முடியும். ஆதலால் இஃது அறிவன்று. இஃதொரு மயக்கநிலை! நிலையற்றனவற்றை நிலையாயின போலவும், துன்பங்களை இன்பம் போலவும், கருதி மயங்கி நிற்கும் நிலை. முன்னைய கேவலாவத்தை இருள்நிலை; இரண்டாவதாகிய சகலாவத்தை மருள்நிலை. அதாவது மயக்க நிலை. அறியாமையையும், அரைகுறை அறிவையும் நீங்கி, ஆன்மா நிறைநல அறிவைப் பெற வேண்டும். அந்நிலையை அடைய இறைவன் அருள் வேண்டும். இறைவன் அருள் பெறும் நிலையே அருள்நிலை. அல்லது சுத்தாவத்தை நிலை! ஆன்மாக்கள் இந்த மூன்று அவத்தை நிலைகளையும் அடையும் நடைமுறைக்கும் இறைவனின் ஐந்தொழில்களுக்கும், தொடர்பு உண்டு. இறைவனது அழித்தல் தொழிலால் ஆன்மா கேவலாவத்தை நிலையை அடைகின்றது. படைத்தல், காத்தல், மறைத்தல் ஆகிய முத்தொழில்களின் வழி, ஆன்மா சகலாவத்தைக்கு ஆளாகின்றது. ஐந்தாவது தொழிலாகிய அருளல் சுத்தாவத்தை நிலையை அடைவதற்குத் துணையாய் அமைகிறது. இங்குப் படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல் என்ற சொல்வழக்குகள் உணர்த்தும் பொருள் வேறு. இங்குப் படைத்தல் என்பது உயிர்களை, கன்மங்களைப் படைப்பதன்று. ஆன்மாக்கள் கருவி கரணங்கள் பெறத் துணைசெய்தலே படைத்தல். அங்ஙனமே காத்தல் என்பது அக்கருவி கரணங்களோடு ஆன்மா இசைந்து நின்று துய்க்குமாறு செய்தலேயாம். மறைத்தல் என்பது ஆன்மாவைப் பற்றி நிற்கும், கன்மத்தின் இயல்பினை மறைத்தல் என்பதேயாம். அழித்தல் என்பது ஆன்மாவிற்கு ஆணவக் கூட்டால் ஏற்பட்ட தீமையை அழித்தலேயாம். அருளல் என்பது ஆன்மாவின் ஆணவ ஆற்றலை ஒடுக்கி, அதனைச் சேட்டைகளினின்றும் விடுவிடுத்து, சிவத்தின் திருவருளில் தங்கச் செய்து, இன்ப அன்பினை ஆர்ந்து அனுபவிக்கச் செய்தலேயாகும். ஆன்மா, ஆணவத்தின் துன்பத் தொடக்கிலிருந்து விடுபட்டு இன்ப அன்பினை அடைய, சிவமே துணை நிற்கிறது. இந்தச் சிவத்தினைச் சாரும் வாழ்க்கை முறையே சைவ வாழ்க்கை.

இறைவனை, ஆன்மா அடைய, நான்கு நெறிகளைச் சைவம் காட்டுகிறது. அவை சரியை, கிரியை, ஞானம், யோகம் என்பன. இந்நான்கு நெறிகளின் வழி ஆன்மாக்கள் பத்திமையும், தொண்டும் மேற்கொண்டு வாழ்வதால் ஆன்மா உய்தி பெறுகிறது. இறைநெறியில் நின்று ஒழுகுதலால் செயல்களும் நிகழும்; செயல்களின் பயனும் உயிர்க்கு வாரா. இறை நெறி நின்று வாழ்பவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாக மாட்டார்கள். இன்ப துன்ப உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். இதனால் ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் உயர் நிலையை ஆன்மா அடையும். இந்நிலையை ஆன்மா எய்துதலே இருள் நீங்கப் போகிறது. அழுக்கு அகலப் போகிறது. அறிவும் ஒளியும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்கப் போகிறது என்பதன் அடையாளமாகும். இந்நிலையை “மலபரிபாகம்” என்று சாத்திரம் கூறும். ஆணவ மலமேயானாலும் அதை முரட்டுத் தனமாக அகற்ற முடியாது.

உடையைச் சார்ந்தது அழுக்கேயானாலும் அதையும் நனைத்து மெல்ல ஊற வைத்துத்தான் அகற்ற வேண்டும். நெல்லைச் சார்ந்துள்ள உமியை, நெல்லினின்றும் பிரித்து அரிசியைக் காண, நனைத்தலும், அவித்தலும் ஆகிய தொழில்கள் நிகழ்ந்து அரிசிக்கு ஊறு ஏற்படாவண்ணம் உமியை நீக்குவோம்.

உடைக்கு ஊறு நேராவண்ணம் நனைத்தலும், ஊற வைத்தலும் அழுக்கை நீக்கும். அதுபோல இறையின் கருணை ஆன்மாவுக்குத் துய்ப்பனவும், உய்ப்பனவும் நல்கி ஆணவத்திலிருந்து ஆன்மாவை எடுத்தாள்கிறது. இந்நிலையில் சிவத்தின் அருளாக நின்று தொழிற்படும் அருட்சக்தி ஆன்மாவிடத்தில் பதிகிறது. திருவருட்சக்தி பதிதலால் ஆன்மா ஞானத்தினைப் பெற்று அச்சக்தியின் வாயிலாக இறைவனைக் கண்டு மகிழ்கிறது. இறைவனும் எளிதில் வெளிப்பட்டு எடுத்தாள்வான்.

ஆன்மாவின் இலட்சியமாக இருப்பது வீடுபேறு. ஆணவத்திலிருந்தும், அவ்வழிப்பட்ட இன்ப துன்பங்களிலிருந்தும் விடுதலை தருவது வீடு. முத்தி நிலையை விளக்குவதிலும் சமயங்கள் மாறுபடும்; முத்தி நிலையில் இறைவனோடு ஆன்மா கலந்து மறைந்து போகிறது என்பார் சிலர். இது ஆன்மாவுக்கு அழிவில்லை என்ற கருத்தோடு மாறுபடும். அதுமட்டுமன்று. ஆன்மாவுக்கு இயல்பிலே அமைந்த உண்மையாகிய துய்ப்பு நிலையும் போகிறது. அதனால் ஏற்புடையதன்று. சித்தாந்த முத்தி என்பது நுட்பமானது. முத்தி நிலையிலும் ஆன்மாவும் உண்டு; சிவமும் உண்டு. அவை இரு வேறு பொருள்தாம்! ஆனால் ஆன்மா தன் தன்மையை இழந்து சிவமாம் தன்மையைச் சார்ந்து ஒன்று போலத் தோற்றமளிக்கிறது. எண்ணிக்கையால் இரண்டு. அனுபவத்தால் இரண்டு; தன்மையால் ஒன்று. முத்தி நிலையில் ஆன்மா அனுபவிக்கும் இன்பத்தை; மாணிக்க வாசகர்,

ஆனந்த வெள்ளத் தழுந்தும்ஓர் ஆருயிர் ஈருருக்கொண்(டு)
ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தால்ஒக்கும்; அம்பலம்சேர்
ஆனந்த வெள்ளத்து அறைகழ லோன்அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதுஇவ் அணிநலமே.

(திருக்கோவையார் - 307)

என்பர்.

மேலும் சித்தாந்த முத்தியினை இனிதே விளக்க தாள்+தலை என்னும் சொற்களின் புணர்ச்சி எடுத்துக் காட்டாகச் சித்தாந்த நூல் கூறும் தாள், என்கிற நிலை மொழியும் தலை என்கிற வருமொழியும் முதல் தகரமும் சேர்ந்து டகரமாகத் திரிந்து தாடலை என்று ஆகின்றது. “தாடலை” என்கிற இதனை, புணர்ந்து நிற்கும் நிலையில் இரு சொற்கள் என்று கொள்ளவும் முடியாது. ஒரு சொல் என்று கொள்ளவும் முடியாது. ஒரு நோக்கில் ஒரு சொல், பிறிதொரு நோக்கில் இரண்டு சொல். ஆன்மா கள்ணொளியோடு கூடி நின்று காணும் காட்சி போல ஆன்மா இறைவனோடு கலந்து நின்று துய்த்து மகிழ்கிறது.

இத்தகைய சிறந்த தவநெறி வாழ்க்கையை உயிர்கள் அடைய சிவமே உயிர்கள் மாட்டுக் கருணை கொண்டு குருவாக எழுந்தருளித் தீக்கைகள் செய்வித்து ஞானத்தை உணர்த்துகின்றது. சைவ சமய சித்தாந்தச் செந்நெறியில் வழிபடு பொருள்கள் மூன்று. முதலாவது குரு இரண்டாவது இலிங்கம்; மூன்றாவது அடியார் திருக்கூட்டம். இம்மூன்று வழிபாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. ஆசிரியன் உணர்த்தினாலன்றி உயிர் தன்னை அறியாது.

ஆதலால்தான், ஞானாசிரியன் மாணாக்கனுக்குச் சிவத்தினைக் கண்டு காட்டி வழிப்படுத்துகிறான். வழிபாட்டில் அகப்பூசை, புறப்பூசை என இரண்டு பூசை. அகப்பூசையே உயர்ந்தது. அப்பூசையின் அனுபவத்தை இடையீடின்றி அனுபவிக்கவும் பாதுகாத்துக் கொள்ளவும் துணை செய்வது புறப்பூசை. நாள்தோறும் இறைவனின் அருட்சின்னமாகிய சிவலிங்கத்தை வழிபடுதல் கடமை. சீவன் முத்தர்களாகிய சிவனடியார்களைத் தொழுதல்; அவர்களோடு இணைந்திருத்தல் முதலியன, பெற்ற சிவ ஞானத்தைப் பேணவும், பெருக வளர்த்துத் துய்க்கவும் துணை செய்யும். இதனைச் சிவஞான போதம்,


செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனப் படுமே
(நூற்பா - 12)

என்றருளிச் செய்துள்ளமை அறிக. இதே கருத்தை,

நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுள தோ
திருவேகம்பமாலை - 5

என்று பட்டினத்தார் விளக்குவதையும் அறிக. தருமைக் குரு ஞானசம்பந்தர்,

ஆசையறாய், பாசம்விடாய்; ஆனசிவபூசை பண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய்-சீச்சி
சினமே தவிராய்; திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்,

என்று அருளிச் செய்ததையும் அறிக.

இத்தகைய சிறந்த சித்தாந்தச் செந்நெறி நம்பிக்கைக் குரியது; நல்லெண்ணத்திற்குரியது; இம்மைக்கும் பயன் தருவது. மறுமைக்கும் பயன் தருவதாம்!

3. சைவ சித்தாந்தமும் சமுதாய
மேம்பாடும்

மானிட வாழ்க்கை விபத்துக்களால் வந்ததன்று. மானிட வாழ்க்கை திட்டமிடப் பெற்ற குறிக்கோளுடையது; உயர் நோக்கமுடையது. மானிட வாழ்க்கை உறுப்புக்களாலாய வாழ்க்கை மட்டுமன்று; உணர்வுகளாலாய வாழ்க்கையுமாகும்.

உணர்வுகள், ஒழுக்க நெறிகளாகி உறவுகளை வளர்த்து உறுதிப்படுத்த வேண்டும். உறவார்ந்த மானிட வாழ்க்கையில் நயத்தக்க நாகரிகம் இடம் பெறுதல் வேண்டும். பண்பாடு நிலைபெற்று நிலையிலா உலகத்திற்கு நிலையான தன்மை நல்க வேண்டும். மானிட வாழ்க்கை முழுமையடைவது சான்றாண்மையிலேயாம். சான்றாண்மையே வாழ்க்கையின் இலக்காகிய தூய இன்ப அன்பினில் திளைத்தலைத் தரும்.

இன்ப அன்பை அடைவதற்குரிய வாயிலே வாழ்க்கை. உடல், உயிர் உணர்வு ஆகிய அனைத்திற்கும் நற்பயன்கள் கிடைக்குமாறு செயல்கள் செய்து வாழ்வதே வாழ்க்கை இவற்றுள் ஒன்றிற்குப் பயன் கிடைத்து, ஒன்றிற்குப் பயன் கிடைக்காது போனாலும் வாழ்க்கை வாழ்க்கையன்று; குறையுடைய வாழ்க்கையால் பயன் இல்லை. உடலின் திறம் வளர்ந்து உணர்வுகள் சிறந்து உயிர் சிறப்புறு நலம் பெற வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல்.

