சிலம்பின் கதை/ஊர் காண் காதை

14. ஊரைச் சுற்றிவருதல்
(ஊர் காண் காதை)

பொழுது விடிந்தது. அவர்கள் தங்கி இருந்த சோலைகளிலும், அடுத்து இருந்த நீர்ப்பண்ணைகளிலும், கதிர்முற்றி வளைந்து இருந்த கழனிகளிலும் பறவைகள் துயில் நீங்கி ஒலிப்புச் செய்தன. பொய்கையில் உள்ள தாமரைகள் கதிரவன் ஒளிபட்டுத் தம் இதழ்கள் விரித்தன; ஊர்மக்கள் துயில் எழுந்து சுருசுருப்பாக இயங்கினர்.

கோயில்களில் முரசங்கள் ஒலித்தன; சிவன் திருக் கோயில், கருடக் கொடியை உயர்த்தியவன் ஆகிய திருமால் கோயில், மேழிப்படை தாங்கிய பலராமன் கோயில், சேவலைக் கொடியாக உடைய முருகன் கோயில், அற வோர் பள்ளிகள், வீரச்செயல் மிக்க அரசன் அரண்மனை இங்கு எல்லாம் சங்குகள் முழங்கின. அவற்றோடு முரசங்களும் ஒலித்தன.

கவுந்தி அடிகள் அற உரைகள்

கோவலன் கவுந்தியடிகளை வணங்கி எழுந்து பேசத் தொடங்கினான். சென்ற காலத்துக் கேடுகளை ஏடுகள் திறந்து படிப்பதுபோலக் கூறத் தொடங்கினான். “நெறி கெட்ட வழிகளில் சென்று என் வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டேன்; நறுமலர் மேனியளாகிய கண்ணகியைப் புதிய தேயத்துக்கு அழைத்து வந்தேன்; கடும் வழிகளில் கால்கடுக்க நடக்க வைத்தேன்; சிறுமை அடைந்தேன்; பெருமை இழந்தேன்” என்று தன் நிலையை எடுத்து உரைத்தான்.

“இது கடந்த காலம்; அடுத்து நான் எடுக்கும் முயற்சி; அதற்காக ஊர் உள் சென்று உறவினர் அவர்களைச் சந்திப்பேன். வணிகர்கள் எனக்கு உறவினர்கள்; அவர் களைச் சந்திக்கும் வரை கண்ணகிக்குக் காப்பாக இருந்து உதவ வேண்டுகிறேன்; உங்களிடம் விட்டுச் சென்றால் அவளுக்கு எந்த இடர்ப்பாடும் நேராது” என்று கூறினான். ஆறுதல் கூறி அவனை அனுப்பிவைக்க நினைத்துக் கவுந்தி அடிகள் அறத்தின் மேம்பாடு குறித்து அறிவுரை தந்தார். 'விதி வலிது' என்று அவர் தாம் நம்பும் அறக்கோட்பாட்டை அவனுக்கு அறிவுறுத்தினார்.

“அறம் அறிந்த அறிஞர்கள் பலமுறை எடுத்துச் சொன்னாலும் நீதிகளைக் கேட்டு இந்த மாநிலத்தில் மாந்தர் நடந்து கொள்வது இல்லை; அது இந்த உலகத்து இயற்கை; தீமைபயக்கும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் பொழுது உறுதி குலைகின்றனர். தளர்ச்சி அடைகின்றனர்.”

“கற்று அறிந்தவர்கள் கலங்குவது இல்லை. அவை வினைப்பயன் என்று விவேகம் காட்டுவர்; துறவிகளுக்குத் துயர் என்பதே இல்லை; மாதரைக் காதலித்து மாதுயர் அடைவோரே இவ்வுலகில் மிகுதியாவர்; அவர்களுக்கே இன்பதுன்பங்கள் மாறி மாறி வருகின்றன. மன்மதன் அவர்களை வாட்டுவான். அவர்கள் அதனால் வாழ்க்கை யில் வாட்டம் அடைகின்றவர்; அது இன்று மட்டும் அல்ல; இது மானிட வரலாறு ஆகும். எடுத்துக் காட்டுகள் நம் நாட்டு ஏடுகள் எடுத்துக் காட்டியுள்ளன. தெய்வங்களும் இதற்கு விதி விலக்கு இல்லை.

“பிரமனைப் படைத்த பரமன் இராமன் அவனுக்கே இந்த நிலை எற்பட்டது; தந்தை இட்ட கட்டளை: அவனுக்கு அவன் மனைவி ஒரு கால் தளை, அவளோடு கானகம் அடைந்தான். அவன் பட்ட துயரம் இந்த உலகம் அறிந்தது.”

