குற்றால வளம்/குற்றால வளம்


குற்றால வளம்

குற்றாலம் என்பது மங்கலப் பாண்டி வள காட்டின்கண் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஓர் இயற்கை நிறை சிற்றூர். ஊர் சிறிதே யெனினும் மக்கட்கு அது கரும் நல்லின்பத்தைப் பெரும் பேரூரும் தாராது. அவ்வூருக்கு அரணாகயாண்டும் மலிந்து கிடப்பது மலையேயாகும். அம்மலை நமது நாட்டில் சில்லிடங்களில் இருக்கும் வறண்டமலை போன்றதன்று. இயற்கை வளங்கள் எல்லாவற்றையும் அம் மலை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறது. மேற்குப் பெருமலைத் தொடரின் பகுதியைச் சேர்ந்தது அம்மலை. குற்றாலத்தை வளமுடைப்பதியாக ஆக்கியது அம்மலையேயன்றிப் பிறிதென்? நீண்ட பல துரங்களினின்றும் தங்கள் காரியங்களை யெல்லாம் விடுத்துப் பலப்பல மக்கள் திங்கட்கணக்காக ஆண்டுவந்துறைகின்றார் என்பதொன்றே அப் பெருமலையின் வளத்தை வழுத்தாவோ?


வளம் வளம் என வழுத்துதல் கண்டு, அது பொருள் தெரிந்துகொள்ள முடியாத சொல்லென எவரும் மயங்க வேண்டுவதின்று. வளம் என்பதற்கு வருவாய், அழகு, செழுமை முதலிய  பல பொருள்களுண்டு. குற்றாலம், இவ்வளத்தை இம் மூன்று பொருள்களினும் எடுத்தாள ஏற்றதாக அமைந்துளது. "குற்றாலத்தில் வருவாய் எது? ஆண்டுச் செல்வோர்க் கெல்லாம் செலவு தானே? எனவே அப்பொருள் பொருந்தாது" என்று சிலர் எண்ணலாம். வருவாய் என்பது செல்வப்பொருள் ஒன்றைமட்டுமோ குறிக் கொள்ளும் கேவலம் அவ் ஒன்றையே அது குறித்தல் சிறப்புடைத்தன்று. குற்றாலம் போதருவார் எய்தும் வருவாய் கொஞ்சமோ? உலகில் உயிர்கள் நலம் பெற்று வாழ்தற்கு இன்றியமையாப் பொருள்களாகிய நீரையும் காற்றையும் வேண்டும் அளவு குற்றாலம் கொடுக்கின்றது. இவ்வருவாயைவிட வேறு என்னே வேண்டும்? எனவே இப்பொருள் பொருந்துவதே.

அழகு குற்றாலத்தில் உண்டு என்று கூறவும் வேண்டுமோ? குற்றாலத்தில் காணப்படும் யாவும் அழகுதானே. அழகற்ற ஒன்றை அந்நன் மலையில் காணமுயுமோ? எல்லாம் அழகு! எல்லாம் அழகு என்னே குற்றால மலையின் இயற்கை அழகு! மலைமேல் ஏறிவிட்டால் கட்படுவன யாவும் அழகன்றி வேறென்! அவ்வியற்கை அழகே அழகு! நகரங்களில் எத்துணைக் கோடி பணங்களைச் செலவிட்டுச் செய்யப்படும் செயற்கை அழகும் அவ் இயற்கை அழகிற்கு ஈடாகுமா? மனிதர்க்ளால் ஆக்க முடியாத அழகுகள் பல அம் மலையில் திகழ்கின்றன.  இயல்பாகவே அமைந்து கிடக்கும் அம்மலைக் கற்களை முதலில் நோக்கலாம். அம்ம்ம்ம! என்ன அழகிய கற்கள்! எத்துணைப்பலமாதிரி எவ்வளவு பெரிய கற்கள்! எவ்வளவு சிறிய கற்கள்! உலகத்தில் இதற்கு மேல் பெரிய கற்களில்லையென்றுகூட நிச்சயிக்கத் தக்க மிகப் பெரிய கல்தொகுதியும் காணப்படுகின்றன. இதற்குச் சிறிய கற்களில்லையென்று இயம்பத் தக்க நுண்ணியகற்களும் கிடந்தழகு செய்கின்றன. இவைகளைக் காண்டொறும் "இவற்றை யாரே ஆக்கினார் என்னே.இயற்கையின் அற்புதம்" என்ற நினைவு. தோன்றாதொழியுமோ? தச்சன் உளியினாற் செதுக்கி அரும்பாடுபட்டு ஒழுங்குப்படுத்தனாலன்ன அழகிய பலப்பல வடிவான கற்குப்பைகள் நிரல் நிரலாக மலையின் எல்லாப்பகுதிகளினும் கிடந்தணி தருகின்றன. உருண்டை வடிவமாகவும் சதுர வடிவமாகவும் நீண்ட வடிவமாகவும் முக்கோண வடிவமாகவும் பிற எல்லா வடிவமாகவும் சிறிதாகவும் பெரிதாகவும் உடைக்கப்பட்டதாக, இல்லாமல் தனித்தனியே கிடந்து கண்ணக் கவர்கின்றன. சில கற்கள் வைரத்தைப் போன்று ஒளிவிடுகின்றன. ஈண்டு ஒன்று ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நமது புராண உலகத்தார் கில் கல இலிங்கங்கள் உளியினாற் செய்யப் படாதன என்று பெருமை கூறுகின்றன்ரல்லவா? அவை இன்னமலைகளில் இயல்பாகக் கிடந்து கொணரப்பட்டனவாகவே இருத்தல்  வேண்டும். யாண்டுக் கண்ணைச் செலுத்தினாலும் பச்சைப்பசுமரத்தின் அழகு ஒன்றே கண்களை நிறைத்து நிற்கும். அருவிவீழ் அ ழ கு. அறையுந்தகையதோ? இது நிற்க,

