சடுகுடு ஆட்டம்/பாடிச் செல்பவருக்குரிய திறன் நுணுக்கங்கள்

3. பாடிச் செல்பவருக்குரிய திறன் நுணுக்கங்கள்

பாடி ஆட்டமானது, எதிரெதிர்க் குழுவைக் சேர்ந்தவர்கள் உடல் மோதும் தொடர்பு கொண்டு தந்திரமாக, தன் திறத்தைப் பயன்படுத்தி வெற்றி காணும் வேகம் மிகுந்த செயல் முறைகளால் உருவாக்கப்பட்டதோர் ஆட்டமாகும்.

ஏறக்குறைய இருவர் தனித்து நின்று போட்டியிடுவது போல, பாடிச் செல்பவர், பிடிப்பவர் என்பவருக்கிடையே நடக்கும் வல்லமை நிறைந்த போட்டியாகும். சில சமயங்களில் தனியாளாகப் பாடிச் செல்பவர்க்கும், பிடித்தாடுபவர்களாக இருக்கும் மறு குழுவைச் சேர்ந்த பலருக்கும் ஏற்படக்கூடிய பலப்பரிட்சையே, இந்த ஆட்டத்தின் அருமை நிறைந்த திறமாகவும் விளங்குகிறது.

இத்தகைய ஆட்டத்திற்கு ஏமாற்றுதல், திடீரென்று முன் பாய்ச்சல் பாய்ந்து பின் வாங்குதல், திடீரென்று திரும்புதல், எதிர்பாராமல் தாக்குதல், காலால் உதைத்தல், மின்னல் வேகத்தில் காலாலும் கையாலும் எதிரியைத் தொடுதல் போன்ற செயல்களை புயலாகப் பாய்ந்து சென்று மின்னலாகத் திரும்பி வருகின்ற வேக அசைவுகளே தேவைப்படுகின்ற அடிப்படைத் திறன் நுணுக்கங்களாகும்.

இதற்கும் மேலாக, இந்த ஆட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்குத் தசைப்பலமும் தேவைப்படுகிறது. எதிரியைத் தொடும்பொழுது பிடிபட்டு விட்டால், திமிறிக்கொண்டு தப்பித்து வருகின்ற ஆற்றல் வேண்டும். பிடிப்பவராக இருக்கும்பொழுது பாடி வருபவரைப் பிடித்துவிட்டால், எக்காரணத்தைக் கொண்டும் தன் பிடியிலிருந்து விடுபட முடியாதவாறு கரடி பிடி’ பிடிக்கின்ற, குரங்கு பிடி’ போடுகின்ற, உடும்புப் பிடியாக இழுக்கின்ற வகையில், உடலில் சக்தியிருந்தால்தான் முடியும்.

இப்படிப்பட்ட தேக பலம் உள்ளவர்களால்தான் கபாடி ஆட்டத்தைத் திறமையுடன் ஆட முடியும். மன திருப்திக்காகவும், ஆடிய நிறைவு கலந்த சந்தோஷத்துடனும் ஆடி முடிக்க முடியும். அத்தகைய அரிய ஆற்றலை, இனி இரு வகையாகப் பிரித்து, அவற்றின் விவரங்களைத் தொடர்ந்து அறிந்து, தெளிவு கொள்வோம். 1. பாடிச் செல்பவருக்குரிய திறன் நுணுக்கங்கள் (Raider)

2. பிடிப்பவருக்கான திறன் நுணுக்கங்கள் (Antis) என்று நாம் முதலில் இரு வகையாகப் பிரித்துக் கொண்டால், ஆட்டத்திற்கான அடிப்படைத் திறன் நுணுக்கங்களை எளிதில் விளங்கிக் கொள்ளவும், விளக்கம் பெறவும் முடியும்.

பாடிச் செல்லும் ஆற்றல் கபாடி ஆட்டத்தில் மிக மிக இன்றியமையாத, அத்தியாவசியமான ஒன்றாகும். பாடித் தொடும் நிலையானது, பலம் பொருந்திய கலையாகவே மிளிர்கின்றது. அதில் வெற்றிகரமாக செயல் படுகின்றவனே பாடிச்செல்லும் பணியில் பார்வையாளர்களும் புகழும் வண்ணம் பெருமையைப் பெறுகின்றான். அவ்வாறு ஒருவன் திறம்படப் பாடிச் செல்வதில் தேர்ந்தவனாக விளங்க வேண்டுமென்றால், அவன் ஒரு சில பயிற்சிகளை முழு மனதுடன் கற்றுத் தேர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

1. பாடிச் செல்லும் ஆட்டக்காரர், மற்ற ஆட்டக்காரர்களுக்கும் நடுவர்களுக்கும் தெளிவாகக் கேட்பது போல, சத்தமாகப் பாடிக் கொண்டிருப்பதுடன், நீண்ட நேரம் தொடர்ந்தாற்போல் ‘கபாடி கபாடி’ என்று பாடி வருகின்ற ஆற்றலை முதலில் பெற்று வல்லவராகிக் கொள்ள வேண்டும்.

அந்தப் பாட்டுடனே, வேகமாகத் திரும்புதல், துள்ளுதல், தாண்டுதல், உதைத்தல் மற்றும் சமநிலை இழக்காமல் முன்னும் பின்னும் போய் வருதல் போன்றவற்றையும் செய்ய வேண்டும். 2. இதற்கும் மேலாக, எதிராட்டக்காரர்கள் எந்த நேரத்தில் வந்து சுற்றி வளைப்பார்கள் என்று தெரிய இயலாத சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு என்பதால், மிக எச்சரிக்கையுடனும், விழிப்புணர்ச்சியுடனும் எதிர்க்குழு பகுதியில் பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

3. இத்தனைக்கும் மேலாக, பாடிச் செல்பவர் தன் ஆற்றலில், தன் திறத்தில் தன்னம்பிக்கை உடையவராக இருப்பதுமிகமிக அவசியமாகும்.

ஆகவே, பாடிச் செல்லும் கலையில் நீண்ட நெடு நேரம் எவ்வளவு மூச்சடக்கிப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற பயிற்சி முறைகளை கீழே கொடுத்திருக்கிறோம். முழு மனதுடன் பயிற்சி செய்தால், நிச்சயம் நிறைந்த பயன்கள் கிடைக்கப் பெறலாம்.

அதிக நேரம் பாட – சில பயிற்சி முறைகள்

1. நின்ற இடத்திலேயே துள்ளிக் குதித்துக் கொண்டே கபாடி கபாடி என்று மூச்சுப் பிடித்தவாறு பாடிப் பழகுதல், எவ்வளவு நேரம் இயலுமோ, அவ்வளவு நேரம் தம் பிடித்துப் பாடிப் பழகுதல்.

2. கபாடி ஆடுகளத்தை வேகமாக சுற்றிக் கொண்டு வருவது போல, ‘கபாடி கபாடி’ என்று பாடிக்கொண்டே பலமுறை சுற்றி வருதல், பாட்டுப்பாடி முடிவதற்குள் எத்தனை முறை ஆடுகளத்தைச் சுற்றி வர முடிகிறது என்பதனையும் அடிக்கடி பரிசோதித்துப் பார்த்து அதிகப்படுத்திக் கொண்டே செல்லுதல்.

3. எல்லா ஆட்டக்காரர்களும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது, ஆரம்பியுங்கள் என்ற ஆணை கேட்டவுடன் எல்லோரும் பாடத் தொடங்கி, யார் அதிகம் நேரம் மூச்சு விடாமல் ‘கபாடி கபாடி’ என்று பாடிக் கொண்டிருக்கிறார் என்று பந்தயம் வைத்துப் பரிசோதித்தல், அதிக நேரம் பாடிக் கொண்டிருப்பவரே இறுதியில் வென்றவராவார் என்று சோதித்துத் தேர்ந்தெடுத்தல்.

4. தொடரோட்டம் போல (Relay Race) நான்கு நான்கு பேர்களாக ஆட்டக்காரர்களைப் பிரித்து நிறுத்தி கையில் குறுந்தடிக்குப் (Baton) பதிலாக, கபாடி கபாடி என்று பாடிக் கொண்டே ஓடச் செய்து பழகுதல்.

இறுதிவரை ஒரே மூச்சில் பாடிக் கொண்டே போவதுதான் பயிற்சி முறை என்பதால், பழகும் ஆட்டக்காரர்கள் ஏமாற்ற முயலாமல் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

5. ஓரிடத்தில் பத்து கட்டைகள் அல்லது ஏதாவது பொருட்களை முதலில் வைத்துவிட்டு, பத்தடிக்கு அப்பால் சிறு வட்டம் ஒன்றைப் போடச் செய்ய வேண்டும். பின்னர் பாடத் தொடங்கும் ஓர் ஓட்டக்காரர் பாடிக் கொண்டே ஒவ்வொரு கட்டை அல்லது பொருளாக எடுத்துக் கொண்டு போய் வட்டத்தில் வைத்துவிட்டு திரும்பி வர வேண்டும். அவர் பாட்டை முடிப்பதற்குள் எத்தனை கட்டைகள் அல்லது பொருட்களை எடுத்துப் போய் வைக்கிறார் என்கிற முறையில் அதிகப்படுத்திப் பழகிக் கொள்ளலாம்.