மனித குலத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழி நடத்தவே சமயங்கள் தோன்றின; முயன்றன. இத்துறையில் சமய நெறிகள் வெற்றிகள் பெற்று வாழ்வித்த, வரலாறுகளும் உண்டு; தோல்விகளை அடைந்ததும் உண்டுச்மயநெறிகளின் தோல்வியால் மானிட சாதி அடைந்த துன்பங்கள் அளப்பில் பொதுவாக,

தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்

என்ற பாரதியின் வாக்கு, சமயநெறிக்கும் பொருந்தும்,

மானிட வாழ்க்கையை அணுகுவதில் உலகச் சமயங்களிடையில் மாறுபாடுகள் உண்டு. “உயிரினத்தைக் கடவுளே படைத்தான்” என்று கூறும் சமயங்கள் உள. உயிரினத்தைக் கடவுளே படைத்தான் என்ற இக்கொள்கை ஆபத்தானது; அறிவியல் அறிவுக்கு, ஈடுகொடுக்க இயலாதது. கடவுள், நிறைநலம் உடையவன், பரிபூரணன்.

இறைவனால் படைக்கப்பெற்ற உயிரினங்களில் குறை ஏன்? என்ற வினாவிற்கு விடை காண்பது கடினம். அடுத்து, உயிரினத்தைக் கடவுளே படைத்தான் என்றால் குறை நிறைகளுக்கு அவனே பொறுப்பு என்றாகும். இதனால் பொறுப்புணர்வற்ற, சமுதாயம் தோன்றும்; கொலைகளும், தீமைகளும்-குறும்புகளும் வளரும்.

சில சமயநெறிகள் வாழ்க்கையைத் துன்பச் சுமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நெறிகள் வாழ்க்கையில் துய்த்து மகிழ்தல் கூடாது; கடுத்துறவு நெறி நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இயற்கை யோடிசையாத இந்நெறிகளால் மறைவு ஒழுக்கமும், பொய்ம்மையும்தான் மிகுதியாகத் தோன்றின.

வாழ்க்கையைச் சைவ சித்தாந்தம் அணுகும் முறை அறிவுக்கு இசைந்தது; நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியது; நடைமுறைக்கு இசைந்தது. வாழ்க்கையை வாழ்த்தி வரவேற்பது சித்தாந்தச் செந்நெறி. சைவ சித்தாந்த வாழ்க்கை முறை இயற்கையோடிசைந்தது.

உயிரினத்தில் இயல்பு, தனித்து வாழ்வதன்று. கூடி வாழ்தலே இயற்கையிலமைந்த வாழ்க்கைமுறை. “Man is a Social Animal” என்பது வழக்கு. மானிடச் சாதி, அன்பில், உணர்வில் கூடிவாழும் கூட்டமைப்பே சமுதாயம். கூடும் அன்பினில் கூடாமல், வெறும் பயனற்ற கூட்டத் தொகுதிக்குச் சமுதாயம் என்று பெயர் பொருந்தாது.

தனி மனிதர்கள் மாமழையின் சிறு துளிகளைப் போல விளங்கித் துளிகள் பல சேர்ந்து பேராறாக விளங்குதல் போலச் சமுதாய அமைப்பு, பேராற்றலும் தண்ணளியும் உடையதாக அமைய வேண்டும். அலைகடலின் தண்ணீர்ப் பரப்பில் கோடானு கோடி தண்ணீர்த்துளிகள்! அத்துளிகளின் கூட்டமைப்பால் கடல்நீர்ப் பெருக்கம்.

ஆனால் அக்கடல் நீர்ப் பெருக்கத்திலிருந்து ஒரு துளி பிரிந்து கரையில் விழுந்தால், அது அடுத்த வினாடியே வற்றி மறைந்து போகிறது. மானிடச் சமுதாயம் கடல் நீரைப் போலக் கூடிவாழ்தலை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். வேற்றுமைகளுக் கிடையிலும் ஒருமை காண வேண்டும் ஒத்த உணர்வுகளைப் பெற்றுக் கூடித் தொழில் செய்ய வேண்டும். வையம் உண்ண உண்ண வேண்டும்; வையம் உடுத்த உடுத்த வேண்டும்.

சமுதாயத்தின் கூட்டு வாழ்க்கை ஒப்புரவு நெறியாக மலர்தல் வேண்டும். ஆக்க வழியில் சேர்ந்து, வாழ்ந்து, வரலாற்றுக்கு வளம் சேர்த்துச் சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்” என்ற உயர்கொள்கை, சமுதாய வாழ்க்கையின் உயிர் நிலையாகும்.

வாழ்க்கை அருமைப்பாடுடையது; பயன்பாடுடையது; சிறப்பினைத்தருவது; மனித வாழ்க்கையின் அனைத்துச் சிறப்புகளுக்கும் வாயிலா அமைவது. ஆனாலும் அது, இயல்பில் எந்தவொரு குணமும் இல்லாதது. மண்ணினைச் சேராத மாமழைத்துளிபோல, மனம், சாரும் பொருள்களுக்கேற்பவும், வாழும் சமுதாய அமைப்புக்கேற்பவும், கற்று அறியும் நூல்களுக்கு ஏற்பவும், கேட்டு அறியும் செய்திகளுக்கு ஏற்பவும், உற்று அறியும் உணர்வுகளுக்கு ஏற்பவும் சிறப்பை அல்லது சிறப்பின்மையை அடைகிறது.

மனம், உயிரை வளப்படுத்தும் தலைவாயில். மனத்தின் வாயிலாகத்தான் உயிர், சிறப்பினை அல்லது இழிவினை அடைகிறது. மனம் ஓயாது தொழிற்படும் இயல்பினது; உறக்கத்திற்கூட அது தொழிற்படும். அதன் தொழில் இயக்க விரைவுக்கு ஏற்றவாறு அதற்கு நன்னெறிகளை நற்பணிகளை வழங்காவிடில் அது சைத்தானாக மாறித் தொல்லை கொடுக்கும்.

மனத்தை நற்சிந்தனையில், நற்செயலில் பழக்கப்படுத்தி விட்டால் அதைவிடச் சிறந்த துணை வேறு இல்லை. மனத்தை நறுமணமிக்க மலர்ச் சோலையாகவும் ஆக்கலாம்; நரகமாகவும் ஆக்கலாம். இதற்கு ஆற்றலுடைய மனத்தை நெறிப்படுத்தி நினைப்பிக்கவே வழிபாட்டு முறைகள் தோன்றின.

நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமைப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே
(அடங்கன். 1908)

என்று வேண்டுகிறார் திருஞானசம்பந்தர்.

பேரறிவும் பேராற்றலும் உடைய இறைநெறியின் வழியில், வழிபடுதலே வழிபாடாகும் ஆனால் இன்று பலர், கடவுளுக்காக வழிபாடு என்று கருதுகின்றனர். உண்மை அதுவன்று. வழிபாடு, கடவுளை முன்னிலைப்படுத்திச் செய்யப் பெறுவதேயாம். ஆனால், பயன் கடவுளுக்கன்று.

கடவுள், வழிபாட்டை ஏற்றுக்கொண்டு வழிபாட்டின் பயன்களைக் கைம்மாறாகத் தருபவனும் அல்லன். வழிபாட்டு நெறிகளில் உயிர் நிற்றல் மூலம் அது பெறும் தகுதிகளே வழிபாட்டின் பயன்களாகின்றன. அத்தகுதிகள் அல்லது பயன்கள் தப்பாது வந்து சார்வதற்குத் துணை நிற்பது இறைவனின் நியதி.

மனம் அல்லது மனத்தின் செயற்பாட்டுக்குத் துணை நிற்கும் உறுப்புக்களாகிய சிந்தனை, புத்தி ஆகியன சிறந்த முறையில் தொழிற்பட, புலன்கள் துணை செய்கின்றன. உயிரைச் செழுமைப்படுத்தும் வாயில்கள் முறையே பொறிகள், புலன்கள், சித்தம், புத்தி, மனம் என்ற படிமுறையில் அமைந்துள்ளன. இவை தம்முள் ஒன்றுக் கொன்று முரண்படாமல் உயிரை நலப்படுத்தும் உயரிய நோக்கத்தொடு முரண்பாடின்றி நன்னெறியில் தொழிற்படும் பொழுது, உயிர் ஆக்கத்தினை எய்துகிறது; சிறப்புறுகிறது; இன்புறுகிறது. இவைகளுக்கிடையே ஒரோ வழி மாறுபாடுகள் ஏற்படும் பொழுது அவ்வாழ்க்கை குறையும் நிறையும் கலந்ததாக அமைந்து விடுகிறது. அங்ஙனம் நிகழாமல் தடுக்க ஒன்றினை ஒன்று உணர்த்திக் கொள்ளுதலும் உண்டு. அந்த உணர்வுகள் பயன்பட்டுத் திருத்தமுறுவதும் உண்டு; திருத்தமுறாமல் போவதும் உண்டு. இத்தகைய சிறந்த செயற் பாடுகளுக்குரிய வாழ்க்கை நெறியில் எப்பொழுதும் விழிப்புத் தேவை; நன்று எது? தீது ஏது? என்று பகுத்தாராய்ந்து எடுத்துக் கொள்ளும் பாங்கு தேவை.

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென் போர்க்கு இனனா கிலியர்

(புறம் - 29; 11-12)

என்பதறிக. உடலும் பொறிகளும் எப்பொழுதும் தற்சார்பு இயல்பின; சுகத்தை நாடும் இயல்பின; உயிர் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்கூடத் தொந்தரவு செய்வன. இவைகள் நன்மையைத் தீமையாகவும், தீமையை நன்மையாகவும்கூடக் காட்டும்; உணரச்செய்யும். அவைகளை யெல்லாம் நுண்ணிதின் ஆராய்ந்து தெளிந்து எவை உயிரின் நெடிய ஆக்கத்திற்குப் பயன்படுமோ அவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்துறையில் தெளிவு இல்லாது போனால் சிவத்தைக் காண்பது அரிது. தெளிவில்லாத வாழ்க்கையை அப்பரடிகள்,

“வளைத்துநின் றைவர்கள்வர் வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்துவைத் துலையை ஏற்றித் தழலெரி மடுத்தநீரில்
திளைத்துநின் றாடுநின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடுகின்றேன் என்செய்வான் தோன்றி னேனே”

(அடங்கன்முறை நாலாம்திரு. பா.4927)

என்று அருமையாக விளக்குகிறார். உடலின் இதமான சுகத்தைக் கருதிப் பின்விளைவை அறியாமல் ஆமை மகிழ்ந்தாடுவதைப் போலப் பிணியும், மூப்பும், பகையும் அழிவும் சேர்க்கும் நன்னெறி சாரா உலகியலைப் பயன் எனக் கொள்ளுதல் கூடாது. அப்படிக் கொண்டால் வெப்ப நிலை மாற்றத்தால்-கொதி நிலையால் அழியும் ஆமையைப் போல அழிவதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு அழிவது என்பது நீங்காத துன்பத்தில் அழுந்தி அல்லலுறுவதேயாம். சிறந்த தெளிவுமிக்க வாழ்க்கையில் சிவனைக் காணலாம். அதில் சிந்தையே சிவமாக விளங்கிக் காட்சியளிக்கும்.

சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி

என்று அப்பரடிகள் அருளியுள்ளமை அறிக.

உயிர், அறியும் தன்மையது; அறிவாகவே மாறி விளங்கும் தன்மையது. ஆதலால் உயிர் சிந்தனை, கற்றல், தெளிதல் ஆகிய செயல்முறைகள் வாயிலாக நன்னெறியில் நிற்றற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும். வாழ்க்கைக்குக் கற்றலும் கேட்டலும் இன்றியமையாதன. நாள்தோறும் முறையாகக் கற்றல், கேட்டல் செயல் முறைகளில் ஈடுபடுவோர், பெருமைகள் பல பெற்று விளங்குவர்; பெரியோர் ஆவர். இதனைத் திருநெறிய தமிழ்,

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் -
(அடங்கன்முறை முதல் திரு.2)

என்று கூறுவதால் அறியலாம்.

“இறைவனைப் பூசித்தல் மட்டும் பூசையன்று. பேரறிவைத் தந்து சிவத்தைக் காட்டிடும் ஞான நூல்களை ஓதுதலும் பூசனையோடொக்கும்” என்று சிவஞான சித்தியார் செப்பும்.

ஞான நூல்தனை ஓதல், ஓதுவித்தல்

நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா

ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்

இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
(சிவஞானசித்தியார் : எட்டாம் சூத்.23)

என்பது திருப்பாடல். இங்ஙனம் கற்றல், கேட்டல் உடையோராகி ஞானநூல்களை ஓதும் வேள்வியில் ஈடுபட்டால், பொறி, புலன்களின் முக்குணம் மாறும்; ஆற்றல்களைக் குவிக்கும்; புலால் உடம்பினோடேயே சிவமாம் தன்மையை அடையலாம்.

