சாத்தன் கதைகள்/2. ஆபுத்திரன்



2. ஆபுத்திரன்

வாரணாசி என வழங்கப்பெறும் காசிமாநகரில் அபஞ்சிகன் எனும் அந்தணன் ஒருவன் வாழ்ந்திருந்தான். நான்மறைகளை நன்கு கற்று அவற்றின் உட்பொருளை விளங்க விரித்துரைக்க வல்லவன் அவன். அதனல் அவனை அருமறை ஆசிரியன் என அனைவரும் பாராட்டிப் பெருமைசெய்தனர். ஆரணம் அறிந்த பெரியோனாகிய அவனுக்குப் பிறர் முன் ஏறுபோல் பீடு நடை நடக்கும் பெருமை இல்லாயிற்று. அவனுக்கு மனைவியாக வாய்த்தவள்பால் மனமாட்சிக்குரிய மாண்புகள் இலவாயின. சாலி எனப் பெயர் பூண்ட அப்பார்ப்பனி, பிறப்பொழுக்கம் இழந்து பெரும்பழி பூண்டாள். கற்புநெறி தவறிக் கணவனுக்குக் குற்றம் இழைத்தாள்.

நனி இளமைப் பருவத்தில், அறியாமையால் நெறி தவறிவிட்ட அவள், பின்னர்த்தன் பிழையை உணர்ந்தாள். அப்பிழையால் தனக்குக் கேடு நேர்வதோடு, கணவன் வாழ்விற்குக் களங்கம் நேர்ந்துவிட்டதை உணர்ந்து உள்ளம் வருந்தினாள்; பிழை தீர யாதேனும் வழியிராதா என ஏங்கினாள். தமிழகத்தின் தென்கோடிக் கண்ணதாய குமரி முனையில் நீராடினல் குற்றம் தீரும் என அறிந்தார் சிலர் கூறக்கேட்டாள். குமரித் துறை நீராடும் நினைவே நெஞ்சில் நிலைத்து நிற்க, அது வாய்க்கும் நாளை எதிர்நோக்கியிருந்தாள். அந்நிலையில் வாரணாசி வாழ்வார் சிலர், வடநாடு நீங்கித் தென்னாடு செல்கின்றனர் என அறிந்தாள். உடனே, அவரோடு தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டு விட்டாள்.

சாலி, காசிநகர் விட்டுக் கால் கடுக கடந்து தமிழ், நாடடைந்தாள். சோணாட்டைக் கடந்தாள். பாண்டி நாட்டின் பெரும் பகுதியையும் கடந்து விட்டாள். பாண்டி மன்னருக்குப் பெருமை தரும் அருஞ்செல்வமாய முத்துக்களைத் தரும் சிறப்பு வாய்ந்த கொற்கைத் துறையையும் கடந்து தென் திசை நோக்கிச் செல்லத் தொடங்கினாள். ஒரு காவதம் கூடக் கடந்திருக்க மாட்டாள். அவளால் மேலே, நடக்க இயலவில்லை; காசி நகர் விட்டு நீங்கும்போதே, சாலி கருவுற்றிருந்தாள். இப்போது கருவுயிர்க்கும் காலம் நெருங்கியிருந்தது, கால்கள் நடை மெலிந்தன, உடல் தளர்ந்தது, உள்ளம் சோர்ந்தது, அண்மையில் இருந்த ஒர் ஆயர்பாடியை மெல்ல அணுகினாள். அப்பாடியை அடுத்திருந்த மலர்ச் சோலையில் ஓர் ஆண்மகவை ஈன்றாள். முறை கேடுற்றுப் பிறந்த மகவாதலாலும், பிறந்த மகவைப் பேணிக் காக்கும் ஆற்றல், தனக்கு அப்போது இல்லை யாதலாலும், அம்மகவின்பால் அவளுக்கு அன்பு சுரக்க வில்லை. அருளையும் அறத்தையும் எண்ணிப் பாராது, பிறந்த மகவை, அம் மலர்ச் சோலையில் மறைவிடம் ஒன்றில் இட்டு அகன்றாள்.

தனித்துவிடப் பெற்ற மகவு, தாய்ப்பால் பெறாது பசியால் துடித்து, வாய்விட்டுக் கூவி அழத் தொடங்கிற்று. குழவியின் கூக்குரல் கேட்ட கன்றீன்ற பசு ஒன்று ஆங்கு ஓடி வந்தது. குழவியைக் கண்டது; அதன்பால் அப்பசுவிற்கு அன்பு சுரந்தது. தான் ஈன்ற கன்றைக் கண்டதேபோல் களிப்புற்றது. அன்பொழுகத் தன் நாவால் பலமுறை நக்கிற்று. தன் கன்றுண்ணும் பாலை, அக்குழவிக்கு ஊட்டிற்று. பசுவின்பால் குடித்துப் பசியொழித்தது அப்பச்சிளங் குழவி இவ்வாறே இரவு பகல் அகலாமல், அக்குழவியைக் காத்துக் கிடந்தது அக் காரான்.

இவ்வாறு நாட்கள் ஏழு கழிந்தன. பாண்டி நாட்டு வயனங்கோட்டில் வாழும் இளம்பூதியென்ற அந்தணன் அவ்வழியாகச் சென்றான். அவன் காதில் குழவியின் அழுகை ஒலிகேட்டது. மக்கள் வழங்கா இடத்தில் மகவின் கூக்குரல் கேட்டு அந்தணன் சிந்தை நொந்தான்; அக் குரல் வந்த இடத்திற்குக் காதலியோடு விரைந்து சென்றான். ஆங்குப் பசு காத்து நிற்கும் பச்சிளங் குழவியைக் கண்டான். பெரு மகிழ்வு கொண்டான். பிள்களப் பேறற்ற தனக்கு, இறைவன் அளித்த பேரருட் செல்வம் அது என எண்ணி அக மகிழ்ந்தான். ‘இவன் ஆமகன் அல்லன்; :என் மகன்’ எனக் கூறி களிகூர்ந்தான். குழவியை வாரி அணைத்து, காதலி கையில் ஈந்து, “நம்பி பிறந்தான்; பொலிக நம் கிளை” என வாழ்த்தினான்.

அந்தணன், அருமையாகக் கிடைத்த குழந்தையோடு தன்னூர் அடைந்தான். தமரைக் கூட்டினான். மகப்பேறுற்ற மாட்சியை அவர்க்கு அறிவித்தான், ஆகாத்தோம்பிய அருமையை நினைந்து மகனுக்கு ஆபுத்திரன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தான். இளம் பூதியும் அவன் இல்லக்கிழத்தியும், ஆபுத்திரனைப் பெற்றமகனினும் பேரன்பு காட்டிப் பேணி வளர்த்தனர். ஆபுத்திரன் வளர்ந்து பெரியவனான், மறையோர் முறைப்படி முந்நூல் அணிவதன் முன்னர், மகன், ஆயகலைகள் அறுபத்துநான்கிலும் ஆழ்ந்த அறிவுடையனாதல் வேண்டும் என இளம்பூதி விரும்பினன். நல்லாசிரியனைத் தேடி நம்பியை அவன்பால் அனுப்பி வைத்தான். ஆசிரியன்பால், ஆபுத்திரன் அந்தணர்க்குரிய அரு மறை அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். முந்நூல் அணியும் விழாவும் முறைப்படி நடந்தேறியது. ஆபுத்திரன் அறிவும் ஒழுக்கமும் கண்டு அனைவரும் போற்றினர். அது கண்டு அவனைப்பேணி வளர்த்த அந்தணனும் அவன் மனைவியும் அகம் நிறை மகிழ் வெய்தினர்.

