சாத்தன் கதைகள்/1. ஆதிரை



1. ஆதிரை

பொன்வளம் சிறந்தது பழந்தமிழ்நாடு; அப் பொன் வளம் அந்நாட்டின் நன்செய்கள் அளித்த செந்நெல் வளத்தால் வந்தது. அந் நன்செய்கள் நிறைவளம் தர நற்றுணை புரிந்தன. அந்நாட்டில் பெருக்கெடுத்தோடிய பேராறுகள்.

அப்பேராறுகளில் தலைசிறந்தது காவிரி. தான் பாயும் தஞ்சைப் பெருநாடு, அந்நெல் வளத்தை நிறையப்பெற்று, தென்னாட்டு நெற்களஞ்சியம் என்ற சிறப்புப் பெயரைப் பெறச் செய்த பெருஞ் செயலால் அக் காவிரி, பொன்னி எனும் புகழ்சால் பெயர்பெற்றுத் திகழ்ந்தது.

அக்காவிரியாற்று நீர் கடல்நீரோடு கலக்குமிடத் தில் அமைந்த பேரூரே புகார். பொதுவாக, ஆறுகள் கடலோடு கலக்குமிடங்கள் எல்லாம் புகார் எனவே அழைக்கப்பெறும். என்றாலும், காவிரி கடலோடு கலக்குமிடம் ஒன்றையே புகார் என்ற பெயரால் பழந்தமிழ் மக்கள் அழைத்தனர். புகார், பழைய தமிழ்நாட்டின் முதுபெரும் நகர்கள் அனைத்தினும் நனிமிகப் பழமை உடையது. பிற நகர்களுக்கில்லாப் பல சிறப்புக்களை அது பெற்றிருந்தது. உலகின் பல்வேறு பேரூர்களிலும் வாழும் மக்கள் வறுமையுற்றுப்போன தம் வாழிடம் விட்டு வந்து வாழ்ந்து, வாழ்வுபெறும் விழுச்சிறப்பு புகார் நகர்க்கு உண்டே அல்லது, புகார் நகரத்து மக்கள் வாழிடம் தேடி வேற்றுச் செல்லும் இழி நிலை என்றும் உண்டானதில்லை எனப் பாராட்டியுள்ளனர் புல்வர் பெருமக்கள் “சோழன் மூதூர்ப் பேராச் சிறப்பின் புகார்,” “பதியெழுவறியாம் பழங்குடி கெழீஇய, பொதுவறு சிறப்பின் புகார்” என்பன அப்பாராட்டுரைகளுள் ஒரு சில.

பொன்வளமும் பொருள்வளமும் அளித்த புகழோடு பிறிதொரு பெரும்புகழையும் புகார் பெற்றிருந்தது; புகார் நகரத்து நங்கையர் கற்பிற் சிறந்த காரிகையராய் வாழ்ந்தனர். கற்புக் கடவுள் எனக் கன்னியர் பலராலும் ஒருசேரப் புகழப்பெறும் கண்ணகி பிறந்த ஊர் அப்புகார் நகரே ஆகும். அதுமட்டுமன்று. அக் கண்ணகியாகிலும் பாராட்டி வழிபடத்தக்க பத்தினிப் பெண்டிர் பலரும் அப் புகார் நகரில் வாழ்ந்தோரே ஆவர்.

தன் வாழ்வு களங்கமற்றது, கற்புநெறியோடு பொருந்தியது என்பதற்குச் சான்று பகர, தான் மணங் கொண்ட இடத்தில் இருந்த வன்னிமரத்தையும், அதை யடுத்திருந்த கோயிலையும் தன் தமர்முன் வரவழைத்துக் காட்டிகுள் ஒரு காரிகை.

காவிரிக்கரையில் மணற்பாவை பண்ணி ஆடிக் கொண்டிருக்குங்கால், உடன் ஆடும் ஆய மகளிர், ‘ஏடி இம்மணற்பாவையே உன் மணுளனும்’ எனவுரைத்த நகைமொழியை உண்மையெனக் கொண்டு, அப்பாவையைத் தன் கணவகைவே கருதித், தன் கணவனும் அப்பாவையை ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போகாவாறு காக்கும் கடமையுணர்வால் வீட்டு நினைவையும் இழந்து, அதை அணைத்துக் கிடந்தாள் ஓர் ஆரணங்கு.

காவிரிப் புதுவெள்ளத்தில் புகுந்தாடிய தன் கணவனைக் காவிரிவெள்ளம் ஈர்த்துக்கொண்டு போய் விட்டதாக, ‘என் கணவனைக் காணீரோ? என் கணவனைத் தாரீரோ?’ எனக் கூவி அழுதவாறே காவிரிக் கரை நெடுகக் கால்கடுக்கத் தேடி அலைந்து இறுதியில் கடல் நீர், கணவனைக் காட்டிக் கரைக் கண் கொணர்ந்து தரப்பெற்று மகிழ்ந்தாள் கரிகாலன் மகள் ஆதிமந்தி.

வாணிக வளம் விரும்பும் கணவனைக் கலம் ஊர்ந்து கடல் கடந்து செல்லவிடுத்து, தனித்திருந்து வாழ்தல் தன்னால் இயலாது எனும் உணர்வால், அவன் வருங் காறும் உணர்வற்றிருக்கும் நிலையை விரும்பி, அவ்வாறே வழிவிடக் கடற்கரைக்குச் சென்றவள், அவன் கலம் மறைந்ததும் கல்லுருவாகிப் போன கணவன் பொருளீட்டி வரும்வரை அக்கடற்கரை மணலிலேயே கிடந்து, அவன் கலம் கரை ஏறியதும் கல்லுருவம் நீத்துக் காரிகை வடிவாகிக் கணவனே அடைந்து களிப்புற்றாள் ஒருத்தி.

