கெடிலக் கரை நாகரிகம்/வரலாறு கண்ட திசைமாற்றம்

5. வரலாறு கண்ட திசைமாற்றம்

எந்த ஆறும், தோன்றும் இடத்திலிருந்து முடியும் இடம் வரைக்கும் பல இடங்களில் வளைந்து வளைந்து திரும்பித் திரும்பிப் பல திசைமாற்றங்களைப் பெறுவது இயல்பு. கெடிலமும் இதற்கு விதிவிலக்கன்று, பல இடங்களில் நெளிந்து வளைந்து பல திருப்பங்களைப் பெற்றுள்ளது. பெரும்பாலும் ஆறுகளின் வளைவான திசைமாற்றம் சிறிது சிறிதாகத்தான் நிகழ்ந்து கொண்டுபோகும். அதாவது, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஓர் ஆறு, திடீரென ஓர் இடத்தில் இந்தக் கோணத்தில் வடக்கு நோக்கித் திரும்புவது அரிது. கிழக்கு நோக்கி ஓடிவரும் ஆறு வடக்கு நோக்கி வளைந்து திரும்பி யிருக்கிறதென்றால், அந்தத் திருப்பம் செங்கோணத்தில் இல்லாமல், குடையின் கைப்பிடிபோல் சிறிது சிறிதாக வளைந்தே ஏற்பட்டிருக்கும். ஆனால், கெடிலமோ, தன் பயணத்தின் இறுதியில் ஓரிடத்தில் _ இதுபோல் செங்கோணமாக வளைந்துள்ளது. இதனால், ஒரு வரலாற்று உண்மையும், இலக்கிய உண்மையும் தவறுபட வழி ஏற்படுகிறது. எனவே, அந்த வரலாறு நிகழ்ந்த பின்னரே இந்தச் செங்கோணத் திருப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தெளியவேண்டும். இதுபற்றிய சுவையான விவரம் வருமாறு:

திருவதிகைப் பக்கத்திலிருந்து கிழக்கு நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் கெடிலம், திருவயிந்திரபுரம் வந்ததும் திடீரென இந்தச் செங்கோணத்தில் வடக்கு நோக்கித் திரும்புகிறது. இந்தத் திருப்பத்திற்குக் காரணம் கேப்பர் மலையின் (கேப்பர் மலைப் பீடபூமியின்) அமைப்புதான். திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து திருவயிந்திரபுரம் வழியாகக் கடலூரை நோக்கி மேற்கும் கிழக்குமாக நீண்டு கிடக்கும் கேப்பர் மலையில், திருவயிந்திரபுரத்தையொட்டி ஒரு பிதுக்கம் காணப்படுகிறது. அதாவது, கேப்பர் மலையிலிருந்து ஒரு சிறு குன்று வடக்கு நோக்கிப் பிதுங்கிக் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டுள்ளது. கெடிலம் ஆறு, திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கேப்பர் மலை அடிவாரத்தையொட்டியே ஓடிவந்து கொண்டிருக்கிறது. வழியில் திருவயிந்திரபுரத்தில், கேப்பர் மலையிலிருந்து வடக்கு நோக்கிப் பிதுங்கி நீட்டிக் கொண்டிருக்கும் சிறுகுன்றுப் பகுதி தடுப்பதால், கெடிலம் தொடர்ந்து கிழக்கு நோக்கி ஒட முடியாமல்,_ இதுபோல் செங்கோணமாகத் திடீரென வடக்கு நோக்கித் திரும்பி விடுகிறது. அது திரும்பும் முனையில்தான் திருவயிந்திரபுரம் இருக்கிறது.

உத்தர வாகினி

இதுவரைக்கும் மேற்கும் கிழக்குமாக இருக்கும் கெடிலம் திருவயிந்திரபுரத்தருகில் தெற்கும் வடக்குமாகக் காட்சி யளிக்கிறது, இதனால், திருவயிந்திரபுரத்திற்கு ஒரு சிறந்த பெருமை வைணவப் பெரியார்களால் கூறப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வரலாற்றுப் பெருமையும் திருக்கோயில் பெருமையும் உடைய திருப்பாதிரிப் புலியூர், திருவதிகை, திருவாமூர், திருநாவலூர் முதலிய திருப்பதிகள் கெடிலத்தின் வடகரையிலும், திருமாணிக்குழி, சேந்த மங்கலம் முதலிய திருப்பதிகள் கெடிலத்தின் தென்கரையிலும் உள்ளன. இந்தத் திருப்பதிகளின் அருகே கெடிலம் மேற்கும் கிழக்குமாக ஒடுகிறது. இத்திருப்பதிகள் சைவசமயப் பெருமை பெற்றவை.

கெடிலக் கரையை ஒட்டியுள்ள புகழ்பெற்ற வைணவத் திருப்பதியோ திருவயிந்திரபுரம் ஒன்றே ஒன்றுதான். இந்தத் திருப்பதியில்தான் கெடிலம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒடுகிறது. இது ஒரு பெரிய சிறப்பாம். ஆற்றின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் உள்ளது. வடக்கு நோக்கி ஒடும் ஆற்றின் கரையில் இருப்பது ஊருக்கும் ஒரு பெரிய சிறப்பாம். கெடிலம் இங்கே வடக்கு நோக்கி ஒடும் தனிப்பெருமை உடைத்தாயிருப்பதால், ‘உத்தர வாகினி’ என ‘வேதாந்த தேசிகர்’ போன்ற பெரியோர்களால் அழைக்கப் பெற்றுச் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. உத்தரம் என்றால் வடக்கு உத்தர வாகினி என்றால், வடக்கு நோக்கி ஒடும் ஆறு.

கெடிலம் உத்தரவாகினி எனச் சிறப்பிக்கப் பெற்றிருப்பதிலுள்ள மறைபொருள் (இரகசியம்) யாது?

தமிழ்நாடு, இந்தியத் துணைக்கண்டத்தில் வரவரக் குறுகிக் கொண்டிருக்கும் தென்கோடியில் இருப்பதாலும், தமிழ் நாட்டின் நிலப்பகுதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிந்திருப்பதாலும் தமிழ் நாட்டு ஆறுகள் மேற்கிலே மேற்குத் தொடர்ச்சி மலையிலே தோன்றிக் கிழக்கு நோக்கி ஓடி வங்கக் கடலில் வந்து கலக்கின்றன. இந்த நிலையில் வடக்கு நோக்கி ஒடுவதற்கு வாய்ப்பில்லை. கிழக்கு நோக்கி ஒடும் ஆறுகளும் சில இடங்களில் வடக்கு நோக்கியோ தெற்கு நோக்கியோ வளைவதுண்டு. அந்த வளைவும் செங்கோணமாக இருப்பது அரிது அப்படியே செங்கோணமாக வளைந்திருப்பினும், ஆற்றின் தெற்கு வடக்கான அந்தப் பகுதியில் புகழ்பெற்ற திருப்பதிகள் அமைந்திருப்பது அரிது. ஆனால், இந்த வாய்ப்பு கெடிலத்திற்கும் திருவயிந்திரபுரத்திற்கும் ஒருசேரக் கிடைத்திருக்கிறது. ‘கிழக்கு நோக்கி ஒடுவதுதான் இயற்கையான முறை; வடக்கு நோக்கி ஓடுவது சிறப்பன்று’ என்று யாரும் வீண்வம்பு செய்யாதபடி, வடக்கு நோக்கி ஒடுவதைப் பெருமைக்கு உரியதாகப் பெரியவர்கள் பெரிதுபடுத்துப் பேசியிருப்பது, கெடிலமும் திருவயிந்திரபுரமும் சேர்ந்து பெற்ற பெரும்பேறே.

இயற்கைக் காட்சிச் சிறப்பு

உத்தர வாகினி எனப் பெரியவர்களால் புகழப்பட்டிருக்கும் தெய்வத் தன்மையினால் மட்டுமின்றி, இயற்கைச் சூழ்நிலை யாலும் அந்த இடம் மிகச் சிறந்ததே. கெடிலத்தின் பயணத் திடையே திருவயிந்திரபுரக் கரைப்பகுதிதான் அழகு மிக்க இயற்கைக் காட்சி உடையதாகும். ஆறு வளையும் செங் கோணத்தின் இரு சிறகுகளும் மலைதான். மலை மேலும் மலையின் கீழும் கோயில்கள் உள்ளன. கீழ்க்கோயிலின் சுவரின்கீழ் ஆறு ஓடுகிறது. கோயிலிலிருந்து ஆற்றிற்கு இறங்கும் படிகளில் நின்று கொண்டு மேற்கே பார்த்தால் ஆற்றின்

அனைத்தேக்கமும் பசுமையான எதிர்க்கரைப்பகுதிகளும் காட்சியளிக்கும். கிழக்கே திரும்பிப் பார்த்தால் கோயிலும் மலையும், தெற்கே பார்த்தால் மலையின் வளைவும் ஆற்றின் வளைவும். வடக்கே பார்த்தால் திருவயிந்திரபுரம் அணை. மலை ஆறு இவற்றின் வளைவு, கோயில், அணை ஆகிய மூன்றும் அடுப்புக் கூட்டியதுபோல் ஒன்றுக் கொன்று மிக அருகிலேயே இருக்கக் காணலாம். மேலே மலையும் கீழே ஆறும் ஒருசேர வளைந்துள்ள இடம், அணை கட்டுவதற்கு மிகவும் தகுந்த சூழ்நிலை உடையதல்லவா? அதனால்தான் இந்த இடத்தில் திருவயிந்திரபுரம் அணை கட்டப்பட்டுள்ளது, அணையின் தேக்கத்துக்கும் மலைக்கும் இடையிலுள்ள திருக்கோயில் பலவகையிலும் சிறப்புடையதே!

