32

இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம் என்னவென்றல் நல்லவர்களை விரோதித்துக் கொள்ள எல்லாருமே தயாராயிருக்கிறார்கள். தீயவர்களை விரோதித்துக்கொள்ள யாருமே தயாராயில்லை. தீமை கிளை பரப்பி வளர்கிறது. நன்மை சிதைந்து நலிகிறது.

வ்வொரு, சமூக விரோதக் கூட்டத்திற்கும் பின்னணியில் ஒரு செல்வாக்குள்ள பணவசதி படைத்த தலைமை இருந்தது. ஒவ்வொரு பெரிய நகரத்திலும் ‘மாஃபியா’ கும்பலுக்கு இப்படி ஒரு சூத்திரதாரி இருந்தான்.

சாதாரணமான கொச்சை மனிதர்கள், அடியாட்கள்தான் முன்னால் தெரிந்தார்களே ஒழிய அவர்களுக்கு ஆணிவேராக இருந்த நாசூக்கான அயோக்கியர்கள் முன்னால் தெரியாமல் மறைந்து பின் நின்றார்கள்.

பூமி மெஸ்ஸில் பார்த்த மனிதனைப் போல் பல மனிதர்களைக் கட்டி ஆளும் வேறொரு பெரிய மனிதன் இருப்பது தெரிந்தது. அந்தப் பெரிய மனிதன் மாநிலத்தில் செல்வாக்கோடு இருந்த ஓர் அரசியல் கட்சியின் வட்டாரத் தலைமையையும் பெற்றிருந்தான். கள்ளச் சாராயம், கொலை, கொள்ளை, திருட்டு, எதில் கைவைத்தாலும் அது அவனில் போய் முடிந்தது. அவனே அனைத்துக்கும் மூலாதாரமாக இருந்தான்.

பூமி மெஸ்ஸில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டிருந்த பையன் யாரைப் பார்த்துப் பயந்தானோ அவனைப்போல் பல அடியாட்களுக்குத் தலைவனாக அந்த அரசியல் பிரமுகன் இருந்தான். முன்பு ஒரு தடவை மெஸ்ஸில் நன்கொடை வசூலுக்கு வந்து கலாட்டா செய்து சேதம் விளைவித்ததுகூட இந்த ஆளின் ஏவலால்தான் என்பது தெரியவந்தது.

கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் அப்பாவி மாணவர்களைத் திருடுவது. சாராயம் கடத்துவது ஆகியவற்றுக்குப் பழக்கப்படுத்திவிடுவது போன்ற செயல்களுக்கெல்லாம் தயாரித்திருந்தான் இந்த ஆள். ஆனால் இதற்கெல்லாம் பின்னால் இவன்தான் இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. அந்த வட்டாரத்தில் இருந்த கள்ளச் சாராய இருட்daறைகள், விபசார விடுதிகள், சூதாட்ட கிளப்கள் எல்லாமே இந்த பிரமுகன் முதலீட்டில்தான் நடந்து கொண்டிருந்தன.

இந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்க வேண்டுமென்று பூமி விரும்பினான். சித்ராவிடம் அவன் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தபோது அவள் தயங்கி அஞ்சினாள்.

“இப்படிக் கூட்டங்களை எதிர்த்துக் கொண்டு கிளம்பினோமானால் அது எங்கெங்கோ போய் முடியும்.”

“மூலைக்கு மூலை வலுவான அடியாட்களை நிரப்பி வைத்துதிருக்கிறார்கள் இவர்கள், பாம்புப் புற்றில் கையை விடுவது போல் இதில் தலையிடத்தான் வேண்டுமா? என்பதை ஒரு முறைக்கு இரு முறையாக யோசித்துக் கொள்ளுங்கள்.”

“இங்கு இவனைப் போன்ற சமூக விரோதிகளை யாராவது மட்டம் தட்டி அழித்துத்தான் ஆக வேண்டும். இல்லையானால் ஊரையே கெடுத்து குட்டிச் சுவராக்கி விடுவார்கள். இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம் என்னவென்றால் நல்லவர்களை விரோதித்துக்கொள்ள எல்லோருமே தயாராயிருக்கிறார்கள். தீயவர்களை விரோதித்துக்கொள்ள யாருமே தயாராய் இல்லை. இதனால் தீமை கிளை பரப்பி வளர்கிறது. நன்மை சிதைந்து நலிகிறது.”

