குற்றால வளம்/வகுப்பு

வகுப்பு

வகுப்பு என்ற சொல்லுக்குப் பிரிக்கப்படுவது என்பது பொருள். பிரிக்கப்படுவது எது எது உண்டோ அவ்வனைத்தும் வகுப்பு என்று பெயர் பெறும். இவ்வாறு பிரிக்கப்பட்ட்து பலப்பல. மயிரை வகிர்ந்து கொள்வதை வகுப்பு என்று வழுத்தக் கேட்கின்றோம். ஒன்றாக இணைந்திருக்கும் மயிரை இருபிரிவாகப் பிரிப்பதையே வகுப்பு என்று வழுத்துகின்றோம். பிரிக்கப்பட்டது என்ற பொருளிலேயே இது வகுப்பு என்று பேசப்படுகிறது.


பள்ளியில் பிள்ளைகளைப் படிப்புக்கொண்டு பிரிப்பதை வகுப்பு என்று உரைக்கின்றோம். இதுவும் பிரிக்கப்படுவதினாலேயே வகுப்பு என்ற பெயர் பெறுகிறது.


வகுப்பு என்று இங்கு எடுத்துக்கொண்டது ஜாதி பற்றியே யாகும். இந்த ஜாதி, வகுப்பு என்னும் பெயர் பெற்றமையினாலேயே இது பிரிக்கப்பட்டது என்பது கிடைக்கின்றது. பிரிக்கப்பட்டது என்றால் யாரால் பிரிக்கப் பட்டது என்ற வினா எழலாம். ஒரு சாரார் கூட்டுறவு கருதி மக்களாலேயே பிரிக்கப்பட்ட தென்று உரைப்பர். பிறிதோர் கூட்டத்தார் கடவுளால் பிரிக்கப்பட்டது எனக் கழறுவர்.  இன்னொரு குழுவினர் இது பிரிக்கப்பட்டதேயல்ல; படைப்புக் காலத்திலேயே இறைவனால் படைக்கப்பட்டது ஜாதி என இயம்புவர். இவர் கூற்று ஏற்குக் தரத்ததன்று. வகுப்பு என்ற பெயருண்மை இக் கூற்றை மறுக்கும். வகுப்பு வகுக்கப்பட்டதே என்பதில் தடையில்லை.


கடவுள் படைப்புக் காலத்திலேயே வகுப்பு வகுத்தார் என்று கூறுதல் பொருத்தமின்று, படைப்புக் காலமென்று தனியே ஒரு காலமில்லை. கடவுள் எப்படி அநாதியோ அது போல உலகமும் அநாதி. ஆன்மாக்களும் அநாதியே. உலகத்தைக் கடவுள் படைக்க வில்லை. ஆன்மாக்களையும் அவர் படைக்க வில்லை. உலகமும் ஆன்மாக்களும் தோற்றமும் அழிவும் இல்லாதன. இவற்றைக் கடவுள் உண்டாக்கினார் என்றல் ஒர் உபசாரமான மரபேயன்றி உண்மையன்று. ஆனால் இவற்றைக் கடவுள் படைத்தாரென்றே நாம் கழறுகின்றோம். இதை ஒரு மரபாக வைத்துக் கொண்டிருக்கிறோம். சான்றாக ஒன்று கூறுவேன். வேதங்களை எடுத்துக் கொள்வோம். வேதங்கள் அநாதி என்று ஒரு பிரிவார் பேசுவர்; அவை இறையால் இயம்பப்பட்டன என ஒரு பகுதியார் பகர்வர்; அவை அறிஞர்களால் ஆக்கப்பட்டன என ஒரு கூட்டத்தார் கூறுவர். அது எவ்வாறாயினும் ஆக. அச்சங்கை ஈண்டு வேண்டாம். வேதங்கள் அனைத்தையும் வியாசர் என்பார் விளம்பினார் என்று கூற முடியாது.ஆனால் வேதங்களை வியாசர் மொழிந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் பலர் கொள்கையும் அடிபட்டுவிடும். வியாசர் சிதைந்துகிடக்க வேதங்களைத் திரட்டி இருக்காதி நான்காக வகுத்தார். "இருக்காதி மறை மொழிந்தோன்" என்று வியாசரைக் கூறுதல் உபசாரமேயாம். சிதைந்து கிடந்ததைத் தொகுத்து விளக்கியமையினாலேயே அவர் அவ்வாறு கூறப்பட்டார். அவ்வாறே ஆன்மாக்களை, இயக்கும் சக்தியாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார் என்று கூறும் மரபு தவறுடைத்தன்று.


