குற்றால வளம்/அடக்கம்


அடக்கம்.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்."என்பது குறள். அடக்க முடைமை செவ்விதாகக் கருதப்படும். தேவலோகத்திற் கொணர்ந்து செலுத்தும்; அடக்க மின்மை நிறைந்த இருளில் இட்டு விடும். என்றால் அடக்கமுடைமையை மக்கள் விரும்பா திருக்க முடியுமோ? அடக்க முடைமை என்பதற்கு எல்லோருக்கும் அஞ்சி யொடுங்கி யிருத்தல் என்பதும், பிறர் பால் அடங்கி இழிவு வாழ்க்கை வாழ்தலென்பதும், அவை போன்ற பிறவும் பொருளன்று. அடக்கமுடைமையை இன்னோ ரன்ன பொருள் படக் கூறுவாரையும் ஈண்டு நாம் காண்கின்றோம். ஒருவன் வீரமாக ஒழுகுவானானால் இவன் அடக்க மிலானெனச் சிலர் அறைந்து விடுகிறார். சாதாரணமாக அடக்கம் என்பது பயந்த தன்மை என்ற பொருளிலேயே வழங்கப் படுகிறது. அது பெருந்தவறு. அடக்க முடைமைக்கும் அக்கூற்றுக்கும் சம்பந்தம் சிறிதுமில்லை.


"அடக்கமுடைமையாவது, மெய், மொழி, மனங்கள் தீ நெறிக்கட் செல்லாது அடங்குத லுடைமை" எனத் திருக்குறளுக்கு உரை விரித்த ஆசிரியர்பரிமேலழகர் உரைக்கின்றார், அடக்க முடைமை என்ற அதிகாரத்தின் கீழ்  வள்ளுவனார் வகுத்த குறள்களும் அப்பொருள்களையே புகலுகின்றன. எனவே உளத்தானும் உரையானும் உடலானும் தீயன செய்யா தடங்குதலே அடக்கமுடைமை என்பது கிடைக்கின்றது. இவ் அடக்கமுடைமை உலகெலாம் வளர்ந்திட வேண்டும்.


"காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம் அதனினூங் இல்லையுயிர்க்கு" "செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றினடங்கப் பெறின்" என்ற குறள்களின் பொருளைச் சிந்தனை செய்தல் வேண்டும். அடக்க முடைமை கொண்டு வாழ்வதால் விளக்கக் குறைவு ஏற்படு மென்று எண்ணுதல் அறியாமை. அடங்கி வாழ்ந்தால் நம்மை உலகம் அறியாது என்று சிலர் கருதுகிறார். இது தவறு என்பதை "நிலை யிற்றிரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது" என்ற வள்ளுவனார் மறை வலியுறுத்தும். நெறியினின்றும் நீங்காது அடங்கியவன் மலையைக் காட்டினும் பெரிய தோற்றத்தை யடைவா னாதலின் பெயர் விளங்க விரும்புவோரும் அடக்கம் உடைமை கொண்டே தீர்தல் வேண்டும்.


அடக்கமுடைமையால் மலையிலும் பெரிய தோற்றம் பெற்றவர் பலருளர். இந்நாள் நம் கண்முன் உலவும் காந்தியடிகள் அடக்கமுடைமையால் மலையினும் மிக்க தோற்றம் பெற்றவர்களே. காந்தியடிகளை அறியாதார் எவ் உலகத்திலேனும் உளரோ? எதனால் அடிகள்  அவ்வளவு விளக்கம் பெற்றார்கள்? அடக்க முடைமையினாலேயே; உடல் உரை உளம் மூன்றும் அடக்கிய தன்மையினாலேயே. மூன்றையும் அடக்கியவரே தீமையி னின்றும் நீங்கியவர். மூன்றையும் அடக்காவிடில் பிறவிப்பேறேது? குறள் அடக்கமுடைமை பத்துச் செய்யுளில் முதலைந்து செய்யுளில் பொதுவாக அடக்க முடைமைப் பற்றிக் கூறினார்.

