சிலம்போ சிலம்பு/கண்ணகி பாண்டியன் மகளா?

30. கண்ணகி பாண்டியன் மகளா?

வாழ்த்துக் காதை

வஞ்சி நகர மகளிர் கண்ணகியைப் பாண்டியன் மகள் என்று கூறிப் பாடினர். பாடல்:

"வஞ்சியீர் வஞ்சி இடையீர் மறவேலான்
பஞ்சடி ஆயத்தீர் எல்லீரும் வம்மெல்லாம்;
கொங்கையால் கூடல் பதிசிதைத்துக் கோவேந்தைச்
செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்;
தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம்;
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று
எங்கோ முறைகா இயம்ப இந்நாடடைந்த
பைங்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்;

பாண்டியன் தன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்"
(29:11)

கொங்கையால் மதுரையை எரித்தவளும் பாண்டியன் மகளும், செங்கோல் தவறின் பாண்டியர் உயிர் வாழார் என்று எம்சேரமன்னன் புகழ இச்சேர நாடு அடைந்தவளும் ஆகிய கண்ணகியை நாம் எல்லேமும் பாடுவோம் வருக என்று வஞ்சி மகளிர் பாடினர் - என்பது கருத்து. மேலும் வஞ்சி மகளிர் பாடுவர்:

சேரன் கண்ணகிக்குக் கோயில் எடுத்துப் புத்துயிர் தந்து புதிய தெய்வப் பிறவியாக ஆக்கியதால், கண்ணகி சேரன் மகள் என்று வஞ்சி மகளிராகிய நாம் சொன்னோம். ஆனால், தெய்வமாகி விட்ட கண்ணகி ஒலி வடிவுடன் யான் பாண்டியன் மகள்’ என்றாள். நாம் சேரனை வாழ்த்துவோமாக! தெய்வ மகளாகிய கண்ணகி பாண்டியனை வாழ்த்துவாளாக! இதன் பாடல்:

"வானவன் எங்கோ மகள் என்றாம்; வைணயயார்
கோனவன்தான் பெற்ற கொடியென்றாள் - வானவனை
வாழ்த்துவோம் காமாக வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்" (29:12)

இது பாடல். புகாரிலே இருந்த மாநாய்கன் என்னும் வணிகனின் மகளாகிய கண்ணகியைப் பாண்டியன் மகள் என்று கூறியிருப்பதில் உள்ள சிக்கலை அவிழ்க்க வேண்டுமே! இது என்ன வம்பாய் (புதிதாய்) இருக்கிறது! இதற்குப் பழைய கதையின் துணை தேவைப்படுகிறது.

கண்ணகி காளியா?

காளிதான் கண்ணகியாக வந்தாள் என்பது ஒரு பழங்கதை. இது குறித்து இளமையிலேயே யான் எண்ணிப் பார்த்ததுண்டு. 1949 மே திங்கள் 11-ஆம் நாள். திருச்சிராப்பள்ளித் திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் பழக்கடைத் தெருவிலுள்ள சத்திரத்தில் சிலப்பதிகாரம் தொடர்பாக "எது கற்பு?" என்னும் தலைப்பில் இரண்டே முக்கால் மணிநேரம் யான் சொற்பொழிவாற்றினேன். அதே ஆண்டு அதே திங்கள் 14-ஆம் நாள், கடலூர் வண்டிப் ப்ாளையம் முருகன் கோயிலில் கண்ணகி காளியா? என்னும் தலைப்பில் இரண்டே கால் மணிநேரம் சொற்பொழிவாற்றினேன். சிலம்பு பற்றி ஒருரில் தெரிவித்த கருத்துகளே பெரும்பாலும் வேறு ஊரிலும் இடம் பெற்றன.

கண்ணகி காளியா? என்னும் தலைப்பில் பேசிய யான், கண்ணகி காளியல்லள் - எல்லாரையும் போன்ற மக்களினப் பெண்ணே - காளி வந்து கண்ணகியாகப் பிறக்கவில்லை . என்று பேசி முடித்தேன். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் ஒருவர் அவரது.தலைம்ை முடிப்புரையில், எனது முடிவை மறுத்து, காளியே கண்ணகியாக வந்தாள் என்று வலியுறுத்திக் கூறினார். யான் விடவில்லை. என் கருத்தையே யான் மீண்டும் எழுந்து வலியுறுத்தினேன். அவரும் விடவில்லை - பிறகு நானும் விடவில்லை. கூட்டம் ஒருவாறு முடிந்தது. ஆனால் திருச்சியில் மறுப்பு இல்லை.

