சிலம்போ சிலம்பு/கவுந்தி யடிகளின் கடமை உணர்வு

21. கவுந்தியடிகளின் கடமையுணர்வு

துணை

‘துணையோ டல்லது நெடுவழி போகேல்’ என்பது அதிவீர ராம பாண்டியனின் வெற்றி வேற்கைப் (78) பாடல்: புகாரிலிருந்து ஒரு முப்பது காதம் (முந்நூறு கல்) தொலைவு கடந்து மதுரைக்கு யாருக்கும் தெரியாமல் இருட்டில் புறப்பட்டுச் சென்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் கிடைத்த அரிய பெரிய துணை கவுந்தியடிகள்.

அடிகள்

கவுந்தி ஒரு சமண சமயப் பெண் துறவி. புகாருக்கு மேற்கே ஒரு காவதத் தொலைவில் இருந்த கவுந்திப் பள்ளி என்னும் இடத்தில் தங்கியிருந்தார். ஆணாயினும் பெண்ணாயிலும் உயர்ந்தவர்களை அடிகள் என்று சொல்லும் மர்பு உண்டு. கோவலன் தீயொழுக்கம் புரிந் திருப்பினும், கண்ணகிக்கு அவன் உயர்ந்தவனாகத் தோன்றியதால் ‘அமுதம் உண்க அடிகள்’ எனக் கூறினாள். (கொலைக் களக் காதை-43).

உண்மையா?

கவுந்தி யடிகள் துணையாகச் சென்றது உண்மையிலேயே நடந்திருக்கக் கூடிய வரலாற்றுச் செய்தியா அல்லது,-கதை போகிற போக்குக்கு வாய்ப்பாக இளங்கோ அடிகள் படைத்துக்கொண்ட கற்பனைச் செய்தியா என்பது ஒருவகை ஆராய்ச்சிக்கு உரியது. இருவரும் புகாரைக் கடந்து - காவிரியைக் கடந்து ஒரு காவதம் சென்றதுமே கிடைத்து மதுரை செல்லும் வரையும் உடனிருந்த துணை கவுந்தியாதலின், இது இட்டுக்கட்டிச் சொல்லி வைத்தாற்போல் நடந்திருக்கிறதே எனச் சிலருக்கு ஐயம் எழலாம். இளங்கோ, இந்தத் துணையைக் கண்ணகிக்காகப் பெண்ணாக்கினார் - கோவலனுக்காகத் துறவி யாக்கினார்-என்பதாக ஓர் அறிஞர் தெரிவித்துள்ளார். பெண்பாலாகிய கவுந்தி துறவியாயில்லாவிடின், ‘பெண் ருசி’ கண்ட கோவலன் வழியில் கவுந்தியையும் ஒரு கை பார்த்து விடுவான் என்று இவர் எண்ணினாரோ!

நம்பலாம்

நெடுவழி செல்பவர்கள், வழியில் ஒரு துணை கிடைப்பின், அவரோடு உரையாடிக் கொண்டு வழி கடப்பது நிகழக் கூடியது தானே. இருவரும் கவுந்தி தங்கியிருந்த இடத்தின் வழியாகச் சென்றனர். கவுந்தி இவர்களைப் பார்த்து, நீங்கள் யார்? எங்கே செல்கிறீர்கள்? ஏன் செல்கின்றீர்கள்? என வினவினார். கோவலன் உள்ளவற்றை உரைத்தான். உடனே கவுந்தி அவன் சொன்னதை ஒத்துக் கொள்ளவில்லை. உங்கள் குறிக்கோள் சரியில்லை; இந்தப் பெண்ணால் கடிய கொடிய காட்டு வழியைக் கடக்க முடியாது என்று சொல்லிப் பார்த்தார். கோவலன் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர், கவுந்தி சரி செல்லுங்கள். மதுரைக்குச் செல்வதாகச் சொல்கிறீர்கள்; யானும் மதுரைக்குச் சென்று, பெரியோர்களின் நூல்களைக் கேட்டு அருகனை வணங்க வேண்டும் என நெடுநாளாக எண்ணியிருந்தேன்; யானும் வருகிறேன் என்று உடன் புறப்பட்டு விட்டார். மூவரும் மதுரை நோக்கிச் செல்லலாயினர். எனவே, இது இளங்கோவின் கற்பனையன்று - உண்மையாகவே நடந்திருக்கும் என நம்பலாம்.

