கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/சாக்குச் சண்டை

72. சாக்குச்சண்டை

போட்டியில் பங்குபெறும் ஆட்டக்காரர்களுக்கு ஏற்ப, வட்டம் ஒன்று போட்டிருக்க வேண்டும்.

ஆட்டக்காரர்கள் அனைவரும், சாக்கிற்குள் (கோணிப்பைக்குள்) கால்களிரண்டையும் நுழைத்துக் கொண்டு, சாக்கின் வாய்முனையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, சண்டைக்குத் தயாராக நிற்க வேண்டும்.

ஆட்டம் தொடங்கியவுடன், ஒவ்வொருவரும் தனது பக்கத்தில் உள்ளவர்களைத் தமது தோளால் இடித்து வட்டத்தைவிட்டு வெளியேற்றிவிடவேண்டும் என்பதே ஆட்டத்தின் நோக்கமாகும்.

எல்லோரையும் வெளியேற்றிவிட்டு, இறுதிவரை யார் வட்டத்திற்குள் இருக்கிறாரோ. அவரே வெற்றி பெற்றவராவார். இவ்வாறே இரண்டாமவரையும், மூன்றாமவரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு:

முழங்கையாலோ அல்லது முட்டியாலோ அடுத்தவர்களை இடிக்கக்கூடாது அது தவறான ஆட்டமாகும் தொடர்ந்து தவறு செய்பவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

தோள் பாகத்தாலும், தோள் பக்கவாட்டிலும் தான் இடிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

வட்டத்தைக் குறிக்கும் கோட்டின் மேல் விழுந்தாலும் சரி, அல்லது வட்டத்திற்கு வெளியே விழுந்தாலும் சரி, அவர் போட்டியில் தோற்றார் என்று அறிவிக்கப்பெற்று, ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்.