சிலம்போ சிலம்பு/சில சிக்கல் தீர்வுகள்



31. சில சிக்கல் தீர்வுகள்

ஒரு வரலாற்றைக் காப்பியமாக எழுதும் போது, ஆண்டு, திங்கள், நாள், நேரம் (மணி) ஆகியவை வாரியாக நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக வரலாற்றில் காண்பதுபோல் காப்பியத்தில் - அதிலும் பழைய காப்பியத்தில் எதிர்பார்க்க வியலாது. காப்பியத்தில், ஞாயிறு திங்கள்களின் தோற்றம் மறைவு, வேனில் கார் - பனிப்பெரும் பருவங்கள், எங்கோ இரண்டொரு திங்கள் (மாதம்), வைகறை - காலை - நண்பகல் - மாலை - இரவு - நள்ளிரவு என்னும் சிறு பருவப் பொழுதுகள் ஆகியவற்றுள் சிலவே, நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு நாள் குறிப்பு (டைரி) போல் காப்பியத்தைக் கருதலாகாது. இந்த அடிப்படையுடன் சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு வருவோம். சில சிக்கல்களைத் தீர்ப்போம்:

1. கால முரண்

சிலம்பில் ‘கால முரண்’ இருப்பதாக அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர். இது ஒரு சிக்கல். இதன் விவரமாவது:- கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகிய மூவரும் மதுரையின் புறஞ்சேரியில் வந்து தங்கினர். ஒரு நாள் காலையில் கோவலன் மதுரையைச் சுற்றிப்பார்த்து விட்டுப் புறஞ்சேரி வந்து சேர்ந்தான். இது கிட்டத்தட்ட நண்பகல் நேரத்திற்குச் சிறிது முன்னதாக இருக்கலாம். அப்போது அவ்வழியாக வந்த ஆய்ச்சியாம் மாதரியிடம் கவுந்தி கண்ணகியைக் கோவலனுடன் அடைக்கலமாகத் தந்தார்.

மாதரி இருவரையும் அழைத்துக்கொண்டு தன் இருப்பிடம் சேர்ந்தாள். கண்ணகியை நீராட்டி மங்கலப் படுத்தினாள். கோவலன் பொழுதோடு உண்ணும் சாவக நோன்பிச் சமயத்தைச் (சமணத்தைச்) சேர்ந்தவனாதலின் உணவு ஆக்குவதற்கு வேண்டியவற்றைக் கண்ணகியிடம் விரைந்து கொடுக்குமாறு தம்மவர்க்குப் பணித்தாள். அவ்வாறு கொடுக்கப்பட்டதும் கண்ணகி விரைந்து உணவாக்கிக் கோவலனை உண்பித்தாள் - வெற்றிலை பாக்கும் தந்தாள்.

உணவு உட்கொண்ட கோவலன் கண்ணகியை நோக்கித் தன் பழைய தவறுகளைக் கூறி வருந்தி, அவளைத் தழுவி, கண்ணீரை மறைத்துக் கொண்டு ஒரு சிலம்பைப் பெற்று விற்றுவர மதுரைக் கடைத்தெருவிற்குச் சென்றான். அங்கே பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கொலையுண்டான். இது நடந்தது மாலை நேரம் அல்லது முன்னிரவு 7 மணியாய் இருக்கலாம் என்பது சிலரது கருத்து. இந்தச் செய்தி கொலைக்களக் காதையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இளங்கோ நேரம் எதையும் இந்தக் காதையில் குறிப்பிடவில்லை. அவன் சாவக நோன்பியாதலின் பொழுதோடு உண்டு உடனே கடைத்தெருவுக்குச் சென்றான், என்பதைக் கொண்டு, இது நடந்த நேரம் மாலையாய் இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர் போலும்!

பின்னர் ஊர்சூழ்வரி என்னும் காதையில் இளங்கோ தெளிவாக நேரம் குறிப்பிட்டு ஒரு நிகழ்ச்சியை அறிவித்துள்ளார். அதாவது, இருளை ஊட்டி ஞாயிறு மறைய ஒளி மயக்க நேரமாகிய மாலை வந்தது. அம்மாலை நேரத்தில் சிலர் காட்டக் கோவலனின் உயிரற்ற உடலைக் கண்ணகி கண்டாள். கோவலனது தலை முடியில் இருந்த மாலையைப் பெற்றுத் தன் கூந்தலில் காலையில் சூடிக்கொண்ட கண்ணகி, அன்று மாலையில், கோவலனது உடலைக் குருதிக் கறை படியத் தழுவிப் புலம்பினாள் - என இளங்கோ அடிகள் பாடியுள்ளார். பாடல் பகுதி வருமாறு:

“மல்லல் மாஞாலம் இருளூட்டி மாமலைமேல்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென் றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்.
வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால் காலைவாய்ப்,
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்”

(19:31 – 38)

என்பது பாடல் பகுதி. கொலைக் களக் காதையில், கோவலன் மாலையில் கொலையுண்டதாகக் கருத்து கொள்ளும்படிப் பாடியுள்ள இளங்கோவடிகள், ஊர் சூர் வரிக் காதையில், காலையில் கோவலனிடம் மலர் பெற்றுத் தழுவி வந்த கண்ணகி, மாலையில் அவனது பிணத்தைக் கண்டு அரற்றினாள் என்று கூறியிருப்பது கால முரண் - வழுவாகும்; இந்த வகையில், சிலப்பதிகாரம் பிழையுடையது எனச் சீராமுலு ரெட்டியாரும் மு. கு. சகந்நாத ராசாவும் கூறியுள்ளனர்.

சிலம்பில் பிழையா?

இந்தச் செய்தியை, திருவனந்தபுரம் - கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியராகிய திரு ஆர். வீரபத்திரன் என்னும் அறிஞர், தமது ‘பிழையிலாச் சிலம்பு’ என்ற நூலில் தெரிவித்துள்ளார். சகந்நாத ராசா எழுதியுள்ள ‘சிலம்பில் சிறு பிழை’ என்னும் நூலுக்கு மறுப்பு நூலாகும் இது.

மற்றும், வீரபத்திரன் தமது நூலில், டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்களும், தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களும், ம. பொ. சிவஞானம் அவர்களும் காலமுரண் என்பதை ஒத்துக்கொண்டதாக எழுதியுள்ளார்; மேலும், கோவலன் கொலையும் குரவைக் கூத்தும் ஒரேநாளில் நடைபெற்றதாக மொ. துரை அரங்கனார் அவர்கள் கூறியிருப்பது தவறு என்றும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். காலையில் கணவனைத் தழுவி வந்தவள் அன்று மாலையே அவனது பிணத்தைக் கண்டதாக ஊர்சூழ்வரிக் காதையில் அடிகள் எழுதியிருப்பதே பொருத்தமானது என்பதே அடியேனது (சு.ச.) கருத்துமாகும். கால முரண் உள்ளதாக சீராமுலு ரெட்டியாரும் சகந்நாத ராசாவும் கூறியிருப்பதை வ.சுப.மா., தெ. பொ. மீ., ம. பொ. சி. ஆகியோரும் ஏற்றுக் கொண்டு பின்னர் அதற்கு அமைதி கூற முயன்றிருப்பது வியப்பாயுள்ளது.

தவறான நாள் குறிப்பு

வீரபத்திரன் இது பற்றி ஒரு நாள் குறிப்பைக் கற்பனையாகப் பின்வருமாறு தந்துள்ளார்:

கோவலன் மதுரையைச் சுற்றிப் பார்த்துப் புறஞ்சேரிக்கு மீண்டது முதல் நாள் நண்பகல் 15 நாழிகை - (ஒரு 12 மணி). மாதரி அடைக்கலமாய் அழைத்துச் சென்றது பகல் 22½ நாழிகை (பிற்பகல் 3 மணி). கோவலன் உணவு உண்டு சிலம்பு விற்கப் புறப்பட்டது 27½ நாழிகை (பிற்பகல் 5 மணி). கோவலன் கொலையுண்டது சுமார் 32½ நாழிகை. (முன்னிரவு 7 மணி சமயம்). குரவைக் கூத்து நிகழ்ந்தது மறுநாள் (இரண்டாம் நாள்) காலை 7½ நாழிகை முதல் 12½ நாழிகை வரை (மணி 9 முதல் 11 வரை). மாதரி வைகையில் நீராடி வழியில் கேள்விப்பட்ட கோவலன் கொலையைக் கண்ணகிக்கு உரைத்தது அந்த இரண்டாம் நாள் நண்பகல் 15 நாழிகை (12 மணி) வேளை. கண்ணகி கோவலனது உடலைக் கண்டது அந்த இரண்டாம் நாள் 30 நாழிகை (பிற்பகல் 6 மணி) வேளை. (அதாவது மாலை).

