சிலம்போ சிலம்பு/தெய்வப் பொதுவுடைமை

4. தெய்வப் பொதுவுடைமை

உலகில் பொருளியலில் பொதுவுடைமை பேசப்படுகிறது. இன்னும் எது-எதிலே பொதுவுடைமைப் பேசப்படலாம். ஆனால், தெய்வக் (சமயக்) கொள்கையில் பொதுவுடைமை பேசுவது-மேற்கொள்வது ஒரு பெரிய புரட்சியேயாகும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் (2104) என்று திருமூலர் சொன்னார். எல்லா ஆறுகளும் கடலில் கலப்பது போல, எல்லாச் சமயக் கொள்கைகளும் ஒரே கடவுள் கொள்கையில் சென்று முடிகின்றன வாதலின், சமயப் பூசல் வேண்டா என்று சிலர் கரடியாய்க் கத்துகின்றனர். ஆனால், இக்கொள்கையில் வெற்றி கிடைத்ததா?

உலகில் பின்பற்றப்படும் பெரிய மதங்களுள் ஒவ்வொன்றிலும் சில அல்லது பல பிரிவுகள் இருப்பது வியப்பிற்கும் வேதனைக்கும் உரியதாகும். ஒரு மதத்துக் கடவுள் திருமேனி தெருவில் ஊர்வலம் வரும்போது, மற்றொரு மதத்தினர் தம் வீட்டுத் தெருக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொள்ளும் நடைமுறை உண்மையை — செய்தியை நோக்குங்கால், இது குறித்து மேலும் கூறுவதற்கு என்ன இருக்கிறது?

இந்த அடிப்படையுடன் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திற்கு வருவோம். இளங்கோ அடிகளைப் பெரிய பொதுவுடைமையாளர் எனலாம். நூலை மூவேந்தர்க்கும் பொதுவான காப்பியமாக அமைத்தது போலவே, எல்லாத் தெய்வங்கட்கும் பொதுக் காப்பிய மாகவும் அமைத்துள்ளார் எனலாம். மன்னர் மரபில் தோன்றினும், துறவு மேற்கொண்டோர்க்கு இஃதல்லவோ பெரிய தகுதி (இலக்கணம்) ஆகும். இனி, தெய்வத் தொடர்பாக அவர் கூறியுள்ள செய்திகளைக் காதை வாரியாகக் காணலாம்.

பதிகம்

மதுரையில், முடியில் கொன்றை மாலையணிந்த சிவன் எழுந்தருளியுள்ள வெள்ளியம்பலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்

வெள்ளியம் பலத்து நள்ளிருள் கிடந்தேன்” (40-41)

என்பது பாடல் பகுதி. சிவனுக்கு உரிய அம்பலங்கள் ஐந்து எனக் கூறுவர். அவை: பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தின அம்பலம், தாமிர அம்பலம், ஒவிய (சித்திர) அம்பலம் என்பன. சிதம்பரம் - பொன்னம்பலம். மதுரை - வெள்ளியம்பலம். திருவாலங்காடு - இரத்தின அம்பலம். திருநெல்வேலி - தாமிர அம்பலம். நெல்லை மாவட்டத்துக் குற்றாலம் - ஓவிய அம்பலம் ஆகும். இவ்வைந்தனுள் ஒசறாகிய மதுரை வெள்ளியம்பலம் பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனையறம் படுத்த காதை

கோவலன் கண்ணகியின் நலம் பாராட்டுகிறான். ஆறு முக்களுடைய முருகன் தன் வேலை நீள வாட்டத்தில் இரண்டாகப் பிளந்து நின் இரண்டு கண்களாகத் தந்துள்ளான் என்கிறான். பெண்டிரின் கண்கட்கு வேலை உவிக்கும் மரபுப்படி இந்தக் கற்பனையுள்ளது:

“அறுமுக ஒருவன்ஓர் புெறுமுறை இன்றியும்
இருமுறை கானும் அன்றே
அஞ்சுடர் நெடுவேல் ஒன்றுகின் முகத்துச்

செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது” (49-5)

என்பது பாடல் பகுதி. பதுமையார் என்ற பெண்ணின் கண்கள் முருகனின் இரண்டு வேல் பகுதிபோல் இருந்தது என்னும் கருத்து சீவக சிந்தாமணி - பதுமையார் இலம்பகத் திலும் உள்ளது:

“ஒக்கிய முருகன் வைவேல் ஓரிரண்டனை கண்ணாள்’

(126)

என்பது பாடல் பகுதி. இவ்வாறாக, மனையறம் படுத்த காதையில் முருகன் இடம் பெற்றுள்ளான்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனுக்குத் திருவிழா நடைபெற்றது. அப்போது, சிவன் முதலிய கடவுளர் கோயில்களிலும் சிறப்புப் பூசனைகள் செய்யப் பெற்றனவாம்:

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
... ... ... ... .... ... ... ... ... ... ... ...

வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்”

(169–173-78)

பிறவா யாக்கைப் பெரியோன். மற்றவர்ப் போல் எந்தப் பெற்றோர்க்கும் பிறக்கவில்லை.

தொண்ணுற்றாறு வகைச் சிற்றிலக்கியங்ளுள் ‘பிள்ளைத் தமிழ்’ என்பதும் ஒன்று. கடவுளரையா, பெரியோர்களையோ, வள்ளல்களையோ சிறு பிள்ளையாகக் கொண்டு அவர்கள் மேல் பத்துப் பருவங்கள் அமைத்து, ஒரு பருவத்துக்குப் பத்துப் பாக்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்கள் தமிழில் பாடும் நூலுக்குப் பிள்ளைத் தமிழ் என்பது பெயராம். பல கடவுளர்க்குப் பிள்ளைத் தமிழ் பாடப் பெற்றுள்ளது. சிவனுக்கு மட்டும் பிள்ளைத் தமிழ் நூல் இல்லை. சிவன் பிள்ளையாகப் பிறக்காததனால் அவர் மேல் யாரும் பிள்ளைத் தமிழ் பாடவில்லை. இந்த மரபை ஒட்டிச் சிவனைப் “பிறவா யாக்கைப் பெரியோன்” என்று இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

அறு முகச் செவ்வேள் = முருகன். வெண் சங்கு போன்ற வெண்மேனி உடைய கடவுள் பல தேவன். நீல மேனி நெடியோன் = திருமால். மாலை வெண் குடை மன்னவன் இந்திரன்.

இந்திரனை மட்டும் ‘மன்னவன்’ என்று கூறியிருப்பது தொல்காப்பிய மரபை ஒட்டியதாகும். தொல்காப்பியர் அகத்திணையியலில், முல்லை - குறிஞ்சி - மருதம் - நெய்தல் என்னும் நிலங்கட்கு உரிய தெய்வங்களைப் பின்வருமாறு கூறியுள்ளார்:

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன்மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (5)
என்பது நூற்பா. முதலது முல்லை - திருமால். அடுத்தது குறிஞ்சி - முருகன். மூன்றாவது மருதம் - இந்திரன். நான்காவது நெய்தல் - வருணன்.

இந்திரனை மட்டும் வேந்தன் என்று கூறியது ஏன்? இந்திரன் என்னும் வட மொழிச் சொல்லுக்கு வேந்தன் (மன்னன்) தலைவன் என்று பொருள் கொள்வர். எடுத்துக் காட்டுகள்:- நரேந்திரன் = மக்கள் தலைவன். சுரேந்திரன் = தேவர் தலைவன். இராசேந்திரன் = மன்னர் மன்னன் - மன்னர்களின் தலைவன். கஜேந்திரன் = யானைகளின் தலைவன் - இன்ன பிற.

தேவர் உலகம் என ஒன்று இருப்பதாகவும், அங்கே தேவர்கள் எனப்படுபவர் பலர் இருப்பதாகவும், அவர்களின் தலைவன் இந்திரன் என்பதாகவும், அதனால் அவன் தேவேந்திரன் எனப்படுவதாகவும் கூறுவர். எனவேதான், தொல்காப்பியர் வேந்தன் என்று கூறியுள்ள மரபை ஒட்டி இளங்கோ மன்னவன் என்று கூறியுள்ளார்.