உடனாடிக்கொண்டிருந்த குழந்தைகள் இரண்டனுள் மாற்றாள் குழவி ஒரு கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துபோக, வாழ்ந்தால் இரண்டும் வாழ்தல் வேண்டும், இறந்தால் இரண்டுமே இறத்தல் வேண்டும்; ஒன்று இறக்க, ஒன்று உயிர் கொண்டு வாழ்தல்கூடாது; குழந்தையை இழந்து மாற்றாள் மனத்துயர் உறுங்கால், தான் மட்டும் தன் குழந்தையோடு கொஞ்சி மகிழ்வது கூடாது; அவளேபோல் தானும் தன் குழந்தையை இழந்து துயர் உறுதல் வேண்டும் எனும் உயர்வுள்ளம் கொண்டு, மாற்றாள் குழவி வீழ்ந்திருந்த கிணற்றிலேயே தன் குழந்தையையும் இட்டுக் கொன்று, பின்னர்த் தன் உயர்வுள்ளம் கண்டு உவந்த இறையருளால், இரு குழந்தைகளையும் உயிருடன் பெற்று உயர்வுற்றாள் ஒருத்தி 

கணவன் பொருள் தேடிப் போயிருக்கும் பொழுது, அயலான் ஒருவன், தன் முகவழகு கண்டு மயங்கித் தன்னையே விழித்து விழித்து நோக்கியதைப்பொருது, ‘கணவன் கண்டு மகிழவேண்டியது என் அழகு, அதைப் பிறர் காண்பதால் எனக்குக் களங்க முண்டாவதல்லது களிப்பு உண்டாகாது. ஆகவே, போன கணவன் போருளீட்டி மீளும் வரை என் முகம் குரங்கு முகமாகி, அழகு குன்றுமாக, என வேண்டி, அவ்வாறே குரங்கு முகம் பெற்று வாழ்ந்து கணவன் வந்து வீடடைந்ததும், மீண்டும் தன் அழகு முகம் பெற்று அக மகிழ்ந்தான் ஒரு பெண்ணினல்லான்.

தன்னை ஈன்ற தாய், அவள் இளமைப் பருவத்தில், அவளொத்த இளம் மகளிரோடு ஆடிக் கொண்டிருக்குங் கால், அவருள் ஒருத்தியோடு ‘எனக்கு மகள் பிறக்க, உனக்கு மகன் பிறத்தால் என் மகள் உன் மகன் மனைவியாவள்’ என உரைத்து உறுதியளித்தாள் என்பதைப் பிறர் உரைக்க உணர்ந்து, அது, அவள் தன் அறியாப் பருவத்தில் உரைத்த அறியாமை உடையது எனக் கொண்டு தள்ளிவிடாது, அச்செய்தி கேட்ட அன்றே, தன்னை மணக்கோலம் செய்துகொண்டு, தன் தாயின் ஆடற்பருவத்துத் தோழி அளித்த இளைஞனத் தேடி அடைந்து மணந்து மாண்புற்றாள் ஒரு மங்கை நல்லாள். கண்ணகி போற்றிய கற்புடை மகளிர் எழுவர் இவர். இவரையும், இவர்போலும் கற்புடை மகளிரையும் பெற்ற பொற்புடையது புகார்ப் பெருநகர்.

புகழ்மிக்க அப்புகார் நகர்க்குப் பெருமை அளிக்கும் பெருங்குலத்தவருள் வணிகர் குலத்தவர் தலை சிறந்து விளங்கினர். அவ்வணிகர் குலத்தவர் வாணிக வாழ்வால் வளம் பல பெற்று வாழ்ந்தனர். கொள்வதை மிகை கொளாது, கொடுப்பதைக் குறைகொடாது, தமவும் பிறவும் ஒப்ப மதிக்கும் வாணிக அறம் பிறழாது வாழ்ந்தமையால் அவ் வணிகர் மன்னரும் மருளும் மாநிதி பெற்று மாண் புற்றனர். அவர் வாழ்ந்த புகார் நகரும் வற்றாப் பெருநிதி பெற்றுப் பெருமையுற்றது. அத்தகைய வணிகர் குலத்தில் ஆதிரை எனும் ஓர் ஆரணங்கு பிறந்து வளர்ந்து பேதைப் பருவம் கடந்து பெதும்பைப் பருவம் பெற்று விளங்கினாள். மகள் மணப்பருவம் பெற்றுவிட்டமை கண்ட அவள் பெற்றோர், தம்மைப் போலும் பெருவணிகர் குடியைச் சேர்ந்த சாதுவன் எனும் இளைஞனத் தேர்ந்து மணம் முடித்து வைத்தனர்.

ஆதிரை இல்லறத் தலைவி ஆனாள். அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஒம்பல், துறவோரை வழி படல், செல்விருந்தோம்பி வருவிருத்து பார்த்திருத்தல் முதலாம் இல்லறக் கடமைகளை உள்ளன்போடு மேற்கொண்டு வாழ்ந்தாள். சாதுவனும் அவள் அழகும், அவளாற்றும் இல்லறச் சிறப்பும் அளிக்கும் இன்பத்தை ஆர நுகர்ந்து மகிழ்ந்திருந்தான். அவர் வாழ்க்கைத் தோணி, இன்ப மென்னும் கடலில் மெல்ல இயங்கிக்கொண்டிருந்தது.

சில ஆண்டுகள் கழிந்தன. அவர் வாழ்க்கைக் கடலில் புயல் எழத் தொடங்கிற்று. புகழ்ச் செல்வமும் பொருட்செல்வமும் மலிந்த புகார் நகருக்குப் பழிசூட்டும் பண்புகெட்ட வாழ்க்கையுடையார் சிலரும் அப்புகார் நகரில் வாழ்ந்திருந்தனர். புகார் நகரத்துச் செல்வர்கள். வற்றா வளம் பெற்று வாழ்ந்தமையால் உழைப்பின் பயனை மறந்தனர். உழைப்பின் அருமையினை உணரமாட்டாமையால் அவ்வுழைப்பின் பயனாம் செல்வத்தின் சிறப்பினையும் அவர்கள் உணர்ந்திலர். அதனால் அவர் கைப்பட்ட செல்வம், ஈதல், புகழ் என்பன போலும் பயனுடையவற் றிற்கு மட்டும் பயன்படுத்தப்பெருது, வட்டு, சூது, பரத்தையர் உறவு போலும் பழிமிகு செயல்களுக்காகவும் பயன்படுத்தப் பெற்றது. இவ்வாறு பாடுபடாது பெரிது பெற்ற பொருளைப் பாழ்படுத்தும் பண்பிழந்தார் சிலரும் புகார் நகரில் வாழ்ந்திருந்தனர்.

