சிலம்போ சிலம்பு/காப்பியக் கட்டுக் கோப்பு
5. காப்பியக் கட்டுக்கோப்பு
இன்னின்னவை அமைந்திருப்பது காப்பியமாகும். இவ்வாறிருப்பது சிறு காப்பியம் - அவ்வாறு இருப்பது பெருங் காப்பியம் - என்றெல்லாம் வரையறைகளும் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகக் கூறலாம். எவரும் எந்த வரையறையையும் கட்டாயப்படுத்த இயலாது. இன்றியமையாத பெரும்பாலான அமைப்புகள் இருப்பின் சரிதான். இந்த அடிப்படையுடன், சிலப்பதிகாரத்தில் உள்ள காப்பியக் கட்டுக்கோப்புக் கூறுகள் சில காண்பாம்:
வாழ்த்து:- திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும், பூம்புகார் போற்றுதும் என்பனவற்றைக் கடவுள் வாழ்த்து - வணக்கம்போல் கொள்ளலாம். மங்கலமாகத் தொடங்கும் இந்தப் பகுதிக்கு ‘மங்கல வாழ்த்துப் பாடல்’ என்னும் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.
வருபொருள் உரைத்தல்:- அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துதல் கிடைப்பது, ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் - என்பன வருபொருள் உரைத்தலாம். பதிகத்தில் பின்னால் வரப் போகிற முப்பது காதைகளையும் குறிப்பிட்டிருப்பதும் அதுவேயாம்.
நால் பொருள்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் இடம் பெற்றிருத்தல். கவுந்தி, மாடலன், சாரணர் முதலியோர் கூறியன அறம். கோவலன் பொருள் தேட முயலுதல், பாண்டியனது அரசியல், சேரர்களின் போர் வெற்றி முதலியன பொருள் ஆகும். கண்ணகியும் கோவலனும் இன்புற்றது, மாதவியும் கோவலனும் களிப்பாட்டயர்ந்தது. ஊர் மக்கள் இன்பமாகப் பொழுது கழித்தது முதலியன இன்பமாகும். கண்ணகியும் கோவலனும் மேலு லகு செல்லுதல், சேரன் வேள்வி இயற்றுதல், கண்ணகிக் கோட்ட வழிபாடு முதலியன வீட்டின்பாற் படும்.
நிகரில் தலைவன் - தலைவி:- பெருங்குடியில் பிறந்த கோவலனும் கண்ணகியும் நிகரில்லாத காப்பியத் தலைவர்களாவர்.
மலை, கடல், நாடு, நகர் புனைவுகள்: இமயத்தில் கல் எடுத்தல், குன்றக் குரவை முதலியவை மலைப் பகுதியாம்.
புகார் மக்கள் கடலில் குளித்த கடலாடு காதை கடல் பற்றியது. சோழ நாட்டுப் புனைவும் பாண்டிய நாட்டுப் புனைவும், மதுரைப் புனைவும், சேரர் புனைவும் நாடு - நகரப் புனைவுகளாம் (வருணனைகளாம்).
பருவம்: வேனில் வந்தது - வேனில் காதை - பெரும் பொழுது. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை - சிறு பொழுது.
இரு சுடர்த் தோற்றம். திங்கள்: மாலையாகிய குறும்பை ஒட்டித் திங்கள் மீனர சாளுதல். ஞாயிறு: ஊர் காண் காதையில் பறவைகள் ஒலிக்கத் தாமரை மலர ஞாயிறு தோன்றுதல் - மதுரையைத் துயில் எழுப்பல். இந்திர விழவூர் எடுத்த காதையில் - நிலமகளின் இருளாகிய போர்வையைக் கதிராகிய கையால் நீக்கி ஞாயிறு தோன்றும் மலையில் (உதய கிரியில்) தோன்றிமை முதலியன.
மற்றும், வேங்கடத்தில் மாலையில், கிழக்குப் பக்கம் திங்களும், மேற்குப் பக்கம் ஞாயிறும் தோற்றமளித்தல்.மணம்: கண்ணகி கோவலன் மணம். முடிசூடல்: ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் மறைந்த பின், அவன் இளவல் வெற்றிவேல் செழியன் முடிசூடிக் கொண்டமை.
பொழில் நுகர்தல்: கானல் வரி - புகார் மாந்தர்கள் பொழுது போக்கியது. புனல் விளையாடல்: இந்திர விழாவின்போது புனலாடியது . கடலாடு காதைப் புனலாட்டம்.
மதுக்களி = புகார் மக்கள் களித்தமை. பிள்ளை பெறல் கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை பிறந்தமை, மாலதியின் மனங்குளிரப் பாசண்டச் சாத்தன் குழந்தையாய்த் தோன்றல், மணிமேகலைக்குப் பெயரிடு விழா.
புலவியில் புலத்தலும் கலவியில் கலத்தலும் கோவலன் மாதவி, பாண்டியன் அவன் மனைவி, புகார் மாந்தர் ஆகியோர் புலவியில் புலந்து கலவியில் கலந்தமை.
