குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/ஆலயங்கள் சமுதாய மையங்கள்


1


[1]ஆலயங்கள் சமுதாய மையங்கள்


தமிழ்நாடு, ஆலயங்கள் நிறைந்த நாடு, விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள், தமிழ்நாட்டுக்கு அழகும் பொலிவும் ஊட்டுவன. கல்லெல்லாம் கலையாக்கி, பேசும் பொற் சித்திரமாக்கி, வழிபடும் தெய்வமாகவும் படைத்துக் காட்டிய திறம் தமிழர்க்கேயுரியது. சென்ற காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, தமிழ்நாட்டின் வரலாற்றை இயக்குவதில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்துள்ளன. ஏற்றுக் கொண்டுள்ளன! தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையில், வளர்ச்சியில், மாற்றங்களில் மிகுதியும் பங்கு பெற்றிருந்தவை திருக்கோயில்களே என்பது வரலாறு கூறும் உண்மை. அன்றாட வாழ்க்கை முதல், மொழி, கலை, இலக்கியம், சமயம் ஈறான அனைத்துத் துறைகளிலும் திருக்கோயில்களுக்குப் பங்குண்டு. தமிழ்நாட்டின் அரசியல், பொருளியல், சமூகவியல் ஆகிய அனைத்துமே திருக்கோயில்களின் வட்டத்தைச் சார்ந்தே இயங்கியுள்ளன; வளர்ந்து வந்துள்ளன. தமிழ்நாட்டு வரலாறு திருக்கோயில்களின் வரலாறு. திருக்கோயில்களின் வரலாறு தமிழ் நாட்டின் வரலாறு.

வாழ்வியலும் சமயமும்

வாழ்க்கை அருமையானது; அருமையிலும் அருமையானது. “வாழ்க்கை பொய்யானது; துன்பமானது” என்ற கருத்து தமிழியலுக்கு மாறானது. “வாழ்க்கை வாழ்வதற்கே!”, “வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்” என்பன தமிழ் நெறி, தமிழர் கோட்பாடு. வாழ்வாங்கு வாழ்வதற்குச் சிந்தனை தேவை, தெளிவு தேவை; அறிவு தேவை. “சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்பது திருமுறை. மானிடத்தை மற்ற உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட்டுவது சிந்திக்கும் திறனேயாம். “நான் ஆர்? என் உள்ளம் ஆர்?” என்று சிந்திக்கின்ற பொழுது உயிர் தன்மதிப்பீடு செய்து கொள்கிறது; தன்னை அறிந்து கொள்கிறது. தன்னுடைய குற்றங் குறைகளைத் தெரிந்து உணரும் உயிர், மேம்பாட்டை நோக்கி அவாவுவது இயற்கையின் நிகழ்வு. இது அறிவியல் சார்ந்த உண்மை. குறைகளை உணர்தலே நிறைகளைப் பெறுவதற்குரிய வாயில்! தன் அறியாமையை உணர்தலே அறிவைப் பெறுவதற்குரிய வாயில்! மனிதன் விலங்கல்ல; மனிதனுமல்ல மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி, மனிதத் தன்மையை முயன்று பெற்று, அதனினும் உயர்ந்த இறை நலம் அல்லது கடவுள் மங்கலம் அடைதலே வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி. இந்த முயற்சி எளிதில் கைகூடுவதே ! ஆயினும் அருமைப்பாடு உடையது என்பதையும் மறந்து விடுவதற்கில்லை!

மானிடன் தன் புலன்களின் அழுக்கை அகற்றிப் பொறிகளில் தூய்மை காத்துத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்கு உதவுவது சமயநெறி. ஒன்றுக்கொன்று சுவை ஒவ்வாதனவாக உள்ள உணவுப் பொருள்கள் தனித்தனியே இருக்கும்வரை சுவைக்கத் தக்க சுவையும் பெறுவதில்லை; உண்ணவும் நுகரவும் இயல்வதில்லை; உடலுக்கு நலமும் தருவதில்லை. இங்ஙனம் சுவை வேறுபாடுள்ள பல்வேறு பொருள்களை ஒத்திசைந்த நிலையில் கூட்டிப் பக்குவப் படுத்தும் தொழிலுக்குச் “சமையல்” என்று பெயர். சமைத்தல் - உணவைப் பக்குவப்படுத்தல். சமைதல் மகளிர் பருவநிலை எய்துதல். இந்தச் சொற்களின் அடிப்படையிலே சமயம் என்ற சொல் முகிழ்க்கிறது. புறக்கருவிகளாக இருக்கிற பொறிகளையும் அகக்கருவிகளாக இருக்கிற புலன்களையும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், இவற்றோடுள்ள தொடர்பிலிருந்து விலக்கி, அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகியவற்றோடு இயைபுபடுத்தி, உயிரை வளர்த்து உயர்த்துவதே சமயத்தின் குறிக்கோள். உயிர் வாழ்க்கை அகநிலையிலும் புறநிலையிலும் வளம் பெறச் சமயவாழ்க்கை தேவை. சமயம் சார்ந்த வாழ்க்கையே வாழ்க்கை! சமயச் சார்பில்லாத வாழ்க்கை சவலை வாழ்க்கை, “பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே” என்றும், “பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்றும் அருளியுள்ளமை அறிக. ஆதலால், வாழ்வு முழுமை பெற, இம்மை மறுமை மட்டுமின்றி எழுமையும் அன்பும் அருளும் இன்பமும் அமையச் சமயம் தேவை.

வாழ்வியலும் வழிபாடும்

வாழ்வு, குறைவற்றதாக நிறைவுடையதாக அமைய வேண்டுமென்பதே அனைத்துயிர்களின் விருப்பம். ஆனால், நடத்துவதோ துன்பங்கலந்த வாழ்க்கை, ஏன்? முதலில் நன்று, தீது பகுத்தாராயும் திறன் வேண்டும். மானிட வாழ்வு சிறக்க, கடவுளின் துணை தேவைப்படுகிறது. “தனித்துணை” என்று இறைவனின் துணையைச் சிறப்பித்துக் கூறுவார் மாணிக்கவாசகர். ஒரு குறை, பிறிதொரு குறையை நீக்க இயலாது. கடவுள், குறைவிலா நிறைவு! கடவுள் வாலறிவு! கடவுளே நன்று, கடவுளே அன்பு, கடவுளே இன்பம்! ஆதலால் இந்த உயரிய இயல்புகளில் குறைபாடுடைய உயிர்கள், கடவுள் தன்மைகளை, நிறைநலம் பயக்கும் தன்மைகளை அடைய முயற்சி செய்தலே வாழ்க்கையின் குறிக்கோள்! நோக்கம்! இந்த உயரிய குறிக்கோளை அடைவதற்குச் சமயம் துணை செய்யும் ! தனிமனிதனைச் சமயம் வளர்த்து, சமுதாய வாழ்வுடையவனாக்கி, அன்பினாற்றலும், அருளொழுக்கமும் உடையோனாக மாற்றுகிறது. இதற்குத் துணை செய்வதே வழிபாடு, கடவுள் வழிபாடு என்பது வெறும் சடங்கன்று. வழிபாடு என்பது உயிர்ப்புள்ள ஒரு முயற்சி! அறிவார்ந்த ஆள்வினை! எண்ணுதல், நினைத்தல் ஆகிய அகநிலைப் பயிற்சிகள் மூலம், ஆன்மா தன்னை உயர்த்திக் கொள்வதற்குத் துணை செய்வது வழிபாடு! வழிபாடு கடவுளை முன்னிறுத்திச் செய்யப்படுவது உண்மை. ஆனால், வழிபாட்டின் பயன் கடவுளுக்கன்று. வழிபாட்டின் பயன் முழுதும் மனிதத்துக்கேயாம்.

திருவுருவ வழிபாடு

கடவுள் ஒரு பொருள்; அஃதோர் ஆற்றல்; வரம்பில் ஆற்றல்! கடவுள் ஓர் அறிவுப் பொருள்; வாலறிவுப் பொருள்! கடவுள் ஓர் இன்பம்; எல்லை கடந்த இன்பம்! கடவுள் ஓர் அறம், அறங்களுக் கெல்லாம் சிறந்த அறம்! கடவுள் ஒரு நிதி; நிலவும் நீதிக்களுக்கெல்லாம் தலையாய நீதி. இங்ஙனம் உயர்வற உயர்ந்துள்ள கடவுட் பொருளோடு, உயிர் ஓர் உயிர்ப்புள்ள உறவைக் கொள்ளும்போது உய்தி பெறுகிறது; உயர்கிறது; அதன் குறிக்கோளும் கைகூடுகிறது. இந்த உறவு எளிதில் கைகூடுவதன்று. கடவுளைச் சிந்திக்க வேண்டும்! கடவுள் உருவமில்லாதவர். ஆனால் எல்லையற்ற ஆற்றலும் நிகரற்ற அருளும் இருக்குமாயின் எந்த ஒரு பொருளும் அது விரும்பும் உருவத்தைப்பெற இயலும். ஆயினும் கடவுளுக்கு உருவம் தேவையில்லை. மானிடரில்கூட வளர்ந்த சிலர், ஞானத்தாலேயே இறைவனைத் தொழுவர். அவர்களுக்கும் உருவம் தேவைப்படாது. ஆனால், சராசரி மனிதர்கள் - சிந்திக்க மாட்டாதவர்கள் எண்ணிக்கையில் மிகப்பலர். இவர்கள் சிந்திப்பதற்குப் பற்றுக்கோடாக விளங்க வேண்டுமென்றே இறைவன், அருளும் நோக்கத்துடன் திருவுருவங்களை இடமாகக் கொண்டு எழுந்தருளி அருள் வழங்குகின்றான். ஒருவுருவ வழிபாடு, வளரும் சமுதாயத்திற்குத் தவிர்க்க இயலாதது; தேவையும் கூட! மக்கட் சமுதாயத்தில் திருவுருவ வழிபாடு தோன்றிய பிறகுதான் திருக்கோயில் நாகரிகம் கால் கொள்கிறது. திருக்கோயில் நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டு மனிதகுல வாழ்வில் ஒரு புதிய ஆற்றல் மிக்க சமுதாய உணர்வு அரும்புகிறது. திருக்கோயில் ஒரு மாபெரும் சமுதாய இயக்கத்திற்கு மையமாக விளங்குகிறது.

திருக்கோயில் ஏன்?

கடவுள் எங்கும் நிறைந்தவர்; எல்லாப் பொருள்களிடத்தும் தங்கியிருப்பவர்.

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.”

என்று மாணிக்கவாசகர் கூறுமாறு போலவும்,

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஒருவமன் இவ்வி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே"

என்று அப்பரடிகள் கூறுமாறு போலவும், இறைவன் இன்ன இடத்தன், இன்ன ஊரினன் என்று எடுத்தியம்ப இயலாது. அவ்வாறு எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனுக்குத் திருக்கோயில் ஏன்? திருக்கோயில் கடவுள் எழுந்தருளியுள்ள இடம்! ஆனால், கடவுளுக்காகத் திருக்கோயில்கள் அல்ல! பொதுவாக, உயிர்க்குல ஈட்டம், சிறப்பாக மானிடகுல ஈட்டம் இறைவனைக்காண, அவனுடன் கலந்து உறவாட, இறை நலன்களைப் பெறத் துணையாய் அமைவது திருக்கோயில். அடுத்து, வாழப் பிறந்த மனித இனம் ஒன்றுபடவும், ஒப்புரவு நலன்கள் பெற்றுச் சிறந்து வாழ்ந்திடவும் திருக்கோயில் துணையாய் அமைவது. திருக்கோயிலை மையமாகக் கொண்டு இறைமைத் தத்துவம் மேலாண்மை செய்தது! இறைமைத் தத்துவத்தின் வழி நின்று மக்கள் சமுதாயத்தை ஒருங்கிணைக்க - சமுதாய மேம்பாட்டிற்குரிய நெறிமுறைகளைக் காண - சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு உருவம் கொடுக்கத் திருக்கோயில்களை மையமாகக் கொண்டு இயங்கினர்; செயல்பட்டனர். ஏன்? அப்பாலுக்கு அப்பாலாக விளங்கிய கடவுளையே சமுதாய உறுப்பாகக் கொண்டு வந்து செயல்படுத்தினர்; ஏவல் கொண்டனர் இஃதொரு அருமையான தத்துவம்!

“அப்பன் நீ அம்மைநீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓருரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறுரர்ந்த செல்வன் நீயே”

என்ற பாடல் இறைவனை உற்ற அன்புடைய உறவாகவும் சுற்றமாகவும் கொண்டு போற்றும் பண்பு நோக்கத்தக்கது.

ஆதலால், தமிழர் நோக்கில் குறிப்பாகச் சைவ வைணவ சமய நோக்கில், திருக்கோயில்கள் கடவுள் எழுந்தருளியிருக்கும் இடங்கள் மட்டுமல்ல, சமுதாய மையங்கள்! சமுதாயத்தின் இயக்கம்! இதனாலேயே திருக்கோயில்களுக்குச் சிறப்பு வந்தடைந்தது. திருக்கோயில்களிடத்து மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்தனர். அளவற்ற கொடைகளை வழங்கித் திருக்கோயில்களைச் சார்ந்த அறக்கட்டளைகளின் முதலீட்டைப் பெருக்கினர். முடியுடை அரசர்கள் நிவந்தங்கள் வழங்கினர்; இறையிலிநிலங்களை வழங்கினர். திருக்கோயில் பத்திமையின் விளைநிலம்! திருக்கோயில் வாழ்க்கைக்குக் காப்புறுதி வழங்கிய முறை மன்றம்! தமிழ்நாட்டு வரலாற்றில் திருக்கோயில் ஏற்ற பங்கு அளவற்றது! காலத்தை வென்று நிற்கக்கூடியது! இன்றும் நெறியல்லா நெறியிற் செல்லும் தமிழகம், நெறிப்பட நின்று நேர்பட ஒழுக விரும்பின் திருக்கோயில் சார்பே தேவை. திருக்கோயில் சமுதாய இயக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பாங்கின் அடிப்படையில்தான் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரை பிறந்தது.

சமுதாய மையம்

தமிழ்நாட்டில் நகர அமைப்பு, சிற்றூர் அமைப்பு முறை வளர்ந்த ஒன்று! நடுவூரில் திருக்கோயில் உயர்ந்து விளங்கும்! திருக்கோயிலைச் சுற்றி நான்கு புறமும் மக்கள் சூழ்ந்து வாழ்வர். நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் திருக்கோயிலுக்குள் வந்து குழும, நான்கு திசைகளிலும் பெரிய வாயில்கள்! ஊர் முழுதும் ஒலித்து அழைக்கும். மணிகள். இஃதோர் அற்புதமான அமைப்பு! மாலை நேரத்தில் ஊர் மக்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் அணி பெற ஆலயத்திற்கு வருதலும், வணங்கி மகிழ்தலும் சிறந்த காட்சி! இறைமை வழிபாடு முடிந்தவுடன் இங்குமங்குமாகத் தனித் தனியாகவும் கூட்டாகவும் ஒருவர் மற்றவரை நலம் விசாரித்தும், கலந்தும் களித்துப் பேசுதலும் மகட்கோடல் முதலிய நிகழ்வுகள் பற்றிப் பேசுதலும் இன்றைக்கும் நடைபெறும் நிகழ்ச்சி. திருக்கோயிலில் ஒருமனப்பாட்டுடன் மக்கள் கூடுவர்; களித்தும் கலந்தும் பேசுவர். அதனால், திருக்கோயில் வளாகத்துக்குள் அன்பு செறிந்த, அருள்நலம் கனிந்த மனித உறவு வளர்கிறது; மனித நேயம் வளர்கிறது. சில சமயங்களில் அங்கேயே ஒரு கூட்டம் கூடுகிறது. கிராமத்தின் பொது நிகழ்வுகள் கலந்து பேசப்படுகின்றன; குடி மராமத்து, நாள் நிர்ணயித்தல், தண்ணீர் வரும் கால்கள் வெட்டுதல், நல்லேர் கட்ட நாளும் நாழிகையும் முடிவு செய்தல், விதை தெளிக்க நாள் முடிவு செய்தல், இன்னோரன்ன ஊரின் தேவைகளையும் ஆய்வு செய்து முடிவு எடுத்தல் நிகழ்கின்றன. இதனால், சமுதாயம் ஒழுங்கமைவு பெறுகிறது. ஓர் அருமையான கூட்டுவாழ்க்கை கால் கொள்கிறது.

ஒப்புரவு வாழ்க்கை

மானுடத்தின் மகோன்னத வெற்றிக்கு ஒப்புரவு நெறியைவிடச் சிறந்த வாழ்க்கை நெறி இல்லை. திருவள்ளுவர் விண்ணகத்திலும் மண்ணகத்திலும் ஒப்புரவு நெறியைவிட உயர்ந்த ஒன்றில்லை என்றார்.

“புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற”

என்பது திருக்குறள். திருக்கோயிலில் சிறந்த ஒப்புரவு நெறி வளர்ந்தது. திருக்கோயில், அமைப்பு முறையில் பற்பல பணிகளை அவாவி நிற்பது. அந்த ஒவ்வொரு பணியையும், அவ்வப்பணிக்குத் தகுதியுடையவர், உயர்வு தாழ்வு மனப் பான்மையின்றி, கடமையுணர்வோடு செய்து மகிழ்வது திருக்கோயில் பணிகளில் தான். திருக்கோயிலில் இறைவன் திருமுன்னர் திருவமுது படைக்கப்படுகின்றது. திருக்கோயிலைச் சார்ந்து வாழ்பவர்கள் - பணி செய்பவர்கள் அனைவரும் தம்முள் எந்த வேறுபாடுமின்றி அந்தத் திருவமுதைப் பங்கிட்டு உண்பதும் உழைப்பதும் ஒரு பொருள் பொதிந்த காட்சி! வாழ்க்கைக்கு உழைப்புத் தேவை. உழைப்புக்கு உணவு தேவை. திருக்கோயில் இயக்க அமைப்பில் உணவு வழங்கப்பட்டுவந்தது. பணநாயகத்திற்கு அங்கு இடமில்லை. அதனால், உழைத்தவர்கள் உடல்நலம் பெற்றிருந்தனர். திருக்கோயில் திருவமுதுமுறை நல்ல சத்தணவுமுறை. பொங்கல், வடை, பாயசம், அப்பம், சுண்டல், அவல், பொரி இவை இறைவன் திருமுன்னர் படைக்கப்படும் பண்டங்கள். பயறுவகையிலுள்ள புரதம்-உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அதனாலேயே மாலை நேரத்தில் இறைவன் திருமுன்னர் கடலை, பயறு வகைகள் சுண்டல் செய்து, படைத்துப் பெரியோர்க்கும் சிறப்பாகக் குழந்தைகளுக்கும் வழங்கினர். இங்ஙனம் நுகர்பொருள் எல்லோருக்கும் ஒரே முறையில் எளிய முறையில் கிடைக்கச் செய்யும் வாழ்க்கையிலும் சிறந்த ஒப்புரவு வேறு என்ன இருக்க முடியும்? உடையவர்கள் திருக்கோயிலில் இறைவனின் பெயரால் காணிக்கை இடுவார். இந்தக் காணிக்கைப் பொருளைக் கொண்டு வாய்ப்பற்றவர்களுக்கும் வாய்ப்புகளை நல்கி வளமுடையராக்கத் திட்டம் தீட்டி - அவ்வழி வளமார வளர்ந்து மகிழ்வர். ஆதலால், திருகோயிலைச் சார்ந்து வளர்ந்த ஒப்புரவு வாழ்க்கை, புகழ்ந்து பாராட்ட வேண்டியதொன்று.

கல்விச் சாலை

மனிதன் வளர்ச்சியடையக் கல்வி தேவை; கேள்வி தேவை. கல்வியும் கேள்வியும் எளிதில் பெறும் சமுதாயமே மேம்பாடடைய முடியும் கற்றல் கேட்டல் உடையார் பெரியார் என்று திருஞானசம்பந்தர் அருளிச் செய்து உள்ளார். இத்தகைய அருமையான கல்வியினைத் திருக்கோயில் வழங்கியது. திருவாவடுதுறைத் திருக்கோயிலில் இலக்கணம் கற்றுத் தரும் கல்விச் சாலை இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. திருவாமாத்துணர்த் திருக்கோயிலில் திருமுறை பயிற்றுவிக்கும் கல்விச்சாலை இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. திருக்கோயில்களில் பட்டி மண்டபங்கள் நிகழ்ந்துள்ளன. ஆதலால், திருக்கோயில்கள் கடவுட் கோயில்களாக மட்டுமின்றிக் கல்வி கற்பிக்கும் அமைப்புகளாகவும் விளங்கின என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கலைக்கூடம்

வாழ்க்கை, சோற்றினால் மட்டும் ஆவதன்று. ஆன்மாவிற்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை; அழகுணர்வு தேவை. திருக்கோயில் ஒரு சிறந்த கலைபயில்கூடம், திருக்கோயில் சிற்பக் கலையின் உறைவிடமாக விளங்குவது. மதுரை, கிருஷ்ணாபுரம், திருப்பெருந்துறை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம், பேரூர், காஞ்சி, மாமல்லபுரம், தஞ்சை முதலிய ஊர்களில் உள்ள திருக்கோயிற் சிற்பங்கள் சிறந்தவை. கல்லில் எவ்வளவு அருமையான வேலைப்பாடுகள் செய்துள்ளர்கள்! அதுவும் கருங்கல்லில் சிற்ப உருவங்கள் அமைத்தல் மிகவும் கடினமானது. அதுபோலவே பல்வேறு வண்ணங்களால் தீட்டப் பெற்ற ஓவியங்களும் திருக்கோயில்களை அணி செய்துள்ளன. ஆடற்கலையும் பாடற்கலையும் இசைக்கலையும் வளர்ந்ததும் வளர்வதும் திருக்கோயிலைச் சார்ந்துதான். நாடகக்கலையும் கூட திருக்கோயிலைச் சார்ந்துதான் வளர்ந்தது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவில் நிறை நிலா நாளன்று முறையாக இராசராசேசுவர நாகடம் நடந்ததுண்டு. எண்ணற்ற மக்கள் கண்டு கேட்டு மகிழ்ந்தனர். திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த பண்ணிசை, பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகுதியும் துணை செய்தது. அது போலவே நாதசுர இசையும் வளர்ந்தது; மனித குலத்தையும் வளர்த்தது. மக்கள் பாட்டில், இசையில் எளிதாக ஈடுபட வாய்ப்பிருந்த பொழுது “வேந்தலைக்கும் கொல் குறும்புகள்” இருந்ததில்லை; வன்முறை இருந்ததில்லை; வன்கண்மையும் கூட இருந்ததில்லை. இறைவன், ஏழிசையாய் இசையின் பயனாய் விளங்குகின்றான் என்பது தமிழர் முடிவு. இசையினாலேயே இறைவனை வழிபட்டனர். தமிழோடு இசைபாடி நெஞ்சு நெகிழ்ந்து நின்றுருகி வழிபட்டனர். ஆதலால் திருக்கோயில் சமுதாயத்திற்கு மிக இன்றியமையாததாகிய கலைநலம் தரும் கலைபயில் கூடமாக விளங்கியது.

மருத்துவச் சாலை

மானிட வாழ்க்கை இனிதே அமைவதற்கு மருத்துவமும், தேவை. திருக்கோயிலைச் சார்ந்த வாழ்க்கை முறையில் மருத்துவம் சிறந்த முறையில் விளங்கியிருக்கிறது. திருக்கோயில் தத்துவத்தைக் கண்டவர்கள் சித்தர்கள். புறத்தே திருக்கோயிலைக் கண்ட சித்தர்கள் ஊனுடம்பாம் திருக்கோயிலையும் பேண, சித்த மருத்துவம் கண்டார்கள். சித்த மருத்துவத் துறையில் நோய் வராமைக்குரிய முற்காப்பு நெறிகளும் உண்டு. நோய் வந்தபின் செய்தற்குரிய மருத்துவமும் உண்டு. ஏன்? இறைவனே மருந்தாகவும், மருத்துவனாகவும் நின்று அருள் செய்பவன். எனவே எண்ணற்ற நோய்களை நீக்கி, “மருந்தீசன்” என்றும், “வைத்தியநாதன்” என்றும் பெயர் பெற்று விளங்குகின்றான். திருக்கோயில் வளாகத்தில் சிறந்த மருத்துவச் சாலைகள் இருந்தன.

திருவாவடுதுறையில் ஒரு வைத்தியக் கல்லூரி இருந்தது என்று விக்கிரம சோழன் கல்வெட்டுக் (கி.பி. 1131) கூறுகிறது. “சங்கரதேவியின் அறச்சாலை” என்ற உணவுச் சாலையில், உணவு அளிக்கப் பெற்றவர்களில் வைத்தியக் கல்லூரி மாணவர்களும் இருந்தனர். “முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலை”யிலும் மருத்துவ நூல் படிப்பவர்களுக்கும் இலக்கணம் படிப்பவர்களுக்கும் உணவு அளிக்கப் பெற்றது என்றும், அக்கல்வெட்டுக் கூறுகிறது. காஞ்சீபுரம் பக்கத்தில் உள்ள திருமுக்கூடல் கல்வெட்டு, கி.பி. 1067இல் திருக்கோயில் வருமானத்திலிருந்து வீரசோழன் என்ற பெயரால் மருத்துவ சாலையும் மருத்துவம் கற்பிக்கும் கலாசாலையும் நிர்வகிக்கப் பெற்றன. அவற்றில் ஓராண்டுக்குத் தேவையான மருந்து வகைகள் இருந்தன. ஒரு மருத்துவனும், சல்லியக் கிரியை-அறுவை மருத்துவம் பண்ணுவானும் அங்கு இருந்தனர். நோயாளிகட்குத் துணையாக மருத்துவப் பணி மகளிர்-தாதியர் பலர் இருந்தனர்; மருத்துவருக்குப் பெயர் “கோதண்டராமன் அஸ்வத்தாமப்பட்டன்” என்று பல்வேறு செய்திகளைக் குறிப்பிடுகிறது.

மேலும் தஞ்சையில் குந்தவைப் பிராட்டியாரால் அவர் தந்தை முதலாம் இராசராசன் நினைவாக, இலவச மருத்துவச்சாலை நிறுவப் பெற்றதாக அறிகிறோம். திருவிசலூர், திருப்புகலூர், திருச்சி மாவட்டம் கோவந்த புத்தூர், குன்றத்தூர், மைசூரைச் சார்ந்த சுகடூர் முதலிய இடங்களில் எல்லாம் திருக்கோயில்கள் மருத்துவச் சாலைகள் அமைத்து மக்கட் பணி புரிந்தமையைத் தெள்ளத் தெளிய அறியலாம்.

ஊராட்சி மன்றம்

பழங்காலத் தமிழராட்சி முறை, இன்றைய ஆட்சி முறையைப் போல அதிகாரம் ஓரிடத்தில் மையப்படுத்தப் பட்ட ஆட்சி முறையன்று. அதிகாரங்கள் முறைப்படுத்தப் பெற்றுப் பரவலாக்கப் பெற்றிருந்த ஊராட்சி மன்றங்களே ஊராட்சியின் மேலாண்மைக்குப் பொறுப்பேற்றிருந்தன. அரசு, மக்களைச் சலுகைகளால் வளர்க்கவில்லை, உரிமைகளால் வளர்த்தது. திருக்கோயில்களில் ஊராட்சி மன்றங்கள் அமைந்திருந்தன. அவை, ஊராட்சியின் மேலாண்மைக்குரிய பணிகளைத் திறம்படச் செய்தன. நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், நீர் நிலைகளைத் தூய்மையாகப் பேணுதல், காடுகள் வளர்த்தல், அவ்வப்பொழுது மக்கள் மன்றத்தில் தோன்றும் சிறிய பெரிய பூசல்களைத் தீர்த்து வைத்தல் முதலியவைகளை ஊராட்சி மன்றங்கள் திறமையாகச் செய்து வந்துள்ளன. திருக்கோயிலைச் சுற்றி வளர்ந்து வந்துள்ள ஆட்சி முறையில், நிறைவான மக்களாட்சித் தேர்வு முறை இடம் பெற்றிருந்தது. “குடவோலை"யின் மூலம் மக்கள் தங்கள் ஊராட்சி உறுப்பினர்களைத் தேர்வு செய்தனர். அரசு, யாரையும் ஊராட்சியில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நியமித்ததில்லை. பழங்காலத் திருக்கோயில்கள் சுதந்தரமான ஆட்சி உரிமைகள் பெற்ற மக்கட் பணிமனைகளாக இருந்தன என்பது நினைவு கூர வேண்டிய செய்தி.

அற்றார்க்கு உதவும் நிறுவனம்

திருக்கோயில்கள் அற்றார்க்கும், அலந்தார்க்கும் உதவும் நிறுவனங்களாக இருந்தன. குறிப்பாக வறியோர்க்கு உதவும் அமைப்புகளாக விளங்கின. தருமி என்றொரு ஆதி சைவன் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பின்றி, வறுமைக்கு ஆட்பட்டிருந்தான். மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த ஆலவாயண்ணல், கவிஞனாகிச் சங்கப் புலவனாகி நக்கீரனோடு வாதாடி, பாண்டியனிடம் பொற்கிழி பெற்றுத் தருமிக்குத் தந்து உதவினான். திருஞானசம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் ஆகியோரும் கூடப் பல சமயங்களில் பசித் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்பொழுதெல்லாம் ஆங்காங்கு திருக்கோயில்களிலிருந்த இறைவன் அவர்களுக்குச் சோறும், தண்ணீரும் தந்து உதவியிருக்கிறான். திருஞானசம்பந்தர் பொன் வேண்டிக் கேட்ட பொழுது, திருவாவடுதுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனும் பொன் கொடுத்து உதவியதை அறிக. இங்ஙனம் இறைவன் மட்டுமின்றித் திருக்கோயிலைச் சார்ந்திருந்த ஊர்ச் சபைகளும் உதவிகளைச் செய்துள்ளன.

நீதி சபை

மானிட வாழ்க்கையென்பது பிரச்சனைகளுக்கு உரியதுதான். பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை சாரமற்றது; சுவையற்றது. ஆனால், வாழ்க்கையில் பிரச்னைகளைச் சந்திக்கின்றபொழுது மனிதன் நிதானமாக நின்று சிந்திக்கத் தவறக்கூடாது, அறிவை இழந்துவிடக் கூடாது; ஆத்திரப்படக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கையின் செயற்பாடுகள் நீதியோடு தொடர்புடையனவாக அமைதல் வேண்டும். நமது சமயமே “நீதி"யென்று பெயர் பெற்றது. மாணிக்கவாசகர் இறைவனை நீதியென்றே அழைப்பர்.

“பங்கயத் தயனுமால் அறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே”

என்பது திருவாசகம். திருக்கோயிலை மையமாகக் கொண்டு நீதி விளங்கியது. திருக்கோயில்களில் நீதி வழங்கு சபைகள் இருந்தன. அந்தச் சபைகள் வழங்கிய நீதிகள் வரலாற்றுப் புகழுடையன. திருக்கோயில் தத்துவத்தில் கடவுளும் நீதிக்குக் கட்டுப்பட்டவர். கடவுளும் தனக்கு ஏதாவது வழக்கு இருப்பின் தானே அடாவடித்தனமாக அடித்துப் பிடுங்க முடியாது. உவமையில்லாத தலைவனும் கூடத் திருக்கோயிலில் விளங்கும் பஞ்சாயத்தார் முன்னே நீதி கேட்டு நிற்கத்தான் வேண்டும்! திருவெண்ணெய்நல்லூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கும், நற்றமிழ்ச் சுந்தரருக்கும் இடையேயிருந்த வழக்கைக் கூறி, இறைவன் திருவெண்ணெய் நல்லூர்ப் பஞ்சாயத்தார் முன்னே நீதி கேட்டு நின்றமையை அறிக. அதுபோலவே செட்டிப் பெண்ணுக்கு நலம் செய்ய நினைத்த திருப்புறம்பியத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், திருக்கோயிலில் விளங்கிய நீதி சபையின் முன்னால் சாட்சி கூறி, உதவி செய்ததை ஓர்தல் வேண்டும். அதுபோலவே மதுரையில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல், மாமனாக வந்து வழக்குரைத்து நின்றமையையும் அறிக. ஆதலால், திருக்கோவில்கள் கடவுளின் திருக்கோயில்களாக மட்டுமல்லாமல் நீதிதேவதையின் திருக்கோயில்களாகவும் விளங்கின.

களவியலுக்கு வாயில்

தமிழர்கள் வாழ்க்கையை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்; வாழ்வாங்கு வாழ விரும்பியவர்கள். தமிழர் தம் உணர்வுக்கு ஏற்றவாறு திருக்கோயிலும், திருக்கோயிலை ஆட்கொண்டிருந்த கடவுள் தத்துவமும் தொழிற்பட்டன. பெண்களைப் பெருமைப் படுத்தும் அகனைந்திணை வாழ்க்கை தமிழர்க்கே உரிய சிறந்த மரபு. மதுரையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவன், ஆணும் பெண்ணுமாக இணைந்து காதல் செய்து வாழ்கின்ற நெறியினைக் கூறும் அகப்பொருள் இலக்கணத்தையே அருளிச் செய்தான் என்பர். அந்நூல் ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் பெயர் பெற்றது. திருக்கோயிலைச் சார்ந்து களவொழுக்கமும் கற்பொழுக்கமும் வளர்ந்தன. இறைவனே பெண்பால் உகந்து வாழ்ந்தான்; போகமும் செய்தான். இதுவே திருக்கோயில் வளர்ந்த வாழ்க்கைத் தத்துவம். அதனால் அகனமர்ந்த மனையறத்திற்கு மாறாக வாழ்பவர்கள், பெண்ணைத் துறந்தவர்கள் திருக்கோயில் பூசனைக்கே யுரியவரல்லர் என்ற நியதி எழுந்தது. திருக்கோயில் வளாகத்திலேயே களவியல் ஒழுக்கத்திற்குரிய வாயில்கள் கிடைத்தன. சுந்தரர் பரவையாரைத் திருவாரூர்த் திருக்கோயிலில் கண்டு காதல் கொள்கின்றார். அங்ஙனமே பரவையாரும் காதல் கொள்கின்றார். திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த காதல் தத்துவத்தில், ஊனுடம்பின் கவர்ச்சியில்லை; அகனமர்ந்த காதல்; அருட்சார்புடைய காதல் இருந்தது. சுந்தரர் பரவையார் காதல் எப்படியிருந்தது?

“கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன்”

என்று பரவையாரைக் கண்டு சுந்தரர் அதிசயிக்கின்ற செய்தியினையும்,

“முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ
என்னே! என் மனந்திரித்த இவன் யாரோ”

என்று சுந்தரரைக் கண்டு பரவையார் நினைந்த செய்தியினையும் திருத்தொண்டர் புராணம் சிறப்பித்துக் கூறும்.

சுந்தரர், சங்கிலியாரைக் காதலித்துத் திருமணம் செய்தது திருவொற்றியூர்த் திருக்கோயில் வளாகத்திலேயாம். ஆதலால் திருக்கோயில் திருவளாகம் அகனைந்திணை வாழ்க்கையின் பண்ணையாக விளங்கியது. திருக்கோயில் பொலிவு திருமணப் பொலிவாக விளங்கும் தன்மையது. இன்றும் இறைவன் ஆண்டுதோறும் திருமணம் செய்து கொள்கிறான். என்ன? ஆண்டுதோறும் புதுப்புதுத் திருமணமா? இல்லை, இல்லை. திருமண நாளை நினைவு கூரும் திருமணம். ஒரு நம்பியோ ஒரு நங்கையோ திருமணம் நிகழும் வரையில்தான் பிறந்த நாள் கொண்டாடலாம். திருமணம் நிகழ்ந்த பிறகு திருமண நாளே அவர்களின் நன்னாள்; அடிக்கடி நினைவு கூர்ந்து மகிழவேண்டி நன்னாள். இறைவன் உயிர்களுக்குப் போகம் - அதாவது இன்பம் வழங்குவதற்காகவே தமது ஆளுடைய நாயகியைக் கரும்புவில் ஏந்தச் செய்திருக்கின்றான். கரும்புவில் போகத்தின் சின்னம். சுந்தரருக்குத் திருமணம் செய்து வைத்தான் இறைவன். தான் விரும்பிய காதலனை மணக்க முடியாமல் தடை செய்கின்ற, கொடுமை செய்கின்ற மனிதர் இன்று போலவே பண்டும் இருந்தனர். அத்தகையோரை மறுத்துப் போராடி, ஒரு பெண் தான் விரும்பிய ஒரு காதலனை மணக்கத் துணை செய்தவன் இறைவன். இறைவன் அடியாராகிய திருஞானசம்பந்தரும் திருமருகலில் செட்டிப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றிமையை எங்ஙனம் புகழ முடியும்! ஆதலால் திருக்கோயில் மனையறத்தின் மாண்பறத்தையும் விளக்கியது; வளர்த்தது; மனித குலம் தலைமுறை தலைமுறையாகத் தழைத்து வளர வழி கண்டது.

புலவி தீர்த்தல்

பேரன்புடையீர், திருக்கோயில் அமைப்பில் வளர்ந்தவை திருமணங்கள் மட்டுமல்ல, கற்பியல் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ ஊடலும் ஊடல் முற்றிய நிலையில் புலவியும் தோன்றி வருகின்றன. இதனால் கருத்தொருமித்து வாழ வேண்டிய இருவர், உள்ளத்தால், உணர்வால் பிரிந்து விடுகின்றனர். இந்தப் பிரிவு வருந்தத்தக்க பிரிவு! இத்தகைய பிரிவு, இருபாலாருக்கும் பெருந்துன்பம் தருவது. இத்தகைய பிரிவுகளைத் திருக்கோயில்கள் அங்கீகரிப்பதில்லை. திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த வாழ்வியல் தத்துவம், ஊடல் தணிதலுக்கும் புலவி தீர்த்தலுக்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ளும். திருநீலகண்டர் வாழ்க்கையில் அவருக்கும் அவர்தம் மனைவிக்கும் ஓர் ஆழமான புலவி தோன்றி விட்டது. பல ஆண்டுகள் பிரிந்து வாழ்கின்றனர். தில்லையம்பலத்திலுள்ள ஆடல் வல்லானுக்கு இவர்களின் புலவியும், புலவி வழிப்பட்ட பிரிவும் உறுத்தலைத் தந்திருக்கிறது. ஆதலால் ஆடல் வல்லானே முன்னின்று அவர்தம் புலவியைத் தீர்த்து, வாழச் செய்தருளினன். அதுபோலவே சுந்தரர் பரவையாரிடையே தோன்றிய ஊடலைத் தீர்க்க, பெருமானை,

“நாயன் நீரே நான் உமக்கிங்கு அடியே னாகில் நீர் எனக்குத்
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரா னாரேயாகில்
ஆயஅறிவும் இழந்து அழிவேன் அயர்வுநோக்கி அவ்வளவும்
போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும்”

என்று சுந்தரர் வேண்ட,

கழுதுகண்படுக்கும் நள்ளிரவில் பரவையார்பால் நடந்து தூது சென்ற காட்சியை எந்த எழுத்துக்களால் எழுதிக்காட்ட இயலும்! சேக்கிழாரால் மட்டுமே இயலும்!

“இறைவர் விரைவின் எழுந்தருள
எய்தும் அவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில் -
அரவு தொடர, அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப்
பிணையல் கரும்பு தொடர,உடன்
மறைகள் தொடர, வன்தொண்டர்
மணமும் தொடர வரும்பொழுது”

என்று ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிறார், சேக்கிழார் பெருமான். அதிலும், முதல் தடவை பரவையார் உடன்படாமற் போகத் தோல்வியைச் சுமந்து கொண்டு ஆரூரரின் முன்வந்து நின்ற இறைவனைப் பார்க்க இரக்கமாக இருக்கிறது. சுந்தரரோ பெருமான் மனம் வைத்தால் இயலாத தில்லையென நம்புகிறார். அது மட்டுமா? இறைவன்பாற் கொண்டிருந்த கிழமை மிகுதியால் உயிர் தரியேன் என்று மிரட்டுகிறார். மீண்டும் இறைவன் பரவையார் இல்லம் நோக்கி நடக்கிறார். இத்தகு நிகழ்வுகள் மூலம் நாம் பெறும் படிப்பினை என்ன? காதல் மணம் புரிந்தவர்கள் பிரிதல் கூடாது என்ற உயரிய தத்துவம் திருக்கோயில் தந்த திருமண வாழ்க்கைத் தத்துவம் என்பதே! இந்தத் தத்துவம் மனையற வாழ்க்கைக்கு அரணாகவும் காதலின்பத்திற்கு ஊற்றாகவும் விளங்குவது அறிக.

தோழமை வாழ்க்கை

காதல் வாழ்க்கைக்கு அடுத்தது தோழமை வாழ்க்கை இல்லை! காதல் வாழ்க்கையினும் மிக உயர்ந்தது தோழமை வாழ்க்கை “நட்பிற் சிறந்தது ஒன்றில்லை” என்று வள்ளுவம் கூறும். திருக்கோயில் இயக்கச் சூழ்நிலையில் நட்புக்கு வாயில்கள் அமைந்துள; நட்பும் வளர்ந்தது, திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் நற்றமிழாரூரருக்குத் தன்னைத் தோழமையாகத் தந்தமையை நாடறிவும். தோழமை எதற்காக? ‘மண் மீது விளையாடத் தோழமை துணை செய்ய வேண்டும். சுந்தரர்க்கு இறைவன் தோழனாக நின்று பொன் தந்தான்; பூவையர் தந்தான். வழக்கமாக எழுந்தருளும் திருக்கோயில் திருவுருவத்தினை நீங்கி, மகிழின் கீழ் இருந்தான்! தூது சென்றான்; ஆளாக இருந்தான் ஆட்களும் பிடித்து அமர்த்தினான். சுந்தரர் “பித்தன்” என்றும் “மகத்திற் புக்கதோர் சனி” என்றும் திட்டித் தீர்த்ததை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டான். இவை மட்டுமா? சேரமான் பெருமாளை அறிமுகப்படுத்தி, மற்றொரு தோழனாக்கிக் கொடுத்தான். அதன் வாயிலாக யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலிய விளையாட்டுக்களில் ஈடுபடும் வாய்ப்பினைத் தந்தான். ஆயினும் தமக்கினிய தோழராகிய ஆரூரர்க்கு வேண்டிய பொன்னைத் தாமே கொடுக்க வேண்டும்; மற்றவர்களிடம் வாங்கக் கூடாது என்ற நட்புறவின் முதிர்ச்சியால் - திருமுருகன் பூண்டித்திருக்கோயில் வளாகத்தில் வழிப்பறிவும் செய்து விளையாடுகின்றான். என்னே அற்புதம்! வாக்கு மனத்துக்கு அப்பாற்பட்ட ஆற்றல் மிக்க பொருளாகிய கடவுள், வாழ்க்கையின் முதலாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் இனிய தோழனாகி, உற்றுழி உதவியும் விளையாடியும் வாழ்க்கையை உய்த்துச் செலுத்தத் துணையாக இருந்த திருக்கோயில் தத்துவம் ஈடு இணையற்றது.