நாடு காண் காதை

மணிவண்ணன் கோட்டம்

மாதவியைப் பிரிந்து வந்த கோவலன் கண்ணகியுடன் வைகறை யாமத்தில் யாரும் அறியாமல் புகாரை விட்டுப் பிரிந்து செல்லலாயினர். அப்போது, வழியில் உள்ள, பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத்தனாகிய திருமாலின் கோயிலை வலஞ்செய்து சென்றார்களாம்

“அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணி வண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து”

(9, 10)

என்பது பாடல் பகுதி.

புத்த விகாரம்

போதி (அரச) மரத்தடிப் புத்த தேவனின் அருள் மொழியை வானத்தில் திரியும் சாரணர் வந்து ஓதுகின்ற இந்திரனால் அமைக்கப்பட்ட புத்தப் பள்ளிகள் ஏழைப் போற்றிச் சென்றனராம் கோவலனும் கண்ணகியும்.

“பணைஐந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் கீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்

இந்திர விகாரம் ஏழுடன் போகி” (11-14)

என்பது பாடல் பகுதி.

அருகன் மேடை

சமண அடியார்களாகிய சாவகர்கள் அமைத்த அருகன் சிலாதலத்தைக் (கல்பிட மேடையைக்) கோவலனும் கண்ணகியும் சுற்றிவந்து வணங்கினராம்.

“உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதலம் தொழுது வலங்கொண்டு”

(24-25)

என்பது பாடல் பகுதி.

அருகன் பெயர்கள்

கோவலனும் கண்ணகியும் வழியில் கவுந்தி அடிகள் என்னும் சமணப் பெண் துறவியுடன் சேர்ந்து கொண்டனர். வழியில் சமணச் சாரணர்கள் சமணக் கடவுளாகிய அருகனைப் பின்வரும் பெயரால் குறிப்பிட்டுப் போற்றினர்.

“அறிவன் அறவோன் அறிவு வரம்பிகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சிவவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்

தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்

சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி
இறைவன் குரவன் இயல் குணன் எங்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி
பண்ணவன் எண்குணன் பரத்தில் பரம்பொருள்

விண்ணவன் வேத முதல்வன்...” (176.189)

சைனக் கடவுளாகிய அருகனுக்கு இவ்வளவு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள், பகவன், இறைவன், எண்குணன் என்னும் பெயர்கள் திருக்குறள்-கடவுள் வாழ்த்துப் பகுதியிலும் உள்ளன. மற்றும், பரமன், சங்கரன் ஈசன், சதுமுகன் (நான்முகன்) என்னும் பெயர்கள் முறையே சிவனையும் பிரமனையும் குறிக்கும் பெயர்களாகும். சைனமதம் இந்து மதத்திலிருந்து பிரிந்ததாதலின், அங்கும் சிவன், திருமால், பிரமன் உண்டு. நன்னூல் என்னும் இலக்கணநூல் இயற்றிய சமணராகிய பவணந்தி முனிவர், நன்னூலின் எழுத்ததிகாரத் தொடக்கத்தில்,

“பூமலி அசோகின் புனைகிழல் அமர்ந்த

நான் முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே”

எனப் பாடியுள்ள காப்புச் செய்யுளில் நான்முகனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த சொல்லதிகாரத்தின் தொடக் கத்தில்,

“முச்சகம் கிழற்றும் முழுமதி முக்குடை

அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே”

எனப் பாடிய காப்புச்செய்யுளில் அச்சுதனைக் (திருமாலைக்) குறிப்பிட்டுள்ளார். நன்னூலில் பொருளதிகாரம் இல்லை. பவணந்தியார் பொருளதிகாரமும் இயற்றினார். அது கிடைக்காமல் போய்விட்டது என்று கூறுபவரும் உளர். ஒருவேளை பவணந்தியார் பொருளதிகாரம் இயற்றியது உண்மையாயிருப்பின், அதன் தொடக்கத்தில் சிவனைக் குறிப்பிட்டிருக்கலாம்.

