சிலம்போ சிலம்பு/ஊழ் வினை

6. ஊழ் வினை

ஊழின் வலிமை

சிலப்பதிகாரம் ஊழ்வினையின் துணை கொண்டே நடைபோடுகிறது. ஊழ்வினையில் நம் நாட்டு மக்களுள் பெரும்பாலார்க்கு மிக்க நம்பிக்கை உள்ளது. இந்து, சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் ஊழ்வினையை வலியுறுத்துகின்றன. திருவள்ளுவர் திருக்குறளில் ‘ஊழ்’ என்னும் தலைப்பு இட்டுப் பத்துப் பாடல்களில் ஊழ்வினை நம்பிக்கையை ஊட்டியுள்ளார் எனலாம். மக்கள், என்ன சூழ்ந்து எவ்வளவு சூழ்ந்து ஒரு செயல் புரிய முயன்றாலும் ஊழ்வினையின் படியே நடக்கும்; ஊழினும் வலிமையுடையது ஒன்றும் இல்லை என்னும் கருத்தில் பாடியுள்ள

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்” (380)

என்னும் ஒரு குறளே போதுமே! மற்றும், சோர்வு இன்றி ஊக்கத்துடன் விடாது தொடர்ந்து செயலாற்றுபவர்கள் ஊழையும் அப்பால் தள்ளி வென்றுவிடுவர் என்னும் கருத்துடைய

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்” (620)

என்னும் குறளையும் வள்ளுவர் பாடியுள்ளார். ‘ஊழையும்’ என்பதில் உள்ள ‘உம்’ உயர்வு சிறப்பு உம்மையாகும். வெல்ல முடியாத ஊழையுங்கூட வெல்வர் என்பதிலிருந்து, ஊழ் வெல்ல முடியாதது என்பது பெறப்படுகின்றது.

ஊழ் - விளக்கம்

ஊழ் என்பதுதான் என்ன? முன் பிறவியில் நல்லன. செய்திருப்பின் இப்பிறவியில் நல்லன நடக்கும்; முன் பிறவியில் தீயன செய்திருப்பின் இப்பிறப்பில் தீயனவே நேரும். இதே போல, இப்பிறப்பில் நல்லன புரியின் அடுத்த பிறப்பில் நல்லனவே நடைபெறும்; இப்பிறப்பில் தீயன செய்யின் அடுத்த பிறவியில் தீயனவே நேரும் - என்பது தான் ஊழின் விளக்கம்.

ஊழின் கண்டு பிடிப்பு

முற்பிறவியில் நல்லனவோ - தீயனவோ செய்தது எவ்வாறு இப்பிறப்பில் தெரியும்? இது போலவே அடுத்த பிறப்பில் நல்லனவோ - தீயனவோ நடக்கப் போவது இப்பிறவியிலேயே எவ்வாறு தெரியும்?

முன்னோர்கள் எண்ணிப் பார்த்திருக்கிறார்கள் - இப்பிறவியில் நல்லன செய்பவன் துன்புறுகிறான் - தீயன செய்பவன் இன்புறுகிறான் - இதற்குக் காரணம் என்ன?- என்று பல நாட்கள் - பல்லாண்டுகள் எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். அதற்குச் சரியான - பொருத்தமான விடை கிடைக்கவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் ஒரு முடிவுக்கு வரலாயினர். அதாவது:- இப்பிறவியில் நல்லது பெறுபவன் முற்பிறப்பில் நல்லது செய்திருக்கலாம்; இப்பிறவியில் தீயது பெறுபவன் முற்பிறவியில் தீயது செய்திருக்கலாம். இதேபோல, இப்பிறவியில் நல்லது பெறுபவன் தீயவனாய்த் தீயது செய்தால் அடுத்த பிறவியில் தீயது பெறுவான்; இப்பிறவியில் தீயது பெறுபவன் நல்லவனாய் நல்லது செய்யின் அடுத்த பிறவியில் நல்லது பெறுவான் - என உய்த்துணர்வாக - ஊகமா - உத்தேசமாக ஒரு முடிவுக்கு வந்தனர். இத்தகைய சூழ்நிலைகட்கு ‘ஊழ்’ என்ற ‘மகுடமும்’ சூட்டிவிட்டனர்.