ஆன்மாக்களை இறைவன் படைத்தானென்றும் படைக்கும்பொழுதே இன்னின்னார் இன்ன வகுப்பெனப் படைத்தானென்றும் கூறுதல் ஏற்றுக்கொள்ளக் தக்கதன்று. கடவுள் நடுநிலை வாய்ந்தவர் என்று உலகில் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். நடுநிலை வாய்ந்த கடவுள், தாமே புதிதாக உயிர்களைப் படைப்பதானால், தாம் படைத்த உயிர்களுள் ஒன்றை உயர்வுள்ளதாகவும் மற்றொன்றைத் தாழ்வுள்ளதாகவும், ஒன்றைச் செல்வம் பெற்றதாகவும் இன்னொன்றை வறுமையுற்றதாகவும் இன்ன வேறுபாடு பலதோன்ற ஆக்குவரோ? ஆன்மாக்களை யெல்லாம் கடவுள் படைத்தார் என்று கொண்டால் கடவுள் நடுநிலை தவறியவர் என்று ஏற்படும். எனவே ஆன்மாக்களைக் கடவுள் படைக்கவில்லை என்பது உறுதி. நமது சமயம் கடவுளைப்போல உயிர்களும் நித்தியம் என்றே உரைக்கின்றது. உயிர்களில் எவ்வளவு நாட்களுக்கு முன் உண்டாவினவென் உரைக்க முடியாது. உலகம் என்று முதல் இருக்கின்றதோ-கடவுள் என்று முதல் இருக்கின்றாரோ, அன்றுமுதல் உயிர்களும் இருக்கின்றன. உலகம் என்று உண்டான்து என்றும். கடவுள் என்று தோன்றினார் என்றும் கூறமுடியாது. உலகமும் தோற்றமில்லாதது. கடவுளும் கோற்றமில்லாதவர். அதுபோல உயிர்களும் தோற்றமில்லாதன. தோற்றமில்லையென்றால் என்றும் உளது என்பது பொருள். தோற்றமில்லாததற்கு அழிவுமில்லை. சில கணிதநூல் வல்லுனர் உலகம் இவ்வளவு நாட்களுக்கு முன்பு தோன்றியது எனக் கணிக்கின்றார். சில பஞ்சாங்கங்களில் உலகம் தோன்றி நூற்றைம்பதே கோடியும் சில்லறை ஆண்டுகள் ஆயினவெனப் பொறிக்கப்பட்டுளன; இக்கூற்று அங்கீகரிக்கத் தக்கதன்று.


உயிர்கள் வினைக்கேற்பப் பிறவி பெறுகின்றன. முன் பிறப்புக்களில் செய்த நல் வினை, தீவினைக்கேற்ற உடலையும் நிலையையும் உயிர்க்ள் அடைகின்றன. இவ் உண்மை ஒர்ந்தாலன்றிக் கடவுளுக்கு நடுநிலை கூறமுடியாது. ம்று பிறப்பு இல்லையென்று இயம்புகின்ற மதங்கள் இங்கு அடிபட்டு வீழ்ந்துவிடும். மறு பிறப்பு நிச்சயமாக உண்டு. பழைய உயிர்களே புத்துடல் பெற்றுப் பிறக்கின்றன.  புதிதாக உயிர்களை உண்டாக்க எவராலும் முடியாது. உயிர்களை ஆக்கவும் அழிக்கவும் யாராலும் ஆகா. தொன்றுதொட்டு உயிர்கள் அளவையில் ஒரே படித்தாகவே இருந்திருக்க முடியும். ஆனால் உலகத்தில் ஒரு காலத்தில் மக்கட்தொகை குறைவாகவும் இன்னொரு காலத்தில் அவர் எண் மிகுதியாகவும் இருக்கக் காண்கின்றோமே என்று கேட்கலாம். அஃதுண்மை, மக்கட் பிறப்பெய்தியோர் மக்கட் பிறப்பே யெய்துவதென்பதும் பிற உயிர்கள் அவ்வப் பிறப்பே எய்துவதென்பதும் இயல்பன்று. பிறப்புக்கள் வினைக்கேற்ப மாறிவரும். ஆன்மாக்களில் வேறுபாடு கிடையா. மக்கட் பகுப்பினர் அதிகமாகவிருக்கால் அதற்கேற்றபடியாக மாக்களோ தாவரங்களோ குறைவாக விருக்கும். அவர் குறைவாயின் இவை ஈடு செய்யும். உயிர்களின் அளவை ஒன்றாகவே இருக்க முடியும். உயிர்களுள் மாக்கள் உயிரென்றும், மக்கள் உயிரென்றும், தாவரங்களின் உயிரென்றும் தனித்தனியே கிடையா. பிறவிகள்தோறும் ஒருயிர் மற்றொரு உடலிலே புகல் மரபு.


