குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/உய்யும் நெறி

21
உய்யும் நெறி

மனித உலகு தொடங்கிய காலந்தொட்டு ஓயாது ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது. போர் ஒன்றல்ல பலப்பல. ஆனாலும் போருக்குரிய அடிப்படை ஒன்றேயாம். இருளுக்கும் ஒளிக்குமிடையே போர். அறியாமைக்கும் அறிவுக்குமிடையே போர். ஆணவத்திற்கும் அடக்கத்திற்குமிடையே போர். துன்பத்திற்கும் இன்பத்திற்குமிடையே போர். பிறப்புக்கும் இறப்புக்குமிடையே போர். இந்தப் போர்கள் ஒவ்வொரு தனிமனிதனிடத்திலேயும் நாள்தோறும் - இல்லை, நாழிகை தோறும் நடந்துகொண்டேயிருக்கின்றன. அமரர்-அசுரர் சண்டை களங்களில் மட்டுமல்ல, நம்முடைய நெஞ்சக் களத்திலேயும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரில் வெற்றிபெற விழிப்புணர்வு தேவை; உழைப்பார்வம் தேவை. ஓயாது தொழிற்படும்இயல்பு தேவை. இச்சைகளுக்கு எளிதில் ஆளாகக் கூடாது. மயக்கம் மதியைக் கெடுக்கும். பொறிகளின் வலிமை புன்தொழிலை வளர்க்கும். புலன்களின் தூய்மை புண்ணியத்தைச் சேர்க்கும். ஏறி ஆடுவது, கழைக்கூத்து ஆனாலும், காசில் குறிக்கோள் இருப்பதைப் போல எத்தொழில் செய்தாலும் இறைவனிடத்தில் ஒன்றிய சிந்தனை தேவை. நமது பகைமை எளிதான ஒன்றல்ல. அம்மம்ம! செழு ஞாயிறுங்கூட உலகில் முற்றாக இருளை யகற்ற முடியவில்லை. கோடானுகோடி நூல்களும் கூட அறியாமையை அகற்றுவதில் வெற்றி பெற்றதில்லை. எண்ணிக்கையில் பலவாகிய திருக்கோயில்களும் ஆணவத்திற்குச் சாவுமணி அடிப்பதில் வெற்றிபெற்ற பாடில்லை.

உயிர், இருளை எதிர்த்துப் போராடுவதை, என்று தொடங்கியதோ தெரியாது. உயிரின் படைக் கலங்கள் வளர்ந்துள்ளன என்பது உண்மை. ஆனாலும் போரில் வெற்றி கிட்டியபாடில்லை. அறிந்ததைவிட அறியாததல்லவா அதிகமாக இருக்கிறது! முனைப்பல்லவா முந்துகிறது! தன்னலப் பேய் துறவியையே துரத்துகிறதே! அந்தோ! இன்றைய துறவும் மண்ணிலும், பொன்னிலும் எடு பிடியிலும் மமதைச் செருக்கிலும் படிந்து மாசுற்றிருப்பதை அறியாதார் யார்? ஆம்! ஞாலம் முழுதும் இருளகற்றி ஒளிப்பரப்பப் பல நூறாயிரம் கைகள் ஓயாது உழைக்கின்றன! வண்ணவிளக்குகள் சொலிக்கின்றன! ஒரே ஒரு நொடி, ஏதோ நிகழ்கிறது! இருள் சூழ்ந்து விடுகிறது! கண்களால் பார்க்க இயலவில்லை! கால்களால் நடமாட முடியவில்லை! சிந்தனை சிதறி ஓடுகிறது! அச்சம் கால் கொள்ளுகிறது! இது இன்றைய அனுபவம். ஆம்! இருள் வலிமையுடையது. அறியாமை ஆற்றலுடையது. இருளொடு போராடி வெற்றிபெற ஒளி மட்டும் போதாது. நாமே ஒளிமயமாக மாறவேண்டும். அறியாமை, அடர்த்து மோத வல்லது. வளர்ந்து வரும் அறிவையெல்லாம் எடுத்து விழுங்க வல்லது. அதனாலன்றோ, “அறிதோறறியாமை” என்றார் வள்ளுவர். இன்றும், நம்முடைய அறிவின் ஆற்றலைவிட அறியாமையின் தொகுதியே விஞ்சி நிற்கிறது. கற்றற்கு ஒன்றுமில்லை என்று எண்ணும் மனிதன் அல்லது சமூகம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் மரணத்தின் வாயிலில் புகுந்து விட்டதாகவே கருத வேண்டும்.