யான் இளமையில் கோவலனைப் பற்றிப் பார்த்தறிந்த - கேட்டறிந்த காட்சிச் செய்தியாவது:- மாதவி கோவலன் கழுத்தில் மாலையை மாட்டி விட்டாள். அதை அவனால் கழற்ற முடியவில்லை - இது தொடர்பாகப் பாடப்பட்ட பாடலின் ஓரடி நினைவிற்கு வருகிறது:


“கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை -

காரிகையே இது யார் சூதோ?”

என்பது. இதனை, விளையாட்டாக, பெரியவர்கள் போல் சிறுவர்களும், .

“கலுத்தில் விலுந்த மாலா கலட்ட முடியவில்லா

காரிகையே இது யார் சூதா”

எனப் பாடுவதுண்டு. இதை யானும் பாடியிருக்கிறேன். கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்தபோது கூறியதாகச் சொல்லப்படுகிற-

“பழிக்குப் பழி கொடடா பழிகாரப் பாண்டியனே”

என்பதையும் சிறுவயதினராகிய நாங்கள் பாடிய துண்டு. நிமித்தம் என்னும் தலைப்பிலும் இது பற்றிய பாடல் அடிகள் சில இடம் பெற்றுள்ளன.

பழங்கதையின் சுருக்கம்

மேலே கூறியிருப்பது பழங்கதையின் தொடாபுளளதே. முழுச் சுருக்கத்தையும் மேலும் சுருக்கமாகக் காண்பாம்: பாண்டிய மன்னன் ஒருவன் பிள்ளையில்லாமையால், தன் மனைவி வயிற்றில் பிள்ளை உண்டாக. அருள் புரியும்படிக் காளியை வேண்டினான். வேண்டுதல் கடுமையா யிருந்தது. காளி தானே குழந்தையாய் மார்பில் மாலையுடனும் கால்களில் சிலம்புகளுடனும் பாண்டியனின் மனைவி வயிற்றிலிருந்து பிறந்தாள்.

பாண்டியன் கணியரை (சோதிடரை) அழைத்து வருங்காலப் பயன் பற்றி வினவினான். இக் குழந்தையால் உனக்கும் மதுரைக்கும் அழிவு உண்டு என்று கூறிக் குழந்தையை அப்புறப்படுத்துமாறு கணியர் அறிவித்தார். உடனே பாண்டியன் ஒரு பெட்டியில் குழந்தையை வைத்து, தொலைவில் உள்ள காவிரியாற்றில் கொண்டுபோய்ப் பெட்டியை விடச்செய்தான். காவிரிக் கரையிலுள்ள புகார் நகர வணிகன் ஒருவன் அப்பெட்டியைக் கண்டெடுத்து உள்ளே யிருந்த குழந்தையைக் கண்டு மகிழ்ந்து கண்ணகி என்ற பெயர் இட்டு வளர்த்து வந்தான். பிள்ளை இல்லாதவன் அவன்.

கண்ணகி பருவம் எய்தியதும் அவ்வூரில் இருந்த கோவலன் என்பானுக்குக் கண்ணகியை மணமுடித்துக் கொடுத்தான் வளர்த்த தந்தை. திருக்கடையூரில் இருந்த மாதவி என்னும் வேசி கோவலன் கழுத்தில் மாலையிட்டாள் அம்மாலையைக் கழற்ற முடியவில்லை. பின்பு கோவலன் மாதவியிடமே தங்கிவிட்டான். மாதவி புறக்கணித்த காலம் வந்ததும் மீண்டும் கோவலன் கண்ணகியை அடைந்தான். இருவரும் மதுரை சென்றனர். அங்கே கோவலன் கொலையுண்டான். காளியாகிய கண்ணகி பாண்டியனையும் மதுரையையும் அழித்தாள்.

இது மிகவும் சுருக்கமான பழங்கதை. இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது, கண்ணகி பாண்டியன் மகள் என்பதற்குச் சான்று உள்ளது என்பதுதான். காளிதான் கண்ணகியாக வந்தாள் என்பது தேவையில்லை. அது உண்மையும் அன்று.

