சடுகுடு ஆட்டம்/வரலாறும் வளர்ச்சியும்

1. வரலாறும் வளர்ச்சியும்

ந்திய நாட்டின் விளையாட்டுக்களில் இடம் பெற்றிருக்கும் கூடி விளையாடும் குழு ஆட்டங்களில், சடுகுடு (கபாடியானது) ஆட்டமானது முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஏனெனில், வரலாற்றுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பதுடன், மிகப் பழமையான வரலாற்றைத் தழுவிய கற்பனை யூகப் பின்னணியுடன் திகழ்வதும், பல காரணங்களில் ஒன்றாகும்.

இந்திய நாட்டின் பல பகுதிகள், சடுகுடு (கபாடி) ஆட்டம் எங்கள் பகுதியில்தான் முதலில் தோன்றியது என்று பெருமை பேசி உரிமை கொண்டாடுகின்றனர் என்றாலும், வரைமுறையான விளக்கங்களோ சான்றுகளோ தர இயலாத தன்மையில் ஒதுங்கி நின்று

விடுகின்றபோது, ஆட்டத்தின் உரிய வரலாறு என்ன என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் போவதால், சடுகுடு ஆட்டம் இப்படித்தான் தொடங்கப் பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கின்ற அளவில்தான் நம்மை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்றன.

ஏதோ ஒரு இடத்தில் இந்த ஆட்டம் தோன்றியிருக்க வேண்டும். பின்னர், நாளாக நாளாக அது எல்லா பகுதிகளுக்கும் பரவி, எல்லாவிதமான கலாச்சாரம் பண்பாடுகள் நிறைந்தவர்களுக்கிடையே விரும்பி ஆடப்படுகின்ற ஆட்டமாக வளர்ந்து, சிறப்புற ஆடப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கான பேச்சுக்களும் இருக்கத்தான் இருக்கின்றன.

கிராமப்புறங்களில் வாழும் மக்கள், முழுக்க முழுக்க இந்த ஆட்டத்தில் ஈடுபாடு காட்டி ஆடி மகிழ்ந்தது போலவே, நாகரிகம் பரவிய நகரத்தில் வாழ்ந்த மக்களும் கூட விளையாடி மகிழ்ந்தனர் என்று அறியும்பொழுது, சடுகுடு (கபாடி) ஆட்டம் எல்லா நிலை மக்களையும் ஈர்க்கும் சக்தி வாய்ந்த ஒர் இனிய ஆட்டமாகவே பிறப்பெடுத்து பெருகி வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்கிறோம்.

எந்தவிதமான விதியமைப்போ, ஆட்ட முறைகளோ இல்லாமல், ‘எடுப்பார் கைப்பிள்ளை போல’, விளையாட விரும்பியவர்களின் சந்தர்ப்ப சாகச சதிகளுக்கு ஏற்றாற்போல வளைந்து, நெளிந்து, நெகிழ்ந்து கொடுத்தல்லவோ காலங்காலமாக இது வளர்ந்து வந்திருக்கிறது.

விரும்பியவர்களுக்கேற்ப விதிகளும், விளையாடும் முறைகளும் வளைந்தது போலவே, விளையாட்டின்

பெயரும் இடத்திற்கேற்ப, மொழிக்கேற்ப, சூழ்நிலைக் கேற்ப ஆட்டம் மாறிமாறியே வந்திருக்கிறது.

குடுகுடு என்றும், சடுகுடு என்றும், ஹமாமா அல்லது கம்பாரி (Hamama or Humbari) என்னும் அழைக்கப்பட்ட இந்த ஆட்டத்திற்கு, இந்தியாவின் முக்கிய பிரதேசங்களில் பலதரப்பட்ட பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

பெயரும் பிரதேசங்களும்

டூ டூ (Do Do) அல்லது குடூ – டூ – டூ என்று வங்காளத்தில் வழங்கப்பட்டது.

குடுடு (Kutuu) என்று மகாராஷ்டிர மாநிலம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.

சடுகுடு என்று தமிழகத்திலும், மைசூர் பகுதியிலும் பெயர் பெற்றிருக்கிறது.

பலீஞ்சபனம் என்பதாக ஆந்திரப் பிரதேசத்தினர் இதை அழைத்து ஆடினர்.

பாடி பாடி (Bhadi–Bhadi) என்பதாக கத்திவாட், கட்சு மக்கள் இதை குறிப்பிட்டு ஆடியிருக்கின்றனர்.

வண்டிகளி (Wandikali) என்பதாக கேரள நாட்டில் அழைக்கப்பட்டிருக்கிறது.

ஜபார்ககானா (Zabar Gagana) என்பதாகவும், சாஞ்சி பக்கி (Sanchi – Pakki) என்பதாகவும் பல திருநாமங்களில் பஞ்சாப் மாநிலத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆடப்பட்டு வந்திருக்கிறது.

ஆற்றின் பெயர்கள் பலவாறாக இருந்தாலும், நீரின் தன்மை ஒன்றே என்பது போல, ஆட்டத்தின் பெயர்கள் பலவாக விளங்கினாலும், ஆட்டத்தின் அடிப்படைத் தன்மை ஒன்றாக இருந்ததால்தான், வரலாற்றுக்கு முற்பட்ட தோற்றம் பெற்றிருந்தாலும், ஒரு சிறிதும் மங்காது மறையாது, மக்களுடன் மக்களாக வழக்குடன் வழக்காக தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது; வருகிறது.

இயற்கையின் எழில்மிகு தோற்றம் போல, மக்கள் மனதிலும் செயலிலும் பரிணமித்து, பிரபலமாக பயன்பட்டுக் கொண்டே வந்தது; வருகிறது.

தோற்றமும் யூகமும்

பெயர் பெற்ற ஆட்டமான சடுகுடு (கபாடி) எப்படி தோன்றியது என்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டால், இது ஒரு மிகப் பழங்கால ஆட்டம், வரலாற்றுக்கு முற்பட்ட ஆட்டம் என்றே கூறலாம். நதி மூலம், ரிஷி மூலம் காண முடியாதது போல, சடுகுடு ஆட்டத்தின் தோற்றத்தையும் காண முடியாது என்று பலர் கூறுவதையும், வரலாற்றுச் சான்றுகள் அல்லது குறிப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தால், ‘திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி இளைத்தேன்’ என்பது போலத்தான் முயற்சியும் அமைந்துவிட்டிருக்கிறது.

