சிலம்போ சிலம்பு/கண்ணகியின் கற்புநிலை
20. கண்ணகியின் கற்புநிலை
மங்கல வாழ்த்துப் பாடல்
சிலப்பதிகாரக் காப்பியத்தில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை இடம்பெற்றுள்ள சுதை உறுப்பு (கதைப் பாத்திரம்) கண்ணகியே. அவள் புகார் நகரில் வாழ்ந்த மாநாய்கன் என்பவனின் மகள். மாநாய்கனோ மழையெனப் பொருள்களைப் பொழியும் வளவிய கையை உடையவனாம். கண்ணகி பொற்கொடி போன்ற உருவினள், தாமரை மலரில் தங்கும் திருமகள் போன்ற திருவினள்; பாராட்டத்தக்க அழகிய - மங்கலமான வடிவழகு உடையவள்; அருந்ததி போலும் கற்பினள்; பெண்டிர் போற்றத்தக்க உயரிய பண்பினள்; அனைவரிடத்தும் அன்பினள்; திருமணத்தின் போது பன்னிரண்டு அகவை உடையவளாய் இருந்தாள். பாடல்:
“போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண்டு அகவையாள்
அவளுந்தான்,
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன்பாள் மன்னோ”
(மங்கல வாழ்த்துப் பாடல்: 23.29)
என்பது பாடல் பகுதி. சிறார்க்குக் கதை சொல்பவர்கள், ஒரே ஒரு ஊரிலே அப்பா அம்மாவாம். அவர்களுக்கு ஒரு மகளாம் - என்பது போல் கதையைத் தொடங்குவார்கள். இளங்கோவடிகளும் இதே முறையைப் பின்பற்றியுள்ளார். புகார் என்னும் ஊராம்; அங்கே மாநாய்கன் என்று ஒருவர் இருந்தாராம்; அவருக்கு ஒரு மகளாம்; அவள் பெயர் கண்ணகியாம்; அவளுக்குப் பன்னிரண்டு அகவை நிரம்பிய போது திருமணம் செய்து வைத்தாராம் - என இளங்கோ கண்ணகி கதையைத் தொடங்கிச் சொல்லிக் கொண்டு போகிறார்.
கதையில் குலப் பெயரும் கூறுவது உண்டு. இளங்கோ குலப்பெயரை வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறியுள்ளார். கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்கனாம். கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவானாம். நாய்கன் என்பதற்கும் சாத்துவான் என்பதற்கும் வணிகன் என்பது பொருள். மாநாய்கன் என்றால் பெரிய வணிகன் - மாசாத்துவான் என்றாலும் பெரிய வணிகன் என்பதே பொருள். கூர்ந்து நோக்குங்கால் இந்தப் பெயர்கள் சாதிப் பெயர்களாகத் தெரிகின்றன. இந்த இரண்டு பெயர்களைத் தவிர, சிலப்பதிகாரக் கதை மாந்தருள் வேறு எவரும் சாதிப் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மாங் காட்டுமறையவன் என்பது இன்னதன்று எனவே, மாநாய்கன், மாசாத்துவான் என்பன அவர்களின் இயற்பெயர்களா என ஐயுறச் செய்து - குலப்பெயர்களாகத் தோன்றுகின்றன. மாதிரிக்கு இரு பெயர்களைக் கூறுவோம்; அதாவது: முத்தையன் மாநாய்கன் - வடிவேலன் மாசாத்துவான் என்ற பெயர்களாக இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். செட்டியார் குலத்தில் மிகவும் பெயர் பெற்ற பெரியவர் ஒருவரை அவரது இயற்பெயரால் சுட்டாமல், செட்டியார் என்றே கூறுவதுண்டு. குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில், செட்டியார் என்றால் அவர் ஒருவரைத்தான் குறிக்கும். இது போலவே, முதலியார் என்றால் மிகவும் பெயர் பெற்ற பெரியவர் ஒருவரையே குறிக்கும். இது உலகியல்.இந்த முறையிலே மாநாய்கன்-மாசாத்துவான் என்னும் பெயர்கள் குலப்பெயரைக் குறிப்பனவாக இருக்கலாமோ! குலப்பெயர் எனில், இரண்டு பெயர்களுள் ஏதாவது ஒன்று தானே இருக்க முடியும்? இங்கே இரு பெயர்கள் கூறப்பட்டுள்ளனவே என்று கேட்கலாம். ஒரு குலத்தாருக்குள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட பட்டப் பெயர்கள் இருப்பதுண்டு. எடுத்துக்காட்டுகள்: உறவினர்கட்குள்ளேயே, முதலியார் - செட்டியார் என்ற பட்டப்பெயர்கள் உண்டு. உறவினர்கட்குள்ளேயே கவுண்டர், நாயகர், படையாட்சி என்ற பட்டப் பெயர்கள் உண்டு. முக்குலத்தாரிடையே பல்வேறு பட்டப் பெயர்கள் உண்டு. இதுபோல, கண்ணகி - கோவலன் - இவர்களின் உறவினர்கட்குள்ளேயே மாநாய்கன், மாசாத்துவான் என்னும் பட்டப் பெயர்கள் இருக்கலாம். அங்ஙனமெனில், நாய்கன் - சாத்துவான் என்பன போதுமே - ‘மா’ என்னும் சிறப்பு அடைமொழி சேர்த்து மாநாய்கன் - மாசாத்துவான் என்றது ஏன் எனில், இன்றைய உலகியலில் பெரிய பண்ணை, பெரிய கம்பத்தம், பெரிய இடம், பெரிய தனக்காரர் என்பவற்றில் உள்ள ‘பெரிய’ என்பது போல ‘மா’ என்பதைக் கொள்ளலாம்.
இங்கே இத்தகைய குழப்பமான ஐயத்திற்கு இடமான சூழ்நிலை எனக்கு ஏற்பட்டதற்கு உரிய காரணமாவது: இரண்டு பெயர்களிலும் ‘மா’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டிருப்பது இயற்கையான பெயர்களுக்கு உரியதா - அல்லது இருவரும் சமமானவர்கள் என்று அறிவிப்பதற்காகச் செயற்கையாகச் சேர்க்கப்பட்ட அடை மொழியா என்ற ஐயக் குழப்பம் ஏற்பட்டதே. மற்றும், தெருக் கூத்துக் கதையில் கோவலனின் தந்தை பெயர் மாணாக்கன் (மாநாய்கன்) என்றும், கண்ணகியின் தந்தை பெயர் மாச்சோட்டான் (மாசாத்துவான்) என்றும் பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன. பெயர்களின் உருவமும் திரிந்துள்ளது. மேலும், தந்தைமார்களின் பெயர்களைச் சொன்ன இளங்கோ தாய்மார்களின் பெயர்களைச் சொல்லாதது ஒரு குறைபாடாகும். படகு வலிப்பவரின் பாடல்களில், கோவலனின் தாய் பெயர் ‘வண்ண மாலை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
1960-ஆம் ஆண்டு யான் மலர் மணம் என்னும் ஒரு புதினம் எழுதி வெளியிட்டேன். அதில், கதைத் தலைவன் - தலைவியரின் தந்தையர்களின் பெயர்களை மட்டும் கூறியிருந்தேனே தவிர, தாயர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை. எனது இந்தப் புதினத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இராமநாதபுரத்து அறிஞர் ஒருவர், நான் தாய்மார்களின் பெயர்களையும் அறிவித்திருக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். தந்தையர்களின் பெயர்களே குழப்பமாக இருக்கும்போது, தாய்மார்களின் பெயர்களை இளங்கோ எவ்வாறு அறிந்து கூறியிருக்க முடியும்?
பெயர்கள் பற்றி மேலே யான் வெளியிட்டுள்ள கருத்து முடிந்த முடிபு அன்று. குழப்பமாகவே உள்ளது. தெருக் கூத்துப் பெயர்களையும் சிலப்பதிகாரப் பெயர்களையும் ஒத்திட்டுப் பாராமல் இருந்தால் குழப்பம் இல்லை. மற்றும், இருவர் பெயர்களும் ‘மா’ அடை பெற்று ஒரே பொருள் உடையனவாய் இல்லாமல், வேறு வேறு பொருள்கள் உடையனவாய் இருந்திருப்பினும் குழப்பத்திற்கு இடம் இல்லை. இதை அறிஞர்களின் ஆய்வு முடிபிற்கு விட்டு விடுகிறேன்.
தன்னை விட்டு நீங்கிய கணவன் கோவலனைக் கண்ணகி கண்டிக்கவோ - கடிந்து பேசவோ இல்லை. கணவன் பிரிந்ததால் தாய் வீட்டிற்குச் சென்று விடவில்லை. கணவன் அழைத்ததும், அவனோடு ஊடல் கொள்ளாமல் உடனே புறப்பட்டுவிட்டாள் - ஆதலின், வடமீன் (அருந்ததி) அனைய கற்பினள் எனப் பாராட்டப்பட்டுள்ளாள்.
ஈண்டு ‘பெயர் மன்னும் கண்ணகி என்பாள்’ என்று இளங்கோ குறிப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. மன்னுதல் என்னும் சொல்லுக்கு நிலைத்திருத்தல் என்னும் பொருள் உண்டு. இங்கே,
“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதி எண்ணத்தக்கது. கண்ணகி என்னும் பெயர் இன்றும் நிலைத்துள்ளது. சிலப்பதிகாரம் உள்ளவரையும் - ஏன் - தமிழ் உள்ள வரையும் இந்தப்பெயர் புகழுடன் நிலைத்திருக்கும். கோயில் எடுத்திருப்பதால் பெயர் நிலைத்திருப்பது உறுதி. கண்ணகியின் வரலாற்றை - அவளுக்குத் தம் தமையன் கோயில் எடுத்த வரலாற்றை இளங்கோ உடனிருந்து அறிந்தவராதலின் பெயர் மன்னும் கண்ணகி என்று தொடக்கத்திலேயே பிள்ளையார் சுழி (தொடக்கக் குறி) போட்டுள்ளார். அருந்ததி மக்கள் உள்ளத்தில் என்றும் இருப்பதுபோல் கண்ணகியும் இருப்பாள் என்பது கருத்து.
