சிலம்பின் கதை/புறஞ்சேரி இறுத்த காதை
(புறஞ்சேரி இறுத்த காதை)
பயணம் தொடர்தல்
குமரிப் பெண்ணின் கொற்றவை கோலம் நீங்கியது. ஆடிமுடித்து அடங்கிய பின்னர்க் கோவலன் கவுந்தி அடிகள் கால்அடியில் விழுந்து, “இக்கொடிய வெய்யிலில் கடிய வழியில் கொடியனைய கண்ணகி செல்லுதல் இயலாது; பரல் வெங்கானத்தில் அவள் சீறடி படியாது. இரவில் செல்வதே தக்கது” என்று விளக்கிக் கூறினான்.
“மேலும் பாண்டிய நாட்டில் கரடி ஏதும் இடர் செய்யாது; அவை புற்றுகளைத் தோண்டா. புலியும் மான் வேட்டை ஆடாது. பாம்பும், சூர்த் தெய்வமும், முதலையும் தம்மைச் சார்ந்தவரை வருத்துதல் செய்யா. செங்கோன்மை கெடாத சீர்மையுடைய பாண்டியர் காக்கும் நாடு என்று எங்கும் பரவிய புகழோ பெரிது; பகலில் செல்வதை விடப் பல்லுயிர்க்கு ஆதரவாக நிலவு வீசும் இரவிடைச் செல்வது ஏதம் தராது” என்று அவன் தெரிவித்தான்; அதற்கு அவ்வடிகளாரும் இசைவு தந்தனர். கொடுங்கோலின் கீழ்வாழும் குடிகள் அவன் வீழ்ச்சியை எதிர்பார்ப்பது போலக் கதிரவன் சாய்வினை அவர்கள் எதிர்பார்த்தனர்.
நிலவு வெளிப்பட்டது. பார்மகளும் கண்ணகிக்காக இரங்கிப் பெருமூச்சு விட்டாள். மீன்கள் தன்னைச் சூழந்து வர நிலா தண்ணொளி வீசியது.
நட்சத்திரம் கோத்தது போன்ற முத்துவடம், சந்தனக் குழம்பு இவற்றைக் கண்ணகி அணியும் நிலையில் இல்லை. கழுநீர்ப் பூ கூந்தலில் அவள் அணிந்திலள். தளிர் மாலையோடு பூந்தழைகளும் அவள் மேனியை அழகு செய்தில. தென்றல் வீசுகிறது. நிலவு தன் கதிர்களை அள்ளிப் பொழிகிறது. எனினும் அது அவளுக்கு இன்பம் சேர்க்கவில்லை. அவள் மனநிலை அதற்கு இசைவு தரவில்லை. அவள்நிலை கண்டு பூமி வருந்தியது. மண்மகள் பெருமூச்சு விட்டு அடங்கினாள்.
அதன் பின்னர் வழியிடை நடந்து வருந்தும் மாது ஆகிய கண்ணகியை நோக்கி, “புலி உறுமும், ஆந்தைகள் அலறும்; கரடி கத்தும். இவற்றைக் கண்டு அஞ்சாது என்னுடன் வருக” எனக் கோவலன் கூறினான். அவள் அவன் தோளில் கையைச் சார்த்திய வண்ணம் பின் தொடர்ந்தாள். கவுந்தி அடிகள் அறவுரைகள் பேசிக் கொண்டே வர வழிநடைவருத்தம் தோன்றாமல் இருவரும் நடந்து சென்றனர். பேச்சுத்துணை அவர்களுக்குப் பெரிதும் உதவியது.
கோசிகன் சந்திப்பு
இரவுப் பொழுது நீங்கியது; காட்டுக் கோழி கத்தியது; பொழுது விடிந்தது. அந்தணர் உறையும் பகுதியைச் சேர்ந்தனர். கண்ணகியைக் கவுந்தியடிகள்பால் விட்டு விட்டுக் கோவலன் தனியே நீங்கினான். தான் தங்கியிருந்த வீட்டின் முள்வேலியை விட்டு நீங்கி நீர் கொண்டுவர ஒரு பொய்கை நோக்கிச் சென்றான். சற்றுத் தொலைவில் கோசிகன் என்னும் அந்தணன் இவனை விடியற்பொழுதில் கம்மிய இருளில் கண்ணுற்றான். அவன் அடியோடு மாறிப் போயிருந்தான். காதலி தன்னோடு கடுவழி வந்ததால் அவன் கறுத்து விட்டான். அவனால் அடையாளமே கண்டு கொள்ள இயலவில்லை. இவன்தான் கோவலன் என்பதை அவனால் உறுதி செய்ய முடியவில்லை; அதற்காக அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.