அன்பின் இயக்கம்

திருக்கோயில் தத்துவம் ஒரு அன்பின் இயக்கம். திருக்கோயில் அன்பினால் எழுந்தது. திருக்கோயில் அன்பினால் வளர்ந்தது. திருக்கோயில், வாழும் மனித குலத்தை அன்பினால் இணைத்தது; ஒருங்கிணைத்தது. அன்பு ஒரு சொல்லன்று. அஃது ஓர் ஆற்றல்! அன்பு ஒரு நுகர்பொருள்! இறைவன் உயிர்களிடத்திலுள்ள அன்பை நுகர்வதற்காக எழுந்தருளிப் போந்தமையை எண்ணற்ற வரலாறுகளில் காண முடிகிறது. திருப்பனந்தாள் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைத் தாடகை என்ற பிராட்டியார், தாமே மலரெடுத்துத் தொடுத்த மலர்மாலைகளைச் சாத்திப் பூசித்து வருகிறார். தொடக்கக் காலத்தில் திருக்கோயில்களில் இன, குல வேறுபாடின்றி, ஆண்-பெண் வேறுபாடின்றி, அனைவரும் தாமே பூசிக்கலாம் என்ற நெறிமுறை இருந்தது! அந்தக் காலத்தில் அம்மையார் பூசித்தார். ஒருநாள் இறைவனுக்குத் தாடகைப் பிராட்டியாரின் அன்பைத் துய்த்து மகிழவும் மற்றவர்க்குப் புலப்படுத்தவும் வேண்டும் என்ற உணர்வு பிறந்தது. தாடகையார் மலர்மாலை எடுத்து இறைவனுக்குச் சாத்தப் புகும் நேரத்தில், அவர்தம் உடை நெகிழ்கிறது. தாடகையாருக்கு அறச்சங்கடம். தாடகையாரின் அறச்சங்கடத்தை அறிந்த பெருமான் குனிந்து மாலை ஏற்றுக் கொள்கிறார்! அதனால் தாடகையாரின் இரண்டு நோக்கங்களும் நிறைவேறிவிட்டன. பெருமான் திருமேனியை வளைத்தது அன்பின் ஆற்றல் அல்லவா? இங்ஙனம் திருமேனி வளைந்த இறைவன் நிமிராமலேயே இருந்துவிட்டான். இதனைக் கண்ட சோழப் பேரரசு, பெரிய சங்கிலிகளைப் போட்டு யானைகளைக் கட்டியிழுக்கச் செய்தது! இறைவன் திருமேனியோ நிமிர வில்லை! இந்தச் செய்தி திருக்கடவூரில் வாழ்ந்த குங்குலியக்கலயர் என்ற பெருமகனாருக்கு எட்டுகிறது. அவர் திருப்பனந்தாள் வருகிறார். இறைவனைக் கூர்ந்து பார்க்கிறார். குங்குலியக் கலையர் அன்பில் விளைந்த ஆன்மா உடையவர். அவர் இறைவன் திருமேனியை நிமிர்ப்பதற்காகத் தமது கழுத்தில் ஒரு கயிற்றைப் போட்டுக் கொண்டு இழுக்கிறார்! உடன் பெருமான் திருமேனி நிமிர்கிறது. ஏன் நிமிர்கிறது? பெருமானையும் குங்குலியக் கலயரையும் பிணைத்திருந்த கயிறு குங்குலியக் கலயரின் உடலை வருத்துமே என்று கருதிப் பெருமான்தன் திருமேனி நிமிர்ந்தார். தாடகையார் மானம் காப்பாற்ற வளைந்தார்; குங்குலியக் கலயர் உடலைப் பாதுகாக்க நிமிர்ந்தார்.

"............மாலை சாத்தும்
தாடகைமானம் காப்பான் தாழ்ந்து, பூங்கச்சிட்டு ஈர்க்கும்
பீடுறுகலயன் அன்பின் நிமிர்ந்த எம்பிரான் ஊர்”

என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

திருநீலநக்கநாயனாருடைய மனைவி, சிலம்பி நீங்க, வாயால் ஊதியதை அன்பின் விளைவாக ஏற்றுக்கொண்ட அருமைப்பாட்டையும் பிறிதொரு நிகழ்விற் காண்கிறோம். கண்ணப்பர் அன்பினால் விளைந்து, அன்பே உருவமாக விளங்கியதைத் திருக்காளத்தித் திருக்கோயிற் சூழலில் காண முடிகிறது! திருக்காளத்தித் திருக்கோயிற் சூழ்லில் விளைந்த அற்புதங்கள் எண்ணற்றவை. அவையனைத்தும் ஆன்மாக்களை உயர்நெறியில் உய்த்துச் செலுத்தக் கூடியவை!

திருத்தொண்டுப் பயிற்சி

திருக்கோயில் உயர்ந்து விளங்கியது தொண்டின் அமைப்பால்! திருநெறிய திருத்தொண்டு திருக்கோயிலைக் கண்டது. திருக்கோயில் திருநெறிய திருத்தொண்டை வளர்த்தது. திருக்கோயிலைச் சார்ந்து நடைபெற வேண்டிய தொண்டுகள் செய்வதற்குப் பயிற்சிப் பள்ளி ஒன்றைக் கணநாத நாயனார் நடத்தினார். திருக்கோயிலைச் சார்ந்து திருமாலை தொடுத்தல் முதல், சுவைமிக்க திருவமுது படைத்தல் வரை பல்வேறு தொண்டுகள் நடைபெற்று வந்துள்ளன. இதனை,

“ஆய அன்பர்தாம் அணிமதில்
சண்பையில் அமர்பெருந் திருத்தோணி
நாயனார்க்கு நற்றிருப்பணி ஆயின
நாளும் அன்பொடு செய்து
மேய அத்திருத் தொண்டினில்
விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினில்
அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.”

(பெரி. கணநாதர் - 2)

என்று பெரியபுராணம் பேசுகிறது.

எனவே திருக்கோயில், தொண்டு இயக்கத்தின் மையம் என்பதறிக. திருகோயிலைச் சார்ந்து வாழ்கிறவர்கள் வளமாக வாழத் துறைதோறும் வாயில் அமைத்து வழி செய்தது திருக்கோயிலேயாம்!

உடல் ஊனமுறுதல் வருந்தத்தக்க ஒன்று! உடல் ஊனமுற்றோர் பக்கம் கனிந்த அன்பைக் காட்ட வேண்டும்! அவர்தம் வாழ்க்கைக்குரியன எல்லாம் செய்யப் பெற வேண்டும். இந்த உணர்வு திருக்கோயில் வளாகத்தில் அரும்பி மலர்ந்திருந்தது. திருவாமாத்தூர்த் திருக்கோயிலில், கண்பார்வையிழந்தோர் 16 பேர் உண்டியும், உறையுளும் பெற்றுத் திருமுறை பயின்றனர்-ஓதினர் என்பதை அறிக. கண்ணிழந்த சுந்தரர்க்கு இடர்ப்பாடின்றி நடக்க ஊன்றுகோல் கொடுத்துதவியது திருவெண்பாக்கத்துத் திருக்கோயில் வட்டம் என்பது ஓர்க. சமுதாயத்தில் பலவீனர்களாகிய உடல் ஊனமுற்றோர்க்குக் காப்பகமாகவும் திருக்கோயில் விளங்கி வந்தது.

முறை மன்றம்

வழக்குகள் வாராமல் வாழ்தல் நன்று. வரவேற்கத் தக்கது. ஆனால் மனித நேயத்தைவிடப் பொருளும் நுகர்வும் முதன்மை பெற்று விடும் பொழுது வழக்குகள் வராமற் போகா. வழக்கிற்குப் போகக் கூடாது; அடாவடித்தனமான வழக்குகள் வந்துவிட்டால் சந்திக்காமலும் இருத்தல் கூடாது. ஆனால் உலகியல் மரபில் வளமுடையோர் வளமில்லா தாரை வழக்கில் மாட்டி வைத்தே அமுக்குகின்றனர்; அழிக் கின்றனர். வசதியும் வாய்ப்புமில்லாதார் வழக்காட முடியாமல் தவிக்கின்றனர். இதனைக் கருதித்தான் இன்று வாய்ப்பற்றவர்களுக்கு வழக்காட “இலவசச் சட்ட உதவி” என்ற இயக்கம் தோன்றியிருக்கிறது. அரசே இந்த இலவசச் சட்ட உதவியை வழங்குகிறது. பழங்காலத்திலேயே நமது திருக்கோயிலைச் சார்ந்த வாழ்க்கை முறையில் இந்தமுறை, கால் ஊன்றியிருக்கிறது. மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன், மாமனாக வந்து வழக்காடி வெற்றி பெற்றுத் தந்துள்ளான். திரும்புறம்பியத்தில் திருமணம் செய்து கொண்ட செட்டிப் பெண்ணுக்கு, மதுரை இறைவன் வந்து சிவலிங்கத்தையும், கிணற்றையும், வன்னி மரத்தையும் சாட்சியமாக்கி அவளது துன்பம் துடைத்தான். திருக்கோயில் சூழலில் வழக்குகள் வரா வாழ்க்கைகள் நடந்தன. ஒரோவழி வழக்குகள் வந்த பொழுது எளிதில் தீர்வு காணப்பெற்ற அருமைப்பாட்டினையும் அறிக.

தொழிலில் சமத்துவம்

திருக்கோயிலைச் சார்ந்து வாழ்ந்த சமுதாய அமைப்பில் பல்வேறு குல அமைப்புகள் இருந்தன. அவற்றுக்கிடையே சிற்சில வேறுபாடுகளும் இருந்தன. குலநெறி முறைகளுக்கேற்பப் பழக்கங்கள் அமைந்திருந்தன; வழக்கங்கள் அமைந்திருந்தன. ஆயினும் அவர்களுக்குள் அற்புதமான பொதுமை நிலவியிருந்தது. அவர்களுக்கிடையில் பிரிவினை இல்லை; பிரிவினை வகைப்பட்ட பகைமை இல்லை. பல்வேறு குலப்பிரிவினரும் தத்தம் குலமரபுகளுக்கேற்ப அவரவர் தத்தம் தொழில்களை இயற்றி வந்தனர். சமுதாயம் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. நம்பிக்கையும் நல்லெண்ணமும் யாண்டும் நிலவியிருந்தன. குலப்பிரிவினைகள் உறவுக்கும், உடனிருந்து உண்ணுதலுக்கும் தடையாக இருந்ததில்லை. ஆதிசைவ குலத்திற்பிறந்த ஆரூரர், உருத்திரகணிகையர் குலத்தைச் சார்ந்த பரவையாரை மணக்கின்றார்; வேளாளர் குலத்தைச் சார்ந்த சங்கிலியாரை மணக்கின்றார். அந்தண குலத்தைச் சார்ந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை ஞானாசிரியராக ஏற்றுக் கொள்கின்றார், ஆதி திராவிடர் வகுப்பினைச் சார்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞான சம்பந்தருக்கு யாழ் வாசிக்கின்றார். அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருநீலநக்க நாயனாரின் வேள்விச் சாலையில் தங்கியிருக்கின்றார்.

“நின்ற அன்பரை நீலகண் டப்பெரும் பாணர்க்கு
இன்று தங்கஓர் இடங்கொடுத் தருளுவீர் என்ன
நன்று மின்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க்கு இடம்கொடுத்தனர்திரு மறையோர்”

என்பது திருத்தொண்டர் புராணம்.

நற்றமிழ் ஆரூரரும் சேரமான் பெருமான் நாயனாரும் உற்ற தோழராக விளங்குகின்றனர். அப்பரடிகளும் திருஞான சம்பந்தரும் முருக நாயனாரும் உடனிருந்து உண்டு பயின்று வாழ்கின்றனர் திருப்புகலூர்த் திருக்கோயில் வளாகத்திற்குள்! சேக்கிழார் இந்நிகழ்வை “உடனுறைவின் பயன் எய்தினார்! என்று பாராட்டுவார். திருக்கோயில் தத்துவத்தில் குல வேற்றுமைகள் இருந்தன. ஆனால், அவற்றைக் கடந்து பொது உறவு வளர்ந்தது! வேற்றுமையின்றி அவரவர்தம் தொழில்களை இயற்றினர்! அஃதோர் ஒப்பற்ற சமுதாயம்! ஆம்! திருக்கோயிலை மையமாகக் கொண்டு வாழ்ந்த சமுதாயம், ஒப்பற்ற சமுதாயம்!

நீர்நிலைப் பாதுகாப்பு

மனித வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாதது! “நீரின்றமையாது உலகு” என்று திருக்குறள் கூறும். திருக் கோயிலினின்றும் பிரிக்கப்படாது உடனிருந்து இயங்குவது தீர்த்தம் அதாவது திருக்குளம், தீர்த்தத்தைச் சார்ந்தே திருக்கோயில் விளங்குகிறது. திருக்கோயில்களைச் சார்ந்து மிக அகலமாகவும் ஆழமாகவும் எழிலுற அமைந்துள்ள திருக் குளங்களைக் காணும் பொழுதெல்லாம் நமது சமுதாய முன்னோடிகள், சமுதாய அமைப்பை நிர்மாணித்த திறன் நமக்குப் புலப்படுகிறது. ஆற்றங்கரைகளிலும் பெரிய திருக் குளங்களின் கரைகளிலும் திருக்கோயில்கள் விளக்க முற்றன. இந்தத் திருக்குளங்களைப் பாதுகாத்தல், தூய்மையாகப் பேணுதல் திருக்கோயிலின் கடமையாக இருந்தது. மானிடர்உடல் வெப்பம் தணியத் தீர்த்தத்தில் மூழ்கினர். ஆன்மாவைப் பற்றி நிற்கும் ஆணவ வெப்பம் தணிய இறைவனின் திருவருட் புனலில் மூழ்கினர். இத்தகைய திருக்கோயில்களின் திருக்குளங்களை அவ்வப்பொழுது தூர்வையெடுத்துத் துய்மைப்படுத்திப் பாதுகாத்து வந்துள்ளனர். திருவாரூர்க் கமலாலயம் என்று புகழ்பெற்ற ‘திருக்குளத்தைக் கண்ணிரண்டுமில்லாத குருடராக வாழ்ந்த தண்டியடிகள் துர்வையெடுத்துத் தூய்மை செய்த அரும்பெரும் சாதனையைச் சேக்கிழார் செஞ்சொற் காப்பியமாக வடித்துத் தந்துள்ளார்.

விழவுமலி வாழ்க்கை

தமிழ் மக்கள் விழாக்கள் எடுப்பதில் விருப்பமுடையவர்கள். விழவு நிறைந்த வாழ்க்கை தமிழர் வாழ்க்கை திருக்கோயில் நாகரிகம் மிகவும் சிறப்புற்று விளங்கியது, மருத நிலத்திலேயேயாம். மருத நிலத்து மக்களுக்கு இயல்பாகவுள்ள பழக்கம் விழாவயர்த்தல், திருவாரூர்த் திருக்கோயிலில் விழா நிகழ்ந்ததைத் திருப்பல்லாண்டு எடுத்துக் கூறும்.

“குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி
மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
மணம்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடும் கூடிஎம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே!”

என்பது திருப்பல்லாண்டு! சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து இருந்த நாளில், திருவாரூர் வசந்த விழாவை நினைந்து திருப்பதிகம் பாடினார் என்பது வரலாறு. திருவாரூர் வசந்த விழா, புகழ்பெற்ற விழா. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பார்த்துப் பாராட்டிய விழா! விழாக் காலங்களில் விழா நிகழும் ஊர்களில் உள்ள இல்லங்களில் எல்லாம் விருந்தினர் சூழ்ந்து வந்திருப்பர். எங்கும் வெள்ளம்போல் கூடி ஆட வரும் மகளிரும் பெருமானுக்குத் திருவிழா எடுத்து மகிழ்வர். பெருமானின் திருவிதியுலா, நையாத மனத்தினரையும் நைவிக்கும், திருத்தேர் விழா, சமுதாயம் ஒருங்கிணைந்து வலிமையுடனிருப்பதை எடுத்துக் காட்டும் விழா. உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஓரணியில் நின்று தேர் இழுக்கும் காட்சி, சமுதாயம் ஓர் உருப் பெற்றுள்ள காட்சியைப் புலப்படுத்தும். எடையாலும் உயரத்தாலும் உயர்ந்திருக்கும் திருத்தேர், சூழ்ந்திருக்கும் மக்களின் ஆற்றலுக்கு அறைகூவல்! அம்மம்ம! திருத்தேரின் வடம் பிடித்து இழுப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி! வாழ்க்கை எய்த்துக் களைத்துப் போகாமல் தடுக்க விழவு! நல்ல முறையில் விழவெடுக்கும் சமுதாயம் விழா வாழ்க்கை பெறும் !

சுகாதார வாழ்வு

வாழ்க்கை வாழ்வதற்கே! உடம்பிற்கு நோய் இயற்கையன்று! செயற்கையே! உடம்பை “நடமாடும் கோயில்” என்று திருமூலர் பாராட்டுவார். உடம்பை இழிந்ததென்று நினைத்து அலட்சியமாக வாழ்கிறவர்கள் நோயை வரவழைத்துக் கொள்கின்றனர்! அதன் பிறகு வேறு வழியின்றி உடம்புக்கு அடிமையாக வாழ்வர்! ஏன் இந்த அவலம்? தூய்மையான காற்று, தூய்மையான தண்ணிர், துய்மையான உணவு, தூய்மையான சிந்தனை! - இவற்றைக் குறித்த காலத்தில் உடம்புக்கு வழங்கினால் உடம்பு இயங்கும்; நம் விருப்பம் போல் ஒத்துழைக்கும்! திருக்கோயில் வளாகத்தில் அகன்ற முச்சுற்றுக்கள், உயர்ந்த மதில்கள் சூழ அமைந்திருப்பதால் தூய்மையான காற்றுண்டு! எல்லாத் திருக்கோயில்களிலும் தூய்மையான தண்ணீருண்டு! இறைவனுக்குப் படைக்கும் காய்களும் கனிகளும் உணவிற் சிறந்தவை! இவற்றை உண்டு வாழ்ந்தால் ஏன் நோய் வருகிறது? திருக்கோயில் தூய்மையாக இருந்தாலும் திருக்கோயிலைச் சார்ந்துள்ள வீதிகள் எப்பொழுதாவது தூய்மை கெட்டுப் போயிருந்தால் திருக்கோயில் வளாகமும் கெடும். அதனால் அப்பரடிகள் திருக்கோயில் வளாகத்தைத் துய்மை செய்ததோடு திருக்கோயிலைச் சார்ந்திருந்த வீதிகளையும் தூய்மை செய்தார்.

“மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும்
திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின்
மாலைகளும் செம்பொற் றாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார்வாழத் திருவிதிப் பணிசெய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்”

என்ற இச்செய்தியினைப் பெரியபுராணம் பாராட்டும். ஆதலால், திருக்கோயிலைச் சார்ந்து ஒரு தூய்மை இயக்கம் வளர்ந்தது! சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப் பெற்றது! தூய்மையே இறைமை என்ற கொள்கை உயர்த்திப் பிடிக்கப்பெற்றது.

தமிழாய்வு

மானிட நாகரிகத்திற்கு ஊற்று தாய்மொழி. தாய் மொழிச் சிந்தனையில் வளர்ந்த சமுதாயம்தான் வளரும், மேம்பாடு அடையும்! தமிழரின் தாய்மொழியாகிய தமிழ், திருக்கோயில் வளாகத்தில் வளர்ந்தது! தமிழ், திருக்கோயில் தத்துவத்திற்கு உருக்கொடுத்தது. சங்கப் புலவர்களின் தலைவனாக இறைவன் அமர்ந்து தமிழை ஆய்வு செய்தனன். அவன் மட்டுமா? உமையம்மையும் உடனிருந்து ஆய்வு செய்தாள்; அறுமுகச் செவ்வேளும் அமர்ந்து ஆய்வு செய்தான். திருக்கோயில் வளாகத்திற்குள் தமிழ்ச் சங்கம் இருந்தது. தமிழறிஞர்கள் கூடினர்; தமிழை ஆய்வு செய்து வளர்த்தனர். புலவர்களுக்கிடையில் புலமைக் காய்ச்சல் வருவதும் உண்டு. சங்க காலத்திலும் புலவர்களுக்கிடையில் யாருடைய கவிதை சிறந்தது என்று கலகம் நடந்தது! பெருமான், புலவர்களுக்கிடையேயிருந்த கலகத்தை அடக்கி நக்கீரர், கபிலர், பரணர் ஆகியோர் பாடல்கள் விழுமியவை என்று ஏற்பளித்தார்.

“.......கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தங்கொடு தெருட்டுஞ்சிறு வணிகன் தெருள்கீரன்
முத்தண்டமிழ் கபிலன்தமிழ் பரணன்தமிழ்மூன்றும்
அத்தன்மையுன் அறியும்தொறும் அறியும்தொறும் எல்லாம்”

“பல்காசொடு கடலிற்படு பவளம்சுடர் தரளம்
எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல்வாணிகன் குமரன்
சொல்லாழமும் பொருளாழமும் துலை நாவெனத் தூக்க
நல்லாறுஅறி புலவோர்களும் நட்டார்; இகல் விட்டார்”

எனும் திருவிளையாடற்புராணப் பாடலில் இஃதறியலாம். திருக்கோயில் வளாகத்தில் தமிழோடு இசைப் பாடல் ஓதப் பெற்றது; தமிழாய்வு செய்யப்பெற்றது. ஆக, மானிட இயக்கத்தின் ஊற்றாக இருக்கிற சிந்தனை, கருத்து, இலக்கியம், தத்துவம் ஆகிய அனைத்தும் திருக்கோயில் சூழலிலேயே காணப்பெற்றன; படைக்கப்பெற்றன.

திருக்கோயிலைச் சார்ந்து மொழி உலகம் இருந்த வரையில் தமிழ் மொழி தூய்மையாக இருந்தது; கலப்பின்றி இருந்தது; தனித்து இயங்கியது. தமிழ்மொழி வழியதாகச் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கு அமைந்திருந்தவரையில் உயிர்ப்புள்ளதாக இருந்தது. திருக்கோயிலைத் தமிழ் வளர்த்தது; தமிழைத் திருக்கோயில் வளர்த்தது.

எல்லா உயிர்க்கும் இறையருள்!

மனித வாழ்க்கைக்கு விலங்குகள், பறவைகள் துணை செய்யக் கூடியன. ஆதலால், திருக்கோயில் தத்துவத்தில் விலங்குகள், பறவைகள் முதலியனவும் உரியவாறு பாராட்டுப் பெற்றுள்ளன; பேணப் பெற்றுள்ளன! ஏன்? மதுரைத் திருக்கோயில், திருவானைக்காத் திருக்கோயில் முதலியவற்றில் இறைவனை யானைகள் பூசித்துள்ளன. திருவான்மியூர்த் திருக்கோயிலில் பசு பூசித்திருக்கிறது! மற்றும் பிற திருத்தலங்களில் சிலந்தி, குரங்கு, நண்டு ஆகியவைகளும் பூசித்துள்ளன என்ற வரலாறுகள் உண்டு. கரிக்குருவிக்கு மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல் உபதேசித்தார் என்றெல்லாம் திருக்கோயில் வளாகத்திலிருந்து வெளிவரும் செய்திகளை நோக்கும் பொழுது

“காக்கை குருவி எங்கள் சாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

என்ற பாரதியின் பாடலுக்கு ஊற்றுக் கண்ணாக அமைந்தது, தமிழ்நாட்டின் திருக்கோயில் தத்துவம் என்று எண்ணத் தோன்றுகிறது.

பரிவின் உறைவிடம்

திருக்கோயில் வளாகத்தில் இறைவன், “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து” அருள் செய்யும் காட்சி, மாட்சிமை மிக்குடையது! திருச்சிராப்பள்ளித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன், பேறு காலத்தில் அல்லல்பட்டிருந்த பெண்ணுக்கு, ஈன்ற தாயாக அருகிலிருந்து மகப்பேற்றுக்குத் துணை செய்தான் என்ற வரலாறு, திருக்கோயில் இயற்றிய சமுதாயப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

நிதி

திருக்கோயில் தத்துவத்தில் பொன்னுக்கும் பொருளுக்கும் இடமுண்டு. பொன்னும் பொருளும் வெறுக்கத்தக்கனஅல்ல. “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்” என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு. ஆதலால், வாழ்க்கைக்குப் பொருள் இன்றிஅமையாதது. திருக்கோயில் மற்றவர்களிடமிருந்து பெறவும் செய்தது. அதுபோலவே நாடி வந்தாருக்குத் தானும் வழங்கியது. இறைவன், திருவாவடு துறையில் திருஞானசம்பந்தருக்குப் பொற்கிழி தந்தருளினன்; திருவீழி மிழலையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் துயர் நீங்க, திருஞானசம்பந்தரும் அப்பரடிகளும் பணி செய்ய, நாள்தோறும் படிக்காசு தந்தருளினன்.

“கால நிலைமை யால்உங்கள்
கருத்தில் வாட்ட முறிர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
களிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்தருளிக்
குலவும் பெருமை இருவருக்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார்”

என்பது பெரியபுராணம். ஆதலால், திருக்கோயில் சூழலில் வாழ்தல், வளமான வாழ்க்கையாகவே அமைந்திருந்தது.

மரணத்தை வெல்லல்

வாழ்க்கை, வாழ்வதற்கே! சாவதற்கல்ல! மரணத்தை வென்று வாழ வேண்டும். .

“சுற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவற்கு”

என்ற வள்ளுவம் நோக்குக! திருக்கோயில் தத்துவத்தைச் சார்ந்து, திருக்கோயில் கோட்பாட்டின்படி வாழ்கிறவர்கள், மரணத்தையும் வென்று வாழ்வார்கள்! திருக்கடவூர்த் திருக்கோயில் இறைவனைப் பூசித்து வாழ்ந்தவர் மார்க்கண்டேயர். மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்று விதி நிர்ணயித்தது. ஆனால் மார்க்கண்டேயர் தம்முடைய வழிபடும் நாயகனை நம்பிக்கையோடு இறுகப் பற்றிக்கொண்டு, தன்னை வௌவ வந்த கூற்றுவனிடமிருந்து தப்பித்து விட்டார். பெருமானும் தமக்கு அன்புபட்ட மார்க்கண்டேயரின் உயிரை வௌவ வந்த காலனைத் தன் காலால் உதைத்து வீழ்த்தினான். “கால காலன்” என்று பெயர் பெற்றான். திருக்கோயில் நாகரிகம் மரணத்தை வென்றது; மரணத்தை வெல்லத் துணை செய்வது என்பதை அறிக.

வரலாற்று ஏடு

மனிதகுலத்தின் நிகழ்வு என்பது வரலாற்றை வளர்க்கும் உந்து சக்தி! இன்றைய நிகழ்வு, நாளைய வரலாறு. தமிழ் நாட்டுத் திருக்கோயில்களின் சுவர்கள் வரலாற்று ஏடுகளாக விளங்கும் மாண்பின! தமிழ்நாட்டில் நிலவிய மொழி, கலை, பண்பாடு, சமூகம், அரசியல், பொருளியல், சமயம் முதலியவற்றின் வரலாற்றுச் செய்திகளைத் திருக்கோயில் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. ஆகத் திருக் கோயில்கள் சென்ற கால வரலாற்றைக் கூறும் ஏடுகளாகவும் எதிர்கால வரலாற்றை இயக்கும் உந்து சக்திகளாகவும் விளங்கி வருகின்றன.

செய்ய வேண்டுவன

தமிழக வரலாற்றைச் செழுமைப்படுத்திய திருக்கோயில் தத்துவத்தைக் கண்டோம்! திருக்கோயில் சமுதாயத்தின் ஆற்றல்மிக்க மையமாக விளங்கியது. “கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” எனப் பழந்தமிழ்ச் சமுதாய அமைப்பு விளங்கியதை அறிய முடிகிறது. இன்று நமது திருக்கோயில்களுக்கும் நமது சமுதாயத்திற்கும் நெருக்கமான உறவில்லை. திருக்கோயில் வணிகக் கூடாமாக உருமாற்றம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயில், சமுதாயத்தின் நல்லமைப்புக்கு எதிராக இருக்கிற தீமைகளிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். அதாவது சாதி வேற்றுமை, தொழில் வேற்றுமை, தீண்டாமை பாராட்டுதல் முதலிய தீமைகளிலிருந்து மீட்கவேண்டும். திருக்கோயில் ஒரு சுரண்டும் நிறுவனமாக வளர்வது, திருக்கோயில் தத்துவத்திற்கே முரணானது! அதனால், நாடு கெடும். பொதுமை நெறிக்கு மாறான ஒரு மேலாதிக்கக்குடி திருக்கோயிலைச் சார்ந்து தோன்ற அனுமதிக்கக் கூடாது.

திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொண்டர்கள். திருக்கோயிலைச் சார்ந்து, மீண்டும் திருநெறிய தொண்டு உயிர்ப்புப் பெறுதல் வேண்டும். திருக் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊராட்சி மன்றங்கள், கல்விச்சாலைகள், மருத்துவச் சாலைகள் மீண்டும் திருக்கோயில் வளாகத்துக்குள் வந்தாக வேண்டும். நாம் ஒவ்வொரு வரும் திருக்கோயிலுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்!

திருக்கோயிலின் அசையும் சொத்து, அசையாச் சொத்துக்களின் பட்டியல் மட்டும் இருந்து பயன் என்ன? திருக்கோயிலில் நம்மவர் பதிவேடு இருக்க வேண்டும். நம்மவர் வாழ்க்கை நிகழ்வுகளைத் திருக்கோயிலிலேயே செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குரிய கடமைகளை-அவை எத்தகையவாக இருந்தாலும் தவறாது செய்தல் வேண்டும். ஆண்டுதோறும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியினைத் திருக்கோயிலுக்கு உளமார மனமுவந்து செலுத்தவேண்டும். இங்ஙனம் செலுத்துவதன் மூலம் திருக்கோயில் நிதிநிலை சீராகும். இது நடைமுறைக்கு வந்தவுடன் அருச்சனைச் சீட்டு முறைகளை (வணிக முறைகளை) அறவே நீக்க வேண்டும். சிக்கனமாகச் செலவழிக்கப் பெறவேண்டும். திருத்தொண்டின் மூலமே, ஊதியம் பெறாத உழைப்பின் மூலமே, திருக்கோயில்கள் தூய்மையுடன் பேணப்பட வேண்டும்.

திருக்கோயிலில் ஆரவாரமான செலவுகளைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயிலில் பொது நிதி ஆதாரத்தை வலிமைப்படுத்தி, வளமாக வாழ வாய்ப்பிழந்தவர்களுக்கு வாய்ப்பை உருவக்கி உதவி செய்து அவர்களை உயர்த்த வேண்டும். மீண்டும் திருக்கோயிலை மையமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பது நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது!

திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையங்களாகவும் சமுதாயத்தின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும். திருக்கோயில்கள் தனியார் உடைமைகளாகவும் மதச்சார்பற்ற அரசாங்கத்தின் உடைமைகளாகவும் இருப்பது விரும்பத்தக்கதல்ல! திருக்கோயில்களை மீண்டும் சமுதாய மையமாக மாற்றுவோம்! நம்முடைய சமுதாய வாழ்வியலைத் திருக்கோயிலைச் சார்ந்ததாக அமைப்போம்! முன்னையது உடனடியாக நிகழக் கூடியதன்று! இது தெரிந்த உண்மையே! ஆயினும் பின்னையது - அதாவது சமுதாய வாழ்வியலைத் திருக்கோயிலைச் சேர்ந்த்தாக அமைப்பது என்ற கோட்பாட்டை, உடனடியாகத் தொடங்க யாதொரு தடையு மில்லை! இந்த முயற்சியை உடனடியாக மேற்கொள்வோ மானால், நம்முடைய தலைமுறையிலேயே திருக்கோயில்கள் மீண்டும் சமுதாய மையங்களாக விளங்கும் பொற்காலம் தோன்றும் ! ‘கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்!’ - இதுவே நெறிமுறை! செயற்பாடு! தவம் ! அனைத்தும் ஆம்!

கோயில் வளர்த்த
வாழ்வியற் கலைகள்[2]

தமிழ்நாடு வரலாற்றுப் புகழ்மிக்க நாடு. மனிதகுல வரலாறு தொடங்குவதற்கு முன்பே தமிழ் மக்கள், மொழி, கலை, இலக்கியம், சமயம் முதலிய பல்வேறு துறைகளில் வளர்ந்து புகழ் பெற்றிருந்தனர். இவ்வகையில் தமிழ் மக்களின் பழமைக்கும் வளர்ச்சிக்கும் சான்றாக இருப்பவை பல. அவற்றுள், தமிழ்மொழி வாழ்க்கைக்கு இலக்கணம் கண்டிருப்பதும், தமிழ் மக்களின் வழிபடு தெய்வம் ஆடல் வல்லோனாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கவையாகும். தமிழ் கூத்து, இசை, இயல் என மூன்று திறத்ததாக வளர்ந்து முழுமை பெற்றுள்ளது. அதுபோலவே தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் திருக்கோயில்கள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன. இமயம் முதல் குமரிவரை நமது இந்திய நாட்டு மக்களிடத்தில் திருக்கோயிலைச் சார்ந்து வாழும் நெறி கால் கொண்டு உள்ளது; சிறந்து பரந்துள்ளது.

“திருக்கோயில் இல்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினொடு பலதளிகள் இல்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியும் இல்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.”

என்ற அப்பரடிகளின் திருப்பாடலும்,

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்,” என்ற உலக நீதிப் பாடல் அடியும் திருக்கோயில்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதற்குச் சான்றாக விளங்குவன.

தமிழர்கள் திருவுருவ வழிபாட்டில் அசைவிலா நம்பிக்கையுடையவர்களாய் விளங்கி வருகின்றனர். தமிழர்கள் தீவிரமான பக்திநெறி நிற்பவர்கள், அவர்கள் தாங்கள் விரும்பும் ஒரு பொருளிடத்தில் கடவுளாற்றலை - உருவகப்படுத்திக்கொண்டு பத்திமை செய்பவர்கள்.

திருக்கோயில்கள் பரம்பொருளை உணர்வதற்குக் கருவியாகவும் பக்தி நெறியைப் பரப்புவதற்குச் சாதனமாகவும் விளங்கி வருகின்றன. ஆதலால், நமது இந்திய நாட்டில் இந்துமதக்கோயில்களின் எண்ணிக்கை மிகுதி. இத்திருக்கோயில்களைக் கட்டும் பணி கிறித்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தொடங்கப்பெற்று விட்டது என்பதை வரலாறும் இலக்கியமும் எடுத்துக் காட்டுகின்றன. கடல் கொண்ட தென்குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரை என்ற நகரத்தில் நகரமனைய திருக்கோயில் இருந்ததைப் புறநானூறு பேசுகிறது. குமரியாறு கடல் கொள்ளப்படுவதற்கு முன்னும், தென்குமரி நாட்டில் பஃறுளியாறு கடல் கொள்ளுவதற்கு முன்னும் எழுந்த பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி பஃறுளியாறு கடல் கொள்ளப்படுவதற்கு முன் திகழ்ந்தவன். முக்கட் பெருமான் என்னும் முழுமுதற் கடவுளொருவருக்கே இம்மன்னன் வணக்கம் காட்டும் இயல்பினன் என்றும், அக்கடவுள் முனிவர்களால் பரவப் பெறுபவர் என்றும், அப்பெருமானுக்கு ஒரு நகரத்தைப் போல் அகன்று உயர்ந்து அமைந்த திருக்கோயில் அவ்வளவு பழங்காலத்திலேயே இருந்தது என்றும் அறிகின்றோம். முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றி வருகின்ற புறப்பாட்டில்,

“பணியிய ரத்தைநின் குடையே! முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே!” (புறம்-5)

என்று காரிகிழார் என்னும் நல்லிசைப் புலவர் இதனைக் கூறுவர். இத்தகைய திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையமாக அமைந்து மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யத் தக்கவகையில் இயங்கியும் வந்தன.

தமிழகத்தின் திருக்கோயில்கள் கடவுள் மங்கலமிக்க அருள் நலத்துடன் பொருள் நிறைந்த கலைகளையும் பெற்று விளங்குகின்றன. விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் திருக்கோயில்கள் ஆயிரம் ஆயிரம், தமிழகத்தை அணி செய்கின்றன! கல்லெல்லாம் கலை! பேசும் பொற் சித்திரம்! கடவுள் திருவுரு !

மானுட வாழ்க்கை, வென்று விளங்கவேண்டும். மானுடத்தின் வெற்றியே மண்ணுக்குப் புகழ் சேர்ப்பது! விண்ணுக்கும் சிறப்பாவது! மானுடம் வென்று வீரம் நிகழ்த்துவது வாழ்க்கையின் குறிக்கோளாகும்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.”

என்று திருக்குறள் கூறும். நெறிப்பட நின்று வாழ்தல் ஒரு கலை, வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப் பெற்ற ஒரு மாளிகையன்று, நாழிகைதோறும் உரியோரால் கட்டப் பெற்று வருவது. வாழ்க்கை ஒரு சுமையன்று; துன்பமும் அன்று; வாழ்க்கை குறிக்கோளுடையது. வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வதற்குரியது. அதனால், கால உணர்வோடு கலந்து வளர்ந்த வாழ்வியற் கலைகள் நமது திருக்கோயில் வளர்த்த கலைகள்.

வாழ்க்கைக்குச் சோறு மட்டும் போதாது. வாழ்க்கைக்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. உயிர் தழைத்து வளர்வதற்கு இன்பம் துணை செய்கிறது. ஒருவர் நெறிப்பட வாழ்தல் அவருக்கும் பெருமை; அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் பயன்தரும், ஒரு நல்ல இசைக்கலைஞன் இனிமையாகப் பாடும் பொழுது அவனுக்குப் பெருமை: மகிழ்ச்சி, இன்பம்! அந்த இசையமுதைத் துய்த்து மகிழும் மற்றவர்களுக்கும் களிப்பு; மகிழ்ச்சி, இன்பம்! ஆதலால் வாழ்க்கைக்குக் கலை இன்றியமையாதது. கலைநலம் சான்ற வாழ்க்கையில்தான் அன்பு இருக்கும்; அமைதி இருக்கும்; இன்பம் இருக்கும்.

வாழ்தல்!-இஃது ஒர் அருமைப்பாடான கலை. “பிழைத்தல்” வாழ்க்கையன்று. வாழ்க்கையில் வழங்கப் பெற்றுள்ள வாய்ப்புகள் அனைத்தும் முழுமையாகப் பயன்பட வேண்டும். வாழ்க்கை ஒரு சுமையாக இருத்தல் ஆகாது. எவ்வளவு நெருக்கடியான துன்பச் சூழலிலும் பரித்து மகிழ்ந்து வாழ்தலே வாழ்க்கை அழுது புலம்புவது அவலம்! வாழ்க்கை, கலையாக அமைய வேண்டுமானால் வந்து சூழ்ந்துள்ள துன்பங்களுக்குரிய காரண காரியங்களை ஆராய்ந்தறிய வேண்டும். துன்பங்களுக்கெல்லாம் காரணம், பெரும்பாலும் முறையாக வாழாமையேயாம்! ஒருவரைக் காணல், ஒருவர் சொல்வதைக் கேட்டல், ஒருவரோடு பேசுதல் முதலிய நிகழ்வுகள் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாய் அமைந்துவிடுகின்றன. “முகனமர்ந்து இனிது நோக்குதல்” என்பது திருக்குறள், கண்கள் ஆயிரம் ஆயிரம் கூறும். கண்களால் வளர்ந்த கதைகளும் உண்டு, கண்களால் விளைந்த தீமைகளும் உண்டு. ஆதலால், பரபரப்பின்றி, அமைதியான, மகிழ்ச்சி நிறைந்த குளுகுளுப்பைக் கண்களால் காட்டுதல், காண்பவர்களுடன் நெடிய இனிய உறவை வளர்த்துக் கொள்ளுதல், பார்வைக் கலையின் இலக்கணம்.

மற்றவர்களின் மீது கூறும் குறைகளைக் கேளா திருத்தல், கோள் கேளாதிருத்தல் ஆகியன கேட்டறிதலின்பால் உள்ள கலைத்திறன். இனியனவே பேச வேண்டும்; மற்றவர் குணமே கூறவேண்டும்; முகமன் கலவாத புகழ் கூற வேண்டும். இது பேசும் கலை. பொறிகள் ஐந்தும் பண்பட்ட நிலையில் பழக்கப்படுத்தப் பெற்றால் மனம் தூய்மை ஆகும்; புத்தி புண்ணியச் செயலில் ஈடுபடும்; சித்தம் அழகுடன் விளங்கும். இந்த நிலையில் வாழ்வே கலை, கலையே வாழ்வு; வாழ்வே சமயம், சமயமே, வாழ்வு என்றாகிறது.

