கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/குறுக்கும் நெடுக்கும்
77. குறுக்கும் நெடுக்கும்
நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுவினராக, முதலில் ஆட்டக்காரர்களைப் பிரித்தல் வேண்டும்.
குறிக்கப்பட்டிருக்கும் நேர்க்கோட்டில், நான்கு குழுவும் நான்கடி இடைவெளிவிட்டு, நிற்கவேண்டும்.
1 | 2 | 3 | 4 |
⊛ | ⊛ | ⊛ | ⊛ |
⊛ | ⊛ | ⊛ | ⊛ |
⊛ | ⊛ | ⊛ | ⊛ |
ஒவ்வொரு குழுவினரும், நேர்வரிசையில் முன்பின்னாக (முதலில் நிற்பவர் முதுகைப் பார்த்தபடி) 2 அடி இடைவெளிவிட்டு நிற்கவேண்டும்.
அந்தக் குழுக்களுக்கு முன்புறத்தில் 15 அடி தூரத்தில் ஒரு எல்லைக்கோடு இழுத்து குறிக்கப் பட்டிருக்க வேண்டும்.
ஆடும் முறை:
போட்டியைத் துவக்கியவுடன், கடைசி ஆட்டக்காரர் தான் குழுவில் நிற்பவரின் (ஒருவருக்கொருவர்) இடையிலே விழுகின்ற சந்தில், குறுக்கும் நெடுக்குமாக ஓடி, எல்லைக்குச் சென்று, ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் அதேபோல் ஒருவரிடை ஒருவர் விழும் சந்தில் நுழைந்து வந்து தன் பழைய இடத்தில் வந்து உட்கார்ந்து விடவேண்டும்.
உடனே, அவருக்கு முன்னே நின்றுகொண்டிருப்பவர் முன்னால் அவர் ஓடியது போலவே ஒடத் தொடங்கிக் குறுக்கும் நெடுக்குமாக ஓடி எல்லையை அடைந்து திரும்பி வந்து சந்தில் நுழைந்து தன் இடத்திற்கு வந்து உட்கார வேண்டும்.
இவ்வாறு எல்லோரும் ஓடிய பிறகு, முதலாம் ஆட்டக்காரரும் அப்படியே முன்னால் முடிவெல்லைக் கோட்டை அடைந்து, திரும்பி வந்து, தன் குழுவினரிடையே குறுக்கும் நெடுக்குமாக ஓடி, அந்த் முறையில் திரும்பி வந்து தன் இடத்தில் அமர்ந்து விடவேண்டும்.
முதலில் ஓடி முடித்து உட்காருகின்ற குழுவே வெற்றி பெறும்.