மடமை

மடமை என்பது அறியாமை எனப் பொருள்படும். மடமைக்கு வேறு பொருளுமுண்டு. ஈண்டு அறியாமை என்னும் பொருளிலேயே மடமையைக் குறிக்கிறேன். அறியாமை யுடையோரை இவ்வுலகில் மடயர் என அழைப்பதை அனைவரும் அறிவர். மடயர் என்ற சொல் சமையற்காரரையும் குறிக்குமெனச் சிலர் செப்புவர். அது மடமையாற் கூறுவதேயாகும். சமையற்காரரை மடையர் என்ற சொல்தான் குறிக்கும். "மடயர்" என்ற சொல்லுக்கும் "மடையர்" என்ற சொல்லுக்கும் வேறுபாடுண்டு. மடமை உடைமையினாலே முன்னையவர் மடயர் என்று வழுத்தப் படுகிறார். மடைத்தொழில் உடைமையினாலே பின்னையவர் மடையர் என்று அழைக்கப்படுகிறார். முன்னையர் மடம் காரணமாகப் பெயர் பெற்றவர். பின்னையவர் மடை காரணமாகப் பெயர் பெற்றவர். மடை என்பதற்குச் சோறு என்பது பொருள். இரண்டுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் உச்சரிக்கும் பொழுது ஒலி ஏறக்குறைய ஒன்றாகத் தோன்றும். அது கொண்டு சொல்லாராய்ச்சி சிறிதும் இல்லாச் சிலேடைப் புலவர்கள் இரண்டையும் ஒன்றெனக் கொள்வர். இதற்கு இவ்வளவு கூறிவிட் டேன் என்று யாரும் எண்ணமாட்டாரென நம்புகிறேன். மக்கள் தவறாக உணரத்தக்க நிலையில் உள்ள ஒன்றைச் சமயம் நேர்ந்துழி இயம்புதல் கடனன்றோ?


இவ்வுலகில் மடமை, அதாவது அறியாமை கொண்ட மக்கள் மல்கியிருக்கக் காண்கின்றோம். கூர்ந்து நோக்கும்பொழுது குவலயத்தில் மடமையில்லார் யாண்டும் யாரும் இல்லையென்று இயம்பலாம். மிக மேதாவிகளும் ஏதேனும் ஒன்றில் அறியாமையுடையாராக விருப்பர். எல்லாம் அறிந்தவர் இறைவர் ஒருவரே. மற்றெல்லோரும் அறியாமையுடையவரே. ஆனால், அதில் வேறுபாடுண்டு. இன்றியமையாது அறிந்து தீரவேண்டிய பொருள்களை அறியாதாரும் அறிந்ததை அறிக்கவாறொழுகிப் பயனடையாதாருமே மடயர் என்று கொள்ளத்தக்கார், இன்னோரன்ன செயலுடை மடயர் மல்கியதனாலேயே இக்கட்டுரை எழுந்தது. இதுபற்றிக் கூறுவதால் எவரும் வருக்தமாட்டார்கள் என நம்புகிறேன். ஏன்? எவரையும் குறித்து வையவில்லை. கண்டிக்க்த் தக்க இச்செயலையே கூறுகிறேன்.


இன்றியமையாது அறியவேண்டிய கடனை மக்கள் அறிந்தால் உலகில் மறம் ஏன் வளர்கிறது? மடமையினாலன்றோ நில்லாதவற்றை நிலையினவென்றுணர்ந்து கரும மாற்றுகின்றார்? பிறருக்குத் தீங்குசெய்து தாம் வாழ எண்ணுவது பெரு மடமையன்றோ? பிறருக்குக் துன்பம் செய்தால் தனக்கு நிலைத்த வாழ்வேது? "கெடுவான் கேடு நினைப்பான்"  என்பது மூதுரையன்றோ? இதனை உணரவிடாது தடுப்பது மடமையேயாகும். அநுபவத்தில் பலரைப் பார்க்கிறோம். மனத்துக்கண் மாசிருக்குமானால் அவருக்கு உள்ள அறிவையெல்லாம் மடமையென்ற பாவி விழுங்கி விடுகின்றான். பின்னை அவர் செய்வதில் எச் செயலும் அறிவுடைச்செயலாக விருப்பதில்லை. அது கொண்டன்றோ, தமிழறம் வகுத்த திருவள்ளுவனார் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்த்றன் ஆகுலநீர பிற" என்றருளினார். மனத்துக்கண் மாசிலனாக இருந்தாலன்றி அவன் செய்யும் எதுவும் நன்றாகாதென்பது கண் கூடாகக்கண்ட உண்மை. உன் மாசு கழுவாத வேடதாரி செய்யும் செயலெல்லாம் மடமை பொருந்தியனவாகவே முடியும்.