ஆதிரை கணவன் சாதுவனுக்கு அத்தீயோர் தொடர்பு எவ்வாறோ உண்டாகிவிட்டது. அதனால் அவன் மனையை மறந்தான்; மனைவி தரும் வாழ்வை மறந்தான். வட்டரங்கும், சூதாடு கழகமும், பரத்தையர் சேரியுமே வாழிடமாகக் கொண்டான். வட்டிலும், சூதிலும் அவன் வான் பொருள் அழிந்தது. பரத்தையர்க்கு வாரி வாரிக் கொடுத்ததால் மாடென்றும் மனையென்றும், பொன்னென்றும் பொருளென்றும், மணியென்றும் முத்தென்றும் வகை வகையாகக் குவிந்து கிடந்த அவன் செல்வம் சீரழிந்தது. பழிமிகு இவ்வாழ்வில், அவன் வாணாளின் ஒரு பகுதி, பாழுற்றது.

வளம் பெருக்கும் வாணிக வாழ்க்கையைக் கைவிட்டமையாலும், கைப்பொருள் அழிக்கும் கணிகையர் தொடர்பு போன்றனவற்றைக் கைக் கொண்டமையாலும், மலைபோற் குவிந்து கிடந்த அவன் மாநிதி மறைந்து விட்டது. சாதுவன் வறியனான். வாரி வாரி வழங்கிய அவன் கை வற்றிவிட்டது. அதை உணர்ந்து கொண்டாள் அவன் உளங்கவர்ந்த கணிகை. அவள் கருத்தெல்லாம் அவன் தரும் செல்வத்திலல்லது அவனிடத்தில் இல்லையாதலின், அவன் செல்வம் சீரழிந்து விட்டது என்பதை அறிந்துகொண்டதும், அவனுக்கு வாயிலை அடைத்துவிட்டாள். கணிகை வீட்டுக் கதவு அடைக்கப்பட்டுவிட்டதைக் கண்டு கொண்ட பின்னரே, சாதுவனுக்கு அறிவு தெளிந்தது. தன் ஒழுக்கக்கேட்டை நினைத்து உள்ளம் நொந்தான். தன் பிழையை உணர்ந்தான். பொருள் அழிந்த புன்மையை நினைந்து நாணிப்புலம்பினான். இழந்த பொருளை ஈட்டிப்பண்டே போற் பெருவாழ்வு வாழ விரும்பினன். இரவு பகல் எப்போதும் அவ்வேட்கையே அவன் உள்ளத்தில் தலை தூக்கி நின்றது. அதனால் அப் பெருவாழ்வளிக்கும் பொருட் செல்வத்தை ஈட்டும் வழிவகைகளையே எப்போதும் எண்ணிக்கொண்டிருந்தான். அந்நிலையில் அந்நகர் வணிகர் சிலர், பொருளீட்டும் பணிமேற்கொண்டு பாய்மரக்கலம் ஊர்ந்து புறநாடு செல்கின்றனர் என்ற செய்தியைக் கேட்டான். உடனே அவருடன் அயல்நாடு செல்ல அவனும் துணிந்தான்.

கடையரும் விரும்பாக்கணிகையர் தொடர்பில் தன்னை மறந்திருந்ததையும் தாங்கிக்கொண்டு உயிர் வாழ்ந்திருந்த வளாதலின், ஆதிரை, பொருளீட்டும் பெரும்பணி மேற் கொண்டு புறநாடு போகும் அவன் பிரிவைப் பொறுத்துக் கொண்டு போக விடை தந்தாள். பரத்தையர்ப் பிரிவின் போது, கணவன் புறநகர்க்கு அணித்தாக ஓர் ஊர் வாழ்வினனாகவும், அப்பிரிவைப் பொறுக்கமாட்டாது புலம்பிய ஆதிரை, அவன், கடல் கடந்து, கண்ணால் காணமாட்டா, கருத்திற்கும் எட்டாத் தொலை நாடுகட்குச் செல்லத் துணிந்தான் எனக் கேட்டும், அப்பிரிவு பாராட்டத்தக்க பணி மேற்கொண்டு செல்லும் பிரிவாதல் எண்ணிச் சித்தம் கலங்காது, செல்ல மகிழ்வோடு விடை தந்தாள். பரத்தையர்ப் பிரிவால் உடைமைக்கும் ஒழுக்கத் திற்கும் மட்டுமே கேடு, உயிர்க்கு எக்கேடும் இல்லை என அறிந்தும் அப்பிரிவைத் தாங்க மாட்டாது தளர்ந்த ஆதிரை, கடல் கடந்து செல்பவர், கேடுறாது வந்து கரை சேர்வர் என்பதற்கு உறுதியில்லை; இடை வழியில் உயிரிழந்து போவதும் உண்டாம் என அறிந்தும், இப்பிரிவு தன் இல்லற வாழ்வை நல்லற வாழ்வாக்கும் எனும் நம்பிக்கையால், அவன் பிரிவை மகிழ்ச்சியோடு வரவேற்று அவனை வழியனுப்பினாள்.

சாதுவன் புறப்பட்டுவிட்டான். கடலோட வல்ல பெரியகலம், புகார்நகர்த் துறையை விட்டு புறப்பட்டு விட்டது. கடல் நீரைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது கலம். கலம் ஊர்ந்து செல்லும் வணிகப் பெருங்குடி மக்கள், செல்லும் நாட்டிற் செய்யவிருக்கும் வாணிக வகைகளையும், அவற்றால் தாம் அடையவிருக்கும் வளப் பெருக்கத்தையும் எண்ணிப் பார்க்கும் இன்ப நினைவில் தம்மை மறந்து மகிழ்ந்து கிடந்தனர். இந்நிலையிற் சில நாட்கள் சென்றன. அவர் இன்ப நினைவில் திடுமென இடிவீழ்ந்து விட்டது.

