கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/ஓடிவந்து பிடி

13. ஒடி வந்து பிடி

அமைப்பு:

முன் ஆட்டம் போலவே, எல்லோரும் வட்டமாக நின்றுகொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணைக் கொடுத்திருக்கலாம்; அல்லது பெயர் தெரிந்திருந்தால் பெயரையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

வட்டத்தின் நடுவில், ஒருவர் பந்துடன் நின்றுகொண்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை:

நடுவில் உள்ளவர், தன் கையிலுள்ள பந்தைக் கொஞ்சம் உயரத்தில் தலைக்குமேல் தூக்கியெறிந்து, அதே சமயத்தில், ஒருவருக்குரிய எண்ணை அல்லது பெயரை உரக்கக் கூவி அழைக்க வேண்டும்.

எண்ணுக்குரியவர் அல்லது பெயருக்குரியவர், தன் எண்ணின் சத்தத்தைக் கேட்டதும் வட்டத்திற்குள் ஓடிவந்து, பந்து கீழே விழுந்து தரையைத் தொடுவதற்கு முன்னர் பந்தைப் பிடித்துவிட வேண்டும்.

பந்தைப் பிடித்துவிட்டால், அவர் நடுவிலேயே நின்று பந்தை உயர்த்தி எறிந்து, மற்றவரை அழைப்பவராகப் பணியாற்றுவார்.

பந்தைப் பிடிக்காவிட்டால், அந்தப் பந்தைத் தலையில் எடுத்து வைத்துக்கொண்டு. அந்த வட்டத்தை மூன்று முறை சுற்றி வருவதுதான் தண்டனை அல்லது வேறு விதமான வேடிக்கையான தண்டனை தந்தாலும், ஆட்டம் ஆடி மகிழ சுவையாகத் தோன்றும்.

குறிப்பு:

உயரே இருந்து கீழே விழுவதற்குள் பந்தைப் பிடிக்கலாம் என்பதை, ஒருமுறை கீழே விழுந்து எழும்பி மீண்டும் தரையில் விழுவதற்குள் பந்தைப் பிடிக்கலாம். என்றும் வைத்துக்கொள்ளலாம். அது ஆடுவோரின் வயது, பருவம், ஆடப்பழகிய நிலையைப் பொறுத்ததாகும்.