குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/மன்னனும் வேதாந்தியும்

மன்னனும் வேதாந்தியும்
[கிரேக்க மன்னன் ஒருவனுக்கும் ஒரு வேதாந்திக்கும் நடக்கும் உரையாடல்]

 
மன்னன்-
எகிப்து நாட்டை எதிர்த்துநான்
இன்றே செல்வேன், படையுடன்.
மகிமை பெருக வெல்லுவேன்.
மகிழ்ச்சி பொங்கத் திரும்புவேன்.

வேதாந்தி - அப்புறம்...?

மன்னன் -
பார சீக நாட்டிலே
படை யெடுத்துச் செல்லுவேன்.
வீரப் போரை நடத்துவேன்.
வெற்றிக் கொடியை நாட்டுவேன் !
 
வேதாந்தி - ம்...அப்புறம்?

மன்னன் -
பார சீக நாட்டினைப்
படை யெடுத்து வென்றபின்
சீர்மி கும்நல் இந்தியா
தேசம் அதையும் வெல்லுவேன்.

வேதாந்தி - அதற்குப் பிறகு...?

 
மன்னன் -
இன்னும் இந்த உலகிலே
இருக்கும் நாடு யாவையும்
வென்று நானும் மகிழுவேன்;
வெற்றி முழக்கம் செய்குவேன்.

வேதாந்தி - அதற்கு அப்பால்...?

மன்னன் -
சொந்த நாடு திரும்புவேன்;
தோட்டம் ஒன்றின் நடுவிலே
சின்ன வீடு கட்டுவேன்.
திருப்தி யாக வாழுவேன்.

வேதாந்தி -
சொந்த நாட்டில் சிறியதாய்த்
தோட்டம், வீடு அமைக்கவே
இந்த உலகம் முழுவதும்
ஏனோ வேண்டும் என்கிறாய்?

சின்ன வீடு கட்டியே
திருப்தி யோடு வாழவே,
இன்றே வேலை தொடங்குவாய்.
இன்பம் விரைவில் காணுவாய் !