செல்சுடர் அமையம்

மாதரி அடைக்கலமாய் அழைத்துச் சென்றது பகல் 22½ நாழிகை (பிற்பகல் 3 மணி) - என வீரபத்திரன் எழுதியுள்ளார். ஆனால், ஞாயிறு மறைந்து கொண்டிருக்கும் மாலையில் அழைத்துச் சென்றதாக இளங்கோ கூறியுள்ளார். பாடல் பகுதி வருமாறு: (அடைக்கலக் காதை)

“முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமையத்துக்
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப... (215:202-204)
வாயில் கழிந்துதன் மனை புக்கனளால்” (218)

என்பது பாடல் பகுதி. முதுக்குறை நங்கை = கண்ணகி. சென்ற ஞாயிறு, செல்சுடர் அமையம், கன்றுதேர்ஆ - என்பன ஞாயிறு மறையும் மாலையைக் குறிக்கின்றன அல்லவா? இது பிற்பகல் 3 மணி ஆகாதன்றோ? வீரபத்திரன் ஒரு குத்துமதிப்பாக நாள்குறிப்பு எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

ஆக, கோவலன் கொலையுண்டது முதல் நாள் மாலை என்றும், அவனது உடலைக் கண்ணகி கண்டது மறுநாள் மாலை என்றும் வீரபத்திரன் கூறியுள்ளார். இதற்கு அவர் கூறும் காரணங்களும் அவற்றிற்கு என் மறுப்புகளும் தடை விடைகளாக வருமாறு:

தடை விடைகள்

காரணம்: கோவலன் சிலம்பு விற்கப் புறப்பட்டபோது காளை மாடு தீநிமித்தமாய்க் குறுக்கிட்டது. மாடுகள் மாலையில்தான் மந்தையிலிருந்து வீடு திரும்பும். எனவே, கோவலன் முதல் நாள் மாலையே புறப்பட்டான்.

மறுப்பு: காலையில் மாடுகள் மந்தைக்குப் புறப்பட்டிருக்கலாமே. மற்றும், மாதரி வீடு ‘பல்லான் கோவலர் இல்லம்’ என - பல மாடுகள் இருக்கும் வீடு எனக் கூறப்பட்டிருப்பதால், ஒரு மாடாவது வீட்டுக்கும் தெருவுக்குமாகப் போய்வந்து கொண்டிருக்கலாமல்லவா? புதுச்சேரியில் நான் இருக்கும் வீட்டின் அருகில் காலை முதல் மாலை வரை சிலருடைய மாடுகளின் காட்சியைக் காணலாம்.

காரணம்: பொற்கொல்லன் தன்னைச் சேர்ந்தவர் பலர் சூழ வந்தான் எனக் கூறப்பட்டுள்ளது. மாலை நேரத்திலே தான் அரண்மனை வேலை முடித்துப் பலரும் வீட்டுக்குத் திரும்பி யிருக்கலாம்.

மறுப்பு: ஏன், இவர்கள் காலையில் வேலைக்குப் புறப்பட்டுப் போவதாய் இருந்திருக்கக் கூடாதா?

காரணம்: மாலையில்தான் வேலை முடித்து ஒரே நேரத்தில் கும்பலாய் வர முடியும். காலையில் ஒவ்வொருவராகப் போயிருப்பார்கள்.

மறுப்பு: மாலையிலும் எல்லாரும் கும்பலாக வர வேண்டுமா? வேலை முடிந்ததும், அவரவரும் தனித் தனியாகத் தத்தம் வீடு நோக்கிச் செல்ல மாட்டார்களா? எல்லாரும் ஒரே இடத்திலா குடியிருந்தார்கள்?

காரணம்: இருட்டிய பிறகு யாருக்கும் தெரியாமல் கொலை செய்வதே எளிது.

மறுப்பு: அரச ஒறுப்பு (இராசத் தண்டனை) இரவிலே தான் நடக்குமா - நடக்க வேண்டுமா? பகலில் நடந்திருக்கக் கூடாதா?

காரணம்: பணம் ஈட்டக் கால இடைவெளி கூடாது; அதனால் முதல்நாள் மாலை உணவு கொண்டதுமே புறப்பட்டு விட்டான்.

மறுப்பு: ஓர் இரவு பொறுக்க முடியாதா? மறுநாள் காலையில் விற்கக் கூடாதா? புது ஊரில் இரவில் நகை விற்பதனினும் பகலில் விற்பதே காப்புடையதாகும்.

காரணம்: முதல் நாள் கொலை நடந்ததால்தான் மறுநாள் ஆயர்பாடியில் தீய நிமித்தங்கள் தோன்றின.

மறுப்பு: தீய நிமித்தங்கள் தீமை நிகழ்வதற்கு முன்பே காணப்பட்டதாகவே பெரும்பாலான வரலாறுகள் கூறுகின்றன.

எனவே, முதல்நாள் மாலையே கோவலன் சென்று கொலையுண்டான் என்று வீரபத்திரன் கூறுவது பொருந்தாது.

அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியரும் மறுநாளே கொலை நடந்ததாகக் கூறியுள்ளனர். கொலைக்களக் காதையை இரண்டு நாள் செய்தியாக அடியார்க்கு நல்லார் பிரித்துக் கொள்கிறார். “நெடியாது அளிமின் நீரெனக் கூற” என்னும் 21-ஆம் அடிவரையும் முதல்நாள் பற்றியதாகவும், 22-ஆம் அடியிலிருந்து உள்ளவை இரண்டாம் நாள் பற்றியதாகவும் பிரித்துக் கொள்கிறார். 21 ஆம் அடியின் உரை முடிந்ததும் “இனி மற்றை நாளைச் செய்தி கூறுகின்றார்” என எழுதியுள்ளார்.

உணவு ஆக்குவதற்கு வேண்டிய பண்டங்களைக் கொடுங்கள் என்று ஆய்ச்சிப் பெண்களிடம் மாதரி கூறி விட்டு, நெய்யளந்து தர அரண்மனைக்குச் சென்றுவிட்டாள். ஆனால், ஆயப் பெண்கள் உடனடியாகத் தரவில்லை. மறுநாளே தந்தனர் என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.

காலைவாய் - மாலைவாய்

உணவுப் பொருள்கள் இரண்டாம் நாள்தான் தரப்பட்டன என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளாத வீரபத்திரன், அப்படியெனில் முதல் நாள் இரவு கோவலனும் கண்ணகியும் பட்டினி கிடந்தார்களா? இம் மாதிரி மாதரி விட்டிருப்பாளா? என வினவுகிறார். இவர் கூறும். இந்தக்கருத்து சரியே. உணவுப் பொருள்கள் முதல் நாள் பிற்பகல் கொடுக்கப் பட்டன - மாலையே - உணவு கொண்டனர் என்பதுதான் சரி. முதல் நாள் மாலை கொலை-மறுநாள் மாலை கண்ணகி கணவன் உடலைக் கண்டாள் - என்று கூறும் வீரபத்திரன்,

“வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார் குழல்மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால் காலைவாய்ப்,
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்”

(19: 31-38)

என்னும் பகுதியில் உள்ள முதல் இரண்டு அடிகட்குத் தம் கொள்கைக்கு ஏற்பப் பொருள் கூறுகிறார். அதாவது:-காலை என்பதற்கு, காலை நேரம் (Morning), காலம், பகல் என்னும் பொருள்கள் உண்டு. இங்கே, காலை என்பது பகல் என்னும் பொருளில் உள்ளது; எனவே, முதல் நாள் பகல் கோவலன் கொலையுண்டான் என்று கூறுகிறார். காலை என்பதற்குப் பகல் என்ற பொருள் உள்ளதாயின், அது முதல் நாள் பகலை மட்டுமே குறிக்குமோ? இரண்டாம் நாள் பகலைக் குறிக்காதா? எனவே, அவரது கூற்று பொருந்தாது.

பகலில் புணர்ச்சியா?