வரலாறு எழுதும் பழக்கமில்லாத இந்தியர்களின் இயல்பினால், எத்தனையோ பல சுவையான, முக்கியமான கலைகள் மறைந்து அழிந்தது போலவே, விளையாட்டுக் கலையும் வீறுபெற்று விளங்க முடியாமற் போய்விட்டது. ‘இப்படித்தான் உருவானது’ என்று உரைத்திட முடியாமல், ‘இப்படித்தான்

தோன்றியிருக்கும்’ என்று ஊகத்திற்கு முதலிடம் கொடுத்து நம் சிந்தனையாளர்கள் பலர் செயல்பட்ட பொழுது, ஒரு சில கருத்துக்கள் உதித்தன. அவற்றை ஆங்காங்கே அவர்கள் குறித்துச் சென்றிருக்கிறார்கள்.

விளையாட்டுக்களின் தோற்றத்தைப் பற்றியும், விளையாட்டுக்களைப் பற்றிய விளக்கங்கள் தருகின்ற பொழுதும், உலகெங்கிலும் ஒரே ஒரு கருத்து மட்டும் தெளிவாக விளக்கப்படுகின்றது. “விளையாட்டுக்கள் எல்லாம் குழந்தைகளை எதிர்கால வாழ்க்கைக்குத் தயார் செய்கின்ற வண்ணத்திலேதான் அமைந்திருக்கின்றன” என்பதுதான் அந்தப் பொதுக் கருத்தாகும்.

ஆயத்தப்படுத்திய ஆட்டம்!

இந்தியாவில் பண்டைய சூழ்நிலையில், போர்கள் அடிக்கடி நடைபெற்று வந்த நாட்களில், மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபடும் போர்களில் புகுந்து போரிடத் தயாராக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்து வந்ததால், எல்லோரும் தங்களைத் தாங்களே தகுந்த முறையில் தயார் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையில் வாழ்ந்தனர். அதற்காக, சிறுவர்களை இளம் வயதிலேயே பழக்கிவிடவும் வேண்டியிருந்தது. இத்தகைய போராட்ட வாழ்க்கைக்குத் தளம் அமைப்பது போல, சடுகுடு ஆட்டம் அந்நாளில் உதவியிருக்கிறது என்பாரும் உண்டு.

எதிரிகள் இடையே புகுந்து, அவர்களது அணியை அதிரடித்துவிட்டு வெற்றியுடன் திரும்பி வருவதுதானே போரிடும் முறை. இந்த வீரச் செய்கைக்கு விளை நிலமாகத்தான் சடுகுடு ஆட்டம் அமைந்திருக்கிறது.

சடுகுடு ஆட்டத்தில் பாடிச் செல்லும் ஒருவர் எதிராட்டக்காரர் ஆயத்தமாக இருக்கும் பகுதிக்குள்ளே புகுந்து எதிரிகளைத் தாக்கவும், தொடவும், அதிலிருந்து தப்பித்து வரவும் வேண்டும். எதிரிகள் பலர் என்கிற பொழுது, பிடிபடாமல் தப்பித்துப் பாதுகாப்பாகத் திரும்பி வருவதற்குப் பலமும், சக்தியும் வேண்டு மல்லவா?

இதற்காக, அந்த ஆட்டக்காரர் உடலில் பலத்தையும், உள்ளத்தில் அஞ்சாமையையும், சக்தியை அதிகம் செலவழிக்காமல் சாகசமாக வெற்றி பெறுகின்ற விந்தைமிகு திறன்களையும் பெற்றிருந்தால்தான், ஆட்டத்தில் அவர் புகழ்பெற முடியும். அப்படி ஒர் ஆற்றல்மிகு, ஆண்மை நிறை வாழ்க்கையை குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காகச் சடுகுடு என்னும் கபாடி ஆட்டம் இந்தியாவில் தோன்றியிருக்க வேண்டும் என்று ஒரு சிலர் ஊகிக்கின்றனர்.

ஓய்வும் உல்லாசமும் தரும் ஆட்டம்!

போர்க் களங்களில் போராட்டப் பயிற்சி கொடுப்பதற்காக மட்டுமல்லாது, ஒய்வு நேரங்களில் உல்லாசமாக பொழுதைப் போக்கவும், வாழ்க்கைப் பிரச்சினைகளை விலக்கி உதறிவிட்டு மன அமைதியும், பெரும் திருப்தியும் காண்பதற்காகவும், சடுகுடு ஆட்டம் உதவியது என்று கூறுவாரும் உண்டு.

கிராமப்புறங்களில் அடிக்கடி தேர் திருவிழாக்கள், பண்டிகைகள் நடைபெறுவது இயற்கையல்லவா! அந்த மகிழ்ச்சி பொங்கும் நன்னாளில், இளைஞர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு உரையாடுவதும், கலந்து விளையாடுவதும் இயற்கையல்லவா! அப்பொழுது நட்புறவு

கொண்ட இளைஞர்களுக்குள்ளே மகிழ்ச்சியை மிகைப் படுத்திக் காட்டவும், அன்பு போராட்டம் என்பதாக தங்கள் ஆண்மையை பிறருக்கு வெளிப்படுத்திக் காட்டவும், சடுகுடு ஆட்டத்தை ஆடியிருக்கின்றனர். இந்த வழக்கம் பரம்பரை பரம்பரையாகத் தொன்றுதொட்டு காலங்காலமாக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.

கிராமச் சூழ்நிலையில் இப்படி ஒர் ஆட்டம் இளைஞர்களையும் பெரியோர்களையும் ஒன்றாக இணைக்கின்ற அற்புத நேரமாகவும், ஆனந்த பாலமாகவும் அமைந்துவிட்டிருக்கிறது. ஆகவே, விழாக்கால விளையாட்டாக சடுகுடு ஆட்டத்தை பகல் இரவு பாராது ஆடியிருக்கின்றனர் என்பதாகச் சுட்டி காட்டுபவர்களும் உண்டு.