ஒருநாள் இரவு; கண்ணொளி புகாக் காரிருள் சூழ்ந்த நடுயாமம்; கலம் செலுத்தும் மீகாமன் தவிர ஏனையோர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்; கடலிற் புயல் உருவாகத் தொடங்கிற்று; விரைவில் அது கொடிய புயலாக மாறி வீசத் தொடங்கிவிட்டது. கலம் அப்புய லிடையே அகப் பட்டுக் கொண்டது. எவ்வளவு முயன்றும், நாவாயைக் காப்பது மீகாமனுல் இயலாது போயிற்று. புயல், எதிர்த்து நிற்கமாட்டாது பாய்மரம் முறிந்து வீழ்ந்தது. சுழன்று சுழன்று வீசும் சூறாவளிக்குத் தாங்கமாட்டாது பாய்கள் கிழிந்து பாழாயின. கலம் சுக்கு நூறாய் உடைந்து உருக்குகலந்து போயிற்று. கலத்தில் வந்தோர் கொந்தளிக்கும் கடல் நீரில் வீழ்ந்து கலங்கினர். கடல் நீருள் மூழ்கிக் கணக் கற்றேர் உயிரிழந்தனர். கலத்தின் ஒடிந்த உறுப்புக்களுள் தம் கையிற்பட்ட சிலவற்றைப் பற்றுக் கோடாய்க் கொண்டு கடலே நீந்திக் கடப்பதில் முனைந்தனர் சிலர்.

ஆதிரை கணவன் சாதுவன் கையில், ஆதிரை ஆற்றிய அறப்பயனால் ஒடிந்த கொடிமரத்தின் ஒரு துண்டு அகப்பட்டது. அதை அவன் இறுகத் தழுவிக் கொண்டான். மலைபோல் எழுந்து மடுப்போல் அடங்கும் அலைகளிடையே அகப்பட்டு எல்லையில்லா அல்லல் அடைந்தான். இறுதியில், அவனை அவன் அணைத்துக் கிடந்த கொடிமரத் துண்டோடு, அவ்வாழ் கடலிடையே யிருந்த ஒரு மலைத் தீவின் கரையிற் கொண்டு சென்று ஒதுக்கிற்று அக்கொடுங் கடல். கடல் நீரிலும், கொடிய புயற் காற்றிடையிலும் அகப்பட்டு அலைக்கழிக்கப்பெற்று உற்ற நோய் மிகுதியால், சாதுவன், அத்தீவின் கரைக் கண் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் நிழலில், உடல் சோர்ந்து, உணர்விழந்து வீழ்ந்து உறங்கிவிட்டான்.

கடல் வாணிகம் கருதிக் கலம் ஊர்ந்து சென்ற கணவன், வற்ரு வளம்பெற்று வந்து சேர்வன் என்ற இன்ப நினைவால், மனமகிழ்ச்சியால் நிறைந்து வழிய, சாதுவனே எதிர் நோக்கியிருந்தாள் ஆதிரை! ஒரு நாள் ஒருசிலர் ஓடிவந்து, ‘ஆதிரை! உன் கணவணோடு கலம் ஏறிச் சென்றவர் ஊர் வந்து சேர்ந்து விட்டனர்’ என்று அறிவித்து அகன்றனர். கடலில் வீழ்ந்தவருள், சாதுவனைப் போலவே வேறு சிலரும் உயிர் பிழைத்தனர். அவருட் சிலர், எங்கெங்கோ அலைந்து இறுதியில் ஊர் வந்துசேர்ந்தனர். அஃதறிந்த ஆதிரை விரைந்து அவர்கள் பாற்சென்று தின் கணவனைக் குறித்து உசாவினாள்.

கலம் கவிழ்ந்தது இரவில்; அதுவும் எல்லாரும் உறங்கிக் கிடந்த இடையாமத்தி லாதலாலும், கடலி வீழ்ந்தார் ஒவ்வொருவரும் தத்தம் உயிரைக் காத்துக் கொள்வதிலேயே கருத்துடையதாகி விட்டமையாலும், கவிழ்ந்த கலத்தின் உறுப்புக்களிற் கையிற் கிடைத்ததைப் பற்றிக் கரைசேர்ந்த சிலரும் ஒரே துறையிற் கரையேறாது, அலைகள் ஈர்த்துச் சென்றவாறெல்லாம் இழுப்புண்டு, அவை கொண்டு சேர்த்த இடங்களிற் கரையேறினராத லாலும், கடலில், வீழ்ந்தவருள், கடல் நீரில் ஆழ்ந்து உயிரிழந்து போனவர் எத்துணைவர்? அவர்கள் யார் யார்? உயிர் பிழைத்து ஊர் சேர்ந்தவர் எத்துணைவர்? அவர்கள் யார் யார்? என்பதை அறியாராயினர். அதனால் ஒவ்வொருவரும் தம்மையொழிந்த ஏனையோரெல்லாம் கடல் நீர்க்குப் பலியாயினர் என்றே நம்பினராதலின், அவர்கள் கலம் கவிழ்ந்ததை அறிவித்து, “ஆதிரை உன் கணவன் ஆழ்கடல் நீரில் அழுத்தி அழிந்து விட்டான்” என்று கூறி, அவள் நிலைக்கு இரங்கினர்.

கணவன் கடல்வாய்ப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டாள் ஆதிரை; அவ்வளவே, அவள் அகம் ஆறாத் துயரக் கடலில் ஆழ்ந்துவிட்டது. ஆதிரை, தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெரியோள். கணவணோடு கூடி இல்லறக் கடனாற்றித் தன்னால் இயன்ற அளவு பிறவுயிரோம்பும் பேரற வாழ்வை விரும்பியவள் அவள். அவ்வாழ்வு என்றேனும் வாய்க்கும் என்ற நம்பிக்கையி னாலேயே, அவள் அதுகாறும் உயிர் வாழ்ந்திருந்தாள். அதனாலேயே, கணவன் தனக்கு வாழ்வு அளிக்கத் தவறிப் பரத்தையர்க்கு வாழ்வு அளித்து வாழ்ந்த இழி வாழ்வையும் தாங்கிக்கொண்டாள். அதனாலேயே “கணிகையர் தொடர்பைக் கைவிட்டு என்னை வந்தடைந்த கணவனை ஓர் இமைப்பொழுதும் பிரியவிடேன்; பிரிவின்றி வாழ்ந்து பேரின்பம் காண்பேன்” என நினையாது பொருள் தேட அவனைப் புறநாடு போக்கினாள். இவ்வாறு இல்லறக் கடமைகளில் ஆழ்ந்திருந்தமையால், அதற்கு வாய்ப்பு இன்றி, வங்கம் ஊர்ந்து சென்றவன் வழியில் மாண்டுவிட்டான்; இல்லற வாழ்வளிக்க இனி அவன் வாரான்-என அறிந்ததும், அவள் தன்னுயிரை இழக்கத் துணிந்தாள்.

