கெடிலக் கரை நாகரிகம்/கெடிலம் கலக்குமிடம்

6. கெடிலத்தின் முடிவு

திரிசூலம்

திருவயிந்திரபுரத்துக்கும் கடலூர்ப் புதுப்பாளையத்திற்கும் நடுவே நான்கு திசைமாற்றத் திருப்பங்களைப் பெற்றுள்ள கெடிலம், புதுப்பாளையத்திலிருந்து கிழக்குநோக்கி 3 கி.மீ. தொலைவு ஒடிக் கடலில் கலக்கிறது. கடலில் கலப்பதற்கு முன்னால், கெடிலத்திலிருந்து வடக்குநோக்கி ஒரு கிளையும் தெற்குநோக்கி ஒரு கிளையுமாக இரண்டு கிளைகள் பிரிகின்றன. இந்த வகையில் கெடிலத்தின் தோற்றத்திற்குத் திரிகுலத்தை ஒருவாறு ஒப்பிட்டுக் கூறலாம். இதனால் கெடிலம் மூன்று இடங்களில் கடலோடு கலப்பதைக் காணலாம்.

வடகிளை

கெடிலத்தின் வடகிளை அவ்வளவு சிறப்பானதன்று; அது தேவனாம்பட்டினத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டு கடலில் கலக்கிறது. கெடிலத்தின் முக்கிய நடுப் பகுதிக்கும் அதன் வடகிளைக்கும் நடுவே தீவு போன்ற தரைப் பகுதி அமைந்துள்ளது. அதிலேதான் தேவனாம்பட்டினம் என்னும் சிற்றுார் உள்ளது. இவ்வூரின் கிழக்கே கடலும், தெற்கே கெடிலமும், மேற்கிலும் வடக்கிலும் கெடிலத்தின் வடகிளையும் இருக்கக் காணலாம் (கெடிலக்கரை - படம் பார்க்கவும்). இந்தத் தேவனாம்பட்டினத் தீவில் கடற்கரையை யொட்டிக் கெடிலத்தின் வடகரையில் வரல்ாற்றுச் சிறப்பு மிக்க செயின்ட் டேவிட் கோட்டை பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இது பற்றி வேறோரிடத்தில் விளக்கம் காணலாம்.

முக்கிய நடுப் பகுதி

செயின்ட் டேவிட் கோட்டைக்கு வெகு அண்மையில்தான் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதி கடலோடு கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கீழுள்ள படத்தில் கண்டு களிக்கலாம்:

படத்தில் தொலைவில் வெண்மையாய்த் தெரிவது கடல் அலை. அதற்கு முன்னால் இருப்பது கெடிலம் ஆறு. ஆறும் கடலும் கலக்கும் இடத்தில் அலை மோதுவதைக் காணலாம்.

கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகவும் இனிமையானது. மாலை வேளையில் மக்கள் வந்து இன்பப் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடம் இது. பணத்தைப் பாராமல் செலவு செய்து சீர்திருத்தினால், சென்னை மெரினா கடற்கரையைப் (Beach) போல இஃதும் குறிப்பிடத்தக்க ஒரு கடற்கரையாகக் காட்சியளிக்கும். சென்னை மெரினாபோல இங்கே நீளம் இல்லையெனினும் அகன்ற மணற்பரப்பு ஓரளவு உண்டு. இந்தக் கடலூர்க் கடற்கரையில் கெடிலம் ஆறு கடலோடு கலப்பது, சென்னை மெரினா கடற்கரைக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும். சென்னை மெரினாவில் காற்று மட்டுந்தான் வாங்கலாமே யொழிய, கடலோடு ஆறுகலக்கும் கண்கவர் காட்சியும், சோலைகள் நிறைந்த சூழ்நிலையும் இல்லை. மொத்தத்தில் இக் கடற்கரையின் அமைப்பு, இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘கவுண்டி கடற்கரை’ போன்றதெனப் புகழப்படுகிறது.

