குற்றால வளம்/தெய்வத்தன்மை


தெய்வத்தன்மை

தெய்வத்தன்மையாவது யாது என்பதை ஆராயலாம். மாக்கள் தன்மை, மக்கள் தன்மை, தெய்வத்தன்மை யாதி தன்மைகள் பலவாகும். அவற்றுள் தெய்வத் தன்மையை ஈண்டு நோக்கலாகும். தெய்வத் தன்மையைப் பார்க்கும்முன் தெய்வம் என்றால் என்ன எனச் சிறிது சிந்தித்தல் அவசியம். தெய்வம்-கடவுள்-இறை என்பவற்றை மக்கள் ஒரே பொருளில் வழங்குகின்றனர். தெய்வத்தைப் பற்பலரும் பற்பலவாறு கொள்கின்றனர். தெய்வமென ஒரு பொருள், உருவத்தோடு மக்களைப்போல் இருப்பதாக எண்ணுவோர் தொகையே உலகில் மிகுதியாக இருக்கின்றது. ஒவ்வொருவர் ஒவ்வொரு உருவத்தைத் தெய்வமெனக் கொள்கின்றார் உண்மையில் தெய்வம் பலவன்று. தெய்வம் ஒன்றுதான். அது, ஒரு உருவுடையதன்று. மேலொரு பொருளுமில்லா ஒரு பெரும் சக்தியே தெய்வம். அத் தெய்வம் யாண்டும் நிறைத்துளது; அது எல்லாமானது.

தெய்வத்தன்மையாவது யாது? இதற்குச் சுருக்கமாக விடைகூறின் உயரிய செயல் என்று உரைக்கலாம். எதெது உயரியசெயலோ அவ்வனைத்தும் தெய்வத்தன்மை பொருத்திய செயல் என்று தடையின்றிச் சாற்றலாம். ஒருவனைத் தெய்வக் தன்மையுடையான் என்றால்  அவன் உயரிய செயல் உடையான் என்பதே பொருள். அன்றிக் தெய்வத் தன்மைக்குப் பிறவியும் பிறவும் காரணமன்று. எல்லாவற்றிற்கும் செயலே காரணம். "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கரும்மே கட்டளைக்கல்." .


மக்கள் பலர் இவ் உண்மை ஓராது மயக்கங் கொள்கின்றனர். தெய்வத்தன்மை யென்பது, யாண்டோ வானத்திலிருந்து கொணரத் தக்க ஒரு பொருளென்று கருதுகின்றனர். அது, தங்கட்கு எந்நாளும் கிட்டாதென எண்ணுகின்றனர். தெய்வத்தன்மையின் உண்மையை நன்கு ஆராயும் அறிவுபெறார், அதை ஒருநாளும் அடையப்போவதில்லை யென்பது உறுதிதான். அவ்வுண்மையை உணர்தல் வேண்டும். தெய்வத்தன்மை யென்பதை எல்லோர்க்கும்பெற உரிமை உண்டு. முயன்றால் அது நிச்சயமாகக் கிடைக்கும். பிறக்கும் பொழுதே தெய்வத்தன்மையோடு கூடப்பிறந்தாலன்றி அது கிட்டாதென்பது பிழை. செயல், என்று உயரியதாகிறதோ அன்று அச்செயல் வல்லார் தெய்வத்தன்மை பெற்றவராகிறார்.


தெய்வத்தன்மையின் மெய்ப் பொருள் அறியாமையாலேயே, மக்கள் அத்தன்மைக்கும் தங்கட்கும் தொடர்பு இல்லையென மயங்கி இடர்ப்பட்டுழல்கின்றார். அதனாலேயே தெய்வத்தன்மை பெற்றவராக முடியாமல் பலர்

மாண்டுபடுகின்றார். இந்நாள் நம் காட்டில் கற்ற வகுப்பார் என்று கழறப் பெறுபவர்கூட, தெய்வத்தன்மை இன்னதென அறியாது தியங்கியழிகின்றார். ஈண்டுக் கற்றவர் என்பதற்குப் பொருள் அறிவாளர் என்றுகொள்ள முடியவில்லை. நம் நாட்டுக் கல்விக்கும் மெய்யறிவிற்கும் தொடர்பில்லை. "கல்வியும் அறிவும்" என்ற கட்டுரையில் அதைக் காணலாம்.


