கேள்வி நேரம்/2
கேள்வி கேட்பவர் : உமா
பங்கு பெறுவோர் : விஜி, கனகசபை, யாழினிஉமா: இப்போ உங்களை நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். எங்கே சரியான பதில் சொல்லுங்க, பார்க்கலாம். கப் அண்ட் சாசரிலே கப் இருக்குதே- அதுதான் கோப்பை- அதன் கைப்பிடி எந்தப் பக்கம் இருக்கும் ?
விஜி : வலது பக்கம்.
கனகசபை இல்லை, இடது பக்கம்.
யாழினி : இரண்டும் தப்பு. வெளிப் பக்கம் தான் இருக்கும்.
உமா : யாழினி. வெளிப் பக்கம்னு நீ சொன்னது தான் சரி. கோப்பையை வலது பக்கமாய்ப் பிடித்தால், கைப் பிடி வலப் பக்கம் இருக்கும் இடது பக்கமாய்ப் பிடித்தால், இடப் பக்கம் இருக்கும். அதனாலே, யாழினி வெளிப் பக்கம்னு சொன்னதுதான் சரி. விஜி, நீ கிளி பார்த்திருக்கிறாயா?
விஜி: ஓ! பார்த்திருக்கிறேனே!
உமா: எங்கே பார்த்திருக்கிறாய்?
விஜி : மரத்தடியிலே கிளி ஜோஸ்யம் சொல்றாரே அவருக்கிட்டே பார்த்திருக்கிறேன்.
உமா: சரி, கிளியினுடைய ஒரு காலில் எத்தனை விரல்கள் இருக்கும்?
விஜி: அஞ்சு.
உமா: தப்பு.
யாழினி : நாலு,
உமா : அதுவும் இல்லேன்னா மூனுன்னு சொல்லுவீங்க. ஆனால், நாலுங்கிறதுதான் சரி... போகட்டும். அந்த நாலு விரல்களிலே முன்னாலே எத்தனை விரல்கள் இருக்கும்? பின்னாலே எத்தனை விரல்கள் இருக்கும்”
விஜி: முன்னாலே ஒண்னு. பின்னாலே முணு. . உமா: தப்பு, தப்பு.
யாழினி: நான் சொல்லட்டுமா? முன்னாலே மூணு பின்னாலே ஒண்ணு.
உமா : யாழினி, நீ சொன்னதும் தப்பு. நானே சொல்லிவிடுகிறேன். முன்னாலே இரண்டு; பின்னாலே இரண்டு விரல்களிருக்கும்... விஜி, இன்னொரு தடவை கிளி ஜோஸ்யர்கிட்டே போய் நல்லாப் பார்த்துட்டு வா. (எல்லோரும் சிரிக்கிறார்கள்)
உமா: இன்னொரு கேள்வி. TABLE நடுவே என்ன இருக்கும்?
விஜி : புத்தகம்.
உமா: இல்லை.
யாழினி: தட்டு.
உமா: இல்ல
கனகசபை: பேனா
உமா: இல்லை.
விஜி : நான் சொல்றேன்.
உமா : விஜி, நீ இந்தக் கேள்விக்கு இரண்டாம் தடவையாய்ப் பதில் சொல்கிறாய். இப்பவா வது சரியாச் சொல்லு.
விஜி: இதோ சரியான பதில், டேபிள் கடுவே -B தான் இருக்கும். TABLE என்ற ஐந்தெழுத்துக்கு நடுவிலே இருப்பது B' தானே!
உமா : கரெக்ட். விஜி சரியாச் சொல்லிட்டாள். அடுத்ததாக ஒரு கேள்வி. ஆகாயத்திலே பிறைச் சந்திரன் தெரியுது. பார்த்தவுடனே அது வளர் பிறையா, தேய்பிறையா என்று எப்படிக் கண்டுபிடிப்பீங்க?
கனகசபை: வளர்பிறையாக இருந்தால், கீழே இருந்து மேல் பக்கமா படகு போல் வளைஞ் சிருக்கும். தேய்பிறையாக இருந்தால் மேல் பக்கத்திலே யிருந்து கீழ்ப்பக்கமா குடை போல் வளைஞ்சு இருக்கும்.
உமா: அடே, கனகசபை உடனே சொல்லிட்டானே! கெட்டிக்காரன்! இப்போது ஒரு கணக்கு. 6 மணி அடிக்க 30 விநாடிகள் ஆகுது. 12 மணி அடிக்க எத்தனை விகாடிகள் ஆகும்?
யாழினி: : 60 விநாடிகள்.
உமா: இல்லை.
விஜி : 63 விநாடிகள்
உமா : கனகசபை, உனக்குத் தெரியுமா ?
