குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/உடற்பயிற்சிகள் - விளக்கமும் இயக்கமும்
உடற்பயிற்சி என்றால் உடல் உறுப்புக்களைப் பதமாக்கிப் பாதுகாப்பதாகும். உடலுறுப்புக்களை இதமாக வளர்த்து வலிமை பெறச் செய்வதாகும்.
உடற்பயிற்சி என்பது உடலுக்கு நோய்வராமல் காத்து, உடலுக்குள்ளே இருக்கும் மனதை சக்தியும் சாமர்த்தியமும், நிம்மதியும் அமைதியும் நிறைய வளர்த்துக் கொள்ளும் விதத்தில் உருவாக்க உதவி, வாழ்க்கையை நலமாக வாழ்ந்திட உதவுவதாகும்.
நம்மில் சிலர் வேலை செய்தால் போதும் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமேயில்லை என்று கூறுகிறாள்கள்.
உடல் இயக்கம் வேறு, வேலை என்பது வேறு. உடற்பயிற்சி என்பது வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மையறியாமல் உடல் உறுப்புக்களை, கை கால்கள் போன்றவற்றை அசைப்பது, ஆட்டுவது எல்லாம் இயற்கையாக நடக்கின்ற செயல்களாகும்.(Movement) இதனால் உடல் பலம் அடைவதில்லை.
வேலை என்பது உடல் உறுப்புக்களால் நடைபெறுவது தான். ஆனால், அது உடலை பலப்படுத்தும் செயல் அல்ல, வேலையானது உடலைப் பயன்படுத்தி, பொருள் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செய்வதாகும்.
உடற்பயிற்சி என்பது உடலுக்காக, உடல் உறுப்புக்களைப் பயன்படுத்தி உழைக்கச்செய்து, உடல் வளமாக வளரவும், நலமாக மிளிரவும் உதவுவதாகும்.
உடற்பயிற்சி செய்வது என்றால், உடல் உறுப்புக்களை இயக்குகிற பொழுதே, நன்றாக உயிர்க்காற்றை உள்ளுக்குள் இழுத்து, நுரையீரலை நிரப்பி, பிறகு வெளியே விடுகின்ற செயல் முறையாகும்.
அதாவது, உயிர்காற்றை நிறைய சுவாசித்து உள்ளே அடக்கி, பிறகு வெளியே விடுவது.
இதனால் என்ன பயன் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்காக, முதலில் உடல் அமைப்பை ஆராயலாம்.
நமது உடல் செல்களால் (Cell) ஆனது. செல்கள் தான் உடலின் ஆதாரமான அடிப் பொருளாகும்.பல ஆயிரக்கணக்கான செல்கள் ஒன்று சேர்ந்து திசுக்கள் (Tissues) என்று உருவாகின்றன.
பல்லாயிரக்கணக்கான திசுக்கள் ஒன்று சேர்ந்து ஓர் உறுப்பாக (Organ) மாறுகின்றன.
பல உறுப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு (மண்டலமாக) அமைப்பாக (System) மாறுகின்றன.
உதாரணமாக, சுவாச மண்டலம் என்றால் மூக்குக்குழி, குரல்வளை, மூச்சுக்குழல், நுரையீரல்கள் ஆகும். இது போல் நமது உடலில் ஒன்பது மண்டலங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் விளக்கிக் கூறுகின்றார்கள்.
செல்களுக்கு சிறப்பாகத் தேவைப்படுவது, பிராண வாயு என்கிற உயிர்க் காற்றாகும். செல்களுக்கு தொடர்ந்து நிறைய காற்றும் உணவும் கிடைக்கிறபொழுது, செல்கள் நன்றாக செழித்து வளர்கின்றன. தேகமும் செழுமை அடைகிறது.
நாம் உடற்பயிற்சி செய்கிறபோது, நிறைய உயிர்க் காற்றை உள்ளே இழுத்து, நுரையீரல்களை நிரப்பிக் கொள்கிறோம் அல்லவா!