“ஏன்? நளன் கதை எடுத்துக் கொள்; பிணக்கு என்பதே அறியாத காதலுக்கு அவர்கள் சிறந்த எடுத்துக் காட்டு. அவர்கள் ஏன் பிரிந்தார்கள்? காதலியைக் கானகத்தே காரிருளில் விட்டுப் பிரிந்தான். விதி அவர்களுக்குச் செய்த சதி, அதனால் நேர்ந்தது அந்தக் கதி”

“இவர்களை நோக்க உன் வாழ்க்கை சீர்மை கொண்டது. மனைவி உன்னை விட்டுப் பிரியவில்லை. கிழிந்த கந்தல் வாழ்க்கை தான். ஒட்டுப் போட்டால் சரியாகி விடும்; உங்கள் காதல் வாழ்க்கை சோகம் அடைந்திலது. நீ ஏதம் கொள்வது வீண்” என்று சான்றுகள் காட்டி அவனுக்கு ஆறுதல் கூறினார்.

“கவலை நீங்குக; கூடல் நகரைக் கண்டு நீ திரும்பி வருக! வெல்க” என்று கூறி விடை தந்தார்.

நகர் நுழைதல்

அகழியை அடுத்து மதில் இருந்தது; அகழியைக் கடக்கச் சுருங்கை வழி ஒன்று; அதில் யானைகள் செல்வது வழக்கம். அத்தகைய பரப்பு அது பெற்றிருந்தது. அதனைக் கடந்து மதிலுக்குச் செல்லும் வீதி வழியே சென்றான்; இந்திரன் வைத்திருந்த அணிகலப் பேழை உள் இருந்தது போல நகரின் வளமிகு காட்சி அவன் கண்ணுக்குப் புலப் பட்டது.

யவனர் அரண் காத்து நின்றனர். அவர்களுக்கு ஐயம் எழாதபடி உள்ளுர் வாசிபோல் உள் நுழைந்து சென்றான்.

பொழில் விளையாட்டு

தெருக்களில் கொடிகள் அசைந்தன; பொது மகளிர் வீட்டை விட்டுத் தம் காதலர்களுடன் சென்று படகுகளை இயக்கித் தோணிகளில் விளையாடினர். ஆற்றில் நீந்தி மகிழ்ந்தனர். புனல் விளையாட்டில் பொழுது போக்கினர்.

அடுத்துப் பொழில் விளையாட்டில் பொழுது போக்கினர். சோலைகளில் சென்று பூக் கொய்தனர். மலர்களைத் தம் கூந்தலில் சூடிக் கொண்டும், மாலைகளை அணிந்து கொண்டும், சந்தனக்குழம்பு மார்பில் பூசிய வராய்ப் பொழில் விளையாட்டில் ஈடுபட்டனர்.

கோவலன் அங்குச் சென்ற காலம் வேனிற்காலத்தின் இறுதியாகும் நகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் தம் படுக்கையில் கிடந்து பழைய நினைவு களில் மனம் செலுத்தினர். அவற்றுள் முதலாவது கார் காலம்; அது அம் மதுரை நகர மாந்தர் நினைவில் பசுமை நினைவுகளாக நிலைத்து இருந்தது.

கார் காலம்

அந்நகரில் கார்காலத்தில் மாலை வேளைகளில் மகளிர் சிவந்த நிறத்தில் அணிகலன்கள் அணிந்து கொண்டு விளங்கினர். இந்திரனுக்கு இது மதுரை மாநகர் என்பதை அவர்கள் தம் ஆடை அணிகளால் உணர்த்தினர். மாலை வேளைகளில் அவர்கள் தம் காதலருடன் அளவளாவினர். அவர்கள் தம் இடைக்குச் சிவந்த ஆடை அவர்கள் மேனிக்கு அழகு தந்தது; அவர்கள் தலையில் சூடிய பூக்கள் குடசம், செங்கூதாளம், குறிஞ்சி என்பனவாம். இவையும் சிவப்பு நிறப் பூக்களாகும். கொங்கைகளுக்குச் சிவப்பு நிறத்தை உடைய குங்குமம் பூசினர். செங்கோடுவேரி என்னும் பூவும் சிவப்பு நிறம் கொண்டது; அதன் பூக்களைக் கொண்டு மாலை அணிந்தனர். அவர்கள் அணிந்திருந்த மேகலையும் பவழத்தால் ஆகியது. அவர்கள் செவ் வணிகளோடு தம் காதலருடன் கழித்த காலம் அது; மதுரை மாநகர் கார்காலத்தில் விளங்கிய தோற்றம் இது; ஒரே நிறத்தில் அவர்கள் திறம் விளங்கியது. இது ஒரு தனிச் சிறப்பாக விளங்கியது. இது கார்காலத்து மகளிர் மகிழ்வுடன் இருந்த நிலை.