பயணப் பொருத்தம்

கணவனும் மனைவியுமான் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஆக இருவர் மட்டும் நெடுந்தொலைவு பயணம் செய்வது பாதுகாப்பானதன்று. தேன் நிலவுக்குச் செல்வதை இங்கே எடுத்துக் கொள்ளக் கூடாது. வெளிப்படையாகவே சொல்லலாம் என எண்ணுகிறேன். பெண் வழியில் சிறுநீர் கழிக்க ஒதுங்க வேண்டுமெனில், அவளுடன் ஆடவன் துணை போதல் நமது மரபு அன்று - ஒரு பெண் அவளுடன் துணை போவதே பொருத்தமானது. அதற்கு ஏற்பப் பெண் கவுந்தி கிடைத்தார். மற்றும், கணவன் அப்பால் சென்று ஒரு செயல் முடித்துவர, மனைவிக்கு ஒரு பெண்ணைத் துணையாக விட்டுச் செல்வதே மரபும் பொருத்தமும் ஆகும். இதன்படி, வழியில், கோவலன் நீர் அருந்த ஒரு முறையும், காலைக் கடன் கழிக்க ஒரு முறையும் கண்ணகியை கவுந்தியோடு விட்டுச் சென்றதாகச் சிலம்பு சொல்கிறது. கோவலன் கால்களைத் தொட்டுக் கும்பிடும் அளவுக்குப் பெருமையும் அகவையும் (வயது முதிர்வும்) உடைய கவுந்தியுடன் ஒரு பெண்ணை வழி நடத்திச் செல்வது தக்க வாய்ப்பாகும். எனவே, இம்மூவரும் சேர்ந்து செய்யும் பயணம் பொருத்தமானதும், பயனுள்ளதும், பாதுகாப்பானதும் ஆகும்.

கவுந்தியின் சீற்றம்

மதுரை செல்லும் வழியில் மூவரும் ஒரு சோலையில் தங்கியிருந்தபோது, இழிமகன் ஒருவனும் பரத்தை ஒருத்தியும் வந்து, கவுந்தியிடம் கண்ணகியையும் கோவலனையும் சுட்டிக்காட்டி இவர்கள் யார் என்றனர். என் மக்கள் எனக் கவுந்தி கூறினார். உன் மக்கள் எனில், தமையனும் தங்கையும் கணவன் மனைவியாக ஆவதுண்டோ என எள்ளி நகையாடினர். அவர்கள் மேல் சீற்றம் கொண்ட கவுந்தி அவர்களை நரியாகும்படிச் செய்தார். பின்பு, கோவலனும் கண்ணகியும் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அவர்கள் பழைய உருக்கொள்ளச் சாப நீக்கம் செய்தார்.

இதனால், கவுந்தியின் சீற்றத் தன்மையும் கெடுமொழி (சாபம்) இட்டுப் பின் விடுதலை செய்யும் ஆற்றலும் விளங்கும். நரிகளாக்கிப் பின்பு பழைய உருக்கொள்ளச் செய்தார் என்பதை நம்பாவிடினும், கவுந்தி அவ்விழிமக்கள் இருவர்மீதும் சீற்றம் கொண்டு கடிந்து பேசியுள்ளார் என்பதையாவது ஒத்துக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியின் அடிப்படையில், துறவிக்கு ஏற்ற பெருந்தன்மை கவுந்திக்கு இல்லை - அவரை ஒரு மெய்த் துறவியாகக் கொள்ளவியலாது எனக் கவுந்தியின் பண்பைத் திறனாய்வு செய்துள்ளனர் சிலர். அவர் துறவியாதலால் தான் அடிகள் என்னும் சிறப்பு மொழி அவர் பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கே, திருக்குறள் - ‘நீத்தார் பெருமை’ என்னும் தலைப்பில் உள்ள