சீவிக்கின்ற பெத்தநிலையில் (இருள்மல நிலையில்) அதாவது அறியாமையில் பிழைப்பு நடத்தும் நிலையில் உயிர், அறிவும் நலனும் பெற்றுச் சிவமாம் தன்மையை எய்தி விளங்கலாம்; கொடிய துன்பங்களையும் வெற்றிபெறலாம்; இயற்கைகளை வென்று ஆட்சி செய்யலாம். சமய ஆசிரியர்கள் இத்தகைய அரிய செயல்களைச் செய்திருக் கின்றனர். அவர்கள் தம் பொறி, புலன்களைச் சிவத்தினைச் சார்ந்திருக்கச் செய்ததால்தான் அந்த ஆற்றல் கைவரப் பெற்றார்கள். தோற்ற அளவில் சீவாத்மாக்களின் தோற்றத்திற்கும்-சிவஞானிகளின் தோற்றத்திற்கும் யாதொரு வேறு பாடும் தெரியாது. ஆனால் தன்மை வேறுபாடு உண்டு. இதனை,

பாலை, நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்,
காலனையன் றேவிக் கராங்கொண்ட-பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்பேர்ல் அல்லாமை காண்,
(திருக்களிற்றுப்படியார் - 12)

என்ற திருப்பாடலால் அறியலாம். ஆதலால் சமயம் சார்ந்த வாழ்க்கை முறையில் கற்றலும் கேட்டலும் முதற் கடமை.

உயிர்க் குலத்தை, ஊற்றாகி நின்று வளர்க்கும் ஆற்றலுடையது அன்பு; உயிர்க் குலத்தையும், விண்ணையும் மண்ணையும், இறைவனையும், உயிர்த் தொகுதியையும் இணைப்பது அன்பேயாம். அன்பு, ஆற்றல் மிக்கது; தூய்மையானது; தற்சார்பற்றது; தன்னலம் துறப்பது; பிறர்நலம் கருதுவது; பேணுவது. பிறர் நலம் கருதி- துன்பங் களையும், துயர்களையும் தாங்கிக் கொள்வது; தியாகங்களைச் செய்யத் தூண்டுவது. இந்த அன்பைத் துய்த்துத் துய்த்து மகிழ்வதன் மூலம் உயிர்க்குலம் தழைத்து வளர்கிறது. அதனாலன்றோ திருமந்திரம் “அன்பே சிவம்” என்று கூறியது. சிவமாகிய பரம்பொருளுக்கு உயிர்க் குலத்தின் அன்புதான் பொருள். இதனைத் திருநாவுக்கரசர்,

அன்பலால் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(அடங்கன்முறை நாலாம் திரு - 4557)

என்று கூறியுள்ளார். “அன்பே அன்பே என்று அரற்றுவதில் அறிவழியும்”. அத்தகைய அன்பிலே திளைத்து நின்று வாழ்தலே சிறந்த சமய வாழ்க்கை. பத்திமை நிறைந்த வாழ்க்கை. அன்பினில் கரைந்துருகும் பத்தியால் உயிர்க் குலம் தழைத்து வளரும். அன்பின்றிச் செய்யும் சடங்குகள் பயன்தாரா. அன்பினால் தவறு செய்தாலும் நிறையாகும். அன்பில்லாமல் அறமே செய்தாலும் பாவமாகும்.

தரிப்பித்தலின் நீதரு மம்தரிப் பித்திடாமை
தெரிப்பிக்கும் அதன்மம்எனப் பெயர்செய்யு மால்எம்
பொருட்டுப்புரி பாவமும் புண்ணியமாக்கி எம்பால்
விருப்பற்றவர் செய்அற மும்மறமாக்கு விப்பாய்

(காஞ்சிப்புராணம் : பாடல் 77 தழுவக்குழைந்த படலம்)

என்று காஞ்சிப்புராணம் பேசும்.

திருக்களிற்றுப்படியார்,

அன்பேஎன் அன்பேஎன்று அன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும்-அன்பன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்.

(திருக்களிற்றுப் – 55)

என்று பாடல் உணர்த்துகிறது.

சிவகோசரியார் இயற்றிய விதிமுறைப் பூசையினும் கண்ணப்பர் பூசை ஏன் சிறப்புற்றது? அன்பினால் அன்றோ! கண்ணப்பருக்கு முன்பு அன்பு உவமையாக இருந்தது. கண்ணப்பருக்குப் பிறகு கண்ணப்பர் அன்புக்கு உவமையாகி விட்டார். அதனாலன்றோ ஞானத்தின் திருவுருமாகிய ஞானசம்பந்தர் அன்பின் பிழம்பாகிய கண்ணப்பர் சந்நிதியில் “கும்பிட்ட பயன் காண்பார் போல” வீழ்ந்தெழுந்தார். இதனைச் சேச்கிழாரடிகள்,

தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுதுகொண்டே தடஞ்சிலா
தலசோப னத்தால் ஏறி
வாழ்ந்திமையோர் குழாம் நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உள்புகுந்து வளர்பொற் கோயில்

சூழ்ந்துவலங் கொண்டுஇறைவர் திருமுன்பு எய்தித் தொழுதுதலை
மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல் மெய்வேடர்
பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.

(திருத்தொண்டர் புராணம் பா. 2925)

ஆக ஞானத்தின்-பூசனையின் பயன் அன்பேயாதல் பெறப்படுகிறது. அறியாமையால் கொச்சைப்பட்ட ஆசைகளைச் சிலர் அன்பு என்பர்; அஃது அன்புபோலக் காட்டும். ஆனால் வணிக நோக்குடையது. அது அன்பேயன்று; இதனை அன்பு என்று கூறுவது பாவம். இது ஆசை. ஆசை நிர்வாணத் தன்மையுடையது; வெட்கம் அறியாதது. மற்றவர்களும் வாழவேண்டும் என்ற உணர்வு ஆசைக்கு இருக்காது; ஆசை தற்சார்பு நிலையிலேயே தொழிற்படும்; காரியத்திலே கண் வைக்கும். அதனாலன்றோ திருமூலர்,

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்

(திருமந்திரம் - 2570)

என்று கூறினார். ஆசை மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாது. எங்கும் எதிலும் எப்போதும் ஆதாயம் தேடி அவலத்தை அணைத்துக் கொள்ளும் சிறுமைக் குணம் ஆசைக்கு உண்டு. ஆதலால் உயிரைத் தழைக்கச் செய்து வளர்க்கும் அன்பினையே உயிர்ப்பாகக் கொள்ள வேண்டும். “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற வள்ளுவம் வாழ்க்கையாக மலர்தல் வேண்டும்.

உயிர்க்கு நலம் தரும் அறிவும், அன்பும் இயங்கும் தன்மையன; இயக்கும் தன்மையன. இவையிரண்டும் தொழிற்படுத்தப்படுவதன் மூலம்தான் மேலும் மேலும் வளரும்; நிலையான வளர்ச்சி பெறும். உயிர்க்கு உறுதி பயக்கும். தொழிற்படுதல் உயிரின் இயற்கை.

சமயநெறியின் சீலம், உயிர் நலம் காக்கும் பாங்கு ஓயாது தொழிற்படுவதில்தான் இருக்கிறது. தற்சார்பு நிலையில் தொழிற்படுவது “தொழில்” ஆகும். சமயச்சார்பில் திருவருள் சிந்தனையுடன் உயிர்க்குலத் தொகுதி நலம் பெற வேண்டும் என்று செயற்படுதல் தொண்டு ஆகும். தொண்டு நெறி நிற்றலே உயிர்க்கு ஊதியம் பெறும் நெறி.

தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை
(அடங்கன்முறை பாட்டு)

என்பது அப்பரடிகள் வாக்கு. செய்யும் செயல்கள் உயிர்க்குப் பயன்தந்து விடுவனவல்ல. உயிர்க்குப் பயன்களைத் தந்து வாழ்விப்பது செய்யும் செயல்களின் நோக்கமேயாகும். தீய நோக்கத்தோடு-நற்செயல் செய்தாலும் தீமையே விளையும். இறைவன் மீது மலர்க்கணை தொடுத்த காமவேள் தண்டனையையும், மறவாது கல்லெறிந்த சாக்கிய நாயனார் இன்புறுதலையும் பெற்றமை இதற்குச் சான்று செயலுக்குரிய நோக்கமே முதன்மையானது. ஆதலால் நல்நோக்கத்தோடும், சிவசிந்தனையோடும் அயர்விலாது தொண்டு நெறியில் நின்று வாழ்தலே சமய வாழ்க்கை தொண்டு நெறியில் நின்று வாழ்தல் உயிரை வளர்க்கும்; பாதுகாக்கும். தொண்டின் நெறி, வாழும் சூழ்நிலையையும் இனியதாக அமைக்கும்.

உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்

தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

(புறநானூறு - 182)

இது சிறந்த சமய வாழ்க்கையின் பயன் கூறும் பாட்டு. எந்த நாட்டில் மனிதகுலத்தினிடையில் அன்பும் ஆர்வமும் நட்பும் வளர்ந்து ஒப்புறவு நெறி கால் கொள்கிறதோ ஆங்குப் பணியும், தொண்டும் சிறப்புற்று விளங்கும். ஆங்கு மனித குலத்தை வருத்தும் பகையில்லை. பிணியில்லை; களவும் காவலும் இல்லை. ஓர் அருமையான கூட்டுச் சமுதாயம் நிலவும். ஆதலால் “திருநாவுக்கரசு வளர்திருத் தொண்டின் நெறி நிற்றல்” சமயநெறியாளர் கடமை.

உயிர் துய்க்கும் இயல்பினது. துய்த்தலில் பொருள்களைத் துய்த்தல், காதலைத் துய்த்தல் மட்டும் அடங்காது. பிறர் மகிழ்தலைக் கண்டு, தான் இன்புறுதலும், துய்த்தலுமேயாம். இதுவே சிறந்த துய்த்தல்.

உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்

என்ற குறள் அறிக உயிர்க்கு உய்யும் நெறி துய்த்தல் நெறியேயாம்.

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ

என்ற அப்பரடிகளின் அருள்மொழி அறிக.

பொன்னும் மெய்ப்பொளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னைஎன் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன்என் றறியொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத் தணி
ஆரூரானை மறக்கலுமாமே

(அடங்கன்முறை ஏழாம் திருமுறை)
என்ற ஆரூரர் அருட்பாடலாலும் அறிக.

துய்ப்புக்குரிய பொருள்களைப் படைத்தலும், பலரோடு கூடித் துய்ப்பித்துத் துய்த்தலும் சிறந்த சமய வாழ்க்கை துய்த்தல் மட்டுமே நிகழும் வாழ்க்கை குறையுடையது. துய்ப்பித்துத் துய்த்தல் வாழ்க்கையே சிறப்புடைய வாழ்க்கை. துறவு என்பது, எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக அமைந்தது. பழந்தமிழர் வாழ்வுமுறை துறத்தல் வழித் துய்க்கும் வாழ்க்கையே. அதுவே சைவ வாழ்க்கை; திருத்தொண்டர் புராணத்தின் சாரம் இதுவே. “பொருள்கள் நிலையில்லாதன” என்பது, பொருள்கள் அழியும் என்ற கருத்தில் தோன்றியதன்று. பொருள்களுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு நீங்கும் என்பதே அதன் பொருள். பொருள்களைப் படைத்தலும் துய்த்தலும் சமய வாழ்வுக்குத் தடையன்று. உண்பதற்காக வாழ்ந்து கழுபிணி தேடிக் கொள்ளுதல் கூடாது. வாழ்வதற்காக உண்ண வேண்டும். முறையாக நற்குணங்களைத் தரக்கூடிய சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆதலால், உலகியல் துய்ப்புகளை உய்யும் நெறிகள் எனக்கொண்டு சிவ சிந்தனையோடு துய்ப்பித்தும் துய்த்தும் வாழ்தலும் ஒரு தவமேயாகும். துய்க்கும் பொருள்கள் எல்லாவற்றையும் சிவமாகவே கருதிப் போற்றியிருக்கிறார் அப்பரடிகள்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒரு ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய்என் செஞ்சம்து றப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

(அடங்கன்முறை : ஆறாம் திரு. 1173)

சுந்தரர் வாழ்ந்த காதலின்ப வாழ்க்கை-துறவியரும் தொழும் வாழ்க்கையாயிற்று. எப்படி? சுந்தரரும் சேக்கிழாரும் கூறுமாறு அறிக.