அங்கே மாதவிக் கொடி ஒன்று வெய்யிலுக்கு வாடிக் கிடந்தது; “இந்த வேனிலுக்கு நீ வாடிக் கிடக்கின்றாய். நீயும் கோவலன் பிரிய அதனால் வருந்தி இளைத்து வாடிய மாதவிபோல் வாட்டமுற்றிருக்கிறாயோ” என்று பேச்சுக் கொடுத்துத் தனி மொழி பேசினான். இலை வேயப்பட்ட பந்தலிடை நின்று அவன் பேசினான். இந்தக் கோசிகமாணி இவ்வாறு கூறக் கேட்ட கோவலன், “நீ கூறியது யாது?” எனக் கேட்க அவன்தான் இவன் என்று தெரிந்தவனாய் அவனிடம் பேசி அவன் பெற்றோர்களின் அவலத்தையும், மாதவியின் மயக்கத்தையும் விரித்து உரைத்தான்.
“நின் தந்தையும் தாயும் மணிஇழந்த நாகம் போன்று துடித்து வருந்தினர். சுற்றத்தவர் உயிர் இழந்த யாக்கை எனத் துயரத்தில் ஆழ்ந்தனர். ஏவலாளர் பல இடத்தும் சென்று தேடித் திரும்பினர். தசரதன் ஆணையால் காடு அடைந்த இராமனைப் பிரிந்த அயோத்தி போல் நகர மக்கள் பெரிதும் வருந்தினர்” என்று கூறினான்.
மாதவியின் நிலையினையும் கோசிகன் உரைத்தான்; “வசந்தமாலைவாய்க் கசந்த செய்தியாகிய உன் பிரிவைக் கேட்டுப் பச்ந்த மேனியள் ஆயினாள் மாதவி. அவள் தன் நெடுநிலை மாடத்து இடைநிலத்துக் கிடந்து இடர் உற்றாள். அந்தச் செய்தியை அறிந்து அவள் துயர் தீர்க்க யான் அவளிடம் சென்றேன்; அவள் என்னிடம் ஒரு முடங்கல் தந்து அனுப்பினாள்” என்று வரிசைப்படுத்திக் கூறினான்.
பல இடங்களில் தேடி அலைந்து தான் இப்பொழுது அவனைக் கண்டதையும் எடுத்து உரைத்தான். மாதவி தந்த ஓலையை அவன் அழகிய கையில் நீட்ட அவன் அதனை வாங்கினான். தான் அவளோடு உறைந்த காலத்தில் நுகர்ந்த மணத்தை அது அவனுக்கு நினைவு ஊட்டியது: பழையநினைவு அவனை வாட்டியது; அதனை விரும்பி வாங்கினான். திரும்பத் தந்திலன்; ஏட்டை விரித்து அவள் எழுதியதைப் பாட்டு எனப் படித்தான். “அடிகளே! யான் உம் திருவடிகளில் விழுகின்றேன்; வணங்குகின்றேன். குழம்பிய நிலையில் எழுதும் இச்செய்திகளைப் படித்து மனத்தில் கொள்ள வேண்டுகிறேன். குரவர் பணி இழத்தல், குல மகளோடு இரவிடைக்கழிதல் இரண்டிற்கும் யான் காரணமாகிறேன்; செயலற்ற நிலையில் சிந்தை இழந்து வருந்துகின்றேன். என்னை மன்னிப்பீராக” என்று அவ் வாசகம் அமைந்திருந்தது. அவள் தீது இலள்; தான் தான் தவறுசெய்தவன் என்று உணர்ந்தான். “இம்முடங்கலின் கருத்துகள் என் பெற்றோர்க்கும் பொருந்துகின்றன; இதனை அவர்பால் சேர்க்க” என்று அவனிடம் தந்து தன் பெற்றோர்க்குத் தன் செய்தியையும் வணக்கத்தையும் கூறி “அவர்தம் துன்பத்தைக் களைக” என்று கூறி அனுப்பினான். அதன்பின் அறவியாகிய கவுந்தியடிகளை அடைந்தான்.
