குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/மணிபல்லவத்தில் (நயினாதீவு)
இன்று அறிவியலார் மின்னல் வேகத்தில் முன்னேறிச் செல்கிறார்கள், புதியன கண்டு - அவற்றிற்கு அளவுகடந்த வரவேற்பளிக்கின்றார்கள். பழமையை வெறுக்கின்றார்கள். இன்றைய உலகம், புதுமையுமற்று - பழமையுமற்று இரண்டுங் கெட்ட நிலையிலே நிற்கிறது. மேலை நாட்டில் புதியன வளர்ந்து வருகின்றன. ஐன்ஸ்டீன் கருத்து பைபிளை விலக்கிச் செல்கின்றது. பைபிள் புதியவற்றிற்கு மாறுபட்டபோதும் உயிர் வாழ்கின்றது; அதன் பழமை பாராட்டப்படுகின்றது. நம்மவர் புதியன கண்டு நமது பழைய சமயச் செய்திகளை, நையாண்டி செய்கிறார்கள். நம்மிடையே பழமை வளர வில்லை; சடங்குகளே வளர்கின்றன. அவற்றின் பலன் நம்மைக் கிட்டுவதில்லை. ‘முள் நகராத மணிப்பொறிபோலச் சமயச் சடங்குகள் நடைபெறுகின்றன. பெண்டுலம் ஆடினாலன்றோ முள் நகரும். நெஞ்சைத் தொட்டாலன்றோ சமயச் சடங்குகளால் பலன் விளையும்.’ ஆலயமணிகள் நெஞ்சை அசைத்து விடவேண்டும். சோற்றால் செங்குருதியை ஆக்குவதுபோலக் கோயில் சடங்குகளால் இளைஞர் உள்ளங்களை அசைத்து விடவேண்டும். பொருளாதார மேடுபள்ளங்கள் சமயத்தை வெறுக்கச் செய்கின்றன. சமயம் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு ஆலயங்களிலே சிறைப்பட்டுக் கிடக்கின்றது. பொருள்வளங் கொழிக்கும் நாடுகள் புண்ணிய பூமிகளா? அங்குப் பிறந்திருப்போர் அத்துணை பேரும் புண்ணியவான்களா? அங்குள்ள மக்கள் மற்றவர்களின் அல்லலைப் போக்கிப் பொருளாதாரத்தைச் சமப்படுத் தலைக் கண்ணாரக் காண்கின்றோம்.
சட்டம் புறத்தே நடைமுறையைக் சீர்ப்படுத்த உதவுமேயன்றி மனத்தை மாற்றாது. சட்டத்தால் மனத்தை மாற்ற இயலாது. நீதியாலேதான் மனமாற்றத்தைச் செய்யமுடியும். சமய வாழ்வு பெற்று, இல்லார்க்கு இரங்கித் தொண்டு புரிந்து வாழ்ந்தால் இம்மையே சோறும் கூறையும் பெறலாம். கோயிலிலே அன்பின் அடிப்படையில் சடங்குகள் நடந்து உள்ளங்களைத் தொடவேண்டும். ஆண்டவனின் திருக்கோலக் காட்சியைக்கண்டு கசிந்து கண்ணீர் மல்கவேண்டும். இவ்வாறு ஆலயங்களில்லாவிடில் அவற்றை விட்டு, உள்ளம் கவரும் கடலையும் - மலையையும் கைதொழுவோம், “மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்” என அப்பரடிகள் தேவாரம் இதற்கு வழி வகுத்துத் தருகிறது.