தெய்வத்தன்மை யென்பது பிறவியிலேயே அமையும் ஒன்று என நம்மவருள் கற்றாரும் மற்றாரும் ஆகிய பலர் கருதுகின்றார். அது, இக் காலத்துப் பிறந்தாருள் யாருக்கும் இல்லையென்றும் அவர் நினைக்கின்றார். பழைய நாள் பிறந்தாருள் அத்தன்மை பெற்றிருந்தார் பலர் உளர் என்றும் அவருக்கு ஈடாவார் இந்நாள் இலர் என்றும் இருக்கமுடியாதென்றும் அன்னார் அறைகின்றார். இது எத்துணைப் பெரும் மூடக் கொள்கை. அன்றியும் தெய்வத் தன்மை பொருந்தியவர் என்பதற்குச் சிற்சில இலக்கணங்கள் செப்புகின்றனர். யோனி வாய்ப் பிறவாதாரே தெய்வத்த்ன்ன்மயுடையார் என்று ஒரு கூட்டத்தார் கூறுவர். அவர், தாம் தெய்வத்தன்மை யுடையாரென்று செப்புகின்ற சிலர் யோனிவாய்ப்பிறவாதார் என்று சரிதங்கள் எழுதிவைப்பர். அநுபவத்தில் யோனிவாய்ப் பிறவாதார் எவரையும் இந்நாள் நாம் கண்டேமில்லை. நடைமுறையில் அவருண்மையைக் காட்டமுடியாமையாலேயே இந்நாள் தெய்வத்தன்மை வாய்ந்த பெரியார் பிறப்பதில்லையென அவர் பேசுகின்றனர். இப்பெரும் பொய்யை அறிவு உலகம் யாங்ஙனம் ஏற்கும்?


மற்றும், தெய்வத்தன்மையுடையார் என்று சிலரைக்கூறி, அவர்பால் இயல்புக்கு மாறான செயல்களை ஏற்றி, அவை வல்லார்தாம் தெய்வத்தன்மையுடையார் என்று செப்புதல் மிகப் பெரும்பாலார்க்கு மரபாகிவிட்டது. இதில் எக்கச்சமயத்தாரும் பின்வாங்கவில்லை. எல்லோரும் தங்கள் சமயாச்சாரியார்களின் தெய்வத்தன்மைகளை விளக்க அற்புதங்கள் என்ற பெயரால் பொருத்தமற்ற செயல்களையெல்லாம் புகன்றிருக்கின்றார். அவர் கூறிவைத்திருக்கும் அச்செயல் வல்லார் எவரும் இந்நாள் இருக்கமாட்டாரென்பது எல்லோர்க்கும் உறுதி. அவ்வாறு செய்யும் ஒருவரை இன்று கண்கூடாகக் காட்ட முடியாதன்றோ? அன்றிருந்தார் என்று எழுதிவைத்தல் அரிதன்று. இன்று அப்படிக் காட்டமுடியாதென்ற துணிவு கொண்டுதான் அன்றிருந்தார் தெய்வத் தன்மை யுடையாரென்றும் இன்று அன்ன தன்மையாளர் யாரும் இருக்கமுடியாதென்றும் அவர் அறைகின்றார். அஃதுண்மைதான். செய்யத்தக்க செயலாக இருந்தாலன்றோ அது செய்பவர் இருப்பர்? செய்யத்தகாத செய்வார் அன்றுமில்லை, இன்றுமில்லை என்றுமில்லை யென்பது சரிதம். சென்றவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம். எழுத்தில்  எதனையும் எழுதிவிடலா மன்றோ? எழுதினதற்காக அது உறுதியாகிவிடுமா? அறிவு உலகமாகிய தீயில் அச்சாணங்கள் சாம்பலாவது சத்தியம்.