திருவள்ளுவரின் திணறல்

திருவள்ளுவரே ஓரிடத்தில் திணறியுள்ளார். பொறாமை கொண்ட தீய நெஞ்சுடையவனுடைய வளர்ச்சியும், பொறாமையற்ற நல்ல நெஞ்சத்தவனின் கேடும் இயற்கைக்கு மாறாயிருத்தலின், இந்தச் சூழ்நிலை எண்ணி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும் - என்னும் கருத்தமைந்த

“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப்படும்” (169)

என்னும் குறளை இயற்றியுள்ளார். முன்னோர்கள் இந்த அடிப்படையிலேயே, ஊழ் என்னும் இல்லாத ஒன்றை - பொருந்தாத ஒன்றைப் புதிதாய்க் கண்டுபிடித்து வழி வழியாக மக்களின் தலையில் சுமத்திவிட்டுப் போய் விட்டனர்.

பொருத்தமான தீர்வு

ஒரு பிறவியிலேயே முன்னால் நல்லது செய்தவன் பின்னால் நல்லது பெறுவான்; முன்னால் தீயது செய்தவன் அப்பிறவியிலேயே பின்னால் தீயது பெறுவான். இவ்வாறு ஒரு பிறவிக்குள்ளேயே முன்னால் செய்யப்பெறும் நல்லன - கெட்டனவற்றிற்கு ‘ஊழ் வினை’ என்னும் பெயர் பொருந்துவதாகும். இந்தக் கருத்தை ஒளவைப் பாட்டியும் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” எனக் கொன்றை வேந்தனில் (74) கூறியுள்ளார். திருவள்ளுவரும், முற்பகலில் பிறர்க்குத் துன்பம் செய்யின், பிற்பகலில் தங்கட்குத் துன்பங்கள் யாரும் செய்யாமலேயே தாமாகவே வந்து சேரும் - என்னும் கருத்தில்,

“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்”

என்று ஒரு குறள் பாடியுள்ளார். ஒரு பிறவியிலேயே முற்பகுதி - பிற்பகுதி என்னாமல், ஒரு பகலிலேயே (ஒரு நாளிலேயே) முற்பகல் - பிற்பகல் என்று தொடர்புறுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலையை உண்மையான - மிகப் பெரிய ஊழாகச் சொல்லலாம்.

இவ்வாறாக, ஒரு பிறவியிலேயே முற்பகுதி - பிற்பகுதி, ஒரு பகலிலேயே முற்பகல் - பிற்பகல் என்பன பொருத்தமான ஒருவகைத் தீர்வாகும்.

இதற்கு மற்றொருவகைத் தீர்வும் சொல்லலாம்: நல்லவர்க்கு நல்லதோ-கெட்டதோ, தீயவர்க்குத் தீயதோ - நல்லதோ நடப்பது, இயற்கையாக - தற்செயலாக - யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடப்பது ஒரு தீர்வாகும். போக்குவரவு வண்டியில் அகப்பட்டு இறத்தல், புயல், வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை, போர், கொலை முதலியவற்றால் உடைமையையோ - உயிரையோ இழத்தல் போன்றவை, இயற்கையாக - தற்செயலாக நடக்கும் தீமைகளாகும். பிள்ளையில்லாதவரின் சொத்து கிடைத்தல், குலுக்கல் (இலாட்டரி) சீட்டு போன்றவற்றால் திடீர்ப் பணக்காரர் ஆதல் போன்றவை இயற்கையாக - தற்செயலாகக் கிடைக்கும் நன்மைகளாகும். இவற்றோடு ஊழ்வினை என ஒன்றைக் கொண்டுவந்து, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடுவது போல் தொடர்புறுத்துவது பொருந்தாததாகும். இந்த அடிப்படையுடன் சிலப்பதிகாரத்திற்குச் செல்வாம்.