சில நாட்கள் சென்றன. ஒருநாள், ஆபுத்திரன் வயனங்கோட்டு வீதி வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த அந்தணன் ஒருவன் வீட்டிலிருந்து, ஆவொன்று அழுது கதறும் ஒலி வந்து ஒலித்தது. அது கேட்டு, ஆபுத்திரன் அம் மனையுட் புகுந்தான். அங்கே ஒரு வேள்விச்சாலை அமைக்கப் பெற்றிருந்தது. வேள்வித் தூணில் ஆவொன்று கட்டப் பெற்றிருந்தது. பன்னிற மலர்கொண்டு பின்னப்பெற்ற மாலை, அப்பசுவின் கழுத்திலும் கோட்டிலும் சூட்டப் பெற்றிருந்தது. சிறிது. பொழுதிற்கெல்லாம் தன்னே வெட்டி, வேள்வித்தீயில் இட்டுச் சுட்டுப் பொசுக்கித் தின்று விடுவாரே என்ற எண்ணம் அகத்தில் எழ, அப்பசு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தது. வேடர்கள் வீசும் அம்பினுக்கு அஞ்சி ஓடி, இறுதியில் அவர் விரித்த வலையிடை அகப்பட்டு ஆறாத்துயர் கொள்ளும் மான் போல் மனத்துயர் கொண்டு, “அம்மா” என அழைக்கும் அதன் நில கண்டு, ஆபுத்திரன் உள்ளம் நெகிழ்ந்தது. அவன் உள்ளம் உருகிற்று; அவன் கண்களில் நீர் ஊறிற்று. அப்பசு, உயிர் பிழைத்துப் போக வேண்டும் என்ற உணர்வு அவன் உள்ளத்தில் உரம் பெற்றது.

அவ்வூர் வாழ் அந்தணர்களின் இயல்பறிந்தவன் ஆபுத்திரன். ஆக் கொலை புரிந்து அவி சொறிந்து கேட்கும் வேள்வியில் வேட்கை மிக்குடையவர் அவ் வந்தணர்; அதனால் அவர்களுக்கு அறிவுறுத்தி, வேள்வியை நிறுத்தி, வேள்விப் பசுவை விடுவிப்பது இயலாது என்பதை அவன் அறிவான். அதனால் அம்முறையை விரும்பாது ஆவை, அவர் அறியாதவாறு விடுவிக்கத் துணிந்தான். களவு கேடுடைத்து என்பதை அறிந்திருந்தும் ஆவை விடுவிக்கும் அருள் உணர்வு மிக்கமையால், ஆபுத்திரன் களவுநெறியைக் கைக் கொள்ளத் துணிந்தான்.

ஆவேள்வி நடைபெறும் ஆங்குச் சென்ற ஆபுத்திரன், தன் உள்ளக் கருத்தை ஒருவரும் அறியாவாறு அடக்கிக்கொண்டான். இரவுவரும் வரை எவரும் காணுதவாறு எங்கோ ஒளிந்திருந்ததான். இரவின் இடையா மத்தில் எழுந்தான்; ஆவைக் கட்டவிழ்த்துக் கையிற் பற்றிக்கொண்டான். ஊர் எல்லையைக் கடந்தான். காடும் மலையும் செறிந்து கடத்தற் கரியதாய கொடிய வழியே சென்று கொண்டிருந்தான்.

அந்தணர் விழித்துக்கொண்டு நோக்கிய போது வேள்விச் சாலையில் வேள்விப் பசுவைக் கண்டிலர்; உடனே அறிவற்றவரும், கொலைத் தொழிலுக்கு அஞ்சாதவரும் ஆய கொடியோர் துணைகொண்டு, அந்தணர் ஆவைத் தேடிப் புறப்பட்டனர். ஆவின் அடிச்சுவட்டினை அடையாளமாகக் கொண்டு விரைந்து சென்றனர். காட்டு வழியில், கடத்தற்கரிய இடத்தில், ஆவோடு செல்லும் ஆபுத்திரனைக் கண்டு, ஆவோடு அவனையும் கைப்பற்றிக் கொண்டனர். “ஏடா! ஏன் இத்தீங்கு புரிந்தனை; புலையர் புரியும் பொல்லாங்கு புரிந்த நீ அந்தணர் குலத்தவன் ஆகாய். ஆவைக் களவாடல் அந்தணர் அறியாதது. அதைப் புலையரே அறிவர்; அதை நீ புரிந்து விட்டாய்; அடாதது புரிந்த நீ, அந்தணர் குலத்தினின்றும் நீக்கப் படுவாய்” எனக் கடிந்துரைத்தனர். கைக் கோலால் நையப் புடைத்தனர் அந்தணர். அடிபொறுக்க மாட்டாது ஆபுத்திரன் அலறித்துடித்தான். நிகழ்வதைப் பார்த்துக் கொண்டு நின்ற ஆவிற்கு ஆறாச் சினம் பிறந்துவிட்டது. உடனே, ஆபுத்திரனைச் சுற்றி நின்று அடிப்பவர்களுக் குத் தலைமைதாங்கி நின்ற அந்தணர் மீது பாய்ந்தது. கோட்டால்குத்தி அவன் குடரைச் சரித்தது. காற்றெனப் பாய்ந்து காட்டுள் நுழைந்து மறைந்துவிட்டது.

ஆவின் செயலால் அந்தணர், ஆபுத்திரனே மேலும் கடுமையாகத் தாக்கத் தலைப்பட்டனர். அவர்கள் அடிப் பதைத் தாங்கிக் கொண்டவாறே ஆபுத்திரன் அவர்களைப் பார்த்து, “அந்தணப் பெருமக்களே! ஆத்திரம் கொண்டு அடிக்காதீர்கள். நான் கூறுவனவற்றைச் சினம் விடுத்துச் சிந்தையில் கொள்ளுங்கள். ஆவினங்களுக்கு அறுகம் புல்லைத் தேடி நாம் அளிப்பதில்லை. ‘மேய்ச்சல் நிலம்’ என அரசன் விட்ட இடங்களில் புல்லுண்டு உயிர்வாழ்கின்றன. ஆனல் அவை, நம் மக்கள் இனத்திற்கு அளிக்கும் நன்மைகள், அம்மம்ம! நம்மால் அளவிட்டுக் கூறத்தக்கன அல்ல. மக்கள் உயிர்கொண்டு உலகில் தோன்றும் அந்நாள் முதல், அவர்கள் மாண்டு மறையும் அந்நாள் வரை, அவர்க்கு, அறுசுவை உணவினும் அளவிலாப் பயன் நிறைந்த பால் உணவை ஊட்டி வளர்க்கின்றன பசுக்கள். பால் சுரத்தல் தன் பிறவிக்கடன் எனக் கருதி அன்போடு அளிக்கும் ஆவினத்தோடு மக்கள், பகைமை பாராட்டல் பண்பாமோ? அவற்றைக் கொன்று அவிசொரிதல் அறமாமோ? அருள் உடையார் எனப் பாராட்டப்பெறும் அந்தணர் குலத்தவர்க்கு அழகாமோ? அந்தணப் பெருமக்களே! கூறுங்கள்” எனக் கூறினான்.