இந் நாள் வாழும்மக்கள் சரிதங்களில் பின்னாளில் அற்புதங்கள் சேர்க்கப்பட்டுவிடும். இப்படியே. புனைந்து அறிவை அழித்துக்கொண்டு செல்கிறார் மூடமக்கள். இத்தொல்லைகள் தம் சரிதையில் இடம்பெறலாகாதென்று கருதியே காந்தியடிகள் தம் காதையைத் தாமே எழுதி வைத்தார். தெய்வத்தன்மைக்கு அவர்கள் அறையும் அற்புதங்கட்குப் பொருள் உண்டோ? அக்காதைப் பொய்களை யெல்லாம் நிகழ்ச்சியாக்கொண்டு, அவைகளைத் தெய்வக் தன்மையுடைய பெரியார்க்கு இலக்காகக் கொள்தல் பெருமூடத்தனமாகும். பன்னாள் முன்னர் இறந்துபட்டவர்களை உயிர்ப்பித்ததாகக் கூறுவனபோன்ற பெரும் பொய்க் கதைகளை மெய்யென்று நம்புவதற்கு இரங்குதலன்றி என் செய்வது! தவிர,


பிறப்பினாலோ, அற்புதங்கள் ஆற்றியதாக அறைவதாலோ, பிற எதனாலோ தெய்வத் தன்மையுடையவரென்று சிலருக்கு முத்திரையிட்டுவிட்டு அவர் செய்யும் இழிசெயல்களையும் பெருமைப்படுத்தவும் அஞ்சுகின்றாரில்லை அவ் அற்புதக்கூட்டத்தார். என்னே! அப்பேதைகள் மதியிருந்தவாறு!! செய்தவர் மாகானாலென் செயலைப்பற்றிய தன்றோ பெருமையும் சிறுமையும்? சிறிய செயலைச் செய்த வன்றே, முன்னேபெரியவராக இருந்த ஒருவர் சிறியவராகிவிடுகிறார் என்பதில் தடையென்னே? "தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக்கடை" என்பது வள்ளுவர் குறள், மயிர் தலையிலே இருக்கும் பொழுது அது எவ்வளவு உயர்ச்சி பெறுகிறது; கீழே உதிருமானால் அகனத் தீண்டவும் அஞ்சுகின்றோம். ஒரே பொருள்தான் தலையிலிருந்த பொழுது சிறப்புற்றிருந்தது; அவ்விடம் விட்ட பின் இழிவுபெற்றது. அவ்வாறே மாந்தர் மயிரனையர். அவர் பெரிய செயல் செயுங்கால் தலையிலிருந்து அணிசெய்யும் மயிர்போலவும் சிறிய செயல் செயுங்கால் கீழே விழுத்து குப்பையிற் கிடக்கும் மயிர்போலவும் ஆகின்றார். செய்கைக்கேற்றதே சிறப்பு. எவராகவிருந்த போதினும் சிறுமை புரிந்த அளவில் அவர் சிறியவரே.


"செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்." செயற்கரியகாரியயத்தை எவர் செய்கின்றாரோ அவர் தாம் பெரியவர்; அவரே தெய்வத்தன்மையுள்ளவர். மற்றவர் சிறியவரே. செயற்கரிய செயலாவது யாது? அது தான் அற்புதம் என்று அறைகின்ற பொய்யான செயல் என்று எண்ணுதல் வேண்டாம். என்றும் எவரானும் செய்யமுடியாத இயல்புவாய்ந்ததுதான் செயற்கரிய  செயல் என்று எண்ணற்க முடியாத தன்மை வாய்ந்த ஒன்று எந் நாளும் முடியாது. செயற்கரிய செயலாவது-செய்யும் இயல்புவாய்ந்ததுதான்; ஆனால் உலகத்தில் பலரால் செய்ய முடியாதது; முயன்றால் முடிவது; அது செய்யும் அறிவைப் பலர் பெறாமையினாலே அது செயற்கரியதாயிற்று: செயற்கரிய செயல் இதுவேயன்றி வேறன்று. செயற்கரிய செயல் என்பதற்கு உயரிய செயல் என்பதே பொருள். அச் செயல் உடையாரே தெய்வத்தன்மையாளர்.


