20

ள்ளிநாயகியும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் சில போலீஸ் வீரர்களை அழைத்துக்கொண்டு இரவு நேரத்திலே காரில் புறப்பட்டார்களல்லவா? அவர்களைப்பற்றி இதுவரையில் நாம் கவனிக்காமல் இருந்துவிட்டோம். இப்பொழுது அவர்களைப்பற்றிக் கவனிப்போம். கூடல் பட்டணத்திற்குச் சென்று, தங்கமணி முதலியவர்களைச் சந்திக்க வேண்டும் என்பது வள்ளிநாயகியின் நோக்கம். பரிசலில் தப்பிச் சென்ற தங்கமணி முதலியவர்களுக்கு உதவி செய்ய அனுப்பிய போலீஸ் வீரர்கள் மற்றொரு பரிசலிலே வேகமாகச் சென்று, அவர்கள் செல்லும் பரிசலைக் கண்டுபிடித்து, உடனழைத்து வருவார்கள் என்று அவள் நம்பினாள்.

வஞ்சியூரிலிருந்து கூடல் பட்டணத்திற்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, சல்லிக்கல் போட்டுப் பாவிய நல்ல சாலை. ஆனால் அது வெகுதூரம் சுற்றி வளைத்துக்கொண்டு போகிறது. அதில் சென்றால் 180 மைல் ஆகும். மற்றொரு வழி, மலைக்கு அருகிலே செல்லுகின்றது. அதில் சென்றால் 80 மைல் தொலைவுதான். ஆனால், அது காட்டுப்பாதை. அது நன்றாகச் செப்பனிடப்பட்டதல்ல. இருந்தாலும், அதன் வழியாகச் சென்றால், வேகத்தைக் குறைத்துச் சென்ற போதிலும் கூடல் பட்டணத்தை விரைவாக அடைந்துவிடலாம். இதை எண்ணியே காட்டுப்பாதையில் செல்வதாக முடிவு செய்து கொண்டார்கள். அப்படி முடிவு செய்தது தொல்லையாக முடியுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் சுமார் பாதி தூரம் சென்றிருப்பார்கள். அது வரையிலும் எவ்விதமான தொந்தரவும் ஏற்படவில்லை. வள்ளி நாயகி முதலில் கொஞ்ச தூரத்திற்குக் கார் ஓட்டினாள். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டரும் போலீசாரில் ஒருவரும் மாறி மாறி ஓட்டி வந்தார்கள். சுமார் முப்பது மைல் சென்றவுடனேயே லேசாகத் தூறல் விழலாயிற்று. என்றாலும் அவர்களுடைய பயணம் தடைப்படவில்லை. பாதி தூரத்திற்கு வந்தபொழுது தான் அவர்கள் எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டது. அப்பொழுதும் தூறல் இருந்தது. அந்தத் தூறல் கொல்லிமலையின் ஒரு சாரலிலே பெய்துகொண்டிருந்த கனத்த மழையின் அறிகுறியாகும். அந்த மழையால் காட்டு வழியில் ஒடும் ஓடையொன்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து வேகமாக ஒடிக் கொண்டிருந்தது.

அந்த ஓடையைக் கடந்துதான் பாதை செல்லுகிறது. ஒடையின் மேலே உயரமான பாலம் எதுவும் இல்லை. தரையோடு கல் பாவித்தான் பாதை அமைத்திருந்தார்கள். இப்பொழுது வெள்ளம் அந்தக் கல்பாலத்திற்கு மேலேயே போய்க் கொண்டிருந்தது. அதனால் வெள்ளம் வடியும் வரையிலும் காரை அங்கே நிறுத்த வேண்டியிருந்தது.