இப்பெயர்கட் கிடையே ‘சிவகதி நாயகன்’ என்னும் பெயர் ஒன்றும் உள்ளது. சிவகதி என்பது வீடுபேறு. சைனர்களும் வீடு பேற்றைச் சிவகதி என வழங்குவது எண்ணத்தக்கது.

இதன் பின்னர்க் கவுந்தியடிகளும் அருகன் பெயர்களைக் கூறிப்போற்றினர் அவர் குறிப்பிட்ட பெயர்களாவன:-

“ஒரு மூன்று அவித்தோன், காமனை வென்றோன், ஐவரை வென்றோன், அருளறம் பூண்டோன், அருகர் அறவன், அறிவோன், மலர்மிசை நடந்தோன், இறுதியில் இன்பத்து இறை என்பன. இவற்றுள் ஒன்றாய மலர்மிசை நடந்தோன் என்னும் பெயர், திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பகுதியில் உள்ள ‘மலர்மிசை ஏகினான்’ என்னும் பெயரை நினைவுறுத்துகிறது.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகவன், இறைவன், எண் குணன், மலர்மிசை நடந்தோன், ஐவரை வென்றோன், (பொறிவாயில் ஐந்தவித்தான்), அறவன் (அறவாழி) என்னும் பெயர்களைக் கொண்டு, திருவள்ளுவரைச் சமணர் என்று கூறுவாரும் உளர். இஃது இருக்கட்டும். நாம் திருவள்ளுவரை எல்லாச் சமயத்திற்கும் எல்லா மதங்கட்கும் பொதுவானவர் என்றே கூறுவோமாக திருக்குறளைப் பொதுமறை என்றே எண்ணி ஓதுவோமாக!

காடு காண் காதை

அருக வணக்கம்

இந்தப் பகுதியின் தொடக்கத்தில், அசோக மரத்தின் கீழ் அமர்ந்த அருகதேவனைத் தொழுத செய்தி கூறப்பட்டுள்ளது.

“கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த

ஆதியின் தோற்றத்து அறிவனை வணங்கி” (3,4)

திருமாலின் திருவோலக்கம்

கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும் உறையூரைக் கடந்து சென்று ஓர் இளமரக் காவில் தங்கியிருந்தபோது மாங்காடு என்னும் ஊர் மறையவன் ஒருவன் ஆங்கு வந்தான். அவனை நோக்கி, நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்றெல்லாம் கோவலன் வினவினான். மறையவன் பதில் இறுக்கிறான்:

என் ஊர் மாங்காடு - மறையவன் நான். காவிரி நடு அரங்கத்தில் அறிதுயில் கொள்ளும் அரங்கனை வணங்கினேன். மற்றும், திருவேங்கட மலையில், கருமுகில் மின்னலோடு வானவில் ஏந்தி இருந்தாற் போன்று, பொன்னாடையும் மணியாரமும் கொண்ட கரிய திருமால், இருபக்கக் கைகளிலும் ஆழியும் (சக்கரமும்) வெண் சங்கும் ஏந்தினால் போல், மாலையில் ஒரு பக்கல் ஞாயிறும் மறு பக்கல் வெண் திங்களும் விளங்க வீற்றிருந்த திருக் கோலத்தையும் கண்டு வணங்கி வந்தேன்-என்று கூறினான். பாடல்:

“விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலத் தானத்து
மின்னுக் கொடிஉடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் கின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி

நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு

பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டுஎன்று என்உளம் கவற்ற

வந்தேன் குடமழை மாங்காட் டுள்ளேன்” (39-33)