மாலை வேளையில் இக் கடற்கரைக் காட்சியையும் காற்றையும் நுகர ஒரு சிலரே கடலூர் நகரிலிருந்து வருகின்றனர். பலர் திரண்டு வராததற்குக் காரணம், நகரக் குடியிருப்புப் பகுதிகளினின்றும் இரண்டு மூன்று கி.மீ. தொலைவு கடற்கரை தள்ளியிருப்பதே. மாலை வேளையில் கடற்கரைக்கு நிரம்பப் பேருந்து வண்டிகள் (டவுன் பஸ்) விடுவதன் வாயிலாக இக்குறையைப் போக்கலாம். இதை யார் செய்வது? நாம் இங்கிலாந்திலுள்ள கவுண்டி கடற்கரைக்குப் போகவேண்டியதில்லையே! நம் நாட்டிலேயே இயற்கையாய் அமைந்திருக்கும் இந்த வசதியை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாமே! இதற்கு முயற்சி நடை பெறாமலும் இல்லை. கடலூர் நகராண்மைக் கழகம் 1938 ஆம் ஆண்டில் கடற்கரையில் மின்விளக்குப் போட்டும் பூங்கா அமைத்தும் சில ஏற்பாடுகளைச் செய்தது. ஆயினும் இந்தச் சீரமைப்பு தொடர்ந்து போற்றப்படவில்லை. இனியாயினும் தக்க சீர்திருத் தங்களைச் செய்து போதிய பேருந்து வண்டிகளை விட்டால், பொதுமக்கள் கடலூர்ச் கடற்கரையைக் கைவிடாமல் அதற்கும் பெருமையளித்துத் தாமும் பயன் பெறுவர். என்றாவது ஒருநாள் இது நடந்தே தீரும்.

தென்கிளை

கெடிலத்தின் போக்கில், கடற்கரைக்கு மேற்கே சிறிது தொலைவில் கெடிலத்திலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் கிளைதான் மிகமிக இன்றியமையாதது. இந்தக் கிளை ‘உப்பனாறு’ என அழைக்கப்படுகிறது. இது கெடிலத்திலிருந்து பிரிந்து தெற்கு நோக்கி 4 கி.மீ. தொலவு ஓடி, கடலூர் முதுநகர் (Cuddalore O.T.) என அழைக்கப்படும் கூடலூருக்கு அருகில் கடலோடு கூடுகிறது. இந்தத் தென்கிளையில் படகுப் போக்குவரவு உண்டு. கெடிலத்தின் பிரிவாகிய இந்த உ.ப்பனாற்றுப் பகுதிதான் கூடலூர்த் துறைமுகம் என அழைக்கப்படுகிறது. இந்த உப்பனாற்றின் மேற்குக் கரையில் கூடலூர் நகரம் உள்ளது.

கழிமுகத் தீவு - அக்கரை

கிழக்கே உப்பனாற்றிற்கும் கடலுக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலும், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு தெற்கு எல்லைகளாகக் கெடிலத்தின் தென்கிளையாகிய உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக் கழிமுகத் தீவு ‘அக்கரை’ என மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத்தோப்பு, கோரி என்னும் மூன்று சிற்றூர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும். தீவிற்குச் சென்றுவரப் படகுப் போக்கு வரவு உண்டு.

கடல் - முகத்துவாரம்

கெடிலத்தின் காட்சிகளுள் மிகச் சிறந்த தலையாய காட்சி, கெடிலத்தின் தென் கிளையாகிய உப்பனாறு கடலோடு கூடும் முகத்துவாரக் காட்சிதான்! ஆறு கடலோடு கூடும் இந்தக் கூடல், வரலாற்றில் குறிப்பிடத்தக்க கூடலாகும். இந்தக் கூடலினால்தான், இதன் அருகில் அமைந்துள்ள நகருக்குக் ‘கூடலூர்’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கூடலூர் என்னும் பெயர்தான் கடலூராக மாறியிருக்கவேண்டும் எனவும் எண்ண இடமளிக்கிறது. கூடல் என்றால் ஒரு கூடல் அன்று இரண்டு கூடல் அன்று இங்கே நான்கு கூடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவையாவன:

