குற்றால வளம்/மலைநாடு
மலை நாடு என்றால் மலை சூழ்ந்த நாடு என்பது பொருள். மலைசூழ்ந்த எல்லா நாட்டிற்கும் இப்பெயர் பொருந்தும். எனினும் சிறப்பாக ஒரு தனி நாட்டைக் குறித்தே ஈண்டு இக்கட்டுரை எழுந்தது. ஈண்டு மலைநாடு என எடுத்துக் கொள்ளப்பட்டது, தமிழ் காட்டின் எல்லைப் புறத்தேயுள்ள மலைநாட்டை. அது மலையாள நாடு என வழுத்தப்படுகிறது. அந்நாட்டு மக்கள் பயில்மொழி மலையாளம் என்ற பெயரிய மொழி. அம்மொழி வழங்குமிடம் மலையாள நாடு. அக்நாடு மலைசூழ் நாடாக இருத்தல் கொண்டே ஆண்டு நிலவும் மொழி மலையாள மொழியென்றும் ஆண்டு வாழ் மக்கள் மலையாளிகள் என்றும் வழுத்தப் பெற்றிருத்தல் வேண்டும்.
அந்நாட்டின் பெயர் காரணங் கற்பிக்க முடியாத பல நாடுகளின் பெயர்களை ஒத்திருக்கவில்லை. உலகம் உள்ளளவும் மிக எளிதில் எல்லோரும் அறிந்துகொள்ளத் தக்க நிலையில் தக்க காரணத்தோடு அந்நாட்டின் பெயர் அமைந்துள்து. மலை சூழ்ந்த நாடு மலை நாடு. மலை நாட்டின் பெயரைக் காட்ட மலைமீதே அந்நாட்டு ஊர்கள் முழுமையும் நிலவுகின்றன. மலைமீது வாழ்கின்றவ்ர் மலையாளிகள். அவர் பேசும்மொழி மலையாள மொழி.
மலையாளிகள் வாழுமிடம் மலையாளம் என்று பின்னர் மருவி வந்திருத்தல் வேண்டும்.
அம் மலைநாடு அரசியலில் இந்நாள் மூன்று பகுப்பாகப் பிரித்து நிற்கிறது. சிலபகுதி நேரே ஆங்கிலத்தார் அரசியலைத் தாங்கியிருக்கிறது. கொச்சி சமஸ்தானம் என ஒரு பகுதி உள்ளது. திருவாங்கூர் சமஸ்தானம் என இன்னொரு சுதேச அரசியலை மற்றொரு பகுதி கொண்டு நிற்கின்றது. இம்மூன்றனுள் பெரும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்தையே சார்ந்துளது. எனவே, மலைநாடு-அல்லது மலையாளம் என்று கூறுதல் சிறப்பாகத் திருவாங்கூர் சமஸ்தானத்தையே குறிக்கக்காண்கின்றோம், திருவாங்கூர் சமஸ்தான ஆளுகைக்குள் மலை நாட்டின் பாங்கருள்ள கன்னியாகுமரி முதலிய சில தமிழ்நாட்டு ஊர்களும் சேர்ந்திருக்கின்றன. கன்னியாகுமரியிலிருந்தே மலைநாட்டு நாகரிகம் தொடங்கிவிடுகின்றது.
திருவாங்கூர் என்பது ஒரு ஊரின் பெயரல்ல. அது அந்த சமஸ்தானத்தின் பொதுப் பெயர். திருவாங்கூர் என்ற பெயரோடு அந்த சமஸ்தானத்தில் ஒர் ஊர் இல்லை. சில சமஸ்தானங்கள் அரசிருக்கைத் தலைநகர்ப் பெயரைச் சமஸ்தானப் பெயராகக்கொண்டு விளங்கும். புதுக்கோட்டை சமஸ்தானம், மைசூர் சமஸ்தானம் என்பன தலைநகரின் பெயர் கொண்டு விளங்குவன. திருவாங்கூர் சமஸ்தானப் பெயர் அவ்வாறு அமையவில்லை.