ஆதலால், பொருள் நிலையில்லாதன என்று கருதிப் பொருள் நெறியை அலட்சியப்படுத்துதல் வாழும் நெறியன்று. அத்தகையதொரு மனப்போக்கு இந்தியாவில் வளர்ந்ததால் தான் இந்தியா ஏழை நாடாகியது. பற்றி நின்று படரும் கொம்புகள் அழியுமாயின் கொடியும் அழியத்தானே செய்யும். அதனாலன்றோ வறுமையை மாணிக்கவாசகர்,

நல்குரவென்னும் தொல்விடம்

(திருவாசகம் போற்றித் திரு.40)

என்று கூறுகின்றார். திருமந்திரமும்,

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

(திருமந்திரம் 704)

என்று அழகுபடக் கூறுகிறது. பொருளை, பொருளுக்காக நெறியில்லாத நெறியில் ஈட்டுவது தவறு. பொருளை, பொருளின் பயன் கருதித் துய்ப்பித்துத் துய்க்க ஈட்டுதல் நெறி சார்ந்த வாழ்க்கை. இதுவே சைவ சித்தாந்தச் செந்நெறியின் சிறப்புடைய வாழ்க்கை. இங்ஙனம் துய்த்தலுமாகிய அறம் நிகழ, காதல் மனையறத்தைச் சிவநெறி ஏற்றுப் போற்றி நடத்துகிறது. தமிழர் சமயநெறியின் மனையறம் அன்பையே உயிர் நிலையாகக் கொண்டது.

............எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொரு மித்து-ஆதரவு
பட்டதே இன்பம்

(தனிப்பாடல் திரட்டு : ஒளவையார் - 105)

என்ற வாக்கு அறிக. அன்பும் இன்பமும் பிணைக்கும் ஆற்றலுடையவை. தமிழரின் சமயம் சார்ந்த வாழ்க்கை நெறியில் காதல் மணமே பெருவழக்காக இருந்தது. தமிழரின் வாழ்வியலில் இயல்பாக மலர்ந்த உள்ளங்கள் காதலிற் சேர்ந்து களித்து மகிழ்ந்தன. இதற்குத் தடையாகச்-சாதி பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் நின்றதில்லை.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே

(குறுந்தொகை 40)

அயல்வழக்கு நுழைந்தபின் திருமணங்கள் நிகழ்வனவாக இல்லை; செய்து வைப்பனவாகி விட்டன. சுந்தரர் வரலாற்றில் திருமணங்களே நிகழ்ந்தன. திருமணம் காதல் திருமணமாக அமைந்தால் தான் சிறப்புடைய வாழ்க்கையாக அமையும். இங்ஙனம் சமயம் சார்ந்த வாழ்க்கையில் கால்கொள்ளும் குடும்பம், சமுதாயத்தை நோக்கி விரிவடைகிறது.

சமுதாயம் என்பது மொழி, சமயம் அடிப்படையில் பலர் கூடி ஒத்ததறிந்து வாழ்க்கையை நிகழ்த்தும் கூட்டு அமைப்பாகும். உயர்ந்த-சமுதாய அமைப்புத் தோன்றின் வானகம் வையகத்தில் தென்படும். சிவநெறி இயல்பிலேயே சமுதாயம் தழுவிய அமைப்புடையது. ஒருமை நலம் சிறந்த, சமுதாயம் தோன்றத் தடையாய் அமைவதில் பெருந்தடைகளாய் உள்ளவை, சாதி, குல, கோத்திர வேற்றுமைகளே. இந்தப் புன்மைகள் அயல் வழக்கின் வழியதாகவே தமிழ்நெறியில் ஊடுருவின.

தூய ஒரு குல நெறியாகிய சிவநெறியை இடையில் வந்து கலந்த அயல் வழக்குக் கெடுத்து விட்டது. வடபுலத்தில் வாழ்ந்த, ஆரிய வேதகாலத்தில் வாழ்ந்த அந்தணர்கள் செய்த உபநிடதத்தில்கூட சாதி வேற்றுமைகள் இருந்ததில்லை. ஆயினும் எப்படியோ அந்தத் தீமை, பரவி மனித உலகத்தை உள்ளீடழித்து உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. சில தமிழ் நூல்களும்கூடச் சூழ்நிலையின் காரணமாக இந்தச் சாதி முறைகளை ஏற்றுக்கொண்டு பேசியுள்ளன. அவை வெறுத்து ஒதுக்கத்தக்கன.

உயிரியல் விஞ்ஞான அடிப்படையிலும் இயற்கை நியதிகளின்படியும், சித்தாந்தச் செந்நெறியின்படியும், திருமுறையின் நெறி வழியும் சாதி வேற்றுமைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவல்ல. ஒழுக்கத்தின் பாற்பட்ட வேற்றுமைகள் நிலவலாம். ஆனால், அயல்வழியின் மூலம் புகுந்து, வளர்ந்துள்ள சாதிமுறை பிறப்பின் பாற்பட்டது. இந்த வேற்றுமைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கனவல்ல. சித்தாந்தச் செந்நெறியின் ஞானாசிரியர் மெய்கண்டதேவர்,

“அவன், அவள், அது எனும் அவை மூவினைமையில்”

(சித்தாந்த சாத்திரம்: சிவஞானபோதம் - 1)

என்று மூவகைப்படுத்திப் பொதுமை நலம் கெழுமிய வகையில் அருளியுள்ளமை அறிக தனி உடைமை உணர்வு களும் அவ்வழிப்பட்ட ஆதிக்க உணர்வுகளும் தோன்றிய பிறகுதான், சாதிமுறைகள் தோன்றின. “பழைய வேதங்களிலும்கூட சாதிமுறைகள் இருந்ததாக இல்லை” என்று மறைமலையடிகள் நிலைநாட்டுவார். இருக்கு, யசுர், சாமம் ஆகிய வேதங்களில்கூட சாதிமுறைகளைக் குறிக்கும் சொற்கள் பயிலவில்லை.

வேதங்களின் சாரமாகத் தோன்றிய உபநிடதங்களிலும் கூட சாதி வேற்றுமைகள் இருந்தனவாகத் தெரியவில்லை. வேத உபநிடத கால முனிவர்கள் திருமணங்கள்கூட, சமுதாயத்தின் பல நிலைகளிலும் நிகழ்ந்திருக்கின்றனவே தவிரச் சாதிமுறைகள் பின்பற்றப் பெற்றனவாகத் தெரிய வில்லை. “கிருதயுகத்தின்கண் சாதிகள் ஏதுமே இல்லை” என்று வாயு புராணம் கூறும்.

“மாபாரதத்திலும் கூட ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்தோர். தொல்காப்பியத்தில் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் சாதிமுறைகள் இருந்ததில்லை. ஆனால், தொழில்முறைப் பாகுபாடு இருந்திருக்கிறது. தொல்காப்பியத்தை அடியொட்டித் தோன்றிய தமிழ் மறையாகிய திருக்குறளிலும் சாதி வேற்றுமை இல்லை.

பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்
(திருக்குறள் 972)

என்பது திருக்குறள். அதனையொட்டித் தோன்றிய சமயத் திருமுறைகளும் சாதி வேற்றுமைகளைக் கடுமையாகக் கடிந்துள்ளன. மாணிக்கவாசகர்,

சாதி, குலம், பிறப்பு என்னும் சுழி
(திருவாசகம் 5)

என்று கூறுவது அறிக. அப்பரடிகள்,

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்

(அடங்கன் முறை : ஐந்தாம் திரு - 582)

என்று சாதி வேற்றுமை மனப்பான்மையைக் கடுமையாகக் கண்டித்ததோடு உயிர்க்குலம் அனைத்தையும் சிவமெனக் கருதிப் போற்ற வேண்டும் என்று அருளியுள்ளமையும் அறிக. ஞானத்தின் திருவுருவாக, நான்மறையின் தனித் துணையாக, தமிழகத்தில் சைவத் தமிழ் ஞானப் புரட்சி செய்த திருஞானசம்பந்தர்,

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்அடியார்க்கு
இங்கேஎன்று அருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும்
சங்கேயொத்து ஒளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே

(அடங்கன்முறை : இரண்டாம் திரு - 1900)

என்றருளிய பாடலும்

குலவ ராகக்குல மிலரு மாகக் குணம் புகழுங்கால்
உலகின் நல்லகதி பெறுவ ரேனும்மல ரூறுதேன்

புலவ மெல்லாம் வெறி கமழும் அந்தண் புகலுர்தனுள்
நிலவ மல்குசடை அடிகள் பாதம் நினைவார்களே

(அடங்கன்முறை : இரண்டாவது திரு - 27.19)

என்ற பாடலாலும் அறிக. பார்ப்பனக் குலத்தில் தோன்றிய திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு கொண்ட தோழமையை அறிந்து உணர்க. சுந்தரர் ஆதி சைவ குலத்தில் தோன்றி, ஷத்திரிய குலத்தினராகிய மன்னரால் வளர்க்கப் பெற்று, உருத்திர கணிகையர் குலத்தில் தோன்றிய பரவையாரையும், வேளாளர் குலத்தில் தோன்றிய சங்கிலி யாரையும் திருமணம் செய்து கொண்டமையையும் அறிக..

சேக்கிழார் தாம் இயற்றிய பெரிய புராணத்தில் வழக்கிலிருந்த குலங்களைக் குறிப்பிட்டுக் கூறினாரேனும் அக்குலங்களிடையில் வேறுபாடின்றிக் கலந்து பழகியதைத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், முருக நாயனார் மூவரும், முருகநாயனார் திருமடத்தில் உடனுறைந்து இருந்தனர் என்று கூறும் நெறியினையும் அறிக. திருவாரூரில் பலரோடு பழகியதால் ‘தீட்டு’ வந்துவிட்டது என்று கருதிய நமிநந்தி அடிகளுக்கு,

மேன்மை விளங்குந் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான்தாம்
ஞான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி
ஞானமறையோய் ஆரூரில் பிறந்தார்எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்றருளிச் செய்தங்கு எதிர் அகன்றார்

(திருத்தொண்டர் புராணம் : நமிநந்தி - 27)

என்று இறைவர் இவ்வாறு உணர்த்திய ஒருகுல நெறியை ஓர்க: ஒழுகலாறாக்குக. இன்று சிவநெறி மக்கட் சமயமாக மலர்ந்து வளரவில்லை. ஏன்? சாதி வேற்றுமைகளின் கொடுமையே தடை. திருக்கோயில்களில் சாதி, திருமடங்களில் சாதி, எங்கும் சாதிகளைக் காப்பாற்றும் சிறுநெறிகளே ஆட்சி செய்கின்றன.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

இது பஜனை மடத்துப் பாட்டு, ஒழுகலாறோ சின்னஞ்சிறு வட்டத்தில். சாதிச் சக்திகளில் சிக்கிய சைவம் வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது.

ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய சமயத் தலைவர்களின் பின்னால், ஆயிரக் கணக்கில் அடியவர்கள் திரண்டனர். நாடு முழுதும் சைவப் படையெழுச்சி! எப்படி இயன்றது? அவர்கள் சாதி நெறிகளைக் கடந்து விளங்கினார்கள். “கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பரெலாம் ஒருகுலம்” என்றனர். ஏன்? சந்தானாச்சாரியார்களிடத்திலும் கூட சாதி வேற்றுமைகள் இருந்ததில்லை. ஞானத்திற்கு ஏது சாதி?

சைவ வேளாளர் திருமரபில் தோன்றிய மெய்கண்ட தேவரை ஞானாசிரியராக ஆதிசைவர் மரபில் தோன்றிய அருணந்தி சிவாசாரியார் ஏற்றுக் கொண்டார். பெற்றான் சாம்பானுக்கு, உமாபதி சிவத்தின் மூலம் தீக்கை அளிக்கச் செய்து இன்ப அன்பினை இறைவன் வழங்கினான் என்றால் சித்தாந்தச் செந்நெறிக்குச் சாதி ஏது? குலம் ஏது? கோத்திரம் ஏது? சிவநெறி நிற்பவர் எல்லாம் நம்மவரே என்று பெரு நெறி பற்றி ஒழுகுதலே சித்தாந்தச் செந்நெறியின் சமுதாய வாழ்க்கை நெறி.

இன்று அடியார்களுக்குப் பஞ்சம். ‘கட்டளைகள்’ இல்லாது போனால் இருக்கும் ஒரு சிலரும் இருக்க மாட்டார்கள். சிவநெறியை நாடு கடந்து இனங்கடந்து உலகப் பொதுநெறியாக வளர்க்க இன்று தேவை ஆயிரம் ஆயிரம் அடியவர்கள். அடியார்களுக்குத் தடையாக இருக்கின்ற சாதிமுறைகளை நீக்கினாலொழிய சிவநெறி - சைவம் எந்த முகத்துடன் “மனிதர்காள் இங்கே வம்மின்” என்றழைக்க இயலும்?