மேலுள்ளது, திருவயிந்திரபுரத்தில் ஆறு வடக்கு நோக்கி வளைவதற்குக் காரணமான கேப்பர் மலைப்பகுதியின் படமாகும். படத்தில், நம் வலக்கைப் பக்கமாக இருக்கும் மலை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிக் கிடக்கும் கேப்பர் மலை. இடக்கைப் பக்கமாக இருக்கும் மலை, கேப்பர் மலையிலிருந்து வடக்கு நோக்கிப் பிதுங்கி நீட்டிக் கொண்டிருக்கும் திருவயிந்திரபுரம் மலைக்குன்று. இந்தப் பிதுக்கம், கேப்பர் மலையிலிருந்து நேர் நீட்டமாக இல்லாமல், கொக்கிபோல் வளைந்திருப்பதைப் படத்தில் காணலாம். படத்தில் இருகைப் பக்கங்களிலும் தெரியும் இரண்டுமலைப் பகுதிகளின் நடுவே தொலைவிலே ஒரு மலைப் பகுதி இருப்பதைக் காணலாம். அது தனிமலையன்று; வலக்கைப் பக்கம் தெரியும் கேப்பர் மலையையும் இடக்கைப் பக்கம் தெரியும் திருவயிந்திரபுரம் குன்றையும் தொடர்ச்சியாக இணைக்கும் கொக்கி போன்ற மலை வளைவின் நடுப்பகுதியே அது. இந்த மலை வளைவின் நடுவே ஒரு மலைப் பள்ளத்தாக்கு இருப்பதையும். அப் பள்ளத்தாக்கைச் சுற்றி மூன்று புறங்களில் மலைப் பகுதியும் ஒரு புறத்தில் ஆறும் இருப்பதையும் காணலாம். அம்மலைச் சரிவுப் பள்ளத்தாக்கு, மிகவும் அழகானதும் வளமுள்ளதுமாகும். அது, சுற்றியுள்ள மலைப் பகுதியை நோக்கப் பள்ளத்தாக்கே தவிர தன் கீழே ஒடும் ஆற்றை நோக்க மேட்டுப் பகுதியே. இந்த மலைப் பிதுக்க வளைவின் கீழேதான் கெடிலம் வளைகிறது. இந்த இடம் கண் கொள்ளாக் காட்சியாகும்.

அடுத்த பக்கத்தில் காணப்படுவது கெடிலத்தின் கரையில் உள்ள திருவயிந்திரபுரம் தேவநாத சுவாமி கோயிற் காட்சி. கோயில் கோபுரங்களும் வேறு சில பகுதிகளும் தண்ணிருக்குள் தலைகீழாய்த் தெரிவதைக் காணலாம். ஆற்றின் வளைவுக்கும் அணைக்கும் இடைப்பட்ட பகுதி இது. இந்த இடத்தில் நின்று கொண்டு, நான்கு பக்கங்களிலும் சுற்றிச் சுற்றிக் கட்புலனை மேயவிட்டால் தெவிட்டாத விருந்து கிடைக்கும். இங்கிருந்து பிரிந்துவர மனமே வராது. ஆற்றின் வளைந்த தோற்றத்தின் அழகை அடுத்துவரும் படத்தில் கண்டு களிப்புறலாம்:

வரலாற்று மாற்றம்

திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கி வளையும் கெடிலம் ஏறக்குறைய ஒரு கி.மீ. (முக்கால் மைல்) தொலைவுக்கு நேர் வடக்காக ஒடிப் பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பி விடுகிறது; கிழக்கு நோக்கி, திருப்பாதிரிப்புலியூர் என்னும் நகருக்கு வடக்காக 4 கி.மீ. தொலைவு அளவு ஒடிப் பின்னர் மஞ்சக்குப்பம் மருத்துவமனைக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கித் திரும்புகிறது; இணைந்துள்ள, மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் என்னும் இரு நகர்கட்கும் மேற்குத் திசையிலும் திருப்பாதிரிப்புலியூர் நகருக்குக் கிழக்குத் திசையிலுமாக இரு பெரும்பகுதிகட்கும் இடையே, தெற்கு நோக்கி ஒரு கி.மீ. தொலைவுக்குமேல் ஒடிப் பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பி விடுகிறது; புதுப்பாளையம் நகருக்குத் தென்பால்

கிழக்கு நோக்கி 3 கி.மீ. தொலைவு அளவு ஒடித் தன் இறுதிப் பயணத்தை முடித்துக்கொண்டு வங்கக் கடலில் கலந்து விடுகிறது.

கெடிலத்தின் இந்த நான்கு முனை வளைவுக்கு நடுவே, திருக்கோயில் பெருமையும் வரலாற்றுச் சிறப்புமுடைய திருப்பாதிரிப்புலியூர் நகரம் இருக்கிறது. இந்த நகரின் மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் கெடிலம் ஒடுகிறது. தெற்குப் பக்கம்தான் ஆற்றுப் பகுதி இல்லை. கீழுள்ள கோட்டுப் படம் காண்க

முன்பக்கத்திலுள்ள படத்தில், கெடிலம், திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே தெற்கு - வடக்காக ஒடுவதையும் திருப்பாதிரிப்புலியூருக்கு வடக்கே மேற்கு கிழக்காக ஒடுவதையும், அந்நகருக்குக் கிழக்கே வடக்கு - தெற்காக ஒடுவதையும் காணலாம். நகருக்குத் தெற்கேதான் ஒன்றும் இல்லை. ஆனால் முற்காலத்தில் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கேதான் கெடிலம் ஓடியதாம். அப்படியென்றால், அந்நகரின் மற்ற மூன்று திசைகளிலும் கெடிலம் ஒடியிருக்க முடியாது. அதாவது,

இப்படித்தான் அப்போது ஆற்றின் அமைப்பு இருந்திருக்க முடியும். முடியும் என்றென்ன இப்படித்தான் இருந்தது. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. வரலாற்றுச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் ஒருபுறம் இருக்க, இன்னும் இப்பகுதிகட்கு நேரில் சென்று கூர்ந்து நோக்குவோர்க்கு உண்மை புலனாகாமற் போகாது. முதலில் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளைக் காண்போம்.

‘திருவதிகையில் சிவத்தொண்டு புரிந்து வந்த திலகவதியம்மையாரின் தம்பி திருநாவுக்கரசர் பாடலிபுத்திரம் என்னும் ஊர் சென்று சமண சமயத்தில் சேர்ந்தார்; இடையிலே சூலைநோய் ஏற்பட, திருவதிகை போந்து மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார். இது பொறாத சமணர் சமண சமயத்தவனாயிருந்த பல்லவ மன்னனிடம் இதைக் கூறி, நாவுக்கரசரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட ஏற்பாடு செய்தனர். கடலிலே எறியப்பட்ட நாவுக்கரசர், கடலோடு கலக்கும் கெடில ஆற்றின் வழியாக மேற்கு நோக்கி முன்னேறி, திருப்பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் உள்ள கரையேற விட்ட குப்பம்’ என்னும் இடத்தில் கரையேறினார்; பின்னர் நேரே திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானை வழிபட்டார்.’

இது சேக்கிழாரின் பெரியபுராண நூலையொட்டிய வரலாறு. செவிவழி வரலாறும் இப்படித்தான் செல்கிறது.

[1]"வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்"

என்பது பெரியபுராணப் பாடல். சேக்கிழாரால் ‘திருப்பாதிரிப் புலியூர்ப் பாங்கர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் இடம் ‘கரையேறவிட்ட குப்பம்’ என்னும் சிற்றுார். பாங்கர் என்றால் பக்கம். திருப்பாதிரிப் புலியூர்க்குத் தெற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் கரையேறவிட்ட குப்பம் இருக்கிறது. திருநாவுக்கரசராம் அப்பர் அடிகள் இந்த இடத்தில் வந்து கரையேறினமையால் இது, ‘கரையேறவிட்ட குப்பம்’ என்னும் காரணப் பெயரைப் பெற்றது. இந்த ஊருக்கு ‘வண்டிப் பாளையம்’ என்னும் வேறொரு பெயரும் உண்டு. இந்தக் காலத்தில், கரையேறவிட்ட குப்பம் என்னும் வழக்கு மறைந்து, வண்டிப் பாளையம் என்னும் பெயரே மக்களின் நாவிலும் எழுத்திலும் நடமாடுகிறது. ஆனால் ஆவணப் (ரிஜிஸ்டர்) பதிவுகளில், இன்றும் ‘கரையேற விட்டவர் குப்பம் மதுரா’ என்று பொறிக்கப்படுகிறது

இந்தக் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரைக் கொண்டு, அப்பர் இங்கேதான் கரையேறினார் என்பது தெளிவாகிறது. அப்படியென்றால், கடல் இங்கே இருந்தது என்று எண்ணக்கூடாது. இங்கிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவு சென்றால்தான் கடல் கிடைக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அந்தக் காலத்தில் கெடிலம் இந்த ஊர் வழியாக ஓடிக் கடலில் கலந்திருக்கிறது; எனவே, அப்பர் கடலிலிருந்து கெடிலத்தின் வழியாக மேல் நோக்கி எதிரேறி வந்து வண்டிப் பாளையத்தருகில் கரையேறினார் என்பது தெரிகிறது. அப்பர் கடற்கரையில் வந்து கரையேறவில்லை; கடலிலிருந்து மேல் நோக்கிக் கெடிலம் ஆற்றிற்கு வந்து அந்த ஆற்றின் கரையிலே தான் கரையேறினார் என்பதற்குக் ‘கரையேற விட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலில் தெளிவான சான்று உள்ளது. அந்நூலில் - கரையேற விட்ட படலத்திலுள்ள

"கல்லதுவே சிவிகையதாக் கடலரசன் காவுவோனாச்
சொல்லரசர் மீதேறித் துனிநடத்தி வரவெதிர்ந்தே
மல்லலவன் மனைக்கெடில மாதுமொரு புடைதாங்கு
அல்லல்சிறி தவற்ககற்ற அவள்சார்புங் கொண்டுய்த்தார்

என்னும் (54) பாடலில், சொல்லரசராகிய அப்பர் கெடிலம் என்னும் மாதின் சார்புங் கொண்டு கரையேறினார் என்று கூறப்பட்டிருப்பது காண்க, மேலும் இப்புராணத்தில், கரையேற விட்ட நகர் என்னும் வண்டிப் பாளையத்தை ஒட்டிக் கெடிலம் ஓடியது என்னும் கருத்து பலவிடங்களில் கூறப்பட்டுள்ளது. அந்நூலின் தலவிசேடப் படலத்திலுள்ள

"தென் திசையில் கங்கையெனத் திகழ்கெடிலப்
பூம்புனலே தீர்த்தமாமால்"(7}
"வீறுகரை யேற்றுதல விசேடமுமற் றதன்பாலே
விளங்குங் கங்கை
ஆறெனுந் தீர்த்தக் கெடில அற்புதமும் அதற்கருகே
அமர்ந்தன் பர்க்கு (17}


என்னும் பாடல் பகுதிகளில், கரையேறவிட்ட நகரின் தீர்த்தம் கெடிலம் எனக் கூறப்பட்டிருப்பது காண்க.

