குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/குனுகலோயாவில்
உங்களது அன்புக்கும் பாராட்டிற்கும் முதற்கண் என் அகங்கனிந்த வாழ்த்து. கண்ணுக்கும், செவிக்கும் விருந்தளிக்கக் கூடிய அழகிய இயற்கைச் சூழலில் வாழும் உங்கள் முன் நிற்பது மகிழ்வைத் தருகின்றது. மனிதப் பிறப்பின் மாண்புறு நிலையை நயக்கத்தக்க நல்ல வழியில் அனுபவித்து உயரப் பழகிக் கொள்ளவேண்டும். மனிதன் வேகமாக உழலுகிறான். சுழலுகிறான், ஆனால் ஏன்? எதற்காக உழலுகிறோம்? என்று அவன் சிந்திப்பதில்லை. குறிப்பாகத் தமிழர்களாகிய நமக்குக் கேள்விகேட்பதென்பதே கசப்பாயிருக்கிறது. எதையும் துருவித்துருவி நுணுக்கமாகவும் ஆழமாகவும் ஆராய்ந்ததினாலேதான் தத்துவாசிரியர்களும் பெரும் பேராசிரியர்களும் தோன்றினார்கள். மனிதச் சுழற்சி ஒருவிதத் தூய்மையைத் தருகிறது. அனுபவ உண்மைகள் அகத்தினை அலசித் துய்மையாக்கித் துலங்கவைக்கின்றன.
கடலிலே உள்ள தண்ணீர் சூரிய வெப்பத்தினால் வான் நோக்கிச் சென்று, மீண்டும் மழையாகி மலைவழியே வருகிறது. மனிதனின் உள்ளப்பாங்கில் உப்புத்தன்மை நிறைய உண்டு. உப்புத் தன்மை சுழற்சி அனுபவத்தால் அற்றுப் போகிறது.
தங்கத்திற்கு எவ்வளவோ மதிப்புண்டு. அதையொட்டிய வரலாறோ பெரிது. நிலத்திலே தோன்றி வளர்ந்து நமது கைக்கு வந்து பலவழிகளிலும் பக்குவமாகிப் பயன் படுத்தப்படுகிறது. நம்முள்ளே உள்ள ஆன்மா தங்கத்துக்குச் சமமானது. ஆனால் அது நிறைந்த பல அழுக்குகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது. அழுக்கை அகற்றி ஆன்மாவை நல்வழிப்படுத்த ஆன்மநேயத் தொண்டுகளிலும் சிந்தனைகளிலும் நாம் ஈடுபடவேண்டும். அழுக்கை அகற்றவே ஆண்டவன் நம்மை இங்கு அனுப்பினான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நன்றாகக் குளித்துவிட்டு வாருங்கள் என்று நல்ல நீர்த்தேக்கத்தைக் காட்டி விட்டிருக்கிறான். நாம் நீர்த்தேக்கத்தைப் பற்றி நினைத்துப் பாராமல் அதனருகே நாற்றம் எடுத்துக்கிடக்கும் சேற்றினை வாரிப் பூசிக்கொண்டிருக்கிறோம். உடலுக்கு நலம் தேவை என்பது மறுக்க முடியாதது. உடல் நலத்தோடு உள்நலத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
உடலைத் தூய்மையாக்கப் பலவகையான சோப்புக்களை உபயோகிக்கின்றோம். ஆனால் உள்ளத்தூய்மைக்கு எந்தச் சோப்பையும் நாம் தேடுவதில்லை. உள்ளத்தின் அழுக்கினைப் போக்க வல்ல சோப்பை ஆண்டவனிடத்திலே தான் நாம் சென்று பெற வேண்டும். தேவாரம் திருவாசகம் போன்றவற்றைப் பணமாகக் கொடுக்க எம்பெருமான் நம் உள்ளங்களைத் தாமாகவே கழுவிச்சுத்தமாக்கி விடுவர். எல்லாருக்கும் எல்லாச் செல்வங்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ விருப்பமுண்டு. ஆனால் முயற்சி செய்து முன்னேற முடியாத சோம்பல், உயரவிடாமல் தடுக்கிறது. முயற்சியின்றியே எல்லாம் வரவேண்டும் என்று கருதும் மனப்பான்மை மறையவேண்டும். உழைப்பில் ஊக்கமும், சேமிப்பில் நாட்டமும் செலவில் சிக்கனமும் தேவை. உழைப்பைக் குறைத்துச் செலவைப் பெருக்குவதுதான் இன்றையநிலை. உழைப்பின் வழியால் வரும் வருவாய் சிறிதானாலும் செலவின் வழி விரிவாக இல்லாவிட்டால் தீங்கில்லை என்கின்றார் வள்ளுவர்.