மல்யுத்தத்தின் மடியிலே மலர்ந்தது!

இந்திய நாட்டில் மல்யுத்தம் சிறப்பான இடத்தை அந்நாளில் இருந்தே வகித்து வந்திருக்கிறது. உலக வெற்றி வீரராக இரண்டு முறை வந்த காமா பயில்வான் என்பவர், இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கொடிகட்டிப் பறக்கும் வண்ணம் செயற்கரிய சேவை செய்தவராவார். ஆதி காலந்தொட்டே மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களில் பவனி வரும் கதாநாயகர்கள் எல்லாம், மல்யுத்தத்திலே மாபெரும் வல்லமை பெற்றவர்களாகவே விளங்கி வந்திருக்கின்றார்கள்.

மகாபாரதத்திலே வரும் பீமன், துரியோதனன், பலராமன், கம்சன் போன்றவர்கள் எல்லோரும் மல்யுத்தத்தில் வல்லுநர்கள், இராமாணத்தில் வரும் வாலி,

சுக்ரீவன் துவந்த யுத்தம் பெயர் போன மல்யுத்தமாகும். ஆகவே, மல்யுத்தம் என்பது பாரதத்தின் வீர பாரம்பரியத்தைப் பறைசாற்றுவதாகவும் அமைந்திருக்கிறது.

இக்கருத்தினை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு, சடுகுடு ஆட்டம் மல்யுத்தத்தின் வழிமரபுச் செயலாக, முன்னோடி விளையாட்டாக மாறி மருவி வந்திருக்க வேண்டும் என்றும், சிலர் அபிப்பிராயப்படுகின்றார்கள். ஏனெனில், மல்யுத்தத்திலே தனி மனிதன் திறமைக்கும், தேக பலத்திற்கும்தான் முதலிடமும் முக்கியத்துவமும் உண்டு. எதிரியை முதுகு மண்பட அழுத்திக் காட்டும் ஆண்மையே மேன்மைமிகு செயலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால், தனி மனித ஆற்றலுக்கு மல்யுத்தம் சாலச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அதுபோலவே, சடுகுடு ஆட்டத்திலும் தனிமனிதன் ஆட்சியும், ஆண்மைப் போராட்டமும் முக்கிய இடம் பெற்றிருப்பதையும் நடைமுறையில் நாம் கண்கூடாகக் காண்கிறோம். மல்யுத்தத்தில் தேவைப்படுகின்ற தேகபலம் (Strength), விரைவான சுறுசுறுப்பு (Agility), எச்சரிக்கை நிறைந்த விழிப்புணர்ச்சி (Alertness), சடுகுடு ஆட்டத்திலும் நிறைய தேவைப்படுகின்றது என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

அத்துடன்கூட மணற்பகுதியான திடலில்தான் மல்யுத்தம் நடைபெற்றது போலவே, சடுகுடு ஆட்டமும் நடைபெற்று வந்ததால், மல்யுத்தத்திற்கான முன்னோடி விளையாட்டாக, ஆயத்தப் பயிற்சியாக, சிறுவர்கள் இந்த சடுகுடு ஆட்டத்தை விளையாடியிருக்க வேண்டும் என்று விளக்கம் தருபவர்களும் உண்டு.

சிறுவர்களுக்கு வாழ்க்கையை விளக்கும் வகையில் அமைந்தது என்றும், விழாக்கால வேடிக்கை நாட்களில் வாலிபர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்திக் காட்டும் வீறு பெற்ற செயல்முறையாக விளங்கியது என்றும், துவந்த யுத்தம் செய்கின்ற மல்யுத்தத்தின் முன்னோடிப் பயிற்சியாக இருந்திருக்கலாம் என்றும், சிறுவர்களை முன் வைத்தே சடுகுடு ஆட்டத்தின் தொடக்கத்திற்கும், தோற்றத்திற்கும் உருவகமாக பலர் அமைத்திருக்கின்றனர். அத்துடன், இது கிராமப்புறத்தில்தான் அதிகமாக இடம் பெற்றிருந்தது என்பதால், இப்படியும் அமைய நேர்ந்திருக்கலாம் என்பதாக என் கருத்தை இங்கு கூறியிருக்கிறேன்.

வயல் வெளியில் செயல் முடிவில்!

(சடுகுடு ஆட்டம் பழமை மிகுந்த ஆட்டம், கிராமப்புறங்களில்தான் தோன்றியிருக்கலாம் என்கிற பொதுக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு என் கருத்தை இங்கே கூறியிருக்கிறேன்.)

“பழங்காலத்தில் கிராமச் சிறுவர்கள் ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு வயற்வெளிப் பக்கம் சென்றிருக்கும் பொழுது, இந்த நிகழ்ச்சி நடந்திருக்க வாய்ப்புண்டு. மாடு மேய்க்கும் சிறுவர்களில் ஒருவன் ஏதாவது தின்பண்டம் தன்னிடம் வைத்திருக்கலாம். அதை ஒருவன் கேட்க, அவன் திமிறிக்கொண்டு ஒட, இவன் குடுடா, குடுடா என்று கேட்டுக்கொண்டே ஒடியிருக்கலாம்.

பண்டம் கேட்டவனும் விடாப்பிடியாகக் கத்திக் கொண்டே ஓடியது மற்றவர்களுக்கு வேடிக்கையாகவும் இருந்திருக்கலாம். இவ்வாறு கத்திக்கொண்டே ஓடி விரட்டியவன் நெடுந்துாரம் ஓடாமல், ஒரு குறுகிய

எல்லைக்குள்ளே அவனைத் தொட்டுவிடுவதாக சொல்லியிருக்கலாம். அதேபோல் குறுகிய எல்லைக்குள்ளே அவன் ஒடவும், இவன் கத்திக்கொண்டே விரட்டுவதாகவும் அமைந்திருக்கலாம். குறிப்பிட்ட எல்லை அமைந்த பிறகு, அவர்களின் கற்பனையும் வளர்ந்திருக்கலாம்.

