குற்றால வளம்/ஒழுக்கம்


ஒழுக்கம்

ஒழுக்கம் என்பதற்கு ஒழுகுதல், அதாவது நடத்தல் என்பது பொருள். ஒழுக்கம் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என இருவகைப் படும். நல்வழியில் ஒழுகுதல் நல்லொழுக்கம்; தீவழியில் ஒழுகுதல் தீயொழுக்கம். நல்லொழுக்கம் கொள்ளத்தக்கது; தீயொழுக்கம் தள்ளத் தக்கது. ஒழுக்கம் என்ற சொல் இரண்டொழுக்கத்திற்கும் பொதுச் சொல்லே. எனினும் சிறப்பாக ஒழுக்கம் என்னும் மொழி நல்லொழுக்கத்தையே குறிக்கின்றது. ஒழுக்கமுடையவன் என்று நல்லொழுக்கமுடையானைக் கூறுவது மரபாக விருக்கின்றதன்றித் தீயொழுக்கமுடையானைக் கூறக் காண்கின்றோமில்லை. இது பண்டைக் காலந்தொட்ட ஒர் மரபு. பண்டுதொட்டு நல்லொழுக்கத்தையே ஒழுக்கமென்று நூல்கள் நுவலும். திருக்குறளில் ஒழுக்கமென்ற சொல் நல்லொழுக்கத்கத்தையே குறித்துப் பயின்று வருகின்றது. “ஒழுக்கமுடைமை' என்னும் அதிகாரத்தின் பத்துப் பாக்களில் ஒன்பது பாக்கள், நல்லொழுக்கத்தை ஒழுக்கமென்ற பொதுச் சொல்லாலேயே புகல்கின்றது. ஒரு பாவில் மட்டும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்ற இரண்டு சொற்களும் பெய்யப்பட்டிருக்கின்றன. அதிகாரத்தின் பெயரும்  ஒழுக்கமுடைமை" என்று பொது மொழியாலேயே வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பிறபல சொற்களும் பொதுச் சொற்களாக விருந்து சிறப்பாக ஒவ்வொன்றை உணர்த்தக் காணலாம். ஒழுக்கமென்பது நல்லொழுக்கமே என்பதை வற்புறுத்த வள்ளுவனார் குறளில் நல்லொழுக்க மின்மையைக் கூறவந்த அதிகாரத்திற்குக் "கூடா ஒழுக்கம்" எனப் பெயர் தரப்பட்டிருக்கிறது. எனவே ஒழுக்கம் என்பது நல்லொழுக்கமே என்பது தேற்றம்.


"இவ் வொழுக்கத்தை வள்ளுவனாரும் பிற அறிஞரும் எவ்வாறு ஒம்பியிருக்கின்றார்? இந் நாள் உலகில் மக்களால் ஒழுக்கம் யாங்ஙனம் காக்கப் பெறுகிறது?" என்பனவற்றை நோக்குவோம். இவ்வுலகில் எல்லாவற்றையும்விடச் சிறந்ததாக மக்கள் உயிரையே மதிப்பதை யாரே யறியார்? உயிரினும் பெரிதெனப் பிறவற்றை மதிப்போர் அருமை. உயிரைத் துச்சமெனத்தள்ளி அதனிலும் உயர்ந்ததாக வேறு சில பொருள்களை மதிப்பவரே அறவோர். நமது வள்ளுவனார் "ஒழுக்கம் விழுப்பக் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்" என்றார். ஆதலால் உயிரினுஞ் சிறந்தது ஒழுக்கமெனக் கொண்டவர் வள்ளுவர் பெருமான் என்பது கிடைக்கிறது. பிற நல்லறம் வகுத்த பெரியார்களும் ஒழுக்கத்தை இவ்வாறே கூறிப் போந்திருக்கின்றார்.


மக்களாகப் பிறந்தார் சிறப்படைவது ஒழுக்கத்தினாலேயே என்பது தொன்று  தொட்டுக் கண்ட உண்மை. ஒழுக்கமிலாரை உலகம் மதிக்காது. மக்கள் பிற எந்நலனை யடைந் தருந்தபோதினும் ஒழுக்க நலன் பெறாவிட்டால் அவர்கள் உயர்ந்தோரால் மதிக்கப்பெற மாட்டார்கள். எல்லா அறத்தையும் செவ்விதின் நாடாத்திச்செல்லக் காரணமாகிய ஒழுக்க அறம்பற்றாதார் ஆற்றும் பிற செயல்கள்யாவும் வீணேயாகும். ஒழுக்கமில்லார் அறங்களை நிலை பொறுத்துதல் அரிது. "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பைதரும்" என்றார் திருவள்ளுவர். "நல்லொழுக்கமாக ஒழுகிச் செல்தல், அறம் என்ற பயிருக்கு இடும் வித்து; தீயொழுக்கம் என்றும் துன்பத்தைத் தரும்" என்பது இப் பாவின் நேர் பொருள். மறைமுகமாக இப் பாட்டுப் பல கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றது. நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகுமென்றால் தீயொழுக்கம் மறத்திற்கு வித்தாகு மென்பதும், தீ யொழுக்கம் என்றும் துன்பக்தருமென்றால் நல்லொழுக்கம் என்றும் இன்பந்தருமென்பதும் நன்கு அறியக் கிடக்கின்றதன்றோ? மேலும் "தீயொழுக்கம் என்றும் துன்பந்தரும், ஒருநாளும் அது இன்பம் தராது. நல்லொழுக்கம் என்றும் இன்பந்தரும்; அது துன்பமே தராது.” என்றும் இக்குறட்பாவில் கொள்ளக்கிடக்கின்றது.