என்பது பாடல் பகுதி. திருவேங்கடத்துத் திருமாலைப் பற்றி இளங்கோ அடிகள் கூறியுள்ள பகுதியை நோக்குங்கால், இன்னோ ரன்ன செய்தியைக் கொண்ட வேறு இலக்கியப் பகுதிகளும் நினைவிற்கு வருகின்றன. ‘இலக்கிய ஒப்புமை காண்டல்’ என்னும் முறையில் அவற்றையும் காண்போமே:

சாத்தனார் மணிமேகலை நூலில் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில் இப்படி ஒரு கற்பனை செய்துள்ளார்; புகார் என்னும் மங்கை, மாலையில் ஒரு பக்கல் வெண்தோடும் மற்றொரு பக்கல் பொன் தோடும் அணிந்திருந்தாற் போன்று, கீழ்பால் திங்களும் மேல்பால் ஞாயிறும் விளங்கின - என்று கூறியுள்ளார்.

“புலவரை இறந்த புகார் எனும் பூங்கொடி
குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்

வெள்ளி வெண் தோட்டோடு பொன்தோடாக...”

என்பது பாடல் பகுதி. பரிபாடல் என்னும் நூலிலும் திருமாலைப் பற்றி இப்படி ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. திருமாலின் ஒரு கையில் ஞாயிறு மண்டிலம் போல் ஆழியும் (சக்கரமும்), மற்றொரு கையில் வெண் திங்கள் மண்டிலம் போல் வெண் சங்கும் உள்ளனவாம்.

“பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த
இருவேறு மண்டிலத் திலக்கம்போல

நேமியும் வளையும் ஏந்திய கையால்...” (13-7-9)

என்பது பாடல் பகுதி. திருவரங்கத்திலும் திருவேங்கடத்திலும் திருமாலைக் கண்டு வணங்கவேண்டுமென மாங்காட்டு மறையவனின் கண்கள் அவன் மனத்தை உறுத்தினவாம் - என்னும் பொருளில் உள்ள “என் கண் காட்டு என்று உளம் கவற்ற வந்தேன்” என்னும் பகுதி சுவைக்கற்பாலது.

மாங்காட்டு மறையவன் மேலும் வழியில் குறிப்பிட்ட ஒரு மலையைச் சுட்டிக் கூறுகின்றான். ஓங்கி உயர்ந்த அம்மலைப் பகுதியில் உள்ள நெடியோனாகிய திருமாலை வணங்கி, உள்ளத்தில் அவன் திருவடிகளைப் பதித்து, அம் மலையை மூன்று முறை சுற்றி வந்து தொழ வேண்டுமாம்.

“ஓங்குயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது
சிந்தையில் அவன்தன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால்...”

(105-107)

என்பது பாடல் பகுதி. திருமால் உயர்ந்தோன் எனக் குறிக்கப்பட்டுள்ளார். உலகை அளக்க நெடுவிக்கிரம வடிவம் எடுத்ததால், திருமாலை நெடியோன் என்றும் உயர்ந்தோன் என்றும் கூறுதல் மரபு, கோயிலையோ - மலையையோ மற்றும் இன்னோரன்ன பிறவற்றையோ மூன்று முறை சுற்றும் மக்களின் வழக்கம் இங்கே சுட்டப்பட்டுள்ளது.

கொற்றவை

கோவலன் முதலிய மூவரும் வழி கடந்து கொற்றவை கோட்டம் ஒன்றை அடைந்தனராம்; கொற்றவை நெற்றிக் கண் உடையவளாம்; விண்ணோர் வணங்கும் பெண் தெய்வமாம். வான நாட்டாளாம்; ஐயை எனப்படுபவளாம்.