கூதிர்க் காலம்

அடுத்தது கூதிர்காலம்; மேகம் தவழும் மாடங்களில் அகில் கட்டையை எரித்து நறும் புகை உண்டாக்குவர். அதில் அவர்கள் தம் காதலருடன் இருந்து குளிர்காய்வர். மாடத்துச் சாளரங்களை எல்லாம் அடைத்துக் குளிர் காற்று வராது தடைப் படுத்துவர். அடக்க ஒடுக்கமாக அமர்ந்து அவ்அறைகளில் குளிருக்கு இதமாகத் தம் காதலரோடு இணைந்து தழுவி மகிழ்ந்தனர். அத்தகைய சிறப்புடையது கூதிர்காலம். அந்த நாட்களை அவர்கள் எண்ணிப் பார்த்தனர்.

முன்பனிக் காலம்

அடுத்தது முன்பணிக் காலம்; வளமான மனை; இளநிலா முற்றம். இளவெயில் நுகர மகளிரும் மைந்தரும் அங்குச் சென்று தங்குவர். சூரியன் தெற்குப் பக்கம் இயங்கும் காலம் அது; வெண்மேகங்கள் அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாகக் காட்சி அளித்தது; இளவெயில் அவர்கள் உள்ளத்தை மகிழச் செய்தது. அத்தகைய சிறப்பு உடையது முன்பணிக்காலம்; அதனை அவர்கள் நினைவு கூர் கின்றனர்.

பின்பணிக் காலம்

அடுத்தது பின்பணிக் காலம்; கடலில் நீர்க்கலத்தில் தொண்டி நாட்டினர் கொண்டு வந்து சேர்த்தவை அகில், பட்டுத்துணி, சந்தனம். வாசம், கருப்பூரம் முதலியவை; இவற்றின் வாசத்தைக் கீழ்க் காற்று சுமந்து வரும் காலம் இது; இப்பருவத்தில் மன்மதனுக்கு விழாச் செய்து மக்கள் மகிழ்வு கொண்டனர். பங்குனி மாதம் இப் பருவத்தின் பணி மிக்க காலம் ஆகும். அத்தகைய சிறப்பு மிக்கது பின்பணிக்காலம். அதனை நினைத்துப் பார்க்கின்றனர்,

இளவேனிற் காலம்

இளவேனிற் காலம்; இதில் மாதவிக்கொடி படர்கிறது. சோலைகளிலும் காடுகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றன. பொதிகைத் தென்றல் மதுரையுள் புகுந்து காதலரை மகிழ்விக்கிறது. அத்தகைய இளவேனில் கழிந்து விட்டது. அதை நினைத்து ஏங்கியவராய்க் காணப்பட்டனர்.

முதுவேனிற் காலம்

அடுத்தது முதுவேனிற்காலம், இதனைக் கோடைக் காலம் என்றும் கூறுவர். வெய்யிலின் கொடுமைக்கு அஞ்சிக் கன்றுகளும், யானைகளும், பெண் யானைகளும் நடுங்கின. வெய்யில் நிலைத்துள்ள குன்றுகள் மிக்க நாட்டில் காடுகளில் தீப்பொறி பறந்தது. எங்கும் நெருப்பு எழுந்தது. அத்தகைய கொடுமை மிக்க வேனிற்காலம் முடிவு அடைந்தது. அந்தக் கடை நாளில் கோவலன் மதுரைக்குள் சென்றான்.

கணிகையர் இல்லங்கள்

அவன் களிமகிழ்வு தரும் காமக்கிழத்தியர் வாழும் தெருவினை அடைந்தான். அவர்கள் வாழ்க்கை வளம் மிக்கதாக விளங்கியது. அவர்களை நாடி அரச இளைஞரும், வணிகச் செல்வரும் இங்கு வந்து மகிழ்ந்தனர்.

