சடுகுடு ஆட்டம்/விளையாட்டு பற்றிய முக்கிய விளக்கம்

2. விளையாட்டு பற்றிய முக்கிய விளக்கம்

1.ஆடுகளம்(Court)

13 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலமுள்ள ஆடுகளப் பகுதியானது, இரண்டு ஆடுகளப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு ஆடு களத்தைப் பிரிக்கின்ற மையக் கோட்டின் இருபுறமும் 3.5 மீட்டர் தூரத்தில் பாடித் தொடும் கோடு (Baulk Line) ஒன்று குறிக்கப்பட்டுள்ளது.

ஆடு களத்தின் பக்கக்கோட்டிலிருந்து இருபுறமும் ஒரு மீட்டர் தூரத்தில் கோடுகள் கிழிக்கப்பட்டு, ஆடுகள எல்லையை விரிவு செய்திருக்கின்றன. அந்தப் பகுதிக்குத் தொடரிடங்கள் (Lobbies) என்பது பெயராகும்.

படிமம்:Sadugudu–2.jpg

ஆடுகளத்தின் தரையானது சம தளமான, மென்மையான மண் பகுதியால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.

பெண்கள், சிறுவர்களுக்கான ஆடுகளப் பகுதியின் நீளம் 11 மீட்டர் என்றும், அகலம் 10 மீட்டர் என்றும் குறைவாக ஆக்கப்பட்டிருக்கும். ஆனால், தொடர்களின் அளவு அதே தூரத்தில்தான் குறிக்கப்பட்டிருக்கும்.

2. ஆட்டக்காரர்கள் (Players)

ஒரு குழுவிற்கு மொத்தம் 12 ஆட்டக்காரர்கள் உண்டு. அவர்களில் 7 ஆட்டக்காரர்கள் நிரந்தர ஆட்டக்காரர்கள் (Regular Players) ஆவார்கள். ஆட்டக்காரர்கள் காயம் பட்டால், மாற்றாட்டக்காரர்களை (Substitutes) மாற்றிக்கொண்டு ஆடலாம்.

இரண்டாம் பருவத்தில் அதாவது முதல் பருவம் முடிந்து, இடைவேளை நேரமும் முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்குகிற பொழுது, இரண்டு மாற்றாட்டக்காரர்களை மாற்றிக்கொள்ள அனுமதி உண்டு .

ஆட்டத் தொடக்கத்தில் 7 ஆட்டக்காரர்கள் இல்லாதபொழுது, இருக்கின்ற ஆட்டக்காரர்களை வைத்துக்கொண்டு ஆட்டத்தை ஒரு குழு தொடங்கலாம். ஆனால், இருப்பவர்கள் எல்லோரும் தொடப்பட்டோ அல்லது பிடிபட்டோ ஆட்டம் இழந்தால், அந்தக் குழுவில் உள்ள ஏழுவரும் தொடப்பட்டு ஆட்டமிழந்ததாகவே கருதப்படுவதுடன், எல்லோருக்கும் சேர்த்து ஒவ்வொரு வெற்றி எண்கள் என்று எதிர்க்குழு பெறுகின்ற நிலையும் ஏற்படும்.

ஆட்ட நேரத்தில் வர இயலாத ஆட்டக்காரர்கள், ஆட்டம் தொடங்கிய பிறகு தாமதமாக வந்து சேர்கிறபொழுது, நடுவரிடம் அறிவித்து, அவர் அனுமதி பெற்ற பிறகு, உடனே ஆட்டத்தில் சேர்ந்துக்கொண்டு ஆடத் தொடங்கலாம்.

ஒரு குழுவில் உள்ள ஏழு ஆட்டக்காரர்களுக்கும் இருந்து ஆட ஒவ்வொரு இடம் (Position) உண்டு. அதை கீழே காண்போம்.

ஆட்டக்காரர்கள் நின்றாடும் இடம்

ஆடுகளத்தின் ஒரு பகுதியில், நிற்கின்ற 7 ஆட்டக்காரர்களுக்கும் ஒவ்வொரு ஆட்ட எண் (Number) கொடுக்கப்பட்டிருக்கிறது.

