இடம் : சென்னை அரும்பாக்கம்

கேள்வி கேட்பவர் : எஸ். சரளா

பங்கு கொள்வோர் :

ஆர். கிரி. ஆர். பிரிதி, ஏ. பிரின்ஸ்,

சரளா : தேசபக்தர் திருப்பூர்க் குமரன் பிறந்த ஊர் எது?

பிரீதி: அவர் பெயருக்கு முன்னால்தான் ஊர் இருக்கிறதே! திருப்பூர்தான்.

சரளா: இல்லை. திருப்பூரில் அவர் கொடி பிடித்துச் சென்றபோது, அடிபட்டு உயிர்த் தியாகம் செய்ததால், திருப்பூர்க் குமரன் என்கிறார்கள். ஆனால், அவர் பிறந்த ஊர் வேறு.

கிரி: எனக்குத் தெரியும். அவர் பிறந்தது... பிறந்தது, என்னவோ ஒரு மலை. தலைமலை...இல்லை, இல்லை. தலைக்கு இன்னொரு பெயர் சொல்வார்களே,...ம் நினைவு வந்து விட்டது: சென்னிமலை, அவர் பிறந்தது சென்னிமலை என்ற ஊரில் தான்.

சரளா : அப்பா! எப்படியோ சரியாகச் சொல்லி விட்டாய். சரி, பாரத ரத்னா’ எந்த ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது?

பிரின்ஸ் : 1954-ஆம் ஆண்டிலிருந்து.

சரளா: சரியான விடை முதல் ஆண்டிலே யார் யாருக்குப் ’பாரத ரத்னா’ விருது வழங்கினார்கள்? பிரின்ஸ்: ராஜாஜிக்கு  சரளா : அவர் ஒருவருக்குத்தானா? இன்னும் இருவருக்கும் வழங்கப்பட்டதே, அவர்களின் பெயர்கள் தெரியுமா?

கிரி : டாக்டர் ராதாகிருஷ்ணன்.

சரளா : அதுவும் சரி, இன்னொருவர் நோபல் பரிசு பெற்றவர்...என்ன, இன்னுமா தெரிய வில்லை?

பிரிதி : தெரியும், தெரியும். சர்.சி.வி. ராமன்.

சரளா ! எப்படியோ மூன்று பேரும் ஆளுக்கு, ஒரு தலைவர் பெயரைச் சொல்லிவிட்டீர்கள். இந்தியாவிலே முதன் முதலாகத் தயாரிக்கப் பட்ட செயற்கைக் கிரகம் எது?

பிரின்ஸ் : ஆரியபட்டா.

சரளா கரெக்ட். இலங்கையிலே ஒர் ஆறு. இருக்கிறது. அது கங்கை என்ற பெயருடன் முடியும். அதன் முழுப் பெயர் தெரியுமா?

எல்லோரும் : (மெளனம்).

சரளா : ஒருவருக்கும் தெரியவில்லையா? சரி, நானே சொல்லிவிடுகிறேன். அதன் பெயர் மகாவலி கங்கை. இப்போது நான் ஒரு விடுகதை போடப் போகிறேன்.

கால் உண்டு; நடக்கமாட்டான்.

கை உண்டு, மடக்க மாட்டான்.

முதுகு உண்டு; வளைக்க மாட்டான். அவன் யார்?

கிரி: சட்டை. சரளா : சட்டைக்குக் கால் உண்டா? பிரீதி : நான் சொல்கிறேன். நாற்காலி!

சரளா: பிரிதி சரியாகச் சொல்லிவிட்டாள். சோவியத் ரஷ்யாவின் தந்தை என்று போற்றப்படுகிறவர் லெனின் என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் தெரியுமா?

கிரி : எனக்குத் தெரியும். முந்தாம் நாள்தான் லெனினின் இளமைப் பருவம்' என்ற புத்தகத்தைப் படித்தேன். விளாடிமிர் இலீயச் உலியனாவ்.