செழுமை என்ற பொருளே ஈண்டு வளத்திற்கு முற்றும் பொருத்தும். குற்றாலமாமலையில் எல்லாவற்றையும் விட மிகுந்து மேலோங்கி நிற்பது செழுமையேயாகும். மலையில் நின்று நோக்கினால் கண் செல்லும் தூரம் வரைப் பச்சை நிறமே தென்படும்; நீல நிறக் குடுமிக் குன்றுகள் யாண்டும் வானத்தை அளாவி நிற்கும். அம்மலைமீது மஞ்சுதவழ் இயற்கைப் பெரும் பேரழகை எவ்வாறு அலங்கரிப்பது! அம்மலையை இத்துணை வளம் படுத்தியது மஞ்சல்லவா? செழுமை மல்கித் துதைந்து கிடப்பதற்குக் காரணமாக இருப்பது அம்மேகமே.

ஏன்? சுருங்கக்கூறுமிடத்து, குற்றாலத்தை இத்துணை வளமுடை நகராக்கி மக்களை அறை கூவி அழைத்து இன்பமீயத் துணைக்காரணமாகின்றது கொண்டலே. அது யாண்டும் உலாவுகின்றது. அது, தனக்கு என்றும் இருக்க ஏற்ற இருப்பிடமாகக் கொண்டிருப்பது குற்றாலமலை போன்ற பெருங்குன்றுகளே. மழை சிறிதும் வருத்தமின்றிக் தவழ்வதற்கு ஏற்றபடியாக உயர்ந்து நிமிர்ந்து வானந்தடவும் சிகரங்கள் பலவற்றைக் கொண்டிருக்கும் குற்றாலம் மலைபோன்ற மலைகளை, முகில்,  விளையடுமிடமாக ஏற்றிருப்பதில் வியப்பொன்றுமில்லை. அதனாலேயே வானம் முட்டும் பெரு மலைகளில் செழுமை மண்டிக் கிடக்கின்றது. அத்தகைய செழுமை பெருகிக்கிடக்கும் இடங்களில் குற்றாலமலைப்பதியும் ஒன்றாம்.

சீதளம் மிகுந்த இடங்களிலேயே நல்மரங்கள் செழித்துக் கொழுத்து ஓங்கி நிற்கும். குற்றால மலையில் வளமலி நன்மரங்களும் செடி கொடிகளும் மிகப்பல. ஜாதிக்காய். கிராம்பு, ஏலம், ஆரஞ்சு, வங்கிஸ்தான், பம்பிளிமாஸ், வாழை, பலா, மா, கொய்யா, தென்னை, கமுகு, சந்தனம், குங்கிலியம், செண்பகம், ரோஸ், முல்லை முதலிய மரங்கள், செடிகள், கொடிகள் குற்றால மா மலையைப் பெரிதும் வளம்படுத்த நிற்கின்றன. பழங்கள் காய்கள் இவற்றின் பருமன் அம் மலைவளமாகிய செழுமையைச் செவ்விதிற் காட்டுகின்றன. அம் மலையிருக்கும் உயிர்ப்பிராணிகளும் மலைவளங் காட்டாம்ல் இல்லை. எல்லாம் செழுமையாகவே பருத்துக் கொழுத்திருக்கின்றன. அம்மலைப் பதியாகிய குற்றாலத்தில் பருவகாலக் துய்த்து வருவார் பலரும் உடல் நலம் பெற்று அம்மலைவளங் காட்டுவது கண் கூடாமானால் பிறிதைப்பற்றிப் பேசுவானேன்?

குற்றால மாமலை தவழ இடங்கொடுத்து, அதன் பயனை நுகர்ந்து, தான் வளமாகி, மரங்களையும் செடிகளையும் உயிர்களையும்

நன்கு செழிக்கச்செய்து, ஆண்டு வரும் மக்கட்கு காற்றையும் அருமை மிக்க நிரையும் உணவுப் பொருள்களையும் உதவிக் கண்ணுக்கும் உடலுக்கும் உயிருக்கும் நல் இன்பம் கொடுத்து ஆட்கொள்ளும் பேற்றை இயற்கையிற் பெற்றுளது. அதிலும் பற்பல இடங்களிலும் காற்றும் நீரும் கடுகளவும் இன்றி வறண்ட கோடை காலத்தில் இம்மலை செய்யும் இப்பேருதவி சிறிதோ!