கனகசபை: நீங்களே சொல்லிடுங்க அக்கா, உமா: ஒன்றுக்கும் ஆறுக்கும் உள்ள இடை வெளிகள் ஐந்து. ஐந்து இடை வெளிகளுக்கு 30 விநாடிகள் என்றால் ஒரு இடைவெளிக்கு எத்தனை விநாடிகள்?
விஜி: ஆறு விநாடிகள்.
உமா : அதே போலத்தானே ஒன்றுக்கும் 12க்கும் உள்ள இடைவெளிகளைத் தெரிந்து கொண்டு...
யாழினி: தெரியும்; தெரியும். பதினொரு இடை வெளிகள். ஒரு இடைவெளிக்கு 6 விநாடின்னா 11 இடைவெளிகளுக்கு 11 x 6 = 66 விநாடிகள்.
உமா: ஆம், சரியான விடை 66 விநாடிகள்தான்! இப்போது வேறொரு விதமான கேள்வி. ஒரு மேஜை மேல் ஒரு தட்டு இருந்தது. அந்தத் தட்டிலே 10 ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. மேஜையைச் சுற்றி 10 குழந்தைகள் நின்றார்கள். அவர்கள் ஆளுக்கு ஒரு பழமாக எடுத்துக் கொண்டார்கள். அப்படியும் தட்டிலே ஒரு பழம் இருந்தது.
யாழினி: அது எப்படி இருக்க முடியும் ?
உமா : இருந்தது.
கனகசபை : நான் சொல்கிறேன். கடைசிக் குழந்தை, தனக்குச் சேரவேண்டிய பழத்தைத் தட்டோடு எடுத்துக் கொண்டது.
உமா : ரொம்ப சரி. இன்னொரு சுலபமான கணக்கு 4 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம், 4 மீட்டர் ஆழம் உள்ள குழியிலே எவ்வளவு மண் இருக்கும்?
விஜி ; இதோ சொல்றேன். 4 x 4 x 4... யாழினி ஏனக்கா, அந்தக் குழியிலே எவ்வளவு மண் இருக்கும்னுதானே கேட்டீங்க, மண் இருந்தால் அதை எப்படிக் குழின்னு கூற முடியும் ?
உமா : யாழினி, உண்மையிலேயே நீ கெட்டிக் காரிதான். இன்னொரு கேள்வி. நல்ல கோடைக் காலம், இரவு நேரம். மழை இல்லை. அந்த நேரத்தில் தூரத்திலே ஒரு ரயில் போகுது. அது பாசஞ்சர் ரயிலா, கூட்ஸ் ரயிலான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?
யாழினி : மூசு மூசுன்னு திணறினால், அது கூட்ஸ் ரயில். சத்தம் குறைச்சலா யிருந்தால் பாசஞ்சர் ரயில்.
உமா: . இதைவிடச் சுலபமா ஒரு வழி இருக்கு
விஜி : எனக்குத் தெரியும்; எனக்குத் தெரியும்.
உமா : விஜி, தெரிந்தால் சொல்லேன்.
விஜி : கோடைக் காலம்; மழையும் இல்லை; இரவு நேரம், அதனாலே ஜனங்கள் போகிற வண்டியாயிருந்தால், ஒவ்வொரு பெட்டியிலும் ஜன்னல் திறந்திருக்கும். வரிசையாக வெளிச்சம் தெரியும். கூட்ஸ் ரயிலாயிருந்தால் அதிக வெளிச்சம் தெரியாது.
உமா : விஜி, நீ உண்மையிலே புத்திசாலிதான். மகாகவி பாரதியாரின் முதல் புத்தகம் எது தெரியுமா ?
விஜி: பாரதியார் கவிதைகள்.
உமா: இல்லை.
யாழினி : பாப்பாப் பாட்டு
உமா : அது புத்தகம் இல்லையே! அது ஒரு பாட்டுத்தான். அது 1915-ல் ஞானபானு என்ற இதழில் வெளிவந்தது. ஆனால், முதல் முதலாக வெளிவந்த பாரதியார் புத்தகம் 1908-ல் வெளிவந்தது. யாருக்குத் தெரியும் ?
எல்லாரும் : (மெளனம்)
உமா : சரி நானே சொல்லிவிடுகிறேன். ‘ஸ்வதேச கீதங்கள்’ என்பதுதான் அவரது முதல் புத்தகம், வந்தே மாதரம், மன்னும் இமயமலை, எந்தையும் தாயும், வாழிய செந்தமிழ், என்ற 14 பாடல்களைக் கொண்டது அந்தப் புத்தகம். சரி விஜி, ஆறுகளே இல்லாத நாடு எது ?
விஜி: ஏனக்கா, ஆறுகளே இல்லாமல்கூட ஒரு நாடு இருக்குமா?
உமா: இருக்கே, கனகசபை, உ ன க் கு த் தெரியுமா?