இன்ன நீர்மையுடையது தெய்வத்தன்மை யென்ற மெய்யுணர்வு கைவரப்பெற்றார், "தெய்வத்தன்மையுடையார் அந்நாள் இருந்தார்; இந்நாள் அவரனையார் இலர்" என்ற பொருளற்ற பேச்சுப்பேசார் எல்லாவற்றிற்கும் அற்புதம் அற்புதம் என்று புலம்பும் புலப்பத்திற்கு மக்கள் செவிகொடுத்தல் ஆகாது. அவ் அற்புதமாயை அகன்றாலன்றி மெய்யறிதல் இல்லை. அம்மாயைபடர்ந்த மனமுடையார் 'தெய்வத் தன்மை பொருந்தியவர் இந் நாள் இல்லை' யென்றே இயம்பிக் கொண்டிருப்பர். அவர் கூறும் அற்புதங்கள் என்ற பொய்களைத் தள்ளிவிட்டு அவர் கூறுமாறு அவர் கூறும் தெய்வத்தன்மை யுடையார் காதைகளையும் இன்றிருக்கும் பெரியார்கள் காதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.

அவ்வாறு மெய்ச்செயல் கொண்டு ஒப்பு நோக்குவோமானால் பண்டிருந்த பல்லோரையும் விட இன்றிருக்கும் எல்லோரையும் காட்டிலும் செய்கையிற் சிறந்த-தெய்வத்தன்மை வாய்ந்த-உலகிற் பெரியாரென்று உரைக்கப் பட்ட ஒருவர், இன்று இப்பரந்த பேருலகில் விளங்குவது காணலாம். சமயக்கணக்கர்கள், அவசரப்படாது நடுநிலையோடு எல்லாத் தெய்வதன்மையும் வாய்ந்தவர்களாகத் தாங்கள கொள்ளும் சமயாச் சாரியார்கள் மெய்ச் சரிதங்களை வைத்துக்கொண்டு, நான் மேலே கூறிய இன்று இவ் உலகில் வாழும் காந்தியடிகள் சரிதத்தையும் வைத்து தாய்தல் உவத்தல் இன்றி நோக்கினால் உண்மை அறியலாம்.


உண்மைத் தன்மை யறியாது பழைய காலத்திற்கே பொய்ப்பெருமை கொடுத்தல் முன்னேற்றத்தைப் பெரிதும் தகைவதாகும் காந்தியடிகளே யாயினும் அவர் செய்த தவறு தவறே யன்றிச் சரியாகாது. அடிகள் கூறும் தற்சரிதத்தை அன்பர்கள் படித்திருக்கலாம். அச்சரிதத்தில் அவர்கள் முன்னே செய்த தாழ்ந்த செயல்களையெல்லாம் கூறியிருக்கின்றார்கள். அச்செயல்கள் அவர்கள் செய்ததற்காக உயர்வு பெற்றுவிடுமா? என்றும் எங்கும் எவர் செய்தபோதினும் தாழ்வு தாழ்வே; உயர்வு உயர்வே. செய்வோரைப் பொறுத்துச் செயல் மாறாது. காந்தியடிகள், அன்று தாழ்ந்த செயல் சில செய்தார்கள்; இன்று உயர்ந்த செயலே செய்கிறார்கள். அவ்ர்கள் அன்று செய்த அச்செயல் வேறு தன்மையது; இன்று செய்யும் செயல் தெய்வத் தன்மையது; அங்நிலையிலிருந்தோரும் இந்நிலையடைய முடியும் என்ற உண்மையை அடிகள் காதை காட்டுகின்றது. எனவே,


தெய்வத்தன்மைக்குரிய செயல் செய்வதற்கு அவன் பிறவியிலேயே தனிப் பிறப்பாகப் பிறக்க வேண்டுமென்பதில்லை. தெய்வத் தன்மைக்குரிய உயரிய செயலை என்று செய்கின்றனோ அன்றே அவன் தெய்வத்தன்மையுடையவனாகின்றான். ஆகலின் "தெய்வத்தன்மையடைய நம்மால் முடியாதே; நாம் அவ் வாறு பிறக்கவில்லையே” என்று எவரும் கவலைப்பட வேண்டுவதில்லை. தெய்வத் தன்மைக்குரிய செயல் செய்யும் அறிவு பெற்றுத் தெய்வத்தன்மை யுடையவராக முயலலாம்.