சமயம் என்பது ஒரு தத்துவம்; ஒரு கொள்கை, ஒரு கோட்பாடு. அது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தத்துவமன்று. சான்றோர் வாழ்க்கையினின்றும் பிறந்தது சமயம். வாழ்க்கையை வழி நடத்துவது சமயம், சமயம், ஒரு வாழ்க்கை முறை. அதனால், சமயம் என்பது திருநெறி; தவநெறி; துரநெறி; நன்னெறி, அருள் நெறி; சன்மார்க்கம் என்றெல்லாம் அருளாசிரியப் பெருமக்களால் பாராட்டப் பெற்றுள்ளது. நெறியென்றால் வழி. உயிரும் உணர்வும் செல்லும் ஆறு! ஆதலால் நெறி என்று கூறப் பெறுகிறது! இறையருளை நாடிச் செல்லுவோர் செல்லும் நெறி திருநெறி. புலன்களிலே அழுக்கின்றித் துய்மை வழிச் செல்லும்நெறி தூ நெறி, வஞ்சப் புலனைந்தைப் பக்குவப்படுத்த ஏற்கும் நெறி தவநெறி. எங்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் நன்மையைக் காணவும் நன்மையைச் செய்யவும் விரும்பிச் சென்றிடும் நெறி நன்னெறி, யார் மாட்டும் எவ்வுயிர்க்கும் தடையிலா அன்பைக் காட்டும் ஒழுக்கத்தினை ஏற்கும் நெறி, அருள் நெறி. இதுவென்றும், அதுவென்றும், நன்றென்றும் தீதென்றும் சமய பேதாபேதங்களில் ஈடுபடாது, சமயங்களைக் கடந்த பொதுநிலை நின்று வாழ்வோர் ஏற்பது சன்மார்க்க நெறி. ஆக, வாழ்க்கையில் நாகரிகம், பண்பாடு, சான்றாண்மை ஆகியன பொதுள வேண்டுமானால் சமயம் சார்ந்த வாழ்க்கை தேவை. சமயம் சார்ந்த வாழ்க்கைக்கு எளிதில் இட்டுச் செல்வது கலை, கலை சமயத்திற்கு ஆதாரம். சமயம் கலைக்கு ஆதாரம், இரண்டும் மானுடத்தை வளர்க்கும் தகையன.

கலகப் பூச்சிகளாக வாழ்ந்து, வெற்று வேடிக்கை மனிதராய் மாண்டு போகாமல் தடுக்க, சமயமும் கலையும் துணை செய்வன. கலைகளை அனுபவிக்கும் இதயமுடையோர் குற்றமுடையோராய் இருத்தல் அரிது. சமயம் சார்ந்த வாழ்க்கையுடையோர் யாதோர் உயிருக்கும் தீங்கு செய்யார். கலைகளின் வளர்ச்சி, கறைகளைத் தவிர்க்கும்; குற்றங்களைக் குறைக்கும்; சிறைச்சாலைகளை மூடும். பரஸ்பரம் நல்லெண்ணமும் அமைதியும் தழுவிய சமுதாய வாழ்க்கையை உருவாக்கும். இம்மண்ணுலக வாழ்க்கை அமைதியாக நடைபெறச் சமயமும் தேவை; கலைகளும் தேவை. இனி எதிர்வரும் காலத்திலும் இன்பம் தழுவிய வாழ்க்கையை அமைக்கச் சமயமும் தேவை; கலைகளும் தேவை.

கலைகளில் முதலில் தோன்றியது கூத்து. மொழி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூத்துத் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் தம்முடைய உணர்வுகளை, நினைத்திடும் பொருட் குறிப்பை, முதன் முதலில் அங்க அசைவுகளால்தான் புலப்படுத்தினர். அதுவே காலப்போக்கில் கூத்தாயிற்று. இக்கூத்திலிருந்துதான் நாட்டியம், நாடகம், திரைப்படம் முதலிய கலைகள் தோன்றின. தமிழரின் தலைசிறந்த வழிபாட்டுத் திருவுருவம் ஆடல்வல்லான் திருவுருவம்! வழிபாட்டுத் திருவுருவங்களில் பழமை சான்றதும் எழில் வாய்ந்ததும், இன்பம் அளிப்பதும் ஆடல்வல்லான் திருவுருவமே!

“குனித்த புருவமும் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியில் பால்வெண் ணிறும்
இனித்த முடைய எடுத்தபொற்
பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநி லத்தே!”

(நான்காம் திருமுறை - 783)

என்று அப்பரடிகள், ஆடல்வல்லானைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்த்து இங்கு நினைவுகூரத் தக்கது. தமிழரின் வழிபடும் தெய்வங்களில் சிறப்புடைய சிவம், சக்தி இருவருமே ஆடற்கலை நிகழ்த்தியிருக்கின்றனர். இன்றும் ஆடிய திருக்கோலத்தில் உள்ள அத்திருமேனிகளுக்கு வழிபாடு செய்யப் பெறுகின்றது. ஆடற்கலையில் நூற்றுக்கணக்கான வண்ணங்கள் உண்டு. பழந்தமிழகத்தில் திருக்கோயில்களில் அன்றாட வாழ்வியலில் நாட்டியமும் இடம் பெற்றிருந்தது. சோழர் காலத்தில் “பதியிலார்” என்று பெருமை பெற்றவர்கள் திருக்கோயில்களில் ஆடற்பணி செய்துகொண்டிருந்தனர். இங்ஙனம் பணி செய்தவர்களில் தலைசிறந்தவர்களுக்குச் சோழ மன்னர்கள் ‘தலைக்கோல்’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்துள்ளனர். இங்ஙனம் பட்டம் பெற்ற ஆடற்பெண் “தலைக்கோலி” என்றழைக்கப் பெற்றாள். திருக்கோயில்களில் நடனமாடுவதற்கு, மாமன்னன் இராசராசன் 400 பெண்கள் வரை நியமித்திருக்கிறான். நடனமாடும் இவர்களுக்குப் பக்க வாத்தியமாக, பாடவ்யம், கானபாடி, உடுக்கை வாசிப்போர், கொட்டி மத்தளம் வாசிப்போர், முத்திரைச் சங்கு ஊதுவார், பக்க வாத்தியர், காந்தர்வர், உவைச்சர் என்றெல்லாம் பலர் இசைப் பணி புரிந்தனர் என்று கல்வெட்டுச் செய்திகள் அறிவிக்கின்றன.

“ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்

வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் திளைத்தார்”,

(பெரியபுராணம், தடுத். 106)

என்று ஆடற் பெருமானை ஆரூரர் வணங்கி மகிழ்ந்த செய்தியினைச் சேக்கிழார் பெருமான் சிந்தை குளிரப்பாடியுள்ளார். பொறிகள், புலன்கள் ஒன்றிய ஐந்து பேரறிவின் உணர்வுகளும் கண்களிலேயே நின்று ஆடல் வல்லானைக் கண்டு மகிழ்கின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அகக்கருவிகள் - அனுபவக் கருவிகள் நான்கும் சிந்தையை இடமாகக் கொண்டு விட்டன. மானுடத்தின் குணம் மூன்று. தாமதம், இராசதம், சாத்துவிகம், ஆகிய இம்மூன்று குணங்களில் சாத்துவிகமே உயர்ந்தது; சிறந்தது. ஆடல் வல்லானின் ஆனந்தக் கூத்தில் ஈடுபடும் ஆன்மா, இன்ப அனுபவங்களை அடைகின்றது. இதனினும் சிறந்த பேறுண்டோ? திருக்கோயில்கள் வளர்த்த வாழ்வியற் கலைகள், மனித வாழ்வை ஈர்த்துப் பதப்படுத்தி இன்பம் அளித்து வாழ்வளிக்கின்றன.

கலை, நாகரிகம் அடைந்த சமுதாயத்தின் படைப்புக்களுள் ஒன்று. கலைத்துறை ஒன்றல்ல; பலப்பல. அறுபத்து நான்கு கலைகள் என்று கூறுவர். கலை, அனுபவத்தில் பிறந்து, அனுபவத்திற்கு உரியதாகி, அனுபவத்தை வளர்த்துச் செழுமைப்படுத்துவது. இந்தக் கலைத்துறையில் தமிழகம் வரலாற்றுக் காலந்தொட்டுப் புகழ் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது. சங்க காலத்தில் கலை உலகு திறம்பட வளர்ந்திருந்தது. நாளை, பொழுதுகளாகப் பிரித்து, அந்தந்தப் பொழுதுக்குரியவாறு பண்களையும் நிர்ணயித்திருந்தனர். இதுபோலவே வேறுவேறு நிலைகளில் பாடும் பாடல்களும் வழக்கத்திலிருந்தன. விளையாடும் காலத்தில் பாடுகின்ற பாட்டுக்கள் “கந்துகவரி” முதலியன. “மங்கல வாழ்த்துப் பாடல்”, “செருப்பறை”, “வள்ளைப்பாட்டு” முதலிய பாக்களும் சங்ககாலத்தில் பயின்றன. இவையன்றி, ஆறுகள், கடற்கரைகள் முதலியவற்றின்-இயற்கையின் எழிலின்பத்தில் ஈடுபட்டுப் பாடிய பாடல்கள் “ஆற்றுவரி”, “கானல்வரி” முதலியனவாகும். சங்க நூல்களில் “பரிபாடல்” என்பதும் ஒன்று. அது முற்றிலும் இசைப் பாட்டினாலேயே ஆனது.

கலை, கலைக்காகவே என்பது ஒரு கொள்கை இல்லை, கலை வாழ்க்கைக்காகவே என்பது தமிழர் கொள்கை அதிலும் உலகாயத வாழ்க்கைக்கன்றி, அருள் நலம் சார்ந்த சமய வாழ்க்கைக்குக் கலை, தொண்டு செய்ய வேண்டும் என்பது தமிழர் கொள்கை. அதனாலேயே தமிழகத் திருக் கோயில்களெல்லாம் இசைக் கலையைப் போற்றி வளர்த்தன. குரலிசை, வாத்திய இசை முதலியவை திருக்கோயில்களிலேயே வளர்ந்தன. “ஊசற்பாட்டு”, “திரு அம்மானை’ “திருப்பொற்சுண்ணம்” முதலிய இசைப் பாடல்கள்-பக்திப் பாடல்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருந்தமையே இதற்கு எடுத்துக்காட்டு.

இசைவிப்பது இசை! ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இட்டு நிரப்பி இசைவிப்பது இசைதான். இசை, இறைவனை நினைந்து நினைந்து எண்ணுதற்குரிய எளிய சாதனமாகும். இன்னிசையோடு தமிழ்ப் பாடல் பாடியருளி இறைவனைத் தொழுத திருஞான சம்பந்த சுவாமிகளை, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாராட்டுவார். சேக்கிழார் பெருமான் “கானத்தின் எழுபிறப்பு” என்று வாய் மணக்கச் சிறப்பித்துப் பாடுவார். திருஞான சம்பந்தரும் பண்ணொடு கலந்த தமிழில் யாழிசை கூட்டி வழிபாடு செய்து வந்தார். “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்றார் அப்பரடிகள். இறைவன் “பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளி”னான் என்று மாணிக்கவாசகர், கூறினார். இங்ஙனம் சமய உலகில் இசை ஏற்றம் பெற்றிருந்தது. திருமுறைகள் அனைத்தும் பண் சுமந்த பாடல்களே! இசைப் பாடல்களே! தமிழோடு இசை கலந்த இப்பாடல்களைக் கேட்க இறைவன் பெரிதும்விரும்பினான். “தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினான்” இறைவன். இத்தகைய திருமுறை இசைக்கலை, திருக்கோயில்களை மையமாகக் கொண்டே வளர்ந்தது. இறைவன் புகழ்பாடும் பண்ணிறந்த பாடல்களாகத் திருமுறைப் பாடல்கள் விளங்குகின்றன.

இறை நலம் சான்ற இன்பத் தமிழிசைப் பாடல்களாகத் திருமுறைப் பாடல்கள் இருந்தமையால் இறைவனே இத்திருப் பாடல்களுக்குச் சான்று செய்தான். “தனதுரை"யென ஒப்பம் தந்தான். அதனால் இத்திருப்பாடல்கள் ஐந்தொழில்களையும் நிகழ்த்தும் ஆற்றலுடையனவாய் இருந்தன. நீரையும் நெருப்பையும் வென்று விளங்கின.

“பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனை அன் றேவிக் கராங்கொண்ட-பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்போல் அல்லாமை காண்”

என்று திருக்களிற்றுப்படியார் சிறப்பித்துக் கூறும்.

தமிழர் தம் சமய வாழ்க்கையில் பண்ணிசையும் பரதக் கலையும் நிலையான இடம் பெற்றவை; பெருமை சேர்த்தவை. அதனால் பிற்காலத் தமிழரசர்கள் இத்திரு முறைப் பண்ணுக்கு நிறைந்த ஆக்கமளித்தனர். குறிப்பாக மாமன்னன் இராசராச சோழன் தமிழ்ப் பகைவரின் சூதிலிருந்து திருமுறைகளை மீட்டுத் தந்தான். தான் வணங்கிய இறைவனுக்குத் “தேவார தேவர்” என்று பெயர் சூட்டினான்; தமிழகத் திருக்கோயில்களில் திருமுறைப் பதிகம் விண்ணப்பிப்பார் பலரை நியமித்தான். திருமுறைகள் மனித நெஞ்சத்தை உருக்கும் தன்மையன. திருமுறைகள் ஓதப் பெறாத திருக்கோயில்கள் பண்டைய தமிழகத்தில் இருந்ததில்லை. மீண்டும் அதே நிலை உருவாக வேண்டும். தமிழ்-நாட்டில் திருக்கோயில்களில் எல்லாம் திருமுறை விண்ணப்பிக்கும் பண்ணிசையாளர் நியமிக்கப் பெறுதல் வேண்டும். “அர்ச்சனை பாட்டேயாகும்” என்ற “உண்மை வழிபாட்டு நெறி” உயிர்ப்புப் பெற்றாக வேண்டும்.

இசை, தமிழோடு பிறந்தது. தமிழ், இசையோடு பிறந்தது. தமிழ் மக்கள் வாழ்வில் இசைக்கலை ஒன்றியிருந்தது. பிறந்த நாள்தொட்டு இறக்கும் நாள்வரையில், தமிழர்கள் வாழ்க்கையின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இசை இடம் பெற்றிருந்தது. தமிழிசை நெஞ்சத்தை ஈர்க்கும் ஆற்றலுடையது; இதயத்தைக் குழைக்கும் தன்மையுடையது. கற்றும் கேட்டும் மனம் அடங்காமல் அல்லற்படுவோர் பலர். பேய் மனம் எளிதில் அடங்காது; ஒடுங்காது; திருந்தாது. எண்ணில்லாத காலமாக, அலைந்து திரிந்த “ஊர் நாய்” போல் மனம் பழக்கவாசனையில் அகப்பட்டிருப்பது. ஆனால் அந்த மனத்தைத் தமிழிசை கேட்டுப் பழக்கப் படுத்தினால் எளிதில் கட்டுப்படும். நமது நாட்டு வழி, இசை இனபத்தில் இலயித்து நிற்றலே உய்வுக்கு வழி, உய்திக்கு வழி. இது மட்டுமா? தமிழோடு இசை வளர்ந்தது. திருக்கோயில்களில் தமிழிசை வளர்ந்தது. திருக்கோயில் தமிழிசையை வளர்த்தது. தமிழிசை இறைவன் புகழைப் போற்றி வளர்ந்தது; தமிழ் மக்களின் வாழ்நிலையை உயர்த்தியது. திருக்கோயிலிலேயே தமிழ்ச் சங்கத்தில் இசைபயிலும் இடம் தனியே இருந்தது. இந்த இடத்திற்குப் பெயர் “ஏழிசைச் சூழல்” என்பதாகும.

“சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
பலத்தும்,எம் சிந்தை யுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின்
ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ? அன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ?

இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.”

என்று வரும் திருக்கோவையார்த் திருப்பாடல் ‘ஏழிசைச் சூழல்’ என்று குறிப்பது அறிக. தமிழிலக்கியங்களிற் பல, இசைக்கலை தழுவியன. இசை, உயிர்! பாடல், உடல்! “பண் என்னாம் பாடற்கு இயை பின்றேல்” என்று திருக்குறள் கூறும். திருக்கோயில் வளாகத்தைச் சுற்றித் தமிழிசை வளர்ந்தது. பண்ணொன்றைப் பாடிப் பரிசில் பெற்றனர் பலர். இறைவனைத் தூதாக நடக்கச் செய்தது, சுந்தரரின் இசைத்தமிழ். எலும்பைப் பெண்ணுருவாகக் கண்டது திருஞானசம்பந்தரின் இசைத்தமிழ். திருமறைக்காட்டுத் திருக்கதவம் திறந்தது அப்பரடிகளின் பண்ணிசைத் தமிழ். இங்ஙனம் தமிழிசை, திருக்கோயில்களைத் தழுவியிருந்த சமுதாயத்தின் துயரங்களைத் துடைத்து வாழ்வித்த வரலாறுகள் இவை.

இசை, மக்களின் வாழ்க்கையில் எழுச்சியும் ஏற்றமும் மிக்க உணர்வுகளைத் தந்து வழிநடத்தியது. திருக்கோயில்களில் வளர்ந்த பண்ணிசையில் கற்பனை வளமும் எடுப்பும் உண்டு. தருமபுரத்தில் பாடிய யாழ்மூரிப்பண் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு! இவ்வாறு தமிழினத்தின் வரலாற்றை உந்திச் செலுத்திய பெருமை திருமுறைப் பண்ணிசைக்கு உண்டு.

“ஏழிசையாய் இசைப் பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான் செய்யும்
துரிசுகளுக்கு உடனாகி
மாழை ஒண்கண் பரவையைத் தந்து
ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆருர் இறைவனையே!”

என்ற திறப்பாடலில் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனே “இசையின் பயன்” என்கிறார். இன்பு அன்பு அடைதலே இசையின் பயன். மாணிக்கவாசகரிடம், அவர்தம் பாட்டுடைப் பொருள் எது? - எனக் கேட்ட பொழுது, அம்பலத்திலாடும் ஆடல் வல்லானை மாணிக்கவாசகர் காட்டியதாக ஒரு வரலாறு உண்டு. ஆதலால் கலையின் பயன் சாதாரணக் களிப்பு மட்டுமன்று; களிப்பினும் உயர்ந்த இன்பமாகும்; திருவருளின்பத்தில் திளைத்தலாகும்; திருவருளின்பத்தில் ஒன்றுவதாகும்.

நமது புலன்கள் அடங்காத் தன்மையன. பொறிகள் மதம்பிடித்த களிறுகள் போல்வன. இவற்றை அடக்கி நெறிப்படுத்தும் ஆற்றல் திருமுறைப் பண்ணிசைக்கு உண்டு. அலையும் ஆன்மாவை, பெருமான் திருவடிப் போதில் கட்டிப்போடும் ஆற்றல் திருமுறை இசைக்கு உண்டு. இறைவனே ஆரூரரின் இசைத் தமிழில் ஒன்றிப்போய் அவன் தன் கடமையைக் கூட மறந்துவிட்டானே!

“...வன்தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி
உரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத்தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்”

என்று சேக்கிழார் பெருமான் இச்செய்தியை எடுத்துரைப் பார். ஆதலால், இசையின் பயன் கட்டறுத்தல்; அன்பில் தோய்தல்; திருவருள் நலத்தினைப் பெறுதல். ஓர் ஆன்மா திருக்கோயிலைத் தழுவியுள்ள கலையால், எப்படி வளர்கிறது, பயன் பெறுகிறது என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு.

கூத்தில் பிறந்து, இசையில் வளர்ந்து நிறைவு பெற்று விளங்குவது இயற்றமிழ். இயற்கை எப்பொழுதும் இன்பமாக இருப்பது. பதிகங்கள், இசைப்பாக்கள், பரிபாடல் முதலியன கூத்தும் இசையும் முதிர்ந்த இயற்றமிழாகும். இயற்றமிழ், கலை நிறைந்த வடிவத்தில் உணர்வைத் தொடுவது; செழுமைப்படுத்துவது. இயற்றமிழ் இதயத்திற்கு இதமளிப்பது களிப்புத் தருவது. இயற்றமிழே முக்கள் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக விளங்குவது. அதனால் இயற்றமிழ் விரித்துரைக்கும் நிகழ்வுகள் திருக்கோயில்தோறும் நிகழ்ந்துள்ளன; ஆங்கு பட்டிமண்டபங்கள் நடந்துள்ளன. இறைவனும் இறைவியும் இயற்றமிழ் ஆராயும் தமிழ்ச் சங்கங்களில் வந்தமர்ந்தனர்; தமிழை ஆய்ந்தனர்; இறைவன் “நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறினான்” பாடலும் இயற்றினான். இறைவன், நாட்டு மக்களின் வாழ்க்கை நயந்தினிது நடைபெற அகப்பொருள் இலக்கணமும் அருளிச் செய்தனன். எனவே, இயற்கையோடிசைந்தது வாழ்க்கை வாழ்க்கையோடு இசைந்தது சமயம். சமயமும் கலையும் ஒன்றையொன்று தழுவியன. எல்லாம் மானுட குலத்தை வளப்படுத்தவேயாம்.

சமய வாழ்க்கையின் மணிமுடியான நிலை உள்ளக் கிழியில் உருவெழுதுதல்; உற்று நோக்குதல்.

“உயிரா வணமிருந்து உற்றுநோக்கி
உள்ளக் கிழியின் உருவெழுதி
உயிராவணம் செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமரர் நா டாளாதே ஆரு ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே!”

என்றருளிச் செய்வார், அப்பரடிகள். ஞானக் காட்சியில் ஒன்றைக் காணுதல் அரிய தவத்தின் பயன். அங்ஙனம் கண்ட ஒன்றினைத் தொடர்ந்து நினைந்து நினைந்து மகிழ, உள்ளக் கிழியில் உருவெழுதுதல் சமயக் கலையின் - ஓவியக் கலையின் - சிற்பக் கலையின் தாய்மை நிலை. ஓர் உருவமும் ஒரு நாமமும் இல்லாதானை, உணர்வரிய மெய்ஞ்ஞானத்தில் கண்ட காட்சியே முதல்! அக்காட்சியின் அனுபவமே வழிபாடு! வழிபாட்டினை அனைவரும் அனுபவித்து மகிழவே சிற்பம், திருவுருவ வழிபாடு! மலையெல்லாம் குகை குகையெல்லாம் திருக்கோயில்! மனம், வாக்குக் கடந்த பரம்பொருள், பேசும் பொற் சித்திரமாக, அருளும் திருமேனியாக எழுந்தருளியுள்ள காட்சி! தமிழகத்தில் உள்ள கோயில்கள் சிற்பக் களஞ்சியங்கள்! கல்லுக்கு உயிர் கொடுத்துப் பேசவைக்கும் கலையில் தமிழகச் சிற்பக் கலைஞர்கள் விஞ்சிய புகழுடையவர்கள். ஊழி தோறும் சாதாரண மக்கள் கூடக் கடவுளைக் கண்டு மகிழத்தக்க வகையில் சிற்பத்தில் சிந்தைக்கினிய மாட்சிமையைத் தந்தமைக்குக் கைம்மாறு ஏது? தமிழகத் திருக்கோயில்கள் இயல்பான - வாழ்க்கையோடியைந்த அனைத்து உணர்வுகளும் ததும்பும் சிற்பங்களைக் கொண்டு அழகுற விளங்குகின்றன. தமிழகத் திருக்கோயில்களின் சிற்பங்கள் கண்ணுக்கு விருந்து அளிப்பன; சிந்தைக்குக் களிப்பு நல்குவன: எண்ணுதற்குக் கற்பனைக் களஞ்சியமாய் விளங்குவன: இதனினும் உயிர்ப்புள்ள கலை வேறு ஏது?

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் 80 காரணங்களைச் சிவன் அபிநயித்துக் காட்டுவதாகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பரதமுனி இயற்றிய நாட்டிய நூலில் கண்டுள்ள காரணங்களோடு இவை ஒத்திருக்கின்றன.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் போலவே - ஆனால், தந்தை, மகன் என்ற மரபுக்கேற்ப, உயரத்திலும் அளவிலும் சற்றுச் சிறியதாகக் கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் கட்டப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள சிற்பங்களும் உயர்ந்து விளங்குபவை. இங்குள்ள சிற்பங்கள் உயிர்ப்புள்ள உருவங்களாக - நம்முடன் பேசுவன போன்று அமைந்துள்ளவை. கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலில் இறைவன், சண்டேசுவர நாயனாருக்கு சண்டீசபதம் அருளும் காட்சி மிகச் சிறந்த அழகிய சிற்பமாகச் செதுக்கப் பெற்றுள்ளது. அடுத்து நம்முடைய கவனத்தைக் கவரும் சிறந்த சிற்பங்கள் உடைய திருக்கோயில், தாராசுரத்திலுள்ள இராசராசேசுவரம் என்ற திருக்கோயில், இந்தத் திருக்கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு முழுவதும் சிற்பமாகச் செதுக்கப் பெற்றுள்ள காட்சி, காண்பார் உள்ளத்தைக் கவரும் காட்சி. இங்ஙனம் தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் அமைந்துள்ள சிற்பங்கள், கலைகளின் கருவூலமாக மட்டுமல்லாமல், தமிழக வரலாற்றைப் பாதுகாத்து, அந்தப் பழமையான வரலாற்றுச் செய்திகளைப் புத்துணர்வோடு மக்கள் அனுபவிக்கத்தக்க வகையில் படைத்துத் தந்துள்ள பெருமையை என்னென்று புகழ்வது!

தமிழகத் திருக்கோயிற் சிற்பங்கள் பல திறத்தன. இச்சிற்பங்களைச் சாதாரண உருவங்களாகக் கருதுதல் கூடாது. கலையுணர்வில் ஆவேசித்து நின்ற ஒரு கலைஞன், அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னை மறந்து இந்தச் சிற்பங்களைச் செதுக்குகின்றான். சிற்பக் கலைஞன் வாழும் உலகம் வேறு; அவனுடைய மனோ நிலையும் வேறு. சாதாரணமாக-சராசரி வாழ்க்கைத் தரத்தைக் கூட உயர்த்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய சிற்பங்களை அனுபவிக்கவும் விமர்சிக்கவும் இயலாது. பொதுவாகச் சமய உலகில் ஆண், பெண் என்ற வேறுபாட்டின் காரணமாக உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை; கவர்ச்சியும் இல்லை. காதல் வாழ்க்கை தவிர்க்க இயலாத ஓர் இயற்கை நியதி. எனவே, இவ்வகையான சிற்பங்களில் பெண்பால் உருவங்களைப் பார்க்கும்பொழுது சிலர் அதனைக் கொச்சையானது என்று நினைக்கின்றனர், பேசுகின்றனர். அந்த உருவத்தைச் செதுக்கிய சிற்பி, கலை உபாசனா முறையில் பால் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நின்றே வடித்துக் கொடுத்துள்ளான். அந்தக் கலைஞனின் உணர்வுப் போக்கிலேயே அவற்றை அனுபவிக்க வேண்டும்.

சிற்பக் கலையில் வளர்ந்து மகிழ்ந்த செந்தமிழ் மக்கள், வானவில்லின் வண்ணங்களில் திளைத்திருப்பர் போலும்! வண்ணப்பூச்சுக் கலையில் தமிழர்கள் வளர்ச்சி பெற்று, ஓவியக் கலையினைக் கண்டனர். “ஓவத்தன்ன வினைபுனை நல்இல்” என்று அகநானூறும், “ஓவுக் கண்டன்ன இல்” என்று நற்றிணையும் கூறும். ஆதலால் சங்க காலத்திலேயே ஓவியக்கலை தமிழகத்தில் சிறந்திருந்தது என்பதை அறியலாம். ஓவியமும் நுண்கலைகள் வரிசையைச் சேர்ந்தது. திருக்கோயில் முழுதும் தூய்மையாகவும் அழகாகவும் எடுப்பாகவும் விளங்க வண்ணப்பூச்சு செய்யப் பெற்றது. தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் உட்புறச் சுவரில் நாயன்மார்கள் வரலாறு, ஓவியமாய் வரையப் பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றை விரிவாகச் சித்திரித்துக் காட்டும் வண்ண ஓவியங்கள் மிகச்சிறப்பாகவும் அழகாகவும் அமைந்துள்ளன. சிவன்-பார்வதி முன்னிலையில் தேவமாதர்கள் நடனமாடு கின்றனர். இரண்டு நாயன்மார்களும் அதைக் கண்டு களித்த வண்ணம் உள்ளனர். இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓவியங்களிலெல்லாம் சிறந்த ஓவியம் திரிபுராந்தகச் சிவன் கதையைச் சித்திரித்துக் காட்டும் ஓவியமே! திரிபுராந்தகச் சிவனுருவத்தில் ரௌத்திரம், வீரம், கருணை முதலிய மெய்ப்பாடுகள் அற்புதமாகத் திட்டப்பெற்றுள்ளன. இந்த ஓவியங்களுக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும் வண்ணக்கலவை மிகமிக உயர்ந்தது. இன்றும் இந்த ஓவியங்கள் உயிரும் அழகும் நிரம்பியவையாக விளங்குகின்றன. ஓவியத்திற் சிறந்து விளங்கும் இந்தத் திருவுருவங்கள் பக்தர்களிடத்தில் சிறந்த பத்திமை உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்பது வெள்ளிடைமலை. ஓவியத்திற்கும் ஆடற் கலைக்கும் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் கருவறையைச் சார்ந்த அந்த உட்சுவரே தாயேடு! சித்தன்னவாசல் வண்ண ஓவியங்களும் நினைவு கூரத்தக்கவை. தமிழகத்தில் பல்வேறு. திருக்கோயில்களில் அருளார்ந்த நாயன்மார்கள் மற்றும் தல புராண வரலாறுகள் சிறந்த வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. அந்த ஒவியங்களின் வண்ணப் பூச்சுகள் இன்றளவும் மாறாமல் ஒளிமயமாய் விளங்குவன. தமிழகத்தின் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஓவியக் கலையின் சிறப்புக்குச் சான்று. இந்த ஒவியங்களெல்லாம் நம்மனோர் வாழ்க்கையை ஓவியமாய் விளங்கச் செய்வதற்குத் துணையாய் அமைவன.

உயிர், உடலோடு இயைந்து இயங்குகிறது. உடம்புஉயிர் கூட்டு வாழ்க்கையே வாழ்க்கை இந்த வாழ்க்கை இடையீடின்றி இயங்குவதற்கு உயிர் தேவை. அதனாலேயே “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று கூறினர். திருக்கோயிலைச் சார்ந்து நல்ல சமையற்கலையும் உணவுப் பழக்கமும் வளர்ந்தன. நல்ல வண்ணம் நலமுடன் வாழ்வதற்கு, எவ்வகை உணவு ஏற்றது. என்பதெல்லாம்கூட திருக்கோயில் திருவமுதுப் படையல் மூலம் நாடு கற்றுக் கொள்ள முடிந்தது. இன்னின்ன பொழுதில் இன்னின்ன உணவு என்றெல்லாம்கூட வரையறை செய்தனர். இன்று, புரதச்சத்து அடங்கிய பயறு வகைகளே உணவில் இன்றியமையாதவை, உடல் ஆற்றலுக்குத் துணை செய்பவை என்கின்றனர். நம்முடைய திருக்கோயில்களில் பயறு வகைகளில் ஒன்றான சுண்டல், திருவமுதுப்படையலில் முக்கிய இடம் பெற்றதை எண்ணுக, நலமான வாழ்க்கைக்குப் பழங்கள் உண்ணும் பழக்கம் தேவை. திருக்கோயிற் பூசை பழமின்றி நிகழாது. இங்ஙனம் உடலில் உயிர் பேணும் திறனைப் பெறுதற்குரிய கலையாகிய சமையற் கலைக்கும் சமயமே துணை செய்தது; வழிகாட்டியது. திருக்கோயில் திருவமுதுப் படையல் நெறிமுறைப்படி, ஒருவன் உண்டு வருவானாகில் அவன் நெடிய நாள் வாழ்வான்; நோயின்றி வாழ்வான்!

கூடி வாழ்தல் ஒரு கலை. கூடி வாழ்தலுக்கு ஒரு மையம் வேண்டும். பழந்தமிழர் வாழ்க்கையின் மையமாகத் திருக்கோயிலே விளங்கியது. நடுவூருள் திருக்கோயில்; நான்கு புறமும் மக்கள் சூழ்ந்து வாழும் ஊர் என்று நம்முடைய நாட்டில் ஊர்கள் அமைந்தன. இதுவே திருக்கோயிலைச் சார்ந்து ஊர்கள் இயங்கின என்பதற்குச் சான்று. தமிழ் மக்களின் சமய மரபுப்படி கடவுள், வாழ்த்துப் பொருள் மட்டுமின்றி வாழ்வுப் பொருளாகவும் விளங்குபவர். அன்றைய தமிழ் மக்கள் வாழ்க்கையின் நன்மை, தீமை ஆகிய அனைத்தையும் திருக்கோயிலை மையமாகக் கொண்டே செய்தனர். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனிடம் விண்ணப்பித்து, அவன் திருவுளம் அறிந்தே செய்தனர். சுந்தரர் திருமணம், திருக்கோயிலின் சூழலில் இறைவனே முன்னின்று செய்துவைக்கப் பெற்றது ஓர்ந்தறிக. ஆலயச் சுற்றிற்குள் அழுத குழந்தைக்குப் பால் கிடைத்தது என்பதைத் திருஞான சம்பந்தர் வரலாற்றால் உயத்துணர்க! அப்பரடிகள் குடரோடு துடக்கி முடக்கியிட்ட சூலை நோயிலிருந்து திருவதிகைத் திருக்கோயிற் சூழலில், திருவதிகைத் தலைவனாலேயே மீட்கப் பெற்றார் என்பதறிக! கொற்றாளின்றித் தவித்த ஏழை, பிட்டு வாணிச்சிக்கு ஆலவாயண்ணல் கொற்றாளாக வந்து ஏவல் செய்த வரலாறு கற்றுத் தரும் பாடம் என்ன? தாயாக வந்து மகப்பேறு பார்த்ததும் தயாபரன் தானே! மாமனாக வந்து வழக்குரைத்த மாட்சிமைமிக்க வரலாறு என்றும் மறத்தற்கியலாதது. இவையெல்லாம் நமது சமுதாய வாழ்க்கை திருக்கோயிலை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள்! இத்தகைய நடைமுறைகளில் திருக்கோயில்கள் இயங்கியபோதும், நமது சமுதாய மக்கள் வளர்ந்தபோதும் வாழ்க்கை இன்பமாக இருந்தது. திருக்கோயில்களும் உயிர்ப்புடன் அருள் நிலையங்களாக விளங்கின. இன்று, அவை பண்டைய மாட்சியுடன் விளங்கவில்லை என்பது வெளிப்படையான - கசப்பான உண்மை. இந்த நிலை மாறினால் தமிழகம் புத்துயிர் பெறும்; புதிய வரலாறு படைக்கும்; கலைகளும் செழித்து வளரும்.

தாயாகிக் குழந்தை வளர்த்தல் ஒரு நுண்ணிய கலை. இன்று தாயார் பலர் குழந்தைகளை முறையாக வளர்ப்பதில்லை. ஒரு தாய் எங்ஙனம் பாலூட்டி, எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குச் சீர்காழியில் எழுந்தருளியுள்ள திருநிலைநாயகி ஓர் எடுத்துக்காட்டாவாள். குழந்தை அழுகிறது. அவள் தாய்! நான்கு சுவர்களுக்கிடையில் இருக்கும் தாயல்லள் ! அண்டத்திற்கு எல்லாம் தாய் ! அதனால் யாருடைய குழந்தை, எந்தக் குழந்தை என்ற வினாவிற்கு இடமில்லை. பிறந்த குழந்தைகளெல்லாம் பாலுண்டு வளர வேண்டுமல்லவா? அவள் அருளின் வடிவு! ஆதலால் பாலூட்டுகிறாள். சாதாரணமாகப் பாலூட்டினால் குழந்தையின் ஊனுடல் வளரும்; உயிர் வளராது. ஆதலால், திருஞானத்தையும் பாலிற்குழைத்தூட்டினாள்! இது தாய்க் குலத்திற்கோர் எடுத்துக்காட்டு அவர்கள் முறையாகக் குழந்தைகளை வளர்க்கவேண்டும்; பாலூட்டி வளர்க்க வேண்டும். உடன் சிறந்த அறிவையும் தந்து வளர்க்க வேண்டும். தாய்மைக் கலைப் பயிற்சிக் கூடம் சீகாழி. அதன் பேராசிரியை திருநிலை நாயகி, முதல்வர் பிரமபுரீச்சுரர்; அங்கு வளர்ந்த குழந்தை திருஞான சம்பந்தர். திருக்கோயில் வழங்கும் உயிர்ப்புள்ள வாழ்வியல் கலைக்கு இதைவிடச் சிறந்த சான்று வேறு வேண்டுமோ?

மானுட வாழ்க்கை அகனமர்ந்த காதலில் மலர்வது மகிழ்வது. இறைவனே உமையோடு காதல்புரிந்து பெண்பால் உகந்து வாழ்கின்றான்.

“தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி

பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி விடுவர்காண் சாழலோ”

என்பார் மாணிக்கவாசகர். ஆதலால் காதலின் அருமை திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தனக்குத் தெரிகிறது. ஆதலால், தான் விரும்பிய ஒருவரைச் செட்டிப் பெண் மணந்து கொள்ள, திருமருகலுறை எம் தலைவன், திருஞானசம்பந்தர் வாயிலாகத் துணை செய்த அருமைப்பாடு எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. நற்றமிழ்ச் சுந்தரர் காதல் நிறைவுறுவதற்காகப் பரவையார் பாலும், சங்கிலியார் பாலும் இறைவன் நடந்த தூது மண்ணகம் மணக்கும் வரலாறு அன்றோ! காதல் இயல்பில் அரும்பி மலர்வது. அதையும் யாராவது செயற்கையாக்க விரும்பினால் கண்ணுதற் பெருமானின் நெற்றிக்கண் கனல் கக்கும். இதற்குச் சான்று. காமனை எரித்தது. ஆதலால் ஓரறிவுயிரிலிருந்து ஆறறிவுயிர் வரை கலந்து மகிழும் காதலுக்கும் திருக்கோயிலே மையம்.

வாழ்வு, வாழும் தன்மையுடையது. ஒரோவழி இயற்கையின் காரணமாக வாழ்விக்க நேரிடலாம். உண்ணும் உணவுக்கும் நெருக்கடி ஏற்படலாம். அதைத்தான் பஞ்சம் என்பது. பஞ்சம் என்பது மனித உலகத்திற்குத் தீமை செய்வது; பண்பாட்டைக் கெடுப்பது; வாழ்வை அழிப்பது. ஏழாம் நூற்றாண்டில் திருவிழிமிழலை வட்டத்தில் பஞ்சம் வந்து விட்டது. எங்கும் வறட்சி! வறட்சியினால் ஏற்பட்ட துயர் தணிக்கத் திருவிழிமிழலையில் உறையும் எந்தை ஈசனே முன்வந்தான்! வறட்சித் துயர் தணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருத்தொண்டர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு நாளும் பொற்காசு - வறட்சி யொழிப்புக்கு மான்யம் தந்தருளினன்; திருக்கை வழக்கம் தந்தருளினன். வறட்சித் துன்பம் தெரியாமல் பலர் உண்டு மகிழ்ந்தனர். ஆதலால், துன்பம் வந்துற்றபொழுதும் தொழுத கைத் துன்பம் துடைக்கும் கலையிலும் திருக்கோயிலே முன்னின்றது. வழக்குகள் வாரா வாழ்க்கையே உத்தமமான வாழ்க்கை. ஆனால், வழக்குகள் வாரா வாழ்க்கை வையகத்தில் அமைவது அரிது. ஒரோவழி வாழ்க்கையில் வழக்குகள் வந்துற்றால் என்ன செய்வது? வழக்கைத் தாமே பேசிப் பேசி வழக்கைக் காழ்ப்பாக மாற்றக்கூடாது. உடனடியாக வழக்கை நடுவர் மன்றத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். இதுவே வழக்கு வளராமல் தடுக்கும் முறை வழக்கைப் பகையாக வளர்க்காமல் தடுத்து நிறுத்தும் உபாயம்! பண்டைய தமிழ் மக்களுக்கு முறை மன்றம் எங்கிருந்தது: திருக்கோயிலிலிருந்த ஊர்ச்சபைதான் முறை மன்றம். நற்றமிழ்ச் சுந்தரர் வழக்கு திருவெண்ணெய்நல்லூர்த் திருக்கோயிலில் இருந்த ஊர்ச் சபையிலேயே விசாரிக்கப் பெற்றது. ஆதலால், வழக்கை வளராது தடுத்து, உறவை வளர்க்கும் கலையும் திருக்கோயிலைச் சேர்ந்தே வளர்ந்தது.

வாழ்க்கையில் சிறப்புற்று விளங்க அடக்கம் தேவை. அடக்கத்துடன் வாழ்தல் ஒரு நுண்ணிய கலை. முற்றிய கதிர் மணிகள் தலை சாய்ந்து கிடக்கும். தாழ்வெனும் தன்மை பூண்டொழுகல் சைவத்தின் பண்பு. எந்தச் சூழ்நிலையிலும் அடக்கம் தவறுதல் கூடாது. சான்றோர்க்கு வணங்கி வாழ்தலைத் தவிர்க்கலாகாது. நற்றமிழ் நாவலூரர் திருவாரூரில், எந்தை ஈசனை வணங்கும் விரைவுணர்ச்சியில், தேவாசிரிய மண்டபத்தில் தங்கியிருந்த சிவனடியார்களை வணங்காமல் சென்று விடுகிறார். வணங்கக் கூடாது என்பது சுந்தரரின் எண்ணமன்று. பரபரப்பான விரைவு உணர்ச்சி! ஆனால், திருவாரூர்த் தியாகேசன் ஆரூரக்கு இதனை நயம்பட எடுத்து உணர்த்துகின்றார். அதன்பின் ஒரு தடவை வணங்க மறந்த ஆரூரர், பலதடவை “அடியேன், அடியேன்” என்று பன்னிப்பன்னிக்கூறி வணங்குகின்றார். வெற்றி பொருந்திய வாழ்க்கை அடக்கத்தில் பிறக்கிறது. புகழ் பொருந்திய வாழ்க்கை அடக்கத்தினாலேயே கிடைக்கும். அடக்கத்தோடு தொடர்பில்லாத புகழ், வெற்றி ஆகியன வெறும் ஆகாச வாணமேயாம். நிலைத்த பயன் தாரா.

“அருளு பெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும் உணர்வில்லாத
சிறுமையேன் யான்”

என்று அப்பரடிகள் கூறிக் கொண்டதே அவரை ஆளுடைய அரசு ஆக்கிற்று.