“குணமென்னும் குன்றேறி கின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது” (29)

என்னும் குறட்பாவை ஆழ எண்ணிப் பார்க்கின், இந்தச் சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கவுந்தியின் மறுப்புரை

மாங்காட்டு மறையவன் ஒருவன் அவனது நம்பிக்கையின்படிக் கூறியவற்றையெல்லாம், கவுந்தியடிகள் தம் அருக சமயக் கொள்கையைக் கூறி மறுத்துரைத்தார். இதனால், கவுந்தி வாதிடும் வல்லமையும் உடையவர் என்பது புலனாகும்.

கவுந்தியின் கவர்ச்சி மொழி

“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் கிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப்பெறின்” (648)

என்பது குறள் பா. தக்கவர்கள் நேர்ந்து நிரவி இனிமையாகவும் திறமையாகவும் பேசி அறிவுறுத்துவாராயின், மக்கள் ஏற்றுக்கொண்டு செயல் புரிவர். சிலம்பில் ஊர் காண் காதையில், கவுந்தி கவர்ச்சியாகப் பேசிக் கோவலனுக்கு ஆறுதல் உண்டாக்கிய செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவலன் கவுந்தியை வணங்கிச் சொல்கிறான். யான் நெறிமுறை தவறி ஒழுகிச் செல்வம் இழந்து, கண்ணகி துயருற்று வருந்தும்படி அறியாத புது ஊருக்கு அழைத்து வந்து விட்டேன். யான் மதுரை மாநகருக்குள் சென்று என் இனத்தவரைக் கண்டு எதிர்காலத்தில் செய்ய வேண்டியதற்கு உரிய ஏற்பாடுகளை ஆயத்தப்படுத்தி வரும்வரை கண்ணகி உங்கள் திருவடிப் பாதுகாப்பில் இருப்பாளாக - அதனால் உங்கட்குத் துன்பம் ஒன்றும் இருக்காதே - என்று நொந்து வினவினான். அப்போது கவுந்தி பின்வருமாறு அவனுக்கு ஆறுதல் கூறித் தேற்றலாயினார்:

கோவலா! எல்லாம் ஊழ்வினைப் பயன். வாய் பறையாகவும் நாக்கு பறையடிக்கும் குறுந்தடியாகவும் கொண்டு பெரியோர்கள் எவ்வளவோ அறிவுரைகளும் அறவுரைகளும் கூறியுள்ளனர். கற்றறிந்த நல்லோர் நல்வினையே புரிவர். வாழ்க்கையில் வழுக்கியோரே பிரிதல் துன்பம், புணர்தல் துன்பம், மன்மதன் செய்யும் துன்பம் முதலியவற்றால் வருந்துவர். எல்லாம் வினைப் பயனே. எனவே நடந்து போனதற்கு வருந்தலாமா? இன்னும் கேள்! உன்னைப்போல் வருந்தியவர் மிகப் பலராவார். இராமன் காட்டில் சீதையைப் பிரிந்து தேடி வருந்தினான். நளன் சூதாடித் தோற்று மனைவியோடு காடேகி, இரவில் அவளைக் காட்டிலேயே விட்டுப் பிரிந்து சென்று விட்டான். இவர்கள் இருவரும் மனைவியரைப் பிரிந்து வருந்தினர். நீயோ மனைவியைப் பிரியாமல் இங்கே இருக்கிறாய். மனைவியைப் பிரிந்து வருந்திய இராமனையும் நளனையும் நோக்க, மனைவியோடிருக்கும் நீ எவ்வளவோ கொடுத்து வைத்துள்ளதாகவே தெரிகிறது. எனவே, வருந்தற்க எனக் கவர்ச்சியாகவும் திறமையாகவும் பேசி ஆறுதல் செய்தார்.