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை
நன்னீர்ப் பெருக்கை அணைகட்டி நல்லமுறையில் வாய்க்கால் வழிச் செலுத்திப் பயிர்த்தொழிலுக்குப் பயன்படுத்திக் கொள்வதைப் போன்று அருள்நீர்ப் பெருக்கைப் பாய்ச்சி அப்பயிருக்கு ஆக்கமளிக்க வேண்டும். பயிர்த் தொழிலில் மிக மிகக் கவனமாய் இருப்பது அவசியம். களைகளைக் களைந்து, யானை போன்ற மிருகங்களிடமிருந்து காத்து-நாற்று நட்டால்தான் நெற்பயிர் வளர்ந்து வீட்டுக்கு வந்து, பசியைப் போக்கும். அகப் பரப்பில் ஆன்மீகப்பயிரை அருள் நீரால் வளர்த்து ஐம்புல வேடர்களின் முற்றுகைகளிலிருந்தும் காத்து, ஆன்மநேயர்களாக வேண்டும்.
மூளை விரிவதைவிட இதயம் விரிய வேண்டும். இதய விரிவு “இன்பமே துன்பமில்லை” என எண்ணி ஆன்மீகப் பயிர் வளர்க்க உதவும். இன்பத்தைக் குறைவிலாது அள்ளித் தரும் இறைவன் நமது அழுக்குகளை வாங்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறான். ஆண்டவனது பிச்சாடன மூர்த்திக் கோலம் நிகரில்லா உண்மையை வெளிப்படுத்துகிறது. ஆன்மாக்களின் நன்மைக்கும், நல்வாழ்வுக்கும் இடையூறாயிருக்கும் எல்லாவற்றையும் பிச்சை கேட்பதைப்போல் கெஞ்சிக் கேட்டுப் பெறுகிறான். அவனது கெஞ்சும் நிலையைப் பெற அவன் திருவடிகளில் ஆழக்குளிக்க வேண்டும். நீராடல் உடல்நலம் தருவதுபோலவே திருவடிக் குளிப்பு ஆன்மநலம் நல்கும். ஆன்மநேயத்திற்கு அன்பே அடிப்படை அன்பில்லாமல் ஆன்மீகப் பயிர் வளராது. என்னதான் படாத பாடுபட்டாலும் அகப்பரப்பிலே அன்பு விதையைத் தூவாவிடில் என்னபயன்? கடவுள் நம்பிக்கை என்றவிதை அன்பை உருவாக்க உதவுகிறது. அன்பு விதை அருள் என்னும் குழந்தையை ஈன்று புறந்தருகிறது. அறம் இன்பத்தைத் தருகிறது.
பலனைப்பெற அதற்கு மூலகாரணமானது எதுவோ அது பயன்படுத்தப்பட வேண்டும் ஓர் ஊரிலே இரு சகோதரர்கள் இருந்தார்கள்; இருவரும் விவசாயிகள். ஒருவன் விவசாயத் துறையிலே பாடுபட்டுப் பயனடைந்தான். மற்றவனோ பாடுபட்டான். ஆனால் பயனைப் பெறவில்லை. பயன் கிட்டாததால் ஒருவித வெறுப்பு அவனிடத்தே அரும்பியது. வாழ்வில் வெறுப்புக் கொண்டவன் போல் நின்றான். அவனருகே ஒரு பெரியவர் அணுகி, வேளாண்மை பற்றி விசாரித்தார். அப்பொழுதுதான் அவன் வேதனைக்கு வித்தான வேடிக்கை வெளியான்து. ‘உழுதாயா? பரம்படித் தாயா? உரம் போட்டாயா!’ என்றெல்லாம் பெரியவர் கேட்டார். “ஆம். ஆம்” என்றே அவன் பதில் சொன்னான். பெரியவருக்கு ஐயம் எழுந்தது! உடனே “விதை போட்டாயா?” என்று கேட்டார். விவசாயி விழித்தான்.
இரத்தத்தை வியர்வையாக்கி காலை முதல் மாலை வரை உடலை வருத்திப் பாடுபட்டவன் விதை போட மறந்து விட்டான். வேளாண்மை பயன்படுமா? விதை இல்லாது எங்காவது விளைச்சல் இருக்குமா? அது போல. வாழ்வின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கை என்ற விதை வேண்டும். கடவுள் நம்பிக்கை அற்ற வாழ்வு விதைக்காத வேளாண்மைக்காரனின் நிலைக்குச் சமமானது.