“விழிநுதல் குமரி விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்”

(214-216)

வேட்டுவ வரி

வேட்டுவ வரிப் பகுதியில், கொற்றவைக்கு வழங்கும் பல்வேறு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:

“மதியின் வெண்தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை கின்ற தையல் பலர் தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி லிே மாலவற்கு இளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைங்தொடிப் பாவை

ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை” (54-71)

என்னும் பெயர்கள் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள், மதிசூடும் சென்னி, நுதல் நாட்டத்து (நெற்றிக் கண்) நஞ்சுண்ட கண்டி (நீலகண்டன்), நெடுமலை வளைத்தோள் (மேருமலையைச் சிவன் வில்லாக வளைத் தான்), சூலம் ஏந்தி (சிவன்), கரியின் உரிவை போர்த்து (சிவன் யானைத்தோல் போர்த்தமை), அரியின் உரிவை (சிவனுக்குப் புலித்தோல் ஆடை), என்னும் பெயர்களை நோக்குங்கால், சிவனின் தேவியாகிய சிவையைக் (உமா தேவியைக்) கொற்றவையாக கூறப்பட்டிருக்கும் குறிப்பு தோன்றுகிறது. இளங்கோ அடிகள் இவ்வளவு பெயர்களையும் நினைவில் வைத்துத் தந்திருப்பது வியப்பு.

கொன்றையும் துளவமும்

கொன்றை மலரும் துளசியும் இணையத் தொடுத்த மாலையணிந்து அரக்கர் அழிய அமரரைக் காத்துக் குமரிக் கோலத்துடன் கொற்றவை வென்றிக் கூத்தாடினாளாம்.

“கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப் பிணையல் தோள்மேல் இட்டாங்கு
அசுரர் வாட அமரர்க்கு ஆடிய

குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே”

(10-ஆம் பாடல்)

இங்கே, சிவனுக்கு உரிய கொன்றை மலரும் திருமாலுக்கு உரிய துளசியும் இணையத் தொடுத்த மாலை அணிந்ததாகக் கூறியதன் வாயிலாக, சைவ-வைணவ வேறுபாடு அற்ற பொது நோக்கைக் காணலாம். “அரியும் சிவனும் ஒண்ணு (ஒன்று) - அறியாதவர் வாயில் மண்ணு” என்னும் மக்களின் பழமொழி இங்கே பளிச்சிடுவதைக் காணலாம்.

மற்றும் வேட்டுவ வரியின் இறுதியிலும் இத்தகைய கருத்து இடம்பெற்றுள்ளது. யாரும் உண்ணாத நஞ்சைக் கொற்றவை உண்டு தேவர்க்கு அருள் புரிந்தாளாம்; மேலும், தன் மாமனாகிய கம்சனது சூழ்ச்சியால் ஏற்பட்ட மருதமரங்களை ஒடித்தாளாம்; மாமன் அனுப்பிய உருளும் வண்டியை உதைத்து அழித்தாளாம்.

“உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்”(22-1)
“மருதின் நடந்து கின் மாமன் செய் வஞ்ச

உருளும் சகடம் உதைத்தருள் செய்குவாய்” (22:3,4)

நஞ்சுண்டவர் சிவன், இச்செயல் கொற்றவைக்கு ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளது. மருத மரங்களை ஒடித்ததும் உருளும் சகடத்தை உதைத்ததும், திருமாலின் தெய்வப் பிறவியாகிய (அவதாரமாகிய) கண்ணனின் செயலாகும். இச்செயல்களும் கொற்றவைமேல் ஏற்றப்பட்டுள்ளன. ஈண்டும், சைவவைணவ வேறுபாடற்ற பொது நோக்கைக் காணலாம். இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில், பிற இலக்கியக் கூற்றுகள் சில இவன் காண்பாம்.

கம்ப இராமாயணம்

ஒருவரே இருவராயுள்ள சிவனும் திருமாலும் வில் வைத்திருந்தனராம். யார் வில் வலியது என்பதைக் காண நான்முகன் இருவர்க்கும் போர் முட்டினாராம். இச்செய்தி பாலகாண்டம் - பரசு ராமப்படலத்தில் உள்ளது.