6. எல்லா ஆட்டக்காரர்களையும் கிழித்திருக்கும் ஒரு கோட்டின் மீது நிறுத்தி வைத்துவிட்டு, ஓடுங்கள் என்று கூறியவுடன், குறித்திருக்கும் முன்னால் உள்ள ஓர் எல்லைக்கு பாடிக்கொண்டே ஓடி, பிறகு முதலில் ஓடத் தொடங்கிய கோட்டிற்கு யார் மீண்டும் வருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இதில் அதிக நேரம் மூச்சடக்கிப் பாடுகின்ற சக்தியுடன், விரைவாக ஒடுகின்ற ஆற்றலும் வளர சந்தர்ப்பமும் ஏற்படுகிறது.

7. இரண்டு மூன்று ஆட்டக்காரர்களை எதிர்ப்புறத்தில் நிற்கச் செய்து, அவர்களைத் தொட முயல்வது போல பாடிக் கொண்டே போய், சமாளித்துத் திரும்புதல்.

மேலே கூறியவையெல்லாம் மூச்சடக்கிப் பாடுகின்ற ஆற்றலையும் திறன்களையும் வளர்த்துக்கொண்ட பிறகுதான், எதிர்ப்புற ஆட்டக்காரர் பகுதிக்குள் பாடிப் போகின்ற சாகசக் கலையை எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.

ஒவ்வொருவருக்கும் பாடுகின்ற தன்மையில் முறை வேறுபடும். அந்தந்த ஆட்டக்காரரின் உடல்நிலை, பயிற்சி முறைக்கேற்ப பாடிவரும் நிலையும் வேறுபடும். இருந்தாலும் நடுவர்கள் திருப்தியடைகின்ற அளவில், தெளிவாக, தொடர்ச்சியாக, சத்தமாகப் பாடுவதே, பத்திரமான, உத்தமமான பாடும் முறையாகும்.

நல்ல ஆற்றல் மிகுதியுடன் பாடிச் செல்பவர் என்றால், அவர் 15 அல்லது 16 வினாடிகளுக்கு மேல் ‘மூச்சடக்கிப் பாட முடியாது என்பது வல்லுநர்கள் கருத்தாகும். இருந்தாலும், அதிக நேரம் ‘தம்’ பிடித்துப் பாடுகின்ற ஆட்டக்காரருக்கே சிறப்பாக எதிர்க் குழுவினரை அதிரடித்து விட்டுத் தொட்டுவிட்டு வரக்கூடிய வாய்ப்பும் வசதியும் அமையும் என்பதாகவும் வல்லுநர்கள் அனுபவப்பூர்வமாகக் கூறுகின்றார்கள்.

எனவே, பாடிச் செல்கின்ற ஆற்றலின் பெருமை பெறத்தக்க அளவில் சாதனை புரிந்து ஆட வேண்டும் என்று விரும்புகின்ற ஆட்டக்காரர்களுக்காக, ஒரு சில குறிப்புக்களையும் தந்திருக்கிறோம். ஆடும் நேரத்தில் இக்கருத்துக்களை நடைமுறைக்கு கொண்டுவர அவர்கள் முயற்சித்தால், திறமை மிகுவதுடன், பெருமையும் உயரும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

பாடிச் செல்பவருக்குரிய தகுதிகள்

1. கபாடி கபாடி என்று பாடிச் செல்பவருக்கு தேக பலம், சுறுசுறுப்பு, விறுவிறுப்பு முதலில் தேவைப்படும் திறன் நுணுக்கங்களாகும்.

2. உடலில் விறுவிறுப்பு மட்டுமல்லாது, மனோ நிலையிலும் அதே சுறுசுறுப்பு கட்டாயமாக இருக்க வேண்டும்.

3. திடகாத்திரமான உடலும், நடைமுறையை யூகித்து உணர்கின்ற மனமும், காக்கையின் வேகப் பார்வை அமைப்பும், அதாவது காக்கை ஒரிடத்தில் அமர்ந்திருக்கும் பொழுதே, பல இடங்களையும் சுற்றி சுற்றிப் பார்த்து எதற்கும் தயாராக பறந்து செல்ல இருப்பது போன்ற தயார் நிலையில், பாடிச் செல்பவர் எதிர்க் குழுவினரின் பகுதியில் இருக்கும்போது நின்று கொண்டிருக்க வேண்டும்.

4. கால் இயக்கம் (Foot Work) என்பது மிகவும் முக்கியமான திறனாகும். சமநிலை இழக்காமல் பாடிக்கொண்டே போவது, உடனேதாண்டிக் குதிப்பது, துள்ளித் திரும்புவது, காலை நீட்டி எட்டி உதைப்பது, கையை நீட்டித் தொடுவது, தாவி விழுவது போன்ற செய்கைகளுக்கு எல்லாம், கால் இயக்கம்தான் அடிப்படையாகும்.

அகலமாகக் கால் வைத்து, நிலையாக உடலைச் சமப்படுத்தி முன்னும் பின்னும் வேகமாக இயங்குகின்ற ஆற்றல், நல்ல பயிற்சிக்குப் பிறகே கிடைக்கக்கூடிய அரிய பரிசாக அமையும். வினாடிக்கு வினாடி மாறி மாறி நிகழ்ச்சிகள் நடக்கின்ற ஆட்டமாக கபாடி ஆட்டம் அமைந்திருப்பதால், மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்ச்சியுடனும் இருக்க வேண்டியது மிக மிக முக்கியமாகும்.

ஆக, ஒர் ஆட்டக்காரருக்கு பலரையும் ஒரே சமயத்தில் பார்த்து முடிக்கின்ற பார்வைத் திறன், எப்படியும் உடலை இயக்கி திரும்ப வைக்கின்ற கால் இயக்கம், நினைத்த இடத்திற்கு நினைத்ததை நடத்தி முடிக்கின்ற உடலியக்க ஆற்றல், எந்த நிலையிலும் மனந்தளராத ஊக்க உணர்வு.

சூழ்நிலைகளின் தன்மையை உணர்ந்து, தன்னை பதப்படுத்திக் கொண்டு பக்குவமாக ஆடுகின்ற மனோபாவம், எக்காரணத்தைக் கொண்டும் அமைதியை இழக்காத குண நலன், இவற்றால் ஒரு பாடிச் செல்லும் ஆட்டக்காரர் சிறந்த ஆட்டக்காரராகத் திகழ முடியும்.

அவரால் அவர் பெருமை அடைவது மட்டுமல்ல, அவரது குழுவும் அளப்பரிய பெருமையை அடைகிறது. ஆட்டமும் சிறப்பினைப் பெறுகிறது. வளர்ச்சி அடைகிறது. வானளாவிய மகிழ்ச்சியும் ஆட்டக்காரர் களிடையிலும், ஆடுகின்ற ரசிக்கின்ற பார்வையாளர்களுக்கிடையிலும் நிலவுகிறது என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

பாடித் தொடும் கலை

இனி, பாடித் தொடும் முறையைக் காண்போம்.எதிராட்டக்காரர்களைப் பாடிப் போய் தொடப்போகின்ற ஒரு ஆட்டக்காரர், இரண்டு வகையான ஆட்டக்காரர்களைத் தொட்டுவிட்டு வரலாம்.

அதில் ஒன்று, காலால் தொடும் கலை (Use of Legs) மற்றொன்று, கையால் தொடும் நிலை (Use of Hands)

மூன்றாவதாக தாண்டிக் குதித்து வரும் நிலை (Jumping over Antis). நான்காவதாக தள்ளிக்கொண்டு வரும் நிலை (Pushing an Anti). அவற்றை இனி விளக்கமாகப் பின்பகுதியில் காண்போம்.

1. காலால் தொடும் கலை பாடிப் போகும் முறை

எதிர்க்குழு பகுதிக்கு எப்பொழுது பாடிச் செல்லத் தொடங்கினாலும், ஆடுகளத்தின் ஒரு மூலையிலிருந்து தான் பாடத் தொடங்கிச் செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், மைய ஆடு களத்திலிருந்து பாடிச் செல்லக்கூடாது.

அதுபோலவே, ஒரு மூலையில் தொடங்கி மறு மூலைக்குப் (Corner) போய், இவ்வாறு மூலைக்கு மூலை என்று மாறி மாறிச் சென்று எதிராட்டக்காரர்களைத் தொட முயல வேண்டும். அப்பொழுது எவ்வளவு தூரம் கைகளை முன்புறமாக நீட்டித் தொட முடியுமோ அந்த அளவுக்கு முயன்று, கைகளை முன்புறம் நீட்டியிருக்க வேண்டும். முடிந்தவரை எதிர்க்குழு பகுதியில் நடு இடத்தில் போய் நின்றுகொண்டு, ஆடுகளத்தின் பாடிய வண்ணம் தொட முடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடுவில் நிற்பது ஆபத்தான கட்டமாகும். ஒரமாக ஒதுங்கி ஆட, இருந்தே தொட முயற்சிக்க வேண்டும்.