மேலும் வீரபத்திரன் ஒரு கேலிக் கூத்தான கருத்து கூறியுள்ளார். அதாவது முதல் நாள் மாலை உணவு கொண்டு 5 மணிக்குச் சிலம்பு விற்கப் புறப்பட்ட கோவலன், தான் புறப்படுவதற்கு முன் கண்ணகியோடு உடலுறவுகொண்டான் என்று கூறி நம்மை லியப்பில் ஆழ்த்துகிறார். கோவலனும் கண்ணகியும் புணர்ந்த மயக்கத்தில் கோவலனது தலையில் இருந்த மாலை கண்ணகியின் கூந்தலில் நழுவி விழுந்து விட்டது போல் கூறுகிறார். அங்ஙன மெனில், இவர்களின் புணர்ச்சி பிற்பகல் 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடந்திருக்க வேண்டும். இது என்ன வேடிக்கை பகலிலே புணர வேண்டுமா? கோவலன் கடைத் தெருவிற்குச் சென்று திரும்பிய பின் இரவில் புணரலாம் என்று எண்ணியிருக்க மாட்டார்களா? கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய் விடும்? “காய்ந்த மாடு கம்பில் பாய்ந்தாற்போல்” என்ற பழமொழி ஒன்றுண்டு. கோவலன் காய்ந்த மாடா? அவன் காமக் கடலில் முழுகி எழுந்து அலுத்துப் போனவனாயிற்றே. மற்றும், கோவலனும் கண்ணகியும் இந்தக் காலத்துத் தங்கும் விடுதியிலா (ஒரு லாட்ஜிலா) தங்கி இருந்தனர்? இந்தக் காலத்தில் ஒருவன் அயல் பெண்ணைப் புணர்ச்சிக்காகவே பகலில் அழைத்துக் கொண்டு வந்து ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜில்) அறையெடுத்துத் தங்கி விவகாரத்தை முடித்துக் கொள்வதுண்டு. கோவலன்-கண்ணகி நிலை இன்னதன்றே? மற்றும், வந்த வழியில் ஒருத்தி வயந்தமாலை வடிவத்தில் வந்து தன்னை மயக்கிய ஒரு வாய்ப்பைக் (ஒரு கிராக்கியைக்) கோவலன் உதறித் தள்ளியவனாயிற்றே! அவன் பகலிலா புணர வேண்டும்? துயருற்றுக் கிடக்கும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் பகலிலேயே புணர்ச்சி ஒரு கேடா? இருவரது தாடி பற்றி எரியும்போது மற்றொருவன் பிடிக்கு நெருப்பு கேட்டானாம். அதுபோல், வருந்திய நிலையில் உள்ள அவர்கட்குப் பகலிலேயே படுக்கை விரித்துப் போடலாமா? இரவில் போடலாமே!

உணவு - கொலை நேரங்கள்

கோவலன் கொலையுண்டது முதல் நாள் மாலை நேரத்தை அடுத்த முன்னிரவு 7 மணி என வீரபத்திரன் கூறுகிறார். இளங்கோ பாடியுள்ளபடி நோக்கின், முதல் நாள் மாலை நேரத்தை அடுத்த 7 மணி அவன் உணவுண்ட நேரமாகும். மாதரி கண்ணகியையும் கோவலனையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற நேரம், “சென்ற ஞாயிற்றுச் செல் சுடர் அமையம்” (15 - 203) என்று அடிகள் பாடியுள்ளார். இந்த நேரத்தை மாலை 6 மணி என்றே வைத்துக் கொள்வோம். விரைந்து உணவுப் பண்டங்கள் தரப்பட, கண்ணகி உணவு ஆக்கிக் கோவலனை உண்ணச் செய்தது முன்னிரவு 7 மணியாகத் தானே இருக்க முடியும். உணவுண்ட நேரத்தைக் கொலையுண்ட நேரம் எனல் எவ்வாறு பொருந்தும்?

செங்கண்

மற்றும் - இந்திர விழவூ ரெடுத்த காதையில் “கண்ணகி கருங்கணும்” (237) என்று பாடிய இளங்கோ, துன்ப மாலைக் காதையில் ‘செங்கண் சிவப்ப அழுதான்’ (33) என்று கூறியுள்ளார்; உடலுறவு கொண்டதால் சிவந்த கண் என்ற பொருளில் செங்கண் என்றார்; கோவலனை இழந்ததால் அந்தச் செங்கண் மேலும் சிவந்தது - என்று வீரபத்திரன் கூறுகிறார். அவர் கூறியுள்ளபடி, முதல் நாள் பிற்பகல் 4-30 மணியளவில் புணர்ந்ததால் சிவந்த கிண், மறுநாள் மாலை வரை சிவப்பாகவே இருந்திருக்குமோ? ஒரு முன்ற புணரின் 24 மணி நேரம் கண் சிவப்பாயிருப்பது உலகியலில் யாருக்கோ - தெரியவில்லை. காடு காண் காதையில் பெண்ணின் கண்ணை, ‘செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக் கண்’ (184) என்று இளங்கோ குறிப்பிட்டுள்ளார். எனவே, கண்ணகியின் செங்கண்’ என்பதற்குச் ‘சிவந்த அரி பரந்த கண்’ என்று பொருள் கொள்ளலாகாதர்?

எனவே, வீரபத்திரன் கூற்று சிறிதும் பொருந்தாது. அங்ஙனமெனில், காலை - மாலை என்பதற்கு உரிய பொருத்தமான தீர்வு யாது? தீர்வு உள்ளது; வருமாறு:

உரிய தீர்வு.

புணர்ச்சி மயக்கத்தால் கோவலன் பூமாலை கண்ணகியின் கூந்தலில் குறி பார்த்து விழுந்து விடவில்லை. கோவலனிடமிருந்து வாங்கிக் கண்ணகி சூடிக் கொண்டதாகவே, அடியார்க்கு நல்லாரும் வேங்கடசாமி நாட்டாரும் உரையெழுதியுள்ளனர். கோவலன் மாலை தந்தானோ - இல்லையோ! அந்தக் காலை நேரத்தில் மாலை இருந்ததோ இல்லையோ! மங்கலமான சூழ்நிலையில் காலையில் புறப்பட்ட கோவலனைக் கண்ணகி மாலையில் பிணமாகக் கண்டாள் என்று கூறிப் படிப்பவர்க்கு அழுகைச் (அவலச்) சுவையுணர்வை ஊட்டுவதற்காக இளங்கோ அடிகள் கையாண்ட ஒருவகைக் காப்பிய உத்தியாக இது இருக்கக் கூடாதா?

மற்றும், காலையில் கணவனைத் தழுவிய கண்ணகி மாலையில் அவனது பிணத்தைக் கண்டாள் என்றால், காலைக்கும் மாலைக்கும் இடையில் - நண்பகல் அளவில் கொலை நடந்திருக்கலாமே. உண்மை இவ்வாறிருக்க, நேற்று மாலை இறந்தவனை இன்று மாலை தழுவினாள் என்பது எவ்வாறு பொருந்தும்? இருபத்து நான்கு மணி நேரம் பிணம் அங்கேயே கிடந்ததா? இது அரசியல் ஒறுப்பு (தண்டனை) ஆயிற்றே. அவ்வளவு நேரம் பிணம் கிடக்க அரசு விட்டிருக்காதே. காலையில் மங்கலமான சூழ்நிலையை அடிகள் படைத்திருப்பது ஒருவகைக் காப்பிய முன்னோட்டச் சுவையாகும்.

மற்றும் நேற்று மாலை இறந்தான் - இன்று (மறுநாள்) மாலை கண்டாள் என்றால், ‘காலைவாய் - மாலைவாய்’ என்னும் சொற்களைப் போடாமல், நேற்று - இன்று என்னும் சொற்களை இளங்கோ அடிகள் பெய்திருக்க வேண்டுமே! வள்ளுவனார்,

“நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு”
(336)

என்னும் குறளில் நெருதல் (நேற்று) - இன்று என்னும் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதை இங்கே எண்ணிப் பார்க்கவேண்டும்.