1. இடப்புற முனை ஆட்டக்காரர் (Left Corner)

2. இடப்புற உள் ஆட்டக்காரர் (Left in)

3. இடப்புற காப்பாளர் (Left Cover)

4. மைய ஆட்டக்காரர் (Centre) 5.வலப்புற காப்பாளர்(Right Cover)
6. வலப்புற உள் ஆட்டக்காரர் (Right in)
7. வலப்புற முனை ஆட்டக்காரர் (Right Corner)

ஆட்டத்தின் தொடக்கத்தில் இவ்வாறு நிற்கின்ற ஆட்டக்காரர்கள், ஆட்டம் முழுவதும் அதே இடத்தில் தான் நின்றாட வேண்டும் என்பது அவசியமில்லை. ஆடும் நிலைக்கும், தேவைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு, நின்றுகொண்டு ஆடலாம். ஆகவே, கால நேரம் சூழ்நிலையை அனுசரித்து இடம் பார்த்து ஆட வேண்டும்.

3. ஆடையும் அணிகலனும்

மற்ற மேல்நாட்டு விளையாட்டுக்களைப் போல, கபாடி ஆட்டத்திற்கு விலை உயர்ந்த ஆட்ட சாதனங்களோ, பந்தோ, வலையோ, மட்டையோ எதுவும் தேவையில்லை. நல்ல சம தரையான ஆடுகளப் பரப்பும், அதைக் குறிக்கக் கோடுகளும், முடிந்தால் சுண்ணாம்பும் தேவை. அவ்வளவுதான், ஆடுவதற்கான ஆடுகளம் மிக விரைவில் தயார் ஆகிவிடும்.

ஆட்டக்காரர்களுக்கான விளையாட்டுடையானது இடுப்புக்கு மேலே பனியன், பிறகு கால் சட்டை, கட்டாயம் ஜட்டியோ அல்லது லங்கோடோ அணிந்திருக்க வேண்டியது மிக மிக முக்கியமானதாகும். இதுதான் மிகவும் குறைந்த அளவு தேவையான ஆடையாகும். கால்களுக்கு ரப்பரால் ஆன அடிப்பாகம் அமைந்த கான்வாஸ் காலணிகளும், அதற்குத் தேவையான காலுறைகளும் (Socks) விரும்பினால் போட்டுக் கொள்ளலாம். கால் சட்டையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இடுப்பில் ‘பெல்ட்’ அணிவதோ, இரும்பு வில்லையுள்ள இடைவார்களோ, கையில் தங்கம், வெள்ளி மற்றும் உலோகத்தால் ஆன மோதிரங்கள், காப்புகள் எதுவும் அணிந்து கொள்ளக்கூடாது.

அத்துடன், விரலில் நகங்கள் கட்டாயமாக எப்பொழுதும்போல் குட்டையாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். கூர் நகங்கள் ஆட்ட நேரத்தில் அனுமதிக்கப் படக் கூடாது. எண்ணெய் அல்லது பிசுபிசுப்பான திரவம் எதுவும் உடலின் மேல் தடவியிருக்கவும் கூடாது என்பதை ஆட்டக்காரர்கள் உணர்ந்து, அவசியமாகக் கடைபிடித்து ஒழுக வேண்டியது மிக மிக முக்கியமாகும்.

4. விளையாடும் முறைகள்

1. நாணயம் சுண்டுவதில் வெற்றி பெறுகிற குழு, ஆடுகளத்தின் ஒரு பகுதி வேண்டும் அல்லது முதன் முதலில் பாடிச் செல்கின்ற வாய்ப்பு வேண்டும் என்ற ஏதாவது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற உரிமையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

2. எதிர்க்குழுவின் ஆடுகளப் பகுதிக்குள்ளே பாடிச் செல்கின்ற ஆட்டக்காரர், பாடிச் செல்பவர் (Raider) என்று அழைக்கப்படுகிறார். அவரைப் பிடிக்க முயல்பவர்கள், பிடிப்பவர்கள் (Anti Raiders) என்றும் அழைக்கப் படுகிறார்கள்.

3. பாடிச் செல்பவர், மையக் கோட்டின்மீது வந்து நின்றவுடன் தெளிவாக, சத்தமாக, கபாடி கபாடி என்று தொடர்ந்து ஒரே மூச்சுடன் பாடித் தொடங்கியவாறு எதிர்க்குழு பகுதிக்குள்ளே செல்ல வேண்டும். இதற்குப் பாடுதல் (Cant) என்று பெயர்.

4. எதிர்க்குழு பகுதியிலே இருக்கும்பொழுதே பாட்டைவிட்டு விடுபவர், ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப் படுவார் (Out).

5. எதிர்க்குழு பகுதியில் குறிக்கப்பட்டுள்ள பாடித் தொடும் கோட்டைக் கடக்காமல் திரும்பி வருகிற ஆட்டக்காரர் ஆட்டமிழப்பார். யாரையாவது தொட்டு விட்டு வந்தால், அப்பொழுது பாடித்தொடும் கோட்டைக் கடந்திருக்க வேண்டும் என்பது தேவையில்லை.