அச்சமஸ்தானம் அவ்வாறு பெயர்பெற்ற காரணம் என்னவோ? அது நிற்க,
திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரம் என்பது. அந்த சமஸ்தானத்துள் பெரிய ஊர் திருவனந்தபுரமே, அத்திருவனந்தபுரமும் அதனைச் சேர்ந்த அந்த சமஸ்தானத்திலுள்ள எல்லா ஊர்களும் மலைமேலேயே இருக்கின்றனவென்று வழுத்தலாம். திருவனந்தபுரம் ஒரு ஊருக்குள்ளேயே மலையின் இயல்புக்கேற்ப உயரமும் ஆழமும் ஆங்காங்கு மாறி மாறியிருக்கின்றன. அந்த சமஸ்தானம் முழுமையும்-அந்த நாடு முழுதும் மலைகளின் மீது வளைந்து வளைந்து தெருக்கள் வகுக்கப்பட்டு அவைகளின் இடையிடையே ஊர்கள் காணப்பட்டதாகவே இருக்கின்றன.
மக்கள் நல்ல இன்ப வாழ்க்கை வாழ்தற்கு மிகுதியும் ஏற்றது அம்மலைநாடு. அந்நாடு முழுமையும் யாண்டும் வளஞ்செறி மரங்கள் மலிந்து கிடக்கின்றன. யாண்டு நோக்கினும் மலையும் மரமும் செடியும் கொடியும் ஆகிய நற்பொருள்களே. கண்களை எப்பக்கம் புகவிட்ட போதினும் ஒரே பச்சை நிறமே பெருகிக் கண்களை நிறைத்து நிற்கும். மரமும் பச்சை, செடியும் பச்சை, கொடியும் பச்சை, அவற்றை இடையீடின்றி நிரலே பரப்பிக்கொண்டு இலங்கும் மலையும் ஒரே பச்சை. அம்மலை ஏறியும் இறங்கியும் இருக்கும் தன்மை மிக அழகிற்று. மலைகளின் குடுமிகள் இடையறாது தவழ்ந்து
விளையாடுகின்ற கருமேகங்களைக் கொண்டிலங்கும் காட்சி கண்களைவிட்டகலாது. அம்மலைகளைப் பிளந்து மக்களும் ஊர்திகளும் வழிக் கொள்தற்கு, வெண்கற் பொடிகளால் செப்பனிடப்பட்ட பாட்டையுளது. மலை உச்சிகளின்றும் இடங்கள்தோறும் நீர் வீழ்ச்சிகள் பல வீழ்கின்றன. பச்சை நிறம் வாய்ந்த மலைகளினின்றும் வெண்முத்துச் சரங்களைக் கோத்துத் தொங்கவிடப் பட்டனபோல், அருவிகள் தூங்கும் அழகு பெரும் பேரழகாக இருக்கின்றது.மழை பொழிவதிலும் குறைவில்லை எனவே மலைநாடு வளமனைத்தும் உடைத்தாயிருக்கின்றது என்று வழுத்துதல் சிறிதும் வழுவின்று.
மலைநாட்டின் தலைநகராகிய திருவனந்தபுரத்தில் இந்நாள் கல்வி பெரிதும் கவனிக்கப் படுகிறது. திருவனந்தபுரத்தில் கல்விச்சாலைகள் மிக அதிகம். பெண்கள் கற்பதற்கும் எராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிக்கு மாணாக்கர் செல்ல வேண்டிய காலத்தில் தெருவில் பார்த்தால் ஊர் முழுமையும் எந்த இடத்தில் நோக்கிய போதிலும், ஆண்களும் பெண்களும் புத்தகமேந்திய கையினராய் நிரலே சென்று கொண்டிருக்கக் காணலாம். இவர்களுள் பெண்மக்கள் தொகை ஆண்மக்கள் எண்ணினின்றும் சிறிதும் குறைவாக இராது. சிறிய பெண்கள் முதல் பெரிய பெண்கள் வரைப் பெண்கள் பெரிதும் கல்வியில் முன்னேறி வருகின்றனர். இந்நாட்டில் கண்ட காட்சிகளுளெல்லாம் தலையாய இன்பக்
தந்த காட்சி இதுவே. இது ஒன்றுகொண்டே எதிர்காலத்தில் இம்மலைநாடு பெரிதும் நாகரிகம் அடைந்துவிடும் என்று நவிலலாம்.