தெளிவிற்காக முன்பக்கத்தில் (பக்கம் 51) உள்ள கோட்டுப் படத்தைப் பார்த்தால் நிலைமை புரியும். அதுதான் கெடிலத்தின் பழைய பாதை. ஆற்றின் வடகரையில் கரையேற விட்ட குப்பம் இருப்பதையும் அதற்கும் வடக்கே திருப்பாதிரிப் புலியூர் இருப்பதையும் காணலாம்.

கரையேற விட்ட குப்பம் என்னும் வண்டிப்பாளையத்தை யொட்டித்தான் அந்தக் காலத்தில் கெடிலம் ஓடிற்று என்பதற்கு இயற்கைச் சான்றுகளும் உள்ளன. ஆறு ஓடியதாகக் கூறப்படும் பழைய பாதையில் இப்போது சிறு சிறு ஓடைகள் பல உள்ளன. அந்தப் பகுதியில் ஒரு முழம் ஆழம் தரையைத் தோண்டினாலேயே மணல் கிடைக்கிறது. அந்தப் பாதைப் பகுதி, தன் இரு பக்கங்களிலும் உள்ள நிலப் பகுதியை நோக்கப் பள்ளமாயிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கெடிலத்தின் தென்கரையைத் தொட்டாற் போல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கேப்பர் மலை, இங்கேயும் அதேபோல் அதே நெருக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கேப்பர் மலை அடிவாரத்தில் இருக்கும் வடுகுப்பாளையம் என்னும் ஊருக்கும் வண்டிப்பாளையம் (கரையேறவிட்ட குப்பம்) என்னும் ஊருக்கும் நடுவே, பேருந்து வண்டி (பஸ்) செல்லும் தார்ப்பாதை மிகவும் தாழ்ந்து காணப்படுகிறது. பெருமழை பெய்யும் போது அந்தத் தார்ப்பாதை தண்ணீருக்குள் மறைந்து போக, அங்கே ஓர் ஆறு ஓடுவது போலவே தோற்றம் அளிப்பதுண்டு. ‘ஏன் இந்த இடம் இவ்வளவு தாழ்ந்திருக்கிறது?’ என்று அந்தப் பக்கத்து மக்களைக் கேட்டால், ‘முன் காலத்தில் ஆறு இந்த வழியாக ஓடிற்றாம்’ என்று சில நரைத்த தலைகளாயினும் சொல்லக் கேட்கலாம்.

வண்டிப்பாளையத்திற்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள பாதிரிக்குப்பம் என்னும் ஊரில், முத்தால் நாயுடு என்னும் முதியவரை ஒருநாள் தற்செயலாகக் கண்டபோது கெடிலத்தின் போக்கைப் பற்றி வினவ, அவர் கூறிய விடையாவது:

‘அந்தக் காலத்தில் கெடிலம் வண்டிப்பாளையம் வழியாக ஓடியது உண்மைதான்! நான் இளமையாய் இருந்தபோது அந்தப் பக்கம் தந்திக் கம்பம் நடுவதற்காகப் பலருடன் நிலத்தைத் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். ஒருநாள் ஓரிடத்தில் நிலத்தின் அடியில் மரத்தின் பகுதிகள் பாறையாக மாறிக்கிடக்கக் கண்டோம். அந்தக் காலத்தில் இங்கே ஆறு ஓடிற்று; ஆற்று வெள்ளத்தால் மரங்கள் மண்ணுக்குள்ளே மறைக்கப்பட்டு மடிந்து போயின என்று பெரியவர்கள் சிலர் அப்போது கூறினர்’ இது முதியவரின் பதில்.

வண்டிப்பாளையத்தை யொட்டித்தான் கெடிலம் அன்று ஓடியது என்பதை அறிவிக்கும் ஆணித்தரமான சான்றாக, இன்றைக்கும் அவ்விடத்தில் ‘அப்பர் கரையேறின நிகழ்ச்சி’ ஒரு திருவிழாவாகக் கொண்டாடி நடத்தப்படுகிறது. இந்த விழா அந்தக் காலத்திலிருந்தே நடத்தப்படுகிறதாம். அப்பர் கரையேறியது சித்திரைத் திங்கள் அனுட நாளிலாம். எனவே, ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் அனுட நாளில் இவ்விழா நடைபெறுகிறது. அன்றைக்குத் திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயிலிலிருந்து சிவபெருமான் திருவுருவமும் அப்பர் திருவுருவமும் வண்டிப் பாளையத்திற்கு எழுந்தருளும், வண்டிப்பாளையம் திருக்கோயில் முருகப் பெருமானும் இதில் கலந்து கொள்வார்.

அப்பர் கரையேறியதாகக் குறிப்பிடப்படும் இடத்தில் ஓர் ஓடை ஊண்டு. நாற்பதாண்டுகட்கு முன்பு பெரிய ஓடையாகக் காட்சியளித்த அந்த நீர்ப்பகுதி, நாளடைவில் தூர்ந்து பாழடைந்து இப்போது ஒரு சிறிய குளத்தின் அளவிற்குச் சுருங்கி விட்டது, இந்தக் குளம் முன்னும் பின்னும் கால்வாய்களால் தொடர்பு கொண்டுள்ளது.

இந்தக் குளத்தில் திருவிழாவன்று தெப்பம் கட்டிமிதக்கும். தெப்பத்தில் அப்பர் திருவுருவம் ஏற்றப்பட்டுக் குளத்தைச் சுற்றிச்சுற்றி வந்து, குறிப்பிட்ட சுற்றுக்கள் முடிந்த பின்னர்க் கரையேறும். அப்பர் கல்லிலே கட்டிக் கடலிலே போடப் பட்டார் என்பதை அறிவிக்கும் முறையில் மரத்தெப்பத்திலே கருங்கல்லும் கட்டப்பட்டிருக்கும். அப்பர் திருவுருவத்துடன் தெப்பத்தில் ஏறிக்கொண்டிருக்கும் ஓதுவார்கள், அப்பர் கல்லிலே கட்டிக் கடலிலே எறியப்பட்டபோது பாடிக் கொண்டே கரையேறியதாகக் குறிப்பிடப்படும் ‘சொற்றுணை வேதியன்’ என்னும் தேவாரப் பதிகத்தைப் பண்ணோடு இசைத்துப் பாடுவது மிகவும் உருக்கமாக இருக்கும்.

குளத்தைச் சுற்றி எட்டின மட்டும் மக்கள் தலைகள் தெரியும். அந்தப் பகுதியினர்க்கு இது ஒரு பெரிய திருவிழாவாகும். மலையுடன் தோப்புக்களும் தோட்டங்களும் கழனிகளும் பழனங்களும் ஓடைகளும் கால்வாய்களும் நிறைந்த இன்பமான இயற்கைச் சூழ்நிலைக்கிடையே, தென்றல் வீசும் சித்திரை இளவேனிற் காலத்தே, தேவாரப் பண் இசைக்க அப்பர் திருவுருவம் தெப்பத்தில் மிதந்து கொண்டிருக்கும் காட்சி, அன்புச் சுவையுடன் அழகுச் சுவையும் கலைச்சுவையும் கலந்ததொரு கண்கொள்ளாக் காட்சியாகும். நாளடைவில் பாழடைந்து வந்து கொண்டிருந்த இந்தத் தெப்பக்குளம் 1959 ஆம் ஆண்டில் சீர்திருத்தப்பட்டதுடன், அப்பர் அங்கேதான் கரையேறினார் என்பதை அறிவிக்கும் அறிகுறிச் சான்றாகக் குளத்தின் கரையில் அழகிய ஒரு நினைவு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. மறுபக்கமுள்ள படத்தில் இதனைக் காணலாம்.

படத்தில் திருக்குளத்தையும் குளக் கரையில் மண்டபத்தையும் காணலாம். படத்தில் தென்னஞ்சாலைகளும் சோலைகளும் திகழ்வதையும் காணலாம். இந்தத் துறையில் ஆர்வம் உடையவர்கள் கடலூர் சென்றால் இந்த இடத்தையும் சென்று பார்ப்பது நலம்.