ஆகவே படைப்புக்கால மென்றொன்று. கிடையாது. அது கிடையாகாகவே கடவுள் படைப்புக் காலத்தில் ஜாதி வகுத்தார் என்ற கொள்கை பொருளற்றதாகி விடுகிறது. ஜாதி என்று இப்பொழுது கூறப்படுவது உடலைப் பற்றியதாக விருக்கின்றது. இது தவறுடைக்  கொள்கை. ஆன்மாக்களுள் ஜாதி பேதம் கிடையா. ஆன்மாக்களுள் பிராமணனென்றும் பிறன் என்றும் இல்லை. ஆன்மாக்களுள் ஆண் பெண் என்ற வேறுபாடுகூட இல்லை. எந்த உயிரும் எந்த உடலையும் எய்தும், வகுப்பு, கூட்டுறவு கருதி, தொழில்பற்றியும் பிறபற்றியும். மக்களால் பிரிக்கப்பட்டதே யன்றி வேறன்று. கூர்ந்து நோக்குழி வகுப்புப் பிரிவுக்கு இதைத் தவிர வேறு பொருள் கிடையாது. எல்லாமக்களும் எல்லாத் தொழிலும் செய்வதென்பது இயலாத காரியம். எனவே ஒரு தொழிலை ஒரு சாரார் செய்து வந்தனர். அவ்வாறு தொழில்செய்த முறைபற்றி அவர் அன்ன வகுப்பு இவர் இன்ன வகுப்பு என்று இயம்பப்பட்டார். தொழில்பற்றியே வகுப்புப் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. வென்பதற்குச் சில சான்று காட்டுவதுண்டு. தச்சர் என்று ஒரு வகுப்பைக் கூறுகின்றோம். "தச்தச்" என்று இழைக்கின்றமையால் அவர் தச்சர் என்ற பெயர் பெற்றார் தட்டார் என்று ஒரு பிரிவாரைச் சாற்றுகின்றோம். அவர் தங்கத்தைத் தட்டுதல் உடைமையினாலேயே அப் பெயர் பெற்றார். கொல்லர் என்றால் இரும்பைக் கொல்லுகின்றவர் என்பது பொருள். இப்படியே இன்னும் பலவகுப்புக்களையும் ஊகிக்க இடமுண்டு. குணந் தொழில்பற்றியே வகுப்புப் பிரிக்கப்பட்டதாகக் கீதையில் கண்ணபிரான் கூறியதாகவும் படிக்கின்றோம். "பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால்" என்று நமது பெரியாரும் பேசினார். பிறப்பினாலே வகுப்பு என்பது கிடையாது. பிறப்பிலே உயிர்கள் அனைத்தும் ஒக்கும். வேறுபாடெல்லாம் சிறப்பிலேதான்.

ஒவ்வொருவரும் பிறக்கும் பொழுதே வகுப்பு வகுப்பாகப் பிரிந்து பிறக்கவில்லை. தொழில் பற்றித்தான் ஒருகாலத்தில் வகுப்பாக வகுக்கப் பெற்றர்கள். அந்நாள் வகுப்பு வகுத்தவர் நன்னோக்கங் கொண்டே வகுத்திருத்தில் வேண்டும். இந்நாள் அது விபரீதமாக வந்துவிட்டது. ஒருகாலத்தில் அறமாக வகுக்கப்பட்ட ஒன்று நாளடைவில் மறமாக மாறுவது இயல்பு. பிறகு அது சீர்திருத்தப்படல் வேண்டும். சீர்திருத்தக்காரர்க்கு இவ்வுலகில் ஒருநாளும் ஒய்வு கிடையாது. இவ்வுலகம் உள்ளளவும் சீர்திருத்தம் நடந்துகொண்டே இருக்கவேண்டுவதே. ஒருகாலத்தில் சீர்திருத்தியது அப்படியே நிலைத்திருப்பது உண்மையானால் பிறகு நாட்டில் பெரியவருக்கு வேலையில்லை. ஒவ்வொன்றும் முன்னே எத்துணையோ பெரியோரால் சீர்திருத்தப் பெற்றதாகவே இருக்கும். நாளாக் நாளாகத் திரும்பவும் அது சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய நிலையை அடையும். ஒரு அறத்தைத் திருத்தி யமைத்துவிட்டால் இனி அது செவ்வனே நடந்தேறும் என்று எண்ணியிருத்தற்கு இல்லை. அதனே என்றும் கண் காணித்தே வரல்வேண்டும். நாளடைவில் அவ் அறத்தில் நேரும் மாற்றங்களை யெல்லாம் புதுக்கிக்கொண்டே வரல் வேண்டும்.