மனித குலத்தை ஒரு குலமாகக் கருதாதபோது யாத்திரை ஏன்? பாதகாணிக்கைகளை வாங்கிக் குவிக்கவா? பிழைப்பின் பெயரால் பெட்டகங்களை நிரப்பிக் கொள்ளவா? ஊரார் செல்வத்தை அடித்து ஒரு குலத்தின் வயிற்றில் போடவா?

“உலகத்து வாழ்க்கை துன்பமானது; துன்பமானதாகத் தான் இருக்கும்” என்று கருதும் புன்மைநெறி சிவநெறிக்கு இருந்ததில்லை; துன்பம் துடைத்து வாழ்க்கையை இன்ப மயமாக்குதல் சிவநெறியின் கோட்பாடு

சிவநெறியின் கோட்பாடு பழந்தமிழர் காலந்தொட்டு வழிவழியாக வளர்ந்து வருகிறது. சங்க காலக் கவிஞர் “பக்குடுக்கை நன்கணியார்” ஓரில்லத்தில் காதல் களியாட்ட மகிழ்ச்சி, பிறிதோர் இல்லத்தில் இறப்பு வழிப்பட்ட துன்பம்! ஏன் இந்த வேறுபாடு? என்று கொதித்துக் கேட்கிறார். இப்பாடலில் பேசப்பெறும் இன்ப துன்பங்கள், சாதி வேற்றுமை, கற்றார், கல்லாதார், வளமுடையார், வறுமையுடையார் என்ற செயற்கை வேறுபாடுகளல்ல. ஊழி ஊழியாக இயற்கையில் நிகழ்ந்து வரும் வேறுபாடு. மரணத்தை வென்றார் யார்?

மரணத்தை வெல்ல முடியும் என்ற கருத்து இருக்கிறது. கதைகள் இருக்கின்றன. ஆனால் இன்னும் வெற்றி பெற முடியவில்லை. வளர்ந்து வரும் வாழ்நாளின் அளவைப் பார்த்தால் எதிர்காலத்தில் வெற்றி பெற்றாலும் பெறலாம்? ஆயினும் இன்று வரையில் சாதலும் பிறத்தலும் புதியனவல்ல என்று கூறியாங்குச் சுழற்சி முறையில் நடைபெறும் இயற்கை வழியினாலான துன்பத்தைக்கூட-மரணத்தைக்கூடக் கடிந்துள்ளார். இதே உணர்வைச் சுந்தரர் வரலாற்றில் அவிநாசியில் காண்கின்றோம்.

அவிநாசியில் ஒரு இல்லத்தில் குழந்தைக்கு நாண் மங்கல மகிழ்ச்சி! ஆரவாரம்! பிறிதோர் இல்லத்தில் குழந்தையை இழந்த துயரம், ஆரூரர், பெற்றோரை விட்டுப் பிரிந்த குழந்தையை மீட்டுப் பெற்றோரை மகிழ்வுறுத்தினார் என்பது பெரியபுராணம். ஆதலால் துன்பம் உலக இயற்கையன்று. இன்பமே உலகத்து இயற்கை என்று கருதி இன்புற்று வாழ்தல் சித்தாந்தச் செந்நெறியின் வாழ்க்கை முறை.

அடுத்து, சமுதாயத்தை நலிவுறச் செய்யும் சாதி வேற்றுமைகளைப் போலவே பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் கொடுமையானவை. இன்று மானிடச் சாதியை- உடை யாரையும், இல்லாதாரையும் ஒருசேர வருத்துவது பொருளுடமை ஏற்றத் தாழ்வுகளேயாம். உடையாரைக் களவும் காவலும் வருத்துகின்றன. இல்லாதாரை வறுமை வருத்துகிறது; உடையார் இல்லார் வேற்றுமை, அவ்வழி கொடிய வறுமை முதலியன நிலையாகக் கால்கொள்ளு மானால் மனித மதிப்புகள் குறையும்; அறநெறியின் அடித் தளங்கள் ஆட்டம் கொடுக்கும்; சமய நெறியின் சீர்மைகள் சிதையும்; நரகத்தைத் தேடி வேறு எங்கும் போக வேண்டாம். இவ்வேற்றுமை களுக்கிடையில் மானிடர் வாழும் வாழ்க்கையே நரகமாகும்.

சிவநெறியின் சீலம் உயிரிரக்கத்தில் இருக்கிறது. யாதானும் ஒரு உயிர் துன்புறுவதைச் சிவநெறி தாங்காது. அதனாலன்றோ, குடிக்கு ஒரு ஆள் கொற்றாளாக அனுப்ப, மகவில்லாது கவலைப்பட்ட வந்திக்கு, ஆலவாய் அண்ணல் ஆளானார். நான்மாடக்கூடல் என்று பெயர் பெற்ற மதுரையில், அரச வீதியில் பன்றிக் குட்டிகள்-கண் திறவாக் குட்டிகள் தாய்ப் பன்றியை இழந்து பாலின்றிப் பரிதவித்தன. பரமாய சிவத்திற்குப் பன்றிக்குட்டிகளின் துயர் உறுத்திற்று. பாற்கடலை வழங்க முடியாது. நக்கிக் குடிக்கும் பருவம் வரவில்லை. அந்தணராக, சேவகனாக வந்து பால் வழங்கவும் முடியாது. உருவத்தைக் கண்டு அஞ்சும் குட்டி நிலையில், தாயையே அணையும் இயல்பின. ஆதலால் தாய்ப் பன்றியாய்த் தோன்றி முலை தந்து காப்பாற்றிய மூவாப்புகழ் சிவத்திற்கு உண்டு.

தந்தையடிக்க அழுத குழந்தைக்கு அம்மையைக் கொண்டு பாலூட்டச் செய்தான் திருத்தோணியப்பன். திருவிழிமிழலையில் பஞ்சம் வந்துள்ளபோது படிக்காசுகள் தந்தருளி அடியார்களைக் கொண்டு சோறிட்டான். பஞ்சத்தின் துன்பத்தை மாற்றினான். இவையெல்லாம் கருணையின் பெருக்கம்! கருணையின் காட்சி!

சிவநெறியில் நின்றொழுகிய நாயன்மார்கள்தாம் என்ன? காதலனை நச்சரவம் தீண்டப் பிரிந்து அழுத செட்டிப் பெண்ணுக்குக் காதலனை மீட்டுத் தந்து கடிமணம் செய்வித்தது ஞானசம்பந்தப் பெருமானின் அருட்செயல். சைவத்தில் உயிர்களின் துன்பத்தை நீக்கும் பணி அறம் என்று வற்புறுத்தப் பெற்றுள்ளது. ஏன்? திருமூலர் நடமாடும் மானிடர்களை-நடமாடும் கோயில்கள் என்று அறிமுகப் படுத்துகின்றார். ஆம், அவர்கள் “நடமாடும் கோயில்கள்”. அங்கும் இறைவன் உள்ஒளிந்து நிற்கின்றான். நாளை மறுநாள் விளங்கியும் தோன்றலாம். உடலிடம் கொண்டருளுதல் இறைவனின் அருட்செயலன்றோ! திருக்கோயிலைப் பட மாடும் கோயில் என்று பகர்கின்றார். படமாடும் கோயிலுக்கு ஈவது பரமனுக்கு ஆகாது என்று எதிர்மறையாகக் கூறுகின்றார். நடமாடும் கோயிலுக்கு ஈவது மக்களுக்கும் ஆம், பரமற்கும் ஆம், என்பது திருமூலர் செய்த சைவப் பொருளியல் புரட்சி, சிவநெறி பொருளியல் ஒப்புரவு நெறியை உணர்த்துகிறது.

அப்பரடிகள் பொருளுடைமை-தனி உடைமை நிலையுடையதன்று என்று கூறுகிறார். அப்பர் வாக்குப்படி பொருளை உடையவர் பொருளுக்குரியவர் அல்லர். அவர் ஒரு அறங்காவலர்; சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர். அதன் காரணமாக அச் சமுதாயத்திற்குரிய பயன்படும் பொருள் அவரிடத்தில் வைக்கப் பெற்றுள்ளது. அப்பொருள்பயன் அவர் துய்ப்பதற்கன்று. இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதற்கேயாம்.

இந்தத் தூயஉணர்வுடன் பெற்ற பொருள்களைப் பாதுகாத்து இல்லாதார்க்கு வழங்குபவர்களுக்குச் சிவனருள் கிடைக்கும். வழங்காது காத்து வைத்து வாழும் வன் கணாளர்க்கு நரகமே கிடைக்கும். இது அப்பரடிகளின் பொருளியல் கொள்கை.

இப்பொருளியல் கொள்கையைத் ‘தர்மகர்த்தாக் கொள்கை’ என்று பிற்காலத்தில் பொருளியலறிஞர்கள் கூறினர். அண்ணல் காந்தியடிகளும் இந்தக் கொள்கையை ஆதரித்தார். அப்பரடிகள் இந்தக் கொள்கையை வகுத்துக் கூறும் பாடல் இதோ,

இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும்வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்நீர்க் கங்கைதன்னைப் படர்சடைப் பாகம்வைத்தார்
அரக்கனுக் கருளும்வைத்தார் ஐயன் ஐயாறனாரே”

- (அடங்கன்முறை நாலாந்திரு. - 454)

சிவநெறி, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை மறுக்கிறது. உண்மையான சிவநெறியைச் சார்ந்த சமுதாயத்தில் பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் மறையும்; மறைய வேண்டும். அங்ஙனமின்றேல் மார்க்சீயம் வாழ்வியல் நெறியாக இடம் பெறுவதைத் தடுக்கும் சக்தி யாதும் இல்லை. உண்மை உணர்க.

மார்க்சீயத்திற்கும் சிவநெறிக்கும் தத்துவ இடைவெளி மிகக்குறைவு. இதனை மார்க்சீய நெறியோடு ஒத்திட்டுப் பார்க்கவேண்டும். சைவ சித்தாந்தத்தின்படி கடவுள் மனித உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முழுப்பொறுப்பானவன் அல்லன். அவன் ஒரு இயக்குநன். அவன் ஒரு தேர்வாளன்; காட்சி மதிப்பீடுகளுக்குத் தகுந்தவாறு புள்ளிகள் வழங்குபவன். அவ்வளவுதான்.

இன்னும் கொஞ்சம் அயரா அன்பில் இறைவனை அணுகினால் அறிவிப்பான்; உணர்த்துவான் வழி நடத்துவான். நடந்து வாழவேண்டியது மானுடச் சாதியேதான். சிவநெறியின் பார்வையிற் கடவுள் ‘Creater’ம் அல்ல. ‘Electric life'ம் அல்ல. சிவம் ஒரு வழித்துணை. அறிவார்வலர்களுக்கு ஆசிரியன். அவன் எந்த உடைமைகள் விவகாரத்திலும் தலையிடுபவனல்லன். அவன் காரணங்களாக இருப்பவனே தவிர, காரியங்களாக இருக்க மாட்டான். அவன் உணர்வுகளாக நின்றருள் புரிவான்.

ஆதலால் சித்தாந்தச் செந்நெறி, ஏழை பணக்காரன் தன்மைக்கு, உயர்சாதி, இழிசாதி அமைப்புக்குத் துணை போகக்கூடியதன்று. சித்தாந்தச் சிவநெறி சார்ந்த சமுதாயம் எல்லாரும் எல்லாம் பெற்று வாழும் சமுதாயமேயாகும். அத்தகு சமுதாயத்தைக் காண்பதே, இன்றுள்ள முதல் கடமை.

இன்று சிவநெறிச் சமுதாயம் தனித்தன்மையுடையதாக இல்லை. சித்தாந்தச் செந்நெறி தனித்தன்மையுடன் விளங்க வேண்டும். அயல்வழி வந்த கலப்புக்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். சிவநெறி அனுபவத்திற்குப் பயன்படுவன திருக்கோயில்கள். திருக்கோயில்களில் தமிழ் முனிவர்களால் செய்யப்பெற்ற ஆகமங்கள் வழி, பூசனைகள் நடைபெற வேண்டும்.