கற்புநெறி நிற்கும் காரிகையரின் கடமை எது என்பதை அறிந்தவள் ஆதிரை. காதலன் இறந்தான் எனக் கேட்ட அக்கணமே உயிரிழப்பவர் தலையாய கற்பு நெறி நிற்பவராவர். உயிர் தானே நீங்காதாயின், பொய்கை நீரிற் புகுந்து ஆடுவார் போல அழல்வாய்ப் பட்டு ஆருயிர் இழப்பவர் இடையாய கற்புநெறி நிற்பவ ராவர், அத்துணைத் துணிவற்ற உள்ளம் உடையவர், இப்பிறவியில் இடையற்றுப்போன உடனுறை வாழ்வு வரும் பிறவியிலாவது வந்து வாய்க்கவேண்டி, பழஞ் சோற்றைப் பச்சிலையில் பிழிந்து இட்டு, அதில் வேளை யிலைக் குழம்பிட்டுப் பிசைந்து, எள்ளுத் துவையல் துணை யாக உண்டு, பருக்கைக் கற்கள் பரப்பிய இடத்திலும் பாயின்றி உறங்கிக் கைம்மை நோன்பு மேற்கொண்டு காலமெல்லாம் வருந்திக் கிடப்பர். அத்தகையார் கடை யாய கற்புநெறி நிற்பவராவர், கற்புநெறி நிற்பாரின் இத் தகுதியும் திறமும் அறிந்த ஆதிரை, கணவன் இறந்தான் என்ற செய்தி கேட்டதும், தன் உயிர் தானே பிரித்து போகாமை அறிந்து வருத்தினள். வாழ்வில் இன்பம் வாய்க்காது போயினும் அத்தலையாய தகுதியும் வாய்த் திலதே என எண்ணி இடருற்றாள். தானே வாய்க்க வேண்டிய அத்தலையாய தகுதி வாய்க்காமை கண்டு வருந்திய ஆதிரை, இடைப்பட்ட நிலையாவது வாய்த்தலை வேண்டினாள். அதை வருவித்துக்கொள்ளத் துணிந்து முன்வந்தது அவள் உள்ளம். ஊர்ப் பெரியோர்களே ஒன்று கூட்டித் தன் உள்ள விருப்பத்தை அறிவித்தாள். தீப்பாய்ந்து உயிர் துறக்கத் துணைபுரியுமாறு அவர்களை வேண்டிக்கொண்டாள். ஆதிரையின் உள்ளத்துறுதி உணர்ந்த அவ்வான்றோர் அவள் வேண்டுகோட்கு இணங்கினர்.

சுடுகாட்டிற் காய்ந்துலர்ந்த காட்டுவிறகினல் ஓர் ஈமப்படுக்கை அமைக்கப்பட்டது. தீயும் மூட்டப்பெற்றது. முற்ற உலர்ந்த விறகாதலின், தீ செந் நாக்கெழ ஓங்கி எரிந்தது. ஆதிரை தண்ணெனக் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுந்தாள். புத்தாடை உடுத்துக் கொண்டாள். மணம் வீசும் சந்தனக் குழம்பைவாரிப் பூசிக் கொண்டாள். ஈரம் புலராக் கூந்தலில் இனிய மணமிகு மலர்களைச் சூடிக் கொண்டாள். இக் கோலத்தோடு இடுகாட்டை அடைந்தாள். ஈமத்தீயை மும்முறை வலம் வந்தாள். “அங்கியங் கடவுளே! என் கணவன் சென்ற உலகிற்கு என்னையுங் கொண்டு சென்று, அவனோடு ஒன்றுபடுத்துவாயாக” என வேண்டிக் கொண்டாள். ஆங்குக் குழுமியிருந்த புகார் நகரத்துப் பெருங்குடி மக்கள், அக்காட்சியைக் கண்டு கண்ணீர் சொரிந்து கலங்கினர். ஆதிரை அகமகிழ்வோடு தீப்பாய்ந்து விட்டாள்.

ஆதிரையின் அழகுத் திருவுருவம் வெந்து சாம்பலாகும் காட்சியைக் காணமாட்டாது, கூடியிருந்தோர் கண்களை மூடிக்கொண்டனர். ஆனால் அவர் எதிர் நோக்கியவாறு எதுவும் நடைபெறவில்லை. ஓங்கி எழுந்த தீ ஆதிரை உட்புகுந்ததும் அடங்கி அவிந்தது. உடுத்த புத்தாடை பற்றி எரியவில்லை. பூசிய சந்தனம் புலரவில்லை. சூடிய மாலை வாடவில்லை. புத்தாடை பொன்னிறம் பெற்றுப் பொலிந்தது. சந்தனம் தண்ணெனக் குளிர்ந்து காட்டிற்று. மலர் இனிதாக மணம் வீசிற்று. செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்போல், ஆதிரை, அவ் வீமத்தீயின் இடையே காட்சி அளித்தாள். அக்காட்சி யைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் களிப்புக் கடலில் ஆழ்ந்தனர். கனலையும் அடங்கப் பண்ணும் அவள் கற்பின் பெருமை கண்டு வியந்து போற்றினர்.

அந்நிலை கண்டு ஆதிரை அகமகிழ்ந்தாளல்லள். மாறாகத் தீப்பாய்ந்தும் தன் உயிர் போகாமை கண்டு கலங்கினாள். ‘தீயும் தீண்டாத் தீவினையாட்டி ஆயினேனே. அந்தோ! யான்யாது செய்வேன்?’ என வாய் விட்டுப் புலம்பி வருந்தினாள். அப்போது, “ஆதிரை! உன் அரும் பெறற் கணவன் சாதுவன் சாவுற்றிலன். கலம் கவிழக் கடலில் வீழ்ந்த அவன், கடல் நீர்க்குப் பலியாயி னல்லன், அலைகடல், அவனை, ஓர் தீவிற் கொண்டு சேர்த் துளது. நாகர் எனும் இனத்தவர் வாழும் அம்மலைநாடு சேர்ந்த அவன், ஆங்கு நலமே உள்ளான். ஆங்குப் பல்லாண்டு இருப்பதும் செய்யான். சின்னாட்களுக் கெல்லாம் சந்திரதத்தன் எனும் வணிகனோடு வந்து சேர்வான். வருந்தாது வீடடைக” என்ற ஒரு குரல், வானிடை ஒலித்தது.