இவ்வாறு வயற்வெளிகளிலும், காட்டு வெளிகளிலும் ஆடிய வேடிக்கை விளையாட்டு, இரவு நேரங்களில் பலபேர் சேர்ந்து பாரி ஆட்டம் போல ஆட முயற்சித்திருக்கலாம். இப்படியாக பல நிலைகளில் உருவெடுத்து, இறுதியில் சடுகுடு ஆட்டம் என்பதாக உருமாறியிருக்கலாம்.

சடுகுடு ஆட்டம் எவ்வாறு உருவானது என்பதற்காக வரைமுறையான வரலாறு கிடையாது. எல்லாம் ஒரு சிறு வரலாற்றுப் பின்னணியை வைத்துக்கொண்டு, அதன்மேல் ஆராய்ச்சிக் கோபுரம் அமைக்கின்ற பாங்கிலேதான் அமைந்திருக்கிறது.

இலக்கியத்தில் ஒரு குறிப்பு!

சடுகுடு என்ற சொல் வழக்கு எப்படி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்னும் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றது ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம் தரும் குறிப்பொன்று.

தொல்காப்பியத்தில் வருகின்ற ஈரடிகளைக் கொண்டு இங்கு ஆராய்வோம்.

மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்து
கொற்றவை நிலையும் அகத்தினை புறனே.”

கொற்றவை என்பவள் காளி. துடி என்பது மேளத்தைக் குறிப்பது. அந்தத் துடி வகையில் சிறிய மேளம் போன்றவற்றைக் குறிக்க சடுகுடுக்கை, குடுகுடுப்பை என்னும் பெயர்கள் உண்டு.

காளிக்குப் பலியிடும்பொழுது, சடுகுடுக்கை அல்லது குடுகுடுப்பை என்ற பறை ஒலி எழுப்பி வருவது பண்டைய தமிழர் மரபு என்பதாகவும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

பண்டைய வீரர்கள் ஏன் காளிக்கு பலி கொடுத்தார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

பண்டைத் தமிழ் அரசர்களின் போர் முறையே பேரதிசயம் நிறைந்தவை. நீதிக்குப் புறம்போகாத நெஞ்சழுத்தம் நிறைந்தவர்கள். ஆகவே, அவர்களின் அறநெறிப் போர் முறைகளில் போரை நேரடியாகத் தொடங்குமுன், எதிரி அரசனின் ஆடுமாடுகள் அடங்கிய நிரைகளைக் கவர்ந்துவரச் சொல்வது வழக்கம்.

இவ்வாறு எதிரி அரசனின் நிரைகளைக் கவர்ந்து வருவதை வெட்சி என்பார்கள். கவர்ந்து சென்ற நிரைகளை மீட்டுக் கொண்டு வருவதை கரந்தை என்பார்கள்.

நிறைகளைக் கவர வரும்போது அல்லது நிரைகளை மீட்கப் போகும்பொழுது நிச்சயம் போர் நிகழத்தான் செய்யும். அவ்வாறு நிகழ்கின்ற போரில், தங்களுக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என்று காளிதேவிக்குப் பலிகொடுப்பார்கள் வீரர்கள். அந்த முறையே பலி சடுகுடு என்று மாறி, மருவி வந்திருக்கலாம் என்று அபிப்பிராயப்படுகின்றார்கள் வல்லுநர்கள்.

வெட்சி வீரர்கள் ஒருபுறம். கரந்தை வீரர்கள் மறுபுறம். எதிரெதிராக எல்லைக் கோட்டை மத்தியில் வைத்தபடி அவர்கள் நின்று ஒருவரை ஒருவர் பிடித்துத் தங்கள் எல்லைக்குள் இழுக்க, மற்றவர்கள் திமிறிக் கொண்டு தங்கள் எல்லைக்குள் வந்துவிடப் போரிடுகின்ற போர் முறையிலேதான் ஊர்ப்பகுதியில் சடுகுடு ஆட்டம் தோன்றியிருக்க வேண்டும்.

ஏனெனில், போர் நிகழ்ச்சிகள்தான் தற்கால விளையாட்டுக்களின் முன்னோடிகளாக அமைந்திருக்கின்றன என்பது கண் கூடு. சான்றுக்கு பல போட்டி நிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறோம் பாருங்கள். வில்வித்தை, குதிரை ஏற்றம், வேலெறிதல், குத்துச் சண்டை, இருவர் போரிடும் மல் யுத்தம், தட்டெறிதல், நெடுந்தூரம் ஓடுதல், தாண்டிக் குதித்தல், கவண் கல் எறிதல் போன்ற அத்தனை போர்ச் செயல் முறைகளும் இன்று காலப்போக்கில் மாறி, வண்மை தவிர்த்து மென்மையாக மாறி, மனிதகுல ஒற்றுமைக்கும் பங்கு பெறுவோரின் உடல் நலத்திற்கும், மன மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக அமைந்து விட்டிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.

இவ்வாறே, போர்க் காலத்தில் நிகழ்ந்த ’எதிரிகளைப் பிடித்துத் தப்பித்து வந்த நிகழ்ச்சி’ சிறுவர்களை எதிர்கால வீரர்களாக மாற்றி, ஆயத்தப் பயிற்சியாக மாறி வந்திருக்கலாம் என்ற எண்ணத்திற்கு, சடுகுடு ஆட்டத்தில் இருக்கும் மூச்சடக்கிப் போடும் முறையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகவே அமைந்துள்ளது.

தற்காப்புக் கலைக்காகத் தோன்றியது!

