குற்றால வளம்/அழுக்காறாமை
"அழுக்காறாமை" என்பது பொறாமையின்மை எனப் பொருள்படும். அழுக்காறு பிறன் ஆக்கம் கண்டு பொறாதிருத்தல். அழுக்காறு அழுக்கறுத்தல் என்னும் இரண்டு சொற்களும் ஒரு பொருளனவே. இவ் அழுக்காறாமை, அதாவது பொறாமையின்மை மக்களாகப் பிறந்தார் இன்றியமையாது கொள்ள வேண்டுவது. இதுபற்றி "அழுக்காறாமை" என்னும் பெயரோடு தமிழ்ப் பேரற நூலாகிய வள்ளுவர் குறளில் ஒரு அதிகாரம் மிளிர்கின்றது.
ஒழுக்க நெறியாக அழுக்காறாமையைக் குறிக்கின்றார் வள்ளுவனார். பொறாமை கொள்ளும் ஒருவன் ஒழுக்கங் காத்தவனாகான் என்பது அப்பெரியார் கருத்து. “ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன்நெஞ்சத் தழுக்காறிலாத இயல்பு" என்பது குறள். மேலும் "அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா வியன்ற தறம்" என்றபடி அழுக்காறாதிய நான்கும் நீங்கிய செயலே அறச் செயல்.
ஒருவன் அழுக்காறு கொள்வானானால் அவன் ஆற்றும் அறம் அறமாகாது. வள்ளுவரின் மருவ வேண்டிய இப் பொன்னுரைகளை மக்கள் ஒருவி விட்டார். இந்நாள் அழுக்காறு கொள்ளா மக்கள் அருமை! அருமை!!
கல்வியிற் பெரிய ஒருவனைக் கண்டு அதில் குறைந்தோன் அழுக்காறு கொள்கின்றான், செல்வத்திற் சிறந்தவனைக் கண்டு அதிற் குறைந்தோன் அழுக்காறு கொள்கின்றான். செல்வாக்குப் பெற்றவனைக் கண்டு அது பெறாதோன் அழுக்காறடைகின்றான். வனப்புடையானைக் கண்டு அஃதிலாதோன் அழுக்காறெய்துகின்றான். ஒரு தொழில் வல்லவனைக் கண்டு மற்றொரு தொழிலாளி அழுக்காறடை கின்றன். ஒரு வியாபாரியைக் கண்டு பிறி தோர் வியாபாரி அழுக்காறடைகின்றான். இங்ஙனமே உலகில் எல்லா மக்களும் தங்கள் உள்ளத்தை அழுக்காற்றின் நிலைக்களனாக்கிக் கொண்டிருக்கின்றனர். அறிஞருள்ளும் பலர் அழுக்காற்றை விட்டாரில்லர்; ஒருவன் ஆக்கங் கண்டால் பொறுக்கின்றாரில்லர் ; ஒருவன் மேலோங்கி வருவானனால் அவனை மேலும் உயர்த்த வருபவரைக் காணவில்லை; அவனைத் தள்ளித் தான் ஏறிக்கொள்ளவே விரும்புகின்றனர். பொது மக்கட்கு ஊழியம் புரிவதாக வெளிவரும் மக்களிடை அழுக்காறில்லையோ? அவர்களிற் பலர் பெரிதும் அழுக்காறுடையாராக விருக்கின்றனர். ஒரு இயக்கத்தில் சேர்ந்தவருள் ஒருவர் பெயர் விளக்கமாகிவிடக் கூடாதென்று மற்றவர் எண்ணுகின்றார். இங்ஙனமே எல்லோரும் கருதுகின்றார். அழுக்காறு தன் முழு ஆட்சியையும் இந்நாள் யாண்டும் செலுத்தி வருகிறது. அதற் கடிமைபட்டுவிட் டார் மக்கள். அழுக்காறு கடந்தவரென்று
மதிக்கப்படும் சிலரும் அவர்களிடத்து அணுகிப் பார்க்குங்கால் அதனை நிறைய உடையவர்களாகவே காண்கின்றனர். அம்மம்ம! என்னே அழுக்காறு செய்யுங் கொடுமை!