மலைநாட்டுப் பெண்மக்கள் உடை விஷயத்தில் இப்பொழுது திருத்தம் எய்தி வருகிறார் அது கல்வியின் பயனே. ஆண் மக்களைப் போல் பெண்மக்களும் ஒரு வேட்டி கட்டி ஒரு துண்டு மேற்போட்டுக் கொள்தல் என்பது பெருத்த அநாகரிகமன்றோ? பெண்கள் உடற் கூற்றுக்கு அவ் உடை சிறிதும் ஏற்றதாககாது என்பதைக் கல்வி கற்பதன் பயனாலும் பிற நாட்டவர் கூட்டுறவாலும் மலைநாட்டுச் சகோதரிகள் அறிந்து திருத்தம் அடைந்துகொண்டு வருவது போற்றத்தக்கது. நாளடைவில் அவர்கள் உடை விஷயத்தில் நன்னிலையெய்தி விடுவார்கள் என நம்பலாம். இரு பாலாரும் கல்வி கற்றால் எல்லாம் நன்கு திருந்திவிடும். மக்கள் உண்மையில் மக்களாதற்குப் பெருந்துணை புரிவது கல்வி ஒன்றேயன்றோ? அதில் திருவாங்கூர் அரசாங்கம் பாராட்டுதற்குரியதே.
மலைநாட்டார் உலக இயல்பிற்கேற்ப முற்காலத்திற்கு இப்பொழுது வரவர நாகரிகம் பெற்றே வந்திருக்கின்றனர். திருவனந்தபுரம் பொருட்காட்சிச்சாலையில் மலைநாட்டின் பண்டைமக்கள் நிலை அறிதற்குற்ற கருவிகள் பல தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் நூல் ஆடையை அறியாது மரவுரி உடுத்தும் வைக்கோற்களைச் சுற்றியும் மலையிற்றிரிந்த
நிலைகளெல்லாம் அக் காட்சிச்சாலையில் இருக்கின்றன. அந்நிலையை நோக்க, இப்பொழுதிருக்கின்ற மலையாளம் எவ்வளவோ முன்னேறியது என்பது விளங்கும். மரவுரி தரித்த மக்கள் இன்றைக்கும் மலைக் காட்டில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. அம்மலை வேட்டுவர்க்குக் காணிக்காரர் என்ற பெயர் அங்கு சொல்லப்படுகிறது. காணிக்காார் என்றால் உரிமையாளர் என்பது பொருள். அம்மலை அவர்கட்கு உரிமை யுடையது என்ற பொருளில் அச்சொல் அமைந்துளது.
மலைநாட்டிலுள்ள குறைகளுள் மிகப்பெருங் குறை ஒன்று. அதனைச் சொல்லாது விடுவது சரியன்று. அம்மலைநாடு முழுமையும் ஒரு சில போத்தி என்று கூறப்படுகின்றவர்கட்கு அடிமை யென்று கூறுதல் தவறாகாது. அரசனே அவர்கட்கு அடிமை என்றால் மற்றவர்களைப் பற்றிக் கூறுவானேன்? அரசினர் இவர்கட்குத் தந்திருக்கும் ஆதிக்கத்திற்கு ஒரு எல்லை கிடையாது. மலையாள ராஜ்யம் போத்திகள் ராஜ்யமாகவே விளங்குகின்றது. மலைநாட்டிலுள்ள கோவில்கள் இவர்கள் கையிலேயே அகப்பட்டு விழிக்கின்றன. அம்மம்மா! என்ன அக்கிரமம் இவர்கள் செய்வது! மலையாள அரசியலில் பேரறியாமை நிரம்பிய பெருங் குறை இது. இந்தப் போத்திகள் என்பார் தங்களையும் தங்கள் இனத்தவர்கள் என்று எண்ணிக் கொள்கின்ற பார்ப்பாரையும் தவிர, மற்றவர்களை யெல்லாம் மனிதராகவே மதிப்பதில்லை
என்பதை அவர்கள் கோயில்களில் செய்யும் ஒவ்வொரு செயலும் காட்டுகின்றது. அவ்வளவுக்கு இடங்கொடுத்திருக்கிறது திருவாங்கூர் அரசாங்கம். பொதுவாக இந்தியா எங்கும் ஆலயங்கள் ஒருவகையாகவே நடக்கின்றன வென்றாலும், திருவாங்கூர் சமஸ்தான ஆலயங்களில் நடக்கும் அறியாமை வேறு யாண்டுமில்லை.