மந்திரம்: செங்குட்டுவன் சூழ்வு (மந்திராலோசனை) செய்தமை. தூது: மாதவி வயந்த மாலையையும் கோசிகனையும் கோவலனிடம் தூது அனுப்பியமை.
செலவு - இகல்வென்றி. செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றமை, காப்பிய உட்பிரிவு: முப்பது காதைகள் அமைத்திருப்பது.
மெய்ப்பாட்டுச் சுவை: தொல்காப்பியத்தில் கூறப் பட்டுள்ள நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாட்டுச் சுவைகள் சிலம்புக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.
நகை: கணவனைப் பிரிந்த கண்ணகி மாமன் மாமியை மகிழ்விக்கப் பொய்ச் சிரிப்பு சிரித்தாள். மாதவியிடமிருந்து கணவன் வந்தபோது சிரித்தபடி அவனை வரவேற்றாள். சாலினி தன்னைப் பாராட்டியபோது கண்ணகி கூச்சப்பட்டுப் புன்னகை புரிந்தாள். மற்றும், கோவலனும் கண்ணகியும் புகாரைவிட்டு ஒரு காவதத் தொலைவு கடந்ததுமே, கால் நோகப் பெருமூச்செறிந்து, கோவலனை நோக்கி, மதுரை மூதூர் எது - இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று மெல்லப் பல் தெரியச் சிரித்தபடிக் கேட்டாளாம் கண்ணகி. அண்மையில்தான் மதுரை உள்ளது என்று கோவலன் கூறிச் சிரித்தானாம். எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கின் காரணமாக நகை தோன்றும் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். மேற்கூறிய நகைகளைக் கண்ணகியின் பேதைமை காரணமாக வெளிப்பட்டவை என்று கூறலாம்.
சேரன் செங்குட்டுவனுக்கு அஞ்சி, வடபுல மன்னர்கள் சிலர் பல்வேறு மாறு கோலம் கொண்டு தப்பித்து ஓடிய செய்தி வேறு தலைப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதி மிக்க நகைச்சுவை தருவதாகும். இது எள்ளல் காரணமாக எழுந்தது எனலாம்.
அழுகை: கண்ணகி மாலதி முதலியோரின் அழுகை.
இளிவரல் (இழிவு): கோவலனையும் கண்ணகியையும் எள்ளி நகையாடிய பரத்தனும் பரத்தையும் நரிகளாக்கப்பட்டு வருந்தியது.
மருட்கை (வியப்பு): சாரணர் வான்வழி வருதல், கவுந்தி பரத்தையர்களை நரியாகச் சபித்தல், கண்ணகி இடப்பக்க முலையைத் திருகி எறிந்து மதுரையை எரித்தல், முன் பிறவியும், மறு பிறவியும் அறிதல் - முதலியன.
அச்சம்: யானை கிழ அந்தணனைத் துதிக்கையால் பற்றினபோது தோன்றிய அச்சம். மாதரி முதலியோர் தீய நிமித்தம் கண்டபோது அஞ்சினமை. அரசால் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனது அச்சம் முதலியன.
பெருமிதம் (வீரம்): கோவலன் யானையை அடக்கினமை. கோவலன் கருணை மறவனாகவும், இல்லோர் செம்ம லாகவும் விளங்கினமை. கோவலன், மாதவி ஆகியோர் யாழ் வாசிக்கும் கலைத்திறன் உடைமை. மாதவியின் ஆடல் பாடல் கலைத்திறன். செங்குட்டுவனின் வடபுல வெற்றி - முதலியன.
வெகுளி: கண்ணகியின் சினத்தால் பாண்டியனும், தேவியும், மதுரையும் அழிந்தமை. செங்குட்டுவன் சினத்தால் கனக விசயர் கல் சுமந்தமை. வெற்றிவேல் செழியன் பொற் கொல்லனுக்கு இறப்பு ஒறுப்பு கொடுத்தமை - முதலியன.
உவகை: கோவலனும் கண்ணகியும் மனையறம் புரிந்தமை. கோவலன் செல்வச் செழிப்பால் மாதவியை அடைந்து இன்பம் துய்த்தமை. மக்கள் கடலாடியும் பொழிலில் பொழுது போக்கியும் மகிழ்ச்சியாய் விளங்கினமை. முதலாயின.
மற்றும், மூவேந்தர் இடம் பெற்றிருத்தல், பல சமயக் கோட்பாடுகள் - பல கடவுள் கோயில்கள் - பல மன்றங்கள் - பல இயற்கைக் காட்சிகள் - வாணிகம் - பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் - வேட்டுவ வரி - ஆய்ச்சியர் குரவை - குன்றக் குரவை - முதலியன இடம் பெற்றிருத்தல் முதலிய பல்லாற்றானும், சிலப்பதிகாரம் கட்டுக்கோப்புடைய ஒரு பெருங் காப்பியம் என்னும் பெரும் பெயருக்கு மிகவும் தக்கது என்பது ஒருதலை.