ஆபுத்திரன் கூறிய அன்புரைகள் அந்தணர் செவியுட் புகுந்தில. அருமறை அறிந்த தமக்கு அறியாச் சிறுவன் அறிவுரை கூறுவதா என ஆத்திரம் கொண்டனர்; “ஏடா! நீ இகழ்ந்தது எம்மை அன்று; உலகைப்படைத்த உயர்ந்தோன் எமக்கு உவந்தளித்த நான்மறைகளையே நீ இகழ்ந்தனை; அருமறைகளைப் பழிப்பவர் அந்தணர் குலத்தவராகார்; நீ, அப்பசு வீன்ற மகனே அல்லது பார்பன மகன் அல்லன்” எனக்கூறிப் பழித்தனர்.

அந்தணர், தன்னை ஆமகன் எனக் கூறிப் பழிப்பது கண்டு அவர்பால் சினம் கொண்டிலன்; மாறாக அவர் அறியாமையை எண்ணி நகைத்தான்; பின்னர், அப்பார்ப்பனப் பெரியோர்களைப் பார்த்து, “நான்மறை வல்ல நல்லோர்களே! நான் மறைக்காவலர் என உங்களால் போற்றி வணங்கப்பெறும் அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசம்பளன் என்ற இந்நால்வர் வரலாற்றினை நீங்கள் அறிவீர்கள்; அசலன், ஆ வயிற்றில் வந்தவன்; சிருங்கி, மான் வயிற்றில் பிறந்தவன். விரிஞ்சி, புலிக்குப் பிறந்தவன்; கேசகம்பளன், நரியீன்ற நல்லோன் என நூல்கள் நுவல்கின்றன. ஆவுக்கும், மானுக்கும், புலிக்கும்; நரிக்கும் பிறந்தவர்களெல்லாம் பெரு மறைத் தலைவர் எனப் போற்றப்படுவராயின், ஆவிற்குப் பிறந்த அடியேன் மட்டும் பழியுடையன் ஆவனே? ஆழச் சிந்தித்து அமைதி காணுங்கள்” எனத் தெளிவுரை தந்தான்.

ஆபுத்திரன் கூறிய அவ்வுரையை மறுக்கும் திறன் அந்தணர்க்கு இல்லாயிற்று. அறியாச் சிறுவன் ஒருவன், ஆசிரியன்மார் என்ற பாராட்டினைப் பெற்ற பெரியோர்களாய தங்களை வாயடங்கச் செய்து விட்டனனே எனச் சினந்தனர். செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டனர். 

சிறிது பொழுது ஆங்கு அமைதி நிலவிற்று. அறிவால் அடக்கமாட்டா ஆபுத்திரனைப் பிறப்பின் இழிவு கூறி அடக்க முன்வந்தான் ஒர் அந்தணன். “பெரியோர்களே! இவன் பிறப்பு வரலாற்றை நான் அறிவேன். ஒருநாள் வடமொழி வழங்கும் பார்ப்பனி ஒருத்தியை வழியிடைக்கண்டேன். வழிநடை வருத்தமோடு வாடிய மேனியும் உடையளாய்க் காணப்பட்டாள். குமரி முனையில் நீராடிக் குமரித் தெய்வத்தை வணங்கி வந்து கொண்டிருந்தாள். அவளை எதிர்ப்பட்டு “நின் ஊர் யாது? ஈங்கு வந்த காரணம் யாது”? என வினவினேன். அதற்கு அவள், “நான் வாரணாசி வாழ்வேன்; அந்நகர் அருமறை ஆசிரியரின் மனைவி நான்; குலவொழுக்கத் திற்குக்கேடு செய்து விட்டேன். அப்பழி நீக்கத் தென்னாடு நோக்கி வந்தார் சிலரோடு குமரியாட வந்தேன். வரும் வழியில், கொற்கைமாநகர்க்குத் தெற்கே ஒரு காத வழித் தொலைவில் உள்ள ஆயர்பாடியில் ஓர் ஆண்மகவை ஈன்றேன். ஈன்ற மகவிற்கு இரங்காது ஆங்கே இட்டு, வந்துவிட்டேன்; இதுவே என் வரலாறு” என இயம்பினள். பிறப்பொழுக்கம் கெட்ட அவள் பெற்ற மகனே இவன். நான் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்ற அச்சத்தால் இதுகாறும் இதைக் கூறிற்றிலேன். நீசன் இவன்! நீவிர் இவனைத் தீண்டன் மின்” எனக் கூறினான். அதுகேட்ட அந்தணர் அனைவரும் ஆபுத்திரன ஒரு சேர இழித்தும் பழித்தும் நகைத்தனர்.

தன்னை நகைத்த அந்தணர் செயல்கண்டு ஆபுத்திரனும் நகைத்தான்; “ஒழுக்கம் கெட்டவள் மகன் எனக் கூறி என்னைப் பழிக்கும் உயர்ந்தோர்களே! உங்கள் நிலை என்ன? நீங்கள் போற்றும் உங்களுக்கு, உயர்வளிக்கும் நான்மறைகளை அளித்த ஆசிரியப் பெரு மக்களாகிய வசிட்டர் அகத்தியர் இருவரும், கடவுட் கணிகையாய திலோத்தமைக்குப் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டீர்களோ? மறையோர் குலத்தின் மாண்பு இதுவாகவும், என்னேப் பெற்ற சாலிக்குப் பிழை கற்பிக்கும் உம் பேதமையை என்னென்பேன்” எனக் கூறி எள்ளி நகைத்தான்.

அந்தணர் வாயடங்கினர்; ஆயினும் அவர் ஆணவம் ஆபுத்திரன் கூறிய அறிவு விளக்கங்களை அறிந்து அவனை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து விட்டது. அந்நிலையில் அங்கு வந்த இளம் பூதியும், தன் பிறப்பை ஆபுத்திரன் தானே எடுத்துரைக்கக் கேட்டான்; அந்தணர் குலத்திற்கு ஏற்றவனாகன் இவன் என அவனும் கருதி ஆபுத்திரனைக் கைவிட்டான்.