குற்றாலத்தை விட இன்னும் குளிர் மிகுத்த மலை பலவுண்டு. ஆனால் குற்றாலத்தைப் போல் மக்கள் நீராடுவதற்கென்றே அமைந்த சீரான அழகுடைய அருவிவீழ் மலைப்பதி யாண்டும் இருக்குமா என்பது ஐயமே. குற்றாலத்தில்பலபல பகுதியாகப்பிரிந்து அருவி வீழ்ந்து அப் பகுதியையும் அணித்தாகவுள்ள இடங்களையு ம் பெரிதும் வளம் படுத்தி நிற்கின்றது. மலை உச்சியிலிருந்து அவ் அருவிதோன்றிவருகிறது. உச்சி மலையில் மேகத்தால் பெய்யப்பட்ட நீரே மலையில் ஆறாக ஓடி வந்து கீழ்த்தரைவரை வந்து அருவியாக வீழ்ந்து நதியாக ஓடுகின்றது. இவ் வருவித் தொடக்கம் யாண்டு என்பதை பார்க்கக் கூடலில்லையெனினும் மலைமீது சில தூரம் சென்று காணமுடிகிறது. மலை, ஏறியும் இறங்கியும் மாறி மாறி இருப்பதால் மலைமீது பற் பல இடங்களில் அருவி வீழ்கின்றது. அதிற் சில இடங்களில் மிக அதிகமாகக் கொட்டுகின்றது. அவ்விடங்களில் சில பெயர்களும் வ்வருவிகட்குப் பேசப்படுகின்றன. இப் பொழுது மக்கள் கண்ணுக் கெட்டுவதில் எல்லாவற்றிற்கும் உயரமாக விழும் அருவியைத் தேனருவியென அழைக்கின்றனர். அதற்குக் காரணம் உண்டு. இன்றும் ஆண்டுத் தேன் கூடுகள் நிறைய இருக்கின்றன. அதற்குச் சிறிது கீழாக ஒரருவி வீழ்கின்றது. அது இப் பொழுது செண்பகதேவி அருவி எனச் சொல்லப்படுகிறது. ஆண்டுச் செண்பகதேவி என்ற ஒரு அம்பிகையும் காணப்படுகின்றது. இவ் விடத்தைச் செண்பக அடவி என முன்னர் செப்பியதாகத் தெரிகிறது. செண்பக மரங்கள் அன்று ஆண்டு மல்கியிருந்திருக்கும் போலும்! எல்லாவற்றிற்கும் கீழே தரையில் வீழ்வதை வட வருவி என்று வழுத்துகிறார். அது திக்கு நோக்கிப் போலும்! அன்றி அது பெரிய அருவியென்றும் பேசப்படுகிறது. அது அளவு நோக்கி. இன்னும் சிற்றருவி என்று ஒன்று வீழ்கின்றது. அது பெரியதை நோக்கி, ஐந்தருவி என்று ஒரிடத்திருக்கின்றது. அது ஒரே இடத்தில் ஐந்தாகப் பிரிந்து வீழ்வதாகக் கொண்டு. குற்றாலத்தில் அருவிக்காட்சி பெரிதும் அருமையானது. சிறு சாரல் வீழ்ச்சி உவக்கத்தக்கது. குற்றால வளம், அறிஞர் அறிவை-புலவர் உள்ளத்தைப் பெரிதும் ஈர்ப்பது. குற்றால வளம்பற்றி இயற்கைப் புலவர் பெருமான் திருஞான சம்பந்தர் செப்பிய சில இயற்தை அழகுப் பாட்டுகளின் வரிகளை இங்கு அநுபவிப்போம்.

அம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பசர் சோலைக் கேசலவ்ண் டியாழ்செய் குற்றாலம்
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லலை முல்லை மெல்லரும் பீனுங்குற்றாலம்
பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்குங் குற்றாலம்
மலையார் சாரல் மகவுடன் வந்த மடமத்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்துங் குற்றாலம்
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்
கொய்மா ஏனல் உண்கிளி ஒப்புங் குற்றாலம்
நீல்நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக்
கோல மஞ்ஞை போடையோ டாடுங் குற்றாலம்
போதும் பொன்னும் உந்தியருவி புடைசூழக்
கூதன் மாசி நுண்டுளி தூங்குங் குற்றாலம்
அரவின் வாயின் முள்ளெயி றேய்ப்ப அரும்பின்று
குரவம் பாவை முருகமர் சோலக் குற்றாலம்
பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்
குருத்தம் ஏறிச் செல்வழி பாடுங் குற்றாலம்"