6. பாடிச் செல்பவர் எத்தனை பேர்களாக இருந்தாலும் ஒரே சமயத்தில் தொட்டுவிட்டு, பாடிக் கொண்டிருக்கும் மூச்சுடன் நடுக்கோட்டை வந்து அடைந்துவிட்டால், அவர் பத்திரமாக வந்து சேர்ந்தார் என்பதுடன், தொடப்பட்ட அத்தனை பேரும் ஆட்ட மிழப்பார்கள் (Out). தொடப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெற்றி எண் என்று தொட்ட குழுவின் வெற்றி எண் பட்டியலில் குறிக்கப்படும்.

7. ஆட்ட நேரத்தில் பாடிச் செல்பவரோ, பிடிப்பவர்களோ ஆடுகள எல்லையை விட்டு வெளியே சென்றால், வெளியில் சென்றவர்கள் ஆட்டமிழப்பார்கள் (Out).

8. பாடிச் செல்பவர்களும் பிடிப்பவர்களும் பிடித்து இழுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுது தொடர் இடங்கள் பயன்படுகின்றன. போராட்டம் முடிந்த பிறகு, அதில் ஈடுபட்ட ஆட்டக்காரர்கள், தொடர் இடம் வழியாக நடந்து, தங்களது ஆடுகளப் பகுதிக்குள் சென்று கொள்ளலாம். 9. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குழு ஒருவர் மாற்றி ஒருவர் என்று பாடிச் செல்ல, ஒருவரை உடனடியாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது ஆட்டம் முடியும் வரை.

10. எதிராட்டக்காரரை வேண்டுமென்றே யாராவது பிடித்துத் தள்ளினால், பிடித்துத் தள்ளிய ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார். வெளியே சென்ற ஆட்டக்காரர் ஆட்டமிழக்க மாட்டார்.

11. எதிர்க்குழுவினரான ஏழு பேர்களையும் ஒரு குழு ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றிவிட்டால், கடைசியாக வெளியேற்றிய ஆட்டக்காரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெற்றி எண்களைத் தந்து, அதற்கும் மேலாக லோனா என்று சிறப்புத் தகுதி தந்து, அதற்காக 2 வெற்றி எண்களைப் பரிசாகவும் அளிக்கிறது.

12. ஒரு ஆட்டக்காரரை வெளியேற்றினால், ஒரு வெற்றி எண் கிடைக்கும்.

13. ஆட்டத்தின் மொத்த நேரம் 40 நிமிடங்கள். ஒரு ஆட்ட நேரப்பகுதிக்கு 20 நிமிடங்கள் என்று இரண்டு ஆட்ட நேரப்பகுதிகள் உண்டு. இரண்டு பகுதிக்கும் இடைவேளை நேரம் என்று ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

14. ஆட்டத்திலிருந்து, வெளியேற்றப்பட்டு ஆட்டம் இழந்தவர்கள், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட, உட்காரும் கட்டத்தில் (Sitting Block) போய் வரிசை முறையில் உட்கார்ந்துகொள்ள வேண்டும்.

15. அவர்கள் மீண்டும் உள்ளே சென்று ஆட வாய்ப்பு வரும் வரை அங்கிருந்து, எதிர்க் குழுவினர் வெளியேற்றப்படும்பொழுது, உள்ளே சென்று ஆடிடத் தயாராக இருக்க வேண்டும்.

கபாடி ஆட்டத்தின் முக்கிய ஆட்ட முறையின் விளக்கத்தை இதுவரை அறிந்து கொண்டோம்.

பங்கு கொள்கின்ற ஆட்டக்காரர்களின் உடல் நலத்தை, சுறுசுறுப்பை, மன உறுதியை, தைரியத்தை, முன்னுணரும் சாதுரியத்தை வளர்த்து விடுவதில் வல்லமை பொருந்தியதாக கபாடி ஆட்டம் விளங்கி வருவதால், இளைஞர்களையும், சிறுவர் சிறுமிகளையும் மிக எளிதாகத் தன் பக்கம் கவர்ந்துகொண்டு, அதிக வேகமாக, அற்புதமாக வளர்ந்து வருகிறது.

சிறந்த பொழுது போக்கு ஆட்டமாகவும், மனக்களிப்பினை மிகுதிப்படுத்தும் ஆட்டமாகவும் திகழ்கின்ற கபாடி ஆட்டத்தை, பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் ஆடக்கூடிய இனிய முறைகளை அடுத்த பகுதியில் காண்போம்.