கவுந்தியின் கவர்ச்சி மொழியான மற்றொன்றையும் காணலாம். மதுரையின் புறஞ்சேரியில் இயக்கிக்குப் பால் படையல் செய்து திரும்பிய வழியில் மாதரி கவுந்தியைக் கண்டு வழிபட்டாள். அப்போது, கோவலனையும் கண்ணகியையும் புறஞ்சேரியை விட்டு இருட்டுவதற்குள் மதுரைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டுமென்று எண்ணினார் கவுந்தி. இவர்களை எப்படி அனுப்புவது? - யாருடன் அனுப்புவது? - எங்கே தங்கவைப்பது? - என்றெல்லாம் கவலை கொண்டிருந்த கவுந்திக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தீங்கு இல்லாத ஆ காத்து ஓம்பும் தொழில் புரியும் இந்த ஆயர் குல மடந்தையாகிய மாதரி அடைக்கலப் பொருளை ஏற்பதற்குத் தகுதியானவள் எனத் திறமையுடன் தேர்ந்தெடுத்தார். தேர்வு சரியே. கவுந்தி மாதரியிடம் கூறுகிறார்:

மாதரியே! இங்கே உள்ள இருவரும் வணிக குலத்தார்கள். கோவலன்-கண்ணகி என்பன இவர்களின் பெயர்கள். கோவலனின் தந்தை மாசாத்துவான் என்பவர் புகாரிலே மிகப் பெரிய செல்வராவார். இவரது புகழ் நாடு முழுவதும் பரவியுள்ளது. மதுரைக்காரர்கள் இவரை நன்கறிவர். இந்த மாசாத்துவானின் மகன்தான் கோவலன் என்பதை மதுரை வணிகர்கள் அறியின், பெறுதற்கு அரிய புதையல் பெற்றவர்போல் மகிழ்ந்து இவர்கட்கு விருந்தோம்பி நல்ல மாளிகையில் தங்கச் செய்வர். அந்த வணிக குலத்தாரின் இருப்பிடத்தை இவர்கள் அடையும் வரையும், இடைக்குல மடந்தையாகிய உன்னிடம் இவர்களை அடைக்கலமாகத் தருகிறேன் - ஏற்றுக் கொள்க - என்று கவுந்தி கூறினார். பாடல்: (அடைக்கலக் காதை)

“மாதரி கேள் இம்மடங்தைதன் கணவன்
தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்

இடைக்குல மடங்தைக்கு அடைக்கலம் தந்தேன்”

(125-130)

என்பது பாடல் பகுதி.

கவுந்தியின் தேர்ந்தெடுப்பு மிகவும் சிறந்ததே. மாசாத்துவானைக் குறிப்பிடுவதற்கு, “இவன் என் பெண்ணின் பேர்த்தி நாத்தனாரின் ஓரகத்தியின் தங்கை மகன்” என்று வேடிக்கையாகச் சொல்வது போல், கண்ணகியைக் காட்டி, இவளுடைய கணவனின் தந்தை மாசாத்துவான் என்று கவுந்தி கூறியிருப்பதில் சில நுட்பங்கள் உண்டு.

கோவலனைக் காட்டி இவன் தந்தை மாசாத்துவான் என்று கூறாமல், கண்ணகியைக் காட்டி இவள் கணவனின் தந்தை எனக் கவுந்தி கூறியதாக இளங்கோ பாடியிருப்பது, காப்பியக் கதைத் தலைவி கண்ணகி என்னும் அவளது முதன்மையைக் குறிப்பாக அறிவிக்கிறது. இந்தப் பெண்ணின் மாமனார் என நேராகச் சொல்லிவிடின், கோவலனைக் குறைவுபடுத்தியதாகும். மற்றும் கோவலனும் கண்ணகியும் கணவன் மனைவியர் என்ற அறிமுகமும் செய்ததாயிற்று.

