குர்ஆன்/ஒன்று கூட்டுதல்
< குர்ஆன்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
- வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
- வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே, எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை, அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான், அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர் எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.
- தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான், இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
- அதற்கு(க் காரணம்); நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள், அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்.
- நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காவுமே தான்.
- மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை, எனினும், நிச்சியமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
- அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும், மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது) மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
- எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.
- இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு, அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள், அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர், அன்றியும் அ(வ்வாறு குடியேறிய)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள், மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
- அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
- (நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் "நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம், அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்" என்று கூறுகின்றனர், ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான்.
- அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள், மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள், அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறுமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.
- நிச்சயமாக, அவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது, (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்து கொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை!
- கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள், அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை, (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்; மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.
- இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்குரிய பலனை அனுபவித்தனர், அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
- (இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது, (அவன்) மனிதனை நோக்கி, "நீ (இறைவனை) நிராகரித்து விடு" என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் "நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன், (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என்றான்.
- அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.
- ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
- அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள், ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான், அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.
- நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள், சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.
- (நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
- அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
- அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
- அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.