செவிவழிச் சான்று

மற்றும், இப் படத்தில் நம் வலக்கைப் பக்கமாக, நினைவு மண்டபத்திற்கு அருகில் ஒரு சிறு ஓட்டுக் கொட்டகை தெரிவதைக் காணலாம். அது வேறொன்று மன்று வண்டிப்பாளையம் சுடுகாடுதான். அக் கொட்டகையில் பிணங்களைச் சுடுவதும், அதைச் சுற்றியுள்ள பகுதியில் புதைப்பதும் வழக்கம். இந்தச் சுடுகாடு வண்டிப்பாளையம்

ஊருக்கு தெற்கே மிக அண்மையில் - ஒரு பர்லாங்கு தொலைவிற்குள் உள்ளது. இந்தக் காலத்தில், கிறித்துவர்களின் கல்லறைகள் ஊரையொட்டியும், ஊருக்குள்ளேயுங்கூட உள்ளன; ஆனால் அந்தக் காலத்தில் இப்படியன்று; ஊருக்குச் சேய்மையிலேயே சுடுகாடு இருக்கும். நிலைமை அப்படியிருக்க, வண்டிப்பாளையம் சுடுகாடு ஊரையொட்டி இருப்பதேன்?

வண்டிப் பாளையத்தானாகிய நான் சிறு வயதில் ஒரு நாள் எங்கள் வீட்டுத் தெருக்குறட்டில் சிறுவர் பலருடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன் விளையாட்டு முடிந்து வெற்றுப் பேச்சு தொடங்கியது. இளஞ்சிறார்களின் பேச்சு நூற்றுக்கு நூறு எதிர்காலப் பயன் உடையதாகும். அப் பேச்சில் வியப்பூக்கமும் (Curiosity) ஆராய்வூக்கமும் விரவியிருக்கும். இளஞ்சிறார்களாகிய நாங்கள் பேய்கதை - பிசாசு கதை - திருடன் கதை - பாம்பு கதை முதலிய பல கதைகளும் பேசிவிட்டுச் சுடுகாட்டுக் கதைக்கு வந்தோம். இந்தக் கட்டத்தில் எங்களுள் ஒருவன் மற்றவர்களை நோக்கி, ‘நம் ஊருக்கு (வண்டிப்பாளையத்திற்கு) அருகில் சுடுகாட்டை ஏன் அமைத்தார்கள்? அந்தப் பக்கம் போக அச்சமாயிருக்கிறதே!'

என்று முன்னோர்களை நொந்து வைபவன் போல் ஒரு கேள்வி கேட்டான். அதற்கு மற்றவர்களிடமிருந்து, ‘சுடுகாடு கிட்ட இருந்தால் பிணத்தைத் தூக்கிக் கொண்டு கால் கடுக்க நெடுந்தொலைவு போக வேண்டியதில்லை’ என்றும், ‘ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் பிணத்தைச் சீக்கிரம் அடக்கம் செய்து விட்டு வந்து சீக்கிரம் சாப்பிடலாம்’ என்றும் ‘கிட்டவே புதைத்தால் அடிக்கடி போய்ப் பார்த்து விட்டு வரலாம்’ என்றும் பலவிதமான பதில்கள் வந்தன. அப்போது திண்ணையில் அமர்ந்திருந்த என் தந்தையார் எங்களை நோக்கி, ‘நம் ஊரில் ஏன் சுடுகாடு அருகில் இருக்கிறது தெரியுமா? அந்தக் காலத்தில் நம் ஊருக்குப் பக்கத்தில் கெடிலம் ஓடிற்றாம், ஆறு ஓடும் இடங்களில் ஆற்றங்கரையில் கடுகாடு அமைப்பது வழக்கம். அப்படியே நம் ஊர்ச் சுடுகாடும் கெடிலக்கரையில் அமைக்கப்பட்டதாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே, ‘அப்படியென்றால் அந்த ஆறு இப்போது எங்கே?’ என்று ஒரு பொடியன் ஒரு போடு போட்டான். ‘ஆறு வெள்ளம் அடித்து வேறு பக்கம் திரும்பி விட்டதாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள்’ என்று என் தந்தையார் கூறினார். நான் ஓரளவு பெரியவனானதும் இதுபற்றி என் தந்தையாரைக் கேட்டுள்ளேன். ‘இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்’ என வழி வழியாகப் பெரியவர்கள் சொல்லி வருவதாக அவர் கூறினார்.

இதுகாறுங் கூறியவற்றிலிருந்து, இப்போது திருப்பாதிரிப் புலியூருக்கு வடக்கே ஓடும் கெடிலம், அப்போது திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே கரையேற விட்ட குப்பம் என்னும் வண்டிப் பாளையத்தை யொட்டி, ஓடிக் கொண்டிருந்தது என்பது உறுதியாகிறது. இதற்குச் செவி வழி வரலாற்றுச் சான்றுகளேயன்றி, எழுதி வைக்கப்பெற்றுள்ள இலக்கியச் சான்றுகளும் உள்ளன. தொல்காப்பியத் தேவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூலில் இதற்குத் தக்க அகச்சான்று கிடைத்துள்ளது வருமாறு:

“நித்தில முறுவற் பவழவாய்ப் பிறழுங்
கயல்விழி நிரைவளை யிடமாக்
கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்
கடிலமா நதியதன் வடபால்
செய்தலைக் குவளை மகளிர்கண் காட்டுந்
திருக்கடை ஞாழலி லிருந்த
பைத்தலைத் துத்திப் பணியணி யாரெப்
பரமர்தாள் பணிவது வரமே." (45)

“முத்தினை முகந்துபவ ளக்கொடியை வாரி
மோதியிரு டண்டலை முறித்துமத குந்தித்
தத்திவரு சந்தன மெறிந்தகி லுருட்டித்
தாமரையு நீலமு மணிந்ததட மெல்லாம்
மெத்திவரு கின்றகெடி லத்துவட பாலே
மெல்லிய றவஞ்செய்கடை ஞாழலை விரும்பிப்
புத்தியுட னன்புசெய்து போதுசொரி வாரைப்
புணர்ந்துபிரி யாள்விரைசெய் போதிலுறை பூவே."
(100)

என்பன அந்நூற் பாடல்கள். இப் பாடல்களிலுள்ள ‘கெடில மாநதியதன் வடபால் ‘கெடிலத்து வடபாலே’ என்னும் பகுதிகள், கெடிலத்தின் வடபுறத்தே திருக்கடை ஞாழல் என்னும் மாற்றுப் பெயருடைய திருப்பாதிரிப் புலியூர் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது கெடிலத்தின் தென்புறத்தேதான் திருப்பாதிரிப் புலியூர் இருக்கிறது. எனவே, கெடிலம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே வண்டிப்பாளையத்தினருகில் ஒடிக் கொண்டிருந்த போது ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூல் தொல்காப்பியத் தேவரால் இயற்றப்பட்டது என்பது தெளிவு.

இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்’ என்னும் நூலிலும் இதற்குச் சான்று கிடைக்கிறது. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் நகருக்குத் தெற்கே கெடிலம் ஒடியபோது எழுதப்பட்டதென முன்பு கூறினோம். ஆனால், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணமோ, கெடிலம் திசை மாற்றம் பெற்று நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியபின் எழுதப்பட்டதாகும். முன்பு நகருக்குத் தெற்கே ஒடிய கெடிலம், பின்பு நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியதற்குக் காரணமும் அப் புராணம் கூறுகிறது. அது வருமாறு:

“மாணிக்கவாசகர் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கி, வழியிலுள்ள திருப்பதிகள் தோறும் சென்று இறைவழிபாடு செய்துகொண்டு வந்தார். தில்லையில் (சிதம்பரத்தில்) கூத்தப் பெருமானை வணங்கியதும், திருப்பாதிரிப் புலியூர் இறைவனை வணங்குவதற்காக வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்தார். திருப்பாதிரிப் புலியூர் இன்னும் சிறிது தொலைவில் இருந்த நிலையில், இடையிலேயிருந்த கெடிலத்தில் வெள்ளம் சீறிப் பெருக்கெடுத்தோடியதாம் என்செய்வார் மணிவாசகர் ஆற்றில் வெள்ளம் தணிவது எப்போது? வெள்ளத்தின் அளவும் விரைவும் மிகக் கடுமையா யிருந்ததால் தெப்பமும் விடப்படவில்லை. ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தால் அல்லவா திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட முடியும்? மூன்று நாள்கள் இரவு பகல் பட்டினியுடன் அங்கேயே கிடந்தாராம். அப்போது இறைவன் மணிவாசகர்மேல் இரக்கங் கொண்டு ஒரு சித்தராய்த் திருவுருவந் தாங்கி அவ்விடத்தில் தோன்றி ‘உமக்கு என்ன வேண்டும்?’ என்று அவரைக் கேட்டாராம். ‘நான் ஆற்றைக் கடந்து அப்பால் சென்று திருப்பாதிரிப் புலியூர்த் தேவனை வழிபடவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்தருளுக’ என்று வேண்டிக் கொண்டாராம். உடனே சித்தர் ஆற்றை நோக்கி, ‘ஏ கெடிலமே! நீ வளைந்து திசை மாறித் திருப்பாதிரிப் புலியூருக்கு அப்புறமாகச் சென்று மணிவாசகருக்கு வழி விடுக’ என்று கைப் பிரம்பைக் காட்டி ஏவினாராம். நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம் சித்தர் கட்டளைப்படி திசைமாறி நகருக்கு வடக்கே ஓடி வழி விட்டதாம். பின்னர் மாணிக்கவாசகர் இடையூறின்றித் திருப்பாதிரிப் புலியூர் போந்து சிவனை வழிபட்டாராம். இச்செய்தியினை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்திலுள்ள - பின்வரும் பாடல்களால் அறியலாம்.

