கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/தொட்டால் போதும்
23. தொட்டால் போதும்
அமைப்பு:
முதல் ஆட்டம் போலவேதான் ஆடுகள அமைப்பு. அனைவரும் ஆடுகளத்தினுள் நின்றுகொண்டு இருக்க, விரட்டிப் பிடிப்பதற்காக ஒருவர் வெளியிலே நின்று கொண்டிருப்பார்.
ஆடும் முறை:
ஆட்டம் தொடங்குவதற்கு முன், ஆட்டக்காரர்கள் குறிப்பாக, ஒருசில பொருட்களைத் தொட்டால் தான் தப்பிப்பார் என்று முன்னரே கலந்து பேசி, தீர்மானித்துக் கொள்ளவேண்டும். மரம், கல், தூண், புல், அல்லது அங்கே கிடைக்கக்கூடிய வசதியான பொருள் ஒன்றை விரட்டுவோர் கூறிவிடுவார்.
விரட்டுபவரிடம் இருந்து தப்பிப்பதற்காக, ஒடுவோர்கள் இனி ஓடி தப்பிக்க முடியாது என்ற நிலை வந்து விட்டபிறகு, முன்னரே முடிவு செய்யப்பட்ட பொருள் தன்னைத் தொட்டால் போதும். அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.
அருகில் உள்ள பொருளைத் தொடவில்லை யென்றால் அவரால் தொடப்படுவார். பிறகு, அவருக்கு விரட்டித் தொடும் பொறுப்புக் கிடைத்துவிடும். இவ்வாறு மீண்டும் ஆட்டம் தொடரும்.
குறிப்பு:
எப்படி அந்தப் பொருளைத் தொடுவது என்பனவற்றையெல்லாம் முன்னமே விளக்கமாகப் பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும்.