மனையறம் படுத்த காதை
கண்ணகியின் நலம் பாராட்டல்
முதலாவதாகிய மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் பகுதியில் கோவலன் - கண்ணகி திருமணம் கூறப்பட்டது. இரண்டாவதாகிய மனையறம் படுத்த கதையில் இருவரும் குடும்பம் நடத்தினமை கூறப்பட்டுள்ளது. கண்ணகியும் கோவலனும் காதலில் சிறந்து, திங்களும் ஞாயிறும் ஒன்று சேர்ந்தாற்போல் இணைந்து இருவரின் தாரும் மாலையும் ஒன்றோடொன்று கலக்க அணைத்துக்கொண்டு தம்மை மறந்து இன்பத்தில் திளைத்தனர். அப்போது கோவலன் தீராக் காதலோடு கண்ணகியின் திருமுகத்தை நோக்கிப் பலவாறு நலம் பாராட்டினான்:
“கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்... (11)
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து (25)
கதிர் ஒருங்கிருந்த காட்சி போல... (31)
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் (35)
தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் (36)
என்பன பாடல் பகுதிகள், கயமலர்க் கண்ணி = மலர் போன்ற கண்ணுடைய கண்ணகி. காதல் கணவன் = கண்ணகிபால் மிக்க காதலையுடைய கோவலன். காப்பியத் தொடக்கமாகிய மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் பகுதியில் முதலில் “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்றும், இரண்டாவதாக “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்றும் ஆசிரியர் கூறியுள்ளார். அதே பகுதியில், கண்ணகியை முதலில் அறிமுகப்படுத்திப் பின்னரே கோவலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதில் இயற்கையான ஒரு பொருத்தம் உள்ளது. மென்மையான ஒளியுடைய திங்களும் வன்மையான ஒளியுடைய ஞாயிறும் முன் பின்னாகக் கூறப்பட்டிருப்பது போலவே, கண்ணகியின் அறிமுகமும் கோவலனின் அறிமுகமும் முறையே முன் பின்னாகக் கூறப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப, மனையறம் படுத்த காதையிலும், “கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்” (11) எனக் கண்ணகியும் கோவலனும் முறையே முன் பின்னாகக் கூறப்பட்டிருப்பது கருதத்தக்கது. மற்றும், “கதிர் ஒருங்கிருந்த காட்சி போல” (31) என்னும் இல்பொருள் உவமையும் எண்ணத்தக்கது. கோவலன் காதல்
கோவலனுக்குக் கண்ணகியிடம் உண்மையான காதல் இல்லை - அவன் அவளை உள்ளுணர்வுடன் - உள்ளத்தால் விரும்பவில்லை - என்றெல்லாம் ஆராய்ச்சியாளர் சிலர் எழுதியுள்ளனர். மனையறம் படுத்த காதையில் ‘காதல் கொழுநன்’ (11), ‘காதலின் சிறந்து’ (25), ‘தீராக் காதலின் திருமுகம் நோக்கி’ (36) என்றும், நாடுகா‘ண் காதையில் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க’ (230), என்றும், புறஞ்சேரியிறுத்த காதையில் ‘காதலி தன்னோடு கானகம் போந்ததற்கு’ (44) என்றும், அடைக்கலக் காதையில் ‘கடுங்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு’(139) என்றும், கொலைக்களக் காதையில் ‘கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை ஒருங்குடன் தழீஇ’ என்றும் அடிகள் பாடியிருப்பதன் உள்ளுறையாது? கோவலனுக்குக் கண்ணகி மீது தீராக் காதல் இருந்தது என்பது தானே கருத்தாகும்?
‘தீராக் காதல்’ என்றார் - தீராக் காதல் தீர்ந்தது எப்படி? இங்கேதான், மாதவியின் மயக்கும் ஆற்றலை, நூல் படிப்பவர்கள் பின்னர்க் கற்பனை செய்து பார்க்க ஆசிரியர் இடம் வைத்துள்ளார். ஒருவகை நிலையாமைக் கூறை உணர்த்துகிறது. இது. ஆனால், இதில் உண்மை இல்லாமலும் இல்லை. கோவலன், இறுதியில் மாதவியைப் பிரிந்து, பின்னர்த் தீராக் காதலுடன் கண்ணகிபால் வந்து சேர்ந்தான் அல்லவா? அகமுடையான் - பெண்டாட்டி சண்டை என்பர் - அந்தச் சண்டை நீடிக்காது என்றும் மக்கள் சொல்வர். அவ்வாறே கோவலனும் கண்ணகியும் கூடிக் கொண்டனர். எனவே, தீராக்காதல் என்பது பொருத்தமே.
கண்ணகிக்குப் புகழ்மாலை
கோவலன் கண்ணகியை நோக்கிப் பாராட்டுகிறான்:- என் அருமைக் கண்ணகியே! நீ திருமகள் ஆவாய். திருமகளோடு திங்கள் (நிலா) கடலில் பிறந்ததால், சிவன், தன் திருமுடியில் உள்ள பிறை நிலவை உனது நெற்றியாகும்படிச் செய்துள்ளார். மன்மதனது கரும்புவில் இரண்டாகப் பிளந்து உன் இரு புருவங்களாக ஆக்கப்பட்டுள்ளது. இந்திரனின் வச்சிரப்படையின் இடைப்பகுதி உனது இடையாக ஆக்கப்பட்டுள்ளது. முருகனின் வேல் இரண்டாகப் பிளக்கப்பட்டு உன் இரு கண்களாக ஆக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளான்.
மற்றபுலவர்கள் பெண்ணின் நெற்றிக்குப் பிறையையும், புருவத்திற்கு வில்லையும், இடைக்கு ஒரு பொருளின் இடையிலுள்ள (உடுக்கையின் இடைப்பகுதி போன்ற) பகுதியையும், கண்ணுக்கு வேலையும் உவமையாகக் கூறுவது மரபு. அதே உவமைகளைப் புதுமுறையில் - புதிய கோணத்தில் இளங்கோ கூறியிருப்பது சுவையாயுள்ளது. அதாவது - சிவன் பிறையை இவள் நெற்றிக்குத் தந்தானாம்; மன்மதன் கரும்புவில்லைப் புருவத்திற்குக் கொடுத்தானாம்; இந்திரன் இடைப்பகுதி ஒடுங்கியிருக்கும் தன் வச்சிரப் படையின் (வச்சிராயுதத்தின்) இடைப்பகுதியை இவளது இடைக்கு ஈந்தானாம்; முருகன் தன் வேலை இவள் கண்ணிற்குத் தந்தானாம். உவமையை இந்த விதமாகப் புதுமைப்படுத்துவது சிறந்த புலவர்களின் மிக்க புலமைக்கு அறிகுறியாகும். (38-52-ஆம் அடிகள்)
இளங்கோ அடிகள் கையாண்டுள்ள இந்தப் புதிய முறையைப் புதுவைப் பாவேந்தர் பாரதிதாசனும் கையாண்டுள்ளார். எப்போது? தாம் இளைஞராய் ஆசிரியரிடத்தில் பாடம் பயின்ற தொடக்கக் காலத்திலேயே இவ்வாறு பாடியுள்ளார். பாவேந்தரின் ஆசிரியர் புதுவைப் பெரும்புலவர் (மகாவித்துவான்) பு. அ. பெரியசாமிபிள்ளை என்பவர். இவர் இறுதி எய்தியபோது, மாணாக்கர் பலரும் இரங்கல்பா பாடினர். பாரதிதாசனும் பாடினார். எவ்வாறு பாடினார்?:-
எங்கள் அன்பான ஆசானே! எமக்குப் போக்கிடம் இல்லாதவாறு மண்ணுலகை மறந்து மறைந்து விட்டீரே. எங்கள் சிற்றறிவை மேலும் விளக்கி ஒளி பெறச்செய்யும் உம்ஆட்சி உரிமையை (அதிகாரத்தை) ஞாயிற்றுக்கு அளித்துப் போய்விட்டீர். நும் அன்பை எங்கள் தாய்மார்களிடம் கொடுத்துச் சென்று விட்டீர். கடல் மடை திறந்தாற்போலும் - விரைந்து கவிபாடும் ஆற்றலை என்றும் ஒலி எழுப்பும் கடலுக்குத் தந்து ஏகினர். உமது புகழை இமயமலைக்கும் பொறுமையை நிலத்திற்கும் நீங்கள் பேசும் இன்சொல்லைக் குயிலுக்கும் விட்டளித்துப் பெரிய பெயருடன் தெய்வமாகிவிட்டீரே - என்னும் கருத்தமைத்துப் பாடியுள்ளார். இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில் அந்தப் பாடல் வருமாறு:
(பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
“பூமியை மறந்துவிட் டீரே எமக்கிங்கோர்
போக்கிலா தாக்கி னீர்எம்
புன்மதி விளக்குமதி காரத்தை நீரிங்குப்
பொற்கதிர்க் கீந்தி ரேனும்
யாமதைப் புதுமையாக் கொள்வதுண் டோதினம்
எங்கள்பால் காட்டும் அன்பை
ஈன்றதாய்க் கீந்துசென் றீரெனினும் அன்னதால்
இதயத்தில் அமுதம் உறுமோ
தாமத மிலாதுகவி பாடிடுங் தன்மையைச்
சமுத்திரற் கீந்திர் அதுதான்
சாற்றுவது மற்றோர்முறை சாற்றுமோ கீர்த்தியைச்
சாமிஉம் பொறுமையைப் பூமிக் களித்தின்சொல்
சந்தக் குயிற்கண் இட்டுச்
சகக்கடை வரைப்பெரிய சாமியாம் பெயர்நிறுவித்
என்பது பாடல். மதி விளக்கும் திறமைக்கு ஞாயிற்றையும், ஆசானின் அன்புக்குத் தாயின் அன்பையும், மிகுந்த கவிபாடும் ஆற்றலுக்குக் கடலையும், புகழுக்கு (அளவில்) இமய மலையையும், பொறுமைக்கு அகழ்வாரைத் தாங்கும் நிலத்தையும், அவரது இன்சொல்லுக்குக் குயிலையும் உவமையாகக் கூற வந்த பாரதிதாசன், அந்த உவமைகளையே வேறொரு கோணத்தில் நின்று விளக்கியுள்ளார். இந்த முறை ஏறத்தாழ இளங்கோ கையாண்டுள்ள முறை போன்றுள்ளதல்லவா? இனி, மீண்டும் சிலம்புக்கு வருவோம்.