இந்திய விளையாட்டுத் துறையில் உள்ள விளையாட்டுக்கள் எல்லாம் தனி மனிதன் பலத்தை

வெளிப்படுத்த மட்டுமல்லாது, தற்காப்புக் கலையாகவும் பயன்பட்டிருக்கின்றன. இக்கட்டான நேரங்களில் எப்படி அந்த இன்னல் சூழ்நிலையிலிருந்து விடுபடுவது என்பதும் கற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஒருவர் தனது மூச்சினை எவ்வளவு நேரம் உள்ளடக்கித் தம் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீரில் மூழ்கிக் கொண்டு பார்ப்பது ஒரு வகை நிகழ்ச்சியாக இருப்பது போல, நிலத்திலும் இந்த முறை இனிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. ஒருவரின் உடல் திறனுக்கு ஏற்பவே, மூச்சை உள்ளடக்கும் சக்தியும் இருக்கும் என்ற நம்பிக்கையை முற்கால மக்கள் வளர்த்துக் கொண்டிருந்தனர்.

தம் பிடித்துக் கொண்டுப் பிறரைக் கடுமையாகத் தாக்க வேண்டும் என்ற முறைக்கேற்ப, அக்காலப் போர்முறைகள் மல்யுத்தம், குதிரையேற்றம், வேலெறிதல் முதலியவை அமைந்திருந்தன.

அதிக நேரம் மூச்சடக்கி ஆற்றலை வெளிப்படுத்துகின்ற வீரர்களே, அதிக பலத்தை உடைய சிப்பாய்களே, போரின் உயிர் நாடியாக அந்நாட்களில் விளங்கியதால், மூச்சடக்கிப் பயிற்சி பெறும் விளையாட்டினை முன்னோடிப் பயிற்சியாகக் கொண்டிருந்தார்கள் போலும்.

பாட்டும் பழக்கமும்

ஆரம்ப நாட்களில், மூச்சடக்கிக் கொண்டு பாடிப் போகும் வீரர்கள், எதாவது ஒரு பாட்டைப் பாடிப் போவார்கள். பாடத் தெரியாதவர்கள் சர் சர் என்றும், மேலும் பலர் குடுகுடு என்றும் பாடிப் போவது உண்டு.

இவ்வாறு பாடிப் போகும் குடு குடு என்ற மகாராஷ்டிரச் சொல்லுக்கு கூச்சலிடுதல் அல்லது ஒழுங்கற்ற கூட்டம் என்பது பொருளாகும்.

ஆர்வமுள்ள மக்கள் தம் ஆற்றலையும் ஆண்மையையும் கூடி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் போற்றும் வண்ணம் காட்டிவிட வேண்டும் என்ற வேகத்தில், புகழ் வெறியில் அளவுக்கு மீறி ஆடிடும் போதும், உடல் தொடர்புள்ள ஆட்டம் இது என்பதால், உணர்ச்சிப் பெருக்கின் விளைவாக விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டு விடுகின்றன என்பதாலும், இதைக் கூச்சலிடும் ஒழுங்கற்ற கூட்டம் என்று கூறினார்கள் போலும்.

இது மக்கள் விரும்பும் மக்களுக்கான ஆட்டம் என்பதால்தான், அவர்கள் அறிவுக்கேற்ப, ஆர்வத்திற்கேற்ப, ஆட்ட முறைகள், விதிகள் அனைத்தும் அவ்வப்போது அவரவர்கள் ஆசைக்கேற்ப வளைந்து கொடுத்திருக்கின்றன என்பதை சடுகுடு ஆட்ட முறைகளைக் காணும்போது நமக்குப் புலனாகின்றன. அத்தனை ஆட்ட முறைகளையும் ஆட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து, அவற்றில் முக்கியமான மூன்று ஆட்ட முறைகளை நமக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.

முக்கியமான மூன்று பிரிவுகள்

சடுகுடு ஆட்டத்தில் முக்கியமான மூன்று பிரிவு ஆட்ட முறைகள் இருந்தன. ஒன்று சஞ்சீவணி ஆட்டம் அல்லது சாகா வரம் பெற்ற ஆட்டம். இரண்டாவது: ஆடாது ஒழிதல் என்னும் காமினி ஆட்டம். மூன்றாவது: தொடர்ந்து ஆடுதல் என்னும் அமர் ஆட்டம். இனி இந்த மூன்று பிரிவு ஆட்ட முறைகளையும் இங்கு விளக்கமாகக் காண்போம்.

1. மீண்டும் ஆடுதல்(Sanjeevani Game)

ஆடுகின்ற ஆட்ட நேரத்தில் எதிராட்டக்காரர்களால் பிடிபட்டோ அல்லது தொடப்பட்டோ ஆடும் வாய்ப்பிலிருந்து வெளியேற்றப்படுகின்ற ஒர் ஆட்டக்காரர். எதிர்க் குழுவினர் ஒருவர் முன் சொன்ன முறைப்படி வெளியேற்றப்படுகின்ற சமயத்தில், மீண்டும் தன் குழுவில் சேர்ந்து ஆடுதற்குரிய வாய்ப்பினைப் பெற்று ஆடச் செய்கின்ற முறையையே சஞ்சீவணி ஆட்டம் என்று ஆடி வந்தனர்.

இறந்தவர்களை உயிரெழுப்பி விடும் ஆற்றல் சஞ்சீவி மூலிகைக்கு உண்டு என்பது இதிகாச காலந்தொட்டு வரும் நம்பிக்கையாகும். இராமன் இலக்குமணனைக் காப்பாற்ற அனுமான் சஞ்சீவி மூலிகை நிறைந்த மலையையே பெயர்த்தெடுத்து வந்ததாக இராமாயணத்தில் வரும் நிகழ்ச்சியை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுபவர், மீண்டும் ஆடுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்று உள்ளே வருவதானதும், இறந்தவர் மீண்டும் உயிர் பெற்று வருதற்கு ஒக்கும் என்பதற்காக இந்த ஆட்டம் சஞ்சீவணி ஆட்டம் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த ஆட்ட முறைதான் இப்பொழுது ஒரு சிலமாற்றங்களுடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கான விதிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணுங்கள்.

1) ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் (Out) மீண்டும் ஆடுகளத்திற்குள் வந்து ஆடலாம்.