நட்பு ஒரு கலை! பழகிய நட்பைப் பெருகும் வண்ணம் வளர்த்த்துக் கொள்ளுதலும் ஒரு கலை. இங்ஙனம் நட்பில் பயின்று வளர்தல் ஒரு சிறந்த வாழ்வியல் அறம். ஒருவர் பிறிதொருவர்க்கு நட்பை உருவாக்கித் தருதலும் ஒரு கலை. ஒரோ வழி நட்பிற்பிரிவு வரும்பொழுது, பிரிவினை நீக்கி நட்பை இசைத்து வைத்தல் ஒரு பண்பு. மானிடத்தின் வாழ்வியலோடிசைத்த நம் கடவுள், நற்றமிழ் ஆரூரர்க்குச் சேரமான் பெருமாள் நாயனாரை நட்பாக அறிமுகம் செய்வித்து, நட்பு ஏற்படுத்தித் தந்தது ஓர் உயரிய கலை: பண்பாடு. சுந்தரருக்காகத் திருவாரூர் நெடுவிதியில் பரவையாரிடம் தூதாக நடந்து செல்கிறார் சிவபெருமான். சிவபெருமானிடம் மாறாத பக்தி பூண்ட ஏயர்கோன் கலிக்காமருக்கு இது பிடிக்கவில்லை. அவர் பார்வையில், பெண்களிடம் சமாதானம் செய்வதற்குக் கடவுளைத் தூதராக அனுப்பியது தகாதது என்று நினைக்கிறார். சுந்தரர் மீது ஏயர்கோனுக்குக் கோபம் பிறக்கிறது. சிவபெருமான் செய்யாதன எல்லாம் செய்து, சுந்தரருக்கும் ஏயர்கோன் கலிக்காமருக்கும் இடையே உறவை உண்டாக்குகிறார். இது உயிர்ப்புள்ள வாழ்வுத் தொண்டு.

திருவொற்றியூரில் சுந்தரர் மனம் சங்கிலியார் பால் சார்கிறது. வழக்கம்போல சுந்தரர் இறைவனை அணுகினார். நட்புக் கருதிச் சிவபெருமான் அதனை மறுத்தற்கியலாது, சங்கிலியாரிடம் தூது செல்கிறார். கடனுக்காகவன்றி, உணர்வு பூர்வமாகச் செல்கிறார். சங்கிலிக்கு மணாளனாக வாய்க்கப்போகும் ஆரூரரைப் பற்றி மிக அழகாக-உயர்வாக அறிமுகம் செய்கிறார். மனிதர்கள் தங்களுடைய நண்பர்களை வாய்ப்பேற்படும் பொழுது எவ்வளவு கவனமாகவும், எவ்வளவு உயர்வாகவும் பிறர்க்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டுமென்பதற்கு இந்த அறிமுகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

“சாருந் தவத்துச் சங்கிலிகேள்
சால வென்பா லன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யானாள
உரியான் உன்னை யெனையிரந்தான்
வார்கொண் முலையாய் நீயவனை
மணத்தா லணைவாய் மகிழ்ந்தென்றார்”

(பெ.பு. ஏயர்கோன் - 2839)

என்பார் சேக்கிழார் பெருமான். இதில் வியப்பு என்னவென்றால், சங்கிலியாரிடத்தில் இறைவன், சுந்தரர் பரவையாரைத் திருமணம் செய்திருப்பதைக் கூறவில்லை. நன்னெறியும் நட்பு நெறியும் ஒரோ ஒழி முரண்படுவதுண்டு. அப்பொழுதெல்லாம் நன்னெறியைவிட நட்பு நெறிக்கே முன்னுரிமை தர வேண்டும். அதனால், நன்னெறியைத் துறத்தல் என்பது பொருளன்று நட்புறவில் உடன்போய் பின் நன்னெறியில் நிறுத்தலே நட்பின் பாங்கு. இக்காரணத்தால் நன்னெறியை முன்னிட்டு நட்புநெறியைப் பாதிக்க விடலாகாது. சுந்தரரை மணக்கச் சங்கிலியார் இசைகின்றார். சங்கிலியார் சுந்தரர் மனையறம் சில ஆண்டுகளேனும் நடைபெற வேண்டுமே என்று கருதித் திருவுளம் கொண்டார். ஆதலால், திருவொற்றியூரிலிருந்து ‘பிரிந்து செல்வதில்லை’ என்று சுந்தரரிடம் உறுதிமொழி கேட்கும்படி சங்கிலியாருக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இளமை நலம் கொழிக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் இறைவனுக்குள்ள திருவருள் என்னே! இவையெலலாம் வாழ்வியலின் நுண்ணிய கலையாகும்.

சுந்தரர் தம்மிடம் பெரிதும் அன்பு பூண்டவராயினும், சுந்தரர்-சங்கிலியார் இருவரது உரிமைகளில் இறைவன் சங்கிலியாரின் உரிமைக்கே பெரிதும் துணையாக நிற்கின்றார். சங்கிலியாரைப் பிரியேன். அதாவது திருவொற்றியூரை விட்டுப்பிரியேன் என்ற உறுதிமொழியைச் சுந்தரர் கொடுக்க முயற்சி எடுக்காமலிருந்தார். சுந்தரரின் அந்த முயற்சியின்மை யெல்லாம் சங்கிலியார்பால் நின்று, பெருமானே முறியடிக்கிறார். மெலியார்க்கு அரண்செய்து நிற்றலே சமுதாய அறம் என்ற வாழ்வியற் கலையை இந்நிகழ்ச்சி தெள்ளிதின் விளக்குகிறது.

நோயின்றி வாழ்தல் ஒரு கலை, உடம்பு ஒப்பற்ற கருவி. “உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே” என்பார் திருமூலர். உடலுக்கு இருவகையான நோய். ஒன்று உடலினைப் பாதுகாக்கும் வகையிலும் வளர்க்கும் வகையிலும் ஏற்படும் பசி என்னும் நோய், பிறிதொன்று உடலை நலிவுறச் செய்யும் நோய். இது உடற்கழிவுகள் நீங்காமையினாலும் சுற்றுப்புறச் சூழ்நிலையின் கேட்டினாலும் பொருந்தாப்பழக்க வழக்கங்களினாலும் வரும் நோய். இந்நோய்க்கு மருந்து வேண்டும். இறைவன் மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி நின்றருள் செய்கின்றான். புள்ளிருக்கு வேளுர் என்ற திருத்தலத்தில் அவன் வைத்திய நாதனாகவே எழுந்தருளியிருக்கின்றான். ஆதலால், வாழ்க்கையில் உடல் நலம் பேனும் வகையிலும் மருத்துவ வகையிலும் திருக்கோயில்களே முன்னிற்கின்றன.

புள்ளிருக்குவேளூர்த் திருத்தலத்தில் திருச்சாந்துருண்டை என ஒன்றிருக்கிறது. இந்த உருண்டையைத் தொடர்ந்து 45 நாட்கள் உண்டு வந்தால் தீராத வயிற்றுவலியும் தீர்கிறது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள செல்வமுத்துக் குமரனுக்கு இரவிற் சாத்தும் சந்தனக் காப்பு மருத்துவத் தன்மையுடையது. இச்சந்தனக் குழம்பை நாள்தோறும் பருகி வந்தால் நோய்கள் நீங்கும், ஆற்றல் பெருகும்; அழகு வளரும். திருக்கோயில்கள் என்றாலே திருத்தல மரங்கள் உண்டு. இப்புண்ணியத் தலமரங்கள் மருந்து மரங்களேயாம். வேம்பு, நாவல், வில்வம், திருஆத்தி ஆகியன சிறந்த தலமரங்களாகும். இவைகளின் மருத்துவத் தன்மை அளப்பரியது. நாள்தோறும் ஐந்து வில்வம் தின்று வந்தால் உடல் பொன்னிற மாகும்; இரத்தம் சுத்தியாகும். முன்கூறிய வில்வம், நாவல், வேம்பு ஆகிய தழைகளில் ஐந்தைந்து எடுத்தரைத்து, கெட்டி மோரில் கலக்கி, நாள்தோறும் உண்டு வந்தால் நீரிழிவு நோய் வரவே வராது. வந்திருந்தாலும் போம்.

எல்லாவற்றையும் கடந்து மேவி வாழ்ந்து வரும் பொழுதில் சிலருக்கு நாள், கோள்களில் அச்சம். நாள் கோள்களை நினைந்து அஞ்சுதல் பேதைமை. அறிவறிந்த ஆள்வினையுடையார்க்கு நாளும் கோளும் நன்மையே செய்யும். ஈசன் அடியார்க்கு என்றும் இன்பமே செய்யும். ஆயினும், அஞ்சிச் சாவாரை என்ன செய்ய முடியும்? ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், “வேயுறு தோளிபங்கன்” என்று பதிகம் அருளிச் செய்து, அதில் நாளும் கோளும் நல்லவையே என்றருளிச் செய்துள்ளார். ஆயினும் இன்னமும் அஞ்சுவார் பலருண்டு. அவர்தம் அச்சத்தை நீக்கும் வகையில் திருநள்ளாற்றில் நளனைப் பிடித்திருந்த சனி நீங்கியதாக ஒரு வரலாற்று நிகழ்ச்சி உண்டு. இதுவும் ஒரு கலை.

திருக்கோயில் அமைப்பே ஒரு கலையின் வடிவம். பொறியியற் கலைச் செறிவு நிறைந்த கோயிலின் கட்டுமானக் கலை, ஒரு சிறந்த வாழ்வியலை உணர்த்துவது. ஒருவர் வாழ்க்கையின் இளமைக் காலத்தின் அடிப்படை, கோபுரத்தின் அடித்தளம்போல அகலமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்கால வாழ்க்கை சிறந்து, கோபுரம் என உயரமுடியும். தமிழகத்தின் திருக்கோயில்கள் அடிப்பாகத்தில் அகன்றும், உயர உயர அகலம் குறைந்தும் இருப்பதைக் காண்க. அடிப்படையை அகலமாகப் போடுக! உம் வாழ்க்கை உயரும்!

இங்ஙனம் திருக்கோயிலின் உயரத்தை உயர்த்திக் கட்டும் முயற்சி, திருச்சி மாவட்டம் சீனிவாச நல்லூரிலுள்ள குரங்கநாதர் ஆலயத்தின் கட்டுமானத்திலேயே கால் கொண்டது. பின் முதலாம் இராசராசன் காலத்திலும் அதற்குப் பின்னும் இந்த முயற்சி பரவலாக வளர்ந்தது. முதலாம் இராசராசன் எடுத்த தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் மிகப் பெரிய திருக்கோயில். இத்திருக் கோயிலில்தான் ஒரே கல்லில் செய்யப்பெற்ற மிகப் பெரிய நந்தி இருக்கிறது. இத்திருக்கோயில் தோற்றத்தைத் தொடர்ந்து நான்கு திசைகளிலும் இராசகோபுரங்கள் கட்டும் புதிய முயற்சி மிகுந்தது.

பெரும்பான்மையான திருக்கோயில்கள் மூன்று சுற்றுக்களுடன் அமைந்தவை. இந்த மூன்று சுற்றும் மும்மூன்று முறை வலம் வந்தே வணங்க வேண்டும் என்பது வழிபாட்டு முறை. இங்ஙனம் மும்மூன்று சுற்று வலம் வரும் பொழுது ஏற்படும் உடற்பயிற்சி; மூச்சுப் பயிற்சி முதலியன உடல் நலத்திற்கு உரியன. திருக்கோயிலில் அமைத்து வணங்கும் திருவுருவங்கள் அனைத்தும் வாழ்வியற் கலையைச் சார்ந்த அறிவியலின் வெளிப்பாடேயாம். ஒவ்வொரு திருக்கோயில் கருவறையிலும் எழுந்தருளியிருப்பது சிவலிங்கத் திருமேனி. இதற்குப் பலவேறு பொருள் காணலாம். விரிவஞ்சி ஒன்றிரண்டு காட்டுகிறோம். உலகே இறைவன்; இறைவனே உலகு. இந்த உலகு உருண்டை என்பது பண்டைத் தமிழரின் தெளிவான முடிவு. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்ற அற நூல்கள் கூறும். உலகையே இறைவனாக நினைந்து வழிபடத் தொடங்கிய காலத்தில், உலக வடிவத்தில் பாணமும் அதனைத் தாங்கி நிற்கும் ஆற்றலாக ஆவுடையும் என்று கருதி வழிபாடு செய்யப் பெற்றது. தொன்மைக்கால மக்கள் தீயினையே வழிபட்டு வந்திருக்கின்றனர். “சோதியே, சுடரே! சூழொளி விளக்கே!” என்று திருவாசகம் கூறும். கடவுட் காட்சியில் முதற்காட்சி சோதிதான்! எரிகின்ற எந்தப் பெருஞ்சோதி நெருப்பும் அடிப்பகுதி அகன்றும், நுனிப்பகுதி குறுகியும் இருக்கும். இது இயற்கை நியதி. இங்ஙனம் பாணம் குறுகி எழும் சோதியாகவும் ஆவுடை அச்சோதியின் அடிப்பாகமாகவும் கண்டு வழிபாடு செய்யப் பெற்றது. அறிவியல் உலகில், பொருளையும் ஆற்றலையும் - ஒன்றாகக் கிடந்து பொருளின் ஆற்றலையும் பிரித்துத் தனித்தனியே பெயர் சூட்டி அழைக்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. சிவம் பொருள்; அப்பொருளின் ஆற்றல் சக்தி. சக்தியாய், சிவமாய் ஒருங்கிணைந்து நின்றிடும் திருமேனி சிவலிங்கத் திருமேனி. இங்ஙனம் வாழ்வோடு பொருந்திய கலை ஞானத்தின் மறு பதிப்புக்களே திருக்கோயில் திருவுருவங்கள்.

அடுத்துப் பொருளையும், பொருளின் ஆற்றலையும் பிரித்து வழங்குமாறு போலத் தனித்தனியே பிரித்துச் செய்யும் வழிபாட்டு முறையால்தான் அம்மையப்பன் வழிபாட்டு முறை தனித்தனியே பிரிந்தது. பொருள், பொருளாற்றல் இவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் பயனே இன்பம். அதுவே முருகு எனத் தோன்றி நின்து. திருக்கோயில் திருவுருவங்கள் எல்லாமே வாழ்க்கையின் - அனுபவத்தின் வெளிப்பாடேயாம்.

வாழ்க்கையில் களிப்பும் மகிழ்ச்சியும் சிறக்க, திருவிழாக்கள்துணை செய்யும். திருவிழாக் காலத்தில் மக்கள் ஒன்று திரளுவர்; சமூக உறவுகள் வளரும் பாட்டும் கூத்தும் மேடைகள் தோறும் நிகழும். கடைசியாகத் திருத்தேர்த் திருவிழா நிகழும் பல டன் எடையுள்ள தேரைச் சில நூறு பேர் இழுப்பர். சமூக ஒருமைப்பாட்டுக்கு இஃதோர் அளவுகோல், சமூகம் வலிமையும் வனப்பும் பொருந்தியதாக இருப்பதை உலககோர் முன் எடுத்துக்காட்ட இஃது ஒரு நிகழ்ச்சி. மானிட சாதி ஒருமைப்பாட்டுடனும் வலிமையுடனும் இருப்பின் வையகத்தில் எதையும் நிகழ்த்தலாம். இயலாதது ஏது? இத்திருத்தேர் விழாவும் வாழ்வியற் கலையைச் சார்ந்தது என்று எடுத்துக் கூறவும் வேண்டுமோ?

இங்ஙனம் நம்முடைய வாழ்க்கை முழுவதுக்கும் மையமாக விளங்கும் திருக்கோயில் நமது செல்வமல்லவா? இத்திருக்கோயில்களைச் சற்றும் சிதைவுபடாமல் நாம் பேணல் வேண்டும். மிகப்பெரிய திருக்கோயில்களை எடுத்த மன்னர்கள் கூட எடுத்த பெருமையை விடப் பேணும் பெருமையே சிறந்தது என்று கருதியிருக்கிறார்கள்; தென்காசித் திருக்கோயிலை எடுத்த பாண்டிய மன்னன், திருக்கோயிலை எடுப்பித்து முடித்த பிறகு வெட்டி வைத்த கல்வெட்டில் பின்வருமாறு பொறித்து வைத்துள்ளான்.

“ஆராயிரம் இந்தத் தென்காசி
மேவும் பொன் ஆலயத்து
வாராத தோகுற்றம் வந்தால்
அப்போதங்கு வந்து, அதனை
நேராக வேயொழித் துப்புரப்
பார்களை நீதியுடன்
பாரா ரறியப் பணிந்தேன்
பராக்கிரம பாண்டியனே!”

என்பது அக்கல்வெட்டுப் பாடலாகும்.

ஆதலால் நாமனைவரும் நம்முடைய திருக்கோயில்களைக் கண்ணெனப் பேணுவோமாக! இத்திருக்கோயிலுக்குப் பகை, திருக்கோயில் மதில் கோபுரங்களில் செடி கொடிகள் முளைத்தலாகும். இவற்றை உழவாரம் கொண்டு அவ்வப்போது அகற்றுவோமாக! சிற்பங்களையும் ஓவியங்களையும் பாதுகாப்போமாக! திருக்கோயில் தூய்மை, நமது தூய்மை. திருக்கோயில் பேணல் ஒரு கலைத்தொண்டு. திருக்கோயில் பேணல் ஒரு வரலாற்றை இயக்கும் தொண்டு. திருக்கோயில் நிறுவனம் அன்று: அஃது இயக்கம், அஃது ஒரு கலைச் சூழல், நமது வாழ்வியலோடு கலந்த கலைச் செல்வமாகிய திருக்கோயிலை நாளும் பேணுவோமாக!

[3] திருக்கோயில் பூசனை எல்லாரும்
செய்யலாமா? - ஓர் ஆய்வு

ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள செய்தி மிகவும். கவனத்துடன் சிந்தித்து முடிவு காண வேண்டிய ஒன்று. இன்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சைவத் திருமேனி கொண்டு எழுந்தருளிய குருமூர்த்திகளால் காணப்பெற்று, இன்றளவும் - சிவாகம நெறியையும், செந்தமிழ் நெறியையும் முறையே போற்றிப் பாதுகாத்து வரும் நமது ஆதீனத்தின் வழிவழிப் பொறுப்புகளுக்கு ஏற்பவும், வளர்ந்து வந்துள்ள இன்றைய சமுதாயத் தேவைகளுக்குத் தீர்வு காணத்தக்க வகையிலும், சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

ஆய்வுக்குரிய அளவைகளை முடிவு செய்து கொண்டால்தான் ஆய்வு செப்பமாகச் செய்ய இயலும், அப்போதுதான் ஆய்வு, சார்பு வழி அமையாது. நடுவு நிலையில் நடைபெறும். எந்த ஒரு கருத்தையும் ஆய்வு செய்ய, வரலாறு முதல் அளவையாக எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். இரண்டாம் இடத்திலேயே நூல்கள் எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். நூல்களுள்ளும் காலத்தால் பிந்தித் தோன்றியவை யாயினும் தகுதியால் சிறந்த நூல்களே அளவை நூல்களாக எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். வரலாற்று வளர்ச்சியின் அடிப்படையிலும் காலத்தின் தேவைகளுக்கு ஈடு தரும் வகையிலும் வேறுபாடுகள் இருத்தல் இயற்கை. ஆதலால் முன் எழுந்த நூல்களினும் பின் எழுந்த நூல்களுக்கு அதிகச் சிறப்புக் கொடுத்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுதலே ஆய்வு மரபு.

இந்த அடிப்டையில் விழாத் திருக்கோயில் வழிபாட்டு அமைப்பினை ஆராய்ந்தால்1 கிறித்து பிறப்பதற்கு முன்பே தமிழர்களிடையில் திருக்கோயில் வழிபாடு இருந்ததாகத் தெரியவருகிறது.2 கடல் கொண்ட தென்குமரி நாட்டில் திருக் கோயில்கள் இருந்தன. இறைவன் மகேந்திர மலையிலிருநது ஆகமம் அருளிச் செய்ததாகத் திருவாசகமும் போற்றுகிறது3 மகேந்திரமலை குமரிக் கண்டத்திலிருந்ததேயாம்.4 இறைவன் மகேந்திர மலையில் அருளிச் செய்த ஆகமம் வழிவழி தமிழ் முனிவர்களால் வழக்கில் கொண்டு வரப்பெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் அந்த ஆகமங்கள் சரிவரப் பேணி வைக்கப்பெறாமல் மறைந்து இருக்கின்றன. இன்றுள்ள ஆகமங்களில் சில, தமிழ் முனிவர்கள் செய்தவை என்ற கருத்தும் உண்டு. ஆகமத் தொடர்பான செய்திகள் விருப்பமும் வேட்கையுமுடையவர்க்கே புலப்பட வேண்டும் என்ற குறிப்பில், ஆரிய மொழியில் செய்து வைத்தனர் என்பர்5. இதற்கு அரண் பொதுவாக வடபுலத்து மக்களுக்கும், சமஸ்கிருதம் தங்களதென்றே போலி உரிமை கொண்டாடும் பார்ப்பனருக்கும் ஆகமங்கள் அறிமுகமும் தொடர்பும் இல்லை; இவர்கள் இன்றளவும் கூட ஆகம வழிபாடுகளுக்கு உடன்படுவதில்லை என்பதே உண்மை. இன்றுள்ள சம்ஸ்கிருத மறைகளில் “சிவமே கடவுள்” என்று தெளிவாக உறுதிப்படுத்தப் பெறவில்லை. மேலும் “சிவபெருமானுக்கு உரிய மொழி சம்ஸ்கிருதம், அதனால் சிவாகமங்கள் சம்ஸ்கிருத மொழியில் அருளிச் செய்யப்பெற்றன” - என்று கூறுவது பொருளற்றது.

இறைவன் ஒரு மொழிக்கேயுரியுவன் என்பது இறைவனுடைய குறைவிலா நிறைவுத் தன்மைக்குக் குறை கற்பிப்பதாகும். இறைவனுக்கு எல்லா மொழிகளும் உரிமையுடையன. இன்னும் சொல்லப் போனால் தத்துவ அடிப்படையில் எல்லா ஓசை ஒலிகளுக்கும் மூலம் - நாத தத்துவம். இந்த நாத தத்துவத்தையும் கடந்த விழுப்பொருள் சிவம். அதனால் சிவத்திற்கு உரிய மொழியென்றும், விருப்பமான மொழி யென்றும் ஒன்றும் இல்லை. ஆதலால் இறைவனுக்கு ஒரு மொழிச் சார்பு கூறுதல் நன்றன்று. இறைவன் திருவருள் நிகழ்ச்சிகள் அனைத்தும் உணர்த்துதலேயாம். அத்திருவருள் உணர்த்திய உணர்வை உய்த்து உணர்ந்த நிறைமொழி மாந்தர்கள், அதனை மொழிகளில் வெளிப்படுத்தித் தந்தருள்வர். இதனையும் விஞ்சி, பரமசிவத்துக்கு மொழி உண்டெனத் துணிந்து ஆராயப்புகின், பரமசிவத்தின் மொழி தமிழேயாம்! இவ்வாறு தமிழே என்று துணிய, சான்றுகள் பல உள்ளன. சீகாழியில் திருஞானசம்பந்தர் அழ, பெருமானின் திருக்குறிப்பின் வழி, பெருமாட்டியார் திருமுலைப்பால் சுரந்து சிவஞானத்தைக் குழைத்து ஊட்டினார்கள். உடன், திருஞான சம்பந்தர் “தோடுடைய செவியன்” என்று எடுத்துத் திருநெறிய தமிழ் பாடியருளினார். அன்னை பராசக்தியின் திருமுலைப்பாலும் சிவஞானமும் திருஞானசம்பந்தருக்குத் தமிழறிவையே தந்தன என்பது தானே உண்மை! அதனால் அம்மையப்பரின் மொழி தமிழ் என்றும், சிவஞானம் தமிழ் தழீஇயது என்றும் கூறுவது மிகையன்றல்லவா?

மேலும் சம்ஸ்கிருத நான்மறையோர்கள், இறைவனின் திருவுளக் குறிப்பறியாமல் அவன் திருமுன்பில் வலுக்கட்டாயமாக மறைகளை ஓதுகின்றனர். அவைகளால் அவனுக்கு இனிய ஓசையும் கிடைக்கவில்லை; பொருளும் கிடைக்கவில்லை; அதோடு இட முரண்பாடும் மலிந்து இருந்தமை உணரலாம். இதனால் சலிப்படந்த இறைவன், திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் காசுகள் தந்து தமிழிற் பாடச் சொல்லிக் கேட்கின்றானோ என்னவோ? இதனைச் சுந்தரர் தேவாரத்தால் அறிய முடிகிறது.

நமது சமய நூல்கள் கூறும் நான்மறைகள், ஆகமங்கள் ஆகியவை தமிழ் வழக்கிற்கு உடன்பட்டனவேயாம். அவைகள் இன்று வழக்கிற்குக் கிடைக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். வடமொழிக்கு ஏற்றம் கொடுத்து நூல் செய்த மாதவச் சிவஞான முனிவரே, தமிழில் மறைகள் உண்டு என்பதனை ஏற்றுக்கொண்டு காஞ்சிப் புராணத்தில் அருளிச் செய்துள்ளார்.7 இக்கருத்தினையே திருமுறை கண்ட புராணமும் வலியுறுத்துகிறது.8 இதனைத் தொல்காப்பியம்9, புறநானூறு10, திருமுறைகள்11 முதலியனவும் வற்புறுத்துகின்றன. எனினும் சிவாகமக் கருத்துக்கள் தமிழ் நெறிக்கு முற்றிலும் புறம்பானவையாக இருத்தற்கில்லை. அவைகளை ஏற்புழி எடுத்துக் கொள்வதில் யாதொரு தடையும் இல்லை. சிவாகமங்கள் சிவபெருமானாலேயே அருளிச் செய்யப் பெற்றன என்ற கருத்தில் ஓரளவு உண்மையிருக்கிறது. சதாசிவ மூர்த்தி, கௌசியர், காசிபர், பாரத்வாசர், கௌதமர், அகத்தியர் ஆகியோர் ஐவருக்கும் சிவாகம நெறி உணர்த்தினார். பின் பல நூற்றாண்டுகள் அவை வழிவழி “எழுதாக்கிளவி”யாகவே விளங்கி கி.பி. 5-ஆம் நூற்றாண்டு அளவில்தான் வரிவடிவத்தைப் பெற்றன என்பது மொழி வரலாற்றறிஞர்கள் சொல்லும் கருத்து.12

ஆகமங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் எழுதப்பெற்றன என்று கருதுதற்கு இடமில்லை. ஆகமங்களில் முன்னுக்குப் பின் முரணிருக்கிறது. அதனாலேயே, பல்வேறு காலங்களில் ஆகமங்கள் எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்று கருத வேண்டியிருக்கிறது. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரும் ஆகமங்களில் முரணிருப்பதை எடுத்துக் காட்டுகிறார்.13 ஆதலால் ஆகமங்கள் இன்றுள்ள வடிவத்திலேயே சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்றவை யென்பதும், அவை ஒரே காலத்தில் தோன்றியன என்பதும், என்றும் - ஒரே படித்தனவாக இருந்தன என்பதும் ஏற்றுக் கொள்ளப் பெற இயலாதன. திரிலோகசந்த சிவாசாரியார் இயற்றிய “சித்தாந்த சாராவளி"யின் உரையாசிரியர் அநந்த சிவாசாரியார் ஆகமங்கள் பற்றிக் கூறியுள்ள கருத்து14 கவனத்திற்குரியது. எனினும் சிவாகமங்கள் கொள்ளத்தக்கன அல்ல என்பது நமது முடிவன்று. நாம் சிவாகமங்களை ஏற்புழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது கொள்கை சிவாகம வழியில் திருக்கோயில் கால பூசைகள், திருவிழாக்கள், பெருஞ்சாந்தி விழா என்று போற்றப் பெறுகின்ற கும்பாபிடேகங்கள் முதலியன செய்தல் ஏற்புடையனவேயாம். ஆயினும் சதாசிவ மூர்த்தத்தினால் உபதேசிக்கப் பெற்ற சிவாகமங்களைப் போலவே ஸ்ரீ கண்டருத்திர மூர்த்தியால் திருநந்திதேவர் வழியில் உபதேசிக்கப் பெற்று ஒரு ஞானசந்தானம் - ஞான பரம்பரை வந்து கொண்டிருக்கிறது. இந்த ஞானசந்தான வழியினர் மெய்கண்ட சாத்திரங்கள் என்ற ஞானநூல்களையும், பண்டார சாத்திரங்கள் என்ற ஞானப் பனுவல்களையும் செய்தருளியிருக்கின்றனர். அதுபோலவே, அம்மையப்பனாக விளங்கியருளும் பெருமானின் திருவருள் அடியொற்றி நின்று நாட்டில் நடமாடிய-அருள் நிறைந்த சமயாசிரியன்மார்களும், அருளாசிரியன்மார்களும் அருளிய தேவார, திருவாசகமும், இவற்றினைச் சார்ந்து தோன்றிய திருமுறைகளுமான சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் உள்ளன. இவைகள் சிவநெறி சார்ந்த ஞான வழியில் தோன்றிய அருள் நூல்கள். சிவாகமங்களுக்கும் இவைகளுக்குமிடையே மாறுபாடுகள் இருத்தற்கில்லை. திருமுறை நெறிகளுக்கு மாறுபாடாகச் சிவாகமங்களில் ஏதேனும் இருப்பின், அவை இடைச் செருகல் என்று கருதி ஒதுக்கத் தக்கனவே! ‘திருமுறைகளும் பதிவாக்கே’ என்று கொண்டு போற்றுதல் சைவ மரபு.

பரமசிவம் உயிர்களை ஆட்கொண்டருளும் நெறிகள் அவ்வக் காலத்திற்கு இசைந்தவாறும், ஆட்கொள்ளப்படும் உயிர்களின் தகுதி நோக்கியும் மாறுபடும். அதனால் மிகப் பிற்காலத்தே இதுதான் உய்யும் நெறி என்று இறையருளால் உணர்த்திய திருமுறை நெறிதான் வலிமையுடையது, இன்றைக்கு ஏற்புடையது. அது மட்டுமன்று, சைவப் பெருநெறிக்கு இடர்ப்பாடுகள் வந்துற்றபோதெல்லாம் சிவாகமங்கள் யாதொரு அரணும் செய்யவில்லை; கையற்றுப் போயின. ஆனால் திருமுறைகள்தான், சிவ நெறியின் மாண்பை, திருவருள் துணைகொண்டு நிலை நிறுத்தி வெற்றி கொண்டன. அதனால் சிவாகமங்களுக்குக் கொடுக்கும் முதன்மையைவிட, திருமுறைகளுக்கு அதிக முதன்மை கொடுக்க வேண்டுமென்பது நமது கருத்து. சிவாகமங்களை விட ஞானமும் ஞானத் தமிழும் போற்றுதலுக்குரியன என்பதையும் பயன்தரத்தக்கன என்பதையும் சில நிகழ்வுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சிவாகமங்களால் மூர்த்தியைப் பந்தனம் செய்ய முடியாது தவித்தபொழுது, தமது தாம்பலத்தின் வழி, கருவூர்த் தேவர் பந்தனம் செய்து தந்தார்.15 இது ஞானத்தின் வெற்றியல்லவா?

சிதம்பரத்தில் ஆடல்வல்லான் திருக்கோயிலில் சிவகாமவழிக் கிரியைகளைச் செய்து மந்திரங்களை ஓதி, திருவிழாவிற்குக் கொடி ஏற்றினார்கள். ஆனால் கொடி ஏறவில்லை உமாபதிசிவம் செந்தமிழில் கொடிக்கவி பாடி ஏற்றுவித்து அருளியமை நாடறிந்த செய்தி. திருக்கோயில் தேரை ஒட்டி நிலை நிறுத்திய பெருமை, திருப்பல்லாண்டுக்கு உண்டு. ஆதலால் ஆகமங்களினும் திருமுறைகள் அருள்நலஞ் செறிந்தன; வலிமையுடையன; போற்றுதலுக்குரியன; பயன்தரத்தக்கன என்பது பெறப்படும் உண்மையல்லவா? ஆதலால் சிவாகமங்களிலும் போற்றிப் பின்பற்றுதலுக்குரியன திருமுறைகளும் மெய்க்கண்ட சாத்திரங்களும் என்பது விளக்கமுறுகிறது. எனவே மெய்கண்ட சாத்திரங்களுக்கும், திருமுறைகளுக்கும் மாறுபடாத சிவாகமங்களே ஏற்புடையன. மாறுபாடு உளதாயின் திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் இவற்றின் கருத்துக்களே ஏற்று ஒழுகத்தக்கன.

“சிவாகமங்களுக்குச் சிவாசாரியார்கள் மட்டுமே அதிகாரிகள் அல்லர். சிறப்புடைய உத்தமர் அனைவரும் சிவாகமங்களுக்கு உரிமையுடையவரே என்று சமய நெறியும்16 யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவ வினாவிடையும்17 எடுத்தோதுகின்றன.

சைவ சமயத்தில் சிவாச்சாரியார்களுக்கு இருக்கிற முக்கியமான இடத்தை நாம் அறிந்து பாராட்டி நடைமுறைப் படுத்தவே விரும்புகின்றோம். ஆனாலும் “அவர்கள் சிவாச்சாரியார்களாகவே பிறக்கிறார்கள்” என்பது பொருத்தமன்று. சிவாச்சாரியார்கள் சிவபெருமானால் சிவாச்சாரியார்களாகவே பிறப்பிக்கப்பட்டுள்ள ‘சிவசிருட்டி’ என்பதும் பொருத்தமன்று. இக்கருத்துக்கள் தத்துவ இயலுக்கு முரண்பட்டவை. ‘சிவசிருட்டி’ என்பதற்குப் பொருள் சிவனாலேயே நேரிடையாகப் படைக்கப்பட்டவர் என்பது அன்று. மாயாகாரியப் படைப்பைச் சிவம் நேரிடையாகச் செய்வதில்லை. சிவம் திருவுள்ளம் பற்ற, அக்குறிப்பின்படி பிரம்மா சிருட்டிப்பதென்பதே சிவசிருட்டியின் விளக்கம். சிவத்தின் திருவுள்ளக் குறிப்பின்படி படைக்கப்படும் படைப்பு, தொன்மைக் காலத்தில் சிறந்த முதற்குடிக்கே அந்த இயல்பு பொருந்தும். அடுத்து வரும்பொழுது அசுத்த மாயையில் சேர்ந்த படைப்புக்களேயாம். ஆதலால் இன்றுள்ள சிவாச்சாரியார்களும், சிவாச்சாரியார்களாகவே பிறக்கிறார்கள் என்று கூறுவது தத்துவ இயலுக்கு முரணானது. ஆயினும் வழிவழியாகப் பெருமானுக்குப் பூசை செய்யும் குடி மரபில் வருவதால், அருணந்திசிவம் கூறும் நற்சார்பு இயல்பாகக் கிடைப்பதால், சிவாச்சாரியார் குடியில் தோன்றுபவர்களைச் சிவசிருட்டி என்று கூறுவது உலகியல் வழக்கு. ஆயினும் சிவாகமங்களைக் கற்காமலும், தீக்கை முதலியன செய்து கொள்ளாமலும், தீக்கை செய்து கொண்டு அதற்குரிய அனுட்டானங்களை முறையாகக் கடைப்பிடிக்காமலும் வழி வழியாக இருந்து வருகின்றவர்களும் பிறப்பிலேயே சிவாச்சாரியார்கள் ஆகிறார்கள் என்கிற செய்தி ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

ஏழு வயதில் சமய தீக்கை பெற்று, சிவாகமங்களை முறையாகக் கற்கத் தொடங்கி, விசேட தீக்கை, நிர்வான தீக்கை, ஆச்சாரியபிடேகம் முதலியவற்றை உரிய-அந்தந்த வயதுகளில் பெற்று, பெற்ற தீக்கைகளுக்கு ஏற்றவாறு, ஒழுகி, முறைப்படி தகுதி பெற்றவர்களே சிவாச்சாரியார்களாகிறார்கள். சிவாகம முறைப்படி ஒரு தீக்கைக்கும் பிறிதொரு தீக்கைக்குமிடையில் பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிடக் கூடாது என்ற நியதி இருக்கிறது.

திருக்கோயில் வழிபாட்டில் ஆன்மார்த்தம், பரார்த்தம் என்று இரண்டு பூசைகள் உள்ளன. ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற பூசைகள் இரண்டும் திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் மூர்த்தியிடத்தில் செய்யப் பெறுவனவேயாம். பூசை செய்யும் இடத்திலும் மூர்த்தியிலும் வேறுபாடில்லை. செய்யும் நோக்கத்தைப் பொருத்தே ஆன்மார்த்தம் பரார்த்தம் என்று வேறுபடுகின்றன. சிவாச்சாரியார்கள் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியை ஆன்மார்த்தமாகவும் வழிபடலாம். ஆன்மார்த்தமாக வழிபாடு செய்துகொள்ள இயலாதவர்களுக்காகவும் பொதுவாக எல்லா உயிர்களுக்காகவும் வழிபாடு செய்து வைக்கும் உரிமையுடையவர்கள் சிவாச்சாரியார்கள். இதுவே பரார்த்த பூசை எனப் பெறும்.

சைவ முறைப்படி பரார்த்தமாக மூர்த்தியைத் தீண்டுதற்குரிய தகுதி தருவதாகிய தீக்கை முதலியன முறையாகப் பெற்றவர்கள், திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியை ஆன்மார்த்தமாக வழிபாடு செய்து கொள்ளலாம். இதுதான் தமிழகத்துத் திருக்கோயில் வழிபாட்டுப் பழைய நெறிமுறை. இதனை “தீக்கை பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் திருக்கோயில்களில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற வழிபாட்டுக்குரியவர்கள்”18 என்று யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் சைவ வினா விடையில் கூறியுள்ளமை அறிக.

திருவிழிமிழலைத் திருக்கோயிலில் “செந்தமிழர்கள் மறை நாவர்கள், கலைநலம் தெரிந்தவர்கள், குணத்திற் சிறந்த ஞானிகள் ஆகியோர் ஒருங்குகூடி அர்ச்சனைகள் செய்தனர்”19 என்று திருஞான சம்பந்தர் தேவாரம் கூறுகிறது. திருப்பழுவூர்த் தேவாரத்தில் மலையாளிகள் கூட வந்து வழிபட்டதாகத்20திருஞான சம்பந்தர் அருளிச் செய்துள்ளார்.

அப்பரடிகள் திருவையாற்றுப் பதிகத்தில் “திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட அடியார்கள், புனலும் பூவும் சுமந்துகொண்டு ஒருவர் பின் ஒருவராகச் சென்று புகுந்ததையும் அவர்கள் பின்னே, வந்த ஒழுங்கு வரிசையில் தாமும் செல்வதையும் குறிப்பிட்டு அருளிச் செய்துள்ளார்.21

ஆதலால், திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தகுதியுடைய அடியார்கள் அனைவரும் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொண்டமையை அறியலாம்.

அடுத்து, சேக்கிழார் அருளிச்செய்த பெரிய புராணமும் இந்த உண்மையை உணர்த்துகிறது. திருச்சாத்த மங்கையில் வாழ்ந்த திருநீலநக்கநாயனார் என்ற மறையவர் குலத்துப் பெரியவர், நாள்தோறும் தமது மனைவியுடன் திருச்சாத்தமங்கையில் பதிகம் பெற்ற அயவந்தீச்சுர்த்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்தும் திருவமுது செய்வித்தும் வழிபாடு செய்து கொண்டமையை பெரிய புராணம் கூறுகிறது.22

அடுத்து, வேளாளர் குடியைச் சேர்ந்த அரிவாட்டாய நாயனார் நாள்தோறும் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள பெருமானுக்குச் செந்நெல் அரிசித் திருவமுதும், மாவடுவும், செங்கீரையும் எடுத்துச் சென்று திருவமுது செய்விக்கும் கடப்பாட்டினை யுடையராயிருந்தனர் என்றும் பெரியபுராணம் கூறுகிறது.”23

அடுத்து, திருஞான சம்பந்தர் தாம் குறிப்பிட்ட பயன் எனக்கண்டு வீழ்ந்து வணங்கிய கண்ணப்பர் வரலாறு, தக்க சான்று. கண்ணப்பர் வரலாற்றை “அதிதீவிரமான வல்வினை யின்பாற்பட்டதென்றும், அதனால் அது பொது விதியன்று” என்றும் சிலர் கூறுவர். அது உண்மையன்று. கண்ணப்பர்க்கு வழிபடுதலுக்குரிய வாய்ப்புக் கிடைத்ததால் பெருமானே திருக்கண் நோக்கால் தீக்கை (நயனதிக்கை) செய்து வைக்கும்24 பெரும்பேறு பெற்றார். பிறகு வழிபாட்டின் பயனாகப் பெருகிய அன்பில் அவர் அதிதீவிரமானார். நாம் அவருக்குத் தடையின்றி வழிபடக் கிடைத்த வாய்ப்பையே இங்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். கண்ணப்பர் திருக்கோயிலுக்குள் சென்று, திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காளத்தி யப்பரைத் தழுவி உச்சி மோந்தார். இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்காது போயிருக்குமாயின், அவரை “கண்ணப்பராகக்” கண்டிருக்க இயலாது. திருக்காளத்திக் கோயிலில் சிவகோசரியார் என்னும் சிவாச்சாரியார் ஆகம விதிப்படி பூசை செய்தார் என்றும் சேக்கிழார் கூறுகிறார்.25 ஆனாலும், மற்றவர்கள் திருக்கோயிலுக்கு வந்து பூசனை செய்து கொள்வதற்குத் தடையில்லாதிருந்திருக்கிறது. மறுநாள் சிவகோசரியார் வந்து வருந்தும் பொழுது கூட, ‘பூசனை செய்தவர் யார்?’ என்ற கேள்வி எழவில்லை. மற்றவர் பூசை செய்வதற்குரிய உரிமையில்லாதிருக்குமாயின் சிவகோசரியார், பூசை செய்தவர் யார் என்று வினவித் தெரிந்து கொண்டிருப்பார். “இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார்”26 என்று மட்டும் கேட்டதால் மற்றவர் பூசை செய்வதற்குரிய உரிமை இருந்தது என்பது புலனாகிறது. சிவகோசரியார் தாம் பூசனை செய்வதற்கு முன்பு, இறைவர் திருமுன்பு ஏற்பட்டிருந்த பழுதுக்குத்தான் (புலால், எலும்பு கிடந்தமைக்குத்தான்) பவித்திர பூசை செய்தாரே தவிர, மற்றவர் தீண்டியதற்குரிய பிராயச்சித்தம் செய்ததாகப் பெரிய புராணத்தில் இல்லை. முடிவாக “விதி முறைப்படி செய்யப்பெற்ற சிவகோசரியார் பூசையிவிட, கண்ணப்பர் பூசை சிறப்புடையது, உவப்புடையது, நனிசிறந்தது”27என்று காளத்தியப்பர் அருளிச் செய்தமையை எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆதலால் சிவாச்சாரியார்கள் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஆன்மார்த்தமாகவும் வழிபடலாம்; பரார்த்தமாகவும் மற்றவர்களுக்குச் செய்விக்கலாம். திருக்கோயிலில் நாள் பூசையைச் சிவாச்சாரியார்கள் செய்து வைத்து, ஆன்மார்த்தமாக வழிபட வருபவர்களுக்கு வழிபாடு செய்துகொள்ளத் தக்கவாறு வைத்தலே, சிவாச்சாரியார்களுடைய கடமை. இக்கருத்தினைத் திருக்கோயிலுக்கு அமைந்துள்ள தலபுராணங்களும் வலியுறுத்துகின்றன. இராமன் பூசித்த திருத்தலங்கள் “திருஉசாத்தானம்”28 முதலிய பல; பாண்டவர் ஐவர் பூசித்தவை “திருமண்ணிப் படிக்கரை” முதலிய பல; வாலி பூசித்தது “வாலீச்சுரம்” என்றெல்லாம் திருத்தல புராணங்கள் உள்ளன. இவ்வாறு இவர்கள் பூசித்த செய்திகள் திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இவை மட்டுமா? ஓரறிவுயிர்கள் முதல் ஐயறிவுயிர்கள் வரை பூசித்துள்ளன; திருவானைக்காவில் யானையும் சிலந்தியும் பூசித்துள்ளன. எறும்பு பூசித்த திருத்தலம் திருவெறும்பியூர் நண்டு பூசித்தவூர் திருநின்றவூர். பசு பூசித்த தலம் திருவான்மியூர், புள் பூசித்த திருத்தலம் புள்ளிருக்கு வேளுர். இவ்வாறு தல வரலாறுகள் இந்த உண்மையைக் கூறுகின்றன. இச்செய்திகளை வள்ளற்பெருமானும் எடுத்துக் கூறி நடத்துகிறார்29. எனவே தீக்கை பெற்றவர்கள் - தகுதியுடையவர்கள் - விரும்புகிறவர்கள் ஆன்மார்த்தமாகத் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபாடு செய்து கொண்டனர் என்பதுதான் உண்மை. ஆதலால் நமது கருத்தினை அடியிற்கண்டவாறு தொகுத்துத் தருகின்றோம்.