ஆபுத்திரனை ஆங்கே விடுத்து அந்தணர்கள் தம்மூர் அடைந்தனர். ஆபுத்திரன் செல்லிடம் அறியாது சிறிது பொழுது திகைத்தான். பின்னர்ப் பார்ப்பார்க் கேற்றதாய பிச்சையேற்றுண்ணும் வாழ்க்கை மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்று பிச்சையேற்றான். அவன் அறிவும் ஒழுக்கமும் அறிந்த மக்கள், அவனுக்கு மகிழ்ந்து உணவிட்டனர். ஆனால் அந்தணர் வாழும் சேரிகளில் அவன் அல்லற் பட வேண்டியதாயிற்று. அவன் வரலாறு அறிந்த அந்தணர்கள், “ஆ கவர்ந்த கள்வன்” எனக் கூறிப் பழித்து, அவன் பிச்சைப் பாத்திரத்தில் கல்லிட்டுக் கொடுமை செய்தனர்.

இவ்வாறு ஊர் ஊராக அலந்து இறுதியில் மதுரை வந்தடைந்தான். ஆங்குச் சிந்தாதேவி என வழங்கப் பெறும் கலையின் செல்வி வீற்றிருக்கும் கலைக்கோயில் முன்னிருந்த மன்றத்தை வாழிடமாகக் கொண்டான். மதுரை வீதிகளில் புகுந்து, மாசற்றோர் வாழும் மனைகள் தோறும் சென்று பிச்சை ஏற்றான்; ஏற்றுப் பெற்ற உணவில், பெரும் பகுதியைக் கண்ணொளி இழந்தவர், காது கேட்காதவர், கால்முடம் பட்டவர், பேணத்தக் கோரைப் பெறாதவர், பிணியால் பற்றப்பெற்றோர் ஆகியோர்க்கு அளித்துவிட்டு, எஞ்சியதைத்தான் உண்டு, இரவில், ஓட்டைத் தலைக்கீழ்க்கொண்டு உறங்கிக் காலங் கழித்து வந்தான்.

ஒரு நாள் இரவு பெருமழை பெய்து கொண்டிருந்தது. இடையாமம் வந்துற்றது. அப்போது சிலர் ஓடி வந்து ஊரம்பலத்துட் புகுந்தனர். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஆபுத்திரனே எழுப்பினர், அவன் அடியில் விழ்ந்து வணங்கி, ‘வயிறுகாய் பெரும்பசியால் வாடுகிறோம்; உயிர், வாழ உணவளியுங்கள்’ என வேண்டி நின்றனர். அவர்கள் நிலைகண்டு இரங்கினான் ஆபுத்திரன். ஆனால், அவர்க்கு அப்போது ஏதும் அளிக்க முடியாத தன்நிலைக்கு வருந்தினான். பிச்சையேற்று வந்ததை அளிப்பதல்லது, பொருளீட்டி வந்ததை அளித்தறியான் அவன். அவ்வாய்ப்பு அவனுக்கு இல்லை. அதனால், பசியால் வருந்துவோர்க்கு உதவ மாட்டாமை கண்டு உள்ளம் துடித்து உறுதுயர் உற்றான்.

ஆபுத்திரன், இரப்போர்க்கு ஈயமாட்டான் ஆயினும், ஈயத் துடிக்கும் அவன் உள்ளத் தூய்மையை, ஆங்குக் கோயில் கொண்டிருந்த சிந்தாதேவி கண்டாள். அவனுக்கு உதவ முன் வந்தாள். “ஆபுத்திர! வருந் தாதே. இதோ என் கையில் ஒரு பிச்சைக்கலம் உள்ளது. நாடு வறுமையுறினும், இவ்வோடு வறுமையுறாது. வாங்குவோர் கை வருந்து மேயல்லாது, வழங்கும் இவ்வோடு வருந்தாது. இதன் துணையால், உயிர்களின் பசி நோயைத் துடைப்பாய்: எழுந்து வந்து எடுத்துக்கொள்” எனக் கூறிக் கொடுத்து மறைந்தாள். சிந்தாதேவியின் நந்தாவுதவியை நினைந்து, ஆபுத்திரன் அவளை நாவாரப் பாடிப் பரவினான்; பசித்து வந்தோர் நோயை அப்பாத் திரத்தின் துணையால் போக்கினன். வழங்க வழங்க வற்றாது சுரக்கும் பாத்திரம் பெற்றமையால், வாங்குவோர் தொகை மிகுந்தது. மக்களேயல்லாமல், மாக்களும், மரம் வாழ் பறவைகளும் அவன் அளிக்கும் அவ்வுணவை வேட்டு, அம்பலத்தில் குழுமின. பழுமரம் தேடிவந்தடையும் பறவைத் திரள்களென, உயிர்களின் கூட்டம் ஊரம் பலத்தில் மிகுந்தது. உண்ணும் ஒலி, ஆங்கு எப்பொழுதும் ஓவென ஒலித்தவாறே இருந்தது.

ஆபுத்திரன் ஆற்றும் நல்லறத்தால், இந்திரன் வீற்றிருக்கும் பாண்டு கம்பளம் நடுங்கிற்று. அதன் நடுக் கத்தால், ஆபுத்திரன் அறப் பெருமையை அறிந்த வானோர் தலைவன், அவனுக்கு வேண்டுவ அளிக்க விரும்பினன். மறையோன் உருவில் மண்ணுலகெய்தினான். மதுரை மன்றம் அடைந்து ஆபுத்திரனைக் கண்டான். இந்திரன், “யான் நீ ஆற்றும் அறத்திற்குரிய பயனை உனக்கு அளிக்க வந்தேன். நீ விரும்புவது யாது?” என வினவினன். இந்திரன் வினவியது கேட்டு ஆபுத்திரன் விலாவெலும்பொடிய நகைத்துவிட்டு “ஈண்டு ஈட்டிய அறத்தின் பயனை இருந்து துய்ப்போரல்லது அறஞ்செய்வோரோ புறங்காத்து ஒம்புவோரோ நற்றவம் ஆற்றுவோரோ பற்றற முயல்வோரா வாழ்ந் தறியா வானுலகத்து வேந்தே வருத்தி வருவாரின் வாட்டும் பசியைப் போக்கி, அவர் மகிழ் முகம் கண்டு இன்புற உதவும் இத் தெய்வக்கடிஞை ஒன்றே போதும். இதனினும் சிறந்தது உன்னால் அருளத்தக்கது யாது உளது. நீ விரும்பி அளிப்பன எதையும் நான் வேண்டேன்” என அவனை மதியாது கூறி மறுத்து விட்டான்.

ஆபுத்திரன் ஆணவம் கொண்டு உரைத்த உரைகளை இந்திரன் கேட்டான். “என்பால் வரம்வேண்டி இருந்தவம் புரிவோர் பல்லோர்; ஆனால் இவனே, நான் வருந்தி வந்தளிப்பதையும் வேண்டேன் என வெறுத்து விட்டான். வேண்டாமையாகிய அவ்விழுச் செல்வத்தை இவனுக்கு அளிப்பது இவன் கையில் உள்ள அப்பிச்சை ஒடு. அதைப் பயனிலதாக்கி இவன் செருக்கடக்குதல் வேண்டும்; அதை இன்றே செய்வேன்” எனச் சிந்தை யுட்கொண்டான். உடனே மக்கள் விரும்பும் மழை, அவர் விரும்புமளவு விரும்பும் காலத்தில் பெய்க என ஆணையிட்டான். அதனுல் பன்னிரண்டு ஆண்டுக் காலமாக, மழை பெருது வறுமையுற்ற பாண்டி நாட்டில் பல்வகை வளங்களும் பெருகின. பசியால் வருத்தும் உயிரைப் பார்ப்பது அரிதாயிற்று. அம்பலத்தில் அதுகாறும் கேட்டிருந்த ஊணொலி அரவம் அடங்கி ஒடுங்கிவிட்டது. செல்வச் செருக்கால் செய்தொழில் இழத்து காமுகராகிக் கணிகையர் பின்திரிவோரும், சுடு சொல் வழங்கி அடுதொழில் புரிவோரும், வழிநடை புரிவோரும் வந்திருந்து வம்புமொழி பேசி வட்டும் சூதும் ஆடும் இடமாய் வனப்பிழந்து விட்டது.