இப்படிப்பட்ட காட்டு ஓடைகளிலே வெள்ளம் வந்தால் விரைவிலே வடிந்துபோகும். அதனால், அவர்கள் அங்கேயே காத்திருந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் எதிர்பார்த்தபடி வெள்ளம் விரைவிலே வடியவில்லை. அடுத்த நாள் பொழுது விடிந்து ஒன்பது மணி ஆகியும் கல்பாலத்தின்மேலே சுமார் அரை அடி உயரத்திற்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அளவு நீரிலே காரைச் செலுத்த முடியுமென்று இன்ஸ்பெக்டர் கருதினார். வள்ளிநாயகிக்கும் அதுமுடியுமென்று தோன்றியது. அதனால் இன்ஸ்பெக்டர் காரை மெதுவாகச் செலுத்தினார் அடுத்த கரையை அடையப் பத்தடி தூரத்தான் இருந்தது. அதுவரையில் கார் யாதொரு விபத்துமில்லாமல் வந்துவிட்டது. ஆனால், அந்த இடத்திலே பாவியிருந்த கல்லொன்று வெள்ளத்தின் வேகத்தால் இடம் பெயர்ந்திருந்தது. வெள்ளம் ஒரே காவி நிறமாக இருந்ததால் இது கண்ணில் தென்படவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை மெதுவாகத்தான் செலுத்தினார். இருந்தாலும் காரின் முன்பக்கத்தில் உள்ள வலப்புறச் சக்கரம் அந்தக் கல் பெயர்ந்த இடத்திற்குள்ளே அழுந்தி மாட்டிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் காரை மேலே நகர்த்த முடியவில்லை. போலீஸாரும், இன்ஸ்பெக்டருமாகச் சேர்ந்து பலவகையாக முயற்சி செய்து பார்த்தனர். பயனொன்றும் ஏற்படவில்லை. வெள்ளம் ஓடிக்கொண்டிருந்ததால் சக்கரத்தை நன்றாகக் கவனித்து அதை மேலே தூக்குவதற்கு வேண்டியதைச் செய்யவும் சரியாக முடியவில்லை. சக்கரம் சேற்றில் மாட்டிக்கொண்டிருப்பதாகத்தான் அவர்களுக்குத் தோன்றிற்று.

உதவிக்கு இன்னும் சில ஆள்களை அழைத்து வருவதென்று இன்ஸ்பெக்டர் கருதினார். அதனால் அவர் ஒரு போலீஸ்காரரைப் பார்த்து, "அடுத்த கரைக்குச் சென்று, பக்கத்தில் எங்காவது ஆள்கள் இருந்தால் அழைத்து வா" என்று ஆணையிட்டார். போலீஸ்காரன் கழனிகளுக்கிடையே புகுந்து வேகமாகச் சென்றான். அந்தப் பக்கத்திலே ஊர்கள் அதிகமாயில்லை. அது பெரும்பாலும் மலைக்காட்டுப் பகுதி. போலீஸ்காரன் நெடுநேரம் சுற்றிவிட்டுக் கடைசியில் இரண்டு ஆள்களை அழைத்து வந்தான். ஒரு ஜோடி எருதும் வந்தது. வண்டியில் பாரம் போட்டுக் கட்டுவதற்கான நீண்ட வரிக்கயிறு ஒன்றையும், நுகத்தடி ஒன்றையும் அவர்கள் கொண்டுவந்தனர்.

நுகத்தடியில் எருதுகளைப் பூட்டி வரிக்கயிற்றை நுகத் தடியில் இணைத்து, காரின் முன்பகுதியில் நன்றாகக் கட்டினார்கள். வந்த ஆள்களில் ஒருவன் எருதுகளை ஒட்டினான். மற்ற ஆளும், போலீஸாரும் காரைத் தள்ளினார்கள். இன்ஸ்பெக்டர் காரைச் செலுத்தினார். அவர்களுடைய கூட்டு முயற்சியால் கார் மேலெழுந்து கரையை அடைந்துவிட்டது. ஆனால், எதிர்பாராதபடி அதிலே ஒரு பழுது ஏற்பட்டுவிட்டது. முன்சக்கரங்கள் இரண்டையும் இணைக்கும் அச்சு வலப்புறத்துச் சக்கரத்திற்குப் பக்கத்திலே வளைந்துவிட்டது.

ஆனால், நல்லவேளையாக அது முரியவில்லை. இருந்தாலும், காரை வேகமாகச் செலுத்துவதென்பது முடியாமற் போப்விட்டது. மணிக்குச் சுமார் எட்டு மைல் வேகத்தில்தான் அதைச் செலுத்த முடிந்தது. அப்படிச் செலுத்தும் போதே வலப்புறச் சக்கரம் ஆடி ஆடி வந்தது. அச்சை நேராக்க, அந்த இடத்தில் எவ்வகையிலும் முடியாது. நேர் செய்ய முயன்றால் அது ஒடிந்து போனாலும் போகலாம். அதனால் இன்ஸ்பெக்டர் தாமே எச்சரிக்கையாக ஓட்டலானார்.