குறைப் பட்டியல்

முதல் நாள் மாலை உணவு கொண்டபின் கண்ணகியிடம் தன் பழைய குறைபாடுகட்குப் பட்டியல் போட்டுக் காட்டும் கோவலன்,

“இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன்” (16:67)

என்பதைப் பட்டியலில் புகுத்தியுள்ளான். அதாவது, புகாரில் இருந்தபோது, தன் பெற்றோர்கள் தன் குறைபாடுகளைக் கண்டித்து எவ்வளவோ அறிவுரை கூறியும் தான் பொருட்படுத்தித் திருந்தவில்லை என்பது கருத்து. ஆனால், இருமுது குரவரும் கோவலனைக் கண்டித்துத் திருத்தியதாக இளங்கோவடிகள் முன்னர்க் கூறவில்லை. இங்கே கூறியிருப்பதைக் கொண்டு, முன்பு பெற்றோர்கள் கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்கள் என்பதை நாமே புரிந்து கொள்ளலாம். அதேபோல், காலைவாய்ப் போனவன் மாலை வாய்ப் பிணமானான் என்பதைக் கொண்டு, கொலை முதல் நாள் மாலை நடக்கவில்லை - மறுநாள் மதியம் அளவில் நடந்திருக்கலாம் என நாமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

காப்பியச் சுவை

முதல் நாள் மாலை உணவுண்ட பின், கண்ணகியும் கோவலனும் துயரத்தைப் பரிமாறிக் கொண்டதையடுத்துக் கோவலன் சிலம்பு விற்கச் சென்று கொலை யுண்டான் எனத் தொடர்ச்சியாக இளங்கோவின் எழுதுகோல் எழுதியது ஏன்? “சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன்” என்று சொல்லிப் போனவன் பின்னர் வரவேயில்லையே - என்ற அழுகைச் (அவலச்) சுவையுணர்வைப் படிப்பவர்க்கு ஊட்டுவதற்காக இளங்கோ தொடர்ந்து எழுதிக் காட்டினார். இவ்வாறு எழுதாமல் “மாலையில் உணவு கொண்டு, இரவில் படுத்து உறங்கினர். மறு நாள் காலையில் கோவலன் சிலம்பு விற்கப் புறப்பட்டான் என்று எழுதின் காப்பியச் சுவை கெட்டுவிடும்; அவலச் சுவையின் விருவிருப்பு மழுங்கி விடும். எனவேதான் அடிகள் இவ்வாறு எழுதினார்.

நாடகக் கூறு

மற்றும், இவ்வாறு எழுதுவது ஒருவகை நாடகக் கூறு என்பதும் நினைவிருக்க வேண்டும். அதாவது:- திரை ஓவியத்தில் (சினிமாப் படத்தில்) இதைக் காணலாம். காட்சியின் நடுவில், முன்பு தொடக்கத்தில் நிகழ்ந்ததைக் கொண்டு வந்து காண்பிப்பர். இடையில் புகுத்தப்படும் இந்தத் தொடக்க நிகழ்ச்சி, நினைவுக் காட்சியாகவோ அல்லது முன்பு நடந்ததைப் பிறர்க்கு அறிவிக்கும் காட்சியாகவோ காண்பிக்கப்படும். மற்றும், பின்னால் நடக்கப் போவதைக் கனவுக் காட்சியாக முன்னாலேயே காண்பிப்பதும் உண்டு. இந்த மரபின் அடிப்படையில், நாடகக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு வருவோம்:- காலைக்கும் மாலைக்கும் இடையில் கொலை நடந்ததாகப் பத்தொன்பதாவது காதையாகிய ஊர்சூழ் வரியில் குறிப்பிட்டதை, முன்னாலேயே - பதினாறாவது காதையாகிய கொலைக்களக் காதையிலேயே குறிப்பிட்டு விட்டார். கனவுக் காட்சியில் பின்னால் நடக்க இருப்பதை முன்னாலேயே காண்பிப்பது போல, மறுநாள் நடக்கப்போகும் நிகழ்ச்சியை, முதல் நாள் மாலை நிகழ்ச்சியோடு தொடர்ந்து சொல்லி விட்டார். எனவே, இந்த அமைப்பை, ஆண்டு - திங்கள் - நாள் (கிழமை) - மணி நேரம் குறிப்பிட்டு எழுதும் வரலாறு போல் (நாட் குறிப்புப்போல்) கருதாமல், நாடகக் காப்பியம் என்ற நினைவோடு அமையவேண்டும்.

தள்ளும் கருத்து

சிலர் இந்த நிகழ்ச்சியை இன்னும் வேறு விதமாகக் கூறுகின்றனர். அதாவது:- பாண்டியன் மனைவியின் ஊடல் தீர்க்கச் சென்றது மாலை நேரம் - அல்லது முன்னிரவு. அப்போது பொற்கொல்லன் கோள்மூட்டிக் கோவலனைக் கொலை செய்வித்தான். அப்போது பாண்டியன் தன் மனைவி அரசியுடன் படுக்கைக் கட்டிலில் அமர்ந்திருந்தான். அங்கே வந்து கண்ணகி முறையிட்டாள். அப்போதே - அங்கேயே அரசனும் அரசியும் மயங்கி ஒருவர் பின் ஒருவராக உயிர் நீத்தனர் - என்பது சிலரது கருத்து. இவர்கள் தம் கொள்கைக்கு அரணாக, (அரசன்)

“அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்”

(20:22)

என்னும் அடியிலுள்ள ‘அமளி’ என்னும் சொல்லைக் காட்டுகின்றனர். அமளி என்றால் படுக்கைக் கட்டிலாம். அதனால்தான் இவ்வாறு கூறுகிறார்களாம். ஆனால், இவர்கள் “அரிமான் ஏந்திய” என்ற தொடரையும் கவனிக்க வேண்டும். சிங்கம் சுமந்த கட்டில் என்றால், அது அரியணை (சிம்மாசனம்) தானே! எனவே, இது கொள்ளும் கருத்தன்று - தள்ளும் கருத்தாகும்.

இதுகாறும் கூறியவற்றால் அறியவேண்டுவன:- சிலம்பில் காலமுரண் என்னும் வழு இருப்பதாகச் சீராமுலு ரெட்டியார் கூறியிருப்பது தவறு - இதை ஒட்டி, சகந்நாத ராசா “சிலம்பில் சிறு பிழை” என்றநூல் எழுதியிருப்பது தேவையற்றது - காலமுரண்வழு இல்லை என்று வாதிடும் வீரபத்திரன், அதை நிறுவக் கையாண்டுள்ள முறை - செய்துள்ள ஆய்வு - பொருத்தமானதன்று - என்பனவாம்.

இருப்பினும், ‘பிழையிலாச் சிலம்பு’ என்னும் நூலை எழுதியதின் வாயிலாகச் சிலப்பதிகாரத்தின் சிறப்பையும் இளங்கோவடிகளின் புகழையும் நிலைநிறுத்த அறிஞர் வீரபத்திரன் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. அவருக்கு நன்றி-வணக்கம்.

2. கோவலனது மதுரைச் செலவு

அடுத்த சிக்கல் கோவலன் மதுரைக்குச் சென்றது ஏன்? என்பது பற்றியது. மாதவி எப்படியும் தன்னை மயக்கி மீண்டும் வரவழைத்துக் கொள்வாள் - நாம் இங்கிருந்தால் மீண்டும் மாதவியிடம் போய்விட்டாலும் போய்விடக் கூடும் - எனவே இங்கிருந்து உடனடியாக மதுரைக்குப் போய்விடவேண்டும் - என்று கருதிக் கோவலன் மதுரைக்குச் சென்றதாகச் சிலர் கூறுகின்றனர். இது பொருந்தாது.

இந்தக் காலத்தில் திரைப்பட நடிகையர் சிலர் திருமணம் ஆனதும் நடிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். சிலர் திருமணமாகியும் கணவருடன் இருந்து கொண்டே நடிப்பைத் தொடர்கின்றனர். சிலர் திருமணம் ஆகிச் சில்லாண்டுகள் ஆனதும் கணவனை மாற்றுகின்றனர். இந்த மூவகைத் தரத்தினருள் மாதவி எத்தரத்தைச் சேர்ந்தவள் போன்றவள்? .

மாதவி, இம்மூவருள் இரண்டாம் தரத்தைச் சேர்ந்தவள் போல ஒரு நேரம் நடந்து கொண்டாள். கோவலனோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்த போதே, புகாரில் நடை பெற்ற இந்திரவிழாவில் ஆடல் பாடல் நிகழ்த்தி அனைவரையும் அகமகிழச் செய்துள்ளாள். இது கோவலனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அவனது மனப்புண்ணை எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல், வேறொருவனை உள்ளத்தில் கொண்டு பாடும் குறிப்புப் பொருந்திய மாதவியின் கானல் வரிப்பாட்டு மிகுதியாக்கியது. இதனால் கோவலன் மிகவும் நொந்து மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சென்றான் என்பதே உண்மை.