பசி நோயுற்று வருவாரைப் பெறாமையால் ஆபுத்திரன் அம்பலத்தை விட்டு அகன்றான்; ஊர் ஊராக அலைந்து திரிந்து, “உணவு உளது; உண்பார் உளரோ” என வினவிச் சென்றான்; எவரும் அவன்முன் எதிர்ப் பட்டிலர். பெருங்கூட்டமாய் வந்து, அவன் அளிக்கும் உணவைப் பெற நெடிது காத்திருந்த நிலைபோய், அவனைக் கண்டு, “உயிர் கொண்டு உள்ளனையோ” என வினவுவார் ஒருவரும் இலராகும் இழிநிலை வந்துற்றது. அதுமட்டுமன்று; ஊர்தோறும் சென்று உண்போரைத் தேடி அலையும் அவன் செயல்கண்டு, “யார் இவன்? பித்தம் பிடித்தவனோ” எனப் பழிக்கவும் தலைப்பட்டனர், மக்கள். அந்நிலை, ஆபுத்திரனுக்கு ஆற்றொணாத் துயர் அளித்தது. திரண்ட செல்வத்தைப் பெருங்கடல் கொள்ளத் தனித்திருந்து வருந்தும் செல்வன்போல், ஆபுத்திரன் சிந்தை நொந்து, செல்லிடம் அறியாது சென்றுகொண்டே இருந்தான்.

ஒரு நாள், கடல் கடந்த நாடுகளினின்று கலம் ஊர்ந்து வந்தோர் சிலர் ஆபுத்திரனேக் கண்டு அவன் மனத்துயர் அறிந்தனர்; அவர்கள் தாங்கள் சென்று வந்த சாவக நாட்டில், மக்களும் மாவும், மழையின்மையால் வருந்துகின்றனர் என்பதை ஆபுத்திரனுக்கு அறிவித்தனர். அது கேட்ட ஆபுத்திரன், கொள்வோர்ப்பெறாது பயன் குன்றும் பாத்திரத்தோடு இன்றே சாவகம் செல்வேன் எனத் துணிந்தான். சின்னாட்களுக்கெல்லாம், சாவகம் செல்வாரோடு வங்கம் ஏறிப் புறப்பட்டான்.

கலம் கடல் நீரைப் பிளந்துகொண்டு சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் காற்றுச் சுழன்றடிக்கக் கண்ட மீகாமன், கலத்திற்குக் கேடு நேராதிருத்தற் பொருட்டுக் கலத்தை, அண்மையில் இருந்த மணி பல்லவத் தீவிற்கொண்டு சென்று நங்கூரம் இட்டான். பாய்கள் இறக்கப் பெற்றன. கலம், ஆங்கு ஒருநாள் நின்றது. மணிபல்லவத்தின் மாண்புகளைக் கண்டு மகிழும் கருத்தோடு ஆபுத்திரன் கலத்தினின்றும் இழிந்து அத்தீவினுட் புகுந்தான். காற்று நின்றது. கலத்தில் வந்தோர், மீண்டும் கலத்தில் ஏறிக்கொண்டனர். ஆபுத்திரனும் ஏறியிருப்பன் என எண்ணி, மீகாமன் கலத்தை மால்கடலிடைக் கொண்டு சென்றான்.

கலம் சென்றுவிட்டது. களம் சென்ற காலம் இரவாதலின், கலம் சென்றதை ஆபுத்திரன் அறிந்திலன். விடிந்து வந்து நோக்கினன். வங்கத்தைக் காணாது வருந்தினான். மீண்டும் மணிபல்லவத் தீவின் உள்ளகம் சென்று, உயிர் வாழ்வார் உளரோ எனத் தேடினன். ஒருயிரும் அவன் கண்ணில் புலப்பட்டிலது. “அந்தோ! என் கையில் உள்ளதோ ஆருயிர் ஒம்பும் அமுதசுரபி, ஆனால் அதைப் பெற்ற யான் இருப்பதோ வாழ் உயிர் அற்ற வன்னிலம். பலகோடி உயிர்களின் பசியைப் போக்கவல்ல இப்பாத்திரத்தால் என் ஒருவன் புசியைப் போக்கும் இழிநிலையை யான் விரும்பேன்; பண்டைப் பிறவியில் பேரறம் புரிந்த தன் பயனாய் இப்பாத்திரம் பெற்ற யான், இறுதியிற் சிறிது தீவினையும் புரிந்தேன் போலும்! அதனாலேயே பாத்திரம் பெற்றும் அதனாலாம் பயனை ஆரப்பெறாமல் அழிகின்றேன். இதை, இனி வறிதே சுமந்து விாழேன்” எனக்கூறி வருந்தியவாறே சென்றான். வழியில் கோமுகி என்ற பொய்கையொன்று புலப்பட்டது. அதை அணுகியதும் “ஆருயிர் மருந்தாம் அமிழ்தினை அள்ளி அள்ளித் தரும் அமுதசுரபி உன்ன இப்பொய்கையில் இட்டு உயிர் துறக்கத் துணிந்தேன்; நீ, இப்பொய்கையினின்றும் ஆண்டிற் கொருமுறை வெளிப்பட்டு, அருளறம் பூண்டு ஆருயிர் ஒம்பும் பெரியோரைக் காணின் அவர் கைப்புகுக எனக் கூறிக் கலத்தைக் குளத்தில் எறிந்தான். பின்னர் ஒரு மரத்தடியில் அமர்ந்து, உணவொழித்து, மனத்தை ஒரு வழி அடக்கியிருந்து உயிர் நீத்தான்.

மணிபல்லவத்தில் மன்னுயிர் நீத்த ஆபுத்திரன், கீழ்வானில் தோன்றிக் காரிருள் கெடுத்து, மேல்வானில் சென்று மறையும் ஞாயிறு போல், சாவக நாட்டில் பிறந்து மன்னன் மகனாய் வளர்ந்தான். சாவக நாட்டில் உள்ள தவளமால் வரையில் மண்முகன் என்னும் முனிவன் மாதவம் புரிந்து கொண்டிருந்தான். பண்டு, ஆபுத்திரன் பிறந்த அந்நாள் தொட்டு ஏழுநாள் வரையும், அவனுக்குப் பாலூட்டி வளர்த்த பசு அப்புண்ணியப் பயனாய் மண் முக முனிவன் தவச்சாலை அடைந்து ஆண்டு வாழ்ந்திருந்தது. கொம்பும் குளம்பும் பொன்னிறம் காட்டப் பெருங்கவின் பெற்று விளங்கிய அப்பசு, கன்று ஈனா முன்பே, பால் சுரந்து பல உயிர்களைப் புரந்தது. முக்கால நிகழ்ச்சிகளையும் முன்னின்றுணரவல்ல மண்முகன், அப்பசுவின் இயல்பு கண்டு, இதன் வயிற்றில், மழை மாறாது வளங்கொழிக்குமாறு மண்ணுலகாளும் மன்னவன் ஒருவன் தோன்றுவன் என அறிந்து கூறினன்.