‘வளர்ந்த மனிதரையும், இருள் அனைத்து மயக்குகிறது; அறியாமை அச்சுறுத்துகிறது’ என்பதனை நம் திருஞானசம்பந்தர் எடுத்துக் கூறும் முறை வியந்து பாராட்டுதலுக்குரியது. எம்பெருமான் மன்பதை உலகிற்குத் தீங்கு செய்த கடக்களிற்றை அடக்கி ஒடுக்கி அதனுடைய தோலையுரித்து அணிந்து கொள்கிறான். இச் செயல் நிகழும் பொழுது அப்பனுடனிருந்த அவனது அருளாற்றலாகிய - பரஞானமேயாகிய அம்மை அஞ்சி, அப்பனை அணைத்து அவனுள் ஒடுங்கியதாகக் கூறுகிறார். ஏன்? இந்தப் பாடலுக்குச் சொற்களால் பொருள் காண்பது பயனற்றது. இஃதொரு தத்துவப்பிழிவு. இல்லை, வாழ்வியல் படிப்பினை! அருளே ஆற்றலாகவுடைய, முழு ஞானமே திருவுடலாகவுடைய உமையே அஞ்சுகிறாள் என்பது அன்னையின் அச்சத்தை உணர்த்த வந்த இடமன்று. நம்மை, உடன் பிறந்தே கொல்லும் வியாதியெனப் பற்றி அழிக்கும் ஆணவத்தின் கொடுமையை உணர்த்த வந்தது. இருள்மலப் பிடிப்பில், ஆணவச் செருக்கில் சிக்குண்ட மனிதன் தேறுதல் அரிது. அவன் அறியாமையையே அறிவெனப் போற்றுவான். மதம் பிடித்த யானை, பாகனையும் மீறிப் பல திசைகளிலும் ஓடித்திரிவதைப் போல அவனும் அலைந்து திரிவான். அந்தப் பச்சை ஆணவத்தின் தோலை யுரித்து, பக்திப் புனலில் நனைத்துப் பதப்படுத்தித் தொண்டு எனும் தூய வெய்யிலில் காயப்போட்டு வாழ்ந்தாலே வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

இருள் கொடியது. அறியாமை, பாவம். மயங்குதல் மதியைக் கெடுக்கும். அடங்காமை ஆரிருள் உய்க்கும். புலனில் அழுக்கு புண்ணியத்தைக் கெடுக்கும். ஊனின் பெருக்கம் உயிரின் ஆக்கத்தைக் கெடுக்கும் என்று தெரிந்து தெளிதலே வாழ்க்கையின் தொடக்கம். எந்த நொடியிலும் வழுக்கி வீழாமல் அறியாமையோடு பொருதும் போர்க் குணம் மாறாமல் தாழ்வெனும் தன்மையோடு தவம் பல இயற்றித் திருத்தொண்டு செய்து வாழுதலே வாழ்வாங்கு வாழும் நெறி. மனித உயிர்க்கு மாண்பினைச் சேர்க்கும் நெறி. அச்சத்தினின்று அகல அரனிடத்து ஒடுங்கிய அம்மையே போலச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்து ஒன்றுதலே உய்யும் நெறி.

சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே!

- திருஞானசம்பந்தர்