கோவலன் மீண்டும் கண்ணகியின் நலம் பாராட்டுகிறான். கண்ணகியே, உன் சாயலைக் கண்டு வெட்கி மயில் காடேகியது. உன் நடையைக் கண்டு நாணி அன்னம் மலர்ச் செறிவுக்குள் மறைந்து கொண்டது. ஆனால், இரக்கத்திற்கு உரிய கிளி, குழலும் யாழும் அமிழ்தும் கலந்த உன் இனிய பேச்சைக் கேட்டுச் சிறுமையடைந்த தாயினும், உனது பேச்சினிமையைக் கற்றுக் கொள்வதற்காக உன்கையிலேயே உள்ளது-என்று கூறிய கோவலன் மேலும் பாராட்டுகிறான். (53-61-ஆம் அடிகள்)
கண்ணகியே! உனக்கு மங்கல நாண் அணி உள்ளபோது, வேறு அணிகலன்களை உன் தோழியர் ஏன் உனக்கு அணிகின்றனர்? உனக்குச் சில மலர்கள் அணிந்தாலே போதுமே! அங்ஙனமிருக்க, ஏன் பெரிய மாலையைச் சூட்டுகின்றனர்? அந்த மாலைக்கும் இவர்கட்கும் இடையே ஏதாவது தொடர்பு (பேரம்) உண்டா? உன் மார்பகத்தில் தொய்யில் எழுதியதே போதுமே மேலும் முத்து மாலையை அணிவித்தது ஏன்? அந்த முத்து மாலையோடு இடையில் ஏதேனும் தொடர்பு (பேரம்) இவர்கட்கு உண்டா? உனது இடை வருந்த இவ்வளவு அணிகலன் ஏன்? என்று வினவிப் பாராட்டுகிறான். (62-72)
“பிணையேர் மடநோக்கும் காணும் உடையாட்கு
என்னும் திருக்குறள் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மலர் மாலையோடும் முத்து மாலையோடும் தோழியர்க்கு ஏதேனும் தொடர்பு உண்டா? - என்று கேட்பது போன்ற அமைப்பு, புதிய முறையில் சுவை பயக்கின்றது. மேலும் பின்வருமாறு விளித்துப் பாராட்டுகிறான்:
“மாசறு பொன்னே வலம்புரி முத்தே
என்றான். இதில் ஐம்பொறிகளின் தூண்டல் துலங்கல் குறிப்பாய் அமைந்துள்ளன. பொன் கண்ணுக்கு இனியது. வலம்புரி முத்து, உடம்பின் உறுப்புகளில் படும்போது வழவழப்பாக மென்மையாயிருந்து தொடுபுலனாகிய ஊற்றின்பம் அளிக்கிறது. காசறு விரை எனப்படும் நறுமணப் பொருள் மூக்கின் வாசிலாக நறுமண இன்பம் துய்க்கச் செய்கின்றது. கரும்பு = நாக்கிற்கு (வாய்க்கு) இனிப்புச் சுவை நல்குகிறது. பெண்கட்குத் ‘தேன்மொழி’ என்னும் பெயர் இருப்பதற்கு ஏற்ப, தேன் மொழி இன்பம் தருகிறது இவ்வாறாக, ஐம்பொறி புலன்கட்கும் இன்பம் தருகிறது. இவ்வாறாக, ஐம்பொறி - புலன்கட்கும் இன்பம் அளிக்கத் தக்கவளாய்க் கண்ணகி உள்ளாளாம். ஈண்டு,
“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
என்னும் குறள் ஒப்புநோக்கத் தக்கது.
பாராட்டு மேலும் தொடர்கிறது:
பெறலரும் பெண்ணே! ஆருயிர் மருந்தே! உன்னை யான் என்னென்று புகழ்வேன்! மலையில் பிறவாத மணி என்பேனா - அலை கடலில் பிறவாத அமிழ்தம் என்பேனா - யாழினின்றும் பிறவாத இன்னிசை என்பேனா- என்றெல்லாம் அழியாத கட்டுரை பல கூறிப் பாராட்டினான்:
“அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னையென்று
என்பது பாடல் பகுதி. கோவலன் கண்ணகியை நோக்கிக் கூறியதாக இளங்கோ பாடியுள்ள இந்தப் பகுதி உலவாக் கட்டுரை எனப்பட்டுள்ளது. உலவாக் கட்டுரை என்றால், அழியாத அணிந்துரையாகும். ஆம்! இப்பகுதி எக்காலத்திலும் பலராலும் எடுத்தாளப்படக் கூடியதன்றோ?
கண்ணகி மாமியாரால் மகிழ்வெய்தப் பெற்று விருந்தோம்பும் பெருமையுடன் சில்லாண்டு காலம் கணவனோடு வாழ்ந்தாள். இவ்விதமாகக் கோவலனது பாராட்டையும் மாமியின் ஒத்துழைப்பையும் கண்ணகி பெற்றமை மனையறம் படுத்த காதையில் கூறப்பட்டுள்ளது.
கோவலன் கண்ணகியோடு உடலுறவு கொண்டிருக்க மாட்டான் என்பதாக ஓர் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளார். கோவலன் படுக்கை அறையில்தான் இவ்வளவு பாராட்டியிருக்கமுடியும், கண்ணகி குழம்பு வைக்கப் புளி கரைத்துக் கொண்டிருந்த போதா இவ்வாறு பாராட்டியிருக்க முடியும்? இருவரும் உடலுறவு கொண்டே சில்லாண்டுகள் மனையறம் நடத்தினர்.
அந்திமாலைச் சிறப்புச் செய்காதை
சில்லாண்டு உடனுறை வாழ்க்கை புரிந்து பின்னர் மாதவியிடம் கோவலன் சென்று விட்டபிறகு, கண்ணகியின் நிலை பின்வருமாறு இருந்தது:
கண்ணகி காலில் சிலம்பு அணிந்திலள். இடையில் மேகலை இல்லை. மார்பகத்தில் குங்குமம் எழுதிலள். காதில் குழை இல்லை. முகத்தில் வியர்வை இல்லை. கண்கட்கு மை தீட்டிலள். நெற்றியில் பொட்டு வைத்திலள். சிரிக்கும் அழகை இனிக் கோவலன் பெறமுடியாதபடி முகம் வாடினாள். கூந்தலுக்கு நெய்யணி பூசி அணி செய்திலள். மங்கல நாணாகிய தாலியைத் தவிர, வேறெதையும் பூண்டிலள். துயரமே உருவாயிருந்தாள். பாடல்:
“அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள் நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்ககை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
என்பது பாடல் பகுதி, கணவனைப் பிரிந்த கண்ணகி ஏறத்தாழக் கைம்பெண்வாழ்க்கையே வாழ்ந்தாள் என்று சொல்லுமளவில் இருந்தாள். அவள் அணிந்திருந்த மங்கலநாண் (தாலி) ஒன்றே அவள் நன்மங்கலி என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது. ‘தவள வாள் நகை’ என்பது, கோவலன் எதிரில் மட்டும் சிரிக்கக் கூடியவள் என்பதை அறிவிக்கிறது. புணர்ச்சியின்போது முகத்தில் வியர்வை தோன்றும்; இப்போது புணர்ச்சி இன்மையின் முகம் வியர்வையை அறியவில்லை. அந்தக் காலத்தில் கணவன் பிரிந்த கற்புடைய மங்கைக்கு உரிய இலக்கணமாக இந்த நிலை மதிக்கப்பெற்றது. இக்காலத்தில் இதை எதிர்பார்க்க முடியாது.
நாடு காண் காதை
கண்ணகியின் மென்மை
கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டு மதுரை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற வழியில், ஒரு காதத் தொலைவு கடந்த அளவிலேயே, கண்ணகி கோவலனை நோக்கி மதுரை இன்னும் எவ்வளவு தொலைவிலுள்ளது. என்று கேட்டாளாம். இன்னும் அண்மையில் தான் மதுரை உள்ளது - ஆறைங்காதத் தொலைவில் உள்ளது எனச் சிரித்துக் கொண்டே கூறினானாம். பாடல்
“இறுங் கொடி நுசுப்போடு இணைந்து அடிவருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்ளெயிறு இலங்க
மதுரை மூதூர் யாதென விவை
ஆறைங் காதம்ரும் அகல் நாட்டும்பர்
என்பது பாடல் பகுதி. மிகவும் மெல்லியளாகிய கண்ணகி, முப்பது காதம் போக வேண்டிய வழியில் ஒரு காதம் சென்ற அளவிலேயே, ஒடிந்து விடுமோ என ஐயுறும் படியான மெல்லிய இடையும் அடியும் நொந்தவளானாள். இரைப்பு மூச்சு விட்டாள். இயலாமையால் பொய்ச்சிரிப்பு பல்லிலே தோன்ற, குழந்தையின் மழலை போன்ற சொற்களால், வழியில் காணும் ஒவ்வோர் ஊரையும் பார்த்து இது தானா மதுரை - இது தானா மதுரை - இது இல்லையெனில் எவ்வளவு தொலைவில் மதுரை உள்ளது என்று வினவினாளாம். இதோ அண்மையில் உள்ளது - ஆறைங்காதத் தொலைவே - என்று கோவலன் இரக்கச் சிரிப்பு (அசட்டுச் சிரிப்பு) சிரித்துக் கொண்டே கூறினானாம். முப்பது காதம் என்றால் மலைப்பா லிருக்கும் என்று ஆறு ஐங்காதம் (ஆறு அல்லது ஐந்து என்னும் பொருள் படும் படியும்) எனக் கூறினானாம். இளங்கோ இந்தக் காட்சியை (சீனை) அமைத்ததில் ஒரு குறிப்பு உண்டு. அது பின்னர் விளக்கப் பெறும். கண்ணகி கோவலனது தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டு நடந்தாள் என்பதை அறியின், மேலும் அவளது மென்மை விளங்கும்.
இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் கம்ப ராமாயணச் செய்தி ஒன்று இங்கே நினைவிற்கு வருகிறது. சீதையைத் தேடப் புறப்பட்ட அனுமனிடம், இராமர், சீதையைக் காணின் முன்பு நிகழ்ந்த சில செயல்களை அவளிடம் அடையாளமாகத் தெரிவிக்கும் படிச் சொல்லி யனுப்புகிறார். அவற்றுள் ஒன்று:- முடி துறந்து சீதையுடன் காடு நோக்கிப் புறப்பட்டபோது, நகரின் கடை வாயிலைக் கடக்கும் முன்பே, ‘காடு எங்கே உள்ளது - இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது?’ என்று கேட்ட சீதையின் பெண்மைத் தன்மையையும் நினைவு செய் - என்று சொல்லியனுப்பினார்:
“நீண்ட முடிவேந்தன் அருளேந்தி நிறை செல்வம்
பூண்டதனை நீங்கி நெறி போதலுறு நாளின்
ஆண்டநகர் ஆணையொடு வாயில் அகலாமுன்
யாண்டையது கானென இசைத்ததும் இசைப்பாய்”
(உருக் காட்டுப் படலம்-61)
கண்ணகியின் நடுக்கம்
ஒரு சோலையில் கவுந்தியடிகளுடன் கண்ணகியும் கோவலனும் அமர்ந்திருந்தபோது, தீயோன் ஒருவனும் பரத்தை ஒருத்தியும் அங்கு வந்தனர்; காமனும் இரதியும் போன்ற இவர்களைக் கண்டதும், இவர்கள் யார் எனக் கவுந்தியை வினவினர். இவர்கள் என் பிள்ளைகள் என்று கவுந்தி கூறினார். உடனே, அத்தீயோர், அண்ணனும் தங்கையும் அகமுடையானும் பெண்டாட்டியுமாய் இருப்பதுண்டோ எனக் கேட்டுக் குறும்புடன் கிண்டல் செய்தனர். இந்தத் தீய மொழியைக் கேட்டதும், கண்ணகி தன் காதுகளைப் பொத்திக்கொண்டு தன் கணவனாகிய கோவலன் முன்னே நடுங்கிக் கொண்டிருந்தாளாம். பாடல்:
“தீ மொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
கோவலன் நடுங்கவில்லை-கண்ணகி மட்டும் நடுங்கியது ஏன்? ஆடவன் ஒருவன் பிறர் மனைவியுடன் தொடர்பு கொண்டால் அவனுக்குக் கிடைக்கும் கெட்ட பெயரைவிட, பெண்ணொருத்தி தன் கணவனல்லாத பிறனொருவனுடன் தொடர்பு கொள்ளின் உண்டாகும் கெட்ட பெயர் மிகவும் இழிவாய் நாணத்தக்கது என்பது உலகியலாயுள்ளது. தீய சொல்லைக் கேட்ட கவுந்தியடிகள் கோவலனை இழித்துரைத்ததாகக் கொள்ளாமல், கண்ணகியை இழித்துரைத்ததாகவே கொண்டு தீயோர் இருவரையும் நரிகளாகும்படிச் செய்தார்.
“எள்ளுநர் போலும் இவர்என் பூங்கோதையை
முள்ளுடைக் காட்டின் முதுகரி யாகெனக்
என்னும் பாடல் பகுதியில், பூங்கோதையாகிய கண்ணகியை எள்ளியதால் கவுந்தி சாபமிட்டதாகக் கூறியிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. இவ்வாறு, ஆண் நடுங்காமல் பெண் மட்டும் நடுங்கும்படியான சூழ்நிலை பெண்ணை எள்ளியதாகவே கவுந்தி எடுத்துக் கொண்ட சூழ்நிலை, பெண் தொடர்பான தாழ்வு மனப்பான்மைக்கு உரிய சான்றாகும்.
கண்ணகியின் இரக்கம்
தீயவர் இருவரும் நரியாகி ஊளையிட, கேட்ட கண்ணகி கோவலனோடு சேர்ந்து, நரியான இருவரும் மீண்டும் பழைய உரு எய்தும்படிக் கேட்டுக் கொண்டாள். இத்தகைய சூழ்நிலையில் ஆண்களினும் பெண்கள் இரக்கம் காட்டுவது மிகுதி. ஏதேனும் துன்பச் செய்தியைக் கேட்கின் ‘ஐயோ பாவம்’ என்று பெண்கள் இரங்கிக் கூறுவர். இங்கேயும், நரிக்குரல் கேட்டு இருவரும் நடுங்கினர் எனக் சொல்லு மிடத்தில், ஆசிரியர்,
கண்ணகியின் கடவுள் கொள்கை
கனாத்திறம் உரைத்த காதை
கணவனைப் பிரிந்து தீய கனாக் கண்டு வருந்திக் கொண்டிருந்த கண்ணகியை நோக்கி, அவளுடைய பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி என்பவள் பின்வருமாறு கூறினாள்: கண்ணகியே! நீ உன் கணவனால் வெறுக்கப்படவில்லை. முன் பிறப்பில் கணவனைக் காப்பதற்காகச் செய்ய வேண்டிய நோன்பைச் செய்யத் தவறினாய். அதன் விளைவே இது. இதினின்று தப்ப வேண்டுமாயின், காவிரியின் கூடல் (சங்கமத்) துறையை அடுத்தாற் போல் உள்ள சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கைகளிலும் முறையே நீராடிப் பின்பு காமவேள் கோட்டம் சென்று வணங்கின், இம்மையில் கணவனைப் பிரியாது கூடி வாழ்ந்து, மறுமையிலும் இன்ப உலகம் சென்று கணவனுடன் கூடி இன்பம் துய்க்கலாம். கணவனைப் பிரிந்த மகளிர் இவ்வாறே செய்வர். அதனால், நாமும் அப்பொய்கைகளில் நீராடிக் காமவேள் கோட்டம் தொழலாம் என்று சூழ்வுரை (ஆலோசனை) கூறினாள். உடனே கண்ணகி, அவ்வாறு நீராடிக் கடவுளைத் தொழுதல் எம் வழக்கம் அன்று என்றாள்.
“ஆடுதும் என்ற அணியிழைக்கு அவ்வாயிழையாள்
என்பது பாடல் பகுதி. (அணியிழை = தேவந்தி. ஆயிழையாள் - கண்ணகி) அவ்வாறே நீர் ஆடி வணங்குதல் பீடு (பெருமை - மேன்மை) ஆகாது என்பது கருத்து,
இங்கே பலருக்குமே ஒரு திருக்குறள் நினைவுக்கு வரலாம். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுபவள் பெய் என்று ஆணையிடின் மழை பெய்யும் - என்னும் கருத்துடைய
“தெய்வம் தொழாஅள் கணவற் றொழுதெழுவாள்
என்பது தான் அந்தக் குறள். இந்தக் காலத்தில் பகுத்தறிவாளர்கள் இந்தக் கருத்தை ஒத்துக் கொள்வதில்லை. தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுபவள், பெய் என்று சொன்னால் பெய்யக் கூடிய மழை ஒன்று இருந்தால் எப்படியோ - அப்படிப் போல் பயன் தரக்கூடியவள் - என்று புதிய பொருள் கூறுகின்றனர் அவர்கள். இந்தப் பொருளில், கணவனைத் தொழுபவள் மழையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளாள். அப்படி ஒரு பெண் இருந்தால் நல்லதேயாகும் - யாரும் மறுக்கவில்லை. ஆனால், பகுத்தறிவாளர்கள் கூறும் பொருளில் திருவள்ளுவர் இந்தக் குறளை இயற்றவில்லை. முதலில் தெரிவிக்கப்பட்டுள்ள பொருளில்தான் இந்தக் குறளை இயற்றியுள்ளார்.
பெண்கள் கணவரைத் தொழுதல் பற்றித் திருத்தக்க தேவரும் சீவக சிந்தாமணி - கனக மாலையார் இலம்பகத்தில் தெரிவித்துள்ளார். பாடல்:
“சாமெனிற் சாத னோத
றன்னவன் தணந்த காலைப்
பூமினும் புனைத லின்றிப்
பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை யென்றுஞ் சொல்லார்
கணவற் கைதொழுது வாழ்வார்
தேமலர்த் திருவோ டொப்பார்
எத்தகைய உயர் பண்புடைய பெண்ணும் பெய் என்று சொன்னதும் மழை பெய்து விடாது என்னும் கருத்து திருவள்ளுவர்க்கும் தெரியும். அவர் இவ்வாறு சொன்னதின் கருத்து, கடவுளைக் கட்டி அழுது கொண்டிருக்காதீர்கள் - குடும்பத்தைக் கவனியுங்கள் என்ற புரட்சி உடையதாகும். ‘பெய் யெனப் பெய்யும் மழை’ என்பதை உயர்வு நவிற்சி அணியாகக் கொள்ளல் வேண்டும்.
“இலன்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலன்என்னும் நல்லாள் நகும்” (1040)
“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
என்னும் குறள்களில், சோம்பேறிகளைக் கண்டால் நிலமகள் சிரிப்பாள் என்றும், குடியை உயர்த்த முயல்பவனுக்குத் தெய்வமும் துணியைக் கீழ்ப்பாய்ச்சி கட்டிக் கொண்டு முந்தி வந்து பணி புரியும் என்றும் கூறியுள்ள கருத்துகள் உண்மையானவையா? அல்லது இலக்கியக் கற்பனையா? தெய்வம் சிரிக்காது - தெய்வம் துணியை இழுத்துக் கட்டிக் கொண்டு வராது என்பன திருவள்ளுவர்க்கும் தெரியும். இவை இலக்கியக் கற்பனை நயச்சுவையாகும். ‘தெய்வம் தொழா அள்’ என்னும் குறளும் இத்தகையதே. கணவன் மனைவியைத் தொழ வேண்டும் என்று எங்கும் கூறாமல், மனைவி கணவனைத் தொழவேண்டும்என்று கூறியிருப்பதை மட்டும் பகுத்தறிவாளர்கள் ஒத்துக் கொள்ளலாமா? யானும் ஒரு வகைப் பகுத்தறிவாளனே. யாராயிருப்பினும், நடுநிலைமையோடு எழுத வேண்டும் - பேசவேண்டும்.
இது தொடர்பான சிலப்பதிகாரப் பகுதியால், கண்ணகியின் தெய்வக் கொள்கை விளங்கும். அவள் கணவனைத் தெய்வமாகப் போற்றி வந்தாள்.இளங்கோவடிகள் பொருத்தமான சூழ்நிலையில் பொடி வைத்து ஊதுவதில் வல்லவர். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதிலும் வல்லவர்.
கணவனைத் தவிரத் தெய்வம் தொழுவது எனக்கு வழக்கமில்லை என்று கண்ணகி தேவந்தியிடம் சொல்லிக் கொண்டிருந்த போதுதான், கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகி இருக்கும் தங்கள் வீட்டு வாயிலுக்குள் வந்து கொண்டிருந்தானாம். அவனது வருகையைப் பணிமகள் ஒருத்தி கண்ணகிக்குத் தெரிவித்தாள். பாடல்:
“ஆடுதும் என்ற அணியிழைக்கு அவ்வாயிழையாள்
பீடன்றுஎன இருந்த பின்னரே நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்
என்பது பாடல் பகுதி.
இந்த உரையாடலின் போதுதான், கோவலனால் நீ வெறுக்கப்படவில்லை என்னும் பொருளில் ‘கைத்தாயும் அல்லை’ என்று தேவந்தி கண்ணகியிடம் கணி (சோதிடம்) சொல்வதுபோல் சொன்னாள். காக்கை அமர்வதற்கும் பனம்பழம் விழுவதற்கும் பொருத்தமாயிருந்தது என்பது போல், தேவந்தி கூறிய சிறிது நேரத்தில், கோவலன் மாதவியை வெறுத்துக் கண்ணகியை விரும்பி வந்து விட்டான். இளங்கோவின் இந்த இலக்கியக் கலையும் சுவைத்து இன்புறத்தக்கது.