அவ்வைந்தில் கடைசிப் பாட்டில் செல்வர்க்கு அடக்கம் இன்றிமையாதது என்பது கூறப்படுகிறது. அக்குறள் வருமாறு:- "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளுஞ்செல் வர்க்கே செல்வந் தகைத்து" ஏனிவ்வாறு செல்வரை வேறுபடுத்திக் கூறினாரென்றால் செல்வர்க்கு அடக்கம் வருதல் அருமை என்பது கருதியே. பெரும்பான்மையாக மக்களைத் தீ நெறிச் செலுத்துவது செல்வமே யாகும். அஃதில்லார் அனைவரும் அடக்கமுடையார் என்பது கருத்தன்று. எல்லாருள்ளும் அடங்கா ருளர்.ஆனால் அடக்கம்பெறாது துணிந்துதீயன புரியத் தூண்டுவது பெரும்பாலும் செல்வமே யாகும். ஆதலாற்றான் வேறுபடுத்தி மற்றையோரைக் காட்டினும் செல்வர் அடக்கமுடைமையைக் கட்டாயம் கொள்ள வேண்டுமென்று கூறுவாராயினார். பணமிருந்தால் எதுவும் செய்யலாமெனப் பல மேதாவிகள் பகர்கின்றாரல்லவா? ஆதலாற்றான் அவரடங்குதல் மிகச். சிறப்பு என்று அறைந்தார் ஆசிரியர் திரு வள்ளுவனார்.

 அடக்க முடைமை அதிகாரத்தின் பின் ஐந்து பாக்களில் ஒரு பாவில் மெய்யடக்கமும் மற்றொரு பாவில் மனவடக்கமும் மூன்று பாக்களில் மொழி யடக்கமும் கூறப்பெற்றுள்ளன். மெய்யடக்கமாவது உடலடக்கம். அது முதலிற் கொள்ள வேண்டுவது. உடல் வாழ வன்றோ, மெய் வாய் கண் மூக்குச் செவி எனப் பெயர்பெற்ற ஐவாய வேட்கை அவா வினாலன்றோ செய்வன தவிர்வன தெரியாமல் மக்கள் வினையாற்றி விடுகிறார். ஆகலின் ஐம் பொறிகளையும் அவற்றின் இச்சைபோல் செல்லவிடாமல் அடக்குதல் வேண்டும். அவற்றிற்கு ஆட்படாது மொழியையும் உளத்தையும் அடக்குதல் வேண்டும். "ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து” என்னும் குறள் மெய்யடக்கம் கூறிற்று. “கதங்காத்துக் கற்றடங்க லாற்று வான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றி னுழைத்து” என்னும் குறள் மன அடக்கம் நுதலிற்று. பொறிகளை அடக்கி நிறுத்திய வழி மனவடக்கமும் பெற்றே தீர்தல் வேண்டும். இன்றேல் மனம் தீயனவற்றை நாடிக் கொண்டே யிருக்கும். செயலுக்கு வராவிட்டாலும் மனத்தினால் தீயன எண்ணுதலும் தவறே யாகும். மனம் அடங்காவழித் தீய எண்ணம்போகாது. "சினமடக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனமடக்கக் கல்லார்க்கு வாயேன் பராபாமே" என்றார் தாயுமானப் பெரியார். மனஞ்செயுங் கொடுமை  எண்ணி முடியாது; எழுதியாகாது. அதைப் பற்றிப் பல பெரியோர்கள் பலப்பல சாற்றியிருக்கின்றார்கள். திருவருள் விளக்க வள்ளலா ரென்று பெயர் விளங்கிய அருட்பாக்கள் அருளிய இராமலிங்க அடிகள் செய்யுள் ஒன்றை ஈண்டுத் தருதும்.