மீண்டும் பிறந்து அறம் செய்யும் மனத்தோடு, பிணிநோய் உறாதேமாண்டு மணிபல்லவத்தீவில் மறைந்த ஆபுத்திரன், இறக்கும் அந்நிலையிலும், தனக்குப் பாலூட்டி வளர்த்த அப்பசுவை மறந்திலனாதலின், அதன் வயிற்றில் வந்து தங்கினான். வைகாசித்திங்கள் முழுநிலா நாளன்று, அவ்வா, ஒர் ஆண்மகவை ஈன்றது. வானவர் வாசநீரும் மலரும் தூவி வாழ்த்தினர்; புத்தன் பிறக்கும் புண்ணிய நாளன்று தோன்றும் நன்னிமித்தங்கள் அனைத்தும் அன்று தோன்றக் கண்டு, சாவக நாட்டு மக்கள் வியந்து மகிழ்த்தனர். சக்கரவாளக்கோட்டத்தில் வாழும் தேவர்கள், இயற்கையை ஏவல் கொள்ளும் அவ்வின்ப நிகழ்ச்சிக்காம் காரணம் காணாது விழித்தனர்.

மண்முக முனிவன் தவப்பள்ளியில், ஆவொன்று ஓர் ஆண்மகனே ஈன்றுளது; பிறந்த மகனுக்கு பேரரசாகும் பேறுளது. அவன் ஆளும் நாடு மழை மளம் மிக்கு மாண்புறும் என்ற செய்தி, அச்சாவக நாட்டு மன்னன் பூமிசத்திரன் செவிக்கு எட்டிற்று. மகப் பேறில்லாமல் மனத்துயர் கொண்டிருந்த அம்மன்னவன், ஆயீன்ற அம்மகனைத் தன் மகனாக ஏற்று மன்னனாக்க விரும்பினான். உடனே தன் மனைவி அமரசுந்தரியோடு, தன் அரசிருக்கையாம் நாகபுரத்தின் நீங்கித் தவளமால் வரை அடைந்தான். இருவரும் மண்முகன் தவப்பள்ளி அடைந்து அவனை வணங்கினர். ஆவையும், அஃது ஈன்ற ஆண் மகவையும் கண்டு அகமகிழ்ந்தனர். “மாதவ! மக்களை இல்லேன். நீ அருளின் புதல்வனைப் பெற்ற பேறுடையனாவேன்?” எனத் தன் வேட்கையை வெளியிட்டான். மன்னவன் மனக்குறிப்பறிந்து முனிவனும் இசைந்தான்.

அரசனும் அரசியும் ஆவின்ற மகனைத் தாமீன்ற மகனென மதித்து மகிழ்ந்து தம் அரண்மனைக்குக் கொண்டு சென்றனர். அவனுக்குப் புண்ணியராசன் எனப் பெயர் சூட்டிப் பேரன்பு காட்டிப் பேணி வளர்த்தனர். அரசர்க் குரிய அரிய கலைகள் அனைத்தையும் அவனுக்கு அறிவித்தனர். பின்னொருநாள், அவனை மன்னனாக்கி மகிழ்ந்தனர். புண்ணியராசன் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்டான். வானம் வழங்குவதை மறந்திலது. மண்ணும் மரங்களும், வனம்பல நல்கின. உயிர்களை வருத்தும் பசி, பிணி, பகைகளைப் பார்ப்பது அரிதாயிற்று. இவ்வாறு நல்லாட்சி மேற்கொண்டிருந்தான் புண்ணியராசன்.

ஒருநாள் புண்ணியராசன் தன் மனைவியோடு, அரண்மனையை அடுத்திருந்த பூம்பொழிலுக்குச் சென்றான். சிறிது பொழுது பொழில்வளம் கண்டுகளித்த பின்னர் இருவரும், அப்பொழிலில் அறம் புரிந்துகொண்டிருந்த தருமசாவகன் எனும் தவ முனியைக் கண்டு அவன் அடிபணிந்து நின்றனர். அவன் உரைத்த பாவ புண்ணியங்களின் பண்பு, நிலையும் நிலையாப் பொருள் களின் இயல்பு, பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு எனும் துக்க வகைகள், பிரிந்த உயிர்செல்லுமிடத்தியற்கை; பேதைமை முதலாம் சார்புகளின் தோற்றமும் தொடர்பும், அச்சார்புகளை அறுத்தொழுகும் ஆறு, அனைத்துயிர்க்கும் ஆசிரியனாய புத்தன் இயல்பு ஆகிய அரிய பொருள்களை அமைதியாக இருந்து கேட்டனர்.

அரசனும், அவன் உரிமையும், இவ்வாறு அறங் கேட்டிருக்கும் அந்நிலையில், ஆபுத்திரன் கை அமுத சுரபியை மணிமேகலா தெய்வத்தின் துணையால் பெற்ற மணிமேகலை, அவ்வாபுத்திரன், இப்பிறவியில் இருந்து ஆளும் சாவகநாட்டையும், அதைப் புண்ணியராசன் வடிவில் இருந்தாளும் அவனையும் கண்டு மகிழ வானூடெழுந்து, தரும சாவகன் தவப்பள்ளி முன்வந்து நின்றாள். அவளைக் கண்ட அரசன், “பெண்ணிணை இல்லாப் பேரழகுடையாள்; ஆனால் இவள் கண்களில் காமக் குறிப்பு இடம் பெற்றிலது. கையில் கலம் ஏந்தியிருக்கவும், கருத்தில் அறம் கேட்கும் குறிப்புடையாள்; யார் இந்நல்லாள்?” என வினவினான். காவலனைத் தொடர்ந்து வந்த கஞ்சுகன், அவனை வாழ்த்தி வணங்கி, “நாடாள் வேந்தே! நாவலந்தீவினள் இந்நங்கை. தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர் வொழுக்க நெறியினள். இவள் பெயர் மணிமேகலை. சோணாட்டுக்காவலன் கிள்ளி வளவனோடு நட்புக்கொளவேண்டி, முன்னம் ஒரு நாள் என்னை, மன்னவ! அவன்பால் அனுப்பினாய் அல்லவோ? அப்போது கலம் ஏறிக் கடல் கடந்து காவிரிப்பூம்பட்டினம் சென்ற யான், ஆங்கு அறவண அடிகள் உரைக்க, இவள் பெருமையை அறிந்து வந்தேன். அதை அடியேன் அரசர் பெருமானுக்கும் அறிவித்துள்ளேன். அவளே இவள்” எனக் கூறினான்.