இந்நாள் வகுப்பு, சிறிதும் பொருளற்ற முறையில் கொள்ளப்பட்டு வருகிறது. இது புதுக்கப்படல் வேண்டும். அவ்வுண்ம்மையை மக்கள் நன்றாக உணரவேண்டும். வகுப்பு வகுக்கப்பட்டது -அதாவது ஜாதி பிரிக்கப் பட்டது இன்ன காரணங்கொண்டு என்ப்தை மக்கள் அறியவில்லை. ஒருவனுக்குப் பிறந்தவன் அவ்வகுப்பு என்றே கொள்ளப்படுவது மரபாகிவிட்டது. அவன் செய்யும் தொழில் என்ன என்பது நோக்கப்படவில்லை. பிறப்புப்பற்றியே வகுப்புப் பேசப்படுகிறது. வகுப்புப் பிரிக்கப்பட்டதன் நோக்கத்திற்கும் இந் நாள் கொள்ளப்படும் வகுப்பிற்கும் சம்பந்தம் சிறிதும் இல்லை.

வகுப்பு வகுத்த காலத்தில் நான்கு பெரும் பிரிவாக வகுக்கப்பட்டதாக அறிகிறோம். நான்கு பிரிவையும் வடநூலார் பிரம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என வழுத்துவர், நமது தொல்காப்பியர் முதலிய தொல்லாசிரியர்கள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனச் சொல்லினர். இவ்வாறாக நான்கு வகுப்பே தொடக்கத்தில் வகுத்தார்கள். இப்பொழுது இத்துணை வகுப்புக்கள் என்று எண்ணிச் சொல்ல முடியா நிலையில் அத்துனே வகுப்புக்களிருக்கின்றன. என்றாலும் இந்நான்குக்குள் எல்லாவற்றையும் பொருத்தி அடக்கிவிடலாம்,  நான்குக்குமேல் ஐந்தாவது வகுப்பு இல்லை. இழிந்த காரியங்களைச் செய்தோரெல்லாம் அந் நான்கு வகுப்புக்களிலும் சேர்த்துக்கொள்ளப் படாமல் ஒதுக்கப் பட்டார். அவர் வழிவழி வந்தோர் இன்று தாழ்ந்த வகுப்பாரெனச் சாற்றப்பெறுகிறார்கள்.

பழைய நாள் வகுப்பு வகுக்குங்கால் இந் நாள் அறியாமையால் வகுப்புக்களைக் கொள்வது போலல்லாமல் பொருளொடுதான் வகுத்தார்கள். எந்தெந்தத் தொழிலை யார் யார் செய்தாரோ அவரவர் அத்தொழிலுக்குரிய வகுப்பெனச் சொல்லப்பட்டார். செந்தண்மை பூண்டு உலகிற்கு அறம் உரைத்தவரை யெல்லாம் அந்தணர் என ஒரு வகுப்பாக வகுத்தார். நாடாண்டவரை யெல்லாம் ஒரு வகுப்பாக்கி அரசனெனப் பெயர் தந்தார். பொருள் தேடுதலையே கடனாகக் கொண்டவரை ஒன்றாகக் கூட்டி வணிகர் என்றழைத்தார். ஏனைத் தொழில் செய்தோரையெல்லாம் வேளாளர் என விளம்பினார். இவருள் கடைப்பட்டு இழி தொழில் செய்தோர் ஐந்தாங் குலத்தவரென அறையப்பட்டார். இன்றும் அவருக்குள்ள பெயருண்மையே அதனை வலியுறுத்தும். புலையர் என்றால் புலைத்தொழில்செய்கின்றவர் என்பதுபொருள். இழிதொழில்செய்து வருவோரே புலையர். தீண்டத் தகாதாரென இவர் செப்பப் பட்டார். அன்று இவர் தீண்டத் தகாதாராகக் கொள்ளப்பட்டதற்குப் பொருள் உண்டு.  தீண்டத்தக்க நிலையில் இவர் இல்லை. புலைத் தொழில் செய்து குடித்து வெறியாட்டாடும் உடல்மாசோடு கூடியவரைத் தீண்ட நல்லவர் நடுங்குவது மரபன்றோ!