இந்தப் பெரிய நகரத்தில் தீமையை அழித்தொழிப்பதற்கும் நன்மையைப் பாதுகாப்பதற்கும் நீங்கள் ஒருவரே பொறுப்பு என்று ஏன் நினைத்துக்கொள்கிறீர்கள்?'”

ஒவ்வொருவரும் அப்படி நினைக்காமலே விலகிச் சென்றால் அப்புறம் யார்தான் அதற்குப் பொறுப்பு? யாராவது சிரமப்பட்டுத்தானே ஆகவேண்டும்? நானே துணிந்து சிரமப் பட்டுவிடத் தயாராயிருக்கிறேன்”

“தொடர்ந்து எல்லாவற்றிற்குமே நாம்தான் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! வேறு யாரும் முன் வரவில்லையே?”

சித்ராவின் வாதம் பூமியைத் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. அவன் அந்தச் சோதனையில் இறங்குவதற்குத் தயாராகிவிட்டான். மெஸ்ஸில் திருடு போன தொகையை மீட்பதற்காக மட்டுமல்லாமல் பலருடைய பல நியாயங்கள் எங்கே பலியாகி இருந்தனவோ அங்கே அவற்றைத் தட்டிக் கேட்டுத் திரும்பப் பெறுவதற்கு முயல வேண்டும் என்ற முனைப்பு அப்போது அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த நாகரிகமான கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கப் போலீஸார் எந்த அளவு ஒத்துழைப்பார்கள் என்று அறிய போலீஸ் கிரைம் பிராஞ்சில் பொறுப்புள்ள அதிகாரி ஒருவரை அணுகிப் பேசிப் பார்த்தான் பூமி. அவர்கள் சிரத்தைக் காட்டவில்லை. குறிப்பிட்ட ஆளின் அரசியல் செல்வாக்கை எண்ணிப் பயப்பட்டார்கள். பூசி மெழுகித் தட்டிக் கழித்தார்கள்.

“உங்களுக்கு ஏன் சார் வம்பு? தொல்லையை விலைக்கு வாங்காதீர்கள்” என்று பூமியை அந்தப் போலீஸ் அதிகாரி எச்சரித்தார்.

திருட்டுக் கும்பலிலிருந்து பிடிபட்டுத் திருந்தி வந்து பூமியால் வேலையளிக்கப்பட்ட பையனும் தன் முன்னாள் எஜமானனை காண்பித்துக் கொடுக்க அஞ்சினான். திருடர்களைப் பிடிப்பதற்காகவே உத்தியோகம் பார்க்கும் போலீஸ்காரர்களும் அஞ்சினார்கள். காரணம் அந்தத் தவறுகளின் மற்றொரு நுனி செல்வாக்குள்ள ஓர் அரசியல் கட்சியில் போய்ச் சேர்ந்திருந்தது. பின்னிப் பிணைந்திருந்தது

இருண்ட தெரு முனைகளில் பெண்களின் கழுத்துச் சங்கிலிகள், நகைகளை அறுப்பது, கொள்ளையடிப்பது, வீடுகளில் புகுந்து திருடுவது, மோட்டார் சைக்கிளில் துரத்தித் திருடுவது என்று பல குழுக்கள் அந்தச் செல்வாக்கில் குளிர்காய்ந்து கொண்டிருந்தன. வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டுப் ‘பில்’ பணத்தைக் கொடுக்காமலே சண்டைப் போட்டுவிட்டு வெளியேறிப் பல ஹோட்டல்களை ஏமாற்றும் ரவுடிகளும் அந்தக் குழுவில் இருந்தார்கள்.

ஹோட்டல்காரர்கள் தகராறு செய்தால் மறு நாள் கும்பலாக உள்ளே நுழைந்து சாப்பிட்டு விட்டுப் பிளேட்டுகள், பீங்கான் கிண்ணங்களை உடைத்துக் கலவரம் புரிந்து விட்டு வெளியேறினார்கள் ரவுடிகள். அந்த வட்டாரம் முழுவதுமே தொல்லையை அநுபவித்தது. ஆனால் யாருமே பூனைக்கு மணி கட்டத் தயாராயில்லை. தலைவிதியே என்று. பொறுத்துக் கொண்டுச் சமாளித்தார்கள்.

