சங்க இலக்கியத் தாவரங்கள்/082-150

 

அதிரல் (காட்டு மல்லிகை)
ஜாஸ்மினம் அங்கஸ்டிபோலியம்
(Jasminum angustifolium,vahl.)

அதிரல் கொடி முல்லைக் குடும்பத்தைச் சார்ந்தது. இது மல்லிகை இனத்துள் அடங்கும்.

சங்க இலக்கியப் பெயர் : அதிரல்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : குளவி, மௌவல்., மல்லிகை, மல்லிகா.
பிற்கால இலக்கியப் பெயர் : மல்லிகை, புனலிப்பூ
உலக வழக்குப் பெயர் : காட்டு மல்லிகை, மோசி மல்விகை
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் அங்கஸ்டிபோலியம்
(Jasminum angustifolium,vahl.)
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)

அதிரல் இலக்கியம்

சங்க இலக்கியங்கள் அதிரல் கொடியை மௌவல், குளவி, மல்லிகை முதலியவற்றினின்றும் வேறுபடுத்தியே கூறுகின்றன.

“செருந்தி அதிரல் -குறிஞ். 75
“அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
-முல்லைப். 51-52


என்ற இவ்வடிகளில் வரும் அதிரல் என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் புனலிப்பூ என்று உரை கூறியுள்ளார். எனினும்,
 

அதிரல்
(Jasminum angustifolium)

சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ‘விரிமலர் அதிரல்’[1] என்பதற்கு அரும்பத உரை ஆசிரியர் காட்டு மல்லிகை எனவும், அடியார்க்கு நல்லார் மோசி மல்லிகை எனவும் உரை கூறினர். சங்க நூல்களில், இதன் இயல்புகளைக் காணுமிடத்து இதுவே அதிரல் எனவும், இது காட்டு மல்லிகை எனப்பட்டது எனவும் துணியலாம். இது மௌவல், குளவி, மல்லிகை முதலிய மலர்களினின்றும் வேறுபடுவதற்கு உள்ள ஒரே ஒரு சிறந்த காரணம் உண்டு. அதிரல் கொடியில் உண்டான இதன் முகை, காட்டுப் பூனையின் கூரிய பற்களை ஒத்தது எனவும், இம்முகை மெல்லிய வரிகளை உடையது எனவும் காவல் முல்லைப்பூதனார் கூறுகின்றார்.

“பார்வல் வெருகின் கூர்எயிற் றன்ன
 வரிமென் முகைய நுண்கொடி அதிரல்”
-அகநா. 391 : 1-2

மெல்லிய இம்முகையில் உள்ள வரிகள் அதிரலுக்குள்ள சிறப்பியல்பு எனலாம். தாவர இயலின்படி, இது மல்லிகையைப் பெரிதும் ஒத்துள்ளது. மல்லிகை குற்றுச்செடி. அதிரல் நீண்டு வளரும் ஏறுகொடி. இவையிரண்டிலும் தனி இலைகளே காணப்படும். கொடியின் அடித்தண்டு பல கிளைகளாகக் கிளைக்கும். ஆதலின், ‘ததர்கொடி அதிரல்’ (அகம். 289) எனப்பட்டது; (ததர்-செறிவு) கொடியும் வலிமையுடையது. அதனால் ‘மாக்கொடி அதிரல்’ (நற். 52) எனவும் கூறப்பட்டது. சுரத்தில் வளரும் கோங்கு மரத்தின் மேல் ஏறிப் படரும் என்றும், இரவில் மலர்ந்திருக்குமென்றும், அதனைக் காட்டு யானை விடியற்காலையில் அரும்புகளுடன் வாங்கிக் கவளங்கொள்ளும் எனவும், அந்த அரிய நெறியில் தனியாகச் செல்ல மக்கள் அஞ்சுவர் எனவும் வேம்பற்றூர்க் குமரனார் கூறுவர்.

“. . . . . . . . . . . . கோங்கின்
 எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்
 பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கி
 காண் யானை கவளங் கொள்ளும்
 அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார்
 கெஞ்சுண் மொழிப மன்னே-தோழி”
-அகநா. 157 : 5-10

இக்கொடி தூறாக முளைக்கும் எனவும், பலமுனைகளில் கிளைக்கும் எனவும் கூறுவர். அதனால், ‘அதிரல் விரிதூறு’ [2]எனச் சேந்தன்திவாகரம் விளக்குகின்றது. இத்தூறுகளிலிருந்து படரும் கொடி நுண்ணியது; திரட்சி உடையது; பல வளார்களாகச் செறிந்து படர்வது; நீண்டு படரும் பசிய நிறங்கொண்டது என்றெல்லாம் கூறுவர் புலவர் பெருமக்கள்.

“பைங்கொடி அதிரல்”-அகநா. 157 : 6

“நுண்கொடி அதிரல்”-அகநா. 237: 2 , 391 : 2

“ததர் கொடி அதிரல்”-அகநா. 289 : 2

“மாக்கொடி அதிரல்”-நற். 52:1

இக்கொடி தூறுடன் காற்றில் அசைவதை இரவில் காவலர் அசைந்து நடை போடுவதற்கு உவமையாக்கினார் நப்பூதனார்.

