கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/அப்படி இப்படி

14. அப்படி இப்படி

மூன்று அல்லது நான்கு அடி இடைவெளி இருப்பது போல, ஆட வந்திருப்போர் எல்லாம் வட்டமாக நின்றுகொண்டிருக்க வேண்டும்.

அமைப்பு:

ஆடுவோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பந்தும் 5 அல்லது 6 இருந்தால், ஆடுவதற்கு வசதியாகவும் இருக்கும் ஆனந்தமாகவும் இருக்கும்.

ஆடும் முறை:

ஆடலாம் என்று சைகை கிடைத்தவுடன், பந்துகளை வைத்திருப்பவர்கள. தமது வலப்புறத்தில் உள்ளவரிடம் பந்தை எறிந்து வழங்க வேண்டும். அதே சமயத்தில், இடப்புறமிருந்து தமக்கு வரும் பந்தையும் பிடித்து வாங்க வேண்டும்.

பந்தை அடுத்தவருக்கு எறியும் பொழுதும், தவறாமலும் தாறு மாறாக எறிந்து பிறரைத் தடுமாறச் செய்யாமலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் எறிய வேண்டும்.

பந்தைத் தான் நன்றாகப் பிடித்து ஆடவேண்டும் என்ற ஆவலும் அக்கறையும் தமக்கு எவ்வளவு அதிகமாக இருக்குமோ, அதேபோல் அடுத்தவருக்கும் எள்ளளவும் குறையாமல் இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

குறிப்பு:

எறிகிற பந்தைத் தவறாக எறிந்தாலும் சரி, வருகிற பந்தை முறையாகப் பிடிக்காமல் நழுவ விட்டாலும் சரி, அவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

வட்டமும் குறுகிக்கொண்டே வர, இறுதியாக ஒருவர் இருக்கும் வரை, ஆட்டம் தொடரும்.