நியாயத்தை, அன்பை, அருளைப் போதிக்கவே கடவுள் நம்பிக்கையும், சமயச் சார்பும் தேவைப்படுகின்றன. வாழ்க்கைக்குத் தேவையுள்ள பொருள்களான உணவு உடை உறையுள் போன்றவற்றை முயற்சியால் பெறுவது போலவே, இம்மைக்கும், மறுமைக்கும் முக்கியமாக வேண்டப்படும் கடவுள் அருளை முயன்று பெற வேண்டும். அருள் வெள்ளத்தால் அகத் தூய்மை உண்டாகும். சிலரது மனங்களிலே சிங்கம், புலி, கரடி போன்றவைகள் வாழ்கின்றன. அவைகளை விரட்டி, ஆண்டவனின் அருள் வெள்ளம் பெருக்க வேண்டும். புறத் தூய்மைக்கு, பொருள் இன்றியமையாதது போல, அகத் தூய்மைக்கு அருள் இன்றியமையாதது. இதனை நாம் கருத்தில் கொண்டு, கடவுளை வழிபடும் மனப்பழக்கத்தினை உண்டாக்க வேண்டும்.கடவுளை எப்படி வணங்குவது? இது ஒரு பிரச்சனை. வழிபாட்டிற்குச் சிந்தனை தேவை. சிந்தனையை ஒரு நிலைப்படுத்த ஒரு சாதனம் வேண்டும். அச்சாதனமே தெய்வ உருவங்கள். உருவ வழிபாட்டின் சிறப்பால் உள்ளுறு சோதியைக் காணமுடியும். தெய்வ உருவங்கள் கற்களிலே செதுக்கப்படுகின்றன. கல்லைக் கலையாக்கி கடவுளைக் கண்டு வணங்கியவர்கள் நாம். நான் பேசிக் கொண்டிருப்பதைப் பெரிதாக்கி உங்கள் காதுகளில் செலுத்துகிறதே இந்த ஒலி பெருக்கி, இதன் ஆரம்பநிலை வெறும் இரும்புதான். வெறும் இரும்பு தட்டி நிமிர்த்திப் பயனுள்ளதாக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் வெறும் கல், சிற்பியின் சிந்தனைச் சிறப்பாலும்-கற்பனை வளத்தாலும்-கலைத்துடிப்பாலும் கடவுட்கோலம் எடுத்திருக்கிறது. கடவுள் உருவங்களைக் கடவுளாக எண்ணும்நிலை வளர வேண்டும்.
செவிடனுக்குக் காது கேட்பதில்லை. அதைப்போல் நெஞ்சம் செவிடாக இருப்பவனுக்கு இறைப்பற்று ஏற்படுவதில்லை. நெஞ்சச் செவிடு நீங்க நெஞ்சத்தால் விரிந்தவர்கள் உதவவேண்டும்.
இறைவனை வழிபடும் முறையிலே உயிர்ப்பலி மிகவும் கொடுமையானது. உயிர்ப்பலியை ஆண்டவன் விரும்புவதாக எண்ணக்கூடாது. தனது உயிர்களை வருத்தி அழிக்க ஆண்டவன் விரும்புவதில்லை. சிலர் இறைப்பற்று என்றுகூறி, ஆடு, கோழிகளைப் பலியிடுகிறார்கள். அது தவறு. இத்தகைய பாதகச் செயல் பரமன் சந்நிதானத்தில் நடவாது தடுக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக இருந்துவந்த வழக்கம் என்பதால் உயிர்ப்பலியைத் தடுக்கச் சிலர் மறுக்கிறார்கள். அறிவு விரியாத அந்தக்காலத்து விவகாரங்கள் அனைத்தும் அறிவு விரிந்த-நாகரிகம் வளர்ந்த இந்தக் காலத்தில் நடைபெறுவது நல்லதல்ல.
நமது காலிலே ஒரு ஆணி குத்தினால் “ஆ” என்று அலறித் துடிக்கிறோம்! ஆட்டை வெட்டும் பொழுது அது என்ன பாடுபடும். ஆன்மாக்களுக்கு அருள்சுரக்கும் ஆண்டவன் அதைப் பொறுப்பானா?
எனவே, மனித வாழ்வின் குறிக்கோள் உணர்ந்து ஆன்ம சுத்தியுடன் அருளியல் வாழ்வு வாழ்ந்து பயனடைய முன்வர வேண்டும். இந்தப் பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க கருணைக்கடலான, இறைவனின் ‘தாள்’ என்னும் தெப்பத்தில் ஏறிக்கொள்ளவேண்டும். “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்” என்கிறார் வள்ளுவர்.
உருவங்களைக் கடவுளாகவே கருதி வழிபட வேண்டும். இறைவனிட்ம் உள்ளம் ஒன்றி நிற்க, கடவுளைக் காட்டும் உருவம் உண்மையான கடவுளாகக் காணப்படும். கடவுட் கொள்கை உயிர்ப் பலியை வெறுக்கிறது. எல்லா உயிர்களுக்கும் தந்தையான மங்கைபங்கன் சில உயிர்களை வதைத்துப் பலியிடுதலைப் பொறுக்கமாட்டான். பலியிடும் பழக்கம் ஒழிந்து மறையச் சைவ உலகம் தீவிரமாக முனைதல் வேண்டும் என்று கூறி வாழ்த்தி விடை பெறுகிறோம்.