[2]'அருவமா யுருவமா யருவுரு வகன்ற
உருவ மாகிய பரவெளி பெரும்பற்றப் புலியூர்த்
திருவ ருட்டிற மருவியாங் கிருந்துதீம் புனலூர்
மருவு முத்தர புலிசைமா நகர்தொழ வந்தார்'
(32)
'தென்னகன் கரை யிருந்தனர் யாவருஞ் சிறந்த
மன்னு முத்தர தீரத்தின் வகை குறித் தார்க்குத்
தன்னை யொப்பருங் கலங்களுந் தெப்பமுஞ் சாரா
வன்ன பேருடற் கும்பத்தி னணைத்தவு மணையா'
(35)
'உத்த ரத்திருப் புலிசைமா நகர்தொழ வுற்றேன்
தத்து வெண்புனல் சாகரத் தோடெதிர் தயங்கி
முத்தம் வாரியெற் றலைகளு மலையென முயங்கச்
சித்த சாமியிவ் ஆறுஇடை தடுத்ததென் செய்கேன்'
(39)
'உயிரும் யாக்கையும் மகிழ்விக்கும் வல்லப முடையீர்
தயிரின் வெண்ணெய்போல் மறைந்தருள் இறைவர் நீர்
(தாமே
செயிர றுத்தெனை அக்கரை ஏற்றுதிர் சேர்ந்தோர்
அயர்வ றுக்கும்.அக் கரையேற விட்டவ ராவீர்' (41)
'கெடில மாநதி பாடலேச் சுரனிகே தனத்தின்
வடதி சைக்கணே மன்னுவித் துமைக்கொடு போதும்
புடவி தன்னிடைத் தாள்துணை ஊன்றியே போந்து
கடவுள் ஆலயம் கண் ணுறீஇ வழிபடும் என்றார் (45)
'அட்ட சித்தியும் புரிகுவோ மாதலி னுமக்காம்
இட்டம் யாவையும் செய்குது மெனவுரைத் திரைத்த
மட்டு வார்புனல் வடதிசை மருவவேத் திரத்தால்
தொட்டு நீக்கினர் அவ்வழி யேகின துனைநீர்’ (47)
'அன்ன ராமிரு முனிவரர்க் கபயமீந் தப்பான்
மன்னு தீம்புனல் வடதிசை மருவிடப் புரிந்து
முன்ன மேகிப்பின் வருவருள் செய்தனர் முனியைப்
பன்னு சித்தர்பின் மாணிக்க வாசகர் படர்ந்தார்.' (49)

[3]திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், பெரிய புராணம் ஆகிய நூல்களின் துணைகொண்டு கெடிலத்தின் திசை மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ளவில்லையெனில், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகமும் பெரிய புராணமும் பொய்ச் செய்தி தெரிவிப்பதாக எண்ணவேண்டிவரும். இதைத் தெளியவைக்கு முகத்தான், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணமானது, கெடிலத்தின் இருவேறு திசைப்போக்குகளையும் சுட்டிக்காட்டி, போக்கு திசை மாறினதற்குக் காரணமாக மாணிக்க வாசகர் வரலாற்றைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

மாணிக்க வாசகருக்காகக் கெடிலம் திசை மாறிய வரலாறு, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப்பின் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் - இயற்றப் பெற்ற ‘கரையேற விட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலிலும் சித்தர் திருவிளையாடற் படலம்’ என்னும் தலைப்பில் மிக விரிவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

புராண நம்பிக்கையுள்ளவர்கள், ‘மணிவாசகருக்காகத் தான் கெடிலம் திசைமாறியது; இது முற்றிலும் உண்மையான வரலாறேயாகும்’ என அடித்துப் பேசுவர். புராண நம்பிக்கை யில்லாத சீர்திருத்தக் கொள்கையினர், கெடிலம் பெருவெள்ளத்தினால் இயற்கையாகத் திசை மாறியது; ஆனால், திருப்பாதிரிப் புலியூர்ப் புராண ஆசிரியர், மணிவாசகருக்காக மாறியதாகச் செயற்கையாக ஒரு காரணம் கற்பித்து நிலைமையைச் சரிக்கட்ட முயன்றுள்ளனர்; இதுபோலப் புனைந்துரைப்பது புராணங்களின் வாடிக்கை’ என்று கூறி இக்காரணத்தைத் தட்டிக் கழிப்பர்.

இவ்விரு திறத்தாரின் கொள்கை முரண்பாடு எவ்வாறிருப்பினும், இவண் நமக்கு விளங்கும் உண்மையாவது: திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் எழுதிய தொல்காப்பியத் தேவரின் காலத்தில் நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் எழுதிய இலக்கணம் சிதம்பரநாத முனிவரின் காலத்தில் நகருக்கு வடக்கே ஓடியிருக்கிறது என்பதாம். அங்ஙனமெனில், கெடிலத்தின் வரலாறு கண்ட இத்திசை மாற்றம் நடந்த காலம் எது?- என ஆராய வேண்டும்.

திருநாவுக்கரசர் கரையேறியபோது கெடிலம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஓடியது என்பது அனைவரும் நன்கு அறிந்த செய்தி. அதற்குப் பல சான்றுகளும் முன்பு காட்டப்பட்டுள்ளன. நாவுக்கரசரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது ஆராய்ச்சியாளர் பலர்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. எனவே, அதன் பிறகுதான் கெடிலத்தின் திசைமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அடுத்துத் தொல்காப்பியத் தேவரின் காலத்தை ஆராய வேண்டும். தொல்காப்பியத் தேவர் இரட்டையர்களால் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளார். இரட்டையர்கள், திருப்பாதிரிப் புலியூர் சென்றிருந்தபோது, அவ்வூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் பாடித் தருமாறு அவ்வூரார் வேண்டினர். அதற்கு இரட்டையர்கள், ‘சிவன் மேல் கலம்பகம் பாடவேண்டுமென்றால் தொல் காப்பியத் தேவர் பாடவேண்டும்; நாம் பாடுவது இறைவனுக்கு ஏறுமோ?” என்று கூறியுள்ளார்கள். இதனை,

'தொல்காப்பியத்தேவர் சொன்னதமிழ்ப் பாடலன்றி
நல்காத் திருச்செவிக்கு நாமுரைப்ப தேறுமோ
மல்காப் புனறதும்ப மாநிலத்திற் கண்பிசைந்து
பல்காற் பொருமினர்க்குப் பாற்கடலொன் றீந்தார்க்கே'
என்னும் இரட்டையர் பாடலால் அறியலாம். இதிலிருந்து இரட்டையர் காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்பது தெளிவு, அங்ஙனமெனில், இரட்டையர் காலம் எது?

இரட்டையர்கள் வாபதியாட்கொண்டான் என்னும் வள்ளலைப் பாடியுள்ளனர். வாபதியாட்கொண்டானின் வேண்டுதலால் வில்லிபுத்தூரார் பாரதம் பாடினார். வில்லிபுத்தூரார் காலத்தில் அருணகிரிநாதரும் காளமேகப் புலவரும் வாழ்ந்ததாக வரலாறு. இவர்களின் காலம் பதினைந்தாம் நூற்றாண்டு. எனவே, இரட்டையர் காலம் 15 ஆம் நூற்றாண்டு என அறியலாம். ஆகவே, இரட்டையரால் புகழ்ந்து பாடப்பெற்ற தொல்காப்பியத் தேவர் 15 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவர் என்பது புலனாகும்.

இரட்டையர் காலத்திலேயே தொல்காப்பியத் தேவரும் ஏன் இருந்திருக்கக்கூடாது? என்பதாக இங்கே ஓர் ஐயம் தோன்றலாம்.

இந்தக் காலத்தில் ஒருவர் ஒரு நூல் எழுதினால் அது உடனே அச்சிடப்படுகிறது. அச்சிடப்பட்ட ஒரு திங்களில் உலகம் முழுவதும் பரவவுஞ் செய்கிறது. அந்தக் காலத்தில் ஒருவர் நூல் எழுதுவது ஓலைச் சுவடியில்தான். அது பலராலும் பல படிகள் எடுக்கப்பட்டுப் பல ஊர்களிலும் பரவுவதற்குப் பன்னெடுநாள் ஆகும். அதன் பிறகே அந்நூலின் சிறப்பு பலராலும் அறிந்து பாராட்டப்படும். இந்நிலையில், தொல்காப்பியத் தேவர் இயற்றிய திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், புகழ் பெற்ற பெரும் புலவர்களாகிய இரட்டையர்களாலேயே பாராட்டப் பெற்றிருக்கிறதென்றால், அக் கலம்பகம் அவர்கள் காலத்துக்கு முன்பே தோன்றித் தமிழ் நாட்டில் பரவிப் பாராட்டப்பெற்றிருக்க வேண்டும். எனவே, இரட்டையர் வாழ்ந்த 15 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர். என்று கொள்ள வேண்டும். தேவரின் காலத்தை, பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டுகள் முன்னால் தள்ளிக் கொண்டு போகவேண்டும்.

திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் இயற்றியவரும் சிவஞான முனிவரின் மாணாக்கருமாகிய இலக்கணம் சிதம்பரநாத முனிவர் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் அப் புராணத்தில் கூறியுள்ளபடி, கெடிலத்தின் திசை மாற்றத்திற்குக் காரணராக இருந்த மாணிக்கவாசகர் பழங் காலத்தவர். பழங் காலத்தவர் என்றால் இற்றைக்கு ஆயிரம் ஆண்டாவது முற்பட்டவர். ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கூறப்படும் சுந்தர மூர்த்தி நாயனார் என்னும் சுந்தரர், சைவ நாயன்மார்களின் பெயர்களைக் தொகுத்து எழுதியுள்ள ‘திருத்தொண்டத் தொகை’ என்னும் நூலில் மாணிக்கவாசகரின் பெயரைச் சேர்க்கவில்லையாதலின், சுந்தரர்க்குப் பிற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது புலனாகும். ஆனால் சிலர், ‘மாணிக்க வாசகர் சந்தரர்க்கு மிகவும் முற்பட்டவர்; இவர் அறிவால் சிவனே யாயினார்; ஆதலின் மற்ற நாயன்மார்களினும் சிறப்பில் மிக்கவர்; அதனாலேயே, சுந்தரர் இவரை மற்ற நாயன்மார் களோடு இணைத்துத் தம் நூலில் பாடாது விட்டார்’ என்று கூறுகின்றனர். இக் கூற்றுப் பொருந்தாது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களின் மொழி நடையைக் காணுங்கால், மாணிக்கவாசகர் தேவார ஆசிரியர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் முற்பட்டவராயிருக்க முடியாது - பிற்பட்டவரே என்பது புலப்படாமற் போகாது. சில ஆண்டுகளாயினும் மாணிக்கவாசகர் சுந்தரர்க்குப் பிற்பட்ட வராயிருந்ததனால்தான், சைவ நாயன்மார்களைப் பற்றிச் சுந்தரரால் பாடப்பெற்ற நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறவில்லை.

முதல் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரைக்கும், ஆராய்ச்சியாளர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மாணிக்கவாசகரின் காலத்தை அங்கு மிங்குமாகத் தூக்கிப்போட்டுப் பந்தாடினாலும், சுந்தரர் நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறாததைக் கொண்டும், திருவாசகப் பத்துக்களின் தலைப்புகளைக் கொண்டும் மொழி நடையைக் கொண்டும், சுந்தரர்க்குப் பிற்பட்டவரே மாணிக்கவாசகர் எனத் துணிந்து முடிவு செய்யலாம். இதற்கு இயற்கையான இன்னொரு சான்றும் உள்ளது: ‘சைவ சமய குரவர் நால்வர்’ அல்லது ‘நால்வர்’ என்னும் தொகைப் பெயர் வரிசையில், (1) திருஞானசம்பந்தர், (2) திருநாவுக்கரசர், (3) சுந்தரர், (4} மாணிக்கவாசகர் என மாணிக்கவாசகர் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளமை காண்க. இவர் மற்ற மூவரினும் காலத்தால் பிற்பட்டவரா யிருந்ததனால்தான் இறுதியில் வைத்து எண்ணப்பட்டுள்ளார். மற்றபடி, பெருமையினால் நால்வரும் ஒரு நிகரானவர்களே.

இந்நால்வருள் முதல் இருவராகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தினர் - அதாவது ஏழாம் நூற்றாண்டினர். இவ்விருவரையும் தம் நூலில் பாடியுள்ள சுந்தரர் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினராக துணியப்பட்டுள்ளார். எனவே, மாணிக்க வாசகர், ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் எனக் கொள்ள வேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்றால், பல நூற்றாண்டுகள் பின் தள்ளியிருக்க முடியாது; ஓரிரு நூற்றாண்டுதான் பிற்பட்டிருக்க முடியும். பல நூற்றாண்டுகள் பிற்பட்டவராயிருந்திருந்தால், தமக்குள் அண்மை நூற்றாண்டினராகிய மூவருக்கும் பின்னால் நாலாமவராக மாணிக்கவாசகர் வைத்து எண்ணப்பட்டிருக்க மாட்டார்; பிற்காலத்துத் தோன்றிய சைவப் பெரியார்கள் சிலரைப்போல மாணிக்கவாசகர் தனித்து விட, அந்த மூவரும் மூவராகவே நின்றுவிட்டிருப்பர். அங்ஙனமின்றி, இந்நால்வரும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மிகப் பெரிய சைவத் தலைகளாக விளங்கினமையால்தான் ‘நால்வர்’ என இணைத்துச் சிறப்பிக்கப்பெற்றனர். இஃது இயற்கையின் தீர்ப்பு! ஆம், மக்களின் தீர்ப்பு! எனவே, பத்தாவது நூற்றாண்டினர் மணிவாசகர் என்று கொள்ளலாம்.

இந்தக் கருத்துக்கு எதிராக அப்பர் தேவாரத்திலிருந்து ஓர் அகச்சான்று காட்டப்படுகிறது. அப்பர் தமது திருவாரூர்த் தேவாரப் பதிகத்தில்,

"நரியைக் குதிரைசெய் வானும்
நரகரைத் தேவுசெய் வானும்
விரதம் கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்...

என்று இறைவனின் திருவிளையாடல்களைக் கூறியுள்ளார். இதிலுள்ள ‘நரியைக் குதிரை செய்வானும்’ என்னும் பகுதியைக் கொண்டு, நரி பரியாக்கிய கதைக்கு உரிய மணிவாசகர் அப்பருக்கு முற்பட்டவராவார் என்று சிலரால் கூறப்படுகிறது. ஆனால், இறைவன் மணிவாசகருக்காக நரியைப் பரியாக்கிய கதை இங்கே அப்பரால் குறிப்பிடப்படவில்லை. இறைவன் எதையும் செய்யவல்ல ‘சித்தர்’ என்ற கருத்திலேயே அப்பர் இதனைக் கூறியுள்ளார். அஃதாவது, இறைவன், நரியைக் குதிரையாக்க வல்லவன் - நரகரைத் தேவராக்க வல்லவன் - தாமாகவே விரதம் எடுத்துக் கொண்டு ஆடவல்லவன் - விதை போடாமலேயே செடி கொடிகளை முளைக்கச் செய்பவன் - என்பதாக இறைவனின் சிறப்பு மிக்க ‘சித்து’ விளையாடல்கள் கூறப்பட்டிருப்பதை இங்கே காணலாம். எனவே, இந்தத் தேவாரப் பகுதிக்கும் மணிவாசகர் பற்றிய கதைக்கும் இங்கே தொடர்பேயில்லை . தமிழறிஞர் எம். சீநிவாச அய்யங்கார் ‘தமிழாராய்ச்சி’ என்னும் தமது நூலில், ‘நரிபரியாக்கிய கதை தமிழகத்தில் பண்டு தொட்டு வழங்கி வருவது; அதற்கும் மணிவாசகருக்கும் தொடர்பில்லை’ என்பதாகக் கூறியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது எனவே, மணிவாசகர், தேவார ஆசிரியர் மூவருக்கும் பிற்பட்டவர் - பத்தாம் நூற்றாண்டினர் என்பது போதரும்.

இதற்கு இன்னும் கூரான சான்று ஒன்று கொடுக்க முடியும். நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப்பெரியார், தமது ‘ கோயில் திருப்பண்ணியர் விருத்தம்’ என்னும் நூலில், திருவாதவூரர் என்னும் இயற்பெயருடைய மாணிக்க வாசகரையும் அவர் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையையும் பற்றி,

"வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத புள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே"
(58)

என்னும் பாடலில் சிறப்பித்துக் கூறியுள்ளார். நம்பியாண்டார் நம்பியின் காலம் பதினோராம் நூற்றாண்டு என்பது, அனைவரும் எளிதில் ஒப்புக்கொண்டுள்ள உண்மை. எனவே, அவருக்கும் முற்பட்டவர் மணிவாசகர் என்பது தெளிவு. ஆகவே, மணிவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் தெளிவு.

மற்றொரு வகையிலும் மணிவாசகரின் காலத்தைக் குறுக்கி நெருக்கிக்கொண்டு வரலாம். பதினோராம் நூற்றாண்டினரான நம்பியாண்டார் நம்பி பட்டினத்தாரின் பாடல்களைத் தொகுத்துள்ளார். பட்டினத்தாரோ, மணிவாசகரைப் பாராட்டிப் பாடியுள்ளார். எனவே, நம்பியாண்டார் நம்பிக்கும் முற்பட்ட பட்டினத்தார்க்கும் முற்பட்டவர் மணிவாசகர் என்பது புலனாகும். ஆகவே, நம்பியாண்டார் நம்பி பதினோராம் நூற்றாண்டினரென்றால், பட்டினத்தாரின் காலம் பதினோராம நூற்றாண்டின் முற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும், மணிவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் கொள்ளலாம். பத்து - பதினோராம் நூற்றாண்டுகளாகிய இருநூறு ஆண்டு காலத்தில் மூன்று தலைமுறையினர் (மணிவாசகர், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி) இருந்திருப்பதில் வியப்பேதுமில்லை; அது நடக்கக் கூடியதே.

இஃது இங்ஙனம் இருக்க - புராணம் போன்ற மத நூல்களில் நம்பிக்கையுள்ள பெரியோர் சிலர்கூட - ஏன் [4] தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் அவர்களுங்கூட, கெடிலத்தின் திசைமாற்றத்திற்குக் காரணமாக மாணிக்கவாசகர் பற்றித் திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்திற் கூறப்பட்டுள்ள செய்தியினைப் பொய்யான கற்பனையென மறுத்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறுங் காரணமாவது:- ‘நகரின் தெற்கே கெடிலம் ஓடுவதாகக் கலம்பக நூலில் எழுதியுள்ள தொல்காப்பியத் தேவருக்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர்; எனவே, மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி நகருக்கு வடக்கே ஓடியிருக்க முடியாது’ - என்பதாம்.