கண்ணகி பாண்டியன் மகள் என்று வஞ்சி மகளிர் கூறியதாகவும் கண்ணகியே கூடக் கூறியதாகவும் பாடியுள்ள இளங்கோ எந்தச் சான்றைக் கொண்டு இவ்வாறு பாடியிருக்க முடியும்?பழங்கதையை அவர் அறிந்தவராதலின் இவ்வாறு பாடினாரெனில், புகாரில் இருந்த மாநாய்கனின் மகள் கண்ணகி என்று மங்கல வாழ்த்துப் பாடல் காதையில் கூறியிருப்பது ஏனோ? இந்தப் பழங்கதைப்படி நடந்தது உண்மையாயின், வளர்ப்பு மகள் என்று கூறாமல், வாளா மகள் எனக் கொள்ளும்படிக் கூறினாள் எனக் கொண்டு அமைதி அடைவதைவிட வேறு வழியில்லை. இளங்கோ சிலப்பதிகாரம் எழுதுவதற்கு முன்பே இந்தக் கதை நாட்டில் நடிக்கப்பட்டிருந்ததை அறிந்திருப்பாராதலால், கண்ணகி பாண்டியன் மகள் என்ற குறிப்பைத் தக்க இடத்தில் புகுத்தியுள்ளார் என்றும் கொள்ளலாம். தன் சிலம்பு காரணமாகப் பாண்டியன் இறந்து விட்டதால், அவன் மீது பரிவுற்றுத் தான் அவன் மகள் என்றும் கூறியிருக்கலாம் கண்ணகி.

இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நெடுங்கதைகள், பெரும்பாலும், நாட்டில் நடிக்கப்பட்ட பின்பே ஏட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த நாடகங்கள், அரசர் முதலிய மேட்டுக் குடியினர் முன்னே நடிக்கப்பெற்ற வேத்தியல் மேடைக் கூத்தாகவும் இருக்கலாம்; மற்றும், பொதுமக்கள் முன்னே நடிக்கப்பெற்ற பொதுவியல் தெருக் கூத்தாகவும் இருக்கலாம்.

இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் அடிப்படையில், கிரேக்கப் பெரும்புலவராகிய ஃஒமர் எழுதிய ‘இலியடு’ என்னும் காப்பியத்திற்குச் செல்வோம்: இந்தக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள பல பகுதிகள், யுகோசுலோவகியா நாட்டிலுள்ள சிற்றூர்களில் எளிய மக்களாலும் பாடப்பட்டவை என்பதாக ஒரு கருத்து சொல்லப் படுகின்றது. சிலப்பதிகார காப்பியத்தின் அமைப்பும் இது போன்றதாக இருக்கலாம் அல்லவா?

ஒற்றை முலைச்சி

நற்றிணையில், தலைவன் - தலைவி - பரத்தை ஆகியோர் தொடர்பான ஒரு பாடலில், உவமையாக, ஒரு முலை அறுத்த பெண்ணொருத்தி குறிப்பிடப்பட்டுள்ளாள்:

“ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி”
(216:8,9)

என்பது பாடல் பகுதி. ஒருவனால் ஏற்பட்ட கவலை வருத்தியதால், ஒரு முலையை அறுத்துச் செயலாற்றிய திருமாவுண்ணி என்பவள் கண்ணகியாக இருக்கலாம் என ஒரு கருத்து உய்த்துணரப் படுகிறது.

மற்றும், கொடுங்கோளூரில் கோயில் கொண்டுள்ள பகவதி அம்மனுக்கு ஒரு முலைச்சி' என்ற பெயர் இன்றும் வழங்கப் பெறுகிறது.

எனவே, நாட்டில் நடமாடும் கதைகளின் அடிப்படையில் காப்பியங்கள் எழுவது இயற்கையாகும்.

பேகன் - கண்ணகி மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகன் என்னும் வள்ளல் தன் மனைவியை நீக்கியதாகவும், அவள் அரண்மனை வாயிலில் நின்று - மார்பகம். நனையும். அளவிற்குக் கண்ணீர் சொரிந்த தாகவும் கபிலர் பாடிய பாடல் ஒன்று (143) புறநானூற்றில் உள்ளது.

கைவள் ளீகைக் கடுமான் பேக (6)
யார்கொல் அளியன் தானே..... (7)
உகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் (13)
முலையகம் நனைப்ப விம்மிக்...... (4)
குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிதே”

(15)
என்பது பாடல் பகுதி. அவள் யார்? அவளுக்கு அருள் செய்க - என்று பரிந்துரைப்பது போல் இப்பாடல் உள்ளது. அவள் பெயரும் கண்ணகி என்பதுதானாம். இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு கோவலன் - கண்ணகி வரலாறு எழுந்ததாகச் சிலர் கூறுவது பொருந்தாது. அதுவேறு - இதுவேறு.