கனகசபை: ஆப்பிரிக்கா.
உமா : ஆப்பிரிக்காவா? அங்கேதான் பெரிய பெரிய ஆறுகளெல்லாம் இருக்கின்றன. உலகிலேயே மிக நீளமான நதி அங்குதானே இருக்கிறது ?
யாழினி: . அதன் பெயர் எனக்குத் தெரியும், நைல் நதிதானே?
உமா : ரொம்பச் சரி.
விஜி: ஆறுகள் இல்லாத நாடு ஆஸ்திரேலியாதான்.
உமா: ஆறு என்ற சொல் ஆ என்ற எழுத்திலே தொடங்குது. அதனாலே கனகசபையும் நீயும் 'ஆ' விலே தொடங்குகிற நாடாய்ப் பார்த்துச் சொல்கிறீர்களா? யாழினி, உனக்குச் சரியான விடை தெரியுமா?
யாழினி: இல்லே அக்கா, நீங்களே சொல் லிடுங்க.
உமா: ஆறுகளே இல்லாத நாடு அரேபியா தான்! அங்கே எங்கு பார்த்தாலும் பாறைகளும், மணலுமாகவே இருக்கும். மூன்று
புறமும் கடல் சூழ்ந்திருக்கும். ஆனால், ஆறு களே இல்லை... இப்போது அடுத்த கேள்வி. தாஜ் மஹாலைக் கட்டியவர் யார் ?
கனகசபை: கொத்தனார்கள்.
(விஜியும் யாழினியும் சிரிக்கிறார்கள்)
உமா : சிரிக்காதீர்கள், கனகசபை சொன்னதும் ஒரு வகையில் சரிதான். கட்டியவர் யார்?" என்று கேட்கக் கூடாது. கட்டுவித்தவர் யார்?' என்றுதான் கேட்க வேண்டும். சரி, தாஜ் மஹாலைக் கட்டுவித்தவர் யார் ?
யாழினி: ஷாஜஹான்.
உமா: ஆம், ஷாஜஹான்தான். ஷாஜஹானாபாத் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
கனகசபை : பகாளாபாத் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஷாஜஹானாபாத். ஏதாவது சாப்பிடுகிற சமாச்சாரமோ?
உமா : யாருக்கும் தெரியாதா? நானே சொல்லி விடுகிறேன். பழைய தில்லி நகரத்துக்கு
ஷாஜஹானாபாத் என்ற ஒரு பெயரும் உண்டு அதை உருவாக்கியவர், தாஜ்மஹாலைக் கட்டுவித்த அதே வடிாஜஹான்தான். கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர எத்தனை நாட்களாகும் ?
விஜி : 21 நாட்கள்.
உமா: சரியான விடை... கோழி அடை காக்காமலே முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஒரு கருவி இருக்கிறது. அதை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
யாழினி : நான் பார்த்திருக்கிறேன்.
கனகசபை : நானும்தான் ஒரு கோழி ப் பண்ணையில் பார்த்திருக்கிறேன். அதற்கு ஏதோ பெயர் சொன்னார்களே... உம், உம்... நினைவுக்கு வந்து விட்டது. incubator.
உமா : அடே, நல்லா ஞாபகம் வைத்திருக்கிறாயே! அடை காக்கும் பெட்டி என்று அதைத் தமிழில் சொல்லுவார்கள். அதில் மூட்டைகளை வைத்தால் எத்தனை நாட்களிலே குஞ்சு வெளி வரும், தெரியுமா?
விஜி : 21 மணி நேரத்தில்.
கனகசபை: இல்லை. அதுவும் 21 நாட்களில் தான் வெளிவரும்.
உமா : கனகசபை, நீ சொன்னதுதான் சரி. கோழி அடைகாத்தாலும் 21 நாட்கள்தான்.
அடை காக்கும் பெட்டியில் வைத்தாலும் 21 நாட்கள்தான்! அடுத்து ஒரு கேள்வி. உலகிலேயே மிகப் பெரிய சமுத்திரம் எது?
யாழினி: பசிபிக் மகா சமுத்திரம்.
உமா : அடே, யாழினி, நீ சரியாய்ச் சொல்லிட்டியே! இப்போதுதான் பள்ளிக்கூடத் திலே இந்தப் பாடம் நடக்குதோ?
யாழினி: இல்லை, இல்லை. இதை நான் இரண்டு வருஷத்துக்கு முன்னாலே படிச்சிருக்கேன்.
உமா: உன் ஞாபக சக்தி வாழ்க! இப்போது நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தாளும் பென்சிலும் தருவேன்.