“யாரினும் உயர்ந்த மூலத்து
     ஒருவராம் இருவர் தம்மை
மூரிவெஞ் சிலைமேல் இட்டு

     மொய்யமர் மூட்டிவிட்டான்” (28)

என்பது பாடல் பகுதி. மற்றும் பூதத்தாழ்வார் பாடிய இயற்பா - மூன்றாம் திருவந்தாதியில் உள்ள - (திவ்யப் பிரபந்தம்)

“அரன், நாரணன் நாமம்; ஆள் விடை, புள் ஊர்தி,
உரைநூல் மறை உறையும் கோயில் - வரை நீர்
கருமம் அரிப்பு, அளிப்பு: கையது வேல், நேமி;
உருவம் எரி, கார்மேனி ஒன்று ”(5)

“பொன் திகழும் மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்” (98)
என்னும் பாடல்களும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன.

கால் கோள் காதை

முடியிலும் தோளிலும்

சேரன் செங்குட்டுவன் வட நாடு நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, சிவன் கோயிலில் அளித்த திருவடி மாலையைதன் முடியில் சூடிக் கொண்டானாம். பின்னர், திருமால் கோயிலில் அளித்த மாலையைத் தோளில் அணிந்து கொண்டானாம்.

“ஆடக, மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்கின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்

தாங்கின னாகித் தகைமையின் செல்வழி” (62-67)

சிவன் கோயிலும் திருமால் கோயிலும் இருந்ததாகவும் முதலில் சிவன் கோயில் அளித்ததை முடியில் சூடியதால் பின்னர்த் திருமால் கோயிலில் அளித்ததைச் செங்குட்டுவன் தோளில் அணிந்து தொண்டதாகவும் கூறப்பட்டிருப்பதிலிருந்து, செங்குட்டுவனுக்குச் சமய வேற்றுமை இல்லை என்பது புலனாகும்.

இந்நூலின் வேட்டுவ வரியில் கொற்றவையின் புகழும் ஆய்ச்சியர் குரவையில் திருமாலின் சிறப்பும், குன்றக் குரவையில் முருகன் பெருமையும் விளக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாகச் சிலப்பதிகாரம் 775 தெய்வங்களும் வீற்றிருக்கும் பொதுவான சொல் கோயிலாகத் திகழ்கிறது.

உறவினர் மதங்கள்

கோவலனும் கண்ணகியும் இறந்ததும், மாதவியும் மணிமேகலையும் புத்த மதத்தைத் தழுவினர். இருவரின் தந்தைமார்களுள் கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் புத்தமதத்தில் சேர்ந்தார்; கண்ணகியின் தந்தை மாநாய்கன் சமண மதத்தில் சேர்ந்தார். எனவே, மதங்கள் உறவைக் கெடுக்கவில்லை என்பது போதரும். இக்காலத்திலும், உற வினர்களுக்குள் ஒரு குடும்பத்தார் சைவராகவும் மற்றொரு குடும்பத்தினர் வைணவராகவும் இருப்பதைக் காணலாம்.

இளங்கோ அடிகள் எதிலும் அகப்பட்டுக் கொள்ளாமல் மிகவும் விழிப்பாய் வேலை செய்திருக்கிறார். மணிமேகலை எழுதிய சாத்தனார் பச்சையாக வெளிப்படையாகப் புத்தம் பரப்பியுள்ளார். இளங்கோ எந்த மதத்திற்கு முதன்மை கொடுத்துள்ளார் எனில், சமணத்திற்கே எனப் பதில் இறுக்கலாம். சாரணர் வாயிலாகவும் கவுந்தி வாயிலாகவும் சமணம் பரப்பியுள்ளார். எனவே, அவரைத் தனிப்பட்ட முறையில், சமணச் சார்புடையவர் என்று கூறுகின்றனர். அவருடைய தமையன் சேரன் செங்குட்டுவனோ சைவச் சார்புடையவனாகப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள் ளான். இருப்பினும் எல்லா மதங்கட்கும் இடம் கொடுத்துள்ளான்.

சாத்தனார் தனிப்பட்டவராதலின் வெளிப்படையாகப் புத்தம் பரப்பினார். இளங்கோ மன்னர் குடும்பத்தினர் - ஆட்சியில் உள்ள செங்குட்டுவனின் இளவல் - எனவே, இவர், மதப் பொதுவுடைமையையே மக்களிடையே வைத்துச் சென்றுள்ளார்.