அதிலிருந்து உயிர்க் காற்றை இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் கிரகித்துக் கொள்கின்றன. அதனால் இரத்த ஓட்டம் அடைகிறது. பிராணவாயு கலந்த இரத்தம் ஒவ்வொரு செல்லுக்கும் சென்று சேர்கிறது.தண்ணீர் பெற்ற பயிர்கள் செழித்து வளர்வது போல, உயிர்க்காற்று கலந்த இரத்தம் பெற்ற செல்கள் செழித்து வளர்கின்றன.
அதனால்தான் உடற்பயிற்சி செய்த உடலானது வளர்ச்சியும், எழுச்சியும், மலர்ச்சியும் நிறைந்ததாக விளங்குகிறது. மகிமை பெறுகிறது.
உடற்பயிற்சி செய்வதனால் உண்டாகும் பயன்களை இனி நாம் தொகுத்து காண்போம்.
உடற்பயிற்சி செய்கின்ற ஒருவரும், உடற்பயிற்சி செய்யாத ஒருவரும், ஒரே மாதிரி உயரம், எடை, உடல் அமைப்பு கொண்டவராக விளங்கினாலும், அவர்களுக்கு உள்ளே நிறைய வேறுபாடுகள் உண்டு.
1. உடற்பயிற்சி செய்து வருபவருக்கு உடல் திறன், உடல் வலிமை, உடல் கட்டுப்பாடு நிறைய உண்டு:
2. இதயம் நன்கு வலிமை அடைவதால், இரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அதனால் உடல் முழுவதும் உள்ள செல்கள் பயன் பெற்று, பலம் பெறுகின்றன.
3. உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்கள், விரைவாக உடலை விட்டு வெளியேற்றப்படுவதால் உடல் தூய்மை அடைகிறது.4. உடலில் சிவப்பணுக்களும், வெள்ளை அணுக்களும் வலிமையானவைகளாக உற்பத்தியாவதால் உடலில் வலிவும், பொலிவும், தெளிவும் மிகுதியாகிறது.
5. ஆழந்து மூச்சிழுத்து, அதிகக் காற்றை சுவாசிப்பதால், அதிகமான ஆற்றலை உடல் வளர்த்துக் கொள்கிறது.
6. ஜீரண உறுப்புகள் பலமாகிவிடுவதால், உட்கொள்ளும் உணவை ரசித்து உண்ண முடிகிறது. நிறைய உண்ணவும், வாழ்வை வளமாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு பெருகுகிறது.
7. நாளமில்லா சுரப்பிகள் நல்ல திறம் பெறுவதால், உறுப்புகளுக்கு அதிகமான சக்தியும், ஆற்றலும் நிறைகின்றன.
8. கடினமான வேலைகளைக் கூட, எளிதாகச் செய்ய முடிகிற்து. சீக்கிரமாகவும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் செய்ய முடிகிறது.
9. உடலில் தூய்மையும் சக்தியும் நிறைவதால், உடலுக்குத் தேவையான சக்தி, வலிமை, இரும்பொத்த நரம்புகள், கிளர்ந்தெழும் ஈரல், அயராதுழைக்கும் ஆற்றலுள்ள இருதயம், நீடித்து உழைக்கும் ஆற்றல், உறுப்புகளுக்கு இடையே ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயல்கள், அழகான உடல் இயக்கம், நிமிர்ந்த தோற்றம் எல்லாம் உடற்பியிற்சி செய்பவருக்குக் கிடைக்கிறது.
இவ் வளவு பயன்களையும் உடற்பயிற்சி செய்யாதவர்கள் பெற முடியாது போவதால், வாழ்வின் இனிய வாய்ப்புகளையும், வசதிகளையும் வருங்காலப் புகழ்களையும் இழந்து போகின்றார்கள்.
நீங்கள் உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்து நிறைய சக்தியையும் திறமையையும் பெற்று, நிறைந்த வாழ்வு வாழுங்கள். சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் உதவி, சரித்திரம் படையுங்கள்.