கரை நீரும் கானலும்

இங்கே யான் இளமையில் பார்த்த ஒரு திரைப்படப் பாடல் பகுதி நினைவுக்கு வருகிறது. பி. யு. சின்னப்பா என்பவர் கோவலனாக நடித்த திரைப்படப் பாடல்தான் அது. அந்தப் படத்தில், மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சென்று கொண்டிருக்கும் கோவலன், ஒரு பாடல் பாடிக் கொண்டே செல்கிறான். அதில் ஒர் அடி நினைவில் உள்ளது. அது,

“கரை அடுத்த நீர் இருக்கக்
கானலை நாடிடும் மான்போல்”

என்ற அடியாகும். கரை அடுத்த நீர் கண்ணகி. கானல் மாதவி. இதே நிலைதான், சிலப்பதிகாரக் கோவலனது நிலையுமாகும். கோவலன் தன்னைவிட்டுச் சென்றதும், மாதவி வயந்தமாலை வாயிலாகக் கோவலனுக்கு வருமாறு எழுதி மடல் அனுப்பினாள். கோவலன் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு மதுரைக்குச் சென்ற வழியில், தெய்வப் பெண் வயந்தமாலை வடிவில் வந்து மயக்கியும் கோவலன் ஏமாறவில்லை. மாதவி கெளசிகன் வாயிலாக மடல் எழுதி அனுப்பியும் கோவலன் ஏமாந்து திரும்பவில்லை. எனவே, மாதவி மயக்கி விடுவாள் - நாம் ஏமாந்து விடுவோம் - என்ற ஐயத்துடன் - அச்சத்துடன் மதுரைக்குப் புறப்படவில்லை. உறுதியான உள்ளத்துடனேயே கண்ணகியிடம் சென்றான். அவள் “சிலம்பு உள கொள்மின்” என்று கூறினாள். மற்ற அணிகலன்களை எல்லாம் முன்னமேயே கொடுத்துவிட்டாள் என்பது இதனால் புரிகிறது. ஆனால் கோவலன் சிலம்பைப் பெற்றுக் கொண்டு முன்போல் மாதவியிடம் செல்லவில்லை. பொருள் தொலைந்ததால் பெற்றோர் முகத்தில், விழிக்கக் கூசினான் - ஊராரின் ஏளனத்துக்கு ஆளாகவேண்டும் எனவும் எண்ணினான். எனவே, மதுரை சென்றுபொருளீட்டி வரவேண்டும் என எண்ணினான், அதன்படி, எவரும் அறியாதவாறு கண்ணகியை இருட்டு நேரத்தில் அழைத்துக் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டு விட்டான்.

கோவலன் மதுரைக்குச் சென்றதற்கு உரிய உண்மைக் காரணம் இதுவே, எதற்கெடுத்தாலும் ஊழ்வினையின் மேல் பழிபோடுவது, எல்லார்க்கும் போல் இளங்கோ அடிகட்கும் வழக்கமாகி விட்டது. கோவலன் மதுரையில் கொலையுண்டது, எதிர்பாராத தற்செயலான நிகழ்ச்சியே.

3. கங்கையும் கன்னியும் வயந்த மாலையா?

மற்றொரு சிக்கல், கோவலன்-வயந்தமாலை ஆகியோர் தொடர்பானது. இந்தச் சிக்கல் என்ன என்று கண்டு, இதையும் அவிழ்க்க வேண்டும்.

தனி ஒரு நூல்

பாவலர் மணி திரு. ஆ. பழநி என்னும் அறிஞர் ‘கானல் வரியா? கண்ணிர் வரியா?’ என்னும் பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். கோவலனுக்கும் மாதவியின் தோழியாகிய வயந்தமாலைக்கும் உடலுறவுத் தொடர்பு உண்டு என்பதையே இந்நூல் முழுதும் வலியுறுத்துகின்றது. இதைக் கூற ஒரு நூல் வேண்டுமா? என்பதை எண்ணும்போது வியப்பு தோன்றுகிறது.

கானல் வரியின் தொடக்கப் பாடல்கள் இரண்டும் படாதபாடு படுத்தப் படுத்துகின்றன. அப்பாடல்கள் வருமாறு:

“திங்கள் மாலை வெண்குடையான்
    சென்னிசெங்கோல் அது ஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயல் கண்ணாய்
மங்கைமாதர் பெருங்கற் பென்று
    அறிந்தேன் வாழி வாவேரி”

“மன்னும்மாலை வெண்குடையாள்
    வளையாச் செங்கோல் அது ஒச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயல் கண்ணாய்
மன்னும் மாதர் பெருங் கற்பென்று
    அறிந்தேன் வாழி காவேரி”

என்பன அவை. சோழ மன்னன் வடக்கில் உள்ள கங்கையையும் (கங்கை ஆற்றையும்) தென் முனையில் உள்ள கன்னியையும் (குமரி ஆற்றையும்) புணர்ந்தாலும் காவேரி (காவேரி ஆறு) வருந்தாள் - ஊடல் கொள்ள மாட்டாள் - என்பது, இப்பாடல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கானல் வரிக் காதையில் உள்ள மற்ற பாடல்கள் அகப் பொருள்துறைக் கருத்துகள் கொண்டவையாகும். இச் செய்திகள் இந்த (எனது) நூலில், ‘காப்பியத்தில் காணல் வரியின் இடம்’ என்னும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளன.

முதல் இரண்டு பாடல்களும், கோவலன் கண்ணகியை உள்ளத்தில் நினைத்துக்கொண்டு பாடியதாக தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் கூறியுள்ளார். அதாவது, கோவலன் மாதவியையோ - மற்ற பெண்களையோ புணர்ந்தாலும் கண்ணகி அவன்பால் ஊடல் கொள்ள மாட்டாள் என்பது தெ. பொ. மீ.யின் கருத்தாக இருக்கலாம். கண்ணகியின் உயரிய பண்பை மாதவிக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு பாடியதாகவும் சொல்லப்படுகிறது.

பிற பெண்களைப் புணரினும் கண்ணகி வருந்தாள் எனக் கண்ணகியை காவேரியாக உருவகித்துப் பாடுவதென்றால், இதைக் கண்ணகியின் முன் பாடவேண்டும். இதை மாதவியின் முன் பாடுவதால் என்ன பயன்? இச் செய்தி கண்ணகியை எட்டுமா-என்ன? நான் யாருடன் வேண்டுமானாலும் புணரலாம் என்னும் பொருள்படக் கூறுவதன் வாயிலாகத்தான் கண்ணகியின் சிறப்பை மாதவிக்கு அறிவிக்க வேண்டுமா என்ன?

புதுக் கண்டுபிடிப்பு

இங்கே, இதன் தொடர்பாகக் ‘கானல் வரியா? கண்ணீர் வரியா?’ என்னும் தனியொரு நூல் எழுதிய பாவலர் மணி ஆ. பழநி, காவேரி கங்கை-கன்னி என்பனவற்றிற்குப் புதுப் பொருள் கண்டுபிடித்துள்ளார். அதாவது, - கோவலன் மாதவியின் தோழியாகிய வயந்தமாலையுடனும் உடலுறவு கொண்டு வருகின்றானாம்; இது மாதவிக்குப் பிடிக்க வில்லையாம்; எனவே, சோழன் கங்கையையும் கன்னியையும் புணர்ந்தாலும் காவேரி புலவாதது போல், நான் வயந்த மாலையுடன் புணர்ந்தாலும் நீ (மாதவி) புலத்தலாகாது - என மாதவிக்கு உணர்த்துவதற்காகத்தான் இவ்வாறு கோவலன் பாடினான் - என்பது ஆ. பழநி அவர்களின் புதுக் கண்டுபிடிப்பு. இன்னும் சிலர், கோவலன் வயந்த மாலை இணை (ஜோடி) பற்றிக் கூறியுள்ளன. வருமாறு:

“கோவலன் வரம்பின்றி மாதவிக்குத் தோழியாம் வயந்தமாலை போன்றோரிடமும் தொடர்பு கொண்டு வாழ்ந்திருக்கின்றான். அதனால் தான் மயக்குத் தெய்வம் அந்த வயந்தமாலை வடிவுகொண்டு தோன்றித் தான். கோவலனிடம் வந்ததற்குரிய காரணத்தைத் தெளிவாக அவன் நம்புமாறு கூறுகின்றது” என்று திரு கு. திருமேனி அவர்கள் தமது ‘கோவலன்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

“கோவலன் வயந்தமாலை தொடர்பு பற்றிக் கூறும் பொழுது வயந்த மாலையிடமே கோவலனுக்குக் காமவழிப்பட்ட தொடர்பு உண்டு என்பதையும் உய்த்துணரச் செய்வார் அடிகள்” (அடிகள் = இளங்கோ) என்று திரு எஸ். இராமகிருட்டிணன் அவர்கள் தமது ‘இளங்கோவின் பாத்திரப் படைப்பு’ என்னும் நூலில் எழுதியுள்ளார்.