சிலம்பில் பல இடங்களில் ஊழ்வினை வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்பிறவித் தொடர்புக் கதையும் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை அறிவியல் ஆய்வு முறையில் நோக்கின், முற்பகல் செய்தது பிற்பகலில் விளைந்ததாகவும், ஒரு பிறவியிலேயே முன்பாதியில் செய்தது பின்பாதியில் விளைந்ததாகவும், இயற்கையாக - தற்செயலாக நடந்ததாகவும் தெரியவரும். இனி நூலுள் புகுந்து ஒவ்வொன்றாகக் காணலாம்.

பதிகம்

பதிகத்திலேயே ஊழ் வினைக் குறிப்பு உள்ளது. கோவலனுக்கு இருந்த ஊழ்வினையால் பாண்டியன் ஆராயாது கொல்லச் செய்தானம்:

“வினைவிளை காலம் ஆதலின் யாவதும்

சினையலர் வேம்பன் தேரானாகி..” (27-28)

என்பது பாடல் பகுதி. அரசியலில் தவறு இழைத்தோர்க்கு அறமே எமனாகும் - பத்தினியைப் பெரியோரும் ஏத்துவர் ஊழ்வினை விடாது வந்து ஊட்டும் - என்னும் முன்று செய்திகள் சிலப்பதிகாரத்தால் தெரியவருமாம்.

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது உம்...”

(55, 56, 57)

என்பது பாடல் பகுதி.

கானல் வரி

கானலில் மாதவி யாழ் மீட்டிப் பாடியது வஞ்சகப் பொருள் உடையது என ஐயுற்ற கோவலன், தனது ஊழ்வினையும் சேர்ந்து கொள்ள, முழுமதிபோன்ற முகமுடைய மாதவியைப் பிரிந்தான். பாடல்:

“யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினை
    வந்து உருத்த தாகலின்
உவவுற்ற திங்கள் முகத்தாளைக்

    கவவுக்கை ஞெகிழ்ந்தனனால்” (52 : 4, 5)
என்பது பாடல் பகுதி.

கனாத் திறம் உரைத்த காதை

கண்ணகி முன் பிறவியில் தன் கணவன் தொடர்பான ஒரு நோன்பு இயற்றுவதில் பிழை செய்து விட்டதாகத் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழி கண்ணகியிடம் கூறினாளாம். பாடல்:

“கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு

பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க் கெடுக...” (55,56)

மற்றும், பழைய ஊழ்வினை கூட்டியதால், ஞாயிறு தோன்றுவதற்கு முன்பே, வைகறையில் கோவலன் கண்ணகியுடன் புகாரை விட்டுப் போக எண்ணினான்.

மூதை, வினை கடைக்கூட்ட வியங்கொண்டான் கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்

என்பது, இறுதி வெண்பாவின் இறுதிப் பகுதி.

நாடு காண் காதை

கோவலனும் கண்ணகியும் ஊழ்வினை செலுத்தியதால் மதுரை நோக்கிப் புறப்பட்டனராம்.

“ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப” (4)

என்பது பாடல் பகுதி.

கோவலனும் கண்ணகியும் வழியில் ஒரு சோலையில் தங்கியிருக்கையில், ஒரு சாரணர் வந்து தோன்றினர். கோவலனும் கண்ணகியும் கவுந்தியுடன் சேர்ந்து, எங்கள் பழைய வினை கெட்டொழிக என வேண்டிச் சாரணரைத் தொழுதனராம்:

“தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்
பண்டைத் தொல்வினை பாறுக என்றே

கண்டறி கவுந்தியொடு காலுற வீழ்ந்தோர்” (163-165)
என்பது பாடல் பகுதி.

சாரணர் ஒருவர் கவுந்தியடிகளிடம் பின்வருமாறு கூறினார். உருத்து வந்த ஊழ்வினை ஒழிக. என எவர் முயலினும் ஒழியாது. விதைத்த விதை முளைத்து முதிர்ந்து பயன் அளிப்பது போல், ஊழ்வினை பயன் அளித்தே தீரும்.

“கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்லிணை
இட்ட வித்தின் எதிர்ந்து வந்துஎய்தி

ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா” (170.173)

என்பது பாடல் பகுதி. நல்லூழுக்கு உரியவையல்லாத பொருள்களை வருந்திக் காத்தாலும் வளராவாம்; ஊழின் படி தமக்கு உரிய பொருள்களை வெளியில் கொண்டுபோய்க் கொட்டினும் போகாவாம் - என்னும் கருத்து செறிந்த

“பரியினும் ஆகாவாம் பாலல்ல; உய்த்துச்

சொரியினும் போகா தம” (376)

என்னும் குறளும், மழை பெய்யாது வறண்டபோது பெய் என்றால் பெய்யாது - மழை நிரம்பப் பெய்யுங்கால் நிறுத்து என்றால் நிறுத்தாது - அதுபோல், ஊழ்வினையும் தீவினை செய்யுங்கால் அதை நீக்கவும் முடியாது - நல்லது செய்யின் அதனை விலக்கவும் முடியாது என்னும் கருத்து அமைந்த

“உறற்பால நீக்கல் உறுவார்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை; அதனைச்

சிறப்பின் தணிப்பாரும் இல்” (104)

என்னும் நாலடியார்ப் பாடலும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன.

ஊர் காண் காதை

கவுந்தி கோவலனுக்குக் கூறுகிறார்: பெரியோரின் அறிவுரைகளை அறிவற்றவர்கள் ஏற்று ஒழுகாமல், தீவினை வந்து உருத்தும் போழ்து அறியாமை காரணமாகத் துன்புறுவர். பாடல்:

“யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்
தீதுடை வெவ்வினை உருத்த காலைப்

பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்” (30-32)

(யாப்பு அறை = அறிவு அற்ற, கந்து = காரணம்)

மேலும் கவுந்தி கூறுகிறார்: சூதாட்டத்தால் நலிவுற்ற நளன், தன் மனைவியை நடுக்காட்டில் நள்ளிரவில் விட்டுச் சென்றது ஊழ்வினையால் அல்லவா? பாடல்:

“அடவிக் கானகத்து ஆயிழை தன்னை
இடையிருள் யாமத்து இட்டு நீக்கியது

வல்வினை யன்றோ?” (54-56)

மதுரையின் புறஞ்சேரியிலே, கவுந்தி, கோவலன், மாதவி ஆகிய மூவரும் தங்கியிருந்தபோது மாடலன் என்னும் மறையவன் ஆங்கு வந்தான். அவன் கோவலனை நோக்கிப் புகழ்மொழி கூறி, கோவலா! யான் அறிந்துள்ள வரையும் நீ இப்பிறப்பில் நல்ல அறச் செயல்கள் புரிந்துள்ளாய். இப்போது இந்தக் கண்ணகியோடு ஈங்கு வந்து அல்லல் உழப்பதற்குக் காரணம், முன் பிறவியில் செய்த வினையாய் இருக்கலாம்-என்று அறிவித்தான்.

“இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத்

திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” (91-93)

என்பது பாடல் பகுதி.

கொலைக் களக் காதை

கோவலன் சிலம்பு விற்கக் கடைத்தெருவுக்குப் புறப்படுமுன், கண்ணகியுடன் உருக்கமாக உரையாடுகின்றான்: கண்ணகியே! நாம் இவ்வாறு துன்புறுவதற்குக் காரணம் யாராவது செய்த மாயமா யிருக்கலாமோ அல்லது நமது பழைய வலிமையுடைய ஊழ்வினையா யிருக்கலாமோ! யான் உள்ளம் கலங்குகிறேன்-ஒன்றும் புரியவில்லை-என்று கூறினான்.

“மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ

யான் உளம் கலங்கி யாவதும் அறியேன்” (61, 62)

என்பது பாடல் பகுதி.