அழுக்காறடைவோர் முன்னேறுதல் அருமை. அவர் பிறவிப் பயனையடைய மாட்டார். அதனாற்றான் அழுக்காறு கேட்டைத் தருவது என்றருளினர் வள்ளுவர் பெருமான். அழுக்காறு, பலப்பல தீமைகளை நல்கும்; அறிவை யழித்துவிடும்; திறமையைத் தேய்த்து விடும்; வாய்மையை மடித்துவிடும்; அறத்தை அகற்றிவிடும்; பொருளைப் போக்கிவிடும்; இன்பத்தை எரித்துவிடும்; வீட்டை விலக்கிவிடும்; இதுபற்றித் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் கூறிய ஆணித்தரமான குறள்கள் வருமாறு:-
"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும்' "
"அவ்வித் தழுக்காறுடையானைச் செய்ய வள் தவ்வையைக் காட்டி விடும்"
"கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப் பதுஉ முண்பது உ மின்றிக் கெடும்"
"அழுக்காறுடையார்க் கதுசாலும் ஒன் னார் வழுக்கியுங் கேடீன் பது”
"அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணாதழுக்கறுப் பான்"
இக் குறள்களைக் காட்டினும் வேறு என்ன கூறுதல் வேண்டும்? இதற்கு மேல் என்ன தான் கூறமுடியும்? அந்தோ! இத்துணைக் கேட்டை நல்கும் அழுக்காற்றை ஏன் செய்து மக்கள் அழிகின்றனர்! "அழுக்காற்றைச் செய்து பெரியாராயினாருமில்லை; அதனைச் செய்யாது பெருமை குறைந்தாருமில்லை" என்னும் பொருள்படக் கூறும், "அழுக்கற் றகன்றாருமில்லை யஃதிலார் பெருக்கத்திற்றீர்ந்தாருமில்” என்னும் குறளை யுணர்ந்தவருமா அழுக்காறு செய்தழிதல் வேண்டும்? படிப்பு வேறு: செயல் வேறாகத்தானே இருக்கிறது. கற்றபடி யொழுக எல்லோரும் முந்தின் உலகில் மறங்குறைந்து தேய்ந்து விடுமன்றோ? கல்வி கல்லாரைக் காட்டினும் கற்றவர் எந்தத் தீயவற்றையும் விட்டவராகக் காணவில்லை. புத்தகங்களில் படிக்கின்றனர். ஆனால் செய்கையிற் சிறிதும் இல்லை.
"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்துவிடும்"
என்ற குறளைப் படித்தோரில் அழுக்காற்றை விட்டவர் எத்துணைபேர்? மற்றவரைக் காட்டினும் கற்றாரே அழுக்காற்றை மிகுதியுங் கொண்டவராக விருக்கின்றனர். கல்வி கல்லாரிற் கற்றும் அறிவில்லார் கடையரன்றோ? எதுவும் செய்கைக்கு வந்தாலன்றிப் பயனேது? செய்கையில்லாது எல்லாவற்றையும் அறிந்துகொண்ட ஒருவனுக்கும் குங்குமஞ் சுமந்த கழுதைக்கும் வேற்றுமையுளதோ? அவனுக்கும் பொருள்காக்கும் பேய்க்கும்
வேறுபாடேது ? கழுதை குங்கும மூட்டைகளைச் சுமந்து செல்கிறது! அவ்வுயர்ந்த பொருளின் தன்மையை அது அறிகின்றதோ? பேய் பொருளைக் காக்கின்றது; அதன் பயனை அது அடைய முடியுமோ? மனிதன் பல நூல்களை அறிந்து கொண்டிருக்கிறான். அதன்படி யொழுகாவிட்டால் அவன் பயின்றதால் ஆம்பயனென் ? கற்றபடி யொழுகுவோரே மேலோர். அறநூல்களை நன்கு கற்றல் வேண்டும். அதன்படி நடத்தல் வேண்டும். அங்ஙனமால் அழுக்காறு முதலிய பாவிகள் வந்து அணுகமாட்டார்கள். நறுங் குணங்களும் பல செல்வங்களும் படைத்திருத்தும் அழுக்காற்றினால் அழிந்தார் எண்ணற்றார் உளர். அழுக்காறென வொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்தற்குச் சான்றாக நம் நாட்டிடைப் பல காதைகள் உள. துரியோதனன் என்ற விழுமிய செல்வம் படைத்த வணங்காமுடி மன்னனைப் பாரத நாட்டார் நன்றாக அறிவர். அவனுடைய பெருங் திருவும் பேரரசும் எதனால் அழிந்தன? அழுக்காற்றினாலல்லவா? பாரதம் படிக்கும் அன்பர்கட்கு இதனை விளக்கி நான் பகரவும்வேண்டுமோ? தொடக்கம்முதல் பாண்டவர் ஆக்கம் கண்டு பொறாத துரியோதனன் வாழ்வு துறந்து போர்க்களம் பட்டான்; அழுக்காறறியா அறத்தின் மகன், அவனியைத் தனி யாண்டு அழியாப் புகழ் படைத்தான்.