சமூகத்தில் தீமைக்கு அடங்கிப்போவது, தீமையை ஏற்பது என்பது பூமியால் இயலாத காரியம். தீமைகளையும் அநீதிகளையும் ஏற்று அடங்கி நூறு வருஷம் வசதியாக வாழ்வதை விட அவற்றை எதிர்த்தழிக்கும் முனைப்புடன் நிமிர்ந்து நின்று. போராடிப் பத்து நாட்களில் அழிந்தால் கூட அழியலாம் என்கிற அளவு சுயமரியாதையும், சுதந்தர உணர்வும் அவனுக்கு இயல்பாகவே உண்டு.

‘மன்னாரு'-- என்று அப்பகுதி மக்கள் பயத்துடனும் பதற்றத்துடனும் தணிந்த குரலில் சொல்லிய அந்தப் பேட்டை ரவுடியின் முழுப் பெயர் மன்னார்சாமி. ஒரு தடவை சட்டசபை உறுப்பினராகவும், மூன்று தடவை கார்ப்பொரேஷன் கவுன்ஸிலராகவும் இருந்த அவன் ஆளுங் கட்சிகள் எவையாக இருந்தாலும் அவற்றுக்கு உடனே வேண்டியவனாகிவிடுவது வழக்கம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை அவனைச் சந்திக்கும் நோக்குடன் புறப்பட்டான் பூமி. எங்கே எதற்காகப் போகிறேன் என்று யாரிடமும் அவன் சொல்லவில்லை. இரகசியமாகவே கிளம்பியிருந்தான், முதலில் மகாபலிபுரம் போகிற வழியில் முந்திரி மரங்களும் பனை மரங்களுமாக இருந்த ஒரு வனாந்திரப் பகுதியில் இயங்கிய ‘மன்னாரு’ வின் கள்ளச் சாராய சாம்ராஜ்யத்தில் போய்த் தேடினான். இவன் உளவாளியோ என்ற சந்தேகத்தில் யாரும் அங்கு பிடி கொடுத்துப் பேசவே இல்லை. இவனைப் பின் தொடர்ந்தார்கள். ஜாடை மாடையாக மிரட்டவும் செய்தார்கள், சிரமப்பட்டுத் தப்பி வர வேண்டியிருந்தது.

அடுத்து மந்தைவெளியின் ஒரு மாடியில் இருந்த சூதாட்ட கிளப்பில் போய்த் தேடிய போதும் இதே அநுபவம்தான். கட்சி அலுவலகத்தில் போய்த் தேடிய போது, “அவர் இங்கே பொழுதன்னைக்கும் வர்ரதில்லை. தலைவருங்க, மந்திரிங்க வர்ரப்ப மட்டும் தான் வருவார” என்று மிகவும் மரியாதையாகப் பதில் சொன்னார்கள்.

தொடர்ந்து மன்னாருவின் பலசரக்குக் கடை, கமிஷன் மண்டி, வீடு, எங்கு விசாரித்தும் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே மர்மமாக இருந்தது. ஜனாதிபதியைக் கூட சந்தித்து விடலாம் போலிருந்தது. மன்னாருவைச் சந்திக்க முடியவில்லை. கடைசியில் பூமி தன்னுடைய தேடும் உத்தியை மாற்றினான்.

அடையாறு மெயின் ரோடில் “ப்யூட்டி பார்லர் - பாடி மசாஜ் செய்யப்படும்” என்ற பெயர்ப் பலகையுடன் மன்னாரு நடத்தி வந்த ஒரு விபசார விடுதியில் போய்த் தேடும் போது மன்னாருவுக்கு மிகவும் வேண்டியவன் போலவும் அவனுடைய அந்தரங்கமான ‘பிஸினஸ் பார்ட்னர்’ போலவும் தானே நடித்து விசாரித்தான், காரியம் பலித்தது.