அதுபோலவே, எதிர்க்குழுவினரை எப்பொழுதும் எல்லாரையும் பார்ப்பது போல் இருந்தே பாடி ஆட வேண்டும். ஒருவரையே பார்த்துக்கொண்டு ஆடுவது தவறான, அபாயகரமான ஆட்டமாகும்.

எப்பொழுதும் எதிராளிக்கு முதுகைக் காட்டுவது போல பின்புறம் காட்டி நின்று அலட்சியமாகப் பார்க்கக்கூடாது. அது ஆட்டமிழப்பதற்குரிய ஏதுவாக அமைந்துவிடும். இன்னும், தன் ஆடுகளப் பகுதிக்குத் திரும்பி வரக்கூடிய சமயத்திலும்கூட, எதிராட்டக் காரர்களை பார்த்தபடியே பின்பக்கமாகவே வந்துதான் தன் பகுதியை அடைய வேண்டுமே தவிர, அவர்களுக்கு முதுகைக் காட்டியவாறு வரக்கூடாது.

எந்த நேரத்திலும் சமநிலை இழந்து போகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தடுமாற்றம் எந்த நேரத்திலும், எந்த சமயத்திலும் நேரவே கூடாது. அதற்காக, முழங்கால்களை சற்று வளைத்தவாறு நின்று, முதுகுப் பகுதியை முன்புறம் கொண்டு சென்று, கைகளை முழுவதும் விறைப்பாக முன்புறம் நீட்டியவாறுதான் பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

பாடிச் செல்லும் முறைகளை ஒரளவு தெரிந்து கொண்டோம். இனி, எதிராட்டக்காரர்களை எவ்வாறு காலால் தொடுவது என்ற முறைகளைத் தொடர்ந்து காண்போம். அ) பாதத்தால் தொடுவது (Toe Touch)

ஆ) முன்புறமாக உதைப்பது (Front Kick)

இ) பக்கவாட்டில் உதைத்துத் தொடுவது (Side Kick)

ஈ) குறுக்காக உதைப்பது (Cross Kick)

உ) சுற்றி வந்து உதைப்பது (Roll Kick)

ஊ) பின்புறமாக உதைப்பது (Mule Kick)

எ) துள்ளி உதைப்பது (Aero Kick)

ஏ) உட்கார்ந்து உதைப்பது (Sqaut Leg Thrust)

ஐ) தாண்டிக் குதித்து வரும் முறை (Jumping Over Anti)

பாடிச் செல்லும் ஆட்டக்காரர், எதிர்க்குழுவில் பிடிக்கத் தயாராக இருக்கும் ஆட்டக்காரர்களை, கையால்தான் தொடப் போகிறார் என்று நம்பும்படியாக பாவனை செய்த வண்ணம், அவர்கள் கவனம் முழுவதையும் அசைகின்ற கைகளில் பதியுமாறு செய்து கொண்டிருந்துவிட்டு, அவர் தனது கைகளைப் பிடிக்க முயலுகின்ற சமயத்தில், திடீரென்று தனது ஒரு காலை நீட்டி எதிராட்டக்காரரைத் தொட்டு விடுவதுதான் காலால் தொடும் அற்புதக் கலையாகும். அதற்கென்று ஒரு சில முறைகளையும் குறிப்புக்களையும் தெரிந்து கொள்வது இன்றியமையாததாகும்.

காலால் எதிராளியைத் தொடுவதானது நின்று கொண்டே காலை நீட்டித் தொடுவது, உட்கார்ந்த வண்ணம் காலை நீட்டித் தொடுவது, துள்ளிப் பின்புறமாகக் காலை நீட்டித் தொடுவது என்று பல பிரிவுகளாக அமையும். இவ்வாறு செய்கின்றபொழுது, ஏற்கனவே நல்ல பயிற்சியும், போதிய அனுபவமும் இல்லாமற் போனால், உடல் சுறுசுறுப்பாக இயங்காமலும் சிறப்பாக விளங்காமலும் போய், எதிராளியிடம் வசமாக சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதை புதிதாகப் பரிட்சித்துப் பார்க்கின்ற பாடிப் போகும் ஆட்டக்காரர் மறந்துவிடக் கூடாது.

காலை நீட்டித் தொடுவது என்பது சாதகமான பலனைத் தரும் என்பது உண்மைதான். நீண்ட துரம் காலை நீட்டும் பொழுது, கையினால் தொட முயல்வதைவிட காலால் தொடுவது எளிதுதான் என்றாலும், உடல் சமநிலை இல்லாமல் போனால் கால்கள் விரிந்து விழவும் நேரிடும்.

அ) பாதத்தால் தொடும் முறை (Toe Touch)

அத்துடன், காலால் தொட முயற்சிக்கும் பொழுது, கைகளைப் பாதுகாக்கும் அரண் போல் முன்னோக்கி விரித்து வைத்துக்கொண்டு முன்னேறுதல் புத்திசாலித்தனமான ஆட்டமுறையாகும்.

எதிராட்டக்காரர்களை எப்படியும் தொட்டு வெளியேற்றி, தன் குழுவிற்கு வெற்றி எண்களைத்

படிமம்:Sadugudu–1.jpg
தேடித் தந்துவிட வேண்டும் என்பதுதான் பாடிச் செல்பவரின் தலையாய நோக்கமாகும்.

இப்படி பாதத்தால் தொடும் முறை, வலது காலை நன்கு முன்புறம் நீட்டி, கையைப் பார்த்துப் பிடிக்க முயலும் எதிர் ஆட்டக்காரரின் காலைத் தொட்டுவிடும் சாகசச் செயலாகும். படத்தில் காலால் காலைத் தொடுவது போல் காட்டப்பட்டிருக்கிறது. இன்னும் காலை நீட்டியிருப்பது போல் அமைந்திருக்க வேண்டும்.

உடலின் எடை முழுவதும் வளைந்திருக்கும் இடது காலின் மேல் இருக்க, கைகள் மடக்கி அந்தப் பணியை ஆற்றிட உதவும் வண்ணம் அமைந்திட வேண்டும்.

கணுக்காலுக்குக்கீழே முழுப் பாதமும் நன்றாக விறைப்பாக நீட்டப்பட்டிருந்தால், தொடுவதற்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும். இரண்டு கால்களாலும் இப்படி நீட்டித் தொடக்கூடிய பயிற்சியைப் பெற்று பழகி வைத்திருப்பது நல்லது.

பாதத்தால் தொடும் ஆட்டத்தில், ஆடுகளத்தின் ஒரு மையத்தில் நின்று பாடிக் கொண்டிருக்கும் பொழுது செய்யக்கூடாது. ஆடுகளத்தின் இருபுறமும் உள்ள ஏதாவது ஒரு மூலையில் (Corner) இருக்கும்பொழுதுதான் செய்திட வேண்டும். நடு ஆடுகளத்தில் முயல்வது, எப்பொழுதும் பிடிபட்டுப் போகின்ற அபாயத்தை உண்டாக்கிவிடும். அது எதிராளிக்கு எளிதாகப் பிடிக்கக்கூடிய சந்தர்ப்பத்தைக் கொடுத்துவிடும்.

இவ்வாறு பாதத்தால் தொடும் முறையின்போது, ஒரு தோள் எதிராட்டக்காரரை நோக்கியும், மறு தோள் தனது ஆடுகளப் பகுதியை நோக்கியும் இருப்பது போல் நின்றால்தான், தொட்டாலும் எளிதாகத் தப்பித்துக் கொண்டு வருகிற தன்மையில் உடல் சுறுசுறுப்புடன் இயங்கிட ஏதுவாக அமைந்திருக்கும்.

விதிமுறைப்படி, எதிராளியின் முழங்கால்களுக்கு மேல் நேரே காலை நீட்டி உதைக்கக்கூடாது என்ற விதி இருப்பதை நினைவு கூர்ந்து, பாதத்தில் முன்புறமாக உதைத்துத் தொடும் வாய்ப்பை இந்த முறையில் உண்டாக்கிக் கொண்டு ஆடுவதையும் ஆட்டக்காரர் வெற்றிகரமாக செயல்பட வேண்டும்.

ஆ) முன்புறமாக உதைத்துத் தொடும் முறை (Front Kick)

முன்புறமாக ஒரு காலைத் துக்கி உதைத்து எதிராளியைத் தொடும் முறை, கபாடி ஆட்டத்தில் சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றாகும்.