பிறப்பினால் பார்ப்பனரல்லாதார் என்று கூறப்படுகின்றவர் முதலில் நுழைவாயிலிலேயே சில சமயங்களில் கோவில் ராஜகோபுர வழியே போகக்கூடாதென்று தடுக்கப்படுகிறார். அவர் கோவிலுக்குள் உள்ள ஒற்றைக் கல் மண்டபத்தைத் தொடக்கூடாது; கோவிலுக்குள் விழுந்து கும்பிடலாகாது; அங்குள்ள மணியை அடித்தலாகாது; பூஜை ஆகும்போது கோவிலுக்குள் நிற்றலாகாது. இன்னும் ஏதேதோவெல்லாம் சொல்லிக் கோவிலுக்குள் நுழையும்பொழுதே பாடங் கற்பிக்கப்படுகிறது. விபூதியை பூசாரியாகிய போத்தி கையில் கொடுக்கமாட்டார். ஓங்கி வீசுவார் இப்படி அநாகரிகங்கள் பல. ஊட்டுப்பொறை என்று சொல்லி கோவிலுக்குள் ஒரு வேளைக்கு ஆயிரக்கணக்கான பார்ப்பார்க்கு வேளை தவறாமல் சோறு போடப்படுகிறது.அவர் கோவிலுக்குள் சாப்பிட்டுவிட்டு எங்கும் அசுத்தப் படுத்துகின்றனர். அக்கோவிலிலுள்ளோர்கட்கு எது சுத்தம் எது அசுத்தம் என்பது சிறிதும்
விளங்கவில்லையென்பது அவர்கள் செயலால் காணப் படுகின்றது. பார்ப்பனரல்லாதார் விழுந்து கும்பிடுதல் அசுத்தமென்று கருதுகிறார், கோவில் நிறையப் புகையிலை எச்சலை உமிழ்தலும் சாப்பிட்ட எக்சில்களைப் போடுவதும் அசுத்தமென்பது தெரியவில்லை. சட்டை போட்டுக்கொண்டு போதல் சரியன்று எனத் தடுக்கிறார், வாயில் எச்சல் வழியப் புகையிலையை அடக்கிக் கொண்டு செல்வோர் அனுமதிக்கப்படுகிறார். கோயில் திருக்குளத்தில் செய்யப்படும் ஆபாசங்கட்கு அளவில்லை. அங்கு விழுந்து கும்பிடுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. காலச் சுவாமிபக்கம் நீட்டிக்கொண்டு குந்திக் கும்பிடுகின்றனர். சுருங்கச் சொல்லுமிடத்துக் கோவில் ஆபாசம் நிறைந்த ஒரு இடமாக விளங்குகின்றது. அங்கு நடைபெறும் செயல் கட்கும். அறிவுக்கும் அணுவும் தொடர்பு இல்லை. நாகரிக உலகப்போக்கை அறியும் அரசினர் இக்துணை அநாகரிகத்துக்கு இடந்தருதல் விரும்பத் தக்கதன்று. வளமலி மலைநாட்டு மக்கள் இன்ன குறைகளைப் போக்குங் கடமையில் இறங்க வேண்டுவது அவசியம்.