இப்பாழும். உலகம் மிகவும் கெட்டதாக விருக்கின்றது. மறஞ்செய்யும் ஒருவனே உலகம் கடிந்து ஒதுக்கும் அறிவு பெற்றிருக்குமானால் யாரும் அது செய்யமாட்டார். பல் இடங்களில் மறம்புரி மறவோர் மதிக்கப்படுவதையும் காண்கின்றோம். எவ்வாறு ? பொய்யைக் சொல்லி ஒருவன் பொருளைச் சம்பாதித்துவிட்டால் அவன் புத்தியுடையவன் என்று புகழப்படுகிறான். அவன் அவ்வாறு பொருள் ஈட்டியதும் மடமை. பிறர் அவனைப் புகழ்வதும் மடமையே. தேடிய பொருள் நிலையிலாதது; கூறிய பொய் நிலைத்து நின்று இவனைக் தொடரும். இவ்வுண்மை அறியாதது  மடமையேயன்றோ? இவன் பிறர் புகழ வாழ வேண்டுமென்ற அவாவினாலேயே இவ்வாறு செய்கிறான். இப்புன்செயலை உலகம் கடியுமானால் இவன் இது செய்ய அஞ்சுவான். எவனும் பொய் கூறமாட்டான். உலகில் அறம் வளரும்; மறந்தேயும். நுணுகி ஆயுங்கால் கெடுவினை செய்யத் தூண்டுவது மடமையேயாகும்,


பெரும்பாலாகத் தன்னை எல்லோரும் மதிக்க வேண்டுமென்பதற்காகவே எல்லாக் தீமைகளையும் புரிகின்றார் பலர். இது மடமையே. தன்னை அறவோர் மதிக்க வேண்டுமானால் செய்ய வேண்டுவது அறமேயன்றி மறமன்று. எவரிடத்தும் அவர் விரும்பியவாறு அவர் மனத்திற்கிசையப் பேசினாற்றான் அவர் தன்னை மதிப்பார் எண்றெண்ணி அங்ஙனமே செய்கின்றார். இது அறியாமை! அறியாமை!! உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும். எல்லோர்க்கும் இசைய ஒருவன் எப்படி நடக்கமுடியும்? அன்றி எவர் எதைக் கூறினபோதினும் அவர் அதிகாரத்திற்கோ ஆக்கத்திற்கோ பிறவற்றிற்கோ அஞ்சி அவர் கூறியது எதுவாயினும் ஆம் போடுதல் எவ்வளவு பெரிய அறியாமை, இந்நிலையுள்ளார் நிறைந்த நாடு எங்ஙனம் விடுதலை பெறப்போகிறது?


தனக்கென ஒரு கொள்கையில்லாதார் பெருமடையராவார். ஒன்றிலும் தனக்கு ஒரு  திடமான கொள்கையில்லாமல் சமயத்திற்குக் தக்கபடி உளறிக்கொட்டும் சிலர் இல்லாமல் இல்லை. கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று கடனாற்றும் பலர் இந்நாள் இன்மையினாலேயே எந்த இயக்கமும் வளர்ந்தோங்கவில்லை. இன்று ஒன்றைச் சரி என்று கூறி, நாளை இதனால் தனக்கு ஏதேனும் இடையூறு செய்யக்கூடிய ஒருவர் வந்து நெருக்கினால் "இல்லை; இல்லை; இது சரியல்ல; நீங்கள் சொல்வது நிரம்பச் சரி" என்பாரும் சில மக்கட்குப் பயந்து அவர் தீச்செயலை யெல்லாம் தலையிற் சுமந்து புகழ்ந்து புகழ்ந்து கூறுவாரும் மடமையுடையா ரென்பதில் என்னே ஐயம்?


மடமை உலகத்தில் எல்லையின்றிப் பெருகி விட்டது. எல்லாம் வியாபாரமாகி விட்டது. தனக்கென ஒரு கொள்கையின்றி வருவாயையும் புகழையுமே நாடி எல்லாக் காரியமும் செய்யப்படுகிறது. கள்வர், கயவர், கொடியர், கொலைஞரெல்லாம் பொதுஜன ஊழியரென்று முன்வந்து மக்களை வஞ்சிக்கின்றார். தமது மடமையால் நன்றென எண்ணி மக்கட்குப் பல தீங்குகளை ஆற்றிவிடுகிறார். ஒன்றுமறியாப் பேதைகளெல்லாம் ஜனத் தலைவராக வர விரும்புகிறார் மடமையுள்ளவர் தங்கள் மடமையைத் தாங்களே வைத்துக்கொண்டு அமைகின்றாரில்லை. பின் வார்சுகளும் உண்டாக்கி வருகிறார். வளர்ந்து வந்து பிறப்பின் பேறடையவேண்டிய இளைஞர்களை யெல்லாம் தடுத்துத் தங்கள் மடமையை அவர்கள்பாற் புகுத்திப் பலரைப் பொறாமையும் அறியாமையும் நிரம்பியவர்களாக ஆக்கிவிடுகிறார். அவரும் சிறு மதியால் ஏமாந்து அவற்றைக் கைக்கொண்டு அழிவு தேடிக் கொள்கிறார்.