சில குடும்பங்களில் தந்தையால் பிள்ளைக்கு மதிப்பு வரும். இன்னாருடைய மகன் இவன் என்று பிள்ளையை அறிமுகப்படுத்தல் வேண்டும். வேறு சில குடும்பங்களில் பிள்ளையால் தந்தைக்கு மதிப்பு ஏற்படும். இன்னாருடைய தந்தை இவர் என அறிமுகம் செய்தல் வேண்டும். ஆனால் கோவலன் நிலைமையோ இரங்கத் தக்கது! கோவலன் மாசாத்துவானின் மகன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதோடு, கண்ணகியின் கணவன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

உலகியலில், வேடிக்கையாக ஒருவனைக் குறிப்பிட்டு, ‘அவன் அப்பன் மகன்’ என்று சிலர் கூறுவதுண்டு. எல்லாரையும் ‘அப்பன் மகன்’ என்று வேடிக்கைக்காகக் கூடச் சொல்லிவிட முடியாது. தன் அப்பனைப் போலவே செயல் புரிபவனையே - அப்பனைப் போன்ற இயல்பு உடையவனையே அவ்வாறு கூறுவர். நக்கீரர் என்னும் புலவர் தலைசிறந்த புலவர். அவருடைய தந்தையும் தலைசிறந்த புலவர். மிக உயர்ந்த நக்கீரரைக் குறிப்பிடுவதற்கேகூட, ‘மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்று குறிப்பிட்டுள்ளனர் முன்னோர். மாசாத்துவான் - கோவலன் ஆகியோரைப் பொறுத்த மட்டில்,

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்”
(67)
“மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்லெனும் சொல்”(70)
என்ற குறள் பாக்களுக்கு இங்கே வேலை இல்லை. மற்றும் கவுந்தி இங்கே வீராப்பு – பிகுவு (கிராக்கி) காட்டும் திறமை தெரிகிறது. மாதரியே! இவர்களை நீ ஏளனமாக எண்ணி விடாதே - மாசாத்துவானின் மகனும் மருமகளும் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால், மதுரை வணிகப் பெருமக்கள் இவர்களைக் கொத்திக் கொண்டு (விரைந்து அழைத்துக் கொண்டு) போய்விடுவார்கள். இந்த அளவுக்குச் சிறந்த பெருமையுடைய உயர் குலத்தாராகிய இவர்களை, உயர்வு தாழ்வு கருதாமல், இடைக்குலத்தாளாகிய நின்னிடம் ஒப்படைக்கின்றேன் - இது உனக்குப் பெரிய வாய்ப்பு - என்று ஒருவகைப் பிகுவுடன் அடைக்கலம் தந்தார் கவுந்தி.

மாதரியின் மனத்தைக் கவரக் கவுந்தி மேலும் கூறுகிறார்: கண்ணகியை நீராட்டிப் பொட்டிட்டுப் பூச்சூட்டித் தூய உடை உடுத்து, ஆயமும் காவலும் தாயும் இவளுக்கு நீயேயாகிக் காப்பாற்றுக. காலடி மண்ணில் பட்டறியாத கண்ணகி கணவனின் நன்மைக்காக மிகவும் வருந்தி வழி கடந்து வந்துள்ளாள். கற்புடைய இத்தெய்வம் அல்லது வேறு தெய்வம் நாங்கள் கண்டதில்லை. இத்தகைய பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் - வளம் குறையாமல் கொழிக்கும். அரசனுடைய வெற்றியும் செங்கோலும் தவறுவதில்லை - என்பதை மாதரியே நீ அறியாயோ - என்றார்.

“கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்கில வேந்தர் கொற்றம் சிதையாது

பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு” (143-147)

என்பது பாடல் பகுதி. பத்தினிப் பெண்டிர் இருக்கும் நாட்டில் மழை தவறாது பெய்யும் - வளம் பெருகும் என்பது அறிவியலின்படி ஒத்துக் கொள்ள முடியாதது. கவுந்தி மாதரியின் மனங்கவர உயர்வு நவிற்சியாக இதைச் சொல்லி யிருக்கலாமல்லவா? இதனை, “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என வள்ளுவர் கூறியிருப்பது போல் கொள்ளலாம். உரை பெறு கட்டுரையிலும் இவ்வாறு மழை பெய்ததாகக் கூறப்பட்டுள்ளது வியப்பாயுள்ளது.