“ஒருவர், சிவநெறியில் நிற்றற்குரிய தீக்கைகளை முறையே பெறாமல் சமயப் பணிகளில் ஈடுபடக் கூடாது” என்பது ஆகம விதி. ஆனால் தீக்கையின்றியே திருவமுது படைக்கும் பணியிலும், மந்திரங்கள் ஓதும் பணியிலும் இடம்பெற்றுச் செய்கின்றனர். சிலர் திருக்கோயில்களின் பூசகர்களாகக் கூட இடம் பெற்றிருக்கின்றனர். திருக்கோயில் இறைவன் திருமுன்பு சமய ஒழுக்கத்தால் ஒன்றுபட்ட எல்லாரும் உடனிருந்து உண்ணும் சிறந்த பழக்கம் தடைப்பட்டுப் போயிற்று.

சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்த ஆதீனகர்த்தர்களின் சமயத் தலைமையைச் சுமார்த்தக் கலப்பின் மூலம் அடையத் துடிக்கிறார். தீக்கை பெறாத, ஐந்தெழுத்தை எண்ணாத, ஆகமங்களை நம்பாத-ஏற்றுக் கொள்ளாத சங்கராச்சாரி யாரிடம் சமய, விசேட நிர்வாண தீக்கைகள் பெற்று சிவாச்சாரியராகிப் பெருமானை அர்ச்சிக்கும் பேறு பெற்றவர்கள் “சான்றிதழ்” வாங்க வேண்டி இருக்கிறது.

ஆகமங்களின் வழியும் தமிழ்த் திருமறைகளின் வழியும் நமது திருக்கோயில்களில் பூசனைகளும் நடைமுறைகளும் அமைய வேண்டும். திருக்கோயில் வழிபாட்டில் கட்டணங்கள் விதித்து வாங்கும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அத் திருக்கோயில் பெருமானை ஆன்ம நாயகனாக ஏற்று வழிபடுவோர் பட்டியல் தயாராக வேண்டும்.

தமிழர்-சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்தவர்கள் சிவத்தை யாதானும் ஒரு பெயரில்-சிறப்பாக அவர்கள் ஊரில் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஆன்மநாயகனாக ஏற்றுக்கொள்வதைப் பழக்கப்படுத்த வேண்டும்; வழக்கப்படுத்த வேண்டும். இங்ஙனம் அந்தத் திருக்கோயில்களில் வழிபடுவோர் ஆண்டுதோறும் முறையாக வழங்கும் நன்கொடையிலிருந்தே திருக்கோயில்கள் பேணப்பெற வேண்டும். பூசனைகள் செய்விக்கப் பெறவேண்டும்.

வழிபடுவோர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோயில்களை மையமாகக் கொண்டே நடத்தப் பெற வேண்டும். அங்ஙனம் நடக்கும் நிகழ்வுகளுக்கும் காணிக்கைகள் வாங்கலாம்; வழிபடுவோரிலிருந்து தெரிவு செய்யப் பெற்ற ஒரு சிலர் கொண்ட குழுவைக் கொண்டே திருக்கோயில் ஆட்சிமுறை நடைபெற வேண்டும்.

திருக்கோயிலின் வழிபாட்டுச் சடங்குகள் எளிமை யானவையாக அமைய வேண்டும். இனிய தமிழிலும் அமைய வேண்டும். திருக்கோயில்களில், ஆகமங்களிலும் திருமுறை களிலும் தோய்த்த புலமையும், பழுத்த மனமும் கொண்ட சிவாசாரியர்கள் நியமனம் செய்யப் பெறுதல் வேண்டும். அவர்கள் மூர்த்திகளைத் தூய்மை செய்து, நாள்தோறும் பெருமானை வழிபடுவோர் வழிபட்டுய்ய எழுந்தருளச் செய்யும் செய்முறைகள் நிகழ்த்தி, வருகிற பக்தர்களுக்கு ஆச்சாரியனாக இருந்து, பெருமானைக் கண்டும் காட்டியும் வழிபாடு செய்து கொள்ளும் நெறியில் வழிபடுத்தியும் துணை செய்ய வேண்டும்.

தீக்கை பெற்று, அத்திருக்கோயிலில் வழிபடுவோர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு அவர்கள் தாமே பெருமானுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். திருக்கோயிலின் சிவாசாரியர்கள் ஆசிரியப் பணியைத்தான் செய்ய வேண்டும்; புரோகிதர்களாக விளங்கக் கூடாது; தரகர் நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.

எல்லாரும் திருக்கோயில் சென்று பெருமானை வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது என்பதற்கு நமது திருக்கோயில் புராணங்களே சான்று. நண்டும், எறும்பும் பூசித்திருக்கும் போது மனிதன் பூசிக்கக் கூடாதா? கண்ணப்பர் வரலாறு எதைக் காட்டுகிறது?

கண்ணப்பர், காளத்தியண்ணலைத் தொழ யாதொரு தடையும் இருந்ததில்லையே! சிவாசாரியார் கூட, யார் வழிப்பட்டது என்று கவலைப்படவில்லை. அவருக்கு இருந்த கவலை, சந்நிதியில் கிடந்த புலால் துண்டுகள் பற்றியதுதான். ஆயினும் கண்ணப்பர் பூசனையே சிறந்தது என்று காளத்தியண்ணலே விடையெழுதிய பிறகும்கூட நாம் தகுதியுடைய எல்லாருக்கும் வழிபாட்டுரிமையை வழங்கவில்லை.

கண்ணப்பர் வரலாறு நிகழாத காசியில் எல்லாரும் வழிபடலாம். ஆனால் கண்ணப்பர் வரலாறு நிகழ்ந்த தென்புலத்தில் எல்லாரும் வழிபட முடியாது. அப்பரடிகள் அருளிச் செய்துள்ள ஐயாற்றுப் பதிகத்தில் எல்லாரும் போதொடு நீர் சுமந்து வரிசையாக நின்று ஒருவர் பின் ஒருவராக ஐயாறப்பனை வழிபட்டனர் என்ற செய்தி கிடைக்கின்றது.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடுப டாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

(தேவா. நான். திரு. 3ஆம் பதிகம் பாடல்.1)

ஆதலால் திருக்கோயில் வழிபாட்டில் தகுதியும் உரிமையும் உடையவர் அனைவருக்கும் வழிபடும் உரிமை வேண்டும். இதைச் செய்தால்தான் சாதி வேற்றுமைகள் அகலும். பூசனையைச் செய்வதன் மூலம்தான் உயிர்க்கு அனுபவம் கிடைக்கும்.

தாமே வழிபாடு செய்து கொள்ள இயலாதாருக்கும் சிவாசாரியர்கள் செய்து தரலாம். அங்ஙனம் செய்யும் பொழுதும் திருமுறைத் தமிழிலேயே செய்யப் பெற வேண்டும். பக்தி என்பது உயிரின் அனுபவத்திற்குரியது. உயிரின் அனுபவம் தாய்மொழியில்தான் எளிதில் அமையும்.

சுமார்த்தக் கலப்பு, நமது சமயத்துக்கு ஏற்பட்ட பிறகு, தமிழ் வழிபாட்டு முறைகள் நின்று போயின. பழங்காலத்தில் தமிழோடு இசை பாடிதான், வழிபாடு செய்திருக்கின்றனர். சுமார்த்தருடைய கலப்பு ஏற்பட்ட பிறகு சமஸ்கிருதத்தில் சில புகழ்மொழிச் சொற்றொடர்களைத் தொகுத்துத் தூய்மையுடையதாகக் காட்டி அர்ச்சனைக்குப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அவைகளால் அர்ச்சனை செய்யத் தொடங்கிய பிறகுதான், கடவுளை இழிவுபடுத்துதற்குரிய சில செய்திகள் பகுத்தறிவாளர்களுக்குக் கிடைத்தன.

சித்தாந்தச் செந்நெறிக்கும், கோயில்களுக்கும் புறச் சமயங்களால் தாக்குதல் வந்த பொழுதெல்லாம் திருமுறைத் தமிழ்தான் காப்பாற்றியது. 'அஷ்டோத்திரமும்’, ‘சகஸ்ர நாமமும்' யாதும் செய்யவில்லை. ஆதலால், நமது சித்தாந்தச் செந்நெறியைக் காப்பாற்றித் தந்த திருமுறைப் பதிகங்களை ஓதி, மலர் சொரிந்து வழிபடும் வழக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அன்றுதான் திருக்கோயில்களில் பெருமான் பெருவிருப்புடன் எழுந்தருளி அருள் புரிவான். ஏன்? அவன் தமிழோடிசை கேட்கும் இச்சை கொண்டவன்.

இறைவன் தமிழிசைக்காக நாயன்மார்களுக்குப் பொற்காசுகள் தந்தவன்; பண் சுமந்த பாடல் கேட்க, கூலி கொண்டு மண் சுமந்து அடிபட்டுப் புண்மேனி சுமந்தவன். திருக்கோயில் வழிபாட்டுக்கு உரிமையுடையது திருமறைத் தமிழே. அதைச் சிவநெறியாளர்கள் உரிமையுடன் போற்றி ஒழுகுதல் வேண்டும்.

பழந்தமிழகத்தின் திருக்கோயில்கள் உடலையும் உயிரையும் ஒருங்கே வளர்க்கும் நிறுவனங்களாக விளங்கின. இம்மைக்கும் மறுமைக்கும் ஆக்கமளிப்பவையாக விளங்கின. காலப்போக்கில் அயல்வழக்கின் நுழைவின் காரணமாகவும் தற்சார்பு மிகுந்ததன் காரணமாகவும், அயர்ச்சியின் காரணமாகவும் இன்றையத் திருக்கோயில்கள் முழுமையான திருக்கோயில்களாக விளங்கவில்லை.

இன்று, எதையும் எங்கு நோக்கினும் அரசே பொறுப் பேற்று நடத்துகிறது. சமுதாயப் பொறுப்புணர்வு என்பது அறவே நீக்கப்பெற்றிருக்கிறது. இந்நிலை சமுதாயத்திற்குத் தற்சார்பான வளர்ச்சியை, வலிமையைத் தராது. பழங்காலத்தில் சமுதாயக் கூட்டுப் பொறுப்பு மிகுதியாக இருந்தது. திருக்கோயில்களில் இலக்கண இலக்கியங்கள் கற்பிக்கப் பெற்றன: நடத்தப் பெற்றன; மருத்துவமனைகள் இருந்தன. ஏன்? வழக்குகளைத் தீர்த்து வைக்கும் முறையீட்டு மன்றங்களும்கூடத் திருக்கோயில்தான் நடைபெற்றன.

சுந்தரர் சிவபெருமான் வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலிலிருந்த முறையீட்டு மன்றம் விசாரித்து நீதி வழங்கியது என்ற வரலாற்றை உணர்க. இதே நிலை மீண்டும் திரும்ப வருதல் வேண்டும்.

திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள கடவுளைத் தலைவனாகக் கொண்டு சிவநெறியைச் சார்ந்த சமுதாயம் கூடிவாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சமுதாயத்திற்குத் தேவையான அனைத்துச் சமுதாயப் பணிகளையும் திருக்கோயில்கள் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும். இங்ஙனம் செய்வதைச் சிலர் இன்று மறுக்கின்றனர்.

“திருக்கோயில் நிதியத்தைக் கடவுள் பூசனைக்குத்தான் பயன்படுத்த வேண்டும்; வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது” என்று கூக்குரலிடுபவர்கள் இருக்கிறார்கள். மேலும் “செல்வநிலை மிகுந்துள்ள கோயில்கள், செல்வ வசதிக்குறைவான திருக்கோயில்களின் திருப்பணிக்குச் செல வழிக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். இது நூற்றுக்கு நூறு தமிழகத்தின் எல்லாத் திருக்கோயில்களையும் திருப்பணி செய்து திருவருளின் பொலிவோடு வைத்திருக்க வேண்டும். இதற்கு முதலிடம் கொடுக்கலாம். இதைச் செய்வது சமுதாயப் பணிகளுக்குத் தடையாக இருக்காது.

‘கடவுட் பணிக்கென வழங்கப்பெற்ற நிதியைக் கடவுட் பணிக்குத்தான் செலவழிக்க வேண்டும். இதுதான் சரியான அறநெறி. கடவுட் பணியும் மக்கட் பணியும் வேறு வேறு’ என்றெல்லாம் கூறுவர். இக்கருத்து மிகவும் தவறானது. சிவஞான மாபாடியும், இயற்றிய மாதவச் சிவஞான முனிவர் மக்கட் பணியையே கடவுட் பணியாக்கலாம் என்று கூறுகிறார். “மக்களை நோக்கிச் செய்யும் பசு புண்ணியங்களை, மக்களை மக்கள் என்று கருதாமல் கடவுளின் கருணையைப் பெறுதற்குரிய பாத்திரங்கள் என்று கருதிக் கடவுள் நினைப்போடு செய்யின் அது கடவுள் பணியேயாம்” என்று கூறியுள்ளமையை அறிக.