பாடிச் செல்லும்பொழுதே ஒரு காலில் நின்று மறு காலைத்துக்கி முன்புறமாகத் தொடுவது, அல்லது பாடிக் கொண்டு ஒரு இடத்தில் நிற்கும்பொழுதே இது போல்

முயல்வது எப்பொழுதும் நடக்கக்கூடிய திறன்தான் என்றாலும், இதனால் ஒருவரைத் தொட்டு வெற்றி எண் அடிக்கடி பெற முடிவதில்லை.

என்றாலும், இந்த முறையினால், எதிராட்டக்காரர்கள் பகுதிக்குள் பாடிச் சென்று முன்னேற முயலும் பொழுதும், அதே போல் பின்னோக்கியே வந்து, தன் பகுதிக்கு வர முயலும் பொழுதும் இவ்வாறு காலை முன் தூக்கி நீட்டி உதைத்து வர இந்தத் திறன் பயன்படுகிறது.

முன்புறமாக வலது காலைத் துக்கி உதைக்கும் பொழுது, உடல் எடை முழுவதும் இடது காலில் விழுகிறது. உடல் சற்று பின்னால் வளைவது போல் சென்று, இரண்டு கைகளும் உயர்ந்து, உடல் சமநிலை இழந்துவிடாமல் பாதுகாக்கின்றதை படத்தில் காணவும்.

இவ்வாறு பின் சாய்ந்து வலது காலை முன் துக்கி உதைப்பதால், திடீரென்று எதிரட்டக்காரர்களைத் தாக்கி விடுகின்ற சக்தி மேலிடுகிறது. அத்துடன் கணுக்கால் பகுதிக்குக் கீழே முழு பாதத்தையும் நீட்டி உதைப்பது மேலும் நல்ல பலனைக் கொடுக்கும். இது கால் பந்தாட்டத்தில் முன்னோக்கிப் பந்தை உதைப்பதற்குரிய இயல்பில் அமைந்துள்ளதைக் கண்டு, இம்முறையை இவ்வுதையில் பின்பற்றவும்.

இ) பக்கவாட்டில் உதைக்கும் முறை (Side Kick)

இந்த முறையும் முன்புறமாக உதைத்தாடும் தன்மையைப் போல்தான். ஆனால் இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அது முன்புறமாக உதைப்பது. இது பக்க வாட்டில் உதைப்பது என்பதுதான்.

பாடிச் செல்பவர் ஒரு மூலையில் நின்றவாறு பாடிக் கொண்டிருக்கும் பொழுது, பிடிப்பவர்கள் திடீரென்று வந்து சூழ்ந்து கொள்கையில் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள, உடனே பக்கவாட்டில் திரும்பியவாறு காலை நீட்டி உதைத்துத் தொட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள இந்த ஆற்றல் பயன்படுகிறது.

இதிலும், இடது காலில் உடல் எடை முழுவதும் இருக்க, வலது கால் பக்கவாட்டில் நீட்டப்பட்டிருக்கிறது. ஆனால், உடலானது முன்புறமாக வளைந்தும், வலது கை முன்புறமும் வந்தும் இடது கை பக்கவாட்டில் சென்றும் உடல் சமநிலை இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.

ஈ) குறுக்காக உதைக்கும் முறை (Cross Kick)

காலால் உதைத்துத் தொடும் முறையில் இது ஒரு அரிய முறையாகும். பாடிச் செல்பவர் தந்திரமாக குறுக்கு நெடுக்காக ஏறத்தாழ 45 டிகிரி அளவில் காலைத் துக்கி உதைத்து வெற்றிகரமாகத் தொட்டு விடுவது சந்தரப்பத்திற்கேற்ற சாகசச் செயலாகும்.

பாடிச் செல்கின்ற ஆட்டக்காரர், பக்கத்திலே உள்ள எதிராட்டக்காரரையும், அதே சமயத்தில் மூலையில் (Corner) நிற்கின்ற ஒருவரையும் ஒரே நேரத்தில் தூக்குவது போன்ற பாவனை. அதாவது மூலையில் நிற்பவரைத் தொட்டுவிட முயற்சிப்பது போல் அவரைப் பார்த்தவாறு, திடீரென்று காலைத் துக்கிப் பக்கத்தில் நிற்கும் எதிராட்டக்காரரை காலால் உதைத்துத் தொட்டு விடுகின்ற முறைக்குத்தான் குறுக்கு நெடுக்காக உதைத்துத் தொடுதல் என்று பெயராகும்.

முன்னே பாய்ந்து செல்வது போன்ற பாவனை (Feint) காட்டி, திடிரென்று பக்கத்தில் நிற்பவரை உதைத்துத் தொடுவதுதான் இந்த முறையின் சிறப்பான அம்சமாகும். இப்படிச் செய்வது, பக்கத்தில் உள்ள ஆட்டக்காரருக்குப் போக்குக்காட்டி, அவரை தன்னை நோக்கித் தொடவர மாட்டார் என்ற நம்பிக்கையை ஊட்டி, உடனே அருகில் நிற்பவரைத் தொட்டுவிடுவது தான் தந்திரமான ஆட்டமாகும்.

ஒரு மூலைக்கு மறுமூலை என்று பாய்ந்து செல்லும்பொழுது, இந்த ‘உதை’ முறையையும் பயன்படுத்தலாம். இடது காலால் அல்லது வலது காலால், வாய்ப்புள்ள வசதியை அறிந்து உதைக்கலாம். இதற்கு ஆழ்ந்த பயிற்சி தேவையாகும். திடீரென்று முயற்சி செய்தால் தவறி வீழ்ந்து, பிடிபட்டுப் போகவும் ஆட்டமிழக்கவும் கூடும்.

உ) சுற்றி உதைக்கும் முறை (Roll Kick)

முன்புறமாகக் காலைத் துக்கி உதைத்துத் தொடும் முறையில் மேலும் சற்று வளைவாக காலைக் கீழே கொண்டு வந்து பக்கவாட்டில் உதைத்துத் தொடும் முறையை அரைச் சுற்றில் உதைக்கும் முறை (Curve or Semi Circular Kick) என்றும் கூறுவார்கள்.

இந்த அரைச்சுற்றில் தொடங்கிய உதைத் திறன், மேலும் முழுச் சுற்றாக நீண்டு தொடர்ந்து செயல்படும் முறைக்கே சுற்றி உதைக்கும் முறை என்று கூறப்படும்.

படத்தில் பாருங்கள். ஒன்று என்னும் படத்தில் இடது காலை ஊன்றி வலது காலைத் துக்கி வளைவாகக் கொண்டு உதைக்கும் முயற்சி தொடங்குகிறது.

இரண்டாம் படத்தில் தூக்கி வந்த வலது காலை தரையில் ஊன்றியவுடன், இடது காலைப் பின்புறமாகத் தூக்கி உயர்த்தி, பின் வளைவாக வைத்துக்கொண்டு, அப்படியே ஒரு சுற்று சுற்ற வேண்டும். அதற்கு வலது கால் சுழற்காலாகப் (Pivot Foot) பயன்படுகிறது. வலது காலை ஊன்றி இடது காலால் ஒரு சுற்று சுற்றும் பொழுது அதற்கேற்றவாறு உடல் சம நிலையைக் காப்பதற்காக இரண்டு கைகளும் மாறி மாறி வருவதையும் நீங்கள் படத்தில் காணலாம்.

அதே வேகத்தில் திரும்பி வலது காலை ஊன்றியவாறு இடது காலால் எதிரியை உதைத்துத் தொடும் முறையைத்தான் சுற்றி உதைக்கும் முறை என்று கூறுகிறோம்.

மூன்று படங்களில் உள்ள மூன்று முறைகளும் வேகமாகச் செய்யும்பொழுது ஒரே செயலாக மாறுகிறது என்பதையும் நீங்கள் மறக்கக்கூடாது. இதனை வேகமாகச் செய்யும் பொழுது, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதே சமயத்தில் பயனுள்ள திறனாகவும் அமையும்.

இதுபோன்ற அரிய திறனுள்ள ஆட்டத்தை எல்லா ஆட்டக்காரர்களாலும் ஆடிவிட முடியாது. நல்ல பயிற்சியும், பழக்கமும், ஆடும்பொழுது அதிகமாகப் பெற்று திறம் படைத்தவரே சிறப்பாக ஆடிட முடியும். அல்லாவிடில், சுற்றிவரும் பொழுதே எதிராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு எளிதாகப் பிடித்துவிடக் கூடும்.

ஆகவே, வேகமும் விறுவிறுப்பும் உடைய இந்தத் திறனை நன்கு பழகிக் கொண்ட பிறகே, ஆட்டத்தில் ஆடிட முடியும்.

ஊ) பின்புறமாக உதைத்தாடும் முறை (Mule Kick)

உதை என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது கழுதைதான். அதற்குப் பிறகுதான் குதிரை. இந்தப் பின் உதை முறை என்று குறிப்பிட்டிருக்கும் ஆட்ட முறைக்கு, ஆங்கிலத்தில் கழுதை உதை என்றே பெயர் உண்டு. எனும் Mule எனும் ஆங்கில வார்த்தைக்கு கோவேரிக் கழுதை என்று பொருளாகும்.