வேட்டுவ வரி
கண்ணகியின் கூச்சம்
கவுந்தியடிகளும் கண்ணகியும், கோவலனும் உறையூரைக் கடந்து மதுரை செல்லும் வழியில் ஓர் ஐயை கோட்டத்தில் தங்கி இளைப்பாறினர். அப்போது, வேட்டுவக்குடியில் தெய்வப் பூசனை செய்யும் சாலினி என்பாள் தெய்வம் ஏறப்பெற்றுக் (சாமிஆடிக்) கண்ணகியை நோக்கிப் பின் வருமாறு பாராட்டலானாள்.
“இவளோ, கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென் தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
என்பது பாடல் பகுதி. கண்ணகி இன்னும் சிறிது காலத்தில் தெய்வமாகப் போகிறாள் என்ற குறிப்பை, தெய்வம் ஏறிய சாலினி வாயிலாக இளங்கோ உணர்த்தியுள்ளார். தெய்வம் ஏறப்பெற்றவர்களே எதிர்காலம் பற்றி உரைக்க முடியுமாதன், இங்கே இளங்கோ சாலினியைப் பயன்படுத்திக்கொண்டார்.
சாலினியின் பாராட்டுரையைக் கேட்ட கண்ணகி மிகவும் கூச்சம் அடைந்து, இந்தப் பேரறிவு உடைய முதியவள், ஒன்றுக்கும் பற்றாத என்னை ஏதோ மயக்கத்தால் இவ்வாறு பாராட்டினாள் என்று கூறிக் கணவன் கோவலன் பின்னால் சென்று ஒடுங்கி மறைந்து புதிதாய்ச் சிறு நகை செய்தாள்;
“பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி என்று
அரும்பெறல் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி
என்பது பாடல் பகுதி. சிலர் பிறரைப் பேசவிடாமல் தாங்களே பேசிக்கொண்டிருப்பர் - தங்கள் பெருமைகளையே சொல்லிக் கொண்டிருப்பர். பிறர் தங்கள் பெருமைகளைச் சொல்லின் பூரித்துப்போவர். ஆனால், உயர் பண்பாளர் தங்கள் பெருமைகளைத் தாங்களே சொல்லார்; தங்கள் பெருமைகளைப் பிறர் கூறினும், கூசி, இந்தப் பெருமைகட்கு உரிய தகுதி எனக்கு இல்லை என்று அடக்கமாகக் கூறுவர். இந்த இனத்தைச் சேர்ந்தவள் கண்ணகி, எண்சாண் உடம்பும் ஒரு சாண் உடம்பாயிற்று என்பார்களே - அதுபோல - கண்ணகி கணவனின் பெரிய முதுகின் பின்னே ஒடுங்கியிருந்தாள். அரியனாகிப் பிரிந்திருந்த கணவனை இப்போது பெற்றிருப்பதால் ‘அரும் பெறல் கணவன்’ என்றார் ஆசிரியர். விருந்து என்றால் புதுமை, மூரல் = புன்னகை. பல்லாண்டுகளாகச் சிரித்தறியாதவளாதலின், இப்போது வெளிக்காட்டிய முரலை ‘விருந்தின் மூரல்’ என்றார். ‘பெண் சிரித்தால் போயிற்று - புகையிலை விரித்தால் போயிற்று’ என்னும் அந்தக் காலப் பழமொழிப்படி, புன் முறுவல் பூத்ததாகச் சொல்லவில்லை - மொக்குப்போல் அரும்பியதாகவே கூறியுள்ளார் இளங்கோ. நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு பெண்கட்கு வேண்டும் என்றது கண்ணகி போன்றோரைக் கருதியே போலும்.
பொற்புடைத் தெய்வம்
கவுந்தியடிகள் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப்படுத்திய போது, பின்வருமாறு கண்ணகியைப் புகழ்ந்து அறிமுகப்படுத்தினாள்.
இந்தப் பெண்ணின் காலடியை மண்மகள் அறியாள். அத்தகையவள் கடுமையான ஞாயிற்றின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு, காதலனுக்காகப் பல இன்னல்களை ஏற்று, நாக்கு நீரின்றி வறள வாட்டமுற்றுப் பரல் நிறைந்த தரையில் நடந்து வந்தாள். தனது துன்பத்தைப் பொருட்படுத்தாது, பூங்கொடி போன்ற இவள் கணவனின் நன்மைக்காக வதங்கிச் செயல்படுகின்றாள். மகளிர்க்கு இருக்கவேண்டிய கற்புக்கடமை நிரம்பப் பெற்ற தெய்வ மகளாவாள். பொலிவுடைய இந்தத் தெய்வத்தைத் தவிர வேறு தெய்வத்தை யாங்கள் கண்டதில்லை - என்று பாராட்டி அறிமுகம் செய்தாள். பாடல் - அடைக்கலக் காதை:“என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு
நடுங்கு துயரெய்தி நாப்புலர வாடித்
தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
காலடியை மண்மகள் அறியாள் என்றால், கண்ணகி வீட்டை விட்டு வெளியில் நடந்தறியாள் - வெளியில் செல்ல வேண்டுமாயின் ஊர்தியில் செல்வாள் - என்பது கருத்து. இதனால், கண்ணகியின் மென்மையும் செல்வ வளமும் அறிவிக்கப்பட்டன.
“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
இளங்கோ கண்ணகியை ஓரிடத்தில் “முளைஇள வெண் பல் முதுக்குறை நங்கை” (15:202) எனக் குறிப்பிட்டுள்ளார். முதுக்முறை நங்கை என்பதற்குக் ‘குறைந்த வயதிலேயே பேரறிவு பெற்றுள்ள பெண்’ என்பது பொருளாகும்.
கண்ணகியின் கடைசிக் குடும்ப வாழ்க்கை
மதுரையில் மாதரி வீட்டில் கண்ணகியும், கோவலனும் அடைக்கலம் புக்குள்ளனர். உணவு ஆக்கி உண்பதற்காக உயர்ந்த சாலி அரிசியும், பலவகைக் காய்கறிகளும் கண்ணகிக்குக் கொடுக்கப்பட்டன.
கண்ணகி காய்கறிகளை அரிவாள்மணையில் அரிந்து திருத்தினாள். இதனால் மெல்லிய கைவிரல்கள் சிவந்து போயினவாம். முகத்திலிருந்து வியர்வை சொட்டிற்றாம். அடுப்பு மூட்டி உணவு ஆக்கியதால் புகை தாங்காமல் கண்கள் சிவந்தனவாம். மாதரியின் மகளாகிய ஐயை என்பாள் வைக்கோலால் முதல் முதலாக அடுப்பு மூட்டிக் கொடுத்தது. முதல் ஆக்கி முடிக்கும்வரை கண்ணகியின் கூடமாடே இருந்து உதவி செய்திருக்கிறாள். ஐயை மேல்வேலைக்குத் துணை புரிந்தாளே தவிர, மற்றபடி கண்ணகிதான் தனக்குத் தெரிந்த அளவுக்குக் கைப் பாகம் செய்து ஆக்கினாளாம். பாடல்: கொலைக் களக் காதை:
“மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
என்பது பாடல் பகுதி. கண்ணகியின் கைவிரல்கள் மெல்லியவாகலின், காய்கறி திருத்தியதால் சிவந்து விட்டன. இத்தகைய மெல்லிய விரல்களைப் பார்த்துத்தான் வெண்டைக்காய்க்கு Lady’s Finger (பெண்ணின் விரல்) என்ற பெயரை ஆங்கிலேயர் வழங்கினர் போலும், காய்கறி நறுக்கியதால் கைவிரல்கள் சிவந்தன. அடுப்பின் கரிந்த புகையால் கண்கள் சிவந்தன. கொடுவாய்க் குயம் = வளைந்த அரிவாள்மனை. விடுவாய் செய்தல் = அரிதல். மடைமை = சமையல் கலை. உணவு ஆக்குதலை எளிமையாய் எண்ணிவிடக் கூடாது. அந்தக் கலை பற்றிய நூலே உள்ளது. மணிமேகலை என்னும் நூலில் ‘மடை நூல் செய்தி’ (2-22) என மடை நூல் (சமையல் கலை நூல்) இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. கண்ணகி அவள் அறிந்த அளவு ஆக்கினாளாம்.
இந்த அமைப்பை நோக்குங்கால், கண்ணகியின் பிறந்தகமும், புக்ககமும் பெருஞ் செல்வக் குடும்பமாகலின் உணவு ஆக்குதற்குப் பணியாட்கள் இருந்திருப்பர் என்பது புலனாகிறது. கண்ணகி முன்பே பயின்றிருப்பாளானால் கைவிரல்களும் கண்களும் சிவக்கா. பெரிய விறகை வைத்துக் கொளுத்தினால் உடனே தீ பற்றாது. முதலில் சிறிய சுள்ளிகளைக் கொளுத்திப் பின்பு அவற்றோடு பெரிய கட்டைகளை இணைத்து எரியச் செய்வது வழக்கம். ஈண்டு நாவுக்கரசரின் தேவாரப் பாடல் பகுதி ஒன்று நினைவுக்கு வருகிறது. திருவானைக்காப் பதிகத்தின் முதல் பாடலில்,
“செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை
என்று கூறியுள்ளார். ஈமச் சிதையில் பெரிய விறகுக் கட்டையைத்தான் அடுக்குவது வழக்கம். அங்ஙனமிருந்தும், நாவரசர் சிறு விறகால் தீ மூட்டி என்று கூறியிருப்பது ஏன்? கொளுத்தப்படுகின்ற உடம்பு பெரிய விறகு - விறகுக் கட்டையினும் நீளத்தாலும், பருமனாலும் பெரியது உடம்பு. அதனால்தான் சிறு விறகால் தீ மூட்டி என்றார். இங்கே, கண்ணகிக்கு உதவியாக ஐயை வைக்கோலால் விறகு பற்றச்செய்துள்ளாள். இதில் ஒரு பொருத்தம் உள்ளது. ஐயை-மாதரி ஆயர் குடியினர்; ஆ (பசு) காத்து ஓம்புபவர்; அவர்க ளிடத்தில் வைக்கோல் நிரம்ப இருக்கும். அதனால் வைக்கோலின் உதவியால் நெருப்பு பற்றச் செய்யப்பட்டது.