கெடிலத்தின் தென்கிளையாகிய உப்பனாறு கடலோடு கலக்கும் இடத்தில், தெற்கேயுள்ள சிதம்பரம் வட்டத்திலிருந்து பரவனாறு என்னும் ஒர் ஆறுவந்து உப்பனாற்றோடு சேர்ந்து கடலில் கலக்கிறது. எனவே, உப்பனாறு கடலோடு கூடுவது ஒரு கூடல் பரவனாறு கடலோடு கூடுவது இரண்டாவது கூடல்; உப்பனாறும் பரவனாறும் தமக்குள் கூடுவது மூன்றாவது கூடல், உப்பனாறும் பரவனாறும் இணைந்தபடியே கடலோடு கூடுவது நான்காவது கூடல் - என நான்கு கூடல் நிகழ்கின்றன. சுருக்கிச் சொன்னால், இந்த நான்கு கூடல்களும் ஒரே கூடல்தான்; அதாவது, உப்பனாறும் பரவனாறும் ஒரே இடத்தில் இணைந்து கடலோடு கலக்கின்றன. கீழுள்ள படத்தில் இந்தக் கூடலைக் காணலாம்.

ஆறுகள் கூடும் இடத்திற்கு நேரே சிறிது தொலைவில் கப்பல்கள் நின்றுகொண்டிருப்பதைக் காணலாம். கூடலூர்த் துறைமுகத்தில் படகுகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு உப்பனாற்றின் வழியாகக் கடலுக்குள் புகுந்து கப்பலில் சரக்குகளை இறக்கும்; அதேபோல், கப்பலிலிருந்து சரக்குகளை யேற்றிக்கொண்டு கடலிலிருந்து உப்பனாற்றுக்குள் புகுந்து வந்து உப்பனாற்றங்கரையிலுள்ள துறைமுகத்தில் சரக்குகளை இறக்கும். இந்த ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளில் பரவனாற்றுக்குப் பங்கு கிடையாது; அதில் ஒன்றும் நிகழவில்லை. உப்பனாறும் பரவனாறும் கூடுகிற இடத்திலே இரண்டு ஆறுகட்கும் நடுவில் ஒரு கி.மீ. நீளமுள்ள அணைபோன்ற தடுப்பு ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பு, _j போன்ற வளைவுடன், மேலே வண்டி செல்லும் அளவுக்கு அகலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆறுகளும் இணைந்து கடலிலே கலக்கும் முடிவிடம் வரையிலும் இந்தத் தடுப்பு இல்லை. குறிப்பிட்ட இடத்தோடு நின்றுவிடுகிறது. இந்தத் தடுப்பின்மேல் நின்று கொண்டு பார்த்தால் வடக்கே உப்பனாறும், தெற்கே பரவனாறும், கிழக்கே இரண்டு ஆறுகளும் சேர்ந்தபடி கடலிலே கலக்கும் முகத்துவாரமும் தெரிவது வியத்தகு கவின் காட்சியாகும்.

தண்ணிருக்கு நடுவே ஊடுருவி அமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புப் பாதை இல்லாவிடின், இவ்வளவு அண்மையில் நெருங்கிச் சென்று நான்கு கூடல்களுக்கும் நடுவில் நின்று கொண்டு இந்தக் கண்கொள்ளாக் காட்சியை நுகர முடியாது. உப்பனாற்றின் வழியாகக் கடலுக்குப் படகுப் போக்குவரவு நடைபெறுவதால், பரவனாறு மண்ணைக்கொண்டு வந்து உப்பனாற்றில் நிரப்பிப் படகுப் பாதையைத் தூர்த்துவிடாமல் இருப்பதற்காக, இரண்டு ஆறுகட்கும் இடையே இந்தத் தடுப்பு அமைக்கப்பட்டதாம். படகின் துணையின்றி, உந்து வண்டி (கார்) போன்ற ஊர்திகளின் துணைகொண்டு முகத்துவாரப் பகுதியை நெருங்கவும் உதவுகின்ற இந்தத் தடுப்பு பல நோக்கப் பயன் உடையதாயிருக்கிறது. முன்பக்கத்திலுள்ள படம், இந்தத் தடுப்பின் மேல் நீண்டதொலைவு சென்று நின்று கொண்டு எடுத்த படமே. படத்தில் நம் இடக்கைப் பக்கம் தெரிவதுதான் தடுப்பு.