அதாவது எதிராட்டக்காரர் ஒருவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படும்பொழுது, அவருக்கு அந்த வாய்ப்பு வருகிறது. அதுபோல, ஒவ்வொரு எதிராட்டக்காரரும் ஆட்டத்தைவிட்டு வெளியேறும்பொழுதும், வெளியே நிற்கும் தொடப்பட்டு வெளியே நிற்கிற தொட்ட குழுவைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவராக தொடப்பட்டு வெளியேறிய வரிசையின்படியே உள்ளே வந்து ஆட வேண்டும்.

2) அவ்வாறு ஆடுகளத்திற்குள் நுழைபவர்கள் கடைக் கோட்டின் வழியாகத்தான் உள்ளே வர வேண்டும்.

3) ஆட்டத்தின் மொத்த நேரம் 2 ‘முறை ஆட்டங்களாகும்’ (Innings). ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கும் 20 நிமிடங்கள் தரப்பட்டிருந்தது. போட்டியை நடத்தும் சங்கம், அவரவர்க்குரிய வசதிக்கு ஏற்றாற்போல, போட்டியில் பங்கு பெறுபவர்களின் வயதுக்கு ஏற்ப, ஆடும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். 20 நிமிடங்களை 15 நிமிடங்களாகவும் வைத்துக் கொள்ளலாம்.

2. ஆடாது ஒழிதல்(Gamini Game)

ஆட்டத்திலிருந்து தொடப்பட்டோ அல்லது பிடிபட்டோ வெளியேற்றப்படுகின்ற ஒரு ஆட்டக்காரர், அந்தக் குறிப்பிட்ட ஆட்டம் முடிவு பெறும் வரை, அந்த ஆட்டத்தில் பங்கு பெறவே முடியாமல் ஆடு களத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்க வேண்டும்.

அதாவது, அந்தக் குழுவில் உள்ள அனைவரும் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மீண்டும்

எல்லோரும் ஆடப்போகின்ற நேரத்தில்தான் உள்ளே நுழைய வேண்டும்.

இந்த ஆட்டத்தில் அசந்தர்ப்பவசமாக, ஒரு நல்ல ஆட்டக்காரர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப் பட்டுவிட்டால், அந்தக் குழுவிற்கு அது பேரிழப்பாகவே போய்விடும். அதனால், இந்த ஆட்ட முறையை பலர் ஏற்றுக் கொள்ளாமல் போய்விட்டார்கள்.

ஆடாது ஒழிதலான காமினி ஆட்டத்திற்குரியனவாக அமைந்திருந்த விதிமுறைகளையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

1) இந்த ஆட்டத்தில் 3 முறை ஆட்டங்கள் (Innings) இருந்தன. ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கும் 12 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

2) ஆடுவோரின் வயதுக்கேற்ப, போட்டி நடத்துபவர்கள் வசதிக்கேற்ப, ஆட்ட நேரத்தை 10–லிருந்து 12 நிமிடங்களாக மாற்றி அமைத்துக் கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு தரப்பட்டிருந்தது.

3. தொடர்ந்து ஆடுதல் (Amar Game)

சாகாவரம் பெற்றவரை ‘அமரர்’ என்று அழைப்பது நமது மரபாகும். அது போலவே, ஒர் ஆட்டக்காரர் தொடப்பட்டோ அல்லது பிடிபட்டோ வெளியேற்றப் பட்டாலும், அவர் ஆடுகளத்தை விட்டு வெளியே வராமல், தொடர்ந்து ஆடிக்கொண்டேயிருப்பார். ஆனால், தொடப்பட்டதற்காக அல்லது பிடிபட்டதற்காக, எதிர்க்குழுவிற்கு 1 வெற்றி எண் கிடைக்கும்.

ஆகவே, இந்த ஆட்டத்தில் பங்கு பெறுகின்ற ஆட்டக்காரர்கள் எக்காரணம் பற்றியும் வெளியே போய் நிற்கின்ற வாய்ப்பே இல்லாமல் தொடர்ந்து ஆடுகின்ற அமரர் ஆகிவிடுவதால், இதற்குத் தொடர்ந்து ஆடுதல் அல்லது அமரர் ஆட்டம் என்ற பெயர் வந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக வெற்றி எண்களைப் பெற்ற குழுவே வெற்றி பெற்றதென அறிவிக்கப்படும்.

விளையாடிய விதிமுறைகள்

1. ஒருவரை நடுவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றினாலும், (ஆட்டமிழந்தவர்) அவர் ஆட்டத்தைவிட்டு வெளியேறாமல் தொடர்ந்து ஆடுவார். ஆனால் அந்தக் குழுவின் எதிர்க் குழுவிற்கு 1 வெற்றி எண் என்றே கொடுக்கப்படும்.

2. எல்லா ஆட்டக்காரரைத் தொட்டாலும் லோனா என்பதாக இல்லை. அதனால் லோனாவுக்கு என்று வெற்றி எண்கள் எதுவும் தரப்படவில்லை.

3. ஓர் ஆட்டத்திற்கு 2 முறை ஆட்டங்கள் (Inning) இருந்தன. ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கும் 20 நிமிடங்கள் தரப்பட்டிருந்தது. போட்டி நடத்தும் சங்கம் விரும்பினால் வசதிக்கேற்ப, நிலைமைக்கேற்ப, நேரத்தை 15–லிருந்து 20 நிமிடங்களுக்குள்ளாக வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு ஆங்காங்கே நடைபெற்ற ஒவ்வொரு ஆட்ட முறைக்கும் வெவ்வேறு தரமான விதிமுறைகள் அமைந்திருந்தன. அவற்றிலுள்ள வேண்டாத விதிமுறைகளை விலக்கித் தள்ளிவிட்டு, வேண்டிய, விரும்பத் தகுந்த ஆட்ட முறையை, ஆட்ட ஒழுங்கை,

ஆட்ட அமைப்பு வழியை மட்டும் தேர்ந்து மேற்கொண்டு, ஒன்றாக இணைக்கப்பட்ட ஆட்டமே இன்று சடுகுடு என்கிற கபாடி ஆட்டமாக விளங்குகின்றது.