இவ்வாறு சிலர் புராணச் செய்தியை மறுப்பதற்குக் காரணங்கள் இரண்டு: மாணிக்கவாசகருக்காக இப்படி நடந்திருக்க முடியாது என்று எண்ணுவது ஒன்று; மாணிக்க வாசகர் காலத்தை மிக முற்பட்டதாகவும் தொல்காப்பியத் தேவர் காலத்தை மிகப் பிற்பட்டதாகவும் கணிப்பது மற்றொன்று. இவ் விரண்டிற்கும் உரிய மறுப்புப் பதில்களாவன:-

(1) மாணிக்கவாசகருக்காக ஆறு திரும்பியது என்பதை நம்பாவிட்டால் போகிறது. இயற்கையாகவே ஆறு மாறியதாக ஏற்றுக்கொள்வோம். ஆனால், அவர் காலத்தில் இயற்கையாக ஆறு திசைமாறியிருக்கலாம் என்பதையாவது நம்பலாமே! புராணங்கள் புளுகு மூட்டை என்பதாகச் சொல்லினும், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் இயற்றிய சிதம்பரநாத முனிவர், எத்தனையோ பெரியார்கள் இருக்க அவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டுக் கெடிலத்தின் திசைமாற்றத்தோடு மாணிக்கவாசகர் பெயரை முடிச்சுப் போட்டிருப்பதில் ஏதேனும் பொருத்தம் இருக்கத்தான் வேண்டும் - மாணிக்கவாசகர் காலத்தில் ஆறு திசைமாறியதாகச் செவிவழிச் செய்தி (கர்ண பரம்பரைச் செய்தி) யொன்று சிதம்பரநாத முனிவர்க்குக் கிடைத்திருக்கலாம்; திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதி மக்கள் அவ்வாறு அவரிடம் தெரிவித்திருக்கலாம். அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்துக் கொண்டு, மணிவாசகர் சித்தரை வேண்டிக் கொள்ள, சித்தர் திசை மாற்றினார் என்பதாக ஆசிரியர் புராணத்தில் புனைந்துரைத்திருக்கலாம். பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியல்ல - ஐரோப்பியரால் ஆளப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் - தேவலோகத்தையோ நரக லோகத்தையோ அதள சுதள பாதாள லோகத்தையோ பற்றி யல்ல - ஐரோப்பியர் ஆளத் தொடங்கிய திருப்பாதிரிப் புலியூரைப் பற்றிப் புராணம் பாடிய சிதம்பரநாத முனிவர், ஒரு பற்றுக்கோடும் இல்லாமல் வீணே வெறும் பொய் புளுகியிருக்க முடியாதல்லவா? ஒன்றாவது இருந்தால்தானே ஒன்பதாகச் சொல்ல முடியும்?

மாணிக்கவாசகருக்காகச் சித்தர் கட்டளையிட அதனால் கெடிலம் திசைமாறாவிட்டாலும், உண்மையில் என்ன நடந்திருக்கலாம்? மாணிக்கவாசகர் தில்லையிலிருந்து வடக்கு நோக்கி வந்து திருப்பாதிரிப் புலியூரை நெருங்கினபோது, வழியிலே கெடிலத்தில் வெள்ளம் ஓடியிருக்கலாம். அதனால் அவர் வெள்ளத்தின் வடிவை எதிர்பார்த்து அக் கரையிலேயே கடவுளை வேண்டிக் காத்திருக்கலாம். இந்த நேரத்தில், அவ்விடத்திற்கு மேற்கே திருவயிந்திரபுரத்தில் ஆற்று வெள்ளம் பிய்த்துக் கொண்டு திசைமாறி ஓடியிருக்கலாம். வந்து கொண்டிருந்த வெள்ளத்தின் பெரும்பகுதி மேற்கே திசைமாறி எதிர்ப்பக்கம் திரும்பியதால் மணிவாசகர் காத்துக் கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் குறைந்திருக்கலாம். இது மாதிரி இந்தக் காலத்திலும் நடப்பதுண்டு. (சிலர், ஆற்று வெள்ளம் தங்கள் ஊரை அழிக்காமல் இருப்பதற்காக எதிர்க்கரையில் சென்று அக்கரையை வெட்டிவிட்டு வெள்ளத்தை அக் கரைப் பக்கம் திருட்டுத்தனமாகத் திருப்பி விடுவதும் இக்காலத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.) தண்ணீர் குறைந்து வழக்கமாகக் கடக்கக் கூடிய அளவுக்கு வரவே, மாணிக்கவாசகர் எளிதாக ஆற்றைக் கடந்து அக் கரையடைந்திருக்கலாம். வேறு பக்கம் திசை மாறிய கெடிலம் அந்தப் புதுப்பாதையிலேயே தொடர்ந்து சென்றிருக்கலாம். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பல நூற்றாண்டுகளாகச் செவி வழியாக மக்களிடையே அறியப்பட்டு வந்திருக்கலாம். இதைக் கேள்விப்பட்ட சிதம்பரநாத முனிவர் புராணத்தில் பொருந்தப் புளுகிவிட்டிருக்கலாம். எனவே, மாணிக்கவாசகருக்காகத்தான் கெடிலம் திசை மாறியது என்பதை நம்பாவிட்டாலும், அவர் காலத்தில் திசை மாறியிருக்கலாம் என்பதையாவது நம்பி வைக்கலாமே!

(2) அடுத்து, மாணிக்கவாசகரை முற்பட்டவராகவும் தொல்காப்பியத் தேவரைப் பிற்பட்டவராகவும் கொள்ளுதலும் பொருந்தாது. பத்தாம் நூற்றாண்டினராகிய மணிவாசகருக்குச் சில ஆண்டுகளாயினும் தொல்காப்பியத் தேவர் முற்பட்ட வராகவே இருந்திருப்பார். ஏன், இருவரையும் ஒரு காலத்தில் வாழ்ந்தவராகக்கூட கூறலாமே! தொல்காப்பியத் தேவர் வயதில் மூத்தவராயிருந்து முன்னால் காலமாகியிருக்கலாம்; மணிவாசகர் வயதில் இளையவராயிருந்து பின்னால் காலமாகியிருக்கலாம் திருப்பாதிரிப் புலியூர்க்குத் தெற்கே கெடிலம் ஓடியதாக எழுதிய தொல்காப்பியத் தேவர் காலமான சில ஆண்டுகளில் கெடிலம் திசை மாறியிருக்கலாமே! எனவே, தொல்காப்பியத் தேவர் நூற்றாண்டுக் கணக்கில் மாணிக்க வாசகர்க்கு முற்பட்டவர் என்று கூறமுடியாவிடினும், சில ஆண்டுகளாயினும் முற்பட்டவர் என்று கூறலாமே!

சிலர், வேறொரு காரணங் காட்டியும் தொல்காப்பியத் தேவரின் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயலலாம். அஃதாவது, கலம்பகம், தூது, உலா முதலிய 96 வகைச் சிற்றிலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றியவை; எனவே, திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவர் மணிவாசகருக்குப் பிற்பட்டவரே என்று கூறக்கூடும்.

கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்கள் சங்க இலக்கியங்கட்குப் பிற்பட்டனவே யெனினும், ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இத்தகு சிற்றிலக்கியங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன. கலம்பக நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தோன்றத் தொடங்கிவிட்டன என்பதும், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், நந்திக் கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முதலிய கலம்பகங்கள் கலம்பக நூல்களுக்குள் மிகவும் பழமையானவை என்பதும் தமிழிலக்கிய ஆராய்ச்சி வல்லுநர்கள் நன்கறிந்த செய்திகளாம். ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பி இயற்றியது. அவர் பதினோராம் நூற்றாண்டினர். எனவே, திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம். இவ்வகையில் பார்க்குங்கால், மணிவாசகருக்குச் சிலவாண்டுகளாயினும் முற்பட்டவர் தொல்காப்பியத்தேவர் என்று கூறமுடியுமே.

மேலும், தேவர் என்னும் பட்டப் பெயரைப் பார்க்கும் போது, இவர் சமணராயிருந்து பிறகு சைவத்திற்கு மாறினதாகத் தெரிகிறது. தேவர் என்பது சமண முனிவரைக் குறிக்கும் பெயராகும். சீவக சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்க தேவர், சூளாமணி யாசிரியராகிய தோலா மொழித்தேவர் ஆகிய சமணப் பெரியார்களின் பெயர்களை ஈண்டு ஒப்பு நோக்குக. திருத்தக்க தேவரும் தோலா மொழித் தேவரும் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினராக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் காலத்தை யொட்டியவராகத் தொல்காப்பியத் தேவரையும் கொள்ளலாம். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டுவரை - அதாவது அப்பரடிகள் காலத்திலிருந்து மணிவாசகர் காலம் வரை, சைவ - சமணப் புத்தமதப் போராட்டங்கள் கடுமையாக நடந்ததும், சமண புத்த மதங்களைப் பின்பற்றியிருந்தவர்கள் சைவத்திற்கு மாறினதும் அறிந்த செய்திகளே. எனவே, தொல்காப்பியத் தேவர் என்னும் பெயர் அமைப்பையும், அவர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினதையும் எண்ணிப் பார்க்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலம், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம் எனச் சூழ்நிலையை யொட்டித் தெரிய வருகிறது.

ஈண்டு மீண்டும் ஒன்றை நினைவு கூரவேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டையர்கள், ‘தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப் புலியூர் இறைவன் மேல் கலம்பகம் பாடியபின் நாங்கள் பாடுவது எடுபடாது என்று கூறியிருப்பதைக் கொண்டு, தேவர் இரட்டையர்க்குச் சிறிது காலந்தான் முற்பட்டவர் என்று கொள்ளக்கூடாது. [5] ‘கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ என்ற புகழ் மொழிப்படி, கலம்பகம் பாடுவதில் இரட்டையர்கள் வல்லவர்கள். தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம் முதலிய சிறந்த நூல்களை அவர்கள் இயற்றியுள்ளார்கள். எனவே, கலம்பக வல்லுநர்களாகிய அவர்கள் திருப்பாதிரிப்புலியூருக்கு வந்தபோது, தங்கள் ஊர்க்கும் ஒரு கலம்பகம் பாடும்படி அவ்வூரார் கேட்டனர். ஆனால், தொல்காப்பியத் தேவரின் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகமோ முன்னமேயே மிகவும் பெயர் பெற்று விளங்கியது. இந்நிலையில் திருப்பாதிரிப் புலியூர் இறைவன் மேல் தாங்களும் ஒரு கலம்பகம் பாடத் தேவையில்லை என இரட்டையர்கள் உணர்ந்து, தேவரின் கலம்பகமே போதும் எனக் கூறிவிட்டனர். எனவே, கலம்பகச் ‘சேம்பியன்கள்’ (Champions) ஆன இரட்டையர்களாலேயே பாராட்டப் பெற்ற திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இரட்டையர்கட்கு முன்பே பல நூற்றாண்டுகளாக மக்களால் பாராட்டப்பெற்று வந்திருக்க வேண்டும் என உணரலாம். ஆகவே, தொல்காப்பியத் தேவர், முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகரினும் முற்பட்டவராய், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தார் எனத் துணியலாம்.