‘காதலற்கு ஆக்கி’ என்னும் பகுதியும் சுவைக்கத்தக்கது. அவள் தனக்காக ஆக்கவில்லை; தன் காதலன் கோவலனுக்காக ஆக்கினாளாம். கணவனுக்குத் தன் கையாலேயே ஆக்கவேண்டுமெனத் தானே ஆக்கினாள். தனக்குத் தெரிந்தவரையும் ஆக்கினாள்.
உணவு ஆக்கி முடிந்த பின், மாதரி வீட்டார் தந்த வேலைப்பாடு மிக்க ஒரு பனந் தடுக்கில் கண்ணகி கோவலனை அமரச் செய்தாள்; ஒரு மண்பாண்டத்தில் நீர் கொண்டு வந்து கணவரின் காலடிகளைத் தடவித் தூய்மை செய்தாள். பின்னர் அவன் எதிரில் தரையில் தண்ணீர் தெளித்துத் தடவி, குமரி வாழையின் குருத்து இலையை விரித்துப் போட்டு உணவு படைத்து அடிகளே உண்பீர்களாக என்று கூறி உண்பித்தாள்:
“தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடிநிர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
என்பது பாடல் பகுதி. “தால......தவிசு” – கைதேர்ந்த பெண் பின்னிய பனையோலைத் தடுக்கு. அந்தக் காலத்திலேயே, பெண்கள் சிறு குடிசைத் தொழிலாகத் தடுக்கு பின்னி வந்தனர் என்பது தெளிவு. கணவன் கால்களைக் கண்ணகி தூய்மை செய்தது ஓரளவு பெண்ணடிமைக் கொள்கைதான். அது காலத்தின் கோலம். தூய்மை செய்த நீர் இருந்த பாண்டம் சுடுமண் மண்டை எனப்பட்டுள்ளது. மண்டை - பாண்டம் (பாத்திரம்), சுடுமண் மண்டை = சூளையில் சுட்டு உருவாக்கிய மண் பாண்டம். மண் பாண்டத்தால் தூய்மை செய்தாள் என்று சொல்லியிருப்பதில் உள்ள குறிப்பு, கண்ணகி தங்கள் வீட்டில் பொன்-வெள்ளிப் பாண்டங்களைப் பயன்படுத்தியிருப்பாள் என்பது. மாதரியின் வீட்டுப் பாண்டம் மண் பாண்டமே. சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி என்பது சிறிது குழப்பமாயுள்ளது. இந்தப் பாண்டத்திலிருந்து நீர் எடுத்துக் கணவன் கால் அடிகளைத் தடவித் தூய்மை செய்தாள் என்றும் பொருள் கொள்ளலாம். கையால் தடவினால் தானே நீர் உண்ணுமிடத்தில் கீழே சிந்தாமல் இருக்கும்? அல்லது மற்றொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அதாவது: மண் பாண்டத்திற்கு மேலே கணவனின் கால்களை வைக்கச் செய்து நீர் ஊற்றி அந்த நீர் மண்பாண்டத்தில் விழும்படி மாற்றினாள் - என்பதுதான் இரண்டாவது பொருள். யான் ஒரு வீட்டில் மேசைப் பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்து சிற்றுண்டி உட்கொண்டபின், என் எதிரில் மேசை மேல் அகலமான ஒரு பித்தளைத் தட்டை வீட்டினர் வைத்தார்கள்; அதற்குமேலே என் கையை நீட்டச் சொல்லி நீர் ஊற்றினார்கள்; நான் கைகழுவிய நீர் பித்தளைத் தட்டில் விழுந்தது; பிறகு அதை எடுத்துக் கொண்டுபோய் விட்டார்கள். இந்தச் சொந்தப் பட்டறிவைக் கொண்டு, “சுடுமண் மண்டையில்... மாற்றி” என்பதற்கு மேலுள்ள இரண்டாவது பொருளை யான் கூறியுள்ளேன்.
உண்ணுமுன் கால்களைத் தூய்மை செய்துவிடும் செயலுக்கு, இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில், கம்பராமாயணத்திலும் பெரிய புராணத்திலும் ஒத்துள்ள செயல்களை இவண் காணலாம்.கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - பிலம்புக்கு நீங்கு படலம் காட்டில் ஒரு பிலத்தில் தவம்செய்து கொண்டிருந்த சுயம்பிரபை என்பவள், அனுமன் முதலிய வானரர்கள் ஆங்கு வந்து, இராமனுக்காகச் சீதையைத் தேட வந்துள்ளோம் என்று கூற, என்தவம் கைகூடியது - வீடுபேறு கிடைக்கும் என மகிழ்ந்து வானரர்களின் கால்களைத் தூய்மைசெய்து அவர்கட்கு விருந்தளித்தாளாம். பாடல்:
“கேட்டவளும் என்னுடைய கேடில்தவம் இன்னே
காட்டியது வீடுஎன விரும்பிகனி கால்நீர்
ஆட்டிஅமிழ் தன்னசுவை இன்னடிசில் அன்போடு
என்பது பாடல். அடுத்தது, பெரிய புராணத்தில் அப்பூதி நாயனார் வரலாற்றுப் பகுதியில் உள்ளது. அப்பூதி நாயனார் திருநாவுக்கரசரைத் தம் மனைக்கு அழைத்து வந்து விருந்து அளிக்குமுன், நாவுக்கரசரின் கால்களை நீரால் தூய்மை செய்து அந்தத் தண்ணீரைக் குடும்பத்தினர் உட்படத் தலைமேல் தெளித்துக் கொண்டனராம்:
“முனைவரை உள்எழுந் தருளுவித்து
அவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல் தெளித்து
என்பது பாடல் பகுதி, சுயம்பிரபையும் அப்பூதி நாயனாரும் பிறருக்குச் செய்தனர்; கண்ணகி தன் கணவனை உயர்வாகப் போற்றிச் செய்தாள்.
அடுத்தது ‘மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல்’ என்பது. இன்றும் இலைபோடுவதற்கு முன் கீழே தண்ணீர் தெளிக்கும் வழக்கம் உண்டு. கண்ணகி கையால் தடவித் தரையைத் தூய்மை செய்தாளாம். தூய்மைப் பயனோடு மேலும் இரண்டு பயன்கள் உள்ளன. ஒன்று: எறும்பு போன்றன. தண்ணீர் பசையைத் தாண்டி இலைக்கு வரா; மற்றொன்று. இலை அப்பால் இப்பால் திடீரென நழுவாது - இடம் பெயராது. சிலர் உண்ணும்போது அவர்களின் இலைகள் அடுத்தவர் இலைமீது திடீரெனப் பாய்ந்து விடுவது இங்கே நினைவு கூரத்தக்கது.
ஒருவர்க்கு மயக்கம் வந்து விடின், மயக்கம் நீக்க முகத்தில் தண்ணீர் தெளிப்பதுண்டு. இங்கே நிலமகளின் மயக்கத்தை நீக்கத் தெளிக்கப்பட்டதாகப் புலவர் தாமாக ஒரு குறிப்பை ஏற்றிச் சொல்லியிருப்பது தற்குறிப்பு ஏற்ற அணியாகும். நிலமகளின் மயக்கத்தின் காரணம், இன்னும் சிலமணி நேரத்தில் கோவலன் கொலை செய்யப்படுவான் என்பதை அறிந்ததாய் இருக்கலாமோ!
குமரி வாழை என்பது, குலைபோடாத வாழை. இதன் குருத்து இலையின் உட்பகுதியை நன்றாக விரித்து அகலம் உடையதாக்கினாள். குருத்து இலையில் காகமோ வேறு பறவையோ எச்சம் இட்டிராது. தூய்மையாகவும் பார்ப்பதற்குப் பொன்னிறமாய் அழகாகவும் அகலமாகவும் இருக்கும். உலகியலில் இத்தகைய வாழை இலையைத்‘ தலை வாழை இலை’ என்பர்.
இலையின் வளப்பத்தைக் கொண்டு விருந்தின் சிறப்பைக் கணிப்பதுண்டு. வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. ஒருவர் மற்றொருவரிடம், யான் பெரிய செல்வா விட்டு விருந்திற்குப் போயிருந்தேன். இலை மிகவும் பெரியது. இலையின் எதிர் ஓரத்தில் பரிமாறப்பட்டிருக்கும் காய் கறிகள் கைக்கு எட்டாமையால் ஓர் அகப்பை போட்டிருந்தார்கள்; அந்த அகப்பையால் காய்கறிகளை இழுத்து இழுத்து உண்டோம் - என்றாராம். உடனே இரண்டாமவர் முதலாமவரை நோக்கி, யான் ஒரு சமீன்தார் வீட்டு விருந்திற்குப் போயிருந்தேன். மிகவும் பெரிய இலை போட்டிருந்தார்கள். காய் கறிகளை இழுத்து உண்ண ஓர் அகப்பையும் போட்டிருந்தார்கள் - ஆனால் காய்கறிகள் அகப்பைக்கும் எட்டவில்லை - அவ்வளவு பெரிய இலை. அதனால், யான் எழுந்துபோய் எழுந்துபோய்க் காய்கறிகளை எடுத்துக்கொண்டு வந்து உண்டேன் என்றாராம். இலையைக் கொண்டு விருந்தின் தரத்தைக் கணிக்க உதவும் கதையாகும் இது. எனவேதான், கோவலனுக்குக் குமரிக் குருத்துத் தலைவாழை இலை போடப்பட்டது. மாதரி வீட்டார் பெரிய இலை தந்திருந்தனர்.
கண்ணகி எல்லாம் முறையாகச் செய்து கணவனை நோக்கி அடிகளே அமுதம் உண்க என வேண்டினாள். அந்தக் கால நாடகத்தில் - அதாவது வடமொழி வழக்கு தமிழகத்தில் மலியத் தொடங்கிய காலத்து நாடகத்தில், மனைவி கணவனைப் பிரபோ - பிராண நாயகா என்று அழைப்பாள். இந்தக் கால நாடகத்தில் ‘அத்தான்’ என்கிறாள். ஆனால், கண்ணகி, ‘அடிகள்’ என்னும் மிக உயர்ந்த சொல்லால் குறிப்பிட்டுள்ளாள். ‘உண்க’ என்பது வேண்டிக் கோடல் பொருளில் வந்த வியங்கோள் வினை முற்று. கண்ணகியின் கடைசிக் குடும்ப வாழ்க்கை இதுதான்.