வானத்தில் எழுந்த அவ்வுரையைக் கேட்டு ஆதிரை அகம் மகிழ்ந்தாள். அவள் மனத்துயர் மறைந்தது, பொய்கை நீரிற் புகுந்தாடி எழுவாள்போல், ஈமத்தீயை விட்டு வெளியேறினள். கடல் வாய்ப்பட்டும் கணவன் உயிர்நீத்திலன் என்பது மடடுமன்று; அவன் வான் பொருளோடு வந்தும் சேர்வான் என்ற செய்தி, சிந்தையில் மகிழ்ச்சியை நிரப்ப அம்மனநிறைவோடு மனை புகுந்தாள் கண்மணி அனைய கணவன் கலம் ஊர்ந்து கடிதின் வந்து அடைவான் வேண்டி, அறம்பல மேற் கொண்டு வாழ்ந்தாள். ஆதிரையின் கற்பின் திறம் கண்டு, புகார் நகரத்துப் பெண்களும் ஆண்களும் அவளை வியந்து பாராட்டி, வந்து வணங்கி வழிபட்டுச் செல்லத் தலைப் பட்டனர். இவ்வாறு கற்புடை மகளிரும் போற்றும் கவின் மிக்க வாழ்வினளாய், ஆதிரை கணவனே எதிர்நோக்கி வாழ்ந்திருந்தாள்.

கரை சேர்ந்த சாதுவன் கடலில் அலைப்புண்ட களைப்பு மிகுதியால், கரைக்கண் இருந்த ஒரு மரத்தடியில் மெய்ம்மறந்து கண்ணயர்ந்திருந்தான். அவன் கரை சேர்ந்த அத்தீவு, நாகர் எனும் இனத்தவர் வாழும் ஒரு மலைநாடாம். அவர்கள் நாகரிகம் அறியாதவர். ஆடை அணியும் அறிவு பெறாதவர்: பொன்னும் நவமணியும் போலும் பொருள்களின் பெருமை அறியாதவர். ஆரமும் அகிலும் தரும் மணத்தை நுகரும் மதியிலாதவர்; கிடைத்த இறைச்சி எதுவே யாயினும், அது மாவின் இறைச்சியே யாயினும், மக்கள் இறைச்சியேயாயினும், உண்டு உயிரோம்பும் ஒரு காட்டினத்தவர். கள் குடிப்பது, காட்டு விலங்குகள், கலங் கவிழ வந்து கரையேறும் மக்கள் இவர்களைக் கொன்றுண்பது, இளம் பெண்களோடு கூடி வாழ்வது; இவையல்லாது வேறு வாழ்வறியாதவர். கடற்கரை மணலில் வீழ்ந்து கிடக்கும் சாதுவனை அவர்கள் பார்த்துவிட்டனர். உண்ண நல்ல உணவு. கிடைத்தது என எண்ணி மகிழ்ந்தனர். அறுசுவை நுகரும் ஆர்வம் மிக, அவ்வுணவைச் சுற்றி அமர்ந்திருப் பார் போல் அவர்கள் அவனைச் சுற்றி நின்று “தனியே வந்துளான்; மிகவும் வருந்தியுள்ளான்; நனிமிக இரங்கத் தக்கான்; நமக்கு நல்ல உணவாவான்” எனக் கூறி ஆரவாரித்தனர்.

நாகர் எழுப்பிய ஆரவாரத்தால், சாதுவன் உறக்கம் கலைந்துவிட்டது; நல்ல காலம்; சாதுவன் அவர்கள் மொழியை அறித்திருந்தான். அதனால் அவர் உரைத்த வற்றை உணர்ந்தான்; அவன் உள்ளம் அச்சத்தில் ஆழ்ந்தது. ஆயினும் அதை அவர் அறியாவாறு அடக்கிக்கொண்டு, அவர் விரும்பும் வண்ணம், அவர் மொழியில் அவரோடு உரையாடினன். தங்களைத் தவிர, வேறு நாகரிக மக்கள் எவரும் தங்கள் மொழியைப் பேசக் கேட்டறியாத அந்நாகர், சாதுவன், தங்களோடு தங்கள் மொழியில் உரையாடக் கேட்கவே, அவனைககொன்றுண்ணும் கருத்தைக் கைவிட்டு, அவன்பால் பெருமதிப்புக் கொண்டனர். அகன்று நின்று அவனைத் தொழுதனர். “எம்மொழியறிந்து பேசவல்ல பெரியோனே! நாங்கள் நவில்வதைக் கேளாய். அகநாட்டில் உள்ள மலைமீது, எங்கள் குருமகன் உள்ளான். அவன்பால் வந்தருள் புரிக” என வேண்டிக்கொண்டனர். சாதுவனும், அவர் வேண்டுகோளை ஏற்று அவரைப் பின்தொடர்ந்து சென்றான்.