பாணர்களுடன் உரையாடல்
அங்கே பாணர்கள் சிலர் வந்திருந்தனர்; அவர்கள் கொற்றவையைப் போற்றிப் பண்ணுடன் யாழ்இசை மீட்டினர். அவர்களோடு சேர்ந்து கலந்து அப்பாடலை ஆசான் நிலையில் இருந்து அமைதியாகக் கேட்டு அவர்களோடு கலந்து பாடிப் பின் உரையாடினான். பின்பு, “மதுரை இன்னும் எத்தனை காவத துாரத்தில் உள்ளது?” என்று கோவலன் வினவினான்.
அவர்கள் மதுரைத் தென்றல் அங்குவந்து மதுரமாக வீசுவதைக் காட்டினர். “அது சந்தனம், குங்குமம், கஸ்துாரி முதலிய கலவைகளின் சேறுகளில் படிந்தும், சண்பக மாலை, மாதவி, மல்லிகை, முல்லை முதலிய பூக்களில் பொருந்தியும், சமையல் அறைப் புகை, அங்காடிகளில் அப்பம் சுடும்புகை, மைந்தரும் மாதரும் மாடங்களில் எழுப்பும் வாசனைப் புகை, வேள்விச் சாலையில் விரும்பி எழுப்பும் புகை, அரசன் கோயிலில் விரவிவரும் நறுமணம் இவை பலவும் கலந்து வருவது இம்மதுரைத் தென்றல்; இது புலவர் புகழும் பொதிகைத் தென்றல் போன்றது அன்று. அது குளிர்ச்சி தருவது: இது மணமும் புகையும் கலந்து மகிழ்ச்சி தருவது; மாபெரும் நகர் என்பதைக் காட்டுவது ஆகும். அதனால் இரண்டிற்கும் வேறுபாடு அறிய இயலும்; எனவே மதுரை மிகவும் அணித்து உள்ளது” என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். “அந்த அழகிய ஊருக்குத் தனித்துச் சென்றாலும் அச்சம் இல்லை; தடுப்பவர் யாரும் இல்லை, மடுத்துச் செல்லலாம்” என்று கூறக் கோவலன் மற்றைய இருவரோடு முன்போலவே இரவில் பயணம் செய்து விடியற் காலையில் மதுரையை அடைந்தான்.
மதுரையை அடைதல்
அங்கே அவர்கள் முதலில் கேட்டது சிவன் கோயிலின் முரசு; அதனோடு சேர்ந்து அவர்கள் கேட்டது அரசன் கோயிலின் காலைமுரசு மற்றும் அங்கே மறையவர் வேதம் ஒதினர்; மாதவர் மந்திரம் கூறினர். இவையும் செவியில் வந்து விழுந்தன.
படை வீரர்கள் அணி வகுத்து வகை செய்யும் போது எழுப்பிய ஒசை, போர்களில் பிடிபட்ட யானைகள் முழக்கம், காடுகளினின்று பிணித்து இழுத்துவரப்பட்ட களிறுகளின் கதறல், வரிசைப் படுத்தப்பட்ட குதிரைகள் கனைக்கும் குரல் ஒசை, கிணைப் பொருநர் பாடிய வைகறைப் பாடல் ஒசை, கடல் எழுப்பும் முழக்கம் போல் வந்து இவர்களை வரவேற்றன. அவர்கள் துன்பமெல்லாம் நீங்கி நகர்வந்து சேர்ந்துவிட்டோம் என்பதில் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்.
அங்குப் பசுமை மிக்க சோலைகள் இவர்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தன. குரவம், வகுளம், கோங்கம், வேங்கை, மரவம், நாகம், திலகம், மருதம், சேடல், செருந்தி, செண்பகம், பாடலம் முதலிய பன்மலர் விரிந்து அழகு தந்தன. மற்றும் குருகு, தளவம், முசுண்டை, அதிரல், கூதாளம், குடகம், வெதிரம், பகன்றை, பிடவம், மயிலை முதலியன பின்னிப் பிணைந்து வைகை நதிக்கு அமைந்த மேகலைபோல் காட்சி அளித்தன.