1. பன்னிரு திருமுறைகளுக்கும், மெய்கண்ட சாத்திரங்களுக்கும் மாறுபாடல்லாத சிவகாமச் செய்திகள் ஏற்புடையன.

2. சைவ நெறியில் விதிக்கப் பெற்றுள்ள தீக்கை முறைகள் எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் உரியன. சைவ தீக்கை பெற்றவர்கள் ஒரு குலமாக - சைவ குலமாக - ஆகின்றனர். இந்த அடிப்படையில் தான் ‘ஒன்றே குலம்’ என்று திருமந்திரம் பேசுகிறது.

3. தீக்கை பெற்றவர்கள் சிவாகமங்கள் ஓதவும், திருக்கோயிலில் அவர்கள் பெற்ற தீக்கைகளுக் கேற்றவாறு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வகை வழிபாடுகள் செய்வதற்கும் உரிமை பெற்றவர்களாவர்.

4. முறையாகத் திக்கை முதலியன பெற்ற சிவாச்சாரியார்கள் திருக்கோயிலில் ஆன்மார்த்த பூசையும் பரார்த்த பூசையும் செய்வதற்கு உரிமையுடையவர்கள்

5. சைவ சமய தீக்கைகள் பெற்றவர்கள் அனைவரும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிற மூர்த்தியை ஆன்மார்த்தமாக வழிபாடு செய்து கொள்வதற்கு உரிமையுடையவர்கள்.

6. பரார்த்தம் என்பதற்கு “பிறர் பொருட்டு” என்பது பொருளாயினும் பிறருக்காகச் சிவாச்சாரியாரே செய்தல் என்பது ஒரோ வழி ஏற்புடையதே தவிர, முழுமையான தன்று. திருக்கோயிலின் காலப்பூசைகளை முறையாக சிவாச்சாரியார்கள் செய்து, தகுதியுடையவர்கள் வந்தால் ஆன்மார்த்த பூசை செய்வதற்கு உடனாக இருந்து துணை செய்வது என்பதே பொருள். ஒரோவழி அங்ஙனம் ஆன்மார்த்த பூசையாகச் செய்து கொள்ள இயலாதவர்களுக்காகவும் இவர்கள் செய்து வைக்கலாம். வரலாற்றுச் செய்திகளுக்கும் சிவாகமத்திற்கும் திருமுறைகளுக்கும் ஒத்த நடைமுறைக்கிசைந்த உண்மை இதுவே.

7. இம்முறை, நடைமுறைப்படுத்தப் பெறுவதால் பிறப்பினால் சாதி முறை இல்லாமல் போகிறது. தகுதியால், ஆசாரத்தால், சீலத்தால் மட்டுமே வேற்றுமையிருக்கும்.

8. இம்முறையை நடைமுறைப் படுத்துவதன் மூலம், ஒவ்வொரு திருக்கோயிலும் எழுந்தருளியிருக்கும் இறைவனை, ஆன்மார்த்த நாயகனாகக் கொண்டு வழிபடுவோர் பட்டியல் உருவாகும். அது திருக்கோயில் வளர்ச்சிக்கும் துணை செய்யும், தகுதியும் விருப்பமும் உடையவர்கள், வழிபாடு செய்து கொள்வதற்கு வாய்ப்பிருந்தால், அவர்கள் பத்தின்மயிலும் ஞானத்திலும் சிறந்து வளர்வர். இதுவே இன்றைக்குச் சரியான முறை என்று கருதுகின்றோம்.

9. அல்லது அரசு தீவிரமாக மாற்றங்கள் செய்ய விரும்புமாயின் அது பற்றியும் ஆலோசிக்கலாம். ஆனாலும் ஒரு சமயச் சார்பற்ற அரசு, ஒரு சமயத்தில் சேரிடையாகச் சீர்திருத்தம் செய்யப்புகுவது வரவேற்கத் தக்கதன்று. நல்லூழ் இன்மையின் காரணமாக, நம் சமயத் தலைவர்கள் தம்முள் மாறுபாடு கொண்டும் ஒத்துணர்வில்லாமலும் இருப்பதாலும் திருக்கோயில் பேணல், சமய நெறிபேணல், அவற்றை வளர்த்தல், காலத்திற்குத் தேவையான புதுமை நெறி காணல் ஆகியன பற்றி ஒருங்கிணைந்து சிந்திக்காததாலும், சிந்தித்து வழி நடக்காததாலும் காலத்தின் தேவைகள் நெருக்குவதால் முறையான வழி காட்டுதலின்றிச் சமுதாயம் தன் போக்கில் செல்கிறது. அரசு அதற்கேற்றவாறு சமுதாயத் தேவைகளை நிறைவு செய்யவும், சீர்திருத்தங்களைச் செய்யவும் அவாவுகிறது. அரசு நம்முடைய சமயத் தலைவர்களையும் சமய அறிஞர்களையும் கொண்ட தக்க மாநாடுகளைக் கூட்டி, நன்றாகச் சிந்தித்து முறையாகச் சீர்திருத்தம் செய்வது வரவேற்கத்தக்கது; ஏற்புடையதும் ஆகும்.

தமிழகத் திருக்கோயில்களில் காலத்திற்குத் தேவையான மாறுதல் ஏற்பட்டு வந்துள்ளதைத் திருக்கோயில்களின் நடைமுறைகளும் உணர்த்துகின்றன; வரலாறுகளும் உணர்த்துகின்றன. பல சிவாலயங்களில், சிவாச்சாரிய மரபினர் அல்லாதவர்களும், சிவாகம முறைப்படி, தீக்கை முதலியன பெறாதவர்களும் கூட அமர்த்தப்பெற்றுள்ளனர். சான்றாக, திருவானைக்கா, திருப்பெருந்துறை, சிதம்பரம், இராமேச்சுரம், திருச்செந்தூர் ஆகிய திருத்தலங்களைக் குறிப்பிடலாம். ஏன்? ஆகமத்தில் உயிர்ப்பலியிடுதல் சொல்லப் பெறுகிறது. ஆனால், அரசின் உயிர்ப்பலி தடைச் சட்டம் அதனைத் தடுத்து விடவில்லையா? திருக்கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாதென்பது ஆகமத்தின் விதி. ஆனால் மெய்கண்ட சாத்திரங்களும் திருமுறைகளும் இதை மாற்றித் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கியுள்ளன. அப்பரடிகள் அருள் வாக்கு30 நினைக்கத்தக்கது. இக்கருத்தை அரண் செய்யும் வகையில் மாதவச் சிவஞான முனிவர் அருளிய வாக்கும்31எண்ணத்த்க்கது. பெற்றான் சாம்பானுக்குத் தீக்கை செய்த உமாபதி சிவத்தின் அருளிப் பாடும் நினைக்கத் தக்கது. ஆயினும் உழுதசால் வழிச் செல்லும் நம்மவர்கள் திருமுறை நெறியையும் மெய்கண்ட நெறியையும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை. ஆதலால் நமது சுதந்திர இந்திய அரசு, ஆலயப் பிரவேசச் சட்டம் செய்தது. இது சிவாகமங்களுக்கு விரோதமானதுதான். இதனை நாம் ஏற்காமல் இல்லை. இங்ஙனம் தாழ்த்தப்பெற்றவர்கள் திருக்கோயிலுக்கு வந்ததால் - “திருவருள் பொலிவு (சாந்நித்யம்) குறைந்து இருக்கிறது” என்று சிலர் கூறுவது சரியன்று. இறைவன் எஞ்சாத பூரணம், குறைவிலா நிறைவு; கோதிலா அமுது. அதற்கு எப்படிக் குறை வரமுடியும்? இது சொல்வாருடைய மனப்போக்கின் கருத்தேயாம். சாதாரணக் காவிரியே, தூய்மையற்றவைகளையும் தூய்மையாக்கிக் கொள்ளும் பொழுது, இறைவனைத் தாழ்த்தப்பட்டவர்கள் தொடுவதால் திருவருட் பொலிவு குறையாது. அப்படிச் சொல்லுபவர்கள் கடவுள் தத்துவத்தை முற்றாக அறிந்தவர்கள் ஆகமாட்டார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது32 எந்த வகையிலும் நமது சமுதாயத்தில் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வுகளைக் கற்பிப்பதும் ஒரு சாராரை இழிவுபடுத்துவதும், மற்ற மதங்களுக்கு அனுப்பிக்கும் கொடுமையும் உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும். “மெய்வைத்த சொல்” என்றும் “மறை” என்றும் பாராட்டப்பெறும் திருக்குறள் கூறும் பொதுநெறி33 காணல் இந்த நூற்றாண்டின் கடமை.

ஆதலால், இன்றைய நிலையில் அரசு ஒரு தக்க சமயவளர்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டைக் கூட்டி, மேலும் சரியான முறையில் இச்செய்தியை அணுகி திருமுறைகளுக்கும், மெய்கண்ட சாத்திரங்களுக்கும், சிவாகமங்களுக்கும் முரணில்லாமல் சிந்தித்துக் கருத்தாய்வு செய்து செயற்படுத்துவது தவறாகாது.

அங்ஙனம் செய்ய நினைக்கும் பொழுது வழிவழியாக பூசை செய்துவரும் சிவாச்சாரியார்களைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குரிய முன்னுரிமையையும் தரும்படி செய்வது சமுதாயப் பாங்கான கடமையாகும்.

கட்டுரையில் வரும் எண்களுக்குரிய விளக்கங்கள்

1. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலம்: கி.மு. 25 (ந.சி.க)

2.பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே.

புறம்-6. அடி. 17-18

3.மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்

(திருவாசகம், கீர்த்தித், 9-10)

4.அ.உன்னதத் தென்மயேந்திரமே உயர்மலை அம் சையகிரி
வின்னவிலும் சுத்திகமே இருக்கும் உயர்விந்தியமே
மன்னுபுகழ் மிகு பாரியாத்திரமே எனப்பகர்ந்த
இன்னகிரிஏழும் முதற்குமரி தலத்திசைந்தனவே-

ஆ.ஆதுங்கமலி பொதித் தென்பால் தொடர்ந்த அடிவாரத்தன்
அங்ககை இலங்கையும் ஏழ்வரைச் சாரல் அடித்தேசம்.

(சிவதருமோத்தரம்-கோபுரவியல். 47-48)

5.தமிழர் சமயம் பக். 91 (கா. சு)

6.தெரிந்த நான்மறையோர்க் கிடமாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடிசை கேட்கும்
இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் விழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.

(7 ஆம் திருமுறை 899)

7. மன்னிய இத்தமிழ் கிளவி மந்திரங்கள்

(காஞ்சிப் - தழுவக்குழைந்த - பா.245)

மந்திரம்:

மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவம்

(தொல். சொல். 932)

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப -

(தொல். பொருள் 490)

கொழிதமிழ் மறைப் பாடற் கிள்ளை பாடுகீர்க்காஞ்சி

(காஞ்சி. பு, திருவேகம்பப் படலம்-62)

8.கண்டதொரு மந்திரமே மூவர் பாடல்
கைகாணா மந்திரம் கண்ணுதலோன் கூறல்
எண்டிசையும் சிவனருளைப் பெறுதற் காக
இம்மொழியின் பெருமையையான் இயம்பக் கேள் நீ.

(திருமுறைகண்ட புராணம். 13)

9. அறங்கரை நாவின் நான்மறை முற்றிய.

(தொல். பாயிரம்)

10. அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர். (புறம் - 93, அடி 27)

11. பண்பொலி நான்மறை. (திருமுறை. 3-8:6)
முத்தமிழ் நான்மறை. (திருமுறை 3,2:1)

12. தமிழர் மதம் - பாவாணர் - (பக். 125)

13. அ) சைவ சமய நெறி - ஆசாரியர் இலக்கணம் குறள் 81. உரை

“புரட்டாசி, மாசி, ஆடி, மார்கழி யென்னும் இந்நான்கு மாதங்களையும் தீக்ஷைக்காகவெனக் காரணாகமம் விலக்கியிருக்க. இந்நூலாசிரியர் பின்னைய மூன்றையும் ஆகுமெனக் கொண்டு, முன்னையதை தை, ஆவணி, சித்திரையோடு சேர்த்து, ஆகவென விலக்கியது ஆகம பேதத்தாலென வுணர்க.”

13. ஆ) சைவ சமய நெறி பொதுவிலக்கம்

குறள் - 270 - உரை

“சாதகர் தெற்கு நோக்கியும், சமயிகள் வடக்கு நோக்கியும் இருந்து புசிக்க எனச் சிவாகமங்கள் கூறுமென்க. இருக்கும்போது சமானவருணரும், தீக்ஷிதரும் பந்திபாவனருமாகிய சனங்களோடன்றிப் பிறரோடிருக்க லாகாதென்றறிக”

14. ஆகமங்கள் கற்பிதமே அல்ல என்று சிலர் மதம்; அதுவும் கூடாது. அபோத ரூபமாயிருந்தது. சப்த ரூபமானதால், கற்பிதம் என்பது ப்ரத்திக்ஷ்யமாகத் தெரியும் போது; ப்ரத்தியஷ்த்தை மறைப்பது பொய்யறிவாதலால், அவர்கள் மதத்தை யங்கீகரிப்பது அநர்த்தமாகும்.

(சித்தாந்த சாராவளி.) சரியாபாதவியாக்யானம் சூத்-2. உரை பக். 515. (அதந்த சிவாச்சாரியார் உரை)

15. கருவூர்த் தேவர் சி. கே. எஸ். பக். 7.

16. உத்தமராவார் அவர்தமுள்ளும் சிறப்புடைய உத்தமரே நாற்குலத்துள்ளோர்.

(மறைஞான சம்பந்தர்- சைவசமய நெறி, ஆசாரியர் இலக்கணம் குறள். 2.)

இக்குறளுக்கு - யாழ்ப்பாணத்து நல்லூர் நாவலர் பெருமான் உரை விளக்கமும் காண்க.

17. சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம் - வினா விடை 88.

18. சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம் - வினா விடை 206.

19.செந்தமிழர் தெய்வமறை நாவர் செழு
நற்கலை தெரிந்த அவரோடு
அந்தமில்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள்
செய்ய அமர்கின்ற அரனுரர்
......வீழி நகரே

(மூன்றாம் திருமுறை. 80 திருவிழி மிழலை. 4)

20. அந்தணர்களான மலை யாளரவரேத்தும்
பந்தமவிகின்ற பழுவூர்.

(இரண்டாம்திருமுறை-34. திருப்பழுவூர்.11)

21.மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேந்திப் புகுவார் அவர் பின் புகுவேன்”

(நாலாம் திருமுறை. திருவையாறு-1)

22.1. ஆய்ந்த மெய்ப்பொருள் நீரென வளர்க்கும் அக்காப்பில்
ஏய்ந்த மூன்றுதி வளர்த்துளார் இருபிறப்பாளர்
நீந்து நல்லறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை
வாய்ந்த கற்புடன் நான்கென வளர்ப்பர்கள் மடவார்”

2. சீலமுய்த்த அத்திரு மறையோர் செழுமுதுரர்
ஞாலம் மிக்க நான்மறைப் பொருள் விளக்கிய நலத்தார்

ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர் நிகழ்த்துளா ரானால்

3.வேத உள்ளுறை யாவன விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவரடி யாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே செய்கருத்துடையார்.

4.மெய்த்த ஆகம விதிவழி வேதகா ரணரை
நித்தல் பூசனை புரிந்தெழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
இத்திறத்தன பணிகளும் ஏற்றெதிர் செய்வார்.

5.ஆய செய்கையில் அமருநாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லை நீடயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்

(பெரிய புராணம்...1835-1839)

23.அ.மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும்
மன்னு மைந்துணர் மாவடுவும் கொணர்ந்து
அன்ன என்றும் அமுது செய்விப்பரால்.

(பெரிய புரா. 913)

ஆ.நண்ணிய வயல்கள் எல்லாம் நாடொறும் முன்னர் கான
வண்ணவார் கதிர்ச் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு “இஃது அடியேன் செய்த
புண்ணியம்” என்று போத அமுது - செய்விப்பாரானார்

(பெ.புரா.918)

24. திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணாமுன்னே
அங்கணர் கருணைகூர்ந்த அருள். திருநோக்கம் எய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன் புருவமானார்

(பெரிய புரா.753)

25. எய்தியசீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக் கேற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டணைந்தார்
மைதழையும் கண்டத்து மலைமருந்தை வழிபாடு
செய்துவரும் தவமுடைய முனிவர் சிவகோசரியார்

(பெரிய புரா.784)

26. வந்து திருமலையின்கண் வானவார் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திருமுன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகலமிதித்தோடி
“இந்த அனுசிதம் கெட்டேன் யார்செய்தார்” என்றழிவார்.

(பெரிய புரா.785)

27. “அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறறிநீ” என்றருள் செய்தார்.

(பெரிய புரா.806)

28. நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அனுமன் தொழக்

காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடை சேடர்வாழ் திருவுசாத் தானமே.

(திருமுறை 3.33. திருவுசாத்தானம்)

29. ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு
தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும்-நீடுகின்ற
பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென்
றாற்பூசை ஒம்புதற் கியார்தான் உவவாதார்

(திருவருட்பா, நெஞ்சறிவுறுத்தல். கண்ணி 257-259)

30. ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடையக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”.

(ஆறாம் திருமுறை 938)

31.சிவனெனும் மொழியைக் கொடிய சண்டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக
அவனொடு கலந்து பேசுக அவனொடு
அருகிருந் துண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோ டுடன்பயில் கொடியோன்
சிவனெனக் கழித்தால் ஐயனே கதிவே
றெனக்கிலை கலைசை யாண்டகையே.

(கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி)

32. தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்திலையோ?-எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குலமாக்கிட
மேலும் சமர்த்திலையோ?

(பாரதிதாசன் கவிதைகள், சமத். 14)

33.பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள்)

சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

“சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்” என்பது, இந்தத் தலைமுறையில் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். நமது சைவ சித்தாந்த நூல்கள் பரபக்கத்தில் எடுத்து ஆய்வு செய்து மறுக்கின்ற புறப்புறச் சமயங்களுள் தத்துவங்களுள் மார்க்சியம் இல்லை. ஆனால், மார்க்சியத்திற்கு முன்னோடியாகவுள்ள உலகாயதம் (சார்வாகம்) எடுத்து ஆய்வு செய்யப் பெற்றிருக்கிறது. உலகாயதத்தின் வளர்ச்சியே மார்க்சியம். இங்கு வளர்ச்சி என்பது, ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் உள்ளடக்கியதேயாம்.

சித்தாந்த நூல்களில் உலகாயதம் என்று ஆய்வு செய்யப்பெற்ற கொள்கை, காலந்தோறும் வளர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்சிமாக விஞ்ஞான பூர்வமாக வளர்க்கப்பெற்றுச் செழுமையடைந்து வளர்ந்துள்ளது. மேலும் மார்க்சின் தத்துவங்கள் விரிவான ஆய்வும் விளக்கமும் பெற்று உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் மார்க்சியம் நடைமுறை வாழ்க்கை விஞ்ஞானமாகவும் உருப்பெற்று விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞானபோதத்திற்கு வழி நூல்கள் பல தோன்றினாலும் அவ்வழி நூல்கள் முதல் நூலில் நுண்பொருளாகச் சொல்லப் பெற்ற செய்திகளை எளிமைப்படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டன. மாதவச் சிவஞான முனிவர் உரை விளக்கம் எழுதி, சிவஞான போதத்தை விளக்கமுறப் பயிலத் துணைசெய்தார். எனினும், சித்தாந்தச் சைவத்தைத் தனியொரு நெறியாகப் பேணி வளர்க்கவும் சித்தாந்தச் சைவ நெறியை வாழ்க்கை நெறியாக உருக்கொடுக்கவும் நாம் தவறியது ஒரு குறையேயாம். இன்றாவது, கடவுள் மறுப்பு இயக்கங்கள் எதனால் தோன்றின? கடவுள் மறுப்பு இயக்கங்கள் தோன்றுவதற்குரிய அடிப்படைக் காரணங்களை மாற்ற முடியுமா? அப்படியானால் ஏற்றுக்கொள்ளத்தக்கன எவை? விடத்தக்கன எவை? என்று ஆய்வு செய்வது சித்தாந்தச் செந்நெறிக்கு அரண் செய்ய உதவியாக இருக்கும். பரபக்கத்தில் ஏற்படும் தெளிவுதான் சுபக்கத்தில் துணிவைத் தருகிறது என்பது நமது மரபுவழிக் கருத்து. அதனால், நாம் “சைவசித்தாந்தமும் மார்க்சியமும்” என்ற தலைப்பை எடுத்துக் கொண்டோம். இவ்விரண்டு தத்துவங்களையும அடக்கத்துடன் கற்கும் மாணவனாக இருந்து வருகின்றோம். இந்த ஆய்வினைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடனேயே மார்க்சியத்தை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டுள்ள சோவியத்துக்கும் சீன நாட்டுக்கும் சென்று வந்தோம்.

மார்க்சியமும் சைவ சித்தாந்தமும் இயல்பாகவே ஒன்றாயிருத்தல் இயலாது. சைவ சித்தாந்தம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில், முழுமைநிலை யடைந்தது. உலகாயதம் வளர்ந்து கி.பி. 19ஆம் நூற்றாண்டில் மார்க்சியமாக முழுமையடைந்தது. கால வேறுபாடு - இட வேறுபாடு இவைகளுக்கிடையில் வேற்றுமை மிகுதியும் உண்டு. ஆயினும் பெரும்பான்மையான மானிடச் சிக்கல்கள் உலகம் முழுவதற்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. கால்ந்தோறும் கூட மிகச் சாதாரண மாற்றங்கள் தாம் ஏற்படுகின்றனவே தவிர அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வுகள் கண்ட பாடில்லை. இரண்டு பொதுவுடைமை நாடுகளுக்கிடையே கூடச் சிக்கல்கள் நிலவுகின்றன. ஆதலால் காலத்தில் வளர்ச்சி, பௌதிக வளர்ச்சிகளை மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறதே தவிர, மானிட சாதியின் அகநிலை-புறநிலையில் பெரிய மாற்றங்ளைக் காணோம். இன்றுள்ள சூழ்நிலையில் இவ்விரண்டு தத்துவங்களையும் நன்றாக ஆய்வு செய்து இவைகளுக்கிடையே யிருக்கிற முரண்பாடுகளைத் தவிர்த்துச் சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் நல்லது என்ற கருத்திலேயே இந்தத் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பெற்றது. இவ்விரு தத்துவங்களுக்கிடையே ஒருமை நிலை தோன்றாது போனாலும், இவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு மதிப்பு உணர்வுடன் ஆய்வு செய்யும் மனப்போக்கு வளர்ந்தால் பகைமையாவது குறையுமல்லவா?

சைவ சித்தாந்தம்

சைவ சிததாந்தம் என்கிற செழுந்தமிழ் வழக்கு நெறி வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழர் வாழ்வில் தோன்றி வளர்ந்து வந்துள்ள நெறியாகும். “சைவத்தின் பழைமை கற்காலத்திற்கும் முற்பட்டது. இப்பொழுது உலகிற் காணப்படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்டது.”1 என்று சர். ஜான்மார்ஷல் என்ற அறிஞர் கூறியுள்ளார். சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப் பெற்ற பொருள்களில் சிவலிங்கங்களும் உண்டு. சங்ககாலத் தமிழர்களின் சமயமும் சைவ சித்தாந்தமேயாம். வைணவமும் தமிழர் நெறியே. வைணவமும் சங்க காலத்தில் நிலவிய சமயமே. ஆயினும் சங்க இலக்கியங்களில் சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் பரவலாகப் பேசப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பெரும்பான்மை சிவ பரம்பொருளையே வாழ்த்துகின்றன. சிவனே கடவுள்; அவன் பிறப்பு இறப்பு இல்லாத நிலைத் தன்மையுடையவன் என்பதனை ஔவையார்,

“..... ....... ........ .........
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற் றொருவன் போல
மன்னுக”2

என்று கூறியுள்ளதால் அறியலாம். இளங்கோவடிகளும்,

“விண்ணோ , ரமுதுண்டுஞ்சாவ வொருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்”3

என்றும், “பிறவா யாக்கைப் பெரியோன்”4 என்றும் கூறினார். அதுபோலவே உயிர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதும் “மன்னுயிர்”5 என்றே சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. மன்னுயிர் என்றால் தோற்றமும் அழிவும் இல்லாத உயிர் என்பது பொருள். சங்க இலக்கியங்கள் மறுபிறப்பை ஒத்துக் கொண்டுள்ளன.

“இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும்”6 என்ற அடியில் ‘இம்மை’ ‘மறுமை’ என்று குறிக்கப் பெறுவதறிக. ஆதலால் சங்க இலக்கியங்களில் சைவ சித்தாந்தக் கூறுகள் உள்ளன என்பது உறுதியாகிறது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய மெய்கண்டார் சைவ சித்தாந்தச் சமயத்தை விளக்குவதற்கு அளவை, தருக்க நூல் முறைப்படி சிவஞான போதத்தைச் செய்தருளினார். சிவஞான போதத்திற்குப் பின்பு திருக்களிற்றுப் படியாரும் திருவுந்தியாரும் தோன்றின. சிவஞான போதத்திற்குப் பின் அதன் வழி நூல்களாகப் பதினொரு நூல்கள் தோன்றின. ஆயினும் இவை அனைத்தும் மெய்கண்ட சாத்திரம் என்னும் வரிசையிலேயே வைத்து எண்ணப்படுகின்றன. சைவ சித்தாந்தச் சமயம் அறிவாய்வு கண்டு, வளர்க்கப் பெற்ற சமயம். வழிவழி ஆசிரியன்மார்களால் உபதேசிக்கப் பெற்று வளர்ந்து வந்துள்ள ஒரு சமுதாய நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் நல்வாழ்க்கைக்கும் உரிய சமயமாகவும் விளங்குகிறது. “சித்தாந்தம்” என்கிற சொல்லுக்கு “முடிந்த முடிபு” என்பது பொருள். முடிந்த முடிபு என்று கொள்ளத்தக்கவாறு ஆழமாகவும், அகலமாகவும் பல்வேறு தத்துவங்களையும் இந்திய நாட்டின் பல்வேறு சமயங்களையும் ஆய்வு செய்து அத்தத்துவங்களையும் அச்சமயங்களையும் விட சைவசித்தாந்தச் சமயம்மிக்குயர்ந்து விளங்குகிறது என்பதை விளக்கும் நூல்களே மெய்கண்ட சாத்திரங்கள்.

மார்க்சியம்

தமிழ்த்தந்தை திரு.வி.க. அவர்களால் “மா முனிவர்” என்று பாராட்டப் பெற்ற கார்ல்மார்க்சு கி.பி.1818-ஆம் ஆண்டில் செருமானிய நாட்டில் பிறந்தவர்; சிறந்த அறிஞர்; மானிடசாதியின் வரலாற்றையும் அவ்வரலாற்று நிகழ்வுகளின் உள்ளீடுகளையும் உலகத்தின் பல்வேறு தத்துவ நூல்களையும் அரிதின் முயன்று கற்று, அவற்றின் பயனாக மூலதனம் (Das Capital) என்கிற மிக உன்னதமான ஒரு தத்துவஇயல் நூலைத் தந்தவர். இத்தத்துவ நூலுக்கு சோவியத் நாட்டில் பிறந்த மாமேதை லெனின் எழுத்தாலும் உரையாலும் விளக்கம் தந்தார்; செயற்பாட்டினாலும் மார்க்சிய அடிப்படையிலான சமுதாய அமைப்பிற்குக் கால்கோள் செய்து வளர்த்தார். இன்று உலகத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மார்க்சிய தத்துவ நிழலில் சமுதாயம் அமைத்து வாழ்கின்றனர். உலகின் எல்லா நாடுகளிலும் மார்க்சீய தத்துவத்தின் பின்பற்றாளர்கள் வாழ்கின்றனர். அதன் எதிர்காலம் ஒளி மிக்குடையதாக விளங்குகிறது.

சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் தம்முள் முரண்பட்டவையும் அல்ல; உடன்பட்டவையும் அல்ல. சில மாறுபாடுகள் உள்ளன என்பது உண்மை. இந்த மாறுபாடுகள் தத்துவங்கள் தோன்றிய காலம் காரணமாகவும் அமைந்திருக்கலாம். அல்லது உண்மையான மாறுபாடுகளாகவும் இருக்கலாம். சைவ சித்தாந்தம் கடவுளை நம்புகிறது. மார்க்சியம் கடவுளை நம்பவில்லை. இஃது ஒரு முக்கியமான வேறுபாடு. மற்றபடி உலகத்தின் தோற்றம், உயிர்களின் நிலை, இந்த உலக வாழ்க்கை உழைப்பின் சிறப்பு, உழைப்பாளர் தகுதி ஆகியவற்றில் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ஒன்றுபடுகின்றன. கார்ல்மார்க்சுக்குச் சைவ சித்தாந்தத்தத்துவத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவருடைய அணுகுமுறைகள் அல்லது தத்துவ இயலின் போக்கு எப்படி இருந்திருக்கும் என்று இன்று உய்த்துணர்ந்து கொள்ள முடியும். அந்த வாய்ப்பைத் தமிழர்கள் வழங்காதது ஒரு குறையேயாம்.

இரு வேறு நிலையில் வளர்ந்த தத்துவங்கள்

சைவ சித்தாந்தம் கடவுளை நம்புவதாலும் கடவுள் வழிபட்ட சமய வாழ்க்கை முறையை எடுத்துக் கூறுவதாலும் இஃது ஒரு சமயம். மாமேதை மார்க்சு கடவுளை நம்பாததாலும், ‘மதம் மக்கட்கு அபின்’ என்று கூறுவதாலும் பொருளையே மையமாகக் கொண்ட வாழ்க்கையை வலியுறுத்துவதாலும் மார்க்சியம் கடவுளை நம்பாத - கடவுள் மறுப்புக் கொள்கையுடைய நாத்திகமாயிற்று. ஆனால், பிரெஞ்சு தேசத்தில், பாரசீகத்தில், இந்திய நாட்டில் தோன்றிய, மனித உணர்வுகளை - ஒழுக்கங்களை - கட்டுப் பாடுகளை ஏற்றுக்கொள்ளாது “கண்டதே காட்சி - கொண்டதே கோலம்” என்ற நாத்திகம் போன்றதன்று மார்க்சியம். மார்க்சியத்திற்கே கூட ஆன்மிகத்தில் நம்பிக்கை யிருக்கிறது. நமது மரபு வழியில் ஆன்மிகம் என்ற சொல்லுக்குப் பொருள் உயிரின் தகுதியை - வளர்ச்சியைக் குறிப்பதாகும். மார்க்சியம் மானிடத்தின் தரத்தை - வளர்ச்சியை விரும்புகின்றது. மார்க்சியத்தில் உயிரின் தன்மை, கல்வி, கேள்வி மற்றும் செயல்முறைகளால் வளர வேண்டும் என்னும் கொள்கை இருக்கிறது. ஆதலால் மார்க்சியத்தை வறட்சித் தன்மையுடைய - அராசகத் தன்மையுடைய - ஆக்கும் தன்மையில்லாத - அழிக்கும் தன்மை மட்டுமேயுடைய நாத்திகக் கொள்கைகளின் வரிசையில் எண்ணுவது கூடாது, கூடவே கூடாது! மார்க்சியம் ஓர் உண்மை. மார்க்சியம் கற்பனையில் பிறந்த தத்துவமன்று. உலக நடைமுறைகளை ஆராய்ந்து கண்ட உண்மை. மார்க்சியம் ஒரு வாழ்க்கை முறை. மார்க்சியம் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய ஒரு தத்துவம். அதாவது, மனித சமுதாயம் வாழும் காலந்தோறும் அவ்வக் காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு கொள்கை கோட்பாடுகளை வகுத்துக் கொள்ளுமாறு மார்க்சியம் கூறுகிறது. மார்க்சியத்தின் ஒரே குறிக்கோள் - மனித குல மேம்பாடேயாம். சிலர் கருதுவதைப்போல மார்க்சியம் பொருளாயத மேம்பாடு மட்டுமே குறிக்கோளாகவுடையதல்ல.

“தத்துவ ஞான இயல், பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பௌதிகப் பொருளாயதப் பேராயுதத்தைக் கண்டதைப் போல, பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞான இயலில் தனது ஆன்மிகப் பேராயுதத்தைக் கண்டது”7 என்றார் மார்க்சு. பொருளாயத மேம்பாட்டின் மூலம் கலை, கலாசாரம், நாகரிகம் பண்பாடு இவற்றின் தொடர் விளைவாக மனிதகுலத்தில் ஏற்படும் அகநிலை, புறநிலை, அமைதி ஆகியவற்றையும் கண்டு வளர்க்க முடியும் என்பது மார்க்சியத்தின் கொள்கை. ஆக, சைவசித்தாந்தமும் மார்க்சியமும் இருவேறு நிலையில் வளர்ந்த தத்துவங்கள். இவை இரண்டு தத்துவங்களையும் அறிஞர்கள் முயன்று ஒத்திசைவை ஏற்படுத்துவார்களாயின் மண்ணுலகம் விண்ணுலகமாகிவிடும். அல்லது சைவ சித்தாந்தச் சமயம் அயல் வழக்குகளின் கலப்புகளைத் தவிர்த்துத் தனித் தன்மையுடன் இயங்கி வெற்றிபெற்று, மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை வளர்த்து, உலகியல் வாழ்க்கையில் ஒரு துன்பக் கலப்பில்லாத இன்பச் சமுதாயத்தை அமைக்க முடியும். இங்ஙனம் நிகழுமானால் மக்கள் மார்க்சியத்தால் ஈர்க்கப்படுவதைத் தவிர்க்கலாம். அது மட்டுமன்று. மார்க்சியத்தால் உருவாகக் கூடிய சமுதாய அமைப்பைக் காட்டிலும் சிறந்த அகநிலை உணர்வுகளைப் படைத்து, மக்கட் சமுதாயத்தை இன்ப அன்பில் நிலை நிறுத்தலாம். இதனால் சாதனையின் வழி சித்தாந்தச் சமயத்தின் நிலை உயர்ந்து விளங்கும். உயிர்கள் படைக்கப்பட்டனவா?

சைவ சித்தாந்தம் உயிர்கள் கடவுளால் படைக்கப் ட்டன அல்ல என்று கூறுகிறது. உயிர்கள் என்றும் இயற்கையில் உள்ளவை என்றும் கூறுகிறது. இதை

“எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவை அவரா யதனால்
அலகில் நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும் இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும் நற் பசுவருக்கம் என உரைப்பார் உணர்ந்தோர்”8

என்று சிவப்பிரகாசம் கூறுகிறது.

மார்க்சியம் ‘உயிர்கள் இயற்கையில் பரிணமித்தன’ என்ற டார்வின் உயிரியல் பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது.

“இன்று நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையின் - மனிதன் உள்ளிட்ட - உயிரினங்களின் முழுத் தொகுதியானது, ஆதியில் ஓருயிரணுவாக இருந்த ஒரு சில மூலக் கருக்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற, ஒரு நீண்ட நிகழ்வுப் போக்கின் விளைவுதான் - இவையுங்கூட இராயாசன வழியில் தோன்றிய ஊன்மம் (Protoplasam) அல்லது புரதம் (albumen) என்பதிலிருந்து தோன்றியவை”9 என்பது டார்வின் கொள்கை.

“புரதப் பொருள்களுடைய இருத்தலின் பாங்கே உயிர்; அதன் சாராம்சமான ஆக்கக்கூறின் உள்ளடக்கம் அவைகளின் புறத்தே உள்ள இயற்கைச் சூழலுடன் தொடர்ந்தாற் போன்ற வளர்ச்சிதை மாற்ற ரீதியான பரிமாற்றம் கொள்வதேயாம்”10 என்று மார்க்சியம் கூறுகிறது. எனவே சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் உயிர்கள் கடவுளால் படைக்கப்பெற்றவையல்ல என்ற அந்த அளவில், ஒத்த கருத்துடையன.

உயிர்கள் படைக்கப்பட்டன என்றால் உயிர்களின் குறைகளுக்கும் நிறைகளுக்கும் கடவுளே பொறுப்பாளியாகின்றான் என்ற கருத்து உருவாகும். அப்படியானால் இந்த உலகில் இன்று சுயநலக்காரர்களால் ஏற்பட்டுள்ள சாதி வேற்றுமைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடவுளின் ஏற்பாடுகள் என்றாகிவிடும். கடவுள் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது; உயர்வற உயர்ந்த உயர்வு. இயற்கை நியதியின் பாற்பட்ட பரிணாம வளர்ச்சியில் குறை, நிறையாக மாறி வளரும். ஆனால் நிறையிலிருந்து குறை தோன்றாது குறைவிலா நிறையாகிய பரம்பொருள் குறையுடைய உயிர்களைப் படைத்தான் என்பது ஏற்புடையதன்று; சைவ சித்தாந்தத்தின் கடவுட் கொள்கைக்கும் உடன்பட்டு வராது. கடவுள் உயிர்களைப் படைத்தான் என்ற கொள்கை பிற்போக்கு வாதிகளுக்கு வெற்றி கிட்டியது போலாகும். ஏழைகள் “கடவுளின் இந்த ஏற்பாட்டை மீறக்கூடாது; மீறினால் பாவம்; நரகம் கிடைக்கும்” என்று அச்சம் கொண்டு மீளாத் துயரத்தில் ஆழ்வர். சைவ சித்தாந்தம், உயிர்கள் படைக்கப்பட்டவையுமல்ல; தோன்றியவையும் அல்ல; அழியக் கூடியவையுமல்ல என்று கூறுகிறது. இக்கருத்து வளரும் அறிவியல் உலகத்திற்கு இசைந்த கருத்து. அதுமட்டுமன்று, முற்போக்குத் தன்மையுடையதுமாகும்.

அறிவும் அறியாமையும்

உயிர் தன்னுடைய வாழ்க்கையில் பரிணமித்து வளர அறிவு தேவை என்கிற கருத்தில் சைவ சித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் உள்ள வேற்றுமையின் அளவு குறைவு. சைவ சித்தாந்தம் இயல்பாகவே உயிர் அறியாமையில் இருப்பதாகவும் இந்த அறியாமையினால்தான் சமுதாயப் பொதுமைக்கு எதிரான “நான்”, “எனது” என்கிற சர்வாதிகாரத் தன்மையுடைய தனித்தன்மை - பொதுமைக்கு எதிரான தனிவுடைமை ஆகிய சொற்களும், சொற்கள் வழிப்பட்ட உணர்வுகளும் முறையே கால் கொள்கின்றன என்கிறது. அறிவியல் உலகம் வளர்ந்து வருவதால் பொருளுற்பத்திக் கருவிகள் எளிமையாக்கப்பெற்று, குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், குறைந்த சக்தியில் அதிகப் பொருள்கள் உற்பத்தி செய்து குவிக்கக் கூடிய காலமிது. அதோடு நுகரும் பொருள்களை - பணமதிப்புப் பொருள்களாக அல்லது சொத்தாக மாற்றுவதற்குரிய வாய்ப்பும் வளர்ந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மனிதன் கூடித் தொழில் செய்தல், கூடி உண்டு மகிழ்தல் என்ற மனப்போக்கிலிருந்து விலகி, தனி மனித உருக்கொள்கின்றான்; தனி உடைமை ஆர்வத்திற்கு வித்திடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் “நான்”, “எனது” என்ற மனிதகுலப் பண்பாட்டுக் கொல்லியான நச்சுணர்வுகள் “நான்”, “எனது” என்ற சொற்கள் மூலம் வெளிப்படுகின்றன.