பாடிச் செல்கின்ற ஆட்டக்காரர் எதிர்ப்பகுதியில் இருந்து பாடிவிட்டுத் தன் பகுதியை நோக்கி வரும் பொழுது, முதுகுப்புறம் காட்டித்தான் வரவேண்டும். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதாவது பாடி விட்டக் களைப்புடன்தானே பாடியவர் போகிறார் என்ற எண்ணத்துடன், பிடிப்பவர்கள் பின்புறமாக வந்து பிடிக்க முயல்வதுண்டு. அதுதான் பிடிக்கும் நேரமுமாகும்.

இதை எதிர்பார்த்து, பாடிச் செல்பவரும், தன் பகுதியை பார்த்தவாறு திரும்பி வந்து கொண் டிருந்தாலும், திடீரென்று தன் ஒரு காலை பின்புறமாகத் தூக்கி உதைத்துத் தொட்டுவிட்டு வந்துவிடுகின்ற முறையைத்தான் பின் உதை முறை என்று கூறுகின்றோம்.

கழுதை பட்டென்று பின்புறமாக உதைத்துவிடுவது போல்தான், பிடிக்க வரும் ஆட்டக்காரர்கள் இந்த நிலையை எதிர்பார்க்காதபொழுது பட்டென்று உதைத்துவிடுவது எதிராட்டக்காரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும்.

படத்தைப் பாருங்கள். திரும்பி தன் பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற பாடிச் சென்றவர், திடீரென்று தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, வலது காலால் உதைத்து விடுகின்ற நிலையைப் பார்க்கிறோம்.

இவ்வாறு உதைக்கும்பொழுது ஒரு காலால் நின்றுகொண்டு, மறு காலால் எட்டி உதைக்க நேர்வதால், உடல் சமநிலையை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற நிலைமையில்தான் கைகளும் முன்புறமாக வந்து சமநிலையை காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், நீட்டிய காலை எதிராட்டக்காரர்கள பிடித்துவிடாமல் அதாவது பிடி கொடுக்காமல் விரைவாக செயல்பட வேண்டும். ஆகவே, தன்னைப் பின் தொடர்ந்து வருகின்ற எதிராட்டக்காரர்களை திகைக்க வைத்து, பின் காலால் உதைத்து வெற்றி எண் பெறுகின்ற வாய்ப்பை பின் உதை முறை தருகின்றது என்பதால், இந்த திறனை கற்றுத் தேர்வது நல்லாட்டக்காரர் களுக்குரிய தலையாய பண்பாகும்.

எ) துள்ளி உதைக்கும் முறை (Aero Kick)

காண்பவர்களுக்கு கவர்ச்சியாகத் தோன்றுகிற அற்புதக் காட்சியாக அமைந்திருப்பது துள்ளி உதைக்கும் திறனாகும். பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், செய்வதற்கு மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில், உடல் உறுப்புக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும் அரிய திறன் என்பதுதான் இதன் இரகசியமாகும். பக்கவாட்டில் காலைத்துக்கி உதைக்கும் முறை போல இந்த ஆட்டத்திறன் தோன்றுகிறது என்றாலும், அதைவிட இன்னும் கொஞ்சம் தேர்ந்த திறமையை காட்டுவது போல் அமைந்திருப்பதுதான் இந்த திறனின் அரிய முறையுமாகும்.

இடது காலை ஊன்றிக்கொண்டு வலது காலை முதலில் தூக்கி பக்கவாட்டில் உதைப்பது போல் தொடங்கி, அதே சமயத்தில் இடது காலைத் துக்கித் தாண்டி குதித்து (Hop), மேலும் எதிராட்டக்காரர்களை நோக்கிக் காலை நீட்டி உதைப்பதுதான் இம்முறை யாகும்.

இடது காலைத்துக்கி வைப்பது சாதாரண முறையில் அல்லாமல், ஒரு துள்ளுத் துள்ளி வைப்பதுதான் இதில் முக்கிய திறனாகும். அந்தத் துள்ளலில் ஒரடி தூரமும் முன்னேறலாம். இரண்டடிதுரமும் செல்லலாம். ஆனால், இது சந்தர்ப்பத்தைப் பொறுத்தும், எதிராட்டக்காரர்கள் இருக்கின்ற எண்ணிக்கையைப் பொறுத்தும், எதிராட்டக் காரர்கள் இருக்கின்ற சுறுசுறுப்பைப் பொறுத்தும் இது அமையும்.

இந்தத் துள்ளும் முறையை மிகவும் எச்சரிக்கையுடனும், ஆழ்ந்த கவனத்துடனும் செய்ய வேண்டும்.

காலைத் துக்கித் துள்ளித் தரைக்கு மேலாக இருக்கும்பொழுது, உடலைச் சற்று முன்தள்ளி சாய்த்துக் கொள்ளும்பொழுது, திடீரென்று தேகத்திற்கு ஒர் அதிர்ச்சி ஏற்படுவது போலத் தோன்றி, பாடுகின்ற பாட்டை நிறுத்திவிடுவது போல் அல்லது மூச்சை விட்டுவிட்டுத் தொடங்குவது போலவும் நின்றுவிடும். அதுபோல் மூச்சை இழப்பது போல் அல்லது கபாடிப் பாட்ை இடையிலே நிறுத்துவது போல நிலைமையை உருவாக்கிக்கொள்ளக் கூடாது.

ஏனென்றால், எதிர்க்குழு பகுதியில் பாடி வருபவர் பாட்டை நிறுத்திவிட்டால் ஆட்டமிழந்து வெளியேற்றப் படுவார் (Out) என்பது விதியாகும். ஆகவே, மிகவும் நிதானத்துடன் இந்தத் துள்ளும் முறை உதையை பிரயோகிக்க வேண்டும்.

அத்துடன், உடல் சமநிலை இழந்து போகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். வலது காலில் மட்டுமின்றி, இடது காலாலும் உதைத்துவிட இயலும் என்பதால், இந்தத் துள்ளும் முறை திறனைப் பழகிக் கொள்பவர்கள் தொடக்கத்திலேயே இரண்டு கால்களிலும் சமயத்திற்கு ஏற்றாற்போல் மாறி மாறிச் செய்வது போல் பழகிக்கொள்ள வேண்டும்.

உடலின் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்த செயல்மூலம்தான் இந்த அரிய திறனை ஆற்றிட முடியும் என்பதால், நிச்சயமாகக் கடினப்பயிற்சி தேவை. ஏனெனில், சற்று தாமதமாகவோ, வேகமில்லாமலோ இந்தத் துள்ளும் முறையில் காலைத் துக்கினால், எதிராட்டக்காரர்கள் மிகவும் எளிதாகக் காலைப் பிடித்து இழுத்துவிடுவார்கள். உடல் சமநிலை இல்லாமல் இருக்கின்ற நிலையில் காலைப் பிடித்தவுடன், எளிதாகக் கீழே விழுந்துவிடவும் வாய்ப்புண்டு.

ஆகவே, துள்ளி உதைக்கும் முறையானது தேர்ந்த ஆட்டக்காரர்களாக ஆனவர்களே செய்து புகழ்பெறக்கூடிய அரிய கலையாகும்.

வ) உட்கார்ந்து உதைக்கும் முறை (Squat Leg Thrust)

பிடிக்கும் ஆட்டக்காரர்கள் ஆடுகளப் பகுதியின் _தாவது) ஒரு மூலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது, இந்தத் தொடும் முறை பயன்படுகிறது.

அதாவது, காலை நீட்டித் தொடும் துரத்திற்கு சற்று அப்பால் எதிராட்டக்காரர்கள் நின்று கொண்டிருக்கும் பாழுது, படத்தில் காட்டியிருப்பது போல்,

கீழே உட்கார்ந்து ஒரு காலை நீட்டித் தொடுகின்ற முறையை ஆட்ட வல்லுநர்கள் சிபாரிசு செய்கின்றார்கள்.

பாடிக்கொண்டு, எதிர்க்குழு பகுதியில் அங்குமிங்கும் நடனமாடிக் கொண்டிருக்கும்பொழுது, அப்படியே முழுக் குந்தலில் (Squat) உட்கார்ந்துகொண்டு, எதிராட்டக்காரரைப் பார்த்தபடி, சற்று தேகத்தை முன்னே தள்ளி, வலது காலை நீட்டிவிட வேண்டும்.

இப்பொழுது உடல் எடை முழுவதும் இரண்டு கைகளிலும் ஏந்தப்படுவது போல், கைகள் இரண்டையும் தரையில் ஊன்றியிருக்க வேண்டும். இடது காலை திறமாக அதே இடத்தில் வைத்து, வலது காலை விரைவாக எதிராட்டக்காரரை நோக்கி நீட்டி, உடனே பின்புறமாக இழுத்துக்கொண்டுவிட வேண்டும்.