இவ்வாறு எதிர்பாராத விபத்தால் அவர்கள் மாலை 3 மணிக்குத்தான் கூடல் பட்டணம் சேர முடிந்தது. இவர்கள் வருவதற்கு முன்னாலேயே தாழிவயிறனையும், மற்றொருவனையும் கைது செய்துவந்த போலீஸார் போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் தங்கமணி முதலியவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லையென்பதைக் கேட்ட உடனேயே வள்ளிநாயகி மூர்ச்சையடைந்தாள். அவளுக்கு மயக்கம் தெளிவித்து ஆறுதல் கூறுவது, இன்ஸ்பெக்டருக்கு மிகுந்த சிரமமாகிவிட்டது. டாக்டர் ஒருவரை வரவழைத்து அவளுக்கு வேண்டிய சிகிச்சைகள் செய்தனர். இரவெல்லாம் தூக்கமில்லாமையாலும், அதுவரை உணவருந்தாமையாலும், குழந்தைகளுக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்ற கவலையாலும் வள்ளிவிநாயகி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். போலீஸ் இன்ஸ்பெக்டர் அவளுக்குப் பல வகைகளில் ஆறுதல் கூறியதோடு அவர்கள் கவனிக்க வேண்டிய வேலைகளைப்பற்றியும் எடுத்துரைத்தார்.

"இங்கிருந்து சுமார் 8 மைல் தூரத்திலே வஞ்சியாற்றங் கரையில் உள்ள காட்டிலே தச்சுச்சுப்பட்டறையொன்று இருக்கிறதாம். அங்கேதான் குள்ளன் மரப்பொம்மைகள், செய்கிறானாம். அந்த இடத்திற்கு அவன் இன்று வந்து சேருவான் என்று தாழிவயிறனிடமிருந்து நமது ஜவான்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே நாம் போகவேண்டியது மிக முக்கியம். இந்தச் சமயத்திலே நீங்கள் தைரியத்தைக் கைவிடக்கூடாது" என்று கூறினார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

"தங்கமணி, சுந்தரம், கண்ணகி இவர்கள் எறி வந்த பரிசல் என்ன ஆயிற்றோ தெரியவில்லை!" என்று கூறிக் கொண்டே அவள் கண்ணீர் வடித்தாள்.

"தங்கமணிக்கும், சுந்தரத்திற்கும் பரிசல் தள்ளத் தாழிவயிறன் கற்றுக்கொடுத்தானாம். அதனால் அவர்கள் எப்படியாவது சமாளித்துக்கொண்டு எங்காவது ஓரிடத்தில் கரை சேர்ந்திருப்பார்கள். நீங்கள் அவர்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் கரையோரமாகவே செல்ல வேண்டியிருப்பதால் அவர்களையும் கண்டு பிடித்துவிட முடியும்" என்று இன்ஸ்பெக்டர் நம்பிக்கையோடு தெரிவித்தார். இது வள்ளி நாயகிக்கு உற்சாகத்தை அளித்தது. உடனே அவள் எழுந்து புறப்படத் தயாரானாள். வள்ளிநாயகியை உடன் அழைத்துச் செல்லப் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரும்பவில்லையென்றாலும் தானுங் கூட வருவதாக அவள் பிடிவாதம் செய்தாள்.

"அப்படியானால் முதலில் சாப்பிடுங்கள். பாதித் தூரத்திற்குப் பிறகு நடக்கவேண்டியிருக்கும்" என்றார் இன்ஸ்பெக்டர். எல்லாரும் அதுவரை உணவருந்தவில்லையென்பதை அவள் உணர்ந்தாள். அவள் மூர்ச்சையுற்றதால் அவளுக்குச் சிகிக்சை செய்வதையே அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர்.

உணவு வரவழைத்து உண்டபின் எல்லாருக்கும் தெம்பு உண்டாயிற்று. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தப் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவராதலால் வேண்டிய ஏற்பாடுகளை எளிதில் செய்தார். மேலும் ஒரு பதினைந்து போலீஸ்காரர்களைத் தம்முடன் வர ஏற்பாடு செய்தார். துப்பாக்கியும் கையுமாக அனைவரும் புறப்பட்டார்கள்.