சித்தாந்தச் சமயச் சாத்திரங்களும் “நான்”, “எனது” என்பன அற்ற நிலையே அறநிலை என்று கூறும். நற்றமிழ்க் குமரகுருபரர்-

“............. நற்கமலை
ஊரில் குறுகினேன் ஓர்மாத் திரையள(வு) என்
பேரில் குறுகினேன் பின்”11

என்று இலக்கண வடிவில் நயம்பட இதை எடுத்துரைத்தார். அதாவது “சீவன்”, “சிவன்” ஆயிற்று என்பது கருத்து. சீவன், சிவத்தன்மையடைந்த நிலை “நான்” “எனது” அற்ற நிலை.

மார்க்சியம் தோற்றம் - வளர்ச்சியின்மையின் காரணமாக அறிய வேண்டியவற்றை அறிவதற்குரிய, வாய்ப்பின்மையின் காரணமாகவுள்ளது ‘அறியாமை’ என்று கூறுகிறது. சைவ சித்தாந்தத்தின்படி அறியாமை இயற்கையிலேயே உள்ளது. மார்க்சியத்தின்படி அறியாமை இயற்கையன்று; வாய்ப்பின்மை காரணமாக ஏற்பட்டது அறியாமை. இந்த வேறுபாடு மிகப்பெரிய விளைவுகளை அல்லது எதிர் விளைவுகளை உருவாக்கி விடுவதற்குரியதன்று. அதனால், இந்த வகையில் வேறுபாடு இல்லையென்றே கருதினாலும் தவறன்று. அறியாமை. என்பதற்கு இரண்டு தத்துவங்களிலுமே பெரும்பாலும் ஒரே பொருள்கொள்ளப் பெறுகிறது. அறியாமை என்பது ஒன்றும் தெரியாமையன்று. ஒன்றைப் பிறிதொன்றாக முறை பிறழ அறிதலே அறியாமை என்று கருதப்படுகிறது. உயிர் நல்லறிவு வழிப்படவேண்டும் என்பதில் இரண்டு தத்துவ இயல்களும் ஒத்த நிலையினவேயாம், மார்க்சியத்தின் தோற்றத்திற்குக் காரணம் ஐரோப்பிய நாடுகள், மற்ற நாடுகளின் வரலாற்றுப் போக்குகளேயாம். மார்க்சிய தத்துவ ஞானத்தின் தோற்றத்திற்குக் களம், மனித குல வரலாறேயாம். இந்த மனித குல வரலாற்றில் பண்ணை அடிமைமுறை, முதலாளித்துவம் ஆகியன மனித குலத்தைக் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி, நடைப் பிணங்களாக்கிய கொடிய நிலையை மாற்றும் நோக்கத்தில் மார்க்சிய தத்துவ ஞானம் தோன்றியது.

சைவ சித்தாந்தம், “உயிர்கள் படைக்கப்பட்டனவல்ல; என்றும் உள்ளன; தோற்றமும் அழிவுமில்லாதன; உயிர்கள் பல; அவை கல்வி கேள்வியால் அறிவு பெறுவன; அறிவித்தால் அறியும் தகுதியுடையன, உயிர்கள் மகிழ்ந்து வாழும் இயல்பின” என்றெல்லாம் கூறுகின்றது. மார்க்சியமும் உயிர்க் குரிய இந்த இயல்புகளை உடன்பட்டே நிற்கிறது. ஆனால், சைவசித்தாந்தம் உயிர்களின் அறிவை சிற்றறிவு என்று எல்லை கட்டுகிறது. மார்க்சியம் மனித அறிவின் மாட்சிக்கு எல்லை கட்டவில்லை. 

“மனித சிந்தனை முடிவில்லாமல் சதாகாலமும் தோற்றத்திலிருந்து சாராம்சத்திற்கு முதல்நிலையான சாராம்சத்திலிருந்து அடுத்த உயர்ந்த நிலையிலான சாராம்சத்திற்கு மேலும் மேலும் ஆழமாகச்செல்கிறது; அவ்வாறாக முடிவின்றிச் சென்று கொண்டேயிருக்கிறது”12 என்று லெனின் கூறுகிறார்.

சைவ சித்தாந்தம் மனித அறிவின் எல்லை மிக வேண்டுமானால் அல்லது சிற்றெல்லையைக் கடந்தாக வேண்டுமானால் எல்லையற்ற கடவுளைத் துணையாகப் பெற்றால் மனிதன் அறிவு சிற்றெல்லையைக் கடந்தும் வளரும் என்று கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் சிவ ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் முதலிய ஞானாசிரியர்கள் ஐந்தொழிலும் நிகழ்த்தியதாகத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. அது மட்டுமல்ல. சிவஞானம் பெற்றவர்களுடைய வாக்குகளும் இறைவன் அருளிச் செய்யும் வாக்குகள் போலவே கருதப்பெறும் என்று திருமுறை கூறுகிறது.

“எனதுரை தனது ரையாக
நீறணிந்து ஏறுகந்து ஏறிய நிமலன்”13

என்பதறிக. சிவஞானம் பெற்றவர்களுடைய கரணங்கள், சிவத்தன்மையடைந்த கரணங்கள் என்பதைத் திருக்களிற்றுப் படியார்,

“பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனைஅன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
கரணம்போல் அல்லாமை காண்”14

என்று அருளிச் செய்துள்ளமையும் அறிக.

சித்தாந்தக் கருத்துப்படி உயிர், சிவத்தின் துணையோடு தனது அறிவை வளர்த்து ஞானமாக்கிக் கொள்ளும்பொழுது அத்தகைய ஞானத் தன்மையடைந்த உயிர், ஒரோவழி உலகியல் நன்மைகள் செய்தாலும் பெரும்பான்மையும் இறவாத இன்ப அன்பு நிலையை எய்தி அமைதி பெறுவதிலேயே நிறைவு பெறுகிறது. மார்க்சியம் மனித உயிர், தொழில் செய்வதன் மூலமே தனது அறிவை விரிவுபடுத்திக் கொண்டு பரந்த பூத பௌதிக உலகத்தின் செல்வங்களை யெலலாம் மானிடசாதியின் அனுபவத்திற்குக் கொடுப்பதில் முனைப்புடன் ஈடுபடுகிறது; அது மட்டுமன்று. காலத்தையும் தூரத்தையும் இயற்கையாற்றல்களையும் வென்று விளங்கும். சாதனையைச் செய்வதாகக் கூறுகிறது. இரண்டு தத்துவங்களும் செல்லும் அறிவுவழியின் இலக்குகள் மாறுபட்டிருக்கின்றன. இரண்டும் தேவையே. ஆனால் மார்க்சியம் காட்டும் அறிவுலகம் முதல்நிலையில் வெற்றி பெற்று அவ்வெற்றியின் முடிவில் - சைவ சித்தாந்த ஞானம் காட்டும் இன்ப அன்பில் வந்து தங்குமானால் மானிட - வரலாற்றுக்குப் பெரும் பேறாகும்.

கடவுள் தன்மை

மார்க்சியம், மனிதனை விஞ்சிய ஒரு பொருள் இருப்பதாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

“மக்கள்தான் முக்கியமான முதன்மையான ஆக்க சக்தி;

படைப்பாளி, வரலாற்றின் உண்மையான அகப்பொருள்”15

என்பது மார்க்சியம்.

சைவ சித்தாந்தம் கடவுளை, மனிதனைவிடச் சிறந்த பொருளாகக் கொள்கிறது. ஆனால், உயர் பொருளாக இருக்கிற கடவுள் மனிதனைக் கொத்தடிமைப்படுத்துவது அல்லது உயிர்களிடத்தில் தற்குறை மனப்பான்மையைத் தோற்றுவிப்பது உயர் மனப்பான்மையல்ல. இயல்பான வளர்ச்சியில் கூட வேற்றுமைகள் இருப்பது இயற்கை; இதற்கு மார்க்சியம் உடன்படுகிறது. கடவுளை மனிதனுக்கு வழிகாட்டும் ஆசிரியராகவும் தோழனாகவுமே சைவ சித்தாந்தச் சமயம் கருதுகிறது. மனிதருள் சிறந்த மனிதர் இருப்பதில்லையா? இலட்சக்கணக்கான புரட்சித் தொண்டர்களுக்கு லெனின், மாமேதையாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்க வில்லையா? மார்க்சு வாழ்ந்த காலத்திலும் இன்றும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கும் முற்போக்குச் சிந்தனை யாளர்களுக்கும் சிறந்த ஒளி விளக்காகத் திகழவில்லையா? அது போலச் சைவ சித்தாந்தம் காட்டுகிற இறைவன் உயிர்க்கு நல்ல தோழனாய், ஆசிரியனாய் அமைந்து அழைத்து வழிகாட்டிச் செல்கிறான் என்று கருதப்படுகின்றதே தவிர அவன் ஒரு உயர் பொருளாக மட்டும் கருதப் பெறுவதில்லை. சுந்தரர்,

“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி
மாழையொன் கண்பரவையைத் தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே”16

என்று பாடியிருப்பது அறிக. இறைவனுடைய துணையால் பெறும் அறிவுதான் ஞானம். அதாவது பேரறிவு என்று பாராட்டப்பெறுகிறது. ஆதலால், உயிர்கள் அறிவு பெறுவது முதற்கடமை, உழைக்கும் ஆற்றலும், உழைப்பின் வழித் தொழிலியற்றலும் அவ்வழி அறிவை விரிவு செய்தலும் உயிர்களின் இயல்பாகும். இம்மூன்று நிலையும் சைவ சித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் இசைந்த நிலையாகும்.

ஒருமைப்பாட்டை உணர்த்தும் உயர் தத்துவங்கள்

நாடு, மொழி, இனம், மதம் ஆகியன மனிதனுக்குப் பிறப்பின் காரணமாகத் தற்செயலாக வந்தமைந்தன. இவற்றை எளிதில் மனிதன் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒப்பற்ற மனித குலத்திலிருந்து மனிதன், எந்தக் காரணத்திற்காகவும் தன்னைத் தனி நிலையிலும் சரி, பொது நிலையிலும் சரி, ஒதுக்கியோ ஒதுங்கியோ வாழ்தல் கூடாது. தமிழ்நாட்டிற் பிறந்த ஒருவர், தமிழைக் கற்றறியாமல் சூழ்நிலையின் காரணமாக ஆங்கிலம் கற்க நேரிட்டால் - அவருக்குத் தமிழில் பேசவும் எழுதவும் வராது. ஆங்கிலம் மட்டுமே வரும். ஆதலால், மாற்றிக்கொள்ளக் கூடியனவெல்லாம் உயிரைச் சார்ந்த பந்தங்களல்ல. அது மட்டுமன்றி-ஒரு மனிதன் எல்லா மொழிகளையும் கற்கவும் முடியும்; எல்லா நாட்டு மாந்தனாகவும் முடியும். ஆதலால், நாடு, மொழி, இனம், மதம் ஆகிய வேறுபாடுகளை மையமாகக் கொண்டு மானிட உலகத்தைப் பிரிக்கக்கூடாது என்பது மார்க்சியம். இயற்கையிலமைந்த தொழில் செய்யும் ஆற்றல், செய்யும் தொழில் மூலம் உலகத்தை இயக்குதல், செய்யும் தொழில் மூலம் உலக இயக்கத்துக்கு-வரலாற்றுக்கு உந்து சக்தியாக இருத்தல் ஆகியன அனைத்துலக மானிட சாதிக்கும் பொதுமை. எனவே உயிர்க் குலத்தை ஒருங்கிணைப்பது தொழில். இதுவே மார்க்சியம். சைவ சித்தாந்தத்திலும் உயிர்க்குலம்,

“அவன், அவள், அது”17

என்றே பேசப்பெறுகிறது. சிவஞான போதத்தில் நாடு, மொழி, சாதி, இனம் பற்றிய சொற்கள் பயிலாமையைக் கூர்ந்தறிக.

“ஐம்புல வேடரின் அயர்ந்த்னை”18

என்றும்

“நண்ணனல் வேவாத நற்றவர் தம்மினும்
மண்ணமர மாச்செலுத்தும் பாகரினும்” 19

என்றும் ஒரே வழி பயின்றிருப்பினும் தொழிற் குறிப்பின் வழியிலேயாம். பிறப்பின் அடிப்படையிலன்று.

உயிர்களுக்கு முன்னோடியாக - தலைவனாக - விளங்கும் இறைவனும் - தொழிலியற்றும் தலைவனாகவே பேசப்படுகிறான். அதுவும் தற்சார்பு இல்லாத சமூகப் பொது உழைப்பாக உயிர்களின் நலம் கருதியே தொழிலியற்றும் தலைவனாகப் பேசப்பட்டிருத்தல் சிறப்பு. மெய்கண்ட நூல்களுள் ஒன்றாகிய - திருக்களிற்றுப்படியார்,

“அம்மையப்பரே, உலகுக்கு அம்மையப்பர்”20

என்று உலகம் தழுவிய கருத்தை உணர்த்துகிறது. ஆதலால், சைவ சித்தாந்தச் சமயம் மானிட சாதியில் ஏற்படும் நாடு, இன, மொழிப் பிரிவினைகளைக் கடிந்து ஒதுக்குகிறது என்பது உண்மை. ஏன்? கடவுளையும் கூட உலகிற்கு ஒருவனாகவே உணர்த்துகிறது. உலகோர் எந்தப் பெயரில், எந்தக் கோலத்தில், யார் தொழுதாலும் அவர் ஒருவரே என்கிற ஒருமையில், சைவம் நிலைத்து நிற்கிறது. ஆனால், இன்று சித்தாந்தச் சைவத்தைச் சார்ந்திருப்பவர்கள், சித்தாந்தச் சைவத்தை வாழ்வியலாக்கத் தவறிவிட்டார்கள். மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் அறவே மறுத்த, மனித குலத்தை வேற்றுமைப்படுத்தும் புன்மை நெறிகளை, பொய்ம்மைச் சாத்திரங்களின் பெயரால் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். கோடானு கோடி மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கிக் கொடிய துன்பத்தை இழைத்து வருகின்றனர். மெய்கண்ட சிவம் வழங்கிய புனித நெறி - அப்பரடிகள் வழங்கிய அருள் நெறி - சேக்கிழார் காட்டிய செந்நெறி வழிவந்த தமிழகம், சராசரி மனிதனுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமையைக் கூட வழங்கவில்லை. நாடு விடுதலை பெற்ற பிறகு சட்டசபையில் இயற்றப்பெற்ற ஆலய நுழைவுச் சட்டம்தான் இந்த உரிமையைத் தந்து, மனித குலத்தின் மீது படிந்திருந்த கறையை நீக்கியது. ஆக, மனித குலத்தை வேற்றுமையற்ற ஒருமையுணர்வுடையதாகக் காண்பதில் சைவ சித்தாந்தச் சமயமும் மார்க்சியமும் ஒரே நிலையின.

வறுமை நீக்கத்திற்கு வழிகாட்டாதது ஏன்?

மானிட சாதியில் அடுத்துள்ள பெரிய வேற்றுமை வளம், வறுமை ஆகும். வறுமையை,

“வறுமையாம் சிறுமை”21

என்று சிவஞான சித்தியாரும்

“நல்குரவென்னும் தொல்விடம்”24

என்று திருவாசகமும் கடிந்து கூறுகின்றன. வறுமை, வளம் என்கிற வேறுபாடு இயற்கை என்றோ, கடவுளின் படைப்பு என்றோ, மாற்ற முடியாதது என்றோ, மாற்றக்கூடாதது என்றோ சைவ சித்தாந்தம் கூறவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், இத்துறையில் சைவசித்தாந்தச் சமய நெறியாளர்கள் துறைபோக ஆய்வு செய்தார்கள் என்று கூறுவதற்கில்லை. அது மட்டுமன்று, அங்ஙனம் துறைபோக ஆய்வு செய்வதற்குரிய சூழல்கள், மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் தோன்றிய காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் - இந்திய நாட்டில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றவில்லை. பண்ணையடிமைச் சமுதாயம் இருந்தது. பண்ணையடிமைச் சமுதாயத்திலும் கூட, நுகர்வுகளின் எல்லை குறைவாக இருந்தமையினாலும் மூல தனம் தோன்றாமையினாலும் இத்துறையில் அதிகக் கவனம் ஈர்க்கப்படவில்லை. இதனை,

“தென்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவு மெல்லாம் ஒரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே”23

என்ற புறநானூற்றுப் பாடலால் அறியலாம். மார்க்சு காலத்தில் உலக நாடுகளுள், பல நாடுகளில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றிவிட்டது; பணப் புழக்கம் தோன்றிவிட்டது; படைப்புக் களங்கள் தோன்றிவிட்டன; நாடு விட்டு நாடு சந்தைக்குச் செல்லும் இயல்புகள் வளர்ந்து விட்டன. இந்தச் சமுதாய அமைப்பில் சுரண்டல்முறை வலிமை பெற்றது. அதனால், மார்க்சு இத்துறையில் நிறைய ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. சைவ சித்தாந்த ஆசிரியன்மார்களுக்கு அத்தகைய நெருக்கடி இல்லை.

ஊழ் என்பது என்ன?

சித்தாந்தச் சமயம் வினைகளில் வழியது உயிர்களின் வாழ்க்கை - ஆக்கம் என்று கூறுகிறது. இது தொடர்பாக நம்முடைய ஆய்விற்குரிய சொற்கள் மூன்று. அவை, முறையே வினை, விதி, ஊழ் என்று அமையும். “வினை” என்பது உயிர்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அகநிலை அறிகருவிகளாலும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற புறநிலைச் செயற்கருவிகளாலும் செய்யப்பெறும் செயல்களைக் குறிக்கும். அகநிலையிலும் புறநிலையிலும் உயிர், செயற்பாடின்றியிருத்தல் இயலாத ஒன்று. ஒரோவழி புற நிலையில் “சும்மா இருத்தல்” இயலுமாயினும் அகநிலையில் “சும்மா இருத்தல்” இயலாது.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந் திவனே”24

என்பது அறிக.

இங்ஙனம் இயற்றப்பெறும் செயல்களுக்குரிய பயன்களைச் செய்தோரின் துய்ப்பிற்கு வந்தடைவதற்குரிய நியதியை (Natural Law) “விதி” என்பர். செய்த வினைகளின் பயன்கள், விதிவழியில் செய்தோரின் அனுபவத்திற்கு வந்து சேரும்போது “ஊழ்” என்று பெயர் பெறுகிறது. செய்யும் வினைகளின் பயன்களுள் இம்மையிலேயே துய்ப்பனவும் உண்டு; மறுமையில் தொடர்வனவும் உண்டு. உயிர்ச் சார்பான நுண்ணுடம்போடு தொடர்புபட்ட கல்வி, அறிவு, உணர்வு ஆகியனதாம் உயிரைத் தொடர்ந்து பல பிறப்புகளுக்குச் செல்லும் தன்மையுடையன. உடல் துய்ப்பிற்குரிய உலகியற் செல்வங்கள் உடம்போடு மட்டுமே தொடர்புடையன. அதனாலேயே “உடைமை” என்ற சொல் தமிழில் பிறந்தது. ஒருவர் இறந்துவிடின் உலகியற் சார்புடைய செல்வங்கள் மற்றவர் கட்புலனுக்கும் துய்ப்பிற்கும் உரியனவாகி விடப்பெற்றுவிடுவதை ஓர்க, உடம்பிலிருக்கும் உயிர் நீங்கியவுடனேயே அவ்வுடமைகளுடன் இருக்கும் தொடர்பும் அறவே நீங்குவது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், உயிரோடு தொடர்புடைய அறிவு முதலியவற்றை, உடம்பும் உயிரும் இணைந்திருந்த காலத்திலும், அப்பொழுது செய்யப்பெற்ற செயல்களின் நிலைப்பாடுகள் வழியாகவும் மற்றவர்கள் அனுபவிக்க முடிகிறதே தவிர, இறந்தவரின் உயிரோடு தொடர்புடைய அவற்றை முற்றாக நாம் வாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”25

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து” 26

என்றார் திருவள்ளுவர்.

உலகியற் செல்வங்கள் அறிவறிந்த ஆள்வினையால் படைக்கப்படுபவை; அரசியல் நெறிமுறைகளால் முறைப் படுத்தப்படுபவை-ஒரோவழி, புண்ணிய பாவ உணர்வாலும் முறைப்படுத்தப்படும். செல்வ ஏற்றத்தாழ்வில் வழங்கப்பெறும் சொற்கள் ஏழை-பணக்காரன் என்பதுவே. இந்த ஏற்பாட்டுக்கும் ஊழுக்கும் யாதொரு தொடர்புமில்லை; புண்ணிய பாவத்தினை நினையாமையாலும் முறை செய்யும் அரசின்மையாலுமே ஏழை-பணக்காரன் ஏற்பாடு தோன்றுகிறது. இவை அப்பட்டமான சுயநலம் படைத்த மனிதர்களின் ஏற்பாடு. பிற்காலச் சமய நூல்களில் இந்த ஏற்பாட்டுக்கு மறுப்பு இல்லாமல் இருக்கலாம். அதனால் இந்தமுறை புனிதமாகிவிடாது.

“ஊழ்” என்கிற சொல் “ஊழ்த்தல்” என்கிற சொல்லின் அடிப்படையில் பிறந்தது. ஊழ்த்தல் என்றால் விளங்கத் தோன்றுமுதல் என்பது பொருள். உயிர், நேற்று-நேற்று முன் தினம் தொடர்ந்து வாழ்ந்த முறை, இயற்றிய செயல், முயற்றிய வினை ஆகியவற்றின் உணர்வு உயிரிடத்தில் இயல்பாக விளங்கித் தோன்றுவது இயற்கையே. இதனைத்தான் பழக்கம் என்பர். பழக்கத்தின் காரணமாக வேம்பை இனிப்பாகவும், கரும்பைக் கசப்பாகவும் துய்க்கும் புழுவினைக் காண்கிறோம். அதனால்,

“பழக்கம் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்”27

என்று திருவந்தியார் அறிவுறுத்திற்று. எனவே முன்னேற்றத்திற்குப் பயன்தராத பழக்கங்களால் வந்தமையும் உணர்வின் வழியதாகவே வாழ்தல், வாழ்க்கைக்குத் துணை செய்யாது; பயன்தராது என்று ஒருவன் தெளிந்து துணிவானானால் அந்த உணர்வை மாற்றமுடியும் என்பதே சித்தாந்தத்தின் முடிவு. மனிதனின் அறிவறிந்த ஆள் வினையைவிட ஊழ், வலிமையுடையதன்று. ஆதலால் வினை, விதி, ஊழ் என்கிற சொற்கள் உணர்த்தும் தத்துவத்தின் வழி ஒருவனது உழைப்பின் உபரியை மற்றவன் எடுத்துக்கொள்வதைச் சைவசித்தாந்தம் ஏற்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. மாறாக, வினையின் பயன், செய்வதனையே சாரவேண்டும் என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. அதாவது வினையின் விளைவு நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அவரவர்களையே சாரும். இதனை, தருமையாதீனக் குருமுதல்வர் குருஞானசம்பந்தர்,

“அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்
தவரவர் நினைவது தமை உணர்வதுவே” 28

என்று அருளியுள்ளமையால் அறிக.

மேலும், இப்பிறப்பிலேயே சார்ந்து துய்க்கக் கூடிய வினைகளும் உண்டு. அடுத்த பிறப்புகளுக்குத் தொடர்வனவும் உண்டு. சராசரி அறிவோடு நோக்கினால் கட்புலனுக்கு எளிதாகத் தெரியக்கூடிய பயன்கள் இப்பிறப்பிலேயே துய்க்கக் கூடியனவாக அமையக் கூடும். இப்பொழுது, இந்தத் தலைமுறையில் நம் கண் முன்னே தெரிகிற வெளிச்சமான ஓர் உண்மை உழைப்பாளிகள் உழைக்கிறார்கள்! உலகம் முழுவதும் நுகர்வதற்குரிய பொருள்களைப் படைத்து அளிக்கிறார்கள்! ஆனால், உழுது உலகத்திற்கு உணவளிப்பவன் போதிய உணவில்லாமலும், உலகு உடுத்துமகிழ உடை கொடுப்பவன் போதிய உடையில்லாமலும், மகிழ்ந்து கூடியிருக்க இல்லம் அமைத்துக் கொடுத்தவன் வசதியான இல்லம் இல்லாமலும் வாழும் நிலையினை இன்று காண்கின்றோம். மதிப்புடைய - பயன்பாடுடைய உற்பத்தி செய்தற்குரிய திறனை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது சித்தாந்த மரபின்படி அவர்களுடைய ஊழ் நன்றாகவே அமைந்திருக்கிறது. ஆனால், இப்பிறப்பில் அவர்களுடைய உழைப்புச் செல்வத்தை அவர்களிடமிருந்து தட்டிப் பறிப்பதை எங்ஙனம் ஊழாகக் கருதமுடியும் ? இங்ஙனம் பிறர் பங்கை எடுத்துக் கொள்வது நெறிமுறையன்று என்று கருதிய அரசுகள் இயற்றிய சட்டங்கள் மூலம் உழைப்பாளர்களுக்குரிய பங்குகிடைத்து வருவதைப் பார்க்கிறோம். இதனால் ஏழை - பணக்காரன் வேறுபாடு ஊழின்பாற்பட்டதன்று என்பது உறுதியாயிற்று. கண்முன்னே தெரிகிற இந்த உண்மைக்குக் கட்புலனுக்கு வராத தத்துவத்தைப் போட்டுக் குழப்புவதில் என்ன பயன்?

பிற்போக்கு வாதிகள் வினையின் பயனாகிய செல்வத்தை, வினை இயற்றியோருக்கு உரிமையாக்காமல் அவர்களின் பங்கை எடுத்துக் கொள்வதற்காக, வினைக்கு அர்த்தமற்ற கருத்தைக் கற்பித்துள்ளனர் என்பதை முன்னே கூறியவற்றால் அறியலாம். இதுவே சைவசித்தாந்தத்தின் கொள்கை, மார்க்சியம் சுரண்டலை அறவே கண்டிக்கிறது. எப்படி உழைப்பாளி சுரண்டப்படுகிறான் என்பதையும் அதை மாற்றும் வழியையும் கூலி, விலை, இலாபம் என்ற தத்துவத்தின் வழி தெளிவாக விளக்கிய முதல் மேதை மார்க்சு தான். ஆக, பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பிற்குரிய அடிப்படைக் கொள்கைகள் சைவ சித்தாந்தச் சமயத்திற்கும் மார்க்சியத்திற்கும் முரண்பாடில்லை.

இறைவன் முதற் பொருளே

உயிர்கள், வாழ்வதற்கென்று அமைந்தது இந்த உலகம். இந்த உலகம் இயற்கை, இது கடவுளால் படைக்கப்பட்டதன்று என்ற கருத்தில் சைவசித்தாந்தமும் மார்க்சியமும் இசைந்த கருத்துடையனவாகவுள்ளன.

“நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே”29

என்பது ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து. இப்பாடலில் குறிக்கும் “முகிழ்த்தன” என்கிற சொல் தன் வினைச் சொல். அதாவது தாமே தோன்றின என்பதே கருத்து. இங்கு மூவகை உலகம் “அவன், அவள், அது” என்று சுட்டப்படும் மூவுலகே தவிர, பௌராணிகத்தில் கூறப்படும் கட்புலனாகாத உலகங்களையல்ல என்பதை அறிக. ஆதலால் உலகம் தோற்றுவிக்கப் பெற்றதன்று திருக்குறளும் கூட, உலகத்திற்கு முதற்பொருளாகக் கடவுள் இருக்கிறான் என்று சொன்னதே தவிர, கடவுள் உலகத்தைப் படைத்தான் என்று சொல்லவில்லை.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”.30

சைவ சித்தாந்தத்திலும் கூடக் கடவுளது திருவருட் சத்தியின் இயக்கத்தால் “மாயை” என்னும் அருவப் பொருளிலிருந்து உலகம் தோன்றி விரிவடைகிறது என்பதே கருத்து. என்றும் உளதாய் அருவமாய் ஒரு நிலையதாய் விளங்குவது மாயை என்று சித்தி கூறுகிறது.

“நித்தமாய் அருவாய்ஏக நிலையதாய் உலகத்திற்கோர்
வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமலனுக்கோர்
சத்தியாய்ப் புவனபோகம் தனுகர ணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே”31

என்பது காண்க.

ஆதலால் உலகம் இயற்கை. அது உள்பொருள்; உண்மையானது. இந்த உலகிலேயே உயிர்களுக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் கிடைக்கின்றன என்கிற கருத்தில் இரு தத்துவ இயல்களும் ஒத்து நிற்பதை ஓர்ந்தறிக.

வாழ்க்கை வாழ்வதற்கே!

உலகில் சில சமயங்கள் கூறுவதுபோல் சித்தாந்தச் சமயம், வாழ்க்கையை எள்ளுவதுமில்லை; பழிப்பதுமில்லை. இந்த மானிட வாழ்க்கை அரியது; போற்றுதலுக்குரியது; பயன்பாடுடையது என்றே சைவ நூல்கள் கூறுகின்றன.

“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி
மதித்திடு மின்”32

என்றார் அப்பரடிகள். மார்க்சியமும் இந்த வாழ்க்கையைப் பாராட்டுகிறது. வாழ்வதற்கே வாழ்க்கை என்பது மாக்சியம். ஆனால் வாழும் நெறிமுறைப்படி வாழ்தல் வேண்டும். அதாவது, வள்ளுவர் கூறியாங்கு “வையத்துள் வாழ்வாங்கு வாழ்” வேண்டும். மானிட வாழ்க்கையின் போக்குகளைப் பற்றி மார்க்சியத்தின் திரண்ட கருத்து இது.

“விலங்குகளும் உண்கின்றன; உறங்குகின்றன; இன விருத்தி செய்கின்றன; உடற் பாதுகாப்பில் முனைப்புடன் நிற்கின்றன. மானிடனும் இவற்றை மட்டுமே இயற்றினால் அது மானிட வாழ்க்கையாகாது. மானிட வாழ்க்கைக்கும் இவை இன்றியமையாதவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இவற்றிலும் மேம்பட்ட சில வாழ்க்கை நோக்கங்கள் மானிடத்திற்கு உள்ளன. அவை என்ன? மானிடத்தின் தரத்தை உயர்த்துதல்; ஆன்மாவைச் செழிப்புறச் செய்தல்; உலகத்தின் எண்ணற்ற வைப்புகளை அனுபவத்திற்குக் கொண்டு வருதல்; காலம் தூரம் ஆகியவற்றை வென்று விளங்கும் ஒருலகம் காணல்; மனித நாகரிகத்தினை அரித்து அழிக்கும் நச்சுத் தீமைகளை அறவே அகற்றுதல்; உலக வரலாற்றுக்கு உந்து சக்தியாக விளங்குதல்-இவை மானிடத்தின் சிறப்புகள். இத்தகைய சிறப்புகளுடன் மனிதன் வாழ்ந்தால்தான் மானிட வாழ்க்கை அஃதில்லையேல் விலங்கியல் வாழ்க்கை”

இக் கருத்து சைவ சித்தாந்தத்திற்கும் ஏற்புடையதேயாம் - ஆதலால் மானிட வாழ்க்கையை அர்த்தமுடைய தாக்குவதில் இவ்விரு தத்துவங்களும் ஒத்துநிற்பது நமது பேறு.

மானிட சமுத்திரம்

மனிதன், தன்னிச்சையாக வாழ ஆசைப்படுகின்றான். இயல்பாக அவன் காட்டுமிராண்டி கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்களில் அவனுக்கு நாட்டமில்லை. சமுதாயப் பேரமைப்பிலிருந்து மனிதன் தனித்து ஒதுங்குவது பஸ்மாசுரன் கதையை ஒத்ததாக முடியும். எண்ணற்ற கோடிக் கணக்கான நீர்த்திவலைகளின் செறிவில் கடல் கிடக்கும்பொழுது, நீர்ப்பரப்பு மிகுதியாக இருக்கிறது; ஆர்ப்பரிக்கிறது! ஆழ் கடலின் வயிறு, முத்தை ஈன்று தருகிறது! தண்மையான காற்றால் உயிர்க்குலத்தைத் தழைக்க வைக்கிறது! கடல்படு செல்வம் அள்ள அள்ளக் குறையாதது! அந்த ஒப்பற்ற மாபெரும் கடலிலிருந்து ஒரு திவலை நீர் கரையில் விழுமானால் அத்திவலை என்னாகிறது! கரையில் விழுந்த சில நொடிகளிலேயே காய்ந்து போகிறது. அதுபோல, நாம் மானிட சாதியின் ஓர் உறுப்பாக இருக்கிறபோது நமது வாழ்க்கையில் பெருமை ஏற்படுகிறது! பாவேந்தர் பாரதிதாசனும்,

“என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூறு”33

என்று பாடினான்.

பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் தத்துவங்கள்

இந்தச் சங்கம வாழ்விற்கு நுழைவாயிலாக அமைவது குடும்பம். பெண் வாழ்க்கைத்துணை வாழ்க்கைத் துணை நலம்! பெண்களைப் பெருமைப்படுத்துவதே சித்தாந்தத்தின் நோக்கம். சிவபரம் பொருளின் அருளே, சக்தி என்பது.

“அருளது சக்தியாகும்”34

என்பது சிவஞான சித்தியார். மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் யாண்டும் இறைவனை அம்மையப்பராகவே போற்றிப் பரவுவதைக் காணலாம். சித்தாந்தச் செந்நெறியின் தொன்மை வழிபாட்டுத் திருமேனி, அம்மையப்பர் திருமேனியாகவே இருந்திருக்க வேண்டும் என்பது நூலறிந்தோரின் துணிபு. சங்க இலக்கியங்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் அம்மையப்பர் திருவுருவமே போற்றிப் பரவப் பெறுகிறது.

“....சேர்ந்தோள் உமையே
செவ்வான் அன்னமேணி.”35

“நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன்.....”36

“பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று”37

என்பன அறிக.

திருக்குறளில் வரும் “ஆதிபகவன்” என்ற சொல்லுக்கும் சக்தியைப் பங்கிலுடையவன் என்பதுதான் பொருள்.

“தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துரதாய் கோத்தும்பீ”38

என்பது திருவாசகம். அம்மையப்பர் திருக்கோலத்தையே “தொன்மைக்கோலம்” என்று மாணிக்கவாசகர் குறிப்பிடு கின்றார்.

“அண்ணலார் அருட் சக்தியும் சிவனும்
ஆய தன்மையின் அன்று தொட்டுலகம்
பெண்மை ஆண்மை என் றிருவகைப் புணர்ப்பாற்
பிறங்கும்............39

என்னும் காஞ்சிப்புராணத் திருப்பாடலும் காண்க. சைவத்தின் உயிர்நாடியாக விளங்கும் திருக்கோயில் வரலாற்றில், மதுரைத் திருக்கோயில் வரலாறு - சிறப்புடையது. அங்கு, அங்கயற்கண் அம்மைக்குச் சொத்துரிமையும் ஆட்சியுரிமையும் வழங்கிய சைவத்தின் மாண்பினைக் காண்க

திருஞானசம்பந்தர், அயல் வழக்கை மறுத்து வழக்காடியது இயற்கையோடிசைந்த நமது சமய மரபுகள் பாழ்படுமே என்ற கவலையினாலேயாம். எளிதில் ஏற்று வாழ இயலாத அயல் வழக்குகள் தமிழகத்தில் நிலவிய வாழ்க்கையமைப்பை நிலை குலையச் செய்தன. அதனால், திருஞான சம்பந்தர் இயற்கையோடிசைந்த வாழ்க்கையை வலியுறுத்தவே விரும்பினார் என்பதை அவருடைய திருமுறைகளில் இயற்கை வருணனை நிரம்பிக் கிடப்பதாலும், அவை முற்றாக இசைத் தமிழாக விளங்குவதாலும், அம்மையப்பனையே பரவிப் பாராட்டுவதாலும் உறுதிப்படுகிறது. சேக்கிழாரின் பெரியபுராணத்தில், உற்ற அமைச்சராகவும், துணிவுமிக்க செயல்களுக்குத் துணைவராகவும் இழுக்கல் ஏற்படும்போது இடித்துத்திருத்தும் ஆசிரியராகவும் முறையே விளங்கிய பெண்பாலாரைப் பார்க்கிறோம். மார்க்சியமும் மானிட வர்க்கத்தில் ஆண், பெண்ணிடையே ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிப்பதில்லை. இத்துறையில் இவ்விரு தத்துவ இயல்களும் ஒத்தே நிற்கின்றன.

உண்மை நீதியை உணர்த்தும் தத்துவங்கள்

மனித நாகரிகத்தின் மையம் நீதியேயாம். இன்று நம்முடைய சமுதாயத்தில் நீதி என்ற சொல் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் சமூக நீதி பற்றி நமக்குக் கவலையே இல்லை. கடவுளின் மறு பெயரே “நீதி” என்கிறார், மாணிக்கவாசகர்,

“நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே”40

என்பது திருவாசகம்.

கச்சியப்பர் ‘சைவ நீதி’ என்று போற்றுவார்.

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக
உலகமெல்லாம்”41

நீதி என்பது என்ன? சட்டங்கள், சாத்திரங்களின்படி வழங்கப்படுவது நீதியா? அவையிரண்டுமே கூடத் தற்சார்பு காரணமாக நெறிமுறை பிறழ்ந்தவர்களால் இயற்றப்படும் பொழுது, அங்கே எப்படி உண்மையான நீதியைக் காண முடியும்? எனவே,

“உங்களுடைய (பூர்ஷீவா) சட்ட நீதித் தொகுப்பு என்பது உங்களுடைய விருப்பக்கருத்தைத் தவிர வேறில்லை. அவைகளை எல்லாருக்குமான சட்டங்களாக நீங்கள் ஆக்கி வைத்துள்ளீர்கள். உங்களுடைய அந்த விருப்பம் என்பது அவைகளின் சாராம்சமான இயல்பும் திசைவழியும் உங்கள் வர்க்கத்தின் நிலைப்பாட்டின் பொருளாதார நிலைமைகளினால் நிர்ணயிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன.”41

என்று மார்க்ஸ் கூறுவது அறியத்தக்கது. எனவே எல்லா உயிர்களும், அனைத்துலகத்தின் மானிடவர்க்கமும் மகிழ்ந்து வாழ்வதற்குரியவாறு அமைவினை உண்டாக்கத் துணையாயிருப்பது நீதி. இதனைச் சமூகநீதி (Social Justice) என்பர். இந்த நீதியை ஒருவன் கேட்டுப் பெறுவதில்லை. இயல்பாகவே அவனுக்குக் கிடைப்பதே நீதி. இந்த உயர்ந்த நீதி உலகத்தின் நடைமுறை ஒழுக்கமாகுமானால் கலகம் ஒடுங்கும்; போர் ஒடுங்கும், மண்ணகம் விண்ணகமாகும். இத்தகைய நீதியை நிலை நாட்டுவதில் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் கைகோத்து நிற்பது களிப்பைத் தருகிறது.

மனித உரிமையை மதிக்கும் தத்துவங்கள்

சைவ சித்தாந்த நூல்களில் முடியுடை மன்னராட்சி பற்றிய விரிவான ஆய்வு இல்லை. அஃது அவர்கள் காலத்துத் தேவையாக அமையவில்லை. காரணம், கிராமங்களும் குடும்பங்களும் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தன; தன்னிறைவுடையனவாயிருந்தன. அன்றாட வாழ்க்கையில் அரசின் குறுக்கீடுகள் இல்லை. அரசுகள் பொது ஒழுங்கு, படைப்பாதுகாப்பு மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. அது மட்டுமின்றித் தமிழ்நாட்டு அரசுகள் முறை செய்து காப்பாற்றும் அரசுகளாக இருந்தமையினால் அரசைப்பற்றி அன்றாடம் எண்ணிப் பேசவேண்டிய சூழ்நிலை அன்று இல்லை. இன்றோ, அரசுகள் வளர்ந்து, அதிகாரத்தைப் பெருக்கிப் பெருக்கித் தனி மனிதனுடைய் வாழ்க்கையில் கூட அரசின் அதிகார வீச்சு தலை காட்டுகிறது. அதுவும் நம்முடைய நாட்டில் உள்ளார்ந்த செழுமை பெறாத மக்களாட்சி முறையும், சீர்மைப்படுத்தப்படாத சமுதாய அமைப்பும் அரசின் அதிகாரப்பிடிப்பையே வலிமைப் படுத்தியுள்ளன. மக்களின் வலிமை முடம்பட்டே போகின்றது. இது வளரும் நாட்டுக்கு நல்லதன்று. தனி மனித வாழ்க்கையில் அரசு குறுக்கிட்டபொழுதெல்லாம் நமது சமய ஆசிரியன்மார்கள் கனன்று எழுந்து கடிந்துள்ளனர். அப்பரடிகள், பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மனின் ஆட்சியை எதிர்த்துப்பாடிய,

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்,
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்,
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே!”43

என்கிற பாடல் வரலாற்றுச் சிறப்புடையது. தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தனி மனிதர் வாழ்க்கையில் ஒரு அரசு தலையிட்ட வரலாறே இதுதான். அரசன், மூர்க்கத்தனமாகத் துன்புறுத்துகிறான் ஆயினும் நீதி வெற்றி பெறுகிறது. மார்க்சு, புரட்சியைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு மனிதனின் குணங்கள் மாறும் வரைக்கும் வலிமை சான்ற ஆட்சி வேண்டுமென்கிறார். காலப்போக்கில் அரசே இல்லாத - மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் சமுதாயம் காண வேண்டும் என்பதுதான் மார்க்சியம்.

“உற்பத்தியாளர்கள் சுயேச்சையாகவும் சமத்துவ முறையிலும் பங்கெடுத்துக் கொள்ளும் அடிப்படையில் உற்பத்தியை ஒருங்கமைக்கும் சமுதாயமானது அரசு இயந்திரம் முழுமையையும் அது அப்பொழுது எங்கு போய்ச் சேரவேண்டுமோ அங்கு - அதாவது தொல் பொருள்களின் கண்காட்சியில், நூற்பு, இராட்டை, வெண்கலக் கோடரி ஆகியவற்றின் அருகில் கிடத்தி வைக்கும்”44

என்பது காண்க.