ஒழுக்கமிலானுக்கு உயர்வில்லை யென்ற உண்மையை "அழுக்காறுடையான்கண் 

ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு" என்ற அருங்குறள் வலியுறுத்தும். அழுக்காறு என்பது பிறன் ஆக்கம் கண்டு பொறாமை. ஆக்கம் என்பது செல்வம். "அழுக் காறு கொண்டவனிடம் செல்வம் தங்காது; அதுபோல ஒழுக்கமிலானிடம் உயர்வு தங்காது" என்பது இக் குறட்கருத்து. இது முற்றும் உண்மை. ஆனால் இவ்வுலகில் இக் குறட் கருத்துக்கு மாறாக நடப்பதைச் சிலர் எடுத்துக் காட்ட முன்வரலாம். அழுக்காறு கொண்டவர்களுள் ஆக்கம் பெற்றோர் பலரிருக்கின்றனரென்று பகரலாம். ஒருவாறு இஃதுண்மையே. அழுக்காறுடையாரில் பொருள் படைத்தார் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அப்பொருளின் பயனை அவர்கள் சிறிதும் அடையமாட்டார்கள். பொருள்பெற்ற பயன் நன்மனத்தொடு அறம் புரிதலன்றோ? நல்லுளம் பெற்று அறம் புரியாதார் ஆக்கம் பெற்றதால் அடையும் பயனென்? பயன்தரா ஒன்று இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்றே. ஆக்கத்தால் ஆய பயன் அடையாது வாழும் செல்வர் என்போருக்கும் பொருள் காத்த பூதத்திற்கும் வேறுபாடென்ன? அழுக்கா றென்ற பாபிக்கு உளத்தை இருக்கையாக அளித்தோர்க்கு அறத்தைக் குடிவைக்க உளம் கிடையாதன்றோ? எனவே. ஆக்கத்தின் பயன்தராத ஆக்கமுண்மை அஃதின்மைக்கு நிகரென்றெண்ணியே வள்ளுவனார் இவ்வாறு வகுத்தார்.

 அவ்விய நெஞ்சத்தார் ஆக்கத்தை ஏன் பெறுகிறார்? என்று கேட்கலாம். அவர்கட்கும் வள்ளுவர் விடையிறுத்திருக்கின்றார். "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வி யான் கேடும் நினைக்கப்படும்' என்றார். அவ்விய நெஞ்சத்தை புடையவன் ஆக்கம் பெற்றிருக்கிறனென்றாவது செவ்விய தன்மையுடையவன். கேடுற்றிருக்கிறானென்றாவது இருக்குமானால், அதுபற்றி ஆராய வேண்டுவதுதான் என்பது இதன் பொருள். ஆராய்வது எதனை?. அவன் பழவினையை. அவன் முன் பிறப்பின் பயனினால் இந்நிலையடைந்தா னென்பதே கருத்து. இது மறுக்க முடியாத தொன்று. இப்பிறப்பில் பொறாமை கொள்வானானால் வரும் பிறப்பில் அதன் பயனை நுகர்வானென்பது திண்ணம். மேலும் வள்ளுவனார் "அழுக்காறு கொண்டு பெரியாரானாருமில்லை. அது செய்யாது பெருக்கக் குறைவு கொண்டாருமில்லை " என்னும் பொருள்பட "அழுக்கற்றகன் றாருமில்லை அஃதிலார் பெருக்கத்திற் றீந்தாரு மில்" என்றும் பேசியிருக்கின்றார். எனவே எந்தப் பொருளினும் எவரேனும் செயலுக்கு மாறுபட்ட நிலையுற் றிருப்பாரானால் அது பண்டை வினையின் பயனே என்ற உண்மையை உணர்தல் வேண்டும். அன்றி அத் தீவினையால் அவர் அந்நிலை யுற்றாரென்று. கொள்தல் அறிவுடமையன்று. ஒழுக்கம் என்ற. இக்கட்டுரையில் அழுக்காறாமையைப் பெரிதும் பேசிவிட்டே னாதலின் எடுத்துக் கொண்ட  பொருளை விடுத்து வேறு பொருளில் புகுந்து விட்டதாக எவரும் கருத வேண்டுவதின்று. ஒழுக்கத்திற்கு உயர்வு கூறவந்த புலவர் பெருமான் அழுக்காற்றுக்கு ஆக்கமில்லையென்று சான்று காட்டி அதை மெய்ப்பித்ததற்காக இத்துணை கூறப்பட்டது. அன்றியும் ஒழுக்க முடைமைக்கு அழுக்காறாமை இன்றியமை யாததாதலின் அதுகொண்டும் அழுக்காறாமை ஈண்டுக் கூறும் நேர்மை வாய்ந்ததேயாகும்.