இவ்வாறு பல இடையூறுகளுக்குப் பின் அவர்கள் புறப்பட்டாலும் அவர்கள் தக்க சமயத்திலே உதவி செய்ய முடிந்தது. முதலில் அவர்கள் தச்சுப்பட்டறையை அடைந்தார்கள். அங்கே தச்சர்கள் சிலர்தான் இருந்தனர். அவர்கள் போலீஸ்காரரைக் கண்டதும் பயந்தனர். "குள்ளன் எங்கேயிருக்கிறான்?" என்று இன்ஸ்பெக்டர் அவர்களை அதட்டிக் கேட்டார். பயத்தால் தச்சர்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. மேலும், கொல்லி மலைக் குள்ளன் என்ற பெயரையே அவர்கள் கேட்டதில்லை. அதனால் அவர்கள் பதிலேதும் அளிக்காமல் 'திருதிரு' என்று விழித்துக்கொண்டு நின்றார்கள். போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மேலும் அதட்டினார்.

கடைசியில், அவர்களுடைய எஜமானன் பதினைந்து ஆள்களோடு ஏரிக்கரையை நோக்கிப் போனதாகத் தெரியவந்தது. அந்தத் தச்சர்களை அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டு, அவர்களைப் பார்த்துக்கொள்ள ஒரு போலீஸ்காரரையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, இன்ஸ்பெக்டர் வேகமாகப் புறப்பட்டார். மற்றவர்கள் பின்தொடர்ந்தனர். ஏரிக்கரையை அனைவரும் அடைந்தனர்.

அவர்கள் ஏரிக்கரையை அடையவும், கொல்லிமலைக் குள்ளனின் ஆள்கள் பேராசிரியர் வடிவேல் முதலியவர்களின் மேல் பாயவும் சரியாக இருந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர், "அவர்களைத் தொடாதே! தொட்டால் சுட்டுவிடுவேன்” என்று உரத்த குரலில் கர்ஜித்தார். அதே சமயத்தில் தம்முடைய கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டார்.

எதிர்பாராமல் போலீசார் வந்ததைக் கண்டு குள்ளனின் ஆள்கள் திகைத்து அப்படியே நின்றுவிட்டனர். அவர்களை யெல்லாம் போலீஸார் கைது செய்தனர். இனிமேல் தப்பிக்க முடியாது என்று குள்ளனுக்குத் தோன்றிவிட்டது. அதனால் அவன் போலீஸாரிடம் அகப்படுவதைவிட இறப்பதே நல்ல தென்று தனது துப்பாக்கியைச் சட்டென்று எடுத்து, தன்னையே சுட்டுக்கொள்ளப் போனான்.

அதுவரையிலும் ஜின்கா அவனையே கவனித்துக்கொண்டிருந்தது. அவன் துப்பாக்கியை எடுப்பதைப் பார்த்ததும், அதற்கு என்னவோ சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. சற்று தூரத்தில் இருந்த தங்கமணியை அவன் சுட்டுவிடுவானோ என்று நினைத்ததோ என்னவோ, அது சட்டென்று குள்ளனின் வலக் கையின் மேலே பாய்ந்து, பலமாகக் கடித்தது. குள்ளன் கையை வேகமாக உதறி ஜின்காவைத் தரையில் தள்ளினான். பிறகு, அதைத் தன் கைத்துப்பாக்கியால் சுட்டான்.

ஜின்கா வீறிட்டு அலறிக்கொண்டு தாவிப் பாய்ந்து ஓடிற்று. அதன் உடம்பெல்லாம் ஒரே ரத்த மயம்! தூரத்தில் சென்ற பிறகும் அலறல் ஓயவில்லை. குள்ளன் இரண்டாம் முறை சுடுவதற்கு முன்பே, போலீஸ் இன்ஸ்பெக்டரும், வடிவேலும் அவன் மேல் பாய்ந்துவிட்டனர். துப்பாக்கியை நீட்டியவாறு போலீஸார் இருவர் அவனை அணுகினர். இனிமேல் தான், செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்று குள்ளனுக்குத் தெரிந்துவிட்டது. தன்னையே சுட்டுக்கொள்ளவும் முடியாதபடி அவன் கையிலிருந்த துப்பாக்கியை போலீஸார் பிடுங்கிக் கொண்டனர். குள்ளன் கைது செய்யப்பட்டான்.

ஜின்காவிற்கு என்ன ஆயிற்றோ என்று தங்கமணி கதறிக் கொண்டு அதன் அருகில் ஓடினான். சுந்தரம். கண்ணகி, வள்ளி நாயகி முதலியோரும் ஓடினர். ஜின்காவின் மேலே படிந்திருந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டுத் தங்கமணி கவலையோடு பார்த்தான். மறு கணத்தில் அவன் முகம் மலர்ந்தது.