ஆதலால் நமது சிவநெறியைச் சார்ந்த சமுதாய அமைப்பைக் கோயிலைச் சார்ந்த குடிகளாகவும், குடிகளைச் சார்ந்த கோயிலாகவும் செழுமைப்படுத்தி வளர்ப்பதுதான் சமயம் தழுவிய சமுதாய அமைப்புக்குத் துணை செய்யும். இப்பணியில் நாம் வெற்றிபெறும் வரையில் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.

சிவநெறி அமைப்பில் அடுத்த பணிமனைகள்-சமய, நிறுவனங்கள்-திருமடங்களாகும். மானுடச் சாதி சமய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கும்பொழுது முதலில் தேவைப்படுவோர் ஞானாசிரியர்கள். ஞானாசிரியர்கள், மனிதர்களுக்குச் சமயக்கல்வியும் தத்துவ விசாரணையும் கற்றுக் கொடுத்துச் சமய வாழ்க்கையின் நுழைவுக்குரிய சடங்குகளாகிய தீக்கைகளைச் செய்வித்துச் சமய வாழ்க்கையில் ஆற்றுப்படுத்துவர். அப்பரடிகளுக்குத் திலகவதியார், “திருவாளன் திருநீறு” நல்கித் தீக்கை செய்வித்துத் திருவதிகைத் திருக்கோயிலுக்கு ஆற்றுப்படுத்திய அருமைப் பாட்டினை அறிக.

ஞானாசிரியர்களின் திருமடங்கள் மக்களைச் சமய வாழ்க்கைக்குப் பக்குவப்படுத்தும் பணியை ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்கள். அவை மக்களின் சமய அனுபவங்களைக் கண்காணித்து நெறிப்படுத்தி மேலும் மேலும் வளர்க்கும் பணிக்கும் பொறுப்பு உடையன, திருக்கோயில்கள் சமய அனுபவத்திற்குரியன. இந்நெறி முறையில் இணைந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றால்தான் நமது சமுதாயம் சமய நெறியில் நின்றொழுக இயலும்.

இன்றைய நிலை என்ன? திருமடங்கள் மக்களுக்குத் தீக்கைகள் செய்விப்பதை மறந்துவிட்டன. இல்லை, கடமையல்ல என்று கூறி மறுக்கின்றன. ஏன்? ஒருபுறம் நிலவும் சாதிமுறைத் தடை, பிறிதொருபுறம் இல்லறம், துறவறம் தடை என்றெல்லாம் கூறுவர். இவை பொருளற்ற சமாதானங்கள். உண்மையான காரணம் அவற்றுக்கு ‘உயர் மனப்பான்மை’ வந்துவிட்டது. மக்களிடத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதுதான் சிறப்பு, பெருமை என்ற முடிவுக்கு வந்துவிட்டன.

இங்ஙனம் நிலைமைகள் மாறியதற்குக் காரணம் அவைகளின் செல்வச் செழிப்பும் அவ்வழி கால்கொண்ட சாதீய முறைகளுமேயாம். இவை இரண்டின் காரணமாக அவைகளைச் சார்ந்து பிழைப்பு நடத்துகின்றவர்கள் அவைகளின் திசைகளையே மாற்றிவிட்டனர். மேலும் ஒரு காரணம் தமிழர்களில் பெரும்பான்மையோர் உண்மையில் துறவை விரும்புவதில்லை. அஃது அவர்களின் நாகரிகமும் அன்று. அதனால் பரவலாகத் திருமடங்களுக்குத் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தூய பணிகளைச் செய்யத் தம் பிள்ளைகளை அனுப்புவதில்லை. அதனால் திருமடங்களில் துறவிகளின் எண்ணிக்கை எப்பொழுதுமே பல்கிப் பெருகியதில்லை. அதன் காரணமாகச் சில சமயங்ககளில் சந்தையில் மலிவாகக் கிடைத்த சிலர் துறவிகளாயினர்.

எனவே, செந்தமிழ் நூற்புலமைக்கும், சித்தாந்த ஞானத்திற்கும் உறைவிடமாக இருந்த திருமடங்கள் காலப்போக்கில் அந்தத் தகுதியை இழந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பழமொழி வழங்கப்படுகிறது. வயது வந்த பிள்ளையை வைத்திருக்கிற சைவர்களைப் பார்த்துப் பிள்ளைகளை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால், “இருக்கவே இருக்கு தண்ணீர் வண்டி, இல்லையென்றால் தம்பிரான் பதவி” என்று கூறுவார்களாம்.

அதாவது நெல்லை மாவட்டத்துச் சைவ வேளாளர்கள்-வளமுடைய சைவ வேளாளர்கள். அவர்கள் ஆற்றின் தண்ணீர் மட்டுமே குடிப்பர். வாய்ப்பில்லாத சைவ இளைஞர்கள் தண்ணீர் வண்டியில் தண்ணீர் எடுத்துச் சென்று கொடுக்கும் பணி செய்வர். இல்லையேல் தம்பிரான் பதவிக்குப் போவார்கள். தண்ணீர் வண்டி இழுப்புப் பணியையும் தம்பிரான் பணியையும் ஒன்றாக எண்ணும் நிலைமையை எண்ணி வேதனைப்படத்தான் வேண்டியிருக்கிறது.

இத்தகு நிலைமைகள் வளர்ந்ததன் காரணமாகத் தகுதி வாய்ந்தவர்கள் திருமடங்களுக்குத் துறவிகளாக வரும் வாய்ப்பு அருகிப்போயிற்று. தகுதியற்றவர்களாக வந்தாலும் அவர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கும் சமயக் கல்வியை, ஞானத்தை வழங்கி அவர்கள் நிலையை உயர்த்தும் நிலையில் திருமடங்களின் பிற்காலத்திய நிலை இல்லாமல் போயிற்று.

ஒரு காலத்தில் திருமடங்களில் பணிவிடை செய்தவர்கள் கூட, சித்தாந்தச் செந்நெறிக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமுடையவர்களாக இருந்தனர். அவர்களுக்கு எளிதாக, உயர்வு தாழ்வு பாராட்டாது சமய ஞானத்தைக் கற்றுத்தருகிற இனிய எளிய மனப்போக்கு திருமடங்களின் தலைவர்களிடத்தில் இருந்தது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் மூன்றாவது மகாசந்நிதானமாக அமர்ந்திருந்த திருவருள்திரு. அம்பலவாண தேசிகசுவாமிகளிடத்தில் பூசைக்கு மலரெடுத்துத் தரும் பணிவிடை செய்த, “பணிவிடைக்கு”ச் சித்தாந்தத்தைக் கற்றுத் தர, பூப்பிள்ளை அட்டவணையென்று ஒரு சமய சாத்திர நூலே தோன்றியது. திருமடங்களில் பணிவிடை செய்தவர்களுக்குக் கூட அந்த அளவுக்குச் சித்தாந்தச் செந்நெறி ஆர்வம் இருந்தது.

திருமடங்களில் பணி செய்தவர்கள் தீக்கை பெற்றே இருந்தனர். பல பணியாளர், அலுவலர்கள் சிவபூசையே செய்திருக்கின்றனர். இன்றைய நிலை என்ன? திருமடங்களில் துறவிகள் எண்ணிக்கை பெருக வேண்டும். அவர்களுக்குக் கல்வியும் ஞானமும் வேண்டும் என்று திருவுள்ளம் பற்றிய தருமபுரம் ஆதீனத்தில் 25ஆவது மகாசந்நிதானமாக அருளாட்சி செய்த கயிலைக்குருமணி அவர்கள் செந்தமிழ்க் கல்லூரி கண்டு, திருமடத்தின் துறவிகளைத் தமிழ்த்துறையில் பயிற்றுவித்தார்கள். சித்தாந்த சாத்திர வகுப்புகளை நடத்தித் தத்துவப் பயிற்சியைக் கொடுத்தார்கள். அவர்களே வாய்ப்பு நேரிடும் பொழுதெல்லாம் சிறந்த உரையாடல்கள் மூலமும் ஞானசாத்திர உண்மைகளைப் புலப்படுத்தினார்கள்

திருமடங்களின் வரலாற்றில் மீண்டும் கற்றறிந்த துறவிகளைக் கொண்டு வரவும், பணிகளில் ஈடுபடுத்தவும் தருமபுர ஆதீனம் முன்வந்த வரலாற்று நிகழ்வு, ஒரு சமய மறுமலர்ச்சிக் காலம். இன்றைய இளைய தலைமுறை, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தச் சமய மறுமலர்ச்சியை எளிதில் மறக்காது.

பொதுவாக திருமடங்களின் பணிநிலைகள் மன நிறைவைத் தரத்தக்கன என்று கூறமுடியாது. புறச்சமயங்களின் வளர்ச்சியும், சமயச் சார்பற்ற அரசின் தோற்றமும் திருமடங்க்ளின் முன்னால் பல்வேறு பணிகளை வைத்துள்ளன; அறைகூவல்களை வைத்துள்ளன. அவைகளைச் சந்திக்கக் கூடிய சக்தியை நமது சைவத் திருமடங்கள் பெற்றாக வேண்டும். சைவத் திருமடங்கள் பொருள், வாய்ப்பு, பெருமை இவற்றின் காரணமாகத் தம்முள் முரணி நிற்கும் நிலை அறவே மாற வேண்டும்.

நமது ஒப்புயர்வற்ற சிவநெறியையும் சமுதாயத்தையும் காக்கத் தோன்றிய திருமடங்கள் தமக்குள்ளேயே முரணிக் கொண்டு முறையீட்டு மன்றங்களுக்குச் செல்வது வேதனையைத் தருகிறது. இந்த முரண்பாடுகளுக்குள்ள காரணங்கள் அற்பமானவைகள்.

நமது சைவத் திருமடங்கள் அவைகளின் நோக்கத்தை நிறைவேற்றவும், காலத்தின் தேவைக்கு, கொண்டு வந்து சேர்த்திருக்கும் பணிகளைச் செய்யவும் தம்முள் தனித்தனி நிறுவன உணர்வுகளைக் கடந்து, துறந்து ஒருமையுணர்வுடன் ஓரமைப்பாக உருப்பெற வேண்டும். பல நூற்றுக்கணக்கில் துறவிகளை-தொண்டர்களைத் தயார் செய்ய வேண்டும். முறையான பணிப் பங்கீடும், நிதிப் பங்கீடும் செய்து சிவநெறியைச் சார்ந்த மக்களை, கல்வியில், தரத்தில் ஞானத்தில் உயர்த்த வேண்டும்.

நமது திருமடங்களின் நிலையில், வலிமைக் குறைவுகள் அகநிலையிலும், புறநிலையிலும் வளர்ந்து புறத்தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்து அறநிலையச் சட்டம் அவர்களைப் படிப்படியாகக் கணக்குப் பிள்ளைகளாக்கிக் கொண்டு வருகிறது. திருமடங்களின் தலைவர்கள் தம்மைத் தாமே சிறந்த கூட்டமைப்புக்கும், நேரிய நிர்வாகத்திற்கும் தணிக்கைக்கும் மேற்பார்வைக்கும் தமக்குள்ளேயே விகார உணர்ச்சிகளின்றி ஏற்பாடுகள் செய்துகொண்டு நமக்கு நாமே ஆட்பட்டுக் கொள்கின்ற நிலை உருவாகுமானால் திருமடங்களின் வரலாற்றில் அரசின் தலையீடுகளைக் குறைக்க முடியும்.

விவிலிய சமயத்தில் அரசின் தலையீடு இல்லை. ஏன்? அது அத்தகைய கூட்டாட்சி முறையை மேற்கொண்டிருப்பதே காரணம். கிறித்துவத் துறவிகள் இடமாற்றங் களுக்கும் பணிமாற்றங்களுக்கும் உரியவர்கள். அவர்களிடத்தில் வரம்புகள் வரையறுக்கப்படாத வைப்புநிதியும் இல்லை. வரையறுக்கப்படாத அதிகாரங்களும் இல்லை.

தன்னிச்சைக்கும் சுதந்திரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நமது சமயத் தலைவர்கள் அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். தன்னிச்சைப் போக்கு கீழ்மையானது. யாருக்கும் கட்டுப்படாதது. ஏன்? தமக்குத் தாமே கூடமனசாட்சிக்குக் கூட கட்டுப்பட மாட்டார்கள்.

சுதந்திரம் என்பது துய்மையானது; உயர்ந்தது; சுதந்தர உணர்வுடையவர்கள், சொல்லும் உரிமையும் பெறுவார்கள் கேட்கும் கடமையும் பூண்பார்கள். ஆளவும் செய்வர்; ஆட்படவும் செய்வர். இத்தகு சுதந்திரம்தான் திருமடங்களுக்குத் தேவை.