இதுபோலவே ஒழுக்கமிலாரும் பிற கருதிச் சில பலரால் மதிக்கப் படுகின்றனரேயென்ற வினாவும் எழலாம். இதற்கும் முற்கூறிய கொள்கை ஒர் சமாதானமாகும். அன்றி ஒழுக்கமிலார் உயர்ந்தோரால் ஒரு நாளும் மதிக்கப்பட மாட்டாரென்பதுறுதி. "ஒழுக்கத் தினெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப்பழி" என்றவாறு ஒழுக்கத்திற்கே மேன்மையும் இழுக்கத்திற்கே பெரும்பழியும் இயல்பு. மக்கள் கொள்ளவேண்டியவற்றுள் எல்லாம் தலையாயது ஒழுக்கம். ஒழுக்கமின்றிய வாழ்வு பிணவாழ்வேயாகும். குலத்தினால், உயர்வு தாழ்வு கூறுதல் அறியாமை, ஒழுக்கக்தினால் உயர்வு உண்டேயன்றிப் பிறப்பினால் உயர்வு இல்லை. "ஒழுக்கமுடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்" என்பது குறள். "சால ஒழுக்கம் உயர்குலத்தினன்று” என்றார் பிறரும்: "பரிந்தோம்பிக்காக்க ஒழுக்கந்தெரிந் தோம்பித்தேரினும் அஃதேதுணை" என்றாங்கு துருவித் துருவியாயினும் இன்றி யமையாது கொள்ளத்தக்கது ஒழுக்கமே யாதலின் அதனை வருந்திக் காத்தல் வேண்டும்.


இந்நாள் ஒல்லுமாறு ஒழுக்கங் காப்பார் அரியராக விருக்கின்றனர். முன்னர்க் குறித்தவாறு ஒழுக்கம் என்பது நன்னெறியே ஒழுகிச் செல்தலேயாகும். ஒழுக்கமென்பது பிறனில் விழையாதிருத்தல் ஒன்றுமட்டுமல்ல; அல்லது வேசையில்லம் செல்லாதிருத்தல் மட்டுமல்ல. ஒழுக்கத்திற்கு முக்கியமாய்க் தள்ளக் தக்கவை இவை. ஆனாலும் இவைமட்டும் என்று கொள்தல் தவறு. இப்பொழுது இச்செயலுள்ளாரைத்தான் ஒழுக்கமில்லாரெனக் குறிப்பது வழக்கமாக விருக்கின்றது.வேசியில்லம் விழையும் ஒருவரைப் பார்த்துப் பொய் பேசும் ஒருவர் ஒழுக்கமில்லாதவரென உரைக்கின்றார். தன் செயல் ஒழுக்கமில்லாததே என்ற நினைவு அவருக்கு இருப்பதே யில்லை. பிறனில் விழைதல் வேசை வீடு தேடி ஓடியலைதல் ஒழுக்கமின்மையில் தலையாயன என்பதிற்றடை சிறிதும் இல்லை. ஆனால் பொய்பேசுதல் ஒழுக்கமுடைமையோ? ஒழுக்கமுடைமைக்குப் புறம்பான செயல்-ஒழுக்கமின்மையாகிய செயல், பலப் பல உள. அவற்றை மக்கள் நன்கு உணர்ந்து ஒழுக்கமின்மையைத் தள்ளி ஒழுக்கமுண்மையைக் கொள்தல்வேண்டும். அழுக்காறு கொள்தல், இன்னாசெய்தல்; கள்ளுண்டல்,  களவு செய்தல், கொலை செய்தல், சிற்றினஞ் சேர்தல், சூதாடல், செய்ந்நன்றி கொல்தல், புறங்கூறுதல், பெரியார்ப் பிழைத்தல்; பொய் புகல்தல் முதலியன ஒழுக்கமின்மையின்பாற் பட்டவைகளே யாகும். ஒழுக்கங் காத்தல் என்பது இன்னோரன்ன ஒன்றையும் ஆற்றாதொழுகுதலே யாகும். ஒழுக்கமின்மையாகிய மேற்குறித்த ஒவ்வொன்றிலுள்ள தீமைகளையும் எடுத்துரைப் பதாயின் ஒவ்வொன்றையும் தனித்தனிக் கட்டுரையாக எழுதினாலன்றி அமையாது. அத் துணைத்தீமை நல்கத்தக்கன. அவைகள்; ஒழுக்கம் என்னும் உயர்வுபெற விரும்பும் மக்கள் ஒழுக்கமின்மை யாகிய இன்ன செயல்களைக் கனவிலும் கருதாது அறத்தாற்றின் ஒழுகுவாராக?




"https://ta.wikisource.org/w/index.php?title=குற்றால_வளம்/ஒழுக்கம்&oldid=1534952" இலிருந்து மீள்விக்கப்பட்டது