‘ப்யூட்டி பார்லர்’ என்றும் ‘ஹெல்த் கிளினிக்’ என்றும் தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் போர்டுகள் தொங்கிய அந்தப் பெரிய பங்களாவின் முகப்பில் நுழைந்தவுடனேயே ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ரிஸப்ஷன் பகுதி போல் ஒரு வரவேற்பு அறை இருந்தது. தலையை ‘பாப்’ செய்து கொண் டிருந்த ஒரு கொழுத்த பெண் வரவேற்பு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

அவளுடைய உதடுகள் இரத்தச் சிவப்பில் சாயம் பூசப்பட்டு மின்னின. அவளுக்கு அங்கே பக்கத்துக்கு ஒருவராக இரண்டு பீமசேனர்கள் நின்றார்கள். உள்ளே நுழைகிற எவனுக்கும் உடனே பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டாக்குகிற முரட்டுத் தோற்றம் அவர்களுக்கு. பூமி நாசூக்காகத்தான் பேச்சை ஆரம்பித்தான்.

“மிஸ்டர் மன்னார்சாமியைப் பார்க்க வேண்டும்.”

“நீங்கள்..........."-- அவள் பதிலுக்குப் பூமியைக் கேட்டாள். ‘மன்னாரு’ உள்ளே இருக்கிறானா இல்லையா என்பதைச் சொல்லாமலே தந்திரமாக இவனைப் பற்றி விசாரித்தாள் அவள்.

“அவருடைய பழைய சிநேகிதன். அவர் பார்க்க வரச் சொல்லித்தான் வந்திருக்கிறேன்.”

“இங்கே தான் வரச் சொன்னாரா?”

“ஆமாம்! இங்கே தான் வரச்சொன்னார்.”

பின் விளைவு என்ன ஆகும், எது நடக்கும் என்பதைப் பற்றி எல்லாம் .. கவலைப்படாமல் பூமி துணிந்து இப்படிச் சொன்னான், அவள் அவனைக் கூர்ந்து பார்த்தாள் . தயங்கினாள். அப்புறம், பக்கத்திலிருந்த ‘இண்டர்காம்’ ஃபோனை எடுத்து பட்டனை அமுக்கி உள்ளே யாருடனோ பேசினாள். ஃபோனை வைத்து விட்டுப் பூமியை நிமிர்ந்து பார்த்து உட்காரச் சொன்னாள். 

33

காந்தியடிகள் காலத்து அரசியலில் மக்களுக்காகத் தலைவர்கள் தியாகம் செய்தார்கள். இன்றைய அரசியலிலோ தலைவர்களுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.


ங்கு நிலவிய சூழ்நிலை மர்மமாகவும் புதிராகவும் இருந்தது. பூமியைப் பார்த்த கண்கள் அனைத்துமே சந்தேகத்தோடுதான் பார்த்தன. அங்கிருந்தவர்கள் பயப்படுகிறார்களா பயப்படுத்தப்படுகிறார்களா என்பதைப் பிரித்துப் புரிந்து கொள்வதும் சிரமமாக இருந்தது. ஒரு சமயம் பார்த்தால் யாருக்கோ, எதற்கோ பயப்படுவது போலவும் இருந்தது. இன்னொரு சமயம் பார்த்தால் யாரையோ, எதையோ பயமுறுத்துவது போலவும் இருந்த்து.

ஒரு பியூட்டி பார்லருக்குரிய அழகு உணர்ச்சியோ, அலங்கார உணர்ச்சியோ, இங்கித நளின இதங்களோ, மென்மைகளோ அங்கு யாரிடமும் தென்படவில்லை. பூமி மிக விழிப்பாகவும், சகல விதங்களிலும் சுதாரித்துக் கொண்ட மன நிலையுடனும் எச்சரிக்கையாகவே இருந்தான்.

வரவேற்புப் பகுதியிலிருந்த பெண்மணியினுடைய வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு அவன் இருக்கையில் உட்கார்ந்ததுமே குண்டர்கள் இருவரும் அவனருகே பக்கத்துக்கு ஒருவராக வந்து நின்று கொண்டனர். பூமி பொறுமை இழக்கிற அளவுக்குக் காத்திருக்க வேண்டியதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/32&oldid=1029079" இலிருந்து மீள்விக்கப்பட்டது