மெதுவாக இந்த உதைக்கும் முறையைப் பயன்படுத்தினால், எதிராட்டக்காரர்கள் எளிதாகப் பிடித்து விடுவார்கள் என்பதால், இது பல சந்தர்ப்பங்களில் அபாயகரமானதோர் ஆட்டமாகும். ஆனால், பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகத் தோன்றுகின்ற ஒர் ஆட்டமுமாகும்.

ஐ) தாண்டிக் குதித்து வருதல் (Jumping Over an Anti)

பாடிச் செல்பவர், பிடிக்கும் ஆட்டக்காரர்களால் சூழப்பட்டிருக்கும்பொழுது, அவர்களை மீறிக் கொண்டு வந்து பாட்டுட்ன் நடுக்கோட்டை தொட முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால், அவர்களிடமிருந்து விடுபட்டு வர ஒரே வழி, அந்த ஆட்டக்காரர்களைத் தள்ளியவாறு வர வேண்டும்.

இரண்டு ஆட்டக்காரர்கள் அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் இருந்தால், ஒரே தாண்டாகத் தாண்டிக் குதித்துத்தான் வர வேண்டும். படம் பாருங்கள்.

இரண்டு ஆட்டக்காரர்கள் வழிமறித்துப் பிடிக்க முயலும்பொழுது அவர்கள் மேலேயே தாவிக்குதித்து வருவதை நீங்கள் காணலாம்.

ஒருவராக இருந்து வழிமறித்துக் காலைப் பிடிக்கும்பொழுதும், இரண்டு ஆட்டக்காரர்கள் படத்தில் உள்ளதுபோல் வந்து பிடிக்க முயற்சிக்கும்பொழுது, பல ஆட்டக்காரர்கள் பிடிக்கும் பொழுதும் இந்தத் தாண்டிக் குதித்து வரும் முறையைப் பின்பற்றலாம்.

பாடிச் செல்பவர் , தனது கண்ணோட்டத்தை சாதுர்யமாக சுழலவிட்டு, பிடிக்க வருபவர்களின் இயக்கத்தின் திசையை நன்கு அறிந்துகொண்டு, பிடிக்க வருபவரை அப்படியே தோள் மீது ஒரு கையை வைத்து

அழுத்தியவாறு தாவிக்குதித்து விடுவதுதான் தப்பித்து வருகிற சாதுர்ய காரியமாகும்.

இந்தத் திறமைக்கு நன்கு உயரத் தாண்டக்கூடிய ஆற்றல் தேவையாகும். அத்துடன் விரைவாக ஒடக்கூடிய சக்தியும், திறமையும் வேண்டும். படத்தில் தோளில் கையை வைத்து அழுத்துவதையும் காணுங்கள்.

இதுவரை கால்களைப் பயன்படுத்தி எதிராட்டக் காரர்களை எவ்வாறு தொட்டு ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கமாக எழுதி வந்தோம். இனி பாடிச் செல்பவர் கைகளினால் எவ்வாறு தொட்டுவிட்டு வெற்றிகரமாகத் தன் பகுதிக்கு திரும்பி வரவேண்டும் என்பதையும் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

2. கையால் தொடும் கலை

பிடிக்க முயல்கின்ற எதிராட்டக்காரர்களைக் கையால் தொடுகின்ற கலையானது, தாக்கி ஆடும் ஆட்ட முறைகளில் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது. இதை பிரதான திறனாகவும், ஆட்ட வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு பாடிச் செல்பவர் கையினால் தொட முயற்சிக்கும் தன்மையானது, பாடிச் செல்லும் ஆட்டக்காரரின் உயரத்திற்கு ஏற்ப அமையும். உயரமான ஆட்டக்காரராக இருந்தால், அவரது கைகளின் நீளத்திற்கு ஏற்ப, தொடும் தன்மையும் மாறுபடும்.

அத்துடன் நில்லாமல், எதிராட்டக்காரர் எதிரே நின்று பிடிக்க இருக்கும் தூரத்திற்கேற்பவும் இந்தத் திறமை மாறுபடும்.

கையால் தொடுகின்ற முறைகள் பலவாக அமைந்திருக்கின்றன. கையை உயரமாக நீட்டியும், செங்குத்தாக உயர்த்தியும், உள்ளங்கையானது மேற்புறம் இருப்பது போலவும், உள்ளங்கையானது தரைப்புறம் பார்த்திருப்பது போலவும் வைத்தவாறு எதிராட்டக்காரர்களைத் தொடும் முறை வேறு பட்டிருக்கிறது.

உதாரணமாக, நின்று கொண்டு பிடிக்கும் ஒர் எதிராட்டக்காரரை, பாடிச் செல்பவர் தனது நன்றாக நீட்டப்பட்ட கையினால், அவரது தலையையோ, அல்லது முகத்தையோ (மூக்கு, கன்னம், தாடை மற்றும் முடி போன்ற பகுதிகளை) தொட முடியும். இன்னும் சற்று கீழே இறக்கி, தோள் பகுதியையும் தொட முடியும்.

அவ்வாறு செய்யும் தன்மைக்கு, பாடுபவர் தனது கையை நன்றாக முழுவதுமாக நீட்டிப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் எதிராளியைத் தொடவும், மீறினால், அந்த இடத்திலிருந்து தான் தப்பித்து வெளிவரவும் முடியும்.

இதற்கு கால் திறன் (Foot Work) மிகவும் முக்கியமாக ஒத்துழைக்க வேண்டும். கையை முழுவதும் நன்றாக விறைப்பாக, முன் குனிந்து எவ்வளவு துரம் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் நீட்டும்பொழுது, உடல் முன்புறமாக சற்று சாய்ந்திட நேரிடுகின்றது. அப்பொழுது உடல் சமநிலையை இழந்திடும் நிலையை அடைகின்றது. ஆகவே, கால் இயக்கும் திறனையும் நன்கு கற்றுக் கொண்டவர்களே, உடல் சமநிலை இழக்காமல் கைநீட்டித் தொட முடியும்.

அதற்கும் ஒரு வழி இருக்கிறது. உதாரணமாக, வலது கையை நீட்டித் தொட முயற்சிக்கும்பொழுது, வலது கால் முன்னே நீட்டப்பட்டு, உடல் எடை முழுவதும் வலது காலில் இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இடது கையை நீட்டுகின்றபொழுது, இடது கால் முன்னே வர வேண்டும். இரண்டு கைகளையும் முன்புறமாக நீட்டினால், இரண்டு கால்களும் சமமாக இடைவெளி விட்டு உடல் சற்று முன் தள்ளி சாய்ந்திருப்பது போல் வைத்துக்கொள்ளும் பொழுது தான், உடல் சமநிலை இழக்காமல் இருந்து, திறமையை சரிவரப் பயன்படுத்த உதவும்.

எப்பொழுதும் பாடிச் செல்பவர், தனது கைகளை முழு அளவு நீளம் நீட்டுவதுபோல் நீட்டியே பாடிட வேண்டும். அப்பொழுதும், கைகளை ஒரே தன்மையில் நிறுத்தி வைத்திருக்காமல், கைகளை மேலும் கீழுமாகவோ அல்லது பக்கவாட்டிலோ கொண்டு சென்று, எதிரிகளுக்குப் பிடி கொடுக்காமல் விரைவாக அங்குமிங்கும் அசைந்தவண்ணம் இருக்க வேண்டும்.

இதற்கும் மேலாக சமயோசிதப் புத்தியும் தேவைப் படுகிறது. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு, சுற்றியுள்ள எதிராளிகளின் சூழ்ந்திருக்கும் சூழ்நிலைக்கு ஏற்பவும் தந்திரமாக தன் திறனைப் பயன்படுத்தும் சமயோசிதப் புத்திக் கூர்மையுடன் கையால் தொட்டு, தன் குழுவிற்கு வேண்டிய வெற்றி எண்களையும் பெற்றுத் தருகின்றார்கள்.

தாக்கும் கலையில் கையால் தொடும் கலையின் மேன்மை இதுவரை அறிந்து கொண்டோம். சில சமயங்களில் பாடிக் கொண்டே போய், கடைக் கோட்டுக்கு அருகில் செல்லும்பொழுது எதிராட்டக்காரர் அல்லது பலரால் சுற்றி சூழப்படுகின்ற சூழ்நிலையில், தாண்டிக் குதித்து வரவும் முடியாத பொழுது தனது உடல் சக்தியையும் பலத்தையும் வேண்டிய அளவு பிரயோகித்து, அப்படியே எதிராட்டக்காரர்களை நடுக்கோடு வரை தள்ளிக்கொண்டே வந்து விடுவதும் ஒரு தந்திர முறையாகும். ஆகவே, பலமுள்ளவர் களுக்குரிய ஆட்டம் கபாடி ஆட்டம் என்று கூறப்படும் மொழிக்கு உதாரணமாக இந்த ஆட்ட முறை அமைந்திருக்கிறது.