இன்றும் அம்முறையில் வகுப்புக் கொள்ளப்படுமானால் ஏற்றுக் கொள்ளலாம். எவர் எத்தொழில் செய்கின்றாரோ அவர் அவ்வகுப்பைக் கொண்டால் பொருளுண்டு. அந்தணராவார் யார்? அறவோர். எதனால்? மற்றெவ் உயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான். எவரொருவர் தந்நலம் நாடாது, எதிர்கால வாழ்விற்குப் பொருள்தேடாது, உலகத்தின் பொருட்டாகவே தாம் வாழ்வதாகக் கருதி அறம்புரிந் துயர்கின்றாரோ அவரே அந்தணர். அவர் பிறப்பைப்பற்றி நோக்கவேண்டிய அவசியமே கிடையாது. அவ்வாறே நாடு புரக்கின்றவரெல்லாம் மன்னர்கள். வாணிபம் செய்கின்றவ ரெல்லாம் வணிகர்கள். வேளாண்மை புரிவோரெல்லாம் வேளாளர்கள் எவரெவர்க்கு எவ் எத்தொழிலில் அறிவும் ஆற்றலும் செல்கின்றனவோ அவ் அத் தொழிலை அவரவர் ஆற்றுவதில் தடையிருக்க வேண்டுவதில்லை. அவரவர் ஆற்றும் வினைக்கேற்ற வகுப்பை அவரவர் பெறுகின்றார் ஒரு வினை ஆற்றுவார் இன்னொரு வகுப்பின் பெயரால் அழைக்கப் பெறலாகாது. இவருள் எவரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் அல்லர்.

இம்முறையில் வகுப்புக்கொள்ளப் படுமானால் பொருள் உண்டு. இந்நாள் வகுப்பு வகுப்பெனக் அதற்குப் பொருள் இல்லை. தீண்டக் தகாதாரென்று கூறப்படுவோர் வகுப்பிற் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒருவனைப் பிராமணன் என்று எவ்வாறு கொள்ளமுடியும்? எவரெவர் தீண்டத்தகாத நிலையில் இருக்கின்றாரோ அவரெல்லாம் தீண்டத்தகாக வகுப்பைச் சார்ந்தவர் என்று தள்ளி விடுதல் ஒழுங்கு சான்றாக ஒன்று காட்டுகிறேன். திருக்கோயில்களில் சுயம்பாகி என்ற ஒரு வகுப்பார் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். அவர்களுடைய உருவத்தையும் உடலில் வழியும் வியர்வையையும் தோளில் தொங்கும் அழுக்குத் துண்டையும் கண்ணால் கண்டவர் அவர்களைத் தீண்டக் கனவிலும் கருதுவரோ? அவரும் அவரனையாருமே தீண்டத்தகாதார். அந்நாள் இன்னோரன்ன தீண்டமுடியா நிலையிலிருந்தவரே தீண்டத்தகாதாரென ஒதுக்கப்பட்டாரன்றி வேறன்று.

இன்று தீண்டத்தகாதரென யார் கருதப் பட்டிருக்கிறார்கள்? பிறப்பைப்பற்றி ஒரு பெருங்கூட்டத்தார். இது எவ்வளவுபேதைமை! ஒருவருக்குப் பிறந்தமையினாலே தீண்டத்தகாதாராக எப்படி ஆக முடியும். இந்நாள் தீண்டத்தகாதாரென ஒதுக்குங் கூட்டத்துள் அறவோர் உளர். வேறு வகுப்புக்களில் தீண்டத் தகாதாருளர் என்று செப்பவேண்டுவதின்று.