தடை விடைகள்

இன்னோரின் கருத்துகளையும் துணைக்கொண்டு, ஆ. பழநி, கோவலன் வயந்த மாலையையே கங்கையாகவும் கன்னியாகவும் உருவகித்துப் பாடினான் என்று கூறும் தமது கருத்துக்கு அரணாக அவர் கூறும் காரணங்களும் அவற்றிற்கு உரிய என் மறுப்புகளும் வருமாறு:

காரணம் 1: கோவலன் காமம் மிகுந்தவன்; இளமையிலேயே ஒழுக்கம் தவறியவன்; பரத்தையரோடு பொழுது போக்கியவன்; மாதவியின் பணிப்பெண்களையும் விட்டு வைக்காதவன்; மதுரை ஊரைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது வேசியர் தெருக்களில் நீண்ட நேரம் சுற்றியவன் சிலம்புப் பாடல் சான்றுகள்:

“குரல்வாய் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன்”
(5:200,201)

“சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலம்தரும் வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு காணுத்தரும் எனக்கு”
(9:69-71)

எனவே, இத்தகைய பழக்கம் உள்ள கோவலன் வயந்தமாலை போன்றோருடன் தொடர்பு கொண்டது நடக்காத தன்று.

மறுப்பு

காமத் திருவிளையாடல் புரியும் கோவலன் வயந்த மாலையை மட்டும் உள்ளத்தில் கொண்டு பாடினான் என்று எவ்வாறு கூறமுடியும்? மற்ற பெண்களை எண்ணிக் கூறியிருக்கக் கூடாதா? அல்லது, யாரையும் குறிப்பிடாமல் பொதுவாகப் பாடியிருக்கக் கூடாதா? வேசியர் தெருக்களில் நீண்டநேரம் சுற்றியதாகக் கற்பனை செய்து கொள்வதனால் தான் இவன் காம விருப்பினன் என்பது தெரியுமா? இதற்கு முன்பே இவனது கணிப்பு (சாதகம்) தெரிந்தது தானே?

காரணம் - 2: மதுரைக்குச் சென்ற வழியில் (வனசாரினியாகிய) தெய்வப் பெண்ணொருத்தி கோவலனைப் புணர விரும்பி வயந்த மாலை வடிவில் வந்தாள். கோவலனுக்கும் வயந்த மாலைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததனால்தான், வயந்த மாலை வடிவில் சென்றால் கோவலன் மறுக்கமாட்டான் என நம்பி அவள் வயந்த மாலை வடிவில் வந்தாள்.

மறுப்பு

ஒரு பெரியவருடன் தொடர்பு கொள்ள வந்த புதியவர் ஒருவர், பெரியவரின் உறவினர் . நண்பர் - பெரியவருடன் தொடர்புடையவர் ஆகியோருள் ஒருவரது பெயரைச் சொல்லி அவரோடு தமக்கு உள்ள தொடர்பைக் கூறிக்கொண்டு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வது ஒரு வகை உலகியல். அல்லது, அவ்வேண்டியவரையே பரிந்துரைக்கு உடன் அழைத்துக் கொண்டு செல்வதும் உண்டு. இங்கே தெய்வப்பெண், கோவலனுக்கு அறிமுகமான வயந்த மாலை வடிவில் வந்து தொடர்புகொள்ள முயன்றது, மேற்சொன்ன உலகியல் போன்றதே. கோவலன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பினும், காப்பியத்தைப் படிக்கும் நமக்கு அறிமுகமான வயந்த மாலை என்னும் பெயருடையவளின் வடிவில் வந்தாள் என்று கூறினால் தான் காப்பியக் கதைச் செலவு சுவைக்கும் என்று, இளங்கோவடிகள், வயந்த மாலை வடிவில் வந்ததாகக் கூறியிருக்கலாம் அல்லவா? (முற்றும் துறந்த) மாதவி வடிவில் வந்தால் கோவலன் ஏற்றுக் கொள்ளான் என்பது அப்பெண்ணுக்குத் தெரிந்திருக்கும். முன்பின் அறியாத ஒரு பெண் வடிவில்வரின், கோவலன் துணிந்து புணரான் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கும்.

காரணம்-3: தெய்வப்பெண்ணின் வருகையைப் பற்றி அறிவிக்கும் பாடல் பகுதி:

“கானுறை தெய்வம் காதலின் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயங்த மாலை வடிவில் தோன்றி”
(11:171-173)

என்பதாகும். இங்கே, ‘நயந்த காதலின்’ என்னும் தொடரில் உள்ள ‘நயந்த’ என்பது இறந்த காலப் பெயரெச்சம். இது, கோவலன் முன்னமேயே வயந்த மாலையை நயந்து (விரும்பிக்) காதல் கொண்டுள்ளான் என்பதை அறிவிக்கும். எனவே, கானல் வரியில் சுட்டப்படுபவள் வயந்த மாலையே.

மறுப்பு

‘நயந்த காதலின்’ என்பதற்கு, ‘நயந்த காதல் உடையனாதலால்’ எனப் பொதுவாக அரும்பத உரைகாரரும், ‘மாதவி மேல் நயந்த காதலால்’ என அடியார்க்கு நல்லாரும், ‘மாதவி யிடத்து விரும்பிய காதலினால்’ என வேங்கடசாமி நாட்டாரும் உரை வரைந்துள்ளனர். இந்த மூன்று உரைகளுமே இங்கே வேண்டா. கோவலன் நம்மைக் காதலோடு (காதலின்) ஏற்றுக் கொள்வான் - அதிலும் - மிகவும் விரும்பிய (நயந்த) காதலோடு ஏற்றுக் கொள்வான் எனத் தெய்வ மங்கை எண்ணியதாகக் கருத்து கொள்ளலாகாதா? காதலின் அழுத்தத்தை - உறுதியை ‘நயந்த’ என்பது அறிவிப்பதாகக் கொள்ளலாமே. எனவே, வயந்தமாலையை முன்பு விரும்பியிருந்த காதலினால் ஏற்றுக் கொள்வான் . எனப் பொருள் கொள்ள வேண்டியதில்லையே. மற்றும், புராணக் கதைகளைப் போன்ற எத்தனையோ காப்பியக் கற்பனைகளுள் இதுவும் ஒன்றாக இருக்கலாமே. தெய்வம் தொடர்பான இதை நம்ப வேண்டுமே! எனவே, வயந்த மாலையை உள்ளத்தில் கொண்டே கோவலன் கானல் வரி பாடினான் எனக் கூறல் பொருந்தாது. அங்ஙன மெனில் இதற்குத் தீர்வு யாது? காண்போம்:

உரிய தீர்வு

வயந்த மாலை மாதவியின் தோழி எனப்படுகின்றாள். ‘மணி மேகலை’ காப்பியத்தில் கூட, மாதவியின் தாயாகிய சித்திராபதி வயந்தமாலையை மாதவியிடம் அனுப்பியதாகச் சாத்தனார் பாடியுள்ளார். பணிப்பெண் நிலையிலும் வயந்த மாலை இருந்திருக்கிறாள். மாதவி வயந்த மாலை வாயிலாகக் கோவலனுக்கு மடல் அனுப்பிய செய்தி அறிந்ததே. எனவே, கோவலன் வயந்த மாலையுடன் தொடர்பு கொள்வது மாதவிக்குப் பிடிக்கவில்லையெனில், வயந்த மாலையை அப்புறப் படுத்தி விடலாமே - அதாவது துரத்தி விட்டிருக்கலாமே. சோழன் கங்கையையும் கன்னியையும் புணரினும் காவேரி புலவாததுபோல், நான் வயந்த மாலையைப் புணரினும் மாதவியே நீ புலவாதே என்று குறிப்புப் பொருள் அமைத்துக் கோவலன் கானல் வரி பாடும் அளவிற்கு இடம் கொடுத்திருக்க வேண்டியதில்லையே. வயந்த மாலையை விரட்டுவது கோடரி கொண்டு பிளக்க வேண்டிய அளவுக்குக் கடினமானதன்றே - நகத்தால் கிள்ளியெறியக் கூடிய எளிய செயலே. ஆதலின் கானல் வரிப் பாடலில் வயந்த மாலைக்குச் சிறிதும் இடமே இல்லை என்பது புலனாகலாம்.