மணிமேகலையின் திறம் அறிந்து மன்னவன் மகிழ்ந்தான்; பின்னர் மணிமேகலை அவனே நோக்கி, “அரசே! ஆருயிர் பசிபோக்கி உன் அருள் நிறை உள்ளத்திற்கு ஆக்கம் அளித்திருந்த இவ்வமுதசுரபி, பண்டு உன் கையில் இருந்து, இப்பிறவியில் என் கையில் வந்துளது. மன்னனகி மாநிதி அடைந்தமையால், உன் அறிவு மழுங்கி உளது. அதனால் நீ பண்டைப் பிறப்பின் இயல் பினை உணர்ந்திலை. போன பிறவியைத்தான் மறந்தனை என்றால், ஆவயிற்றிற் றோன்றிய இப்பிறப்பியல்பையும் மறந்துவிட்டனையே; என்னே உன் மயக்கம். மணிபல்லவம் அடைந்து, புத்த பீடிகையை வலம் வந்தாலல்லது நின் பிறப்பியல்புகள் நினக்குப் புலப்படா; மன்னவ மணிபல்லவம் செல்கிறேன்; நீயும் ஆண்டு வருக” எனக் கூறி வரவேற்பு அளித்துவிட்டு வானூடெழுந்து மறைந்து விட்டாள்.

போன பிறவி குறித்தும், புகுந்த பிறவி குறித்தும் மணிமேகலை கூறிய மாற்றங்கள் புண்ணியராசன் மனத்தைப் புண்படுத்தின. அகத்துயரோடு அரண்மனை அடைந்தான். அடைந்தவன், தன்னை வளர்த்த தாயான அமரசுந்தரியை அணுகித் தான் பிறந்த முறையைத் தனக்கு விளங்க உரைக்குமாறு வேண்டிக்கொண்டான். மண்முக முனிவனே தந்தை; பொற்குளம்பும் பொற் கோடும் கொண்டு அம்முனிவன் அறப்பள்ளியில் வாழ்ந்த ஆவே தாய்; மகப் பேறில்லாத் தானும் தன் கணவனுய பூமிசந்திரனும் அவனை வளர்த்த தாயும் வளர்த்த தந்தையுமே ஆவர் என்ற உண்மைகளை அவள் ஒன்றுவிடாமல் உரைத்தாள்.

அமரசுந்தரியால் உண்மை உணர்ந்த அரசன் போன பிறவியில் தாய்வழி வந்த பழியும், புகுந்த பிறவியில் பசுவயிற்றில் வந்த பெரும் பழியும் நினைந்து, நெடிது புலம்பினன். அரசாள் செல்வத்தை அவன் உள்ளம் வெறுத்தது. குறுநில மன்னர்கள் தன் கால் பணிந்து குறைகூறி முறை வேண்டற்காம் காலத்தை, எதிர்நோக்கிக் காத்துக் கிடக்க அரியணையில் வீற்றிருந்து அறிவன அறிந்த பெரியோரைப் பணிந்து, அவர் கூறும் அறவழி அரசோச்சி, ஆடல் கண்டு, பாடல் கேட்டு அரசமாதேவியார் ஊடல் கொள்ளின், அதுதீர அவர் உவப்பன புரிந்து வாழும் வேந்தர் வாழ்வில் வெறுப்புக் கொண்டான். பற்றறத் துறத்தலே பிறவிப் பயனம் என உணர்ந்தான். உணர்ந்த வழி நடந்து காட்டத் துணிந்தான்.

அரசன் துணிவை அமைச்சர் உணர்ந்தனர். உடனே சனமித்திரன் எனும் தலைமை அமைச்சன் அரசனை அணுகி, அடி பணிந்து “வேந்தே வாழி! பண்டு இந்நாடாண்டிருந்த மன்னவன், நின்னை அடை யும் வேறு பெறுவதன் முன்னர், இந்நாடு பன்னீராண்டு காலம் பருவ மழையின்மையால் பாழுற்றது. தாய், தானீன்ற மகவு பசியால் வருந்தவும், அதன் பசியைப் போக்க நினையாது தன் பசியைப் போக்கிக்கொள்ளும் பெரும் பஞ்சம் தலை விரித்தாடியது; காயும் கோடையில் கார் தோன்றியதே போல் நீ வந்தடைந்தாய்; வந்த பின்னர், வானம் பொய்த்திலது, வளம் பெருகிற்று. உயிர்கள் பசி நோய் உணர்ந்தில. இந்நிலையில் நீ இந்நாட்டை மறந்து துறந்து செல்லின், இந்நாட்டு மக்களும் மாவும் பெற்ற தாயாரை இழந்தார் போல் பெருந்துன்புறுவர். துயரால் துடிக்கும் உயிர்களைக் காத்தலே உயர்ந்தோர் கடனாம்; அதை விடுத்து, அரச! துறந்து பெறும் பேரின்ப நிலையினை உன் உள்ளம் விரும்புமாயின், இம் மாநிலம், ‘உயிர்கள் உறு துயர் உறத் தான் பேரின்ப நிலையினைப் பேணிக் கிடந்தான்’ என நின்னைப் பழிக்கும். தன்னலம் கருதாது பிறர் நலம் பேணலே மன்னர்க்கு அறமாம். அதை நீ மறத்தல் மதியுடைமை அன்று” என எடுத்துரைத்தான்.

அமைச்சன் உரைத்த அறிவுரை அரசன் உளத்தில் சென்று பதிந்தது. தன் பிறப்புண்மையை அறிய வேண்டும் என்ற வேட்கை மிகுதியால் மறைந்துபோன கடமை யுணர்ச்சி காவலன் உள்ளத்தில் மீண்டும் இடம் பெற்றது. “அமைச்சர் முதல்வ! நீ உரைத்த அறவுரை நன்று. ஆயினும் மணிபல்லவம் சென்று என் பழம் பிறப்புணரும் வேட்கையை என்னால் விட இயலாது. சென்று வர ஒரு திங்கள் ஆகும். அதுவரை ஆளும் பொறுப்பினை நீ ஏற்றல் நின் கடன்” எனக் கூறி அதை அவன் பால் ஒப்படைத்துக் கலம் ஏறி மணி பல்லவம் அடைந்தான். 

புண்ணியராசன் வருகையை எதிர்நோக்கி மணிபல்லவத்தில் காத்துக் கிடந்த மணிமேகலை, அவன் ஊர்ந்து வந்த கலம் கரைசேர்ந்ததும், எதிர் சென்று வரவேற்றாள். அவனை அழைத்துக்கொண்டு திரையுலாவும் தேமலர்ச் சோலைகளைக் கொண்ட அத்தீவை வலம் வந்தாள். பின்னர் பழம் பிறப்புணர்த்தும் தருமபீடிகை முன் மன்னனைக்கொண்டு நிறுத்தினாள். அரசன் அதை வலம்வந்து வணங்கி நின்று வாழ்த்தினான். அந்நிலையே கையிற்கொண்ட கண்ணாடி காண்பவர் முகத்தைக் களங்கம் ஒழித்துக் காட்டல்போல், பீடிகை, புண்ணியராசன், ஆபுத்திரனாய் வளர்ந்து வாழ்ந்த பழம்பிறப்பை உணர்த்திற்று; முன்னைப் பிறப்பின் நிகழ்ச்சிகள் அவன் மனக் கண்முன் நின்று களிநடம் புரிந்தன. மதுரைக் கலை நியமத்தில் கோயில் கொண்டிருக்கும் சிந்தாதேவியை நினைந்து நெஞ்சுருகி வாழ்த்தினான்.