மேலே இதுவரையும் செய்த ஆராய்ச்சியில், தொல்காப்பியத் தேவரும் மாணிக்கவாசகரும் பத்தாம் நூற்றாண்டளவில் முறையே அடுத்தடுத்து வாழ்ந்தவராய் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியை அனைவரும் ஏற்றுக் கொள்வது அரிது. காலவாராய்ச்சி மிகவும் கடுமையானது; அதற்குத் திட்டவட்டமாய் அறுதியிட்டு உறுதி கூறி முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது. அந்தந்தக் காலச் சூழ்நிலையைக் கொண்டு இப்படி யிருந்திருக்கலாம் எனக் குறிப்பாகவே கூறமுடியும்.

இந்த அடிப்படையில் நோக்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலத்தையடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி யிருக்கலாம் என்பதும், அந்தக் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் புலப்படும். எனவே, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன் கெடிலம் திசைமாறி யிருக்கலாம் என்பது தெளிவு.

மாணிக்கவாசகருக்காகக் கெடிலம் திசைமாறியதாகத் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் கூறப்பட்டிருப்பதனால் மட்டும். கெடிலம் பத்தாம் நூற்றாண்டில் - அதாவது ஆயிரம் ஆண்டுகட்கு முன் திசைமாறி யிருக்கலாம் என்ற முடிவுக்கு வரவில்லை; அதற்கு வேறு இயற்கைச் சான்றும் உள்ளது. மாணிக்கவாசகருக்காக ஆறு திசைமாறியது என்பதை நம்பாவிட்டாலும், மாணிக்கவாசகர் காலத்தில் திசைமாறி யிருக்கலாம் என்பதையாவது நம்பலாம் என்ற முடிவு, முன்னமே (பக்கம் - 67) தக்க சான்றுடன் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மேலும் துணைசெய்யும் இயற்கைச் சான்றாவது:

திசை மாறுவதற்கு முன் கெடிலம் ஓடியதாகச் சொல்லப்படும் பழைய பாதையை இப்போது பார்த்தால், அங்கே ஒரு காலத்தில் ஓர் ஆறு ஓடியதாக யாரும் சொல்ல முடியாது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நோக்குடன் பார்த்தால், அந்தப் பழைய பாதை சிறிது பள்ளமாயிருப்பதையும் ஆங்காங்கே சிறுசிறு ஓடைகள் இருப்பதையுங்கொண்டு, முன்பு ஆறு ஓடியிருக்கலாம் என்று கூற முடியும். ஆனால், பொது மக்கள் இயற்கையாகப் பார்த்தால், ‘அந்த இடத்தில் ஆறு ஓடியதாகச் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அந்தப் பாதை மாற்றம் பெற்று நன்செய் வயல் பகுதியாகக் காட்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய மாற்றம் பெறவேண்டுமானால், குறைந்தது ஆயிரம் ஆண்டு காலமாயினும் தேவைப்படும். ஓர் ஆற்றின் பாதை தன் பழைய உருவை இழந்து, தன் இரு கரைப் பக்கங் களிலுமுள்ள வயல் பகுதியோடு வயல் பகுதியாய்க் கலந்து மாறுவது என்பது இரண்டு மூன்று நூற்றாண்டு கால அளவில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியன்று. எனவே, இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன் - அஃதாவது பத்தாம் நூற்றாண்டில் அஃதாவது மணிவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி யிருக்கலாம் என்ற முடிவுக்குத் துணிந்து வரலாம்.

உலகில் ஆறுகள் ஆங்காங்கே - அவ்வப்போது திசைமாறுவது இயற்கையே யென்றாலும், கெடிலத்தின் இந்தத் திசை மாற்றம், வரலாற்று உண்மையினையும் இலக்கிய ஆட்சியினையும் மாற்றும் நிலையில் இருப்பதால், ஈண்டு இத்துணை விரிவாக ஆராய்ச்சி செய்யவேண்டியதாயிற்று. இல்லாவிடின், வரலாறும் இலக்கியமும் பொய்யாகி விடுமன்றோ ? வைகையாறு கூட, மதுரையில் இப்போது ஓடும் திசைக்கு எதிர்த்திசையில் ஒரு காலத்தில் ஓடியதாகச் சொல்லப் படுவதுண்டு. மற்றும், தென்னார்க்காடு மாவட்டத்தில், அருணந்தி சிவாசாரியார் தோன்றிய திருத்துறையூர் என்னும் ஊருக்கு வடக்கே இப்போது ஓடிக்கொண்டிருக்கும் தென் பெண்ணையாறு, சுந்தரமூர்த்திநாயனார் காலத்தில் திருத்துறையூருக்குத் தெற்கே ஓடியதாகப் பெரிய புராணத்திலிருந்து தெரிகிறது. திருத்துறையூருக்குத் தெற்கே திருவதிகை உள்ளது. சுந்தரர் திருத்துறையூரிலிருந்து புறப்பட்டுத் தென்பெண்ணை யாற்றைக் கடந்து திருவதிகையை அடைந்ததாகச் சேக்கிழார் பாடியுள்ளார். இதனை, பெரிய புராணம் தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியிலுள்ள

"திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமான்
அமர்ந்தருளும்
பொருத்தமாம் இடம்பலவும் புக்கிறைஞ்சிப் பொற்புலியூர்
நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
வருத்தமிகு காதலினால் வழிக்கொள்வான்
மனங்கொண்டார் (81)
"மலைவளர்சந் தகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதருதண் புனல் பெண்ணை யாறுகடந் தேறியபின்
நிலவு பசும் புரவிநெடுந் தேரிரவி மேல்கடலில்
செல அணையும் பொழுதணையத் திருவதிகைப்
புறத்தணைந்தார்" (82)

என்னும் பாடல்களால் அறியலாம். பாடல்களிலுள்ள திருத்துறையூர்தனைப் பணிந்து..... பெண்ணையாறு கடந்தேறிய பின் .... திருவதிகைப் புறத்தணைந்தார்’ என்னும் பகுதிகளை நோக்கின், திருத்துறையூருக்கும் அதற்குத் தெற்கேயுள்ள திருவதிகைக்கும் இடையே பெண்ணையாறு ஓடியமை புலப்படும். ஆனால், இப்போது திருத்துறையூருக்கு வடக்கே பெண்ணை ஓடுகிறது. திருத்துறையூருக்கும் திருவதிகைக்கும் இடையே ஆறு கிடையாது.

பெண்ணையினும் கெடிலத்தின் திசைமாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சியாகும். இந்தத் திசைமாற்றம் திருவயிந்திரபுரத்தில் ஏற்பட்டிருப்பதாக முன்னர்க் கூறினோம். பத்தாம் நூற்றாண்டிற்குமுன், வானமாதேவிப் பக்கத்திலிருந்து கிழக்குநோக்கி ஓடிவந்துகொண்டிருக்கும் கெடிலம், திருவயிந்திரபுரத்தில் கேப்பர் மலையிலிருந்து பிதுங்கி நீட்டிக்கொண்டிருக்கும் சிறு குன்றைச் சிறிது தொலைவு வடக்கு நோக்கி வளைந்து சுற்றிக்கொண்டு மீண்டும் கிழக்குநோக்கிக் கேப்பர்மலை அடிவாரத்தை ஒட்டியே கரையேற விட்ட குப்பம் வழியாக ஓடிக்கொண்டிருந் திருக்கவேண்டும். பின்னர்ப் பத்தாம் நூற்றாண்டு அளவில், திருவயிந்திரபுரத்து மலைப்பிதுக்கத்தில் வடக்கு நோக்கி வளைந்த கெடிலம், சிறிது தொலைவிற்குள்ளேயே மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பாமல், தொடர்ந்து ஒரு கி.மீ. தொலைவிற்கு வடக்கு நோக்கியே ஓடிக்கொண்டிருக்கத் தொடங்கிவிட்டது. வெள்ளப் பெருக்கின் மிகுதியினால் இப்படி நடந்திருக்கவேண்டும். இவ்வாறு நெடுந்தொலைவு வடக்கு நோக்கி ஓடிப் பிறகு கிழக்கு நோக்கித் திரும்பியதால் தான், முன்னர்த் திருப்பாதிரிப்புலியூருக்குத் தெற்கே ஓடிக்கொண்டிருந்த ஆறு இப்போது அந் நகருக்கு வடக்கே காணப்படுகிறது.

கெடிலத்தின் சுவையான திசைமாற்ற வரலாறு இதுதான்!


  1. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 131.
  2. 32. பெரும் பற்றப் புலியூர் - சிதம்பரம்; உத்தர புலிசை- திருப்ப பாதிரிப் புலியூர். 35. உத்தர தீரம் - வடகரை, 39, சாகரம் - கடல்.
  3. 45. பாடலேச்சுரன் நிகேதனம் - பாடலேச்சுரர் கோயில். 47. வேத்திரம் - பிரம்பு.
  4. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் - பதிப்புரை
  5. தனிப்பாடல்.