குற்றால வளம்/நிலையிலா வாழ்வு

நிலையிலா வாழ்வு

உலகில் அறம் குறைந்து வருவதையும் மறம் நிறைந்து வருவதையும் நாள்தோறும் கண்டு வருகிறோம். அறஞ் செய்வார் சிலராக வும் மறஞ்செய்வார் பலராகவும் இருக்கின்றார். காரணம் என்ன? நிலையிலா வாழ்வை உணரா மக்கள் மல்கியமையேயாகும். வாழ்வின் நிலையான்மையை உணர்வார்களானால் மறஞ்செயப் புகாரன்றோ? வாழ்வு என்றும் நிலைபெறுவது என்றெண்ணியன்றோ தங்கள் வாழ்வின் பொருட்டு மறம் புரியப் பின்வாங்குகின்றாரில்லை? உலகில் மிகப் பெரும்பாலான மக்கள் இதனை உணராமலே கருமமாற்றுகிறார். இது வியக்கத்தக்க ஒன்றே, வாழ்வு நிலையாமை யுடையது என்பதற்குப் பழைய பனுவற் சான்றுகள் வேண்டுமானால் கணக்கிலடங்காச் சான்றுகள் உள. நடைமுறையில் காணவேண்டுமானால் நாள்தோறும் தவறாது ஒவ்வொருவரும் கண்டு கண்டு வருகின்றனர். இவ்வளவு விளக்கமாகப் பல்லாற்றானும் அறியக்கிடக்கும் நிலையாமையுடைய வாழ்வை நிலையின தென்றெண்ணுதல் வியப்பென்பதில் என்னே தடை ? நிலையிலாதவற்றை நிலையுடையவை என்றெண்ணுதல் கீழான செயல் என்னும் பொருள்பட "நில்லாதவற்றை நிலையின வென்றுணரும் புல்லறிவாண்மை கடை" என்று  அருளினார் வள்ளுவனார். அப்புல்லறிவாண்மை தான் இந்நாள் உலகில் மல்கியிருக்கிறது.


எவற்றினால் மக்கள் பெருமிதம் அடைகின்றார்களோ அவையனைத்தும் நிலையாமையுடையனவாகவே யிருக்கின்றன. பொருள் நனிபடைத்த ஒருவர் அப்பொருளுடை வாழ்வை மிகப் பெரு வாழ்வாகக் கருதுகின்றார். அதனால், தீமையின்றேல் அவர் கருதுவதாலும் பாதகமில்லை. அக்கருத்துப் பிறருக்குப் பெரிய இடுக்கணை விளைவிக்கின்றது. படைத்த பொருளோடு தாம் என்றும் வாழ்தல் நிலையென நிச்சயித்து இறுமாந்து செய்வது தவிர்வது தெரியாமல் உலகில் பெரும் பாலாராகிய ஏழை மக்களை இயன்றமட்டும் துன்புறுத்திவிடுகிறார், வள்ளுவர் அருளிய மற்றை அறங்கட்கும் தற்கால அரசியலுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாது போயினும், "பொருளிலார்க் கிவ்வுலகமில்லை" என்ற, ஒன்றிற்குப் பெரிதும் இயையவே அரசியலாதியயாவும் நடைபெறுகின்றனவாகலின் ஏழை மக்கள் இன்னல் அதிகப்படுகின்றனவேயன்றி இவ்வுலகில் யாண்டும் குறைவுறக் காணவில்லை, ஏழைகட்குப் பரிகாரம் அறக் கடவுள் செய்தாலொழிய இல்லை. செல்வச் செருக்குற்றுத் தீமை புரிவோரை அறக்கடவுள் காயுமென்ற மேலோர் கொள்கை உண்மை. நிலையிலாப் பொருளை நிலையினதாக வெண்ணி மயங்கி; பிறருக்கு ஆனமுட்டும் துன்பத்தையாற்றி "பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக் கின்னா, பிற்பகற் றானே வரும்" என்பதற் கொப்பப் பின்னர் துன்பத்தை ஏற்று ஏன் அழிதல் வேண்டும் ?