இங்கே, பெரிய புராணத்திலுள்ள செய்தி ஒன்று நினைவிற்கு வருகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசருக்கு உணவு படைப்பதற்காகத் தம் மூத்த மகனாகிய மூத்த திருநாவுக்கரசு என்னும் பெயர் உடையவனை அழைத்து நீ போய், பொன்னிறமான வாழைக் குருத்து இலையை அறுத்துக்கொண்டு வருக என்றார். தன்னை அரவம் தீண்டியதைப் பொருட்படுத்தாமல் அவன் கொய்த குருத்து இலையைக் கொண்டு வந்தானாம். இதனைப் பெரிய புராணம் - அப்பூதி அடிகள் வரலாற்றுப் பகுதியில் உள்ள -
“தூயாற் கறிகளான அறுவகைச் சுவையால் ஆக்கி
சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கரசை, வாழை
மேயபொற் குருத்துக் கொண்டுவா எனவிரைந்து
விட்டார் (23)
“வெய்ய வேகத்தால் விழா
முன்னம் வேகத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று
என்னும் பாடல்களால் அறியலாம். பெரிய புராணத்தில் குருத்து வாழை இலை குறிப்பிடப்பட்டிருப்பது சிலம்போடு ஒப்பு நோக்கத்தக்கது. நிற்க.
கண்ணகியின் மாற்றா உள்ளம்
கோவலன் உணவு கொண்ட பின், கண்ணகி வெற்றிலை பாக்கு மடித்துச் சுருட்டித் தந்தாள். அப்போது, கோவலன், பெற்றோர்க்கும் கண்ணகிக்கும் தான் இழைத்த பிழையைக் கூறி வருந்தினான். யான் உனக்கு ஒரு நலமும் செய்யவில்லை - துன்பமே உண்டாக்கினேன். என் பிழையை மறந்து, மதுரைக்குப் போவோம் - வருக என்று சொன்னதும் வந்து விட்டாயே கண்ணகி! - என்று கோவலன் வருத்தம் தெரிவித்ததும், கண்ணகி கூறியதாவது:-
நீங்கள் என்னைப் பிரிந்திருந்த காலத்தில், எனக்கு எந்த இன்பமும் கிடைக்காததற்காக நான் வருந்தவில்லை. அறவோர், அந்தணர், துறவோர், விருந்தினர் இவர்களை உம்முடன் இருந்து போற்ற முடியாது போனமைக்கே வருந்தினேன். உம் பெற்றோர்களின் முன்னே, யான் எனது வெறுப்பைச் சிறிதும் வெளிப்படுத்தவில்லை. நம் மகன் விட்டுச் சென்றதால் கண்ணகி வருந்துகிறாளே என்று நும் பெற்றோர் எண்ணி, என்னிடம் அன்பு உள்ளத்தோடு அருள் மொழி கூறி ஆறுதல் செய்து வந்தனர். அவர்களை மகிழ்விப்பதற்காக யான் பொய்ச் சிரிப்பு சிரிப்பேன், அந்தச் சிரிப்பில் என் உள நோயும் துன்பமும் மறைந்திருப்பதை அவர்கள் அறிந்து உள் மனம் வருந்தினர். இந்த நிலை ஏற்படும்படிச் செய்துவிட்டீர்களே என்பதுதான் எனது கவலை. யான் உம்மிடத்தில் சிறிதும் மாறுதல் கொள்ளாத உள்ளம் உண்மையான பற்றுள்ளம் கொண்டவள் ஆதலின், வருக என நீங்கள் கூறியதும் வந்துவிட்டேன் - எனக் கண்ணகி நயவுரை மொழிந்தாள்:
“அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்
முந்தை கில்லா முனிவு இகந்தனனா
அற்புளம் சிறந்தாங்கு அருள்மொழி அளைஇ
எற்பாராட்ட யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாய்அல் முறுவற்கு அவர்உள் ளகம்வருந்தப்
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
என்பது பாடல் பகுதி. கண்ணகி தன்னலம் இழந்ததற்காக வருந்தவில்லை - பிறர் நலம் புரிய முடியாது போனமைக்காகவே வருந்தியுள்ளாள்.
உலகியல்
இதுபோன்ற சூழ்நிலையில் உலகியலில் என்னென்னவோ நடந்திருக்கலாம். கோவலனின் பெற்றோர்கள், என் மகன் இந்த மூதேவி கண்ணகியைத் தொட்டதுமே அவனைச் சனியன் பிடித்துக்கொண்டது. இவளை எந்த நேரத்தில் தொட்டானோ? இவள் மூஞ்சைப் பாரேன் - ஏன், இவள் தாய் வீட்டில் போய் இருப்பதுதானே? என்று சொல்லலாம். அல்லது - கண்ணகியின் பெற்றோர்கள், தெரியாமல் அந்தத் தேவடியாள் தோழனாகிய கோவலனுக்கு நம் பெண்ணைக் கட்டிக் கொடுத்து விட்டோமோ - நம் பெண் அங்கே இருந்து கொண்டு சீரழிவது போதும் - நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துவிடுவோம் - என்று எண்ணிக் கண்ணகியைத் தம் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டிருக்கலாம். அல்லது - கண்ணகி, நான் என் அம்மா வீட்டிற்குப் போகப் போகிறேன் என்று சொல்வித் தானாகவே தாய் வீட்டிற்குப் போயிருக்கலாம் - உள்ளூர்தானே!
ஆனால் இப்படியெல்லாம் எதுவும் நடவாதபடி அனைவரும் பெருந்தன்மையோடும் உயரிய பண்போடும் நடந்து கொண்டிருக்கிறார்கள். கோவலனின் பெற்றோர்கள் தம் மகளைப் போலவே கண்ணகியை நடத்தியிருக்கிறார்கள். கண்ணகியும் அவர்கள் முன்னே தன் வருத்தம் தெரியாத படிப் பொய்யாகச் சிரித்துள்ளாள். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்”, “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” (குறள் - 706) என்ற படி அவளது சிரிப்பு அவளது துன்பத்தை வெளிப்படுத்தி விட்டது. கண்ணகியைப் பாராட்டி வந்த அவர்கள் அவளது பொய்ச் சிரிப்பின் பொருளைப் புரிந்து கொண்டு மனம் வருந்தினார்களாம். மேல் மனம் வருந்தினால் அவள் தெரிந்து கொள்வாள் என்பதற்காக, அவர்களும், மேலுக்கு இயற்கையாயிருப்பது போல் காட்டி உள்மனம் (Inner mind) வருந்தினார்களாம். ‘உள்ளகம் வருந்த’ என்னும் பகுதி ஈண்டு எண்ணத்தக்கது.
துன்பமான நேரத்தில் கண்ணகி பொய்ச் சிரிப்பு சிரித்தாளே - இதுதான், ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என வள்ளுவர் பரிந்துரைத்துள்ள நகைப்பாயிருக்குமோ!இளங்கே அடிகள் இவ்வாறு பாடியிருப்பது உலகியலுக்கு மாறாயுள்ளது. கோவலனின் பெற்றோர்களும் வெளிப்படையாக வருந்தியிருக்கலாம். கண்ணகியும் வெளிப்படையாக வருந்தியிருக்கலாம் - கண்ணகியின் பெற்றோர்களும் வருந்தி அவளைத் தம் வீட்டிற்கு அழைத்திருக்கலாம். அவளுடைய மாமன் மாமியும் அவளது தாய் வீட்டில் போய் இருக்கச் சொல்லியிருக்கலாம். கண்ணகி தாய் வீட்டிற்குப் போகாமல், கணவன் வீட்டிலேயேதான் இருப்பேன் எனத் துணிந்து கூறியிருக்கலாம். அப்போது நடந்தது இப்போது யாருக்குத் தெரியும்?
எது எப்படியிருந்தாலும், இளங்கோ இவ்வாறு எழுதி இருப்பது பொருத்தமே. இளங்கோ வரலாற்று ஆசிரியர் அல்லர் - இலக்கிய ஆசிரியர் அவர். வரலாற்று ஆசிரியரது கடமை, சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி - சிறிதும் கற்பனை கலவாது - நடந்ததை நடந்தபடியே - உள்ளதை உள்ள படியே எழுத வேண்டியதாகும். ஆனால் இலக்கிய ஆசிரியர் கற்பனை கலப்பார்; நடந்ததை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நடக்க வேண்டியதை - மக்கள் குழு பின்பற்ற வேண்டியதை அறிவிப்பார். இங்கே இளங்கோ அவ்வாறு என்ன அறிவித்துள்ளார்? ஒரு குடும்பத்தில் மகன் தன் மனைவியைப் பிரிந்து போய்விடின், அவனுடைய பெற்றோர் தம் மருமகளைத் திட்டலாகாது துன்புறுத்தலாகாது - மருமகளை நோக்கி, நீ கவலைப்படாதே - உன் கணவன் வந்து விடுவான் - நாங்கள் இருக்கிறோம் - அஞ்சாதே - கடைசி வரையும் உன்னைக் காப்பாற்றுவோம் - என்று ஆறுதல் கூறி அன்பாக நடத்தவேண்டும். மருமகளும் அமைதியாக இருக்கவேண்டும் - என்பதை, இந்த வரலாற்று நிகழ்ச்சி வாயிலாக இளங்கோ மக்கள் குழுவுக்குக் குறிப்பாக அறிவித்துள்ளார். இதைப் பின்பற்றுவதே சிறந்ததாகும்.
நீள் நில விளக்கு
கோவலன் உணவு கொண்டு உரையாடிக் கண்ணகியை விட்டுப் பிரிந்து கடைத் தெருவுக்குப் புறப்படுவதற்கு முன், பின்வருமாறு தன் ஆவல் தீரக் கண்ணகியைப் பாராட்டுகிறான்:
“குடிமுதல் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் கல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்துஈங்கு என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
நாணின் பாவாய் நீள்கில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய்
என்பது பாடல் பகுதி. புகாரில் வீட்டில் இருந்துபோது இருந்த நால்வகைத் துணைகளைத் துறந்து வேறு நால்வகைத் துணைகளைக் கைக்கொண்டு கண்ணகி கோவலனுடன் வந்தாளாம்.
முதல் நால்வகைத் துணை- 1: குடி முதல் சுற்றம் = குடியின் முதன்மையான பெற்றோர் - மாமன் மாமியார் முதலிய சுற்றம் 2: குற்றிளையோர் குற்றேவல் செய்வோர். 3: அடியோர் பாங்கு = ஆட்டுவாள், ஊட்டுவாள், ஒதலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் என்போர். 4: ஆயம் = தோழியர் குழாம்.
