குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/சுய விளம்பரம்

சுய விளம்பரம்

தேசத் தலைவர், பெரியோர்கள்,
சினிமா நடிகர் படங்களெலாம்

வீடுகள், கடைகள் யாவிலுமே
விளங்கக் கண்டார் ஒருமனிதர்.

செல்வம் மிகுந்தவர் ஆதலினால்,
சீமான் என்றே அழைத்திடுவோம்.

‘நமது படமும் இப்படியே
நாட்டில் எங்கணும் விளங்கிடவே

வேண்டும்’ என்றே அச்சீமான்
விரும்பி யோசனை செய்தனரே.

“பற்பல நிறத்தில் தம்படத்தைப்
பளபளப் பான தாள்களிலே

அச்சிட வேண்டும் அழகாக.
அப்புறம் அந்தப் படங்களையே


அளித்திட வேண்டும் இலவசமாய்.
அனைவரும் விரும்பிப் பெற்றிடுவார்.

இலவச மாகக் கொடுக்கையிலே
எவர்தான் வேண்டாம் என்றிடுவார்?’
 
இப்படி அவரும் எண்ணினரே.
இதற்குள் வேறொரு சந்தேகம்.

‘படத்தைச் சும்மா வைத்துவிடின்
பாழாய்ப் போகும். ஆகையினால்,

அவற்றிற் கெல்லாம் கண்ணாடி
அழகாய்ப் போட்டே நம்செலவில்

கடைகளுக் கெல்லாம் கொடுத்திடலாம்.
கருத்தாய் மாட்டி வைத்திடுவார்’

என்றே அவரும் எண்ணினரே;
ஏற்பாடுகளும் செய்தனரே.

திசைகள் தோறும் ஆள் அனுப்பி
தெருவில் உள்ள கடைகளுக்குப்

படங்கள் கொடுக்கச் செய்தனரே;
பணத்தை நீர்போல் இறைத்தனரே.



சென்றன இரண்டு நாட்களுமே,
சீமான் நிலைமை அறிந்திடவே,

வெளியில் கிளம்பிச் சென்றனரே;
வீதிகள் எங்கும் சுற்றினரே,

ஒவ்வொரு கடையாய்ப் பார்த்தனரே.
ஒன்றிலும் இல்லை அவர்படமே !

எல்லாக் கடையிலும் தேடினரே.
எங்கும் மேற்படி மேற்படியே !

எப்படிப் போயின படங்களெலாம் ?
என்றே அவரும் எண்ணுகையில்,

அருகில் ஓர்கடை முதலாளி
அவரது நண்பர் ஒருவரிடம்

கூறிய வார்த்தைகள் அவர்காதில்
கூரிய வேல்போல் பாய்ந்தனவே:

“ஊர்பெயர் தெரியா ஒருவனது
உருவப் படத்தை ஒருமடையன்

கண்ணா டியுடன் என்னிடத்தே
கடையில் மாட்டத் தந்திருந்தான்.


உள்ளே இருந்த அவன்படத்தை
உடனே நன்றாய்க் கிழித்தெறிந்தேன்.

அதற்குப் பதிலாய் என்படத்தை
அழகாய் ஒட்டி வைத்துள்ளேன்.

இங்கே பாராய்!” என்றவனும்
எடுத்துக் காட்டினன் ஒருபடத்தை.

கேட்டனர் சீமான் அவ்வுரையை,
‘கிர்ர்’ ரெனத் தலையும் சுற்றியதே !

“அந்தோ, இதுபோல் என்படங்கள்
அனைத்தும் நாசம் ஆயினவோ !

எத்தனை ஆயிரம் செலவழித்தேன்
எல்லாம் வீண் வீண் !” என்றனரே.