ஆகவே, கபாடி கபாடி என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே, இடைவெளி விடாமல், சத்தமாக, தெளிவாகப் பலருக்கும் கேட்பது போல, எதிராட்டக் காரர்கள் பிடிக்க மொத்தமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் பகுதிக்குள், குறிப்பிட்ட எல்லை வரை சென்று தொட்டுவிட்டு வந்தால்தான் தப்பிக்க முடியும் என்ற கட்டாயத்திற்கும் ஆளாகிப் போகின்ற ஒரு தாக்கும் நிலையுள்ள ஆட்டக்காரர், மேலே விளக்கமாகக் கூறிய அத்தனை தொடும் முறைகளிலும் ஏதாவது ஒன்றை சந்தர்ப்பத்திற்கும் சமயத்திற்கும் ஏற்றாற்போல் பயன்படுத்திட வேண்டும்.

பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக்கப்படும் ஒர் ஆட்டக்காரர், பல திறப்பட்ட திறன்களை, ஆட்டத்தைப் பழகும்பொழுதே கற்றுக் கொண்டிருக்க வேண்டும். கற்றுக்கொள்வதில் தீவிரக் கவனம் செலுத்தித் தேர்ந்து வந்திருக்க வேண்டும். பழக்கம் இல்லாதவர்களால் ஒரிரு முறைதான் பாடிப் போய் வர முடியும்.

ஒரு பருவம் 20 நிமிடம் என்கிற பொழுது, ஒர் ஆட்டக்காரருக்குப் பலமுறை பாடிப் போய்விடுகின்ற வாய்ப்புக் கிடைக்கும் என்பதால், பாடிப்பாடி நன்கு தன்னைத் தேர்ச்சியுள்ளவராக ஆக்கிக்கொள்ள ஒவ்வொரு ஆட்டக்காரரும் முயல வேண்டும். தானே தான் தன்னைத் தகுதியுடையவராக மாற்றிக்கொள்ளச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் தாக்கும் கலையை திறம்படப் பழகிக்கொண்டு அடுத்து வரும் பிடிக்கும் கலையையும் சிறப்புறக் கற்று விளங்க வேண்டும்.

தொடர்ந்து, பிடிக்கும் கலையையும் அதற்குரிய பல பிடி முறைகளையும் அடுத்து வரும் பகுதியில் காண்போம்.

பாடிச் செல்பவர்களின் கவனத்திற்கு சில குறிப்புகள்

எந்த விளையாட்டில் எந்தக்குழு பங்கு பெற்றாலும், தங்கள் குழு வெற்றி பெற வேண்டும், தங்கள் ஆட்டக்காரர்கள் புகழ்பெற வேண்டும் என்ற அளவிடற்கரிய ஆசையுடனே பங்கு பெறுகிறது. அந்த ஆசை எந்தவித ஆபத்து வராமலும், எக்காரணம் கொண்டும் அவப்பெயர் பெறாமலும் நிறைவேற வேண்டும் என்ற நினைவும் ஒவ்வொருவர் நெஞ்சிலும் கூடவே தொடர்ந்து வருவதும் உண்டு. அத்தகைய சிறப்பான நோக்கம் உள்ளவர்களே ஆட்டத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். பார்வையாளர்களிடையே புகழ்பெற்று விளங்கவும் முடியும்.

சடுகுடு ஆட்டம் இந்த நோக்கத்திற்கு இன்னும் நெருங்கிய தொடர்பு உடையதாக இருக்கிறது. அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. சடுகுடு ஆட்டம் இரண்டு குழு ஆட்டக்காரர்களிடையே உடல் தொடர்பு அதிகம் ஏற்படுத்துகின்ற ஆட்டமாகும்.

ஒருவரைப் பிடிக்கவும், மற்றவரைத் தொடவும் என்று உடலை வைத்து இலக்காகக் கொண்டே விளையாட்டு வளர்கிறது; தொடர்கிறது; முடிகிறது. அதனால், உடம்பில் கைபட்ட உடனே உணர்ச்சிப் பிழம்பாக மாறி விடுபவர்களும் உண்டு. உக்கிரத்துடன் அனல் பிழம்பாக ஆவேசம் கொண்டு அடிதடியில் இறங்கி விடுபவர்களும் உண்டு.

ஆத்திரம் அறிவை அடக்கி ஆட்சி செய்கிறபொழுது, அங்கே விதியும், நீதியும், நியாயமும் எடுபடாமல் போய்விடும். அந்த ஒரு சூழ்நிலை தோன்றாமல், விளையாட்டுப் பெருமகனாய் விதிகளுக்கடங்கி ஒழுகும் திருமகனாய் ஒவ்வொருவரும் திகழ வேண்டும்.

ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளுக்கு மாறாமல் எப்பொழுதும் நடந்து கொள்ள வேண்டும் என்ற முதல் பாடத்தை முழுதும் உணர்ந்து ஒழுகிட வேண்டும் என்று கூறி, இனி, பாடிச் செல்பவர் எவ்வாறெல்லாம் எதிர்க் குழுவினர் நிற்கும் பகுதியில் பாடிப்போய் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும் என்று ஒரு சில முக்கியக் குறிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.

1. பாடிச் செல்லும் ஆட்டக்காரர் எவ்வாறெல்லாம் சாதுர்யமாக நடந்துகொள்ள வேண்டும் என்று திட்டமான ஆட்ட முறைகள் இல்லை என்றாலும், எதிர்க்குழுவில் உள்ள ஆட்டக்காரர்களின் திறமையையும் அவர்களது அனுபவம் வாய்ந்த பிடிக்கும் திறமையையும் பொறுத்தே அமைந்திருக்கிறது. இந்த நேரத்தில் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பாடிச் செல்பவர் நடந்துகொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார். அதற்கு அவருக்கு முன் உணரும் அறிவு, சமயோசிதப் புத்தி, மற்றவர்களின் இயக்கங்களைப் பார்த்ததும் அவர்கள் யுக்தியைப் புரிந்து கொள்கின்ற சக்தி நிறையத் தேவைப்படுகிறது. தந்திரமும், அதை நேரங்காலம் அறிந்து செயல்படும் வல்லமையும், பாடிச்செல்பவருக்குத் தேவைப்படும் தலையாய குணங்களாகும்.

2. பாடிச் செல்பவர் எதிர்ப்பகுதியில் நுழைந்த வுடனே எதிராளிகள் – எப்படி அவர்கள் நடந்து கொள்கின்றார்கள், எப்படி சமாளிக்கின்றார்கள், எவ்வாறு தன்னை வளைக்கத் திட்டமிடுகின்றார்கள் என்பதைக் கண்டறிந்து, ஒரு சில விநாடிகளுக்குள் தனது யூகம் சரிதானா என்பதையும் உணர்ந்துகொண்டு, அதற்கு ஏற்றபடி, அதனை சமாளிக்கும் வகையில் சாகசமாகப் பாடிச் செல்ல வேண்டும்.

3. எதிர்க்குழு ஆட்டக்காரர்களைப்பற்றி முன் கூட்டியே தெரிந்தால் எளிதாக ஆடிவிடலாம். அவர்களது ஆட்ட முறையைப் பற்றியும், திறமையைப் பற்றியும் தெரியாத நேரத்தில், படபடவென்று வேகமாகப் பாடிப் போகாமல், மெதுவாக ஆர அமர, அவர்களது தந்திர முறைகளை அறிந்தவாறு பாடிப் போக வேண்டும். இதற்கு மிகவும் பொறுமையும், மிதமான போக்கும் வேண்டும். இவ்வாறு ஒரிருமுறை பாடிப் போய் வரும்பொழுது, எதிர்க்குழுவின் பிடிமுறை களையும், குழு ஒற்றுமையின் தந்திரப் போக்கினையும் தெரிந்துகொள்ள முடியும் என்பதால், ஆரம்பத்திலே அவசரப்பட்டு, பாடிப்போய் சிக்கிக்கொள்ளாமல் ஆட வேண்டும்.

4. இதற்கிடையில் ஒவ்வொரு முறை பாடிப் போய் வந்தவரும் தங்களது அனுபவத்தை கண் சாடையின் மூலமும், கை சைகையின் மூலமும் உணர்த்திக் கொள்வதால், எப்படி அவர்களை அணுகினால் எந்த வழியில் எளிதாக வெளியேற்றிட முடியும் என்ற ஒர் உண்மை நிலைமையையும் அறிந்துகொள்ள முடியும்.

5. ஆகவே பாடத் தொடங்குபவர், நடுக்கோட்டில் வந்து நின்றபிறகு, எதிராட்டக்காரர்கள் எங்கெங்கே நிற்கின்றார்கள் என்கிற ஆடும் இடத்தைத் (Position) தெரிந்துகொண்டு, அவர்கள் எவ்வாறு சேர்ந்து நெருங்கி வருகின்றார்கள் என்பதையும் புரிந்துகொண்டு, பாடத் தொடங்கி, நேராக மையப் பகுதிக்குப் போகாமல், பக்க எல்லைக் கோட்டோரமாகச் சென்றுவிட வேண்டும். நேராக மைய ஆடுகளப் பகுதிக்குச் சென்றுவிட்டால், ஒரு புறம் திரும்பிப் பார்ப்பதற்குள் மறுபுறமாக எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்டு பிடித்துவிட ஏதுவாகிவிடும் என்பதால், எதிரி எல்லைக்குள்ளே நுழையும்பொழுதே, ஒர் ஒரமாகச் (One Side) செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொண்டு போக வேண்டும்.