தம் நெறி நிற்பார், நம்மையொத்த திருமடத்துத் தலைவர்களுடன் கலந்து பேசியும் சொல்வன சொல்லியும், கேட்பன கேட்டும் தக்காங்கு ஒத்ததறிந்து ஒழுகி, ஆளவும் ஆட்படவும் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டு, பணிப்பங்கீடுகள் செய்து முறையாகச் செயற்பட்டால்தான் “மேன்மைகொள் சைவ நீதி” உலகம் எல்லாம் விளங்கும். இதனை அவர்கள் செய்ய முன்வர வேண்டும். இல்லையெனில் சித்தாந்தச் செந்நெறியில் ஆர்வமுடையோர் இந்நிலை கொள்ளும் வழிவகை பற்றிச் சிந்திக்க வேண்டும்; செயற்பட வேண்டும்.

இந்தியா சமயச் சார்பற்ற ஒரு நாடு. இந்த நிலையை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கடந்த காலச் சமயத் தலைவர்களும் புரோகிதர்களும் கொண்டு வந்து விட்டனர். இந்த அவல நிலை உருவாகாமல் தடுக்க தோன்றிய புத்தர், குருநானக், பசவேசர், விவேகானந்தர், வள்ளலார் ஆகிய இந்திய சமயச் சிந்தனையாளர்களுடைய தூய சமுதாய நலம் பயக்கத்தக்க கருத்துக்களை இறுக்க நிலையடைந்த பழைய சமய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. இவைகளின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றாத, அயல் நிலங்களில் தோன்றி வளர்ந்து வந்த சமயநெறிகளை இந்திய மக்கள் அவாவி அடையும் நிலை தோன்றிவிட்டது.

இன்று இந்தியாவில் பல சமயத் தலைவர்கள் வாழ்கிறார்கள். இன்றையச் சூழ்நிலையில் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடாக விளங்குவதும், இந்திய அரசு சமயச் சார்பற்ற அரசாக விளங்குவதும், தவிர்க்க முடியாதன. அதுவே நியாயமும் நீதியும் சார்ந்த முறையாகும். ஆதலால் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடாக விளங்குவதை மனித மதிப்புகளை அறிந்தோரும், சமயக் காழ்ப்பு அற்றோரும், மனித குலத்தின் அமைதியை விழைவோரும் விரும்பி வரவேற்பது கடமை.

இந்திய நாட்டின் சூழலில் மத மாற்றங்களும், மத வெறிச் செயல்களைத் தூண்டும் பேச்சும், எழுத்தும் கட்டாயமாகத் தடைசெய்யப் பெற வேண்டும். வயது வந்தோர் தமது மதமாற்றத்திற்குரிய அவசியத்தை அல்லது விளக்கத்தை முறையாக ஒரு முறை மன்ற நடுவரிடம் எழுத்து மூலம் தெரிவித்துத் தக்க காரணங்கள் இருப்பின் இசைவு பெற்ற பிறகு மாறலாம் என்ற ஒழுக்க நடைமுறையைச் செயற்படுத்த வேண்டும்.

ஆட்டு மந்தைகளைப் போல மக்களை நினைத்து, ஆசைகளைத் தூண்டிவிட்டுத் தமது சமயத்தைச் சார்ந்த மக்கள் தொகையின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் இந்தியாவில் தமது சமய ஆதிக்கத்தை, அவ்வழி சாதி இன ஆதிக்கத்தை வளர்த்து நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மதமாற்றங்கள் செய்ய எந்தச் சமய நிறுவனத்திற்கும் உரிமை இருத்தல் கூடாது. தொடர்ந்து இந்த மனப்போக்கை அனுமதித்தால் இந்தியாவின் புகழுக்குக் காரணமாய் அமைந்த சமயப்பொறை கெடும்; மீண்டும் உலக நாடுகளை வருத்தி வரலாற்றுக்குச் சீரழிவு செய்த சமயக் கலகங்கள் நிகழ வாய்ப்பளித்ததாகிவிடும்.

ஆதலால், உண்மையான சமய நம்பிக்கையுடைய ஒவ்வொருவரும் இன்றைய நிலையில் இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாக விளங்கச் செய்ய மனம் ஒப்பி முன்வர வேண்டும். மறைவாகக் கூட சமயப் பொறைக்கு எதிரான சிந்தனைகளை, செயல்களை யாரும் ஊக்குவிக்கக்கூடாது. அவரவர் தத்தம் சமயநெறியை மேற்கொண்டொழுதல், முறையாக வளர்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுதல் நல்லது.

ஒரு நாட்டின் நிலப்பரப்பில் பிறிதொரு நாடு ஆக்கிரமித்தல் எங்ஙனம் தவறு என்று “உலக நாடுகளின் பேரவை” விதிகள் இயற்றியுள்ளதோ அதுபோலச் சமய நெறிகளும் பிறிதொரு சமயத்தை மேவி அமுக்குவதில்லை; சமயக் கருத்துக்களில் கலப்படம் செய்வதில்லை என்ற நியாயத்திற்கு உடன்பட்டு வரவேண்டும்.

இன்று உலக நாடுகளின் அரசியல், ஆட்சி உரிமைகள், பொருளியல் காரணமாக நாடுகளிடையில் மோதல்கள் வராமல் தடுக்கும் பணி இதன் பணி வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவி செய்கின்றன. இந்த உலக நாடுகள் பேரவையின் பணியால் பதட்டநிலை கட்டுப்படுத்தப் படுகிறது. அதுபோல உலகச் சமயங்களின் பேரவை சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். பல உறவுகளை வளர்க்க வேண்டும். காலப்போக்கில் உலகப் பொதுச் சமயம் காண வேண்டும். சமய நெறித் தலைவர்கள் இது பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். உலகச் சமயப் பேரவை தோன்றின் மனித குலம் மேம்பாடுறும்.

இன்று உலகம் பதற்ற நிலையிருக்கிறது. ஒவ்வொரு நாளும் படைகளைப் பெருக்கி வளர்க்கிறது. சில விநாடிகளில் மனித உலகத்தை-உயிரினங்களை அழிக்கக்கூடிய அணு ஆயுதங்களைச் செய்து குவிக்கிறது. இந்த நிலையில் சமய நெறிகள் வாளாயிருக்குமாயின் சமய நெறிகளால் மனித குலத்திற்கு யாது பயன்? இங்ஙனம் சமய நெறிகள் தம்முள் ஒத்ததறிந்து செயற்படாமையின் காரணமாகவும் மனிதகுல மேம்பாட்டுக்குச் சமயநெறி முழுமையாகப் பயன்படாததன் காரணமாகவும் ஏமாற்றம் அடைந்த சிந்தனையாளர்கள் கடவுள் நம்பிக்கையில்லாத் வாழ்க்கை நெறிகளை, சமயம் சாராத வாழ்க்கை நெறிகளை, தத்துவங்களைக் கண்டு வருகின்றனர். இந்த அணிக்கு மார்க்சியம் தலைமையேற்றுப் பீடு நடைபோட்டு வருகிறது.

கிறித்துவ சர்ச்சுகளின் ஏகபோகத்தை-மக்கள் மன்றத்திலிருந்த தடையிலாச் செல்வாக்கை “புதுயுகப் புரட்சி” கண்ட சோவியத்துச் சமுதாயம் தடுத்து நிறுத்தி, சர்ச்சுகளிடமிருந்து மக்களைப் பிரிந்து எடுத்துச் சென்று புதிய வாழ்க்கை முறைக்கு ஆயத்தம் செய்கின்றது. இந்த வரலாற்று நிகழ்வு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கு நாம் இப்பொழுது வரவில்லை.

“கடவுள் நம்பிக்கையில்லாமல், சமயம் சார்ந்த சீலமில்லாமல், ஒரு பொதுமைச் சமுதாயத்தை அமைத்து மானுடச் சாதியை இன்பமாக வாழ வைக்க முடியும்” என்ற நம்பிக்கையை ஓரளவு மார்க்சியம் தந்துள்ளது. வரலாற்றுப் போக்கிலும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. இது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. ஆயினும், பொது வுடைமைச் சமுதாயத்தில் எல்லா நலங்களும் எய்திய பிறகும்கூட, ஏற்படும் மனிதக் குறைபாடுகளுக்கு என்ன மாற்று? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. உலகியல், பொருளியலைப் பொறுத்தவரையில் பொதுவுடைமைக் கொள்கை சரியானது என்றே நாம் கருதுகின்றோம்.

சிவநெறியில் உள்ள கடவுட் கொள்கை நீங்கிய பகுதி, பொதுவுடைமை என்று பெயர் பெற்றுள்ளது என்று கூறினாலும் தவறன்று. மார்க்சீயம், கடவுளால் உயிர்களும், உலகமும் படைக்கப்பட்டன என்ற கொள்கையுடைய சர்ச்சு மதத்தைச் சந்தித்தது. சைவசித்தாந்தம் சொல்லும் உயிர் நிலைக்கும் மார்க்சீயத்துக்கும் வேறுபாடு பெரிதன்று. மனிதனைவிட மேம்பட்ட ஒன்றை மார்க்சீயம் ஏற்பதில்லை. சைவ சித்தாந்தம் மனிதனை மேம்பாடுடையவனாகவே தான் காண்கிறது.

பல ஆண்டுகள் சோவியத் புரட்சித் தொண்டர் படையில் பணி செய்து பொதுவுடைமைத் தத்துவத்திற்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்து, பொதுவுடைமைத் தத்துவத்தைப் பொருத்தி, அழித்துவிட எண்ணிய நாசிசத்தை - பாசிசத்தை எதிர்த்து, வெற்றிவாகை சூடிய வீரன் “ஸ்டாலின்” வாழ்க்கையில் ஏற்பட்ட பின்விளைவுகள் என்ன? இரண்டாவது உலகப் பெரும்போரில் ஸ்டாலின் பெற்ற பெரு வெற்றிக்குப் பிறகு, ஸ்டாலின் தன்னிச்சைப் போக்காக நடந்து கொண்டார்.

பொதுவுடைமைக் கொள்கையின் இன்றியமையாத ஒழுக்க நெறிகளாகிய கூட்டுச் சிந்தனை, கூட்டுச்செயல் ஆகியவற்றினின்றும் முறை பிறழ்ந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அவருடைய மரணத்திற்குப் பிறகுகூட உயர்தரக் கல்லறையிலிருந்து அவருடைய பிணம் பொதுவுடைமைக் கட்சியினாலேயே அகற்றப் பெற்றது. இந்த விளைவுகளை உற்றுநோக்கின் சைவசித்தாந்தம் கூறும் ஆணவம்-இல்லை என்று கூற யாருக்கு மனம் வரும்? உயிர் இயல்பில் ஆணவச் சேர்க்கையுடையது.

ஆணவம், உயிரைத் தன்னிச்சைப் போக்கிலும் அகங்கார வழியிலும் செலுத்தும்; அதன் காரணமாக உயிர் கீழ்மையுறும். சூழ்நிலைகளின் காரணமாக ஆணவம் தோற்றப்படாதிருந்தாலும், செயற்படாதிருந்தாலும் சூழ்நிலைகள் மாறும்பொழுது உயிரின் ஆணவ இயல்பு மேலிட்டுச் செயற்பாட்டுக்கு வரும். இதனை உணர்ந்து என்றும் உயிரை, உணர்வை கடவுள் என்ற தலைவனுக்கு ஆட்படுத்தி வைப்பது தற்காப்பாகும் என்ற சித்தாந்தச் செந்நெறியின் கருத்து ஆராய்தற்குரியது.

பொதுவுடைமைக்கொள்கையின் குறை-நிறைகளை ஏற்றுக் கொண்டு ஈடுகொடுத்துச் சமய நெறியை வளர்க்கச் சமயங்கள் முன்வரவில்லை. எனவே மனித குலத்தின் பொது நன்மை கருதியும் சமயப் பண்புகளைக் காக்கவும் “உலகச் சமயங்களின் ஒருங்கிணைப்பு நிறுவனம் காணவேண்டும். அது காலத்தின் தேவை. இத்தகு பொற்காலமே சித்தாந்தச் செந்நெறி படைக்கும் தகுதியுடையது. அந்தப் பொற் காலத்தை எதிர்பார்ப்போமாக!”

சைவ சித்தாந்தத்தில் வாழ்க்கை அருமையானது. சைவ சித்தாந்தத்தில் சாதிகள் இல்லை; சிறந்த மனையறம் போற்றப் பெறுகிறது. பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பே சைவ சித்தாந்தச் செந்நெறி! சைவ சித்தாந்தத்தின் தத்துவம் செயலுருக் கொள்ளுமானால் வையகம் இன்புறும்! இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!

சிவ சிவ