பழம் பிறப்புணர்ந்து தன்னிலை மறந்து வணங்கி நிற்கும் புண்ணியராசன் நிலை கண்டு மணிமேகலை மகிழ்ந்தாள். பின்னர் அவனை அத்தீவின் தென்மேற்குத் திசைக் கண் இருந்த கோமுகிப் பொய்கைக்கு அழைத்துச் சென்றாள். இருவரும் அதன் கரையில் இருந்த புன்னை மரத்தடியில் தங்கினர். மன்னனும் மணிமேகலையும் வந்திருப்பதை, அப் பொய்கையைக் காத்து நிற்கும் தீவதிலகை அறிந்து ஆங்கு வந்தாள். “அருந்துயர் தீர்க்கும் மருந் தளிக்கும் அமுதசுரபி கொண்டு உயிர்களின் பெருந்துயர் தீர்த்த பெரியோய்! வருக வருக” என வரவேற்றாள். பின்னர், “அரசே! அன்று உன்னை அறியாது விட்டுச் சென்று, பின்னர்ப் பிழையுணர்ந்து ஈண்டு வந்து, நீ இறந்தமை அறிந்து, அதனால் தம்முயிர் நீத்த வணிகர் ஒன்பதின்மரின் உடல் எலும்புகள் இவை. அவர் இறந்தமை அறிந்து, அவருடன் வந்து, அவர் அளித்த உணவுண்டு வாழ்ந்தோர் வாழ்விழந்து விட்டுச் சென்ற உடல் எலும்புகள் இவை” எனக் கூறி அவ்வெலும்புக் குவியல்களை வரிசை வரிசையாகக் காட்டினாள்.

உடன் வந்தோர் எலும்புக் கூடுகளைக் கண்டு, மன்னன் மனங்கலங்கியிருக்க, தீவதிலகை மீண்டும் அரசனை நோக்கி, “அரசே; உன்கலம் உறுபயன் இழந்தமை உணர்ந்து, உள்ளம் வருந்தி உயிர்விட்ட உன் உடல் எலும்புகள் நீ அமர்ந்திருக்கும் இப்புன்னைக்குக் கீழ் உளது; ஈண்டுக் கிடந்த எலும்புகள் மீது கடல் அலைகள் மணல் கொணர்ந்து குவிக்க அதன் மீது தழைத்து வளர்ந்துளது இப் புன்னை. அரசே! நின் உயிர் கொன்றாய்; நின் உயிர்க்கு இரங்கி நின்பின் வந்த பலர் உயிர் கொன்றாய். உயிர் பல கொன்று பெருங்கொலை புரிந்த நீ கொற்றவனாய்க் கோலோச்சு கின்றனை; நன்று நின் வாழ்க்கை” என அவனை நகைத்துப் பழிப்பாள் போல் பாராட்டி மறைந்தாள்.

அவள் மறைந்ததும் அரசன் எழுந்தான்; மணி மேகலை துணை செய்ய மண்ணை அகழ்ந்தான்; ஆங்குத் தசையெலாம் நீங்க, வெண்ணிறச் சுண்ணம் பூசப் பெற்றதுபோல் வீழ்ந்து கிடந்த தன் உடல் அமைப்பைக் கண்டான. அவன் கண்ணும் மனமும் கலங்கின. செயலிழந்து போனான்.

மன்னன் மயக்கம் உற்றதை மணிமேகலை கண்டாள்.அரசன் மெய்யைப் பற்றிய மயக்கத்தை முதலில் போக்கி னாள். பின்னர், “அரசே! அரசே! நின் பழம் பிறப்பின் பெருமையை நீ அறியச் செய்து, அதனால், இவ்வுலகமும், இவ்வுலகைச் சூழக் கிடக்கும் பல்லாயிரம் சிறு தீவுகளும் நின் பெருமை அறிந்து நின்னைப் போற்றிப் புகழுமாறு செய்தல் வேண்டும் என விரும்பினேன். அதற்காகவே, உன் நகர் வந்து, உன்னை ஈண்டு அழைத்து வந்தேன். நாடாள் வேந்தே! நாட்டில் நல்லறம் நின்று நிலைபெற வேண்டும்; நாடாளும் அரசன்பால் அறம் நீங்காதாயின், அவனாளும் நாட்டில் வாழ் உயிர் ஒவ்வொன்றும் அவ்வற வழி நிற்கும், ‘அறம் எனப்படுவது யாது’ என அரசே! கேட்பின், அறைவேன், கேள். மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படுவன மூன்று: அவை உண்டி, உடை, உறையுள். இம் மூன்றிலும் குறை நேராவாறு நின்குடிக் கீழ் வாழ்வாரைப் பேணிப் பேரரசு செலுத்துவாயாக” என அரசர்க்குரிய அறநெறிகளை அவன் மனங் கொள்ளுமாறு எடுத்துரைத்தாள்.

மன்னர்க்கு உரியன என மணிமேகலை எடுத்துக் கூறிய அறிவுரையினை மன்னன் மனத்துட்கொண்டான். மயங்கிய தனக்கு மதியையுணர்த்திய மணிமேகலையை நோக்கி, “என் பிறப்பை எனக்கு உணர்த்தி என்னை வாழ்வித்த நின்பெருந்திறத்தை யான் என்றும் மறவேன். நீ கூறிய நல்லரசு என் நாட்டில் மட்டு மல்லாது வேறு பிற நாடுகளிலும் நிலவ நான் வழி காணுவேன். அதுவே என் கடன்” என உளமாரக் கூறி உறுதிமொழி அளித்தான்.

புண்ணியராசன் பழம் பிறப்புணர்ந்து பெருமை பெற்றதோடு அறநெறி அரசாளும் அறிவுடையனானமை கண்டு, மனம் நிறைவுற்ற மணிமேகலை, “அரசே! ‘எடுத்த இரு பிறவியும் பழியுடைய’ என உன்னி உளம் வருந்தாதே. உன்னைப் பிரிந்த உன் நாட்டு மக்கள் உன் வருகையை எதிர்நோக்கி வந்திருப்பர். வங்கம் ஏறி விரைந்து சென்று, அவர்க்கு வாழ்வளித்து விளங்குக! நான் வஞ்சிமாநகர் செல்கிறேன்” எனக் கூறி, அவன் பால் விடை பெற்றுக்கொண்டாள்.

புண்ணியராசனும், சாவகம் புகுந்து, அறப்பேராட்சி செலுத்திப் பெருமை பெற்றுத் திகழ்ந்தான்.