"மனமான வொருசிறுவன் மதியான குருவையு மதித்திடா னின்னடிச்சீர் மகிழ்கல்வி கற்றிடான் சும்மாவிரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான், சினமான வெஞ்சுரத் துழலுவ னுலோபமாஞ் சிறுகுகையி னூடுபுகுவான் செறுமோக இருளிடைச் செல்குவான் மதமெனுஞ் செய்குன்றி லேறிவிழுவான், இன மான மாச்சர்ய வெங்குழியினுள்ளே இறங்குவான் சிறிதுமங்தோ என்சொல் கேளானெனது கைப்படான் மற்றிதற் கேழையே னென் செய்குவேன், தனநீடு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே தண் முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண் முகத் தெய்வ மணியே"


மனம்பற்றிப் பேரெழிற் புலவர் சுப்பிரமணிய பாரதியார் மொழிந்த ஒரு வீரப்பாட்டையும் கீழே வரைகின்றேன்.

பேயா உழலுஞ் சிறுமனமே
பேணாய் என் சொல் இன்று முதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தருமம் எனயான் குறிப்பதிலும்
ஒயா தேநின் றுழைத்திடுதி
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்



மனத்தைப்பற்றிப் பலப்பல பெரியோரும் பலப்பல பகர்ந்திருக்கின்றார். அவ்வனத்தையும் ஈண்டுக்கூறல் சாலாது. அம்மம்ம! மனம் பொல்லாது. அது தன்னாட்சி செலுத்தவே பெரிதும் விழையும். அதனை அவ்வாறு அதன் போக்குப்படி விடுதல் ஆகாது. "மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்” என்பது பழவுரை.


மொழியடக்கம் பற்றி வள்ளுவனார் மிக அழகாக மூன்று குறள்கள் அருளியிருக்கின்றார், அம்மூன்றையும் மூன்று பேரொளிதரும் நன் மணிகளென்று மொழியலாம்.


"யாகாவாராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு".

"ஒன்றானுந் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின்,
நன்றாகா தாகி விடும் "

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.”


இவற்றின் பொருள் வெளிப்படையாக விளங்குமென்றே கருதுகிறேன்.


மொழியடக்கம், அதாவது நாவைக் காத்துப் பேசுதல் இன்றியமையாது கொள்ள வேண்டுவது. நாகாவாமையால் வரும் கேட்டை வள்ளுவனார் இம்முக்குறளும் நன்கு மொழியா நிற்கின்றன. நாவடக்கம் கொள்ளாமையால் ஒருவன் பயன் ஒன்றையும் அடையப்போவதில்லை. நாவினின்றும் புன்சொல்-பிறரைத்  துன்புறுத்தும் சொல் பிறத்தலாகாது என்று ஒவ்வொருவரும் கருதுதல் வேண்டும். நாவடங் காது பேசுபவன் பல சந்தர்ப்பங்களில் பெருங் துன்பமடைவானென்பது ஒருதலை. சொற் பொறாமையால் இவ்வுலகில் ஒருவரோடொருவர் இட்டுக்கொள்ளும் பூசல்கள் எத்துணை பார்க்கிறோம். ஏன் இவ்வாறு நாவடங்காது வீண் துன்பங்களை இழைத்துக் கொள்தல் வேண்டும்?


ஆகலின் மெய்யடக்கமுடைமை, மொழியடக்கமுடைமை, மனவடக்க முடைமை ஆகிய மூன்றடக்கம் உடைமையும் இன்றியமையாது கொள்ளத் தக்க பொருள்கள். அடக்க முடைமை சிறிதும் தவறாகாது. அடக்கமுடையாரை அறிவிலரென்றெண்ணிக் கடக்கக் கருதுவோர் உள்ராயின், அது அவர்கள் குற்றமேயன்றி அடக்கமுடையார் சிறிதும் தாழ்வடையார். "அடக்கம் அமரருள் ளுய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்” என்ற அருங்குறளைத் திரும்பவும் ஒரு முறை நினைவு கூறுவோம்.


"https://ta.wikisource.org/w/index.php?title=குற்றால_வளம்/அடக்கம்&oldid=1534949" இலிருந்து மீள்விக்கப்பட்டது