மதுக்குடங்களும், முடைநாற்றமும், எலும்புக்குவியலும் எங்கும் விரவிக்கிடக்க, அவற்றின் இடையே அமைந்ததொரு மேடைமீது, கரடி தன் காதற்பிணவோடு கூடியிருப்பதுபோல், உடலெல்லாம் மயிர்கள் அடர்ந்திருக்க, மனைவியோடு வீற்றிருந்த நாகர் தலைவன் முன் சாதுவனைக் கொண்டு நிறுத்தினர். சாதுவன் நாகர் குருமகனைக் கண்டான்; சிறிது நாழிகைக்கெல்லாம், நயமாகப் பேசி அவனையும் தன்வயத்தனாக்கிக்கொண்டான்; நாகர் தலைவன் சாதுவன்பால் அன்பு கொண்டு விட்டான். அவனே அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டான். “நீ யார்? இங்கு வந்த காரணம் யாது?” என அன்போடு வினவினான். சாதுவன் நிகழ்ந்ததைக் கூறினான். உடனே நாகர் தலைவன், நாகர் சிலரை விளித்து, “நம்பி, கடலில் அகப்பட்டுக் கேடுற்று வந்துள்ளான். இவன் வருத்தம் தீர, மதுவும் மாவின் இறைச்சியும் தாருங்கள்; இவன் மனம் மகிழும் வண்ணம் வேண்டுவன பிறவும் குறைவின்றிச் செய்யுங்கள்” எனப் பணித்தான். நாகர் தலைவன் கூறியதைக் கேட்ட சாதுவன், காதுகளைக் கைகளால் பொத்திக்கொண்டு, “அந்தோ! கேட்கத் தகாதன கேட்டுவிட்டேன். அன்ப நீ தரும் எதையும் யான் வேண்டேன்” என வெறுத்துக் கூறினான்.

சாதுவன் மதுவையும் மங்கையையும் மறுப்பது கண்ட குருமகன் கடுஞ்சினம் கொண்டான். “என்னால் அளிக்கக் கூடியனவற்றுள் தலையாயவற்றை அளிக்க முன் வந்தேன்; இவன் மறுத்துவிட்டான். நான் அளிக்க மறுப்பவரும் இவ்வுலகில் உளரோ! மறுத்தவர் உயிர் பிழைத்தலும் உண்டோ” என எண்ணிச் சினந்தது அவன் உள்ளம். உடனே சாதுவனப் பார்த்து, “புதியோனே! கள்ளும் கன்னியரும் இன்றி உயிர் வாழ்தல் உண்டோ? அவற்றினும் உயர்ந்தது உலகத்தில், உளதோ? உளதெனின் அதை நாங்கள் அடைதல் வேண்டும்; எமக்கு அதை இன்றே காட்டு” வெகுண்டு கூறினன்.

அறியாமை காரணமாகச் சினம் கொள்ளும் நாகர் தலைவன் நிலைகண்டு, சாதுவன் அவன்பால் இரக்கம் கொண்டான். அவனுக்கு அறிவூட்ட எண்ணினான். “நாகர் குலத்தலைவ! கள் அறிவைக் கெடுக்கும், கொலை அருளை அழிக்கும் என உணர்ந்து, உண்மை நெறிகண்ட உரவோர், அவற்றை அறவே களைந்து கைவிட்டனர். பிறந்தவர் இறப்பர்; இறந்தவர் பிறப்பவர்; இது உலகியல் உண்மை. உறங்கலும் விழித்தலும் போல், இறப்பும் பிறப்பும் இயல்பாய் நிகழும். இப்பிறவியில் நல்லறம் புரிந்தவர் மறுபிறவியில் இறவாப் பேருலகம் அடைந்து இன்புறுவர். இப்பிறவியில் கள்ளுண்டும், காம வெறி கொண்டும் அலைந்தவர், வரும் பிறவியில் நரகடைந்து அழிவர். இதை உணர்ந்தமையால், பெரியோர்கள் கள்ளையும் காமத்தையும் கை விட்டனர். இதை நீ உணரின் உயர்வாழ்வு பெறுவாய்” என உரைத்தான்.

சாதுவன் கூறிய நல்லுரை கேட்ட குருமகன் பேரொலி எழுப்பி நகைத்தான். பின்னர் சாதுவன நோக்கி, “வங்கம் ஊர்ந்து வந்த வணிக! உடலை விட்டு ஒடும் உயிர் மீண்டும் ஓர் உடலிற் சென்று புகும் என்கின்றனேயே! அது நடக்கக் கூடியதாமோ? கூடுமாயின் அது எங்ஙனம்? நான் அறிய நன்கு உரைப்பாயாக” என்றான். நாகர் தலைவனின் அறியாமை கண்டு அவன் பால் இரக்கங்கொண்ட சாதுவன், “குருமகனே! கூறுகிறேன்; கோபம் கொள்ளாது கேள். உடலில் உயிர் நிற்கும்போது உடல் தனக்கு நேரும் சிறு துன்பத்தையும் உணருகிறது. அவ்வாறு உணரும் அவ்வுடல், உயிர் நீங்கப்பெற்ற பின்னர்ப், பெருநெருப்பில் இட்டுப் பொசுக்கினும், அது அத்துன்பத்தை உணருவதில்லை. அதனால் அந்நிலையில், உடலுக்கு உண்டாம் ஊறுபாட்டினை உணரும் ஒன்று, அவ்வுடல்விட்டு நீங்கிவிட்டது. என்பது புலப்படுமன்றோ? அவ்வாறு நீங்கியதே உயிராம். குருமகனே! இன்னமும் கேள். ஓர் இடத்தைவிட்டு ஒடியவர் எப்போதும் ஒடிக்கொண்டே இரார். இறுதியில் யாண்டேனும் ஒரிடத்தில் உட்கார்ந்தே திருவர். இது. உலகியல் உண்மை. இவ்வுண்மையை நான் மட்டுமன்று, இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் உணர்வர். உயிர், உடலை விட்டு மிக்க நெடுந்துரம் செல்வதை, நீ கனவிலும் கண்டிருப்பை; அவ்வாறு போகும் உயிர், அது அதுகாறும் புகுந்திருந்த உடல் செய்த வினைப் பயனுக்கு ஏற்ற உடலில் சென்று புகும். இவ்வுண்மையை உன் உள்ளத்தில் நிறுத்தி உணர்தல் வேண்டும்” என்று விளக்கம் அளித்தான்.

வாணிகன் கூறிய விளக்கத்தைக் கேட்டான் குரு மகன். உடனே இருக்கை விட்டெழுந்து, சாதுவன் கால்களில் வீழ்ந்து வணங்கினான். “நல்லறிவுடையோனே! நான் அறிய அறம் உரைத்த உன்னை, ஒன்றுவேண்டுகிறேன். கள்ளையும், ஊனையும் கைவிட்டால் என்உடல் வாழாது; என் உடல் வாழாதாயின் என் உயிரும் வாழாது. ஆகவே, அவ்வறங்களை விடுத்து, என்னுல் ஏற்றுச் செய்யவல்ல வேறு அறங்களை அறிவிப்பாயாக” என வேண்டிக் கொண்டான்.