வகுப்புப் பிறப்புப்பற்றி என்பதை அறவே தொலைக்கவேண்டும். தொழில்பற்றி வகுக்கப்  பட்ட வகுப்பானது பிறப்புப் பற்றியதாக நீண்ட காலமாக நாளடைவில் மாறிவந்து விட்டது. வள்ளுவர் காலத்திற்கு முன்பே பிறப்புப்பற்றி வகுப்புப் பேசப்பட்டு வந்திருக்குமெனத் தெரிகிறது. அதனாலேயே அக்கொள்கையை அப்பெருமான் கண்டித்துள்ளார். அப்பொருளற்ற கொள்கையால் நாட்டில் பல பூசல்கள் விளைகின்றன. பன்னெடு நாட்பழகிய பழக்கத்தால் இது சட்டென்று விட்டகல்கின்றதில்லை. பிறப்புப்பற்றி வகுப்புக் கூடாதென்று கூறுவோருங்கூடப் பிறப்புப் பற்றி வகுப்புரிமை பாராட்டிக் கொள்வதை மறக்கின்றாரில்லை பழக்கத்தால். ஒவ்வொருவரும் நான் பெரிய வகுப்பு சிறிய வகுப்பு எனச் சண்டையிட்டுக் கொள்கிறார், பறையர்களுள்ளும் பாகுபாடு பாராட்டி உயர்வு தாழ்வு கற்பிக்கிறார். குறவர் மற்றவர்க்கெல்லாம். தாழ்ந்தவரென்றும் பறையருக்கு உயர்ந்தவரென்றும் கூறிக்கொள்கிறார். குறவருக்கு வண்ணார் உயர்ந்தவரென்று வழுத்திக்கொள்கிறார். அவருக்கு இன்னொருவர் உயர்ந்தவ ரென்று இயம்புகிறார். ஒருவருக்கொருவர் பாகுபாடின்றி ஒத்த தன்மையோடு இத்துணைப் பல ஜாதிகளுள் இரண்டு ஜாதி கூட இரா போலும் எப்பொழுது பிறப்புப் பற்றி மற்றொருவரைத் தங்கட்குத் தாழ்ந்தவரெனச் சாற்றுகின்றனரோ அப்பொழுதே தாங்கள் இன்னொருவருக்குத் தாழ்ந்தவர் என நிச்சயமாக ஒப்புக்கொள்ள வேண்டியவர் ஆகிவிடுவார்.  எவருக்கும் எவரும் தாழ்ந்தவர் உயர்ந்தவர் அல்லர். எல்லோரும் பிறப்பினால் ஒத்தவர் என்ற உண்மை உணர்வு பெறவேண்டும்.

ஒரு கூட்டத்தார் தங்களைவிட உயர்ந்தவர்கள் என்று சாற்றிக்கொள்பவரோடு சண்டையிட்டு அவர்களைத் தங்களோடு சமமாக வரும் படி அழைக்கிறார். தங்களுக்குத் தாழ்ந்தவர்களாகத் தாங்கள் கருதுபவர்களைத் தங்களோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இது பெரிய மூடத்தனம். வேறு சில கூட்டத்தார் தாங்களும் பிராமணராகிவிட விரும்புகிறார். தங்கள் பெயருக்குப் பின்னே பிராமணர் என்று சேர்த்துக்கொள்கிறார், செளராஷ்ட்ரப் பிராமணர் விஸ்வப் பிராமணர் அந்தப் பிராமணர் இந்தப் பிராமணர் என்று கூறிக் கொள்கிறார். எல்லோரும் இப்படிக் கூறிக் கொள்வதால் யாது பயன்? பிறப்புப்பற்றி வகுப்பு என்ற மாயையுைக் கொல்வதற்கு இது வழியாகாது.

பிறப்பினாலே பிராமண ரென்பார் உயர்வு என்ற எண்ணம் இவர்கள் உளத்தை விட்டகலவில்லை. அதனாலேயே அப்பெயரில் இவ்வளவு மோகங் கொண்டுள்ளார். பிராமணர் என்று தனனை நினைத்துக்கொண்டிருப்பவர் தன்னைத் தான் உயர்வு என எண்ணிக் கொண்டிருத்தல் ஒரு வியப்பன்று. அவர் உயர்வென மற்ற வருங் கருதுதலே முட்டாள்தனம். தான் உயர்வெனக் கருதிக் கொண்டிருக்கும் ஒருவரைக்  குறை கூறுதற்கு ஒன்றுமில்லை, மற்றவர் புத்தியோடு நடந்துகொண்டால் யாவும் ஒழுங்காக வந்துவிடும். பிறரை இகழவேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் நீர்மையைத் தாங்கள் அறிந்து தக்கபடி நடந்து கொண்டால் உயர்வு தாழ்வு என்ற கொள்கை தானே பறந்துவிடும். எதற்கும் பிறரைக் குறை கூறுதல் நலமன்று. வகுப்பு, பிறப்பினால் அல்ல என்பதை மக்கள் உணருமாறு செய்கையில் காட்டவேண்டும்.