“அதிரல் பூத்த ஆடு கொடிப்படாஅர்
 சிதர்வரல் அசைவளிக்கு அசைவந் தாங்கு
 துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
 பெருமூ தாளர் ஏமம் சூழ”
-முல்லைப். 51-54
(சிதர் = மழைத்துளி அல்லது மெத்தென) (ஏமம் = காவல்)

மேலும் இக்கொடி வீரர் தம் புதை குழி மேல் செறிந்து படரும் எனவும் கூறப்படுகிறது. இப்புதை குழி பாலை நிலத்தில் காணப்படும். இதனை,

“உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல்
 நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்
 சுரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயலின்”

-அகநா. 289 : 2-4


என்பர். இது இளவேனிற் காலத்தில் பூக்கும் என்பதைப் புலப்படுத்த ஓதலாந்தையார்,

“அவரோ வாரார் தான் வந்தன்றே
 புதுப்பூ அதிரல் தாஅய்க்
 கதுப்பு அறல் அணியும் காமர்பொழுதே”
一ஐங். 345

என்று இளவேனிற் பத்தில் கூறுவர். மேலும்,

“புகர்இல் குவளைப் போதொடு தெரிஇதழ்
 வேனில் அதிரல் வேய்ந்த நின்”
-அகநா. 393 : 25-26

என மாமூலனார் இது வேனிற் காலத்தில் பூக்குமென்பார். இது இளவேனிற் காலத்தில் பூக்குமென்று பாலை பாடிய பெருங் கடுங்கோ கூறுவர்.

“முதிரா வேனில் எதிரிய அதிரல் ”-நற். 337 : 2

மேலும் இது இரவில் மலரும் என்று குமரனார் கூறுவர்.

“எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் ”-அகநா. 157 : 6

அதிலும் அணைந்த விளக்குகளை கைத்திரி கொண்டு தீக்கொளுவும் இரவில் யானை, குதிரை முதலியவற்றின் கழுத்தில் கட்டிய நெடிய நாக்குடைய ஒள்ளிய மணி ஒலி அடங்கிய நடுயாமத்தில் அதிரல் பூத்தது என்று கூறும் முல்லைப்பாட்டு.

“கையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
 நெடுநா ஒண்மணி நிகழ்த்திய நடுநாள்
 அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்”
-முல்லைப். 49-51

இனி, அதிரல் என்பது மோசிமல்லிகை என்றார் சிலப்பதிகார அரும்பத உரையாளர். மோசி என்பது திரண்டு கூர்மையுடையது எனப் பொருள்படும். இதன் அரும்பு, குயிலின் வாயைப் போல நுனி கூர்மையானது என்றும், காட்டுப் பூனையின் பற்களைப் போன்று வெள்ளியது என்றும் கூறப்படுகிறது.

“குயில்வா யன்ன கூர்முகை அதிரல்”-புறநா. 269 : 1
“பார்வல் வெருகின் கூர்எயிற் றன்ன
 வரிமென் முகைய நுண்கொடி அதிரல்;”
-அகநா. 391 : 1-2

அதிரல் மலர் நறுமணம் உடையது. பாதிரி, செங்கருங்காலி மலர்களுடன் இணைத்துப் பேசப்படுகின்றது. ஒரு தோழி, பொருள்வயின் பிரியும் தலைவனிடம்,

‘தலைவனே! நீ பொருளீட்டச் செல்வதால், உனக்கு ஊதியமே. ஆனால், அதில் ஓர் இழப்பு நேர்வதை மறந்தனையோ? அது ஓர் அரும்பெறல் பெரும்பயன், நினது தலைவியின் கூந்தலில் வெளிப்படும் ஒரு நன்மணம் அதிரல் பூவையும், பாதிரி மலரையும், செங்கருங்காலிப் பூவையும் இட்டு மூடி வைத்திருந்த பூஞ்செப்பைத் திறந்தவுடன் வெளிப்படும் சிறந்த நறுமணம். இம்மணத்தை நுகராது இழக்கின்றாய்!’ என்று கூறுகின்றாள். (நற். 337)