பொற்கொல்லன் பாண்டிய மன்னனிடம் சென்று, சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டுக் கொண்டான் என்று கூற, கோவலனுக்கும் பாண்டியனுக்கும் பழைய தீய ஊழ் வினை விளைவுதரும் காலமாயிருந்ததால், அந்தக் கள்வனைக் கொல்லுக என்று கூறினான். அவ்வாறே, பழைய திய ஊழ்வினையாகிய வலையிலே சிக்கிக்கொண்டிருந்த கோவலன் கொல்லப்பட்டான் பாடல்:

“வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி” (148, 149)

“தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த

கோவலன் தன்னைக் குறுகின னாகி” (156, 157)

என்பது பாடல் பகுதி.

கோவலன், பழைய தீய ஊழ்வினை உருத்தியதால் பாண்டியனது செங்கோல் வளைந்து கொடுங்கோல் ஆக, வெட்டப்பட்டுக் கீழே விழுந்தான்.

“காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்

கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்” (216, 217)
கொலைக் களக் காதையின் இறுதியில் பின்வரும் வெண்பா உள்ளது.

“நண்ணும் இருவினையும் கண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகிதன் கேள்வன் காரணத்தால் மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை

விளைவாகி வந்த வினை”

பாண்டியனுக்குப் பழைய தீய ஊழ்வினை இருந்ததால் கோவலன் காரணமாகச் செங்கோல் வளைந்தது. எனவே, உலகமக்களே! நல்வினை-தீவினை என்னும் இருவினையும் நம்மை வந்து சேரும்; ஆதலின் எப்போதுமே நல்ல அறச் செயல்களையே செய்யுங்கள்-என்று உலகுக்கு ஆசிரியர் கூறும் அறிவுரையாக இப்பாடல் அமைந்துள்ளது.

கட்டுரை காதை

மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதி கண்ணகியை நோக்கி, பழைய ஊழ்வினை வந்து பயன் அளிக்கத் தொடங்கிவிடின், ஒழுங்கற்றவர்கள் எவ்வளவு தவம் இப்போது செய்யினும் ஊழைவெல்ல முடியாது.

“உம்மை வினைவந்து உருத்த காலைச்

செம்மை யிலோர்க்குச் செய்தவம் உதவாது” (171, 172)

குன்றக் குரவை

மதுரையும் பாண்டியனும் அழிந்தபின், கண்ணகி நெடுவேள் குன்றம் அடைந்தாள். குன்றத்து மக்கள் கண்ணகியை நோக்கி யாரென்று வினவக் கண்ணகி கூறினாள்: பழைய தீய வலிய ஊழ் வினை வந்து உருத்த தால், மதுரையும் பாண்டியனும் அழிய, கணவனை இழந்த கொடு வினையேன் யான் என்று கூறினாள்:

“மணமதுரையோடு அரசு கேடுற
      வல்வினை வந்து உருத்தகாலைக்
கணவனை அங்கு இழந்து போந்த

     கடுவினையேன் யான் என்றாள்” (5, 6)

நீர்ப் படைக் காதை

கனக விசயர் தலையில் கல்லேற்றி வந்த மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் மறையவன் மாடலன் கோவலன் வரலாறு கூறினான்: புகார்க் கடற்கரையிலே, பழைய தீய ஊழ்வினை வந்து உருத்ததால், மாதவி பாடிய வரிப் பாடலில் மாற்றுப் பொருள் கண்ட கோவலன் அவளை விட்டுப் பிரிந்து கண்ணகியிடம் வந்து சேர்ந்தான் என்று கூறினான். பாடல்:

“மாதவி மடங்தை வரிகவில் பாணியொடு
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்தெழக்
கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன்

மாட மூதூர் மதுரை புக்கு ...” (58-61)

நடுகல் காதை

செங்குட்டுவனிடம் அறவேள்வி செய்யுமாறு மாடலன் தூண்டிய போது, பின் வரும் கருத்தைக் கூறினான். முன் செய்த ஊழ் வினையின் வழிப்படி உயிர் இயங்கும் என்பது மெய்யாளர் மொழிந்த மேலான கருத்தாகும் - என்றான்.