சரளா : அடேயப்பா! நன்றாக இவ்வளவு நீளப் பெயரை நினைவு வைத்திருக்கிறாயே! ஜைன மதம், சமண மதம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? பிரின்ஸ் : வித்தியாசமா? இரண்டும் ஒன்று தானே?

சரளா: அடே பிரின்ஸ் எவ்வளவு சரியாகச் சொல்லி விட்டான்! இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இவர் யார் என்று தெரிகிறதா?

எல்லோரும் : (மெளனம்)

சரளா : இவர்தான் நம் தேச விடுதலைப் போரில் ஈடுபட்ட புரட்சி வீரர்! 24 வயதிலே ஆங்கில அரசாங்கத்தாரால் தூக்கிலிடப்பட்ட பகத்சிங் இவருடன் இரண்டு இளைஞர்களும் துக்கிலிடப்பட்டார்கள். அவர்களின் பெயர்கள் தெரியுமா?

எல்லாரும். (மெளனம்)

சரளா ! உங்களில் யாருக்கும் தெரியாதா? சேச்சே, நம் தேச விடுதலைக்காக உயிரைக் கொடுத்த அந்த உத்தமர்களை நாம் மறக்கலாமா? பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட

அவர்களில் ஒருவர் பெயர் சுகதேவ், மற்றொருவர் பெயர் ராஜகுரு. நம் உடம்பின் எடையிலே எத்தனை சதவிகிதம் இரத்தம் இருக்கிறது? சொல்ல முடியுமா?

கிரி : 12-ல் ஒரு பங்கு

சரளா : நான் சதவிகிதத்தில் கேட்டேன். பரவாயில்லை. உடம்பின் எடையில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் இரத்தம் இருக்கிறது...விதை யில்லாப் பழங்கள் என்னென்ன?

பிரிதி : வாழைப்பழம்.

சரளா: சரிதான் சிலவகை திராட்சை, கிச்சிலியிலும் விதை இருப்பதில்லை. இப்போது நான் ஒரு பாட்டின் ஆரம்பத்தில் உள்ள இரண்டு வரிகளைச் சொல்கிறேன். உடனே பாட்டை எழுதியவர் யார் என்று சொல்லிவிட வேண்டும். எங்கே பார்க்கலாம்?

கொல்லையிலே கொய்யாப்பூ-அது

கொண்டையிலே வையாப்பூ.

பிரின்ஸ் : கவிஞர் கண்ணதாசன், சரளா இல்லை.

கிரி : பாரதிதாசன்.

சரளா: சரியாக விடை சொன்னாய்... செவ்விந்தியர்கள் என்கிறார்களே, அவர்களுக்கும் இந்தியர்களாகிய நமக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

பிரீதி : இல்லை.

சரளா : பிறகு ஏன் அவர்களைச் செவ்விந்தி யர்கள் என்று அழைக்கிறார்கள்?

பிரீதி : நான் படித்திருக்கிறேன். இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்கக் கடலிலே சென்றாரே கொலம்பஸ், அவர் அமெரிக்காவின் கரையைக் கண்டதும், அதுதான் இந்தியா என்று நினைத்து விட்டாராம்! உடனே, அங்கிருந்த பழங்குடி மக்களுக்கு இந்தியர்கள்’ என்று பெயரும் வைத்து விட்டாராம்.

சரளா: நன்றாக, விளக்கமாகச் சொன்னாய். அதுமுதல் அந்த மக்களை ‘செவ்விந்தியர்’ என்றும், ‘அமெரிக்க இந்தியர்கள்’ என்றும் அழைத்து வருகிறார்கள்... ‘கஸ்தூரி’ என்ற வாசனைப் பொருள் எங்கிருந்து எப்படிக்கிடைக்கிறது?

கிரி: கஸ்தூரி மானிடமிருந்து கிடைக்கிறது,

சரளா: அதுசரி, எப்படி அதனிடமிருந்து கிடைக்கிறது என்பதற்குப் பதில் சொல்ல வில்லையே?