இப்போது உடன் கொண்டு வந்துள்ள நான்கு துணைகள் - 1: நாணம், 2: மடன், 3: நல்லோர் ஏத்து = நல்லோர் போற்றும் புகழ், 4: பேணிய கற்பு: தன்னைக் காக்கின்ற கற்பு. தனது துயர் போய் விட்டதாகக் கோவலன் கருதுகின்றான் - இல்லை - துயர் பெருகப் போகிறது. மனம் வந்தவாறு பொன்னே, கொடியே என்றெல்லாம் மெய்ம்மறந்து புகழ்கின்றான். நில விளக்காக - அதாவது - உலகில் தெய்வமாக வழிபடப் போகின்ற விளக்காகப் போகிறாள். பெண்களை வீட்டின் விளக்காகக் கூறுதல் இலக்கிய மரபு.
“மனைக்கு விளக்காகிய வாள்துதல்”
(புறநானூறு - 314)
“மனைக்கு விளக்கம் மடவார்”
(நான்மணிக்கடிகை - 105)
மனை விளக்காக இருந்த கண்ணகி உலக விளக்காக (தெய்வமாக) ஆகப் போகிறாள் என்னும் குறிப்பை நீள் நில விளக்கு என்பது கோடிட்டுக் காட்டுகிறது. மாறி வருவன் என்பதற்கு விற்று வருவேன் என்பது பொருள். மாறுதலாய் (பிணமாக) வருவேன் என்ற குறிப்பும் உள்ளது. ‘மயங்காது ஒழிக’ என்பதில் பெரிதும் மயங்கப் போகிறாள் என்னும் குறிப்பு அடங்கியுள்ளது.
கண்ணகியின் மறம்
சிலப்பதிகாரத்தில் உள்ள துன்ப மாலை, ஊர் சூழ் வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை என்னும் நான்கு காதைகளிலும் கண்ணகியின் மற உணர்ச்சியையும் மறச் செயலையும் காணலாம். துன்ப மாலையில் கணவன் இறந்த செய்தியைக் கேட்ட கண்ணகியின் மறத் துன்பம் கூறப்பட்டுள்ளது. ஊர் சூழ் வழியில், கண்ணகி ஊரிலே தெருத் தெருவாகச் சூள் உரைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தது இடம் பெற்று உள்ளது. வழக்குரை காதையில், கண்ணகி பாண்டியனிடம் வழக்கு உரைத்து வென்று அரசனும் அரசியும் இறக்கும் அளவுக்கு மறச் செயல் புரிந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. வஞ்சின மாலையில் கண்ணகி தனது இடப் பக்க மார்பகத்தைத் திருகி எறிந்து ஊரைக் கொளுத்தினமை உரைக்கப்பட்டுள்ளது.கதைக்குக் கால் இல்லை - தலை இல்லை என்பர். அவ்வாறே, சிலப்பதிகாரக் கதைச் செய்தி முழுவதையும் நம்புவதற்கு இல்லை. இடப்பக்க மார்பைத் திருகி எறிந்தால் ஊர் எரியாது. கண்ணகிபால் பரிவு கொண்டவர்கள், கோவலன் கொலையுண்டதற்குக் காரணமான பொற் கொல்லன் இருந்த பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்கலாமோ - என்னவோ - எதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. குற்றம் பெரியதுதான் - அதற்காக ஊரைக் கொளுத்துவது என்பது பொருந்தாது. கண்ணகியை மறக் கடவுளாக ஆக்கப் புனைந்த கற்பனையாகவும் இருக்கலாம் இது.
கண்ணகியின் குறைபாடு
இதுகாறும் கண்ணகியின் சிறப்புகள் - உயரிய பண்புகள் விளக்கப்பட்டன. கண்ணகியின் குறைபாட்டையும் கருதாமல் இருக்க முடியாது. கணவன் மாதவிபால் செல்லாமல் - சென்றாலும் அங்கேயே தொடர்ந்து நீண்ட நாள் தங்காமல் இருக்கும்படியாக அவனை ஈர்க்கும் ஆற்றல் கண்ணகியிடம் இல்லை.
சிலர் காலையில் தம் வீட்டுச் சிற்றுண்டி பிடிக்காமல், உணவுக் கடைக்குச் சென்று, இட்டலி, வடை, பூரி, கிழங்கு, பொங்கல், சாம்பார், சட்னி, கடப்பா, அடை கறி முதலியவற்றை மேய்வார்கள். கோவலனின் செயலும் இது போன்றதே. மாரியம்மன் கோலம் புனைந்த பெண்ணைப் போல் கண்ணகி இருந்திருப்பாள் போலும் கவர்ச்சியை விரும்பிய கோவலன், மாதவியின் ஆடல் பாடல்களிலும், தளுக்கு - குலுக்கு - மினுக்குகளிலும் உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டான். அந்தோ! கண்ணகியின் வாழ்வு இதனால் சீரழிந்தது.
மற்றும் ஒரு குறை கூறப்படுகிறது சிலரால். மாதவியை விட்டுக் கோவலன் தன்னிடம் வந்ததும், கண்ணகி ஊடல் கொண்டவள் போல் நடித்திருக்க வேண்டும். அதாவது பிகுவு - கிராக்கி பண்ணியிருக்க வேண்டும். அதை விட்டு, அவன் வந்ததும், மாதவிக்குக் கொடுக்க ஒன்றுமில்லை போலும் என்றெண்ணி, சிலம்புகள் உள்ளன - கொண்டு போய்க் கொடுங்கள் என்று சொன்னதும், அவன் மதுரைக்குப் போகலாம் வா என்றதும் - யாரும் அறியாவண்ணம் அவனோடு புறப்பட்டதும் அறியாமையாகும். இது கண்ணகியின் திறமை இன்மையைக் காட்டுகிறது - என்றெல்லாம் கண்ணகி குறை கூறப்படுகின்றாள். ஆனால், கண்ணகி, வா என்றதும் உடனே கணவனுடன் மதுரைக்குப் புறப்பட்டு விட்டதில் ஒருவகைப் பொருத்தம் உள்ளது என்பதைப் புறக்கணித்துவிட முடியாது. அது என்ன என்று காண வேண்டும். இதற்கு, ஒருபுடைக் கருத்து ஒப்புமை காண்டல் என்ற முறையில் மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள ஒரு மாலைக் காட்சிப் புனைவு துணை செய்கிறது. அது வருமாறு:
ஒரு மாலைக் காட்சி
ஒரு நாள் ஒரு சேவல் அன்னமும் அதன் பெடை அன்னமும் ஒரு தாமரைத் தடாகத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. தாமரை மலரில் இருந்த பெடை அன்னத்தை, மாலை நேரம் வந்ததும், அம்மலர் குவிந்து மூடி மறைத்துவிட்டது. அதை அறிந்த அன்னச் சேவல், அம்மலரின் இதழ்களைக் கிழித்துப் பெடையை அழைத்துக்கொண்டு ஓர் உயரமான தென்னை மரத்தில் ஏறிக்கொண்டதாம். பாடல்: மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை:-
“அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
என்பது பாடல் பகுதி. அன்னங்கள் தடாகத்தை விட்டு அகன்றதற்குக் காரணம், தடாகத்தின் மேலும் தாமரை மேலும் உள்ள அச்சமாகும். தடாகத்தின் கரையிலுள்ள ஒரு செடியின் மீது அமராமல் தென்னைமேல் அமர்ந்ததற்குக் காரணம், தங்களை அச்சுறுத்திய தண்ணீருக்கு வெகு தொலைவுக்கு அப்பால் போய்விட வேண்டும் என்ற தற்காப்பு முயற்சியாகும். வேறு மரத்தில் ஏறலாகாதா எனின், மற்ற மரங்களினும் தென்னையே உயரமானது - ஆதலின் என்க. தென்னைகளுள்ளும் ‘ஓங்கு இரும்தெங்காம்’ - மிக உயர்ந்த தென்னையாம், மிக உயர்ந்த தென்னையில் பக்க வாட்டத்தில் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டிருக்கும் மடலில் அமரக் கூடாதா எனில், தண்ணீருக்கும் தங்களுக்கும் உள்ள இடைவெளி மிகுதி யாயிருக்க வேண்டும் என்பதற்காக, நெட்ட நெடுகமேல் நோக்கிக் கொண்டுள்ள உயர்மடலில் ஏறின என்க. மற்றும், ‘அமர’ என்று கூறவில்லை - ‘ஏற’ என ஏறுமுகத்திலேயே உள்ளதாகக் கூறப்பட்டிருப்பதும் சுவைக்கத்தக்கது.
தங்களை அச்சுறுத்திய தண்ணீர்ப் பகுதியை விட்டு வெகு தொலைவிற்கு அப்பால் போய் விடவேண்டும் எனச் செயல்பட்ட அன்னங்கள் போலவே, கண்ணகியும் செயல்பட்டிருக்கிறாள். அதாவது, தனது நல்வாழ்விற்கு இடையூறாக உள்ள மாதவியை விட்டு வெகு தொலைவிற்கு அப்பால் கணவனைக் கொண்டு சென்று விடவேண்டும் என்ற குறிக்கோளுடன், கணவன் அழைத்ததும் மறாமலும் எவருக்கும் தெரியாமலும் உடனே புறப்பட்டு விட்டாள். புகாரிலேயே இருப்பின் மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் ஏறிக்கொள்ளலாம் - அதாவதுமீண்டும் ஒருகால் கோவலன் மாதவிபால் சென்று விடலாம்; “தின்னு ருசி கண்டவரும் பெண்ணு ருசி கண்டவரும் சும்மா இருக்கமாட்டார்கள்” என்பது ஒரு பழமொழி. எனவே, இந்த அச்சம் கண்ணகிக்கு உண்டானது இயற்கையே. மற்றும், பிறர்க்குத் தெரிந்தால் போவதைத் தடுத்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவும் தெரியாமல் கணவனுடன் புறப்பட்டு விட்டாள்.
எனவே, கண்ணகி கணவனோடு ஊடாமலும் உடன் வர மறுக்காமலும் செயல்பட்டதைக் கண்ணகியின் குறைபாடாகக் கூறுவதற்கு இல்லை. ஒரு தடவைதான் ‘கோட்டை’ விட்டு விட்டாள் - மறுபடியும் ஏமாறுவாளா என்ன! ஆனால் பின்பு மதுரையில் நேர்ந்ததை அவள் முன் கூட்டி அறிய முடியுமா என்ன! அது தற்செயலாய் நேர்ந்ததாகும். இயற்கையின் கட்டளைக்கு அவள் பொறுப்பாகாள்.
ஆனால், தொடக்கத்தில் கணவன் மாதவியால் செல்லாமல் இருக்கச் செய்ய அவளால் இயலாது போனது வருந்தத்தக்கதே. கண்ணகி எவ்வளவோ முயன்றும் இருக்கலாம். ஆனால் கோவலன் முரட்டுத்தனமாய்த் திருந்தாமலும் இருந்திருக்கலாம் அல்லவா?