ஒரு பூசணிக்காய்
ஒரு சாத்துக்குடி
இரண்டு வெண்டைக்காய்கள்
ஒரு புடலங்காய்
ஆறு கொத்தவரங்காய்கள்
இவற்றை வைத்து ஒரு படம் வரையனும். ஒரு பூனை முதுகுப் பக்கத்தைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது போல அந்தப் படம் இருக்கனும், எங்கே, வரைஞ்சு பாருங்கள்.
விஜி : எனக்குப் படமே போட வராது.
கனகசபை : நான் போட்டுப் பார்க்கிறேன்.
யாழினி: இதோ ஒரு நொடியிலே போட்டுக் காட்டுகிறேன்... இதோ, என் படம் எப்படியக்கா இருக்கு ?
(படம்)
உமா : அடடே, யாழினி எவ்வளவு ஜோரா வரைஞ்சிருக்கிறாள்! வருங்காலத்தில் பெரிய ஒவியராய் வரப்போகிறாள். இப்போது நான் ஒரு விடுகதை போடுவேன். இதற்கு விடை என்ன? அது எந்த நாட்டு விடுகதை என்று சொல்லனும். ’முண்டாசு கட்டின சின்னப் பையன் வீட்டுச் சுவரில் மோதினான்; வெளிச்சம் போட்டுச் செத்தான்'
கனகசபை : அது தீக்குச்சிதானே?.
உமா : ஆமாம். தீக்குச்சிதான். அது எந்த நாட்டு விடுகதை?
கனகசபை : அமெரிக்க நாட்டு விடுகதை,
உமா: இல்லை. பிரேஸில், சிலி, பெரு-இந்த மூன்று நாடுகளிலே ஒன்று.
விஜி ; சிலி
உமா : சரியான விடை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ் நாட்டில் சிலேட்டு கிடையாது. அப்படியானால் எதிலே எழுதிப் பழகியிருப்பார்கள் ?
யாழினி : மணலில்தான் எழுதிப் பழகியிருப் பார்கள்.
உமா : சரி, புத்தகம் கிடையாது. எதைப் பார்த்துப் படித்திருப்பார்கள் ?
கனகசபை: ஏட்டைப் பார்த்துப் படித்திருப் பார்கள்.
உமா : அதுவும் சரி. விஜி, அக்காலத்தில் பென்சில், பேனா கிடையாது. எதனால் எழுதியிருப்பார்கள் ?
விஜி : எழுத்தாணியால்.
உமா: ஆளுக்கு ஒரு விடை கூறிவிட்டீர்கள். சரி, கண்ணன் எங்கள் கண்ணனாம்; கார்மேக வண்ணனாம், என்ற பாட்டை இயற்றியவர் யார், தெரியுமா ?
கனகசபை: அது ஒரு நாடோடிப் பாடல். அதனால் பெயர் தெரியவில்லை.
யாழினி : கனகசபை சொன்னது தப்பு. எனக்குத் தெரியும், எங்கள் பள்ளி விழாவில் நானே
கண்ணன் வேஷம் போட்டு ஆடிப் பாடியிருக்கிறேன். குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா இயற்றியதுதான் இந்தப் பாடல்.
உமா : யாழினி கூறியதே சரி. இவ்வளவு நேரமாக நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உங்களைச் சரியான விடை சொல்லச் சொன்னேன். ஆனால், இப்போது நான் நாலு கேள்விகள் கேட்பேன். நாலுக்கும் சரியான விடை சொல்லக்கூடாது. தப்பு தப்பா விடை சொல்லனும். எங்கே விஜி, நீயே நாலு கேள்விகளுக்கும் விடை சொல்லு. காக்கையின் நிறம் என்ன?
விஜி : சிகப்பு.
உமா : தமிழ் நாட்டின் தலைநகரம் எது?
விஜி : முடுக்குப்பட்டி,
உமா : நேரு மாமா எந்த ஊரிலே பிறந்தார்?
விஜி: அண்ணா நகரிலே.
உமா: சரி, இப்போ இதுவரை நான் எத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறேன்?
விஜி : மூனு.
உமா : ஐயையோ! தோத்துப் போயிட்டியே!
விஜி : என்ன, தோத்துப் போனேனா!
உமா : ஆமாம், நான் நாலு கேள்விகள் கேட்பேன்; நாலுக்கும் தப்பு தப்பா விடை சொல்லனும்: என்றேன். முதல் மூனுக்கும் தப்பா விடை சொன்னாய், ஆனால், நாலாவது கேள்வி என்ன? இப்போ இதுவரை நான் எத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறேன்' என்பது தானே? அதற்கும் நீ தப்பு விடைதானே சொல்லனும்? சரியான விடையைச் சொல் லிட்டியே..அதனாலே
கனகசபை: ஆமாம்; விஜி தோத்துப் போயிட்டா
யாழினி: விஜி தோத்துப் போகல்லே, ஏமாந்து போயிட்டா
(எல்லாரும் சிரிக்கிறார்கள்.)