இந்தக் கருத்திலும் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ஒரு திசையிலேயே நம்மை வழி நடத்திச் செல்கின்றன; மாறுபாடு இல்லை. இந்நிலை வரவேற்கத்தக்கது.

பொருள் முதல் வாதமும் சார்ந்ததன் வண்ணமும்

அடுத்து மிக முக்கியமான ஆய்வு மார்க்சின் பொருள் முதல் வாதம். அதாவது ஒரு மனிதனின் சிந்தனை, கருத்து, அறிவு, உணர்வு, ஒழுக்கம் ஆகியன அவனுடைய பொறிகளின் வாயிலாக - புலன்களின் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் பொருள்களிலிருந்து வந்து அமைகின்றன என்பது பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கை.

“ஒரு புறநிலைப் பொருள் தனி மனிதனுடைய மூளையில் புலனுணர்வும், புலனறிவுகள், அறிவிப்பு, தெரிவிப்புகள், கருத்துருவங்களின் வடிவத்தில் உள்ளத்தின் அளவில் மறுபதிப்பு செயப்படுவது என்பதை அடிப் படையாகக் கொண்டதாகும். உணர்வு நிலையின் உள்ளடக்கம் இறுதியில் சுற்றுப்புறமுள்ள உண்மை நிலையால் நிர்ணயிக்கப்படுகிறது45

சைவசித்தாந்தமும் ஆன்மா அல்லது உயிர், சார்ந்ததன் வண்ணமாகிறது என்று கூறுகிறது. உயிர், உலகத்தைச் சார்ந்திருந்தால் உலகியல் தன்மையும் திருவருளைச் சார்ந்திருந்தால் அத்தன்மையும் பெற்று விளங்குகிறது என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. சேக்கிழார், திருப்புகலூரில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், முருகநாயனார் இம்மூவரும் ஒருங்கிணைந்த காட்சியை எடுத்துக் கூறும் போது,

“உடனுறைவின் பயன் பெற்றார்”46

என்று கூறுகிறார். இஃது ஓர் அருமையான சமூக விஞ்ஞானச் சொற்றொடராகும். ஒருவர், மற்றொருவரோடு சேர்ந்துவாழ்ந்தால், அங்ஙனம் சேர்ந்துவாழ்ந்ததன் பயனை அடைந்தால் தான் சேர்ந்து வாழ்ந்ததற்குப் பொருள் உண்டு. அதாவது ஒவ்வொருவருடைய தன்மையும் - அறிவு, ஆற்றல், பண்பாடு, பயன்கொள்ளுதல் ஆகியன அனைத்தும் பன்மடங்கு பெருகி வளர்ந்தால்தான் உடனுறைந்தனர் என்பதற்குப் பொருள் உண்டு. ஆதலால், உயிர் எதைச் சார்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாகவே அமைகிறது என்பதைப் பொருள் முதல்வாதத் தத்துவத்தோடு ஒத்துப் பார்த்தால் பெரிய முரண்பாடு இல்லை என்றே தோன்றுகிறது.

செயற்பாடு வேண்டும்

இங்ஙனம் சைவ சித்தாந்தத்தையும் மார்க்சியத்தையும் ஒத்துப்பார்த்ததில் இவ்விரண்டு தத்துவங்கள் கடவுள் நம்பிக்கையில் முற்றாக மாறுபடுகின்றன; மறுபிறப்புக் கொள்கையில் ஓரளவு வேறுபடுகின்றன; அறிவின் பயன் காண்பதிலும் வேறுபாடு இருக்கிறது; ஆனால் இந்த வேறுபாடுகள் மனித குல மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்வதில் பெரிய தடையாக இல்லை. சித்தாந்தச் சைவ மரபுப்படியான கடவுள் நம்பிக்கையால் உயிர்களின் நிலையான நலனுக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் யாதொரு தடையுமில்லை. சைவசித்தாந்தச் சமயத்தில் உள்ள கடவுள் தத்துவம், உயிர்க்குலத்திற்கு உறுதுணையாய் அமைந்திருக்கிறது. பிரிவினைகள், வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வுகள் முதலிய சமுதாயத் தீமைகளுக்குச் சித்தாந்தச் சமயம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ முற்றாக, உடன்படவில்லை. ஆதலால், மானிட சமுதாயத்தை மேம்பாடடையச் செய்யச் சித்தாந்தச் செந்நெறியின் தத்துவங்களுக்குச் செயலுருவம் கொடுத்தாலே போதும். புதுமையும் பொதுமையும் நிறைந்த சமுதாயத்தைக் காணலாம்.

சைவ சித்தாந்தம் புதுமைத் தன்மையுடையது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய் என்று மாணிக்கவாசகர் போற்றிய உரை, இன்றும் என்றும் சைவ சித்தாந்தச் செந்நெறிக்கும் பொருந்தும். இன்று வேண்டியதெல்லாம் செயற்பாடேயாம்.

அடிக்குறிப்புகள்

1. தமிழ் இந்தியா. ந.சி.க, பக்கம் 207

2. புறநானூறு—19

3. சிலப்பதிகாரம்—வேட்டுவவரி-23

4. சிலப்பதிகாரம்-இந்திர விழவூரெடுத்த காதை—வரி 169

5. புறநானூறு, 20 : 21

அகநானூறு 31 : 4

கலித்தொகை 34 : 1

குறுந்தொகை 376 : 1

பதிற்றுப்பத்து 15 : 35 பெரும்பாணாற்றுப்படை—வரி 32

திருமுருகாற்றுப்படை—வரி 278

6. புறநானூறு-134

7. மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்கள் புத்தகம் 1 பக்கம் 391

8. சிவப்பிரகாசம்—சூத் 2, பா 19.

9. ஏங்கல்ஸ், லூத்விக்—பாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்—பக்கம் 69

10. ஏங்கல்ஸ், இயற்கையின் இயக்க இயல்---பக்க 49

11. குமரகுருபரர், பண்டார மும்மணிக் கோவை--பா.24

12. லெனின் நூல் திரட்டு, தொகுதி 38 பக்கம் 253

13. திருஞானசம்பந்தர் முதல் திருமுறை 76:1

14. திருக்களிற்றுப்படியார்—12

15. மார்க்சிய - லெனினிய தத்துவத்தின் அடிப்படைகள் பக்கம். 860

16. சுந்தரமூர்த்தி நாயனார்—ஏழாந்திருமுறை—51:10

17. சிவஞான போதம் சூத்திரம்—1

18. சிவஞான போதம் சூத்திரம்—8

19. சிவஞான போதம், பத்தாம் சூத்திரம், இரண்டாம் அதிகரணம் 4

20. திருக்களிற்றுப்படியார் 1

21. சிவஞானசித்தியார் - பக் - 181

22. திருவாசகம் - போற்றித் திருவகவல் — வரி 40

23. புறநானூறு—189

24. கந்தரனுபூதி—13

25. திருக்குறள்—398

26. திருக்குறள்—126

27. திருவுந்தியார்—2

28. சிவபோகசாரம் — தனிப்பாடல்

29. ஐங்குறுநூறு — கடவுள் வாழ்த்துது

30. திருக்குறள்—1 31. சிவஞான சித்தியார் — பக்கம் — 143

32. திருநாவுக்கரசு சுவாமிகள், நாலாந் திருமுறை. 81:5

33. பாரதிதாசன் கவிதைகள். முதல் தொகுதி—பா.54

34. சிவஞானசித்தியார், சுபக்கம்—239

35. அகநானூறு—கடவுள் வாழ்த்து

36. ஐங்குறுநூறு—கடவுள் வாழ்த்து

37. புறநானூறு—கடவுள் வாழ்த்து

38. திருவாசகம்-திருக்கோத்தும்பி—18

39. காஞ்சிப்புராணம்—தழுவக்குழைந்தபடலம்—13

40. திருவாசகம்—அருட்பத்து—1

41. கந்தபுராணம்—பாடல் 5

42. ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1 பக்கம் 132

43. திருநாவுக்கரசர்-மறுமாற்றத் திருத்தாண்டகம்-1

44. கார்ல்மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 2 பக்கம் 322

45. மார்க்சிய-லெனினிய தத்துவ ஞானத்தின் அடிப்படைகள்— பக்கம் 153

46. பெரியபுராணம். திருநாவுக்கரசர்—244


[4]வாழ்வும் வளமும்


உலகில் சமா தானம் நிலை பெறவே மாந்தன்
உண்மையில்போ ராடநினைக் கின்றான்': ஆனால்
கலகவிவ காரத்தில் வாழ்நா ளெல்லாம்
கழிக்கின்றான்; அந்தோ! நன் மகிழ்வைத் தேடி
அலைகின்றான்; ஆனால் பாக் கியமில் லாமை
அலைக்கின்ற துன்பம் இவை கடக்க லானான்!
நிலையான பொருளாக்கம் ஆன்ம மேன்மை
நேசித்தும் அவன்வறுமை தனில்ஆழ் கின்றான்!

இந்தஉல கத்தில் உள்ள பொருள்க ளெல்லாம்
இயற்கையிலே முறையாக வளர்ந்து உயர்ந்து
வந்து, பல மாற்றங்கள் அடையும்! ஆனால்
மனிதன் மட்டும் திறமையொடு பிறக்கின் றான்காண்!
இந்தஉல கப்பொருள்கள் யாவற் றுக்கும்
தலைமையினை ஏற்கின்ற தகுதி பெற்றான்!
அந்தமனி தன்பெருமை ஒருவ ராலும்
அளந்துவிளக் கிடஇயலா அருமைத் தாகும்!

மனிதனது ஞானம் எல்லா ருடனும் எல்லை
வரையறைகள் ஒதுக்கங்கள் யாது மின்றிப்
புனிதமொடு பகிர்ந்துகொள்ளத் தக்க தாகும்;
போந்தமனி தப்பிறவிக் குரிய செய்தி
நனிவிழிப்பாய் எப்போதும் இருப்ப தாகும்;
நாளும் அவன் இலக்கு, மேம்பா டுறுத லாகும்;
எனின் அந்தப் பொழுதில்தான் உண்மை யான
பயன்பாட்டு மனிதனென ஏற்றம் கொள்வான்!

இது மானிட வாழ்க்கையை ஜப்பானிய முறையில் அணுகி எழுதப்பெற்ற “New Concept of Man” என்னும் ஆங்கிலக் கவிதையின் தழுவலாகும்.

வாழ்க்கை உண்மையானது; பொருளுடையது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது தமிழ்நெறி. வாழ்தல் வேறு; பிழைத்தல் வேறு; ஜீவித்தல் என்பது வேறு. உழைப்பதையே பிழைப்பாகக் கொண்டு வாழ்ந்து இன்பம் காண்பவர்கள் பெரியோர்கள்; சான்றோர்கள். பலர், பிழைப்பு நடத்துவதற்காக உழைக்கிறார்கள். அதாவது ஊதியத்தை எதிர்பார்த்தே வேலை செய்கிறார்கள். அதில் ஏற்படும் கூடுதல் - குறைவுகளுக்காக வேலை செய்வதையே கூட விட்டுவிடுகின்றனர். இஃது இழிசெயல், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” என்று வள்ளுவம் கூறும் “வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி, எங்ஙனம் வாழ்வது என்பதே!” என்றார் ஆல்பரி. தெய்வத்தைப் பரவி நிற்றல் தெய்வத்திற்குப் பெருமை சேர்ப்பதற்கன்று. நாமும் இறைமைக் குணங்களையும், இறைமையின் ஆற்றல்களையும் பெற்று வாழ்ந்திடுதல் வேண்டும் என்பதற்கேயாம். அப்பொழுது மானுட வாழ்க்கையே இறைமைநலம் மிக்க வாழ்க்கையாக உருமாற்றம் பெறுகிறது. எப்பொழுது? வாழ்வாங்கு வாழும் பொழுது!

சொல்லல் எளிது. ஆனால், வாழ்தல் அருமைப்பாடுடையது. வாழ்க்கையென்பது தயக்கங்கள், மயக்கங்கள், போராட்டங்கள் ஆகியவற்றால் ஆகின்ற ஒரு தொடர் வரலாறு. இந்தத் தொடர் வரலாற்றில் நாயகனாக - நாயகியாக இருப்பவர்கள் தொடர்ந்து வாழ்க்கையை முழுமைப்படுத்தும் நோக்கத்தோடு போர்க்குணம் மிக்கவராக வாழ்க்கையை இயக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். தியாக உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்யும் பணிகளால்தான் வாழ்க்கை முழுமை பெறுகிறது; ஆன்மா முழுமை பெறுகிறது. மலர்கள் மலர்கின்றன. அர்ப்பணிப்பு உணர்வுடன் மற்றவர்களுக்கு மணம் வழங்குவதே அவற்றின் வாழ்க்கை. மணம் தந்து முடிந்தவுடன் அவற்றின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. மரங்கள் கனிகளைப் பழுக்கச் செய்கின்றன! கனிகளின் நோக்கம் மற்றவர்களை வாழ்விப்பதே. மற்றவர்களுக்கு வாழ்வு தகுதலே வாழ்க்கையின் குறிக்கோள்; முடிவு! வாழ்வாங்கு வாழ்தல் ஓர் அரிய கலை. அறிவார்ந்த சதுரப்பாடு. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப்பட்ட மாளிகையன்று; நாமே ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்முடைய உணர்வால், எண்ணத்தால், செயற்பட்டால் வாழ்க்கையைக் கட்டுமானம் செய்து கொண்டிருக்கின்றோம். தான் இருந்து வரும் இல்லத்தைத் தானே தூக்கிச் செல்லும் நத்தையினத்தைப் போல நம் வாழ்வை, நம் வாழ்வின் வெற்றி தோல்விகளை - இன்ப துன்பங்களை நாமே சுமந்து செல்லுகின்றோம். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற சங்க நூற்கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கது.

வளமான வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் ஒருங்கிணைந்த அனைத்தும் நலமுடன் இயங்குகின்ற ஒரு முழுமையான நிலையை எய்திடுதல் வேண்டும். அதாவது சிந்தனை நலம், புத்தியில் தூய்மை, மன நலம், புலன்களில் செம்மை, பொறிகளில் தூய்மை, உடல் நலத்திலும் உயிர் நலத்திலும் மிகக்குயர்ந்த மேம்பாட்டு வாழ்க்கை ஆகியன தேவை. அப்பொழுதுதான் வளமான வாழ்க்கையைக் காண முடியும். வாழ்வு முன்னேற வேண்டுமானால் உடலுக்குள்ளே அமைந்த உயிர் அல்லது ஆன்மா, பூரண வளர்ச்சி பெற வேண்டும்.

ஆன்மா, நலம் எய்துவதற்காக எடுத்துக்கொண்ட சிறந்த கருவி உடம்பு. உடல், அகநிலைக் கருவிகளும் புற நிலைப் பொறிகளும் பொருத்தப் பெற்ற ஒரு சிறந்த இயங்கு கருவி. உடல், பேணிக் காக்கப்படவேண்டிய ஒன்று. எல்லா நலத்திற்கும் உடல் நலம் அடிப்படை, அதனால்தான் திருமூலர் “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!” என்று அருளிச் செய்தார். உடம்பை வளர்த்தலாவது உடம்பின் பயன்பாட்டுத் திறனைப் பயன்படுத்துதல் மூலம் பெருக்கி வளர்த்துக் கொள்ளுதல் என்பதாகும். இன்று நம்முடைய மனிதகுலத்தின் மூளையாற்றல், உடலாற்றலில் பதினேழு விழுக்காடு கூடப் பயன்படுத்தப் பெறவில்லை என்று கூறுகின்றனர். வாழ்க்கையை ஓர் உயர் குறிக்கோளை நோக்கி மேலும் மேலும் புதிய புதிய வேலைகளை எடுத்துப் பயிற்று வித்துக் கொண்டு முன்னேறுகிற பழக்கம் அருகியே காணப்படுகிறது. மூலப் பொருள்களுக்கானாலும் சரி, மனிதனுக்கானாலும் சரி, இயல்பில் மதிப்பு குறைவு தான்! மனிதனின் ஆற்றலும் அறிவுத்திறனும் இயற்கை மூலப் பொருள்களோடு கொள்ளும் படைப்பாற்றல் மிக்க உறவின் மூலம் அப்பொருள்களுக்குப் பன்மடங்கு மதிப்பு உயர்கிறது; படைக்கின்ற மனிதனும் மதிப்பில் உயர்கின்றான். மனிதகுல வரலாற்றை உயிர்ப்புடன் இயக்கி வளர்ப்பவன் ஆற்றல் படைத்த மனிதனே என்பதை மறந்துவிடுவதற்கில்லை. இன்று நம்முடைய உடம்பாற்றலை முழுமையாகப் பயன்படுத்தாத நிலையிலேயே நாம் வாழ்கின்றோம். இன்னும் சிலர் சுவைக்கும் கவர்ச்சிக்கும் இரையாகி உடம்பையே பழுது செய்துகொண்டுள்ளனர். நோய்க்கு இரையாகி நொந்து நொந்து அழுகின்றனர். உடலுக்கு நோய் இயற்கையன்று; செயற்கையேயாம். அதாவது நோய் மனிதனின் படைப்பேயாம். நெறிமுறை பிறழ்ந்த வாழ்க்கையின் காரணமாகவே நோய் உடம்பில் இடம் பிடிக்கிறது. உடல் உழைப்புக்குத் தேவையான உணவும் ஓய்வும் கிடைத்தால், உடல் நன்றாக இயங்கும். தூய்மைக்கேடு இல்லாத காற்றும் தண்ணீரும் மானுட வாழ்க்கைக்கு இன்றியமையாதவை - நல்லுடல், நல்வாழ்க்கைக்கு இன்றியையாதவை. இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டே உலகத்தை இயக்கவேண்டியிருக்கிறது; வையகத்தில் வாழவேண்டியிருக்கிறது; திருவருளைப் பெறவேண்டி இருக்கிறது. அனைத்துக்கும் இந்த உடற்கருவியின் ஒத்துழைப்புத் தேவை. வளமான வாழ்க்கை காண, வளமான உடல்நலம் தேவை.

உடல் நலத்திற்குத் துணை செய்வது அகநிலை உணர்வுமாகும். மனம், இன்றைக்கு எல்லா மட்டங்களிலும் முதல் நிலைப்படுத்திப் பேசப்பெறுகிறது. வள்ளுவமும் “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்கிறது. “மனத்துய்மையாய் இருப்பதனால் பத்து மனிதர்களின் பலத்தை அடையக் கூடும்” என்று டென்னிசன் கூறுகிறார். மனம் மாசுறுவது எங்ஙனம்: மனத்துக்கு இயல்பாக மாசு இல்லை. சார்புகளின் காரணமாக மனம் மாசுறுகிறது. மனத்தின் சார்பை நன்றின்பால் உடையதாக்கவேண்டும்! “நன்மை செய்வதே தூய்மையாய் இருப்பது” என்பது அனுபவ வாக்கு. அது எளிதான காரியமன்று. மிகக் கடுமையாகச் செய்யவேண்டிய முயற்சி. இதனை,

“சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு”

என்று வள்ளுவம் கூறும்.

நன்று இது, தீது இது எனப் பகுத்து அறிந்து நன்றின்பால் உய்த்துச் செலுத்துகின்ற அறிவு தேவை. அறிவை எங்ஙனம் பெறுவது? அறிவு, பல திறத்தது. ஒன்று, இயற்கை நடைமுறை; வாழ்க்கையில் படிப்பினைகள் மூலம் பெறும் அறிவு. இதனைப் பட்டறிவு என்பர். “சிந்தித்து உணர்பவருக்கு நேற்றைய அனுபவம் இன்றைய ஆசிரியன்” என்பது பழமொழி. பிறிதொருவகை அறிவு, வாழ்க்கையில் நிறைந்த பட்டறிவினைப் பெற்ற ஆசிரியர்கள் எழுதிய நூல்களைக் கற்பதன்மூலம் பெறும் அறிவு. நூல்கள் வழி ஒரு கருத்து உருக்கொள்வதற்குப் பலநூறு ஆண்டுகள் பிடிக்கும் என்பதை உய்த்துணரும் பொழுதுதான் நூலின் அருமைப்பாடு தெரியும். வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தையும் நாமே பட்டறிவதற்குப் பதில் நமக்கு முந்தி வாழ்ந்தோர் பட்டஅனுபவத்தின் எல்லையில் நம்முடைய வாழ்க்கை தொடங்குகிறது. அதனால் நம்முடைய வாழ்க்கைப் பயணம் எளிதாகும். இத்தகு நூலறிவு பெறுதலுக்கும் செவிவழி அறிவு பெறுதலுக்கும் நாம் எவ்வளவு தொகை செலவழிக்கிறோமோ அதைப் போலப் பலமடங்கு திரும்பப் பயன் கிடைக்கும். இவ்வாறு பல நூல்களைக் கற்கின்ற வாய்ப்பை இயல்பிற் பெறாது போனாலும் கற்றோர் வாயிலாகக் கேட்டு அறிந்து கொள்ளும் அறிவு இன்னொரு வகை அறிவு. “கற்றிலன் ஆயினும் கேட்க!” என்பது வள்ளுவம்! இங்கனம் அறிவினைப் பெறும் வாயில்கள் பலப்பல. அறிவின் துறைகளும் பலப்பல. அறிவின் வழிச் செல்பவன் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்குவான். அறிவின்றி உணர்ச்சி வசப்பட்ட வாழ்க்கைப் போக்கு துன்பியலாக முடியும். இதனாலேயே “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றார் திருவள்ளுவர். இத்தகைய அறிவு நலன்கள் அனைத்தையும் பெறுவதற்குத் தொடர்ச்சியான முயற்சி தேவை. நல்லறிவானது எங்கே எவ்வளவு தொலைவிலிருந்தாலும் அதைத் தேடிச் சென்று அடைய வேண்டும்.

“எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்”

என்பது திருக்குறள். எனவே வளமான வாழ்க்கைக்கு அறிவே முதல்.

“அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று வள்ளுவம் கூறும். எல்லாம் - என்னென்ன? வளமான வாழ்க்கைக்குப் பதினாறு பேறுகள் வேண்டும் என்பது வாழ்வியல் கண்ட முடிவு. அந்தப் பதினாறு பேறுகள் என்னென்ன? புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அழகு, அறிவு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகியனவாம். வளமான வாழ்க்கை அமைய இப்பதினாறும் தேவை. இவை அடையவேண்டிய வரிசை முறைப்படி இங்கே முறைப்படுத்தப்படவில்லை. பயனை முதலிற் சொல்லி பயனடைவதற்குரிய சாதனங்களைப் பின்னே சொல்லும் முறையால் அமைந்துள்ளன.

புகழ்பட வாழ்தல் குறிக்கோளில் ஒன்று. புகழ், எளிதில் கிடைக்காது. இன்று விளம்பரத்தைச் சிலர், புகழ் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் வாழ்க்கையின் மூலம் பயனடைவோர் தம் உள்ளம் மகிழ்ந்து நெகிழ்ந்து கூறுதலே புகழ். பிறிதொரு வகையாகவும் புகழுக்கு அடையாளம் காணலாம். ஒருவர் சமுதாயத்திற்கு இன்றியமையாதவராக அவர் உள்ள பொழுதும் அவர் மறைந்த பொழுதும் உணரப்படும் நிலை; புகழ் வாழ்க்கையின் அளவு கோல்! வாழ்க்கை முழுமையாகப் பயன்பட்டதென்பதற்கும், சமுதாயம் பயன் கொள்ளத் தக்கவாறு அமைந்தது என்பதற்கும் அடையாளம் புகழ்பூத்த வாழ்க்கையே யாம். வளமான வாழ்க்கையின் முடிவு, புகழ்! அந்தப் புகழ்தொடர்ந்து வாழ்வியலில் நடத்தும் போராட்டங்களால் உருவாவது சாதனையால் தோன்றுவது; காலத்தை வென்று விளங்குவதன் மூலம் அடையக் கூடியதே புகழ்.

புகழ்பட வாழ்தலை உயிர்க்கு ஊதியம் என்று வள்ளுவம் போற்றும். புகழ்மிக்க வாழ்க்கையில்தான் நிலை பெற்று வாழ்கின்ற சாக்காடு வந்தமையும். புகழ் பெறுதற்குரிய வாழ்க்கையாவது எல்லாரும் போல இல்லாமல் மற்றவர்கள் எடுக்கத் தயங்குகின்ற, அவர்கள் விரும்பாத, வேறு யாரும் செய்யாத, புதிய துணிவு மிக்க முயற்சிகளை மேற்கொண்டு வரலாற்றைப் புதுக்குவதன் மூலம் அமையும். இத்தகைய புகழ்மிக்க வாழ்க்கை வளமான வாழ்க்கையின் பயன்.

புகழ்மிக்க வாழ்க்கை வாழ்தல் வேண்டுமாயின் செய்யத்தகாதன அறிந்து விட்டொழித்தல் வேண்டும்; செய்யத்தக்கன அறிந்து செய்தல் வேண்டும். மானுடத்தின் சென்றகால வரலாற்றுக்குரியவர்களாக வாழ்ந்தவர்கள் முழுமையாக வாழ்ந்துவிட வில்லை என்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன; இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதனால், மானுட வாழ்க்கையென்பது, வளமான வாழ்க்கையை நோக்கி, நிறை நலத்தை நோக்கிப் பயணம் செய்து கொண்டேயிருக்கிறது. இன்னும் முடிவடைந்துவிட வில்லை. இதுதான் வளமான வாழ்க்கை - நிறைநலம் சான்ற வாழ்க்கை என்று அறுதியிட்டுக் கூறக்கூடிய நிலை இன்னமும் உருவாகவில்லை. வாழ்க்கையின் சோதனைகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. வளமான வாழ்க்கையைக் காண, திருவள்ளுவர், அப்பரடிகள், காரல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் பலர் முயன்று வந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடத்திய சோதனைகள் முற்றாக வெற்றி பெறவில்லை. அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகளை நமக்குக் கூறியிருக்கிறார்கள். அவைகளை முதலாகக் கொண்டு நாம் வளமான வாழ்க்கையை நோக்கித் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும். நல்ல காலமாக மானுட வாழ்க்கை, தொடங்கிய காலந்தொட்டு ஒரு தொடர் கொடியோட்டம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட எல்லையை ஒருவரே சென்றடையாமல் பலர் கூடி முயற்சி செய்து அடைகின்ற விளையாட்டுக் கொடியோட்டம் என்று பெயர். அதுபோல, வரலாற்றுப் போக்கில் வாழ்ந்த முதல் மனிதன் தொடங்கி வைத்த மானுட வாழ்க்கையின் ஓட்டம் முறையாக வளர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையின் புறநிலை அமைப்பில் வரலாற்று முந்திய காலச் சுவடுகள் இல்லை; நிலவரம் இல்லை. நாம் வாழ்கிற யுகம் கம்ப்யூட்டர் யுகம். நெடுந்தொலைக்குப் பயணம் செய்து வந்திருக்கிறோம். இது முக்காலும் உண்மை. மானுட வாழ்க்கையின் புறநிலைப்படிகளில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் புறச்சார்பில் இவ்வளவு வளர்ந்து வந்துள்ள மானுடம், உடன்சார உள்ள வாழ்க்கையையும், ஆன்ம வாழ்க்கையும் வளர்த்துக் கொண்டு வந்திருப்பின் மானுட வாழ்க்கை வெற்றி பெற்றிருக்கும்; முழுமை யடைந்திருக்கும்; நிறைநலம் அடைந்திருக்கும். ஆனால் அந்த ஒன்றுதான் நடந்துவிடவில்லை. மானுடம் கையாளும் கருவிகள் மாறியிருக்கின்றன. கருவிகளைக் கையாளும் மானுடத்தின் சிந்தனையில், அகநிலை நாகரிகத்தில் போதிய வளர்ச்சி இல்லை; போதிய மாற்றமில்லை. அதன் விளைவு, இன்று உலகு போர்ப் பயத்தால் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மானுடத்தின் அகநிலை வாழ்வு வெற்றி பெறுமானால் எளிதில் வளமான வாழ்க்கையைக் கண்டுவிட முடியும்.

இதற்குச் சென்ற கால வரலாற்றையும் சென்றகால வரலாற்றின் நாயகர்களாக இருந்தவர்கள் தமது பட்டறிவினால் எழுதித் தந்த இலக்கியங்களையும் நாம் கற்றறிதல் வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வீழ்ந்த இடத்தில் நாம் எழுந்து நிற்க முடியும். அவர்கள் நின்ற இடத்திலிருந்து நம்முடைய பயணத்தைத் தொடங்கமுடியும். இதற்கு நூல்களைக் கற்றல் தேவை. வளமான வாழ்க்கைக்குத் தடையாக இருக்கின்ற குற்றங்குறைகள் நீங்குவதற்கு நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்பது கடமை. அடுத்து நம்மைச் சுற்றி, இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்கை உலகத்தையும் அவற்றின் நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்கிக் கற்றல் வேண்டும். இதனையே ‘கண்டதைப் படித்தல்’ என்பர் நம்முடைய ஆன்றோர். இயற்கையைக் கூர்ந்து கற்றறிகின்ற அறிவியலும், நன்னூல்களைக் கற்றறிகின்ற நூலறிவும், நாமே நம்முடைய வாழ்க்கையை அன்றாடம் உய்ந்தறிந்து உணர்கின்ற பட்டறிவும் வாழ்க்கையை வளமாக்கத் துணை செய்யும். வாழ்க்கையை வளமாக்குவதற்குரிய நல்ல நூல்களும் திருவள்ளுவர்ர இயற்றிய திருக்குறளும், ஜேம்ஸ் ஆலன் இயற்றிய வாழ்க்கை நூல்களும் குறிப்பிடத்தக்கன.

வாழ்க்கை வளமானதாக அமைய வலிமை வேண்டும். வலிமை இருவகைத்து. ஒன்று உடல் வலிமை, பிறிதொன்று மனவலிமை. உடல் வலிமையாவது எத்தகைய கடுமையான முயற்சிக்கும் பயன் படக்கூடிய நிலையில் உடல் அமைந்திருத்தல். உடலுக்கு வலிமை, அதை முற்றாகப் பயன்படுத்துவதன் மூலமே வந்து சேர்கிறது. பயன்படுத்தப்பெறாத உடலுறுப்புகள் வலிமை இழக்கும். உடலில் அறிவுக் கருவிகள் (புலன்கள்) ஆனாலும் சரி, செயற் கருவிகள் (பொறிகள்) ஆனாலும் சரி, அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமே அவை வலிமை பெறுகின்றன. ஆதலால் நம்முடைய உடலுறுப்புகள் ஒவ்வொன்றையும் முறையாகச் செயற்பாட்டில் இயக்கி வலிமை சேர்க்க வேண்டும். சிந்திக்கப் பழகினால் மூளை சிறப்படையும். சிந்திப்பது எளிதான காரியமா? கண்ணுக்குத் தெரிகின்றவைகளையே கண்டு தேர்ந்து தெளிந்து வாழ்க்கை நடத்துவதில் பயிற்சி பெறாதவர்கள் கட்புலனுக்கு வராமல் மறைவாகக் கிடக்கும் பொருள்களை - பொருள்களின் ஆற்றல்களை எங்ஙனம் காண்பர்? அவற்றைக் காண்பதற்குச் செய்யும் முயற்சியே சிந்தனை. சிந்தனைக்குத் தடை முளைச் சோம்பல். பழைய நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், சுற்றுச் சூழ்நிலைக்கு அஞ்சுதல் ஆகியன. இவை சிந்தனைக்குப் பகைப்புலங்கள். இவைகளைக் கடந்தும் மனிதன் சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் வளமான வாழ்க்கை வந்தமையும்.

அடுத்து உடலை இயக்கும் தலைமை மனத்தினிடம் இருக்கிறது. மனம் இயல்பாக மிகவும் கெட்டது. அது எளிதில் எல்லாச் செய்திகளையும் சென்று பற்றும்; ஆசைப்படும்; உணர்ச்சிவசப்படும். மனத்தை, புத்தியைக் கொண்டும் சிந்தனையைக் கொண்டும் அடக்கி ஆளவேண்டும். மனம், புத்தி சிந்தனைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமானால் அது மிகவும் நன்றாகப் பயன்படும். அதனுடைய அளவற்ற ஆற்றல் எண்ணற்ற சாதனைகளைச் செய்யும். மனம், கட்டுப்பாட்டின் கீழ் வர, அதற்கு நல்ல உணர்வுகளை உணவாகத் தரவேண்டும். அதற்கு ஓயாது நல்ல பணிகளைத் தந்துகொண்டே இருக்கவேண்டும். சோம்பிக் கிடக்கின்ற உடலில் உள்ள சோம்பல், மனத்தையும் பற்றுகிறது. சோம்பல் நன்மை செய்யாதது மட்டுமின்றித் தீமையையும் செய்யும். ஆதலால், வாழ்க்கை வளமாக அமைய மனதுக்கு வலிமை சேர்க்கவேண்டும்.

வாழ்க்கை, வெற்றிகள் பொருந்தியதாக அமைய வேண்டும். வாழ்க்கை ஒரு தொடர்ந்த போர்க்களம். மனிதரோடு மனிதர் பொருதும் போர்க்களத்தை நாம் குறிப்பிடவில்லை. ஆனாலும் அது விலக்கப்பட்டதாகக் கருதக் கூடாது. முதல் நிலைப்போர் தன்னுடைய பொறி புலன்களோடு ஒரு நிறை நலத்தை நோக்கிப் பயணம் செய்யும் ஆன்மா நடத்தும் போராட்டம்.

மெய்யுளே விளக்கை ஏற்றி
வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி
உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே.”

என்று இப்போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார் அப்பரடிகள்.

பொறிகளின்மீது தனி ஆணை செலுத்தி ஆளும் தன்மையுடையவர்கள் முதலில் தங்கள் நிலையில் வெற்றி பெறுகிறார்கள். தன்னளவில் வெற்றி பொருந்திய ஒரு ஆன்மா, தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் போரிடுகிறது. அந்தப் போரின் நோக்கம் சமுதாயத் தீமைகளாகிய அறியாமையை நீக்குதல், வறுமையை நீக்குதல், பிணியை நீக்குதல், பிரிவினையை நீக்குதல், பகையை நீக்குதல் என்பதேயாம். இது நேரடியாகத் தீமையை எதிர்க்கும் போராட்டமன்று. நன்மையைப் படைப்பதன் மூலம் தீமையை அகற்றுதலே இப்போரின் நோக்கம். அதுதான் சிறந்த போர்த் தந்திரம். அதாவது, அறிவை வளர்த்தல், வளம்பல படைத்தல், உடல் நலம் பேணல், அன்பினால் இணைந்து வாழ்தல், ஒப்பரவு நெறி பேணல், ஒருமைப்பாடுடைய சமுதாயம் காணல் ஆகிய நல்லனவற்றைப் படைப்பதில் வெற்றி பெற்றாகவேண்டும். இந்த வெற்றிகள் மண்ணகத்தை விண்ணகமாக்கும். வாழ்க்கை வளமுடன் அமைய இத்தகு வெற்றிகளைப் பெற்றுக் குவித்திடுதல் வேண்டும். இயல்பாக இந்த வெற்றிகளைப் பெற முடியாதபோது தடையாக இருக்கிற தீயசக்திகளோடும் நாம் போராட வேண்டியிருப்பின் அந்தப் போரினை நிகழ்த்தவும் தயங்கக்கூடாது. தீயசக்திகளோடு சமாதானம் செய்து கொள்வது அறமுமன்று; பொறையுடைமையுமன்று கண்ணோட்டமுமன்று. அது கடமை தவறிய மாபாதகச் செயல் என்பது அறிக. இத்தகைய செருக்களங்களில் நமது வழிபடும் கடவுள்களே போரினை நிகழ்த்தித் தீயோரை ஒடுக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால், தீமைகள் மாற்றப்பட்டனவே தவிர, தீயோர் அழிக்கப்படவில்லை; நம்மிடம் பொருதுவோர் அழிக்கப்படுதலை விட அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்து பயன்படுமாறு செய்தலே சிறந்த வெற்றி. இத்தகு வெற்றிகளே வாழ்க்கை வளமாக அமையத் துணை செய்யும்.

மானுடத்தின் வரலாறு தொடர்ந்து நிகழ்வது. நேற்று மானுடம் வாழ்ந்தது உண்மை. அதுபோலவே நாளை மானுடம் வாழப் போவதும் மறுக்க முடியாத உண்மை. இந்த நீண்ட நெடிய மானுடத்தின் வரலாற்றில் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள், சென்ற கால வரலாற்றின் ஈட்டங்களை இழக்காமல் பாதுகாக்க வேண்டும்; இழப்புகளை ஈடுசெய்ய வேண்டும். தம் வாழ்நாட்கால அளவுக்கு வளர்த்துக் கொண்டு வந்து தந்துள்ள வளத்தை-நாகரிகத்தைப் பாதுகாக்கவேண்டும். அதோடு காலத்தினால் தேவைப்படும் புதியனவற்றைச் சேர்த்து வளப்படுத்தவேண்டும். அடுத்த தலைமுறையைத் தோற்றுவிப்பதன் மூலம் மானுடத்தின் வரலாற்றுக்குத் தொடர்ச்சி தரவேண்டும். இதற்குத் தேவை நன்மக்கள். மனையறம் வாழ்வோர் அனைவருக்கும் மக்கட் பேறு இயற்கை. ஆனால், நன்மக்கட்பேறு, மனை நலத்தில் சிறந்தோர்க்கே உரியது.

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேறு”

என்பது திருக்குறள்,

நன்மக்கட்பேறு கிடைத்தாலும் அதனை முழுமை நலம் சான்றதாக வளர்த்துப் புகழ் கொள்ளுதல் வேண்டும். இதனை மக்களின் மேல் வைத்துத் திருவள்ளுவர்,

“மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்”

என்றார். தலைமுறை வரலாற்று ஆய்வுக்குக், காலத்தால் முந்தியோர் எடுத்துக்கொள்ளப் பெறுவர். குடும்ப வளர்ச்சிக்கு அக்குடும்பத்தின் கடைசித் தோன்றல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவர். முன்னோரை வைத்துக் கொள்ளும் பெருமை, தான் ஈட்டாதது. தன்னுடைய அடுத்த தலைமுறையைக் கொண்டாடும் பெருமை தானே ஈட்டியது என்பதறிக. ஆதலால், வாழ்க்கை வளமாக அமைய நன் மக்கள் தேவை.

வாழ்க்கை வளமாக அமையப் பொருள் தேவை. இது வரையில் சொல்லி வந்தவை அனைத்தையும் அடையவும், இனிச் சொல்ல இருக்கும் பேறுகளை அடையவும், துணை செய்வது பொருளே. வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் இருவகையினது. ஒன்று நேரிடையாக நுகரும் பொருள். பிறிதொன்று அணிகலனாகப் பயன்படுவது; சேம வைப்பில் வைத்திருந்து இயற்புழி எல்லாம் எடுத்துப் பயன்படுத்தக் கூடியது கிய பொன், நாணயம் முதலியன. உடம்போடு கூடிய வாழ்க்கைக்கு நுகர் பொருள் இன்றியையாதது. முறையான பல்வகைச் சத்தும் உடைய நல்லுணவு நோயற்ற வாழ்க்கைக்குத் தேவை. அது மட்டுமன்று; உடல் உழைப்பின் திறனைக் கூட்டுவதற்கும் தேவை. சுவைக்காக உண்பது ஒரோ வழி தான் ஏற்புடையது. உடல் நலத்திற்கும் உடல் உழைப்புத் திறனைப் பெருக்கிக் கொள்வதற்கும் உரியவாறு தேர்ந்து உண்பதே நல்லுணவு. உணவிற் சிறந்தவை காய்கனிகளும் பருப்பு வகைகளுமாம். இவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய வாழ்க்கை வளமானதாகும்.

இக்கருத்தினைக் கொண்டுதான் திருக்குறள் ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று கூறியது. இங்கு கூறிய பொருள்கள் நுகர் பொருள்களேயாம் என்பதை அறிக. ஒரோவழி பொன்; நாணயம் என்று கொண்டாலும் பிழையில்லை. பொருள் முட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை புதிய ஊக்கத்தினையும் திறன்களையும் தரும். பொருள் வளம் பெறாத வறுமை வாழ்க்கை அறிவை இழக்கச் செய்வதுடன் நற்குணங்களையும் இழக்கச் செய்யும். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக இருந்தாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறவர்கள் எண்ணிக்கையும் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கிறது.

அதனால், நம்முடைய அறிவியல் திறனும் உழைக்கும் மக்கள் திறனும் வீணாகிப் போகின்றன. நாட்டின் ஒட்டு மொத்தமான பொருளியல் நிலை ஒவ்வொருவரையும் பாதிக்கும் - வாழ்க்கை வளமாக அமைய, நாடு வளமாக அமையவேண்டும். பொருள்வளம் நிறைந்த வாழ்க்கையே வளம் நிறைந்த வாழ்க்கை. அதனால் ‘செய்க பொருளை’ என்ற திருக்குறளின் ஆணையை ஏற்று, ஊக்கம் உடையோராக ஆக்கத்திறனைத் தேடி அடைவோமாக. பொருள்வரும் வாயில்களைக் கண்டு, இயற்றி, ஈட்டி, காத்து, காத்த பொருளை முறையாக வகுத்துச் செலவிட்டு வாழ்வில் வளம் காண்போமாக.

