சங்க இலக்கியத் தாவரங்கள்/083-150
மௌவல்–மனை மல்லிகை
ஜாஸ்மினம் செசிபுளோரம்
(Jasminum sessiflorum,vahl.)
முல்லையின் குடும்பத்தைச் சேர்ந்த ‘மௌவல்’ என்பது ‘மல்லிகை’ வகையினதாகும். இதனை ‘வன மல்லிகை’ எனவும் ‘மனை மல்லிகை’ எனவும் வழங்குவர். இதன் இலைகள் தனி இலைகளாக இருத்தலின் இக்கொடி ‘முல்லை’யினின்று வேறுபடும்.
சங்க இலக்கியப் பெயர் | : | மௌவல் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | மல்லிகை விசேடம், வன மல்லிகை |
உலக வழக்குப் பெயர் | : | மனை மல்லிகை |
தாவரப் பெயர் | : | ஜாஸ்மினம் செசிபுளோரம் (Jasminum sessiflorum,vahl.) |
ஆங்கிலப் பெயர் | : | ஜாஸ்மின் (Jasmin) |
மௌவல்–(மனை மல்லிகை) இலக்கியம்
ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி’ (குறிஞ். 81) என்ற அடியில் வரும் மௌவல் என்பதற்கு மௌவற் பூ என்றாரேனும், சீவக சிந்தாமணியில்[1] இதனை மல்லிகை விசேடம் என்றார். நற்றிணை உரையாசிரியர் ‘மனை நடுமௌவலொடு’ (நற். 115) என்புழி, மௌவல் என்பதற்கு முல்லை என்று உரை கூறியுள்ளார். அங்ஙனமே குறுந்தொகை உரையாசிரியரும் ‘எல்லுறு மௌவல் நாறும்’ (குறுந். 19) என்றவிடத்து மௌவல் என்பதற்கு முல்லை என்று கூறியுள்ளார், குறிஞ்சிக் கபிலர் முல்லையையும் மௌவலையும் வேறு பிரித்தே பாடுவாராயினர். சேரமுனிவரும், ‘மாதவி மல்லிகை மௌவல் முல்லை’ என்று[2] ‘மல்லிகை’ ‘மௌவல்’ ‘முல்லை’, என்பனவற்றைத் தனித் தனியே பாடுவதையும் காணலாம். இலக்கியங்களில் மௌவல் முல்லையைப் போலவே பேசப்படும். அதனால், மௌவல் என்பது முல்லையாக மாட்டாது. மௌவல் நிறத்தாலும், மணத்தாலும் முல்லையைப் போன்றதாகும். இரண்டும் மனைகளிலே வளர்க்கப்படும் கொடிகளே. எனினும், முல்லை ‘மனைவளர் முல்லை’ எனச் சங்க இலக்கியங்களில் பேசப்படும் அளவிற்கு, மௌவல் குறிப்பிடப்படவில்லை.
மற்று, பிங்கலமும் , சூடாமணியும் இதனை ‘வனமல்லிகை’ என்கின்றன. மௌவல் ஒரு மல்லிகையினத்தைச் சேர்ந்த கொடி. இதனைச் சங்க நூல்களில்,
“மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத்
துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்”
-அகநா. 21 : 1-2
“. . . . . . . . . . . . மனைய
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மாச்சினை காட்டி
அவ்வளவு என்றார் ஆண்டுசெய் பொருளே”
- அகநா. 23 : 10-13
“. . . . . . . . மனை மரத்து
எல்லுறு மௌவல் நாறும்”-குறுந் 19 : 3-4
“மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழ”
-நற். 115 : 5-6
“மண மௌவல் முகை யன்ன
மாவீழ் வார் நிரை வெண்பல்”-கலி. 14 : 3
“மாதரார் முறுவல் போல்
மண மௌவல் முகை பூழ்ப்ப”-கலி. 27 : 4
மௌவல்
(Jasminum sessiliflorum)
மௌவல் நல்லதொரு நறுமணமுள்ள வெண்ணிற மலர் என்பதும் புலனாகும்.இத்தகைய இதன் இயல்புகளைப் பார்த்தால், இதனை மனை மல்லிகை என்று சொல்லும் உலக வழக்குப் பெயர் இதற்குப் பொருத்தமாக உள்ளது.
மௌவல் (மனை மல்லிகை) தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே |
தாவரக் குடும்பம் | : | ஓலியேசி |
தாவரப் பேரினப் பெயர் | : | ஜாஸ்மினம் (Jasminum) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | செசிபுளோரம் (sessiflorum,Vahl.) |
தாவர இயல்பு | : | ஏறுகொடி |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
உயரம் அல்லது நீளம் | : | 10-30 மீட்டர் நீளம். பிற மரங்களின் மேல் ஏறிக் கிளைத்து வளரும் பெருங் கொடி. |
தண்டுத் தொகுதி | : | தடித்து நீண்டு வளரும். பல கிளைகளை உடையது. கிளை நுனியில் நுண்மயிர் அடர்ந்திருக்கும். |
இலை | : | தனி இலை. 3-4 செ. மீ. X 2-2.5 செ. மீ. |
வடிவம் | : | முட்டை வடிவம். |
நுனி | : | குறுகிக் கூர்மையானது. |
அடி | : | குறுகியும், வட்டமாகவும் இருக்கும். |
பரப்பு | : | பசியது; பளபளப்பானது. |
நரம்பு | : | மிகக் குறைவு. |
காம்பு | : | 3-4 மி.மீ நீளம். |
மஞ்சரி | : | கிளைகளின் நுனியில் (சைம்) நுனி வளராப் பூந்துணர் பெரிதும் 3-1 மலர்களே உள்ளன. |
மலர் | : | மலர்க் காம்பு 2 மி. மீ. நீளம். வெள்ளியது. ஒழுங்கானது. மணமுள்ளது. |
புல்லி வட்டம் | : | 4-5 இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவானது. 15-20 மி. மீ நீளமானது. இதழ்கள் மேலே விரியும். 15-18 மி. மீ. X 3-4 மி.மீ. இதழ் நுனி குறுகிக் கோணமாகக் கூரியது. |
பிற இயல்புகள் | : | காணவில்லை. |