நாகர் தலைவன் நல்லறிவு பெற்றமை கண்டு சாதுவன் பெருமகிழ்வு எய்தினான். “நாக! நின் நிலைக்கேற்கும் நல்லறங்களும் உள. வாணிகம் கருதிவரும் மக்கள் வங்கம் கவிழ, இவண்வந்தடைவாராயின், அவரைக் கொன்றுண்பதைக் கைவிட்டு அவர் தம்மூரடைய அவர்க்குத் துணைபுரிவாயாக. முதுமை பெற்று இறக்கும் நிலை புற்ற மாவினம் தவிர்த்து, வேறு விலங்கினங்களை வேட்டையாடிக் கொல்லாதே; ஏற்புடைய இவற்றின் வழி நின்று விழுமிய வாழ்வு பெறுவாயாக” என்று கூறினான்.

சாதுவன் கூறியன கேட்ட நாகர் தலைவன், “சாதுவ! நீ சாற்றிய நல்லறம் எமக்குச் சாலவும் பொருந்தும்; இன்று முதல் நீ காட்டிய வழியில் நின்று அறம்வளர்ப்பேன். எமக்கு அறம் உரைத்து எம்மை வாழ்வித்த உனக்கு யாங்கள் என்ன கைம்மாறு செய்யவல்லேம்? ஐய! இவ்வழி வரும் கலங்களைக் கவிழ்த்துக் கொள்ளை யடித்துக் குவித்து வைத்த அகில், ஆரம், அருமணிகள் அளவிலாதன உள. அவற்றை உடன்கொண்டு சென்று ஊரடைந்து இன்புறுவாயாக” எனவேண்டி, அவ்வான் பொருகளை அவன்பால் ஒப்படைத்தான். சின்னாட்களுக் கெல்லாம், சந்திர தத்தனுடைய வங்கம் அவ்வழியாக வந்தது: நாகர், அதைத் தடுத்து நிறுத்திச் சாதுவனயும், தாம் சேர்த்தளித்த செல்வங்களையும் அதில் சேர்த்து வழியனுப்பினர்.

சாதுவன், செல்வத்தோடு புகார் வந்து சேர்ந்தான். கணவன் வரவை எதிர்நோக்கியிருந்த ஆதிரை, அசரீரி கூறியவாறே, அவன் உயிர் பிழைத்து வந்ததோடு, உறு பொருளும் உடன் கொண்டு வந்தமைகண்டு களிப்புற்றாள். கணவன் ஈட்டி வந்தளித்த இரு நிதியை, வருவார்க் கெல்லாம் வாரி வழங்கி, விழுமிய வாழ்வு வாழ்ந்தாள். ஆதிரையின் கற்பின் திறம் கண்டு பாராட்டிப் பெருமையளித்த காவிரிப்பூம்பட்டினத்துப் பெருங்குடி மக்கள், அவளாற்றும் இல்லறச் சிறப்பின் இனிமையையும் கண்டு வியந்து பாராட்டினர்.

ஆதிரை மனத்தக்க மாண்புடையவளாய் வாழ்ந்திருந்தாள். அப்போது, அவள் பெருமையைப் பார் அறியப் பண்ணும் பெருஞ்செயல் ஒன்று நிகழ்ந்தது. புகார் நகரில் பரத்தையர் சேரியில் மாதவி என்பாள் வாழ்ந்திருந்தாள். அவளுக்கு மணிமேகலை எனும் பெயர் பூண்ட மகள் ஒருத்தி இருந்தாள். அவள் கணிகையர் குலத்தில் பிறந்தும் ஒட்டுப் பற்றற உலகத்தைத் துறந்த உரவோர்களும் வியக்கும் வகையில் துறவு வாழ்க்கை மேற்கொண்டு விளங்கினாள். அவள், ஒருநாள் மணி பல்லவம் சென்றிருந்தபோது, ஆங்குத் தெய்வத் திருவருளால் அமுதசுரபி எனும் பெயர் வாய்ந்த பிச்சைப் பாத்திரம் ஒன்று கிடைத்தது. அமிழ்தம் நிகர் உணவை அள்ள அள்ளக் குறையாது அளிக்கும் அருமை வாய்ந்தது அது. மணிமேகலை, புகார் நகரத்து மக்களைப்பற்றி வருத்தும் பசிப்பிணியை அதன் துணையால் போக்க விரும்பி, அவ்வமுத சுரபியோடு வீதியில் புகுந்தாள். அப்போது அவளுடன் இருந்த காயசண்டிகை எனும் பெயர்பூண்ட அவள் தோழி, அவளுக்கு ஆதிரையின் வரலாற்றை விளங்க உரைத்து, “மாபெரும் பாத்திரம் பெற்ற மடக்கொடி! அவ்வாதிரை, இவ்வமுத சுரபியில் முதற் பிச்சையிடின், அது அள்ள அள்ளக் குறையாது ஆருயிரை ஒம்பும். ஆகவே மணிமேகலை! முதற்கண் அவள் மனை சென்று பிச்சையேற்றுப், பின்னர்ப் பசிப்பிணி ஒழிக்க முற்படுவாயாக” என வேண்டிக் கொண்டாள்.

மணிமேகலை ஆதிரையின் பெருமையறிந்து அவள் பால் வழிபாட்டன்பு கொண்டாள். உடனே கையில் அமுதசுரபியோடு ஆதிரையின் மனை முன் சென்று, ஆடாது அசையாது நின்றாள். ஆருயிர் ஒம்பும் அருமை வாய்ந்த அமுதசுரபியில் முதற் பிச்சையிடும் மாபெரும் பேறு தனக்கு வாய்த்தமை கண்டு ஆதிரை அகம்மிக மகிழ்ந்தாள். மனைமுன் வந்து நிற்கும் மணிமேகலையை வலம்வந்து “பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக” என வாழ்த்தி அமுதசுரபி நிறைய, ஆருயிர் மருந்தாம் அமுதை அள்ளி அள்ளி இட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாத்தன்_கதைகள்/1._ஆதிரை&oldid=1350977" இலிருந்து மீள்விக்கப்பட்டது