அந் நதியில் மணல் மேடிட்ட கரைகள் நதிக்கு அணி செய்து அழகு தந்தது. மணல்குன்றுகள் அதன் வனப்புமிக்க கொங்கைகள் ஆயின. முருக்கமலர்கள் சிவந்த வாய் ஆயின; முருக்க மலர்கள் இதழ்ச் செவ்வாய் ஆயின. நீரில் அடித்து வந்த முல்லை மலர்கள் அதன் பல்லை நினை வுறுத்தின. அவை அதன் பற்கள் ஆயின. ஒடித்திரிந்த கயல்கள் அந்நதியின் கண்கள் ஆயின. கருமணல் கூந்தலைக் காட்டியது. இந்த மண்ணுக்கு வளம் தந்து தாயாக இருந்து பால் ஊட்டும் பாங்கில் நீர் தந்த இவ்வைகை நதி புலவர் புகழ்ந்து பாடும் பெருமை பெற்றது.
இந் நதி பூவாடை போர்த்துக் கண்ணிர் மல்கிக் காட்சி அளித்தது. இவர்கள் படும் துயரம் கண்டு விடும் கண்ணிர் அது; கள்நீர் கண்ணிர் எனப்பட்டது. அதனை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது அது; வருத்தத்தில் அது பூக்களைப் போர்வையாகக் கொண்டு தன்னை மூடிக் கொண்டது. அதனைக் கண்ட இம் மூவரும், “இது வெறும் புனல் ஆறு அன்று; பூ ஆறு” என்று கண்டு வியந்தனர். அன்னநடை பயின்ற அழகி கண்ணகியும், அவள் கணவன் ஆகிய கோவலனும் அதனைத் தொழுது வணங்கினர்.
அதன் கரையைக் கடந்து நகருக்குச் செல்ல வேண்டுவது ஆயிற்று; அங்கு உயர்குடி மக்கள் உவகையுடன் உல்லாசப் பயணம் செய்யும் அம்பிகள் அடுக்கடுக்காக நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் வடிவுக் கேற்ப அவை கரிமுக அம்பி, பரிமுக அம்பி, அரிமுக அம்பி எனப் பேசப்பட்டன. அவற்றை நாடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அங்கு இருந்த மரப்புணையாகிய கட்டு மரம் அதனைத் தேர்ந்து அதில் அமர்ந்து அவ்வாற்றினைக் கடந்தனர். வைகையின் மலர்ப்பொழில் சூழ்ந்த தென் கரையை அடைந்தனர்.
தேவர்கள் விரும்பித் தங்கும் நகர் அது என்று மதித்து அதனை வலம் செல்வது நலம் தரும் எனக் காவற்காடுகள் சூழ்ந்த அகழியைச் சுற்றிச் சென்றனர். மதிற்புறத்தே நடந்தனர். அந்த அகழியில் குவளையும், ஆம்பலும், தாமரையும் இவர்கள் துயரத்தை அறிந்தன போல் கண்ணிர் வீட்டன. கள் ஆகிய தேனைச் சொரிந்தன; அது கண்ணிர் எனப்பட்டது. அதன் தாள்கள் நடுங்கின; வண்டுகள் இனைந்து வருந்துவன போல் பண் அமைவு கொண்டு ஒலி செய்து இரக்கம் காட்டின.
பகைவரை வெற்றி கொண்டதன் அறிகுறியாக எடுத்த மதில் கொடிகள் வராதே” என்று தடுப்பன போல் மறித்துக் கை காட்டின. பல்வகைச் சோலைகள் மிடைந்த மதிலின் வெளிப்புறப் பகுதியை அடைந்தனர். அங்குத் துறவிகள் மட்டும் தங்கும் உரிமை பெற்றிருந்தனர்.
அந்தப் புறஞ்சேரியில் அவர்கள் தங்கினர். சிறிது நேரமே அங்குத் தங்க அவர்கள் இயலும்; இருள் வரும் வரை அங்கே அவர்கள் தங்க நேர்ந்தது.