ஆடவரின் ஓரியல்பு

அங்ங மெனில், யாரை அகத்தில் எண்ணிக் கோவலன் பாடியிருக்கலாம்? யாரையும் எண்ணிக்கோவலன் பாட வில்லை. வாளா மாதவியை மிரட்டுவதற்காகவும் - குத்தலாகவும் - குறும்பாகவும் - விளையாட்டாகவுமே கோவலன் பாடினான். ஆடவர்க்கு இப்படியொரு வழக்கம் உண்டு. எடுத்துக்காட்டு ஒன்று தருவேன்:-

என் நண்பர் ஒருவர் தம் மனைவியிடம் கூறியதாகப் பின் வருமாறு சொன்னாராம். “நான் ஸ்கூட்டரில் செல்லும் போது அழகிய பெண்களைக் கண்டால் என் ஸ்கூட்டர் மெதுவாகப் போகிறது” - என்று சொன்னாராம். இது,மனைவியை விடைப்பதற்காகக் குறும்பாக - விளையாட்டாகக் கூறியதே யாகும். அதற்குப் பதில் - ஏட்டிக்குப்போட்டியாக அவருடைய மனைவி, “நான் தெருவில் நடந்து செல்லும் போது அழகிய ஆடவரைக் காணின் என் கால்கள் மெதுவாக நடக்கின்றன” - என்று கூறினாரா? இல்லை - இல்லவே யில்லை. இவ்வாறு பல எடுத்துக் காட்டுகள் தரலாம். குடும்பக் குலப் பெண்கள் யாரும் இந்நாள் வரை இதுபோல் கூறுவது கிடையாது. இனி எப்படியோ? ஆனால், மாதவி, பதிலுக்கு. ஏட்டிக்குப் போட்டியாக, தான் மற்றோர் ஆடவனை உள் நிறுத்திக் கூறுவதுபோல் கானல்வரி பாடி அவளது குலப்பிறப்பின் தன்மையைக் (சாதிப் புத்தியைக்) காட்டிவிட்டாள்.

மாதவி பாடியதும் உண்மையன்று. கோவலன் இறந்ததும் துறவியானதிலிருந்து மாதவியின் தூய உள்ளம் புலனாகலாம். எனவே, கானல் வரிப்பாடல் காப்பியச் சுவையை மிகுத்ததோடு, கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றியதுக்கு இயற்கையான - தற்செயலான ஒரு காரணமாய் அமைந்தது என்ற அளவில் நாம் அமைதி கொள்ளல்வேண்டும்.

இவ்வாறு சிலப்பதிகாரத்தை ஆராய ஆராயக் காப்பியச் சுவை நயம் தித்திப்பதைக் காணலாம்.

நெஞ்சை அள்ளும் சிலம்போ சிலம்பு!



இந்நூலுக்குக் கருத்து வழங்கிய கருவூல நூல்கள்

குறிப்பு:- கீழே முதலில் இந்நூலின் பக்க எண்ணும், அடுத்து மேற்கோள் நூலின் பெயரும் உட்பிரிவும், மூன்றாவதாக மேற்கோள் நூலின் ஆசிரியர் பெயரும் அமைந்திருக்கும்.