எல்லா மக்களும் இன்ப வாழ்வு வாழ வேண்டுமானால், ஒருவருக்கொருவர் துன்பஞ் செய்தல் ஆகாது. செல்வர் எழைகட்குத் துன்பஞ்செய்தல் இயல்பாகிவிட்டது. அதனை அவர்கள் நிறுத்தவேண்டுமானால், செல்வம் நிலையற்றது என்பதை உணரவேண்டும். செல்வர் வறியரைத் துன்புறுத்துதல் ஒழியவேண்டுமென்பதற்காகச் செல்வம் நிலையற்றது என்று நான் கூறவில்லை. செல்வம் நிலையற்றது என்பதற்கும். பிற வாழ்வு நிலையற்றது என்பதற்கும் நூற்சான்று எண்ணற்றன. உள. அற நூல்களை எடுத்துப் பார்ப்போமானால் ஒவ்வொரு நல்லற நூலினும் நிலையாமைக்கு அதிகாரங்களுள. "நாலு இரண்டு” எனப் புகழ்பெற்ற இரண்டு அற நூல்களுள் ஒன்றாகிய நாலடியார், நூலாரம்பத்திலேயே "செல்வநிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை' என்று மூன்று அதிகாரங்களை முழக்கிப் பிறவற்றைப் பின்னே பேசிச் செல்கின்றது; மற்றொன்றாகிய திருக்குறள், "நிலையாமை” என்ற ஓர் அதிகாரத்தில் செல்வம் யாக்கை இளமை யாதியவற்றின் நிலையாமையைத் திறம்படச் செப்பியிருக்கின்றது. பிற பல நூல்களினும் நிலையாமைபற்றிப் பலப் பல பாக்கள் கிடக்கின்றன. ஆனால் நூல்கள் கூறுவனவெல்லாம் அநுபவத்திற் காணாதனவென்று எண்ணுதல் வேண்டாம். நிலையாமைபற்றி நூல்கள் கூறியிருக்கும் அனைத்தையும் இன்று நாம் கண்டு வருகின்றோம்.


உலகவாழ்வில் ஒன்றும் நிலைபுடையதல்ல; யாவும் அழிதன் மாலையது. செல்வம் நிலையுடையதல்ல; மாட மாளிகையும் கூடகோபுரங்களும் நிலையுடையனவல்ல; மக்கள் மனைவி நிலையுடையவரல்லர் ; இளமை நிலையுடையதல்ல; யாக்கை நிலையுடையதல்ல. செல்வம் நிலையுடையதானால் என்றும் அகலாது ஒருவர் பால் அது இருத்தல் வேண்டும். அங்ஙனம் காண்கின்றோமோ உலகில்? இல்லை; இல்லை. இன்று பெருஞ் செல்வம் படைத்துப் பெரு வாழ்வு வாழும் ஒருவர், நாளை யாவும் இழந்து கூழுக்கு வருந்துகிறார்; நேற்று மணிமுடி தரித்து அரியணையிருந்து தன்னேர் இன்றி அவனியை யாண்ட ஒருவர், இன்று தேடுவாரற்றுக் கிடக்கின்றார், "துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்காற் றொட்டுப், பகடுநடந்த கூழ் பல்லாரோடுண்க-அகடுற, யார்மாட்டும் நில்லாது செல்வம், சகடக் கால்போல வரும்." "'அறுசுவை யுண்டி யமர்த்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி யுண்டாரும்-வறிஞராய்ச், சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வ மொன்று, உண்டாக வைக்கற்பாற் றன்று". "யானையெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச்  சேனைத்தலைவராச் சென்றோரும்-ஏனை, வினை யுலப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட, மனையாளை மாற்றார் கொள." என்பனவாதி பாட்டுக்களால் செல்வம் நிலையாமையை நாலடி நன்கு செப்புகின்றது.


"கூத்தாட் டவைக்குழாத் தற்றேபெருஞ் செல்வம், போக்கும் அது விளிந்தற்று" என்று கூறுகின்றது குறள், குன்றத்தனை இருநிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர்" என வெற்றிவேற்கை விளம்புகின்றது. இவ் உண்மையால் செல்வம் நிலையற்ற தாகின்றது. மாளிகைகள் நிலையுள்ளன. வாகின் அவை என்றும் நிற்கின்றனவா? எத்துணையோ மாளிகை எத்துணையோ பல வழிகளில் நாசமாகக் காண்கின்றோம். "எழு நிலை மாடங் கால்சாய்ந்துக்குக் கழுதை மேய் பாழ் ஆகினும் ஆகும்." என்பது பொய்யன்று. மனைவி நிலையுடையவளுமல்ல; மக்கள் நிலையுடையவர்களுமல்லர்; சுற்றம் நிலையுடையதுமல்ல; எல்லாம் மாளுங் தன்மை வாய்ந்தன. இவற்றிற்கு எச்சான்றும் வேண்டாம் கண் கூடே இளமையும் நிலையாமையை யுடையதேயாகும் இளமை நிலையுடையதாயின் என்றும் இளமையோ டிருக்கலாமன்றோ?" "'பனிபடு சோலைப் பயன் மரமெல்லாம் கனி யுதிர்த்து வீழ்ந்திற்று இளமை" என நாலடி நவில்கின்றது.