கிரி : மானின் அடி வயிற்றுக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்துதான் ‘கஸ்தூரி’யை எடுக்கிறார்கள்.

சரளா : ரொம்ப சரி, ஆங்தையால் மனிதருக்கு நன்மையா? தீமையா?

பிரின்ஸ் : ஆந்தையைப் பார்த்தால் துரதிர்ஷ்டம் என்கிறார்கள்.

சரளா : அதெல்லாம் தவறான கருத்து. நமக்கு ஆந்தை நன்மை செய்கிறதா? தீமை செய்கிறதா?

பிரீதி : நன்மைதான்.

சரளா: எப்படி?

பிரீதி: அது பகலெல்லாம் மரப்பொந்திலே இருந்துவிட்டு, இரவிலே வெளியில் வரும். அப்போது பயிர்களை அழிக்கிற எலிகளையும் பூச்சிகளையும் பிடித்துத் தின்கிறது. ஆகையால், அது நமக்கு நன்மைதானே செய்கிறது?

சரளா: ஆம் நன்றாகச் சொன்னாய்... இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றாகப் பாருங்கள்....

நமக்கு இடதுபுறம் உள்ளது மத்தியப் பிரதேசம். வலது புறம் உள்ளது மேற்கு வங்காளம். நடுவே இருக்கும் மாநிலம் எது?

எல்லாரும் : ஒரிசா.

சரளா: அடே, எல்லாரும் புவி இயலில் கெட்டிக் காரர்கள்போல் தெரிகிறதே! அடுத்த கேள்வி. இராஜபாளையத்தில் பிறந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். அவர் பெயர் தெரியுமா?

கிரி : குமாரசாமி ராஜா.

சரளா: சரியான விடை அவர் தமது பெரிய வீட்டையே பொது மக்களுக்குக் கொடுத்து விட்டார். காந்தி கலைமன்றம்' என்ற பெயரால் இப்போது அது வழங்கப்படுகிறது. காந்திஜிக்கு மிகவும் பிரியமான பாட்டு எது, தெரியுமா?

பிரீதி : வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே’ என்று ஆரம்பமாகுமே, அந்தப் பாட்டுத்தான். சரளா சரியாகச் சொன்னாய்! இந்தப் பாட்டை எழுதியவர் யாரென்று தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்). சரளா பதினைந்தாம் நூற்றாண்டிலே குஜராத்தில் வாழ்ந்த நரசிம்ம மேத்தா என்ற தெய்வீகக் கவிஞர்தான் இதை இயற்றினார்.

காந்திஜியின் உயர்ந்த கொள்கைகளெல்லாம் அந்தப் பாடலிலே இருந்ததால், காந்திஜியை அது மிகவும் கவர்ந்துவிட்டது. பொய்க்கால் குதிரையாட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தமிழ் நாட்டைத் தவிர வேறு. எங்கேயாவது இந்த ஆட்டம் இருக்கிறதா?

பிரீதி : டில்லியில் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடந்ததாம். பத்திரிகையிலே படித்தேன்.

பிரின்ஸ் : பெங்களுரில்கூட இந்த ஆட்டம் இருக்கிறதாக என் மாமா சொன்னார்.

சரளா: தமிழ்நாட்டிலிருந்துதான் அங்கெல்லாம் போயிருக்கிறது. இந்த ஆட்டம் நம் தமிழ் நாட்டுக்கே உரியது. ......'மைதிலி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பிரிதி : என் சிநேகிதி ஒருத்திக்குக்கூட அந்தப்பெயர்தான்.

சரளா: நான் சொல்வது ஒரு பெண்ணின் பெயரல்ல; ஒரு மொழியின் பெயர். அது பீகார் மாநிலத்திலே மிதிலைப் பகுதியிலே பேசப்படுகிறது. வடஇந்தியாவிலே முதல் முதலாக, பைபிளை மொழி பெயர்த்தது இந்த மைதிலி மொழியில்தானாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/3&oldid=494070" இலிருந்து மீள்விக்கப்பட்டது