மேலும் கவுந்தி தொடர்கிறார். மாதரியே! அடைக்கலமாக வந்தவரைக் காப்பதால் கிடைக்கும் பயனை விளக்க ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்: காவிரி சார்ந்த பட்டினத்துப் பொழில் ஒன்றில் சாரணர் சாவகர்க்கு அறம் உரைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்தே, ஒரு கருவிரல் குரங்குக் கையோடு வானவன் ஒருவன் தோன்றினான். அவனது வரலாற்றைச் சாவகர்கள் வினவச் சாரணர் கூறலானார்:

எட்டிப் பட்டம் பெற்ற சாயலன் என்பவன் மனைவி வந்தவர்க்கெல்லாம் விருந்து படைத்தாள். ஒரு நாள் ஒரு தவசி வந்தார். அவருக்கு உணவு படைத்தாள். அவர் உண்டு மிகுந்த எச்சில் உணவையும் கழுவிய நீரையும் பசியால் வாடிய ஒரு குரங்கு உட்கொண்டு சிறிது பசி ஆறி அத் தவசியை ஏக்கத்துடன் பார்த்தது. அதன்பால் இரக்கம் கொண்ட அத்தவசி, அக்குரங்கை ஒரு பிள்ளைபோல் கருதிக் காக்கும்படிச் சாயலன் மனைவியிடம் அடைக்கலம் தந்து ஏகினார். அதன்படி அவள் அக்குரங்கை நன்கு பேணி வந்தாள். அக் குரங்கு இறந்த பின் அதன் பெயரால் தானம் செய்தாள். அந்தக் குரங்கு, மத்திம நாட்டிலே வாரணவாசி என்னும் ஊரில் உத்தர கெளத்தன் என்னும் அரசனுக்கு மகனாகப் பிறந்தது. குரங்கு உருமாறிய அந்த அரச குமரன் சிறப்புடன் பல தானங்கள் செய்து முப்பத்திரண்டாம் வயதில் இறுதி எய்தித் தேவன் ஆயினான். அவனே இப்போது வந்த வானவன் ஆவான். அவன் குரங்காக இருந்தபோது அடைக்கலம் தந்து காத்த நல்வினையால் சாயலனும் அவன் மனைவியும் பேரின்ப வீடுபேறு எய்தினர். இதனால், அடைக்கலம் காத்தலின் சிறப்பை நீ அறிவாயாக. இனிக் கண்ணகியைக் கோவலனோடு விரைந்து நின் இல்லத்திற்கு அழைத்துச் செல்வாயாக என்று அறிவுறுத்தினார்.

‘இரயில் சினேகம்’ என்பார்களே - அதுபோலின்றி, வழியில் சேர்ந்த கண்ணகியையும் கோவலனையும் காக்கக் கவுந்தி மேற்கொண்ட பொறுப்புள்ள முயற்சியை கடமை உணர்வை எவ்வளவு பாராட்டினும் தகும்.

கவுந்தியின் கடவுள் கொள்கை

கவுந்தி வணங்கும் கடவுள் அருகனே. அவர் சமண சமயத்தைச் சேர்ந்தவரே. இளங்கோ அடிகள் சமண சமயத் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தம் காப்பியத்தில் கவுந்தியடிகளைப் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறவும் இடம் உண்டு. அதற்கு உரிய அகச்சான்றுகள் சில வருமாறு:

கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் போவதை அறிந்த கவுந்தி, யானும், மேலான (சாரணப்) பெரியோர்கள் அருளும் அறவுரைகளைக் கேட்டு அருகதேவனை வணங்குவதற்காக மதுரைக்குச் செல்லவேண்டும் என நெடுநாளாக விரும்பியிருந்தேன். எனவே. இப்போது யானும் உம்முடன் மதுரைக்கு வருவேன் - என்றார். அருகனை வணங்க மதுரைக்குச் செல்பவர் சமண (ஜைன) சமயத்தைச் சார்ந்தவர் தானே?

“மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டாங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் கன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையே னாகலின்

போதுவல் யானும்”
(நாடுகாண் காதை 56-60)

என்பது பாடல் பகுதி. ‘நன்னாடு’ (நல்+நாடு), ‘தீதுதிர் மதுரை’ என்பன உள்பொருள் உடையன. இது பின்னர் விளக்கப்படும். கவுந்தி இங்கே மதுரையைப் புகழ்ந்துள்ளார்.

கவுந்தி ஒரு கையில் பிச்சைப் பாண்டமும் மற்றொரு கையில் மயில் தோகையும் தோளில் உறியும் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டாராம்.

“தோமறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்

காவுந்தி ஐயை கைப்பீலியும் கொண்டு” (98; 99)

கடிஞை = பிச்சைப் பாத்திரம். சுவல் = தோள். அறுவை = உறி. சமணத்துறவிகள் இவற்றைக் கொண்டு செல்லுதல் மரபு.

ஒரு சோலையில் சமணச் சாரணர் வந்து அறவுரை வழங்கியபோது, கவுந்தி உள்ளிட்ட மூவரும் சாரணரின் காலடியில் விழுந்து வணங்கினர். சாரணர், அருகனை வணங்கினால் பிறவி அறும் என்று அறிவுரை கூறினார். அப்போது, அருகக் கடவுளின் பெயர்கள் பலவற்றைப் பின்வருமாறு அவர் கூறினார்:

“அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி
இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் என்குணன், பாத்தில் பழம்பொருள்

விண்ணவன் வேத முதல்வன்” (10:176-189)
இவ்வளவு அருகதேவனைக் குறிக்கும் பெயர்களையும் சாரணர் கூறினார். அவற்றைக் கவுந்தி கேட்டார் எனில், அவர் சமயம் சமணமே என்பது விளங்கும். சாரணர் வாயிலாக அருகனை இவ்வாறு பெரிய அளவில் புகழ்ந்திருக்கும் இளங்கோவடிகளின் சமயம் என்ன என்பதையும் உய்த்துணரலாம்.

சாரணரின் அறவுரையைக் கேட்டதும் கவுந்தியடிகள் தலைமேல் கைகுவித்துக் கொண்டு பின்வருமாறு அருகனைப் போற்றினார்: அருகனின் திருமொழிகளைத் தவிர, வேறு மொழிகளை என் செவிகள் கேளா, அவன் திருப் பெயர்களைத் தவிர, வேறு பெயர்களை என் நாக்கு நவிலாது. அவன் திருவடிகளைத் தவிர, வேறு எவர் அடிகளையும் என் கண்கள் காணா. அவனைத் தவிர, வேறு எவரையும் கீழே விழுந்து வணங்கேன். அவனுக்குத் தவிர வேறு எவர்க்காகவும் என் இருகைகளும் வணங்கக் குவியா. அவன் அடிகளைத் தவிர, வேறு எவர் அடிகளையும் என் தலை சூடித்தாங்காது. அவன் இறைமொழிக்குத் தவிர, வேறு எம்மொழிக்கும் என் மனம் இடம் தராது - என்றெல்லாம் கவுந்தி புகழ்ந்து போற்றினார்.

இதனாலும் கவுந்தியின் சமயப் பற்று புலனாகும். சாரணர் கூறிய அறிவுரைகளை யெல்லாம் கவுந்தியடிகளும் பிறருக்கு அறிவுறுத்தி யருளினாராம்.