பாடல்:

“செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது

பொய்யில் காட்சியோர் பொருளுரை” (167, 168)

ஈண்டு இது, புறநானூற்றில் உள்ள

“நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம்” (192:9-11)

என்னும் பாடல் பகுதியோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.

வரம் தரு காதை

மாலதி என்பாள் மாற்றாள் குழந்தைக்குப் பால் சுரந்து ஊட்டினாளாம். பழைய தீய ஊழ் வினை உருத்ததால் எமன் குழந்தையின் உயிரைக் கொண்டு சென்றானாம்.

“மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால்சுரங் தூட்டப் பழவினை உருத்துக்

கூற்றுயிர் கொள்ளக் குழவிக்கு இரங்கி” (74-76)

இவ்வாறு ஊழ் வினை சிலப்பதிகாரத்தில் ஒரு (சுமார்) இருபது இடங்கட்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை காதையில், மதுரையின் 57 தெய்வமாகிய மதுராபதி கண்ணகியிடம், கோவலனது முன் பிறப்பு வரலாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது:

கலிங்க நாட்டில் உள்ள சிங்கபுரம் என்னும் பகுதியில் வசு என்பவனும், கபிலபுரம் என்னும் பகுதியில் குமரன் என்பவனும் அரசாண்டு கொண்டிருந்தனர். இவர்கள் பகை கொண்டு. ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயன்றனர். இரு பகுதிக்கும் இடையே ஆறு காத எல்லைக்குள் யாரும் இயங்குவது இல்லை. இந்நிலையில், சங்கமன் என்னும் பன்மணி நகை வாணிகன் தன் மனைவி நீலி என்பவளோடு, கபிலபுரத்திலிருந்து கள்ளத்தனமாகச் சிங்கபுரம் சென்று நகை மணி வணிகம் புரிந்து கொண்டிருந்தான். அப்போது, சிங்கபுரத்து மன்னனின் பணியாளனாகிய பரதன் என்பவன், சங்கமன் பகைவனது ஒற்றன் எனத் தங்கள் மன்னனிடம் பொய்யாகக் காட்டிக் கொடுத்துக் கொல்லச் செய்து விட்டான். இறந்து போன சங்கமனின் மனைவியாகிய நீலி என்பாள் பெரிதும் வருந்திப் பதினான்காம் நாள் ஒரு மலை மீது ஏறி நின்று, என் கணவன் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்தவன், அடுத்த பிறவியில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்படுவானாக. அவன் மனைவி யான் அடைந்துள்ள நிலையை அடைவாளாக எனக் கெடுமொழி (சாபம்) இட்டு இறந்து போனாள். அந்தப் பரதன் என்பவனே கோவலனாகப் பிறந்தான்; நீலியின் கெடு மொழிப்படியே பொய்க் குற்றம் சுமத்தப்பட்டுக் கொல்லப்பட்டான். அவன் மனைவி கண்ணகி பதினான்காம் நாள் ஒரு மலை உச்சியில் வாணாளை முடித்துக் கொண்டாள் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

இந்தக் கதை ஊழ்வினையையும் அதன் வலிமையையும் நம்பச் செய்யும் கட்டுக் கதை என்றே தோன்றுகிறது.

சிலம்பிசைப் பாட்டரங்கம்

ஊழ்வினை வந்து உருத்து ஊட்டியதால்தான், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல் கிடைத்தது. தமிழகத்தில் இருந்த கண்ணகி கோயில்கள் துரோபதை கோயிலாகவும் வேறு அம்மன் கோயிலாகவும் மாற்றப்படினும், பழைய வழக்கப்படி, அம்மன் கோயில்களில் பூசாரிகள் இரண்டு கைகளிலும் சிலம்புகளைப் பிடித்துக் கொண்டு அவற்றை ஒலிக்கச் செய்தபடியே பாடல்கள் பாடிக் கதைப் பாட்டரங்கம் நடத்துகின்றனர். இப்படி ஒரு கலை தமிழகத்தில் வளர்ந்திருப்பது கண்ணகியின் சிலம்பு தொடர்பினாலேயாகும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியதின் பயனோ இது!