நம்முடைய நாட்டு வாழ்க்கையில் ஊழ்த்தத்துவத்தைப் பற்றிய நம்பிக்கை நிலை பெற்றிருக்கிறது. ஊழ்த்தத்துவ நம்பிக்கையில் நன்மையும் விளைகிறது, தீமையும் விளைகிறது. ஒரே தத்துவத்தின் அடிப்படையில் நன்மையும் தீமையும் எப்படி விளைய முடியும்? இதற்குத் தத்துவம் காரணமல்ல. தத்துவத்தை நாம் அணுகும் முறையே காரணம். ஊழ், உயிரின் சிந்தனை, செயல்களின் வழிப்பட்ட வழக்கங்களின் வழி வருவது. உயிர் மேற்கொண்டொழுகிய வழக்கங்களின் சுவடுகள் உயிரிடத்தில் தங்கி, வாழ்நிலை தோறும் முகிழ்த்து வெளிப்படுவது ஊழ். ஊழ் மாற்றத் திற்குரியதேயாம். அறிவியல் ஆற்றலில் புத்துணர்வில் புதிய உழைப்பில் வளர்ச்சியடைந்து மாற்றங்களைப் பெற்று வரும் ஆன்மாவின் முன்னே நேற்றையப் பழக்கவழிப்பட்ட ஊழ் நிற்றல் அரிது. ஊழ் உருக்கொண்ட காலத்திலும் இன்று வாழும் காலம் வளர்ச்சித் தன்மையுடையது. நாள்தோறும் தேக்க நிலையில் கிடக்காமல் சிந்தனையில் செயலில் சிறந்து வளர்ந்துவரும் ஆன்மா ஊழினை வெற்றி கொள்ளும். நாள் தோறும் நாம் முயன்று செயற்படுவதன் மூலம் நல்லுழைப் படைக்க வேண்டும். புதிய முயற்சிகளின் மூலம் சென்ற கால இழவூழையும் கூட, ஆகூழாக மாற்ற வேண்டும். இத்தகு நம்பிக்கையும் முயற்சியுமே வளம் சிறந்த வாழ்க்கைக்குத் துணை செய்ய முடியும்.

இங்ஙனமின்றி ஊழ் மாற்ற இயலாதது; நாம் இப்படியேதான் இந்தத் துன்பத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற மாறா விதிகளில் நம்பிக்கையுடையவராக வாழ்தல், ஊழ்த்தத்துவத்தால் விளையும் தீமையாகும். இடைக்காலத்தில் இந்தத் தீமை நம்முடைய சமுதாயத்தினரில் பெரும்பான்மையோரைப் பற்றியிருக்கிறது. அதனாலேயே நம்முடைய சமுதாயம் எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கிடக்கிறது. இத்தகைய மூட நம்பிக்கைகள் விளைவித்ததே வறுமைக்கோடு, தீண்டாமை முதலிய சாபக்கேடுகள். ஆதலால், சீரோடும் சிறப்போடும் கூடிய வளமான வாழ்வு காண, நல்லனவே எண்ணுவோம். உயிர்த்துடிப்புள்ள செயல்களை மேற்கொள்வோம். ஊழை நல்லூழாக்குவோம். அவ்வழி வளமான வாழ்வு அமையும்.

நுகர்தல், வாழ்க்கையின் இன்றியமையாச் செயற்பாடுகளில் ஒன்று. உடம்பு, நுகர்வுக்குரிய பொறிகளோடும் புலன்களோடும் அமைந்திருக்கிறது. உணர்ச்சி வசப்படாமல் ஆசைகளின் வழிப்பட்டு அலைமோதாமல் நுகர்ந்து வாழ்தல் என்பது ஓர் இனிய கலை; வாழ்க்கைக் கலை.

“மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்”

என்ற குறள் நுகர்தலின் செவ்விய திறனைப் புலப்படுத்துகிறது. ஐம்பொறிகளும் சுவைத்தற்குரிய பொறிகளேயாம். மனமாறுபாடின்றி, சுவைக்கப்படும் பொருளுக்குச் சேதமில்லாமல், நெறிமுறை பிறழாத நிலையில் சுவைத்தல் அறநெறி சார்ந்த நுகர்தலாகும். முறையான நுகர்வு உடல் நலம் தரும்; மனநலம் சேர்க்கும்; மகிழ்வைத் தரும்; அமைதியை நல்கும்; இன்பம் வந்தமையச் செய்யும். நுகர்வுக்குரிய பொறிகளை முறையாகப் பேணுதலும் நுகரத் தக்கனவற்றை நுகர்தலும் வளமான வாழ்க்கைக்குத் துணை செய்யும். நுகருமாறு நுகர்ந்து வளமான வாழ்வைக் காண்போமாக! அழகு, நல்வாழ்க்கை வாழ்வோர் போற்றுபவைகளுள் தலையாயது. அழகு, ஐம்பொறிகளுக்கும் விருந்தாக அமைவது; குளுமையூட்டுவது; மகிழ்ச்சியைத் தருவது. “கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு” என்று நக்கீரர் பாராட்டுவார். அழகை ஆராதனை செய்யாதவர் யார்? இயற்கையே அழகு. இயற்கையில் அழகைக் கண்டு அழகுக்கு அழகாக நிற்கும் இறைவனை வணங்கிய ஞானிகள் உண்டு.

“பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி; அப்
பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்”

என்றார் தாயுமானவர். உடம்பை அழகாகப் பேணி வைத்துக் கொள்ளவேண்டும். உழைக்கும் உடம்பு இயல்பாகவே அழகு பெறும். அளவான உழைப்பும் மிதமான நுகர்வும் கொள்வோர் உடல், என்றும் அழகாக இருக்கும். நோயின்மை அழகுக்கு அரண். சிரித்து மகிழ்ந்து வாழ்தலும் அழகுக்குத் துணை செய்யும். விருப்பு, வெறுப்புகளிலிருந்தும் காய்தல் உவத்தலிலிருந்தும் விடுபட்டு நடுநிலை நின்று ஒழுகுவார் அழகு பெறுவர். உடல் அழகுக்குச் சித்தமும் அழகாக இருக்கவேண்டும். அதாவது சிந்திக்கும் உறுப்பு நல்ல சிந்தனைகளைச் சிந்திக்க வேண்டும். “சித்தம் அழகியார்” என்று திருவாசகம் ஓதும். அழகு ஆயிரம் காரியத்தைச் சாதிக்கும். ஆதலால், அழகைப் பேணுவோமாக! பூச்சுக்களால் - ஒப்பனைகளால் பெறுவது இயற்கை அழகன்று. இயற்கையழகே அழகு. அழகு, அகநிலையிலும் புறநிலையிலும் வளமான வாழ்க்கையைப் படைக்கும். எண்ணிய எண்ணியாங்கு எய்தத் துணை செய்யும். வீட்டை அழகு படுத்துங்கள்! ஊரை அழகு படுத்துங்கள்! அழகான தோற்றத்தினை அடையுங்கள்! சிந்தையில் அழகு போற்றுங்கள்! வளமான வாழ்வு அமையும்.

வளமான வாழ்க்கைக்குப் பெருமை வேண்டும். பெருமையாவது மற்றவர்கள் புகழ்ந்து போற்றத்தக்க பெருந்தன்மையுடையோராக வாழ்தல். பெருந்தன்மையாவது சிறியன சிந்தியாமை, சின்னத்தனமான காரியங்கள் செய்யாமை, மற்றவர்க்குத் தீங்கு செய்யாமை, புறங்கூறாமை, மற்றவர் பால் குற்றங்காணுதலைத் தொழிலாகக் கொள்ளாமை. இன்னோரன்ன இயல்புகளைக் கொண்ட வாழ்க்கை பெருமை நிறைந்த வாழ்க்கையாகும். அதோடு செயற்கரிய செயல்களைச் செய்யவேண்டும். வாழ்க்கையில் பலர் இயல்பாயமைந்த, எளிதில் செய்யக்கூடிய காரியங்களைக் கூடச் செய்யாமல் அல்லற்படுவர். தாம் அல்லற்படுவதோடு மட்டுமின்றித் தம்மைச் சார்ந்தோரையும் அல்லற்படுத்துவர். தமது வாழ்க்கைக்குரிய உணவைக்கூட உழைத்துப் பெறமுடியாமல் பிச்சை ஏற்றல், களவு செய்தல் முதலிய இழிசெயல்களைச் செய்வர். அதனால், மேலும் மேலும் துன்புறுவர். சிலர் தாம் வாழ்தலோடும் தம்மைச் சார்ந்தோரை வாழ்வித்தலோடு மன்றி எல்லாருக்கும் இன்பம் சேர்க்கும் உயர்குறிக்கோளைக் கொண்டு உழைப்பர்; பெருமைக்குரிய காரியங்களைச் செய்வர். காலத்தை வென்று விளங்கும் சாதனைகளைச் செய்வர். இத்தகையோராலேயே வையகம் புகழ் பெறுகிறது. வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளைச் செய்வோராயினும் எளிமையும் அடக்கமும் பூண்பர்.

இத்தகு பெருமையுடையோராக வாழ்தல் வளமான வாழ்க்கைக்குத் துணை செய்யும். பெருமை, நாமே முயன்று பெறக்கூடியது. பிறர் தரக்கூடிய தன்று; கடையில் வாங்கக் கூடிய சரக்குமன்று. நம்மைச் சுற்றியிருக்கும் சின்னத் தனங்களை மறப்போமாக! யார் மாட்டும் அன்பு செய்வோமாக! எண்ணற்ற சாதிகளாலும் மதங்களாலும் பிரிந்து கிடக்கும் மக்களை ஒருமைப்பாடுடையவராக இணைப்பதை உயர் குறிக்கோளாகக் கொள்வோமாக! இந்திய மக்களை வறுமையிலிருந்து மீட்டு ஒரு புதிய பொன்னுலகைப் படைப்பதை உயர் நோக்கமாகக் கொள்வோமாக! சமநிலைச் சமுதாயம் காண்பதே இந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய பணி! மனிதகுல ஒருமைப்பாட்டைக் காண்பதே இந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய பணி! எனவே, கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்த்து, அமைதியும் சமாதானமும் உடைய பொது உலகைப் படைப்போமாக!

இளமை நலம் போற்றுதல் என்பது பொதுவாக மாந்தர்க்கு இயல்பான குணம். சிலருக்கு வயதைக் கேட்டாலே சினம் பிறக்கும். உடலில் தலையில் வயதாகி விட்டதற்குரிய அடையாளங்கள் தென்பட்டாலும் வயதாகி விட்டது என்று யாராவது கூறினாலும் அவர்களுக்குப் பொல்லாத கோபம் வருகிறது. இதனால், என்ன புரிகிறது! இளமையைப் போற்ற அனைவரும் விரும்புகின்றனர் என்பதே! ஆனால் இளமையென்பது உடலில் மட்டும் இருந்தால் போதாது. சிலர் ஆண்டில் இளையோராக இருக்கின்றனர். ஆனால், உணர்விலும் ஊக்கத்திலும் படுகிழமாகிச் செயலற்று ஏங்கித் திரிகின்றனர். இஃதெப்படி இளமையாகும்? உடலில் இளமை; உணர்வில் இளமை ஊக்கத்தில் இளமை காட்ட வேண்டும். இளமையைப் போற்றுதல் வாழ்க்கைக்குச் சிறப்பைத் தரும். அதனாலன்றோ, இளமையையும் அழகையும் போற்றும் வகையில் நம் ஆன்றோர்கள் உடற்பயிற்சி முறைகளைக் கண்டார்கள். உடற்குப் போதிய பயிற்சி கொடுத்து எஃகு போலாக்கி இளமை நலம் பேணுக! துன்பங்களை வாழ்க்கையைக் கடக்கும் படிகளாக நினைத்து, எய்த்துக் களைத்துப் போகாமல், வெற்றியில் நம்பிக்கை வைத்து, உணர்வில் இளமை காத்து, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்க! இன்றைய தோல்வி நாளைய வெற்றிக்கு அடிக்கல் என்ற நம்பிக்கையுடன், இளமை நலமிக்க ஊக்கத்துடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருமின்! நில்லன்மின் !

வளமான வாழ்க்கைக்குத் துணிவு தேவை. உடற்சார்பு மிகுதியாக உடையவர்கள் எளிதில் துணிவு கொள்ள மாட்டார்கள்; சலனப்படுவார்கள். உயிர்ச்சார்புடையவர்கள் - ஆன்ம வலிமையுடையவர்கள் எளிதில் துணிவு பெறுவார்கள்.

“நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி விடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்க வெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடி இணையே குறுகி னோமே”

என்ற அப்பரடிகளின் திருப்பாட்டு துணிவிற் பிறந்த தூய சிந்தனை நிறைந்த பாட்டு.

துணிவுக்குப் பகை, இன்ப விழைவு, வெற்றிப் போதை; துன்ப அச்சம். ஆனால் வாழ்க்கை இன்பக் குறிக்கோளுடையதே. வெற்றிகளைக் குறிக்கோளாய் உடையதே. வெற்றியும் இன்பமும் எளிதில் கிடைப்பதில்லை. பல துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து சென்ற பிறகுதான் இன்பம் எய்த முடியும், துணிவு என்பது வெற்றி தோல்வி-இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் குறிக்கோள் நோக்கத்தோடு பணிகளை இயற்றுவதற்குப் பயன்படக்கூடிய உள்ளம் உடைமையாகும். அர்ப்பணிப்பு உணர்வோடு உயிரையே இழக்க நேரிடும் என்று தெரிந்தாலும், கொண்ட குறிக்கோள் கருதி, உழைத்தல் உள்ளத் துணிவின்பாற்பட்டது. துணிவு, தெளிவான முடிவுகளை எடுக்கத் துணை செய்யும்; செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும். துணிவைத் துணையாகப் பெற்றவர்கள் சாதனைகள் செய்ய முடியும்; பெருமையுடன் வாழ முடியும். துணிவுடையவர்களே காலத்தை வென்று விளங்குகிறவர்கள். துணிவே துணை. வளமான வாழ்க்கை அமையத் துணிவைத் துணையாகக் கொண்டு வளமான வாழ்க்கை காண்போம்!

வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது நோயின்மை. அதாவது பிணியற்ற வாழ்க்கை. நோயென்பது இயற்கையன்று செயற்கை! அதாவது மனிதர்களே வர வழைத்துக் கொள்வது நோய், இயற்கையோடிசைந்து வாழ்ந்தால் நோய் வராது. நமது உடல் எளிதில் நோய் அடைய முடியாத அற்புதப்படைப்பு; ஒரோ வழி நோய் வந்தாலும் தனக்குத்தானே நோய் நீக்கிக் கொள்ளவும், புதுக்கிக் கொள்ளவும் கூடிய ஆற்றலுடையது அமைப்புடையது. ஆயினும் தொடர்ந்து உடலியற்கைக்கு மாறாக அதனை எதிர்த்துத் தகாத வழியில் வாழ்க்கை நடத்துபவர்களே பிணியை வர வேற்றுக் கொள்கிறார்கள். நற்காற்றும் கதிரொளியும் நறுநீரும் உடலுக்கு இன்றியமையாத தேவை. இவற்றை முறையாகத் தூய்மையானதாக உடலுக்குக் கிடைக்கும்படி செய்தால் நோயின்றிப் பல ஆண்டுகள் வாழலாம். ஆதலால், காற்றிலும் கதிரொளியிலும் தோயத் தக்கவாறு உலாவுதல் வேண்டும். உடல் உழைப்புக்குரியது. உழைக்காத உடல் நோய்க்கு இரையாதல் தவிர்க்க முடியாதது. ஆதலால், உடம்பு வருந்தத்தக்க அளவுக்கு அதற்கு உழைப்பு கொடுத்தாக வேண்டும். வீடு - அலுவலகம் அலுவலகம் - வீடு என்றிருப்பவர்கள் நோயின்றி வாழ்தல் எங்ஙனம்? ஒரு நாளைக்குக் குறைந்த அளவு எட்டு கிலோ மீட்டர் தூரமாவது நடக்கவேண்டும். அல்லது வீட்டுத் தோட்டத்தில் தங்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய காய்கறித் தோட்டம் அமைத்தாவது வேலை செய்ய வேண்டும். தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து, முறையாகக் குறித்த காலத்தில் உடலுக்கு நலம் பயக்கும் உணவை உண்ணவேண்டும். உடலுக்கு, இயற்கை அன்னை தரும் உணவு நல்லது. உணவில் அரிசியைக் குறைத்து, காய், கனி, கீரை, பருப்பு வகைகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய உணவை, உடலின் தேவை கருதி உண்ண வேண்டும். உடலின் தேவையாவது உயிர் வாழ்தலுக்குரிய அடிப்படைத் தேவை. உழைப்புக்கேற்ற உணவு உண்ண வேண்டும். உடலுக்குத் தீங்கு பயக்கும் குடித்தல், புகைத்தல் போன்றவைகளை அறவே விலக்க வேண்டும். உடல் நிலையைப் பாதிக்கக் கூடிய உணர்ச்சிகளைக் கொள்ளுதல் கூடாது. விருப்புவெறுப்பு, சினம், பதற்ற நிலையடைதல் ஆகியன வாழ்க்கைக்குத் துணை செய்யாதவை. காரிய சாதனைக்கும் கூட ஆகாதவை. நோயின்றி வாழ்தல் வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உடலை அலட்சியப்படுத்தக்கூடாது. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்ற திருமந்திரத்தை அறிக. உடலை வளர்த்து உயிரை வளர்த்திடுக! காற்றும் கதிரொளியும் எளிதில் புகுந்து வெளியேறும் இடத்தில் இருந்து பணி செய்திடுக. நோயின்மைக்கும் இளமைக்கும் முதுகுத் தண்டின் நலம் இன்றியமையாதது. ஆதலால் எப்பொழுதும் நேர் நிற்றல், நிமிர்ந்து நிற்றல், நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணி செய்தல் ஆகிய நிலைகளை மேற்கொள்க!

நாள்தோறும் உடலுக்கு உழைப்பினைத் தருக! நன்றாகத் தூங்கக் கற்றுக் கொள்க! நல்ல தூக்கம், உடலியக்கத்தைப் புதுப்பிப்பது; புத்துணர்வுக்கும் புத்துழைப்புக்கும் உடலை ஆயத்தப்படுத்துவது. நல்ல எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் உள்ளத்தை நிரப்பி, நோயற்ற வாழ்வுக்கு வழி காண்க: கூடி வாழப் பிறந்தார்களிடம் நல்லிணக்கத்தையும் உறவையும் பேணுக! வளமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வே முதல் திடமான உடல்கொண்டு வளமான வாழ்க்கை வாழ்வோம்!

வாழ்க்கை ஓர் அருமையான கொடை. இந்த வாழ்க்கை முழுவதும் முறையாக வாழ்ந்து முடிப்பது பயனுடையதாக அமையும். புகழ் நிறைந்த வாழ்க்கை, வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாக வேண்டும். வாழ்நாள் எவ்வளவு என்பதில் இன்னும் வரையறுக்கப்பட்ட முடிவு காணப்படவில்லை. இன்று உலகில் சிலர் 137 வயது வரையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சோவியத் நாட்டு மக்களின் வாழ்நாள் வளர்ந்து கொண்டே போகிறது. இந்தியாவில் 1935-37இல் சராசரி வயது 17 ஆகத்தான் இருந்தது. இப்பொழுது 58 ஆக உயர்ந்திருக்கிறது. இனிமேலும் உயரும். ஆக, நீண்ட நாட்கள் வாழ ஆசைப்படுதல் வேண்டும். அதற்கேற்றாற்போல வாழும் நெறிமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நோயற்ற நிலையில், வாழ்க்கை முடியும் காலம் வரையில் திடமான உடலுடன் உழைத்து, உண்ணும் முயற்சியுடையராக வாழ்தல் வேண்டும். இதற்கு, உடலுக்கு உழைப்பு, தரமான நல்லுணவு, துய்மையான தண்ணீர், துய்மையான காற்று ஆகியன தேவை. இவற்றுடன் நல்லெண்ணம், நற்சிந்தனை, அன்பினைக் கடமையாகக் கொண்ட வாழ்க்கை தேவை.

நாள்தோறும் நல்ல வண்ணம் ஓய்வெடுத்துக் கொள்ளும் பழக்கமும் தூங்கும் பழக்கமும் தேவை. உணவு மிகினும் குறையினும் நோய் செய்தல் போலவே, தூக்கமும் மிகினும் குறையினும் நோய் செய்யும். எந்தச் சூழ்நிலையிலும் அமைதியும் சாந்தமும் தழுவிய அணுகுமுறை இதயத்தைப் பாதிக்காமல் காப்பாற்றும். வாழ்நாளைச் செயற்கை முறையில் தற்கொலை மூலமோ, கொலை மூலமோ குறைப்பது பாபம். அதுபோலவே வாழ்நாளை அற்பமாகக் கருதுவதும், “நாம் வாழ்ந்து என்ன ஆகப் போகிறது?” என்று எண்ணுவதும் பிழை. அதே போழ்து ஒன்றை நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மிக அதிகமான நாட்கள் வாழ்ந்தால் மட்டும் போதாது. வாழும் நாள் அளவும், பயன்பாடுடையதாக அமைய வேண்டும். பயன்பாடிலாத ஊன் பொதி சுமக்கும் வாழ்க்கை, ஆண்டுகள் பலவாய் அமைந்து என்ன பயன்? ஆக, வளமான வாழ்க்கை பெற “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்ற திருமுறை வாக்குப்படி வாழ்க்கையை மதித்து வாழ்வாங்கு வாழ்ந்திடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முன் கூறிய பதினாறு பேறுகளும் அமைவதற்கு மனித வாழ்வில் சால்பு அடிப்படையாக இருக்கவேண்டும். அதாவது சான்றாண்மை நிறைந்த வாழ்க்கை வேண்டும். சான்றாண்மையாவது, பல நற்குணங்களும் நிறைந்து, அவற்றை வாழ்க்கையின் துறைதோறும் ஆளுமையுடன் செயற்படுத்துதல். இத்தகு சான்றாண்மை வளமான வாழ்க்கைக்குச் சான்றாக அமையும். இத்தகைய சான்றாண்மைக்கு அடித்தளமாக அமைவது அன்பு.

“அன்பின் வழியது உயிர்நிலை” என்றும் “அன்போடியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என் போடியைந்த தொடர்பு” என்றும் வள்ளுவம் கூறும் ஒருவர் உயிருடையவரா என்பதை அறிவதற்கு, அவர் தம் நடமாட்டங்கள் அளவு கோலல்ல. அவர்தம் வாழ்க்கையில் அன்பு நிறைந்த செயல்கள் காணப்படின் அவர் உயிருடையவர் என்று எடுத்துக் கொள்ளப் பெறுவார். உயிருக்கும் உடம்புக்கும் உறவு ஏற்பட்டதனுடைய நோக்கம் அன்பாக இருப்பதுதான். கடவுள், மனிதனுக்கு வழங்கிய ஒரே அரும் பொருள் அன்பே யாம். அன்பு, பொறிகளைக் கடந்தது; புலன்களைக் கடந்தது. பல சமயங்களில் அன்பே மொழியாகி விடுவதுண்டு. ஊமையும் அன்பு மொழி பேச இயலும். செவிடரும் அன்பு மொழி கேட்க இயலும். அன்பு விரிந்தது. அன்பு, உலகம் தழுவியது. அன்புக்கு எல்லைகள் இல்லை; பிரிவினைகள் இல்லை; உயர்ந்தாரில்லை; தாழ்ந்தாரில்லை; வேண்டியவர் இல்லை; வேண்டாதார் இல்லை. அன்பு மிக உயர்ந்தது என்பதைக் காட்டவே திருமூலர் அன்பே சிவம் என்றார். ஆற்றல் பெரிது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். அன்பு இருக்கும் இடத்தில் உறவு இருக்கும். வாழ்வு இருக்கும். வலிமையானவற்றிலெல்லாம் வலிமையானது அன்பேயாம். அன்பு, வற்றக் கூடியதன்று. தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருப்பது அன்பு, பிறை நிலா வளர்வது போல நல்லவர் அன்பு வளரும்.

“ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்;
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ”

என்று புறநானூறு பேசும்.

வாழ்க்கையில் போற்ற வேண்டிய தலையாய செல்வம் அன்பு. உலக மொழிகள் அனைத்தும், உலக மதங்கள் அனைத்தும், ஒருசேர மாறுபாடின்றி உரத்த குரலில் கூறுவது ‘அன்பு செய்’ என்பதேயாம்! அன்பின் மூலம் மண்ணகத்தில் விண்ணகத்தையே காண முடியும். பல்வேறு வகைப்பட்ட மனிதகுலத்தை இணைத்தற்குரிய ஒரே கருவி அன்புதான்! அன்பு, மனிதரை ஒழுக்கமுடையவராக ஆக்கும். அன்பிற்கு இணை அன்பே அன்பிற்கு விலை அன்பே இத்தகைய உயர்ந்த அன்பை நிறையப் பெறுவதன் மூலம் வளமான வாழ்க்கையைப் பெறலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரதமராயிருந்த லார்டு பாமர்க்ஸ்டன் என்பவர், “கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்கிற நேரத்தில், உங்கள் சுற்றுப் புறத்திலுள்ள அழுக்குகளையெல்லாம் அப்புறப்படுத்துங்கள்” என்று கூறினார். கடவுளின் படைப்புகளுக்கு நன்மை செய்யாமல், இவ்வுலகத்தை, இயக்கும் கடவுளின் குறிக்கோளுக்கு அரணாக இல்லாமல் அவரை நோக்கிப் பிரார்த்த்னை செய்வதன் அறியாமையை இந்த உரை புலப்படுத்துகிறது. நமது திருமூலரும்,

“நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயில் படமாடுங் கோயில் பகவற்கஃதாமே”

என்று கூறியதையும் எண்ணுக. ஆதலால், உள்ளத்தில் அன்பை நிறைத்திடுக! யார் மாட்டும் அன்பு காட்டுக! அன்பெனும் புனலால் வளமான வாழ்க்கையைப் படைத்திடுக!

திருவள்ளுவர், வாழும் நெறிகளைப் பெரும்பாலும் உடன்பாட்டு முறையிலேயே கூறியுள்ளார். மிகச் சிலவற்றையே எதிர்மறையாகக் கூறி விளக்கியுள்ளார். அவற்றுள் நாணுடைமை என்பதும் ஒன்று. நாணுடைமை என்பது பழிக்கு அஞ்சுதல். புகழுக்கு எதிர்மறை பழி.

“புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்
பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்”

என்பது புறநானூறு. நாணுதலாவது பிறர் பழிக்கத்தக்க செயல்களைச் செய்ய வெட்கப்படுதல். உயிர்த் தொகுதியிலிருந்து மனித இனத்தைப் பிரித்துக் காட்டுவது நாணுடைமை என்ற ஒழுக்கமேயாம். நாணமுடையார் தம்பழி மட்டும் நாணுதல் செய்யார்; பிறர் பழிக்கும் நாணுதல் செய்வார். நாணம் மேற்கொண்டதன் காரணமாகச் செய்யத் தகாதவற்றைச் செய்யாமையும், செய்யத் தக்கனவற்றைச் செய்தலுமாகிய உணர்வுகள் மேலோங்குகின்றன. அழுக்காறு, அவா, வெகுளி முதலியனவும் தன் முனைப்பு, புறம் பேசுதல், பழிக்குப் பழி வாங்குதல் ஆகியனவும் நாணத்தக்கன. இத்தகைய தீய - குணங்களிலிருந்தும், அவ்வழிப்பட்ட தீய செயல்களிலிருந்தும் விடுதலை பெறுதல் வாழ்க்கை என்ற கழனிக்குக் களை எடுத்தது போலாம். நாணுடைமை வளமான வாழ்க்கைக்குத் துணை செய்வது.

அன்பு, செயற்பாட்டுத் தன்மையுடையது. அன்பினால் விளையும் செயற்பாடுகள் ஈதல், ஒப்புரவறிதல் முதலியன. ஈதல் முதல்நிலை, ஒப்புரவறிதல் ஈதலின் முதிர்ச்சி நிலை. வான்மழை வையகத்தை வளப்படுத்துவதுபோல, ஒப்புரவறிதல் மனித குலத்தை தழைத்து வளரச் செய்யும். ஒப்புரவறிதல் போலப் பிறிதொரு கோட்பாட்டை வானவர் உலகத்திலும் காண்பதரிது; இந்த மண்ணிலும் காண்பதரிது. தன்னோடு சார்ந்து வாழ்வாரின் நலமறிந்து அவர்தம் இயல்புகளோடு ஒத்து நின்று ஒழுகுபவரே வாழும் இயல்பினர். ஊருணி நிறைந்த தண்ணீர் போலவும், பழுத்த பயன்மரம் போலவும், நோய் நீக்கும் மருந்து மரம் போலவும் மற்றவர்க்குப் பயன்படுதல் ஒப்புரவறிதலின் சிறந்த செயற்பாடு. மற்றவர்க்கு உளம் நிறைந்த உணர்வில் கைம்மாறு கருதாது உதவி செய்தவனே உண்மையில் வாழ்கின்றான். பிறர்க்கு உதவி செய்யும் நாளே பிறந்த நாளினும் பெருவாழ்வுக்குரிய நாள். ஒப்புரவறிதலில் இன்றைய கூட்டுறவு வாழ்க்கை அமைந்து கிடக்கிறது. ஒப்புரவறிதல் மூலம் ஒருவரின் ஆன்மா வளர்கிறது: உலகம் தழிஇய ஒட்பம் பெறுகிறது. வளமான வாழ்க்கைப் படைப்பிற்கு ஒப்புரவுதான் மிகச் சிறந்த கொள்கை வாழ்க்கை வளமாக அமைய வேண்டுமென்றால் ஒப்புரவு நெறி நின்று ஒழுகுதல் வேண்டும்.

அடுத்து, வளமான வாழ்க்கைக்கு அமையவேண்டிய இன்றியமையாப் பண்பு கண்ணோட்டம். கண்ணோட்டமாவது, தன்னோடு தொடர்புடையார் மாட்டு அன்பு நிகழ்வதை-அவ்வழி நன்மை செயற்படுவதை மறுக்க முடியாதது. இந்த உலகம் அழிந்து போகாமல் இதுவரையில் இயங்கிக் கொண்டிருப்பதற்கே காரணமாக இருப்பது கண்ணோட்டம். கண்ணோட்டமுடையவர்கள் இந்த உலக இயக்கத்திற்கு உயிர்ப்பு நிலையாக இருந்து இயக்குகிறார்கள். கண்ணோட்ட மில்லாதவர்கள் நிலத்திற்கு வீணே சுமையென வாழ்கிறார்கள். பொருளுடைய பாடல் பண்ணோடு பாடப்படும் பொழுது கேட்பதற்கு இன்பமாக இருக்கிறது; மகிழ்ச்சியைத் தருகிறது. அது போலவே கண்ணோட்டம் செய்யக்கூடியவர் களுடைய கண்கள் காண்பதற்கு மகிழ்வைத் தரும், மன நிறைவைத் தரும். கண்ணிற்கு அழகு, கண்ணோட்டமுடையதாக அமைதல் கண்ணோட்டம் செய்வதன் காரணமாகக் காரியங்கள் கெட்டுப் போகாமல் விழிப்பு நிலையிலும் செய்தல் வேண்டும். குற்றங்களைப் பொறுத்து, அன்புகாட்டிக் கண்ணோட்டமுடையவ ராயிருத்தலே வாழ்க்கையின் சிறப்பு. நன்றாக அறிந்தவர்கள்-பழகியவர்கள் நஞ்சையே தந்தாலும் வெறுப்புக் காட்டாது, அந்த நஞ்சினை மலர்ந்த முகத்துடன் வாங்கி அருந்துபவர்கள் வாழ்வர். அங்ஙனம் வாழ்பவர்களே வாழ்பவர்கள். தமக்குத் தீமை செய்வார் மாட்டும் கண்ணோட்டமுடைய வராயிருத்தல் சாவை வெல்லும் மருந்து, அங்ஙனம் வாழ்தலே வரலாற்று ஏடுகளால் புகழத் தக்க நாகரிகம்.

“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்,”

என்றார் திருவள்ளுவர்.

கண்ணோட்டத்தை இரக்கம் என்றும் கூறலாம். இரக்கம், நீதி இவற்றைச் சார்ந்த வாழ்க்கையில் அறநெறி அனைத்தும் வந்து அமையும். கண்ணோட்டம் செய்வதற்குப் பெரிய மனம் வேண்டும். பெரிய மனம் மிகச் சிறந்த அணிகலனாகும். தண்டிப்பதற்கு வேண்டிய ஆற்றலை விட, கண்ணோட்டம் செய்வதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். இந்த உலகம் கண்ணோட்டத்தால் இயங்குகிறது. ஆதலால், வளமான வாழ்க்கை அமைய, கண்ணோட்டத்தைக் கைக்கொள்ளுவோமாக!

அடுத்து, வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாத உயர் பண்பு வாய்மையாகும். வாய்மை என்ற சொல்லுக்கு உரிய ஒழுக்கமாகத் தமிழ் வழக்குக் கற்பிப்பது, அயல் வழக்கிலிருந்து மாறுபட்டது. உள்ளதை உள்ளவாறே சொல்லுதல் என்பது அயல் வழக்கு. தமிழ் வழக்கோ எனின்,

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்”

என்பதாகும். இஃது உண்மை, வாய்மை, மெய்ம்மை என்றும் சொல்லப் பெறுதல் உண்டு. இவை முறையே உள்ளம், வாய், உடம்பு ஆகியவற்றோடு தொடர்புடையனவாகச் சொல்லப்பெறும். ஒருவர் அகத்தூய்மை உடையார் என்பதை அவருடைய வாய்மை நிறைந்த ஒழுக்கத்தினாலேயே அறிந்து கொள்ள முடியும், வாய்மை, அகநிலை ஆக்கத்திற்கும் உகந்தது; சமுதாயம் தழுவிய புறத்திண்ண வாழ்க்கைக்கும் அரண் செய்ய வல்லது. அதனால், வாய்மையைவிட வேறொன்றும் உயர்ந்ததில்லை என்று, உயர்ந்த மொழியில் வள்ளுவம் உரைக்கிறது.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற”

என்பது திருவள்ளுவம். வடநூல் வழக்கு, வாய்மையை - உண்மையைச் சத்தியம் என்று கூறும். இன்று கடவுளை - மதத்தை மறுப்பது நாத்திகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஆர்தர் விஞ்ச் என்ற அறிஞன், “உண்மையை மறுத்தல் ஒன்றே நாத்திகம்” என்று கூறுகிறான். எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் உண்மை பொதுவானது; பொருந்துவது. வாய்மை நெறி போற்றி ஒழுகியவர்களின் புகழ், என்றும் நின்று விளங்கும். உலகில் பெற்ற எல்லாவற்றையும் இழந்து விட்டாலும் கூட, நம்மிடத்தில் வாய்மை ஒன்று மட்டும் இருந்தால் போதும்-அதைக்கொண்டு வாழத் தொடங்கலாம்; சாதனைகள் செய்யலாம். வாய்மையென்பது சொல் மட்டுமன்று, வாய்மையே வாழ்வாக மாறவேண்டும். வாய்மையும் அன்பும் வலிமை சான்ற கருவிகள் அல்லது பண்புகள். இவ்விரண்டும் ஒருங்கே அமைந்து விடுமானால் வாழ்க்கையில் வெற்றி உறுதி; வளம் உறுதி.

உண்மை பேசுவது என்பது கூர்ந்து ஆய்வு செய்தால் மிக எளிதான காரியம். பொய் பேசுவதற்கு வேண்டிய திறமை உண்மைக்கு அவசியமில்லை. ஓர் உண்மை அதனளவிலேயே விளங்கும். ஆனால், ஒரு பொய்யோ அடுக்கடுக்காக எட்டுப் பொய்கள் சொன்னாலும் விளங்கவும் செய்யாது; நம்பிக்கையும் தராது. எல்லாவற்றையும் விட உண்மை பேசுவதில் உள்ள ஒரு நன்மை, பேசிய உண்மையை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், உண்மையைச் சார்ந்து பின் எதிர்விளைவுகள் வருவதில்லை. ஆதலால், வாய்மை மேற்கொண்டொழுகுதல் எளிது! எளிது!

மூட நம்பிக்கைகளை எல்லாம் அகற்ற வல்லது உண்மையேயாம். நாம் பெற்றுள்ள சுதந்தரத்தை நிலையாக அனுபவிக்க வேண்டுமானால் நம்நாட்டு மக்களிடத்தில் உண்மை பேசுதல், மற்றவர்களுக்கு உண்மையாக இருத்தல் ஆகிய நற்பண்புகள் இருந்தால்தான் முடியும். சுதந்தரத்தின் பயனும் உண்டு. இல்லையெனில், அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்பது என்றும் மாறாதது; எப்பொழுதும் மாறாதது. உண்மைக்கு அதிக ஆற்றல் உண்டு. அண்ணல் காந்தியடிகள், “சத்தியமே கடவுள்” என்றார். நாம் சத்தியத்தில் நின்று ஒழுகுகின்றோம் என்பதற்கு எடுத்துக்காட்டு, சொல்லும் செயலும் ஒன்று போலிருத்தலாகும். சொல்லிற்கும் செயலிற்கும் இடையே வேறுபடுதல் மிகவும் தீயது என்று திருக்குறள் கூறும்.

“கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு”

என்பது வள்ளுவம். ஆதலால், அகமும் புறமும் ஒத்த நிலையில் ஒழுகியும் பேசியும் வளமான வாழ்க்கையைக் காண்போமாக!

இங்ஙனம் வளர்ந்த வாழ்க்கை, சால்பு நிறைந்த வாழ்க்கை. இத்தகைய சால்பு நிறைந்த வாழ்க்கையே உலக வரலாற்றுக்கு நிலைக்களன். இம்மாபெரும் உலகம் நிலைத்து நின்று இயங்குவதற்குரிய ஆற்றல்.

வாழ்க்கையின் நோக்கம் அல்லது பயன் இன்ப அன்பினை எய்துதல் என்பர். இதனையே ‘முத்தி’ என்றும் ‘வீடுபேறு’ என்றும் கூறுவர். விடுதலை பெறுதல் வீடுபேறு. ஆன்மா, கட்டுக்களிலிருந்து விடுதலை பெறுவதோடன்றி நிறைநலம் பெற்று இன்ப அன்பில் திளைத்தலே வீடுபேறு. இன்பம் என்பதும் அன்பு என்பதும் தனிப்பொருட் சிறப்புடைய சொற்கள். இறைவனை “இன்பன்காண் துன்பங்கள் இல்லாதான்காண்” என்று திருமுறை போற்றும், ‘இன்பன்’ என்று சொன்னால் போதாதா? ‘துன்பங்கள் இல்லாதான்’ என்று மீண்டும் கூறியது ஏன்? இன்று நம்முடைய வாழ்க்கையில் இன்பம் என்று கருதித் துய்த்துக் கொண்டிருப்பவைகளில் துன்பக் கலப்பும் இருக்கிறது. அது மட்டுமன்று. என்றும் இன்பமாக இருத்தலுமில்லை; எல்லாருக்கும் இன்பமாக இருத்தலுமில்லை. இறையின்பமாவது யாண்டும் இன்பம்; எப்பொழுதும் இன்பம்; எல்லாருக்கும் இன்பம். துன்பத் தொடர்பேயில்லாத இன்பம். இன்ப நுகர்வு நிகழ அன்பு தேவை. ஞானப் பெருவாழ்வில் கடவுள் இன்பப் பொருளாகவும், ஆன்மா இன்பத்தை நுகரும் அன்புப் பொருளாகவும் விளங்குகின்றன. ஆன்மாவினிடத்தில் விளங்கும் தூய அன்பைத் துய்த்தலில் இறைவனுக்கு இன்பம். இன்ப அன்பினை ஆன்மா அடைவதற்கு அறியாமையே தடை. அறியாமை என்பதற்கு, ஒன்றும் தெரியாமை என்பது பொருளன்று. தத்துவ உலகில் அறியாமை அதாவது நன்மையைத் தீமையாகவும், தீமையை நன்மையாகவும் அறிதல் என்பதாகும். இந்த அறியாமை நீங்குதல் வேண்டும். நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் பகுத்து அறிகின்ற அறிவுத்திட்பம் தேவை. தீமையை விட்டொழித்து விலகுவதற்கும் தீமையை எதிர்ப்பதற்கும் துணிவு தேவை. நன்மையைச் சாதிக்கும் திறன் வேண்டும். ஈண்டு நன்மை என்ப்து எங்கும் எல்லோருக்கும் எப்பொழுதும் நன்மையாக இருப்பது. “நன்றுடையான் தீயதில்லான்” என்ற திருமுறை வாக்கை எண்ணி இன்புறுக ஆன்மா, இன்ப அன்பினை அடையப் பத்திமை துணை செய்யும். ஆனால், பக்தி முதிர்ந்து ஆன்மா ஞானத்தை அடைதல் வேண்டும். ‘ஞானத்தாலன்றி வீடுபேறு இல்லை’ என்பது மெய்கண்டார் வாக்கு. ஞானம் என்பது உயர்வற உயர்ந்த அறிவு; அறியாமைக் கலப்பில்லாத அறிவு; மயக்கங்கள் கடந்த அறிவு. சிந்தையுள் தெளிவதே தெளிவினுட் சிவமாக இறையாகத் தேர்ந்து தெளிவதே ஞானம். இத்தகு ஞானப் பெருவாழ்வே வளம் நிறைந்த வாழ்வு. இந்த அளப்பரும் ஞானமுடைய வளம் பொருந்திய வாழ்வை மண்ணில் காண்போம்!

வளமான வாழ்வு இன்றியமையாதது, ஒவ்வொருவரும் வளமான வாழ்வு வாழவேண்டும். மக்கட் சமுதாயம் முழுதும் வளமாக வாழும் சூழ்நிலை உருவானால்தான் தனிமனித குடும்ப வாழ்க்கைகள் வளமாக அமையமுடியும். மழை பெய்து மண் குளிர்வதுபோல், மண் குளிர்ந்து செடிகள் தழைப்பது போல், சமுதாயம் தழைத்து வளர்ந்தால்தான் தனி மனிதர் வாழ்வு வளமாக அமைய முடியும். மக்கட் சமுதாயம் வளமுடன் அமைய, நாடு நாடா வளமுடையதாக அமைய வேண்டும். வளமான வாழ்க்கை அமைய நாட்டை வளப்படுத்துவோம்! மக்கட் சமுதாயத்திற்கு நலம் சேர்ப்போம்! வையகம் உண்ண உண்போம்! வையகம் உடுத்த உடுப்போம்! வாழ்வித்து வாழ்வோம்! இதுவே நியதி அறம்! ஒழுக்கம்! வளமான வாழ்க்கை!

முற்றும்

  1. திருச்சி அகில இந்திய வானொலியில் 27-4-1986 இரவு 9.30க்கு ஒலிபரப்பானது.
  2. *திருச்சி, அகில இந்திய வானொலியில் 10-3-85இல் ஒலிபரப்பானது.
  3. *தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை வல்லுநர் குழுவிற்கு 22-11-1980-இல் அளித்த அறிக்கை.
  4. *கோவை அகிய இந்திய வானொலியில் 14-1-1986-இல் ஒலிப்பரப்பானது.