எறும்பு, ஈ, யானை, எந்த ஆகமப்படி பூசை புரிந்தன. வழிபாடு நமக்காகவே நடைபெறுகின்றது. நாம் உய்தி பெறவே இறை வழிபாடு எழுந்தது. “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்” என மணிவாசகர் இதனை வற்புறுத்துகிறார். காற்றை நாம் சுவாசிப்பதனால் காற்றுக்கு என்னபயன்? நாம்தான் பயன் பெறுகிறோம்? சோற்றை நாம் உண்பதால் சோற்றுக்கு என்னபயன்? நாம் தான் பயனடைகிறோம். இவற்றைப்போலவே கடவுளை வணங்குவதால் நாமே பயன் பெறுகின்றோம். உயர்ந்த எண்ணத்தால் வரும் பரம்பரையே குலமாகும். இக்குலத்தை நாம் விரும்புகின்றோம். அதைக்கூட உயர் நிலைப்பட்டோர் கை விடுவர். ஆதலால் எண்ணம் உயர்ந்ததாகவும் தூயதாகவும் இருப்பதற்குக் கடவுள் வழிச் செல்லல் இன்றியமையாதது.
மனிதகுலம் சுதந்திரமாகச் சுற்றிச் சுழன்று திரிய ஆசைப்படுவதில் வியப்பில்லை. எல்லா இனத்தவருடனும் இணைந்து - பிணைந்து வாழ்வதிலும், உரையாடுவதிலும் உவகை கொள்கிறது மனித இனம். இந்தச் சுதந்திர நோக்குக்கும் முட்டுக் கட்டையாக - தடையாக எது குறுக்கிடுகிறதோ அதை அகற்றி அழிக்கவேண்டுமென்ற வேட்கை உண்டா கின்றது. மனித மேம்பாட்டுக்கும், சமுதாய உயர்வுக்கும் உகந்த சில கருத்துக்களையும் நடை முறைகளையும் யாராவது தடுத்தார்களானால் அத்தடையை நீக்க முயற்சிப்பது தன் கடமையென மனிதன் காலப்போக்கில் உணர்ந்து வந்திருக்கிறான். அத்தகைய உணர்ச்சியின் உந்தல்தான் சுதந்திரப் பற்றை அவனுக்குக் கொடுத்திருக்கிறது. தமிழினம் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதில் முன்னின்று உழைத்திருக்கிறது. விரிந்த - விசாலமான மனப்பான்மை தமிழினத்துக்கு இருந்தது போலவே, சுதந்திரம் காக்கும் உணர்வும் இருந்தது. நீங்கள் வாழும் ஊர் எவ்விடத்திலுள்ளது? என்று அன்று கேட்டால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பதில்தான் வரும். அவ்வளவு தூரத்துக்கு அகன்ற நெஞ்சு அப்போதிருந்தது. தன்னைப்போல் பிறரை நேசித்து, தன் நாட்டைப்போலப் பிறநாட்டையும் எண்ணி எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஓர் இனம் என்றபடி வாழ்தல்தான் தலையாய வாழ்வு என்று கருதியவர்கள் அன்றையத் தமிழர்கள்.
அன்றையத் தமிழர் பெரியோரைப் பேணினர் - சுற்றத்தைத் தழுவினர். இரந்தவர்க்கு ஈந்தனர். இன்னல் கண்டவிடத்து இரங்கினர். எல்லாவற்றுக்கும் சிகரமாகத் தமக்கு மேலான சக்திக்கு மதிப்பளித்து மதச்சார்புடைய மகிழ்ச்சி வாழ்வு வாழ்ந்தனர். கடவுள் நம்பிக்கையும், மதச் சார்பும் மனிதனுக்கு இன்றியமையாதனவென்று கருதி வாழ்ந்த்னர் உள்ளத்தூய்மைக்கும், உயர்ந்த வாழ்வுக்கும் உவகை நிலைக்கும் உள்ளுறுசோதியை, உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை நம்பினர். நலம் பெற்றனர். யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம், மதத்தைச் சார்ந்த மக்களுக்கு இருந்தது. தலைபோகின்ற நிலைவந்தாலும் கடவுளைத் தவிர வேறெவர்க்கும் தலைகுனியாத தருக்கு அப்போதிருந்தது. நாங்கள் எவருக்கும் குடிமக்களல்லர். எங்களை எமனும் எதுவும் செய்துவிடமுடியாது; நரகத்துக்கு நாம் செல்லப் போவதில்லை. எந்தத் துன்பமும் மக்களை எட்டிப்பாராது. இதனாலே நாம் இன்புற்றுச் செம்மாந்து உலவுவோம்; பிணி துன்பம் இல்லாத பேரின்பவாழ்வு எங்களுடையது. நாங்கள். ஒரேயொருவருக்குத்தான் பணிந்தவர்கள். அவரும் தமக்கு மேலாக யாராவது ஒருவரை வைத்திருப்பவரல்லர்-அவர் எவருக்கும் குடிமகன் அல்லர்; அவருக்கே எமது பணிவு என்றுமுண்டு என்றார் அப்பரடிகள். “நாமார்க்கும் குடியல்லோம்” என்பதே அத்திருப்பாடல்.