1.ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட ஆட்டக்காரர் மீண்டும் தொடர்ந்து ஆட்டத்தில் கலந்துகொண்டு ஆட அனுமதித்தல்;

2. குறிப்பிட்ட கால அளவிற்குள் ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட ஆட்டக்காரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மொத்த வெற்றி எண்களைக் கணக்கிடுதல்;

3. ஆட்ட இறுதியில் அதிக வெற்றி எண்கள் பெற்ற குழுவை வென்றவர் என்று அறிவித்தல் என்ற மூன்று ஆட்ட முறைகளில் உள்ள முக்கிய பகுதிகளை இணைத்துத்தான் இன்றைய நவீன ஆட்ட முறை அமைக்கப்பட்டிருக்கிறது.

வளர்ச்சியும் எழுச்சியும்

ஆடுகளத்தின் அமைப்பினை ஏற்றுக்கொண்டு, மூன்று ஆட்ட முறைகளையும் இணைத்து ஓரமைப்பின் கீழ் கொண்டு வந்து ஆட்ட நேரத்தையும் 2 பகுதிகளாக 20 நிமிடங்கள் என்று ஏற்படுத்தினாலும், விதிமுறைகளில் மாற்றங்களும், மறுமலர்ச்சியும், செழுமை நிலையும் எதுவும் அடையாமலே ஆட்டம் தொடர்ந்து கொண்டு தான் வந்தது.

அதனால் ஆட்டத்திற்கிடையில் குழப்பமும், கூச்சலும், தகராறுகளும், தடுமாற்றங்களும் ஆட்டக்காரர்களிடையே அடிக்கடி நேர்ந்த வண்ணமிருந்தன. இதே போன்ற புகைச்சல் மிகுந்த எரிச்சல் நிலையிலிருந்து ஆட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும்; ஆட்டத்தின்

இடையிடையே அடிக்கடி தோன்றும் வன்முறைகளைத் தடுத்து விட வேண்டும் என்ற முடிவுக்கு, ஆட்டத்தின் பால் அளவிலா அன்பு கொண்ட ஆட்ட வல்லுநர்கள் பலர் முயன்றனர்.

சதாராவைச் சேர்ந்த விளையாட்டு வல்லுநர்கள் பலர் ஒன்றுகூடி, மகாராஷ்டிராவில் பின்பற்றி வந்த ஆட்டமான குடூடூ என்ற ஆட்ட முறையின் விதிகளைப் பின்பற்றி 1918 ஆம் ஆண்டு ஆட்டத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.

1919 ஆம் ஆண்டு தொடங்கி 1920 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து, பூனாவில் உள்ள இந்திய விளையாட்டின் முன்னேற்றத்தை விரும்பும் நல்லவர்கள் பலர் சதாரா பகுதியில் உள்ளவர்களுடன் கலந்துரையாடி, ஒரு தெளிவான விதிமுறைகளை, ஆட்ட அமைப்பினை உருவாக்கிட முயன்று, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றனர்.

அதன் பயனாக 1921 ஆம் ஆண்டு பூனாவிலும், சதாராவிலும் குடூடூ போட்டிகள் நடத்தப்பெற்றன. இந்தப் போட்டிகளினால் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் குடூடூ பற்றிய விழிப்புணர்ச்சி பெருகி வளர்ந்து, ஆட்டத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் மென்மேலும் பெருகி வந்தது.

என்றாலும், சடுகுடுப் போட்டிகள் சஞ்சீவனி ஆட்ட முறையிலும் (ஆடாது ஒழியும்), காமினி ஆட்ட முறையிலும் என்று இரு முறைகளிலுமே நடத்தப்பட்டு வந்தன. இத்தகைய பரிதாப நிலையிலிருந்து, ஆட்டத்தை மீட்க வேண்டுமானால், புதிய விதிமுறைகளை நிர்ணயம் செய்து புகுத்தி புதுமை செய்தாலன்றி, வேறு

வழியேயில்லை என்ற முடிவுக்கு வந்த டெக்கான் ஜிம்கானாவைச் சேர்ந்தவர்கள், பகீரத முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் பயனாக, 1923 ஆம் ஆண்டு பரோடாவைச் சேர்ந்த விஜய் ஜிம்கானாவின் வல்லுநர்கள் குழு ஒன்று கூடி, புதிய விதிமுறைகளை சிறப்புற வகுத்து வழியமைத்தது. அதனைத் தொடர்ந்து, அகில இந்திய அளவில் போட்டிகளை நடத்திடவும் முடிந்தது. துணிவாக இயற்றிய விதிகளைத் தொடர்ந்து, கருத்தரங்குகள் பல கூட்டப்பெற்று, ஆட்டம் ஆக்கம் பெறத்தக்க அளவில் ஆலோசனைகளையும் மேற்கொண்டனர்.

மூன்று முறை விதிகளைத் திருத்தி அமைத்தாலும், மக்கள் மன திருப்திக்கும் ஆட்ட வளர்ச்சிக்கும் என்று போதுமான அளவில் முழுமை பெறவில்லை என்ற எண்ணத்தின் காரணமாக, 1931 ஆம் ஆண்டு அகில மகாராஷ்டிர சரீரிக் பரீஷத் எனும் உடற்பயிற்சி இயக்கத்தின் மூலமாக, வல்லுநர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு, விதிகளில் செழுமை கூட்டுமாறு வேண்டிக் கொண்டது.

அதன் விளைவாக 1934 ஆம் ஆண்டு, மேலும் புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. அவை புதுப்பிக்கப்பட்டு, நூலாக வெளிவந்தன. நாளாக நாளாக, விளையாட்டில் வருகின்ற பிரச்சினைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்ட உடற்பயிற்சிக் கழகம், மேலும் பல விதிகளை மாற்றியும், மெருகூட்டியும் ஆட்டத்தின் மேன்மைக்கும், மிகுந்த வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் உதவியது.