மேலும், மகளிர் பாதிரி மலரை அதிரலோடு விரவிக் கட்டிக் கூந்தலில் அணிவர். (அகநா. 261 : 1-3) என்றும், இம்மலர்கள் ஒரேயிடத்தில் உதிர்ந்து கிடக்கும் (அகநா. 99 : 6-7) என்றும் கூறுப்படுகின்றது.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டில் அதிரல் என்பதற்குப் ‘புனலிப்பூ’ என்றார். அங்ஙனமே, புறநானூற்றுப் பழைய உரைகாரரும் இதனைப் புனலிக்கொடி, புனலி என்றனர். இம்மலரில் நீர்ப் பிடிப்பு இருந்ததாக நற்றிணைப் பாடல் ஒன்று குறிப்பிடுகின்றது; ஈங்கை முகையுடன், அதிரல் பூவும் மணல் மேட்டில் உதிர்ந்து கிடந்தது. ஒரு மான் அவற்றின் மேல் அடி வைத்தது. அப்பொழுது இரண்டிலிருந்தும் நீர் குமிழியிட்டு வெளிப்பட்டது. இக்காட்சி வெள்ளியை உருக்கும் மூகையைக் கவிழ்த்தால், உருகிய வெள்ளி வெளி வந்தது போல இருந்ததாம். இப்பாடல் கூதிர்க் காலம் வந்ததைக் குறிப்பதாகும். அதனால், இவற்றினின்றும் வெளிப்பட்ட நீர், மழை நீராகாது. மலரின் நீர்ப் பிடிப்பாக இருக்கலாம். இது கொண்டு ஒருக்கால், இதனை புனலிப் பூவெனக் கருதினரோ என்று எண்ண இடமுள்ளது.

இப்பூ ஆடவரால் கண்ணியாகவும், மகளிரால் பிற மலர்களுடன் விரவிக் கட்டிய கோதையாகவும் சூடப்படும். விரும்பிச் சூடப்படும் மலராதலின், இது விற்பனைப் பூவாகவும் இருந்தது. பூ விற்போர் அகன்ற வட்டிலில், அதிரல் பூக்களை நிறைத்து, மேலும், மேலும் வைக்க இடமில்லாமல் ஏனையவற்றை விட்டொழித்தனர் என்று காவல் முல்லைப்பூதனார் கூறுவர் (அகநா. 391 : 2-4).

இப்பூவைக் குறிப்பிடும் சங்க இலக்கியங்கள் காடு, கான், சுரம் என்னும் சொற்களையும், அவ்விடங்களில் அமையும் பிற கருப் பொருள்களையும் நோக்கும் போது, இம்மலர், பாலை நிலத்தையோ, முல்லை நிலத்தையோ குறிக்கக் கூடுமாயினும், அகநானூற்றில் இம்மலர் பாலையைக் குறிக்கும் பாக்களில் கூறப்படுகின்றது.

அதிரல் (காட்டு மல்லிகை) தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : அங்கஸ்டிபோலியம் (angustifolium)
தாவர இயல்பு : புதர்க்கொடி
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 20-50 மீட்டர் நீளம், அடியிலிருந்து கிளைத்து, அடர்ந்து வளரும் நீண்ட படர்கொடி
வேர்த் தொகுதி : ஆணி வேர், பக்க வேர்கள்.
தண்டுத் தொகுதி : அடியில் பல தூறுகளாகக் கிளைத்து வளரும் வன்கொடி-மெல்லியது.
இலை : தனி இலை 4-5 X 2-3 செ. மீ. எதிர் அடுக்கில் அல்லது கிளை நுனியில் மாற்றடுக்கில் தண்டுடன் இணைந்திருக்கும். இலைச்செதில் இல்லை.
இலை 
: நீள் முட்டை வடிவானது. சற்றுத் தடித்தது. பச்சை நிறம்.
விளிம்பு
: நேர் விளிம்பு.
நுனி  
: கூர் கோணம்
நரம்பு  
: சிறகன்னது
மஞ்சரி : மஞ்சரிக்காம்பு 5 முதல் 10 செ.மீ நீளம். நுனி வளராப் பூந்துணர். 3 மலர்கள், சைமோஸ் நடுமலர் முதலில் பூக்கும். 3 முதல் 12 மலர்கள் கிளை நுனியில், செதில் மெல்லியது, முட்டை வடிவம்.
மலர் : வெள்ளை நிறமானது. ஒழுங்கானது, 4-5 அக இதழ்கள் அரும்பு 2-3 செ.மீ நீளமானது, பருத்தது.
புல்லி வட்டம் : 4-5 புற இதழ்கள். பச்சை நிறம் அடியில் இணைந்து, குழல் வடிவானது. 2-4 மி.மீ. நீளம். குழலின் மேற்புறம் 4-5 பற்களை உடையது.
அல்லி வட்டம் : 4-5 அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவானது. 10-14 மி. மீ.
நீளமானது. இளம் பச்சை நிறம். நுனியில் இதழ்கள் விரிந்தவை; 8-12 X 4-6 மி. மீ தூய வெள்ளை நிறம்.
மகரந்தவட்டம் முதல் ஏனைய எல்லாம் : மல்லிகை மலரை ஒத்தவை; அதிலும் ஜாஸ்மினம் செசிபுளோரம் எனப்படும் மௌவல் மலரைப் பெரிதும் ஒத்தது.

இதனை மௌவலாகவும், மௌவலை அதிரலாகவும் ராட்லர் (Rottler) காலம் முதல் மாறியும், ஒன்றாகவும் பேசப்பட்டு விட்டது.

  1. சிலப். 13 : 156
  2. சேந்தன் திவாகரம்-மரப்பெயர்