அப்பரது சுதந்திர தாகமும் உரிமை மனப்பான்மையும் ஓர்ந்து உணரத்தக்கவை. சுதந்திர தாகத்தை அப்பர் வெளிப்படுத்திய முறையினை நாம் மறந்துவிடலாகாது. அப்பரடிகளின் அசைக்கமுடியாத கடவுள் நம்பிக்கைதான் பல்லவ மன்னனின் கட்டளையைத் துச்சமென எண்ண வைத்தது. கடவுள் நம்பிக்கையுடைய சமய சீலர்கள் எதற்கும் பயந்து விடுவதில்லை. அவர்களின் சமயச் சார்புடைய வாழ்வு அவர்களை அல்லலுக்குள் ஆழ்த்துவதுமில்லை என்பதை அப்பர் திருவாக்கால் நாமறிகிறோம். சுதந்திர உணர்ச்சிக்கு வித்தூன்றிய முதல் வித்தகரே. அப்பரடிகள்தான். அவரை அடியொற்றித்தான் ஏனைய கவிஞர்கள் சுதந்திர உணர்ச்சிக்குக் கவிதையால் உதவினார்கள். நமது தலைமுறை யிற்றோன்றிய பாரதி கூட அப்பரது அடிச் சுவட்டைப் பின்பற்றியமை பாராட்டி மகிழத்தக்கது.
“பூமியில் எவர்க்குமினி யடிமைசெய்யோம். பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பாடியமை பாரதியின் புலமை வெளிப்பாட்டைக் காட்டுவதோடு, அப்பரடிகளின் அருட்பாடலையும் நினைவூட்டி நிற்கிறது.
ஓரினமாக ஒன்றி வாழ்ந்த வாழ்வில், எப்படியோ சாதி முறை நுழைந்து விட்டது. இச்சாதீய நுழைவு சிலர் வாழவும், பலர் வீழவும், சிலர் பெருக்கவும், பலர் வாடவும், சிலர் சிரிக்கவும், பலர் அழவும், உதவி செய்தது. தெளிவாகச் சொன்னால் சிலருடைய வளமான வாழ்வுக்குச் சாதி உறு துணையாய்-ஊன்றுகோலாய் உதவியது. பிரித்து வைத்து இன்பம் கண்டவர்களும், தள்ளி வைத்துச் சுகம் அனுபவித்தவர்களும் சாதீய நெருப்புக்கு நெய் வார்த்தவர்கள். இந்தச் சாதீய நெருப்பானது சமயத்தின் தலையாய தத்துவங்களையும் மாசு படுத்தி விட்டது. நமது சைவ சமயத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும் இச்சாதீய நெருப்பால் தகிக்கப்பட்டு விட்டன. ஆண்டவனின் குழந்தைகள் ஆண்டவனின் விருப்பத்திற்கு விரோதமாகத் தள்ளியும், விலக்கியும் வைக்கப் பட்டார்கள். இதனால், நமது சமயத்திற்குத் தளர்ச்சியும், வீழ்ச்சியும் வரலாயின. இவற்றையெல்லாம் நல்லபடி சீராக்கி, உயர்ந்ததொரு தொண்டினை உருவாக்குதல் சைவ உலகத்தினர் கடன் எனக் காட்டி - வாழ்த்தி-விடை பெற ஆசைப்படுகின்றோம்.