இந்நூலின்
பக்கஎண்

6 பிங்கல நிகண்டு - பிங்கலர்.
9 உலக வரலாறுகள்.
15 திருவாசகம் - திருப்பொற் சுண்ணம். மாணிக்கவாசகர்.
20 தொல்காப்பியம் . தொன்மை - செய்யுளியல் . 237 .தொல்காப்பியர் & நச்சினார்க்கினியர் உரை.
22 The Art of play writing
22 சேக்சுபியரின் நாடகங்கள்.
32 சீவக சிந்தாமணி - பதுமையார் இலம்பகம் . 126 .திருத்தக்க தேவர்.
33 தொல்காப்பியம் பொருள் - அகம் -5-தொல்காப்பியர்
36 நன்னூல் - எழுத்து - சொல் கடவுள் வணக்கம் -பவணந்தி முனிவர்.
36 திருக்குறள் - கடவுள் வாழ்த்து - 3 - திருவள்ளுவர்.
39 மணிமேகலை - 5:109, 119, 120, 121 - மதுரைக் கலவாணிகன் சாத்தனார்.
39 பரிபாடல் - 13:7, 8, 9- நல்லெழுநியார்.
43 கம்பராமாயணம் - 1 - பரசுராமப்படலம் - 28 . கம்பர்.
43 திவ்வியப் பிரபந்தம் - இயற்பா - மூன்றாம் திருவந்தாதி 5 - 98 - பூதத்தாழ்வார்.
48 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் - 4.
51 திருக்குறள் - 380, 620.
53 திருக்குறள் 169.
53 கொன்றைவேந்தன் - 74 - ஒளவையார்.
57 திருக்குறள் - 319, 376,
57 நாலடியார் - 104 - சமண முனிவர்.
61 புறநானூறு - 192:9, 11 - கணியன் பூங்குன்றனார்.
64 சீவக சிந்தாமணி - 219 - திருத்தக்க தேவர்.
64 கனாநூல் - கணபரத்தேவன் & பொன்னவன்.
65 பிளாட்டோ, அரிஸ்டாட்டில் கருத்துகள்.
73 கம்பராமாயணம் - 5: காட்சிப் படலம் - 40 - 53.
73 சீவக சிந்தாமணி - நாமகள் இலம்பகம் - 189, 199. திருத்தக்க தேவர்.
74 Julies caesar - Act II - Scene II - shakespeare.
74 ஆபிரகாம் லிங்கன் டைரி - ஆபிரகாம் லிங்கன்.
75 புறநானூறு - 41 - கோவூர் கிழார்.
76 புறப்பொருள் வெண்பாமாலை - 264, 310 ஐயனாரிதனார்.
76 தொல்காப்பியம் - பொருள் - புறம் - 5: 8.
76 பதிற்றுப் பத்து - 40: 16, 17 - காப்பி யாற்றுக் காப்பியனார்.
77 பதிற்றுப் பத்து - 61: 5, 6 - கபிலர்.
77 புறப்பொருள் வெண்பா மாலை - உன்ன நிலை - 243. புறப்பொருள் வெண்பா மாலை - 3: 3, 4 - ஐயனாரிதனார்.
78 தொல்காப்பியம் - பொருள் - புறம் - 58,
78 புறப்பொருள் வெண்பா மாலை - விரிச்சி - வாய்ப்புள்.
84, 86 அடியார்க்கு நல்லார் தந்துள்ள இரு பாடல்கள்.
88 தொல்காப்பியம் - மெய்பாட்டியல் - 5.
106 நெடுநல்வாடை - 56, 51, 52 - நக்கீரனார்.
107 திருக்குறள் - 800.
116 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் - 25 - உரை - பேராசிரியர்.
116 தொல்காப்பியம் - களவியல் - 2 - உரை - இளம்பூரணர்.
120 கனாநூல் - 3 - கணபரத் தேவன் & பொன்னவன்.
125 பள்ளிப்பாட்டு - பாட நூல்.
125, 126 மணிமேகலை - 2 - 4, 5, 8, 9 - சாத்தனார்.
127, 128 பெண் தெய்வ வழிபாடுகள்.
130 நாலடியார் - 14 - சமண முனிவர்.
130 திருக்குறள் - 550.
131 நெடுநல் வாடை - 43, 44 - நக்கீரனார்.
138 புறநானூறு - 189 - 1, 2 - நக்கீரனார்.
139 சம்பந்தர் தேவாரம் - திருவையாற்றுப் பதிகம் - 3: 1 - ஞான சம்பந்தர்.
140 பட்டினப் பாலை - 6 - கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
140 நெடுநல்வாடை - 30 - நக்கீரனார்.
140 மதுரைக் காஞ்சி - 359 - மாங்குடி மருதனார்.
142 நாலடியார் - பழவினை 4 - சமண முனிவர்.
142 பரிபாடல் - 13: 7 - 9 - நல்லெழுநியார்.
143 மணிமேகலை - 5: 109 - 121 - சாத்தனார்.
143 The Lotos Eaters - 5: 1, 2 - Lord Tennyson.
147 புறநானூறு - 94 - ஔவையார்.
151 கம்ப ராமாயணம் - ஆரணியம் - பஞ்சவடி - 1.
152 திருக்குறள் - 1091.
153 குண நாற்பது - ஆசிரியர் பெயர் - தெரியவில்லை .
165 தொல் - பொருள் - அகம் - 57.
168 புறநானூறு - 68: 8 - 10 - கோவூர் கிழார்.
168 அம்பிகாபதி காதல் - காப்பியம் - நாடு நகர் நலங்கூறு காதை - 98, 99 - சுந்தர சண்முகனார்.
169 கம்ப ராமாயணம் - மந்தரை சூழ்ச்சிப் படலம் கம்பர்.
176 King Richard II - Act V - Scene II - Shakespeare
186 புறநானூறு - 189 - நக்கீரனார்.
186, 187 திருக்குறள் - 1040, 231, 232
189 பெளத்த ராமாயணம் - பெளத்தர்.
189 புறநானூறு - 183: 3, 4 - பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன்.
189 மூதுரை - 20 - ஒளவையார்.
193 திருக்குறள் - 655.
197 நீதி வெண்பா - 65 - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
199 புறநானூறு - 159 - பெருஞ் சித்திரனார்.
199 தனிப்பாடல் - காளமேகம்.
200 தொல் - பொருள் - மெய்ப் பாட்டியல் - 9.
200 திருக்குறள் - 76 -
200 மணிமேகலை - 14:30, 31 - கூலவாணிகன் சாத்தனார்.
202 திருக்குறள் - 235.
207 ஐந்திணை ஐம்பது - 38 - (மான்) - மாறன் பொறையனார்
207 கலித்தொகைப் பாடல்கள் - (யானை) 40, 41, 53, கபிலர்.
208 கம்பராமாயணம் - அயோமுகிப் படலம்.
214 நன்னூல் . 56, 258.
222 புறநானூறு - 165 : 1, 2 - பெருந்தலைச் சாத்தனார்.
226 இரங்கல் பாடல் - பாரதி தாசனார்.
228 திருக்குறள் - 1089, 1101.
232 கம்பராமாயணம் - 5 - உருக்காட்டுப் படலம் - 61.
236 திருக்குறள் - 55.
236 சீவக சிந்தாமணி - கனக மாலையார் இலம்பகம். 32 - திருத்தக்கதேவர்.
237 திருக்குறள் - 1040, 1023.
241 திருக்குறள் 56, 51.
243 திருநாவுக்கரசர் தேவாரம் - திருவானைக்காப் பதிகம்-1
246 கம்பராமாயணம் - பிலம்புக்கு நீங்கு படலம் - 56.
246 பெரிய புராணம் - 1807 - சேக்கிழார்.
249 பெரிய புராணம் - அப்பூதியடிகள் - 23, 25.
251 திருக்குறள் - 706.
252 திருக்குறள் 621.
254 புறநானூறு - 314 - ஐயூர் முடவனார்.
254 நான்மணிக்கடிகை - 105 - விளம்பி நாகனார்.
257 மணிமேகலை - 5: 123.126.
259 வெற்றிவேற்கை - 78 - அதிவீர ராம பாண்டியன்.
262 திருக்குறள் - 29, 648.
267 திருக்குறள் - 67, 70,
279 பட்டினத்தார் பாடல் - திருவேகம்ப மாலை - 3 - பட்டினத்தார்.
283 மணிமேகலை - 2: 55, 57 - சாத்தனார்.
284 மணிமேகலை - 24: 19, 20, 75, 76.
285 மணிமேகலை - 16: 3, 10.
288 மணிமேகலை - 24: 77, 81. -
294 தொல்காப்பியம் - எழுத்து - குற்றியலுகரப் புணரியல் - நச்சினார்க்கினியர் உரை - 77; 4, 5.
295 பெரிய புராணம் - அப்பூதியடிகள் - சேக்கிழார்.
295 தொல் - பொருள் - கற்பியல் - 36.
296 தொல் - பொருள் - கற்பியல் 52.
296 பெரிய புராணம் - சுந்தரர் வரலாறு - சேக்கிழார்.
296 நம்பி அகப்பொருள் - அகத்திணையியல் - பொருள் - 100 - நாற்கவி ராச நம்பி.
303 திருவருட்யா - வாடிய பயிரை - வடலூர் இராமலிங்க வள்ளலார்.
307 As you like it - Shakespeare.
312 திருக்குறள் - 400.
310 Pecunia - இலத்தீன் சொல். நல்லாற்றுார் - ஊர்ப் பழக்கம்.
312 சிறுபஞ்ச மூலம் - 22 - காரியாசான்.
313 திவாகர நிகண்டு - 4-80 - திவாகரர்.
313 பெரும்பாணாற்றுப்படை - 407, 408 - கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
315 பெரிய புராணம் - 290 - சேக்கிழார்.
316 பெரிய புராணம் திருமூலர் புராணப் பகுதி - சேக்கிழார்.
317 இடைச் சிறுவன் கதை.
317 காளிதாசன் வரலாறு.
318 கண்ணனின் ஆயர் குலம்.
319 தொல்காப்பியம் - அகத்திணையியல் - 5.
323 களவு நூல் கல்வி.
332 மெய்யப்பன் நண்பர் சொல்லியது.
335 கலிங்கத்துப் பரணி - 111 - சயங்கொண்டார்.
336 பெரிய புராணம் : இளையான்குடி மாறர். வரலாறு.
336 பட்டினத்தார் பாடல் - திருக்காளத்தி - 3 - பட்டினத்தார்.
337 மணிமேகலை. - 23 208, 209
343 வில்லி பாரதம் - உத்தியோக பருவம் 2 . 6. வில்லி புத்துாரார்.
344 கம்பராமாயணம் - பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம் - 1.
346 புறநானூறு - 58.6 - 8 - காவிரிப்பூழ்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
347 புறநானூறு - 77 - இடைக் குன்றுார் கிழார்.
347 உடுபதி - புராணச் செய்தி.
348 புறநானூறு - 910 - நெட்டிமையார்.
355 மதுரைக் காஞ்சி - 60, 61, 62, 63 - மாங்குடி மருதனார்.
355 புறநானூறு - 35: 27, 29 - வெள்ளைக்குடி நாகனார்.
355 பெரிய புராணம் - திருவாரூர் - 44 - சேக்கிழார்.
355 திருக்குறள் - 545, 559.
357, 358 பதிற்றுப்பத்து - 5 - பதிகம்; 18-20; 13, 14 பரணர்
363 குறுந்தொகை - 19:4,5 - பரணர்
363 நற்றிணை - 115:6 - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
363 அகநானூறு 23:12 - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
364 பெருங்கதை - 1:33:73, 74 - கொங்குவேளிர்
364 தக்க யாகப் பரணி - 75 - ஒட்டக் கூத்தர்
365 ஆசிரிய நிகண்டு - 137 - ஆண்டிப் புலவர்
365 திருக்குறள் - 853 .
365 கம்ப ராமாயணம் - 5 - 9, 7; 5-1-65
365 பிரபு லிங்க லீலை - 2:4 - சிவப்பிரகாச அடிகளார்
370 தெய்விகத் திருமணம் - பக்கம் 9 - சுந்தர சண்முகனார்
371 திருமுருகாற்றுப்படை - 1, 2 . நக்கீரனார்
371 கம்ப ராமாயணம் - கிட்கிந்தா காண்டம் அனுமப் படலம் - 18
374 திருக்குறள் 51.
374 தண்டியலங்காரம் - 25 - தண்டியாசிரியர்.
375 கம்பராயணம் - 5 - அக்க குமாரன் வதைப் படலம்
377 கலிங்கத்துப் பரணி போர் பாடியது - 63, 64, 65, 66.
380 திருமந்திரம் - 2290 - திருமூலர்.
381 நறுந்தொகை அதிவீர ராம பாண்டியன்.
381 திருக்குறள் - 555.
385 யாழ் நூல் விபுலாநந்த அடிகள்.
386 திருநாவுக்கரசர் தேவாரம் - தலையே நீ வணங்காய்’
395, 396 தெருக் கூத்துக் கதையும் பாடல் பகுதிகளும்.
397 ‘இலியடு’ - ஃ ஒமர் (கிரேக்கக் காப்பியம்).
398 நற்றிணை - 216: 8, 9 - மதுரை மருதனிள நாகனார்.
398 கொளுங்கோளுர்ப் பகவதி அம்மன் பெயர். .
399 பேகன்-கண்ணகி-புறநானூறு - 143 - கபிலர்,
402, 403 ‘சிலம்பில் சிறு பிழை’ - சகந்நாத ராசா.

402, 403 'பிழை யிலாச் சிலம்பு' - ஆர், வீரபத்திரன்.

406 அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை.

410 திருக்குறள் - 336.

410 வேங்கட சாமி நாட்டார் உரை.

412 திரைப்படப் பாடல்.

416 'கானல் வரியா - கண்ணீர் வரியா?' - ஆ. பழநி.

417 தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் கருத்து.

418 'கோவலன்' என்ற நூல் - கு. திருமேனி.

419 'இளங்கோவின் பாத்திரப் படைப்பு' - எஸ். இராம கிருட்டிணன்.

420 உலகியல் எடுத்துக் காட்டு.

(Upload an image to replace this placeholder.)