வகுப்பு இன்று கொள்ளப்பெறும் நிலையில் இருக்குமானால் அதற்குப் பொருள் சிறிதுமில்லை. இப்பொழுது வகுப்புக்களெல்லாம் செயலில் கலந்துவிட்டது. வெளியே மட்டும் வகுப்பு வகுப்பென்று பேசிக்கொள்ளப்படுகிறது. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்கின்றார், பிறப்புக் கொண்டு வகுப்புப் பேசிக்கொள்கிறார். எத்துணை தலைமுறைக்கு முன்னர் அவ் வகுப்புக் குரிய தன்மை அவர் பரம்பரையை விட்டகன்றது என்பதை அறிய முடியா நிலைமையில் அவ் வகுப்புப் பெயரைச் சொல்லிக்கொள்வதை விட்டபாடில்லை.

பண்டை முறையில் கொள்வதானால் இன்று ஒவ்வொருவரையும் தனித்தனியே பொறுக்கிப் புதிதாகச் சேர்க்கவேண்டியதாகவே உளது இன்றைய தினம் மக்கள் உடல் பெற்றோரை யெல்லாம் மனிதர்கள் என்ற ஒரே அளவில் வைத்து இப்பொழுதிருக்கிற வகுப்பை மறந்து  அவரவர் தொழிலைப் பார்த்துப் புதிய வகுப்புக்கள் காண்டல் வேண்டும். சில் பல ஆண்டுகள் சென்று திரும்பவும் இன்றைய நிலையையே உறும். அன்றி, ஒருவர் அந்தணர்க்குரிய தொழில் பலவும் வணிகர்க்கோ மற்றவர்க்கோ உரியவுமான தொழில் பலவும் செய்தல் கூடும். அவரை எவ்வகுப்பிற் சேர்ப்பது? இன்னோ சின்ன சங்கடங்கள் . நேர்வதால் இவ்வகுப்பை ஒர் பெரும் பொருளாகக் கொள்ளவேண்டாம். அந்தந்தத் தொழில் ஆற்றுங்கால் அவ்வவ் வகுப்போடு சேர்ந்து கொள்ளட்டும். மணம் உணவு முதலியவற்றிற்கும் வகுப்புக்கும் சம்பந்தமில்லை.

இந்நாள் பொருளற்ற முறையில் வகுப்பைக் கொள்வதனால் ஏற்படும் பூசல்கட்கு ஒர் எல்லை இல்லை. எனவே வகுப்பின் நீர்மையை உள்ளவாறுணர்ந்து மெய்வழிபற்றினாலன்றி இப்பூசல்கள் ஒழியா. நமது நாடு இவ்வகுப்புப் பூசலால் பெரிதும் கெட்டுவருகிறது. ஒரு குலத்திற் பிறந்தமையினாலே அவர்தீண்டத்தகாதார் என ஒரு பெருங் கூட்டத்தார் ஒதுக்கப்படுதல் போன்ற அறியாமை வேறு என்னிருக்கிறது? அவரை ஆலயங்கட்குள் விடுவதில்லை யென்பது மூடித்தனமன்றோ? நமது ஹிந்துமக்கள் பெரிதும் மூட வழியிலேயே கிடந்துழல்கின்றார். உலகம் போற்றும் காந்தியடிகளையும் நுழைய விடாமல் தடுத்தார்கள் முன் ஒரு கோவிலில் காரணம் அப்பெருமான் கப்பலேறிக் கடல் கடந்து லண்டன் போய் வந்தமை: காந்தியடிகளைத் தடுத்தார்களென்றால் மற்றவற்றைப்பற்றி எழுத்துவானேன்.

தீண்டத்தகாத நிலையிலுள்ளாரைக் கோவிலினுள் விடுவதில்லை யென்றால், அது பொருளோடு இருக்குமானால் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். தீண்டத்தகாத செயல்களை யார் யார் செய்கின்றாரோ அவரையெல்லாம் கோவிலுள் விடாதீர்கள் அது முடியுமா? அப்படியானால் பார்ப்பார் என்று சொல்லிக்கொள்ளுவோருள்ளும் மற்றும் உயர்ந்த வகுப்பாரென்று சொல்லிக்கொள்ளுவோருள்ளும் பலர் கோவிலுள் நுழையத் தகுதியற்றாருளர். அவரெல்லாம் தாராளமாக நுழைய, பொருளின்றி ஒரு கூட்டத்தாரை ஏன் நிறுத்தல் வேண்டும். அவ் அநீதிகளெல்லாம் பார்ப்பார்தாம் செய்கின்றாரென்று பகருதல் தவறு. எல்லோரும் செய்கின்றார், திருச்செந்தூரில் வாணிய சகோதரர்களைக் கோவிலுக்குள் விடலாகாது என்று வாதாடியவர்களுள் பெரும்பாலார் திருநெல்வேலி ஜில்லா வேளாள நண்பர்களே, யாவர். இன்னவற்றை யாரும் செய்தலாகாது. சிலர் தங்கட்கு மேலான வகுப்பு என்று தாங்கள் கருதிக் கொண்டிருப்பவரோடு தாம் கலக்க விரும்புகின்றனர்; தங்கட்குக் கீழானவர் என்று கருதிக்கொண்டிருப்பவரை அடக்கவே விரும்புகின்றன்ர். இவர் பெரிய பேதைகளே யாவர்.