மூவரும் உறையூரினின்றும் புறப்பட்டுச் சென்று வழியில் உள்ள ஓர் இளமரக் காவினுள் தங்கினர். அப்போது மாங்காட்டு மறையவன் எனப்படுபவன் வந்து இவர்கட்குச் சில செய்திகள் தெரிவித்தான். செல்லவேண்டிய வழித்தடம் பற்றியும் அறிவித்தான். புண்ணிய சரவணம், பவ காரணி, இட்ட சித்தி ஆகிய பொய்கைகளில் குளித்தால் இன்னின்ன பயன் கிடைக்கும் என்றெல்லாம் அறிவுறுத்தினான். கேட்ட கவுந்தி மறுத்துரைக்கலானார். மறையவரே! புண்ணிய சரவணத்தில் புகாமலேயே, அருகன் அருளியுள்ள அறநூல்களைக் கொண்டு எல்லாம் தெரிந்து கொள்ளலாம் - பவகாரணியில் மூழ்கித்தான் முற்பிறப்புச் செய்திகளை அறியவேண்டும் என்பது கட்டாயம் இல்லை - இட்ட சித்தியில் குளித்தால் பெறக்கூடிய நன்மைகளை, அறநெறியின் ஒழுகி, மன்னுயிர்களைக் காக்கும் அருட்செயலினாலேயே பெறலாம் - என்றெல்லாம் கவுந்தி அவனை மறுத்துக் கூறி அனுப்பிவிட்டார்.

கவுந்தி கண்ணகியை மாதரியிடம் அடைக்கலம் தந்தபோது கூட, சாரணர் தொடர்பான வரலாறு கூறியுள்ளார்.

எளிய சிக்கல்

இங்கே ஓர் எளிய சிக்கல் உள்ளது. அது எளிதில் சரிசெய்யக் கூடியதே. அருகனுக்கு மட்டுமே தன் உடலும் உறுப்புகளும் மனமும் வாக்கும் போற்றுதற்கு உரியன என்ற கவுந்தியடிகள், அடைக்கலக் காதையில், கண்ணகியை மாதரியிடம் அடைக்கலம் தந்தபோது, கண்ணகியைக் குறிப்பிட்டு,

“இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” (142-144)
எனப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இது முன்னுக்குப்பின் முரணாயில்லையா? - என்ற சிக்கல் எழுகிறது. அருகன் கண் காணாத தெய்வம்; எனவே, கண்ணகியைக் கண்கண்ட தெய்வம் என்றார். மற்றும், சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும். மாதரியிடம் அடைக்கலம் தருகின்ற பெண்ணை உயர்த்திக் கூறினால்தானே மாதரியின் மனம் நிறைவு பெறும்? மிக்க நெடுந்தொலைவு - ஒரு நாளைக்கு ஒரு காவதம் வீதம் - பல நாள் கலந்து பழகி வழிவந்தபோது கண்ணகியின் உயரிய பண்பு கவுந்திக்குத் தெரிந்திருக்கு மாதலானும் பொற்புடைத் தெய்வம் என்றார். கவுந்தி கண்ணகியை இவ்வாறு பொற்புடைத் தெய்வம் என்று கூறியதாக அறிவிப்பவர் ஆசிரியர் இளங்கோ அடிகள். கண்ணகி பின்னால் தெய்வமாகக் கோயில் எடுத்து வழிபடப்பட்டவள். இதன்பின் ஆசிரியர் நூல் எழுதினார்.

ஆகவே, பின்பு தெய்வமாகப் போகிறாள் என்ற குறிப்பு கவுந்தியடிகளின் வாயிலாக இளங்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும், உலகியலில், வீர வைணவர் ஒருவரோ அல்லது - வீர சைவர் ஒருவரோ, மிகவும் உயர்ந்தவர் ஒருவரைக் குறிப்பிடும்போது, ஐயோ அவரா - அவர் ஒரு தெய்வமாயிற்றே! ஐயோ அந்த அம்மாவா - அவர் ஒரு தெய்வமாயிற்றே - என்று கூறுவதுண்டு என்பதும் ஈண்டு ஒப்பிட்டு எண்ணத்தக்கது.

இறுதியில், கோவலன் இறந்த செய்தி அறிந்ததும் கவுந்தி உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்தார். இப்போது கூடச் சிலர் இவ்வாறு செய்கின்றனர். கவுந்தி துறவியாதலின் இவ்வாறு செய்தார். இக்காலத்தார்க்கு இது தேவையில்லை.