"இதெல்லாம் குள்ளனின் கையைக் கடித்ததால் பீரிட்ட ரத்தம். ஜின்காவிற்குக் காயம் இல்லை" என்று அவன் உற்சாகத்தோடு கூவினான். அப்படிக் கூவிக்கொண்டே அவன் ஜின்காவைத் தழுவினான்.

"இந்த வெற்றிக்கெல்லாம் ஜின்காதான் காரணம்" என்று தழுதழுத்த குரலில் வள்ளிநாயகி கூறினாள்.

"அத்தை, இன்னொரு குரங்கை மறந்துவிட்டீர்களே!" என்று சுந்தரம் சிரித்துக்கொண்டே சொன்னான். இதற்குள் எல்லாரும் தங்கமணியையும், ஜின்காவையும் சூழ்ந்து கொண்டனர். சுந்தரத்தின் கேலிப்பேச்சைக் கேட்டு அனை வரும் சிரித்தார்கள். கொல்லிமலைக் குள்ளன் மட்டும், "இந்தக் குரங்குகள் இத்தனை பண்ணுமென்று எதிர்பார்க்கவேயில்லை நான்," என்று முணுமுணுத்தான்.

"அம்மா! ஜின்காவுக்குப் பலகாரம் பண்ணிப் போட வேண்டும். மறந்து போகாதே. ஊருக்குப் போனதும் முதலில் உனக்கு இந்த வேலைதான்" என்று கண்ணகி உற்சாகமாகத் தான் முன்பே எடுத்துக்கொண்ட தீர்மானத்தை வெளியிட்டாள்.

"நீயும் அண்ணாக் குரங்கை மறந்துவிட்டாயா!" என்று சுந்தரம் கேட்டான்.

"கண்ணகியே செய்து கொடுத்தால்தான் நாங்கள் சாப்பிடு வோம்” என்று தன் சார்பிலும், ஜின்காவின் சார்பிலும்

தங்கமணியும் பதிலளித்தான். அவர்களுடைய பேச்சைக் கேட்டு அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

"எனக்கு ஒன்றுதான் விளங்கவில்லை- இத்தனை இரகசியமாகத் தனது ஆள்களுக்கும் தெரியாமல் திருட்டுத்தொழில் நடத்தியவன் எதற்காகத் தன் பெயரைப் பச்சை குத்திக் கொண்டான்?" என்று தங்கமணி ஆழ்ந்த யோசனையோடு தன் தந்தையைக் கேட்டான்.

"அதைச் சுலபமாக மற்றவருக்குத் தெரியாமலிருக்கும்படி செய்துவிடலாம் என்று அவன் நினைத்திருப்பான். ஜிப்பாவைப் போட்டாலே மறைந்துவிடுகிறதே" என்றார் வடிவேல்.

"இருந்தாலும் அவன் செய்கை எனக்குப் புதிராகவே தோன்றுகிறது."

"ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறைபாடு இருக்கும். பச்சை குத்திக்கொள்வதிலே அவனுக்கு ஆசை. அதுவே அவன் செய்த தவறு. இப்படித்தான் எதாவது ஒரு வகையில் குற்றம் புரிகிறவர்கள் மாட்டிக்கொள்வார்கள்" என்று மேலும் என்னவோ விளக்கம் கொடுக்கத் தொடங்கினார் வடிவேல்.

ஆனால் சுந்தரம் அதற்கு விடவில்லை. "மாமா, நீங்கள் துப்பறியும் கதைகள்தான் படிக்கிறீர்கள். தங்கமணியோ துப்பறியும் சாம்புவே ஆகிவிட்டான். அவன் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியாது. பேசாமல் துப்பறியும் உத்தியோகத்திற்கு அவனை அனுப்பிவிடுங்கள். இந்தக் குரங்கும் அவனோடு போகட்டும்" என்றான் சுந்தரம்.

"அப்பா, சுந்தரத்தை சர்க்கசில் பபூன் வேடத்திற்கு அனுப்பலாம்" என்றாள் கண்ணகி.

அனைவரும் 'கொல்’ என்று சிரித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/20&oldid=1101680" இலிருந்து மீள்விக்கப்பட்டது