இந்த காலகட்டத்தில்தான், ஒலிம்பிக் பந்தயங்கள் ஜெர்மனி நாட்டிலே 1936 ஆம் ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அகில உலக நாடுகளும் சடுகுடு எனும் கபாடி ஆட்டத்தின் பெருமையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற பேரவாவின் காரணமாக, அமராவதி நகரைச் சேர்ந்த ‘ஹனுமான் வியாயம் பிரசாரக் மண்டல்’ எனும் குழு, ஜெர்மனி நகரத்தில், மற்ற போட்டியாளர்கள், பல நாடுகளைச் சார்ந்த அதிகாரிகள் மத்தியிலே காட்சிப் போட்டி ஒன்றை நடத்திக் காட்டியது. வந்திருந்த பார்வையாளர்கள் ஆட்டத்தின் அடிப்படைத் திறன், நுணுக்கங்களை நுண்ணிதின் அறிந்து வியந்து, மனம் வியந்து பாராட்டினார்கள் என்றாலும், ஒலிம்பிக் பந்தயங்களில் ஒன்றாக இணைக்கப்படும் பாக்கியம் நம் நாட்டின் தலையாய ஆட்டத்திற்குக் கிடைக்காமல் போனது நம் துரதிர்ஷ்டமே!

என்றாலும், அதற்கான பயன் கிடைக்காமல் போகவில்லை. இந்திய ஒலிம்பிக் கழகம், சடுகுடு கபாடி ஆட்டத்தை ஒலிம்பிக் போட்டி விளையாட்டுக்களுள் ஒன்றாக, ஏற்றுக்கொண்டு இணைத்தது. அதனைத் தொடர்ந்து, 1938 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் விளையாட்டுகளுள் ஒன்றாக கபாடி ஆட்டத்திலும் போட்டிகள் நடைபெற்றன.

ஆட்டத்தின் வளர்ச்சி அற்புதமாக அமைந்த காரணத்தால், 1952 ஆம் ஆண்டு அகில இந்திய கபாடிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக திரு.எல்.கே. காட்போல் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆண்களின் ஆர்வம் மேலோங்க, ஆட்டம் சீரோங்க வளர்ச்சியுற்றதின் காரணமாக, பெண்களிடையிலும் கபாடி ஆட்டம் பிரபலமாக வளரத் தொடங்கியது. அவர்கள் ஆர்வத்தை ஒரு சிறிதும் குறைத்துவிடக்கூடாது என்று நிறை மனம் கொண்ட அதிகாரிகள் பலர், 1935 ஆம் ஆண்டு கல்கத்தாவில் தேசிய போட்டிகள் (National Championship) நடைபெற்றபொழுது, பெண்களுக்காகவும் அங்கே போட்டிகளை நடத்தினர்.

ஆண் பெண் என்று பொது மக்களிடையே நடத்தி வந்த நிலையில், மேலும் முன்றேற்றம் பெருகியது. பள்ளிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்றது போலவே, பல்கலைக் கழகங்களுக்கிடையிலும் போட்டிகள் நடத்தப்பெற்றன. 1961 ஆம் ஆண்டில் இருந்து பல்கலைக் கழகங்கள் தமது விளையாட்டுப் பட்டியலில் கபாடி ஆட்டத்தையும் இணைத்து பெருமை சேர்த்துத் தந்தது.

1957 ஆம் ஆண்டு, இரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடத்தப்பெறும் உலக இளைஞர் விளையாட்டு விழாவில் கபாடி ஆட்டத்தில் காட்சிப் போட்டி நடத்திட வாய்ப்பு பெற்றும், அங்கே போய் ஆடிக்காட்ட இயலாத நிலை எய்தியது. இந்த ஆட்டத்திற்கு மேலும் ஒரு துரதிர்ஷ்டம் என்றே நாம் கூறலாம்.

ஆனாலும், இதன் பெருமையை அறிந்த பிற நாட்டினர் கபாடி ஆட்டத்தை விளையாடி மகிழ்கின்றனர் எனும் சேதி, சிந்தை இனிக்கும் செய்தியாகத்தான் நம்மை மகிழ்விக்கிறது. பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பர்மா, சிலோன், நேபாளம், மலேஷியா போன்ற நாடுகளில் கபாடி ஆட்டம் பெரிதும் மக்களால் விரும்பி ஆடப்பட்டு வருகிறது. இந்திய தேசிய விளையாட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் கபாடி ஆட்டத்தில், மேலும் பல விதிகளில் மாற்றம் செய்து மென்மையைப் புகுத்தி, பல நுண்திறன்களை (Techniques) வளர்த்துத் தந்தால், பிற நாட்டினர் இந்த ஆட்டத்தை எழிலாகவும் எளிதாகவும் ஆட வழி பிறக்கும் என்பதை உணர்ந்துகொண்ட நமது நாட்டினர், ஒலிம்பிக் பந்தயங்களுள் ஒன்றாக இணைக்கும் இமாலய முயற்சியையும் மேற்கொண்டிருக்கின்றனர்.

காலம் ஒரு நாள் மாறும். நமது முயற்சியும் நிறைவேறும் என்று நம்புவோமாக!

உடலுக்கு ஆரோக்கியத்தையும், அளவிலா பலத்தையும், உடல் உறுப்புக்களுக்கிடையே ஒருங்கிணைந்து செயலாற்றும் ஆற்றலையும், சகோதரத்துவ, சமத்துவக் கருத்துக்களையும் வளர்த்துவிடும் விளைநிலமாகவும் விளங்குகின்ற கபாடி ஆட்டம், இந்திய நாட்டின் பண்பாடான ‘எளிய சிந்தனை உயர்ந்த வாழ்க்கை’ எனும் இலட்சியத்திற்கு உயிரூட்டும் நீரோட்டமாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.

யாரும் ஆடலாம், எல்லோரும் பங்கு கொள்ளலாம் என்ற அளவில் எளிய, இனிய, உயர்ந்த, ஒப்பற்ற ஆட்டமாக விளங்கும் கபாடி ஆட்டத்தை, எவ்வளவு பழகினால், எப்படிப் பயன்படுத்திக் கொண்டால், சிறப்பினையும் செழிப்பினையும் பெறலாம் என்பனவற்றை இனி வரும் பகுதிகளில் காண்போம்!