"கொல்லாாக் கொடியோன் கொடுங் தொழிற் கூட்டக் கூடியே குலவியுங் கொடையால் நல்லிசை யடைந்த அங்கர்கோன்” பாண்டவர்பால் அழுக்காற்றைப் பெரிதும் கொண்டுறைந்தான். ஆதலினால் பெரு வள்ளன்மை வாய்ந்த அவன் "கொடையுடைக் கொடிய பாவி" "புறஞ் சுவர்க்கோலஞ் செய்வான்" என்று அழைக்கப்படுகிறான். பொறாமையினால் அழிந்தோரைப்பற்றி நமது நூல்கள் கூறுவனவற்றையெல்லாம் ஈண்டுக் கொணர்ந்தால் மிக விரிந்துவிடும். பொறாமையினால் அழிந்தவர்க்குச் சான்று துரியோதனன் ஒருவனே சாலுமே, வணங்கா முடி மன்னன்-வேந்தர் வேந்தன்-பெருஞ் செல்வம் படைத்தோன்பெருநிலம் ஆண்டோன்-தானைக்கடற்பெருக்கு உடையோன், ஆன அவனை அழித்தது அழுக்காறு என்றால் அழுக்காற்றின் வன்மை அறையுந் தரத்ததோ? எனவே அவனியில் நல் வாழ்க்கை வாழ்ந்து புகழ்பெற்றுப் பிறவிப் பயன் அடைய விழை அறிஞர்கள் திருச்செற்றுத் தீயுழியுய்க்கும் கொடிய அழுக்காற்றைக் கொள்ளாதிருப்பாராக!
ஒருவன் ஆக்கங்கண்டு அழுக்காறு ஏன் கொள்தல் வேண்டும்? தான் உயர வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம். அது கட்டாயம் இருக்க வேண்டுவது. முன்னேற்றமடைய விரும்பும் ஒவ்வொரு மனிதனும் தனது வளர்ச்சியில் நாட்டஞ் செலுத்த வேண்டுவதே. தனது வளர்ச்சியாவதென்ன? உலக வாழ்வின் பொருட்டுத் தன் உளத்தைப்
பண்படுத்திக் கொண்டு போதலேயாகும், மற்றவர் தன்னினும் உயர்ந்த நிலையிலிருந்தால் அதைக்கண்டு பொறாமை கொள்தல் தனக்கே கேடு பயப்பதாகும். அவர் போல் ஆக முயலலாம். அவர் வளர்ச்சிக்குத் தடை செய்தல் தகாச் செயல். ஒருவரின் உயர்ந்த நேர்மை கண்டு அவர் செயலைப்பற்றி அவர்போல் ஆக முயற்சித்தல் அறச் செயல். அவர் உயர்ந்த தன்மைக்குப் பொறாமைப்பட்டால் அவர் உயர்வை எவ்வாறு வீழ்த்தலாம் என்ற எண்ணமே உள்ளத்தில் குடிகொண்டிருக்கும். அவ்வெண்ணமுள்ள மனத்தில் நல்லன வளராது; அது தேய, தீயன பெரிதும் உளத்தை ஆட் படுத்திவிடும். பிறகு அவன் செய்யும் வினையெல்லாம் கெடுவினையாகவே யிருக்கும். "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற மூதுரைப்படி கேடு நினைப்பவன் கெட்டுக்கொண்டே வருவான். உயர்ந்த தன்மையாளனை மற்றவனால் ஒன்றுஞ் செய்ய முடிவதில்லை. இவன் பொறாமையால் அவன் ஆக்கம் வளருமன்றித் தேயாது. இதை நாம் இன்றும் கண் கூடாகக் கண்டு வருகிறோம். அழுக்காறுடையார் அழிந்து கொண்டுதான் வருகிறார், அஃதிலார் வளர்ந்து கொண்டுதான் வருகிறார். இவ் உணர்வும் அவர்கட்குத் தோன்றுவதில்லை. மேலும் மேலும் அழுக்காறுடையார் கேடு சூழ்தலையே மேற் கொள்ளுகின்றார். அக்கேடு தம்மையே சூழ்வதை மக்கள் உணர்கின்றாரில்லை. முன்னைய அறவுரைகளையும் பண்டு அழுக்காறு
கொண்டு அழிந்தவரையும் மறந்துவிட்ட போதினும் தமது நடை முறையின் பயனைக் கண்டேனும் அழுக்காறுடையார் அதனை யொழித்து உயரலாகாதா? அழுக்காறுடை யானுக்கு ஆக்கமில்லை யென்பதை வள்ளுவனார், பலப்பல இடத்தில் வலியுறுத்துகின்றார், ஒழுக்கத்தைக் கூற வந்தவிடத்து இதனைச் சான்றாகக் காட்டுகின்றார்.
"அழுக்கா றுடையான்கண் ஆக்கம் போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு". எனவே ஆக்கம் பெற விரும்புவோர் அழுக்காறாமை கொள்வாராக!
"விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்'.