6. ஓர் ஒரமாகச் சென்றாலும், அதே இடத்தில் நின்று நேரத்தை வீணாக்கக்கூடாது. பாடியபடி ஒரே இடத்தில் நின்றால், ‘தம்’ கட்ட முடியாது என்பது ஒன்று. அத்துடன் முடிவெடுத்திட முடியாமல், முன்னேறிப் போகாமல் இருந்தால், அங்குமிங்கும் பாடிப் போகின்ற வேகமும், பிறரைத் தொடுகின்ற முயற்சியும் இல்லாமல் போவதுடன், பத்திரமாகத் திரும்பிவர இயலாத சோர்வு நிலையும் உண்டாகிவிடும். அதனால், ஒரு ஒரமாக பாடத் தொடங்கியவுடனே எங்கே போக வேண்டும், எப்படி நுழைய வேண்டும், அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவினை எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. இவ்வாறு அறிந்து கொண்டவுடன், எதிராளிகளைத் தொட முயற்சிக்கும்பொழுது, தான் நிற்கும் இடத்திற்கும் நடுக்கோட்டிற்கும் இடையில் எவ்வளவு துரம் இருக்கிறது என்பதையும் கணக்கிட்டு அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், எதிராளி பிடித்துவிட்டால், உடனே நடுக்கோட்டைத் தொட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் என்பது ஒரு வழி. அதோடு எதிராளிகளைக் கடைக்கோட்டருகே போய் நிற்காமல், நடுக்கோடு பக்கமாக இழுத்துக்கொண்டு வரத்தக்க சூழ்நிலையை உண்டாக்கி, பாடியவாறு பாவனை செய்துகொண்டு வந்தால், திடீரென்று தாக்கி எதிராளிகளைத் தொட்டுவிடும் வாய்ப்பும் நேரிடும்.

8. பாடிச் செல்லும்போதே, எதிர்க்குழுவில் நன்றாக ஆடத் தெரியாதவர், பலவீனமான ஆட்டக்காரர் யார் என்பதை அறிந்து, அவரைத் தொடும் முறை எவ்வாறு என்பதையும் உணர்ந்து முடிவெடுத்துக்கொண்டு, அதற்கேற்றவாறு முன்னேறிச் செல்ல வேண்டும். அப்படிப் போகும்பொழுது அநாவசியமாக அலைவதோ, வீணாகக் குதிப்பதோ, விவரமறியாமல் தடுமாறி நடப்பதோ இல்லாமல், தொடும் தந்திர முறையைக் கச்சிதமாகப் பயன்படுத்த வேண்டும்.

அப்படி எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும், வெற்றி தரத்தக்க முயற்சியாக, பலனளிக்கும் செயலாக மலர்ந்திட வேண்டும். அந்த பலவீனமான ஆட்டக்காரர் தன்னை வந்து பிடித்துவிட வேண்டும் என்ற பேராசையை ஊட்டிவிட்டு, தொட்டுவிட்டு வந்துவிட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், வலிமையுள்ள எதிரியிடம் போய் வசமாக சிக்கிக்கொள்ளக்கூடாது. எப்பொழுதும் பலவீனமான ஆட்டக்காரரையே குறிபார்த்துப் போக வேண்டும். அதாவது கோழிக்குஞ்சைப் பார்க்கும் கருடன் போல.

9. பாடிச் செல்பவர் தந்திரமாக, பதுங்கியும் பாய்ந்து போக வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தோம். அதாவது ஒருவரை நோக்கிப் போவதுபோல் செல்லும்பொழுது, மற்றவர்கள் நம்பக்கம் எங்கே அவர் வரப்போகிறார் என்று அசட்டையாகவும், அலட்சிய மாகவும் இருக்கின்ற எண்ணத்தை ஊட்டிவிட்டு, அந்த நேரத்தில் இவர்கள் பக்கம் தாவிப் பாய்ந்து தொட்டுவிட்டு ஒடி விடுகின்ற சாதுர்யத்தைக் கொண்டு இலங்க வேண்டும்.

இதுபோல், ஒரு சிலரைப் பார்க்காதது போன்ற பாவனையில் இருந்தவாறு கண்காணித்து கவனித்து, பிறகு தாக்குகின்ற திறமை, எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது. விளையாடிப் பழகும்பொழுது, இந்த அரிய திறனை மனதில் நன்கு பயிரிட்டுக் கொண்டு, அடிக்கடி பயிற்சி செய்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.

10. பாடிச் செல்கின்ற ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் அவரவருக்கென்று பல திறன்கள் இயல்பாகவே இருக்கும். எப்படித் தாக்கித் தப்பித்து வருவதென்று தந்திர முறைகள் தெரிந்திருக்கும். அப்படி பல திறமைகளை வைத்திருக்கின்ற பாடிச் செல்லும் ஆட்டக்காரர்கள், ஒருமுறை பாடிப் போகும்பொழுதே, தான் கற்ற ‘வித்தைகள்’ (Tricks) அனைத்தையும் எதிராளிகளிடம் காட்டிவிட்டு வந்துவிடக்கூடாது.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தந்திர முறை என்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு விளையாடிவிட்டு வர வேண்டும். அல்லாவிடில், அவருடைய இயக்கம் இப்படித்தான் இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்துகொண்டு, வட்டம் போட்டு பிடித்துவிடுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு சூழ்நிலைக்கேற்ப தன் விளையாட்டுத் திறமையை, தொடும் ஆற்றலை வெளிக்காட்டிட வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

11. பாடிச் செல்பவர் எந்தவிதமான தந்திர முறைகளைத் தொடுவதற்காகப் பயன்படுத்தினாலும், அதனை மின்னல் வேகத்தில், எதிராளிகள் எதிர்பார்க்காத நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும். ‘செத்தவன் கையில் வெற்றிலைப்பாக்கு’ என்பது போல, சோம்பேறித்தனமாக, சொகுசாக நின்று கொண்டு தொட முயற்சித்தால், பிடிபட்டு ஆட்டத்தைவிட்டு வெளியேற நேரிடும்.

12. பல தந்திர முறைகளை அடுத்தடுத்து செய்து, பிடிக்க வருபவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது போல பாடிவிட்டு வர வேண்டும்.

13. பாடிச் செல்பவர் எக்காரணத்தை முன்னிட்டும் பயந்துவிடக் கூடாது. பயந்த ஆட்டக்காரர் பாதி வழிகூட போக முடியாது. பாடித் தொடும் கோட்டை மிதிக்க முடியாமல், திரும்பி பயந்து வந்து ஆட்டமிழக்கின்ற ஆட்டக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே, தந்திரமாக ஆடத் தெரிவதோடு, அஞ்சாமை நெஞ்சம் உள்ளவராகவும் செல்ல வேண்டும்.

அஞ்சா நெஞ்சம் என்றவுடன், ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போல, துள்ளிக் குதித்து எல்லோருடைய பிடியிலும் சிக்கிக்கொண்டு அவஸ்தைப் படுவது அல்ல. இது புத்திசாலித்தனமான வீரத் தனமாகும். பயந்து பின்வாங்குவது கோழைத்தனம். அறிவுடன் அச்சமில்லாமல், பாதுகாப்பாக விளையாடி வருவதற்குத்தான் அஞ்சா நெஞ்சம் என்று கூறுகிறோம்.

எனவே, புத்திசாலித்தனமாக, பாடிச் செல்பவர் போய், சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது, சாதுர்யமாகத் தொட்டுவிட்டு, தன் பகுதிக்குப் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும்.

ஒருமுறை தான் பிடிபட்டால், தன் குழு ஒரு ஆட்டக்காரரை இழக்கிறது என்பது மட்டுமல்ல, எதிர்க்குழு ஒரு வெற்றி எண்ணையும், அதோடு மட்டுமல்லாமல், வெளியே நிற்கும் ஒரு ஆட்டக் காரரையும் உள்ளே வர வைத்து ஆடச் செய்யும் உரிமையையும் பெற்றுவிடுகிறது. தன் குழு குறைந்திட, ஒருவர் தவறு செய்வது, தன் குழுவுக்கு நன்மை செய்வதைவிட, தீமையையே அதிகம் செய்கிறோம் என்பதை உணர்ந்து பத்திரமாகப் பாடிச் சென்று, புத்திசாலித்தனமாக விளையாடிவிட்டு வர வேண்டும். அந்த அனுபவத்தை நீங்கள் நிறைய பெற வேண்டும்.