மடமையால் மூடப்பட்ட இளைஞர்களைக் காணும்பொழுது பெரிதும் வருத்தமாக விருக்கிறது. அந்தோ! மக்களாகப் பிறந்து பேறடைய வேண்டியவர்கள் இளம் வயதிலேயே பொறாமைகொண்ட மடமைப் பாபிகட்கு ஆட்பட்டுத் தங்கள் நலன் இழப்பதைக் கண்டு எவ்வாறு சகிப்பது? எவரும் சார்ந்ததன் வண்ணமாதல் இயல்பு. அதினும் எதனையும் பற்றக் கூடிய இளமைப் பருவத்தில் அவ்வாறாவது முழுதும் நிச்சயம். அதன் பொருட்டே "தீயாரைக் காண்பதும் தீது" என்று செப்பப் பெற்றது.


மடமையால் என்னென்ன வெல்லாம் செய்கின்றார். எண்ணுந்தோறும் எண்ணுத் தோறும் வியப்பாகவே யிருக்கின்றது. ஒருவர் பிறனில் விழைகின்றார்; அத்தவறுதலைக் கண்டித்தால் சீறி விழுகின்றார், ஒருவர் பொய்யையெல்லாம் திரட்டி ஆக்கப்பட்ட ஒரு உருவாகப் பொலிந்து, பொய்யே புகன்று பலரறியப் பொய்யே எழுதிப் பொய்யே செய்கின்றார். அவர் செயல் பொய் என்று கூறினால் புலம்பித் தவிக்கின்றார். சில பொய்யர்களைக் கொண்டு தம் பொய்யை மெய்யென்று புகன்று திரியச் செய்கின்றார். கடவுள் ஒருவர் இருக்கின்றார்; அவருக்கு ஏற்க நடக்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இருப்பதில்லை. இவ்வுலகத்தினும் எத்தனைநாள் வஞ்சித்து வாழமுடியும்? கடவுளிடத்துக் தண்டனை  பெறுவது நிச்சயம். இவ்வுண்மைகளை அறியாமையே மடமை. உண்மை ஓராது உலகத்தை ஏமாற்றி விட்டோமென் றெண்ணிக் களிப் பெய்துதல் பெருமடமை. இம் மடமை கொண்ட மக்கள் உய்வதரிது.


சதியாலோசனை செய்து உலகை வஞ்சிக்கும். மடமையுடையார் போக, உண்மையிலேயே ஒன்றுமறியாது மடமையொடு வாழ்வாரும் பலர் உண்டு. அவர் மடமை போக்க வேண்டுவது அறிஞர் கடன். வேண்டுமென்றே கெடுவினை புரியும் மடமையைக் கடவுள்தான் போக்குதல் வேண்டும்.


மடமையுடைமையினாலேயே தாம் செய்யும் மடமையின் பாற்பட்ட காரியங்களெல்லாம் அவருக்கு மடமையாகத் தோன்றவில்லை. மடமையை யாரும் எடுத்துக் கூறினால் திருந்த முந்துகின்றாரில்லை. மேலும் மேலும் அவர் செய்யுங் காரியங்களெல்லாம் பெருமடமை யுடையனவாகவேயிருக்கின்றன. மடமையாற் தரம் கெடுவதை உணரும் அறிவை இழந்து விடுகிறார். அது அவர் ஊழ்வினை போலும்! தன் சரித நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்க்கும் அறிவு ஒன்று பெற்றாலும் இவ்வகம்பாவ மடமை யகன்றுவிடுமே. அவர் என் செய்வார்? ஊழ் விடுகின்றதில்லை. அகம் பாவ மடமை அறிவை அழித்துவிடுகிறது. தாமாக அறியாத போதினும் எத்துணை முறை எவர் இடித்துக் கூறினாலும் செவியில் ஏறுவதில்லை. அவர் மனத்தை மாற்றி மடமை போக்க எல்லாம் வல்ல ஈசனாலன்றி வேறு யாரால் முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=குற்றால_வளம்/மடமை&oldid=1534964" இலிருந்து மீள்விக்கப்பட்டது