ஏறிச்செல்ல மூடு வண்டியும், சிவிகையும், தரப் பட்டன. மணிக்கால் அமளிகள் அவர்கள் மாளிகைகளை நிரப்பின. உய்யாவனம் போகும்போது உடன் எடுத்துச் செல்ல மகிழ்வுப்பொருள்கள் தரப்பட்டன. பொன்னால் செய்யப்பட்ட வெற்றிலைப் பெட்டி, கவரி மயிர் கொண்ட வெண்சாமரைகள், கூர்நுண்வாள் இவற்றைத் தம் அரசன் கொடுப்ப அவற்றைப் பெற்றுச் சகல வசதிகளோடு வாழ்ந்தனர். புதுமணம் பெற்றுத் தக்க துணைவரை அவ்வப்பொழுது தேடிக் கொண்டனர்.

வந்த இளைஞர்கள் நறவு மாந்தி மகிழ்வு கண்டனர். அருகிருந்த பெண்டிர் வார்த்துக் கொடுக்க ஆர்த்துக் குடித்தனர்; மது மயக்கத்தில் வண்டுகள் மொய்க்காத இடத்தும் அதை ஒட்டும் பழக்கத்தில் முகத்தில் கை அசைத்து நகைச் சுவை விளைவித்தனர். இலவம்பூ போன்ற வாயிதழ் அதில் இளநகை அரும்ப அவர்கள் பேசிய பசுமைச் சொற்கள் அவற்றை நாவால் எடுத்துத் திரும்பிச் சொல்ல முடியாதவை; அவற்றைக் கேட்டு ஆடவர் மகிழ்ந்தனர். அவர்கள் கண்வெட்டுக்கு இவர்கள்

கட்டுப்பட்டனர். அவர்கள் வில் போன்ற புருவத்து நெளிவுகளுக்கு ஆட்பட்டனர்.

அவர்கள் திலகச் சிறுநுதல் வியர்வை அரும்ப இவர்கள் கூடி மகிழ்வர். அவர்கள் ஊடல்கள் தீரும் வாய்ப்புகளை எதிர்நோக்கி அரசரும் வணிகச் செல்வரும் காத்து இருந்தனர்; வரிசையில் வந்து குழுமினர். இவர்களை மகிழ்விக்கும் மகளிர் வாழும் வீதி அதனைக் கண்டான்; அவனுக்கு இது புதுமையைத் தந்தது. அந்த நகர் களிப்புத்தருவது என்பதை அந்த ஊர் அவனுக்கு உணர்த்தியது.

கலைச் செல்வியர்

கலைகள் கற்றுப் பிறரைத் தம் கண்வலையில் ஈர்க்கும் கலைச் செல்வியர் வாழ்ந்த பகுதி உயர்வு பெற்றிருந்தது. சுடுமண் ஆகிய ஒடுகளால் வேயப்படுவதற்கு மாறாகப் பொன் தகடுகளால் வேயப்பட்ட காவல் மிக்க வீடுகள் அவை. முடி அரசர்கள் அங்கு வந்து ஒடுங்கிக் கிடப்பர். உள்ளே இருப்பது கள்ள வாழ்க்கை; அதனை மறைத்துத் தரும் காவல் மிக்க வீடு; தலைக்கோல் பட்டம் பெற்ற அரங்கக் கூத்தியரும், வாரம்பாடும் தோரிய மகளிரும், தலைப்பாட்டுப் பாடும் கூத்து மகளிரும், இடைப்பாட்டுப் பாடும் கூத்து மகளிரும் என நால்வகைப் பட்ட மாதர் அங்கு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலர் அரசனால் ஆயிரத்து எண் கழஞ்சு பரிசு பெற்றுப் பாராட்டுப் பெற்றவர்கள். நகரத்து மேல்நிலைக் கலைச் செல்வியர்கள் அவர்கள்; அறுபத்து நான்கு கலைகளையும் கற்ற காரிகையர் ஆவர்.

கலை வாழ்க்கை வாழும் கணிகையராக அவர்கள் திகழ்ந்தனர்; விலைவாழ்க்கையையும் அவர்கள் ஏற்று நடத்தினர். அவர்கள் கண்வலையில் பட்டு அறிவு மயங்கி நறவு மகிழ்பவர் போல அங்கே வந்து செறிவர்.

தவசிகள் அவசியத்துக்காக இங்கு வந்து தெய்வதரிசனம் கண்டு செல்வர்: முகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் நகைப்பதம் பார்க்கும் இளைஞர்கள் இங்கு வந்து பதநிச பாடுவர்; காம விருந்து அறியாத கற்றுக் குட்டிகள் இங்கு வந்து முட்டிப்பார்ப்பர் பால பாடத்தை இங்கே வந்து படித்துச் சென்றனர்.