யாக்கைக் நிலையாமையுடையது என்பதை நடைமுறையில் அனைவரும் கண்டு 

வருகின்றனர். ஆனால், அதனை அழுத்த மனதில் பதிக்கின்றாரில்லை. யாக்கை நிலையுடையதானால் இது வ்ரை உலகில் தோன்றிய எல்லோரும் அவ்வவ் யாக்கையோ டிருப்பாரன்றோ? பிறந்த அனைவரும் மாளுவது உறுதி. முன்னே பிறந்திருக்க பல்லோர் மாண்டனர். யாக்கை நிலையாமையில் செல்வர் வறிஞர் கிடையாது. "முடிசார்ந்த மன்னவரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடிசாம்பலாவது” திண்ணம். "மண்ணாண்ட மன்னரும் அவர் தனமும் மாண்டன. நுண் மணலை யொக்கும்; விண்ணாடும் இந்திரரும் அவர் தனமும் பொயின விண்மீனை யொக்கும்” 'நேற்றிருந்தார் இன்று வெந்து நீறா"வதை எவரே யறியார்?" நெருநலுள னொருவன் இன்றல்லை யென்னும் பெருமையுடைத்து இவ்வுலகு" என்றார் வள்ளுவர். “இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பரென் றெண்ணவோ திடமில்லையே” என்றார் தாயுமானார், "மலை மிசைத் தோன்றும் மதியம்போல் யானைக், தலைமிசைக்கொண்ட குடையர்-நிலமிசைக், துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்டால்லால், எஞ்சினார் இவ்வுலகத்தில்." "சென்றே யெறிய வொருகால் சிறுவரை, நின்றேயெறிய பறையினை-நன்றேகாண், முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர், செத்தாரைச் சாவார் சுமத்து" என்று நாலடியார் நுவல்கின்றது. இவற்றை அநுபவத்தில் கண்டும் மக்கள் உணர்ந்து ஏற்பவொழுகாதது பழ வினையினாற்போலும்!



செல்வம் நிலையற்றது; இளமை நிலையற்றது; யாக்கை நிலையற்றது; மனைவி மக்கள் ஆதி யாவும் நிலையற்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. நிலையிலா இவ்வாழ்வை விரும்பி மக்கள் மறஞ் செய்தல் ஆகுமோ? நிலையிலா வாழ்வை உணர்தல் வேண்டும், இத்தகைய நிலையிலா வாழ்வில் மக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை நோக்குதல் வேண்டும். அற்ப வாழ்விற்குள் அநீதியான செயல்களைச் செய்தலாகாது. நல்வாழ்வு பெறுங்காலத்தில் இயன்ற நல்லறங்களை யெல்லாம் விடாது ஆற்றுதல் வேண்டும். வாழ்வுள்ள காலத்தில் உலகிற்கு உதவி செய்தல் எளிது. "குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்பொ டுயிரிடை நட்பு” என்றவாறு,பெற்ற உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு நீங்குதற்குமுன் நல்வினை யாற்றிவிடுதல் வேண்டும். "நாச்செற்று விக்குன்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்" என்ற வள்ளுவர் மறையை மறத்தலாகாது. யாக்கையைப் பெற்றவர், அதனாலய பயனைக் கொள்ளாது விடுதல் அறியாமை. "யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம் பெற்ற யாக்கையா லாய பயன்கொள்க-யாக்கை, மலையாடு மஞ்சுபோற் றோன்றிமற் றாங்கே, நிலையாது நீத்து விடும்” என்பதற்கேற்ப, உடம்பு விரைவில் நீங்கிவிடுமாதலான் உடம் பெடுத்தவர் உடம்பினால் ஆய பயனைக் கொள்ளத் தவறக் கூடாது.

இளமையை இன்பத் துறையில் அழித்து விட்டு முதுமையில் உலக நன்மையை நாட்டலாம் என எண்ணுதலாகாது. "மற்றறிவாம் நல்வினை யாமிளைஞம் என்னாது, கைத்துண்டாம்போதே கரவா தறஞ்செய்ம்மின்-முற்றியிருந்த கனியொழியத் தீவளியால், நற்காய் உதிர்தலும் உண்டு" என்றபடி இளமையிலேயே மாள்வதும் இயல்பு. ஆகலின் நாளை யேன்னாது அறஞ்செய்ய முந்துதல் வேண்டும். நாளை நாளை யென்போமானால், நாளை நம்முடை நாளென்பதையும் நமனுடை நாளென்பதையும் யார் கண்டவர்? செய்ய வேண்டுவதை இன்றே-இன்னே செய்தல் வேண்டும்.


வாழ்வு நிலையில்லாதது. ஆனால் என்றும் நிலைத்து உயிரோடு தொடரக் கூடியது, தான் செய்த அறமும் மறமுமேயாகும். ஆதலால் உயிரோடு தொடரக்கூடிய அறத்தை யாற்றச் சிறிதும் தவறுதல் ஆகாது. "அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழியம்பொழுக, மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு, கைத் தலைமேல் வைத்தழும் மைந்தருஞ் சுடுகாடு மட்டே, பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாபமுமே" என்பது பட்டினத்தடிகள் வாக்கு. ஆதலால் நிலையிலாவாழ்வை உணர்ந்து பிறந்த பயனை யடைந்து ஈடேற விரும்பும் மக்கள் நல்லற மாற்றுவாராக; நிலையிலா வாழ்வை நிலையினதென மயங்கிப் பெருமிதங் கொண்டு கெடுவினை செய்து கெட்டழியா தொழிவாராக.