உண்மையோடும் நடுநிலையோடும் இவ்வகுப்பு வேற்றுமையை ஒழிக்க அன்பர்கள் தைரியமாக முன்வரவேண்டும். இந்நாள் நாட்டிலிருக்கும் வகுப்புச் சண்டைகளை ஒழிப்பதற்குப் பொருளற்ற வகுப்புப் பிரிவைத் தொலைத்தலே வழியாகும். எதினும் அச்சங் கொள்தல் ஆகாது. உளவலிகொண்டு முன் வரல் வேண்டும். இன்னோரன்ன காரியங்களில் தலையிடுவார், உயிரை எவரானும் அழிக்க இயலாதென்ற உண்மையை உணர்தல்வேண்டும். அன்பர்கள் இரண்டு பொருள்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளல் வேண்டும். உடல் அழிவுள்ளது என்பது ஒன்று; உயிர் அழிவற்றது. என்பது மற்றொன்று. அழிவில்லாததை எவராலும் அழிக்கமுடியாது. அழிவுள்ளதை என்றும் காத்து வைத்துக்கொள்ளவும் முடியாது. அழிவுள்ளது என்றேனும் அழிந்தே தீரும். அழிவில்லாதது என்றும் அழியாது. எனவே, அழிதன் மாலையவாய உடலைவிட அஞ்சவேண்டுவதே இல்லை. உடல் அழிவுள்ளது என்பதுபற்றி நீண்டு விளக்கவேண்டிய அவசியம் இல்லை. நெருனல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமையுடையது இவ்வுலகு. "செத்துக்கிடக்கும் பிணத்தருக்கே இனிச்சாப் பிணங்கள் கத்துக் கணக்கென்ன கண்டீர்" என்றார் பட்டினத்தடிகள். "செத்தாரைச் சாவார் சுமந்து என்றார்". நாலடியில், அன்றி இதற்குச் செய்யுட் சான்றே வேண்டுவதின்று. நாள்தோறும் நடைமுறையில் பார்க்கின்றோம், நின்றான் இருந்தான் கிடந்தான். தன்கேளலறச் சென்றான் எனப்படுதலை, எத் துணைக்காலம் இருப்பினும் முடிவில் இறப்பது சரதம். ஆதலால் உடலொன்றையே பேணி அதன்பொருட்டு அஞ்சி நல்லவற்றிற் றலைப் ப்டாதிருத்தல் தகாது. இதனால் உடலைப் பேண வேண்டாமென்று நான் கூறுவதாக எவரும் கொள்தல் ஆகாது. உடலின்றிய உயிர் ஒன்றும் செய்யமுடியாது. உடம்பைத் துணையாகக் கொண்டுதான் உயிர் இயங்க முடியும். அதனாலேயே "உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே" என்றார் திருமூலனார்.

நில்லாத உடலாசை கொண்டு அழியாத உயிர்க்குறுதி பயக்கும்வினைகளை ஆற்றாதொழிதல் ஆகாது என்பதற்காக இத்துணை கூறியது நாட்டின் நலத்திற்கு இவ் வகுப்புப் பூசல் போன்றன. பெருங்கேடு விளைக்கின்றன. இன்னோரன்னவற்றை மக்கள் அறியுமாறு உள்ளவாறுணர்த்த வேண்டுவது மிகவும் அவசியம். இப்பணியில் தலையிட வேண்டுமென்று எனது அன்பர்களையெல்லாம் வேண்டிக்கொள்கிறேன்.




"https://ta.wikisource.org/w/index.php?title=குற்றால_வளம்/வகுப்பு&oldid=1534962" இலிருந்து மீள்விக்கப்பட்டது