இந்த இச்சைக்காரர்கள் எல்லாம் இங்கு வந்து நாளும் நச்சித் தங்கி இன்துயில் பெற்றனர். பண்ணைப்பழித்த இன்சொல் பாவையர் எண்ணெண்கலையோர் இருந்த இரண்டு பெரிய வீதிகளையும் அவன் கண்டான்.

அடுத்து அவன் கண்டது அரசர்களும் விழைந்து செல்லும் கடை வீதி ஆகும். அங்கே கிடைக்காத பொருள்களே இருக்க முடியாது. மூடுவண்டிகள், வண்டிச்சக்கரங்கள், தேர்மொட்டுகள், மெய்புகுகவசம், மணிகள் பதித்த அங்குசம், தோலால் செய்யப்பட்ட அரணம், யோகத் - வளைதடி, கவரி, பல்வகைப்படங்கள், குத்துக்கோல், செம்பு வெண்கலப் பாத்திரங்கள், புதுப் புதுச் சரங்கள், மாலைவகைகள், வாள் வகைகள், தந்தக் கடைச்சல்கள், புகைவகைகள், மயிர்ச்சாந்துகள், பூமாலைகள், மற்றும் பெயர் விவரித்துக் கூற முடியாத பல பொருள்கள் இங்கு விற்கப்பட்டன. அரசர்கள் தம் தேவைக்குத் தேடி வந்த அங்காடித் தெரு இது, அதனைக் கண்டான்.

ஒளிபடைத்த வயிரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், நீலம், கோமேதகம், வைடுரியம், முத்து, பவளம் ஆகிய நவமணிகள் தனியே விற்கப்பட்டன. அந்த நவமணிக் கடைவிதியைக் கண்டான்.

அடுத்து அவன் கண்டது பொன் நகைக் கடை வீதியாகும். சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என வகை செய்யப்பட்ட பொன் வகைகள் அங்குக் கிடைத்தன; கொடிகள் கட்டி இவற்றை அறிவுறுத்தினர்.

அடுத்தது அவன் கண்டது துணிவகைகள் விற்பனை செய்த வீதியாகும். பருத்தி நூலாலும், எலிமயிராலும், பட்டு நூலாலும் நுட்பமாக நெய்யப்பட்ட துணிவகைகள் பல நூறு எண்ணிக்கையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அடுத்து அவன் கண்டது கூலமாகப் பண்டங்களைக் குவித்துவைத்த நவதானியக் கடை வீதியாகும். இங்குக் குறிப்பிடத்தக்கவை அவர்கள் அளக்கும் கோல்களாகும். நிறுத்தும் கோல் நிறைக்கோல் எனப்பட்டது. பறை என்பது பருத்த உள் அறையை உடைய அளக்கும் கருவி என்று கூறலாம்; மற்றொன்று அம்பணம் எனப்பட்டது; அது மரக்கால் வகையாகும். இவற்றைக் கொண்டு தானியங் களை அளந்து கொட்டி விற்றனர். இவ் அளவு கோல்களைத் தாங்கிக் கொண்டு இவ்வணிகர்கள் அங்கும் இங்கும் திரிந்து இயங்கினர்; மிளகு முட்டைகள் பல இங்குக் குவிக்கப்பட்டிருந்தன. கால வரையறை இன்றி இங்கு வாணிபம் நடைபெற்றது.

நகர்த் தெருக்கள்

சாதி அடிப்படையில் தெருக்கள் பகுக்கப்பட்டு விளங்கின. நால்வகைச் சாதியர் தனித்து அறியப்பட்டனர். அரசர், அந்தணர், வணிகர், உழவர்கள் என்போர் ஆவார். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் பெருந்தெருக்கள் எனலாம். மற்றும் சந்துகள், சதுக்கங்கள், ஆவண வீதிகள், மன்றங் கள், கவலைகள், மறுகுகள் எனத்தெருக்கள் பலவகைப் பட்டு இருந்தன. இங்கெல்லாம் திரிந்து அந் நகரைச் சுற்றிப் பார்த்தான். கதிர்கள் நுழையாதபடி அங்கு எடுத்த கொடிகள் பந்தல் இட்டது போல் நெருங்கிப் பறந்தன. அவை செல்வார்க்கு நிழலைத் தந்தன.

பாண்டியன் பேருரைக் கண்டு மகிழ்வு எய்தினான்; பின்பு பழையபடி கொடிகள் பறந்த மதிற்புறத்தே வந்து சேர்ந்தான்.